Wednesday, February 19, 2014

என்ன நினைத்து என்னை அடைத்தாயோ!

சாத்யகி தன்  தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.  நெற்றியை அமுக்கி விட்டுக் கொண்டான்.  நிச்சயமாய் அவனுக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது.  உற்சாகம்பொங்கும் அந்த வட்டவடிவமான அழகிய முகம், எழிலார்ந்த வடிவான மேனி, குறும்பாய்ச் சிரிக்கும் கண்கள், என்னதான் தூக்கிக் கட்டி இருந்தாலும், அந்தக் கட்டுக்குள் அகப்படாத அவள் சுருண்ட கூந்தல் அலை, அலையாக முன் நெற்றியில் விழுந்து கிடந்த கோலம், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த கொண்டை, செக்கச்சிவந்த மருதாணி பூசிய உள்ளங்கைகள் குவிகையில் செந்தாமரைப் பூவைப் போல் தெரிந்த அழகு, இனிமையான கீதம் போல் இசைக்கும் குரல்….. இவை அனைத்தும் நினைவிலேயே காண்கிறேனா?  ம்ஹூம், இல்லை, இல்லை, இது நினைவே இல்லை.  ஏதோ கனவு.  இத்தனை மொத்த அழகும் கனவில் தான் காணலாம். அடுத்த கணமே ஏதோ ஒரு நினைவு அவனைத் தாக்க அவன் கண்கள் வியப்பில் விரிந்தன. அவளையே உற்றுப் பார்த்தான்.  ஆஹா, அப்படியும் இருக்குமா?  ம்ஹூம், முடியாது, முடியாது.

‘இவள் சத்ராஜித்தின் பெண்ணல்லவோ?  இல்லை, இல்லை அவளாய் இருக்க முடியாது.”  அங்கு அந்தப் பெண் அமர்ந்திருப்பதையும், தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் மறந்தவனாய் உரக்கத் தனக்குத் தானே கூறிக்கொண்டான் சாத்யகி.   ஆனால்,,,….ஆனால்,,,,….சந்தேகத்துக்கு இடமே இல்லை.  அதோ, அங்கே செல்வத்தின் தேவதை மஹாலக்ஷ்மிக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆபரணம்…..அது சியமந்தக மணியாகத் தான் இருக்க வேண்டும்.  இதைத் தான் சத்ராஜித் சூரியனிடமிருந்து பெற்றதாய்ச் சொல்லுகிறார்.  அப்போது அந்தப் பெண்ணே பேச ஆரம்பித்தாள்.

‘சாத்யகி, என்ன இன்னமும் கனவுலகிலேயே இருக்கிறாயா?  நனவுலகுக்குத் திரும்ப வா.  சாத்யகி, நன்றாக விழித்துக் கொள்.  நான் வேறு எவரும் இல்லை.  நான் சத்யா.  சத்ராஜித்தின் ஒரே மகள்.   இதோ உன் முன்னால் உயிருடன் இருக்கிறேன்.  ஊனும், சதையுமாய் நீ காண்பது என்னைத் தான், என்னுடைய பூத உருவை அல்ல.  நான் பேயோ, பிசாசோ, மோகினியோ அல்ல.  நான் இன்னும் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே சாத்யகியின் குழப்பமான முகத்தைப் பார்த்து மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.  சாத்யகிக்கு இப்போது தான் நிலைமை சரிவரப் புரிய ஆரம்பித்திருந்தது.  அவனைக் கடத்தியது என்னமோ சத்ராஜித் தான்.  சாத்யகிக்கு இப்போது தான் தனக்கு இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவதாக சத்ராஜித் தன்னையும், தன் தகப்பனையும் கேட்டதும், தான் நிராகரித்ததும் நினைவில் வந்தது.  அவனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.  கடைசியில் இவளாலா தான் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். நினைக்க நினைக்க அவமானத்தினால் விளைந்த கோபம் தாங்க முடியாமல் போனது.

அவளைப் பார்த்து, “ஏன் சிரிக்கிறாய் இப்போது?  சிரிக்கும்படியாக என்ன நடந்துவிட்டது?” என்று ஆத்திரம் தாங்காமல் கேட்டான்.  “உன் தகப்பன் நான் கோவிந்தனோடு செல்லக் கூடாது எனத் திட்டம் போட்டு ஏமாற்றி விட்டான். கோவிந்தனுக்கு என் உதவி கிடைக்கக் கூடாது என்பது அவன் எண்ணம்! அப்படித் தானே!’ என்று கேட்டான்.  அவன் மனதின் கசப்பு உடலெல்லாம் வழிந்தாற்போன்ற உணர்ச்சி தோன்றியது அவனுக்கு.  அதே கசந்த குரலில், “ உன் தந்தையைப் போன்ற கொடூரமான புத்தி உள்ளவனைப் பார்த்ததே இல்லை.  நான் துவாரகையை விட்டுச் செல்வதைத் தடுத்துவிட்டான் உன் தந்தை.  ஒரு பெரிய சாகச, வீர தீரச் செயல் செய்ய இருந்ததில் இருந்து என்னைத் தடுத்து நிறுத்தி என் வீர வாழ்க்கையையே கெடுத்துக் குட்டிச் சுவர் பண்ணிவிட்டான்.  யாதவக் குலமே என்னைப் பார்த்துச் சிரிக்கும்படி பண்ணி விட்டான்.  என் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டான்.  இப்போது, நீ, அவன் மகள், ஒரே செல்ல மகள்,   என்னுடைய தோல்வியைக் கண்டு சிரிக்கிறாய்.  கேலி செய்கிறாய்!”

“சாத்யகி, சாத்யகி, போதும், போதும், ரொம்ப உணர்ச்சி வசப்படாதே!” அவள் புன்னகைத்தாள்.  அவனைப் பார்த்து, “முதலில் உட்கார்ந்து கொள்.  கொஞ்சம் தண்ணீர் அருந்து.  அது உன்னைக் கொஞ்சம் சாந்தப்படுத்தும்.” என்றாள் சத்யபாமா.  அவள் பேசியது வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தெள்ளத் தெளிவாக எதைக் குறித்தும் கவலைப்படாத சுபாவம் கொண்டவள் என்பதைக் காட்டும் வண்ணமாக இருந்தது.  சாத்யகியின் கோபத்தையும், அவன் கத்தியதையும் கூட அவள் சிறிதும் லக்ஷியம் செய்யவே இல்லை. சாத்யகிக்கும் தன் நிலைமை புரிந்து தான் இருந்தது.  தான் உள்ளூறக் கொதித்துக் கொண்டிருப்பதையும், இப்போது தன்னுடைய ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செயலும் தனக்கு ஏற்றத்தைத் தரக்கூடியது அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டான்.  ஆகவே பதிலே பேசாமல் சத்யபாமா சொன்னபடி அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் குளிர்ந்த நீரை அருந்தினான்.  அழுது அடம் பிடிக்கும் சின்னஞ்சிறு சிறுவனைக் கண்டிக்கும் தொனியில் பாமா மேலே பேச ஆரம்பித்தாள்.

“சாத்யகி!  என் தகப்பனார் அவ்வளவு ஒன்றும் மோசமானவரோ கொடூரமானவரோ அல்ல.  மிகவும் நல்லவரே, கருணையும் அன்பும் நிறைந்தவர்.”

“உன் தகப்பன் ஒரு பிசாசைவிடக் கொடியவன்.  நான் அவனை வெறுக்கிறேன்.  என் வாழ்க்கையையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டான்.” பொரிந்தான் சாத்யகி.  அதே குறும்பு கண்களில் கொப்பளிக்க, பொங்கி வரும் சிரிப்பை அடக்கிய வண்ணம் சத்யபாமா தன் ஒரு கையை உயர்த்தி அவன் பேச்சைத் தடை செய்தாள்.  “ஆஹா, சாத்யகி, இப்படியா பேசுவது?  மிக அநியாயமாக இருக்கிறதே.  உம்மைக் கடத்தியது நான். என் தகப்பனார் இல்லை. “ இதைச் சொல்கையில் அவள் காட்டிய துணிவு உண்மையானதா, பொய்யானதா என சாத்யகிக்குப் புரியவில்லை.

“என்ன, நீயா என்னைக் கடத்தினாய்?  உண்மையாகவா?  ம்ஹூம், என்னால் இதை நம்ப முடியாது.”  சாத்யகியால் அவனுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.  தன்னெதிரே அமர்ந்திருந்த அந்த அழகிய இளம்பெண்ணை சாத்யகி முறைத்துப் பார்த்தான்.  இரக்கமே இல்லாமல் திமிருடன் நான் தான் உன்னைக் கடத்தினேன் என்று சொல்லும் இந்தப் பெண்ணின் துஷ்டத்தனத்தை எவ்வாறு பொறுத்துக் கொள்வது? எவ்வளவு திமிர் இருந்தால் அவள் தான் தான் அவனைக் கடத்தியதாக ஒப்புக் கொள்வாள்!

“என் தந்தைக்கு நீ இங்கே இருக்கிறாய் என்னும் விஷயமே தெரியாது.  தேர்ந்த வீரர்களின் துணையுடன் நான் இதை நிறைவேற்றினேன்.  “ கொஞ்சமும் கவலையின்றிச் சொன்னாள் அவள்.

“ஓஹோ, நான் உன்னை மணக்க மாட்டேன் எனச் சொன்னதற்காக இப்படி நீ என்னைப் பழி வாங்கி விட்டாய்!  இல்லையா?  “சாத்யகி அவளை இழிவுடன் பார்த்ததுமன்றி ஏளனம் பொங்க மேலும் பேசினான். “  என்னை இந்த குகைக்குள் அடைத்து வைத்து உன் வழிக்குக் கொண்டு வர நினைக்கிறாயா? அல்லது இங்கே உள்ள செல்வச் செழிப்பையும், ரத்தினங்கள், முத்துக்கள் தங்கக்கட்டிகள் ஆகியவற்றைப் பார்த்து இந்தச் செல்வத்தை அடைவதற்காக நான் மனம் மாறுவேன் என நினைத்தாயா?  அல்லது என்னை பயமுறுத்தும் எண்ணமா?  கிருஷ்ண வாசுதேவனுக்கு எதிராக என்னை மாற்ற எனக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாயா?  இதோ பார் பெண்ணே, உன் அழகில், அலங்காரத்தில் ,செல்வச் செழிப்பில் மோகித்து உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன் என எண்ணாதே!  நான் செத்தாலும் சாவேன், உன்னை மட்டும் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.”  மூச்சு வாங்கப் பேசி முடித்தான் சாத்யகி.

ஆனால் இது என்ன?  அவனைப் பார்த்து ஆணவத்துடன் சிரித்தாள் பாமா. “முட்டாள் மனிதா!  நீ உன்னைக் குறித்து என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?? நீ ஏதோ மிக உயர்ந்த வீரன், கட்டழகன் என்றா எண்ணுகிறாய்?  உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள நான் தவம் கிடப்பதாக யார் சொன்னார்கள்?  நீ இல்லை எனில் நான் செத்தா போவேன்?  உன் தந்தை என் தந்தையின் வேண்டுகோளை நிராகரித்த பின்னால் உன் பெயரையே மறந்து விட்டேன். இதைப் புரிந்து கொள் முதலில்!”  இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு கிண்டலாகச் சிரித்துக் கொண்டு பாமா பேசியது சாத்யகியின் உள்ளத்தை வருத்தியது.

“பொல்லாத பெண்ணே!  பின் ஏன் என்னை இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்தாய்? என்ன காரணம்?”


Monday, February 17, 2014

அழகான ராக்ஷசியே!

அப்போது மெல்லிய கிண்கிணிச் சப்தம் கேட்டது.  கல் கல் என வளையல்கள் சப்திக்கும் ஒலியும் கூடவே கேட்க, ஆஹா, தன்னைக் கடத்தி வந்திருப்பது ஒரு பெண்ணா? திகைத்துப் போனான் சாத்யகி.  இதைவிட ஒரு மோசமான சூழ்நிலை வேறெதுவும் இல்லை.  கேலிக்கிடமாகவன்றோ ஆகிவிட்டான். அனைவரும் அவனைப் பார்த்து நகைப்பார்களே!  அவன் சாத்யகி, கிருஷ்ண வாசுதேவனின் படைகளின் ஒரு பகுதிக்குத் தளபதி, அதிரதர்களில் ஒருவன் ஒரு பெண்ணால் கடத்தப்பட்டுவிட்டான்.  இப்போது சாத்யகி படிகளுக்கு நேரே வந்து மேலே பார்த்தான்.  ஒரு சிவந்த அழகான பெண்ணின் முகம் கீழே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.  இப்போது அவனைப் பார்த்தது.  அவனைக் கண்டதும் அவள் கண்களில் குறும்பு கொப்பளிக்கத் தன் கைவளைகள் குலுங்க, தோளில் போட்டிருந்த வங்கிகளிலிருந்து பிரகாசமான ஒளி வீச, தன் கைகளை அசைத்து அவனைக் கூப்பிட்டாள்.

மெல்லிய, இனிமையான குரலில் அவள் பேசினாள்: “சாத்யகரின் மகனே, மேலே வாரும்!  பெண்களைப் பார்த்தா பயப்படுகிறீர்? பயப்படாதேயும். எனக்கு உம் மேல் காதல் ஏதும் இல்லை.  ஆகவே  காதலினால் உங்களை இழுத்துக்கொண்டு நான் எங்கும் ஓடி விடப் போவதில்லை.”  சாத்யகிக்கு மயக்கமே வந்துவிடும் போல் ஆகிவிட்டது. ஆச்சரியம் அடைந்தான். இந்தக் குரலை, வேறெங்கோ எப்போதோ, எந்த சந்தர்ப்பத்திலோ கேட்டிருக்கிறானே! எப்போது? “யார் நீ?” என அவளைக் கேட்டான்.  அதே சமயம் அவன் உள்மனம் இவளை எங்கோ பார்த்திருக்கிறோமே, எங்கே என யோசித்துக் கொண்டிருந்தது.  “ஆஹா, அந்த இருட்டிலிருந்து வெளியே வாரும் சாத்யகரின் மகனே! வந்து என்னை நன்றாய்ப் பாரும்!” அதே குறும்புடன் கூடிய தொனியில் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசிய அந்தக் குரலின் இனிமை அந்த நிலையிலும் அவனைக் கவர்ந்தது.  சாத்யகி மேலே ஏறிச் சென்று அந்தப் பொறிக்கதவின் வழியாகத் தவழ்ந்து வெளியே சென்றான்.


திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் அவன் கண்கள் கூசின.  இவ்வளவு நேரம் குகைக்குள்ளே இருந்த கருமையான இருட்டில் பழகிய அவன் கண்கள் இப்போது பார்க்க முடியாமல் மூடிக் கொண்டன.  குகையின் மேல் பாகத்தில் தெரிந்த அந்த மெல்லிய ஒளியைக்கூட அவனால் பார்க்கமுடியாமல்  இருந்ததால் அந்தப் பெண் யார் என்பதையே அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் அவளுக்குப் பின்னால் இரு உயரமான பெண்கள் நின்றிருந்ததையும், அவர்கள் தள்ளி நின்றிருப்பதிலிருந்து சேடிப்பெண்களாக இருக்க வேண்டும் எனவும் நினைத்தான்.


பொறிக்கதவிலிருந்து வெளியே வந்தவன், தன் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சில பூச்சிகளைத் தள்ளி விட்டும் கைகளால் நசுக்கியும் கொன்றான்.   தன் கண்களைத் தேய்த்துக் கொண்டான்.  உடலைத் தட்டி விட்டுக் கொண்டான். அந்தப் பெண்ணைப் பார்த்து, “யார் நீ?  என்னை ஏன் இங்கே கொண்டு வந்தாய்?” என வினவினான்.  அந்தப் பெண்ணோ, “என்னைத் தொடர்ந்து வாருங்கள். முதலில் இந்த இடத்தை விட்டுச் செல்லலாம்.  அதன் பின்னர் நாம் பேசுவதற்குத் தேவையான நேரம் நிறையவே இருக்கிறது.” எனச் சிரிப்பு மாறாமலேயே சொன்னாள்.  அந்த வெளிச்சத்தில் சாத்யகி பார்த்தது ஒரு இளம்பெண்ணை. அவள்  சிவந்த மேனியுடன் சற்றே பருமனாகக் காணப்பட்டாள். அவள் உடல் எங்கும் தங்கமும், வைரமும் இழைக்கப் பட்டிருந்தது.  அவள் இடையில் கட்டி இருந்த மேகலையில் தங்கம் மட்டுமின்றி நவரத்தினங்களும் பதிக்கப்பட்டிருந்ததோடு, அதன் நுனியில் கட்டியிருந்த சிறு தங்க மணிகள் அவள் அசையும்போது அவையும் ஆடியதோடு அல்லாமல்  மெல்லிய சப்தத்தை எழுப்பியது.   சாத்யகிக்கு எதுவும் புரியவில்லை.  தான் கனவு காண்கிறோமா?  ஆம் என்றே அவன் நினைத்தான்.  இதோ, இப்போது இந்தப் பெண் மறைந்து போகப் போகிறாள். தான் மீண்டும் அந்தப் புழுக்களும், பூச்சிகளும் நிறைந்த இருட்டுக் குகைக்குள் தன்னந்தனியாக இருக்கப்போகிறோம்.  அது தான் உண்மை.

அல்லது….அல்லது….. இது அவனைக் கொல்ல ஒரு சதியோ? அல்லது இது ஏதோ பேய், பிசாசின் வேலையோ?  இந்தப் பெண் மனுஷியே இல்லையோ? மோகினிப் பிசாசோ? ஆனால் அவர்கள் இன்னும் மேலே சில படிகள் ஏறிச் சென்றனர். மேலுள்ள ஒரு அறைக்கு வந்து விட்டனர்.  அவ்வளவு மோசமான நிலையிலும் தன் முன்னே சென்ற அந்தப் பெண்ணின் ஒயிலான நடையழகு சாத்யகியைக் கவர்ந்தது.  என்ன நளினமான நடை.  சற்றே பருமன் தான் ஆனாலும், அவள் அழகும், நளினமான நடையழகும், உடலின் வடிவும், அழகான நீண்ட கழுத்தும் அதில் தெரிந்த ஆபரணங்கள் அவளுக்கு அளித்த சோபையும், தலையைத் தூக்கிக் கட்டி இருந்த விதமும், அதில் சூடி இருந்த மலர்களும், அந்த இடத்தையே தேவலோகமாகச் செய்து கொண்டிருந்தது.  இவள் நிச்சயம் மோகினிப் பிசாசு தான்.  மனுஷி அல்ல.   அவன் அந்தப் பிசாசுப் பெண்ணைத் தொடர்ந்து இன்னொரு மேலறைக்கு வந்துவிட்டான். அந்த அறை முழுவதும் சூரிய ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்தப் பிரகாசத்துக்கு அது மட்டுமா காரணம்?  இல்லை, இல்லை, அந்த அறையின்  சுவரிலும், மற்ற இடங்களிலும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

கற்களால் ஆன ஜாடிகள், பெரிய பெரிய மட்பாண்டங்கள், அதில் தெரிந்த தங்கக்கட்டிகள், முத்துக்கள், வைரங்கள், மற்ற ரத்தினங்கள் காணப்பட்டன. அங்கிருந்த ஆசனங்கள் அனைத்தும் நன்றாகக் கரடியின் தோலால் செய்யப்பட்ட உறைகளைப் போட்டுச் சுற்றிலும் மூடப்பட்டு இருந்தன. சாய்ந்து கொள்ளத் தலையணைகளும் இருந்தன.  அங்கிருந்த ஒரு ஜாடியில் நல்ல பழைய மதுவும், அருகே ஒரு பீடத்தின் மேல் சுவையான உணவும் வைக்கப்பட்டிருந்தது.  சுவற்றில் இருந்த ஒரு மாடத்தில் தங்கத்தினால் ஆன விளக்கு ஒன்றில் நெய்யூற்றித் திரி போட்டு எரிந்து கொண்டிருந்தது.  அது அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த செல்வத்தின் தேவதையான மஹாலக்ஷ்மி படம் ஒன்றுக்கு எதிரே எரிந்து கொண்டிருந்தது. மஹாலக்ஷ்மியின் படத்துக்கு எதிரே ஒரு பெரிய ஆபரணம் வைக்கப்பட்டிருந்தது.  இதுவரை சாத்யகி அப்படிப்பட்ட ஆபரணத்தைப் பார்த்தது இல்லை.  வானவில்லின் அனைத்து வர்ணங்களையும் வாரி இறைத்துக் கொண்டிருந்தது அந்த ஒற்றை ஆபரணம்.

இது கனவா, நனவா?  தன்னுடைய மனம் இதை எல்லாம் கற்பனை செய்து கொள்கிறது என நினைத்தான் சாத்யகி.  அவனால் அந்த இருட்டான குகைக்குள்ளிருந்து  பசியிலும், தாகத்திலும் இறக்க இருந்த தான், இப்போது இந்த உயர்ந்த ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டு தகதகாயமாய் ஜொலித்துக் கொண்டிருந்த அறைக்குள் வந்ததை நம்பமுடியவில்லை எனில், அங்கே உணவு வேறு வைக்கப்பட்டிருக்கிறது. அது இன்னமும் நம்ப முடியாததாய் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் ஓர் ஒற்றை ஆபரணம் இத்தனை ஒளியைக் கொட்டிப் பிரகாசிக்கிறதே.  அவன் கண்கள் அவனை ஏமாற்றுகின்றன.  இந்தப் பிசாசு, அழகான மோகினிப் பிசாசு தான் அவனை ஏமாற்றி இங்கே அழைத்து வந்திருக்கிறது.  ஆனால்  இந்த ஒற்றை ஆபரணத்தையும் காட்டி அவனை இன்னமும் ஏமாற்றுகிறதே.  இது என்ன ஆபரணம்?  ஆஹா!  இதுவும் என் விதியோ? என்ன  மோசமான விதி!  இப்படி எல்லாம் ஏமாந்து கஷ்டப்படவேண்டுமா நான்?

முன்னால் சென்று கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென அறை நடுவே வந்ததும் தன் சிரிப்பை அடக்கியவண்ணம் திரும்பினாள்.  “சாத்யகரின் மகனே, அமருங்கள். முதலில் உங்கள் உடலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.  அதன் பின்னர்  உணவு  அருந்துங்கள்.  உங்களுக்குப் பிரியமானால் மதுவையும் அருந்தலாம்.  அதன் பின்னரே நம்மால் நடக்க இயலும்.”  மிகவும் நட்பு தொனிக்கும் குரலில் சொன்னவள் அங்கிருந்த ஒரு இருக்கையில் தன் அழகான உடலைக் கிடத்திக் கொண்டு அமர்ந்தாள்.



Friday, February 14, 2014

கலக்கத்தில் சாத்யகி!

அந்தச் சிறு இடைவெளி வழியாகத் தெரிந்த நிலவின் கீற்றைப் பார்த்துக் கொண்டிருந்த சாத்யகி தான் அடியோடு நசுக்கப்பட்டுவிட்டோம் என உணர்ந்தான்.  சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  அங்கிருந்த ஊர்வன எல்லாம் அவன் மேல் ஏறிக் கடிக்க ஆரம்பித்தன.  அவற்றைக் கைகளால் விரட்டினான்.  தொந்திரவு பொறுக்க முடியவில்லை.  “கோவிந்தா, கோவிந்தா, கண்ணா, வாசுதேவா, உன்னால் பல அதிசயங்களை நிகழ்த்தமுடியும்.  ஏற்கெனவே பலவற்றை நிகழ்த்தி உள்ளாய்.  இந்தக் கடுமையான கோரமான நிலையிலிருந்து என்னைக் காக்க மாட்டாயா?  அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்ட மாட்டாயா?  வாசுதேவா, நீ வேறு அந்தப் பர வாசுதேவன் வேறு என நான் ஒருபோதும் எண்ணியது இல்லை.  நீ தான் அந்தப் பர வாசுதேவன். எல்லாம் வல்லவன்.  நீயும், அவனும் ஒன்றென்றால் ஏன் இப்போது என்னைக் காக்க நீ வரவில்லை?  வாசுதேவா, என்னைக் காப்பாற்று!”

அங்குமிங்கும் அந்தப் பாதாள குகைக்குள் சுற்றியதில் நேரம் சென்று கொண்டே  இருந்தது.  சந்திரனும் மெல்ல மெல்ல அந்தப் பிளவை விட்டு நகர்ந்து விட்டான்.  இருந்தாலும் மெல்லிய வெளிச்சம் கீற்றுப் போல் இன்னும் தெரிந்து கொண்டு இருந்ததில் இருந்து, சாத்யகி அது விடியற்காலையின் மெல்லிய வெளிச்சம் என்றும் காலை விடியப் போகிறது என்றும் புரிந்து கொண்டான்.   சூரிய உதயத்தின் போது தான் அவன் கிளம்ப நேரம் குறிக்கப்பட்டிருந்தது.  அவன் படை வீரர்கள் என்ன நினைப்பார்கள் அவனைப்பற்றி?  அனைவரும் இப்போது துவாரகைக்குத் திரும்பி இருப்பார்கள்.  வெட்கத்தினால் கருத்த முகத்தை மறைக்கத் துணிவின்றி, அனைவரும் பார்க்க, சாத்யகியால் இந்த அவமானம் நேர்ந்ததை எண்ணிக் குன்றிப் போய் இருப்பார்கள்.  அவர்களின் சொந்தப் படைத்தலைவனே அவர்களை ஏமாற்றி விட்டானே என நினைப்பார்கள்.  அனைத்து யாதவத் தலைவர்களும் இதை நினைத்து நினைத்துச் சிரிப்பார்கள். அவன் குடும்பத்திற்கே அவமானம் நேர்ந்துவிட்டது.  இனி அவன் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் எவரும் மதிக்க மாட்டார்கள்.   சாத்யகி எப்படி மறைந்தான் எனக் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  தன்னைத் தேடவும் முயல்வான் தான்.  ஒருவேளை எவரையேனும் அனுப்பித் தேடவும் சொல்லி இருக்கலாம்.  ஆனால் இந்த மோசமான குகையிலிருந்து அவனைக் காப்பாற்ற அவர்களுக்கு எத்தனை நேரம் அல்லது நாட்கள் ஆகுமோ?  அவன் இங்கே இருப்பதை அவர்கள் எவ்விதம் கண்டு பிடிப்பார்கள்?

சாம்பல் நிறத்தில் தெரிந்த விடிகாலை வெளிச்சம் பின்னர் செக்கச் சிவந்த அருண நிறத்துக்கு மாறிப் பின்னர் சூரியப்பந்தின் சிவந்த ஒளி வெண்ணொளியாக மாறுவதும் தெரிந்தது.  சூரியன் மேலேறி விட்டான்.  எங்கிருந்து சூரிய ஒளிக்கீற்று அந்த குகைக்குள் வந்ததோ அங்கே சென்று சாத்யகி சூரிய பகவானைப் பிரார்த்தித்தான்.   தன் கண்களை அந்தப் பிளவின் பக்கம் கொண்டு சென்று அங்கே தெரிந்த மெல்லிய ஒளிக்கீற்றைப் பார்த்த வண்ணம், “ சூரிய பகவானே, என் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்ளும்.  ஆனால் நான் இன்னும் குளித்து முடித்துக் காலை அநுஷ்டானங்களைச் செய்யவில்லையே!  ஆனால் வேறு வழிதான் என்ன?  என்னைப் பொறுத்துக் கொள் சூரிய பகவானே!  நான் சுத்தமில்லாமல் உன்னை வணங்குவதைப் பொறுத்துக் கொள்வாய்! உனக்கு அர்க்யம் விட ஒரு துளி நீர் கூட என்னிடம் இல்லை.  ஆனால் நீ தான் ஒளிகளுக்கெல்லாம் பேரொளி. ஒளி அரசன். நீயன்றி என்னைக் காப்பவர் யார்? என்னை எப்படியேனும் இங்கிருந்து விடுதலை அடையச் செய்வாய்!”

ம்ஹூம், எவரும் வரவில்லை. எந்த சப்தமும் கேட்கவும் இல்லை.  குகையின் தரையில் மண்புழுக்களைப் போன்றும் அவற்றைவிடப் பெரிதாகவும் புழுக்கள் நிறைய ஊர்ந்தன.  அந்தக் குறைந்த வெளிச்சத்தில் குகையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த உடைந்த மண்பானை தெரிந்தது.  அவனைப் போன்ற ஒரு துரதிர்ஷ்டக்காரனுக்குக் குடிக்க நீர் வைத்திருக்க வேண்டும்.  இப்போது அது உடைந்து விட்டது.  மெல்ல மெல்ல குனிந்த வண்ணமே எழுந்து நேற்று அவனைக் கொண்டு சேர்த்தவர்கள் ஏறிச் சென்ற படிகளில் ஏறி மேலுள்ள பொறிக்கதவின் அருகே சென்று அதைத் திறக்கப் பார்த்தான்.  முடியவில்லை.  அசைந்தே கொடுக்கவில்லை.  ஒவ்வொரு நிமிஷமும் வீணாகச் சென்று கொண்டிருக்கிறதே என உணர்ந்தான்.  சற்று நேரத்தில் சூரியன் அந்தப் பிளவுக்கு நேரே வந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டான்.  அந்த ஒளிக்கீற்று கொடுத்த கொஞ்ச வெளிச்சத்தில் போய் நின்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான் சாத்யகி.  சாப்பாடு கிடைத்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, குடிக்க நீர் கிடைத்தாலும் சரி, இல்லையெனினும் சரி, இன்னும் சில நாட்கள் சாத்யகியால் உயிர் வாழ முடியும்.  அதற்குள்ளாகக் கிருஷ்ணன் தன்னைக் காக்க வந்துவிட மாட்டானா?  பலராமனுக்கும் விஷயம் தெரிந்தால் அவனும் உதவிக்கு வரலாம்.

உக்ரசேனரோ, வசுதேவரோ, அக்ரூரரோ அல்லது மற்ற யாதவத் தலைவர்களோ ஒரு இளம் யாதவத் தலைவனை இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனமாக நடத்தியதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.  இதை அவர்கள் அநுமதித்திருக்கக் கூடாது.  இப்போது அவனைக் கண்டுபிடிக்க அங்கும் இங்குமாக அலைவார்கள்.  எல்லா இடங்களிலும் தேடுவார்கள்.  இப்படி நடந்திருக்கிறது எனச் சொல்பவர் எவரும் இல்லையே!  அவன் யாருடைய சிறைக்கைதி என்பதும் தெரியவில்லை! யார் அவனை இப்படி அடைத்துவைத்திருப்பார்கள்?  ம்ம்ம்? யாரோ, யாராயிருந்தாலும் மிகவும் சக்தி படைத்தவர்கள் தான்.  அதிகாரம் உள்ளவர்கள் தான்.  ஒரு வேளை சத்ராஜித்தாக இருக்கலாமோ?  சத்ராஜித்துக்குக் கிருஷ்ணனுக்கு எதிராகவும், அவன் தந்தை சாத்யகனுக்கு எதிராகவும் நடந்து கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா?

நண்பகல் தாண்டி சிறிது நேரத்தில் பொறிக்கதவின் அருகே ஏதோ சப்தம் கேட்டது.  அந்தப் படிகளின் மேலேறி நின்று கொண்டான் சாத்யகி.  எவரோ அந்தக் கதவை அடைத்திருந்த கல்லை அகற்றும் சப்தம் கேட்டது.  கதவையும் பூட்டி விட்டு அவன் திறந்து கொண்டு வராமல் இருக்கக் கல்லையும் வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்ட சாத்யகி காத்திருந்தான்.  அவனுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்க யாரேனும் வருகிறார்கள் போலும்!  எவர் என இதோ இப்போது தெரிந்துவிடும்.  யார் அவனைக் கடத்தினார்கள் என்பதை அவன் அறியப் போகிறான்.  இப்போது அவன் மட்டும் விடுதலை ஆகிவிட்டால்! ஆஹா, அடுத்த நிமிடமே அவனைக் கடத்தியவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் ஒன்றுமில்லாமல் அழித்து விட்டுத் தான் மறு வேலை.  ஒருவரைக் கூட விட்டு வைப்பதில்லை.  இந்த துவாரகையில் அவர்கள் அடையாளம் கூட மிச்சம் இருக்கக் கூடாது.   மெல்ல மெல்ல அந்தப் பொறிக்கதவு திறந்தது.  சாத்யகிக்குத் திடீரென ஒரு சந்தேகம்.  ஒருவேளை வருபவர்கள் அவனுக்கு உணவு அளிக்க வரவில்லையோ?  அவனைக் கொன்றுவிடும் திட்டத்தோடு வருகின்றனரோ?  சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டு வருபவர் யாரானாலும் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளோடு இருந்தான் சாத்யகி.

கதவு திறந்தது.  ஆனால் இது என்ன?  எவரும் உள் நுழையவில்லை.  யாரோ அங்கிருந்தே உற்றுப் பார்க்கின்றனர். சாத்யகி எங்கே இருக்கிறான் எனத் தேடுகின்றனர்.  சாத்யகி அந்த முகமறியா எதிரியைத் தாக்க முழு ஆயத்தங்களோடு காத்திருந்தான்.  மூச்சுக்கூட விடாமல் பொறுமையாக இருந்தான்.  அப்போது!

Wednesday, February 12, 2014

சாத்யகிக்கு ஆபத்து!

சாத்யகி முரண்டு பிடித்துக் கொண்டு தப்பிக்க வேண்டும் என நினைத்தாலும் நிலைமை அவனுக்கு சாதகமாக இல்லை.  சரியான சந்தர்ப்பம் வந்தால் தான் தப்பிக்க முயற்சி செய்யமுடியும்.  ஆகவே வாளாவிருந்தான்.  அவனைத் தூக்கிச் சென்றவர்கள் சற்று நேரம் தெருக்களிலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என உணர்ந்தான் சாத்யகி.  இது அவனைக் குழப்புவதற்காகவும் இருக்கலாம்.  கொஞ்ச நேரத்தில் ஒரு பழைய ரதத்தில் தான் வைக்கப்பட்டதை உணர்ந்த சாத்யகி அந்த ரதம் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளதோ எனவும் எண்ணினான்.  ஏனெனில் முன்னும், பின்னும் பக்கவாட்டிலும் ஒரே ஆட்டமாக ஆடிக் கொண்டே இருந்தது அந்த ரதம்.  சீரான ஓட்டமாக இல்லை. சக்கரங்கள் உருளும்போதும் அதிர்ச்சி அதிகமாகத் தெரிந்தது.  குதிரைகள் ரதத்தை ஓட்டும் வழக்கமான குதிரைகளாக இருக்காது என்றும் மோசமான மட்டக்குதிரைகளாக இருக்கலாமோ எனவும் ஊகித்தான் சாத்யகி.  சற்று நேரத்தில் காற்றில் வந்த வாசனையின் மூலம் அவன் ரைவதக மலைப்பக்கம் செல்கிறோம் எனப் புரிந்து கொண்டான்.   இந்த மலையும் அதன் சுற்றுப்புறங்களும் சாத்யகிக்கு நன்கு பழக்கம் ஆனவையே.  ஆகவே அவன் எளிதில் இந்த வழியைக் கண்டறிந்துவிடலாம். எப்படியேனும் தப்பிக்கலாம்.

தான் கடத்தப்படுகிறோம் என்பதைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டாலும் யாரால், எதற்காகக் கடத்தப்படுகிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் மேலே யோசிக்கும் முன்னர் ஒரு பேரதிர்வோடு ரதம் மலை அடிவாரத்தில் நின்றது.   இப்போதும் அவனை அவிழ்த்து விடாமல் அப்படியே தூக்கி ஒரு பல்லக்கில் ஏற்றி மலை மேல் ஏறினார்கள்.  பத்திலிருந்து எட்டு மனிதர்கள் இருக்கலாம் என சாத்யகி ஊகித்தான்.  அவர்கள் விட்ட பெருமூச்சுக்களும் காலடி ஓசையிலிருந்தும் இதை சாத்யகி கண்டு கொண்டான்.  அவர்கள் தங்களுக்குள்ளாக எதுவுமே பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களில் இருவர் தலைமை வகிப்பவர்கள் என்றும் மிக மெதுவாக அவர்கள் தங்கள் உத்தரவுகளைத் தெரிவிக்கின்றனர் என்றும் புரிந்து கொண்டான்.  அவர்களில் எவரையும் அவன் யார் எனப்புரிந்து கொள்ள இயலவில்லை.  அவர்கள் மலையில் கொஞ்சம் மேலே வந்துவிட்டனர்.  வழி எல்லாம் மிகக் கரடு முரடாக ஒழுங்கில்லாமல் மேடும் பள்ளமுமாக இருந்தது.  அவர்கள் ஏறச் சிரமப்பட்டனர் என்பது அவர்கள் அவ்வப்போது விடும் பெருமூச்சிலிருந்து தெரிந்தது.  சிலர் மிக மோசமாக மூச்சிரைத்தனர். பல்லக்கு அப்போது ஒரு இடத்துக்கு வந்ததும் நின்றது.  அது நின்ற இடம் யாதவத் தலைவர்களுள் ஒருவரின் மாளிகை.  ரைவதக மலையின் மேலே யாதவர்கள் கட்டி இருந்த கோட்டைக்குள் அந்த மாளிகை இருந்தது.

வாயில்காவல் காப்பவனிடம் பல்லக்குத் தூக்கிகளோடு வந்தவர்கள் ஏதோ கிசுகிசுவெனப் பேசியது கேட்டது.  கொஞ்ச தூரத்தில் கதவுகள்   திறக்கப்பட்ட சப்தம் கேட்டது.  பல்லக்கில் இருந்து சாத்யகியைத் தூக்கிக் கொண்டு மாளிகையின் உள்ளே சென்றனர்.  அவனைத் தூக்கிச் சென்றவர்கள் நாலைந்து அறைகளைத் தாண்டியதும், படிகள் போன்றதொரு இடத்தில் மேலே ஏறிப் பின் கீழே இறங்கினார்கள்.  அங்கே சுத்தமான காற்று வீசாவிட்டாலும் குளிர்ச்சியாக இருந்தது.  ஆஹா, பாதாளத்தில் அமைந்திருக்கும் ஏதோ ஒரு குகைக்குத் தன்னைத் தூக்கிச் சென்று அங்கேயே விட்டு விடுவார்கள் போலும்.  இவன் அப்படியே கிடந்து சாகட்டும் என நினைக்கிறார்கள் போலும்!

மஹாதேவா! கடைசியில் என் விதி இதுவா?? இப்படி மடியவா நான் வீரனானேன்!  இந்நேரம் என் படை வீரர்களை வழி நடத்திக்கொண்டு வெற்றிப் பாதையில் செல்ல வேண்டியவன் அல்லவோ நான்!  ஒரு நல்ல வீரனாக, ஒரு கதாநாயகனாக, ஒரு சிறந்த படைத்தலைவனாக வெற்றியை நோக்கிச் செல்லவேண்டிய நான் இங்கே கிடக்கவேண்டுமா?  ஆஹா, இதை எல்லாம் கண்ணன் அறிய மாட்டானே! இப்போது கண்ணனுக்கு என் உதவி தேவைப்படும் இந்த நேரம் பார்த்து நான் இப்படி மறைவதை அவன் அறிந்தால் என்னைக் குறித்து என்ன எண்ணுவான்? கோவிந்தா, நீ நிச்சயம் என்னைத் தவறாகவே எண்ணப் போகிறாய்!

அவனைத் தூக்கிச் சென்றவர்கள் இன்னும் கொஞ்சம் கீழே சென்றதும் அவனைத் தரையில் கிடத்திவிட்டுக் கட்டுக்களில் இருந்து அவனை விடுவிக்க ஆரம்பித்தார்கள்.  பின்னர் அவர்கள் காட்டிய வேகம் பிரமிக்க வைத்தது.  பிரமிக்கும் வேகத்தில் மேலேறிய அவர்கள் மேலே சென்றதும் ஒரு பொறி தானாக இயங்கி அல்லது இயக்கப்பட்டு ஒரு கதவு மூடிக்கொண்ட அச்சுறுத்தும் ஒலி சாத்யகிக்குக் கேட்டது.  தான் தன்னந்தனியாக நிராதரவாக விடப்பட்டிருந்ததை அறிந்தான் சாத்யகி.  இப்போது செய்ய வேண்டியது முதலில் அவன் உடலின் மேல் பாகத்தை மூடி இருந்த சாக்கை எடுத்து அவன் உடலை விடுவிப்பது.  அடுத்துக் கட்டுக்களை நன்கு தளர்த்தி முழுதும் கட்டுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது.  இதை உடனடியாகச் செய்து முடித்தான் சாத்யகி.  சுற்றுப்புறம் எங்கும் கருமையான இருட்டு அப்பிக் கிடந்தது.   குகை பெரியதா, சிறியதா என்று அவனால் அறிய முடியாததோடு வெளிச்சமும், காற்றும் வருவதற்கு அந்த குகைக்குள் வழி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.  ஆனால் இது என்ன?  ஏதேதோ பூச்சிகள்? பூச்சிகளா?  விஷ ஜந்துக்களா?  ஊர்வன போல் தெரிகிறதே!  ஆம், பற்பல விஷ ஜந்துக்கள் அங்குமிங்கும் ஊர்ந்ததோடு மெல்ல மெல்ல சாத்யகியின் மேலும் கால்கள் வழி ஏற ஆரம்பித்தன.

மெல்ல எழுந்து அமர்ந்த சாத்யகியின் கண்கள் சற்று நேரம் இருட்டில் சுற்றும், முற்றும் பார்த்தன.  இருட்டிற்குக் கண்கள் பழகியதும் மீண்டும் உற்றுக் கவனித்த சாத்யகிக்கு குகையின் ஒரு பக்கத்திலிருந்து வெளிச்சக் கீற்று ஒன்று தெரிவதை உணர்ந்து கொள்ள முடிந்தது.  அதே சமயம் தன்னால் எழுந்து நின்று நடந்து சென்றால் குகையின் கூரை தன் தலையில் இடிக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டான் அவன்.  வந்தவர்கள் குனிந்து உருட்டி விட்டிருந்திருப்பதாலும், குனிந்து கட்டை அவிழ்த்து விட்டு உடனே ஓடி விட்டதாலும் அப்போது சரியாகக் கவனிக்கவில்லை.  இப்போது தன் இரு கரங்களையும் கால்களையும் பயன்படுத்திக் கொண்டு தவழ்ந்து அந்த வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.


மெல்ல அருகே சென்றவனுக்கு அந்த வெளிச்சக் கீற்று மனிதர்களால் உண்டாக்கப்பட்டதல்ல என்றும், நிலவின் ஒளிக்கீற்று ஒன்று குகையின் பிளவு ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்துள்ளது என்பதும் புரிந்தது.  அவன் தப்பிச் செல்ல வாய்ப்புகள் அரிது என்பதையும் உணர்ந்தான்.  அவன் நிரந்தரமாக இங்கே அடைக்கப்பட்டு முடிவை எய்தும்படி விடப்போகின்றனரா அல்லது இது தாற்காலிகமாகவா என்பது குறித்து அவனுக்கு ஏதும் தோன்றவில்லை.  ஏனெனில் அவனை இவ்வாறு கடத்தி வருவதில் யாருக்கு லாபம் என்பதும் யாருடைய விருப்பம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை. அதைக் குறித்து எதுவும் அவனால் அநுமானிக்க முடியவில்லை. ஜயசேனன்?? ம்ஹூம், வாய்ப்பே இல்லை. அவ்வளவாக அவர்கள் குழு பிரபலம் அடையவில்லையே!  சாத்யகியைப் பிடிக்காது.  எங்கே கண்டாலும் வலுச்சண்டைக்கு இழுப்பார்கள் தான்!   ஆனால் அவர்கள் இவ்வளவு தூரம் செய்வார்களா என்பது குறித்து அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.

துவாரகையின் பிரசித்தி பெற்ற தலைவர்களான வசுதேவரின் குடும்பத்தையும், சாத்யகனின் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு அதன் மூலம் அரசன் உக்ரசேனனின் கோபத்தை சம்பாதிக்கும் வண்ணம் தீங்கை எனக்கு விளைவிக்க அவர்களால் முடியுமா?  நிச்சயமாய் முடியாது.  அதன் பலாபலன்களை அவர்கள் நன்கறிந்தவர்கள்.  கிருஷ்ணனால் நடத்தப்பட விருக்கும் இந்த மாபெரும் துணிகர சாதனையில் அவன் பங்குபெறக் கூடாது என நினைப்பவர் யாராய் இருக்கும்?  அவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் மிகவும் பலம் படைத்தவர்கள்;  அதிகாரத்தில் இருப்பவர்கள்.  கிருஷ்ணனின் இந்தத் துணிகர சாதனைகள் நடைபெறாவண்ணம் இடையிட்டுத் தடுக்க நினைப்பவர்கள்.  அதோடு கிருஷ்ணனிடமும் அவர்களுக்கு வெறுப்பும், பொறாமையும் இருக்கிறது.  இதன் மூலம் கண்ணனுக்கு அவமானம் ஏற்படுத்துவதோடு, அவன் அனைவரும் நினைப்பது போல் ஒரு கடவுள் அல்ல;  எந்தவிதமான அதிசயங்களையும் நிகழ்த்துபவன் அல்ல என நிரூபிக்கவும் நினைக்கின்றனர்.  இது கண்ணனுக்கு அவர்களால் மறைமுகமாகச் செய்யப்படும் அநீதி;  அவமானம்.  இந்தச் சதிக்குப் பின்னணியில் இருப்பது ஒருவேளை சத்ராஜித்தோ?

தன்னெதிரே  உள்ள பரவலான வாய்ப்புக்களைக் குறித்து ஆராய்ந்து சிந்தித்தான் சாத்யகி.  இந்தத் துணிகரமான சாதனை நிகழ்த்துவதிலிருந்து தான் தப்பி ஓடிவிட்டதாக அனைத்து மக்களும் நினைப்பார்கள்; கண்ணனோ எனில் அவன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டதாக எண்ணுவதோடு ஏமாற்றிவிட்டான் எனவும் எண்ணுவான்;  புஷ்கரத்தை மட்டும் அவன் கைப்பற்றி இருந்தானானால்!  ஆஹா! எத்தகைய புகழும், பெயரும் கிடைத்திருக்கும்!  இப்போது அது கிடைக்காது.  எல்லாவற்றுக்கும் மேல், எல்லாவற்றுக்கும் மேல் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரெளபதியை அடையும் வாய்ப்பையும் இழந்து விட்டான்.   அவன் விதி இப்படியா?





Monday, February 10, 2014

சாத்யகிக்கு நடந்தது என்ன?

முதல்நாள் இரவில் கண்ணனை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் செல்கையில் சாத்யகி மிகவும் மன மகிழ்ச்சியோடு தான் இருந்தான்.  கண்ணனோடு செலவு செய்த இத்தனை வருடங்களில் அவனுக்குத் தான் பெருமளவு உதவிகள் செய்ய முடிந்ததில் மகிழ்வும், பெருமையையும் அடைந்திருந்தான். அவனுடைய பெரும்பாலான வீர, தீர சாகசங்களில் தன் பெரும்பங்கும் இருப்பதை நினைத்துப் பெருமிதம் கொண்டான்.  இப்போது ஒரு பொன்னான வாய்ப்புக் கண்ணெதிரே வந்துள்ளது.  போட்டிக்கு உத்தவன் இங்கே இல்லை. அவன் வடக்கே எங்கேயோ தூரத்தில் இருக்கிறான். இப்போது இந்தப் பொன்னான வாய்ப்பு அவனுக்கு மட்டுமே, சாத்யகிக்கு மட்டுமே வாய்த்துள்ளது.  ஆஹா, அவன் மட்டும் புஷ்கரத்தை மீண்டும் செகிதனாவுக்கு மீட்டுக் கொடுக்க முடிந்தால்!  இதைச் செய்ய வேண்டியது இப்போது அவன் முழுப் பொறுப்பில் உள்ளது.

ஆரம்ப நாட்களில் கண்ணனை சாத்யகிக்குப் பிடிக்கவில்லை தான். அவனுடைய தலைமைக்குக் கீழ் வேலை செய்வதையும் விரும்பினான் இல்லை தான்.   கண்ணனின் தலைமையை ஏற்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது அவனுக்கு.  ஆனால் கண்ணனுடன் சேர்ந்து வேலைகளைச் செய்யச் செய்யத் தன்னுடைய தனித்தன்மையும், தன்னுடைய ஆளுமைத் திறனும் இன்னமும் அதிகமாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிப்பது நன்றாகவே புரிந்தது சாத்யகிக்கு.  கண்ணனுடைய வழிகாட்டுதலுக்குக் கீழே அவன் செய்த சாகசங்களால், விரைவில் ஒரு நம்பிக்கையான போர்த்தளபதியாக ஆகிவிட முடிந்தது அவனால்.  எல்லாவிதங்களிலும் கண்ணனுடைய முடிவுகளிலும், அவன் கொள்கைகளிலும் தன்னையும் அறியாமல் ஒத்தும் போனான். இயல்பாகவே உற்சாகம் நிறைந்த அந்த வாலிபன் எந்தவிதமான சூழ்நிலைகளுக்கும், வேலைகளுக்கும் ஒத்தும் போகும் குணம் உள்ளவனாக இருந்தான்.  ஆகவே எப்போதும் கண்ணனோடு நெருங்கி இருக்கும் உத்தவனிடம் அவனுக்குப் பொறாமையும் உண்டு.  அதே சமயம் உத்தவன் கிருஷ்ணன் சொல்லாத, ஆனால் அவன் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் ஆசைகளை, அவன் விருப்பங்களைத் தானாகவே புரிந்து கொண்டு நிறைவேற்றுபவன் என்பதையும் சாத்யகி புரிந்து வைத்திருந்தான்.

அதே சமயம் உத்தவன் விவேகமும், சூட்சுமமான புத்தி உள்ளவனாக இருந்ததோடு சுயக்கட்டுப்பாடு நிறைந்தும் இருந்தான்.  ஆனால் சாத்யகியோ? விரைவில் உணர்ச்சிவசப்படுபவனாக, அவசர புத்தி உள்ளவனாக, எதையும் வெளிப்படையாகப் பேசிவிடும் கபடற்றவனாக இருந்தான்.   ஆகவே இதனால் தான் கண்ணன் தன் சொந்த நலனை மட்டும் கருதாமல் சாத்யகியின் நலனையும் கருதியே அவனிடம் எல்லா விஷயங்களையும், எல்லா ரகசியங்களையும் பகிர்வதில்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.  ஆனால் அவனிடம் இந்தப் பொறுப்பு இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மறுநாள் காலை அவன் அக்ரவனம் செல்ல வேண்டும்.  அதை நினைத்து அவன் மகிழ்ந்தான்.   அங்கே சென்றதும் தான் சாத்யகி செய்யப்போவது என்னவென எல்லாருக்கும் தெரியப் போகிறது.  அங்கே சென்றதுமே அங்கிருக்கும் அனைத்து அரசர்களுக்கும் ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கும் விதமாகப்  புஷ்கரத்தை திடீரெனத் தாக்கப் போகிறான்.  அவர்கள் அவனோடு சேர்ந்து கொள்ளப் போகும் தினத்திற்குப் பல நாட்கள் முன்னராக இது நடந்து முடிந்து விடும்.  வெற்றி விழா உண்மையில் புஷ்கரத்தை அவன் மீட்டுத் தன் வசம் கொண்டு வந்ததும்  அங்கே தான் நடைபெறப் போகிறது.

கிருஷ்ணன் புஷ்கரம் வந்தடைந்ததும், தாமதிக்காமல் அனைவரும் சுயம்வரத்திற்காகச் செல்ல வேண்டியது தான்.  அவனும் இந்த ரகசியமான செய்தியைக் கேட்டுவிட்டான்.  அவனுக்கும் சொல்லப்பட்டு விட்டது. வில் வித்தையோடு சம்பந்தப்பட்ட ஒரு போட்டியில் வெல்பவர்களுக்குத் தான் திரெளபதி மாலையிடுவாள்.  அவள் சுயம்வரத்தின் முக்கியமான விதியே இது தான்.  கிருஷ்ணன் சாத்யகியை விட வில் வித்தையில் சிறந்தவன் தான். ஆனால் அவன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்து விட்டான்.  ஆகவே சாத்யகிக்கு இப்போது தடை ஏதும் இல்லை. திரெளபதியின் கரத்தைப் பிடிக்க அவனுக்கு ஓர் அரிய வாய்ப்புக் காத்திருக்கிறது.  கல்யாணம் செய்து கொண்டால் இப்படிப் பாரம்பரியமான ராஜ குலத்தில் பிறந்த ஒரு இளவரசியைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.  அதிலும் ஆர்யவர்த்தத்தின் சிறந்த ஒரு நாட்டின் இளவரசியைக் கல்யாணம் செய்து கொள்வது சாதாரண விஷயமா?  சாத்யகிக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது.  தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான்.

தன் தாய் மாமன் வீட்டை அடைந்ததும், ரதத்தை வேண்டாம் என திரும்பிப் போகும்படி சொல்லி அனுப்பினான்.  ரத சாரதியை நடு இரவு சென்று பத்து கடிகைகளுக்குப் பின்னர் தன் மாளிகைக்கு நேரில் வரும்படியும் சொல்லி அனுப்பினான். பின்னர் தாய்மாமன் வீட்டிலேயே அன்றிரவு உணவையும் உண்டான் சாத்யகி. பின்னர் வீட்டுக்குத் திரும்பினான்.  தெருக்களில் ஜன நடமாட்டமே இல்லாமல் வெறிச்சென இருந்தது.  பொதுவாகவே சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் யாதவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி உடனடியாக இரவு போஜனம் முடித்துக் கொண்டு உடனே படுக்கவும் சென்றுவிடுவார்கள்.  பல காலமாக இது தான் அனைத்து யாதவர்களுக்கும் வழக்கமாக இருந்து வருகிறது.  ஒரு சில இளைஞர்கள் மட்டும், குடித்துக் கொண்டும், சூதாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டும், வித விதமான விருந்துகள், கேளிக்கைகளில் கலந்து கொண்டும் சுற்றிக் கொண்டிருந்து விட்டு விருந்தளிக்கும் யாதவத் தலைவர்கள் வீடுகளிலேயே இரவைக் கழிப்பதும் உண்டு.   இன்று அப்படியும் எவரையும் காணமுடியவில்லை.

நிலவொளி குளுமையாகப் பிரகாசித்தது.  மாளிகைகளின் நிழல்கள் கரும்பூதங்களைப் போல் ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து இரவின் கருமையையும் நிலவொளியின் பிரகாசத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. சாத்யகியின் மாளிகை இருக்கும் தெருவிற்குச் செல்ல இன்னும் இரு தெருக்களே இருக்கும் சமயம்,   சாத்யகியை எவரோ அழைக்கும் குரல் கேட்டது. “மாட்சிமை பொருந்திய சாத்யகி, இந்த இரவில் இங்கே என்ன செய்கிறாய் அப்பனே? உன்னைப் போன்ற ஒரு சுத்தவீரனுக்கு இது அழகல்லவே!” என்றது அந்தக் குரல் கேலியாக.  குரலின் கேலியை நன்கு உணர்ந்தான் சாத்யகி.   அந்தக் குரல் ஜயசேனன் என்னும் இளம் வீரனுடையது என்றும் அவன் ஒரு போக்கிரி என்பதையும் அறிந்தான் சாத்யகி.  சில நாட்கள் முன்னர் தான் அவனுக்கும், சாத்யகிக்கும் ஒரு வாய்ச் சண்டை நடந்திருந்தது.

“நான் குடிக்கவோ, அல்லது சூதாடவோ இல்லை.  அதன் பொருட்டுத் தெருக்களில் சுற்றவும் இல்லை!” சாத்யகி கொஞ்சம் கோபத்தோடயே சொன்னான்.  ஜயசேனன் தன்னை அழைத்த விதம் அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.  தன்னைக் கேவலமாக எண்ணி உள்ளூரச் சிரிக்கிறான் என்று நினைத்தான்.  “ஓஓஓஓ, உன் மாளிகைக்குச் செல்கிறாயா சாத்யகி?  நானும் அந்தப் பக்கம் தான் செல்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே  அந்த திடகாத்திரமான வாலிபன் சாத்யகியுடன் நடந்தான்.  சாத்யகி பதில் ஏதும் பேசவில்லை.  ஜயசேனனுடன் செல்வதையும், அவனுடன் பேசுவதையும் சாத்யகி விரும்பவில்லை;  என்றாலும் அவன் தற்சமயம் மிகவும் சிநேகமாகப் பேசுகையில் அவனிடம் கோபமும் கொள்ள முடியவில்லை.  தர்ம சங்கடமான நிலையில் சாத்யகி வாய் பேசாமல் நடந்தான்.

“முட்டாள் தனமான வீர, தீர சாகசங்களைக் கண்ணனோடு சேர்ந்து செய்வதில் உனக்குத் தனிப்பட்ட பலன் என்ன கிடைத்திருக்கிறது சாத்யகி?  நீ இப்போது எங்கள் அனைவருக்கும் தலைவனாகி இருக்க வேண்டும்.  நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டாய்! “ என ஏளனமாகச் சொன்னான் ஜயசேனன்.

“என் இடம் எது, எனக்கு என்ன வேண்டுமென நான் நன்கறிவேன்.” சாத்யகி கொஞ்சம் பணிவாகவே சொன்னான்.  இப்போது அவர்கள் கொஞ்சம் இருட்டான ஒரு சந்திற்குள் நுழைந்திருந்தனர். “ஓ, உனக்கு உன் இடம் எதுவெனத் தெரியுமா?  அப்படியா சொல்கிறாய்?” என்று கேட்டவண்ணம் சத்தமாகச் சிரித்த ஜயசேனன் தன் கையை சாத்யகியின் தோள்பட்டையில் வைத்துக் கொண்டான்.  அவனை ஒரு நெருங்கிய நண்பனைப் போல் கட்டி அணைக்க முயன்றான்.  தன் தோளிலிருந்து அவன் கைகளைத் தட்டிவிட சாத்யகி முயன்றபோது திடீரெனத் தடுக்கியது அவனுக்கு.  தன் நண்பனாக மாறி இருக்கும் ஜயசேனனின் கால்கள் தன் கால்களிடையே புகுந்து தன்னைத் தடுப்பதை உணர்ந்தான் சாத்யகி.   கீழே விழுந்தான்.  தன்னை சுதாரித்துக் கொள்வதற்குள்ளாக அவன் வாயில் ஒரு துணி அடைக்கப்பட்டது. எங்கிருந்தோ பல கைகள் ஒன்று சேர்ந்து அவனைக் கட்டின.   அவன் தலை வழியாக ஒரு சாக்கு போடப்பட்டு அவன் அதற்குள் திணிக்கப்பட்டான். இம்முறையில் அவன் செய்யும் சிறு சப்தமும் வெளிவராமல் அடக்கப்பட்டது. அவன் வாளை எவரோ இடையிலிருந்து உருவினார்கள்.  அவன் கைகளும் கால்களும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டன.  உடனே சில ஆட்கள் சாக்கு மூட்டைக்குள் இருந்த சாத்யகியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக விரைந்தனர்.




Thursday, February 6, 2014

பலராமனும் கிளம்புகிறான்!

கோவிந்தன் சொல்வது சரியே!  அதிகச் செல்வம் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ வைக்கும்.  கொடுமையானதும் கூட.  யாதவர்கள் தங்கள் கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறைக்குத் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. அவர்கள் கட்டுக்கோப்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.  ம்ம்ம்ம்ம்ம்… இவ்வளவு அதிகப் பணம் இருப்பதால் தானே சத்ராஜித்தால் இப்படி அலக்ஷியமாக நடந்து கொள்ள இயல்கிறது.  எந்நேரமும் வணிகக் கப்பல்கள் கடல்களில் மிதந்து சென்று வியாபாரம் செய்த வண்ணம் இருக்கின்றன. பொன்னும், மணியும், ரத்தினங்களும், முத்துக்களும் குவிகின்றன.  வீட்டிலும் பல பெரிய தன வணிகர் வந்தவண்ணமும், போன வண்ணமும் இருக்கின்றனர்.  அவர்களுக்காக எந்நேரமும் விருந்து உபசாரங்கள், ஆடல், பாடல், கேளிக்கைகள்!   ஆனால் இது எத்தகைய ஊழலான வாழ்க்கை என்பதைத் தான் நான் பார்த்து வருகிறேனே!  நேற்றிரவு கூட சத்ராஜித் அளித்த ஒரு விருந்துக்கு பலராமன் சென்றிருந்தான்.  அங்கே தான் அனைத்தையும் பார்த்தானே.

அதோடு மட்டுமா!  சத்ராஜித்திடம் விலை மதிக்க முடியா ச்யமந்தக மணி இருக்கிறது.  அந்த மணியின் ஒளி பட்டாலே எல்லாமும் தங்கமாக மாறுமாம். அதை வைத்துக் கொண்டு அனைத்து யாதவர்களையும் தன்னுடைய அடிமையாக அன்றோ சத்ராஜித் வைக்க நினைக்கிறான். இவ்வளவு தங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?  நல்ல சுத்தமான வீரர்களாக இருந்தவர்களைக் கோழைகளாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றியதோடு அல்லாமல் கோவிந்தனின் ஆலோசனையைப் புறக்கணிக்கவும் வைத்தது இந்தத் தங்கத்தால் தானே!  இந்த யாதவர்கள் தங்களைத் தாங்களே இப்படி வீண் செல்வத்தினால் வந்த புகழ் போதையில் அழியாமல் காப்பாற்ற வேண்டும்.  ஆம், நான் தான் இதைச் செய்ய வேண்டும்.  வந்து குழுமி இருந்த அனைத்து யாதவர்களையும் பார்த்துச் சாட்டையால் அடிப்பது போல் தன் கடுமையான சொற்களால் அடிக்க ஆரம்பித்தான் பலராமன்.

“கோழைகளே, தைரியமற்றவர்களே! ஏமாற்றுக்காரர்களே!  சூழ்ச்சிக் காரர்களே!  உங்கள் தர்மம் என்பது தான் என்ன!  அதிலிருந்து நீங்கள் பிறழ்ந்து விட்டீர்களே, தெரியவில்லை?   கோவிந்தனைத் தோற்கடித்துவிட்டீர்கள்! அவனைக் கைவிட்டு விட்டீர்கள்!  அவன் நம்மை எல்லாம் விட்டுச் சென்றுவிட்டான்!” இதைச் சொல்கையில் பலராமன் தன்னுள்ளே ஆழமாக ஏற்பட்ட வேதனையிலும், வருத்தத்திலும், கோவிந்தன் தன் ஆலோசனைகளைச் சொன்னபோது அதை மறுத்த முதல் ஆள் தான் தான் என்பதை முற்றிலும் மறந்தே போனான்.  ஆனால் யாதவர்களிடையே பெரும் அளவில் மாற்றம் தெரிந்தது.  பலராமனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர்கள் மனதைப் புண்ணாக்கியது.  வாளால் அறுபட்டது போல் துடித்தனர். கண்ணன் தங்களுக்கு எவ்வளவு அரியவன், தாங்கள் கண்ணனை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அப்போதே புரிந்து கொண்டவர்கள் போல் காட்சி தந்தனர்.  நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல் தாங்கள் செய்த தவறின் ஆழம் புரிந்து, அதன் விளைவுகள் புரிந்து செய்வதறியாமல் திகைத்தனர்.

உக்ரசேனரைப் பார்த்து பலராமன், “மாட்சிமை பொருந்திய அரசரே,  இந்த விஷயத்தில் எவருடைய அவசரம் அவசரமான குறுக்கீடுகளும் தேவையில்லை.   இதன் விளைவுகள் குறித்தும் எந்தக் கோழைகளும் எனக்கு எடுத்துச் சொல்ல வேண்டாம்.  அப்படிப்பட்ட மனிதர்கள் சாக்கடையிலேயே அதன் சேற்றிலேயே திரும்பத் திரும்ப உழலும் பன்றிகளைப் போன்றவர்கள். இவர்கள் செல்வத்தில் புரளுகின்றனர். அவ்வளவு தான் வேறுபாடு! “பலராமன் தான் இன்று வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை மறந்தே விட்டானா என அனைவருக்கும் எண்ணத் தோன்றியது.  ஆனால் எல்லாமே தவறு என்பது சூரியனைக் கண்டதும் மறையும் பனித்துளி போல், சூரியனைக் கண்டதும் ஏற்படும் வெளிச்சம் போல் பலராமனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்கியது.  மேலும் பொங்கினான் பலராமன்! உக்ரசேனரைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.


“கோழைகள், சூழ்ச்சிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள்!  அவர்களுக்குப் பொன் வேண்டும், பொருள் வேண்டும், வாழ்க்கையைப் பல விதங்களிலும் இன்பமாக அனுபவிக்க வேண்டும்.  வசதி, வாய்ப்புகள் வேண்டும்.  சூதாட வேண்டும், குடிக்க வேண்டும்.  விருந்துகளிலும், ஆடல், பாடல், கேளிக்கைகளிலும் கழிக்க வேண்டும்.  ஆனால் தர்மம் என்றால் கிட்டேயே நெருங்க மாட்டார்கள். இவர்களின் தர்மம் என்பது என்னவென இவர்கள் அறிவார்களா?  மாட்சிமை பொருந்திய மன்னா! என்னிடமும் இவை எதுவும் அறவே இல்லை!”


“உங்களுக்கு விருப்பமிருந்தால் சபையைக் கூட்டுங்கள் மன்னா!  ஆனால் நான் முடிவுக்கு வந்துவிட்டேன்.  ஒவ்வொரு அதிரதர்களும்  அவர்களுக்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு தயாராகி என்னுடன் அக்ரவனம் வரவேண்டும்.  கண்ணன் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.  அவன் வாக்குக் காக்கப்பட வேண்டும்.  இதை நான் அந்த சாக்ஷாத் மஹாதேவன் ஆன சோமநாதப் பெருமானின் மேல் ஆணையிடுகிறேன்.  கண்ணனின் வாக்கைக் காப்போம். புஷ்கரத்தைத் திரும்பக் கைப்பற்றுவோம்.  துருபதனின் மகள் திரெளபதியின் சுயம்வரத்தை வெற்றியடையச் செய்வோம்.  கோவிந்தனை, என் அருமைக் கண்ணனை வெற்றி பெற்றவனாக நம்மிடையே திரும்பக் கொண்டு வருவோம்.”  சற்றே தயங்கினான் பலராமன்.

ஒரு கணம் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொண்டான்.  மின்னல் போல் அனைத்தும் கண்ணெதிரே தோன்றி மறைந்தன.  பின்னர்  மீண்டும் கர்வம் பொங்க அனைவரையும் பார்த்து அறைகூவல் விடுத்தான். “ மாட்சிமை பொருந்திய மன்னா!  நான் ஒரு சபதம் போடுகிறேன்;  கேளுங்கள். கோவிந்தன், என் அருமைக் கண்ணன் திரும்பும் வரையிலும் அந்த மதுவை நான் தீண்டமாட்டேன்.  அவன் நம்முடன் , நம்மிடையே இல்லை எனில் வாழ்வதன் பொருள் தான் என்ன?  அவனில்லாமல் ஒரு வாழ்க்கையா? “ பலராமன் குரல் தழுதழுத்தது.

ஆனால் சாத்யகனுக்கு பலராமனின் இந்த நீண்ட உரையிலோ, அவன் சபதத்திலோ மனம் அமைதி அடையவில்லை.  அவன் மகனைக் காணவில்லையே!  “எங்கே என் மகன்?  அவனை எவ்விதம் கண்டு பிடிப்பது? என்னதான் நடந்திருக்கும் அவனுக்கு?”  மனம் சங்கடத்தில் ஆழ்ந்திருக்க மகனைப் பற்றிய கவலை நீங்காமல் கேட்டான் சாத்யகன்.

“அவனுக்கு என்ன நடந்திருக்குமா?” சாத்யகன் பக்கம் திரும்பிய பலராமன், “ தன் கடமையிலிருந்து அவன் தப்பி இருக்கக் கூடாது.  கோவிந்தனைத் தானே தனியாக அனைத்தையும் எதிர்கொள்ளும்படி செய்துவிட்டானே!  இப்படிச் செய்யலாமா?  யாரோ சூழ்ச்சி செய்திருக்கின்றனர்.  அவர் யார் என என்னால் ஊகிக்க முடிகிறது.  சாத்யகியை நன்றாக ஏமாற்றி இருக்கின்றனர்.” யார் இதைச் செய்தது என்பதை அறிந்தவன் போல் பலராமன் அனைவர் முகங்களையும் உற்றுக் கவனித்தான்.


 “இல்லை, அவன் கடமையிலிருந்து தவறவே இல்லை.  அவன் தாய் வழி மாமன் வீட்டிலிருந்து தன் சொந்த மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தான் ஏதோ நடந்திருக்கிறது.  யாரோ அவனைக் கடத்தி இருக்கக்  கூடும்.  “சாத்யகன் புலம்பினான்.

“மாமா சாத்யகரே, கவலைப் படாதீர்கள்! சாத்யகியைக் கடத்தினவர் எவரானாலும், அவர்கள் அனைவரும் கூண்டோடு பிடிக்கப்பட்டு, தண்டிக்கப் படுவார்கள்.  தேவையானால் அவர்கள் உயிரும் பறிக்கப்படும்.  இதை நான் அந்த மஹாதேவன் பெயரால் ஆணையிடுகிறேன்.  இது உறுதி, சத்தியம்!” என்றான் பலராமன்.  அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் கிருஷ்ணனின் திடீர்ப் போர்க்கோலமும் அவன் சென்ற விதமும் ஆச்சரியம் அளித்தது எனில் அதற்குச் சற்றும் குறையாமல் சாத்யகியின் திடீர் மறைவும் அவர்களுக்குள் திகில் கலந்த அச்சத்தை ஊட்டியது என்றால் சற்றும் மிகையில்லை. நெருப்பை உமிழ்வது போல் பலராமன் உமிழ்ந்த கோப வார்த்தைகளில் அவனுக்குக் கிடைத்த இந்த திடீர் அதிகாரத்தில் அனைவரும் கட்டுப்பட்டனர். அப்போது எவரோ, “சபையைக் கூட்டுங்கள்!” என்றனர்.

“சபையைக் கூட்டி என்ன செய்ய முடியும்? விவாதிக்க வேண்டும், மீண்டும், மீண்டும் விவாதம், தவிர்க்க முடியாத ஆய்வுகள், தீர்மானங்கள், எல்லாம் முட்டாள் தனம்! கோவிந்தன் இன்னும் பதினைந்து நாட்களில் எப்படியும் புறப்பட இருந்தான்.  அவன் இடத்தில் இப்போது நான் இருக்கிறேன்.  என் வீரர்கள் மட்டுமின்றி அனைத்து அதிரதர்களையும் திரட்டிக் கொண்டு நான் செல்லப் போகிறேன்.  என்னோடு வராமல் இங்கேயே தங்க வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் அவர்கள் பெயரைச் சொன்னால் போதுமானது!”  பலராமன் தன் பெருங்குரலில் கர்ஜித்தான்.


 கோபம் சற்றும் அடங்காமலே அனைவரையும் சுற்றும் முற்றும் பார்த்தான் பலராமன்.  உக்ரசேனரிடம் திரும்பி, தன் கோபம் சற்றும் குறையாமலேயே, “மாட்சிமை பொருந்திய அரசே, நான் கோவிந்தன் பக்கமே அவன் உதவிக்கு அவன் துணைக்கு நிற்கப் போகிறேன்.  அதே போல் என்னுடன் அழைத்துச் செல்லும் அனைவரையும் கோவிந்தனின் உதவிக்காகவே பயன்படுத்துவேன். அவன் எங்கே இருக்கிறானோ அங்கே தர்மம் இருக்கும்.  அது வெல்லும். ஏனெனில் எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே விஜயலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இது உண்மை, இது சத்தியம்.  உங்கள் ஆசிகளை எங்களுக்குத் தாருங்கள் மன்னா!  அது மட்டுமல்ல மன்னா!  சாத்யகி உயிருடன் இருக்கிறானா இல்லையா எனத் தெரியவில்லை.  அவனை ஒரு வேளை எவரேனும் கொன்றிருந்தால் அந்தக் கொலையாளிக்குத் தக்க தண்டனை அளிக்கப்படும் என எனக்கு உறுதிமொழி கொடுங்கள்.  “ மழை போலப் பொழிந்த பலராமனின் வார்த்தைகளைக் கேட்ட யாதவத் தலைவர்கள் வசியம் செய்யப்பட்டவர்களைப் போல் ஆனார்கள்.  ஆனால் பலராமனின் இந்தக் கோபத்தைக் குறைக்க எண்ணி, “சாது, சாது” என கோஷித்தனர்.

Monday, February 3, 2014

பலராமன் சிந்திக்கிறான் - தொடர்ச்சி!

சற்று நேரம் தன் படுக்கையிலேயே அமர்ந்த பலராமன் தன்னிரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான்.   கைகளால் கண்களையும் மூடினான்.  சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், திடீரெனத் தன் தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தான்.  வேட்டைக்குப் புறப்படும் சிங்கம் தன் பிடரியைச் சிலிர்த்துக் கொள்வது போல் இருந்தது.  விருட்டென எழுந்தவன் தன் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு நிமிர்ந்தபோது அவன் கண்கள் பளிச்சிட்டன.  அதில் ஆக்ரோஷம் தெரிந்தது.  தன் மேல் உத்தரீயத்தை எடுத்துக் கொண்டவன், கூடவே தன்னுடைய தனிச் சிறப்பு வாய்ந்த பெரிய சங்கையும் எடுத்துக் கொண்டான்.  உப்பரிகைக்குச் சென்றவன் ஏதோ வெடித்துவிட்டாற்போன்ற சப்தம் வரும்படியாக சங்கில் ஒலி எழுப்பினான். சுற்றுப்புறம் மட்டுமின்றி மொத்த துவாரகையும் அந்தச் சங்கொலியில் அதிர்ந்தது.  அதன் எதிரொலி அடங்கவே நேரம் பிடித்தது.  அவரவர் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த யாதவத் தலைவர்களின் காதுகளில் அந்தச் சங்கொலி கேட்கவும்  தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர்.


திடீரென ஏற்பட்ட இந்த அதிர்ச்சியான ஒலிக்கு, அதுவும் பலராமன் சங்கிலிருந்து எழுப்பப்பட்ட ஒலிக்குக் காரணம் புரியாமல் திகைத்தனர்.  பலராமனுடைய சங்கு ஒலிக்கிறது.  அதுவும் மிகக் கடுமையான தொனியில்!   ஏதேனும் பிரளயம் வந்து விட்டதா? பலராமன் தன் சங்கை எடுத்து ஊதுவது கிடையாது;  எப்போவாவது ஊதுவான்.  ஆனால் இப்படி ஆக்ரோஷமாகவும், ஆத்திரமாகவும் ஊதியதே இல்லையே! அவன் ஏதோ கோபத்தில் இருக்கிறானோ!  இது என்ன புதுக் கலக்கம்?  எல்லாரும் எழுந்து கைகளில் கிடைத்த துணியை எடுத்து அணிந்து கொண்டனர்.  அரச மாளிகை முற்றத்துக்கு வந்து கூடினார்கள்.  முக்கியமான நிகழ்ச்சிகளின் போதோ, சம்பவங்கள் நடந்தாலோ அரச மாளிகை முற்றத்தில் வந்து கூடும்படியாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.  அவர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் உக்ரசேனன் தன் உடலெல்லாம் நடுங்க, மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான்.  அவனுடைய மன எழுச்சி அவன் முகத்திலும் நடையிலும் தெரிந்தது.  வசுதேவரும் மனம் கலங்கி இருக்கிறார் என்பது தெரிந்தது.  அக்ரூரரோ சிந்தனையில் நெரித்த புருவத்துடன் காணப்பட்டார்.  அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பலராமன் தன் தலையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டும், கோபமாகவும், ஆவேசத்துடனும் கைகளால் போர்ச் சைகைகள் காட்டியவண்ணமும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

பலராமன் கண் முன்னே இளவயதுக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.  தன்னுடைய அருமைத் தம்பி, கிருஷ்ணன் முதன் முதல் நடக்க ஆரம்பித்துக் கீழே விழுந்தது, தான் அவனைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுத்தது; தன்னுடைய சேட்டைகளின் மூலம் அனைவரையும் கவர்ந்தது; தன்னையும் அந்தச் சேட்டைகளில் இழுத்துவிட்டது;  அவனின் வளர்ச்சி; மெல்ல மெல்ல இளைஞனாக , இளம் சிறுவனாக மாறியவன், கம்சனைக் கொல்வதற்காக அந்த மல்யுத்த மேடையில் வீரத்துடன் நுழைந்தது;  தன் வீரத்தைக் காட்டியது; கோமந்தக மலைப் பிராந்தியத்தில் தன்னைக் கவனித்துக் கொண்டது; எங்கும், எப்போதும், எவர் முன்னும் தன்னை ஒரு மூத்தவனாக மரியாதையுடனே நடத்தி வந்தது; மத்ராவில் இருந்து அனைவரையும் காப்பாற்றி அழைத்து வந்ததோடு அல்லாமல் இங்கே துவாரகை என்னும் சொர்க்கத்தைக் காட்டியது; இப்படிப் பற்பல அதிசயங்களை நடத்தியதோடு அல்லாமல், ஆர்யவர்த்தத்திற்குச் சென்ற சில மாதங்களிலேயே அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது; இப்படி எத்தனை, எத்தனை!  ஆஹா, அந்தக் கிருஷ்ணன் சென்று விட்டான்.  வாசுதேவக் கிருஷ்ணன் சென்றுவிட்டான்.  அவனுடைய இந்த முடிவுக்கு நான் காரணம்.  நான், பலராமன் அவனைக் கைவிட்டுவிட்டேன்.  அவனைத் தோற்கடித்துவிட்டேன்.  எல்லாமே தவறு;  ஆரம்பத்தில் இருந்தே தவறு. என் கிருஷ்ணனுக்கு விசுவாசமுள்ளவனாக அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவனாக நடந்து கொள்ள வில்லை நான். குற்ற உணர்ச்சி அவனைக் கொன்று தின்றது.  அவன் தன்னுடைய பெரிய கால்களால் கிருஷ்ணனின் ஆலோசனைகளை மிதித்துத் துவைத்துவிட்டான்.


கோவிந்தனின் கடைசி வாக்குறுதி அவனுக்குள்ளே உணர்த்திய உண்மையையும் அவன் நன்கு புரிந்து கொண்டான். அந்த உண்மையின் உதயம் அவனுள்ளே பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.  திரெளபதியின் சுயம்வரத்தின் போது ஐந்து சகோதரர்களையும் உயிருடன் கொண்டு வந்து நிறுத்துவதாக மஹாராணி சத்யவதிக்கு கோவிந்தன் உறுதி அளித்துள்ளான்.  இப்படி ஒரு முட்டாள் தனமான வாக்குறுதியை கோவிந்தன் கொடுக்க மாட்டான்.  அவன் நிச்சயம் முட்டாள் அல்ல;  வீணான வாக்குக் கொடுக்கும் மனிதன் அல்ல அவன்.  இதற்காகவும் அவன் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.  கோவிந்தனால் மட்டும் ஐந்து சகோதரர்களையும் உயிருடன் கொண்டு வர முடிந்தால்!  அதுவும் அவர்களை  யாதவர்கள் ஹஸ்தினாபுரத்தின் உயர்ந்த பதவிகளில் அமர வைக்க முடிந்தால், ஆஹா! இத்தகையதொரு அரிய செயலை மட்டும் அவர்கள் செய்துவிட்டால்! ஆர்யவர்த்தத்திலேயே உயர்ந்தவர்களாக மேலோங்கியவர்களாக இருக்கலாம்.  கோவிந்தன், அனைவராலும் கடவுளாக அறியப்படுபவன், அவனால் மட்டுமே இந்த அதிசயம் நடக்க முடியும். அவர்களின் வாழ்க்கையிலேயே இல்லை; இல்லை; ஆர்ய வர்த்தத்தின் வரலாற்றிலேயே அவர்கள் இடம்பெறுவார்கள்.  சிறப்பான இடம் பெறுவார்கள்.

கோவிந்தன் அற்புதங்கள் செய்கிறான்.  விந்தைகள் நிறைந்தவன்.  மேலும் மேலும் விந்தைகளை நடத்தி வருகிறான்.   பலராமனுக்குள் யோசனை ஓடியது.  ம்ம்ம்ம்?? அரக்கு மாளிகையில் தீப்பற்றித் தீயில் எரிந்த ஐந்து சகோதரர்களையும் எப்படி கோவிந்தன் உயிருடன் கொண்டு வரப் போகிறான்? மேலும் அவர்களை அரச முறைப்படி தகனமும் செய்தாகிவிட்டது.  ம்ஹூம், நினைக்கவே முடியவில்லையே!   ஆனால் கோவிந்தனோ எனில் நடக்க முடியாதவைகளையே நடத்திக் காட்டுகிறான்.  அது தான் அவன்.  அவன் ஏன் வடக்கே செல்ல வேண்டும் எனத் துடித்தான் என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது.  கோவிந்தன் மட்டும் தன்னிடம் முதலிலேயே இதைப் பகிர்ந்திருந்தால்;  ஐந்து சகோதரர்களையும் தான் உயிருடன் கொண்டு வரப் போவதைச் சொல்லி இருந்தால்;  ஆஹா, தான் நிச்சயம் இதிலிருந்து விலகி இருந்திருக்க மாட்டோம்;  அவனுடன் சென்று இந்த விந்தையை அவன் நடத்திக் காட்டத் தேவையான உதவிகளைச் செய்திருக்கலாமே!  பலராமன் மேலும் சிந்தித்தான்.

திடீர், திடீரென மாறும் குணாதிசயங்களைக் கொண்ட அவன் மனம் அப்போதும் மாறுபட்ட நிலையில் சிந்திக்க ஆரம்பித்தது.  பலராமன் ஒரு சமயம் போல் இன்னொரு சமயம் இருக்க மாட்டான்.  இப்போது தம்பியின் பால் மனம் நெகிழ்ந்த நிலையில் அவன் மனம் யாதவர்கள் தங்களை எப்படியான நிலையில், முற்றிலும் பண்பு கெட்ட ஒரு நிலையில் மனம் தளர்ச்சியுறும் வண்ணம் மூழ்கடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க அவன் தலையே சுற்றியது.  விர்ரெனச் சுழலும் தலையைத் தன்னிரு கரங்களால் பிடித்த வண்ணம், சூதாட்டம், குடி, ஆடம்பரமான பகட்டான வாழ்க்கை, சாகசமான, பிறருக்குப் பயன்படும் வேலைகளில் இறங்காமல் ஒதுங்கி இருத்தல், வீரத்தைக் காட்டாமல் இருப்பது என நினைக்க நினைக்க அவன் மனமே பதறியது.  ஆஹா! வாழ்நாளையே வீணாக்கிக் கொண்டல்லவோ இருந்திருக்கிறோம்! இத்தகைய வாழ்க்கையால் எவருக்கு என்ன பயன்?