Friday, September 16, 2016

த்வைபாயனர் பெற்ற பரிசு!

விரைவில் கோதுலி ஆசிரமம் புதியதொரு முகத்தைப் பெற்றது. அங்கிருந்த சுற்றுவட்டாரத்து அனைத்து கிராமங்கள், நதிக்கரையோர ஆசிரமங்கள், ரிஷிகள் வாழும் வனங்கள், மற்றக் குடியிருப்புக்கள் ஆகியவற்றின் மையமாக விளங்கி அனைவரையும் கவர்ந்து இழுத்தது. ஆண்களும் பெண்களும் அங்கே கூட்டம் கூட்டமாக வந்தனர். பராசர முனிவரின் உடலை எரித்த இடத்தினருகில் இருக்கும் நதிக்கரையில் புண்ணிய ஸ்நானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். பின்னர் ஆசிரமத்தினுள்ளே சென்று த்வைபாயனரைத் தரிசித்து அங்குள்ள யாக குண்டத்துப் புனித அக்னியையும் வணங்கித் தங்கள் ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான்களின் தோலைச் சுத்தம் செய்து அங்கே வியாசரிடம் கொடுத்து அங்குள்ள ஸ்ரோத்திரியர்களின் பயன்பட்டுக்கெனப் பரிசளித்துத் தங்களுக்கென வந்திருக்கும் நோய்களுக்கான மருந்துகளையும் ஆசாரியரின் ஆசிகளையும் பெற்றுச் சென்றனர்.

ஆசிரமத்தைப் புனிதப்படுத்துவதற்கென த்வைபாயனர் மேற்கொண்ட யாகங்களில் அங்குள்ள ஸ்ரோத்திரியர்களும் அக்கம்பக்கமிருந்து வந்தவர்களும் பங்கு பெற்று உற்சாகம் அடைந்தனர். ஆரியர்கள் அனைவரும் தங்கள் தங்கள் குழுக்களோடும் குழுவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களோடும் அங்கே வந்து  த்வைபாயனருக்கும் ஆசிரமவாசிகளுக்கும் தங்களால் இயன்ற பரிசளித்துச் சென்றனர். தனக்குக் கிடைத்த பரிசுகளை த்வைபாயனர் தனக்கெனத் தனியே வைத்துக் கொள்ளாமல் ஆசிரமவாசிகளுக்கும், காட்டுவாசிகளுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுத்ததோடு அல்லாமல் ஷார்மிக்கும் தன்னால் இயன்ற உதவியைச் செய்தார். ஆனால் ஷார்மியோ அங்குள்ளவற்றைக் கண்டு கோபமே கொண்டாள். ஆசிரமத்துவாசிகளுக்காகவும், அங்குள்ள ஆசிரமப் பெண்களுக்காகவும் என த்வைபாயனர் ஒதுக்கிய உணவு போதுமானதாக இல்லை. ஆகவே தனக்குள்ளாகச் சத்தமாக முணுமுணுத்துக் கொள்வாள். அவர்கள் நிறையச் சாப்பிடுவதாக த்வைபாயனர் எண்ணிக் கொள்கிறார் என்பது அவள் கருத்து. ஆனால் த்வைபாயனரோ தன்னளவில் மிகவும் அக்ட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்தார். மூன்று நாட்களுக்கு மட்டுமே ஆன உணவுப் பொருளை மட்டுமே சேமிக்கும்படி அங்குள்ள ஸ்ரோத்திரியர்களைக் கட்டாயப்படுத்தினார். அவர்களுக்காகவே த்வைபாயனர் தானும் ஓர் தவ வாழ்க்கையை மேற்கொண்டு வேத சம்ரக்‌ஷணம் செய்து அது ஓர் தெய்விகம் என்பதை நிலைநாட்டி வந்தார்.

ஒருமுறை விடிகாலையில் யமுனை நதியில் முழங்கால் அளவுத் தண்ணீரில் நின்று கொண்டு அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்த த்வைபாயனருக்கு திடீரென ஷார்மியும் காட்டுவாசிப் பெண்களும் மோசாவின் கொடூரத்திலிருந்து அதிசயித்தக்கவிதத்தில் தப்பியது குறித்த சிந்தனை தோன்றியது. அப்படியே தான் தப்பியதும் எவ்வளவு பெரிய அதிசயம் என்பதையும் அவர் உணர்ந்தார். அந்தக் கொடூரமான மோசா திடீரெனத் தன்னைத் தானே குத்திக் கொண்டு இறந்ததையும் குறித்து சிந்தித்தார். நிமிர்ந்து விண்ணைப் பார்த்தார். வானம் வெளுக்கத் தொடங்கி இருந்தது. அதிகாலையில் தோன்றும் விடிவெள்ளி நீல நிறத்தில் சுடர் விட்டு ஒளிர்ந்தது.  அடிவானில் மேகங்கள்  கருநிறம் பெற்று அங்குமிங்கும் அலையத் தொடங்கின. அந்த அடர்ந்த கருமேகத் திரளின் இடையிலிருந்து திடீரென அவருக்கு ஓர் மின்னல் கீற்றுப் போன்ற எண்ணம் தோன்றியது. மின்னலே மின்னி மறைந்தது போல் உணர்ந்தார். அதன் முக்கியத்துவம் அவருக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது.

அது அவர் தினமும் வணங்கும் சூரியபகவானிடமிருந்து அவருக்குக் கிடைத்திருக்கும் செய்தி. மிகவும் அடக்கத்துடனும், பணிவுடனும், விநயத்துடனும் அவர் சூரியனுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லத்தொடங்கினார். ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் |
இந்த பூலோகம், மேலோகம், சுவர்கம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் மேம்பட்ட சக்தி எதுவோ அந்தப் பரம ஜோதியான சக்தியை நாம் தியானிப்போம். அதன் மூலம் நம் புத்திக்கும் வெளிச்சம் கிட்டட்டும்!
(இது குறிப்பாக பூமி, விண், சுவர்கம் என்பதைக் குறிப்பதாக இருந்தாலும் நம்மிடையேயும் அகத்திலும் புறத்திலும் இம்மூன்றும் இருக்கிறதால் இதை தியானிப்பதன் மூலம் நமக்கு ஞானமாகிய வெளிச்சம் கிட்டவேண்டும் என்பதே பொருள்! நம்மிடையே உள்ள மூவகைக்குணங்களையே அவை சுட்டுகின்றன. இம்மூன்று வகைக் குணங்களில் எந்த குணத்தின் தாக்கத்தில் நாம் இருந்தாலும் இந்த மந்திரத்தை தியானிப்பதன் மூலம் கருத்தை உணருவதன் மூலம் நாம் பரிபக்குவத்தைப் பெறலாம் என்பதே ஆகும்.)

சரி, நாம் இப்போது வியாசரைக் கவனிப்போம். வியாசர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இருளிலிருந்து விலகி வெளிச்சத்துக்கு வந்தது உலகு. மிகக் கம்பீரமாக உருக்கிய தங்க உருண்டை போல் மெல்ல மெல்ல மேலெழுந்தான் சூரிய பகவான். சுற்றிலும் பொன் வண்ணக் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு அந்தக் கருமேகங்களிடையே அவன் எழுந்தது மிக அரிய காட்சியாக இருந்தது. தங்கமும், கருமையும் சேர்ந்த நிறத்தில் ஜ்வலித்தன மேகங்கள். சிருஷ்டியின் தத்துவத்தை அவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தார். அது பார்க்கப் போனால் மிக எளிமையானதாக இருந்தாலும் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும், புத்திக்கும் அப்பாற்பட்டது! எளிதில் விவரிக்க ஒண்ணாதது என்பதைப் புரிந்து கொண்டார். அந்த ஒளியானது அவருடைய நாடி, நரம்புகளிலெல்லாம் புகுந்து கொண்டு அவருள் ஏற்படுத்திய புத்துணர்வை அவரால் உணர முடிந்தது. எல்லையற்ற ஆனந்தம்! அவர் காதுகளில் கடவுளின் கட்டளை போல் சில வார்த்தைகள் வந்து விழுந்தன! “இந்த பூமியை அனைவருக்கும் உரியதாய் அனைவருக்கும் ஏற்றதாய் புனிதமானதாய் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்ததாய் மாற்று! உனக்கு என் ஆசிகள்!”

தான் ஏதோ ஓர் புனிதமான சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தார் வியாசர். அவருக்கு முன்னால், பல ஆண்டுகள் முன்னால் இருந்த பழைய முனிவர்கள், ரிஷிகளுக்கெல்லாம் என்ன கொடுக்கப்பட்டதோ, அவர்கள் எதை தங்கள் தவத்தாலும் சீரிய வாழ்க்கையாலும் அடைந்தார்களோ அதை அவரும் இப்போது அடைந்து விட்டார் என்பது புரிந்தது. இங்குள்ள அனைத்தும் எல்லாக் கடவுளும், இந்த உலகும் உலகிலுள்ள அனைத்தும் சேர்ந்து ஒன்றே! அனைத்தும் பிரம்மமே என்பதை அவர் உணர்ந்து கொண்டார். சூரிய பகவானுக்கு மந்திரங்களை உச்சரித்தபடி அர்க்யம் விடுகையில் அவர் மனம் நன்றியிலும் முழுத் திருப்தியிலும் நிறைந்திருந்தது. அதன் பின்னர் கோதுலி ஆசிரமத்தின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்ந்து கொண்டார். நிகழ்பவை அனைத்தையும் அதன் போக்கில் நிகழவிட்டுவிட்டுத் தான் சும்மா இருப்பதே சரி என்பதைப் புரிந்து கொண்டார். அது தான் கடவுளின் ஆணை,. மேலும் ஒரு காரியம் நடப்பதும், நடக்காமல் இருப்பதும் அவர் கைகளில் இல்லை! மேலே உள்ளவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கோதுலி! அது ஓர் புனிதமான இடம். வெற்றிடம் போல் காணப்பட்டாலும் அங்கே தான் அவர் தந்தை அக்னிக்கடவுளால் வரவேற்கப்பட்டார். ஆண்களும், பெண்களும் அங்கே வந்து புனிதமான தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டு தங்கள் வழிபாடுகளின் மூலம் அவரவர் கடைப்பிடிக்கவேண்டிய சிருஷ்டி தர்மத்தின் அவசியத்தையும் உணர்ந்து கொள்கின்றனர்.

மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன. த்வைபாயனர் மட்டுமின்றி ஆசிரமவாசிகள் அனைவருமே ஜாபாலியாவான வாடிகாவின் வரவுக்குக் காத்திருந்தனர். மூன்று, நான்கு வாரங்கள் சென்றபின்னர் தொலை தூரத்தில் நதியின் அடிவாரத்தில் அரசப் படகுகள் வரும் சுவடு தெரிய ஆரம்பித்தது. அனைவரும் ஆவலுடன் பார்த்தனர். ஒன்றல்ல மூன்று அரசப் படகுகள் வந்து கொண்டிருந்தன. ஷார்மி ஆவல் தாங்க முடியாமல் நதிக்கரைக்குச் சென்று தன் கூரிய கண்களால் அனைவரையும் அடையாளம் காண ஆரம்பித்தாள். பின்னர் கத்தினாள். “அதோ, ஜாபாலியா! அவள் மட்டும் வரவில்லை. அவளுடன் மஹாராணி சத்யவதியும் காசி தேசத்து அரசகுமாரிகளும் கூட வந்திருக்கின்றனர். ஆஹா, எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்! அவர்கள் அனைவரையும் தக்க மரியாதையுடன் வரவேற்க வேண்டும்!” என்று அவசரப் படுத்தினாள் ஷார்மி.

அனைவரும் அங்கே நதிக்கரைக்குக் கூடி வருபவர்களை உற்சாகத்துடனும் கொண்டாட்டங்களுடனும் வரவேற்கத் தயாரானார்கள். பின்னர் தங்கள் தலைகளில் தண்ணீர்ப்பானைகளுடன் பெண்களும் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் ஆண்களும் ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள். த்வைபாயனர் மீண்டும் தன் பயணங்களைத் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தார். அதற்குள்ளாக ஆசிரமத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும் என்பதிலும் முனைப்பாக இருந்தார். முதலில் ஷார்மியுடன் தப்பி வந்த பழங்குடிப் பெண்களின் பிரச்னை தலை தூக்கியது. அதன் பின்னர் தீர்த்தத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற பிரச்னை! நல்லதொரு பெயராக வைத்தால் தான் அது யாத்ரிகர்களை அங்கே வரவைக்கும். எல்லாவற்றிலும் முக்கியமானதும் சிரமமானதுமாக சுகரின் பிடிவாதம் இருந்தது. அவர் தனக்கென ஓர் இல்லறத்தை அமைத்துக்கொள்ள முற்றிலும் மறுத்து வந்தார்.

பழங்குடிப் பெண்களில் பலரும் திரும்பத் தங்கள் பழைய வாழ்க்கைக்குப்போக விரும்பவில்லை. ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய விரும்பினார்கள். ஆம், உலகில் அனைவரும் ஒன்று போலவே படைக்கப்பட்டிருக்கின்றனர். இது தான் அன்று சூரியபகவானிடமிருந்து ஆசாரியருக்குக் கிடைத்த செய்தியில் முக்கியமானது. ஆகவே இவர்களைப் பழங்குடியினர் என்று கருதாமல் ஆசிரமவாசிகளுடன் கலந்து வாழவும் அனைவரும் ஒரே விதமான குலத்தையும் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கடவுள் ஒருவரே எனில் ஆண்களும் பெண்களும் கூட அப்படியே! அனைவருமே ஒருவர் தான். அவ்வளவு ஏன்? த்வைபாயனரின் தாய், மஹாராணி சத்யவதி ஆரியக் குலத்தில் பிறக்கவே இல்லை. ஆனால் அவள் மிகவும் மகத்தானவளாகவும் அர்ப்பணிப்பு உணர்வுள்ளவளாகவும் இருந்தாள். ஆகவே ஓர் ஆரிய அரசனைத் திருமணம் செய்து கொண்டு இன்று மஹாராணியாக அனைவரும் வணங்கும் இடத்தில் இருக்கிறாள். அதே போல் தான் ஷார்மி அன்னையும். அவள் ஓர் பழங்குடிப் பெண். ஆனால் ஆசாரிய கௌதமரைத் திருமணம் செய்து கொண்டு அவருக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தாள். ஆரியப் பெண்களில் சிலரே அவளைப் போல் புனிதமாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் காணப்படுவார்கள். எந்த விதத்தில அவள் குறைந்து விட்டாள்?