Saturday, August 20, 2016

சபையில் பதட்டம்! காங்கேயரின் கலக்கம்!

மஹாராணி சத்யவதி வாடிகாவும் தாவியும் பின் தொடர அங்கிருந்து வெளியேறினாள். அவர்கள் வெளியேறியதுமே அங்கிருந்த சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. ஓர் இறுக்கமான மனோநிலை அனைவரிடம் தோன்றியது. அனைவரும் தங்கள் கால்களுக்கு அடியே மாபெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு விட்டது போலவும் எந்த நேரமும் தாங்கள் அந்தப் பள்ளத்தில் விழுந்து விடுவோம் என்பது போலவும் உணர்ந்தனர். ஒரு பெரிய பிரளயமே ஏற்பட்டு விட்டாற்போல் அனைவருக்கும் தோன்றியது. அந்த உணர்வு மாறாமலேயே இளவரசர் காங்கேயர், அங்கிருந்த மற்ற ஸ்ரோத்திரியர்கள், குரு வம்சத்துப் பிற தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது எல்லாம் எவரும் மஹாராணி இம்மாதிரியான ஓர் குண்டைத் தூக்கிப் போடுவாள் என்றே எதிர்பார்க்கவில்லை. மஹாராணி சத்யவதி தன்னை ஷாந்தனுவின் மனைவி என்றும் அரச மாளிகைக்கு மட்டுமின்றி ஒரு மஹாராணிக்கான அனைத்து உரிமைகளும் உள்ளவள் என்றே நினைத்தும் பார்த்தும் வந்தாள். இப்போது ஷாந்தனு இறந்த பின்னர் தன்னுடைய வேகமான நடவடிக்கைகள் அனைத்தும் வலுவானதாக இல்லை என்பதே அவளால் பொறுக்க முடியவில்லை. ஆகவே இப்போது ஏற்பட்ட சூழ்நிலையில் அவளால் தான் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரும் எவரோ ஒரு மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ் இங்கே இருந்து கொண்டு இரந்து வாழும் நிலைமையைப் பெற விரும்பவில்லை. சுதந்திரமான மனப்போக்குக் கொண்ட சத்யவதி அத்தகையதொரு நிலைமையை முழுதும் வெறுத்தாள்.

எப்போதும் கடுமையாகக் காட்சி அளிக்கும் காங்கேயரின் முகத்தில் அப்போது கடும் விசாரமும் பதட்டமும் காணப்பட்டது. ஹஸ்தினாபுரத்தை விட்டு மஹாராணி சத்யவதி வெளியேறினால் அதன் பின்னர் நடக்கக் கூடிய எதிர்வினைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவரால். மிகவும் மோசமானதொரு நிலைமை தோன்றி விடும். அதிலும் சாமானிய மக்கள் சத்யவதியை ஒரு தேவதையாகத் தங்கள் குடும்பத்தின் குல தெய்வமாகவே பார்த்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்யவதி வெளியேறியதற்கு காங்கேயர் தான் காரணம் என நினைத்துக் கொண்டு அவருக்கு சாபத்தின் மேல் சாபம் கொடுப்பார்கள். தங்கள் துரதிர்ஷ்டமான நிலைக்கு அஸ்திவாரம் நாட்டியது காங்கேயர் தான் என்று உறுதியுடன் கூறுவார்கள். காங்கேயர் இவ்வளவு கடினமாக நடந்து கொண்டார் என்பதையே அவர்களால் ஏற்க முடியாது என்பதோடு கோதுலி ஆசிரமத்துக்கு சத்யவதி சென்று விட்டால் அவரை மன்னிக்கவும் மாட்டார்கள். அவ்வளவு ஏன்? குரு வம்சத்துத் தலைவர்கள் கூடத் தங்கள் காவல் தெய்வமாகவே சத்யவதியைக் கருதி வருகின்றனர். அவர்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களையும், போட்டி, பொறாமைகளையும் கூட மறந்து சத்யவதியை மஹாராணியாகவும் தங்கள் காவல் தெய்வமாகவும் ஏற்று வந்திருக்கின்றனர். பல முறை அவர்களுக்கு ஏற்பட்ட பல சிரமமான காலங்களில் சத்யவதி முழு மனதுடன் தன்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்திருக்கிறாள். வழி வழியாக வந்து கொண்டிருந்த அவர்களின் குடும்பச் சண்டைகளில் ஒரு மஹாராணிக்கே உரிய நிதானத்துடனும், அன்புடனும், கருணையுடனும் நடந்து கொண்டு அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறாள்.

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் காங்கேயர் இத்தகையதொரு எண்ணங்கள் ஓடுவதாகவே பார்த்தார். த்வைபாயனர் மட்டுமே விதி விலக்கு என்றும் நினைத்தார். ஹஸ்தினாபுரத்தின் இப்போதைய துரதிர்ஷ்டமான காலத்துக்கு அவரே பொறுப்பு என்று அவர்கள் நினைப்பதோடு தன்னை வெறுப்பதாகவும் தோன்றியது அவருக்கு. மஹாராணி சத்யவதியைக் குறித்து அவர் வெகு காலமாக அவள் திருமணம் ஆகி இங்கே ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்தே அறிவார். பெரும்போக்குடன், தயையுள்ளவளாகவும், தன்னுடைய செல்வாக்கையும், அதிகாரத்தையும் உணர்ந்திருந்தாலும் அனைவருடனும் ஒத்துப் போகும் இயல்பு படைத்தவளாகவும், தர்ம நியாயத்துக்குக் கட்டுப்பட்டு எளிதில் வளைந்து கொடுப்பவளாகவும் இருந்தாள்; இருக்கிறாள்; என்பதை காங்கேயர் நன்கு அறிவார். அவளுடைய கருணை உள்ள குணத்துடன் அவள் அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும் இருக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால் வெகு சில சமயங்களில் அதிலும் குறிப்பாகச் சில முக்கியமான சம்பவங்களில் அவள் ஓர் முடிவெடுத்து விட்டாள் எனில் அதிலிருந்து அவளை மாற்றுவது வெகு கடினம் என்பதையும் காங்கேயர் அறிந்திருந்தார். ஆகவே அவருக்குள் உள்ளூர ஓர் அச்சமே ஏற்பட்டது.

அங்கிருந்த தர்மசங்கடமான நிலையிலிருந்தும் அலாதியான மௌனத்திலிருந்தும் ஆசாரிய விபூதியே அதை உடைத்துப் பேச ஆரம்பித்தார். லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, கொஞ்சம் தயக்கமான குரலில் பேச ஆரம்பித்தார். எப்போதும் பளிச்சென்று உடைத்துப் பேசும் ஆசாரியருக்கு இப்போது இப்படிப் பேசுவது அசாதாரணமானதொரு நிலையாகத் தோன்றியது. “இப்படி ஓர் சூழ்நிலையை நாம் யாவரும் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. இதை எவருமே எதிர்பார்க்கவில்லை!” என்றார். அப்போது மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகக் குரு வம்சத்தினருக்குக் குடும்பப் புரோகிதராகவும் ராஜ குருவாகவும் இருந்து வந்த தொண்ணூற்றி இரண்டு வயதான ஆசாரிய பிரமிஷ்டர், காங்கேயரையே உற்றுப் பார்த்தார். இத்தனை வயதாகி இருந்தும் அவருக்கு வேதத்தின் ஒரு சிறிய பகுதி கூட மறக்கவில்லை. நன்றாக நினைவில் வைத்திருந்தார். அவரிடம் இருந்த ஓர் அசௌகரியமான பழக்கம் என்னவெனில் அவர் சொல்வதை யாரேனும் கேட்கவில்லை எனில் அவர்களிடம் அவருக்கு இகழ்ச்சியும், அவமதிப்பும் ஏற்பட்டு விடும். இப்போதும் அதே மனோநிலையில் இருந்தார்.
ஓர் வெற்றிப் பார்வையுடன் காங்கேயரைப் பார்த்தார். “காங்கேயா, இளவரசே, இது உன்னால் ஏற்பட்டது. எங்கள் ஆலோசனைகளை நீ கேட்காததால் ஏற்பட்டது! “ என்று குத்திக் காட்டினார்.

“மதிப்புக்குரிய ஆசாரியரே! உங்கள் ஒவ்வொரு வார்த்தையுடனும் நான் உடன்படுகிறேன். ஆம், இது காங்கேயனால் ஏற்பட்டது தான்.” என்றான் அதிரதியான சுகேது. குரு வம்சத்தின் ஓர் பிரிவின் தலைவன் அவன். மேலும் தொடர்ந்து, “இனி அனைத்துக் குரு வம்சத்தினரும் கோபத்தில் பொங்கி எழப் போகின்றனர். மாட்சிமை பொருந்திய மஹாராணி ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லப் போகிறாள் என்னும் செய்தியை எவராலும் பொறுக்க முடியாது! கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இந்த மாபெரும் சாம்ராஜ்யத்திலும் சரி, ஹஸ்தினாபுரத்திலும் சரி மஹாராணி சத்யவதியை ஓர் தாயைப் போலவே பார்த்து வந்திருக்கின்றனர். இது வெறும் பேச்சல்ல. சாட்சாத் அந்த அன்னபூரணியே இவள் தான் என்று மக்கள் கொண்டாடுவார்கள்; கொண்டாடுகிறார்கள். செல்வத்தின் தேவி இவள் தான் என்று போற்றி வந்திருக்கிறார்கள்.”

“ஆம், சுகேது, நீ சொல்வது சரியே!” என்றார் மஹாபஹூ.”ஹஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் குடும்பத்திற்கு ஏதோ சாபம் வந்துவிட்டதாகவே நினைக்கப் போகின்றனர். குரு வம்சத்திற்கும் அழிவு வந்துவிட்டதாக நினைப்பார்கள்.” என்றார் மஹாபஹூ மேலும் தொடர்ந்து! காங்கேயரின் மனம் தவித்தது. மிகுந்த மனக்கலக்கத்துடன் அவர் த்வைபாயனர் பக்கம் திரும்பினார். “பாலமுனி, நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.