Monday, July 11, 2016

வாடிகாவின் எதிரி!

த்வைபாயனரின் ஸ்பரிசம் மென்மையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அதில் இவள் தனக்குச் சொந்தமானவள் என்னும் இறுமாப்பான எண்ணம் வெளிப்படவில்லை. இவள் என் சொத்து என்னும் எண்ணம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு மென்மையாகக் கையாளுவாளோ அப்படியே அவரின் ஸ்பரிசமும் இருந்தது. அவள் சொல்ல நினைப்பதைப் புரிந்து கொண்டவர் போல் அப்படியே அவர் நிறைவேற்றினார். அந்தப் பரவசமான பிரவாகம் போன்ற அன்பு வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த வாடிகா தன்னை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்தாள். “என்னுடைய உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்துக்கும் இவரே பிரபு! இவரே என் கடவுள்! நான் அவருடையவள்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள் வாடிகா. மேலும் கூறினாள். “வரலாற்றுக்கு முந்தைய அந்தக் காலத்தில் பௌலமி எப்படி பிருகு முனிவருக்கு மனைவியாக இருந்தாளோ அப்படியே இப்போது நான் உங்களுக்கு இருக்க விரும்புகிறேன்.” என்றாள். இருவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

த்வைபாயனரிடம் மற்றொரு முக்கிய மாற்றத்தை வாடிகா கண்டாள். அது தான் மஹாராணி சத்யவதி குறித்துப் பேசும்போதெல்லாம் த்வைபாயனரின் மனமும் முகமும் மலர்ந்தது கண்டு அவள் அதிசயித்தாள். அவர் எதிரில் மஹாராணியின் பெயரைச் சொன்னாலே த்வைபாயனர் முகம் மலரும். இந்த விசித்திரத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் புரிந்து கொண்டதெல்லாம் த்வைபாயனரால் திருமணத்தின் போது செய்து கொடுத்த சத்தியங்களை ஒருக்காலும் மீற முடியாது என்பதே! அப்படி மீறுவதை அவரால் நினைத்தும் பார்க்க முடியாது என்பதே! சில நாட்கள் சென்றன. ஹஸ்தினாபுரத்திலிருந்து மந்திரி குனிகர் அங்கே வந்தார். அவருடன் நிறையப் பணியாளர்கள் வந்தனர். சிலர் அவர்களுக்கு உதவி செய்யவும், வேறு சிலர் அவர்களைப் பாதுகாக்கவென வில், அம்புகள் என ஆயுதங்களைத் தாங்கியும் வந்தனர். ஒரு சில காட்டுவாசிகளும் வந்திருந்தனர். அவர்கள் வந்த உடனே மூங்கில் மரங்களை வெட்டி அனைவரும் தங்குவதற்காகக் குடில்கள் அமைக்கத் தொடங்கினர்.

குனிகர் கறவைப்பசுக்கள் நான்கை ஓட்டி வந்திருந்தார். அவற்றுடன் ஒவ்வொரு மாட்டையும் கவனிக்க ஓர் இடையனும் இருந்தான். அதைத் தவிர ஒரு பொலிகாளையும் இருந்தது. பசுக்களும் காளையும் சக்கரவர்த்தி சத்யவதியால்  வாடிகாவுக்குப் பரிசாக அனுப்பப் பட்டிருந்தது. பசுக்கள் எல்லாம் பஞ்ச கல்யாணி எனப்படும் மிகவும் அரிதான வகையைச் சார்ந்தது. அதன் தோல் கன்னங்கரேலெனப் பளபளவெனப் பிரகாசித்தது. அதன் உடலில் ஐந்து இடங்களில் புனிதமான சின்னங்கள் காணப்பட்டன. அதன் வாலில் வெள்ளை மயிர் குஞ்சலம் போல் காணப்பட்டது. பொலிகாளையும் நல்ல வளர்த்தியாகக் காணப்பட்டது. கொம்பினால் பூமியைக் கீறிக் கொண்டிருந்தது. இரண்டு இடையர்கள் அதைத் தனியாகக் கொண்டு வைத்திருந்தனர். வாடிகாவுக்கு மஹாராணியிடமிருந்து வந்த இந்தப் பரிசுகளை ஏற்கச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் அதனால் அவள் கணவன் கோபம் கொண்டால்? அவளுக்குத் தன் கணவன் கோபம் கொள்வதில் சிறிதும் விருப்பம் இல்லை. அதோடு இல்லாமல் மஹாராணி கொடுத்ததை மறுத்தால் அது மன்னிக்கவே முடியாத குற்றமாகப் போய்விடும். ஆகவே அவள் குனிகரிடமே கேட்டாள். “இந்தப் பசுக்களையும் காளையையும் வைத்ஹ்டுக் கொண்டு நான் என்ன செய்வது?” என்றாள்.

அதைக் கேட்ட த்வைபாயனர், “அவை உன் பசுக்கள். உனக்கு என்ன பிடித்தமோ அதைச் செய்!” என்று சிரித்தவர், “ஆனால் காளையின் அருகே மட்டும் போய்விடாதே! உன்னை முட்டித் தள்ளி  விடும். என் மனைவி இறந்துவிட்டால் நான் என்ன செய்வேன்?” என்ற வண்ணம் அவளைப் பார்த்து மேலும், சிரித்த வண்ணம் கூறினார். “ மாட்சிமை பொருந்திய மஹாராணிக்குத் தான் எத்தனை பெரிய உள்ளம்? அற்புதமானவள்! அவள் எதையும் எப்போதும் மறப்பதே இல்லை!” என்றார். தாயிடம் மகனுக்கு ஏற்படும் இயல்பான பாசத்தில் த்வைபாயனர் இதைப் பேசினாலும் விஷயம் தெரியாத வாடிகாவுக்கு அவர் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் இருந்தது! மனதில் தோன்றிய கடும் வேதனையைப் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இதனால் பல இரவுகளை அவள் தூங்காமல் கழிக்க வேண்டி இருந்தது. இதற்கு முன்னால் அவள் இப்படித் தூங்காமல் இருந்ததே இல்லை! அப்படியே தன்னை மறந்து அயர்ந்து தூங்கினாலும் அந்தத் தூக்கத்தில் துர் சொப்பனங்கள் அவளைத் தொந்திரவு செய்தன. மஹாராணி சத்யவதி ஒரு பயங்கர மிருகமாக வந்து அல்லது ஓர் சூனியக்காரியாக வந்து அவள் குரல்வளையைப் பிடித்து நெரிப்பதாகவும் கனவுகள் கண்டு நடுங்கினாள். மஹாராணி அங்கே வரும்போது இதற்குத் தக்கதொரு தீர்வு காண வேண்டும் என்று அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும் அதனால் எல்லாம் அவளுடைய தொல்லைகள் தீரவில்லை.

அவள் தந்தையைப் போல் அவளும் அவ்வளவு எளிதில் மனம் சமாதானம் அடைய மாட்டாள். தன் மூளையைக் கசக்கிக் கொண்டு இந்த மஹாராணியின் பிடியிலிருந்து தானும், தன் கணவனும் தப்ப வேண்டிய வழியைத் தேடினாள். முதலில் அவள் நினைத்தது தன் தந்தையின் துணையினால் மஹாராணியின் மேல் மரண வசிய மந்திரத்தை ஏவுவது தான்! ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டாள். ஏனெனில் அவள் தந்தை அப்போது முழுவதும் த்வைபாயனரின் நடத்தையினால் கவரப்பட்டு அவருடைய செல்வாக்கில் கரைந்து போயிருந்தார். இந்தச் சமயம் போய் அவரிடம் தன் வேண்டுகோளைச் சொன்னால் அவர் வாடிகாவைப் பரிகாசம் செய்வதோடு அல்லாமல் ஏளனமாகவும் பார்ப்பார். தந்தை மூலம் அவள் கணவன் த்வைபாயனருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தால் பின் அவர் அவளை ஒரு நாளும் மன்னிக்கவே மாட்டார். இப்படி யோசித்து யோசித்து மனதைக் குழப்பிக் கொண்டாள் வாடிகா.

கடைசியில் ஒரு நாள் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் உர்வி என அழைக்கப்படும் தன் அத்தையிடம் சென்றாள். அவள் மஹா அதர்வரின் மூத்த சகோதரி. வாடிகாவைப் போல அவளும் ஒரு ஸ்ரோத்திரியர்.  மஹா அதர்வரால் பயிராக்கப்பட்டு வந்த மந்திர மூலிகைகளைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அவளுடையது! அதோடு இல்லாமல் அவளுக்குப் பெண்களின் துன்பங்கள், நோய்கள், அவர்களின் மனோ விசாரங்கள் ஆகியவை குறித்தும் அதற்கான மந்திர வித்தை குறித்தும் நன்கு அறிந்தவள். ஆசிரமத்துப் பெண்களுக்கு இந்த வகையில் அவள் பெரும் உதவி செய்து வந்தாள். அவள் தான் இதற்குச் சரியான நபர். அவளால் தான் ஏதேனும் வசியத்தைக் கொடுத்து அவள் கணவன் இந்த மஹாராணியின் பிடியிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய முடியும். அவள் கணவனின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுக்க உர்வியே சரியான நபர்! வாடிகா தன் அத்தையிடம் அந்தக் குறிப்பிட்ட மந்திரங்களைத் தனக்குக் கற்றுக்கொடுக்கும்படி கெஞ்சினாள். எதிரிகளை வெல்லும் மந்திரங்களைத் தானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாள். அவள் அத்தை சிரித்தாள்.

“இவ்வளவு விரைவிலா? இப்போது தானே திருமணம் ஆயிற்று உனக்கு? நீ ஏன் சந்தோஷமில்லாமல் இருக்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்டாள். “இல்லை, அத்தை! நான் திருமண வாழ்வில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஆனால் எனக்கு ஓர் எதிரி உண்டு. அந்த எதிரியிடமிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அதற்காக நானே முயல்கிறேன். ஒரு வேளை அந்த எதிரியிடமிருந்து எனக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால்! நான் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?”

உர்வி அவளுக்குச் சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாள். அந்த மந்திரங்கள் அனைத்துமே அவள் எதிரியைத் தாக்குவது என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டது என்பதோடு எதிரியை மிகவும் அலங்கோலமாகவும், அசிங்கமாகவும் பார்த்தவர் வெறுக்கும் வண்ணமும் மாற்றும் சக்தியையும் கொண்டது!
“இந்தச் செடியை நான் நடுகிறேன்; இது மிக்க வீரியம் கொண்டது!
என் எதிரியான பெண்கள் இதன் மூலம் அவர்கள் அதிகாரத்தை இழப்பார்கள்
என் கணவனின் அன்பு என்பால் மேலும் உறுதி அடையும்
நீண்ட நெடிய செங்குத்தான இலைகளைக் கொண்ட இந்தச் செடி பார்க்க அழகாகத் தான் இருக்கிறது
என்றாலும் அது தன் வேலையைச் செய்யும். கடவுளரின் விருப்பத்துடனும், அவர்களின் ஊக்கத்துடனும் முழு வலிமையுடனும் இது வேலை செய்யும்.
என் எதிரியை விலகிப் போகச் செல்! என் கணவன் எனக்கே உரியவன்! எனக்கு மட்டுமே! ஆம் எனக்கு மட்டுமே!

மேலும் அது இவ்வாறு முடிந்தது.

இந்த மந்திரச் செடி மிகவும் வீரியமுள்ளது
இதனால் நானும் வலிமை படைத்தவள் ஆனேன்
உயர்ந்த பெண்மணிகளிலெல்லாம் உயர்ந்தவள் ஆனேன்
என் எதிரியோக் கீழ்மையானவர்களில் எல்லாம் மிகக் கீழ்மையானவளாக ஆகிவிட்டாள்
ஓ, என் கடவுளே! இந்த அதிக வீரியம் கொண்ட மந்திரச் செடிகளை நான் உனக்கு நிவேதனம் ஆக்குகிறேன்
என் எதிரியின் மனம் பசுவைத் தேடி ஓடி வரும் கன்றைப் போல் என்னிடம் நாடி வரவேண்டும் அதோடு இல்லாமல் நதியின் நீர் எப்படி ஓர் ஒழுங்குடன் ஓடுகிறதோ அப்படி அவள் ஓட வேண்டும்!

அதன் பின்னர் உர்வியிடம் அந்த மந்திரச் செடியைக் காட்டுமாறு வாடிகா கெஞ்சினாள். செடி இல்லாமல் வெறும் மந்திரங்களால் என்ன பயன்? ஆகவே எப்படியேனும் செடியைத் தெரிந்து கொண்டாக வேண்டும். ஆனால் உர்வியோ தன் மருமகளின் இந்த வேடிக்கைப் பேச்சினால் மனம் சந்தோஷம் அடைந்தாள். மருமகளுக்கு இப்போது தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாக அவளுக்கு ஓர் எதிரியா? அவளை முறியடிக்க மந்திர வித்தை கற்றுக்  கொள்கிறாளே! சுறுசுறுப்பு மட்டுமல்லாமல் தைரியமும் நிறைந்த பெண் தான் என் மருமகள்! ஆகவே உர்வி அவளை மூலிகைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று, “பதா” என அழைக்கப்படும் அந்த மந்திரச் செடியைக் காட்டி அதை எப்படிப் பிரயோகம் செய்வது என்பதையும் விளக்கிக் காட்டினாள். அது எப்படிச் செய்தால் உடனடி விளைவு ஏற்படும் என்பதையும் விளக்கினாள்.

“அதை நன்றாகக் கசக்கிப் பிழிய வேண்டும். ஓர் சிவப்பு நிறமுள்ள ஆட்டின் பாலில் அதைக் கலக்க வேண்டும். உன்னுடைய எதிரி யாரோ அவரை இதைக் குடிக்கச் செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் அவள் படுக்கையைச் சுற்றிலும் இந்தக் கலவையைத் தெளித்தும் விட வேண்டும். உன் எதிரியின் படுக்கையின் அடியில் இந்தச் செடியின் இலைகளைப் பரப்பி வைக்க வேண்டும். உன் கணவனின் படுக்கையின் அடியில் கூட சில இலைகளைப் போட்டு வை. இதெல்லாம் செய்யும்போது இந்த மந்திரங்களை விடாமல் சொல்ல வேண்டும்.”

“இந்த மந்திரத்தினால் அவள் இறந்துவிடுவாளா?” வாடிகா கேட்டாள்.

“இல்லை, இறக்க மாட்டாள். இது மரண வசிய மந்திரமே அல்ல! இதன் மூலம் உன் கணவனுக்கு அவள் மேல் தாங்க முடியாத கோபமும், வெறுப்பும் ஏற்படும். அவளும் கெட்ட குணமுள்ளவளாக மாறிவிடுவாள். அவளுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடும். ஆனால் எப்படி ஆனாலும் உன் கணவன் அவளுடன் மன முறிவு ஏற்பட்டு அவளை விட்டு விலகி விடுவான். உன் எதிரியின் பிடியிலிருந்து உன் கணவன் விடுபடுவான்.”

இப்போது வாடிகா மந்திரங்களை நன்றாக உச்சரித்துப் பழகி விட்டாள். மந்திர மூலிகையைப் பயன்படுத்தும் விதமும் நன்கு அறிந்து வைத்திருந்தாள். மஹாராணியின் வரவு மட்டுமே பாக்கி! அதற்காகக் காத்திருந்தாள்.


2 comments:

ஸ்ரீராம். said...

அச்சச்சோ....!

பித்தனின் வாக்கு said...

ஆஹா ஆஹா மாமியார், மருமகள் சண்டை ஆரம்பம். டீ வீ சீரியல் போல.