Thursday, September 1, 2016

கோதுலி ஆசிரமத்தில் த்வைபாயனர்!

அதற்கு வியாசர், “அது கடவுளின் விருப்பம்! கடவுளர் அனைவரும் இந்த சேவைக்கு நான் தேவையில்லை என நினைத்தார்களானால் மோசா நிச்சயமாக என்னைக் கொன்று விடுவான்! அவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் எனக்கு எதுவும் நடக்காது!” என்று தீர்மானமாகச் சொன்னார். சற்றே நிறுத்தியவர் பின்னர் மேலும் தொடர்ந்து, “ஒரூ வேளை அவர்கள் என்னைக் கொல்ல முயன்றால் பிரமதேஜஸால் க்ஷத்திரிய தேஜஸை வெல்ல முடிகிறதா? தனித்து பிரம்ம தேஜஸால் இயங்க முடிகிறதா என்று நீங்கள் பரிக்ஷை செய்து பார்க்க நல்லதொரு வாய்ப்புக் கிட்டும்!” என்றார். அதற்கு குனிகர், “அந்த மலைஜாதி மக்களை நாங்கள் எளிதில் வென்றுவிடுவோம்!” என்று திட்டவட்டமாகக் கூறினார். “ம்ம்ம்ம், உங்கள் வில்லாளிகளால் இந்த மலைஜாதி மக்களை வெல்ல முடியலாம். ஆனால் சச்சரவு பெரிதாகி விட்டால்! அப்போது ஒன்றும் செய்ய முடியாது! மோசா கோபம் கொண்டு அங்கு சிறைப்பிடித்து வைத்திருக்கும் ஆசிரமவாசிகளின் மேல் பாய்ந்து கொல்வான்! என்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் இப்போது எப்பாடுபட்டாவது ஆசிரமவாசிகளைக் காப்பாற்ற முயல்வது ஒன்றே தான்!” என்றார் த்வைபாயனர்.

குனிகருக்கு ஏதும் பதில் சொல்ல முடியவில்லை. தன் கைகளை விரித்துச் செய்வதறியாது குலுக்கினார். “மாட்சிமை பொருந்திய முனிவரே! அனைத்தும் தங்கள் விருப்பம் போல் நடக்கட்டும். ஆனால் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்? உங்களுக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் இளவரசர் காங்கேயர் உங்களை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியே ஆகவேண்டும் என எனக்குத் தனிப்படக் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.” என்றார் குனிகர். த்வைபாயனரின் சீடர்கள் அதன் பின்னர் அரசப் படகிற்கு மாற்றப்பட்டனர். அரசப்படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. க்ரிவியின் படகு கோதுலியின் கரைக்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அங்கிருந்த மலைவாசி மக்கள் பெருத்த குரலில் கோஷமிட்டனர். ஒரே கூச்சலும், குழப்பமுமாகச் சற்று நேரம் நீடித்தது. ஒரு சிலர் படகைச் சுட்டிக் காட்டி ஏதேதோ பேசத் தொடங்க, இருவர் மோசாவை அழைத்துவர ஓடினார்கள். மோசா விரைவில் அங்கே வந்தான். படகில் இருந்த வேத வியாசரையும் அவரை அழைத்துக் கொண்டு படகை ஓட்டி வந்திருக்கும் க்ரிவியையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் பார்வையில் கொடூரம் தெரிந்தது.

திடீரென க்ரிவியும் அவன் மகன்களும் விசித்திரமானதொரு குரலில் இயற்கைக்குப் புறம்பாகக் கிரீச்சிட்டுக் கத்திக் கொண்டே வணங்கும் பாவனையில் முழந்தாளிட்டனர். அதற்கு மோசா க்ரிவி இந்தப் படகைக் கரைக்கு இங்கே இந்தப் பக்கம் கொண்டு வந்தது தவறு என்றும் அப்படி வந்திருக்கக் கூடாது என்னும்படியும் ஒரு கூச்சல் போட்டான். அது கிட்டத்தட்ட ஓர் ஆணையாக இருந்தது. மோசா பார்க்க கறுப்பாக, அகன்ற மார்புடன் சற்றே குட்டையாகக் காணப்பட்டான். அவன் கண்களைச் சுற்றிப் பூசப்பட்டிருந்த சிவப்பு வண்ணம் அவன் முகத்துக்கே ஓர் பயங்கரத்தைக் கொடுத்தது. தன் காதுகளில் செம்பினால் ஆன பெரிய வளையங்களை மாட்டி இருந்தான். அதோடு கொம்புகளோடு கூடிய எருமைத்தலை மட்டும் காணும்படியாக வடிவமைக்கப்பட்டதொரு கிரீடத்தைத் தலையில் அணிந்திருந்தான். இது அவனைக் காட்டுவாசிகளின் தலைவன் என்று அடையாளம் காட்டுவதாகும். அவன் மஹிஷாசுரனின் பிரதிநிதியாக அங்கே ஆட்சி புரிவதாக ஐதீகம். எருமைக்கடவுளை அவர்கள் வணங்கி வந்தார்கள். ஆகவே மஹிஷாசுரனை வணங்கினார்கள்.

வேதவியாசர் அந்தப் படகிலிருந்து மிகவும் சிரமப்பட்டுக் கீழே முழங்கால் அளவு நீரில் இறங்கினார். அதற்குள்ளாக மோசா அவரைத் தன் சைகையினால் இருந்த இடத்திலேயே இருக்கும்படி சொன்னான். தன் ஆட்களைப் பார்த்து இந்தப் புதிய விருந்தாளியைக் கொல்லத் தயாராக இருக்கும்படி ஆணையிட்டான். த்வைபாயனர் இதற்கெல்லாம் கலங்கவே இல்லை. “என் ஆசிகள், உனக்கு,மோசா, ஈடு இணையற்றக் காட்டுவாசிகளின் தலைவனே! உன்னை ஆசீர்வதிக்கிறேன்.” என்றார் தன் கைகளைத் தூக்கிய வண்ணம். அவர் முகம் புன்னகையில் மலர்ந்தது. அந்தப் புன்னகை மோசாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவரைப் பார்த்து, “யாரடா நீ?” என்று கூச்சலிட்டான். த்வைபாயனர் அதற்கும் புன்னகை புரிந்தார். பின்னர் மோசாவைப் பார்த்து, “மோசா, மோசா, அமைதி! உன் தந்தை என்னிடம் இப்படி நடந்தது இல்லை. எப்போதும் என்னிடம் அன்பாகவும் கருணையுடனும் நடந்து கொள்வார். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போதிலிருந்தே அவரை நான் நன்கறிவேன். சில மாதங்கள் முன்னர் கோதுலிக்கு வந்திருந்தபோது கூட அவரைச் சந்தித்தேன்.” என்றார் த்வைபாயனர்.

“அதெல்லாம் இருக்கட்டும், ஐயா! நீ யார்! அதைச் சொல் முதலில்!” என்று தன் முகத்தைக் கோணிக் கொண்டான் மோசா. தயையுடன் சிரித்தார் த்வைபாயனர். “மோசா, நீ பாங்கு முனிவரைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம், ஆம், நான் அவரைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஓநாய்களின் பிரதேசத்தில் அவற்றால் கடித்துக் குதறப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மோசா. “மோசா, நான் பாங்கு முனியின் மகன். பராசர புத்திரன், க்ருஷ்ண த்வைபாயனன். அதோடு இல்லாமல் இந்த கோதுலி ஆசிரமத்தை நடத்தி வந்த ஆசாரிய கௌதமரின் பிரதம சீடனும் ஆவேன். இங்கே தான் நான் பனிரண்டு வருடங்கள் குருகுல வாசம் இருந்தேன். அதன் பின்னரும் நான் அடிக்கடி இங்கே வந்து போவேன்.” என்றார் வேத வியாசர்.

அதைக் கேட்ட மோசா ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் கடகடவெனச் சிரித்தான். “ஹா,ஹாஹாஹா, நீ யாருடைய மகனாக இருந்தால் எனக்கு என்ன? நீ அந்த நொண்டி முனிவரின் மகனாக இருந்தாலும் எனக்கு அதில் எவ்விதமான மறுப்பும் இல்லை. அல்லது இருகால்களும் உள்ளதொரு முனிவரின் மகனாக இருந்தாலும் எனக்கு அதிலும் எதுவும் சிறப்பாகத் தெரியவில்லை. எனக்குஅதில் எவ்விதமான லாபமோ, நஷ்டமோ இல்லை. சரி, சரி, நீ அந்த யமுனை நதியிலிருந்து வெளியேறிவிடாதே! அங்கேயே நில், அல்லது படகுக்குத் திரும்பிச் செல். ஓர் அடி எடுத்து வைத்தாயானாலும் என் வில்லாளிகளின் அம்புகள் உன்னைத் துளைத்து விடும்!” என்றான் மோசா. அப்படிச் சொல்லிக் கொண்டே தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த வில்லை எடுத்து நாணேற்றி அதில் ஓர் அம்பை அம்பறாத்தூணியிலிருந்து எடுத்துப் பூட்டினான். த்வைபாயனருக்குக் குறி வைத்துக் கொண்டே, “இங்கே இப்போது எதற்காக வந்தாய்?” என்று மேலும் வினவினான்.
“நான் இங்கே ஏன் வந்தேனா? மோசா, இது என்னுடைய இருப்பிடம், என் இடம், என் ஆசிரமம். நான் பலகாலம் வாழ்ந்திருந்த இடம். ஆசாரிய கௌதமருக்கு ஓர் பிள்ளையைப்போலவே நான் வளர்க்கப்பட்டேன். இப்போது அவர் எங்கே? நான் அவரைக் கண்டு என் நமஸ்காரங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.” என்றார் த்வைபாயனர். மோசா அலட்சியமாகச் சிரித்தான். சிரித்தவண்ணம் ஆசிரமம் எரிந்து கொண்டிருந்ததையும் எரிந்து முடிந்த பகுதிகளையும் காட்டி மீண்டும் ஏளனமாகச் சிரித்தான். “அதோ அங்கே போய்த் தேடு! முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்!” என்று சொல்லி மீண்டும் சிரித்தான். “ம்ம்ம்ம்” என்று ஒரு பெருமூச்சு விட்ட த்வைபாயனர், “மற்றவர்கள்? அவர்கள் எல்லோரும் எங்கே?” என்று ஆவலுடன் கேட்டார். “ஆஹா, அது எனக்குத் தெரியவில்லையே! ம்ம்ம்ம், தெரியாமல் போயிற்றே!” என்றான் மோசா.

“மோசா, மலைவாசிகளின் ஈடு இணையற்ற தலைவா! உன்னால் இந்த ஆசிரமம் எரிக்கப்பட்டதா? அதுவா உண்மை?” என்று த்வைபாயனர் மீண்டும் கேட்டார். “ஆம், ஆம், நான் தான் அதை எரித்தேன். போதுமா! இப்போது இதோ அந்தப் படகில் ஏறி ஓட்டமாய் ஓடிவிடு! உன்னுடைய இந்த முகத்தை மீண்டும் நான் பார்க்க நேர்ந்தால்! ஹூம், காட்டாதே உன் முகத்தை என்னிடம்!” என்று கடுமையாகக் கூறினான் மோசா. த்வைபாயனர் பேச்சை நிறுத்தவில்லை. “தலைவா, ஆசிரமவாசிகள் உன்னை என்ன செய்தார்கள்? அவர்களிடம் ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? சென்ற வருடம் நான் இங்கே வந்திருந்தபோது உன்னுடைய தந்தை இருந்தார். கௌதம முனிவரிடமும் ஆசிரமவாசிகளுடனும் மிகவும் நட்புப் பாராட்டி வந்தார்.” என்ற வண்ணம் மீண்டும் நட்பாகச் சிரித்தார். ஆனால் மோசாவின் அகந்தை தலை தூக்கியது. இந்த முனிவரை எப்படியேனும் அனுப்பிவிடவேண்டும் என்னும் தன்னுடைய ஆணையே கடைசியாக இருக்கவேண்டும் என நினைத்தான். மேலே பேச ஆரம்பித்தான்.

“நான் என் தந்தையைப் போல் இல்லை.” கிட்டத்தட்ட இதைச் சொல்கையிலேயே கோபத்தில் சீறினான் அவன். “அவர் என்ன செய்தார், என்பதைக் குறித்தோ, யாரிடம் நட்புப் பாராட்டினார், யாரிடம் பகைமை பாராட்டினார் என்பது குறித்தோ எனக்கு எவ்விதமான கவலையோ அக்கறையோ இல்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதி! உன்னைப் போன்றவர்களை இந்தக் காட்டினுள் நான் மீண்டும் அனுமதிக்க மாட்டேன். என் தந்தை செய்த தவறை நான் திரும்பச் செய்ய மாட்டேன். ஹூம், எங்கள் ஈடு இணையற்ற கடவுளான மஹிஷாசுரனின் ஆட்சியில் இருந்து வரும் எங்கள் குலப் பெண்களை நீங்கள் திருடிச் செல்ல அல்லது இழுத்துக்கொண்டு ஓடிச் செல்ல நான் இனிமேல் அனுமதிக்க மாட்டேன். இங்கே அந்த வேலை இனி நடக்காது!” என்று தீர்மானமாகச் சொன்னான் மோசா.

“ஆசாரிய கௌதமரின் மனைவி, ஷார்மீ எனக்குத் தாயைப் போன்றவர். என்னிடம் மிகவும் அன்பு செலுத்தினார். அவர் உன்னுடைய இந்தப் பழங்குடியிலிருந்து வந்தவரே! ஆனால் எவ்வளவு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினார் என்பதை நீ அறியாயா? தன்னிடம் அடைக்கலமாக வரும் அனைவரையும் அன்புடன் ஒரு தாயைப் போல் நேசித்து வந்தாள். அதே போல் ஆசிரமவாசிகளும் அனைவரும் அவளிடம் மிகவும் மரியாதை பாராட்டி வந்தனர். தர்மக்ஷேத்திரத்தில் பதினேழு நாட்கள் நடந்த வாஜ்பேய யக்ஞத்தின் போது அவள் அனைவரையும் அதாவது ஸ்ரோத்திரியர்கள் மட்டுமின்றி யக்ஞத்துக்கு வந்திருந்த மஹாராஜாக்கள், ராஜாக்கள், சிற்றரசர்கள், பரிவாரங்களிலிருந்து சாதாரண மக்கள் வரை அனைவரையும் ஒன்று போல் பாவித்து விருந்துபசாரம் அளித்து வந்தாள்.” என்றார் முனிவர்.

மெல்ல மெல்ல சிறிது சிறிதாக நதியிலிருந்து கரை நோக்கி முன்னேறத் தொடங்கினார் ஆசாரியர் வியாசர். அதைத் தன் கூரிய கண்களால் கவனித்து விட்ட மோசா மீண்டும் கூச்சல் போட்டான். “அப்படியே நில் முனிவா! இருந்த இடத்தை விட்டுச் சிறிது கூட அசையாதே!  என்னிடம் வருவதற்கு முயலாதே! ஷார்மியைப் பற்றியா பேசுகிறாய் நீ? அவள் மிகவும் கொடூரமான பெண்மணி. எங்கள் இனத்துக்கே ஓர் அவமானம். எங்கள் இனத்தின் எதிரி அவள். அவள் தான் எங்கள் குலப் பெண்களை ஆசை காட்டி மோசம் செய்து ஆசிரமவாசிகளோடு வாழ்வதற்காக இழுத்துச் சென்றாள். மேலும் முயன்றாள். ஆசிரமவாசிகளோடு எங்கள் குலப் பெண்களுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவளா நல்லவள்? அவள் கொடூரி!” என்றான் மோசா! “அதில் என்ன தவறைக் கண்டாய் மோசா? ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்ட பெண்களிடம் பேசிப் பார்த்திருக்கிறாயா? அனைவருமே சந்தோஷமாகத் தானே வாழ்க்கை நடத்தி வந்தார்கள்?” என்றார் த்வைபாயனர்.