Wednesday, August 31, 2016

கோதுலி ஆசிரமம் எரிக்கப்பட்டது!

அரண்மனைப் படகுகளுடனும் தக்க ஆட்களுடனும் சென்ற மந்திரி குனிகருக்கு த்வைபாயனரைக் கண்டு பிடிப்பது கஷ்டமாக இல்லை. எந்த ஆசிரமத்துக்குச் சென்றாலும் அங்குள்ளவர்கள் அவர் வந்து சென்றதையும் அடுத்து இந்த ஆசிரமம் சென்றார் எனவும் தகவல்கள் கொடுத்தனர். அரண்மனைப் படகும் இருபது திறமை வாய்ந்த படகோட்டிகளால் செலுத்தப்பட்டது. வேகமாகச் சென்ற  அது விரைவில் த்வைபாயனரைக் கண்டு பிடித்தும் விட்டது. அவரைக் கண்ட மந்திரி குனிகர் சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பின்னர் அவரிடம் ராஜமாதாவின் செய்தியையும் வாடிகாவின் செய்தியையும் தெரிவித்தார். ராஜமாதாவின் செய்திக்காக மகிழ்ச்சியுறுவதாகக் கூறிய த்வைபாயனர் மேலும் தொடர்ந்து, “நாளை மறுநாள் நாம் கோதுலியை அடைந்து விடுவோம். சில மாதங்கள் முன்னர் நான் சுகனை அங்கே பார்த்தேன். ஆசாரிய கௌதமர் அவனைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவன் இன்னமும் அங்கே தான் இருப்பான் என நம்புகிறேன்.” என்றார். அதற்குக் குனிகர்,
“மாட்சிமை பொருந்திய மஹாராணியும், மரியாதைக்குரிய வாடிகா அம்மையாரும் சுகர் விரைவில் தனக்கென இல்லறத்தை அமைத்துக் கொண்டு வாழவேண்டும் என்று விரும்புகின்றனர்.” என்றார்.

“ஆம், எனக்கும் அதே எண்ணம் தான்! நானும் அப்படித் தான் நினைக்கிறேன்!” என்ற த்வைபாயனர் தொடர்ந்து, “பனிரண்டு வருட பிரமசரியமே ஒரு மனிதனுக்குப் போதுமானது! இயற்கைக்கும் உட்பட்டது! ஆனாலும் சுகனுக்கு இதில் வேறு மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் நாம் என்னவென்று ஆராய வேண்டும். சுகன் பொதுவில் நல்ல பையனே! ஆனாலும் அவன் தன் தாயின் கருத்திலிருந்து மாறுபட்டான் எனில் அதற்குத் தக்க காரணம் கட்டாயமாய் இருக்கும்!” என்றார். தொடர்ந்து அரண்மனைப் படகு வேகமாய்ச் செலுத்தப்பட த்வைபாயனரின் படகையோ கயிறு கட்டி இழுக்க வேண்டி இருந்தது, அனைவரும் சாம்பல் பள்ளத்தாக்குக்கு வந்து சேர்ந்தனர். அந்த சபிக்கப்பட்ட பகுதியில் படகோட்டிகள் தங்கள் படகுகளை நிறுத்துவதில்லை. அங்கே சாபம் காரணமாகப் படகுகளுக்கு விபத்தோ அல்லது பேரழிவோ ஏற்படும் என்ற பொதுவானதொரு நம்பிக்கை பரவி இருந்தது. ஆகவே மறுகரைக்குப் படகுகளை ஓட்டிச் சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து திரும்பி சாம்பல் பிரதேசத்துக்கு அருகே வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து கோதுலிக்கும் வந்து சேர்ந்தனர். கோதுலியில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஓர் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. பார்க்கவே அது பயங்கரமாக இருந்தது. அந்தக் காட்டில் குடியிருந்த காட்டுவாசிகள் தங்கள் கைகளில் விற்களையும், அம்புகளையும் ஏந்தியவண்ணம் இருந்ததோடு இன்னும் சிலர் கைகளில் ஈட்டிகளும், மூங்கிலில் இருந்து வெட்டப்பட்ட கூரிய கம்புகளும் காட்சி அளித்தன. அனைவரும் அங்கிருந்த ஆசிரமப் பகுதியைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஆசிரமம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருந்தது. முற்றிலும் எரிக்கப்பட்டிருந்தது. ஆசிரமக் குடிசைகளில் இருந்த சில மரங்கள் இன்னமும் எரிந்து கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த ஒரு மிருகத்தைத் தார்க்கோல் கொண்டும் அம்புகளைக் கொண்டும் அந்தக் காட்டுவாசிகள் குத்திக் கொண்டிருந்தனர். ஆசிரமவாசிகள் அங்கே இருப்பதற்கான அடையாளங்களோ, இருந்ததற்கான அடையாளங்களோ தெரியவே இல்லை!

த்வைபாயனருக்குப் பல வருடங்களாக வாடிக்கையாகப் படகு ஓட்டும் க்ரிவி என்பான் அவரைப் பார்த்து, “பாலமுனி! இது என்னமோ விசித்திரமாக இருக்கிறதே!” என்று ரகசியமாக முணுமுணுத்தான். பின்னர் மீண்டும், “ஏழெட்டு நாட்களுக்கு முன்னர் நான் கோதுலியைக் கடந்து வந்தபோது ஆசிரமங்கள் எல்லாமே நன்றாகவே நடந்து கொண்டிருந்தன. மஹரிஷி கௌதமர் கூட எங்களை அழைத்து உணவு உண்டுவிட்டுச் செல்லும்படி கூறினார். இது ஒரு வேளை இந்தக் காட்டுவாசிகளின் புதிய தலைவன் மோசா என்பவனின் வேலையாக இருக்கலாம். “ என்று மரியாதையுடனும், அதே சமயம் பல வருடப் பழக்கத்தின் உரிமையோடும் கூறினான். “நீ எப்போது பார்த்தாய் இந்தப் புதிய தலைவனை? பழைய தலைவன் ப்ரோப்பா இறந்து விட்டான் என்பது உனக்கு எப்போது தெரியும்? மோசா புதிய தலைவனாகி விட்டான் என்பதையும் நீ அறிவாயா?” என்று கேட்டார் த்வைபாயனர்.

“நாங்கள் அப்போது ஆசிரமத்தில் தங்கி விட்டுப் பின்னர் மீண்டும் கிளம்பியபோது இது பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன.” என்றான் க்ரிவி. “ம்ம்ம்ம், எனக்கும் ஓரளவு தெரியும்! ப்ரோப்பாவுக்கும் அவன் மகனுக்கும் அவ்வளவாக ஒத்துக்கொள்ளவில்லை என்றும் மோசாவுக்கு ஆசிரமங்கள் மேல் அளவு கடந்த வெறுப்பு என்பதையும் நானும் அறிவேன்.  ஆனால் ஆசாரிய கௌதமர் மோசா காட்டுவாசிகளின் தலைவனாக ஆனாலும் தன்னால் அவனை நல்வழிக்குத் திருப்ப முடியும்; அவனை மாற்ற இயலும் என்று நம்பினார். ஹூம்! அவர் மிக மிக நல்லவராக இருந்து விட்டார். அதனால் தான் மோசா போன்றவர்களை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை!” என்றார் த்வைபாயனர் துயரத்துடன்.

“மோசா அடிப்படையில் நல்லவனாக இருக்கக் கூடும். பாலமுனி, பழைய தலைவனைப்பிடிக்காத ஓர் கூட்டத்திடம் அவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் இப்படி!” என்றான் க்ரிவி! “எப்படியோ இருக்கட்டுமே! ஆசிரமங்கள் என்ன செய்தன? மோசா ஏன் ஆசிரமங்களின் மேல் தாக்குதல் நடத்த வேண்டும்? அதுதான் எனக்குப் புரியவில்லை! ஆசிரமங்கள் இங்கே இருந்ததால் என்ன கெடுதல்கள் வந்துவிட்டன! நன்மையே நடந்து வந்திருக்கிறது. பெருமளவு வன்முறைக் குற்றங்கள் குறைந்து காட்டுவாசிப் பெண்கள் இப்போது சந்தோஷமாக இருந்து வந்திருக்கிறார்கள்.” என்றார்.

“ஓ, அது ஒன்றும் இல்லை, பாலமுனி! இந்தக் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு அவர்களின் பெண்களோ, அக்கா, தங்கைகளோ ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வது பிடிக்கவில்லை. ஆனால் காட்டுவாசிப் பெண்களோ ஷார்மி அம்மாவின் தூண்டுதலாலும் அவர்களின் ஆலோசனைப்படியும் ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்டு கௌரவமான வாழ்க்கை வாழவே நினைக்கின்றனர்.”  “சரிதான், இப்போது எனக்கும் எல்லாம் புரிகிறது!” என்றார் த்வைபாயனர்.

“ஆசிரமங்களை எரிப்பது தான் அவன் தன் முக்கியமான வேலையாகவும், முதல் வேலையாகவும் வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவன் ஆசாரிய கௌதமரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் கொன்றிருக்கலாம். அவன் மிகவும் கொடூரமானவன். கொடுமைக்காரன். நீங்கள் அங்கே உள்ளே செல்வது உசிதமே அல்ல. உங்களை அங்கே செல்லவேண்டாம் என்றே நான் எச்சரிக்கிறேன்.” என்றான் க்ரிவி. அப்போது அங்கே வந்து சேர்ந்த மந்திரி குனிகரும் அனைத்தையும் கேட்டுவிட்டு த்வைபாயனரை அங்கே செல்லவேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் த்வைபாயனர் மறுத்தார்.

“இல்லை, குனிகரே! இல்லை! நாம் ஆசாரியர் கௌதமருக்கும் மற்ற ஆசிரமவாசிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்தே ஆகவேண்டும். ஆசாரிய கௌதமர் தான் என்னைத் தந்தை போலவும் ஷார்மி அம்மை என்னைத் தனது புத்திரன் போலவும் நடத்தினார்கள். எனக்குப் பனிரண்டு வருடம் அனைத்தையும் கற்பித்த குரு ஆசாரிய கௌதமர். ஒருவேளை சுகனும் அங்கே அவர்களுடன் இருந்திருந்தால்?” என்றார் த்வைபாயனர். “ஆம், ஐயா! அப்படி நடந்திருக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அந்த மோசா ஆசிரமத்தை முழுதும் எரிக்கும் முன்னர் அனைவரையும் கொன்றிருப்பான்.”

“ஷார்மி அன்னைக்கும் மற்ற ஆசிரமப் பெண்மணிகளுக்கும் என்ன நடந்திருக்கும்?” த்வைபாயனர் கவலையுடன் கேட்டார். “அவர்களை இந்தக் காட்டுவாசிகள் வசிக்குமிடத்துக்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். அல்லது அந்தப் பெண்களாகத் தப்பி சாம்பல் பிரதேசத்துக்குள் புகுந்திருக்கலாம்!” என்று க்ரிவி சொன்னான்.  த்வைபாயனர் அப்போது குனிகரைப் பார்த்து, “ஒரு வேண்டுகோள், குனிகரே! என்னுடைய மாணாக்கர்களை எல்லாம் உங்கள் படகில் ஏற்றிக்கொள்ளுங்கள். இதோ இந்தக் க்ரிவியும் இந்தக் காட்டுவாசிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான். மோசாவுக்கு உறவினனும் கூட! ஆனாலும் அவனும் அவனுடைய ஆட்களும் என்னிடம் பூரணமாக விசுவாசத்துடன் நடந்து கொள்கின்றனர். ஆகவே அவர்கள் என்னை அந்தக் கரைக்கு அழைத்துச் செல்லட்டும்!” என்றார் த்வைபாயனர்.

“நீங்கள் தனியாகச் சென்றே ஆகவேண்டுமா? ஐயா, இரண்டு வில்லாளிகளை மட்டுமாவது உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்!” என்றார் குனிகர் அப்போது. “இல்லை, குனிகரே, வேண்டாம். நான் ஆயுதம் தரித்த வில்லாளிகளுடன் அங்கே வருவதைப் பார்த்தால், அந்தக் காட்டுவாசிகளின் தலைவன் அங்கே சிறைப்பட்டிருக்கும் நம் ஆட்களின் தொண்டையை அறுத்து அவர்களைக் கொன்றாலும் கொல்லலாம்.” என்றார் த்வைபாயனர் கவலையுடன்.

“ஆனால், ஐயா, உங்கள் உயிர்? அது மிகவும் விலை மதிப்பற்றது! நீங்கள் தர்மத்தின் பாதுகாவலர்! தர்ம சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தும் சிற்பி நீங்கள்!” என்றார் குனிகர்.

Monday, August 29, 2016

குனிகர் கிளம்பி விட்டார்!

வாடிகாவைத் தன் மாளிகை வாசலுக்கே சென்று வரவேற்றாள் ராஜமாதா. வாடிகாவும் தன் மாமியாரின் கால்களில் விழுந்து வணங்கினாள். ராணிமாதா அவளைத் தூக்கி அணைத்து உச்சி முகர்ந்து ஆசிகள் கூறினாள். அவள் தொட்டவிதமே வாடிகாவின் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. வயது ஆகி விட்டிருந்தாலும், அடுத்தடுத்துப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்திருந்த போதும், ராஜமாதாவின் அழகு குறையவே இல்லை. வயதும், இயல்பான கம்பீரமும் மேலும் அவளுக்கு அழகையே கொடுத்தது. அனைவரையும் அன்புடனும், கருணையுடனும் அவள் நடத்தி வந்த காரணத்தால் அனைவருமே அவள் இதயத்தில் தாங்கள் பங்கு கொண்டிருப்பதாக உணர்ந்தார்கள். இப்போது வாடிகாவைக் கட்டி அணைத்துக் கொண்ட ராஜமாதா அவளைப் பாதுகாப்பவள் போல் அவள் தோள்களைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுக் கொண்டாள். அவள் தினமும் மதியப் பொழுதைக் கழிக்கும் அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள். செல்லும்போதே, “வாடிகா, என்ன விஷயம்?” என்றும் கேட்டாள்.
“சுகன் திரும்பி வரவே இல்லை, அம்மா! அவனுடைய குருகுல வாசம் போன வருடமே முடிந்து விட்டது. போன வருடம் முழுவதும் அவனுக்காக நான் காத்திருந்தேன். திரும்பி வந்து தனக்கென ஓர் இல்லறத்தை ஏற்படுத்திக் கொள்வான் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு காரணங்களையும் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு அவன் திரும்பவே இல்லை! இப்போது கோதுலியிலிருந்து வந்திருப்பவர்கள் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் சுகனுக்கு இல்லறம் ஏற்பதில் விருப்பம் இல்லை; அவன் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகப் போகப் போகிறானாம்!” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் வாடிகா. “இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது?” என்று ராஜமாதா கேட்டாள். “அங்கிருந்து வந்த சில ஸ்ரோத்திரியர்கள் தான் கூறினர். அவர்கள் கோதுலியில் படிப்பை முடித்துக் கொண்டு தர்மக்ஷேத்திரம் வந்திருக்கின்றனர்.” என்றாள் வாடிகா.

“அப்படியா? ஆனால் அவன் உனக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறானா? தர்மக்ஷேத்திரத்துக்குத் தன்னால் வர முடியவில்லை என்பதை அவன் உன்னிடம் தெரிவிக்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறானா?”

“இல்லை, அம்மா! நான் தான் அவனுக்குப் பல செய்திகளை அடுத்தடுத்து அனுப்பினேன். அவற்றில் எதற்கும் பதிலே இல்லை! அவன் வரவும் இல்லை! அவனுடைய பதில் இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும்: “அம்மா, நீ கவலைப்படாதே! மனம் வெறுத்துப் போகாதே! சரியான நேரத்தில் நான் வந்து சேருவேன்!” இப்படித் தான் அவன் பதில் கொடுத்திருக்க வேண்டும். அம்மா, நான் என்ன செய்வேன்? சுகன் திரும்பி வரவில்லை என்றாலோ அவன் இவ்வுலகைத் துறந்து சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டாலோ அதன் மூலம் பேராபத்து ஏற்படும். பேரிடர் சம்பவிக்கும்!” என்றாள் வாடிகா.

“ஹூம்! எல்லாம் இந்தக் கெட்ட கிரஹங்களின் வேலை! நம் குடும்பத்தில் அனைவரின் வாழ்க்கையையும் அந்த கிரஹங்களே ஆக்கிரமித்துக் கொண்டு கெடுதலையே செய்து வருகின்றன. இப்போது பார்! இங்கே ஒரு பேரன் பிறவிக்குருடாகப் பிறந்திருக்கிறான். இன்னொருவனோ ரத்தசோகை பிடித்தவனாக பலஹீனமானவனாக எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கும் என்று தோன்றும்படியாகப் பிறந்துள்ளான். எல்லாம் நன்கு அமைந்த இந்தப் பேரனோ உலகைத் துறப்பேன் என்கிறான்! என் அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது!:” என்றாள் ராஜமாதா துக்கத்துடன். அதற்கு வாடிகா, “தாயே, விரைவில் அவன் திரும்பி வர ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள். இங்கு மட்டும் அவன் வந்துவிட்டால் போதும். அவனுக்குத் தக்கதொரு இல்வாழ்க்கையை நாம் அமைத்துக் கொடுத்துவிடலாம். ஒரு நல்ல மனைவி இல்லாமல் அவளுடன் சேர்ந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தாமல் அவன் வாழ்க்கை எப்படிப் பூர்த்தி அடையும்!” என்றும் கூறினாள் வாடிகா.

“ஆம், மகளே, நீ கூறுவது உண்மைதான். உன் கருத்துகளோடு நான் ஒத்துப் போகிறேன். விரைவில் த்வைபாயனனைக் கண்டு பிடிப்போம். ஆசிரமங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருக்கும் அவனைக் கூப்பிட்டு சுகனைக் குறித்துச் சொல்லி விரைவில் அவனைக் கொண்டு சுகனுக்கு அறிவுரைகள் கூறச் செய்வோம். த்வைபாயனன் சுகனைச் சம்மதிக்க வைப்பான். ஹஸ்தினாபுரத்துக்கே வரவழைப்போம். ஒரு முறை இங்கே அவன் வந்துவிட்டான் எனில் பின்னர் அவனால் சந்நியாச வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. இத்தகைய முட்டாள் தனமான முடிவெடுத்ததற்காக அவன் வருந்துவான். அவனை இல்லறத்துக்குச் சம்மதிக்க வைப்பது மிக எளிது! அது சரி! த்வைபாயனன் இப்போது எங்கே இருப்பான் என்பதைக் குறித்து நீ ஏதும் அறிவாயா?” என்று கேட்டாள் ராணிமாதா!

“எங்கிருக்கிறார் என்பதை அறியேன், தாயே! ஆனால் சில நாட்கள் முன்னர் வந்த செய்தியின்படி, முனிவர் ஹஸ்தினாபுரம் திரும்புகிறார் என்றும் திரும்பும் வழியில் கோதுலிக்குச் சென்று சாம்பல் பிரதேசம் சென்று அவர் தந்தை பங்குமுனியை எரித்த இடத்துக்குச் சென்று தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு வருவதாகச் செய்தி வந்துள்ளது.”

ராஜமாதா வாடிகாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள். “அழாதே, குழந்தாய்! வாடிகா! அழாதே! விரைவில் த்வைபாயனனைக் கண்டு பிடிப்போம். அவன் வரும்போதே சுகன் எங்கிருக்கிறான் என்பதைப் பார்த்து அவனையும் கூட அழைத்துவரும்படி சொல்லுவோம். சுகனின் விருப்பத்தைக் குறித்து த்வைபாயனனிடம் கூறி சுகன் மனதை மாற்றி இல்லறத்தில் ஈடுபடத் தயார் செய்யுமாறும் கூறுவோம். தாவி, உடனே சென்று மந்திரி குனிகரை அழைத்து வா! த்வைபாயனன் எங்கிருப்பான் என்பதை அவர் கண்டு பிடித்து அவனிடம் செல்லுவார்.” என்றாள்.

“அம்மா, அம்மா, என் மனதில் மகிழ்ச்சியே இல்லை! நான் மிகச் சிறந்த கணவனை அடைந்தும் அவரோடு சேர்ந்து வாழமுடியவில்லை. அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுகிறார். அதே போல் என் மகனும் மிகச் சிறந்தவன்! புத்திசாலி, பெரிய ஞானி! பார்க்கவும் அழகாக இருக்கிறான். அனைவரிடமும் அன்பு செலுத்துவான். ஆனால் இத்தனை எல்லாம் இருந்தும் அவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் ருசி இல்லாமல் போய்விட்டதே!” என்று மனம் நொந்து போய் அழுதாள் வாடிகா! “கவலைப்படாதே, வாடிகா! அனைத்தையும் சரி செய்து விடலாம்!” என்றாள் ராணிமாதா. அதற்குள் மந்திரி குனிகர் வந்து விட்டார்.

“குனிகா, இங்கே வா! இப்படி அமர்!” என்று கட்டளையிட்ட ராஜமாதா வாடிகாவைப் பார்த்து, “அழாதே வாடிகா! குனிகன் மிகத் திறமை சாலி. சமயோசிதமாகச் செயல்படுவான். அவனிடம் ஓர் விஷயத்தை ஒப்படைத்து விட்டால் பின்னர் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எத்தகைய இக்கட்டாக இருந்தாலும் அதை எளிதில் தீர்த்துவிடுவான்! ” என்றாள் ராணிமாதா! குனிகர் தன் கைகளைக் கூப்பி ராணிமாதாவை வணங்கியவண்ணம், “என்னிடம் எத்தகைய காரியத்துக்கு சமயோசிதத்தையும் திறமையையும் எதிர்பார்க்கிறீர்கள் ராணிமாதா? உங்கள் மன விருப்பம் போல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு உங்கள் ஆசிகளுக்குக் காத்திருப்பேன்!” என்று மிகவும் வணக்கத்துடனும் ராஜதந்திரத்துடனும் கூறினார். ராஜமாதா அப்போதுள்ள சூழ்நிலையைக் குனிகருக்கு விரிவாக எடுத்துக் கூறினாள். “அந்தப் பையன் இங்கே வர மறுத்தான் எனில் அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?” என்றும் வினவினாள்.

“நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், ராணிமாதா! உங்களை நீங்களே துன்பத்தில் ஆழ்த்திக்கொள்ள வேண்டாம்.” என்றார் குனிகர். பின்னர் தொடர்ந்து, “அவன் இளைஞன். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். அவனை வேறு யாரோ இத்தகைய தகவல்களைச் சொல்லி ஆசை காட்டி அழைத்துச் சென்றிருக்கலாம். உங்கள் அனுமதி கிடைத்ததும், நான் காங்கேயரிடமும் அனுமதி பெற்று ஓர் படகைத் தக்க மனிதர்களுடன் ஏற்பாடு செய்து கொண்டு கோதுலிக்குக் கிளம்பிச் செல்கிறேன்.” என்றார்.

“ஆம், குனிகா! காங்கேயனிடம் சொல்! இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவனிடம் சொல்! அதிலும் நீயே நேரில் சென்று முனிவரையும் சுகனையும் பார்த்துப் பேசி வரவேண்டும் என்பது மிக முக்கியம் என்பதையும் காங்கேயனுக்கு உணர்த்து! எவ்வளவு விரைவில் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதையும் கூறு.” என்ற ராஜமாதா, வாடிகாவிடம் திரும்பி, “வாடிகா! உன் மனதைத் தளர விடாதே! நான் எல்லா விஷயங்களையும் விரைவில் சரியாக்குகிறேன். சில சமயங்களில் சிறிய விஷயங்களுக்குக் கூட நாம் பெரிய ஆபத்து வந்துவிட்டதாக நினைத்துப் பதறுகிறோம்! இதுவும் அப்படி ஒன்று தான். கவலைப்படாதே!” என்றாள்.

Sunday, August 28, 2016

சுகரைக் காணவில்லை!

ஒரு வழியாக ஷ்ரௌத்த சத்ரா முடிவடைந்தது. த்வைபாயனர் என்னும் வேத வியாசர் அடுத்த பனிரண்டு வருடங்களுக்காக ஓர் திட்டத்தைத் தயாரித்து விட்டார். ஆரியவர்த்தத்தில் உள்ள அனைத்து ஆசிரமங்களுக்கும் செல்வது என்றும் எங்கெல்லாம் வேதங்களில் சந்தேகங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றிற்குத் தெளிவைக் கொடுப்பதும், அங்குள்ள மாணாக்கர்களை வேதங்களில் நிபுணர்களாக ஆக்குவதும், நேர்மையான சாத்விகமான வாழ்க்கையை வாழப் பழக்குவதும், இந்த ஆசிரமங்கள் அவை உள்ள நாடுகளில் பிரக்கியாதி பெற்றுத் திகழ உதவுவதுமாக அவர் திட்டங்கள் பரந்து பட்டு விரிந்திருந்தது. மழை நாட்களில் மட்டும் அதிகம் அலைய முடியாது என்பதால் அப்போது தர்மக்ஷேத்திரம் திரும்பி அங்கே தங்கிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தார். (இது தான் இப்போதும் சாதுர்மாஸ்ய விரதம் என்னும் பெயரில் மழைக்காலங்களில் ரிஷி, முனிவர்கள் எங்கும் சுற்றாமல் ஓரிடத்தில் தங்கி விரதங்கள் அனுஷ்டிப்பதாக மாறி இருக்க வேண்டும்.) தன்னுடன் பத்து சீடர்களை அழைத்துக் கொண்ட த்வைபாயனர் மற்ற வேலைகளுக்காகவும் சிலரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டார். வழியிலும் சிலர் சேர்ந்தார்கள். அவர் பிரயாணம் தொடங்கி ஒவ்வொரு ஆசிரமமாகச் செல்ல ஆரம்பித்தது.

கங்கை, சரஸ்வதி, யமுனைக்கரைகளின் இரு பக்கமும் அவற்றின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரையிலும் வியாசர் தம் பயணத்தைச் செய்தார். ஆசிரமங்கள் பலவற்றுக்கும் சென்றனர். ஹரித்வார் என்றழைக்கப்பட்ட இடத்திலிருந்து காசி தேசம் வரையிலும் பயணம் செய்தனர். ஆங்காங்கே இருந்த குடியிருப்புகளுக்கும் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். உள்நாட்டுத் தலைவர்களும் அவர்களை வரவேற்றுத் தக்க மரியாதை செய்தனர். எங்கெல்லாம் வியாசர் சென்றாரோ அங்கெல்லாம் அவர் அனைத்டு ஸ்ரோத்திரியர்களாலும் ஆசாரியருக்கு உரிய மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவருடைய ஆசிகளால் தங்கள் தற்கால வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்பதோடு அடுத்த ஜன்மங்களுக்கும் அந்த ஆசிகள் தொடர்ந்து வரும் என்று எண்ணினார்கள் அனைவரும்.

ஆசிரமங்களில் தங்கி இருக்கையில் திரும்பத் திரும்ப வேதங்களை ஓதிக் கண்டறிந்து அவற்றில் விடுபட்டவைகளையும் தவறுகளையும் சரி செய்தார்கள். எது முன்னால் வரும், எது பின்னால் வரவேண்டும் என்பதையும் கண்டறிந்து வரிசைப்படுத்தி உச்சரிப்புகளை ஒழுங்கு படுத்திச் சின்ன ஏற்ற இறக்கங்களைக் கூடச் சரியாகச் சொல்லும்படி கற்பித்தார்கள். அதைத் தவிரவும் அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாகத் தவ வாழ்க்கையை முழு மனதுடன் ஏற்று வாழ்ந்தார்கள். தங்களுக்குள்ளாகத் தாமே நியமித்துக் கொண்ட எளிமையான வாழ்க்கை முறையுடன் வாழத் தொடங்கினார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பயிற்சிகளைப் பெற வரும் பிரமசாரிகள் தங்கள் உபநயனம் என்னும் மறுபிறப்பின் போது எத்தகைய சபதங்களையும் உறுதிமொழிகளையும் எடுத்துக் கொள்கின்றனரோ அவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க உதவிகளைச் செய்தார்கள். காயத்திரி மந்திரத்தை முழு மனதுடன் ஓதி சூரிய பகவானைத் தங்கள் நல்வாழ்வுக்கும் உலக க்ஷேமத்துக்குமாகப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். “மூவுலகையும் படைக்கக் காரணமாக இருந்த அந்த ஒளிக்கடவுளை நாங்கள் தியானிக்கிறோம். மேலான உள்ளுறை உண்மையை உணர்ந்து எங்கள் ஞானம் மேம்பட அந்த ஒளிக்கடவுள் உதவட்டும்!” என்ற பொதுவான பொருளில் தியானிக்கப்படும் அந்த மந்திரங்கள் அங்கே முழு புரிதலோடு அனைவராலும் ஒருங்கே உச்சரிக்கப்பட்டன. அவற்றின் ஒலி அளவைக் கொண்டே இந்த மந்திரம் இயற்றப்பட்டதாகவும் அதனால் காயத்ரி மந்திரம் என்னும் பெயர் பெற்றதாகவும் இதை விஸ்வாமித்திரரே கண்டறிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அக்கம்பக்கம் உள்ள கிராமவாசிகள் பலருக்கும் புனித அக்னியை வளர்ப்பது குறித்தும் அதை அணையாமல் பாதுகாப்பது குறித்தும் கற்பித்தனர். மந்திர வித்தைகள் மூலம் கிராமவாசிகளுக்கு வந்த பல்வேறு நோய்களைக் கண்டறிந்து மூலிகைப் பால் கொடுத்து குணப்படுத்தினார்கள். பெண்களிடம் குடும்பத்தைச் சரிவரப் பராமரிக்கவில்லை எனில் உலகில் துன்பங்கள் மிகுந்து விடும் என்பதை எடுத்துச் சொல்லி அவரவர் குடும்பத்தை அவரவர் சரிவரப் பேணிப் பாதுகாக்கவும் குழந்தைகளை நல்லொழுக்கத்தோடு வளர்க்கவும் எடுத்துச் சொன்னார்கள். உலக க்ஷேமமே குடும்பங்களின் க்ஷேமங்களில் அடங்கி இருப்பதால் ஒவ்வொரு குடும்பமும் சந்தோஷமாக இருந்தாலே சமூகம், நகரம், நாடு, உலகம் என்று ஆனந்த அலை பரவும் என்பதை எடுத்துச் சொன்னார்கள். வேத வியாசர் செல்லும் ஆசிரமங்கள் அனைத்துமே அதன் பின்னர் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று.

காலம் ஓடியது. வியாசருக்கும் வாடிகாவுக்கும் பிறந்த ஒரே பிள்ளையான சுகர் என்னும் பிள்ளைக்கு எட்டு வயது ஆகி விட்டது. ஆகவே வேத வியாசர் தன் அருமைப்பிள்ளைக்கு உபநயனம் செய்வித்தார். அவனுக்குப் பனிரண்டு வயது ஆனதும் கோதுலி ஆசிரமத்துக்குக் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டான். த்வைபாயனர் என்னும் வியாசருக்கே குருவாக இருந்த ஆசாரிய கௌதமர் அங்கே இன்னும் இருந்து வந்ததால் அவரிடம் கல்வி கற்க சுகர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வாடிகாவுக்கோ தன் அருமை மகனைப் பிரிய மனமே இல்லை. முழு மனதோடு அவன் கோதுலி செல்வதை வெறுத்தாள். ஆனால் த்வைபாயனருக்கோ தங்களை விட்டுத் தொலை தூரம் செல்வதால் மகனுக்கு தன்னம்பிக்கையும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய தைரியமும் ஏற்படும் என்றும் வாழ்க்கைப் பிரச்னைகளை நேருக்கு நேர் சந்திக்கும் மன உறுதியும் ஏற்படும் என்று நம்பினார்.

ஆனால் வாடிகாவுக்கோ சிறிதும் விருப்பமில்லை. தன் மகனைக் குறித்து அவளுக்கு உள்ளூர கர்வம் இருந்து வந்தது. அவன் அவளைப் போல் வெண்மை நிறத்துடன் இருந்தான். ஆனால் அவன் முகம் என்னமோ த்வைபாயனரின் முகம் போலத் தான் இருந்தது. அவனுடைய ஞாபக சக்தியோ அபாரமானதாய்த் தனிச் சிறப்புடன் இருந்தது. எவராலும் பின்பற்ற முடியாததொரு அபூர்வமான பாங்குடன் வேதங்களை உச்சரித்துப் பழகி இருந்தான். ஆகவே அவன் கோதுலிக்குச் சென்று அங்கேயும் சிறப்பாகக் கற்றதில் எந்தவிதமான பிரச்னைகளும் இருக்கவில்லை. ஆனால் இங்கே தனிமையில் வாடிய வாடிகாவோ மகன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எப்போது பனிரண்டு வருடங்கள் முடியும்! மகனின் பிரமசரியம் எப்போது பூர்த்தியாகும்! என்று காத்திருந்தாள். மகன் வந்ததும் அவள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்திருந்த மணமகளோடு மகனுக்குத் திருமணம் செய்விக்கவும் விரும்பினாள். ஆனால் அவள் மகன் வரும் வழியாகக் காணவில்லை. வரவே இல்லை. ஒரு வருடம் மேலும் ஆயிற்று. வாடிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது தான் ஓர் அதிர்ச்சியான தகவல் அவளை வந்தடைந்தது. கோதுலியிலிருந்து வந்த ஒரு சில ஸ்ரோத்திரியர்கள் இதைக் குறித்துக் கூறினார்கள். சுகர் தன்னை எவராலும் கண்டுபிடிக்க முடியாததொரு இடத்துக்குச் சென்று விட்டார் என்றும் தன்னை எவரும் கண்டறிய முயலவேண்டாம் என்றும் சொல்லிவிட்டதாகவும் இந்த உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாக ஆகிவிட்டதாகவும் கோதுலியிலிருந்து வந்த பலரும் கூறக் கேட்டாள் வாடிகா. வாடிகாவின் மன அமைதி பூரணமாகச் சென்றுவிட்டது. அமைதியற்ற மனோநிலையில் இருந்த அவள் ஹஸ்தினாபுரம் சென்று ராஜமாதாவிடம் இதைக் குறித்துக் கலந்து ஆலோசிக்க விரும்பினாள். இதைத் தெரிந்து கொண்ட ராஜமாதாவும் உடனடியாக அரண்மனைப் பல்லக்கை வாடிகாவுக்காக அனுப்பி வைக்க ஹஸ்தினாபுரம் சென்ற வாடிகா மனக் குழப்பத்திலும் வருத்தத்திலும் ஆழ்ந்து இருந்தாள்.

Saturday, August 27, 2016

நியோகத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கின்றன!

காலச் சக்கரம் இறக்கைகள் கட்டிக்கொண்டு பறந்தது. வாடிகாவுக்குத் தன் கணவன் ஷ்ரௌத்த சத்ரா செய்வதற்கு உதவியாகவும், குடும்ப வேலைகளைக் கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. அதைத் தவிரவும் அவ்வப்போது அவள் ஹஸ்தினாபுரம் சென்று தன் மாமியாரும் ராஜமாதாவும் ஆன சத்யவதியுடன் சில நாட்கள் செலவிட்டும் வந்தாள். வாடிகா இயல்பாகவே தைரியம் நிறைந்தவளாகவும் சமயோசித புத்தி படைத்தவளாகவும் இருந்து வந்தாள். இயற்கையை மிகவும் நேசித்தாள். இவளுடைய நல்ல குணங்களால் கவரப்பட்ட ராஜமாதாவும் இவளை முழுவதும் நம்பித் தன் கஷ்டமான சமயங்களில் வாடிகாவின் உதவியையே நாடினாள். ராஜமாதா  ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற நினைத்ததை நினைத்து நினைத்துத் திகைப்பிலும் பயத்திலும் ஆழ்ந்திருந்த குரு வம்சத்தினர் அவள் இப்போது ஹஸ்தினாபுரத்தில் தங்கியதை நினைத்து மகிழ்ச்சியுற்றனர். முன்னை விட அதிகமாக அவளை நேசித்தனர். அவர்கள் குடும்பத்துப் பெண்மணிகளெல்லாம் மாளிகைக்கு வந்து ராணிமாதாவைச் சந்தித்து ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறும் எண்ணத்தைக் கைவிடச் சொல்லி வேண்டினார்கள். இதை எல்லாம் பார்த்த ராணிமாதாவுக்குத் தன் நாட்டு மக்களும், குரு வம்சத்து ஆண், பெண் அனைவரும் தன் மேல் வைத்திருக்கும் அன்பைக் கண்டு சந்தோஷம் மிகுந்தது. இந்த நாட்டிற்காகத் தான் பாடுபட்டதும், தன் சிறிய தியாகங்களும் வீண் போகவில்லை என்பதில் மகிழ்ந்தாள்.

இந்தச் சமயத்தில் பயங்கரமான தன் சபதங்களால் காங்கேயரை மக்கள் மட்டுமின்றி அனைவருமே பீஷ்மர் என அழைக்கத் தொடங்கி இருந்தனர். சபதங்கள் மட்டும் பயங்கரமாக இல்லாமல் அவற்றைக் கடுமையாகக் கடைப்பிடித்ததாலும் அனைவருக்குமே அவரை பீஷ்மர் என்று அழைப்பது தான் சரி என்று தோன்றியது. பீஷ்மர் என்றாலே பயங்கரமான சபதம் செய்தவர் என்ற பொருளிலேயே வரும். பீஷ்மர் தன் ஆற்றலினால் ஹஸ்தினாபுரத்துக்கு அடங்காத பல சிற்றரசர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரித்தார். நேர்மையாகவும், ஆரிய வம்சக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தும் வாழ்பவர்களைப் பெரிதும் மதித்தார். கிராமங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார். ஆசிரமங்களைப் பாதுகாத்தார். ஸ்ரோத்திரியர்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப் பெற்றது. க்ஷத்திரிய தேஜஸுக்கு ஓர் முன்னுதாரணமாக விளங்கினார். எப்போதும் அரச தர்மத்தை மீறாமல் நீதி நெறிகள் தவறாமல் ஹஸ்தினாபுரத்து அரியணையின் செங்கோல் வழுவாமல் பாதுகாத்து வந்தார். அவருடைய செம்மையான வழிகாட்டுதலின் பேரில் குரு வம்சத்துத் தலைவர்கள் பலரும் நேர்மையான வழிக்குத் திரும்பினார்கள். சஹஸ்ரார்ஜுனனின் தொல்லைகள் காரணமாகவும் அவனுடன் நடந்த மாபெரும் போர் காரணமாகவும் மறந்திருந்த சம்பிரதாயப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர் ஆரியர்கள் அனைவரும்.

இங்கே தர்மக்ஷேத்திரத்தில் த்வைபாயனரின் தலைமையில் வேதங்களை ஒழுங்கு செய்து வரிசைப் படுத்தி அவற்றை நான்காகத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இது கொஞ்சம் சிரமமான வேலையாகவே இருந்தது. ஆனால் த்வைபாயனர் கடும் முயற்சிகள் எடுத்து அனைத்தையும் ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வந்தார். உச்சரிப்பின் மெல்லிய ஏற்றத் தாழ்வுகளைக் கூடச் சரியாகக் கண்டறிந்து அவற்றை வரிசைப் படுத்தினார். ரிக் வேதத்தைச் சேகரித்துத் தொகுக்கப் பைலரை த்வைபாயனர் நியமித்தார். அதே போல் சாம வேதத்துக்கு ஜைமினியும், வைசம்பாயனர் யஜுர் வேதத்துக்கும் நியமிக்கப்பட்டார். வாடிகாவின் சகோதரன் ஆன சுமாந்து அதர்வ வேதத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டான். ஒவ்வொருவருக்கும் கீழே பல ஸ்ரோத்திரியர்கள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஷ்ரௌத்த சத்ரா நடந்த அந்தப் பனிரண்டு வருடங்களிலும் தர்ம க்ஷேத்திரத்தை நோக்கிப் பல இடங்களிலிருந்தும் ஸ்ரோத்திரியர்களும், பிரமசாரிகளும் கூட்டம் கூட்டமாக வந்தனர். ஆரியவர்த்தத்தில் இருந்த அனைத்து ஆசிரமங்களின் பிரமசாரிகளும் இந்த வேலைகளைப் பார்க்கவும் அவற்றில் பங்கெடுக்கவும் ஆர்வம் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அனைவரும் இதில் பங்கெடுப்பதோடு மட்டுமில்லாமல் ஓர் குறிப்பிட்ட வேதத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதில் த்வைபாயனரின் உதவியுடன் மேலும் புலமை பெற வேண்டும் என்றும் எண்ணினார்கள்.

அந்தக் காலங்களில் எல்லாம் வேதங்களை எழுதி வைத்து யாரும் படிக்கவில்லை! “எழுதாக்கிளவி” என்று சொல்வதைப் போல் மனனமாகவே பாடம் செய்திருந்தனர். மனனம் செய்வதும் அத்தனை எளிதும் இல்லை. உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும். ஏற்ற இறக்கங்களைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சரியானபடி உச்சரித்தால் தான் அதன் பலனும் முழுமையாகக் கிட்டும்.ஏதேனும் சின்ன மாற்றமோ தவறான உச்சரிப்போ, அலட்சியமான வரிசைக்கிரமத்திலோ அமைந்து விட்டால் அதன் தெய்விகத் தன்மையே முழுவதும் போய்விடும். ஒன்றுக்கும் உதவாமல் ஆகி விடும். இந்தத் தவறைச் செய்பவரும் தன் ஸ்ரோத்திரியன் என்னும் தகுதியை முற்றிலும் இழந்து விடுவான்.  ஆகவே இங்கே த்வைபாயனரிடமும், அவரின் சீடர்களிடமும் அனைவரும் தக்க பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் தங்கள் சொந்த ஆசிரமங்களுக்குச் சென்று அங்கே கற்பிக்க ஆரம்பித்தனர். அல்லது சிலர் புதிய ஆசிரமங்களை ஆரம்பித்து மாணாக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்தனர். இதன் மூலம் த்வைபாயனரின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. அவருடைய தர்ம வேத பரிபாலன சாம்ராஜ்யம் மேலும் மேலும் விஸ்தரித்தது.

த்வைபாயனரின் விடாமுயற்சியால் பல ஆசிரமங்களும் தனியாக பிரக்யாதி பெற்றுத் திகழ்ந்தன. கற்பிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு கற்பித்து வந்ததால் பல ஆசிரமங்களின் புகழ் எங்கும் பரவியது. இதன் மூலம் மிகப் பெரிய அளவில் பக்தி இலக்கியங்களும், சடங்குகளைச் செய்யும் மந்திரங்களும், விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றிற்கான மந்திரங்களும் வேதங்களால் காப்பாற்றப்பட்டு வந்தவை இப்போது வெளி உலகுக்கு முற்றிலும் சரியானபடி தெரியவந்து பயன்பாட்டிலும் இருக்க ஆரம்பித்தன. ஷ்ரௌத்த சத்ராவின் முடிவு நாளன்று த்வைபாயனர் அனைத்து ஸ்ரோத்திரியர்களாலும் தக்கபடி கௌரவிக்கப்பட்டார். பல தேசத்து அரசர்களும், தலைவர்களும் வந்து கலந்து கொண்டிருந்த அந்த விழாவில் த்வைபாயனரின் முயற்சிகளும், அவை வெற்றி பெற்ற விதமும் பரவலாகப் பேசப்பட்டது. காங்கேயர் என்னும் பீஷ்மர் மிக முயற்சி எடுத்து இந்த விழாவை முன்னின்று நடத்தி அனைவரையும் கௌரவப்படுத்தினார். பலரும் நிறைந்திருந்த அந்த மாபெரும் சபையில் த்வைபாயனருக்கு “வேத வியாசன்” என்னும் பட்டப்பெயரைச் சூட்டியதோடு அல்லாமல், வேதம் என்றாலே வியாசர் என்னும் க்ருஷ்ண த்வைபாயனர் ஒருவரே என்றும் அங்கிருந்த அனைவருக்கும் மட்டுமில்லாமல் பாரத வர்ஷத்துக்கே அவர் ஆசாரியர் என்றும் போற்றிப் பாராட்டினார்கள்.

இவை எல்லாம் ஒரு பக்கம் செம்மையாக நிகழ்கையில் ஹஸ்தினாபுரத்தையும் அதன் குருவம்சத்தையும் சூழ்ந்திருந்த கெட்ட கிரஹங்களால் வந்த விளைவுகள் மோசமாகவே இருந்தன. ஹஸ்தினாபுரத்தின் நான்கு எல்லைகளையும் அவை சூழ்ந்து கொண்டு விட்டிருப்பதாகத் தோன்றியது. ராணிமாதா சத்யவதிக்கும் காங்கேயர் என்ற பீஷ்மருக்கும் அடுத்தடுத்துப் பல சோதனைகள் தோன்றின. இந்த நாட்களில் எல்லாம் வாடிகாவுக்கு அடிக்கடி ஹஸ்தினாபுரம் சென்று சத்யவதிக்குத் துணையாகவும் ஆலோசனைகள் கூறவும் செல்ல வேண்டி இருந்தது. ராணிமாதாவுடன் சென்று இருப்பதும் மிகவும் எளிதான வேலையாகவும் இல்லை! ஏனெனில் அவளுக்கு ஒன்று மாற்றி ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அதில் இருந்து மீள்வதற்கு வாடிகாவின் உதவி தேவையாகவும் இருந்தது. ஒவ்வொரு பிரச்னையும் ராணி சத்யவதிக்கு பயங்கரமான மன அழுத்தத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அம்பாவால் விளைந்த துன்பங்கள் போதாது என்பது போல் அது முடிவதற்குள்ளாக விசித்திர வீரியனின் மரணம் ஏற்பட்டு அதனால் தன் மருமகள்கள் இருவருக்கும் நியோகத்தின் மூலம் குழந்தை பெற வைக்க வேண்டிய பொறுப்பு அவளைச் சுமந்து விட்டது. இந்த நியோகப் பிரச்னை ஆசாரிய பிரமிஷ்டரால் ஒரு வழியாகத் தீர்த்து வைக்கப்பட்டாலும் அதனால் பிரச்னைகள் எதுவும் ஓயவே இல்லை. தொடரத்தான் செய்தன.

காசி தேசத்து இரண்டாவது இளவரசி அம்பிகா நியோகத்தின் மூலம் ஓர் ஆண் குழந்தையையே பெற்றெடுத்தாள். வலுவான ஆரோக்கியமுள்ள குழந்தையையே அவள் பெற்றெடுத்திருந்தாள்! ஆனால்! அந்தோ! அந்தக் குழந்தையை முதன் முதலில் பார்க்கும்போது மஹாராணி சத்யவதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தக் குழந்தையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு உச்சி முகர்ந்து அணைக்கையில் தான் அவளுக்குக் குழந்தை பிறவிக்குருடு என்பது தெரிய வந்தது. ஹூம்! கடைசியில் இதுவும் வியர்த்தமாகிப் போய்விட்டதா? ஏனெனில் ஆரியர்களின் வழக்கப்படியும், குரு வம்சத்தினரின் வழக்கப்படியும் பிறவிக்குருடாக இருக்கும் ஓர் இளவரசனால் பாரம்பரிய அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய இயலாது. அரியணை அவனைச் சேராது! அவள் மனம் சுக்குச் சுக்காக நொறுங்கியது. இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்துப் பரிதாபகரமான நிலைமையில் இருக்கும் அம்பிகாவை மனம் நோகச் செய்ய அவளுக்கு இஷ்டமில்லை. ஆகவே தன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை மறைத்த வண்ணம் கீழே குனிந்து குழந்தையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

‘இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், அம்பிகா?” என்று மஹாராணி கேட்டாள்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அப்படியே வைக்கலாம், அம்மா!” என்றாள் அம்பிகா. “நான் இவனை திருதராஷ்டிரன் என்னும் பெயரால் அழைக்க விரும்புகிறேன். இந்த மாபெரும் தேசத்தை நிலை நிறுத்துபவன் என்னும் பொருளில் வரும் பெயர் அது!” என்றாள் ராணிமாதா. இதைக் கேட்ட அம்பிகா மனம் மகிழ்ந்தாள். “ஆம், தாயே, இவன் இந்த தேசத்தை நிச்சயமாக நிலை நிறுத்திப் பெரும் புகழ் பெறுவான்!” என்றாள். அதன் பின்னர் அவள் தங்கை அம்பாலிகாவுக்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே ரத்தமில்லாமல் உடல் வெளுத்து சோகையாகவும் மெல்லிய உடலுடனும் வெகுநாட்கள் வாழ மாட்டான் என்பது போலவும் இருந்தான். இவனுக்குப் பாண்டு என்று பெயர் வைத்தனர். வெளுப்பாக இருந்ததாலும் பாண்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. சத்யவதிக்கு மனம் நிம்மதி இல்லை. ஆகவே அம்பிகாவிடம் கூறி த்வைபாயனரை மீண்டும் ஓர் முறை வரவழைக்கச் சொன்னாள். ஆனால் அம்பிகாவுக்கு இதில் மீண்டும் ஈடுபட முற்றிலும் விருப்பம் இல்லை. ஆகவே தன்னுடைய அந்தரங்கத் தோழியை அழைத்துத் தனக்குப் பதிலாக இந்தச் சடங்கை அவள் செய்து இதில் ஈடுபடட்டும் என்று விரும்பி அவளைத் தயார் செய்தாள். அந்தத் தோழியோ இந்த ஏற்பாட்டில் மெய்ம்மறந்து போனாள். பாலமுனியின் பெயரும் புகழும் எத்தகையது என்பது அவள் அறிந்ததே. ஆகவே அவருடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் என்னும் நினைப்பே அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவள் முழு மனதுடனும் விருப்பத்துடனும் இந்த நியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக அவளுக்கும் ஓர் ஆண் குழந்தையே பிறந்தது. பிறக்கும்போதே அலாதியான ஒளியோடும் வலுவான உடலுடனும் திடகாத்திரமாகவும் பிறந்த அந்தக் குழந்தைக்கு விதுரன் என்று பெயர் சூட்டப்பட்டது.

Tuesday, August 23, 2016

த்வைபாயனர் சம்மதிக்கிறார்!

இதைக் கேட்ட த்வைபாயனர் அதிர்ச்சி அடைந்தார். மஹாராணி சத்யவதிக்கோ தலை சுற்றியது. ஆசாரிய விபூதி சொன்னதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளவே சிரமப்பட்டாள் அவள். இன்னமும் அவளால் அவர் என்ன சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன் நெற்றியில் கையை வைத்துக் கொண்டாள். யோசித்த வண்ணம், “ ஆசாரியரே, நீங்கள் சொன்னதை முதலில் நான் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறேன். த்வைபாயனன் காசி இளவரசிகளுடன் கூடி அவர்களுக்கு நியோக முறையில் குழந்தைகள் பெற உதவ வேண்டும் என்றா சொல்கிறீர்கள்? இதை குரு வம்சத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்த தலைவர்களும் மற்றோரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் குரு வம்சத்து ரத்தம் அந்தக் குழந்தைகளிடம் இருக்காது. ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவின் வாரிசாக எவரும் ஏற்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் அரியணை ஏறுவது எப்படி முடியும்? அவர்கள் அரியணை ஏறுவதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?” என்று கேட்டாள்.

உடனே காங்கேயர், “தாயே, நான் அதற்குப் பொறுப்பேற்கிறேன். உங்களுக்கு நான் வாக்குறுதி கொடுக்கிறேன், ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் காசி தேசத்து இளவரசிகளுக்குப் பிறக்கப் போகும் ஆண் வாரிசோ அது எவருடையதாக இருந்தாலும் அமருவதற்கு நான் என்னாலான உதவிகளைச் செய்வேன். இப்போது போல் பாதுகாத்து வருவேன். த்வைபாயனன் மூலம் பிறக்கும் அந்தப் பிள்ளைகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்வேன்.” என்றார்.

“அப்போது த்வைபாயனன் இதற்கு ஒப்புக் கொண்டு விட்டானா?” மஹாராணி கேட்டாள். “இல்லை, தாயே, இல்லை, நான் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை!” என்று அவசரமாகப் பதில் அளித்தார் த்வைபாயனர்.

“அது ஒரு பக்கம் இருக்கட்டும்! இந்த விஷயத்தில் முக்கியமாகத் தன் கருத்தைச் சொல்லவேண்டியவள் ஜாபாலி புத்திரியான வாடிகா தான். அவள் கருத்து என்ன? ஜாபாலியின் மகளே! நீ இதற்கு ஒப்புக் கொள்கிறாயா?” என்று மஹாராணி சத்யவதியே அவளிடம் கேட்டாள். வாடிகாவோ மிகவும் அடக்கத்துடனும், மரியாதையுடனும், “நான் இதற்கு ஒப்புக் கொள்ளும் முன்னர் இதைக் குறித்து நிறையச் சிந்திக்க வேண்டும். சிந்தித்து முடிவு சொல்கிறேன்.” என்றாள்.

“ஆஹா, அதெல்லாம் சரி! குரு வம்சத்தினரின் கருத்து என்ன? த்வைபாயனர் மூலம் பிறக்கப்போகும் குழந்தைகள் குரு வம்சத்தின் பாரம்பரியமான அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்த அவர்கள் ஒப்புக் கொள்கின்றனரா? அவர்களுக்கு இது சம்மதமா?” ராணி மீண்டும் கேட்டாள். அப்போது மஹாபஹூ கூறினார்: “தேவி, நானும் என் தம்பி சுகேதுவும் ஒரு விஷயத்தின் ஒத்துப் போகிறோம். என் மகனோ அல்லது சுகேதுவின் மகனோ இந்த ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் ஏறி ஆட்சி செய்தால் ஹஸ்தினாபுரத்தில் ஓர் உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கும். தாயாதிச் சண்டையில் குரு வம்சம் அழியும். நம் குடும்பத்தாரின் கண்களுக்கு நம்முடைய இந்த முடிவு இயற்கைக்கு ஒவ்வாததாகவும், எவராலும் ஏற்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோதிலிருந்தே மாட்சிமை பொருந்திய ஷாந்தனு மஹாராஜாவுடன் சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறோம். குருகுலத்தில் படித்திருக்கிறோம். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் அனைவரும் ஓர் புனிதமான ஒப்பந்தம் செய்து கொண்டோம். உறுதி எடுத்துக் கொண்டோம். மஹாராஜா ஷாந்தனுவிற்கு ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்வதிலும், வல்லமை மிக்கதொரு சாம்ராஜ்யமாக உருவெடுக்கவும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதாக ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்தோம். உலகிலேயே வல்லமை பொருந்திய நாடாகத் திகழ வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகப் பிரச்னைகள் வந்தபோதெல்லாம் மஹாராஜா ஷாந்தனுவுடன் தோளோடு தோள் கோர்த்துக் கொண்டு உதவிகள் செய்து வந்திருக்கிறோம். எங்கள் அத்தகைய விசுவாசத்திலிருந்து நாங்கள் அன்றும் இன்றும் என்றும் பின்வாங்க மாட்டோம். மஹாராஜா பித்ருலோகத்தை அடைந்து விட்டார் என்பதற்காகக் குரு வம்சத்திற்கோ, இந்த ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரியமான அரியணைக்கோ தீங்கு விளைவிக்க மாட்டோம்!”

அப்போது ஆசாரிய விபூதி, “மஹாபஹூ அவர்களே! மற்றக் குரு வம்சத் தலைவர்கள் அனைவரும் இதற்கு ஒத்துக் கொள்வார்களா?” என்று வினவினார். “ஆம், ஐயா! நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டால் எங்கள் மக்களும் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் ஒத்துக் கொண்டால் மற்றவரும் உடன்படுவார்கள்!” என்றார். “அவர்கள் எங்களை எதிர்த்தால், நாங்கள் அவர்களை விலக்கி விடுவோம்!” என்றார் சுகேது தீர்மானமாக. இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த காங்கேயருக்கு த்வைபாயனரின் மௌனம் வருத்தத்தை உண்டாக்கியது. ஆகவே வருத்தத்துடன் அவர் த்வைபாயனரை நோக்கி, “பாலமுனி, இனி இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது!” என்றார். மிகவும் கோபம் அடைந்த த்வைபாயனர் கடுகடுப்புடன், “நான் நாளைக்கு என் முடிவை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.” என்றார். பிரமிஷ்டர் அவர் குரலின் தொனியைக் கவனித்துவிட்டுத் தன் கண்களின் மேல் கைகளை வைத்த வண்ணம் த்வைபாயனரையே கூர்ந்து கவனித்தார். பின்னர் அனைவரையும் பார்த்துத் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.

உடனே அங்கே ஓர் அமைதி நிலவியது. இந்த வயதான ஸ்ரோத்திரியர் இன்னும் எதைச் சொல்லி அனைவரையும் திகைப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப் போகிறாரோ என்னும் எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்தனர். அவர் த்வைபாயனரைப் பார்த்து, “இதோ பார், பராசர புத்திரனே! பால முனி! நாளை என்பதெல்லாம் இல்லை! இந்த விஷயத்திற்கு இப்போதே இங்கேயே ஓர் முடிவு கட்டியாக வேண்டும். உடனே!” என்று தீர்மானமாகத் தெரிவித்தார். சற்று நேரம் நிறுத்தியவர் பின்னர் தொடர்ந்து, “இதோ பார், பாலமுனி, கடவுள் அதிசயத்துக்கு மேல் அதிசயமாக நிகழ்த்தி இருக்கிறார். அவர் பராசர முனிவருக்கு ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட சிறந்த மகனை அளித்திருக்கிறார். ஆரியவர்த்தத்திலேயே சிறந்த மிகச் சிறந்த ஸ்ரோத்திரியனாக நான்கு வேதமும் முழுமையும் கற்றவனாக அவன் திகழ்கிறான். தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ததில் அவன் பங்கு மிகப் பெரியது. இறைவனின் ஆசீர்வாதங்களாலே இவை நடந்தது. அது மட்டுமா? இறைவனின் ஆசீர்வாதங்களால் தான் மீனவப் பெண்ணான த்வைபாயனைன் தாய் மச்சகந்தி ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியை மணந்து கொண்டு மஹாராணியாக ஆக முடிந்தது. ராணி சத்யவதியாக ஆக முடிந்தது.”

“இந்த அதிசயங்கள் அதோடு முடிந்து விடவில்லையே! இனி என்றுமே ஒருவருக்கொருவர் பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த இந்தத் தாயும் அவள் மூத்தமகனான பாலமுனியும் கடவுள் அருளாலேயே மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். சக்கரவர்த்தி ஷாந்தனுவைப் போன்றதொரு புரவலன் த்வைபாயனனுக்குக் கிடைத்ததும் கடவுள் அருளாலேயே! அவ்வளவு ஏன்? அவன் வெறும் புரவலன் மட்டுமில்லை! அவனும் த்வைபாயனனுக்கு ஓர் தந்தையே!” என்று முடித்தார் பிரமிஷ்டர்.

பின்னர் சற்று மௌனமாக இருந்தவர் மீண்டும் தன் கரகரத்த தொண்டையைச் சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார். “நாங்கள் ஸ்ரோத்திரியர்கள் அனைவரும், குரு வம்சத்தலைவர்கள், ஆரிய வர்த்தம் மற்றும் தர்மம் அனைத்துமே இப்போது ஓர் இனம் காண முடியாத கலக்கத்திலும் பிரச்னைகளிலும் ஆழ்ந்துள்ளது. குரு வம்சத்தினர் பிரிந்து விட்டாரெனில் பேரழிவு ஏற்படும். எப்படியான பேச்சுக்களாலும், வாத விவாதங்களாலும் அதைச் சரி செய்ய முடியாது. நீ ஒருவன் தான் அவர்களைக் காப்பாற்ற முடியும்!” என்றார்.

“நாம் அனைத்தையும் இப்போது புரிந்து கொள்ளவேண்டும். கடைசியாகப் புரிந்து கொள்ளவேண்டும். நீ நியோக முறையில் விந்து தானம் செய்ய ஒப்புக் கொள்கிறாயா இல்லையா? இப்போது மீண்டும் யோசித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ விவாதங்களில் ஈடுபட்டோ செலவு செய்ய நேரம் அதிகம் இல்லை; நாம் ஏற்கெனவே நிறையப் பேசி முடித்தாகி விட்டது. மேலும் வெட்டிப்பேச்சுக்கள் பேசிக் கொண்டு இருப்பதினால் எந்த வேலையும் நடக்கப் போவதில்லை!”

“நாம் இப்போதே முடிவு எடுத்தாக வேண்டும். இங்கேயே! இப்போதே!” என்று திட்டவட்டமாகக் கூறினார் பிரமிஷ்டர். பின்னர் தன் குரலை உயர்த்தி, “நீ நியோக முறையில் காசி இளவரசிகளுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள உதவுவாயா? மாட்டாயா? இதன் மூலம் நீ குரு வம்சத்தினரை மட்டுமல்ல, இந்த நாட்டையும் அதன் மூலம் இந்த சாம்ராஜ்யம் புத்துயிர் பெறவும் உதவ முடியும். இல்லை எனில் உன்னுடைய இந்த அகந்தையினாலும் இறுமாப்பினாலும் குரு வம்சத்தினரை ஒருவருக்கொருவர் தாயதிச் சண்டையினால் அழிந்து போகச் செய்யப் போகிறாயா? அதோடு தர்மம் தழைக்க வேண்டும். நீ இந்தக் காரியத்தைச் செய்தால் தான் தர்மம் தழைக்கும். அதன் பின்னர் பிரம்மதேஜஸாவது! க்ஷத்திரிய தேஜஸாவது! இரண்டும் ஒன்றாக ஆவதாவது! எதுவும் நடவாது!”

சற்றே நிமிர்ந்து உட்கார்ந்த அந்த முதியவர் மீண்டும் ஓர் தீர்மானமான குரலில் பேசினார். “ இந்த விருப்பம் உன் தாயாலோ இளவர்சன் காங்கேயனாலோ அல்லது வாடிகாவினாலோ ஏற்படவில்லை! ஏற்படவும் முடியாது. ஏன் உன்னால் கூட இதை முடிவு செய்ய முடியாது! இது கடவுளரால் ஏற்படுத்தப்பட்ட முடிவு! அவர்கள் தான் இந்த நியோக முறையில் குழந்தைகள் பெறவேண்டும் என்று விரும்புகின்றனர். இது உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ! இது இப்படித் தான் நடக்கவேண்டும் என்பது ஏற்கெனவே கடவுளரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது!” என்றார். மீண்டும் தன் நீண்ட பேச்சினால் களைத்த பிரமிஷ்டர் சற்று நிதானித்துக் கொண்டு தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் தொடர்ந்தார். “த்வைபாயனா! எனக்கு நேரிடையாகப் பதிலைக் கொடு! நீ இந்தச் சடங்கை ஏற்றுக் கொண்டு செய்யப் போகிறாயா? அல்லது மறுக்கப் போகிறாயா?” அவர் குரல் இப்போது த்வைபாயனரை மிரட்டுவது போல் இருந்தது. அவர் ராஜகுருவாக இருந்தபோது அனைவரையும் ஆட்டி வைத்த அந்த அதிகாரக் குரல் அவரிடம் இப்போது திரும்பி விட்டது.

த்வைபாயனர் தன் தலையைக் குனிந்து கொண்டார். பின்னர் பணிவுடன், “மரியாதைக்குரிய ஆசாரியரே, உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன்.” என்றார்.

Monday, August 22, 2016

பிரமிஷ்டர் காட்டிய வழியும், ராணியின் குழப்பமும்!

அங்கிருந்த அனைவருக்குமே பிரமிஷ்டர் குறிப்பிடுவது யாரை என்று புரிந்து விட்டது. அனைவருமே மறுப்பாகத் தலை அசைத்தனர். காங்கேயரைத் தவிர! ஆம்! காங்கேயர் மட்டுமே இந்தப் புதிய வழியினால் தனக்கு ஓர் நிம்மதி கிடைக்குமா என்ற ஆவலுடன் மேற்கொண்டு பிரமிஷ்டர் பேசுவதற்குக் காத்திருந்தார். இந்தப் புதிய வழியைக் குறித்துக் கலந்து ஆலோசிக்கவும் விரும்பினார். பிரமிஷ்டர் தன் பேச்சைத் தொடர்ந்தார்! “குரு வம்சத்துத் தலைவர்களே! உங்கள் பதிலைச் சிறிதும் ஐயத்துக்கு இடமின்றிக் கூறுங்கள்! இங்குள்ள குரு வம்சத்தின் அனைத்துப் பிரிவினரும் குரு வம்சத்து இளவரசனை மணந்து விதவையாகி இருக்கும் இளவரசிகள் மூலம் வாரிசுகளைப் பெற விருப்பம் தெரிவிக்கிறீர்களா? அதுவும் ஒரு தாய்வழிச் சகோதரன் மூலம்? ஷாந்தனுவின் நிகரற்ற சாம்ராஜ்யத்தையும் அதன் அரியணையிலும் அமர்ந்து ஆட்சி புரியச் சம்மதிக்கிறீர்களா? பிறப்பினால் குரு வம்சத்தின் வாரிசாக இல்லாமல் திருமணத்தின் மூலம் குரு வம்சத்தைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த பிள்ளை மூலம் அப்படி ஓர் வாரிசு உருவாகச் சம்மதிக்கிறீர்களா?” என்று கேட்டார் பிரமிஷ்டர்.

ஆசாரிய விபூதி குரு வம்சத்தலைவர்களை நோக்கித் திரும்பினார். “அவர் சொல்வதன் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்து கொண்டீர்களா? தலைவர்களே! இப்படி ஒன்று நடந்தால் ஹஸ்தினாபுரத்தை ஆள்வது, ஆளப் போவது குரு வம்சத்தின் ரத்தத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். பிறப்பினால் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமல், திருமண பந்தத்தின் மூலம் குரு வம்சமாகிய ஒருத்தியின் மகனாக இருக்கும். ஷாந்தனு மஹாராஜாவின் நேரடி வாரிசு நமக்குக் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் ஆசாரியர். “எப்படிச் சொல்வது? என்ன சொல்வது! என்றே புரியவில்லை! இது சொல்வதற்கு மிகவும் கடினமான ஒன்று!” என்றார் மஹாபஹூ!

“பிடிவாதம் பிடிக்கும் முட்டாள்களிடம் வாதம் செய்ய முடியாது! அவர்களுக்கு நான் உதவவும் மாட்டேன். காங்கேயன் அவன் செய்த சபதத்தை நிறைவேற்றட்டும்! ராஜமாதா ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறட்டும். இங்கே ஹஸ்தினாபுரத்தில் குரு வம்சத்தவர் ஒருவருக்கொருவர் தாயாதிச் சண்டையில் முற்றிலும் அழிந்து நாசமாகட்டும்!” பிரமிஷ்டர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். “விபூதி, உன் கையைக் கொடு! நான் எழுந்திருக்க வேண்டும். என்னுடைய ஆலோசனைகளை ஏற்காதவர்களிடம் நான் பேசிப் பிரயோசனம் இல்லை! எப்படியோ போகட்டும்!” என்ற வண்ணம் பிரமிஷ்டர் மெல்ல ஆசாரிய விபூதியின் கைகளைப் பிடித்த வண்ணம் எழுந்து நின்றார். வெளியேறத் தயார் ஆனார்! ஆனால் காங்கேயர் அவரைத் தடுத்தார். “போகாதீர்கள், ஆசாரியரே! இருங்கள்!” என்று தன் கைகளால் அவரைத் தடுத்தார். “நான் அனைத்து மட்டத் தலைவர்களிடமும் தனித்தனியாகப் பேசுகிறேன். இப்போதுள்ள சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது! ஏதேனும் செய்தாக வேண்டும்!” என்றார்.

“இதோ பார்! காங்கேயா! கவனித்துக்கொள்!” என்ற பிரமிஷ்டர் மேலும் தொடர்ந்து, “ஒரு விஷயம் நினைவில் இருக்கட்டும்! நீ ஹஸ்தினாபுரத்தின் அதிகாரங்களையும், நிர்வாகத்தையும் உன் கைகளில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இங்கே தர்ம சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்பினாயானால், என்னுடைய இந்த யோசனையைக் கட்டாயமாய் நீ ஏற்றே ஆக வேண்டும். அப்படி இல்லை எனில், உன்னால் முடியவில்லை எனில், உனக்கு நரகத்தின் வாயில்கள் திறந்தே இருக்கும். நேரடியாக நரகத்துக்குச் சென்று விடலாம்!” என்றார். “நாங்கள் அதை ஒப்புக் கொள்வோம், ஆசாரியரே! நிச்சயமாக ஒப்புக் கொள்வோம்!” என்றார் காங்கேயர்.

“சரி, அப்பா! உன் ராஜமாதா ஒப்புக் கொள்வாளா? தாய்வழிச் சகோதரன்? அவன் ஒப்புக் கொள்வானா? இதை எல்லாம் நீ தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாங்கள் இல்லை!” என்றார் பிரமிஷ்டர் தொடர்ந்து! அப்போது த்வைபாயனர் அந்த அறைக்குத் திரும்பி வந்தார். அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று காத்திருந்தனர். த்வைபாயனர் சொன்னார்.” மாட்சிமை பொருந்திய மஹாராணி, ராஜமாதா அவர்கள், கௌண்டின்யரிடம் நாளை மதியம் கோதுலிக்குக் கிளம்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள்.” என்றார், அதற்கு மஹாபஹூ, “அவர் தன் மனதை மாற்றிக்கொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார். “இல்லை!” என்றார் த்வைபாயனர்! “பாலமுனி, நீங்கள் தயவு செய்து அவர் மனதை மாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாதா?” என்று காங்கேயர் கேட்டார்.

“என்னை விட உங்களுக்கு ராஜமாதாவைக் குறித்து நன்கு தெரியும், இல்லையா இளவரசே! அவர் ஒரு முறை ஒரு முடிவெடுத்து விட்டாரெனில் எளிதில் அவரை மாற்றிக்கொள்ள வைக்க இயலாது! அவர் மாற்றிக்கொள்ளவே மாட்டார். அதோடு இல்லை. இதோ அவர் ஒரு செய்தியையும் என் மூலம் அனுப்பி இருக்கிறார். “ என்னை என் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டாம். அதற்கான முயற்சிகளையும் யாரும் செய்ய வேண்டாம். நான் ஹஸ்தினாபுரம் வந்ததே ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவையும் குரு வம்சத்தினரையும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ வைப்பதற்கே! இப்போது நான் இங்கே இருந்து கொண்டு அவர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்க விரும்பவில்லை!” என்று கூறியுள்ளார்.” என்றார் த்வைபாயனர்.

“நாங்கள் ஓர் முடிவுக்கு வந்து விட்டோம்!” என்றார் ஆசாரிய விபூதி! “காங்கேயரும் தன் சபதத்தை உடைக்க வேண்டாம். ராஜமாதாவும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற வேண்டாம்.” என்றார். அதற்கு த்வைபாயனர் கொஞ்சம் ஏளனம் கலந்த சிரிப்புடனும், “அற்புதம்! அதிசயம்! ஆச்சரியம்!” என்றார். ஆனால் ஆசாரிய விபூதியோ, “ஆம் நாங்கள் ஓர் எளிய வழியைக் கண்டு பிடித்து விட்டொம். தயவு செய்து ராஜமாதாவை சபைக்கு வரச் சொல்லுங்கள்! இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் குறித்து அவர் முன்னிலையில் தான் பேச வேண்டும். அது தான் சரியானது!” என்றார். த்வைபாயனர் மீண்டும் வெளியேறினார். சிறிது நேரத்துக்கெல்லாம் வாடிகாவும், தாவியும் பின் தொடர த்வைபாயனர் சத்யவதியை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

அவளிடம் காங்கேயர், “தாயே, நாங்கள் ஓர் வழியைக் கண்டு பிடித்துவிட்டோம்!” என்றார் குதூகலமாக. “நான் ஏற்கெனவே எனக்கென ஓர் வழியைத் தேர்ந்தெடுத்து விட்டேனே!” என்றாள் ராணி சத்யவதி! “தாயே, தயவு செய்யுங்கள்! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்!” என்று கைகளைக் கூப்பிய வண்ணம் வேண்டினார் காங்கேயர். மேலும் தொடர்ந்து, “நான் சொல்லும் தீர்வு உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால், நானும் என் சபதத்தை உடைக்க வேண்டாம். குரு வம்சத்திற்கு வாரிசுகளும் கிடைப்பார்கள். நீங்களும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற வேண்டாம்.” என்றார் காங்கேயர். காங்கேயரின் நம்பிக்கை கலந்த பேச்சும் நடவடிக்கையும் சத்யவதிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. புதிராகவும் இருந்தது. “இப்படி ஓர் அதிசயத்தை எப்படி நிறைவேற்றப் போகிறாய்? எப்படி அதைச் சாதித்தாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சத்யவதி!

“சக்கரவர்த்தி ஷாந்தனுவின் வம்சம் அவருடன் முடிவடையாது, தாயே! நியோக முறையில் அதைத்  தொடரலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.” என்றார் காங்கேயர். சத்யவதியோ, “நீ தான் அதற்கு மறுத்துவிட்டாயே, மகனே!” என்றாள். அப்போது ஆசாரிய விபூதி தொடர்ந்தார். “மஹாராணி, காசி தேசத்து இளவரசிகள் நியோக முறையில் குழந்தைகளைப் பெறலாம். ஆனால் காங்கேயர் மூலமாக அந்த நியோகம் நடைபெறாது.” கொஞ்சம் நிறுத்திய விபூதி தொடர்ந்து, “நியோகம் செய்யப் போவது பாலமுனி த்வைபாயனர் தான். விசித்திர வீரியனின் தாய்வழிச் சகோதரர் ஆன அவர் நியோகம் செய்வது சாலப் பொருந்தும். அதனால் நீங்களும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற வேண்டாம். இங்கேயே இருந்து எங்கள் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் எங்களைப் பாதுகாத்து வரலாம்.” என்று முடித்தார்.


Sunday, August 21, 2016

பிரமிஷ்டரின் ஆலோசனை!

அவ்வளவு நேரமும் த்வைபாயனர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் மௌனமாகவே அமர்ந்திருந்தார். இப்போது காங்கேயர் கேட்கவும் அவர் பதில் சொன்னார். “இளவரசே! குரு வம்சத்தினரின் இந்த ராஜரீக ஆலோசனைகளில் எனக்கு எவ்விதமான இடமோ, பங்களிப்போ சிறிதும் இல்லை. நான் இங்கே வந்திருப்பதே மாட்சிமை பொருந்திய ராஜமாதாவை முன்னிட்டும், அவர் விருப்பத்தை நிறைவேற்றித் தரவும் மட்டுமே!” என்று பணிவுடன் கூறினார். அப்போது தாவி உள்ளே நுழைந்து அனைவரையும் பார்த்த வண்ணம் அனைவருக்குமாகச் சேர்த்து நமஸ்கரித்தாள். அவளுடைய அந்த அலட்சிய சுபாவத்திலிருந்து அவள் அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்ல விருப்பமில்லாதிருப்பது புரிந்தது. அவளுடைய உடல்மொழி நம்முடைய ராஜமாதாவுக்கு இங்கே ஹஸ்தினாபுரத்தில் இடமில்லை என்னும் இந்த நபர்களை நாம் வணங்க வேண்டுமா என்று சொல்லாமல் சொல்லியது. இவர்களை நாம் மதிக்கத் தேவையில்லை என்ற முடிவை அவள் எடுத்துவிட்டாள். அவள் நேரே த்வைபாயனரிடம் வந்தாள். அவரைப் பார்த்துக் கை கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய முனிவரே, என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ராஜமாதா சத்யவதி உங்களையும் மந்திரி கௌண்டின்யரையும் சந்திக்க விரும்புகிறாள். தயவு செய்து வாருங்கள்!” என்று அழைத்தாள்.

த்வைபாயனரும் கௌண்டின்யரும் உடனே எழுந்து தாவியுடன் ராஜமாதாவைப் பார்க்கச் சென்றார்கள். ஆசாரிய விபூதியின் மனதில் சந்தோஷமே இல்லை. இப்போது தர்மத்திற்கே அபாயம் நேரிட்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தர்மத்தைக் காப்பாற்றி தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நி/ருத்தும் பொறுப்பு அவர் தலையில் சுமந்திருப்பதாக உணர்ந்தார். அவர் தான் இதற்கு ஓர் வழியைக் காட்டியாக வேண்டும். “நாம் இப்போது என்ன செய்வது, இளவரசே?” என்று கேட்டுக் கொண்டே காங்கேயர் பக்கம் திரும்பியவர் தொடர்ந்து, “ இதற்கான வழி உங்கள் கைகளிலே உள்ளது. நீங்கள் உங்கள் சபதத்தை இப்போது உடைக்க வேண்டும் அல்லது ராஜமாதாவை கோதுலிக்குச் சென்று வானப்பிரஸ்தம் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும்! வேறு வழியில்லை!” என்றார். தன் உதடுகளை மடித்துக் கொண்டு முகத்தில் கடுமையைக் காட்டினார் காங்கேயர். “மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ராஜகுருவே! என்னை மன்னியுங்கள். சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எனக்கு எதிராக அமைந்து விட்டன. அதோ கடவுளரும் என்னிடம் மிகவும் கோபம் கொண்டு கடுமையைக் காட்டுகின்றனர். ஒவ்வொரு சோதனையாக எனக்கு வருகிறது! சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறேன்.” என்றார்.

“நாம் இவற்றை வெகு எளிதில் கடந்து விடலாம், இளவரசே! நீங்கள் மட்டும் மனம் வைக்க வேண்டும்!” என்றார் ஆசாரிய விபூதி. ஆனால் மிகவும் சோகத்துடனும், மெதுவாகவும் பேச ஆரம்பித்த காங்கேயர், “ ஆம், மக்கள் நிச்சயமாக என்னைத் தூற்றுவார்கள். என் மேல் பழியைப் போடுவார்கள். மாட்சிமை பொருந்திய ராஜமாதாவை ஹஸ்தினாபுரத்தை விட்டு நான் தான் துரத்தி விட்டேன் என்பார்கள்! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!” என்று கூறினார். அப்போது பிரமிஷ்டர் குறுக்கிட்டு, “நீங்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு இம்மாதிரியான தர்மசங்கடங்களை வலுவில் வரவழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது இதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்!” என்று கசப்புடன் கூறினார். ஆசார்ய விபூதி அப்போது தன் தந்தையிடம், “தந்தையே, தங்களால் மஹாராணியிடம் பேசி அவர் மனதை மாற்றிக்கொள்ளும்படி செய்ய இயலுமா?” என்று கேட்டார்.

“ஆம், என்னிடம் வா! உனக்கு வேறு ஏதேனும் வழி தோன்றவில்லை என்றாலோ அல்லது யோசிக்க முடியவில்லை என்றாலோ உடனே என்னிடம் வந்துவிடுவாய்! உனக்கு வழி கண்டுபிடிக்கச் சோம்பலாக இருந்தால் சொல்! நான் நல்லவழியை உனக்குக் காட்டுகிறேன்.” என்றார் பிரமிஷ்டர். “என்ன வழி அது? ஆசாரியரே?” என்று சுகேது கேட்டார். அதற்கு பிரமிஷ்டர், “நான் என் நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும்? நீயும் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. குரு வம்சத்தினரும் மாட்டேன் என்றே சொல்லப் போகின்றனர். சர்வ நாசத்துக்கு அவர்கள் போய்ச் சேரட்டும்!” என்று கோபத்துடன் கூறினார் பிரமிஷ்டர்.

அப்போது காங்கேயர், “ஆசாரியரே, நான் என் தாயால் ஏற்கப்படும் எந்தவிதமான வழியானாலும் ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் மட்டும் என் சபதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்; கொடுத்தே ஆகவேண்டும் என்று கேட்காதீர்கள்!” என்றார் காங்கேயர். “ஆனால் அப்படி ஓர் வழி இருக்கிறதா?” என்று ஆசாரிய விபூதி தன் தந்தையிடம் கேட்டார். “ஹூம், அந்த வழியை நான் சொல்லி விட்டால்! நீங்கள் எவரும் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை! நான் சொல்வது இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நம்மைக்காப்பாற்றும்!” என்றார் பிரமிஷ்டர்.

“அப்படி எல்லாம் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று எதுவும் இல்லை, ஆசாரியரே!” என்றார் சுகேது. “நான் நன்றாகக் கவனித்துப் பார்த்து யோசித்து விட்டேன். நம்மை விட்டு மஹாராணி கோதுலி சென்று விட்டாலோ, அதோடு காங்கேயரும் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்தாலோ, மஹாபஹூ, நீ, உன் மகன் இருவரில் யாரேனும் அரியணையில் அமர உரிமை பெறுவீர்கள். ஆனால் அது குரு வம்சத்தினரிடையே உள்நாட்டுச் சண்டையை மூட்டி விடும்! பெரும்போர் எழும்.” என்றார் சுகேது தொடர்ந்து. “அப்போது இதிலிருந்து தப்ப வழி என்ன?” என்று கேட்டார் காங்கேயர். அவருக்கு விரைவில் இந்தச் சிக்கல் தீர்ந்தால் நல்லது என்னும் எண்ணம் எழுந்தது. ஆசாரிய விபூதியோ, “வேறு எந்த வழியும் இல்லை இளவரசே! நியோக முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியே இல்லை! ஆனால் இளவரசருக்கு அந்த வழி பிடிக்கவும் இல்லை. புலப்படவும் இல்லை!” என்றார் ஆசாரிய விபூதி!

“அது பல பழைய சுவடிகளில் மறுக்கப் பட்டும் வந்திருக்கிறது. அனைவராலும் ஏற்கப்படவில்லை!” என்றார் த்வைபாயனர் முதல்முறையாக வாய் திறந்து. அவர் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் மிகவும் தேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். “எனக்கும் அது தெரியும்!” என்றார் ஆசாரிய விபூதி தொடர்ந்து. “ஆனால் சில பழைய சம்பிரதாயமான சடங்குகளில் இவையும் ஒன்றாக இருந்திருக்கிறது. முக்கியமாக ஒரு குடும்பம் அடியோடு வாரிசு இல்லாமல் நசித்துப்போகும் சமயங்களில் முன்னோர்களுக்குச் சிறிதும் ஈமச்சடங்குகளைச் செய்ய ஆண் வாரிசே இல்லாத சமயங்களில் இந்த நியோக முறையே கை கொடுத்து வந்துள்ளது! இது பழக்கத்திலும் இருந்திருப்பதோடு பல ரிஷி, முனிவர்களும் இதை ஆதரித்திருக்கின்றனர்.” என்றார் ஆசாரிய விபூதி.

அப்போது பிரமிஷ்டர் ஓர் வற்புறுத்தலுடன் கூடிய தொனியில் பேசினார். அவருடைய முறுக்கிக் கொண்ட சுருங்கிய உடல் அப்போது ஏற்பட்ட அதீத உணர்ச்சிவசத்தில் நடுங்கியது. “இம்மாதிரியான வேண்டாத வாத விவாதங்களில் மூழ்காதீர்கள்! எனக்கு நேரிடையாக உங்கள் பதிலைத் தெரிவியுங்கள்; காசி தேசத்து அரசகுமாரிகள் நியோக முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் உங்களுக்கெல்லாம் விருப்பமா? அதற்கு நீங்கள் அனைவரும் சம்மதிக்கிறீர்களா?” என்று கேட்டார். அனைவரும் அதற்கு ஆமோதித்தனர். ஆசாரிய விபூதியோ, “அதைத் தானே நாம் அனைவரும் இவ்வளவு நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இளவரசர் காங்கேயர் தான் அதைக் குறித்துச் சிறிதும் நினைத்துப் பார்க்கவே இல்லை!” என்றார்.

“நீங்கள் அனைவரும் வரக்கூடிய மாபெரும் பிரளயத்தைக் குறித்து அறிந்து வைத்திருந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லை! உங்களால் அதைச் சந்திப்பதில் சிக்கல் இருக்கிறது! கோழைகளாக இருக்கிறீர்கள்!” என்ற பிரமிஷ்டர், “என்ன, குரு வம்சத்துத் தலைவர்களே! நீங்கள் அனைவரும் என்ன சொல்கிறீர்கள்? நியோக முறையில் காசி தேசத்து அரசகுமாரிகள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் உங்களுக்கெல்லாம் சம்மதமா?” என்று கேட்டார். அவர்கள் ஓர் வறட்சியான சிரிப்பை உதிர்த்தனர். மஹாபஹூ, “குரு வம்சத்துத் தலைவர்களால் ஆரம்பத்தில் வேண்டுமானால் எதிர்ப்புக் காட்ட முடியலாம். போகப் போகச் சரியாகி விடும்! மனது மாற ஆரம்பிக்கும்!” என்றார். பிரமிஷ்டர் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். “அவர்கள் நியோக முறையில் குழந்தை பெறுவதற்கு மாற்றாந்தந்தையின் மகனை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா? நியோகத்தை அந்தப் பெண்களின் கணவன் வழி வந்த தாய்வழிச் சகோதரன் மூலம் பெற்று எடுக்க ஒத்துக் கொள்வார்களா? தாய் வழிச் சகோதரன், கணவனின் தாய் வழியில் பிறந்த சகோதரன்?” என்று கேட்டார் பிரமிஷ்டர்.


Saturday, August 20, 2016

சபையில் பதட்டம்! காங்கேயரின் கலக்கம்!

மஹாராணி சத்யவதி வாடிகாவும் தாவியும் பின் தொடர அங்கிருந்து வெளியேறினாள். அவர்கள் வெளியேறியதுமே அங்கிருந்த சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. ஓர் இறுக்கமான மனோநிலை அனைவரிடம் தோன்றியது. அனைவரும் தங்கள் கால்களுக்கு அடியே மாபெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு விட்டது போலவும் எந்த நேரமும் தாங்கள் அந்தப் பள்ளத்தில் விழுந்து விடுவோம் என்பது போலவும் உணர்ந்தனர். ஒரு பெரிய பிரளயமே ஏற்பட்டு விட்டாற்போல் அனைவருக்கும் தோன்றியது. அந்த உணர்வு மாறாமலேயே இளவரசர் காங்கேயர், அங்கிருந்த மற்ற ஸ்ரோத்திரியர்கள், குரு வம்சத்துப் பிற தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது எல்லாம் எவரும் மஹாராணி இம்மாதிரியான ஓர் குண்டைத் தூக்கிப் போடுவாள் என்றே எதிர்பார்க்கவில்லை. மஹாராணி சத்யவதி தன்னை ஷாந்தனுவின் மனைவி என்றும் அரச மாளிகைக்கு மட்டுமின்றி ஒரு மஹாராணிக்கான அனைத்து உரிமைகளும் உள்ளவள் என்றே நினைத்தும் பார்த்தும் வந்தாள். இப்போது ஷாந்தனு இறந்த பின்னர் தன்னுடைய வேகமான நடவடிக்கைகள் அனைத்தும் வலுவானதாக இல்லை என்பதே அவளால் பொறுக்க முடியவில்லை. ஆகவே இப்போது ஏற்பட்ட சூழ்நிலையில் அவளால் தான் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரும் எவரோ ஒரு மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ் இங்கே இருந்து கொண்டு இரந்து வாழும் நிலைமையைப் பெற விரும்பவில்லை. சுதந்திரமான மனப்போக்குக் கொண்ட சத்யவதி அத்தகையதொரு நிலைமையை முழுதும் வெறுத்தாள்.

எப்போதும் கடுமையாகக் காட்சி அளிக்கும் காங்கேயரின் முகத்தில் அப்போது கடும் விசாரமும் பதட்டமும் காணப்பட்டது. ஹஸ்தினாபுரத்தை விட்டு மஹாராணி சத்யவதி வெளியேறினால் அதன் பின்னர் நடக்கக் கூடிய எதிர்வினைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவரால். மிகவும் மோசமானதொரு நிலைமை தோன்றி விடும். அதிலும் சாமானிய மக்கள் சத்யவதியை ஒரு தேவதையாகத் தங்கள் குடும்பத்தின் குல தெய்வமாகவே பார்த்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்யவதி வெளியேறியதற்கு காங்கேயர் தான் காரணம் என நினைத்துக் கொண்டு அவருக்கு சாபத்தின் மேல் சாபம் கொடுப்பார்கள். தங்கள் துரதிர்ஷ்டமான நிலைக்கு அஸ்திவாரம் நாட்டியது காங்கேயர் தான் என்று உறுதியுடன் கூறுவார்கள். காங்கேயர் இவ்வளவு கடினமாக நடந்து கொண்டார் என்பதையே அவர்களால் ஏற்க முடியாது என்பதோடு கோதுலி ஆசிரமத்துக்கு சத்யவதி சென்று விட்டால் அவரை மன்னிக்கவும் மாட்டார்கள். அவ்வளவு ஏன்? குரு வம்சத்துத் தலைவர்கள் கூடத் தங்கள் காவல் தெய்வமாகவே சத்யவதியைக் கருதி வருகின்றனர். அவர்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களையும், போட்டி, பொறாமைகளையும் கூட மறந்து சத்யவதியை மஹாராணியாகவும் தங்கள் காவல் தெய்வமாகவும் ஏற்று வந்திருக்கின்றனர். பல முறை அவர்களுக்கு ஏற்பட்ட பல சிரமமான காலங்களில் சத்யவதி முழு மனதுடன் தன்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்திருக்கிறாள். வழி வழியாக வந்து கொண்டிருந்த அவர்களின் குடும்பச் சண்டைகளில் ஒரு மஹாராணிக்கே உரிய நிதானத்துடனும், அன்புடனும், கருணையுடனும் நடந்து கொண்டு அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறாள்.

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் காங்கேயர் இத்தகையதொரு எண்ணங்கள் ஓடுவதாகவே பார்த்தார். த்வைபாயனர் மட்டுமே விதி விலக்கு என்றும் நினைத்தார். ஹஸ்தினாபுரத்தின் இப்போதைய துரதிர்ஷ்டமான காலத்துக்கு அவரே பொறுப்பு என்று அவர்கள் நினைப்பதோடு தன்னை வெறுப்பதாகவும் தோன்றியது அவருக்கு. மஹாராணி சத்யவதியைக் குறித்து அவர் வெகு காலமாக அவள் திருமணம் ஆகி இங்கே ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்தே அறிவார். பெரும்போக்குடன், தயையுள்ளவளாகவும், தன்னுடைய செல்வாக்கையும், அதிகாரத்தையும் உணர்ந்திருந்தாலும் அனைவருடனும் ஒத்துப் போகும் இயல்பு படைத்தவளாகவும், தர்ம நியாயத்துக்குக் கட்டுப்பட்டு எளிதில் வளைந்து கொடுப்பவளாகவும் இருந்தாள்; இருக்கிறாள்; என்பதை காங்கேயர் நன்கு அறிவார். அவளுடைய கருணை உள்ள குணத்துடன் அவள் அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும் இருக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால் வெகு சில சமயங்களில் அதிலும் குறிப்பாகச் சில முக்கியமான சம்பவங்களில் அவள் ஓர் முடிவெடுத்து விட்டாள் எனில் அதிலிருந்து அவளை மாற்றுவது வெகு கடினம் என்பதையும் காங்கேயர் அறிந்திருந்தார். ஆகவே அவருக்குள் உள்ளூர ஓர் அச்சமே ஏற்பட்டது.

அங்கிருந்த தர்மசங்கடமான நிலையிலிருந்தும் அலாதியான மௌனத்திலிருந்தும் ஆசாரிய விபூதியே அதை உடைத்துப் பேச ஆரம்பித்தார். லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, கொஞ்சம் தயக்கமான குரலில் பேச ஆரம்பித்தார். எப்போதும் பளிச்சென்று உடைத்துப் பேசும் ஆசாரியருக்கு இப்போது இப்படிப் பேசுவது அசாதாரணமானதொரு நிலையாகத் தோன்றியது. “இப்படி ஓர் சூழ்நிலையை நாம் யாவரும் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. இதை எவருமே எதிர்பார்க்கவில்லை!” என்றார். அப்போது மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகக் குரு வம்சத்தினருக்குக் குடும்பப் புரோகிதராகவும் ராஜ குருவாகவும் இருந்து வந்த தொண்ணூற்றி இரண்டு வயதான ஆசாரிய பிரமிஷ்டர், காங்கேயரையே உற்றுப் பார்த்தார். இத்தனை வயதாகி இருந்தும் அவருக்கு வேதத்தின் ஒரு சிறிய பகுதி கூட மறக்கவில்லை. நன்றாக நினைவில் வைத்திருந்தார். அவரிடம் இருந்த ஓர் அசௌகரியமான பழக்கம் என்னவெனில் அவர் சொல்வதை யாரேனும் கேட்கவில்லை எனில் அவர்களிடம் அவருக்கு இகழ்ச்சியும், அவமதிப்பும் ஏற்பட்டு விடும். இப்போதும் அதே மனோநிலையில் இருந்தார்.
ஓர் வெற்றிப் பார்வையுடன் காங்கேயரைப் பார்த்தார். “காங்கேயா, இளவரசே, இது உன்னால் ஏற்பட்டது. எங்கள் ஆலோசனைகளை நீ கேட்காததால் ஏற்பட்டது! “ என்று குத்திக் காட்டினார்.

“மதிப்புக்குரிய ஆசாரியரே! உங்கள் ஒவ்வொரு வார்த்தையுடனும் நான் உடன்படுகிறேன். ஆம், இது காங்கேயனால் ஏற்பட்டது தான்.” என்றான் அதிரதியான சுகேது. குரு வம்சத்தின் ஓர் பிரிவின் தலைவன் அவன். மேலும் தொடர்ந்து, “இனி அனைத்துக் குரு வம்சத்தினரும் கோபத்தில் பொங்கி எழப் போகின்றனர். மாட்சிமை பொருந்திய மஹாராணி ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லப் போகிறாள் என்னும் செய்தியை எவராலும் பொறுக்க முடியாது! கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இந்த மாபெரும் சாம்ராஜ்யத்திலும் சரி, ஹஸ்தினாபுரத்திலும் சரி மஹாராணி சத்யவதியை ஓர் தாயைப் போலவே பார்த்து வந்திருக்கின்றனர். இது வெறும் பேச்சல்ல. சாட்சாத் அந்த அன்னபூரணியே இவள் தான் என்று மக்கள் கொண்டாடுவார்கள்; கொண்டாடுகிறார்கள். செல்வத்தின் தேவி இவள் தான் என்று போற்றி வந்திருக்கிறார்கள்.”

“ஆம், சுகேது, நீ சொல்வது சரியே!” என்றார் மஹாபஹூ.”ஹஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் குடும்பத்திற்கு ஏதோ சாபம் வந்துவிட்டதாகவே நினைக்கப் போகின்றனர். குரு வம்சத்திற்கும் அழிவு வந்துவிட்டதாக நினைப்பார்கள்.” என்றார் மஹாபஹூ மேலும் தொடர்ந்து! காங்கேயரின் மனம் தவித்தது. மிகுந்த மனக்கலக்கத்துடன் அவர் த்வைபாயனர் பக்கம் திரும்பினார். “பாலமுனி, நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

Friday, August 19, 2016

ராஜமாதாவின் முடிவு!

ஆசார்ய விபூதி தன்னுடைய ஈர்க்கும் வசப்படுத்தும் குரலில் குறுக்கிட்டார். “மாட்சிமை பொருந்திய இளவரசே, நியோகா என்பது திருமணம் அல்ல! திருமணம் வேறு நியோகம் வேறு! நியோகத்திற்கெனச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் வம்சவிருத்திக்காகவே ஒரு ஆணும், பெண்ணும் உறுதி எடுத்துக் கொண்டு அனைவர் முன்னரும் அதை ஒப்புக் கொண்டு ஈடுபடுவார்கள். மாதத்தின் சில நாட்களே இருவரும் கூடுவதற்கு அனுமதிக்கப்படும். அப்போது கரு உண்டாகிவிட்டால் மீண்டும் கூடக் கூடாது; கூடவும் முடியாது. அதன் பின்னர் அவள் யாரோ; அவன் யாரோ தான்! ஆனால் பிறக்கும் குழந்தை அதன் தாயின் கணவனின் வாரிசாகத் தான் கருதப்படும். அதன் பின்னரும் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டுமென்றால் அந்தப் பெண் மீண்டும் இதே நியோக முறையில் பெற்றெடுக்கலாம். அது அந்தப் பெண்ணின் விருப்பத்தையும் நியோகத்தின் போது விந்து தானம் அளிக்கும் நபரின் விருப்பத்தையும் பொறுத்தது. ஆனால் விந்து தானம் முடிந்தபின்னர் அந்தப் பெண்ணிற்கும், அந்த நபருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது! திருமணம் அப்படி அல்ல.”

“நியோகம் என்பது ஒரு புனிதமான ரிஷி, முனிவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சடங்கு! ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது பொருந்தும். ஆனால் அதன் பின்னரும் இருவரும் கூடி வாழ முடியாது! வெறும் சிற்றின்ப ஆசைக்காகக் கூடி தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்வது என்பது நியோகத்தில் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு உங்கள் நன்றிக்கடனைச் செலுத்துவதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். முன்னோர்களுக்கு வாரிசு கிடைத்து அவர்களுக்குத் தொடர்ந்து சாஸ்திர ரீதியான சடங்குகளின் மூலம் திருப்தி செய்ய முடியும். எந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லையோ அந்தக் குடும்பம் சபிக்கப்பட்டிருக்கிறது என்பது நம் போன்ற ஆரியர்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. ஒரு ஆணாலேயே தன் முன்னோர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரிய முறையில் ஈமச் சடங்குகள் செய்விக்கப்பட வேண்டும். அதற்குத் தான் நியோக முறை உதவுகிறது!” என்று ஓர் நீண்ட விளக்கம் கொடுத்தார் ஆசாரிய விபூதி!

காங்கேயரோ மறுத்துத் தலை அசைத்தார். ஆனால் ஆசாரிய விபூதி தொடர்ந்து, “இளவரசிகள் தங்கள் உடலை மட்டும் இதற்காகப் பயன்படுத்திக்கொள்ள இசைவார்களே அன்றி வேறு எந்த நோக்கமும் இருக்காது! இதன் மூலம் நியோகம் நிறைவேறட்டும்!” என்றார். காங்கேயருக்குள் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதை அடக்குவதற்காகத் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டார். “அந்த இளவரசிகளை நீங்கள் கூறும் முறையில் தொட்டுக் குலாவுவதற்கு என்னால் இயலாது! நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். என்னுடைய சபதத்தை இதன் மூலம் ஓர் சூழ்ச்சியாக, மோசடி என அனைவரும் நினைக்கும் வண்ணம் உடைக்க மாட்டேன்.” என்றார். விபூதியின் தகப்பனார் விடாமல், “இளவரசே, நீ திருமணம் செய்து கொள்வதில்லை என்று தானே சபதம் செய்திருக்கிறாய்! ஆனால் இங்கே நீ திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை! நியோக முறையில் விந்து தானம் தானே செய்யப் போகிறாய்! இது திருமணம் அல்ல!” என்றார். ஆனால் காங்கேயரோ திட்டவட்டமாக மறுத்தார். “நியோகம் என்பதும் ஒரு வகைத் திருமணம் தான்! மற்ற எதுவும் இல்லை! நான் இதற்கு ஒப்ப மாட்டேன்.” என்றார்.

“இளவரசே, காங்கேயரே! நாங்கள் அனைவருமே உங்கள் அளப்பரிய துக்கத்தை உணர்கிறோம்; அதில் பங்கும் கொள்கிறோம். ஆனால் இந்தக் கோரிக்கையைத் தாங்கள் கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும். மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து யோசியுங்கள். வேறு வழி ஏதும் இல்லை என்பது உங்களுக்கே நன்கு புலப்படும்!” என்றார் ஆசாரிய விபூதி!

“நான் இதை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை!” என்று பட்டென்று பதில் கொடுத்தார் காங்கேயர். மீண்டும் மீண்டும் இந்த பிராமணர்கள் தன்னைத் தொந்திரவு செய்வதில் அவருக்குத் துன்பம் மேலிட்டது. “நான் என்னுடைய சபதத்தைக் காப்பாற்றப் போராடுகிறேன். என்னுடைய சபதத்தை நான் காப்பாற்றுவதன் மூலம் பல்வேறு விதமான துரதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும்? என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் இந்த ஹஸ்தினாபுரத்தின் நன்மைக்காக மட்டுமே உயிர் வாழ்வது. வருங்காலங்களில் இதன் அரியணையில் யார் ஏறி அமர்ந்தாலும் அவர்களுக்காகப் பாடுபடுவது. இந்தக் குரு வம்சத்தின் மேன்மைக்காகவே உழைப்பது! இந்த அரியணையில் ஏறி அமரும் நபர் யாராக இருந்தாலும் அவர்களால் தர்ம சாம்ராஜ்யம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும், அதற்காகவே பாடுபடுவதும் தான் இனி என் கடமை! என் முக்கியமான வேலை! அதற்காகவே நான் இனி உயிர் வாழ்வேன்!”

மாட்சிமை பொருந்திய மஹாராணியின் முகம் மிகவும் மாறியது! அவள் தன் முகத்தை எவரும் பார்க்காமலிருக்கத் தன் முக்காடை இழுத்துவிட்டுக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு தலையைக் குனிந்த வண்ணம் அமர்ந்திருக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள். அதற்குள் காங்கேயர் தன் பேச்சைத் தொடர்ந்தார்! “இனி வருங்காலங்களில் நான் இன்னமும் உறுதிப்பாடுடன் தர்ம சாம்ராஜ்யம் அமையப் பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.” என்றார்.

“உங்கள் தாயின் அவலநிலையைக் கொஞ்சம் யோசியுங்கள், இளவரசே! அரச குடும்பத்தைச் சேராத ஓர் வாரிசு இந்த அரியணையில் ஏறி அமர நேரிட்டால்! அதன் மூலம் ஏற்படப் போகும் அவலங்களுக்கு யார் பொறுப்பு?” என்றார் பிரமிஷ்டர். காங்கேயர் அதற்கு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுப் பின் பதில் சொன்னார். “நான் என் தாயைக் குறித்து நன்கு ஆலோசித்து முடிவுக்கு வந்திருக்கிறேன்.” என்றூ சொன்னவர் மீண்டும் தன் பேச்சை நிறுத்தினார். தன் தாயை ஒரு நிமிடம் கவனித்தார். அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை! “ நான் உயிருடன் இருக்கும்வரை என் தாயின் மஹாராணிப் பதவியையும், ராஜமாதா என்னும் அந்தஸ்தையும் நிலை நிறுத்துவேன். அதை அனைவரும் கடைப்பிடிக்கப்பாடுபடுவேன். அவள் வாக்கு எல்லா இடத்திலும் எந்த நேரத்திலும் செல்லுபடியாகும் என்னும் நிலையை உருவாக்குவேன். அவள் சொல்லே அனைவராலும் மதிக்கப்படும். அப்படி ஒரு வேளை அவளுக்கு முன்னர் நான் பித்ரு லோகத்துக்கு அழைக்கப்பட்டு விட்டால், அப்போதும், நான் அவள் அதே அதிகாரத்துடனும், மரியாதையுடனும், அனைவரின் விசுவாசத்துடனும் வாழ வகை செய்து விடுவேன். அவளை எவரும் அவமதிக்காமல் கவனமாகப்பார்த்துக் கொள்வேன். இந்தக் குரு வம்சத்திற்கே அவள் ஓர் காவல் தெய்வமாக இருந்து வருகிறாள். அந்நிலையிலிருந்து அவளை எவரும் கீழிறக்காமல் பார்த்துக் கொள்வேன். அப்படியே அவள் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருவாள். நான் முன்னால் பித்ருலோகம் சென்று விட்டாலும் எவராலும் அவமதிக்கப்படாமல் வாழ வழி செய்துவிடுவேன். அவள் உயிருள்ளவரையிலும் எவராலும் அவளை அவமானம் செய்ய முடியாது. அவள் பேச்சை மறுக்க முடியாது!”

மாட்சிமை பொருந்திய ராஜமாதா சத்யவதியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை. முதல்முறையாக அனைவரும் நிறைந்த அந்தச் சபையில் தன் முகத்தை மூடி இருந்த முக்காட்டுத் துணியை அகற்றினாள். பொங்கும் கண்ணீருடனும், உணர்ச்சியால் தழுதழுக்கும் குரலிலும் பேசத் தொடங்கினாள். “என் அருமை மகனே, காங்கேயா, நீ உன் விசுவாசத்தையும் அன்பையும் என்மேல் மழையாகப் பொழிந்து வருகிறாய்!  ஆனால் நீ இவ்வளவு சிரமப்பட்டு என்னைக் கவனித்துக்கொள்ளவேண்டாம். அதேபோல் காசி நகரத்து இளவரசிகளுக்கும் உன் கவனிப்போ ஆறுதலோ தேவை இல்லை!” என்றவள் தொடர்ந்து, “இந்தத் தண்டனை எனக்குக் கடவுளால் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த தண்டனைக்கு நான் தகுதியானவள் தான்! எனக்கு இந்த தண்டனை தேவை தான். நான் என் கடமையிலிருந்து தவறி இருக்கிறேன். ஒரு மனைவியாக ஆரிய புத்திரர் மஹாராஜாவுக்கு ஒரு நல்ல மகனை, அவருக்கும் அவர் குலத்து முன்னோர்களுக்கும் உரிய முறையில் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் சிறிதும் குறைவின்றி நிறைவேற்றக் கூடியதொரு மகனை அளிக்கவில்லை! அந்தக் கடமையிலிருந்து நான் தவறி விட்டேன்.” என்ற வண்ணம் நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் கண்கள் இப்போது வறண்டு காணப்பட்டன. சொல்லில் அடங்காததொரு கம்பீரமும், சோகமும் நிரம்பிய குரலில் பேசினாள். தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு பேசினாள். “நான் வானப்ரஸ்தம் செய்ய நிச்சயித்திருக்கிறேன். கோதுலியில் மஹான் பராசர முனிவர் எங்கே எரிக்கப்பட்டாரோ அந்த இடத்துக்குச் சென்று அங்கே என் இறுதி நாட்களைக் கழிக்க எண்ணியுள்ளேன். என்னுடன் காசி தேசத்து இளவரசிகளையும் அழைத்துச் சென்று விடுகிறேன்.” என்றாள் தீர்மானமான குரலில்! மஹாராணியின் இந்த திடீர் முடிவு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அனைவரும் கலங்கினார்கள். யாருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. ராஜமாதா மெல்லத் தன் ஆசனத்திலிருந்து எழுந்தாள். தன் தலைத் துணியைச் சரி செய்து கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேற ஆயத்தமானாள். பின்னர் ஏதோ நினைத்தவள் போல் த்வைபாயனரைப் பார்த்து, “கிருஷ்ணா, என்னை கோதுலிக்கு அழைத்துச் செல்!” என்று ஆணையிட்டாள்.

Tuesday, August 16, 2016

பீஷ்மரின் மறுப்பு!

மாட்சிமை பொருந்திய குருவே, இப்போதிருக்கும் இந்த துரதிருஷ்டமான சூழ்நிலை குறித்தும், அதைச் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் ராஜமாதா சத்யவதி தேவி என்னுடன் பல முறை ஆலோசித்து விட்டார். அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தான் வேண்டுகிறார். அவருடைய இந்த வேண்டுகோளை நான் பல கோணங்களிலும் ஆராய்ந்து யோசித்துப் பார்த்துவிட்டேன்.” என்றார் காங்கேயர்.
“பின்னர் உங்கள் முடிவுதான் என்ன? இளவரசே!” என்று ஆசாரியர் கேட்க, மஹாராணி சத்யவதியோ, தன் முகத்தின் உணர்வுகளை மறைக்கும் விதமாகக் கீழே முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். மெல்லிய குரலில், “அப்போது என் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுவிட்டதா?” என்று வினவினாள். அடிபட்ட மிருகத்தைப் போன்றதொரு சோகமான முகபாவமும் அவள் தொனியும் பார்ப்போர் அனைவரையும் கலங்கச் செய்தது. “தாயே, என்னை மன்னியுங்கள். உங்களை நான் அவமதித்துவிட்டதாக நினைக்க வேண்டாம். என் நிலைமையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். என் வாக்குறுதி, என் சபதம் அது என்னாவது? என்னுடைய அவலமான நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!” என்று தயவாகக் கேட்டுக் கொண்டார் காங்கேயர். மேலும் முறையிடுகின்ற தொனியில் பேசினார். “தாயே, என் சபதம் என்ன ஆவது? அதை நான் உடைக்க முடியுமா? எப்படி உடைப்பேன்? அந்த சபதத்தை நான் எடுக்கும்போது எத்தகையதொரு மனோநிலையில் இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதை நிறைவேற்றி வைப்பதற்காக நான் பட்ட சிரமங்களை, மன உளைச்சல்களை, உடல் வேதனைகளை அறிவீர்களா? பலத்த போராட்டங்களைச் சந்தித்தேன். இரவும், பகலும் அதை நிறைவேற்றி வைக்க வேண்டியே பாடுபட்டு வந்தேன். பற்பல சோதனைகளைச் சந்தித்து அவற்றில் வெற்றி கண்டு மிக்க பிரயாசையுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். கடைசியில் நான் என் உணர்வுகளை வெற்றி கொண்டு இன்று பெண்களையே என் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அகற்றி இருக்கிறேன். இவ்வளவு பாடுபட்டுப் பெற்ற வெற்றியை இன்று நான் நாசமாக்கலாமா? எப்படி நான் ஒரு பெண்ணை மணந்து வாழ முடியும்? எப்படி என் சபதத்தை மீறுவதிலிருந்து என்னை நானே சமரசம் செய்து கொள்ள முடியும்?”

அப்போது மஹாபஹூ நடுவில் பேச முயற்சித்தார். ஆனால் காங்கேயர் தன் சைகையினால் அவரைத் தடுத்தார். “சற்றுப் பொறுங்கள், மாமா! சிறிது நேரம் எனக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவும் அவன் செயலோ? கடவுளருக்கு நான் என்னுடைய பிரதிக்ஞையை உடைத்து எறியவேண்டும் என்னும் ஆசையோ? அல்லது அவர்கள் எனக்குக் கொடுக்கும் சோதனையோ இது? தெரியவில்லை! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் மட்டும் என் சபதத்தை உடைத்துத் திருமணம் செய்து கொண்டு வாரிசைப் பெற்று எடுக்காவில்லை எனில் இந்தக் குருவம்சத்தினரின் கண்கள் முன்னர் நான் ஓர் ஏமாற்றுக்காரனாகவும், பிடிவாதம் பிடிக்கும் முட்டாளாகவும், ஓர் பாபியாகவும் காட்சி அளிப்பேன். அதுவும் எனக்குப் புரிகிறது!”

“ஆம், இளவரசே, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். உங்களுக்கே நிலைமை புரிந்திருக்கும்போது ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறீர்கள்?” ஆசாரிய விபூதி மீண்டும் கேட்டார். “எங்கள் அனைவரின் ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றும் கூறினார். காங்கேயர் அவரைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் அடக்கத்துடன் பேசினார்.” உங்கள் அனைவரையும் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள ஸ்ரோத்திரியர்கள் மற்றும் மரியாதைக்கு உரிய உறவினர்கள், மதிப்புக்குரிய ராஜமாதா, நான் உங்களை எவ்வளவு மதிக்கிறேன், மதித்துப் போற்றுகிறேன் என்பதைச் சொல்லவே வேண்டாம். இவ்வுலகில் உள்ள அனைவரிலும் என் மரியாதைக்கு உரியவர் நீங்கள்! தயவு செய்து என் முன்னிருக்கும் தேர்வுகளைக் கூர்ந்து கவனியுங்கள். நான் சத்யப்பிரதிக்ஞனாக அங்கீகாரம் பெற்றிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதனாலேயே மக்களுக்கு என் மேல் மதிப்பும், மரியாதையும் அதிகம் என்பதையும் அறிவீர்கள். என்னை தர்மத்தின் அவதாரமாகவே மக்கள் கருதுகின்றனர். கடவுளுக்கும் மேல் உயர்ந்தவனாக என்னை மதித்துப் போற்றுகின்றனர். ஏனெனில் நான் சத்யப் பிரதிக்ஞையை உடைப்பதை விட இறப்பதே மேல் என நினைப்பவன். அதையும் மக்கள் அறிந்திருக்கின்றனர்.”

“கடந்த இருநாட்களாக நான் பட்ட மனவேதனையை யார் அறிவார்? என்னைத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை வாழும்படி நீங்கள் கூறியவற்றை ஏற்றுக்கொள்ள நான் பட்ட பாடு! யார் அறிவார்? உங்கள் வேண்டுகோளை ஏற்க என் மனம் சிறிதும் ஒப்பவில்லை. என் மனதை மீறி என்னால் என்ன செய்யமுடியும்? உங்கள் வேண்டுகோளை ஏற்கவேண்டும் என்ற என் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டன. என்னால் முடியவில்லை. அதற்காக நான் பட்ட பாட்டை யார் அறிவார்? என் மனம் நடத்திய போராட்டங்கள்! நான் நரகத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதிலிருந்து மீள்வேனா என்னும் அச்சம் எனக்குள் வந்துவிட்டது!” சற்றே நிறுத்திவிட்டு உணர்ச்சி வசப்பட்டதால் வியர்த்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்ட காங்கேயர் மேலும் பேசினார். “தயவு செய்து என் சபதத்தை உடைக்கும்படி என்னிடம் சொல்லாதீர்கள்! அது என்னால் இயலாத ஒன்று! நான் அதன் பின்னர் நடைப்பிணமாகத் தான் வாழ வேண்டும். அது இறந்து போவதைவிடக் கொடூரமானது. அது என்னுள்ளே இருக்கும் என் ஆன்மாவையே கொன்று விடும் சக்தி படைத்தது. என்னுடைய சுயதர்மம் அழிந்து விடும். தர்மத்தை அழித்துவிட்டு நான் உயிர் வாழ்வது ஆன்மா இறந்த பின்னரும் உயிர்வாழ்வதை விடக் கொடுமையானது. என் ஆன்மாவே அழிந்து விடும். இதற்கு நான் ஒருக்காலும் ஒப்ப மாட்டேன்.”

காங்கேயரின் முகம் அவர் உள்ளத்து உணர்சிகளை அப்படியே காட்டியது. அவர் முகம் சிவந்து உணர்ச்சிகரமாகக் காட்சி அளித்தது. அனைவருக்கும் அவரின் உள்ளம் புரிந்தது. அவரின் மனப்போராட்டங்களை அனைவரும் உணர்ந்து கொண்டனர். எத்தகையதொரு கடினமான சூழ்நிலையில் அவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். எல்லோருக்கும் மேல் அதிகமாக இதைப் புரிந்து கொண்டது ராஜமாதா சத்யவதி தான். தன்னுடைய உலர்ந்த சுருங்கிய கரங்களை உயர்த்தியவண்ணம் கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தார் ஆசாரிய விபூதியின் வயது முதிர்ந்த தந்தை பிரமிஷ்டர். “குரு வம்சத்தின் சிறந்தவனே! உனக்கு என் ஆசிகள். உன் மனப்போராட்டங்களை நாங்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். உன்னுடைய சபதத்தை உடைக்க வேண்டுமெனில் நீ அனுபவிக்கும் மனப் போராட்டங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் சிரமங்களையும் உணர்ந்து கொள்கிறோம். ஆனால் மகனே, இதற்கு வேறு ஓர் வழி இருக்கிறது. அதை உன் தாய் ராஜமாதா சத்யவதியும் ஏற்றுக் கொள்வாள் என்றே நம்புகிறேன். நீயும் உன் சபதத்தை உடைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதே சமயம் சக்கரவர்த்தி ஷாந்தனுவின் வம்சமும் பட்டுப் போகாமல் துளிர்த்துத் தழைக்கும்.”

“என்ன வழி  இருக்கிறது? எனக்கு எதுவும் தெரியவில்லையே!” என்றார் காங்கேயர்.

தன் நடுங்கும் கரங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துப் பிடித்துக் கொண்ட பிரமிஷ்டர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார். “மகனே, நியோக முறையில் நீ உதவ முடியும். அது ஒன்றே வழி. இந்தக் காலத்துக்கு இது ஒவ்வாது தான். இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லை தான். ஆனால் இந்தச் சூழ்நிலையில் வேறு வழியே இல்லை! இது நம் ரிஷி, முனிவர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று! இதை முயன்று பார்க்கலாம்!” என்றார் ஆசாரிய பிரமிஷ்டர். காங்கேயருக்குத் தூக்கி வாரிப் போட்டது! என்ன நியோக முறையா? இருக்காது! சீச்சீ, ஆசாரியர் அப்படி எல்லாம் சொல்லி இருக்கவே மாட்டார். தனக்குத் தான் காதுகள் சரியாகக் கேட்கவில்லை போலும்! என்றாலும் காங்கேயர் ஆசாரிய பிரமிஷ்டரைப் பார்த்து, “குருவே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்னுடைய இளைய சகோதரனின் மனைவிமார்கள் மூலம் நான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு ஆசாரிய பிரமிஷ்டர், “இது ஒரு புராதனமான வழிமுறை! நம் ரிஷி, முனிவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று!” என்றார். காங்கேயருக்கு உள்ளூரக் கோபம் கொதித்து எழுந்தது. தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொள்ளவே முதலில் அவர் நினைத்தார். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அதாவது நான் என் சொந்தப் பெண்களைப் போல் கருதும் காசி தேசத்து இளவரசிகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார். “என்னால் இதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை!” என்றும் கூறினார்.

“மகனே, இது ஒரு தலையாய கடமை! குடும்பச் சங்கிலி அறுந்து போகாமல் பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உயிர் வாழ்ந்திருக்கும் சகோதரனைச் சார்ந்தது ஆகி விடும். அவன் தான் குடும்பச் சங்கிலி அறுந்து போகாமல் காப்பாற்ற வேண்டும், இது அவன் பொறுப்பு! கடமையும் கூட! வேதங்கள் கூட, “உன் குடும்பச் சங்கிலி, பாரம்பரியம் அழியாமல் பாதுகாத்துக் கொள்!” என்று தான் சொல்கிறது!” என்றார் ஆசாரிய பிரமிஷ்டர்! மஹாபஹூவிற்கு மனதிற்குள்ளாக நம்பிக்கைக்கீற்றுத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. “இளவரசே, எங்கள் குடும்பத்தில் கூட நியோக முறையில் ஓர் குழந்தை பிறந்துள்ளது. அது யார் தெரியுமா? என் தாத்தா தான்! ஆகவே இதை நாம் ஏற்கலாம்!” என்றார். ஆனால் இந்த அதிர்ச்சியிலிருந்து மெதுவாக வெளியே வந்துவிட்ட காங்கேயரோ, “என்னால் முடியாது! நியோகமும் ஒரு திருமணத்தைப் போலத் தான்!” என்று திட்டவட்டமாக மறுத்தார்.


Wednesday, August 3, 2016

பீஷ்மருக்கு நெருக்கடி!

தன்னுடைய மாளிகையின் மேன்மாடத்தில் கங்கையைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார் தேவவிரதன் காங்கேயன். அவர் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பார்வையில் மிகவும் மரியாதையும், பக்தியும், பாசமும் தெரிந்தது. அவர் கங்கையைத் தன் தாயாகவே மதித்தார். தாயாகவே நினைத்தார். அந்தத் தாயை வணங்கி இப்போது நாட்டை எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்னைகளையும் தன்னால் சமாளிக்க வேண்டிய வலிமையைக் கொடுக்கும்படி பிரார்த்தித்தார். சத்யவதி எப்போது வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம். அந்த அழைப்புக்காக அவர் காத்திருந்தார். இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரிடரை அவளால் சமாளிக்க முடியவில்லை. அவளுடைய நடவடிக்கைகள், பழக்க, வழக்கங்கள் அனைத்தும் மாறி விட்டிருந்தன. ஆம், விசித்திர வீரியனின் மரணம் சத்யவதியை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே பீஷ்மர் என்று பெயர் வாங்கிவிட்டிருந்த காங்கேயனின் சபதத்தை உடைப்பதே அவளுக்கு இப்போது மிக முக்கியமாகத் தெரிந்தது. திசை தெரியாமல் அலைந்து  கொண்டிருந்த அவள் வாழ்க்கைப் படகின் நங்கூரமாக அந்தச் சபதத்தை உடைப்பதை அவள் கருதினாள்.

ஆகவே காங்கேயரைத் திரும்பத் திரும்பக் கெஞ்சினாள். சபதத்தை உடைக்குமாறு வேண்டினாள். அவளுடைய இரு பிள்ளைகளும் உயிருடன் இருந்தவரையில் அந்த சபதத்திற்குத் தேவையும் இருந்தது; பொருளும் இருந்தது. இப்போதோ தலைவன் இல்லாம மரக்கலம் போல ஹஸ்தினாபுரத்து சாம்ராஜ்யம் தள்ளாடுகிறது. இதை காங்கேயர் ஒருவரால் மட்டுமே நிலைக்குக் கொண்டு வர முடியும். ஆகவே காங்கேயரை ஹஸ்தினாபுரத்தின் அரியணையை ஏற்றுக் கொள்ளும்படியும் தக்கதொரு பெண்ணைப் பார்த்து மணந்து கொண்டு பரதனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு வரவும் வேண்டினாள். காங்கேயர் மணந்து கொள்ளுவதன் மூலம் குரு வம்சத்திற்கு வாரிசு கிடைக்கும் என்பதோடு பித்ரு லோகம் போய் விட்டிருக்கும் ஷாந்தனு போன்ற முன்னோர்களுக்கும் அதன் மூலம் நற்கதியும் மோக்ஷமும் கிட்டும். இப்போது இறந்துவிட்டிருக்கும் அவளுடைய இரு மகன்களுக்கும் கூட நற்கதி கிடைக்கும். அவள் இதை எல்லாம் காங்கேயரிடம் எடுத்துச் சொல்லி நன்கு யோசிக்கும்படியும் அவருக்கு 2 நாட்கள் அவகாசம் தருவதாகவும் கூறி இருந்தாள்.

காங்கேயர் தன் தந்தை இறந்தபின்னர் ஹஸ்தினாபுரத்தையும் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தையும் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சோர்வு மனப்பான்மையை நினைத்து நினைத்து வருந்தினார். அவர் தந்தை ஷாந்தனு இந்த பரத கண்டம் முழுமைக்கும் தெரிந்தவராக இருந்ததோடு அல்லாமல் அனைவரும் அவரை மதித்தனர். மரியாதை செய்தனர். அவருடைய சாதனைகள் அனைத்தும் குரு வம்சத்துக்கு மாபெரும் புகழைத் தேடித்தந்தன. அவருடைய தலைமையின் கீழ் ஆர்ய வர்த்தம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாடின் கீழ் வந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளின் விளைவாக அடுத்தடுத்து ஏற்பட்ட தாக்கங்கள்! அது இந்தக் குரு வம்சத்தினருக்கு மனதிலேயே ஓர் வெறுப்பையும் விரக்தியையும் உண்டாக்கி விட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சியான நிகழ்வு அம்பாவால் ஏற்பட்டது. அது மரண அடியாக விழுந்து விட்டது. காசி தேசத்து அரசனின் மூத்த மகளான அவளால் ஏற்பட்ட அந்தக் கொடுமையான நிகழ்வுகளை இப்போது நினைத்துப் பார்த்தாலும் காங்கேயரின் உடலையும் உள்ளத்தையும் உலுக்கியது. எவ்வளவு கொடுமையான கடூரமான எண்ணங்கள் உள்ள பெண்!

இதை எல்லாம் சமாளிப்பதற்குள்ளாக அதை விட மோசமாக விசித்திரவீரியனின் மரணம் பெரிய துக்கமாக சம்பவித்து விட்டது. இதை எவரும் எதிர்பார்க்கவே இல்லை! அந்த மரணத்தின் மூலம் மேலும் மேலும் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை எப்படிச் சரி செய்வது என்றே புரியவில்லை. மிகவும் கஷ்டமான பிரச்னைகளாக உள்ளன! அவனுடைய இளம் மனைவியர் இருவரும் இப்போது விதவைகளாக இருக்கின்றனர். அதோடு மட்டுமா? இந்த மாபெரும் பாரம்பரியத்தைக் கொண்ட அரசகுலத்தில் இப்போது வாரிசுகளே இல்லை! ஆகவே அவர் மேல் அனைவரும் தங்கள் விருப்பங்களைத் திணிக்க ஆரம்பித்துவிட்டனர். அவருடைய சபதத்தை அவரே உடைத்துவிட்டுத் திருமணம் செய்து கொண்டாக வேண்டுமாம். வாரிசுகளைப் பெற்று அரசகுலத்துக்கு அளிக்க வேண்டுமாம். அவர் ஹஸ்தினாபுரத்தின் அரியணையிலும் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாம். இவை எல்லாம் மற்றவர்கள் மட்டுமல்லாமல் ராஜமாதாவான சத்யவதிக்கும் இவைதான் இப்போது விருப்பமாக இருந்து வருகிறது.

ராஜமாதா சத்யவதி சாமானிய மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தாள். அவளை மக்கள் அளவுக்கு மீறி நேசித்தனர். அவள் மனம் எப்போதும் ஏழைகள் பாலும் துன்பப்படுபவர்கள் பாலும் இரங்கியது. அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்தாள். அவளுடைய பெருந்தன்மையான போக்காலும், உண்மையான பிரியத்தினாலும் குரு வம்சத்தின் தலைவர்களில் பலரும் மஹாராணியை ஆதரித்தனர். அவளை மிகவும் மரியாதை செய்து வந்தனர். அவளுடைய புத்திசாலித்தனத்தை நினைத்து மகிழ்ந்து பேசிக் கொண்டனர். ஆகவே இப்படி இருக்கையில் வெளியிலிருந்து உள்ள கிளை வம்சத்தினரில் எவராவது இந்த அரியணைக்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வந்து அமர்ந்து விட்டால்? மஹாராணியின் நிலைமையும் மோசமாகிவிடும். அவளுக்கும் சரி, அவளுடைய இரு இளம் மருமகள்களான காசி தேசத்து இளவரசிகளுக்கும் சரி உரிய அரச மரியாதையும், அரண்மனை வாசமும், உரிமைகளும் கிடைப்பது கடினமாகி விடும். அவர்கள் அனைவரும் அரியணையில் இருக்கும் அரசனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எங்காவது ஒரு மூலையில் இருந்து கொள்ள வேண்டியதாகிவிடும். அப்படி நடக்கக் கூடாது!

இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்த காங்கேயரின் நினைவலைகள் அப்போது அங்கே வந்த ஒரு மந்திரி கௌண்டின்யர் என்பவரல் தடைப்பட்டது. அவர் காங்கேயரிடம், “ராஜமாதா இளவரசர் காங்கேயரை வரவேற்கச் சித்தமாகக் காத்திருக்கிறார்கள்!” என்றார். “ம்ம்ம்ம்ம், ஆனால் நான் அவர்களைச் சந்திக்கச் சித்தமாக இருக்கிறேனா? தெரியவில்லையே!” என்று தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார் இளவரசர் காங்கேயர். ராஜமாதாவைச் சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் அவருக்குள்ளாக ஓர் உத்வேகம், ஊக்கம் ஏற்படும். ஆனால் இப்போதோ! அவருக்குத் தான் கொலைக்களத்துக்குச் செல்வது போல் உணர்ந்தார். மெல்ல மெல்ல நடந்தார் காங்கேயர். ராஜமாதா எப்போதும் போல் அரண்மனையின் சின்னஞ்சிறிய கோயிலில் அந்த விக்ரஹத்துக்கு அருகே அமர்ந்திருந்தாள். இது அவள் எப்போது நினைத்தாலும் வழிபட வசதியாக அவளுக்கென கட்டிக் கொடுக்கப்பட்டது. அவள் முகம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தது. கண்கள் எப்போது வேண்டுமானாலும் கண்ணீரைக் கொட்டி விடும்போல் நிரம்பி வழிந்தன. அவள் பின்னால் வாடிகா அமர்ந்திருக்க சற்றுத் தொலைவில் தாவி நின்று கொண்டிருந்தாள். கதவுக்கருகே நின்று கொண்டு வேறு எவரும் உள்ளே நுழைந்துவிடாதவாறு காவல் காத்துக் கொண்டிருந்தாள் தாவி.

இவர்களைத் தவிர ராஜமாதாவின் இன்னொரு புறத்தில் த்வைபாயனரும் அமர்ந்திருந்தார். அவரை இப்போது பராசரையர் என்ற பெயரிலும் அழைத்து வந்தனர். அவர் அருகே அவருடைய சீடனும், வாடிகாவின் சகோதரனும் ஆன சுமாந்து அமர்ந்திருந்தான். இன்னொரு பக்கம் குரு வம்சத்தின் வயது முதிர்ந்த தலைவர்களான மஹாபஹுவும், சுகேதுவும் அமர்ந்திருக்க அவர்கள் அருகே மந்திரி குனிகரும் காணப்பட்டார். மேலும் ராஜமாதாவின் எதிரே போடப்பட்டிருந்த ஆசனங்களில் ராஜகுருவான ஆசாரிய விபூதியும் மற்ற குரு வம்சத் தலைவர்களும் அமர்ந்திருந்தனர். அவர் அருகே அவருடைய வயது முதிர்ந்த தந்தை பிரமிஷ்டரும், விபூதியின் துணைவரான ஆசாரிய தேவயானரும் கூட அமர்ந்திருந்தனர். காங்கேயர் தன் அன்னையை வணங்கினார். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சத்யவதி தன் வலக்கையை உயர்த்தி காங்கேயரை ஆசீர்வதித்தாள். காங்கேயர் மேலும் அங்கிருந்த முனிவர் த்வைபாயனர், ஆசாரிய விபூதி, அவருடைய தந்தை, மற்ற ஆசாரியர்கள், குரு வம்சத்தலைவர்கள் அனைவரையும் வணங்கினார். பின்னர் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். அனைவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர். அனைவர் முகமும் உள்ளார்ந்த பெருமிதத்தில் இருந்தது. ஆனால் ஆசாரிய விபூதி பேச ஆரம்பிக்கையில் அவர் குரலில் சோகமே கப்பி இருந்தது.

“பரத குலத்து வாரிசான இளவரசே, இங்கே ஏற்கெனவே இந்த விஷயம்பல முறை விவாதிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு முனையிலும் இந்த விஷயம் பல முறை ஒரு நாளும் ஒரு பகலுமாகக் கூடி இருந்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக் கோணங்களிலும் இதைக் குறித்து ஆராய்ந்தோம். எங்களுடைய ஒரே முடிவு நீங்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றே. அதில் எங்கள் அனைவருக்கும் மிகவும் சம்மதம். இந்த பரத குலத்துக்கு ஓர் ஆண் வாரிசு வேண்டும். ஆண் வாரிசு இல்லாமல் உங்கள் தந்தை, மற்றும் உங்கள் குலத்து முன்னோர்கள், அவ்வளவு ஏன்? நீங்களும் ஒரு நாளில் உங்கள் முன்னோர்களான பித்ருலோகம் அடைவீர்கள். அப்போது உங்களுக்கும் இது தேவை. உங்கள் அனைவரையும் பித்ருலோகத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வைக்கத் தேவையான சடங்குகளை ஓர் ஆண் வாரிசாலேயே செய்ய முடியும். ஆகவே ஓர் ஆண் வாரிசு இல்லை எனில் அது அவமானத்துக்கு உரியது! நம்முடைய புராதனமான குரு வம்சமே மெல்ல மெல்ல தாழ்வு நிலைக்கு வந்துவிடும். நீங்களும் உங்கள் தந்தையும் மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டிய க்ஷத்திரிய தர்மமும், தர்ம சாம்ராஜ்யமும் சுக்கு நூறாகி விடும். அனைத்தும் வீணாகி விடும். மாட்சிமை பொருந்திய ராஜமாதாவும் இதை ஒப்புக் கொள்கிறார்.”

ராஜமாதா தலையை அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். த்வைபாயனரைப் பார்த்து காங்கேயர், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள், பாலமுனி?” என்று கேட்டார். “நான் எல்லாவற்றையும் மாட்சிமை பொருந்திய ராஜமாதாவின் கைகளில் விட்டுவிட்டேன்.” என்றார் த்வைபாயனர். அப்போது மூத்த தலைவரான மஹாபஹூ பேசத் தொடங்கினார்.

“காங்கேயா, நீ மட்டும் மணந்து கொள்ளவில்லை என்றாலோ அல்லது அரியணை ஏற மறுத்தாலோ இந்தக் குரு வம்சமே ஓர் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். இது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம். இந்தச் சூழ்நிலையின் தாக்கங்களையும் எதிர்விளைவுகளையும் நீ நன்றாகப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். நீ இந்த அரியணையில் அமரச் சம்மதிக்கவில்லை எனில், உனக்கு அடுத்து நான் தான் அந்த நிலையில் இருக்கிறேன். ஆகவே நான் அரியணையில் அமர்ந்து விடுவேன். ஆனால் என் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. குரு வம்சத்து முன்னேற்றங்களை உத்தேசித்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஆனால் என்னைப் போல் என் மகன்கள் சும்மா இருக்க மாட்டார்கள். என் மூத்த மகன் எப்போது வேண்டுமானாலும் இந்த அரியணையில் அமரக் காத்திருக்கிறான். அதோடு அது அவன் உரிமையும் கூட. அவனுக்கு இந்த அரியணையில் அமர முழு உரிமையும் உள்ளது. ஆனால் அவனால் அனைத்துக் குரு வம்சத்துத் தலைவர்களையும் ஒரு சேரக் கட்டிக் காக்க இயலாது. ஆகவே இதை நான் தியாகம் செய்வது இயற்கையாக இல்லை தான்! ஆனாலும் வேறு வழியில்லை! ஹஸ்தினாபுரத்தை நான் அளவுக்கதிகமாக நேசிக்கிறேன். அது நொறுங்கி விடக் கூடாது என்றும் எப்போதும் இதே மாதிரியான முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.”

Tuesday, August 2, 2016

பீஷ்ம, பரசுராம யுத்தம் குறித்த ஓர் விளக்கம்!

நாம் படித்து வருவது முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரம் தொடர்கள். ஆகவே அவர் எழுதியிருப்பதைத் தான் நான் அப்படியே தருகிறேன். நடுநடுவே ஆங்காங்கே ஒரு சில கருத்துகளோ ஒரு சில புராணக்கதைகளோ அல்லது ஒரு சிலரின் முன் கதைகளோ தேவையை ஒட்டித் தந்தாலும் என்னுடைய எழுத்து என்பது மொழிபெயர்ப்போடு முடிகிறது. ஆகவே இங்கே பரசுராமருக்கும் பீஷ்மருக்கும்  குரு--க்ஷாத்ரா யுத்தம் நடந்ததை (அதனால் தான் தர்ம க்ஷேத்திரம் குரு க்ஷேத்திரம் என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கூற்று) இங்கே விவரிக்கவில்லை.

பரசுராமர் அம்பாவுக்கு உதவி செய்வதற்காக பீஷ்மருடன் தர்மக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்கிறார். இப்படி குருவுக்கும் அவர் மாணவனான க்ஷாத்திரனுக்கும் (க்ஷத்திரியன்) நடந்த யுத்தம் 23 நாட்கள் நடந்ததாகத் தெரிந்து கொள்கிறோம். இந்த யுத்தத்தில் பரசுராமரை வெல்ல முடியாத பீஷ்மர் கடைசியில் நித்திரா அஸ்திரத்தை ஏவி அவரைத் தூங்கச் செய்ததாக ஒரு கூற்று. இன்னும் சிலர் பரசுராமர் பீஷ்மரை வெல்ல முடியாமல் தோற்றார் என்றும் சொல்கின்றனர்.  இதைக் குறித்து நம் முன்ஷிஜி அவர்கள் விரிவாகச் சொல்லவில்லை. மேலும் இந்தப் புத்தகம் வேத வியாசரைக் குறித்தது. அவருடைய பண்புகள், குணநலன்கள், பெற்ற வெற்றிகள், செய்த சேவைகள் என்றே நாம் பார்த்து வருகிறோம்; இனியும் பார்க்கப் போகிறோம்.

அதனால் பீஷ்மர், பரசுராமர் யுத்தம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொண்டு நாம் இனி மேலே த்வைபாயனருடனே பயணிப்போம். ஒரு சிலர் தனி மடல்களிலும், ஶ்ரீராம் பின்னூட்டத்திலும் கேட்டிருப்பதால் இந்த விளக்கம் கொடுக்க வேண்டி வந்தது.  மேலும் நாம் படிப்பதும் சரி, நான் எழுதி வருவதும் சரி, கிருஷ்ணாவதாரக் கதைகளே. முழு பாரதம் அல்ல! :)

பரசுராமரின் முடிவும் விசித்திரவீரியனின் மரணமும்!

காங்கேயர் சொன்னதைக் கேட்ட பரசுராமர் கண்கள் பளிச்சிட்டன. பெருங்குரலெடுத்துச் சிரித்தார். மஹா அதர்வணர் பக்கம் திரும்பியவர், “மஹா அதர்வரே! எல்லோரும் இறக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அம்பா நெருப்பில் விழுந்து உயிர் விடத் துடிக்கிறாள். சத்யவதியும் இறக்கவே விரும்புகிறாள். இளவரசன் காங்கேயன் இறக்க விரும்புகிறான். ஒருவேளை தர்மம் அழிந்து விடும் அதற்குத் தோல்வி ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் த்வைபாயனன் கூட இறக்கவே விரும்புவான். அப்போது உங்கள் அருமைக்குமாரி ஜாபாலி புத்திரி தன் கணவனுக்கு முன்னரே தான் இறக்கவேண்டும் என்று இறந்துவிடுவாள்.” இதைச் சொன்ன பரசுராமர் தான் ஓர் மாபெரும் வீரன் என்பதைக் காட்டும் கம்பீரக் குரலில் பேசியவர் அந்தக் குரலிலேயே மீண்டும் பெரும் சிரிப்புச் சிரித்தார். அவர் கண்களில் மிதமிஞ்சிய மகிழ்ச்சி தெரிந்தது. “மஹா அதர்வரே, நீங்களும் நானும் மட்டுமே இவ்வுலகில் இன்னமும் இருக்க விரும்புகிறோம். ஏனெனில் நாம் இருவரும் வாழ்க்கையின் அஸ்தமனத்தில் இருக்கிறோம் அல்லவா!” என்று சொன்னார். மீண்டும் அவர் சிரித்த சிரிப்பில் அவர் முகமே சிவந்துவிட்டது!

“ஆஹா! இங்கே அனைவருமே மரணத்தின் கடவுளான யமதர்மராஜனிடம் காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜாபாலி? நீர் ஏன் அப்படி இல்லை?” என்று கேட்டவண்ணம் மஹா அதர்வர் பக்கம் திரும்பினார். அவரிடம் ஏதோ மாற்றத்தைக் கண்டவராகப் பேச்சை நிறுத்தினார். அதற்குள்ளாக ஜாபாலி முனிவர் ஆழ்நிலை தியானத்துக்குச் சென்று விட்டிருந்தார். அங்கிருந்த அனைவரும் மௌனமாக இந்த மாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கழிந்தன. பின்னர் மஹா அதர்வரின் குரல் எங்கோ பாதாளத்திலிருந்து கேட்பது போல் தொனிக்க அவர் பேசினார். “மரணத்தின் கடவுள் யமதர்ம ராஜன் நமக்கு மிகவும் அருமையான ஒருவரின் உயிரை எடுத்துவிட்டான். இங்கிருக்கும் அனைவருக்கும் அவர் மிக நெருங்கியவர். எவரோ இந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு நம்மைச் சந்திக்க வருகின்றனர். அவர் இப்போது இந்த மலையின் மேல் ஏறிக் கொண்டிருக்கிறார்.” என்றார். சத்யவதியின் முகம் பயத்தில் வெளுத்தது. அவள் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்து வந்த அந்த மரண அடி கடைசியில் அவள் மேல் விழுந்து விட்டது. அவள் குரலிலேயே கண்ணீர் நிரம்பி இருந்தது. அந்தக் குரலோடு அவள், “மஹா அதர்வரே! மரணத்தின் கடவுள் யாரை எடுத்து விட்டார் என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?”

திடீரென மஹா அதர்வர் தன்னுடைய தியானத்திலிருந்து எழுந்து விட்டார். சுற்றும் முற்றும் பார்த்தார். அனைவரும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அவர் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர். “எவரோ மலை மேல் ஏறி வந்து கொண்டிருக்கின்றனர். வருபவர் உங்களுக்குச் செய்தியைச் சொல்வார். சுமாந்து, நீ போய் அவரை அழைத்து வா!” என்றார். அங்கிருந்த அனைவரும் பயத்திலும் கலக்கத்திலும் மௌனத்தைக் கடைப்பிடித்தனர். சுமாந்து வெளியே சென்று வந்திருப்பவரை அழைத்து வந்தார். வந்திருப்பவர் இடைவிடாத பயணம் செய்து வந்திருப்பது தெரிந்தது. அவர் உடல் முழுவதும் புழுதி அப்பிக் கிடந்தது. அவர் வந்திருக்கும் அவசரத்தையும் வேகத்தையும் பார்த்தால் அனைவரின் கலக்கமும் அதிகம் ஆயிற்று. வந்தவருக்கும் தான் வந்த அவசரத்தில் அங்கு இருந்த எவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவிக்கக் கூட மறந்து விட்டார். பரசுராமரையும் மஹா அதர்வரையும் கூட வணங்கவில்லை.

காங்கேயர் வந்திருப்பது எவரென்று புரிந்து கொண்டு விட்டார். குரு வம்சத்து முக்கியத் தலைவர்கள் இருவரில் ஒருவரான சுகேது தான் வந்திருப்பது. ஆகவே அவர் அவரிடம், “சுகேது! என்ன விஷயம்?” என்று கேட்டார். சத்யவதி சுகேதுவின் பக்கம் திரும்பி, “சுகேது, என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். அவளால் பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டு கண்ணீர் பெருகியது. சுகேதுவும் பேசக் கடும் முயற்சிகள் செய்தார். ஆனால் அவருக்குப் பேசவே முடியவில்லை! “இளவரசே, இளவரசே! மாட்சிமை பொருந்திய மன்னர்……… சக்கரவர்த்தி…..” என்று மட்டும் சொன்னார். மேலே பேச அவரால் இயலவில்லை. சத்யவதிக்கு அவள் இதயம் எழும்பித் தொண்டையை அடைத்துக் கொண்டாற்போல் ஆகி விட்டது. தன் ஒரு கையால் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள். அதற்குள்ளாக சுகேது தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டார். “சக்கரவர்த்தி…….” என்று ஆரம்பித்தவர் காங்கேயரைப் பார்த்துத் திரும்பினார். “சக்கரவர்த்தி மேல் மாடத்திலிருந்து கீழே விழுந்து மிகவும் மோசமாக அடிபட்டுக் கொண்டுவிட்டார். அவர் நிலையைப் பார்த்த வணக்கத்துக்கு உரிய நம் ராஜகுரு மஹாராணி சத்யவதியையும் இளவரசர் காங்கேயரையும் உடனே ஹஸ்தினாபுரம் திரும்பும்படி சொல்லச் சொன்னார்.”

“எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்! இப்படி ஏதேனும் நடந்துவிடுமோ என எனக்குத் தெரியும்!” என்று கூவிய சத்யவதி உடனே மயக்கம் அடைந்தாள். வாடிகா அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். சுமாந்து நீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தார். ஒருவழியாக சத்யவதி கண்களைத் திறந்தாலும் இன்னமும் அவள் மயக்கத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீளவில்லை. த்வைபாயனரும் வாடிகாவும் அவளைக் கீழிருந்து மேலே தூக்கி அமர்த்தி ஆசுவாசப் படுத்தினார்கள். த்வைபாயனர் அங்கிருந்து வெளியேற பரசுராமரின் அனுமதியை வேண்டினார்.

“அனைவரும் இங்கிருந்து செல்லலாம். அனுமதிக்கிறேன். ஆனால் எல்லோரும் இதைக் கேளுங்கள்!” என்றார் பரசுராமர். அவர் குரலில் இயல்பாக இருந்த அதிகாரத் தொனி அப்போது அதிகரித்துக் காணப்பட்டது. அனைவரும் அவரையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்கள். “இங்கிருக்கும் நீங்கள் எல்லாம் முட்டாள்கள். சர்வ முட்டாள்கள்! மரணத்தை வலுவில் அழைக்கும் முட்டாள்கள்! நீங்கள் தேவையில்லாமல் மரணத்தின் கடவுளை அழைக்க அவனோ இங்கே வந்து அவனுக்குத் தேவையானவரை மட்டும் அழைத்துச் சென்றுவிட்டான். காங்கேயன் என்ன பாவம் செய்திருந்தாலும் அதற்கான பரிகாரம் ஒரு மாபெரும் தண்டனையாக மரணக்கடவுள் விதித்து விட்டான்.” பரசுராமர் எழுந்து கொண்டு தன் கோடரியைத் தூக்கித் தோளில் சார்த்திக் கொண்டு சத்யவதியை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தார். விம்மி விம்மி அழுது கொண்டிருந்த சத்யவதியோ, “ஆசாரியரே, என் வாழ்க்கையின் ஜோதி அணைந்துவிட்டது! என் எதிர்காலம் இருண்டு விட்டது!” என்று சொல்லிக் கொண்டே அழுதாள்.

அப்போது பரசுராமர், “சத்யவதி, உன் இரு மகன்களின் மரணம் உன்னளவில் துயரமானதே! தாங்க முடியாத ஒன்று! ஆனால் உனக்கென விதிக்கப்பட்ட வேலைகளுக்கு இந்த மரணங்களால் இடையூறு நேரக் கூடாது. கடவுளரால் ஓர் முக்கியப் பணியை நிறைவேற்றவென நீ நியமிக்கப்பட்டிருக்கிறாய். உன்னுடைய வாழ்க்கை வறண்டு விட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக நிரம்ப வேண்டும். இதோ பார் சத்யவதி! பரதச் சக்கரவர்த்தியின் இந்த மாபெரும் குரு வம்சம் அடியோடு அழிந்து போகாமல் பாதுகாப்பது உன் கைகளில் தான் இருக்கிறது. அது முடியாமல் பார்த்துக் கொள். உங்கள் அனைவரின் உயிரையும் விருப்பத்தையும் விட தர்மத்தின் வெற்றி தான் இங்கே முக்கியம்! தர்மம் அழியாமல் பார்த்துக் கொள்!” என்றார்.

அம்பா அப்போது பலமுறை ஆசாரியரின் வார்த்தைகளில் குறுக்கிட நினைத்தாள். முயலவும் செய்தாள். ஆனால் ஆசாரியர் அவளை மௌனமாக இருக்கும்படி சைகை காட்டி அடக்கி விட்டார். “அம்பா, காங்கேயன் தன் சபதத்தை உடைத்து உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எனில் நீ சத்யவதி சொல்லி இருக்கிறாற்போல் குரு வம்சத்து இளவரசியாக இருந்து வேறொருவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள். இப்போது அவளுக்குத் தேவை அவளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும் ஒரு பெண் தான்! ஒரு பெண்ணால் தான் அவள் இப்போதிருக்கும் நிலையைப் புரிந்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்! நீ சத்யவதியின் பெண்ணாக ஆகிவிடு! இந்தக் கடுமையான நேரத்தில் அவளுக்கு இது தான் ஆறுதல் அளிக்கும்.”

“இல்லை, இல்லை, ஒருக்காலும் முடியாது! என்னால் இயலாது! இதோ இந்த மனிதனை யாராவது கொல்லவேண்டும். அதை நான் பார்க்க வேண்டும்! அது தான் நான் விரும்புவது!” என்றாள் அம்பா.  அப்போது பரசுராமர் அவளைக் கடுமையாகப் பார்த்தார். “அப்படி எனில், அம்பா, நீ நெருப்பில் குதி! அதுதான் உனக்கு நல்லது! நீ அடுத்த பிறவியில் காங்கேயனைக் கொல்லலாம். நீயே கொல்லலாம். அக்னிக் கடவுள் ஒருவேளை உன்னை அப்படிச் செய்ய அனுமதித்தாலும் அனுமதிக்கலாம்!” என்றார். பின்னர் பரசுராமர் த்வைபாயனர் பக்கம் திரும்பி, “பராசரரின் புத்திரனே! உனக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். எந்தவேலைகளை முடிக்க எண்ணி இருக்கிறாயோ அவற்றை எல்லாம் வெற்றிகரமாக முடிப்பாய்!” என்று ஆசிகளை வழங்கினார். பின்னர் மஹா அதர்வரின் தோள்களில் தன் கைகளை வைத்த வண்ணம் அங்கிருந்து வெளியேறினார்.

Monday, August 1, 2016

"நான் உயிர் விடத் தயார்!" காங்கேயர் அறிவிப்பு!

அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பா அவரைக் கேலியாகப்பார்த்தாள். பின்னர் ஏளனம் நிறைந்த குரலில், “ஆஹா! இங்கே ஒரு மாபெரும் துறவி இருக்கிறார்!” என்று கேலியாகக் கூறினாள். அப்போது த்வைபாயனர் பரசுராமரிடம், “ஆசாரியர் அனுமதி கொடுத்தால் நான் சிறிது பேச விரும்புகிறேன்.” என்று கூறினார். ஆசாரியர் பரசுராமர் அவருக்கு அனுமதி அளித்தார். த்வைபாயனர் பேச ஆரம்பித்தார். “இந்தப் பரந்த கண்டத்தை ஆட்சி புரிந்த பரதச் சக்கரவர்த்தியின் இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்திருக்குமா அல்லது வீழ்ந்துவிடுமா என்பது இப்போது இதோ நிற்கிறாரே, காங்கேயர் இவர் கைகளில் தான் இருக்கிறது!” அமைதியாகவும், சாந்தமாகவும் கூறிய த்வைபாயனர் சற்று நிறுத்தினார். “இந்தப் பரந்த பரதக் கண்டத்து க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் இவர் ஓர் முன் மாதிரியாக இருக்கிறார். அனைவருக்கும் ஒளி வீசிப் பிரகாசிக்கும் வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் இருந்து வருகிறார். க்ஷத்திரிய தர்மம் இவர் மூலம் மேலும் தழைத்து ஓங்கும், புகழ் அடையும் என்றும் நினைக்கிறார்கள். இவருடைய இந்த சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட சபதத்தை நினைத்து பிரமிப்புடனும், பயபக்தியுடனும் இவரைப் பார்க்கின்றனர்.” மீண்டும் நிறுத்தினார் த்வைபாயனர்.

“இவர் தன்னுடைய சபதத்தை உடைத்து எறிந்தால் நஷ்டம் இவருக்கு மட்டுமல்ல; மக்கள் இவர் மேல் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையும் கெட்டுவிடும். இவர் மேல் மக்களுக்கு இப்போது இருக்கும் மரியாதை போய்விடும். க்ஷத்திரிய தேஜஸுக்கும், பிரம தேஜஸுக்கும் இணைப்பு ஏற்படும் சந்தர்ப்பமே இல்லாமல் போய்விடும். தர்மம் அழியும்! எங்கும் அதர்மம் சூழ்ந்துவிடும்.” என்று நிதானமாகச் சொன்னார். பரசுராமர் அவர் சொன்னவற்றை மிகவும் உன்னிப்பாகவும் ஆர்வத்துடனும் கவனித்துக் கேட்டார். த்வைபாயனர் மேலும் பேசினார்;”நான் மட்டும் இளவரசன் காங்கேயனாக இருந்தேன் எனில் ஒருக்காலும் என் சபதத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். அதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றப் பாடுபடுவேன். அதே போல் உங்களுடனும் யுத்தம் செய்ய மாட்டேன். ஏனெனில் நீங்கள் என் ஆசான். என் குரு! என் தெய்வம்! நான் என் சபதத்தை உடைத்தாலும் சரி, அல்லது உங்களுடன் போரிட்டாலும் சரி! இருவகையிலும் அது தர்மத்திற்கு ஏற்றது அல்ல! தர்மம் வலுவிழந்து போய்விடும்!” என்றார்.

அப்போது மஹாராணி சத்யவதி தன் அழுகையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தாள். “நான் அம்பாவை காங்கேயனைத் தவிர மற்ற எந்த இளவரசனின் பெயரையும் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவளுடைய இத்தகைய துன்பத்திற்கு எல்லாம் நான் தான் காரணம் என அவள் முழுமையாக நம்பினாள் எனில் நான் என் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.” என்றாள். அதற்கு அம்பா பலத்த குரலில் கத்தினாள். “நான் உன்னுடைய உயிரைக் கேட்கவில்லை! புரிந்ததா? காங்கேயருக்கு மட்டும் தான் சபதம் போடத் தெரியுமா? எனக்கும் தெரியும்! நானும் சபதம் போட்டிருக்கிறேன். ஒன்று அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவர் கொல்லப்படுவதை நான் பார்க்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூவினாள். மேலும் மிகவும் கோபத்துடன் சத்யவதியைப் பார்த்தாள். “உன்னுடைய உயிரைக் குறித்த அக்கறை ஏதும் எனக்கு இல்லை! நீ இருந்தால் என்ன? செத்தால் என்ன?” என்றவள் பரசுராமர் பக்கம் திரும்பினாள். “இந்தப் பெண்மணி…………..” என்று ஆரம்பித்தாள்.

பரசுராமர் அதற்குக் கொஞ்சம் கடுமையுடனேயே குறுக்கிட்டு மறுமொழி சொன்னார். “மாட்சிமை பொருந்திய ராஜமாதா! அது நினைவிருக்கட்டும். இவள் அப்படித் தான் அழைக்கப்பட வேண்டும்!” என்றார். “ஹூம், இவள் தன் நாக்கில் தேனைத் தடவிக் கொண்டு பேசுகிறாள் ஆசாரியரே!” என்று மீண்டும் ஏளனமாகச் சொன்னாள் அம்பா! அதற்குள்ளாகப் பரசுராமர் பேச ஆரம்பித்தார். “காங்கேயா, நீ உன் சபதத்தை எல்லாம் விட்டு விடு! சூழ்நிலைகள் மாறி விட்டன. இப்போது உன் சபதத்தை ஏற்கும் சூழ்நிலையோ அதை நடத்தும் நிலையிலோ நீ இல்லை! நீ எதற்காக சபதம் செய்தாயோ அது நிறைவேறி விட்டது அல்லவா? இப்போது சத்யவதியின் மகன் விசித்திரவீரியன் தானே ஹஸ்தினாபுரத்துச் சக்கரவர்த்தியாக இருக்கிறான். அவன் தான் அம்பாவின் மற்ற இரு சகோதரிகளைத் திருமணம் புரிந்திருக்கிறான்?” என்று கேட்டார். அப்போது அம்பா மீண்டும் கோபத்துடன் பேச யத்தனிக்கப் பரசுராமர் கையமர்த்தி அவளைப் பேச விடாமல் தடுத்தார்.

“காங்கேயா, நான் அம்பாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடித் தருவதாய்ச் சொல்லி இருக்கிறேன். இப்போது இதற்கு இருக்கும் ஒரே வழி நீ அம்பாவைத் திருமணம் செய்து கொள்வதை நான் பார்க்க வேண்டும்; அல்லது நீ என்னுடன் போரிட வேண்டும். இதன் உட்பொருளை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன்.” என்றார் பரசுராமர் தீர்மானமாக! அதற்கு காங்கேயர், “ஆசானே, தாங்கள் சொல்லுவதை நான் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுடன் பனிரண்டு முழு வருடங்கள் இருந்திருக்கிறேனே! அவை எல்லாம் வெட்டிப் பொழுது போக்கவா இருந்தேன்! அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன் ஆசானே!” என்று உறுதிபடக் கூறினார் காங்கேயர். “அப்படியா? அப்படி எனில் நீ உன் சபதத்தை உடைக்கப் போவதில்லை?” என்று கேட்டார் பரசுராமர்.  “இல்லை, ஆசாரியரே! ஆனால் என் மனம் கலங்குகிறது. ஆசாரியரின் வேண்டுகோளுக்கு அவருடைய உத்தரவுக்கு இணங்க முடியவில்லையே என்பது என் மனதை அறுக்கிறது. என் மனதைப் புண்ணாக்குகிறது!” என்றார் காங்கேயர்.

“எனில் நீ என்னுடன் போருக்குத் தயாரா?” என்று கேட்ட பரசுராமரின் கண்கள் சிரித்தன. அவற்றில் குறும்பும் உல்லாசமும் கூத்தாடியது. காங்கேயரோ அவரைப் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும் பார்த்தார். “இல்லை, ஆசாரியரே, இல்லை! நான் என்னுடைய சபதத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன். நீங்கள் அம்பாவுக்கு அளித்த சத்தியத்தைக் காப்பாற்றவும் நான் பாடுபடுவேன். அதற்காக உண்மையாக உழைப்பேன். ஏனெனில் என் உயிரை விட இது தான் எனக்கு மிகவும் முக்கியம், விலைமதிப்பில்லாததும் கூட!”  பரசுராமர் யோசனையுடன் தன் தாடியைத் தடவி விட்டுக் கொண்டார். அப்போது த்வைபாயனர் மீண்டும், “நான் இப்போது கொஞ்சம் பேசலாமா ஆசாரியரே!” என்று வணக்கத்துடன் கேட்டார். பரசுராமர் தன் தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தார். “ஐயா, ஆசாரியரே, நான் மரியாதையுடனும் பக்தியுடனும் ஒரு சில விஷயங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆசாரியரே! சக்கரவர்த்தி பரதனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம், முக்கியமாக ஆரியவர்த்தம் முழுவதும் காங்கேயரின் ஆணைகளுக்கும், அவருடைய நிர்வாகத்துக்கும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய வலிமையும், நம்பிக்கையுமே இந்த ஆரியவர்த்தத்தை முழுதும் காப்பாற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகை அல்ல! அவர் சத்தியப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டுள்ளார். சத்தியமே உருவானவர். சத்தியத்தின் தர்மத்தின் காவலர், அதன் அவதாரம் என்றாலும் மிகையல்ல! அவரால் அவர் செய்த பிரதிக்ஞையை மீற முடியாது. அப்படி மீற வேண்டுமெனில் அது அவர் உயிரைக் கொடுத்தால் தான் முடியும்! அப்போது தான் நடக்கும்!” என்று கைகளைக் கூப்பிய வண்ணம் வணக்கத்துடன் சொன்னார் த்வைபாயனர்.

அப்போது சத்யவதி மீண்டும் தன் கருத்தை வலியுறுத்தினாள். “நான் அம்பாவிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அவளுக்கு மனதுக்குப் பிடித்த வேறு எந்த அரசகுமாரனையோ அல்லது அரசனையோ தெரிவிக்கட்டும். நான் ஏற்கெனவே சொன்னது போல் அப்படி நான் ஒரு மந்திரக்காரியாகவும் ,சூனியக்காரியாகவும் இருந்தால், அப்படி அவள் நினைத்தால் என் உயிரையே விட்டு விடுகிறேன்.” என்றாள். ஆனால் அம்பாவோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை! “நான் காங்கேயரை என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறேன். காங்கேயரை மட்டும்! ஆம் காங்கேயர் மட்டுமே என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்று ஓங்கிக் குரலெடுத்துக் கத்தினாள் அம்பா. “ஆம், அது மட்டுமே எனக்கு வேண்டும், என் விருப்பம் அது தான்! அது மட்டுமே! வேறெதுவும் இல்லை! அதைவிட அதிகமாயும் தேவை இல்லை! குறைவாகவும் தேவை இல்லை!” என்ற வண்ணம் தன் கோபமான பார்வையை சத்யவதி பக்கம் திருப்பி அவளை முறைத்தாள் அம்பா. பின்னர் பரசுராமர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? காங்கேயர் தன் சபதத்தை உடைத்து எறிந்து விட்டு என்னை மணக்க மறுக்கிறார்.” என்றாள் குற்றம் சாட்டும் தோரணையில்.

“வேறு வழியே இல்லை! நான் அவனுடன் போரிட்டே ஆகவேண்டும்!” என்ற பரசுராமர் தன் பரந்த முகம் முழுவதும் தெரியும்படி புன்னகைத்தார். இந்தப் புன்னகை அவர் சொன்னதன் உண்மையான தாத்பரியத்தைச் சற்றே மறக்கடித்தது. அப்போது த்வைபாயனர் குறுக்கிட்டு, “காசி தேசத்து இளவரசிக்கு காங்கேயர் உயிர் துறந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் பெருங்கொடுமைகளைக் குறித்துச் சரிவரப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.” என்றார். அதற்குள்ளாக அம்பாவின் கோபத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் மீண்டும் சத்யவதி குறுக்கிட்டாள். “நான் இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். அம்பா தனக்குப் பிடித்த வேறோர் மணாளனைத் தேர்ந்தெடுக்கட்டும். நான் சொல்லும் யோசனையை அவள் ஏற்கட்டும். அல்லது அவள் விசித்திர வீரியனையே திருமணம் செய்து கொண்டு இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தினியாக பட்டமகிஷியாக ஆகட்டும்! எனக்கு அதில் சந்தோஷமே! அதன் பின்னர் நான் ஹஸ்தினாபுரத்திலேயே இருக்க மாட்டேன்; காட்டிற்குச் சென்று வானப் பிரஸ்தம் மேற்கொள்வேன்.” என்றாள் முழு மனதுடன்.

அதற்குச் சற்று அலட்சியம் கலந்த குரலில் அம்பா, “நீ என்னவேண்டுமானாலும் செய்து கொள், சூனியக்காரியே! எனக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் இல்லை!” என்று கடுங்குரலில் கூறினாள். பரசுராமர் குறுக்கிட்டு, “காங்கேயா, இது என்ன? உன்னுடன் போரிடுவதைத் தவிர எனக்கு வேறு வழி ஏதும் தெரியவில்லை!” என்றார். அதற்கு காங்கேயர் கம்பீரமான குரலில், “உங்களுடன் நான் போர் புரிவதா? ஒருக்காலும் நடவாது ஆசாரியரே, ஒருக்காலும் நடவாது! நான் உங்களைக் காசி தேசத்து அரசகுமாரிக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அழைக்கிறேன் குருவே! இதோ! உங்களுடைய மாபெரும் ஆயுதமான கோடரி உங்கள் அருகிலேயே கிடக்கிறது! அதைக் கையில் எடுங்கள்! என் கழுத்தில் ஒரே போடு போடுங்கள்! தீர்ந்தது வேலை!” என்று கூறிய காங்கேயர் கீழே குனிந்து தன் தலையைப் பரசுராமரின் காலடியில் கிடத்தினார்.