Thursday, July 14, 2016

எதிரிகள் சந்திப்பு!

வாடிகாவும் மிகவும் தர்மசங்கடமானதொரு நிலையில் இருந்தாள். அவள் மனமும் ஒரு நிலையில் இல்லை. இந்த ஏற்பாடுகள் செய்வதில் சிறிதும் தொய்வு இல்லை. கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் நல்லது என்னும் எண்ணம் வாடிகாவிடம் இருந்தாலும் அவள் தகப்பனின் சம்மதம் இல்லாமல் யாரும் வேலைகளை நிறுத்தப் போவதில்லை. அவள் தந்தையோ எல்லாவற்றிலும் ஊக்கமும், வேகமும் காட்டி வந்தார். பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் திறனுடன் இருந்தார். இந்த வாஜ்பேய யக்ஞத்தை முழு அளவில் சிறப்பாக நடத்தி அதை வெற்றி அடையச் செய்வதில் தன் மனதை முழுவதும் ஈடுபடுத்தி இருந்தார் மஹா அதர்வர்! அதோடு இல்லாமல் த்வைபாயனரின் பெயர் வருங்காலத்தில் முனிவர், ரிஷிகளின் பெயர்களைச் சொல்லும்போது சிறப்பான இடத்தில் முன் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்னும் எண்ணமும் அவரிடம் இருந்தது. மஹா அதர்வர் நட்புப் பாராட்டுவதில் வல்லவராக இருந்தது போலவே பகைமை பாராட்டுவதிலும் முன்னணியில் இருந்தார். அவர் ஒரு முனிவராக இருந்தமையால் இந்த வாஜ்பேய யக்ஞத்தில் பிரம்மனாக வீற்றிருக்க அவரால் முடியாது என்று அறிவித்து விட்டார். ஆயினும் அவருடைய முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஷௌனக் என்பவர் இந்த யக்ஞத்தின் பிரம்மனாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆசாரிய விபூதி மறுநாளே வந்து சேர்ந்தார். மிக ஆடம்பரமாகவும் அமர்க்களத்தோடும் வந்தார். அவரைப் பல சீடர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களில் நான்கு சீடர்கள் அவர் அமர்ந்து வந்த பல்லக்கைச் சுமந்து வந்தனர். அவரும் சந்தோஷமாக இல்லை. வேறு வழியில்லாமலேயே வந்திருந்தார். அவர் அங்கே ஓர் மோதலை எதிர்பார்த்தவராகத் தோன்றியது. ஏனெனில் மஹா அதர்வர் எக்காரணத்தைக் கொண்டும் அவரை அவமதிப்பார் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் ஆசாரிய விபூதி பல்லக்கை விட்டு இறங்கியதுமே த்வைபாயனர் தலைமையில் ஷௌனக்குடன் இன்னும் சில ஆசாரியர்கள் அங்கே வந்திருந்து விபூதியை வரவேற்றுத் தங்கள் பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்தனர். அவரைப் பார்த்து த்வைபாயனர், “ஆசாரியருக்கு நல்வரவு. ஆயிரமாயிரம் வணக்கங்கள். இதோ இவர் தான் ஷௌனக் என்பார். மஹா அதர்வரின் முதன்மைச் சீடர். மஹா அதர்வர் தனக்கு மிகவும் வயதாகி விட்டதால் இந்த வாஜ்பேய யக்ஞத்தின் பிரம்மனாகத் தான் இருப்பது இயலாது என்று நினைக்கிறார். அவரால் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க இயலாது. ஆகவே அவரிடத்தில் ஆசாரிய ஷௌனக் பிரம்மனாக வீற்றிருந்து யக்ஞத்தை நடத்தித் தருவார்.”

அவ்வளவு நேரமும் கடுகடுவென்றிருந்த ஆசாரிய விபூதியின் முகத்தின் கோபம் மெல்ல மெல்ல மறைந்தது. ஆஹா, இந்த ஷௌனக் தன்னை விடச் சிறியவன். மிகவும் சிறியவன். ஆகவே மஹா அதர்வர் தன்னை முந்திக் கொண்டு முன்னே சென்று அனைவர் மனதையும் வென்றுவிடுவார். தன்னைச் சிறந்த ஸ்ரோத்திரியராக நிலைநாட்டுவார் என்னும் பயம் இனி வேண்டாம். இவன் எனக்கு அடங்கி இருப்பான்! இவ்வாறு தனக்குள் நினைத்தார் ஆசாரிய விபூதி! த்வைபாயனர் மேலும் கூறினார், “மலை அடிவாரத்தில் மஹா அதர்வர் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறார்.” என்று கூறினார். ஆசாரிய விபூதிக்குத் திகைப்பு ஏற்பட்டது. இத்தகையதொரு மரியாதையை அவர் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே அவர் கோபம் தணிந்ததோடு அல்லாமல் இங்கே எல்லா விஷயங்களும் தான் விரும்பிய வண்ணமே நடப்பதால் இந்த யக்ஞத்தின் அத்வர்யூவாகத் தான் இருந்து யக்ஞத்தைச் சிறப்பாக நடத்தித் தர முடியும் என்றும் நம்பினார்.

மற்ற ஆசாரியர்கள் அனைவரும் ஆசாரிய விபூதிக்கு வணக்கங்களைச் சொல்லி அவரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர் வந்த பல்லக்குக் காலியாக இருந்தது போலத் தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதிலே ஏதோ சலனம் ஏற்பட்டது. அனைவரும் பார்த்திருக்கையிலேயே ஓர் வயதான சுருங்கிப் போன முகம் அதிலிருந்து மெல்ல மெல்ல மேலெழும்பியது. ஒரு சிறு கூடான உடலைக் கொண்ட ஓர் வயதான மனிதர், வயதின் காரணத்தால் சுருங்கிய உடலோடும் மங்கிய கண்களோடும் காணப்பட்ட அவர் ஆசாரிய விபூதியின் தந்தை மஹாபிரமிஷ்டர். அவர் எழுந்து தன் மங்கிய கண்களால் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அனைவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. வேறு ஏதோ ஓர் உலகிலிருந்து இந்த மனிதன் வந்திருக்கிறானோ என்னும் எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. அவர் தன்னுடைய கரகரத்த குரலில் மேலும் கத்தினார்; “த்வைபாயனா! த்வைபாயனா! எங்கிருக்கிறாய்?”

அப்போது ஆசாரிய விபூதி அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாவனையில், “இவர் என்னுடைய மதிப்புக்குரிய தந்தை. அனைவரும் மதிக்கும் பிரமிஷ்டர் என்னும் பெயருள்ளவர்!” என்று கூறினார். உடனே த்வைபாயனர் சுமாந்துவிடம், கிசுகிசுவென்ற குரலில், “சுமாந்து, உடனே ஓடிச் சென்று உன் தந்தையை அழைத்து வா! அவரிடம் மரியாதைக்குரிய பிரமிஷ்டரே நேரில் வந்திருப்பதைத் தெரிவி! அதோடு உன் தந்தை இங்கேயே வந்தாரெனில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.” என்றார். அதன் பின்னர் பல்லக்கின் அருகே சென்ற த்வைபாயனர் பிரமிஷ்டரை வணங்கித் தன் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். அவர் த்வைபாயனரின் தலையைத் தொட்டு ஆசிகளை வழங்கினார். பின்னர் த்வைபாயனரின் காதைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, ரகசியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆனால் உரத்த குரலில் பேசினார். “த்வைபாயனா! உன் மனைவி எங்கே? அவளைக் கூப்பிடு இங்கே!” என்றார். த்வைபாயனர் பைலரை அழைத்து வாடிகாவைக் கூட்டி வரும்படி வேண்டுகோள் விடுத்தார். அவள் அங்கேயே பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சற்று மறைவாக அமர்ந்திருந்தாள்.

அங்கு வந்திருந்த ஒவ்வொரு ஆசாரியரும் பிரமிஷ்டரை வந்து வணங்கினார்கள். பைலர் அதற்குள்ளாக வாடிகாவைப் போய் அழைத்து வந்திருந்தார். அனைவருக்கும் எதிரே தான் வந்து நிற்கும்படி ஆகி விட்டதை நினைத்துக் கொண்டு வெட்கமுற்ற வாடிகா கொஞ்சம் நடுங்கிய வண்ணமே பல்லக்கின் அருகே சென்றாள். பிரமிஷ்டரை வணங்கினாள். அவளை முதுகில் தட்டிக் கொடுத்த பிரமிஷ்டர், “நீ அழகாக இருக்கிறாயா?” என்று வினவினார். அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெட்கம் அடைந்த வாடிகா பதிலே சொல்லாமல் மௌனமாக நின்றாள். “நீயும் ஒரு ஸ்ரோத்திரியரா?” என்று வினவினார் பிரமிஷ்டர். “ஆம், ஆசாரியரே!” என்றாள் வாடிகா. “அப்படியா? அப்போது உன்னை நான் எச்சரிக்கிறேன், பெண்ணே! நீ த்வைபாயனருக்கு ஒரு நல்ல மனைவியாக மட்டும் இருந்தாக வேண்டும். அதில் நீ தவறக் கூடாது. பொதுவாக ஸ்ரோத்திரியரான பெண்களால் நல்ல மனைவிகளாகப் பிரகாசிக்க முடிந்ததில்லை. அவர்கள் படிப்பினால் அவர்களுக்குப் பெருமையும், கர்வமும் ஏற்பட்டு விடுகிறது!” என்றார்.

அங்கே மீண்டும் அனைவரும் சிரிக்க வாடிகாவுக்குத் தான் அங்கேயே கீழே விழுந்துவிடுவாள் போல இருந்தது. அவள் வெட்கத்தினால் தலை நிமிரவே இல்லை. பின்னர் த்வைபாயனரை அழைத்த பிரமிஷ்டர, “உன் கையைக் கொடு த்வைபாயனா! நான் பல்லக்கிலிருந்து இறங்கப் போகிறேன்.” என்றார். த்வைபாயனரோ அவரைக் கிட்டத்தட்டப் பல்லக்கிலிருந்து தூக்கிக் கைகளில் அணைத்து எடுத்துக் கீழே இறக்கி விட்டுப் பிடித்துக் கொண்டார். அவருடைய நடுங்கும் கால்கள் நிலை பெற்று பூமியில் அவை நின்ற பிறகே அவரைத் தன் பிடியிலிருந்து விடுவித்தார். அப்படியும் அந்தக் கிழவர் தன் கைகளில் ஒன்றை த்வைபாயனரின் தோள் மேல் போட்டுக் கொண்டு அவரைப் பிடித்துக் கொண்டே நின்றார். ஆசாரிய விபூதிக்கோ தனக்கிருந்த முக்கியத்துவம் இப்போது குறைந்துவிட்டது போலவும் அனைவரின் கவனமும் தன் தந்தையிடம் திரும்பி விட்டதையும் கண்டுக் கொஞ்சம் வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. ஆனாலும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. அதோடு கௌதம முனிவரும், ஷௌனக்கும் அவரைக் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். என்னதான் அவர்கள் அவரிடம் மரியாதை காட்டினாலும் அவர்களுக்கு எதிரே தன் மனவேற்றுமையை அவரால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

அதற்குள்ளாக மஹா அதர்வரின் பல்லக்கு அவர்களை நெருங்கியது. மக்கள் கூட்டம் சற்றே விலகி பல்லக்கு அங்கே வர வழி ஏற்படுத்திக் கொடுத்தது. த்வைபாயனர் பிரமிஷ்டரைப் பல்லக்கின் அருகே கொண்டு செல்ல வேண்டி அவரைப் பிடித்துக் கொண்டு ஒரு சில அடிகள் எடுத்து வைத்தார். இந்த இரண்டு மஹா ஆசாரியர்களும் சந்திக்கப் போகும் அந்தக் கணத்துக்காக அங்கிருந்த அனைவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.மஹா அதர்வரோ வாஜ்பேய யக்ஞம் நடைபெறாமல் வெற்றி பெறாமல் போய்விடக் கூடாது என்னும் எண்ணத்திலேயே இருந்தார். ஆகவே அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதைப் புறம் தள்ளும் மனப்பாங்கைப் பெற்றிருந்தார். பிரமிஷ்டரோடு அவருக்குப் பழைய பகை இருந்து வந்தது தான். அவர் மிகப் பெரிய வயதில் மிகவும் மூத்த ஸ்ரோத்திரியரும் கூட. ஆகவே அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் தான் மரியாதை கொடுக்க வேண்டியது தான் நியாயம் என்பதை மஹா அதர்வர் உணர்ந்திருந்தார். எனவே சிறிதும் தயக்கம் இன்றிப் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி பிரமிஷ்டரின் அருகே வந்து அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அனைவருக்கும் அப்போது தான் நிம்மதி ஏற்பட்டது. அனைவரும் ஒழுங்காக மூச்சு விட ஆரம்பித்தனர்.

பிரமிஷ்டரோ மஹா அதர்வரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். “ஜாபாலி, தர்மக்ஷேத்திரத்திலிருந்து உன்னால் விரட்டப்பட்டவர்களில் நானும் ஒருவன். இப்போது நீயே அதே தர்மக்ஷேத்திரத்துக்கு வந்து என்னை இங்கே வரவேற்கிறாய். இதற்காகவே நம்மைக் கடவுள் இத்தனை வருடங்களாக உயிருடன் விட்டு வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். பிரிந்த நாம் ஒன்று சேரவேண்டும் என்பது கடவுளின் விருப்பம்.” என்றார்.

3 comments:

ஸ்ரீராம். said...

விழாக் காட்சிகள்.

பித்தனின் வாக்கு said...

அருமையான காட்சிகள், இந்த ஜபாலி என்பவர் இராமாயணாத்தில் இராமருக்கு குரு மற்றும் ஆலோசகராக வரும் குருவும் ஒருவர்தானா?. இராமயணத்தில் இளமை ஜபாலி.

sambasivam6geetha said...

ஆம், அதே ஜாபாலி தான் இவர்! ராமாயணத்தில் நாத்திகம் பேசுவார். இந்த வார துக்ளக் பத்திரிகையிலும் சுதா சேஷையன் குரு பூர்ணிமா பற்றிய கொண்டாட்டத்தில் வியாசர் பற்றிக் குறிப்பிடுகையில் ஜாபாலி முனிவரின் மகள் வாடிகாவை வியாசர் மணந்து கொண்டதையும் சுகர் பிள்ளையாகப் பிறந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.