Friday, August 19, 2016

ராஜமாதாவின் முடிவு!

ஆசார்ய விபூதி தன்னுடைய ஈர்க்கும் வசப்படுத்தும் குரலில் குறுக்கிட்டார். “மாட்சிமை பொருந்திய இளவரசே, நியோகா என்பது திருமணம் அல்ல! திருமணம் வேறு நியோகம் வேறு! நியோகத்திற்கெனச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் வம்சவிருத்திக்காகவே ஒரு ஆணும், பெண்ணும் உறுதி எடுத்துக் கொண்டு அனைவர் முன்னரும் அதை ஒப்புக் கொண்டு ஈடுபடுவார்கள். மாதத்தின் சில நாட்களே இருவரும் கூடுவதற்கு அனுமதிக்கப்படும். அப்போது கரு உண்டாகிவிட்டால் மீண்டும் கூடக் கூடாது; கூடவும் முடியாது. அதன் பின்னர் அவள் யாரோ; அவன் யாரோ தான்! ஆனால் பிறக்கும் குழந்தை அதன் தாயின் கணவனின் வாரிசாகத் தான் கருதப்படும். அதன் பின்னரும் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டுமென்றால் அந்தப் பெண் மீண்டும் இதே நியோக முறையில் பெற்றெடுக்கலாம். அது அந்தப் பெண்ணின் விருப்பத்தையும் நியோகத்தின் போது விந்து தானம் அளிக்கும் நபரின் விருப்பத்தையும் பொறுத்தது. ஆனால் விந்து தானம் முடிந்தபின்னர் அந்தப் பெண்ணிற்கும், அந்த நபருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது! திருமணம் அப்படி அல்ல.”

“நியோகம் என்பது ஒரு புனிதமான ரிஷி, முனிவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சடங்கு! ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது பொருந்தும். ஆனால் அதன் பின்னரும் இருவரும் கூடி வாழ முடியாது! வெறும் சிற்றின்ப ஆசைக்காகக் கூடி தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்வது என்பது நியோகத்தில் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு உங்கள் நன்றிக்கடனைச் செலுத்துவதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். முன்னோர்களுக்கு வாரிசு கிடைத்து அவர்களுக்குத் தொடர்ந்து சாஸ்திர ரீதியான சடங்குகளின் மூலம் திருப்தி செய்ய முடியும். எந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லையோ அந்தக் குடும்பம் சபிக்கப்பட்டிருக்கிறது என்பது நம் போன்ற ஆரியர்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. ஒரு ஆணாலேயே தன் முன்னோர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரிய முறையில் ஈமச் சடங்குகள் செய்விக்கப்பட வேண்டும். அதற்குத் தான் நியோக முறை உதவுகிறது!” என்று ஓர் நீண்ட விளக்கம் கொடுத்தார் ஆசாரிய விபூதி!

காங்கேயரோ மறுத்துத் தலை அசைத்தார். ஆனால் ஆசாரிய விபூதி தொடர்ந்து, “இளவரசிகள் தங்கள் உடலை மட்டும் இதற்காகப் பயன்படுத்திக்கொள்ள இசைவார்களே அன்றி வேறு எந்த நோக்கமும் இருக்காது! இதன் மூலம் நியோகம் நிறைவேறட்டும்!” என்றார். காங்கேயருக்குள் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதை அடக்குவதற்காகத் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டார். “அந்த இளவரசிகளை நீங்கள் கூறும் முறையில் தொட்டுக் குலாவுவதற்கு என்னால் இயலாது! நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். என்னுடைய சபதத்தை இதன் மூலம் ஓர் சூழ்ச்சியாக, மோசடி என அனைவரும் நினைக்கும் வண்ணம் உடைக்க மாட்டேன்.” என்றார். விபூதியின் தகப்பனார் விடாமல், “இளவரசே, நீ திருமணம் செய்து கொள்வதில்லை என்று தானே சபதம் செய்திருக்கிறாய்! ஆனால் இங்கே நீ திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை! நியோக முறையில் விந்து தானம் தானே செய்யப் போகிறாய்! இது திருமணம் அல்ல!” என்றார். ஆனால் காங்கேயரோ திட்டவட்டமாக மறுத்தார். “நியோகம் என்பதும் ஒரு வகைத் திருமணம் தான்! மற்ற எதுவும் இல்லை! நான் இதற்கு ஒப்ப மாட்டேன்.” என்றார்.

“இளவரசே, காங்கேயரே! நாங்கள் அனைவருமே உங்கள் அளப்பரிய துக்கத்தை உணர்கிறோம்; அதில் பங்கும் கொள்கிறோம். ஆனால் இந்தக் கோரிக்கையைத் தாங்கள் கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும். மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து யோசியுங்கள். வேறு வழி ஏதும் இல்லை என்பது உங்களுக்கே நன்கு புலப்படும்!” என்றார் ஆசாரிய விபூதி!

“நான் இதை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை!” என்று பட்டென்று பதில் கொடுத்தார் காங்கேயர். மீண்டும் மீண்டும் இந்த பிராமணர்கள் தன்னைத் தொந்திரவு செய்வதில் அவருக்குத் துன்பம் மேலிட்டது. “நான் என்னுடைய சபதத்தைக் காப்பாற்றப் போராடுகிறேன். என்னுடைய சபதத்தை நான் காப்பாற்றுவதன் மூலம் பல்வேறு விதமான துரதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும்? என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் இந்த ஹஸ்தினாபுரத்தின் நன்மைக்காக மட்டுமே உயிர் வாழ்வது. வருங்காலங்களில் இதன் அரியணையில் யார் ஏறி அமர்ந்தாலும் அவர்களுக்காகப் பாடுபடுவது. இந்தக் குரு வம்சத்தின் மேன்மைக்காகவே உழைப்பது! இந்த அரியணையில் ஏறி அமரும் நபர் யாராக இருந்தாலும் அவர்களால் தர்ம சாம்ராஜ்யம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும், அதற்காகவே பாடுபடுவதும் தான் இனி என் கடமை! என் முக்கியமான வேலை! அதற்காகவே நான் இனி உயிர் வாழ்வேன்!”

மாட்சிமை பொருந்திய மஹாராணியின் முகம் மிகவும் மாறியது! அவள் தன் முகத்தை எவரும் பார்க்காமலிருக்கத் தன் முக்காடை இழுத்துவிட்டுக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு தலையைக் குனிந்த வண்ணம் அமர்ந்திருக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள். அதற்குள் காங்கேயர் தன் பேச்சைத் தொடர்ந்தார்! “இனி வருங்காலங்களில் நான் இன்னமும் உறுதிப்பாடுடன் தர்ம சாம்ராஜ்யம் அமையப் பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.” என்றார்.

“உங்கள் தாயின் அவலநிலையைக் கொஞ்சம் யோசியுங்கள், இளவரசே! அரச குடும்பத்தைச் சேராத ஓர் வாரிசு இந்த அரியணையில் ஏறி அமர நேரிட்டால்! அதன் மூலம் ஏற்படப் போகும் அவலங்களுக்கு யார் பொறுப்பு?” என்றார் பிரமிஷ்டர். காங்கேயர் அதற்கு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுப் பின் பதில் சொன்னார். “நான் என் தாயைக் குறித்து நன்கு ஆலோசித்து முடிவுக்கு வந்திருக்கிறேன்.” என்றூ சொன்னவர் மீண்டும் தன் பேச்சை நிறுத்தினார். தன் தாயை ஒரு நிமிடம் கவனித்தார். அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை! “ நான் உயிருடன் இருக்கும்வரை என் தாயின் மஹாராணிப் பதவியையும், ராஜமாதா என்னும் அந்தஸ்தையும் நிலை நிறுத்துவேன். அதை அனைவரும் கடைப்பிடிக்கப்பாடுபடுவேன். அவள் வாக்கு எல்லா இடத்திலும் எந்த நேரத்திலும் செல்லுபடியாகும் என்னும் நிலையை உருவாக்குவேன். அவள் சொல்லே அனைவராலும் மதிக்கப்படும். அப்படி ஒரு வேளை அவளுக்கு முன்னர் நான் பித்ரு லோகத்துக்கு அழைக்கப்பட்டு விட்டால், அப்போதும், நான் அவள் அதே அதிகாரத்துடனும், மரியாதையுடனும், அனைவரின் விசுவாசத்துடனும் வாழ வகை செய்து விடுவேன். அவளை எவரும் அவமதிக்காமல் கவனமாகப்பார்த்துக் கொள்வேன். இந்தக் குரு வம்சத்திற்கே அவள் ஓர் காவல் தெய்வமாக இருந்து வருகிறாள். அந்நிலையிலிருந்து அவளை எவரும் கீழிறக்காமல் பார்த்துக் கொள்வேன். அப்படியே அவள் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருவாள். நான் முன்னால் பித்ருலோகம் சென்று விட்டாலும் எவராலும் அவமதிக்கப்படாமல் வாழ வழி செய்துவிடுவேன். அவள் உயிருள்ளவரையிலும் எவராலும் அவளை அவமானம் செய்ய முடியாது. அவள் பேச்சை மறுக்க முடியாது!”

மாட்சிமை பொருந்திய ராஜமாதா சத்யவதியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை. முதல்முறையாக அனைவரும் நிறைந்த அந்தச் சபையில் தன் முகத்தை மூடி இருந்த முக்காட்டுத் துணியை அகற்றினாள். பொங்கும் கண்ணீருடனும், உணர்ச்சியால் தழுதழுக்கும் குரலிலும் பேசத் தொடங்கினாள். “என் அருமை மகனே, காங்கேயா, நீ உன் விசுவாசத்தையும் அன்பையும் என்மேல் மழையாகப் பொழிந்து வருகிறாய்!  ஆனால் நீ இவ்வளவு சிரமப்பட்டு என்னைக் கவனித்துக்கொள்ளவேண்டாம். அதேபோல் காசி நகரத்து இளவரசிகளுக்கும் உன் கவனிப்போ ஆறுதலோ தேவை இல்லை!” என்றவள் தொடர்ந்து, “இந்தத் தண்டனை எனக்குக் கடவுளால் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த தண்டனைக்கு நான் தகுதியானவள் தான்! எனக்கு இந்த தண்டனை தேவை தான். நான் என் கடமையிலிருந்து தவறி இருக்கிறேன். ஒரு மனைவியாக ஆரிய புத்திரர் மஹாராஜாவுக்கு ஒரு நல்ல மகனை, அவருக்கும் அவர் குலத்து முன்னோர்களுக்கும் உரிய முறையில் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் சிறிதும் குறைவின்றி நிறைவேற்றக் கூடியதொரு மகனை அளிக்கவில்லை! அந்தக் கடமையிலிருந்து நான் தவறி விட்டேன்.” என்ற வண்ணம் நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் கண்கள் இப்போது வறண்டு காணப்பட்டன. சொல்லில் அடங்காததொரு கம்பீரமும், சோகமும் நிரம்பிய குரலில் பேசினாள். தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு பேசினாள். “நான் வானப்ரஸ்தம் செய்ய நிச்சயித்திருக்கிறேன். கோதுலியில் மஹான் பராசர முனிவர் எங்கே எரிக்கப்பட்டாரோ அந்த இடத்துக்குச் சென்று அங்கே என் இறுதி நாட்களைக் கழிக்க எண்ணியுள்ளேன். என்னுடன் காசி தேசத்து இளவரசிகளையும் அழைத்துச் சென்று விடுகிறேன்.” என்றாள் தீர்மானமான குரலில்! மஹாராணியின் இந்த திடீர் முடிவு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அனைவரும் கலங்கினார்கள். யாருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. ராஜமாதா மெல்லத் தன் ஆசனத்திலிருந்து எழுந்தாள். தன் தலைத் துணியைச் சரி செய்து கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேற ஆயத்தமானாள். பின்னர் ஏதோ நினைத்தவள் போல் த்வைபாயனரைப் பார்த்து, “கிருஷ்ணா, என்னை கோதுலிக்கு அழைத்துச் செல்!” என்று ஆணையிட்டாள்.

No comments: