Sunday, September 11, 2016

மோசாவைத் தேடி!

“என்ன? தன்னைத் தானே அந்தக் கோயிலுக்குள்ளே மறைத்துக் கொண்டு இருக்கிறானா? அவன் கோதுலி ஆசிரமத்தை அடியோடு எரித்ததும் இல்லாமல், அங்கிருந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரையும் ஆசாரிய கௌதமர் அவர் குழந்தைகள் உட்படக் கொன்றிருக்கிறான்.  உங்களையும் இங்கே கடத்தி வந்திருக்கிறான். மோசாவையும் அவன் ஆட்களையும் எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்பதற்கு எனக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இத்தகைய கொடுமைகளைச் செய்த மோசாவுக்குத் தக்க தண்டனை அளித்தே தீருவேன்.” என்றார் குனிகர். “மந்திரி, குனிகரே! அவனுக்கு இறைவன் போதிய தண்டனையைக் கொடுத்து விட்டான். அதோடு இல்லை. அவன் மக்களும் அவனைத் தண்டித்து விட்டனர். நானும் அவனைக் கைவிட்டு விட்டேன்.” என்றார் த்வைபாயனர்.

த்வைபாயனர் சொன்னதை அங்கு நின்று கொண்டிருந்த வயது முதிர்ந்த சில பழங்குடியினர் ஆமோதித்துத் தலையை ஆட்டினார்கள். “அது எப்படி? அவனுக்கு எப்படி, என்னவிதமாக தண்டனை கிடத்தது?” குனிகர் கேட்டார். அதற்கு த்வைபாயனர், “அவனுடைய முதல் மனைவி ஷார்மியுடன் ஓடி விட்டாள். இந்தப் பழங்குடியினரின் சம்பிரதாயப்படி பழங்குடியினரின் தலைவன் தான் அங்குள்ள பெண்களுக்கு எல்லாம் பொறுப்பானவன். பெண்களில் சுக, துக்கங்களுக்குப் பொறுப்பேற்பவன். அவன் எத்தனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவனுக்கு முதல் திருமணமும் அதன் மூலம் வாய்க்கப் பெறும் முதல் மனைவியுமே இங்கே எல்லாவற்றிலும் அதிகாரம் படைத்தவர்கள். முதல் மனைவியே அவனுடைய எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்பதோடு தலைவன் என்பதற்கான அடையாளத்தின் அதிகார சக்தியாகவும் விளங்குவாள். அவளே அவனை விட்டு விலகி விட்டால்? பிரளயமே ஏற்படும் அல்லவா?” இதைக் கேட்ட குனிகர் சத்தமாகச் சிரித்தார். பின்னர், “அவள் அதாவது அவனுடைய பட்ட மஹிஷியைப் போன்றவள் அவனை விட்டு விலகிச் சென்று விட்டால், அதனால் அவனுக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது! அல்லவா? அவனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை, அல்லவா?” என்று கேட்டவண்ணம் மீண்டும் சிரித்தார் குனிகர்.

“ம்ம்ம், அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவன் அதன் பின்னர் அடைக்கலம் தேடியும் இந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ள முடியாமலும் தான் அவன் குல தெய்வமான எருமைக்கடவுளின் சந்நிதியில் தஞ்சம் புகுந்துவிட்ட்டான். பிரார்த்தனைகள் அவனுக்கு எவ்விதத் தீங்கையும் செய்யாது. பிரார்த்தனைகளைச் செய்யட்டும். அவை அவனுக்கு அடக்கத்தைப் போதிக்கும். இப்போது அவனுக்குத் தேவையானது அடக்கமும், விநயமும், பணிவுமே!” என்ற வண்ணம் புன்னகை புரிந்தார் த்வைபாயனர். “நான் அவனைப் பார்த்தே ஆகவேண்டும், ஆசாரியரே! பரத வம்சத்து இளவல் ஆன காங்கேயர் மோசாவைக் கொன்று விடும்படி கட்டளை பிறப்பித்திருக்கிறார்.” என்றார் குனிகர்.

“குனிகா, மோசாவைப் பற்றிய கவலையை விட்டு விடுவீர்! இப்போது இந்தப் பழங்குடியினரின் தலைவனாக க்ருபா தான் இருக்கிறார். ஷார்மியின் தந்தை இவர். கோதுலி ஆசிரமத்தோடு நெருங்கிய உறவுள்ளவர். நீங்கள் எல்லாம் வருவதற்கு முன்னர் அனைத்துப் பழங்குடியினரும் ஒன்று கூடி மீண்டும் கோதுலி ஆசிரமத்தைப் புனர் நிர்மாணம் செய்வதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இல்லையா க்ருபா?” என்று கேட்டார் த்வைபாயனர்.  க்ருபா அதை ஆமோதித்துத் தன் தலையை ஆட்டினான்.

“இருந்தாலும் நம் குரு வம்சத்து இளவல் எனக்கு இட்டிருக்கும் கட்டளையை நான் கட்டாயம் பின்பற்றியே ஆகவேண்டும். அதற்கு நான் கீழ்ப்படிய வேண்டும். இப்போது நான் பழங்குடியினரின் தலைவருடன் சில வார்த்தைகள் பேச வேண்டும்.” என்றார் குனிகர். “என்ன செய்யப் போகிறீர்? குனிகரே?” என்று த்வைபாயனர் கேட்டார். “ஐயா, நான் சொல்வது இந்தத் தலைவரை அல்ல! பழைய தலைவன் மோசாவை! அவனை நான் சந்தித்தே ஆகவேண்டும் அவனுக்கு ஓர் பாடம் கற்பித்தாக வேண்டும்.” என்றார் குனிகர். த்வைபாயனர் க்ருபாவிடம், திரும்பி, “எங்களை மோசா இருக்குமிடம் அழைத்துச் செல் க்ருபா!” என்றார்.

ஆனால் க்ருபா மறுத்தான். “ஆசாரியரே, அவன் உங்களைப் பார்க்க விரும்ப மாட்டான். தன்னைத் தானே அங்கே அடைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் புனிதமான எருமைக் கடவுளின் சந்நிதியில், அவரை நாங்கள் அனைவரும் வணங்கும் சந்நிதியில்! அதோடு இல்லாமல் அவன் ஓர் மந்திரவாதியையும் தன்  கூட அழைத்துச் சென்றிருக்கிறான். அவன் துணையுடன் என்ன என்ன செய்வானோ! !” என்றான் க்ருபா கலக்கத்துடன். “ஓ, நீ மந்திரவாதியைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே, க்ருபா! அவனைக் கண்டு பிடித்ததும் எப்படி அவனைக் கையாளலாம் என்பதைக் குறித்து யோசிப்போம். அவனுடைய மந்திர, தந்திரங்கள் நம்மை ஒன்றும் செய்யாது!” என்றார் த்வைபாயனர்.

ஒரு பழங்குடியினரும் வில்லாளிகளில் தேர்ந்தவர்கள் நான்கு பேரும் பின் தொடர க்ருபா, த்வைபாயனரையும் மந்திரி குனிகரையும் மோசா இருக்கும் எருமைக்கடவுளின் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். அந்தக் குடியிருப்பை ஒட்டி இருந்த ஓர் குன்றின் உச்சியில் இருந்தது அந்தக் கோயில். அது கிட்டத்தட்ட ஓர் பெரிய குடிலாகக் காணப்பட்டது. மூங்கில் கம்புகளை நெருக்கமாக அடுக்கிச் சுவரைப் போல் அமைத்திருந்தார்கள். அடர்ந்த புதர்களால் அதன் மூன்று பக்கங்கள் மூடப்பட்டிருந்தது. அங்கு தெய்வீக எருமையைக் கடவுளாகக் கும்பிட்டு வருவதால் ஓர் எருமையும் இருந்தது. அவர்கள் அந்தக் குடிலின் வெளி வாயிலுக்கருகே வந்து சேர்ந்தனர். அங்கே ஓர் மந்திரக் கோடு வரையப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அது அந்தப் புதர்களைச் சுற்றி வரையப்பட்டிருந்தது. க்ருபா அதைப் பார்த்ததுமே ஆசாரியரைப் பார்த்தான்.

“ஆசாரியரே, எங்கள் பழங்குடியினரைச் சேர்ந்த கை தேர்ந்த மந்திரவாதி ஒருவன் இந்த மந்திரக் கோட்டை வரைந்திருக்கிறான். இந்தக் கோயிலைச் சுற்றிக் கொண்டு அது செல்கிறது. அதை நம்மால் தாண்டவே முடியாது. அப்படி மீறித் தாண்டினோம் எனில் நாம் மஹிஷாசுரனின் கோபத்துக்கு ஆளாகி விடுவோம்!” என்று பயத்துடன் கூறினான். த்வைபாயனர் புன்னகைத்தார். “ சரி, க்ருபா, உனக்கு பயமாக இருந்தால் நீ வர வேண்டாம். நானும் குனிகரும் இந்தக் கோட்டைத் தாண்டப் போகிறோம்.  நாங்கள் மேலே உள்ள இறைவனின் பாதுகாப்பின் கீழ் பத்திரமாக இருக்கிறோம்!” என்றார்.  அப்போது குனிகர் குறுக்கிட்டார்.

“ஆசாரியரே! நீங்கள் இந்தக் கோட்டைத் தாண்டி வரும் சிரமங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டாம். இங்கேயே இருங்கள். நான் மட்டும் இந்தக் கோயிலுக்குள்ளே போய் மோசாவை இழுத்து வருகிறேன். அவனுடைய கொடுமையான காரியங்களுக்கான தண்டனையைக் கட்டாயமாய் அவனுக்குக் கொடுத்தே ஆகவேண்டும்.” என்றவர் க்ருபாவிடம் திரும்பி, “உள்ளே அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்பது குறித்து நீ ஏதேனும் அறிவாயா?” என்றும் வினவினார்.

“அவன் ஒரு வேளை எருமைக்கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்கலாம். அவன் முதல் மனைவியைத் திரும்பக் கொண்டு வருவதற்குப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம். அவள் வந்துவிட்டாளெனில் அவளைப் பலி கொடுத்துவிடுவான்.” என்றான் க்ருபா. “முதலில் நாம் உள்ளே சென்று மோசாவைப் பார்ப்போம்!” என்றார் த்வைபாயனர். “ஒரு வேளை இந்தக் கோயிலும் அதைச் சார்ந்த சூழ்நிலைகளும் மோசாவின் மனதை மாற்றி அவனை நல்வழியில் திருப்பலாம். சரியான பாதைக்கு அவன் வந்து விடலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன அல்லவா?” என்றார்.