Monday, September 12, 2016

கோயிலுக்குள்ளே மோசா!

க்ருபாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுக்கு பாலமுனியைச் சிறு வயதிலிருந்தே தெரியும். அவரை மிகவும் நேசித்தான். அதோடு அவர் வளர வளர அவரின் நேர்மையான செயல்களால் அடைந்து வந்த நற்பெயரும் அவனைக் கவர்ந்திருந்தது. மேலும் இப்போது கோதுலி ஆசிரமத்திற்கு வந்த அவரால் தங்கள் பழங்குடியினரிடையே ஏற்பட்ட அதிசயிக்கத் தக்க மாற்றங்களால் த்வைபாயனரின் செல்வாக்கை அவனால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. யமுனைக்கரை முழுவதிலும் த்வைபாயனரால் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் நன்கு அறிந்திருந்தான். இப்போது மோசாவின் தாக்குதல்களிலிருந்து தங்களை விடுவித்ததோடு அல்லாமல் வாழ்நாள் முழுவதும் கெடுதலையே செய்து கொண்டிருந்த மோசாவின் கடவுளின் சந்நிதிக்கு அழைத்து அவரால் தண்டனை பெறச் செய்ததும் அவனுக்கு வியப்பைத் தந்தது. ஆகவே இப்போது மோசா என்ன சொன்னாலும், சரி, அல்லது தங்கள் குலதெய்வமான மஹிஷாசுரனின் கோபத்துக்கே தான் ஆளானாலும் சரி, பாலமுனியை மஹிஷன் கோயிலுக்குள்ளே அழைத்துச் என்றே ஆகவேண்டும். வேறு வழியில்லை.

க்ருபா அங்கேயே சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தன் குலத்து முதியோர்களிடம் சென்றான், அவர்களுக்கும் பாலமுனியைப் பார்த்து வியப்புத் தான். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்றவர் அதை மாற்றி அப்படியே மோசாவின் மேல் திருப்பியதோடு அல்லாமல் கடவுளரின் கோபத்துக்கும் அவனை ஆளாக்கி விட்டாரே! ஆகவே அவர்கள் இப்போது க்ருபா பாலமுனியை அழைத்துச் செல்வது குறித்துக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டனர். க்ருபாவும் பாலமுனியைத் திரும்பிப் பார்த்து அவருடைய குறுக்கீடுகளைத் தாங்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். அங்கே புதர்களைச் சேர்த்துக் கயிறுகளால் கட்டி மூடப்பட்டிருந்த வழியை க்ருபாவும் மற்றவர்களும் வில்லாளிகள் மற்றும் வீரர்கள் துணை கொண்டு அறுத்து எறிந்தனர். மூங்கில் கம்புகளால் ஆன சுவற்றை அடைந்தனர். கோயிலின் கதவுகள் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது.

த்வைபாயனர் மோசாவைக் குரல் கொடுத்து அழைத்துக் கோயில் கதவைத் திறக்கச் சொன்னார். உள்ளே இருந்து எவ்விதமான பதிலோ அல்லது யாரும் வந்து கதவைத் திறக்கவோ இல்லை! ஆகவே பாலமுனி வில்லாளிகளை அழைத்துக் கதவை உடைத்துத் திறக்கச் சொன்னார். குனிகரும் அதையே சொல்ல வீரர்கள் கதவுகளை உடைத்துத் திறந்தனர். உள்ளே திறந்தால் அவர்கள் கண்களுக்கு ஓர் விசித்திரமான காட்சி தென்பட்டது. ஓர் இளம் வயது எருமைக்கடா அங்கே முகத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தது. அதன் தேகம் கருநிறமாக பளபளவென்று காணப்பட்டது. அங்கிருந்த ஓர் கம்பத்தில் அது கட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே தரையில் அடிக்கப்பட்டிருந்த ஆப்புக்களில் அதன் கால்கள் நான்கும் நன்கு கட்டப்பட்டிருந்தன. அந்த எருமைக்கடாவுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்பது அடிக்கடி அது தன் உடலை உதறிக்கொண்டு விடுவித்துக்கொள்ள முயன்றதில் இருந்து தெரிந்தது.

அந்தப் பழங்குடியினரின் வழக்கப்படி மோசா பட்டம் ஏறும் முன்னர் வணங்கப்பட்டு வந்து கொண்டிருந்த வயதான எருமை மாட்டை பலி கொடுத்து விட்டு இந்த இளம் எருமைக்கடாவைப் புதிதாக கோயிலுக்கென்று விட்டிருந்தார்கள். இதை வணங்கி வந்தார்கள். இப்போது மோசா அந்தக் கோயிலின் சந்நிதிக்கு முன்னர் முழந்தாளிட்டு அமர்ந்த வண்ணம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். அவன் தலை பூமியில் கிடந்தது. அவனருகே ஓர் செம்பினால் ஆன குறுவாளும் மூன்று ஈட்டிகளும் காணப்பட்டன. ஈட்டிகளின் நுனிகள் பளபளவென்று கூர்மையாகக் காட்சி அளித்தது. மோசாவின் அருகே அந்தப் பழங்குடியினரின் மந்திரவாதி அமர்ந்திருந்தான். அவன் முகத்திலும் சிவப்பு வண்ணத்தைப் பூசி இருந்தான். தன் கண்களை மூடிக் கொண்டு ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டிருந்தான்.

அந்தக் காட்சியைக் கண்டதுமே மந்திரி குனிகர் தன் இடுப்பிலிருந்த அரைக்கச்சையிலிருந்து உடைவாளை எடுத்தார். அவர் கைகள் தன்னிச்சையாக இயங்கின. இதைப் புரிந்து கொண்ட த்வைபாயனர் மந்திரியைப் பார்த்து, “மந்திரி, தயவு செய்து இப்போது இவனைக் கொல்ல முயலவேண்டாம். இது கோயில், புனிதமான இடம்! இதைப் பலி கொடுக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். இது கொலைக்களம் அல்ல!” என்றார் கண்டிப்பான தொனியில்.  அதன் பின்னர் மோசாவைப் பார்த்துத் திரும்பினார். பின்னர் தன் வசீகரக் குரலில் அவனைப் பார்த்து, “வலிமையுள்ள தலைவா! எழுந்திரு! இப்படி எல்லாம் செய்து உன் மனைவியைத் திரும்பக் கொண்டு வர உன்னால் முடியாது. அவள் இப்போது கோதுலி ஆசிரமத்தில் ஷார்மி அன்னையுடன் சேர்ந்து ஆசிரமத்தைத் திரும்ப நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்.” என்றார். மோசா தன் தலையை வெடுக்கென்று திருப்பினான். த்வைபாயனரை எரிக்கும் கண்களுடன் பார்த்தான். “மோசக்காரா! சூழ்ச்சிக்காரா, வஞ்சகா! நீ தான் ஷார்மிக்கும் மற்றப் பெண்களுக்கும் தப்பிச் செல்ல வழி தேடிக் கொடுத்திருக்கிறாய்! ஷார்மி என் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றதன் மூலம் பரிகாரம் தேடிக்கொண்டு செய்ய முடியாத அளவுக்கு மாபெரும் பாவத்தைச் செய்திருக்கிறாள். ஹூம், இப்போது அவள், அந்த என் மனைவி, ஷார்மியுடன் சேர்ந்து கொண்டு நான் அழித்த அதே ஆசிரமத்தைத் திரும்பக் கட்டுகிறாளாமா?” கொஞ்சம் நிறுத்திக் கொண்ட மோசா தன் ஆத்திரத்தை ஓர் கட்டுக்குள் கொண்டு வந்தான். “ஏ, க்ருபா, நீ எனக்குக் கீழ்ப்படிந்தவன். என் குடிமக்களில் ஒருவன் நீ! இப்போது நீ உன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக நீ செய்த வாக்குறுதியை அடியோடு மறந்து விட்டாய்! நீ இங்குள்ள புனிதமான தெய்விக எருமைக் கடவுளை அவமதித்து விட்டாய்! அவருடைய கடுமையான தண்டனையும் கோபமும் உன் வாழ்நாள் முடியும் வரை உன்னைத் தொடரும்!” என்றான்.

“இந்தப் புனிதமான எருமைக் கடவுளால் நீ நின்று கொண்டிருக்கும் இந்த இடம் அப்படியே எரிந்து போய்விடும். இதோ, நம் மந்திரவாதி! என்ன செய்யப் போகிறார் என்று பார்! அவர் நம் எருமைக்கடவுளின் சாபத்தை வாங்கி இங்குள்ளவர்கள் மேல் செலுத்தப் போகிறார்.’ மோசா மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் குரலே புரியாத தன்மையில் குழறிக் குழறி வெளிவந்தது. நீண்ட பெருமுச்சுகள் வந்தன. அவன் கைகள் தானாகவே கீழே கிடந்த வாளைப் பற்றின. இங்கே க்ருபாவுக்கும் அவனுடன் வந்த மற்றப் பழங்குடியினருக்கும் எருமைக்கடவுளின் கோபமும், சாபமும் தங்களை வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று கேட்டதும் உடலே ஆட்டம் கண்டது. அவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினார்கள். அப்போது மோசா தன் கைகளை உயரே உயர்த்திய வண்ணம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.

“ஏ, புனிதமான எருமைக்கடவுளே! நான் உன்னுடைய அருமை மகன். உன்னுடைய கோபத்தையும்,சாபத்தையும் இங்குள்ளவர்களிடம் திருப்பிவிடு! இவர்களை அடியோடு அழித்துவிடு!” என்றவண்ணம் குறிப்பாக த்வைபாயன்ரைச் சுட்டிக் காட்டினான். “இதோ இவனை, இந்த முனிவனை இங்கே பூமியிலிருக்கும் உன்னை விட்டு விட்டு எங்கோ விண்ணில் இருப்பதாகச் சொல்லப்படும் கடவுளரைக் குறித்து எப்போதும் பேசுபவனை விடாதே! இவனும் ஓர் மந்திரவாதியே, சூழ்ச்சிக்காரனே!” என்று கத்திப் பிரார்த்தித்தான்.

அவர்கள் அனைவரும் காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அந்த இளம் எருமைக்கடா மட்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு குரல் கொடுத்தது. அதன் பின்னர் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு அங்குள்ள பசும்புற்களைச் சாப்பிடத் தொடங்கியது. அதற்குத் தான் வணங்கப்படுவது தெரிந்திருக்குமோ அதை அது நன்றாக அனுபவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது அதன் நடவடிக்கைகள்.

“மோசா, முட்டாள் தனமாக நடந்து கொள்ளாதே!” அன்பான குரலிலேயே ஆரம்பித்தார் த்வைபாயனர். “நீ ஓர் கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்! எவராலும் மன்னிக்க முடியாதது அது! நீ ஓர் அழகான ஆசிரமத்தையே முற்றிலும் எரித்ததோடு அல்லாமல் அங்கு பாடம் கற்பித்துக் கொடுத்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரையும் ஆசாரியர், அவர் குழந்தைகள் உள்பட கொன்றிருக்கிறாய். அவர்கள் யாரேனும் உனக்குத்தீங்கு ஏதும் செய்தார்களா! அனைவரும் குற்றமற்றவர்கள். இதோ பார்! நான் உன்னை என் நண்பனாக்கிக் கொள்ளவே விரும்புகிறேன். என்னால் முடிந்த உதவியையும் உனக்குச் செய்வேன். உனக்கோ உன் குலத்து மக்களுக்கோ எங்களாலோ மற்றவர்களாலோ எவ்விதத் தீங்கும் ஏற்படக் கூடாது என்பதே என் எண்ணம்!” என்றார் த்வைபாயனர்.

மந்திரி குனிகருக்குத் தன் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் அவசரம் அதிகமாகக் காணப்பட்டது. ஆகவே அவர் த்வைபாயனரின் பேச்சில் குறுக்கிட்டார்;” பரத வம்சத்துச் சிறந்த இளவரசர்களின் ஒருவரும் குரு வம்சத்தின் பயங்கரமான சபதங்களைப்போட்ட பீஷ்மர் என்னும் காங்கேயன் மோசாவை எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்னும் அதிகாரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்!” என்றார் அவசரம் அவசரமாக.  மோசாவின் முகம் கோபத்தில் கொதித்தது. மந்திரியைப் பார்த்துத் திரும்பினான். “நீ என்னைத் தண்டிக்க முடியாது, மந்திரி! என்னைத் தண்டிக்க நினைத்தாயானால் எங்கள் எருமைக்கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார்! இங்கிருந்து அகன்று செல்!” என்று கூச்சலிட்டான்.