“
வாசுதேவா, உனக்கு நூறு வயது. இல்லை; இல்லை; பல்லாண்டுகள் வாழ்வாய்! உன்னைச் சந்திக்கவேண்டும்
என்றே காத்திருந்தேன்.” வியாசரின் குரலில்
ஒரு தந்தையின் பரிவு தென்பட்டது. நெடுநாள்
கழித்துச் சந்திக்கும் மகனைக் கண்ட உற்சாகம் அவர் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும்
தென்பட்டது. “நான் உன் தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பல்லாண்டுகள் முன்னர்! ஏன், நீ பிறக்கும் முன்னர் சந்தித்திருக்கிறேன்.”
என்றார் வியாச முனி. அவருடைய முக விலாசத்திலிருந்தும்
கண்களில் பெருகிய அன்பிலிருந்தும் அவருடைய உள்ளார்ந்த அன்பைப் புரிந்து கொண்ட கண்ணன்,
அதில் பூரணமாக நனைந்தான். “என் தாய் தேவகி நீங்கள் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தது
குறித்து இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாள்.” என்றான் கண்ணன். வியாசரின் பேச்சை விடவும் அவர் முகமே அவனுக்குப்
பல்லாயிரம் செய்திகளைச் சொல்லாமல் சொன்னது.
“அதன் பின்னர் நான் மதுரா வந்தபோது,
நீயும், பலராமனும் கோமந்தக பர்வதத்துக்குச் சென்றிருந்தீர்கள்.” என்றார் வியாசர். மான் தோலை ஆடையாக உடுத்தி இருந்த வியாசமுனிவர்
கறுப்பு நிறத்தோடும், நல்ல வலுவான உடல் கட்டோடும் காணப்பட்டார். அவரிடம் இருந்த சொல்ல ஒண்ணாக் கவர்ச்சி என எதைச்
சொல்வது எனக் கண்ணன் திகைத்தான். அன்பு பெருகி
ஊற்றெடுக்கும் அந்த விசாலமான கண்களா? அந்தக்
கண்களால் வியாசர் எவரையேனும் பார்க்கையிலேயே எதிராளிக்குத் தான் அந்தக் கண்களாகிய மாபெரும்
கடலின் அன்பு அலைகளில் மூழ்குகிறோம் என்பது புரிந்தது. வளைந்த அதே சமயம் தீர்க்கமான புருவங்களும், நீளம்
கம்மியாக இருந்தாலும் அகலமான மூக்கும் சேர்ந்து ஒரு இணையற்ற கம்பீரத்தை அவருக்கு அளித்தது. அதோடு தூக்கிக் கட்டிய அந்த வெண்ணிற முடிக்கற்றைகள்,
வைரங்களால் ஆன கிரீடம் போல அவருக்கு அமைந்து விட்டிருந்தது. கைலைச் சிகரத்தின் மேல் எப்போதும் மூடி இருக்கும்
வெண்பனியைப் போலவும் காட்சி அளித்தது. எல்லாவற்றுக்கும்
மேல் அவரின் சிரிப்பு, புன்னகை கண்ணனை மிகக் கவர்ந்தது. “என்னிடம் நெருங்கி வாருங்கள் குழந்தைகளே, உங்களுக்கு
எந்தத் தடையும் இல்லை; என்னிடமிருந்து விலகியும்
இருக்க வேண்டாம். உங்களிடையே எந்தவிதமான வித்தியாசங்களும்
வேண்டாம். அனைவரும் என் அருகே வாருங்கள். அன்பாகிய அமுதத்தை அள்ளித் தருகிறேன்.” என அந்தச்
சிரிப்பு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
“சரி, இப்போது நாம் யாகத்தை முடிப்போம்.”
என்றார் மாமுனி.
நாகர்களின் தலைவர்கள் அருகேயே
அமர்ந்த கிருஷ்ணனும் அவன் தோழர்களும் மந்திர கோஷத்திலும் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும் வியாசர் கண்ணனிடம் யாதவர்களின்
சுக செளக்கியங்களைக் குறித்து விசாரித்தார்.
மேலும் இங்கே கங்கைக்கரைக்கு வரும்படியாக கிருஷ்ணனுக்கு என்ன வேலையோ எனவும்
கேட்டார். கிருஷ்ணன் இந்தக் கேள்விகளுக்குப்பதில்
சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தெளம்ய ரிஷி அங்கே காத்துக் கொண்டிருந்த உடல் நலமற்றவர்களுக்குப்
பாலை விநியோகம் செய்யும்படியாகத் தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொருவராக வரிசையில் வந்து பாலைப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோயால் அவதிப்
பட்டனர். சிலரால் நடக்கக் கூட முடியவில்லை.
நகர்ந்தே வந்தனர். சிலர் யாரேனும் பிடித்துக்கொள்ள
நகர்ந்து வந்தனர். தங்கள் உடல்நிலை எவ்வளவு
அனுமதித்ததோ அந்த அளவுக்கு அவர்களால் நகர முடிந்தது. அங்கிருந்த வியாசரின் பிரதான சீடரான ஜைமினியின்
தோள்களில் இருந்த ஒரு பையிலிருந்து ஒரு சிறிய இலையை வியாசர் அங்கே பால் ஊற்றி வைத்திருந்த
ஒவ்வொரு மண் சட்டிகளிலும் இட்டார். நோயாளிகள்
அந்த மண் சட்டியைக் கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புனிய யாகாக்னியின் முன்னர்
அமர்ந்த வண்ணம் தலை குனிந்து பிரார்த்தித்தனர்.
வியாசர் உரத்த குரலில் அஸ்வினி தேவர்களைத் துதித்துப் பாடத் தொடங்கினார். அஸ்வினி தேவர்களைப் பிரார்த்தித்துக் கொண்டால் நோய்
குணமாகும் என்பது நம்பிக்கை.
சற்று நேரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே
மாறி இனம் தெரியாததொரு அமைதி அங்கே நிலவிற்று.
காற்றும் குளிர்ந்து வீசியது. மந்திரங்களின்
ஏற்ற, இறக்கங்களும் அவைஓதப் பட்ட முறையினாலும் அனவர் மனதிலும் ஒரு அமைதியை உண்டாக்கியது. சிறிது நேரத்தில் பிரார்த்தனை முடிந்து, வியாசர்
அனைவரையும் அந்தப் பாலைக் குடிக்கச் சொன்னார்.
சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மார்கள் பாலைப்புகட்டினார்கள். தன்னுடைய அதே கவர்ந்திழுக்கும் குரலில், அன்பாக
வியாசர் அனைவரையும் தம் அருகே வரச் சொல்லி அழைத்தார். “அருகே வாருங்கள் என் குழந்தைகளே, உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன்.”
என்றார். அவர் குரலின் இனிமையும், அதில் தொனித்த
அன்பும் அனைவரையும் அவர் அருகே வரவழைத்தது.
அனைவரும் அவர் அருகே வந்து குனிந்து நமஸ்கரித்தனர். சிலர் அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்
கொண்டனர். சிலர் சாஷ்டாங்கமாக விழுந்து பாதங்களைக்
கண்ணீரால் நனைத்தனர். சிறு குழந்தைகள் வியாசரின்
காலடியில் படுக்க வைக்கப்பட்டன. வியாசர் அந்தக்
குழந்தைகளைத் தூக்கி அவர்கள் நெற்றியில் யாகாக்னியின் புனிதச் சாம்பலை இட்டு ஆசீர்வதித்தார். இம்மாதிரியே அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
அனைவரையும் வீட்டுக்குச் செல்லச் சொன்னார் வியாசர். அஸ்வினி தேவதைகள் அவர்களை ஆசீர்வதித்து விட்டதாயும், அவர்களின் நோய் குணமடைந்துவிடும் எனவும் கூறினார். ஆனந்தக் களிப்பில் கோஷமிட்ட மக்கள் தாங்கள் உண்மையாகவே புத்துணர்ச்சி பெற்றிருப்பதை உணர்ந்தார்கள். ஒரு சிலருக்கு உண்மையாகவே நோய் குணமாகி இருக்க, நோய் முற்றிலும் நீங்காத மற்றவர்கள் ஆசாரியரைப் பார்த்து வணங்கிய வண்ணம் அவர் கால்களில் விழுந்தனர். அவர்களை, வீட்டிற்குச் சென்று எல்லாம் வல்ல மஹாதேவனை வணங்கிப் பிரார்த்திக்கும்படி ஆசாரியர் கூறினார். அவன் ஒருவனே அனைத்தையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன். அவனாலேயே உங்கள் துன்பங்களை அழிக்க முடியும். " என்றார். மக்கள் ஆசாரியரை வணங்கி அவருக்கு ஜெயகோஷம் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.