Friday, September 2, 2016

மோசாவின் பிடியில் த்வைபாயனர்!

“என்ன, சந்தோஷமா? அந்தப் பெண்கள் அனைவரும் நச்சுக்கள். நஞ்சு நிறைந்த பெண்கள். எங்கள் காட்டுவாசிகளின் கிராமத்துக்குள் புகுந்து எங்கள் பெண்களிடம் யாருக்கும் அடங்காதவர்களாகவும் எங்கள் பழக்கவழக்கங்களை வெறுப்பவர்களாகவும் மாற்றி வந்தனர்.”

“அப்படியா? அப்படி எனில் அந்த அடங்காத பெண்களை நீ ஏன் இங்கே சிறைப்பிடித்து வைத்துள்ளாய்? அவர்களை என்னுடன் அனுப்பி விடு!” என்றார் த்வைபாயனர். “அதெல்லாம் முடியாது! அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். எத்தகையது எனில் இனி எந்தப் பெண்ணும் இப்படி இங்கே வந்து செயல்படும்படி நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. அத்தகைய கொடிய தண்டனையை அந்தப் பெண்களுக்குத் தர வேண்டும். இனி எந்தப் பெண்ணும் எங்கள் பழங்குடியினரின் சம்பிரதாயங்களிலிருந்தும், கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக முடியாதபடி தண்டனை கொடுக்கவேண்டும். சரி, சரி, மேலே பேச்சு எதற்கு? முனிவரே, நீ இங்கிருந்து உடனே சென்று விடு! இல்லை எனில்………” என்று நிறுத்தினான் மோசா.

அப்போது ஷார்மியின் தந்தையும் அந்தப் பழங்குடியினரிடையேயே மிகவும் மூத்தவரும் ஆன க்ருபா என்பவர் த்வைபாயனரைக் கண்டும் காணாதது போல், அடையாளமே அறியாதவர் போல் அங்கே மோசாவிடம் வந்தார். த்வைபாயனரை அவர் நன்கு அறிவார். எனினும் இப்போது அவர் பக்கமே பார்க்கவில்லை. மோசாவின் அருகே வந்து மோசாவின் காலடிகளில் வீழ்ந்து வணங்கினார். ஒரு தலைவனுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தவுடன், மோசாவுடன் ஏதோ ரகசியமாகப் பேசினார். பின்னர் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டார். மோசா த்வைபாயனரிடம் திரும்பினான். “என்னுடைய மதிப்புக்குரிய மாமா அவர்கள், எங்கள் குடியிலேயே மூத்தவர் சொல்கிறார். நீ சொல்வது எல்லாம் உண்மை என்கிறார். நீ இங்கே ஒவ்வொரு வருடமும் வந்திருக்கிறாய். அதே போல் பாங்கு முனிவரின் இறந்த உடலையும் நீ தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாய். அவருடைய உடலை நீ தான் எரியூட்டி இருக்கிறாய்.” என்ற மோசா மேலும் க்ருபாவைச் சுட்டிக்காட்டிய வண்ணம், “அது மட்டும் இல்லை, பெரியவர், சொல்கிறார். என் தந்தைக்கு உன்னை மிகவும் பிடிக்குமாம். ஆகவே எங்கள் பழங்குடியினரின் விருந்துக்குக் கூட உன்னை அழைத்து விருந்தோம்பல் செய்திருப்பதாகவும் சொல்கிறார்.” என்றான்.

“ஆமாம், அது தான் உண்மை. அதனால் தான் நீயுடன் என்னுடன் நட்புடன் இருக்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.” என்றார் த்வைபாயனர். மோசா மீண்டும் க்ருபாவுடன் ரகசிய சம்பாஷணை நடத்தினான். பின்னர் த்வைபாயனரிடம் திரும்பி, “மாமா சொல்கிறார். ஆசிரமவாசிகள் அனைவரும் உன்னைக் கடவுளாகவே மதித்தனராம். இப்போது என்னுடைய விருப்பம் என்னவெனில் நீ வந்து எங்கள் எருமைக்கடவுளான மஹிஷாசுரனையும் வணங்கியாக வேண்டும். கிளம்பி வா என்னுடன்!” என்றவன் படகோட்டியிடம் திரும்பினான். “க்ரிவி, நீ இங்கேயே இரு! நான் சொல்லும்வரை இங்கேயே இரு. அதன் பின்னர் உன்னுடைய சுற்றலை நீ ஆரம்பிக்கலாம்.” என்றவன் தன் ஆட்களிடம் திரும்பி, க்ரிவிக்கும் அவன் ஆட்களுக்கும் தேவையான உணவை அளித்து உபசரிக்குமாறு கூறினான். க்ரிவி கீழே விழுந்து தரையை முத்தமிட்டுத் தன்மரியாதையை மோசாவுக்குத் தெரியப்படுத்தினான்.

த்வைபாயனர் மெல்ல நீரில் நடந்து கரையை அடைந்து மோசாவின் அருகே வந்தார். அவனைப் பார்த்து, “தலைவா, தயவு செய்து என் குருவின் இறந்த உடலையாவது என்னிடம் மீட்டுக் கொடுக்கிறாயா? அவருடைய உடலுக்காவது நான் மரியாதை செலுத்தித் தக்க மரியாதையுடன் ஈமச் சடங்குகளையும் செய்வேன்.” என்றார். அதற்கு மோசா பெரிதாகச் சிரித்தான். “அவர் உடலை நான் பாதுகாத்து வைத்திருப்பேன் என்றா எதிர்பார்த்தாய்? உடலின் ஒரு பகுதி இதோ இங்கே இருக்கிறது!” என்று தன் பெரிய வயிறைக்காட்டிச் சிரித்தான். பின்னர்”அவர் எலும்புகளைத் தின்ன முடியவில்லை. யமுனையில் எறிந்துவிட்டேன்!” என்று சொல்லி மீண்டும் கடகடவெனச் சிரித்தான். “ஆனால், உன்னுடைய தகப்பனார் மனித மாமிசம் தின்பதை ஆதரித்தது இல்லை என்றல்லவோ கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றார் த்வைபாயனர் ஹீனமான குரலில்.  மோசா மிகவும் கர்வத்துடன் அவரைப் பார்த்து மீண்டும் கடகடவெனச் சிரித்தான். “என்னிடம் என் தந்தையைக் குறித்து நினைவூட்டாதே! அவர் ஓர் ஏமாற்றுக்காரர். எங்கள் குல தெய்வமான எருமைக்கடவுள் மஹிஷாசுரனை ஏமாற்றினார். கடவுளை மதிக்கவே இல்லை. எல்லாம் எதற்காக! ஆசிரமங்களுடன் நட்புப் பாராட்டுவதற்காக! எங்கள் பாரம்பரியமான விருந்துணவில் மனித மாமிசம் இடம் பெறுவதை அவர் தவிர்த்தார். அதிலும் உன்னைப் போலவும் ஆசாரிய கௌதமர் போலவும் ஆசாரியர்கள் அந்த விருந்தில் கலந்து கொள்கையில் மாமிசங்களே இடம் பெறாமல் போய்விட்டன. ஆனால் நான் அப்படி இல்லை! என் ராஜ்ஜியத்தில் குடிமக்கள் அனைவரும் மாமிசம் சாப்பிடலாம். அதிலும் மனிதனின் மாமிசத்தைத் தின்பதின் மூலமே தைரியமும், ஒருவனின் மனோநிலையும் ஸ்திரமடையும். வலுவானவனாக ஆவான். இன்று நீ என் விருந்தினனாக வரப் போவதால் உனக்கும் அதைப் பழக்கப் படுத்தித் தருகிறேன். சாப்பிட்டுப் பார்!” என்றான் கேலியாகச் சிரித்தவண்ணம்.

த்வைபாயனர் புன்னகையுடன், “முயன்று பார்! அது சரி! ஷார்மி அன்னையாரும் மற்றப் பெண்களும் எங்கே இருக்கின்றனர்? அவர்கள் என்னவானார்கள்?” என்று கேட்டார். “ஹா, ஷார்மி! அவளும் அவளுடன் பிடிக்கப்பட்ட மற்றப் பழங்குடிப் பெண்களும் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே பத்திரமாக இருக்கின்றனர். நீ அதற்கெல்லாம் கவலைப்படவே வேண்டாம். அவர்களை மீண்டும் பார்க்கலாம் என்று எண்ணாதே! ஹூம்! ஷார்மி என் மாமாவின் மகளாக இருந்ததால் பிழைத்தாள்! இல்லை எனில் அவளை நூற்றுக்கணக்கான துண்டுகளாக வெட்டிப் போட்டிருப்பேன். இப்போது ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தொந்திரவுகளுக்கும், பிரச்னைகளுக்கும் அவள் தான் முக்கியக் காரணம்!” என்றான் மோசா. அவற்றைச் சொல்கையில் அவன் கிரீடம் அங்குமிங்குமாக வேகமாக அசைந்தது ஓர் எருமை தன் தலையை ஆட்டுவதைப் போலவே இருந்தது.

த்வைபாயனரைத் தன்னைத் தொடர்ந்து வரச் சொன்ன மோசா தன் ஆட்களுடன் தன் தலைமையகத்தை நோக்கி நடந்தான். த்வைபாயனருக்கு வேறு ஏதும் வழி புலப்படவே இல்லை. அவரைச் சுற்றிக்கொண்டு ஏழு, எட்டு பழங்குடியினர் சூழ்ந்த வண்ணம் பாதுகாவல் போல வந்து கொண்டிருந்தனர். ஆகவே தப்பிக்கவும் வழி இல்லை. எல்லோர் கையிலும் காணப்பட்ட ஈட்டி அவரையே குறி பார்த்துக் கொண்டிருந்தது. அவர் தப்பிக்கச் சிறிதளவு முயன்றாலும் அத்தனை ஈட்டிகளும் அவர் மேல் பாயும் என்பதில் ஐயமில்லை. மதிய நேரத்துக்கு அனைவருமாக அந்தக் காட்டு வழியில் நடந்து பழங்குடியினரின் தலைமையகத்துக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மோசா த்வைபாயனரிடம் திரும்பி, “என் மாமா சொல்கிறார், நீ வருங்காலத்தைக் கண்டு சொல்வாயாமே! அதோடு தீராத நோய்களை எல்லாமும் தீர்த்து வைப்பாயாமே! உன்னிடம் அந்தத் திறமை உண்டென்று சொல்கிறார்.” என்றான்.

“ஆம், என்னால் முடியும். ஆனால் உனக்கு வேதத்திடம் வேத கோஷங்களில் நம்பிக்கை இருக்க வேண்டும்.” என்றார் த்வைபாயனர். “அது என்ன வேதம் என்றால் என்ன? அது யார்? எங்கே வசிக்கிறது? அதன் இருப்பிடம் என்ன?” என்று மோசா திருப்பிக் கேட்டான். “ஹா, அதற்கெனக் குறிப்பிட்ட இடம் எல்லாம் இல்லை. தகுதி வாய்ந்த ஸ்ரோத்திரியர்களின் மனதிலிருந்து வாய் வழியாகவே வெளியே வரும். அது எழுதிப் படிப்பதில்லை. எங்கும் படிக்க முடியாது. கண்டறிய வேண்டிய ஒன்று. நீ கொன்றாயே ஆசாரிய கௌதமர், அவரைப்போன்ற பல ஸ்ரோத்திரியர்களால் தினம் தினம் ஓதப்படுவது!” என்றார் த்வைபாயனர்.

“ஓஹோ, ஸ்ரோத்திரியர்களின் வாயிலா குடி இருக்கிறது? அப்படி எனில் உன் வாயிலும் அது குடி இருந்தாக வேண்டுமே?” என்று கேலியாகக் கேட்டான் மோசா. “அப்படித் தான் நான் நினைக்கிறேன்.” என்றார் த்வைபாயனர். “எங்கே, உன் வாயைத் திற்ந்து சொல், பார்க்கலாம்!” என்றான் மோசா. “ஹா, அதை அப்படி எல்லாம் எளிதில் கேட்க முடியாது! முதலில் நீ சுத்தமாக, இல்லை, இல்லை, புனிதமானவனாக இருக்க வேண்டும். உன்னுடைய இந்தக் கொலை வெறியை எல்லாம் அடக்கிக் கொண்டு சாந்தமாக இருக்க வேண்டும்.”

No comments: