Friday, February 14, 2014

கலக்கத்தில் சாத்யகி!

அந்தச் சிறு இடைவெளி வழியாகத் தெரிந்த நிலவின் கீற்றைப் பார்த்துக் கொண்டிருந்த சாத்யகி தான் அடியோடு நசுக்கப்பட்டுவிட்டோம் என உணர்ந்தான்.  சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  அங்கிருந்த ஊர்வன எல்லாம் அவன் மேல் ஏறிக் கடிக்க ஆரம்பித்தன.  அவற்றைக் கைகளால் விரட்டினான்.  தொந்திரவு பொறுக்க முடியவில்லை.  “கோவிந்தா, கோவிந்தா, கண்ணா, வாசுதேவா, உன்னால் பல அதிசயங்களை நிகழ்த்தமுடியும்.  ஏற்கெனவே பலவற்றை நிகழ்த்தி உள்ளாய்.  இந்தக் கடுமையான கோரமான நிலையிலிருந்து என்னைக் காக்க மாட்டாயா?  அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்ட மாட்டாயா?  வாசுதேவா, நீ வேறு அந்தப் பர வாசுதேவன் வேறு என நான் ஒருபோதும் எண்ணியது இல்லை.  நீ தான் அந்தப் பர வாசுதேவன். எல்லாம் வல்லவன்.  நீயும், அவனும் ஒன்றென்றால் ஏன் இப்போது என்னைக் காக்க நீ வரவில்லை?  வாசுதேவா, என்னைக் காப்பாற்று!”

அங்குமிங்கும் அந்தப் பாதாள குகைக்குள் சுற்றியதில் நேரம் சென்று கொண்டே  இருந்தது.  சந்திரனும் மெல்ல மெல்ல அந்தப் பிளவை விட்டு நகர்ந்து விட்டான்.  இருந்தாலும் மெல்லிய வெளிச்சம் கீற்றுப் போல் இன்னும் தெரிந்து கொண்டு இருந்ததில் இருந்து, சாத்யகி அது விடியற்காலையின் மெல்லிய வெளிச்சம் என்றும் காலை விடியப் போகிறது என்றும் புரிந்து கொண்டான்.   சூரிய உதயத்தின் போது தான் அவன் கிளம்ப நேரம் குறிக்கப்பட்டிருந்தது.  அவன் படை வீரர்கள் என்ன நினைப்பார்கள் அவனைப்பற்றி?  அனைவரும் இப்போது துவாரகைக்குத் திரும்பி இருப்பார்கள்.  வெட்கத்தினால் கருத்த முகத்தை மறைக்கத் துணிவின்றி, அனைவரும் பார்க்க, சாத்யகியால் இந்த அவமானம் நேர்ந்ததை எண்ணிக் குன்றிப் போய் இருப்பார்கள்.  அவர்களின் சொந்தப் படைத்தலைவனே அவர்களை ஏமாற்றி விட்டானே என நினைப்பார்கள்.  அனைத்து யாதவத் தலைவர்களும் இதை நினைத்து நினைத்துச் சிரிப்பார்கள். அவன் குடும்பத்திற்கே அவமானம் நேர்ந்துவிட்டது.  இனி அவன் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் எவரும் மதிக்க மாட்டார்கள்.   சாத்யகி எப்படி மறைந்தான் எனக் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  தன்னைத் தேடவும் முயல்வான் தான்.  ஒருவேளை எவரையேனும் அனுப்பித் தேடவும் சொல்லி இருக்கலாம்.  ஆனால் இந்த மோசமான குகையிலிருந்து அவனைக் காப்பாற்ற அவர்களுக்கு எத்தனை நேரம் அல்லது நாட்கள் ஆகுமோ?  அவன் இங்கே இருப்பதை அவர்கள் எவ்விதம் கண்டு பிடிப்பார்கள்?

சாம்பல் நிறத்தில் தெரிந்த விடிகாலை வெளிச்சம் பின்னர் செக்கச் சிவந்த அருண நிறத்துக்கு மாறிப் பின்னர் சூரியப்பந்தின் சிவந்த ஒளி வெண்ணொளியாக மாறுவதும் தெரிந்தது.  சூரியன் மேலேறி விட்டான்.  எங்கிருந்து சூரிய ஒளிக்கீற்று அந்த குகைக்குள் வந்ததோ அங்கே சென்று சாத்யகி சூரிய பகவானைப் பிரார்த்தித்தான்.   தன் கண்களை அந்தப் பிளவின் பக்கம் கொண்டு சென்று அங்கே தெரிந்த மெல்லிய ஒளிக்கீற்றைப் பார்த்த வண்ணம், “ சூரிய பகவானே, என் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்ளும்.  ஆனால் நான் இன்னும் குளித்து முடித்துக் காலை அநுஷ்டானங்களைச் செய்யவில்லையே!  ஆனால் வேறு வழிதான் என்ன?  என்னைப் பொறுத்துக் கொள் சூரிய பகவானே!  நான் சுத்தமில்லாமல் உன்னை வணங்குவதைப் பொறுத்துக் கொள்வாய்! உனக்கு அர்க்யம் விட ஒரு துளி நீர் கூட என்னிடம் இல்லை.  ஆனால் நீ தான் ஒளிகளுக்கெல்லாம் பேரொளி. ஒளி அரசன். நீயன்றி என்னைக் காப்பவர் யார்? என்னை எப்படியேனும் இங்கிருந்து விடுதலை அடையச் செய்வாய்!”

ம்ஹூம், எவரும் வரவில்லை. எந்த சப்தமும் கேட்கவும் இல்லை.  குகையின் தரையில் மண்புழுக்களைப் போன்றும் அவற்றைவிடப் பெரிதாகவும் புழுக்கள் நிறைய ஊர்ந்தன.  அந்தக் குறைந்த வெளிச்சத்தில் குகையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த உடைந்த மண்பானை தெரிந்தது.  அவனைப் போன்ற ஒரு துரதிர்ஷ்டக்காரனுக்குக் குடிக்க நீர் வைத்திருக்க வேண்டும்.  இப்போது அது உடைந்து விட்டது.  மெல்ல மெல்ல குனிந்த வண்ணமே எழுந்து நேற்று அவனைக் கொண்டு சேர்த்தவர்கள் ஏறிச் சென்ற படிகளில் ஏறி மேலுள்ள பொறிக்கதவின் அருகே சென்று அதைத் திறக்கப் பார்த்தான்.  முடியவில்லை.  அசைந்தே கொடுக்கவில்லை.  ஒவ்வொரு நிமிஷமும் வீணாகச் சென்று கொண்டிருக்கிறதே என உணர்ந்தான்.  சற்று நேரத்தில் சூரியன் அந்தப் பிளவுக்கு நேரே வந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டான்.  அந்த ஒளிக்கீற்று கொடுத்த கொஞ்ச வெளிச்சத்தில் போய் நின்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான் சாத்யகி.  சாப்பாடு கிடைத்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, குடிக்க நீர் கிடைத்தாலும் சரி, இல்லையெனினும் சரி, இன்னும் சில நாட்கள் சாத்யகியால் உயிர் வாழ முடியும்.  அதற்குள்ளாகக் கிருஷ்ணன் தன்னைக் காக்க வந்துவிட மாட்டானா?  பலராமனுக்கும் விஷயம் தெரிந்தால் அவனும் உதவிக்கு வரலாம்.

உக்ரசேனரோ, வசுதேவரோ, அக்ரூரரோ அல்லது மற்ற யாதவத் தலைவர்களோ ஒரு இளம் யாதவத் தலைவனை இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனமாக நடத்தியதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.  இதை அவர்கள் அநுமதித்திருக்கக் கூடாது.  இப்போது அவனைக் கண்டுபிடிக்க அங்கும் இங்குமாக அலைவார்கள்.  எல்லா இடங்களிலும் தேடுவார்கள்.  இப்படி நடந்திருக்கிறது எனச் சொல்பவர் எவரும் இல்லையே!  அவன் யாருடைய சிறைக்கைதி என்பதும் தெரியவில்லை! யார் அவனை இப்படி அடைத்துவைத்திருப்பார்கள்?  ம்ம்ம்? யாரோ, யாராயிருந்தாலும் மிகவும் சக்தி படைத்தவர்கள் தான்.  அதிகாரம் உள்ளவர்கள் தான்.  ஒரு வேளை சத்ராஜித்தாக இருக்கலாமோ?  சத்ராஜித்துக்குக் கிருஷ்ணனுக்கு எதிராகவும், அவன் தந்தை சாத்யகனுக்கு எதிராகவும் நடந்து கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா?

நண்பகல் தாண்டி சிறிது நேரத்தில் பொறிக்கதவின் அருகே ஏதோ சப்தம் கேட்டது.  அந்தப் படிகளின் மேலேறி நின்று கொண்டான் சாத்யகி.  எவரோ அந்தக் கதவை அடைத்திருந்த கல்லை அகற்றும் சப்தம் கேட்டது.  கதவையும் பூட்டி விட்டு அவன் திறந்து கொண்டு வராமல் இருக்கக் கல்லையும் வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்ட சாத்யகி காத்திருந்தான்.  அவனுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்க யாரேனும் வருகிறார்கள் போலும்!  எவர் என இதோ இப்போது தெரிந்துவிடும்.  யார் அவனைக் கடத்தினார்கள் என்பதை அவன் அறியப் போகிறான்.  இப்போது அவன் மட்டும் விடுதலை ஆகிவிட்டால்! ஆஹா, அடுத்த நிமிடமே அவனைக் கடத்தியவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் ஒன்றுமில்லாமல் அழித்து விட்டுத் தான் மறு வேலை.  ஒருவரைக் கூட விட்டு வைப்பதில்லை.  இந்த துவாரகையில் அவர்கள் அடையாளம் கூட மிச்சம் இருக்கக் கூடாது.   மெல்ல மெல்ல அந்தப் பொறிக்கதவு திறந்தது.  சாத்யகிக்குத் திடீரென ஒரு சந்தேகம்.  ஒருவேளை வருபவர்கள் அவனுக்கு உணவு அளிக்க வரவில்லையோ?  அவனைக் கொன்றுவிடும் திட்டத்தோடு வருகின்றனரோ?  சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டு வருபவர் யாரானாலும் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளோடு இருந்தான் சாத்யகி.

கதவு திறந்தது.  ஆனால் இது என்ன?  எவரும் உள் நுழையவில்லை.  யாரோ அங்கிருந்தே உற்றுப் பார்க்கின்றனர். சாத்யகி எங்கே இருக்கிறான் எனத் தேடுகின்றனர்.  சாத்யகி அந்த முகமறியா எதிரியைத் தாக்க முழு ஆயத்தங்களோடு காத்திருந்தான்.  மூச்சுக்கூட விடாமல் பொறுமையாக இருந்தான்.  அப்போது!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திக்... திக்... திக்...

தொடர்கிறேன்..

ஸ்ரீராம். said...

காப்பாற்ற யாரும் வந்திருக்கிறார்களோ!