Sunday, July 31, 2016

அம்பாவின் ஆவேசம்! சத்யவதியின் கண்ணீர்!

மறுநாள் காலை அனுஷ்டானங்கள் முடிந்தன. ஆசாரியர் பரசுராமரும் மஹா அதர்வரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது சுமாந்து இளவரசர் காங்கேயரையும், மஹாராணி சத்யவதியையும் அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். மஹாராணியின் முகத்தில் சோகம் கப்பி இருந்தாலும் ஒரு கம்பீரமும் தெரிந்தது. இருவரும் ஆசாரியர் பரசுராமரை வணங்கினார்கள். ஆசாரியர் அவர்களுக்கு ஆசிகளை அளித்துவிட்டு அங்கிருந்த இரு ஆசனங்களில் அமரச் சொன்னார். அப்போது ஷௌனகர் முதல்நாள் மாலை அங்கே வந்திருந்த காசி தேசத்து இளவரசியை அழைத்துக் கொண்டு வந்தார். அவளுடன் த்வைபாயனரின் மனைவி வாடிகா, மந்திரி குனிகர், ஹோத்ரவாஹனர் என்னும்  இளவரசி அம்பாவின் தாய்வழிப் பாட்டன் ஆகியோரும் வந்திருந்தனர். அனைவரும் அங்கே அழைத்து வரப்பட்டனர். இளவரசி அம்பா நல்ல உயரமாக ஒரு அழகிய பொற்சிலை போல் காணப்பட்டாள். அவள் இன்னமும் அடங்காக் கோபத்தில் இருந்ததாலோ என்னமோ தெரியவில்லை! தலை மயிர் பரந்து விரிந்து கிடந்தது. கண்கள் ரத்தக்களறியாகச் சிவந்து முகம் அடங்கொணாக் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

ஆசாரியர் பரசுராமரின் அருகே அமர்ந்திருந்த இளவரசர் காங்கேயரைப் பார்த்ததுமே அம்பாவின் உடல் முழுதும் தலையோடு கால் வரையில் கோபத்தில் நடுங்கியது. அவளால் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. அவள் காங்கேயரைப் பார்த்த பார்வையில் அவர் பொசுங்கிச் சாம்பலாகாதது அதிசயம் எனத் தோன்றியது. பாயும் புலி தன் இரையின் மேல் பாய இருக்கும் வேகம் அவளிடம் காணப்பட்டதோடு அல்லாமல் கட்டுக்கடங்காத கோபத்துடன் அவரைப் பார்த்துப் பற்களைக் கடித்தாள். அதே கோபம் அடங்காமல் அவள் பரசுராமரைப் பார்த்து, “பிரபுவே, அதோ உங்கள் அருகே அமர்ந்திருக்கும் அந்த மனிதன் தான் என் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியவன்!” என்றாள். காங்கேயரைத் தன் கைகளால் சுட்டியும் காட்டினாள். பின்னர் மேலும் தொடர்ந்து, “என் வாழ்க்கையைக் கெடுத்ததோடு அல்லாமல் என்னை வீடற்றவளாக, நாடற்றவளாகவும் ஆக்கினான். ஷால்வ மன்னனை நான் திருமணம் செய்து கொள்ள இருந்தேன். அதற்கான சந்தர்ப்பத்தையே எனக்காக உருவாக்காமல் என்னை எதுவும் கேட்காமல் என்னை நாசம் ஆக்கிவிட்டான். என் சந்தோஷத்தின் ரேகைகள் முற்றிலும் அழிந்து போயின. என் நம்பிக்கை எல்லாம் நாசமாக ஆகி விட்டது. என்னை எதற்கும் பயனற்றவளாக எவருக்கும் உபயோகமில்லாதவளாக ஆக்கி விட்டான்!”

பரசுராமர் சைகையின் மூலம் அவளை உட்காரும்படி கூறினார். பின்னர் “குழந்தாய்! உன்னை நீ தான் அமைதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அனைத்தையும் சரி செய்து விடலாம்!” என்றார் சாந்தமாக. அம்பாவின் சீற்றம் கொஞ்சம் தணிந்தாற்போல் காணப்பட்டது. “ஆசாரியரே, அவன் என்னை மணந்தே ஆகவேண்டும். ஆம். அவனுடைய தவறுகளை வேறு எவ்வகையிலும் சரி செய்ய முடியாது. இது தான் அவன் செய்த தவற்றுக்கான பரிகாரமும் கூட!” என்றாள். அதைச் சொல்கையிலேயே தன் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்னும் சுய பச்சாத்தாபத்தில் அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. சமாளித்துக் கொண்டு பேசினாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன்னையுமறியாமல் மனம் உடைந்து பெரிதாக அழுதாள். தன் கைகளை உயர்த்தி அவளைச் சமாதானம் செய்தார் பரசுராமர். “குழந்தாய்! உன்னுடைய இந்த சோகக் கதையைப் பலமுறை நீ என்னிடம் சொல்லி விட்டாய்! காங்கேயன் தான் இதற்குத் தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது காங்கேயனின் பொறுப்புத் தான்!” என்றவர் காங்கேயரின் பக்கம் திரும்பி, “காங்கேயா, நீ ஏன் அம்பாவைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்டார்.

காங்கேயர் தன் ஆசாரியரைப் பார்த்துக் கைகளைக் கூப்பி வணங்கிய வண்ணம் பேச ஆரம்பித்தார். “ ஆசாரியரே! நான் சுயம்வர மண்டபத்தில் காசி தேசத்து அரசகுமாரிகள் மூவரையும் கடத்தி வந்தது உண்மை தான். க்ஷத்திரியர்களின் தர்மப்படி சுயம்வரத்தில் அரசகுமாரிகளை, கன்னிகைகளைக் கவர்ந்து வருவது பாவம் என்று சொல்லவில்லை. அது ஏற்கப்பட்டே வந்திருக்கிறது. நாங்கள் அவளை ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தினியாக இருக்க வேண்டினோம். ஆனால் அவள் விசித்திரவீரியனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். ஷால்வன் ஒருவனே அவள் மணாளன் என்று கூறினாள். ஆகவே தக்க மரியாதைகளுடன் அங்கே அனுப்பி வைத்தோம். ஒரு குரு வம்சத்து இளவரசிக்கு நாங்கள் என்ன சீர் வரிசைகள் செய்வோமோ அதைக் கொஞ்சமும் குறைக்காமல் தகுதிக்கு ஏற்றவாறு தக்க பரிசுப் பொருட்களுடன் அனுப்பி வைத்தோம். ஆனால் ஷால்வன் அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். இது நாங்கள் சிறிதும் எதிர்பாராதது. அப்போது தான் மாட்சிமை பொருந்திய மஹாராணி, ராஜ மாதா, சத்யவதி அவர்கள்……….”

அப்போது தன் கடுமை சிறிதும் குறையாமல் குறுகிட்டாள் அம்பா. “மாட்சிமை பொருந்திய ராஜமாதா! ஹூம்!.... உண்மைதான்!...... ஏளனமாகச் சிரித்தாள் அம்பா. அவள் முகம் கடுமையான கோபத்தில் மேலும் சிவந்தது. “அவள் யாரென நான் இப்போது நன்றாக அறிவேன். அவள் ஓர் மாயக்காரி; சூனியக்காரி; என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் அடிப்படைக் காரணமே அவள் தான்!” என்றாள். உணர்ச்சிவசப் பட்டிருந்த அம்பா தன்னையுமறியாமல் எழுந்து நின்று தன் தலை முக்காடைச் சரி செய்து கொண்டாள். மஹாராணி சத்யவதியின் பக்கம் கையை நீட்டி அவளைச் சுட்டிக் காட்டியவண்ணம், “ இவள் மிகப் பொல்லாதவள், ஆசாரியரே! பொல்லாதவள். என்னால் மட்டும் முடிந்தால் அவள் கண்களை நோண்டி எடுத்து விடுவேன்; ஏன் எடுத்து இருப்பேன்!”

அம்பாவின் இந்த வெளிப்படையான தாக்குதலைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வாடிகா தன்னையுமறியாமல் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து மஹாராணி சத்யவதியின் அருகே வந்து அவளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல் அமர்ந்து கொண்டாள். ஆனால் பரசுராமரோ இதற்கெல்லாம் கலங்கவே இல்லை. “நீ அவள் கண்களைத் தோண்டி எடுக்கலாம்; எப்போது தெரியுமா? நாங்கள் எல்லோரும் குருக்ஷேத்திரத்தை விட்டுச் சென்ற பிறகு!” என்ற வண்ணம் சிரித்தார். பின்னர் மீண்டும் அமர்ந்து கொள்ளும்படி அம்பாவிடம் சொன்னார். “குழந்தாய், அமைதியாக இரு!” என்றார். அம்பா தலை அசைத்துத் தன் மறுப்பைத் தெரிவித்தாள். “நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? என் முக்கிய எதிரி, பரம வைரி இதோ இவள் தான்! இந்த மஹாராணி சத்யவதிதான்! எனக்கு விளைவிக்கப்பட்ட தீமைகளுக்கு மூலகாரணம் இவள் தான். காங்கேயர் செய்த அனைத்துக்கும் மூலகாரணம் இவளுடைய போதனைகள் தான்!” என்றாள்.

மஹாராணி சத்யவதி உண்மையாகவே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். அவள் வாழ்நாளில் இத்தகைய கடுஞ்சொற்களைக் கேட்க நேரிட்டதே இல்லை. அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “நான் யார் வழியிலும் எப்போதும் குறுக்கிட்டதில்லை. எத்தகைய தீய போதனைகளையும் யாருக்கும் சொன்னது இல்லை!” என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போன்ற குரலில் சொன்னாள். ஆனால் அது அம்பாவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது. “நீ ஒருத்தி தான், ஆம், நீ ஒருத்தி தான் என் வழியில் நின்று என்னைப் பாழாக்கினாய்! என்னுடைய இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்!” என்று ஓங்கிக் குரலெடுத்துக் கத்தினாள். “ஹூம், உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறாயா? காங்கேயரின் இந்த நிலைமைக்கே நீ தான் காரணம். உன்னை சக்கரவர்த்தி ஷாந்தனு திருமணம் செய்து கொள்கையில் யுவராஜாவாக இருந்த காங்கேயர் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்; அரியணையில் ஏற மாட்டேன் என்று சபதம் ஏற்க நேர்ந்தது! யாரால்? உன்னால் தான்!  அவர் இந்த சபதத்தைக் கட்டாயமாக ஏற்க நேரிட்டது!” என்றாள்.

அனைவர் முன்னிலையிலும் தன் மேல் சாட்டப்பட்ட இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட மஹாராணி சத்யவதிக்கு மனம் பொறுக்க மாட்டாமல் கண்ணீர் வந்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். வாடிகா ஆறுதலாக அவள் தோள் மேல் தன் கைகளை வைத்தாள். அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள். அம்பாவோ நிறுத்தவில்லை! “இவளுடைய சூழ்ச்சியின் காரணமாக சூனியக்காரியின் வசியம் காரணமாக காங்கேயர் மேலும் அவள் வசியம் பாய்ந்து இருக்கிறது. அவர் இவளுக்கு அடிமையாக ஆகி விட்டார்.” இந்தக்குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கடுமையாகக் கோபமான குரலில் அம்பா கூறியபோது கொஞ்சம் புரியாமல் உளறுவது போல் இருந்தது. ஆனால் உடனே தன்னைத் திருத்திக் கொண்டு, “இவள் தன்னுடைய இந்த வசியத்திலிருந்து காங்கேயரை வெளியேறச் சம்மதிக்க மாட்டாள். அவரை அவருடைய சபதத்திலிருந்து உடைத்துக் கொண்டு மீண்டு வர விடமாட்டாள்!”

இப்போது காங்கேயருக்கே கோபம் வந்தது. ஆனால் தன்னைச் சமாளித்துக் கொண்டார். பின்னர், “ஆசாரியரே, காசி தேசத்து இளவரசியால் என் அன்னை மஹாராணி சத்யவதியின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை! உண்மையானவை அல்ல! சற்றும் நியாயம் இல்லாதவை! விஷம் தோய்ந்தவை! என்னைப் பெற்ற தாயை விட அதிகப் பாசத்துடனும் அன்புடனும் மஹாராணி சத்யவதி அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். என் அன்னையை விடப் பாசம் அதிகம் காட்டி வருகிறார்கள். எத்தனை முறை என்னிடம் கெஞ்சி இருப்பார்கள்! என்னுடைய சபதத்தைக்கை விடும்படி மீண்டும் மீண்டும் என்னிடம் வேண்டுகிறார்கள். இது எதுவும் காசி தேசத்து அரசகுமாரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காசி தேசத்து அரசகுமாரியை மணந்து சுகவாழ்க்கை வாழும்படி என்னை வேண்டிக் கொண்டே இருக்கிறார்கள்!” என்றார்.

“ஆஹா! எப்படிப்பட்டதொரு தாய்! அதை விடப் பாசம் நிறைந்த மகன்!” ஏளனமாகச் சிரித்தாள் அம்பா. “ஹூம், அவளுக்குத் தெரியாதா என்ன! நான் காங்கேயரை மணந்து கொண்டேன் எனில் எனக்கும் அவருக்கும் பிறக்கப் போகும் மகன் தான் ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரியமான பரத வம்சத்து அரியணைக்கு உரியவன் ஆவான். இவளுடைய அருமை மகன் விசித்திர வீரியன் ஒன்றுமில்லாதவனாக, அதிகார பலமற்றவனாக ஆகிவிடுவான்! அதற்கு இவள் ஒப்புவாளா? இவளுடைய கெட்ட எண்ணத்தால் தான் கடவுளரே இவளுக்குத் தக்க தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இவளுடைய மூத்த மகன் சித்திராங்கதன் கொல்லப்பட்டுவிட்டான். இதோ இந்த விசித்திர வீரியனும் விரைவில் உடல்நலமின்றித் தன் முன்னோர்களின் இருப்பிடமான பித்ருலோகம் போய்ச் சேருவான்! அது தான் இவளுக்குத் தக்க தண்டனை!”

ஆசாரியர் மீண்டும் அம்பாவை ஆசனத்தில் அமரச் சொன்னார். பின்னர் காங்கேயரைப் பார்த்துத் திரும்பினார். “காங்கேயா, சத்யவதி உன்னுடைய சபதத்தை உடைத்துவிட்டு அம்பாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்வது உண்மை எனில் நீ ஏன் அப்படிச் செய்யக் கூடாது?” என்று கேட்டார். காங்கேயர் தன் தலையைக் குனிந்து கொண்டார். ஓரிரு நிமிடங்கள் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த அவர் பின்னர் நிமிர்ந்து ஆசாரியரைப் பார்த்தார்! “ஆசாரியரே, என்னை விட நீங்கள் வயது, அனுபவம், சக்தி அனைத்திலும் பெரியவர். என்னுடைய குரு நீங்கள் உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப் போகிறேன். ஒரு மனிதன் அதுவும் க்ஷத்திரியன் தன்னுடைய சபதத்தை உடைத்தான் எனில் அவன் உயிருடன் நடமாடும் பிணத்திற்குச் சமம் அன்றோ! அவன் ஆன்மாவே சாகடிக்கப்பட்டு விட்டதாகத் தானே அர்த்தம்! என்னுடைய இந்த வாழ்க்கை என்னும் படகைச் செலுத்தும் நங்கூரம் இந்த சபதம். என் வாழ்க்கையின் ஆதாரமே அதுதான். எத்தனை இரவுகள்! எத்தனை பகல்கள்! இந்த சபதத்தை உடைக்க எண்ணும் என் மனதை நான் நிலைப்படுத்தப் போராடி வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். மனித மனம் எத்தனை பலஹீனமானது என்பதையும் அறிவீர்கள்! இயற்கையை வெல்வதும் கடினமான ஒன்றே. அத்தகைய நிலைக்கு வர நான் எவ்வளவு போராடி இருப்பேன்!  என்னை நானே உணர்ச்சிகளிலிருந்து வெல்ல நான் மிகவும் கடினமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். ஒரு சபதம்! என் தந்தைக்கு நான் கொடுத்திருக்கிறேன்! அது சத்தியமானது. கடவுளருக்கும், என் முன்னோர்களுக்கும் கூட உண்மையாக நான் கட்டுப்பட்டு அந்த சபதத்தை எடுத்திருக்கிறேன். இப்படி சபதம் எடுத்த நான் அதற்கு உண்மையாக இல்லாமல் சபதத்தை உடைத்தால் நான் மனிதனே அல்ல! அதை விட நான் இறந்துவிடுவேன் ஆசாரியரே! ஆம் நான் இறக்கத் தயார்!”

No comments: