Sunday, July 17, 2016

மஹாராணியின் படுக்கையில் சூனிய மந்திர வட்டம்!

காங்கேயர் ரதத்தில் ஏற ஆயத்தமாக இருந்தார். அப்போது த்வைபாயனர் அவரைச் சற்றே இருக்கச் சொல்லி ஜாடை காட்டினார்.  தன் தகப்பனுக்கு உதவி செய்து கொண்டு இருந்த காங்கேயர் கொஞ்சம் ஆச்சரியத்துடன் த்வைபாயனரைப் பார்த்தார். அவருடைய வேண்டுகோள் மிகவும் பணிவாகவே இருந்தது. ஆகவே ஏதும் சொல்லாமல் சற்று விலகி நின்று கொண்டார். மன்னன் எதிரே வந்தார் த்வைபாயனர். அவர் உடல் விரைப்பாக இருந்தது. மன்னனையே தன் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையின் மூலம் அவர் ஏதேதோ உயிருள்ள உற்சாகம் நிறைந்த மனோ அலைகளை மன்னன் மேல் செலுத்துவதாக மன்னன் உணர்ந்தான். அவன் உடலில் புதியதொரு சக்தி புகுந்தாற்போல் காணப்பட்டது. த்வைபாயனரும் மன்னனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா! நீங்களே உங்கள் ரதத்தைச் செலுத்துங்கள்!” சற்றே அதிகாரத்தொனியில் இருந்தது அவர் குரல்.

“என்னால் இயலாது த்வைபாயனரே! முடியவே முடியாது!”: என்ற வண்ணம் ஓர் நம்பிக்கையற்ற சிரிப்பைக் காட்டினான் மன்னன். “அதெல்லாம் இல்லை! உங்களால் முடியும்!” என்ற வண்ணம் தன் கண்களை மீண்டும் மன்னன் மேல் நாட்டினார் த்வைபாயனர். மன்னனை முழுவதும் தன் வசம் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த மனோ வசியத்தின் மூலம் மன்னன் தன் பலத்தை உணர்வான் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார். விடாமல் மன்னனைப் பார்த்த வண்ணம், “ஆம், உங்களால் முடியும்! மன்னா, உங்களால் முடியும்!” என்று மீண்டும் மீண்டும் சொன்னார் த்வைபாயனர். த்வைபாயனரின் கண்களோடு மோதிய மன்னன் கண்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தன. மன்னன் கஷ்டப்பட்டுக் கண்களை விலக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தன் ஆதரவற்ற நிலையைச் சுட்டுவது போல் மீண்டும் சிரித்தான். ஆனால் த்வைபாயனர் விடாமல், “ஆம், மன்னா, உங்களால் முடியும்!” என்ற வண்ணம் மன்னன் ரதத்தின் மேல் ஏறுவதற்குத் தானே உதவினார். த்வைபாயனரின் ஸ்பரிசம் மன்னன் மேல் பட்டதுமே தன் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தை மன்னன் உணர்ந்தான். த்வைபாயனரைப் பார்த்துச் சிரித்த வண்ணம் அவர் உதவியுடன் ரதத்தில் ஏறினான். நடுங்கிய கால்கள் ஸ்திரமாக நின்றன. த்வைபாயனரின் உதவியையும் மறுத்துவிட்டுத் தன் தோள்களை விரித்த வண்ணம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அனைவரும் பார்த்து அதிசயிக்கும் வண்ணம் தானே ரதத்தில் ஏறினான்.

தந்தையைத் தொடர்ந்து அதே ரதத்தில் ஏறப் போன காங்கேயரை மீண்டும் பணிவன்புடன் தடுத்த த்வைபாயனர், “இளவரசே, மன்னர் தானே ரதத்தை ஓட்டுவார்!” என்று பணிவாக அதே சமயம் திடமாகச் சொன்னார். மன்னனும் ஒரு காலத்தில் அதிரதனாக இருந்தவன் தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் குதிரைக் கயிறுகளைத் தன் கைகளில் பிடித்தான் மன்னன்.  இடக்கைக்கு ரதத்தின் குதிரைகளின் கயிற்றை மாற்றிக் கொண்ட மன்னன் வலக்கையால் கட்டப்படாத குதிரையின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கயிறே சாட்டையாகவும் பயன்பட்டது. ஆசாரிய விபூதி மஹாராணியின் பக்கம் திரும்பி, “மஹாராணி, மஹா அதர்வரின் மகள் வாடிகாவின் துணையுடன் நீங்களும் ரதத்தில் ஏறிக் கொள்ளுங்கள்!” என்றார். வாடிகாவுக்கு இந்த நிகழ்வில் பங்கெடுக்கச் சிறிதும் விருப்பமில்லை. ஆனால் பலர் முன்னிலையில் இதை மறுக்கவும் முடியாது. ராஜ குற்றமாகக் கருதப்படும். ஆகவே அரை மனதாகத் தன் ஒரு கையை மஹாராணிக்காகக் கொடுத்தாள். மஹாராணி அவள் நீட்டிய கரத்தைப் பற்றிய வண்ணம் ரதத்தில் ஏறினாள். வாடிகாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு உற்சாகத்துடனும் வேகத்துடனும் ஏறினாள் மஹாராணி சத்யவதி.

வாடிகா அவள் கணவன் அந்த ரதத்தின் அருகேயே நின்ற வண்ணம் மஹாராணி கீழே விழுந்துவிட்டால் உடனடியாக அவளுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்துடன் காத்திருப்பதைக் கண்டாள். “ஆஹா, எத்தனை பொல்லாத பெண்மணி இவள்!” அவள் மனதுக்குள் என்ன தான் ரகசியமாக இதை நினைத்தாலும்  அவள் மனக்குரல் அவள் காதுகளையே செவிடாக்கிவிடுமோ என்று அஞ்சினாள். “விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நான் விரைந்து வேலை செய்ய வேண்டும்.” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். இது எதையும் அறியாத சத்யவதி தன் கணவனுக்கு அருகே கண்களில் உற்சாகமும் வெற்றியும் பிரகாசிக்க மிக்க சந்தோஷத்தோடு நின்று கொண்டாள். பதினேழு பேரிகைகளும் கொட்டி முழக்கின. ரதப் போட்டி ஆரம்பம் ஆயிற்று. குழந்தைகள் குதியாட்டம் போட 68 சிறந்த குதிரைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓட ஆரம்பித்தன. மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அனைவரும் ஒரு ஆவேசத்தோடு இந்தப் போட்டிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மூச்சுக்கூட விடாமல் அனைவரும் இந்தப் போட்டியில் மூழ்கி இருக்க வாடிகா ஒருவரும் அறியாமல் மறைந்தாள்.

ஒரு ரதத்தில் கட்டப்பட்டிருந்த குதிரை ஒன்று கட்டுக்கடங்காமல் போகவே அது ஒரு பக்கம் இழுக்க சாரதி வேறு பக்கம் கொண்டு போக ரதமே கவிழ்ந்தது. சாரதி ரதம் போன வேகத்தில் தூக்கி எறியப்பட்டான். அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு இந்த விபத்தை நினைத்து வருந்தினர். வேறு இரண்டு ரதங்களை ஓட்டியவர்களோ ஒருவருக்கொருவர் போர் புரியவே ஆரம்பித்து விட்டனர். மிகவும் மோசமாகக் கொலைவெறித் தாக்குதலோடு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். கடித்துக் கொண்டனர். ரதங்கள் கன்னாபின்னாவென்று ஆட்டம் கண்டன. அவற்றை ஓட்டிய பல அரசர்களும் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டனர். அவர்களுக்கு உதவச் சென்ற ஊழியர்களால் மிகக்கஷ்டப்பட்டே இந்தக் கலகத்தை அடக்க முடிந்தது.

ஆனால் ஷாந்தனுவோ ஒரு காலத்தில் தான் அதிரதியாக இருந்ததை நினைத்தும் இப்போது இயலாமல் போய்விட்டதையும் நினைத்து நினைத்து வருந்தியவன் இன்று புத்துணர்வு பெற்றிருந்தான், அவனுடைய இழந்த உற்சாகம், வலிமை எல்லாம் அவனுக்குத் திரும்பி விட்டது. முன்னை விட ஆக்ரோஷமாக ரதத்தை ஓட்டினான். அவனோடு சேர்ந்து குதிரைகளும் ஒத்துழைத்தன. அதிலும் அந்தக் கட்டப்படாத குதிரை ஷாந்தனுவின் லாயத்திலேயே விலை உயர்ந்த மிகவும் உயர் இனத்தைச் சேர்ந்த அந்தக் குதிரை தான் இப்போது தன் எஜமானனின் கைகளில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டது போல வேறு எந்த ரதத்தையுமோ அல்லது குதிரையையுமோ தன்னைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கவே இல்லை. தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொண்டது, ஓர் கனைப்புக் கனைத்தது. அது விரைவில் மற்ற மூன்று குதிரைகளின் வேகத்தை எட்டிப் பிடித்து விட்டது, மற்ற ரதங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மன்னனின் ரதமே முன்னே சென்றது. கடைசியில் மன்னனே ரதப் போட்டியில் வாகை சூடினான். அங்கே அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், “சாது, சாது!” என்று கோஷித்தவண்ணம் கைகளைத் தட்டியும் ஆடிப் பாடியும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டும் இந்த வெற்றியைக் கொண்டாடினர்.

ரதப் போட்டி முடிவடைந்த பின்னர் தானங்கள் அளிக்கப்பட்டன. புனித அக்னிக்கு ஆஹுதிகள் வேத ஸ்ரோத்திரியர்களால் அளிக்கப்பட்டது. பின்னர் மாபெரும் விருந்து படைக்கப்பட்டது. அனைவரும் ஒருங்கே அமர்ந்து உண்டார்கள். பின்னர் அரசனும், அரசியும் தங்கள் இருப்பிடத்துக்குச் சென்றார்கள். கூடாரத்தை அடைந்த உடனே ராணி ஷாந்தனுவைப் பார்த்து, “பிரபுவே, தாங்கள் இன்று அற்புதமாக ரதம் ஓட்டினீர்கள்!” என்று பாராட்டுகளைத் தெரிவித்தாள். “ஓ, அதற்கான நன்றி எல்லாம் உன் மகனுக்கே போய்ச் சேரவேண்டும், சத்யவதி! அவன் இல்லை எனில் இது எப்படி நடைபெற்றிருக்கும்! எனக்கு இப்போது பத்துப் பனிரண்டு வயது குறைந்துவிட்டது போல் உணர்கிறேன்.” என்றான்.
“ஆம், ஆம், உங்களுக்கும் தான்!” என்று மெல்ல முணுமுணுத்தாள் சத்யவதி! மன்னன் படுக்கைக்குச் செல்லத் தயாரானான். சத்யவதி அவன் படுக்கையைச் சரி செய்து மெத்தையைத் தூசி தட்டி ஒழுங்கு செய்து அவனைப் படுக்கச் செய்து பின்னர் அவனை வணங்கி விடைபெற்று அந்த அறையின் விளக்குகளைத் தணிக்கும் வரை காத்திருந்து பின்னர் அங்கே காவலுக்கு இருந்த மல்லனிடமும் மன்னனின் அந்தரங்க ஊழியனிடமும் மன்னனைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி உத்தரவிட்ட பின்னர் தான் படுக்கும் பகுதிக்குச் சென்றாள்.

அவளுக்காகத் தயாராய்க் காத்திருந்த சேடிப் பெண்கள் அவள் அணிந்திருந்த ஆபரணங்களையும், தலையில் செய்திருந்த அலங்காரங்களையும் கலைத்தனர். கிரீடத்தை அவளிடமிருந்து வாங்கித் தனியாக வைத்துவிட்டு அவள் அணிந்திருந்த ராணிக்குரிய சம்பிரதாய உடைகளைக் களைய வைத்து இரவு உடையை அணியச் செய்தனர். பின்னர் மற்ற அனைவரையும் படுக்கப் போகச் சொன்ன மஹாராணி தன் அந்தரங்கத் தோழியான தார்வியை மட்டும் அங்கே இருக்கச் செய்தாள். அவள் ராணியின் அறை வாயிலில் படுத்துத் தூங்குவாள். சத்யவதி தன் படுக்கைக்குச் சென்றவள் சட்டென அசையாமல் நின்று எதையோ கவனித்தாள். பின்னர் , “தார்வி, விளக்கை எடுத்துக் கொண்டு வா!” என்று ஆணையிட்டாள். தார்வி விளக்கை எடுத்துக் கொண்டு வந்து படுக்கைக்கு அருகே ராணி நன்கு பார்க்கும்படி வெளிச்சம் தெரியும் வண்ணம் பிடித்துக் கொண்டு நின்றாள். அப்படி மஹாராணியின் கவனத்தைக் கவர்ந்தது ஒரு வட்டம். அந்த வட்டம் படுக்கையின் நட்ட நடுவே வரையப்பட்டிருந்தது. ஏதேதோ பால்பொருட்களைக் கொண்டு வரையப்பட்ட மாதிரி தெரிந்தது. மஹாராணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் படுக்கையில் இப்படி வட்டம் வரைந்திருப்பவர் யாராக இருக்கும்? இதன் முக்கியத்துவம் என்னவாக இருக்கும்? இந்த வட்டம் ஓர் மந்திர வட்டமாக இருக்குமோ?

ஆகவே தன் படுக்கைக்கே சென்று அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று பார்க்க விரும்பாத சத்யவதி படுக்கையில் தான் போர்த்திக்கொள்ள வைத்திருந்த கரடித் தோலால் ஆன போர்வையை மட்டும் மெல்லத் தன் பக்கம் இழுத்தாள். அதை நன்கு பிரித்து உதறினாள். ஏதோ ஓர் செடியின் நாலைந்து சின்னஞ்சிறிய இலைகள் அதிலிருந்து விழுந்தன. அதைக் கையில் எடுத்து நன்கு ஆராய்ந்து பார்த்தாள் சத்யவதி. ம்ம்ம்ம், இவை ஏதோ மந்திர மூலிகையின் இலைகளாக இருக்க வேண்டும். ஆம் அப்படித் தான் இருக்க வேண்டும். யாரோ அவளுக்கு சூனியம் வைத்துத் துன்பம் விளைவிக்க விரும்புகிறார்கள். யாராக இருக்க முடியும்? இந்த மந்திர வசியத்தை அவள் மேல் ஏவுவதன் உண்மையான காரணம் தான் என்னவாக இருக்கும்? அன்றைய நாள் முழுவதும் அவள் அனுபவித்த சந்தோஷமெல்லாம் சிறிதும் அவளிடம் இப்போது இல்லை. அனைத்தும் தொலைந்து போயிற்று.

“தார்வி, இன்றைய பகல் பொழுதில் இந்தக் குடிலைப் பாதுகாத்தவர்கள் யார்?”

தார்வி தன் தவறுக்காக வருந்துபவள் போல் காட்சி அளித்தாள், “மஹாராணி, மன்னிக்கவேண்டும். நான் ஊழியர்களை ரதப் போட்டியைப் பார்க்கச் செல்ல அனுமதித்து விட்டேன்.” என்றாள்.

“அப்போது நீ நாள் முழுவதும் இங்கே தான் இருந்தாயா?”

கைகள் நடுங்க அவற்றைக் கூப்பி மஹாராணியிடம் மன்னிப்பை வேண்டினாள் தார்வி. “மன்னிக்கவும் மஹாராணி. மஹாராஜாவே ரதத்தை ஓட்ட மஹாராணியும் அதில் பயணம் செய்யப் போவதை அறிந்ததும் என்னால் அந்த ரதப் போட்டியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை!”

“சரி, இந்த மந்திர வட்டம் உனக்குத் தெரிகிறது அல்லவா?”

“மஹாராணி, நான் கரடித் தோல் போர்வையை வெயிலில் காய வைத்திருந்தேன். அதையும் நான் இங்கிருந்து கிளம்பும் முன்னரே போட்டேன்.  அதை நான் தான் உள்ளே கொண்டு வந்து படுக்கையில் விரித்து வைத்தேன். நான் கிளம்புகையில் மந்திர வட்டம் இந்தப் படுக்கையில் இல்லை.”

“சரி, தார்வி, எனக்குப் படுக்கையைக் கீழே விரித்து விடு! நான் இந்த மந்திர வட்டம் வரைந்த படுக்கையில் படுத்துத் தூங்கப் போவதில்லை.” மஹாராணிக்குத் துக்கம் பொங்கியது! அவள் துன்பத்தில் ஆழ்ந்தாள். யாராக இருக்க முடியும் இந்த எதிரி? அவள் ஹஸ்தினாபுரம் வந்ததிலிருந்து இன்று வரையிலும் அனைவரோடும் நட்புப் பாராட்டவே செய்கிறாள். யாரையும் எதிரியாக நினைத்ததில்லை. அனைவர் பேச்சையும் கூடியவரை கேட்டுக் கொள்வாள். அவளுடைய உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்பதோடு கோபம் அவளை நெருங்கவும் விட்டதில்லை. அவளுக்கு இப்படி எளிதில் தோற்கடிக்க முடியாத, சமாதானம் செய்ய முடியாத எதிரிகள் இருக்கின்றனர் என்பதை அவளால் நம்பவும் முடியவில்லை. மெல்லக் கீழே அமர்ந்து யார் அந்த எதிரி என்பதை யூகம் செய்ய முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவள் மேல் கோபம் உள்ளவர் யார்? “எனக்கு எதிரிகள் இல்லை. நான் எவரையும் எதிரியாக ஆக்கிக் கொள்ளவே இல்லை. யாரையும் வருந்தச் செய்ததில்லை. யாருக்கும் எப்போதும் துன்பம் கொடுத்ததும் இல்லை. சக்கரவர்த்திக்கு என்னைப் பூரணமாக அர்ப்பணம் செய்து அவருக்கு உண்மையான மனைவியாகவும் நல்லதொரு மஹாராணியாகவுமே இருந்து வருகிறேன்.காங்கேயன் என்னைச் சிறிய தாயார் என்று எண்ணும்படி நடந்து கொள்வதே இல்லை.”

“எனக்கென நியமிக்கப்பட்ட ஊழியர்களையும் சரி, மற்ற அரசாங்க ஊழியர்களையும் சரி கௌரவக் குறைவாக நடத்தியதே இல்லை. அவர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள எஜமானியாகத் தான் இருந்து வருகிறேன். ஹஸ்தினாபுரத்தின் மக்களின் நல்வாழ்வையே விரும்புகிறேன். அப்படி இருக்கையில் இந்த எதிரி யார்? எனக்கு மட்டும் அவன் பெயர் தெரிந்தால் நான் என்ன தவறு செய்திருந்தாலும் மன்னிக்கும்படி வேண்டுவேன்.” என்று எண்ணினாள் மஹாராணி. பின்னர் சற்று தூரத்தில் தூங்காமல் பயத்துடனும் கவலையுடனும் நின்று கொண்டிருந்த தார்வியை அழைத்தாள். அவளிடம், ரகசியமாக, “தார்வி, பால முனி இருக்கும் இடம் தெரியுமல்லவா? அங்கே செல்! அவரிடம் என் மேல் ஏவப்பட்டிருக்கும் சூனியத்தைக் குறித்துச் சொல். இந்த மந்திர மூலிகை இலைகளை அவரிடம் காட்டு! யார் இந்த சூனியத்தை என் மேல் ஏவி இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்! அவரை நாளை அதிகாலையிலேயே என்னை வந்து பார்க்கச் சொல்லு! இதில் ஏதோ சூதும் ,சதியும் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது!” என்றாள்:.

1 comment:

ஸ்ரீராம். said...

ஆஹா... வந்து விட்டது சுவாரஸ்யமான கட்டம்.