Thursday, September 29, 2016

கண்ணன் வருவான், ஏழாம்பாகம்! கண்ணனுக்குப் பிரியாவிடை!

திரு முன்ஷி அவர்கள் என்ன எழுதி இருக்கிறாரோ, எந்த வரிசையில் எழுதி இருக்கிறாரோ அப்படித் தான் நான் எழுதி வருகிறேன். மஹரிஷிகளில் நான் வியாசன் என்று கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதாக வருகிறது. ஆகவே தான் சென்ற பாகத்தில் வியாசரின் பங்கைக் குறித்துப் பார்த்தோம். வியாசாய விஷ்ணு ரூபாய! என்பதும் அனைவரும் அறிந்ததே! இதில்  என் சொந்தக் கற்பனை ஏதும் இல்லை. திரு முன்ஷி அவர்கள் எழுதி இருப்பது தான்! இப்போது யுதிஷ்டிரனின் வாழ்க்கை மூலம் கண்ணனின் பங்கைச் சொல்ல நினைக்கிறார் முன்ஷி. அதைத் தான் நான் எழுதப் போகிறேன். படிக்கிறவங்க மட்டும் மனதைத் திடம் செய்து கொண்டு படிக்கவும். நன்றி. இதை எழுதுவது “கீதா சாம்பசிவம்” ஆகிய நான் என்று நினைக்காமல் முன்ஷி ஜி சொல்லி இருப்பதைப் படிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு படிக்கவும். கடைசி பாகம் குருக்ஷேத்திரத்தோடு பாதியில் நின்று விடும். அப்போதும் கதை முடியவில்லை என்று நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட இது பாகவதமும், பாரதமும் கலந்தது தான். மஹாபாரதத்தில் கண்ணனின் பங்கு மிகப் பெரியது! அதை ஒரு வரிக்குள் அடக்க முடியாது. இனி நம் கதைக்குச் செல்வோம். இந்திரப் பிரஸ்தத்தை நோக்கிச் செல்வோம்.

இந்திரப் பிரஸ்தம்! நகர் முழுவதும் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அரச மாளிகையில் நிலா முற்றத்திலும் மற்றும் ராஜ வீதியின் தெருவோரங்களிலும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். கண்ணன் இன்று துவாரகைக்குத் திரும்புகிறான். அவனுக்குப் பிரிவுபசார விழா! பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திலிருந்து திருதராஷ்டிரன் வெளியேற்றியதும், அவர்களை இந்திரப் பிரஸ்தத்தில் நகரை நிர்மாணிக்கச் சொல்லியும் காண்டவ வனத்தை அழிப்பதில் உதவி செய்தும் கண்ணனும் யாதவத் தலைவர்கள் பலரும் ஈடுபட்டார்கள். அவர்களில் சிலர் துவாரகைக்கு ஏற்கெனவே சென்று விட கண்ணனும் மீதம் இருந்த யாதவத் தலைவர்களும் இன்று துவாரகை திரும்ப இருக்கின்றனர். மிகப் பிரமாதமாகப் பெரிய அளவில் பிரிவுபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசாரிய தௌம்யர் தன் சீடர்களோடும் மற்ற ஸ்ரோத்திரியர்களோடும் அங்கே நின்று கொண்டிருந்தார். விடைபெற்றுச் செல்லும் விருந்தாளிகளுக்குத் தூவி ஆசிகளை வழங்கத் தயாராக அவர் கையிலும் மற்றவர்கள் கைகளிலும் அக்ஷதை இருந்தது. யுதிஷ்டிரன் கிருஷ்ணனை அவன் ரதத்தின் அருகே அழைத்து வந்து கொண்டிருந்தான். கண்ணன் ஏறி அமர்ந்ததும் ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை விரட்டத் தயாராக ரத சாரதி தாருகன் காத்திருந்தான். கைகளில் குதிரைகளைப் பூட்டி இருந்த கயிறுகளை இழுத்துப் பிடித்திருந்தான். அதையும் மீறிக் குதிரைகள் பரபரத்துக் கொண்டிருந்தன. சாத்யகியின் ரதத்தில் கிருஷ்ணனின் ஆயுதங்கள் எல்லாம் அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சாத்யகி அர்ஜுனனிடம் வில் வித்தை பயின்று தேர்ச்சி அடைவதற்காகச் சில நாட்கள் இந்திரப் பிரஸ்தத்தில் தங்கிச் செல்ல இருந்தான். கிருஷ்ணன் மாளிகை வாயிலுக்கு வந்தான். “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா” என்னும் கோஷம் உரக்க ஒலித்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் தன் இருகைகளையும் கூப்பி மக்களை வணங்கினான்.

கிருஷ்ணன் வழக்கம் போல் தன் மஞ்சள் வண்ணப் பீதாம்பரத்தை அரையில் உடுத்தி இருந்தான். தங்கச் சரிகை வேலைப்பாடு செய்த உருமாலைத் தோளில் வீசி இருந்தான். அவன் கழுத்தில் அணிந்திருந்த ரத்தினமாலை சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது. அவன் தலையில் அணிந்திருந்த கிரீடத்தின் மேல் ஓர் அழகான மயிலிறகைச் சூடி இருந்தான். கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும், பீமனையும் விடச் சிறியவன். ஆனால் அர்ஜுனனுக்கு ஒரு வயது பெரியவன். என்றாலும் வயது அவன் முகத்திலோ உடலிலோ தன் அடையாளங்களைப் பதிக்கவில்லை! இளமையாகவே இருந்தான். அப்போது ஆசாரிய தௌம்யர் அங்கே வந்து கிருஷ்ணன் கிளம்புவதற்கான நல்ல நேரம் நெருங்கிவிட்டதாய்க் கூறினார். தன் அத்தை குந்தியின் கால்களில் விழுந்து வணங்கிய கிருஷ்ணன், திரௌபதியைப் பார்த்து அன்பான புன்னகை புரிந்து  விடைபெற்றான். தன் சின்னத் தங்கை, அருமைத் தங்கை இப்போது அர்ஜுனனின் மனைவியாக ஆகி இருப்பவள் சுபத்ராவின் சோகம் தோய்ந்த முகத்தைத் தூக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவள் கன்னத்தில் குறும்புடன் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஐந்து சகோதரர்களையும் அவரவர் கன்னங்களில் தட்டிக் கொடுத்தும், அழுத்திக் கொடுத்தும் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றான்.

சுபத்ராவைப் பார்த்து, “சுபத்ரா, அர்ஜுனனைக் கடத்துவதற்காக நீ என் ரதத்தைத் திருடினாய் அல்லவா? அதை நான் இப்போது திரும்பிப் பெறலாமா?” என்று கேட்டான். சுபத்ராவுக்கு நாணம் மீதூறியது. மெல்லத் தன் கண்களை மட்டும் மேலே தூக்கித் தன் அருமை அண்ணனைத் தான் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பார்த்து பிரமித்தவனை, தன் அன்புக்குரியவனைப் பார்த்தாள். பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனுக்கு இருபக்கங்களிலும் நடந்து வந்தார்கள். நகுலனும், சஹாதேவனும் சாத்யகியுடன் பக்கவாட்டில் வந்தனர். ரதத்தை நெருங்கினார்கள். யுதிஷ்டிரன் அப்போது, “நில், கிருஷ்ணா, கொஞ்சம் பொறு. உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!” என்ற வண்ணம் கிருஷ்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்ன அது?” என்று வியப்புடன் கேட்டான் கிருஷ்ணன். “இன்னும் சிறிது நேரத்தில் உனக்குத் தெரியவரும்!” என்றான் யுதிஷ்டிரன் புன்னகையுடன். பின்னர் யுதிஷ்டிரன் தாருகனை குதிரைகளைக் கட்டி இருக்கும் ரதத்தின் முகக் கயிறுகளைத் தன்னிடம் கொடுக்கச் சொன்னான். தாருகனைக் கீழே இறங்கச் சொன்ன யுதிஷ்டிரன் தான் அந்த இடத்தில் அமர்ந்தான். “நான் தான் உன் ரதத்தை உனக்காக ஓட்டப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன இது?” என்று உண்மையான ஆச்சரியத்துடன் கேட்டான் கிருஷ்ணன். “என்னை ஒரு கேள்வியும் கேட்காதே கிருஷ்ணா! நீயே இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்வாய்!” என்று சொன்னான் யுதிஷ்டிரன். பின்னர் யுதிஷ்டிரன் ஒரு சைகை செய்ய பீமன் குதித்து ரதத்தில் ஏறிச் சாமரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். அர்ஜுனனோ ஒரு குடையை விரித்துக் கிருஷ்ணன் தலைக்கு மேல் பிடித்தான். “சரி, இப்போது ரதத்தில் ஏறு, கிருஷ்ணா!” என்றான் யுதிஷ்டிரன். “ஆனால், இதெல்லாம் என்னப்பா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “உங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை மூழ்கடித்து விட்டீர்கள். ஆனால் இத்தகைய மரியாதைகளுக்கு எல்லாம் நான் தகுதியானவனே அல்ல! நான் ஓர் அரசன் இல்லை, சாமானியன், சக்கரவர்த்தியும் அல்ல! அதற்கும் கீழானவனே!” என்றான் கண்ணன். “சரி, சரி, கிருஷ்ணா, நீ இப்போது நீயாகவே ரதத்தில் ஏறப் போகிறாயா? இல்லை எனில் நான் உன்னைத் தூக்கி உட்கார வைக்கவா?” என்று பயமுறுத்தினான் பீமன்.

Wednesday, September 28, 2016

கண்ணன் வருவான், ஏழாம் பாகம் யுதிஷ்டிரர்!

 முதலில் கொஞ்சம் பூர்வ கதையைப் பார்ப்போமா! இந்தக் கண்ணன் தொடர்களின் கடைசிப் புத்தகம் இந்த யுதிஷ்டிரர் பற்றிய புத்தகமும் அதோடு இணைந்துள்ள குருக்ஷேத்திரம் குறித்த பாகமும். குருக்ஷேத்திரம் என்னும் பெயரில் தனிப்புத்தகம் இருப்பதாக நினைத்தேன், இல்லை, இதிலேயே சுமார் 145 பக்கங்கள் யுதிஷ்டிரர் குறித்து வந்த பின்னர் இதன் கடைசிப் பாகம் குருக்ஷேத்திரம் மட்டும் பதின்மூன்றே அத்தியாயங்கள் எழுதப்பட்டு அதையும் இதில் சேர்த்திருக்கின்றனர். திரு கே.எம்.முன்ஷிஜி அவர்கள் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கையில் குருக்ஷேத்திர யுத்தகளத்தில் கண்ணனின் விஸ்வரூபமும் கீதோபதேசம் குறித்தும் எழுதிக் கண்ணன் எப்படி சாஸ்வத தர்ம கோப்தா(saswata dharma gopta)வாக அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்தார் என்பதை விவரிக்கும் ஆசையுடன் அதைக் குறித்து முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் கூடவே இதைக் குறித்து நான் எழுதுவதும் அவன் விருப்பமே! அவன் விருப்பம் இருந்தால் நான் நிச்சயம் அதை விவரித்து எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கண்ணன் விருப்பம் அப்படி அல்ல என்றே ஆகி இருக்கிறது.

குருக்ஷேத்திரம் குறித்துப் பதின்மூன்று அத்தியாயங்கள் எழுதிய முன்ஷிஜி மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை ஜனவரி 26 ஆம் தேதி 1971 ஆம் வருடம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். திடீரென பிப்ரவரி எட்டாம் தேதி  1971 ஆம் வருடம் இறந்து விட்டார். ஆகவே அதை எட்டாம் பாகமாகத் தனியாக வெளியிடாமல் இந்தப் புத்தகத்திலேயே அந்தப் பதின்மூன்று அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இப்போது கொஞ்சம் முன் கதையைப் பார்த்துக் கொள்வோம்.

பரதகுலப் பேரரசன் ஷாந்தனுவுக்கு மூன்று மகன்கள். கங்கையின் மூலம் தேவவிரதன் எனப்படும் காங்கேயன், சத்யவதி மூலம் சித்திராங்கதன், விசித்திர வீரியன். இதிலே பீஷ்மர் என்றழைக்கப்பட்ட தேவவிரதன் தன் தம்பிகளுக்காகத் தன் அரியணை உரிமையைத் துறந்து வாழ்ந்து வந்தார். ஆனால் சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். சித்திராங்கதன் திருமணம் செய்து கொள்ளாமலேயே இறக்க, விசித்திர வீரியன் இரு இளவரசிகளைத் திருமணம் செய்த பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தான். ஆகவே ஆரியர்களின் பழமையான சம்பிரதாயங்களின்படி நியோக முறைப்படி விசித்திர வீரியனின் இரு மனைவியரும் முறையே இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அதில் அம்பிகை என்னும் இளவரசியின் மகன் பிறவிக்குருடாகப் பிறந்துவிட, அம்பாலிகாவின் பிள்ளை பிறவியிலேயே பலஹீனமுள்ளவனாகப் பிறக்கிறான். இந்த இருவருக்கும் புத்திர தானம் செய்தவர் சத்யவதியின் முதல் பிள்ளையான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர்.

இவர் பராசரமுனிவருக்கும், மச்சகந்தி என அப்போது அழைக்கப்பட்ட மீனவப் பெண்ணிற்கும் பிறந்தவர். பராசர முனிவர் முக்காலமும் அறிந்தவர். ஒரு முறை யமுனையைக் கடக்கையில் விண்ணில் தோன்றிய கிரஹச் சேர்க்கையைக் கண்டறிந்த அவர் இப்போது தன் மூலம் ஒரு பிள்ளை ஜனித்தால் அது மிகவும் புகழுடனும், ஞானத்துடனும், அனைவராலும் போற்றி வணங்கக்கூடிய தெய்விகத் தன்மையுடனும் இருப்பான் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆனால் உடனடியாக விந்து தானம் செய்ய அப்போது எதிரே மச்சகந்தியைத் தவிர வேறு எவரும் இல்லை. ஆகவே அவர் மச்சகந்தியிடம் தன் நோக்கத்தைச் சொல்ல, முதலில் பயந்த அவள் பின்னால் தன் கற்புக்குக் களங்கம் நேராது என்று தெரிந்து கொண்டு சம்மதிக்கிறாள். அந்த யமுனை நதியிலேயே ஒரு தீவில் அவளுடன் கூடுகிறார் பராசரர். உடனே பிள்ளையும் பிறக்கிறது. மஹாபாரதக் கதைப்படி அந்தப் பிள்ளை உடனே வளர்ந்து தந்தையுடன் சென்று விடுவான். ஆனால் நம் கதையில் ஐந்து வயது வரை தாயிடம் வளர்ந்து பின்னர் தந்தையால் அழைத்துச் செல்லப்படுகிறான் இந்தக் குழந்தையே பின்னால் வேதங்களைத் தொகுத்து வேத வியாசர் என்னும் பெயர் பெற்று ஆரியவர்த்தம் முழுமைக்கும் ஆசாரியராய் குருவாய் விளங்கினார்.

இங்கே ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால் அரியணை ஏற முடியாது என்று சாஸ்திர சம்பிரதாயங்களின் படி முடிவானதால் பாண்டு அரியணை ஏறுகிறான். ஆனால் சில காலமே அரியணையில் இருந்த பாண்டு தன் பலஹீனமான உடல் நலத்தால் மனம் வெறுத்துப் போகிறான். அவனால் மனைவியுடன் சுகித்து இருக்க முடியாமல் சாபம் வேறு குறுக்கிடவே இமயமலைப் பகுதிக்குச் சென்று விடுகிறான். அவன் இரு மனைவியரும் அவனுடன் செல்கின்றனர். திருதராஷ்டிரனுக்குப் பல பிள்ளைகள் பிறக்கின்றனர். அவன் மனைவி காந்தார தேசத்து இளவரசி காந்தாரி. அவள் சகோதரன் ஷகுனியும் அவளுடன் ஹஸ்தினாபுரத்திலேயே வாழ்வதற்கு வந்திருக்கிறான். இந்த ஷகுனி ஹஸ்தினாபுரத்துக் கௌரவர்களிடையே பிரிவினையைத் தூண்டி விடுகிறான். காட்டுக்குச் சென்ற பாண்டு தன் மனைவியர் இருவருக்கும் குழந்தைகள் மேல் இருக்கும் ஆசையைக் கண்டு இருவரையும் நியோக முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கிறான் குந்தி என்னும் முதல் மனைவிக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்னும் மூன்று பிள்ளைகள் பிறக்க மாத்ரி என்னும் இரண்டாம் மனைவிக்கு நகுலன், சஹாதேவன் என்னும் இரட்டையர் பிறக்கின்றனர்.

ஒரு மயக்கும் பொழுதில் தன் இளைய மனைவி மாத்ரியுடன் கூட நினைத்த பாண்டு அக்கணமே இறந்து போகத் தன் கணவன் சாவுக்குத் தானே காரணம் என்று மாத்ரியும் உடன் கட்டை ஏறி விடுகிறாள். செய்வதறியாது திகைத்த குந்தி வியாசரை வரவழைத்து ஆலோசனை கேட்டுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்ப முடிவெடுக்கிறாள். இந்தச் செய்தி ஹஸ்தினாபுரத்தையும் சென்றடைய அங்கே பாண்டவ புத்திரர்களைக் கோலாகலமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, பாண்டு இறந்து போனதால் அவன் மூத்த பிள்ளை யுதிஷ்டிரனே அடுத்த அரசனாக வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. கௌரவ சகோதரர்களுக்கு இது பிடிக்கவில்லை. நியாயமாகப் பார்த்தால் தங்கள் தந்தை தான் அரியணை ஏறி இருக்க வேண்டும். ஆனால் அவர் குருடாகப் போய் விட்டார். இருந்தாலும் தனக்குத் தான் பட்டம் கட்ட வேண்டும் என்றே துரியோதனன் எதிர்பார்த்தான். தன் மாமன் ஷகுனியைப் பிதாமகர் பீஷ்மரைக் கண்டு பேச அனுப்பி வைக்கிறான். பீஷ்மர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

மஹாராணி சத்யவதி தன் இரு மருமகள்களுடன் கோதுலி ஆசிரமத்திற்கு வானப்பிரஸ்தமாகச் சென்று விட இங்கே அனைவரையும் சமாளிக்கும் பொறுப்பு பீஷ்மரின் தலையில் விழுகிறது. ஏற்கெனவே க்ருபாசாரியார் என்னும் ஆசாரியர் குரு வம்சத்தின் குருவாக இருந்து வர அவருடைய சகோதரியின் கணவனும் பரசுராமரின் சீடருமான துரோணாசாரியாரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசாரியராக நியமிக்கிறார் பீஷ்மர். பாண்டவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் நேர்மையான போக்கும், பெருந்தன்மையான குணமும், இனிமையான நடத்தையும் அனைவரையும் கவர்கின்றது. அதோடு ஆயுதப் பயிற்சியிலும் தேர்ந்து விடுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறப்பான பயிற்சி பெறுகின்றனர்.

துரியோதனனும் ஆயுதப் பயிற்சியை நன்றாகச் செய்து சிறப்பாக விளங்கினாலும் வில் வித்தையில் அர்ஜுனனைத் தோற்கடிக்க அவனால் முடியவில்லை. அதற்குத் தன் சிநேகிதனான தேரோட்டி மகன் கர்ணனையே நம்புகிறான். கர்ணனும் துரோணாசாரியாரிடம் வில் வித்தை பயின்றாலும் துரோணாசாரியார் அர்ஜுனனிடம் காட்டிய அளவுக்கு ஈடுபாடு கர்ணனிடம் காட்டவில்லை. தான் ஓர் சூத புத்திரன் என்னும் எண்ணம் ஒரு பக்கம் கர்ணனை வாட்டி வதைக்க மறுபக்கம் தான் அர்ஜுனனை மிஞ்ச வேண்டும் என்னும் எண்ணமும் தோன்றுகிறது. அதற்குள்ளாக யுவராஜா யுதிஷ்டிரனையும், அவனுடன் அவன் சகோதர்கள் நால்வரையும் அவர்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் என்னும் இடத்திற்குத் தன் சூழ்ச்சி மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்கிறான் துரியோதனன். வாரணாவதத்தில் அரக்கினால் ஓர் மாளிகை கட்டி அதில் பாண்டவர்கள் ஐவரையும் அவர்கள் தாயுடன் உயிருடன் எரிக்க வேண்டும் என்பதே அவன் முடிவு.

இந்தச் சூழ்ச்சி குறித்துப் பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோரின்  சகோதரரும் அம்பிகா, அம்பாலிகாவின் பணிப்பெண்ணால் பெற்றெடுக்கப்பட்டவருமான விதுரருக்குத் தெரிய வர அவர் அந்த மாளிகையின் கீழ் சுரங்கம் வெட்டுவித்து அனைவரையும் தப்புவிக்கிறார். ஆனால் இது தெரியாத துரியோதனன் அவர்கள் இறந்தார்கள் என்று எண்ணி நிம்மதியாக பாஞ்சால நாட்டின் அரசன் தன் மகள் திரௌபதிக்காக ஏற்பாடு செய்த சுயம்வரத்திற்குச் செல்கிறான். ஆனால் ஐந்து சகோதரர்களும் வாரணாவதத்திலிருந்து தப்பிச் சென்று ராக்ஷஸ வர்த்தம் சென்று அங்கே பீமன் ஹிடிம்பனைக் கொன்று விட்டு அவன் சகோதரி ஹிடிம்பியைத் திருமணம் செய்து கொண்டு கடோத்கஜன் என்னும் பெயரில் ஓர் பிள்ளையும் பெறுகிறான்.

குந்தியின் சகோதரன் ஆன வசுதேவரின் எட்டாவது பிள்ளையான கண்ணன் பாண்டவர்களுக்குச் சகோதரன் முறை, ஆகவே பாண்டவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகுவதோடு அர்ஜுனனிடம் தனியான அன்பும் செலுத்துகிறான் கிருஷ்ணன். அவன் பாண்டவர்களின் நலத்தைத் தன் சொந்த நலமாகக் கருதி அவர்களைப் பாதுகாத்து வருகிறான், ராக்ஷஸவர்த்தத்தில் பாண்டவர்கள் இருப்பதை அறிந்த கண்ணன் உத்தவனை அனுப்பி அவர்களைச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் பாஞ்சாலம் வரும்படி கிருஷ்ணன் சொல்ல ஐவரும் பாஞ்சாலம் வருகின்றனர். அர்ஜுனன் சுயம்வரத்தில் வெற்றி கொண்டு திரௌபதியை மனைவியாக அடைகிறான். ஆனால் குந்தி தவறாகச் சொன்ன ஓர் வார்த்தையால் திரௌபதி வேத வியாசர் மற்றும் கிருஷ்ணனின் யோசனையைக் கேட்டுக் கொண்டு ஐந்து சகோதரர்களையும் மணந்து கொள்கிறாள். இப்போது துருபதனின் பலமும் சேர யுதிஷ்டிரன் பலம் பொருந்தியவனாய்த் திரும்பி வர திருதராஷ்டிரனால் ஏதும் சொல்ல முடியாமல் போகிறது. ஆனாலும் ஹஸ்தினாபுரத்திலேயே அவர்கள் தொடர்ந்து இருந்தால் தன் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டைகளை யோசித்து திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனைத் தன் சகோதரர்களை அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடும்படி வற்புறுத்துகிறான்.

அங்கே காண்டவ வனத்தை அழித்து இந்திரப் பிரஸ்தம் என்னும் பெயரில் ஓர் புதிய நகரைக் கண்ணன் ஆலோசனையின் பேரில் எழுப்புகிறார்கள் பாண்டவர்கள் ஐவரும். ஹஸ்தினாபுரத்தில் இருந்த பலரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ் வாழ விரும்பி இங்கே வருகின்றனர். யுதிஷ்டிரனை அங்கே சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்து வாழ்த்துகின்றனர் வேத வியாசரும், கண்ணனும். பின்னர் வியாசர் தர்மக்ஷேத்திரம் சென்றுவிட, கண்ணன் துவாரகை திரும்புகிறான். கண்ணனைப் பிரிய மனமில்லாமல் விடை கொடுக்கின்றனர் பாண்டவர்கள். இதன் பின்னர் தொடர்கிறது நம் கதை!

Tuesday, September 27, 2016

தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்!

“ம்ம்ம்ம், இது எவ்விதத்திலாவது குரு வம்சத்துப் பெண்டிரைப் பாதிக்குமா, அம்மா? அப்படிப் பாதித்தால் அது எங்கனம் நடைபெறும்?” என்று தன் தாயிடம் கேட்டார் த்வைபாயனர். “அப்படி ஏதும் தெரியவில்லை, மகனே! நான் சந்தித்தவர்கள் எல்லோருமே பாண்டவ புத்திரர்களை முழு மனதோடு ஆதரிக்கின்றனர்.” என்று கூறிய சத்யவதி தன் கண்களைச் சிறிது மூடிக் கொண்டு ஏதோ பழைய காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து பார்ப்பவள் போல் காணப்பட்டாள். பின்னர் தொடர்ந்து தனக்குள்ளே முணுமுணுக்கும் பாவனையில், “ஹூம், இந்தக் குரு வம்சத்தின் அதிகாரத்தையும் ஆட்சி புரியும் சக்தியையும் வலிமை பெறச் செய்யப் போவதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முட்டாள் நான்! கனவுகளிலேயே வாழ்ந்திருக்கிறேன்!” என்று அலுப்புடன் கூறினாள்.

தன் தாயின் நெற்றியின் மேல் மிருதுவாகக் கையை வைத்தார் த்வைபாயனர். நெற்றி நெருப்பாய்ச் சுட்டுக் கொண்டிருந்தது. மெல்லத் தடவிக் கொடுத்தவர், “அப்படி எல்லாம் பேசாதீர்கள், அம்மா! நீங்கள் ஒரு அசையாத் தூண் போல் ஸ்திரமாக நின்று காங்கேயருக்கு முழு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். அதோடு இல்லாமல் குரு வம்சத்தினரிடையே உங்களுக்கு உள்ள பிடிப்பும், ஈர்ப்பும் போல் அவர்களும் உங்களிடம் மாறாத அன்பு வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு விஷயம் உண்மை தான்! இந்த ஷகுனி ஒரு ஆபத்தானவன். அதிலும் யுதிஷ்டிரன் அரியணை ஏறினால் அவன் சும்மா இருக்க மாட்டான். தன் வேலையைக் காட்டுவான்.”

சத்யவதி கூறினாள். “ஷகுனியைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது. நினைக்கவும் முடியாது. அவன் ஓர் சின்னஞ்சிறு புழுவைப் போல இருப்பான். ஆனால் அந்தப் புழு ஒரு மரத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று முழு மரத்தையும் வேரோடு அறுத்துவிட்டு விடும். அதைப் போன்றவன் அவன். உன் அபிப்பிராயம் என்ன கிருஷ்ணா? உனக்கும் இந்தக் குருவம்சத்தினரின் முன்னேற்றத்தில் அக்கறை உண்டு. ஆகவே உன் கருத்தையும் கூறு!” என்றாள் சத்யவதி. “அம்மா, நாம் இப்போது ஓர் செங்குத்துப் பாறையின் விளிம்பில் நிற்கிறோம். ஒவ்வொருவரும் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை நாம் நமக்கு நாமே முதலில் தெளிவாக்கிக் கொள்வோம். நான் எங்கே நிற்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். குரு வம்சத்தினர் சர்வ வல்லமை பெற்று அதிகாரங்களைப் பெற்று இருப்பதற்கு எனக்குள் சொந்தமாகவும் காரணங்கள் உண்டு!” என்றார் த்வைபாயனர்.

“உனக்கெனத் தனிக்காரணங்களா? அவை என்ன?” சத்யவதி கேட்டாள்.

சற்று நேரம் மௌனமாகவே இருந்தார் த்வைபாயனர். அந்த அறைக்குள்ளாக சூரியக் கிரணங்கள் சாளரத்தின் வழியாக மெல்ல மெல்ல உள்ளே வந்து ஒளிச் சிதறல்களாகக் காட்சி அளிக்க சற்று நேரம் அதையே பார்த்தார். பின்னர் தன் தாயிடம் திரும்பி, “அம்மா, சொல்கிறேன். எனக்கெனச் சில காரணங்கள் இருக்கின்றன என்றேன் அல்லவா? குரு வம்சத்தினரின் அதிகாரம் பரவலாகவும், வல்லமையாக இருக்கவும் அதை நான் ஆதரிக்கவும் சில காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியோ ஏமாற்றமோ அடைய வேண்டாம். இதை நான் இன்று வரை எவரிடமும் விவரித்துச் சொன்னதில்லை. மாட்சிமை பொருந்திய காங்கேயரிடம் பிரம தேஜஸும், க்ஷத்திரிய தேஜஸும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஆகவே அவருக்குக் கட்டுப்பட்ட ஒரு சக்கரவர்த்தி இந்தக் குரு வம்சத்து ராஜ்யத்தை ஆட்சி புரிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவனாக நீதியும் நியாயமும் உள்ளவனாக, சாவுக்கும் அஞ்சாதவனாக தர்மம் ஒன்றுக்கே வாழ்பவனாக இருக்க வேண்டும், என்பது என் ஆசை. ஆகவே இந்தக் குரு வம்சத்தில் அப்படி ஒரு அரசன் அரியணை ஏறினால் அது யுதிஷ்டிரனாக இருக்கலாம். இல்லை எனில் நான் வேறு எங்காவது போய் வேறு அரசனைத் தேட வேண்டியது தான்!”

சற்றே நிறுத்திக் கொண்டு பின்னர் மேலும் விநயத்துடன் கூறினார். “தாயே, எனக்கு சூரிய பகவான் ஆணையிட்டிருக்கிறார். தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று! நானே எதிர்பாராவண்ணம் அதற்கான அதிகாரத்தையும் எனக்களித்திருக்கிறார். ஆசிரமங்கள் பல்கிப்பெருக ஆரம்பித்துள்ளன; மக்களுக்கும் வேதவாக்கியங்களில் நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது. வேதத்தைக் கற்பவர்களும், கற்பிப்பவர்களும் பெருகி வருகின்றனர். நன்கு கற்றறிந்த ஓர் புத்தம்புதிய தலைமுறை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. நான் வழிகாட்டி வரும் வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நான் நேர்மையாகவும், நல்வாழ்க்கை வாழவும் மக்களைப் பழக்கப்படுத்தி வருகிறேன். ஆகவே இதை எல்லாம் நான் மேலும் தொடரவேண்டுமானால் இங்கே ஹஸ்தினாபுரத்தில் ஓர் நேர்மையும் நியாயமும் உள்ள சக்கரவர்த்தி ஆள வேண்டும். அதற்கு யுதிஷ்டிரனே பொருத்தமானவன்.” என்று முடித்தார் த்வைபாயனர்.

“ஹூம், மகனே, நாம் எங்கே போய்த் தேடுவது அப்படிப் பட்ட ஓர் சக்கரவர்த்தியை!” என்று பெருமூச்சு விட்ட சத்யவதி, “மகனே, பாண்டு மட்டும் நம்மிடையே இருந்திருந்தால்!  அவன் அப்படிப் பட்ட ஓர் சக்கரவர்த்தியாக நிச்சயம் இருந்திருப்பான்! ஆனால் தெய்வம் துணை செய்யவில்லையே!” தன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. “கிருஷ்ணா, நீ என் கஷ்டங்களைச் சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லையே! என் வலிமையின் வல்லமையின் கடைசிக்கட்டத்தில் நான் இருக்கிறேன்.” என்று மீண்டும் பெருமூச்சு விட்டாள் சத்யவதி!

“இல்லை, தாயே, நான் புரிந்து கொண்டுள்ளேன்.” என்றார் த்வைபாயனர்..”ஆனால் அவை எல்லாம் இந்தக் கஷ்டத்திலிருந்து விடுபடும் வழியல்ல தாயே! அதில் ஏதும் பொருள் இல்லை! நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், உங்களை வணங்குகிறேன். என் தெய்வம் நீங்கள். அம்மா, நான் உங்கள் மகன் என்பதால் மட்டும் அல்ல. இந்த ஹஸ்தினாபுரத்து மக்களின் மனதில் எப்படிப்பட்டதொரு மாற்றங்களையும் நல்லொழுக்கமான வாழ்க்கையை வாழவும் நீங்கள் முனைந்து பாடுபட்டீர்கள்! அதைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப் பட்டிருக்கிறேன், தாயே!”

த்வைபாயனர் மீண்டும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார். சூரிய ஒளி உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்த த்வைபாயனர் தன்னையும் அறியாமல் மேலும் பணிவுடன் பேசினார். “ஆனால் தாயே, இதற்குப் பின்னர் எல்லாமே வித்தியாசமாக ஆகி விடும். என்னால் இனிமேல் நடக்கப் போவதைக் குறித்து அறிய முடிகிறது. நான் அறிந்த வரையில் ஹஸ்தினாபுரம் ஓர் மாபெரும் யுத்தத்தை நோக்கி நடைபோடுகிறது. ஹஸ்தினாபுரம் போர் புரியும் கூடாரமாகப் பிரிந்து நிற்கப் போகிறது. தர்மம் அடியோடு மறக்கப்படும். மனிதர்களுக்குள்ளே அவர்களுக்கிடையே உள்ள விரோத மனப்பான்மையால் ரத்தம் சிந்தப் போகிறது. இல்லை, இல்லை, கொட்டப் போகிறது. அதோடு இப்போது எவரால் சொல்ல முடியும் அம்மா, இந்த மாபெரும் யுத்தத்தில் ஜெயிக்கப் போவது யார் என்று? நல்லவரா, அல்லது கெட்டவரா? கடவுளா அல்லது சைத்தானா?”

“கிருஷ்ணா, இன்று நீ மிகவும் விரக்தியிலும் ஏமாற்றத்திலும் தென்படுகிறாய். நீ இப்படி எல்லாம் பேசியதே இல்லை. எப்போதும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையில் தெம்புடன் பேசுவாய்! இன்று ஏன் இப்படி?” என்று சத்யவதி தன் மகனைப் பார்த்துக் கேட்டாள். “தாயே, குரு வம்சத்தினரின் உள் சண்டையால், தாயாதிச் சண்டையால் இந்த மொத்த உலகும் கஷ்டப்படப் போகிறது. பிரிந்து நிற்கப் போகிறது!” என்றார் த்வைபாயனர். “த்வைபாயனரே, அப்படிச் சொல்லாதீர்கள்! இதைத் தடுக்க வேறு வழி ஏதும் இல்லையா?” என்று கேட்டார் பீஷ்மர்.

“நான் தான் சொல்லிவிட்டேனே, இளவரசே! ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும், ஆட்சியும் முக்கியமான இடம் பெறப் போகிறது. புதியதாக நியமிக்கப் போகும் சக்கரவர்த்தி பிரமதேஜஸும், க்ஷத்திரிய தேஜஸும் ஒருங்கே பொருந்தியவனாக இருக்கவேண்டும். அவனுடைய பரிபூரண அதிகாரம் இந்த உலகு முழுவதும் பரவ வேண்டும்.அனைவரும் அதை உணர வேண்டும்.” என்றார் த்வைபாயனர். பின்னர் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து பேசினார். “இந்த ஷகுனி இருக்கிறானே, அவன் பரமசிவன் கழுத்தில் உள்ள விஷம் போன்றவன். அதைத் துப்பவும் முடியாது; விழுங்கவும் முடியாது!” என்றார். “ஆஹா, நாம் ஓர் செங்குத்துப்பாறையின் விளிம்பில் நிற்கிறோம் என்று நீ சொன்னதன் உண்மையான பொருளை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது, மகனே!” என்றாள் சத்யவதி மெல்லிய குரலில்.

“தாயே, வரக்கூடியதை அப்படியே எதிர்கொள்வோம். தைரியமாக இருங்கள். கடவுள் நமக்கு இவற்றை எதிர்கொள்ளும் தைரியம் மட்டுமில்லாமல் இதிலிருந்து நாம் தப்பிக்கவும் வழிகாட்டுவார் என்று நம்புவோம்.” என்றார் த்வைபாயனர். வேறு வழியில்லாமல் தன் கையைத் தூக்கி விரித்தாள் சத்யவதி! “ஆனால் இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் நான் எப்படி வாழ்வேன்? எங்கு பார்த்தாலும் சூழ்ச்சி, எந்தப் பக்கம் செல்வது என்று முடிவெடுக்க முடியாத் தன்மை, மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமை, நேர்மையான நல்வாழ்க்கை வாழ வேண்டிய வழியில் ஸ்திரமாகவும் தைரியமாகவும் நிற்க முடியாமல் தவித்தல்! இந்தச் சூழ்நிலையில் நான் வாழவேண்டுமா?” என்று விரக்தியின் எல்லைக்கே போய்க் கூறினாள் சத்யவதி.

“நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறேன், தாயே!” என்றார் த்வைபாயனர். “காசி தேசத்து இளவரசிகளான அம்பிகாவுடனும், அம்பாலிகாவுடனும் நீங்கள் பராசர ஆசிரமத்துக்குச் சென்று விடுங்கள். அங்கே நீங்கள் ஓய்வாக இருக்கலாம். நீங்கள் கிளம்புகையில் ஹஸ்தினாபுரத்து மக்கள் கண்ணீர் சிந்தலாம். ஆனால் அந்தக்கண்ணீர் தான் உங்களையும் ஹஸ்தினாபுரத்து மக்களையும் பிணைக்கும் கயிறாக இருக்கும். நீங்கள் இந்தச் சூழ்ச்சிகள் நிறைந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டாலே, நீங்கள் மகாப் பெரியவராக மதிக்கப்படுவீர்கள். உங்கள் தார்மிக அதிகாரம் மிக உயர்ந்த இடத்துக்குச் சென்று விடும். நீங்கள் முக்கியத்துவம் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் இன்றியமையாதவர் என்பது மக்களால் உணரப்படும். ஒரு வேளை இங்கே ரத்தம் சிந்தினால் நீங்கள் மௌனமாக ஓர் பார்வையாளராக இருங்கள். ஆனால் அதன் பின்னர் யுத்த்த்தினால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை அறிந்து கொண்டு அவர்களே உங்களிடம் வலிமை பெறவும் வழிகாட்டச் சொல்லும்படியும் வந்து நிற்பார்கள்.” என்றார்.

சத்யவதி சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். “சரி, கிருஷ்ணா, மிக நல்லது. நான் அப்படியே செய்கிறேன்.” என்ற வண்ணம் நீண்ட பெருமூச்சு விட்டாள். “அதெல்லாம் சரி அப்பா! ஒரு வேளை ஹஸ்தினாபுரமோ அல்லது மற்ற எந்த இடத்ஹ்டு அதிகாரமோ தர்மத்தைக் காக்க வேண்டி ஓர் அரசனைச் சக்கரவர்த்தியைக் கொண்டு வரவில்லை எனில்? அப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் சத்யவதி. “தாயே, நான் அதையும் கவனத்தில் கொள்ளாமல் இல்லை. இந்த ஆபத்து இருக்கிறது என்பதையும் உணர்வேன்.” என்ற த்வைபாயனர் மேலும் தொடர்ந்து, “ஆனால் ஒன்று, எனக்குக் கடவுளரிடமிருந்து பித்ருலோகத்துக்கு அழைப்பு வரும் வரை நான் தர்மத்திற்காகவும் நீதி, நேர்மைக்காகவும் வாழ்வேன். ஒரு வேளை குரு வம்சத்தவரால் அப்படி ஓர் சக்கரவர்த்தியைக் கொண்டு வர முடியவில்லை எனில், என் கடவுள் சூரிய பகவான் எனக்கு வழிகாட்டுவான். என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்வான்.
தர்மம் என்றென்றும் சாஸ்வதம்; அதற்கு அழிவில்லை.
சூரிய பகவானே, அழிவற்ற தர்மத்தின் பாதுகாவலன்
தீமைகளை அழித்து நன்மைகளை நிலை நாட்டி தர்மசாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபிப்பான்,
இது நிச்சயம் நடக்கும், எனக்கு உறுதியாகத் தெரியும். நிச்சயமாகத் தெரியும்.”


இத்துடன் ஆறாம் பாகம் வேத வியாசர் முடிவடைந்தது. இனி ஏழாம்பாகம் யுதிஷ்டிரர் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

சத்யவதியின் கவலை!

சத்யவதி என்றேனும் ஓர் நாள் பாண்டு தன் வனவாசத்தை விட்டு விட்டு நாடு திரும்பி மீண்டும் ஹஸ்தினாபுரத்தின் அரண்மனைப் பொறுப்பையும் இந்தக் குரு வம்சத்தின் பாரம்பரியமான சாம்ராஜ்யத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகிறான் என்றே நம்பி வந்தாள். பாண்டுவின் வரவுக்காகக் காத்திருந்தாள். ஆனால் இவ்வளவு இளம் வயதில் பாண்டு இறப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. மனம் மிகவும் நொந்து போய் வாழ்க்கையே வெறுத்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல், புரியாமல் திகைத்திருந்தாள். அதோடு ஹஸ்தினாபுரமோ உட்பகையாலும் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகளாலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பாண்டு திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று இவற்றை எல்லாம் ஓர் ஒழுங்கு செய்வான் என்று எதிர்பார்த்திருந்த அவள் நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. அவள் இத்தனை நாட்கள் கட்டிக் காத்து வந்த அவள் மனோ தைரியம் அவளை விட்டு அகன்றது. அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்துவிட்டாள். இதைக் கண்டே பிதாமகர் பீஷ்மர் ஆசாரியர் வேத வியாசரை ஒரு முறை ஹஸ்தினாபுரம் வந்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பேரிலேயே இப்போது வியாசர் இங்கே வருகை புரிந்திருந்தார்.

ஆசாரியர் வேத வியாசர் பீஷ்மருடன் மஹாராணி சத்யவதியின் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். ராணிமாதாவின் அந்தப்புர அறைக்கு இருவரும் சென்றனர். அங்கே ராஜமாதா உடல் நலம் பூரணமாய்க் கெட்டுச் சிவந்த கண்களுடனும், செக்கச் சிவந்த முகத்துடனும் கொதிக்கும் உடலுடனும் படுத்திருந்தாள். அவள் அந்தரங்கச் சேடி தாவி உதவி செய்ய மெல்ல எழுந்திருந்து சாய்ந்த வாக்கில் படுக்கையில் அமர்ந்த ராணிமாதா தன் காலைத் தொட்டு வணங்கிய ஆசாரியரை ஆசீர்வதித்தாள். சுயக்கட்டுப்பாடுகளிலும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதிலும் பிரபலம் அடைந்திருந்த பீஷ்ம பிதாமகர் தானும் தன் மாற்றாந்தாயான சத்யவதியின் பாதங்களைத் தொட்டு வணங்கிக் கொண்டார். தன் கை அசைப்பால் இருவரையும் அமரச் சொன்னாள் சத்யவதி. பின்னர் தன் கண்களை ஒரு நிமிடம் மூடிக் கொண்டாள். த்வைபாயனரிடம், “கிருஷ்ணா, இந்த அடி பெரும் அடியாக மரண அடியாக விழுந்து விட்டது! என்னால் இதைத் தாங்க முடியவில்லை!” இதைச் சொல்கையிலேயே அவள் தொண்டை அடைத்துக் கொண்டு குரல் தழுதழுத்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, இப்படி வா! என் அருகே வந்து அமர்ந்து கொள்! இத்தனை நாட்களாக நான் உனக்காக் காத்திருந்தேன் குழந்தாய்! இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிருடன் இருக்கப் போகிறேனோ தெரியவில்லையே! ஆனால் நான் உடனே இறக்க விரும்புகிறேன்; ஆம் நான் இறக்க வேண்டும்!” என்று புலம்பினாள் சத்யவதி! அவள் இத்தனையில் அளவுக்கு மீறித் தன் சக்தியைச் செலவிட்டதால் களைத்துப் போய்விட்டாள். மெல்லத் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டாள். “ஆரிய புத்திரரின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றித் தருவதாகவும், தர வேண்டும் எனவும் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், ஆனால் அவற்றில் நான் தோல்வி அடைந்து விட்டேனே! இந்தத் தோல்வியிலிருந்து மீண்டும் மீள முடியாத அளவுக்குத் தோல்வி அடைந்து விட்டேன்!” என்று கூறிய அவள் பெரும் விம்மல்களோடு கூடிய அழுகையை ஆரம்பித்தாள். அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை! மெல்லிய பலஹீனமான குரலில், “நான் வாழ்க்கையைச் சரியாக வாழவில்லை. என் மொத்த வாழ்க்கையுமே வீணாகி விட்டது. என் பிரபுவுக்கு, என் அருமைக் கணவர் ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவிற்கு நான் நல்ல பலமுள்ள புத்திரர்களைப் பெற்றுத் தரவில்லை. நீண்ட நாட்கள் வாழக் கூடிய பிள்ளைகளை நான் பெறவில்லை!” என்று புலம்பினாள்.

பின்னர் காங்கேயரிடம் திரும்பி, “காங்கேயா, நீ த்வைபாயனனிடம் எல்லா விபரங்களையும் கூறி விட்டாய் அல்லவா?” என்று கேட்டாள். “ஆம், தாயே, ஆம்! நான் அனைத்தையும் த்வைபாயனரிடம் கூறி உள்ளேன்.” என்றார் பீஷ்மர். “நீ என்ன நினைக்கிறாய், கிருஷ்ணா? இந்த விஷயத்தில் உன் கருத்து என்ன?” என்று த்வைபாயனரைக் கேட்டாள் ராஜமாதா. “காங்கேயர் எடுத்திருக்கும் முடிவு சரியானது தான் தாயே!” என்றார் த்வைபாயனர். “காங்கேயர் மட்டுமின்றி குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். நியோக முறையில் பாண்டுவின் மனைவியர் குழந்தை பெற்றது ஏற்கக் கூடியதே! ஆகவே அவர்கள் பாண்டுவின் புத்திரர்களை முறைப்படி இளவரசர்களாக அங்கீகரித்துத் தான் ஆகவேண்டும். அதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.” என்றார்.

“ஆம், தாயே, அது உண்மைதான்!” என்றார் பீஷ்மர்! “நாங்கள் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே ஏற்கெனவே இதற்கான உறுதிமொழியை எடுத்து விட்டோம். பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்து இளவரசர்களாக  அங்கீகரிப்பதோடு அல்லாமல் யுதிஷ்டிரனை யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்யும் எண்ணமும் உள்ளது!” என்றார். “ம்ம்ம்ம், அப்படியா? குரு வம்சத்து மூத்தோர்களின் கருத்தையும் கேட்டாயல்லவா? அவர்கள் என்ன சொல்கின்றனர்?” என்று கேட்டாள் ராணி சத்யவதி. “அவர்களில் பலருக்கும் ஐந்து சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாகவும், ஹஸ்தினாபுரத்து இளவரசர்களாகவும் அங்கீகாரம் செய்வதில் எவ்விதத் தடையும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

அப்போது த்வைபாயனர், “காங்கேயரே! நான் வருவதற்குச் சற்றே நேரம் முன்னர் ஷகுனி உங்களை வந்து சந்தித்ததாகக் கூறினீர்கள் அல்லவா? அவன் கருத்து என்ன? அவன் என்ன சொல்கிறான்?” என்று கேட்டார். பீஷ்மர் கொஞ்சம் இகழ்ச்சியுடன் சிரித்தார். “அவன் எதற்கு வருவான்? என்னிடம் மிகுந்த அழுத்தம் கொடுப்பதே அவன் நோக்கம். மேலும் மேலும் என்னைச் சிந்திக்கவிடாமல் அழுத்தி அவன் கருத்தை நான் ஏற்கச் செய்ய வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதை மிகச் சாமர்த்தியமாகச் செய்தான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? அவன் தந்தையிடமிருந்து எனக்குச் செய்தி வந்திருப்பதாகத் தெரிவித்தான். அவன் தந்தை சொல்லி அனுப்பினாராம். பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் நாம் அங்கீகாரம் செய்யக் கூடாது என! அதோடு மட்டும் அல்ல. அப்படியே நாம் பாண்டுவின் புத்திரர்களை ஏற்றுக் கொண்டாலும், அதனால் துரியோதனன் அரியணை ஏறுவதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாதாம். எப்படியானும் துரியோதனன் அரியணை ஏறும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அதோடு மட்டுமா? அவன் சில ஸ்ரோத்திரியர்களைக் கூட இதற்காகக் கண்டு பேசினானாம். அவர்களிடம் குரு வம்சத்துப் பழைய கோட்பாடுகளைக் குறித்துக் கலந்து ஆலோசித்து துரியோதனன் அரியணை ஏற உரிமை உள்ளவன் தானா என்றெல்லாம் கேட்டுக் கொண்டானாம்!” மீண்டும் இகழ்வுடன் நகைத்தார் பீஷ்மர்.

“ஆஹா! ஸ்ரோத்திரியர்கள் எல்லோரும் எப்படி துரியோதனனை ஆதரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்?” என்று வியப்புடன் கேட்டார் ஆசாரியர். “ம்ம்ம்ம்ம், இல்லை த்வைபாயனரே! அவன் என்னை ஏமாற்றுகிறான் என நினைக்கிறேன். என்னை நம்ப வைப்பதற்காகப் பொய் சொல்லுகிறான். எனக்குத் தெரிந்தவரையில் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து ஸ்ரோத்திரியர்களும் ஆசாரிய விபூதியின் கருத்தோடு ஒத்துப் போகிறார்கள். அதோடு நிற்காமல் இப்போதைய ராஜகுருவான ஆசாரிய பாரத்வாஜரின் கருத்துக்களோடும் ஒத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் யுதிஷ்டிரன் அரியணை ஏறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றே கூறிவிட்டார்கள். அவர்களும் நம்முடைய பழைய கோட்பாடுகளையும், நீதிகளையும் அலசி ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதை அனைத்து ஸ்ரோத்திரியர்களும் ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு இந்த முடிவு எடுத்ததன் அடிப்படையே தர்மக்ஷேத்திரத்தில் உம்மால் ஸ்தாபிக்கப்பட்ட வித்வத் சபையின் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றனர். அங்கே ஆரியவர்த்தத்தின் பழைமையான கோட்பாடுகளும், நீதி, நியதிகளும் அலசி ஆராய்ந்து ஓர் முடிவுக்கு எட்டி இருப்பதாகவும் அதையே தாங்களும் பின்பற்றுவதாகவும் சொல்லுகின்றனர். அந்த வித்வத் சபையை நீர் தான் அங்கீகாரம் செய்திருப்பதாகவும் சொல்கின்றனர்.”

அப்போது த்வைபாயனர், “ஐந்து சகோதரர்களும் இறந்து போன குரு வம்சத்துக் கடைசிச் சக்கரவர்த்தியான பாண்டுவின் புத்திரர்களே என்பதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. ஆகவே அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனுக்கு இந்த அரியணை பிறப்புரிமை என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை! அவன் தந்தைக்குப் பின்னர் அவருடைய வாரிசாக அவன் தான் அரியணை ஏற வேண்டும்!” என்றார் த்வைபாயனர். பின்னர் காங்கேயரிடம், “அது சரி, இளவரசே, நீங்கள் ஷகுனியிடம் என்ன சொல்லிப் போகச் சொன்னீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பீஷ்மர், “அந்த சூழ்ச்சிக்காரனிடம் பேசும் அளவுக்குப் பொறுமை என்னிடம் இல்லை, ஐயா! ந அவனிடம் தீர்மானமாகக் கூறி விட்டேன். ஐந்து சகோதரர்களும் பிரமாதமான வரவேற்புடன் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்களைப் பாண்டுவின் புத்திரர்களாக அறிமுகம் செய்யப் போகிறோம் என்பதையும் இறந்த சக்கரவர்த்தி பாண்டுவின் மகன்கள் என்பதால் அவர்களுக்கு இந்த நாட்டின் சகல சுக சௌக்கியங்களையும் ஓர் இளவரசர்களாக இருந்து அனுபவிக்கும் உரிமை உண்டு என்பதையும் தெரிவித்து விட்டேன்.” என்றார்.

மெல்லத் தன் கண்களைத் திறந்து பார்த்தாள் சத்யவதி. இவ்வளவு நேரமும் அவள் கண்களை மூடியே படுத்துக் கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது மீண்டும் தாவியின் உதவியால் எழுந்து அமர்ந்து கொண்டு, “கிருஷ்ணா, காங்கேயன் மட்டும் இல்லை எனில் இந்தக் குருவம்சத்தைக் கட்டிக் காப்பாற்றுவது கடினம். அவன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கட்டிக் காத்து வருகிறான். இப்போதுள்ள இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு முக்கியக் காரணமே அந்த ஷகுனி தான். முதலில் அவனை ஹஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!” என்றாள்.

“தாயே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! ஷகுனி தான் அனைத்துக்கும் மூலக் காரணம் ஆவான். ஆனால் அவனை நாம் அவ்வளவு எளிதில் வெளியேற்ற முடியாது. அது மிகக் கடினம். அவன் காந்தாரியுடன் காந்தார நாட்டுச் சீதனமாகவன்றோ வந்துள்ளான். அவனை நாம் வெளியேற்றினால் திருதராஷ்டிரன் ஒருக்காலௌம் சமாதானமாகப் போக மாட்டான். இதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். காந்தார நாட்டு அரசனும் நாம் அவனை அவமதித்து விட்டோம் என்று எண்ணிக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை இது வாழ்வா, சாவா என்னும் பிரச்னையாகத் தோற்றுகிறது. அம்மா, ஷகுனியைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இங்குள்ள குரு வம்சத்துத் தலைவர்கள் அவனை ஒரு கை பார்த்துவிடுவார்கள். கவலையே வேண்டாம் அம்மா!” என்றார் பீஷ்மர் சமாதானமாக.

மேலும் தொடர்ந்து, “இப்போது ஒரு குழப்பம் ஏற்பட்டால், சச்சரவு நேர்ந்தால் அதன் மூலம் ஓர் சிறு போரே மூளலாம். அல்லது அது சிறு போராக இல்லாமல் ஓர் மாபெரும் யுத்தமாக அக்கம்பக்கத்து அரசர்கள், சிற்றரசர்கள் கூடக் கலந்து கொள்ளும் பெரும்போராகவும் மாறலாம். ஆகவே இவ்விஷயத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். துரியோதனனுக்கு காந்தார அரசன் சபல் பாட்டனார். ஆகவே அவன் துரியோதனனைத் தான் ஆதரிப்பான். அதைத் தவிர கருஷ நாட்டுப்பிரபுவும் சேதி தேசத்து அரசனும் அவனை ஆதரிக்கலாம். ம்ம்ம்ம்ம்ம்? மத்ரா கூட இதில் சேர்ந்து கொள்ளலாம். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள் ஐவருக்கும் அவர்கள் சார்பில் குந்தியின் சகோதரன் வசுதேவன், யாதவத் தலைவன், மற்றும் குந்தியின் ஸ்வீகாரத் தந்தை குந்திபோஜன், மற்றும் ஒருவேளை பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் ஆகியோர் ஆதரிக்கலாம்!” என்று நீண்ட யோசனையுடன் கூறினார் பீஷ்மர்.

Monday, September 26, 2016

ஷகுனியின் ஏமாற்றம்!

ஷகுனி கொஞ்சம் தணிந்த குரலில் பேச ஆரம்பித்தான். அவன் புன்னகையே அவன் எப்படியேனும் பீஷ்மரின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதில் அவன் முக்கியமாக நினைப்பதைச் சுட்டிக் காட்டியது. பீஷ்மரைப் பார்த்து, “பிதாமகரே, ஆசாரியர் அவ்வாறு கூறினாரா? நீங்களும் அதையே செய்வேன் என்று சொல்வதில் தவறே இல்லை. ஏனெனில் இந்த ஆரியவர்த்தம் முழுதும் தேடினாலும் ஆசாரியரின் சொல்லை எதிர்த்துச் செயலாற்றும் தைரியமோ உரிமையோ எவருக்கும் இல்லை என்பது உலகறியுமே! அதோடு பாரம்பரியப் பழக்கவழக்கங்களை எடுத்துச் சொல்வதிலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதிலும் ஆசாரியருக்கு இல்லாத அதிகாரம் வேறெவருக்கு உண்டு! ஆனால் பிதாமகரே, உங்களுக்குத் தெரியாததில்லை! சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் ஒட்டி ஒவ்வொரு சமயம் பழைய சம்பிரதாயங்களை மீற வேண்டிய அவசியம் ஏற்படும் இல்லையா? நீங்கள் அறியாததா! நான் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசட்டுமா?” என்றான் ஷகுனி.

“நீர் பேசுவதை நான் ஒருக்காலும் தடுக்கவில்லை; தடுக்கவும் மாட்டேன்.”

“காந்தார நாட்டுத் தலைவர்கள், படைவீரர்கள் அனைவரும் இங்கே குரு வம்சத்தினரோடு இணைந்து செயலாற்ற விரும்புகின்றனர். இந்தக் கூட்டுத் தொடர வேண்டுமெனில் பீஷ்ம பிதாமகர் தன் முடிவை மாற்றிக் கொண்டு எங்களுடைய விருப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் மற்றும் எனது வேண்டுகோள்!” பின்னர் ஷகுனி சற்று நேரம் பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசனையில் இருந்தான். பின்னர் பீஷ்மரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் மேலும் தொடர்ந்தான். “என் தந்தை மாட்சிமை பொருந்திய காந்தார அரசர் என்ன நினைக்கிறார் எனில், காந்தார தேசத்து அரச குடும்பத்தின் நட்பும், தொடர்பும், இங்கே பெரிதும் மதிக்கப்பட வேண்டும்; மதிக்க வேண்டும் என்பதே!” என்றான்.

“சும்மாச் சும்மாச் சுற்றி வளைத்து வளைத்துக் கேள்விகள் கேட்கவேண்டாம், இளவரசே! இப்போது உண்மையாகவும் ஒளிக்காமலும் என்னிடம் பேசுங்கள். உங்கள் தந்தையின் முடிவை நாங்கள் ஏற்கவேண்டும்; ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று அவர் சொல்கிறாரா?” பீஷ்மர் பட்டென்று உடைத்துப் பேசினார். சொல்லும்போது ஷகுனியின் முகத்தையே உன்னிப்பாகக் கவனித்தார். அத்தகைய உள்நோக்கங்கள் ஏதும் இல்லை என்று மறுக்கப் போன ஷகுனியை இடைமறித்த பீஷ்மர்,”இதோ பாரும், காந்தார இளவரசே, உங்கள் தந்தையிடம் இதைச் சொல்லுங்கள்.” என்றவர் சற்றே நிறுத்தினார். தன் பொறுமையின்மையை அடக்கிக் கொண்டு கோபத்தையும் அடக்கிக் கொண்ட பீஷ்மர், “குரு வம்சத்தின் அதிகாரங்களையும், அரச நீதியையும் செம்மையாகச் செய்து முடிக்க பீஷ்மனுக்குப் பிறர் உதவி ஏதும் தேவை இல்லை என்பதை உம் தந்தையிடம் போய்ச் சொல்லும்!” என்றார்.

ஷகுனிக்குப் பதட்டம் ஏற்பட்டது. “இல்லை, இல்லை, பிதாமகரே, அப்படி எல்லாம் இல்லை!” என்று அவசரம் அவசரமாக மறுத்த ஷகுனி, “குரு வம்சத்தினரின் ராஜரீக விவகாரங்களில் தலையிடுவதற்கு என் தந்தை ஒத்துக்கொள்ள மாட்டார். தலையிடவும் மாட்டார்!” என்று மறுத்தான். அதைக் கேட்ட பீஷ்மர், அதிகாரத் தொனியில், கிட்டத்தட்டக் கட்டளையைப் போலவே, “சரி, உங்கள் தந்தையிடம் போய்ச் சொல்லுங்கள் இளவரசே! பீஷ்மன் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் ஏற்றுக் கொண்டு முறைப்படி ஹஸ்தினாபுரத்துக்கு உரிய இளவரசர்களாக அங்கீகாரம் செய்யப் போகிறான் என்பதைச் சொல்லுங்கள். பாண்டுவிற்கு அவன் அரியணையில் இருக்கையில் என்ன உரிமைகள் இருந்தனவோ, என்ன வசதிகளை அவன் அனுபவித்தானோ அத்தனையும் இந்த ஐந்து இளவரசர்களுக்கும் உண்டு என்பதையும் பீஷ்மன் ஏற்றுக்கொள்கிறான் என்பதை உங்கள் தந்தைக்குத் தெரிவிக்கவும். அப்படி யாரேனும் இதைத் தடுக்க முயன்றால், குரு வம்சத்தினரின் ராஜரீக விவகாரங்களில் எவரேனும் குறுக்கிட்டால், பின்னர் அவர்கள் மிகவும் மோசமான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குரு வம்சத்து வீரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள்.” உரத்த குரலில் பீஷ்மர் இதைச் சொன்னபோது அவர் குரல் இடிமுழக்கம் போலவே கேட்டது.

அதற்குள்ளாக அரண்மனைக் காரியஸ்தர் கதவுக்கருகே நின்று கொண்டிருந்தவர் பீஷ்மருக்கு அருகே வந்து கூப்பிய கரங்களுடன் வணக்கம் தெரிவித்து விட்டு, “பிரபுவே, ஆசாரியருக்காக நாம் அனுப்பி இருந்த படகு நதியில் வருவது தெரிகிறது விரைவில் ஆசாரியர் இங்கே வந்து விடுவார்! !” என்று தெரிவித்தான். “சரி, உடனே ராஜமாதாவிடம் போய் நான் ஆசாரியரை அழைத்துக் கொண்டு அவரை வந்து சந்திப்பதாகத் தெரிவித்து விடு. ராஜமாதா களைப்புடன் இருந்தால் தொந்திரவு செய்யாதே! அவர் அழைத்து வரச் சொன்னால் அழைத்துச் செல்லலாம்.” என்றார் பீஷ்மர். பீஷ்மர் அவ்வளவில் எழுந்து ஷகுனியுடனான சந்திப்பு முடிந்தது என்பதற்கு அறிகுறியாக அந்த அறையிலிருந்து வெளியேறத்தொடங்கினார். ஷகுனி அவரை வணங்க, அதை ஓர் தலை அசைவின் மூலம் அங்கீகரித்த பீஷ்மர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை அவருடைய நெரிந்த புருவமும், ஆழமான கண்களும் தெரிவித்தன. ஷகுனி யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் தந்தை அவனிடம் ஏற்கெனவே பீஷ்மரிடம் ரொம்பவும் வற்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ பேச வேண்டாம் என்று சொல்லியே அனுப்பி இருந்தான். ஆகையால் ஷகுனி மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான். குரு வம்சத்தினரோடு இந்த அபிப்பிராய பேதத்தினால் பெரும் பின் விளைவுகள் ஏற்படக் கூடாது என்பதில் காந்தார அரசன் உறுதியாக இருந்தான்.

என்றாலும் வெளிப்படையாகப்போலி அடக்கத்தைக் காட்டியவன், “பிரபுவே, நான் மிகவும் ஏமாற்றத்துடன் செல்கிறேன்.” என்று பீஷ்மரிடம் தெரிவித்தான். கிட்டத்தட்டக் கதவுக்கருகே சென்றுவிட்ட பீஷ்மர் திரும்பினார். சகுனியைப் பார்த்து, “ இன்னமும் மூன்று நாட்களில் நீ காந்தாரத்துக்கே நேரில் சென்று உன் தந்தையிடம் என்னுடைய செய்தியைத் தெரிவிப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.”என்று கிட்டத்தட்டக் கட்டளையாகச் சொன்னார். ஷகுனிக்கும் இது ஓர் வேண்டுகோளே இல்லை, கட்டளை என்பதும் புரிந்து விட்டது. ஆகவே வேறு வழியில்லாமல் தலை வணங்கித் தான் அதை வரவேற்பதாகத் தெரிவித்துக் கொண்டான். ஆனாலும் அவன் மனம் உள்ளூர வெறுப்பில் ஆழ்ந்தது. பீஷ்மர் தன் காரியஸ்தன் பின் தொடர அந்த அறையை விட்டு வெளியேறினார்

Saturday, September 24, 2016

துரியோதனனுக்கே பட்டம்!

ஷகுனி ஒல்லியாக உயரமாக ஆனால் திடமான உடலுடன் இருந்தான். நெற்றி கொஞ்சம் மேடிட்டிருந்ததால் கண்கள் ஆழத்தில் இருப்பது போல் காணப்பட்டன. அந்த ஆழமான கண்களால் அவன் தனக்கு எதிரிலிருப்பவரைப் பார்க்கும்போது அந்தப் பார்வை இதயத்தின் ஆழத்தில் ஊடுருவுவது போலவும் தோன்றியது. உயர்ரகப் பட்டாடை அணிந்து கைகளிலும் தோள்பட்டைகளிலும் ராஜ வம்சத்துக்கே உரிய ஆபரணங்களை அணிந்து கொண்டு தலையிலும் இளவரசுக் கிரீடம் தரித்துக் காணப்பட்டான். அவன் அரைக்கச்சையிலிருந்து சிறிய வாள் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. பீஷ்மர் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டதும், அவருடன் கூடவே வந்திருந்த அரசு ஊழியர் அறைக்கதவின் அருகே சென்று நின்று கொண்டார். பீஷ்மர் ஷகுனியையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் எப்போதும் போல் மின்னலைப் போல் பிரகாசித்துப் பார்ப்பவருக்கு மனதிற்குள் ஓர் மரியாதையை உண்டாக்கியது. அந்த அறையிலிருந்த மற்ற ஊழியர்களைத் தன் கையசைப்பால் வெளியேறச் சொன்னார் பீஷ்மர். பின்னர் ஷகுனியை அழைத்துத் தன்னருகே போடப்பட்டிருந்த சற்றே சிறியதாக இருந்த அரியணையில் அமரச் சொன்னார். இதன் மூலம் ஷகுனியும் ராஜவம்சம் என்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்பது வெளிப்படையானது.

ஆனால் பீஷ்மருக்கு உள்ளூர ஷகுனியைப் பிடிக்காது. அவன் இங்கே ஹஸ்தினாபுரத்திற்குத் தன் சகோதரியோடு சேர்ந்து வந்ததே அவருக்கு இஷ்டமில்லை. வந்ததிலிருந்து அவனைப் பிடிக்காமலும் போனது. ஷகுனி கபடமாக நடந்து கொள்வதோடு அல்லாமல் கபடம், சூழ்ச்சி செய்பவர்களை மிகவும் ஆதரித்துப் பாராட்டி வந்தான். அதோடு இப்போது அவன் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் காட்டிலிருந்து வரவழைத்து ஹஸ்தினாபுரத்தின் மக்களுக்கும் மற்றக் குரு வம்சத்தினருக்கும் அறிமுகம் செய்விப்பதையோ அவர்களையும் இந்த ராஜ்யத்துக்கு உரிய ராஜகுமாரர்கள் என்ற அங்கீகாரம் கொடுப்பதையோ சற்றும் விரும்பாமல் அதற்கு எதிராகக் குரு வம்சத்துத் தலைவர்கள் சிலரைத் தனக்காக ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். இந்தச் செய்தியும் பீஷ்மர் காதுகள் வரை எட்டி இருந்தது. பாண்டுவுக்கு மனைவியுடன் கூடி இருந்து பிள்ளைகளை அழிக்கும் பாக்கியம் இல்லை என்பதால் அவன் வாரிசில்லாமல் இறந்துவிடுவான் என்றே திருதராஷ்டிரனும், காந்தார அரசனும், திருதராஷ்டிரன் மாமனாரும் ஆன சபலும் நினைத்திருந்தார்கள்.  ஆகவே அடுத்து துரியோதனன் தான் யுவராஜாவாக அறிமுகம் செய்யப்பட்டு குரு வம்சத்து அரியணைக்கும் உரியவனாக ஆகப் போகிறான் என்றே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்போதோ! பாண்டவர்கள் இங்கே வரப் போகின்றனர் என்பதும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதும், அடுத்து யுதிஷ்டிரன் யுவராஜாவாக நியமிக்கக் கூடும் என்பதும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதை எல்லாம் நினைத்த பீஷ்மர் ஷகுனியை இப்போது இங்கே பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல், “இளவரசே, தங்கள் தகப்பனார் சபல் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாரா?” என்று நல விசாரணை செய்தார். இந்த சம்பிரதாயப் பேச்சுக்களால் ஷகுனி பதட்டம் அடைந்தான். தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “பிதாமகரே, என் தந்தை உடல் நலத்துடனேயே இருக்கிறார். அவர் தங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியைத் தங்களிடம் சமர்ப்பிக்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.” என்றான். பீஷ்மர் அப்படியே அசையாமல் சற்று நேரம் ஷகுனியையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். பின்னர் ஷகுனியிடம் கேட்டார்;” என்ன செய்தி?” என்று கேட்டார்.

ஷகுனிக்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. தன் தலையைத் தடவுகிறாப்போல் தன் கிரீடத்தைச் சரி செய்து கொண்டு தன்னைக் கொஞ்சம் சமாளித்துக் கொண்டான். இப்போதுள்ள மனநிலையில் அவன் பீஷ்மரைச் சந்திக்கவோ அவருடன் பேசவோ விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை. அவன் பேசித்தான் ஆகவேண்டும். நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம் என்று ஷகுனி நினைத்தான். தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டான். “என் தந்தை மாட்சிமை பொருந்திய காந்தார அரசர் அவர்கள் கூறியது இது தான்;” குரு வம்சத்து அரசரான பாண்டு அவர்கள் முன்னோர்களூடன் கலந்திருக்கப் பித்ரு லோகம் சென்று விட்டார். ஆகவே இப்போது நாடு ராஜா இல்லாமல் இருப்பதால் திருதராஷ்டிரனின் மூத்த மகன் ஆன துரியோதனனை யுவராஜாவாக ஆக்க வேண்டும். இதுவே அவர் வேண்டுகோள்.” என்றான். இதைச் சொல்வதற்குள்ளாக அவனுக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது.

பீஷ்மர் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். பின்னர் ஷகுனியிடம், “அவ்வளவு தானே! வேறொன்றும் இல்லையே!” என்று கேட்டார். இந்த அதிரடியான கேள்வியால் ஷகுனி திகைத்துப் போனான். ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, “மதிப்புக்குரிய என் தந்தை உங்களிடம் பெரு மதிப்பு வைத்திருக்கிறார். உங்களைப் போற்றி வணங்குகிறார். துரியோதனனுக்குத் தக்க நீதியை நீங்கள் செய்வீர்கள் என்றும் நம்புகிறார்.” என்று கூறினான். “அதெல்லாம் சரி இளவரசே, காந்தார நாட்டு மன்னர் இதை மட்டுமே கூறினாரா? பாண்டவர்களுக்கு எவ்வகையில் நீதி வழங்க முடியும் என்பதைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லவில்லையா? துரியோதனனுக்கு மட்டும் நீதி வழங்கினால் போதும் என்று எண்ணி விட்டாரா? இத்தகைய நீதியை துரியோதனனுக்கு வழங்குவது போல் பாண்டவர்களுக்கும் வழங்க வேண்டாமா? அது குறித்து என்ன கூறினார்?”

“என் தந்தை மதிப்புக்குரிய காந்தார அரசர், பாண்டுவின் புத்திரர்கள் எனப்படும் ஐவரையும் நீங்கள் இளவரசர்களாகவும் குரு வம்சத்துக் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொள்வதற்கு எந்தத் தடையும் கூறவில்லை. தாராளமாக உங்களை அந்தக் குழந்தைகளைப் பாண்டுவின் புத்திரர்களாகவே ஏற்றுக் கொள்ளச் சொல்லி விட்டார். ஆனால் பாண்டுவிற்குப் பின்னர் குரு வம்சத்து அரியணையை திருதராஷ்டிரன் பெற்றெடுத்த பிள்ளையான துரியோதனனுக்கே சேர வேண்டும். அவனுக்கே குரு வம்சத்து அரியணை உரிமையானது!” என்று திக்கித் திணறிச் சொல்லி முடித்தான் ஷகுனி. பீஷ்மர் மீண்டும் சிறிது நேரம் மௌனம் காத்தார். பின்னர், “இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா, காந்தார இளவரசே!” என்று கேட்டார். ஷகுனி, “வேறே ஏதும் இல்லை, பிதாமகரே1” என்று பணிவுடன் கூறினான். பின்னர் தொடர்ந்து, “என் தந்தை ஒரு நல்ல பதிலை இந்தச் செய்திக்கு எதிர்பார்க்கிறார். நீங்கள் நல்ல நீதிமான் என்று பெயரெடுத்தவர். ஆகவே துரியோதனனுக்குத் தக்க நீதியைச் செய்ய வேண்டும்.” என்றும் கூறினான்.

அவன் கேள்விக்குப் பதிலே சொல்லாத பீஷ்மர் மேலும் தொடர்ந்து ஷகுனியிடம் கேட்டார். “காந்தார இளவரசே! நீங்கள் குரு வம்சத்துத் தலைவர்கள் சிலரிடம் பேசிப் பாண்டுவின் புத்திரர்களை இளவரசர்களாக அங்கீகாரம் செய்யக் கூடாது என்று கேட்டு அதற்காக ஆதரவு திரட்டுவதாகக் கேள்விப் பட்டேன்! அது உண்மையா?” என்று அதிகாரத் தொனியில் கேட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தன்னிடம் நேரிலேயே பீஷ்மர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்பதை எதிர்பார்க்காத ஷகுனி சற்றே மன்னிப்புக் கேட்கும் தோரணையில், “நான் அப்படி ஒரு காரணத்துக்காக அவர்களிடம் பேசவில்லை!” என்று கூறினான். “அப்படியா? பின்னர் அவர்கள் தாமாகவே உம்மை நாடி வந்தார்களோ?” பீஷ்மர் கேட்டார். இந்தக் கேள்வியைத் தவிர்க்க விரும்பினான் ஷகுனி. நேரடியான பதிலை மட்டும் பின்னர் தவிர்த்துவிட்டு, “அவர்கள் அனைவரும் நீங்கள் பாண்டுவின் புத்திரர்களை அங்கீகாரம் செய்துவிட்டு யுதிஷ்டிரனை யுவராஜாவா அங்கீகாரம் செய்து அறிவிக்கப் போகிறீர்களா என்பதை அறிவதில் ஆர்வமுடன் இருக்கின்றனர்.” என்று சுற்றி வளைத்து பதில் கூறினான்.

“இதற்காக நீர் சில ஸ்ரோத்திரியர்களையும் கண்டு பேசி இருக்கிறீர்கள்.” பீஷ்மரின் இந்த நேரடித் தாக்குதலை ஷகுனி சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஏனெனில் அவன் மிகவும் ரகசியமாக ஒரு சில ஸ்ரோத்திரியர்களைக் கண்டு இது குறித்துப் பேசி இருந்தான். ஆனால் எப்படியோ அது பீஷ்மருக்குத் தெரிந்திருக்கிறதே! ஷகுனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அப்படி எல்லாம் இல்லை, பிதாமகரே! ஸ்ரோத்திரியர்களைக் கண்டு நான் பேசினதன் காரணம் என்னவெனில் அவர்களிடம் இருந்து குரு வம்சத்துப் பழைய நடைமுறைகளின் படியும் இப்போதுள்ள சூழ்நிலைகளின் படியும் துரியோதனன் யுவராஜாவாக ஆக முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே அவர்களிடம் பேசினேன்.”

“ம்ம்ம்ம், நம் அரண்மனையின் முன்னாள் ராஜகுரு ஆசாரிய விபூதியையும், இப்போதைய ராஜகுருவான ஆசாரிய பாரத்வாஜரையும் கண்டு பேசினீர்களா?”

“இல்லை, பிதாமகரே, இல்லை!”

“ஓ, அப்படியா? அப்படி எனில் நீங்கள் அவர்களுடன் எங்கள் வம்சத்துப் பாரம்பரிய நடைமுறைகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” என்ற பீஷ்மர் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் தோரணையில் மேலும் பேசினார்;” ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஸ்ரோத்திரியர். வித்வத் சன்ஸதின் கருத்துக்களையே எதிர்கொண்டு சவாலை எதிர்நோக்கி இருக்கிறார். தர்மக்ஷேத்திரத்தில் ஆசாரியரால் அங்கீகரிக்கப்பட்டதையே எதிர் கொண்டிருக்கிறார்.”

“இதைக் குறித்து ஆசாரியரின் கருத்து என்ன பிதாமகரே!” என்ற ஷகுனி தனக்குள் மேலும், “அதை நான் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். ஆசாரியரையே எதிர்த்து நிற்கும் ஓர் ஸ்ரோத்திரியன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?”” என்று தனக்குள்ளாக முணுமுணுத்தான். பீஷ்மர் அதற்குக் கிட்டத்தட்ட ஓர் ஆணையாக, “குரு வம்சத்துக் கடைசி அரசன் பாண்டு தான்! இப்போது அவன் இறந்து விட்டான். ஆகவே அவனுக்குப் பின்னர் அவன் குழந்தைகளே அவனுடைய வாரிசாக ஆகின்றனர். இந்த அரியணையும் அவர்களுக்கே உரியது! இப்போது பாண்டு உயிருடன் இருந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். பாண்டு இல்லாத இந்த நிலையில் இதை நடத்தி வைக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது!” என்று முடிவாகக் கூறினார்.

Friday, September 23, 2016

வந்தான் ஷகுனி!

சுகதேவருக்கும், பிவாரிக்கும் திருமணம் முடிந்த பின்னர் ராஜமாதா தன் இரு மருமகள்களான காசி தேசத்து இளவரசிகளோடு, வாடிகாவையும் அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினாள். த்வைபாயனர் தன்னுடைய சீடர்களுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார். ராஜமாதா தன்னுடைய இரு மகன்களான சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் இறந்ததை நினைத்தும் அதன் பின்னர் ஹஸ்தினாபுரத்து அரண்மனையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் மிகவும் விசனம் அடைந்திருந்தாள். இருவரும் வாரிசு இல்லாமல் இறந்ததினால் எத்தனை எத்தனை குழப்பம்! அவளால் இயன்ற அளவுக்கு இந்தக் குரு வம்சத்தின் பரம்பரை கெட்டுப் போகாமல் என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பார்த்து விட்டாள். என்றாலும் அடுத்தடுத்துப் பிரச்னைகள், குழப்பங்கள்! ஒவ்வொன்றும் அவர்களை விடாமல் துரத்துகின்றன. அவற்றைக் குறித்து நினைத்து நினைத்து அவள் மனதில் விரக்தியும், வெறுப்புமே மிஞ்சின.

சக்கரவர்த்தி ஷாந்தனுவின் வம்சம் அறுந்து போகாமல் பாதுகாக்கவேண்டி அவள் முனிவரான தன் அருமை மகன் த்வைபாயனரின் உதவியை நாட வேண்டி வந்தது. அவர் மூலம் விதவைகளான காசி தேசத்து இளவரசிகளுக்கு இரு மகன்களைப் பெற முடிந்தது. இந்தக்  குழந்தைகள் பிறந்ததின் பின்னராவது தன்னுடைய பிரச்னைகளுக்கு ஓர் முடிவு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலே இருந்தாள் ராஜமாதா. ஆனால் நடந்தது என்ன? திருதராஷ்டிரன் என்னும் பெயர் கொண்ட அம்பிகாவின் மகன் நல்ல கம்பீரமாக வாட்டம் சாட்டமாக வளர்ந்து வந்தான். ஆனால் என்ன பயன்? அவன் பிறவிக்குருடாகப் போய்விட்டான். அதனால் அவன் என்ன தான் அந்த வம்சத்தின் மூத்த மகனாக இருந்தாலும் குரு வம்சத்துப் பாரம்பரியம் மிகுந்த அரியணையில் அமர முடியாது. அவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அந்த உரிமை கிடைக்காது. இதை நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். ஆனால் இத்தகைய பாரம்பரியமான விதிமுறைகள் ஆரியர்களிடத்திலே எப்போது என்று சொல்ல முடியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அதை அவளால் மீற முடியாது.
என்றாலும் திருமணப்பருவம் அடைந்து விட்ட திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமே! அது ஒரு சவாலாகவே இருந்தது ராஜமாதாவுக்கு. பின்னர் அரை மனதாக முழு சம்மதம் இல்லாமல் காந்தார தேசத்து அரசன் தன் மகள் காந்தாரியைத் திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அதற்காக ஓர் ஒப்பந்தமே போட்டுக் கொண்டார். காந்தாரியின் சகோதரன் ஆன சகுனி என்பான் காந்தாரியின் திருமணத்திற்குப் பின்னர் அவளுடனேயே ஹஸ்தினாபுரம் அரண்மனையிலேயே வாசம் செய்வான் என்பது தான் அந்த நிபந்தனை. காந்தார தேசத்து அரசன் சபல் என்பவனால் போடப்பட்ட இந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளவில்லை எனில் காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து வைக்க அவன் மறுப்பான். அதோடு இல்லாமல் காந்தாரியின் சுக துக்கங்களையும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளையும் சகுனியின் மேற்பார்வையிலேயே இருக்கும்படியாகவும் காந்தார மன்னன் ஏற்பாடு செய்தான். இது ராஜமாதாவைப் பொறுத்தவரை அவமானமான ஒப்பந்தமாகத் தோன்றியது. ஆனால் இதை விட்டால் திருதராஷ்டிரனைத் திருமணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் சம்மதிக்கவில்லை. ஆகவே வேறு வழியில்லாமல் இதை ஏற்கும்படி ஆகி விட்டது. ஷகுனி ஹஸ்தினாபுரம் வந்து விட்டான்.

அம்பாலிகாவின் மகன் பாண்டுவை ஹஸ்தினாபுரத்தின் அரசனாக நியமித்து முடி சூட்டப்பட்டது. பாண்டு உடல் நலத்தில் மிகவும் பலஹீனனாக இருந்து வந்தாலும் ஆவலுடனும், மிகவும் திறமையாகவுமே ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தான். மக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். பிதாமகர் என்று இப்போது அழைக்கப்பட்ட பீஷ்மர் பாண்டுவைத் தன் சொந்த மகனைப்போல் ராஜாங்க விஷயங்களில் ஈடுபடுத்தி அவனை எல்லாவிதமான ராஜரீகக் காரியங்களுக்கும் பயிற்சி கொடுத்தார். அதிலும் ராஜ தர்மத்தைக் குறித்து மஹான் பரசுராமரிடம் பீஷ்மர் பயின்றார். அது இப்போது அவருக்கு மிகவும் பயன்பட்டது. குரு வம்சத்துக் குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட அண்டை நாடுகள் அதன் மேல் ராணுவத் தாக்குதலை ஏற்படுத்தின. ஆனால் பாண்டு மிகத் திறமையாக அவற்றை எதிர்கொண்டு தங்கள் ராஜ்ஜியத்துடன் அவற்றைச் சேர்த்துக் கொண்டான். குரு வம்சத்தினரின் வலிமையை நிரூபித்து விட்டான்.

பாண்டுவிற்குக் குந்தி தேசத்து அரசன் குந்தி போஜனின் வளர்ப்பு மகளும் யாதவத் தலைவன் வசுதேவரின் சகோதரியுமான ப்ரீத்தாவைத் திருமணம் செய்வித்தார்கள். குந்தி போஜன் அவளை வளர்த்ததால் அனைவரும் அவளைக் குந்தி என்றே அழைத்தனர். அதைத் தவிர மத்ராவின் அரசனான சால்ய மன்னைன் சகோதரி மாத்ரியையும் பாண்டு திருமணம் செய்து கொண்டான். அப்போது தான் ஓர் எதிர்பாராத துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்து அது குரு வம்சத்து அரசக் குடும்பத்தை மிகவும் பாதித்தது. பாண்டுவிற்கு ஒரு சாபம் இருந்தது. அந்த சாபத்தின் மூலம் அவனால் குழந்தைகளைப் பெற முடியாது. அவன் மனைவியுடன் சேர்ந்தால் இறந்துவிடுவான். ஆகவே மனைவியோடு சுகித்திருக்க இயலாமல் தவித்து வந்தான். ஆனால்  குந்திக்கோ குழந்தைகள் மேல் மிகவும் ஆசை. தனக்கென ஓர் குழந்தையே பிறக்காதோ என்று அவள் கலங்கினாள்.

இதைத் தெரிந்து கொண்ட ராஜமாதாவும் பிதாமகர் பீஷ்மரும் வேத வியாசரிடம் இவற்றைக் குறித்துக் கலந்து ஆலோசித்தனர். வியாசர் கடவுளரை வேண்டிக்கொண்டு நியோக முறை மூலம் குந்தி மட்டுமில்லாமல்  மாத்ரியும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏற்கெனவே குந்திக்கு இதற்கான வரம் ஒன்று இருப்பதாகவும் கூறினார். மேலும் நியோக முறையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது பழங்காலத்தில் பழக்கத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கூறினார். ஒன்றுக்கு இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டும் தன் பயனற்ற வாழ்க்கையை நினைத்து மனம் நொந்த பாண்டு வருத்தத்துடன் இமயமலைப்பகுதிக்குச் சென்று அங்கே தன் மனைவியருடன் தனிமையில் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான். ஆனால் குந்தியோ குழந்தைகள் மேல் கொண்ட ஆசை குறையாமல் தன் கணவன் பாண்டுவின் அனுமதியுடன், மூன்று ஆண் குழந்தைகளை நியோக முறையில் பெற்றெடுத்தாள். அவர்களுக்கு முறையே யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பின்னர் மாத்ரிக்கும் குழந்தைகள் வேண்டும் என்பதால் அவளும் குந்தியைப் பின்பற்றி நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையரைப் பெற்றெடுத்தாள்.

வசுதேவருக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது. குந்தியின் சகோதரர் ஆன அவர் மிகவும் மனம் மகிழ்ந்து குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற பரிசுகளை அனுப்பி கௌரவம் செய்தார். பாண்டுவின் ஐந்து குமாரர்களையுமே தன் சகோதரிக்கே பிறந்தது போல் அனைவருக்கும் பாரபட்சமின்றிப் பரிசில்கள் அனுப்பப் பட்டிருந்தன. இங்கே ஹஸ்தினாபுரத்தில் காந்தாரியின் மூலம் திருதராஷ்டிரனுக்குப் பல குழந்தைகள் பிறந்தன., மூத்தவன் துரியோதனன் என்று அழைக்கப்பட்டான். அடுத்தவன் துஷ்சாசனன் என்று அழைக்கப்பட்டான். பிறவிக்குருடான திருதராஷ்டிரன் பலஹீனத்திலும் குருட்டுத் தன்மையிலும் தடுமாறி வந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து நினைத்து மனதுக்குள்ளேயே வருந்தினான். தனக்கு உரிமையான அரியணை தனக்குக் கிடைக்காமல் போனதற்குக்காரணம் ஆன தன் பிறவிக் குருட்டுத் தன்மையை வெறுத்தான். ஆனால் நியதி என்னவோ தெளிவாகவே இருந்தது. அவன் மூத்தமகனாக இருந்தாலும் அரியணைக்கு உரியவனாக இருந்தாலும் அவன் அரியணை ஏற முடியாது! அவனுக்கு ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரியமான சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் உரிமை இல்லை. என்றாலும் தன் அருமை மகன் துரியோதனனை யுவராஜாவாக அறிவித்து பாண்டுவுக்குப் பின்னராவது அரியணை ஏறும் பாக்கியத்தை அவனுக்கு அளிப்பார்கள் என்று திருதராஷ்டிரன் நம்பினான். அவன் நினைத்தது என்னவெனில் பாண்டுவுக்குப் பிறந்திருக்கும் குழந்தைகள் ஐவரும் நியோக முறையில் பிறந்தவை! ஆகவே அவர்களை இங்கே ஏற்றுக் கொண்டு விட்டால்! அதன் பின்னர் யுதிஷ்டிரனே யுவராஜாவாக ஆகி விடுவான். ஆகவே பாண்டுவின் குமாரர்கள் இங்கே ஏற்கப்படக் கூடாது என்று திருதராஷ்டிரன் பெரிதும் விரும்பினான். அப்போது அவனுக்கு ராஜசபையிலிருந்து அழைப்பு வந்தது.

பீஷ்மர் மிகச் சிறந்த பட்டாடையில் தன் தலையில் பிதாமகர் என்பதற்கு அடையாளமான கிரீடம் பளிச்சிட உள்ளே நுழைந்தார். அவர் கூடவே அவரின் ஊழியர்களும் உள்ளே வந்தனர். அங்கே இருந்த வெளிநாட்டு வெள்ளை நிற ஊழியர்கள் சலவைக்கற்களால் செய்த சிலையைப் போல் நின்று கொண்டிருந்தவர்கள் பீஷ்மரைப் பார்த்ததும் தலை குனிந்து வணங்கித் தாங்களும் மனிதர்கள் என்பதை நிரூபித்தனர். இந்தச் சந்திப்புக்காக நேரம் கேட்டிருந்த ஷகுனி, காந்தார தேசத்து இளவரசன் ஓர் ஓரமாக ஆசனத்தில் அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து பீஷ்மரைத் தலை குனிந்து வணங்கி வரவேற்றான்.

Thursday, September 22, 2016

ஷார்மியின் வெற்றியும், வாடிகாவின் தோல்வியும்!

“இப்போது தான் நீ கொஞ்சம் புத்தியுடன் பேசுகிறாய், கிருஷ்ணா!” என்று இடைமறித்தாள் ஷார்மி. பின்னர் முகம் முழுவதும் சிரிப்புடன், வாடிகா பக்கம் திரும்பி ஓர் வெற்றிப் பார்வை பார்த்தாள். “பார்த்தாயா? அவன் என் மகன்! அதனால் எனக்கு ஏற்றவாறு பேசுகிறான்.” என்றாள். “நான் சிறுவனாக இருந்தபோது, “ என்று ஆரம்பித்த த்வைபாயனர் கொஞ்சம் நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டுத் தொடர்ந்தார். “நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நினைத்துள்ளேன்; அதற்காக ஆசைப்பட்டிருக்கிறேன். அதோடு இல்லாமல் சாம்பல் பிரதேசத்தையும் மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன்.”

“ஆமாம், ஆமாம், இப்போது நீ மிகவும் மன முதிர்ச்சி பெற்று விட்டாய் அல்லவா? அதனால் தான் இந்த ஆசிரமப் பொறுப்பை ஏற்று நடத்த மறுக்கிறாய்! அல்லவா?” என்று ஏளனமாய்க் கேட்டாள் ஷார்மி. “இல்லை அம்மா, அப்படி எல்லாம் இல்லை. நான் என்னுடைய ஆன்மிகத் தந்தைக்கு உரிய மரியாதைகளைத் தக்கபடி செய்து அவருக்கு நான் பட்டிருக்கும் நன்றிக்கடனைத் தீர்த்தாகவேண்டும். ஆகவே ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு மாதங்கள் இந்த ஆசிரமத்தில் நான் கழிக்கிறேன். இங்குள்ள பிரச்னைகளுக்குத் தீர்வும் காண முயல்கிறேன். ஆனால் தொடர்ந்து இங்கேயே இருந்து ஆசாரியனாக முழுப் பொறுப்பு ஏற்க இயலாத நிலையில் இருக்கிறேன்.” என்றார் த்வைபாயனர்.

பின்னர் கொஞ்சம் நிறுத்தித் தன்னை ஆசுவாசம் செய்து கொண்ட த்வைபாயனர் மேலும் பேசலானார். “நீங்கள் அனைவரும் சொல்வது சரியே! சுகதேவன் தனக்கென ஓர் இல்லறத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அது மிக முக்கியம். அதன் பின்னர் அவன் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தலாம்.” என்றார். அதைக் கேட்ட சுகதேவரின் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது. அவர்  மனம் வருந்தினார். தந்தையின் முடிவு அவருடைய விருப்பத்துக்கு முற்றிலும் மாறாக அன்றோ இருந்தது! ஆனால் அதைச் சற்றும் கவனிக்காத த்வைபாயனர் தொடர்ந்து, “இனி இந்த ஆசிரமம் சிறப்பாக நடைபெறுவதற்கு சுகதேவன் தான் பொறுப்பாவான். அவன் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இந்த ஆசிரமம் நடைபெறும். அதற்காக அவன் இல்லறத்தை ஏற்றாக வேண்டும். தன் கடமைகளைச் செய்வதற்குத் தக்க துணையாக ஒரு சஹதர்மசாரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவளைத் திருமணம் செய்வதன் மூலம் நல்லதொரு இல்லறத்தை அவன் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு ஸ்ரோத்திரியனாக இருந்து கொண்டு இல்லறத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறம் நடத்துவதில் இருந்து அவனால் ஒதுங்க முடியாது! என்ன சொல்கிறாய் சுகதேவா?” என்று கேட்டார் த்வைபாயனர்.

சுகதேவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் உடலும் மனமும் அங்கில்லை. அவர் தன் தந்தை தன்னை நன்றாகப் புரிந்து கொண்டு தன் பக்கம் பேசித் தான் சந்நியாசியாக ஆதரவு கொடுப்பார் என்றே இதுவரை நினைத்திருந்தார். தன்னை மிகவும் பாராட்டுவார் என்றும் எதிர்பார்த்திருந்தார். இப்போதைய இந்த முடிவு அவர் சற்றும் எதிர்பாராதது. ஆனாலும் தந்தையைப் பார்த்துத் தன் கூப்பிய கரங்களுடன், “தந்தையே, தங்கள் முடிவுக்கும் ஆணைக்கும் நான் கட்டுப்படுகிறேன்.” என்று வணக்கத்துடன் தெரிவித்தார். ஆனாலும் இதைச் சொல்கையில் அவர் தொண்டை அடைத்துக் கொண்டு வார்த்தைகள் சிரமப்பட்டே வெளியேறின.

“சரி, இப்போது உன் திருமணத்திற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து ஆலோசிப்போம்.” என்றார் த்வைபாயனர். ஆனால் சுகதேவரோ மீண்டும் நம்பிக்கையுடன், “தந்தையே, தயவு செய்து எனக்காக ஓர் பெண்ணை மணமகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டாம். இந்த விஷயத்தைக் குறித்து நான் மீண்டும் ஆலோசிக்க வேண்டும். எனக்கு யோசிக்க நேரம் கொடுங்கள்.” என்று வேண்டினார். வாடிகாவுக்குத் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தைக் குறித்து வருத்தம் ஏற்பட்டது. தன் தலையில் கையை வைத்துக் கொண்டாள். செய்வதறியாமல் த்வைபாயனர் பக்கம் திரும்பி அவள், “ஆர்ய புத்திரரே, தயவு செய்து, தயவு செய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். உங்கள் முடிவைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். எனக்காக! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் ஒரே மகன் ஒரு பழங்குடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை. அதில் எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கப் போவதில்லை. அதோடு அல்லாமல் மஹா அதர்வரான என் தந்தை ஜாபாலி முனி இப்படி ஒரு கல்யாணம் மட்டும் நடந்து விட்டால் பின்னர் நம்மை எப்படி மதிப்பார்? இந்தத் திருமணத்தை அவர் ஏற்பாரா?” என்று கேட்டாள்.

வழக்கமான தன் சிறுபிள்ளைத் தனமான சிரிப்பால் இதை எதிர்கொண்டார் த்வைபாயனர். சிரித்துக் கொண்டே “ஷார்மி அன்னையாரும் ஒரு பழங்குடி இனத்துப் பெண் தான் வாடிகா. ஆசாரிய கௌதமரை மணந்து கொண்டு அவருக்கும், இந்த ஆசிரமத்திற்குமாகச் சேவைகள் பல செய்து தன்னை முழுக்க அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள். ஜாபாலியா, இந்த விஷயத்தை இனிமேலும் தள்ளிப் போடுவதில் எவ்விதப் பலனும் இல்லை. தள்ளிப் போடுவதால் மேலும் மேலும் துயரம் தான் நேரும். நன்மை நேரப் போவதில்லை.”

“சரி, சரி, ஆனால் இதற்கு அவசரம் ஏன்? எதற்காக?” என்றாள் வாடிகா. “ஜாபாலியா, பல விஷயங்களும் இடைநிலையில் நிற்கின்றன. பாதியில் இருக்கின்றன. நாம் இப்போது முதலில் செய்ய வேண்டியது பழங்குடி இனத்தவரை நம்மோடு ஐக்கியம் அடையச் செய்வது தான். இந்த கௌதம முனிவரின் ஆசிரமத்தை மீண்டும் புனர் நிர்மாணம் செய்து அக்கம்பக்கம் உள்ள ஆசிரமங்களுக்கெல்லாம் ஓர் முன்மாதிரியாகச் செய்ய வேண்டும். பராசர முனிவரின் பெயரால் விளங்கும் தீர்த்தத்தின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்..” என்றார் த்வைபாயனர்.  பின்னர் கொஞ்சம் நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தார். “ அதோடு மட்டும் இல்லை வாடிகா. நாகர்கள், பழங்குடியினர், ஆரியர்கள் ஆகியோருக்கு நாம் செய்திருக்கும் வேலைகளிலிருந்து எவ்விதமான தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சூரியன் எனக்கு தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆணை இட்டிருக்கிறான்.
“இந்த மொத்த உலகையும் ஆரியர்கள் மயமாக்கு! சுத்தமானதாகவும், புனிதமானதாகவும், சர்வ வல்லமை பொருந்தியதாகவும், மாட்சிமை பெற்றதாகவும், மகத்தான அபிலாஷைகளை ஒருங்கிணைக்கும் வல்லமை கொண்டதாகவும் மாற்றச் சொல்லி ஆணை கிடைத்துள்ளது!”
அதற்காக நான் பாடுபடவேண்டும்.” என்றார். வாடிகாவின் தொண்டை அடைத்துக் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

த்வைபாயனர் மேலும் தொடர்ந்தார். “ஜாபாலியா, கடவுளரால் சொல்லப்பட்டபடியான இல்வாழ்க்கையை நாம் வாழ்ந்து விட்டோம். இது கடவுளின் கருணையினால் தவிர நம் போன்ற சாமானியர்களின் முயற்சிகளால் இல்லை! இவை கடவுளின் ஆணை!” என்றார்.
பின்னர் க்ருபாவிடம் திரும்பினார். இவ்வளவு நேரமும் வாய் திறக்காமல் அனைத்தையும் பார்த்த வண்ணம் சிலையைப் போல் அமர்ந்திருந்தான் க்ருபா. “வல்லமை பொருந்திய க்ருபா, தலைவனே, புனிதமான மஹிஷனின் ராஜ்யத்தின் தலைவா, மோசாவின் இளைய சகோதரி, பிவாரியை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நீ சம்மதிக்கிறாயா? மற்ற இளம்பெண்கள் இங்குள்ள மற்ற பிரமசாரிகளை மணந்து கொள்ளட்டும்!” என்று கேட்டார். க்ருபா அதற்கு, “ஆசாரியரே, வணக்கம், இதைக்குறித்து எங்கள் பழங்குடியினரின் மூத்தோரிடமும் மற்றோரிடமும் நான் கலந்து பேசிவிட்டேன். ஷார்மி அன்னை சொல்வதை அனைத்தையும் நான் முழு மனதோடு ஆமோதிக்கிறேன். எங்களால் இனியும் ஓர் தனித்து விடப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழ இயலாது. அனைவரோடும் கூடி வாழ்வதையே விரும்புகிறோம்.” என்றான்.

“சரி, அப்போது நாம் எல்லோரும் பிவாரி சுகதேவனை மணந்து கொள்வதற்குச் சம்மதிக்கிறோம். அதற்கு முன்னால் அவள் சந்திராயன விரதம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஓர் ஸ்ரோத்திரியனை மணந்து கொள்ளும் அதிகாரமும் சுத்தமும் அவளுக்குக் கிட்டும். இந்தப் புனிதமான சடங்குகளைச் செய்து அனைத்து இளம்பெண்களும் தங்களைத் திருமணத்துக்கு உகந்தவர்களாக ஆக்கிக் கொள்ளட்டும்!” என்றார் த்வைபாயனர். ஏமாற்றமும் வெறுப்பும் மீதூற சுகதேவர் தன் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார். அதைப் பார்த்த த்வைபாயனர் சொன்னார்.

“சுகதேவா! வருந்தாதே! நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை நான் முழு மனதுடன் பாராட்டத்தான் செய்கிறேன். சூரிய பகவான் எனக்களித்திருக்கும் இந்த மாபெரும் பணியை நீயும் என்னுடன் சேர்ந்து வலிமைப்படுத்தத் தான் முயற்சிக்கிறாய். மரபுகளைக் காக்க வேண்டும் என்றே எண்ணுகிறாய்! இப்போது நாம் ஓர் முடிவுக்கு வருவோம். உனக்கு நான்கு மகன்களாவது பிறக்க வேண்டும். ஒவ்வொருவரும் வேதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அப்படி ஆன பின்னர் நீ ஒரு சந்நியாசியாக ஆக நான் தடை ஏதும் சொல்லப் போவதில்லை. அதோடு இல்லை, பிவாரி சம்மதித்தாளெனில் நீ அவளைத் தலைவியாகக் கொண்டு ஒரு சந்நியாசினிகளின் வம்சாவளியையும் ஆரம்பித்து நம்முடைய மரபுகளை அவர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லலாம்.”

தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்ட சுகதேவர் அவற்றை அப்புறப்படுத்தவே இல்லை. மிகவும் வருத்தத்துடனேயே அமர்ந்திருந்தார். அவர் விம்மி விம்மி அழுதார். அவர் தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சந்நியாசி வாழ்க்கையைக் குறித்துக் கற்பனைகள் செய்து வைத்திருந்தாரோ அனைத்தும் மண்ணோடு மண்ணாகப்போய் விட்டது. ஆனால் ஷார்மி அன்னையோ அழுகையும் சிரிப்பும் கலந்த வண்ணம் காட்சி அளித்தாள். தன் கையை நீட்டி சுகதேவரின் காதுகளைப் பற்றி இழுத்தாள். “இதோ பார், என் குழந்தாய், என்னைப் பார். என்னிடம் வா!” என்ற வண்ணம் அவர் முகத்தை மூடி இருந்த கைகளை நீக்க முயன்றாள். மிக முயற்சி செய்து சுகதேவரைக் கொஞ்சம் தன் பக்கம் இழுத்தாள் ஷார்மி. “உன் பாடத்தை நீ ஒழுங்காகக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் மகனே! தெரியுமா!” என்ற வண்ணம் சிரித்தாள். அவளுடன் சேர்ந்து சந்தோஷத்தில் அவள் கண்களும் நாட்டியமாடின. மீண்டும் சுகதேவரின் காதுகளை முறுக்கிய வண்ணம், “என்னை யாரென நினைத்தாய், குழந்தாய்! ஷார்மி அன்னையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதோரும் உண்டோ!” என்றாள்.

Wednesday, September 21, 2016

ஆசிரமம் பெயர் சூட்டப்பட்டது!

அனைவரும் சிரித்து முடிக்கும்வரை பொறுமை காத்த ராஜமாதா, “இப்போது நாம் நம்முடைய பிரச்னையை அலசுவோம்!” என்றாள். பின்னர் சிறிது நேரத்துக்குப் பின் சுகதேவரிடம், “ரொம்பப் பிடிவாதம் பிடிக்காதே, குழந்தாய்! உன் தந்தையின் பரம்பரை மேலும் மேலும் செழித்து வளரவேண்டாமா? அதை அவர் மகனான உன்னைவிட வேறு யார் சிறப்பாகச் செய்ய முடியும்? நீ இங்கே குருகுலத்தில் படிக்கையில் ஆசாரிய கௌதமர் உன்னைத் தன் மகனைப் போலத் தானே வளர்த்தார்! ஷார்மியும் அப்படியே தான் நினைக்கிறாள். ஆகவே நீ தான் இங்கே ஆசாரியனாக இருக்க வேண்டும் என்று சொல்வதில அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு!” என்றாள். ஆனால் சுகதேவரோ உறுதியுடன், “நான் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் மூழ்கப்போவதில்லை!” என்று திடமாகக் கூறினார். அவரைப் பார்த்துக் கருணையுடனும், அன்புடனும் புன்னகைத்தாள் ராஜமாதா. “குழந்தாய், உன்னைப் போன்ற இளைஞர்கள் பெரியோர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள மறுப்பது சகஜம் தான். அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யவே விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது என்னவெனில் அது தங்கள் தந்தையின் பரம்பரையைச் செழித்து வளர விடுவது ஒன்றே!” என்றாள்.

ராஜமாதாவுக்கு சுகதேவர் பேரப்பிள்ளை என்பதோடு அல்லாமல் தன் மகன் அருமை மகன் கிருஷ்ணனின் பரம்பரை அவனுடன் முடியக் கூடாது என்னும் எண்ணமும் அவளுக்கு இருந்தது. சுகதேவர் அதற்கு பதில் கூறுவதற்குள்ளாக மீண்டும் ராஜமாதா பேச ஆரம்பித்தாள். “குழந்தாய்! உன்னால் மட்டும் தான் ஆசாரிய கௌதமரின் பரம்பரையையும், முனிவர் பராசரரின் பரம்பரையையும் செழிக்க வைக்க இயலும். அதோடு உன் தந்தையின் பரம்பரைப் பழக்க வழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும்!” என்றாள். உடனே சுகதேவர் தன் கைகளைக் கூப்பியவண்ணம் தான் பேசுவதற்கு அனுமதி கேட்டார். “நீ வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் பேசு, குழந்தாய்!” என்ற ராஜமாதா, “உனக்கு நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது நிச்சயமாகத் தெரியும். நீ ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாய்?” என்று கேட்டாள். “நான் பிடிவாதம் எதுவும் பிடிக்கவில்லை. நான் எனக்கென ஒரு மனைவியைத் தேடிக் கொண்டு இல்லறம் நடத்த விரும்பவில்லை. நான் தந்தையின் கொள்கைகளையும் அவருடைய மரபுகளையும் ஓர் திடமான கால்களை வைத்து ஊன்றி நின்று அழுத்தமாகப் பதிக்க விரும்புகிறேன்.”

“ஆனால் திருமணம் செய்யாமல் இது எப்படி சாத்தியம், குழந்தாய்? அதிலும் இந்த வயசுக்கே நீ சந்நியாசியானாய் எனில் எவ்வாறு இதை எல்லாம் செய்வாய்?”

“மாட்சிமை பொருந்திய ராஜமாதா! தயவு செய்து நாங்கள் ஐவரும் இதைக் குறித்து என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்ல அனுமதியுங்கள்.”

“சொல், குழந்தாய்!”

சுகதேவர் மென்மையாக தன் குற்றத்தைத் தானே ஒப்புக் கொள்ளும் தோரணையில் மிருதுவாகப் பேச ஆரம்பித்தார். “தாயே, தெய்விகமான வராஹ அவதாரத்துக் கடவுளைப் போல் என் தந்தையும் இந்தப் புண்ணிய பூமியில் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தர்மத்தை ஸ்தாபித்திருக்கிறார். வேதத்தை ஒழுங்கு செய்து முறைமைப் படுத்தி அளித்திருக்கிறார். அதைத் திருத்தி மாசற்றதாக்கி அதன் மூலம் இவ்வுலகிலுள்ளோருக்குப் புதியதொரு செய்தியை அளிக்குமாறு ஸ்ரோத்திரியர்களைப் பக்குவப்படுத்தி உள்ளார். அவர் யாரைத் தொட்டாலும், அல்லது எதைத் தொட்டாலும் அது மஹிமை பொருந்தியதாகவும் அனைவரையும் கவர்வதாகவும் உள்ளது. அவர் அனைத்துக் கடவுளருக்கும் பிரியத்துக்கு உகந்தவராயும் அனைவருக்கும் கண்ணின் கருமணியைப் போல் அருமையானவராயும் உள்ளார். அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை சூரிய பகவானே ஏற்றிருக்கிறான். மனிதர்களின் இதயத்தின் அந்தரங்கத்தினுள்ளே ஊடுருவி அங்கே புனிதமான அக்னியின் இருப்பை அவர்களை உனரச் செய்து அவர்களைப் புனிதமாக்குகிறார். தன்னுடைய தொடுகையின் மூலம் பலரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி வந்திருக்கிறார். நாங்கள் ஐவரும் இதைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினோம். சிந்தித்தோம்.”

“அதனால் தான் குழந்தாய், உன் தந்தையின் இந்த மரபுகளைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உன்னை விட வேறு எவரால் முடியும்?” என்றாள் ராஜமாதா.

“நாங்கள் அதைத் தான் தாயே, செய்கிறோம்!” என்றார் சுகதேவர். “சொல்வதற்கு மன்னிக்கவும். என் தந்தை மாட்சிமை பொருந்திய ஆசாரியர், வேத வியாசர், பித்ரு லோகத்துக்குச் செல்ல நேரிட்டால், அப்போது இங்குள்ள ஸ்ரோத்திரியர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு இருந்த பிடிப்பும், பற்றும் விட்டுப் போய்விடும். ஏதோ இழந்து விட்டதாய் உணர்வார்கள். தந்தை எதற்காக உயிர் வாழ்ந்திருந்தாரோ அந்த முக்கிய நோக்கமான வேதத்தை மறந்துவிடுவார்கள். அதன் உட்கருத்தை மறப்பார்கள்.
சுயக்கட்டுப்பாடுகள் இல்லாமல் எவ்விதமான சாதனைகளும் செய்ய முடியாது!
அர்ப்பணிப்பு இல்லாத எதிர்காலமும் இல்லை.
தியாகம் இல்லாத உற்பத்திகளும் இல்லை!
தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் சுகதேவர் பேசியதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் பேச்சிழந்து நின்றனர். “மேலும் நான் பேசலாமா?” என்று மீண்டும் அனுமதியை வேண்டினார் சுகதேவர்.  “பேசு, குழந்தாய், பேசு!” என்றாள் ராஜமாதா.

“ஓர் இல்லறத்தானின் குடும்பம் எப்படி மதிப்பிடப் படுகிறது? அவன் மனைவி, குழந்தைகள், அவன் ஆசிரமத்தில் வாழ்ந்தால் அந்த ஆசிரமம், அங்குள்ள பசுக்கள் மற்றும் அங்குள்ள விலை உயர்ந்த செல்வங்கள் ஆகியவற்றால் மட்டுமே! அதனால் தான் அவர் மதிக்கப்படுகிறார். அதிகாரம் மிக்கவராகிறார். இல்லறத்தில் முழுமையாக ஈடுபடப் பட அவரால் தவ வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் போகிறது. இல்லறமா, துறவறமா என்னும் கேள்விக்குள் மூழ்கிப் போய்த் திரும்பத் திரும்ப இல்லறத்திற்கே திரும்புகிறார். ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே துறவிகளாக ஆகி இவ்வுலகைத் துறக்க முடிகிறது. அதுவும் அப்படி அவர்கள் செய்வதால் தான் இன்னமும் இந்தத் தவம் எல்லாம் உயிர்ப்புடன் இயங்க முடிகிறது!”

சுகதேவரின் நான்கு நண்பர்களையும் பார்த்து, “நீங்கள் எல்லாம் இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள், பிரமசாரிகளே?” என்று ராஜமாதா கேட்டாள். “சுகர் என்ன சொல்கிறாரோ அதுவே எங்களுக்குக் கடைசி வார்த்தை. அவர் சொல்படி செய்கிறோம். நாங்கள் ஒவ்வொரு ஆசிரமத்திற்காகச் சென்று தர்மத்தின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்துக் கூறி வருவோம்.” என்றனர். “எப்படி?” என்றாள் ராஜமாதா.

“தாயே, ஒரு சந்நியாசியின் இதயத்தில் எரியும் தீ மிகவும் புனிதமான ஒன்று. அவன் உயிருடன் இருக்கும்வரை அந்தப் புனிதத் தீ அணையாது! இது பல தலைமுறைகளுக்கும் சென்று நிலைத்து நிற்கும்.”

இப்போது சுகதேவர் குறுக்கிட்டார். “எங்களுடைய அவாவை உங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேனே, தந்தையே! நீங்கள் எங்களைப் பொறுத்தவரையில் கடவுளுக்குச் சமம். உங்களுடைய முடிவுக்குக் கட்டுப்படவேண்டும் என்பது எங்கள் உறுதியாகவும் இருக்கிறது. எங்கள் வாழ்க்கையை உங்கள் காலடியில் வைக்கிறோம். உங்கள் முடிவே இறுதித் தீர்ப்பு!” என்றார் சுகர்.

“கடவுள் எனக்கு எப்படிப்பட்டதொரு சிறந்த மகனைக் கொடுத்திருக்கிறார்! நான் அவனுடைய சந்நியாசிக்கான தர்மங்களை அவன் கடைப்பிடிப்பதைக் குறித்து அவனுடைய ஒவ்வொரு வயசுக்கும் இவ்வாறு இருப்பான் என்று யோசித்துப் பார்க்கிறேன். தர்மத்தின் புனிதமான நெருப்பை இவன் அணையாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வான்!” என்றார் த்வைபாயனர். அனைவரும் அவர் சொல்லப் போகும் இறுதியான வார்த்தைக்காகக் காத்திருந்தனர். அவர் கொஞ்சம் நிறுத்திவிட்டு மேலே தொடர்ந்தார். “இங்குள்ள இந்தத்தீர்த்தம் பராசர முனிவருடன் தொடர்புள்ளது. அதோடு அல்ல, நான் ஷார்மி அன்னையைப் பார்க்கையில் எல்லாம் காசியில் அருளாட்சி புரியும் அன்னபூரணி தேவியை அவள் நினைவூட்டுகிறாள். தன்னுடைய இந்தச்சக்தியைக் குறித்து அவளுக்குத் தற்பெருமை ஏதும் இல்லை. ஆனால் ஷார்மி அன்னையார் இந்த ஆசிரமம் தன் பெயரால் அழைக்கப்படுவதை விரும்பவில்லை!”

சற்று நிறுத்திய வியாசர் பின்னர் உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்த குரலில், “சஹஸ்ரார்ஜுனனால் பராசரரின் ஆசிரமம் தீக்கிரையாக்கப்பட்டபோது, ஆசாரிய கௌதமர் தன்னந்தனியாக இங்கே எதிர்த்து நின்று எவருடைய உதவியும் இல்லாமல் இந்த ஆசிரமத்தை நிர்மாணித்தார். ஒவ்வொரு நிமிடமும் பேராபத்து அவருக்குக் காத்திருந்தது. அவருடைய ஆசிகளாலேயே இந்த ஆசிரமம் சிறப்புற்று விளங்கியது. ஆகவே இந்த ஆசிரமம் இப்போதும் கௌதம முனிவரின் பெயராலேயே அழைக்கப்பட்டால் இவ்வுலகில் சூரிய, சந்திரர்கள் இருக்கும்வரையிலும் அது அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் புகழைப் பாடிக் கொண்டு இருக்கும்.”

Tuesday, September 20, 2016

சுகருக்குத் திருமணம் நடந்ததா, இல்லையா? ஒரு சந்தேகம்! விளக்கம்!

மேலே தொடரும் முன்னர் ஒரு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வோம். வேதங்களைப் பகுத்த வியாசர் வேறே, மஹாபாரதம் எழுதிய வியாசர் வேறே, புராணங்களைத் தொகுத்த வியாசர் வேறே, பிரம்ம சூத்திரம் இயற்றிய பாதராயன வியாசர் வேறே என்று பலர் கருதுகின்றனர். ஆனால் வேதங்களின் தொன்மை குறித்தும், க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர் இருந்த காலம் குறித்தும் கூர்ந்து நோக்கினால் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  ஒரு சிலரின் கருத்துப்படி இந்த வியாசரே பதரிகாசிரமத்தில் தம் காலத்தை அதிகம் கழித்ததால் பாதராயணர் என்றழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். அப்படி எனில் புராணங்களை வகைப்படுத்திய வியாசர் வேறாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். புராண நூல்களும் இதிகாச காலத்தைச் சேர்ந்தவை அல்ல. ஆகவே அந்த வியாசரை ஒதுக்கிடுவோம். இப்போ நம்ம க்ருஷ்ண த்வைபாயனரைப் பார்ப்போமா?

இவர் தான் மஹாபாரதத்தை சுமார் எட்டாயிரம் ஸ்லோகங்களால் எழுதியதாகவும், பின்னால் இது வைசம்பாயனர், சுகர், லோமஹர்ஷணர் அவரின் சீடரும் மைந்தரும் ஆன உக்ரஸ்வரஸ் ஆகியோர் விரிவாக்கியதில் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டதாக பாரதம் ஆனது என்றொரு கூற்று உண்டு. நமக்கு இப்போ இதெல்லாம் இங்கே தேவை இல்லை. இந்த வியாசருக்குக் கல்யாணம் ஆச்சா, இல்லையா? மனைவி இருந்தாளா, இல்லையா? இவர் மகன் என்று அழைக்கப்படும் சுக ரிஷி உண்மையில் இவருக்குப் பிறந்தவரா? சுகர் திருமணம் ஆனவரா என்பதெல்லாம் தான் இப்போதைய முக்கியக் கேள்விகள். வியாசர் திருமணம் செய்து கொண்டதாக பாரதத்தில் எங்கும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரியவில்லை. ஆனால் தனக்கு வாரிசு வேண்டும் என்று நினைத்த வியாசர் சிவனை நினைத்துத் தவம் இருக்க ஈசன் அவர் முன்னே தோன்றி மகன் பிறப்பான் என்று வரம் அளித்ததாகவும் சொல்வார்கள்.

எப்படி எனில் வியாசர் அரணிக்கட்டையால் கடைந்து நெருப்பு உண்டாக்குகையில் விண்ணில் பறந்த கிருதாசி என்னும் தேவமங்கையின் அழகைக் கண்ட வியாசர் சற்றே அவள் அழகில் மயங்க, கிளியாகத் தோன்றி இருந்த அவளோ வியாசரின் மூலம் கர்ப்பம் தாங்கிப் பிறந்த பிள்ளை தான் கிளி மூக்குடன் கூடிய சுகர் என்பார்கள். ஆனால் நம் கதைப்படியோ வியாசர் ஜாபாலியின் மகளான வாடிகாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கும், ஜாபாலியின் மகளான வாடிகாவுக்கும் பிறந்த பிள்ளையாகப் பார்க்கிறோம் சுகரை. மேலும் இந்தக் கதையின் படி சுகரும் திருமணம் செய்து கொள்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளும் பெண் பழங்குடிப் பெண்ணான பீவரி அல்லது பிவாரி என்று கேள்விப் படுகிறோம். ஆனால் மேலும் மேலும் சான்றுகள், ஆதாரங்கள் எனத் தேடியதில் எங்குமே வியாசருக்குத் திருமணம் நடைபெற்றதாகவே சொல்லப்படவில்லை. சுகரை அவருடைய ஆன்மிக புத்திரன் என்றும் பிறவி ஞானி என்றுமே சொல்லப்படுகிறது. தேவமங்கையின் துணை இல்லாமலேயே அரணிக்கட்டையைக் கடைந்ததன் மூலமே சுகரின் பிறப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கயிலையில் ஈசனும், அன்னையும் தனித்திருக்கையில் பிரம்ம ரகசியமான பிரபஞ்ச தத்துவத்தைக் குறித்து ஈசனும், அன்னையும் உரையாட அதைக் கேட்ட அங்கிருந்த கிளி ஒன்று தன் மறுபிறப்பில் சுகராகத் தோன்றியதாகவும் எங்கேயோ எப்போதோ படித்தேன். புத்தகம் எது என்று நினைவில் இல்லாமையால் ஆதாரம் கொடுக்க முடியலை. ஆனால் நம் கதைப்படி சுகருக்குத் திருமணம் நடப்பதால் இதற்கான ஆதாரங்களை ஒருவாறு திரட்டினேன். தேவி நாராயணீயத்தில் இந்தப் பகுதி வருகிறது. தேவி நாராயணீயம் என்பது தேவி பாகவதத்தின் சுருக்கமான வடிவம் என்று அறிகிறோம். இதைப் பலேலி நாராயண நம்பூதிரி என்பவர் 430 ஸ்லோகங்களில் 41 தசகங்களாக எழுதி உள்ளார். அதில் நம் கதைக்குத்தேவையான தகவல்கள் கிடைக்கும் தசகம் ஏழில் கிடைக்கிறது.

தான் செய்ய வேண்டிய அக்னி காரியங்களைச் செய்ய, அரணியில் மத்தைப் பூட்டி அக்னி உண்டாக்க முயலும் போது, க்ருதாப்ஜி ஒரு கிளி உருவம் எடுத்து அங்கும் இங்கும்மாக ஆகாசத்தில் சிங்காரமாக ஊர்ந்தாள்.  அதைக் கண்ட வ்யாஸர் உணர்ச்சி வசப்பட அவரது வீர்யம் சிதறி அரணியில் விழுகிறது. அந்த அரணியிலிருந்து இவரை போல் ஒரு புத்திரன் ஜனிக்கிறான். இரண்டாவது அக்னி போன்று தோன்றிய அக்குழந்தையைக் கையில் எடுத்துத் தழுவி கங்கா ஸ்நானம் செய்வித்து சாதகாதி கர்மங்களைச் செய்து, சுக ரூபியான அப்ஸரின் மோகத்தால் உண்டான புத்ரனானதால் சுகன் என்று பெயர் வைத்தார்.

2. கேசிஜ் ஜகு: கேசன வாத்யகோஷம்
  சக்ருச்ச நாகே நந்ருது: ஸ்த்ரியச்ச
  வாயுர் வவௌ ஸ்பர்சஸுக: ஸீகந்தஹ
  சுகோத்பவே ஸர்வஜனா: ப்ரஹ்ருஷ்டாஹா
ஆகாஸத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது. தேவர்கள் துந்துபி முதலிய பஞ்சவாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாடினர். நாரதர் முதலிய ரிஷிகள் ஆசீர்வதித்தனர். காற்று சுகந்தமாக வீசியதாம். உலகத்தில் உள்ள அனைவரும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.

3. பால: ஸ ஸத்யோ வவ்ருதே, ஸுசேதா
  ப்ருஹஸ்பதேராத்தஸமஸ்த வித்யஹ
  தத்வா விநீதோ குருதக்ஷிணாம் ச
  ப்ரத்யாகதோ ஹர்ஷயதி ஸ்ம தாதம்
வ்யாஸர் மகனுக்கு உபநயனம் செய்வித்தார். சுகர் தேவ குருவான ப்ரகஸ்பதியிடம் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவருக்கு குருதட்ஷணையும் கொடுத்துவிட்டுப் பின் வ்யாஸரிடம் வந்தார். வித்தைகளைக் கற்றுணர்ந்த தன் மகன் எந்த கர்வமும் இல்லாமல் அடக்கமாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் கொண்டார்.

4. யுவானமேகாந் ததப; ப்ரவ்ருத்தம்
  வ்யாஸ: கதாசித் சுகமேவமூசே
  "வேதாம்ச்ச சாஸ்த்ராணி ச வேத்ஸி புத்ர;
  க்ருத்வா விவாஹம் பவ ஸத்க்ருஹஸ்தஹ
எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்யாஸி போல் இருக்கும் சுகரிடம், வ்யாஸர் "விவாஹம் செய்துகொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு செய்ய வேண்டிய தேவ யக்ஜம், பிதுர்யக்ஜம் போன்ற கர்மங்களை மனைவியுடன் செய்து, பிதுர்க்கடனினின்று எனக்கு விமோசனம் தர வேண்டும். புத்திரன் இல்லாதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று தர்ம சாஸ்த்ரங்கள் சொல்கின்றது. இல்லறதர்மம் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லறத்திலிருந்தும் முக்தி அடையலாம். அனைவரும் சந்யாஸிகள் ஆனால் எப்படி சிருஷ்டி உற்பத்தியாகும். அதனால் நீ விவாஹம் செய்துகொள்" என்று ஒரு தந்தையின் இயல்பான குணத்துடன் சொன்னார்.

5. ஸர்வாச்ரமாணாம் கவயோ விசிஷ்டா
  க்ருஹாச்ரமம் ஸ்ரேஷ்டதரம் வதந்தி;
  தமாச்ரித ஸ்திஷ்டதி லோக ஏஷ;
  யஜஸ்வ தேவான் விதிவத் பித்ரும்ச்ச
ஏகாந்த சந்யாஸ தர்மத்தைவிட இல்லறதர்மம் மிகவும் உயர்ந்தது. எல்லாவகையிலும் உயர்ந்ததாகவேச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நீ விவாஹம் செய்து கொண்டு குழந்தைகளை உற்பத்தி செய்து நன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதான் நம் முன்னோர்கள் கரையேறுவார்கள். உன்னுடைய கடமைகளைச் சரிவர செய்து, பித்ருக்களைத் தர்ப்பணம் முத்லியவைகளால் திருப்திபடுத்தி புத்ர பௌத்ரர்களைப் பெற்று சந்தோஷமாக இருந்து எங்களைக் கரையேற்ற வேண்டும் என்றார். இள வயதில் திருமணம் செய்து கொண்டால் தான், புத்ர பௌத்ரர்களைப் பெற்றுக் கடமைகளைச் செய்துப் பின் தவம் செய்யப் போக முடியும். சுகர் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தான் கரையேற முடியாது என்று நினைக்கிறார். அதனால் விவாஹம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

6. தவாஸ்து ஸத்புத்ர; ருணாதஹம் ச
  முச்யேய; மாம் த்வம் ஸுகினம் குருஷ்வ;
  புத்ர: ஸுகாயாத்ர பரத்ர ச ஸ்யாது
  த்வாம் புத்ர! தீவ்ரைரலேபே தபோபிஹி
உன்னைப் புத்திரனாகப் பெற நான் பலகாலம் தவம் செய்தேன். அதனால் நீ இளவயதில் திருமணம் செய்து, உனக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறந்து, அதாவது கொள்ளுப் பேரன் பிறந்து பார்க்க வேண்டும், என்னைக் கரையேற்ற வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்படகூடிய இயற்கையான ஆசை. இந்த ஆசைதான் வ்யாஸர் மனதிலும் வந்தது.

7. கிஞ்ச ப்ரமாதீனி ஸதேந்த்ரியாணி
  ஹரந்தி சித்தம் ப்ரஸபம் நரஸ்ய
  பச்யன் பிதா மே ஜனனீம் தபஸ்வீ
  பராசரோபி ஸ்மரமோஹிதோSபூது

8. ய ஆச்ரமாதா ச்ரமேதி தத்தது
  கர்மாணி குர்வன் ஸ ஸுகீ ஸதா ஸ்யாது
  க்ருஹாச்ரமோ நைவ ச பந்தஹேதுஹு
  ஸ்தவயா ச தீமன்! க்ரியதாம் விவாஹ:
இல்லற வாழ்வில் நியாயமான முறையில் பொருளைச் சம்பாதித்து, விதித்த கர்மங்களைக் கிரமப்படிச் செய்தால் பந்தத்தினின்றும் விடுபடலாம். விதித்த கர்மங்களை முறைப்படிச் செய்பவனுக்குச் சாதிக்க முடியாதது எது? இல்லற வாழ்க்கையில் தேவர்களையும், பித்ருக்களையும், மனிதர்களையும் த்ருப்தி அடையச் செய்து, விதித்த கர்மங்களைச் சரிவரச் செய்து, ஸத் புத்திரனைப் பெற்று, அவனை இல்லறத்தில் ஈடுபடுத்திப், பின் வானப்ரஸ்தாச்ரமத்தை அடைந்து, சில காலம் அதில் இருந்து பின் சந்யாஸ ஆச்சிரமம் அடைவாய்.
      இல்லறத்தில் ஈடுபடாதவனுக்கு இந்த்ரியங்களையும் புலன்களையும் வெல்வது எளிதல்ல. விஸ்வாமித்திரர் மேனகயைக் கண்டு மோகித்து சகுந்தலையை பெற்றார். என் பிதாவான ப்ராசரர் மச்சகந்தியை மோகித்தார். ப்ரம்மனும் தன் புத்ரியிடம் மோகம் கொண்டு பின் சிவனால் தெளிவடைந்தான். இதை எல்லாம் யோசித்து நான் சொன்னபடி விவாஹம் செய்து கொள் என்றார். சுகரிடம் எள்ளளவும் மாற்றம் இல்லாததால் மன வேதனை அடைந்து அழுகிறார்.

9. ஏவம் ப்ருவாணோபி சுகம் விவாஹா-
  -த்யஸக்தமா ஜ்ஞாய பிதேவ ராகீ
  புராணகர்த்தா ச ஜகத்குரு: ஸ
  மாயாநிமக்னோSச்ருவிலோசனோSபூது
வ்யாஸர் ஜகத் குரு, புராணங்களை எழுதியவர். அவர் ஏன் அழ வேண்டும்? தபஸ் செய்ய  சக்தி குறைந்ததா? இல்லை. தேவியிடம் பக்தி குறைந்ததா ? இல்லை. பின் ஏன் அழ வேண்டும்? பாசம். மகன் விவாஹம் செய்து கொள்ளவில்லையே என்ற பாசம். மாயை. ஜகமே மாயையில் உழலுகிறது. ஆனால் சுகர் பல ஜன்மங்களாக என்னைத் தொடர்ந்து வந்த மாயை கிழவனாகி, இப்பிறவியில் என்னை விட்டு விலகி விட்டது. எனவே விவாஹம் என்னும் மாயையில் சிக்க மாட்டேன். முற்றும் துறந்த முனிவர்களையும் மாயையில் சிக்க வைக்கும் அந்த மாயாசக்தியை நான் வழிபடுவேன் என்று சொல்கிறார். சுகர் சுக போகங்களிலிருந்து விலகி நிற்கிறார்.

10. போகேஷு மே நிஸ்ப்ருஹதாSஸ்து மாதஹ
  ப்ரலோபிதோ மா கரவாணி பாபம்;
  மா பாததாம் மாம் தவ தேவி! மாயா;
  மாயாதிநாதே! ஸததம் நமஸ்தே
      இந்த சுகர் எப்படி மாயையிலிருந்து விலகி அதன் பிடியில் சிக்காமல், மன உறுதியுடன் இருக்கிறாரோ அப்படிப் பட்ட மன உறுதியை எனக்கும் தா என்று இந்த கவிஞன் வேண்டுகிறார்.  அதன் பின்னர் வரும் அடுத்த தசகத்தில் கீழ்க்கண்டவாறு சுகர் திருமணம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

12. விதேஹராஜம் தமவாப்ய ப்ருஷ்ட்வா
   ஸ்வதர்மசங்கா: பரிஹ்ருத்ய தீரஹ
   பலேஷ்வஸக்த: குரு கர்ம; தேந
   கர்மக்ஷ்ய: ஸ்யாத்; தவ பத்ரமஸ்து,
அவர் ராஜா, க்ரஹஸ்தன். ராஜ்ய பரிபாலனம் செய்பவர். ஆனாலும் எந்த பந்தமும் இல்லாத ஜீவன் முக்தன். ப்ரம்ம ஞானமுடைய ராஜரிஷி. சாந்த குணமுடைய யோகீ. அவர் உன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார் என்று சொன்னார். க்ரஹஸ்தன், ராஜா ஆனாலும் ஜீவன் முக்தன் என்று சொல்கிறாரே? இது எப்படி முடியும்? என்று சுகருக்குச் சந்தேகம் வருகிறது. ஜனக மஹாராஜாவை நேரில் சந்தித்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள் என்று வ்யாஸர் சொன்னார்,

13. ச்ருத்வேதி ஸத்ய ஹ: சுக ஆச்ரமாத் ஸ
   ப்ரஸ்தாய வைதேஹ,புரம் ஸமேத்ய
   ப்ரத்யுத்கத: ஸர்வஜனைர் ந்ருபாய
   ன்ய வேதயத் ஸ்வாக,மனஸ்ய ஹேதும்
தந்தையின் ஆசீர் வாதத்துடன் சுகர் மிதிலை  புறப்படுகிறார். அந் நாட்டு நுழைவாயிலில் நிற்கும் காவலாளி, சுகரைத் தடுக்கிறான். எங்களின் கேள்விக்குப் பதில் சொன்னால் மட்டுமே நகரின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறான். காவலாளியின் அனைத்து வினாவிற்கும் தகுந்த பதிலை சுகர் சொன்னபின் அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சுகருக்கு உபசாரங்கள் செய்து முடிந்த பின் ,அவர் ஜனக மஹாராஜாவிடம் ப்ரம்மசர்யம், க்ரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாஸம் இவைகளுக்கான தர்மங்களைச் சொல்ல வேண்டும். க்ரஹஸ்தாச்ரமம் பந்தப்படுத்தாது. மனசு தான் காரணம் என்று என் தந்தை சொல்கிறார். அதனால் என் சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

14. க்ருஹஸ்ததர்மஸ்ய மஹத்வமஸ்மாது
   விஞாய தீமான் ஸ சுகோ நிவ்ருத்தஹ
   பித்ராச்ருமம் ப்ராப்ய ஸுதாம் பித்ருணாம்
   வ்யாஸேSதிஹ்ருஷ்டே, க்ருஹிணீம் சகார
      வ்யாஸர் சொன்ன அதே விளக்கங்களை ஜனகரும் சொல்கிறார். பந்தம் வேண்டாம் என்று, தபஸ் செய்ய காட்டிற்குச் சென்றாலும், ஒரு மானையோ, முயலையோப் பார்த்து ஆசைப்பட்டால் அதுவும் பந்தத்தை ஏற்படுத்தும். எதன் மேல் ஆசை வைத்தாலும் அது பந்தமே. மனதை எடுத்து வைத்துவிட்டு எங்காவது போக முடியுமா? வீடானாலும், காடானாலும் மனசு தான் காரணம். அதனால் க்ரஹஸ்தாச்ரமத்தால் பந்தம் வராது என்று சொல்ல சுகரும் மனக் குழுப்பம் நீங்கி தெளிவடைந்து தந்தையிடம் மீண்டும் சென்று திருமணத்திற்கு சம்மதம் தருகிறார். பித்ரு தேவதைகளின் புத்ரியான பீவரீ என்னும் கன்னிகையை கல்யாணம் செய்து கொள்கிறார்.

15. உத்பாத்ய புத்ராம்சசதுர: ஸுதாம் ச
   க்ருஹஸ்ததர்மான் விதினாSSசரன் ஸஹ
   ப்ரதாய சைனாம் முனயேSணுஹாய
   பபூவ காலே க்ருதஸர்வக்ருத்யஹ
க்ருஷ்ணன், கௌரப்ரமன், பூரிதன், தேவஸ்ருதன் என்ற நான்கு மகன்களும், கீர்த்தி என்ற ஒரு பெண்ணும் பிறக்கின்றனர். க்ரஹஸ்தாச்ரம தர்மப்படி வாழ்ந்து வருகிறார். மகன்களுக்குச் செய்ய வேண்டிய உபநயனம் போன்றவைகளையும் செய்வித்து, உரிய வயதில் மகளை அணுஹன் என்னும் மஹானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அவர்களுக்கு ப்ரமதத்தன் என்னும் மகனும் பிறக்கிறான்.

16. ஹித்வாSSச்ய்ரமம் தாத,மபீசசைல
   ச்ருங்கே, தபஸ்வீ ஸஹ,ஸோத்பதன் கே
   பபௌ ஸ பாஸ்வா,னிவ, தத்வியோக
   கின்னம் சிவோ வ்யாஸ,மஸாந்த்வ யச்ச
      தன் பிதாவின் விருப்பப்படி க்ரஹஸ்தாச்ரம கடமைகளைச் சரிவர முடித்து விட்டு, கைலாய மலைக்குச் சென்று த்யானம் செய்து, சித்தியும் அடைந்து, மலையினின்றும் எழும் உதய சூரியனைப் போல கைலாய மலையிலிருந்து மேலே எழும்பினார். அப்பொழுது கைலாய மலையில் இரண்டு சிகரம் இருப்பது போல் தோன்றியது. இவர் எழுந்த வேகத்தில் கைலாய மலையும் சிறிது அசைந்தது. அதன் பிறகு சுகர் ஆகாஸ ஸஞ்சாரியாய் ரிஷிகளால் துதிக்கப்பட்டு வந்தார். மகனைப் பிரிந்த வ்யாஸர் துயரம் தாங்காமல் கைலாயமலை வந்து மகனே! மகனே! என்று கதறி அழுத போது, பார்வதி பரமேஸ்வரன் அவருக்குக் காட்சி தந்து "உன் மகன் யாரும் அடைய முடியாத ஆகாஸ சஞ்சார பதவி அடைந்திருக்கிறான். அவனால் உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது என்று ஆறுதல் சொன்னார். அப்படியும் வ்யாஸர் ஆறுதல் அடையாததால், வ்யாஸரின் அருகில் சுகர் சாயா ரூபமாக தோன்றும்படி அனுக்ரஹம் செய்து மறைந்தனர்.

ஆகவே மேற்கொண்டு வரும் நிகழ்வுகளுக்கான அடிப்படை இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். இனி மேலே நம் கதை தொடரும்.


Monday, September 19, 2016

சுகருக்கு எத்தனை தாய்கள்?

“த்வைபாயனா, நாம் சுகனைக் குறித்து ஓர் முடிவு எடுத்துவிட்டோமானால் அடுத்தடுத்த வேலைகளுக்கும் எளிதில் ஓர் தீர்வு கிடைத்துவிடும்!” என்றாள் ராஜமாதா! கொஞ்சம் கருணையுடன் சிரித்துக் கொண்டார் த்வைபாயனர். “அவனைப் பார்த்தாலே மிக எளிமையாகவும், கீழ்ப்படிதல் உள்ளவனாகவும், அடக்கமும் விநயமும் நிரம்பி உள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் பாருங்கள், அவன் தான் எல்லாச் சிக்கல்களையும் உருவாக்கி இருக்கிறான். சிக்கல்களின் உலகமாக மாற்றி உள்ளான்.” என்றவர் தன்னைப் பெற்றெடுத்த ராஜமாதாவைப் பார்த்து, “மதிப்புக்குரிய என் தாயே! நீங்கள் தான் எப்படியாவது பேசி அவன் மனதை மாற்றி அவன் இல்லறத்தைத் தேர்ந்தெடுக்குமாறு செய்ய வேண்டும்.” என்றார்.

“மகனே, என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? நானும் ஜாபாலியாவும் பலமுறை அவனிடம் இது குறித்துப் பேசி விட்டோம். எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்து விட்டோம். அவனுக்கு எங்கள் வேண்டுகோளெல்லாம் கேலிக்குரியதாகத் தெரிகிறது போலும்! எரிச்சலூட்டும் ஓர் புன்னகையுடன் எங்களைச் சிறு குழந்தைகளைப் பார்ப்பது போல் பார்க்கிறான். அவனை விடப் பெரியவர்களாக அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஓர் தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டான். அது தான் தான் சந்நியாசியாகவேண்டும் என்பது! ஆகவே அவன் இல்லறத்தைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை!” என்றாள் ராஜமாதா கோபத்துடன். பின்னர் வாடிகாவைப் பார்த்துக் கண்களால் ஜாடை காட்ட, ராஜமாதா விட்ட இடத்திலிருந்து வாடிகா ஆரம்பித்தாள். “சுகன் எனக்கு ஒரே மகன்!” என்றவள் கண்களில் கண்ணீருடன், “அவன் ஓர் நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இல்வாழ்க்கையில் ஈடுபடாத எந்த ஸ்ரோத்திரியனும் தன் கல்வி கற்பிக்கும் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது. அவர்கள் ஈடுபாடு கல்வி கற்பிக்கையில் முழுமை அடையாது. இது தானே நம்முடைய பழமையான ஆரியர்களின் கோட்பாடுகள்! கற்பிக்கும் ஆசாரியர் இல்வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தானே கற்பிக்க வேண்டும்! அதோடு இல்வாழ்க்கையில் ஈடுபடாமல் மனைவியின் உதவி இல்லாமல் அவனால் எப்படித் தன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முறைப்படி செய்ய முடியும்? மனைவியின் துணை இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் முற்றுப் பெற்றதாக ஆகாதே!” என்றாள் வாடிகா.

வாடிகா மேலும் தொடரும் முன்னர் ஷார்மிக்குக் கோபம் வந்து கோபத்தில் கொந்தளித்தாள். எரிமலையைப் போல் வெடித்தாள்.”இன்னும் எத்தனை நேரமாக இதையே பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருப்பாய்?” என்று வாடிகாவைப் பார்த்துக் கத்தினாள். தன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, “த்வைபாயனன் இந்த ஆசிரமத்தை வழி நடத்தட்டும். அவனால் இயலாதெனில் சுகன் அந்தப் பொறுப்பை ஏற்கட்டும். என்னுடைய முடிவு இறுதியானது. அதோடு சுகதேவன் மோசாவின் இளைய சகோதரி பிவாரியைப் போன்றதொரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதற்குக் குறைந்தெல்லாம் பெண்கள் தேவையில்லை.” என்றவண்ணம் தன் தலையில் போட்டிருந்த துணியைச் சரிசெய்து கொண்டாள்.

“சுயநலக்காரர்கள்! நீங்கள் அனைவருமே சுயநலவாதிகள்!” என்றாள் ஷார்மி. “நான் என்னுடைய ஆசாரியர் இப்போது இருந்திருந்தால் என்னை என்ன செய்யச் சொல்வாரோ அதையே செய்யப் போகிறேன்.” என்றவள் வாடிகாவை முதலில் உறுத்துப் பார்த்துவிட்டுப் பின்னர் ராஜமாதாவையும் பார்த்துவிட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமாக நின்றாள். வாடிகாவுக்குக் கோபம் வந்தது. ஷார்மியைக் கோபத்துடன் பார்த்தாள். இன்று வரை அவள் இதை அறிந்திருக்கவில்லையே! தன் கணவனின் வாழ்க்கையில் ஷார்மிக்கு இத்தனை அதிகாரமும், சக்தியும் இருக்கும் என்பதை அவள் தெரிந்து வைத்திருக்கவில்லை. தன்னைவிட இவளுக்குத் தான் அவரிடம் உரிமையும், அதிகாரமும் இருக்கிறது! நொந்து போனாள் வாடிகா. ஷார்மி விடவில்லை.

“த்வைபாயனன் இங்கே வரும்போது தன் தாய் உடன் இல்லாமல் தந்தையுடன் தனியாகத் தான் வந்தான். நான் தான் அவனுக்கு அம்மாவாகப் பனிரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். இன்னமும் இருக்கிறேன். அவன் என் மகன். அதோடு இல்லாமல் என் ஆசாரியரின் மானசிக புத்திரனும் ஆவான். அவருடைய ஆன்மிக வாரிசு த்வைபாயனன் தான்!” தன் கடுமையான பார்வையால் அனைவரையும் பார்த்த அவள் பார்வையில் உறுதி தெரிந்தது. அதன் பின்னர் அவள் திடீரென உணர்ச்சிமயமாக மாறினாள். “நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அவனை “ஆசாரியனாக”வும், “குரு”வாகவும் மாற்றி விட்டீர்கள். அவனுக்கு இங்கேயும் வேலை இருக்கிறது. இங்கேயும் அவன் தேவைப்படுகிறான். அதே போல் தர்மக்ஷேத்திரத்தில். மற்ற ஆசிரமங்களில். இங்கும் அங்குமாக அவன் இருக்க வேண்டி இருக்கிறது. இப்போது அவன் இவ்வளவு பெரியவனாக, “ஆசாரிய”னாக ஆகிவிட்டதால் இங்கே எனக்காக நேரம் ஒதுக்க அவனுக்கு நேரம் இல்லை. இந்த ஆசிரமத்தைக் கவனிக்கப் பொழுது இல்லை!” என்றவள் சற்று நிறுத்திக் கொண்டாள்.

மீண்டும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆகவே நான் சுகனை விடமாட்டேன். ஒருநாளும் விடமாட்டேன். அவன் இல்லறத்தை ஏற்க வேண்டும். மோசாவின் இளைய சகோதரியான பிவாரியை மணந்து கொள்ளவேண்டும். நான் இதை எல்லாம் ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். இது தான் என் முடிவு!” என்று அறிவித்தாள்.  வாடிகாவின் மனம் மிகவும் புண்பட்டு விட்டது. தான் பெற்றெடுத்து வளர்த்த தன் ஒரே மகன் மேல் ஷார்மி காட்டிய ஏகபோக உரிமையை அவளால் ஏற்க முடியவில்லை. அவள் மகன் இவ்வளவு சாதாரணமானவனா? அவளுக்கு இல்லாத உரிமையா ஷார்மிக்கு வந்து விட்டது! கோபத்துடன் ஷார்மியைப் பார்த்தாள்,”அம்மா, ஷார்மி அன்னையே, நான் அவனை என் வயிற்றில் பத்து மாதம் சுமந்திருக்கிறேன் என்பதை தயவு செய்து மறக்க வேண்டாம். அவனுக்கு ஏற்ற மணமகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்னுடையது மட்டுமே! உங்களுடையது அல்ல! நான் ஆசாரிய சௌனகரின் மகளை சுகனுக்கு ஏற்ற மணமகளாக ஏற்கெனவே தேர்ந்தெடுத்து விட்டேன். ஆகவே உங்கள் தேர்வு தேவையில்லை!” என்றாள் திட்டவட்டமாக.

ஷார்மி வாடிகாவை ஏளனத்துடன் பார்த்ததோடு அல்லாமல் அவளுக்கு அவமானம் உண்டாக்கும் வகையில் ஏளனம் கலந்த சொற்களை அவள் மீது வீசினாள். “ஜாபாலியின் புதல்வியே! சுகனை உன் மகன், மகன் என்றே சொல்லிக் கொள்கிறாயே! மோசா அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு போய் வைத்துக் கொல்ல முயன்ற போது நீ எங்கிருந்தாய்? நீயா அவனைக் காப்பாற்றினாய்? என் உயிரைப் பணயம் வைத்து நான் அவனுக்காக உணவும் மற்றப் பொருட்களையும் எடுத்துச் சென்று கொடுத்துக் காப்பாற்றினேன்! அதை நீ அறிவாயா? அப்படி நான் ரகசியமாக அவனுக்கு உணவளித்திருக்காவிட்டால் இன்று அவன் உயிருடன் இருந்திருக்க மாட்டான். பசியே அவனைக் கொன்றிருக்கும்! அது தெரியுமா உனக்கு? அப்போது நீ எங்கே இருந்தாய்?” கேட்டுவிட்டு மேலும் ஏளனத்துடன், “ஹஸ்தினாபுரத்து அரண்மனையில் ராஜமாதாவின் உபசாரங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தாய்! நினைவிருக்கிறதா?” என்றாள்.

வாடிகாவின் மனம் மேலும் புண்பட அவள் ஷார்மியைப் பார்த்துக் கோபமாகக் கத்த வேண்டும் என்று ஆரம்பிக்க இருக்கையில் திடீரென சுகன் கீழேயே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் திடீரெனச் சிரிக்க ஆரம்பித்தான்.  அப்போது சூழ்நிலையின் இறுக்கம் ஓரளவுக்குக் குறைய ராஜமாதா அவனிப் பார்த்து, “குழந்தாய், திடீரென ஏன் சிரிக்கிறாய்?” என்று ஆதுரத்துடன் கேட்டாள். சுகதேவரோ தன் தலையை மேலே தூக்காமலேயே அசைத்தவர் மீண்டும் வெடிச்சிரிப்புச் சிரிக்க ஆரம்பித்தார். ராஜமாதா, “ஏனப்பா இப்படிச் சிரிக்கிறாய்?” என்று மீண்டும் சுகரைப் பார்த்துக் கேட்டாள். சுகதேவர் தன் தலையை அசைத்துக் கொண்டார். பின்னர் மிக முயற்சி செய்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். தன் கைகளைக் கூப்பியவண்ணம், “மன்னிக்கவும், ராஜமாதா, மற்றும் இங்குள்ள பெரியோர்களே, என்னை மன்னிக்கவும். ஆனால் எனக்குச் சிரிப்பு அடக்க முடியாமல் வெடித்துவிட்டது!” என்றார் பணிவுடனேயே!

“அதெல்லாம் சரி, குழந்தாய்? ஆனால் எதைக் கண்டு நீ அப்படிச் சிரித்தாய்? சொன்னாயெனில் அந்த வேடிக்கையைக் கேட்டு நாங்களும் சிரிப்போமே! நீ மட்டும் சிரித்தால் போதுமா?  சொல்லப்பா!” என்றாள் ராஜமாதா மீண்டும், மீண்டும். அப்போது மீண்டும் சுகருக்குச் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டார் அவர். மேலும் பேசினார்: “இவர்கள் இருவரின் யார் என் தாய் என்பதை நினைத்து நினைத்து அதிசயித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார். இதைச் சொல்லும்போதே சிரிப்பில் அவர் உடல் குலுங்கியது. தன் சுட்டு விரலால் வாடிகாவையும், ஷார்மியையும் சுட்டிக் காட்டினார் தொடர்ந்து, “ இயற்கைக்கு மாறாக நான் இரு தாய்களுக்குப் பிறந்திருப்பேனோ என நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்தது!” என்றவர் மீண்டும் சிரித்த வண்ணம், “அல்லது எனக்குத் தாயே இல்லை! ஒரே புதிராக இருக்கிறது! எல்லோருமே என்னைத் தங்கள் மகனாக நினைக்கிறார்கள். சொந்தம் கொண்டாடுகின்றனர்.” என்றவர் ராஜமாதாவைப் பார்த்து மீண்டும் மீண்டும் சிரித்தார்.

“சுயநலமாக இருக்காதே சுகதேவா! உன்னுடைய சந்தோஷத்தைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கிறது அதை நினைத்து நினைத்து நீ சிரிக்கிறாய். அந்த உன் அனுபவத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள். நாங்களும் அதைக் கேட்டு மகிழ்கிறோம்.” என்றாள் ராஜமாதா. மிக முயற்சி எடுத்துக் கொண்டு தன் சிரிப்பை அடக்கியவண்ணம் சுகர் சொன்னார். “தாயே, நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் தாயே! நீங்களும் என்னை உங்கள் மகன் என்று சொல்வதற்குக் காத்திருக்கிறேன். அதே போல் தாவியும் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறேன்! இருவரும் என்னை உங்கள் மகன் என்று சொந்தம் கொண்டாடுங்கள்!” என்ற வண்ணம் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார். இதைக் கேட்ட எல்லோருமே சிரிக்க ஆரம்பித்தார்கள்.

க்ருபா மட்டும் மௌனமாகவே எல்லாவற்றையும் கவனித்து வந்தான். அவனுடைய பழங்குடி இனத்தவரின் பிரச்னைகள் பேசப்பட்டால் தவிர மற்றவற்றைக் குறித்து அவன் அதிகம் கவலைப்படவில்லை. அந்த விஷயங்களில் ஆர்வமும் காட்டவில்லை. குறிப்பாகப் பழங்குடியினரின் திருமணமோ அந்தப் பெண்கள் ஆசிரமத்துக்காரர்களோடு திருமணம் செய்து கொள்வதோ குறித்து அவன் கவலையே படவில்லை. இப்போது சுகர் சொன்னதைக் கேட்டு அவனுக்கும் சிரிப்பு வர அவனும் சிரித்தான்.

Sunday, September 18, 2016

சுகனை எனக்குக் கொடுத்து விடு!

“இதோ, பார், கிருஷ்ணா, என்னுடைய பெயரில் இந்த ஆசிரமமோ, தீர்த்தமோ இயங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன்.” என்றாள் ஷார்மி தீர்மானமாக. “ஆனால், தாயே, நீங்கள் இந்த ஆசிரமம் தழைத்தோங்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறீர்கள்! இந்த ஆசிரமவாசிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே ஒத்திசைவைக் கொண்டு வரப் பாடுபட்டிருக்கிறீர்கள்! அவர்கள் ஒற்றுமைக்கு உங்களை விட வேறு யார் பாடுபட்டிருக்கின்றனர்!” என்றார் த்வைபாயனர். “கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ எவ்வளவு படித்திருக்கிறாய்! எத்தகைய மேதை நீ! ஆனால் நீ சின்னப் பையனாக இருந்தபோது எப்படி ஒரு முட்டாள் சிறுவனாக இருந்தாயோ அப்படியே இப்போதும் இருக்கிறாய்!” என்றாள் ஷார்மி. அவள் இதைச் சொல்லி முடித்தது தான் தாமதம் அங்கிருந்த அனைவர் முகங்களிலும் திகில், அச்சம், கோபம் ஆகிய உணர்வுகள் கலந்த ஓர் கலவை தென்பட்டது. அவளுக்குத் தான் சொன்னது தப்பு என்னும் உணர்வு தலை தூக்கியது.

உடனே தன் வாயில் கைகளால் அடித்துக் கொண்டாள். சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டோமோ என்னும் குற்ற உணர்வில் மீண்டும் மீண்டும் வாயில் அடித்துக் கொண்டவள், “ஆஹா, நான் என்ன சொல்லி விட்டேன். அதுவும் உங்களுக்கெல்லாம் ஆசாரியரை! அவரைப் போய் இப்படிக் குறைச்சலாக ஏச்சுக் கூறி விட்டேனே!” என்றாள் மிகவும் பயத்தோடு. ஆனால் த்வைபாயனரோ, “அம்மா, அம்மா! நீங்கள் என்னை ஏசவில்லை. நான் உங்கள் அருமைப் பையன். உங்கள் மகனை. மகனை ஒரு தாய் திட்டுவது எவ்வகையில் தப்பு? நீங்கள் என்னைத் திட்டினீர்கள்! அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு!” என்றார் அடக்கத்துடன். இதைப் பார்த்த ஷார்மியின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. அவரை மிகவும் அன்புடன் பார்த்தாள். “என்னை மன்னித்து விடு கிருஷ்ணா! தெரியாமல் செய்து விட்டேன்! ஆனால், நீயே பார்க்கிறாயே! நான் எப்போதாவது ஒரு பிரமசாரிணியாக இருந்திருக்கிறேனா? அல்லது வேதத்தில் தான் ஒரு ஸ்லோகமோ, மந்திரமோ என்னால் சொல்லப்பட்டிருக்கிறதா? எனக்கு அதெல்லாம் என்ன தெரியும்!”

“ஆனால் உனக்கு என்ன தெரியும்? நீ உன் ஆசாரியரைப் பற்றி அறிய மாட்டாயா கிருஷ்ணா? இப்போது பித்ரு லோகத்தில் அவர் பித்ருக்களுடன் இருக்கிறார். ஆனால் அவர் இப்போது இங்கே இருந்திருந்தால்? இந்த ஆசிரமத்துக்கு என் பெயரை வைப்பதை ஒத்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறாயா? அதற்கு நான் அனுமதித்து விட்டால் அவர் என்னிடம் கோபம் கொள்ள மாட்டாரா? கிருஷ்ணா, இந்த ஆசிரமத்திற்கு என் பெயரை வைத்தால் அதன் புனிதத் தன்மையே கெட்டு விடும். இந்த ஆசிரமம் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும். அனைத்து ஆரியர்களும், பழங்குடியினரும் கடவுளை அடைவதற்கான தெளிவான வழியாக இந்த ஆசிரமம் இருக்க வேண்டும். இங்கே வருவதன் மூலம் கடவுளை அடையலாம், அவர் அருளைப் பெறலாம் என்ற நிச்சயம் மக்களுக்கு வர வேண்டும். அதற்காக மக்கள் இங்கே கூட்டமாக வந்து தங்களை இந்த ஆசிரமத்துத் தீர்த்தத்தில் குளிப்பதன் மூலமும், இங்குள்ள ஆசிரமவாசிகளுடன் வழிபாடுகளில் கலந்து கொள்வதன் மூலமும் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக இது எப்போதுமே பராசர முனிவரின் பெயராலும் என் பிரபு, என் கடவுள் கௌதம முனிவரின் பெயராலும் இருக்க வேண்டும். அவர்களின் நினைவுகளே இந்த ஆசிரமத்தையும் தீர்த்தத்தையும் புனிதப்படுத்தும். அவர்கள் பெயராலும் நினைவுகளாலும் இந்த இடம் புனிதமடைய வேண்டும்!” என்று முடித்தாள்.

அதைக் கேட்ட த்வைபாயனர் தன் இனிமையான வசீகரிக்கும் குரலால், “ஆம், அன்னையே, தாங்கள் சொல்வதே சரியானது! பராசர முனிவரையும் கௌதம முனிவரையும் ஒருங்கிணைத்து வைக்கும் பெயரால் இந்தஆசிரமம் மட்டுமில்லாமல் சுற்றுப்புறமெங்கும் புனிதமடையும்.”

“ஆனால் ஒரு பெயரால் என்ன வந்துவிடும்?” என்றாள் ஷார்மி! மேலும் தொடர்ந்து,”பெயரை மட்டும் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. இங்கே இந்த ஆசிரமத்தைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்த ஓர் தகுதியான ஆசாரியன் தேவை! த்வைபாயனா! நீ என் கடவுளின் என் பிரபுவின் சீடன்! பிரதம சீடன். உன்னைவிட இந்த ஆசிரமத்தின் பொறுப்பேற்கத் தகுதி வாய்ந்தவர் யார் இருக்கிறார்கள்? ஆகவே நீ தான் இங்கே ஆசாரியனாக இருக்க வேண்டும்.” என்றாள் ஷார்மி.

“ஆஹா! நானா? தாயே, என்னால் இங்கே தங்கி வாழ்வது மிகவும் சிரமம். என்னால் முடியாது. என்னுடைய வேலையே தர்மக்ஷேத்திரத்தில் இன்னுமும் முடிக்கப்படாமல் இருக்கிறது. அதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்ததோடு என் பணி முடியவில்லை. அதை மீண்டும் தர்மத்தின் சாம்ராஜ்யமாக, அதன் அஸ்திவாரமாக மாற்ற வேண்டும். அதற்கான வேலைகளை நான் தொடங்க வேண்டும். அது ஆர்யவர்த்தத்தின் ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் முன் மாதிரியாக இருந்து அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும். நானும் அங்கிருந்து ஒவ்வொரு ஆசிரமமாகவும் ஒவ்வொரு ராஜ்யமாகவும் சென்று தர்மத்தின் பாதையினைத் தெளிவாகக் காட்ட வேண்டும். வேதத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் அதைத் தக்க மாணாக்கருக்கு முறைப்படி கற்பித்து அதிலுள்ளபடி தர்மத்தின் பாதையிலே வாழ்க்கையை நடத்தி வர இல்லறத்தை நல்லறமாகச் செய்ய மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்வதோடு போதிக்கவும் வேண்டும்.”

“கிருஷ்ணா, நீ இந்த ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்கவில்லை எனில், என்னால் சுகனைப் பிரிய முடியாது. அவனை எனக்கெனக் கொடுத்து விடு! “ ஷார்மியின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. “அந்தக் கடவுளர் அனைவரும் சேர்ந்து என் மகன்களை என்னிடமிருந்து பிரித்து விட்டனர். அவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்! ம்ம்ம்ம்! என் ஆசாரியரின் இடத்தில் அவர்கள் இருந்து பரம்பரையாக இந்த ஆசிரமத்தை நடத்தும் தகுதி பெற்றுச் சிறப்பாக நடத்தி வருவார்கள்.” என்றவள் தன் கண்ணீரைத் துடைத்த வண்ணம், “ நான் உன்னிடம் என் மகனைக் கண்டேன் த்வைபாயனா! ஆனால் உனக்கோ என்னிடமோ இந்த கோதுலி ஆசிரமத்திடமோ எவ்விதமான அன்பும் இல்லை!” என்று வருத்தத்துடன் கூறினாள். பின்னர் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மீண்டும் தன் சுயநிலைக்கு வந்தவளாகக் கூறினாள்.

“நீ ஆசாரியனாக வரப் போவதில்லை எனில், நான் சுகனைப் பிரிய மாட்டேன். என்னால் முடியாது. சுகனும் என்னைக் கைவிடக் கூடாது!” என்றவளால் மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போனாள். “சுகதேவனால் இப்போது ஓர் சிக்கல் ஏற்பட்டுள்ளது!” என்றாள் ராஜமாதா! அவள் தன் தந்தை த்வைபாயனரின் பின்னால் அமர்ந்திருந்த சுகதேவரைப் பார்த்தாள். அவரோ மெல்லப் புன்சிரிப்புடன் அனைவரையும் பார்த்து அவரவர் கருத்தையும் அதில் உள்ள சிக்கல்களையும் அவர்களுடைய சிரமங்களையும் பார்த்து ரசித்த வண்ணம் தலை நிமிர்ந்து அமர்ந்திருந்தார்.

Saturday, September 17, 2016

கோதுலி ஆசிரமத்தில் ஆலோசனை!

மோசாவின் இரு இளைய சகோதரிகளும் ஷார்மியுடன் தப்பி ஓடி வந்திருந்தார்கள். இப்போது மோசாவின் மரணம் குறித்து அறிந்திருந்தாலும் அவர்கள் திரும்பவும் அந்தப் பழங்குடியினரின் காட்டுமிராண்டியான வாழ்க்கைக்குப் போக விரும்பவில்லை. ஆகவே ஷார்மி அவர்கள் இருவரையுமே த்வைபாயனரின் ஒரே மகன் சுகதேவனுக்கு மணமுடித்துத் தர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சுகரோ இல்வாழ்க்கையை அறவே வெறுத்தார். பிரமசரியத்திலிருந்து நேரே சந்நியாசியாகவே விரும்பினார். ஆரியர்களுக்கு வாழ்க்கை முறையில் முதலில் குழந்தைப் பருவம் கடந்த பின்னர் பிரமசரிய ஆசிரமம், பின்னர் கிரஹஸ்தாசிரமம், அதன் பின்னர் வானப்பிரஸ்தம் கடைசியாகவே சந்நியாசி என நியமங்கள் இருந்து வந்தது. ஆனால் ஒரு சிலர் பிரமசாரியிலிருந்து நேரடியாக சந்நியாசிகளாக ஆக விரும்பினார்கள். அவர்களில் சுகரும் ஒருவர். இப்போது சுகர் இல்வாழ்க்கையை மறுத்ததால் என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் தவித்தனர்.

அடுத்ததாக உள்ள பிரச்னையும் தீர்க்க முடியுமா என்று சந்தேகமே! த்வைபாயனருக்கு சூரியனிடமிருந்து கிடைத்த செய்தியைப் பின்பற்றி நடக்கவேண்டுமானால் கோதுலி ஆசிரமும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் அனைத்துக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அந்தப் பொறுப்பை ஏற்பது யார்? இதற்கெல்லாம் என்ன முடிவு காண்பது என்று புரியாத த்வைபாயனரும், ராணிமாதாவும், வாடிகாவும் ஓர் இடத்தில் ரகசியமாகக் கூடினார்கள். ராணிமாதா எப்போதும் போல் தன் கட்டுக்குலையாத அழகின் மெருகோடும், கம்பீரத்தோடும் அங்கிருந்த வெள்ளிப்பட்டை போட்டிருந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்க அவளை எந்நேரமும் பிரியாத தாவி பின்னால் நின்று கொண்டிருந்தாள். அவள் எதிரே ஷார்மி அரச குலத்தவரைச் சந்திக்க நேர்கையில் அணிய வேண்டிய உடைகளோடு மிகவும் அடக்கத்துடனும், பணிவுடனும் அமர்ந்திருந்தாள். நரைத்த அவள் தலைமயிர் அவள் தலையில் ஓர் வெண்மையான கிரீடத்தைச் சூட்டியது போல் இருந்தது. ராணிமாதாவின் இடப்பக்கம் காசி தேசத்து இளவரசிகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் கண்கள் சோகத்தையும், அவர்களின் செயலற்ற தன்மையையும் அப்படியே எடுத்துக் காட்டின. அவர்கள் அருகே வாடிகாவும் அமர்ந்திருந்தாள்.

ராணிமாதாவின் வலப்பக்கமாக த்வைபாயனர் அமர்ந்திருக்க அவர் அருகே க்ருபா தான் பழங்குடித் தலைவன் என்னும் அடையாளத்தைக் காட்டும் எருமைக்கொம்புள்ள கிரீடத்தோடும், சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட முகத்தோடும் அமர்ந்திருக்க அவன் பின்னே சுகதேவரும் மற்ற நான்கு பிரமசாரிகளும் அமர்ந்திருந்தனர். அப்போது ராணிமாதா பேச ஆரம்பித்தாள்: “நான் த்வைபாயனருடன் இது குறித்து நன்கு கலந்து ஆலோசித்து விட்டேன். இதோ இந்த இடத்தில் தான் முனிசிரேஷ்டரான பராசரரை நெருப்பிலிட்டிருக்கின்றனர்..” இதைச் சொல்லும்போது அவள் குரல் தழுதழுத்தது. அவளுடைய சொந்த வாழ்க்கையையும், கோதுலியின் வாழ்க்கை முறையையும் அடியோடு மாற்றி அமைத்தது இந்த இடம். அதோடு மட்டுமல்லாமல் பராசரர் மூலமாக ஆரியவர்த்தம் முழுமையும் அடியோடு மாறியது. இங்கே தான் இந்த இடத்தில் அவள் பங்கு முனி என அழைக்கப்பட்ட பராசர முனிவரை முதல் முதல் சிறு பெண்ணாகச் சந்தித்தாள். அவர் அடிபட்டுக் கீழே கிடந்ததைக் கவனித்தாள்.

அருகிலுள்ள கல்பியில் தான் அவள் அவரைக் கவனித்துப் பணிவிடைகள் செய்து வந்தாள். அவளிடம் இருந்ததை எல்லாம் அவருக்கு அர்ப்பணித்தாள். தன்னையும் சேர்த்து அர்ப்பணித்தாள். அதன் பின்னர் த்வைபாயனரை ஆறு வருடங்கள் வளர்த்தாள். அவரை பாங்கு முனி கல்பியிலிருந்து இங்கே தான் அழைத்து வந்தார். இங்கே தான் த்வைபாயனருக்கு உபநயனம் என்னும் மறுபிறவியை அடையும் நிகழ்ச்சி நடந்து அதன் பின்னர் பிரமசாரியான க்ருஷ்ண த்வைபாயனர் ஆசாரிய கௌதமரால் சீடராக ஏற்கப்பட்டு, ஷார்மியாலும் அவராலும் சொந்த மகனைப் போல் வளர்க்கப்பட்டதோடு கல்வியும் புகட்டப்பட்டார். இந்த நினைவுகள் எல்லாம் அவள் உள்ளத்தினுள்ளே கிளர்ந்து எழுந்தன. அதன் தாக்கத்தால்  அவள் கண்களும் நீர்க் கோர்த்துக் கொண்டன. தன் தொண்டையைக் கனைத்துக் கொண்ட அவள் மேலும் பேச ஆரம்பித்தாள்.

“நான் இந்த விஷயத்தைக் குறித்து த்வைபாயனரிடம் பேசி விட்டேன். நாம் எந்தப் பெயரை இங்குள்ள தீர்த்தத்துக்கு வைக்கிறோமோ அதை ஏற்றுக் கொள்வதாக அவர் உறுதிமொழி கொடுத்து விட்டார். கடவுள் அவரை இப்போது தர்மசாம்ராஜ்யத்தில் ஆண், பெண் அனைவரையும் ஒருங்கிணைத்து நல்வழிக்குக் கொண்டு வர வேண்டிய நல்லெண்ணத் தூதுவராக நியமித்திருக்கிறார். ஆர்ய வர்த்தம் முழுவதும் சென்று அவர் அதற்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தீர்த்தத்தின் மூலமே அந்த வேலைகள் நடைபெற வேண்டும். ஆகவே இதற்குத் தக்கதொரு பெயரைச் சூட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! இதன் மூலம் பல அரிய, புனிதமான இணைப்புகளும், உறவுகளும் ஏற்படும்.” த்வைபாயனரிடம் திரும்பிய ராஜமாதா, “கிருஷ்ணா, இப்போது நாங்கள் செய்ய வேண்டியது என்ன? அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?”

சிரித்துக் கொண்டே த்வைபாயனர், “தாயே, எனக்கென்று சில அபிப்பிராயங்கள் இதற்குப் பெயர் சூட்டுவதில் இருக்கின்றன.” என்றார். “அப்படியா? என்ன பெயரை வைக்கலாமென்று நீ சொல்கிறாய்?” ராஜமாதா கேட்டாள்.
“ஹா, அந்தப் பெயரை நான் சொன்னேன் எனில் உங்கள் எவருக்கும் அது பிடிக்காது! அது மட்டும் நிச்சயம்!” என்ற த்வைபாயனர் மீண்டும் குறும்புத் தனமான சிரிப்புடன், “இந்த இடத்தின் பாதுகாப்புக்கும், இதை மீண்டும் நிர்மாணிப்பதற்கும் அதிகம் பாடுபட்டவர் எவரோ அவர் பெயரைத் தான் இந்த இடத்திற்கு வைக்க வேண்டும்!” என்றார். “மகனே! புதிர் போடுவதைப் போல் பேசாதே! நேரடியாக விஷயத்துக்கு வா! என்ன பெயரைச் சொல்கிறாய்?” ராஜமாதா கேட்டாள்.

“உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கும்! இதோ இவர்கள் பெயரைத் தான் வைக்க வேண்டும்!” என்ற வண்ணம் ஷார்மி அன்னையைச் சுட்டிக் காட்டினார் த்வைபாயனர். “என்ன? ஷார்மி அன்னையின் பெயரா?” என்று உண்மையான அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ராஜமாதா கூவ, வாடிகாவோ தன் கணவனைக் கோபத்துடன் பார்த்தாள். ஆனால் த்வைபாயனர் எதற்கும் கலங்காமல், “ஆம், ஷார்மி அன்னை தான் இந்த ஆசிரமமும் கோதுலியும் மீண்டும் தழைக்க வேண்டி அரும்பாடு பட்டிருக்கிறார். அதோடு அவர் தான் மிகவும் அனைவரையும் விடக் கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் இரவும், பகலும் இடைவிடாது வேலை செய்து வருடக்கணக்காகப் பாடுபட்டு இந்த ஆசிரமத்தை இந்த உயர்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார். வாஜ்பேய யக்ஞம் சக்கரவர்த்தியின் ஆணையின் பேரில் நடந்தபோது இவருடைய சேவைகள் எவ்வளவு போற்றத்தக்கவையாக இருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்! அன்னபூரணி தேவியைப் போல் எந்த நேரம் யார் வந்து கேட்டாலும் தட்டாமல் இவர் கைகள் உணவை அளித்து வந்தன!” என்றார் த்வைபாயனர்.

சற்று நேரம் நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்தவர், மீண்டும் தொடர்ந்தார். “ஆனால் அவர்கள் நேரம் முழுவதும் தேவையான உணவுப் பொருட்கள் ஆசிரமத்தில் இல்லை என்று புகார் செய்வதிலேயே கழிந்து விட்டது. அவர்களைப் பார்த்தால் அந்த உணவுப் பொருட்கள் போயிருக்கும் இடம் எதுவென்று அனைவரும் புரிந்து கொள்ளலாம்.” என்று சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார். ஷார்மி குறுக்கிட்டுப் பேச முயன்றாள். ஆனால் த்வைபாயனர் விடவில்லை. “புனிதமான எருமையைக் கடவுளாக வணங்கும் பழங்குடியினருக்கும் நமக்கும் இடையில் நல்லதொரு உறவின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது ஷார்மி அன்னை தான். இந்த ஆசிரமத்தைக் காப்பாற்றும் முயற்சியில் எண்ணற்ற கஷ்டங்களை அவர் அனுபவித்தாயிற்று! இவரின் கண்களுக்கு முன்னாலேயே இவர் அருமைக்கணவரும், ஆசாரியருமான கௌதம முனிவரும் இவர்களின் அருமைக்குழந்தைகளும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது அவர் இத்தனைக்கும் பின்னர் இந்த ஆசிரமத்தை மீண்டும் கட்டித் தரும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.” என்றார்.

ஷார்மி கொஞ்சம் சுயநினைவை இழந்த பைத்தியம் பிடித்தவள் போல் கத்தினாள்.”த்வைபாயனா, ஏன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறாய்! இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் வேடிக்கைப் பேச்சுப் பேசுவதா? அதற்கான சந்தர்ப்பமா இது? உன் கேலிப் பேச்சைக் கொஞ்சம் நிறுத்திக் கொள்.” என்றாள்.

“இல்லை, அம்மா, இல்லை! இந்த விஷயத்தில் இது தான் உண்மை. எப்படி எனில் நான் என் வாழ்க்கையில் முதல் முதலாகச் செய்திருக்கும் அர்த்தமுள்ள காரியம் எது எனில் அது இதுதான்! வேறெதுவும் இல்லை!” என்றார் த்வைபாயனர்