Monday, June 30, 2014

சுயம்வர மண்டபத்தில் திரௌபதி!

“என் அருமை க்ஷீரா, நான் உன்னைத் தனியே விட்டுப் பிரிந்து செல்ல மாட்டேன்.  நீயும் என்னுடன் என் கணவனின் வீட்டுக்கு வருகிறாய்.  என் கணவன் வீடு எங்கே இருந்தாலும்.   நீ என்னில் ஒரு பகுதி!  உன்னை நானோ,என்னை நீயோ பிரிய முடியாது!” என்று அதன் காதுகளுக்கு மட்டும் விழும்படி மெல்லக் கிசுகிசுத்தாள் திரௌபதி.  தன் தலையைத் தூக்கி அவளைப் பார்த்த க்ஷீராவை அணைத்துக் கொண்ட திரௌபதி 50 தோழிகள்  மங்கலப்பாடல்கள் பாடிய வண்ணம்  உடன் வர, மலர்கள் தூவிய நெடும்பாதை வழியாக சுயம்வர மண்டபத்தின் மையத்தை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாள்.  அரச சேவகர்கள் ஆங்காங்கே முரசுகளை முழக்கிக் கொண்டும், எக்காளங்களை ஊதிக்கொண்டும், நாயனங்களை ஊதிக்கொண்டும் வர அவர்கள் பின்னே த்ருஷ்டத்யும்னன், சத்யஜித், ஷிகண்டின் ஆகிய மூவரும் வந்தனர்.  அவர்களோடு சாந்தீபனி ரிஷியின் முதன்மைச் சீடர் ஆன ஆசாரிய ஷ்வேதகேதுவும் உடன் வந்தார். அனைவரின் ஆச்சரியத்துக்கு உட்பட்டது ஒரு குதிரை!  நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட போர்க்குதிரை ஒன்று சகலவிதமான ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சேணங்கள் பூட்டப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் குதிரையை ஆக்கிரமிக்கும் வண்ணமாய்த் தயார் நிலையில் அந்த ஊர்வலத்தின் கூடவே வந்தது. எந்தவொரு நிச்சயமற்ற தன்மைக்கும் ஈடு கொடுக்கும் விதமாக ஷ்வேதகேதுவும் தயார் நிலையில் இருந்தான்.

மண்டபத்துக்குச் செல்லும் வழியைச் சுற்றிலும் ஆராய்ந்த திரௌபதியின் கண்கள் அங்கே மகதத்தின் எந்த ஒரு வீரனோ, அல்லது அவனுடைய குதிரையோ, ரதமோ நிற்கவில்லை என்பதைக் கண்டுகொண்டாள்.  அவள் மனதில் அப்போது தான் நிம்மதி பிறந்தது.  கிருஷ்ணன் தன் வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுகிறான் என்னும் எண்ணம் அவள் இதழ்களில் புன்னகையாக மலர்ந்தது.  அவளைக் கடத்திச் செல்ல யாரும் அங்கே இல்லை என்பதே பெரும் நிம்மதியாக இருந்தது.

மண்டபத்தினுள் அவள் நுழையும் சமயம் அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்தும், அரசர்களிடமிருந்தும் எழுந்த மெல்லிய பேச்சுத் தொனி அரசமரத்தின்   இலைகள் மேல்காற்றில் சலசலப்பது போல் கேட்டது.  அனைவரின் கழுத்தும் ஒரேசேர ஒரே சமயத்தில் அவளைப்பார்க்க வேண்டி மண்டபத்தின் வாயிலுக்குத் திரும்பியது.  ஒரே சமயம் பல கண்கள் அவளை நோக்கித் திரும்பின.  நேற்று வரை சுயம்வர மண்டபத்தில் இத்தகையதொரு சூழ்நிலையைத் தான் எவ்வாறு எதிர்கொள்வோமோ என்னும் எண்ணத்தில் அவள் கலக்கம் அடைந்திருந்தாள். ஆனால் இப்போது அது அவள் வெற்றியின் அடையாளம் என நினைத்தாள்! இல்லை,,,,இல்லை,,,,, அவள் வெற்றியா?  இல்லவே இல்லை!  தர்மத்தின் வெற்றி!  ஆம், அவள் தன்னை தர்மத்திற்கே அர்ப்பணம் செய்து விட்டிருந்தாள். இது அதன் வெற்றியே அன்றி அவள் வெற்றி அல்ல.

அவள் உள்ளே நுழைகையிலேயே அவள் தந்தை துருபதன் சிம்மாசனத்தில் மிகவும் மகிழ்வோடு அமர்ந்திருப்பதைக் கண்டு கொண்டாள்.  நேற்று எடுத்த முடிவில் அவன் தீர்மானமாக உறுதியுடன் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டாள்.  தன் தந்தைக்கு முன் சென்று அவரை வணங்கினாள்.  தன் மனப்பூர்வமான ஆசிகளை அவளுக்கு துருபதன் வழங்கினான்.   சிம்மாசனத்தின் இரு பக்கங்களிலும் வில்லையும், அம்புகளையும் தாங்கிய வண்ணம் சத்யஜித்தும், ஷிகண்டினும் நின்று கொண்டனர்.  சிம்மாசனத்துக்கு எதிரில் ஒரு பலிபீடம் காணப்பட்டது.  அதில் புனித அக்னி வளர்க்கப்பட்டு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது.  அதைச் சுற்றி வேதம் ஓதும் அந்தணர்கள் அமர்ந்த வண்ணம் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.  மிகவும் பழையவர்களான ரிஷிகள் யஜர் மற்றும் உபயஜர் அதற்குத் தலைமை தாங்கினார்கள்.  திரௌபதியின் மனம் அவளுக்கு என்றென்றும் பாதுகாவலன் ஆன அக்னியை நினைத்துப் பரிபூரண நிம்மதி அடைந்தது. மனம் நன்றியறிதலில் விம்மியது.  ஆர்யவர்த்தத்தின் வருங்காலமும், அதன் செல்வவளமும் அவளால் தான் முன்னேற்றம் அடையப் போகிறது; அதற்கான வாய்ப்பை அவளுக்கு இந்த அக்னி வழிபாடே நல்கியது.  இனியும் நல்கும்.

மண்டபத்தின் நட்டநடுவே ஒரு பள்ளத்தில் குளம் போல் நீர் நிரப்பப்பட்டிருந்தது.  அதில்தான் போட்டிக்கான குறி இலக்கு அமைக்கப் பட்டிருந்தது.  அவள் மண்டபத்தைச் சுற்றிலும் பார்த்தாள்.  ஆனால் அவளுக்குத் தான் கனவு காண்பது போலவும் இருந்தது.  தன்னையும் மீறிய ஒரு மயக்கநிலையிலேயே மண்டபத்தினுள் அரசர்கள் அனைவரும் அரை வட்ட வடிவில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.  இத்தனை அழகும், கம்பீரமும் பொருந்திய ராஜசபையை இன்றுவரை அவள் கண்டதில்லை.  எங்கு பார்த்தாலும் தங்கத் தகடுகள் வேயப்பட்டுக் காலை இளம் வெயிலில் பளபளவென ஜொலித்துக் கொண்டிருந்தன.  அரசர்கள் அனைவரும் ராஜாங்க உடைகள் தரித்து கம்பீரமாகக் காட்சி அளித்தனர்.  அவர்கள் தலையில் அணிந்திருந்த பல்வகைப்பட்ட கிரீடங்களும், கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலைகள், நவரத்தினமாலைகள், வாகுவலயங்கள், வைரங்களும், ரத்தினங்களும் பதிக்கப்பட்ட கங்கணங்கள் என ஆங்காங்கே பல்வேறு விதமான ஒளியை மிதமாகவும் சில சமயங்களில் மிகப் பிரகாசமாகவும் வெளியிட்டுக் கொண்டிருந்தன.  தங்க இழைகளால் பின்னப்பட்ட  உத்தரீயத்தைப் பலரும் கழுத்தைச் சுற்றித்  தரித்திருந்தனர்.

அவரவருக்குப் பழக்கமான அவரவர் எந்த ஆயுதப் பயிற்சியில் சிறந்தவரோ அந்த ஆயுதங்களையும் அவர்கள் தங்களோடு இணை பிரியாமல் வைத்திருந்தனர்.  வாள் வித்தைக்காரர்கள், பல்வேறு விதமான வாள்களையும், கதாயுதம் பிடிப்பவர்கள் பல்வேறு கதாயுதங்களையும், வில்லாளிகள் விற்களையும், அம்புகளையும் அவற்றைப் பொருத்தும் அம்புறாத் தூணிகளையும் வைத்திருந்தனர்.   அனைத்து ஆயுதங்களும் எண்ணெய் பூசப்பட்டு நன்கு துடைக்கப்பட்டுக் காலை வெயிலில் புதியன போல் பளபளத்தன.  பலரும் அவளை முதல்முதலாகப் பார்க்கும் ஆர்வத்தில் கண்கொட்டாமல் பார்த்தார்கள் என்றாலும் அவர்களில் சிலர் கண்களில் பேராசையும் ஒளிவிட்டது.  அனைவருமே ஒரு ஆச்சரியம் கலந்த திகைப்புடனேயே அவளைப் பார்த்தனர்.

சிலரை அவளால் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ஏனெனில் அவர்கள் அவளைச் சந்திக்க வந்திருந்தனர்.  அப்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தாள்.  ஷகுனியும் அங்கே உட்கார்ந்திருந்தான்.  தன் பருத்த உடலோடு அந்த ஆசனத்திற்குள் தன்னைத் திணித்துக்கொண்டு வழக்கமான விளக்கெண்ணைச் சிரிப்புடன் காணப்பட்டான்.  அவன் அருகே அமர்ந்திருப்பவன் தான் குரு வம்சத்து இளவரசன் துரியோதனன்.  வெகு எளிதில் அடையாளம் கண்டு பிடித்தாள் திரௌபதி.  அவனருகே அமர்ந்திருக்கும் கட்டுடலுடனும், அழகாகவும் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் அவன் தம்பிகளாய் இருக்க வேண்டும்.  துரியோதனனும் கட்டான உடலுடனும், அழகான வடிவத்துடனும்,மிகப் பிரமாதமானதொரு தங்கக் கிரீடத்தைச் சூட்டியவண்ணமும் காணப்பட்டான்.  அந்தக் கிரீடத்திலிருந்து முத்துக்கள் அலங்காரமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. அவனருகே கழுகு போல் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பவன் அஸ்வத்தாமா.   அஸ்வத்தாமா அருகே தான் அந்தத் தேர்ப்பாகன் மகன் கர்ணன் வீற்றிருக்கிறான் போலும்.  அவனையும் எளிதாக அடையாளம் காண முடிகிறது.  ஆம், அவன் உண்மையில் தெய்வீகமான அழகு பொருந்தித் தான் காணப்படுகிறான்.  அந்த தெய்வீகம்  அவனுடைய நாடி, நரம்பிலே எல்லாம் இயல்பாகப் பொருந்தி உள்ளது.  ஆஹா, இவன் ஒரு க்ஷத்திரிய குமாரன் அல்லவே!

மற்றும் சிலரையும் அடையாளம் கண்டு கொண்டாள் திரௌபதி.  விராடன், ஷால்யன்,  சேதி நாட்டு சிசுபாலன்.  மகதச் சக்கரவர்த்தியையும் அவளால் கண்டு பிடிக்க முடியும்.  அதோ! அங்கே அவனுடைய சபாமனிதர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறான்.  முகம் பூராவும் தன்னம்பிக்கையும், அதனால் விளைந்த கௌரவமும் நிறைந்து காணப்பட தன் பெரிய சரீரத்தை அந்த ஆசனத்தில் எப்படியோ கிடத்தி இருக்கிறான்.  அவன் தலையில் சூட்டி இருக்கும் கிரீடம் மிகப் பெரிதாக இருப்பதோடு, அதில் பதிக்கப்பட்டிருக்கும் ஒற்றை மாணிக்கக் கல் அளவில் ஒரு கோழி முட்டையை விடப் பெரிதாகவும் உள்ளது.  அது ஒளிவிடுவதைப் பார்க்கையில் ருத்ரனின் மூன்றாவது கண் தான் திறந்து கொண்டு நம்மைப் பார்த்து விழிக்கிறதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.  ஜராசந்தன் தன் வெண்ணிற மீசை, தாடி, தலைமயிர் ஆகியவற்றை எண்ணெய் தடவி ஒழுங்காகச் சீவிக் கட்டி இருந்தான். புலித்தோலைத் தோளில் வீசி இருந்தான்.  ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரைக்கச்சு இடையில் ஒளிர்ந்தது.  தங்கத்தால் செய்யப்பட்ட மிகப் பெரிய கங்கணங்கள் கைகளை அலங்கரித்தன.  அவன் ஆயுதங்கள் தரிக்கவில்லை. அவனுடைய பிரபலமான தண்டாயுதத்தை அவன் வேலையாள் ஒருவன் தன் கைகளில் தாங்கிக் கொண்டு ஜராசந்தன் அருகே நின்றிருந்தான்.

Saturday, June 28, 2014

திரௌபதி சுயம்வரத்துக்குத் தயாராகிறாள்!

ஆயிற்று.  கடைசியில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தினமும் வந்தே விட்டது.  இன்று திரௌபதி சுயம்வரம்.  அன்று அதிகாலையிலேயே திரௌபதி விழித்துக் கொண்டுவிட்டாள்.  இன்று சுயம்வர நாள்.  பல தினங்கள் வான நிலையைக் கண்டு ஆய்ந்து அறிந்து பாஞ்சாலத்தின் ஜோதிடர்கள், பௌஷ மாதத்தின் இந்தக் குறிப்பிட்ட நாளை அவள் சுயம்வரத்திற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.  கிரஹங்களின் சஞ்சாரங்கள் கணிக்கப்பட்டு, இந்த நாள் அவள் வாழ்க்கையில் இனிமையையும், மகிழ்ச்சியையும் கூட்டும் என்றும் கணித்துச் சொல்லி இருக்கின்றனர்.  இன்றைய தினம் அவள் தலைவிதி மட்டுமன்றி அவள் குடும்பம்…. அவ்வளவு ஏன்? இந்தப் பாஞ்சாலத்தின் தலைவிதி…..ம்ஹ்ஹும், அதுவும் சரியல்ல…… இங்கு வந்திருக்கும் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகள், அரசர்கள் ஆகியோரின் தலைவிதியும் நிர்ணயிக்கப்படப் போகிறது.  இதை நிர்மாணிக்கப் போகும் சிற்பி அவள் தான்.  அவள் முடிவில் தான் இத்தனைபேரின் தலைவிதியும் இருக்கிறது.

காலையிலேயே உற்சாகமாக கங்கைக்குத் தன் தோழிகள் புடை சூழ நீராடச் சென்றாள்.  அவள் மனதுக்குள்ளாக இனிய கீதம் ஒன்று இசைத்துக் கொண்டிருந்தது.  அவள் காதுகளுக்கு மட்டுமே கேட்கும்படியாக அந்த இசை இருந்தது.  இது வெற்றியின் இனிய கீதமோ? அவளை ஒரு அழகான பிரகாசமான எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் கீதமோ?  ஆஹா!  அதோ விண்ணிலிருந்து அந்த இனிய கீதம்!  இதோ இங்கே பூமியில் பூக்கும் பூக்கள் கூட அந்த இனிய கீதத்தை இசைத்துக் கொண்டே பூக்கின்றன.  மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள் அனைத்துமே இந்த இனிமையான இசையை இசைக்கின்றன.  அனைவருக்கும் ஒருசேர இந்த கீதத்தை இசைக்கச் சொல்லிக் கொடுத்தது யார்?  அதோ அந்த ஓடக்காரன் இசைக்கும் இனிமையான நாட்டுப்பாடல் கூட இந்த கீதம் தான் போல் தெரிகிறது!

கங்கையின் சில்லென்ற தண்ணீரில் அவள் அமிழ்ந்து போகும்போது கிருஷ்ணன் அவளை நோக்கி வருவதாகக் கண்டாள்.  நேற்றைய தினம் நிஜத்தில் எப்படி அவள் முன் வந்தானோ அதே போல்!  இதோ, ஏதோ கேட்கிறானே?  “கிருஷ்ணா, கிருஷ்ணா, என் மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?  என்னை நீ நம்புகிறாய் அல்லவா?”  திரௌபதி தன்னையுமறியாமல் கிருஷ்ணன் தன்னெதிரே மீண்டும் நின்று கொண்டு கேட்பது போல் நினைத்த வண்ணம் தலையை ஆட்டினாள்.  “ஆம், வாசுதேவா, நான் உன்னைப் பூரணமாக நம்புகிறேன்.”  அவள் வாய் முணுமுணுத்தது. அவன் அவளுக்கு ஒரு நல்வழியைக் காட்டி இருக்கிறான்.  தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்பும் வழியைக் காட்டி இருக்கிறான்.  ஆஹா, அந்த எண்ணமே அவள் மனதில் பேரமைதியையும், ஆனந்தத்தையும் உண்டாக்குகிறதே!  “உன்னுடைய ஆசைகளை, அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வேன். வாசுதேவா!” அவள் மீண்டும் முணுமுணுத்தாள். அவளையும் மீறிய களிப்பில் அவள் எல்லையற்ற ஆனந்தத்தில் மிதந்தாள்.

கங்கையில் குளித்த பின்னரும் சடங்கு முறைப்படியான குளியல் ஒன்றுக்கும் அவள் உட்படுத்தப்பட்டாள்.  சுத்திகரிக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீர், பால், தயிர்  போன்றவை சேர்க்கப்ப்பட்டு அவள் தலையில் மந்திர கோஷங்களோடு வேதங்களை ஓதும் அந்தணர்களால் அபிஷேஹம் செய்யப்பட்டது.  மங்கலமான இசையுடன் கூடிய பாடல்களைப் பாடிய வண்ணம் அவள் தோழிமார்கள் அவள் உடலில் சந்தனம், மஞ்சள், கஸ்தூரி போன்றவற்றைப் பூசி அவளுக்கு அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.  சடங்குகள் ஆரம்பித்த பதினாறாம் நாள் அது.  அன்றாடம் நடத்தப்பட்ட இறை வழிபாடுகள், உபவாசங்கள், மத ரீதியான சடங்குகள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் மீறி அவள் கனவுலகில் தான் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்தாள்.  இவ்வுலகின் உச்சியிலே தான் இருப்பதாக உணர்ந்தாள்.  இங்கே கூடியிருந்த மனிதர்கள், மக்கள், பொருட்கள் அனைத்துமே  அவள் இருக்கும் உலகுக்குப் பொருந்தாதது போலும்,  அவள் ஏதோ வேறு உலகில் சஞ்சரிப்பதாகவும்  தோற்றமளித்தன.  இத்தனை பேரிலும் கிருஷ்ணன், வாசுதேவ கிருஷ்ணன் ஒருவனே உண்மையானவன். அவன் அவள் பக்கம் முழுக்க முழுக்கத் துணை நிற்கிறான்.  ஆகவே அவள் ஆனந்த சாகரத்தில் தள்ளாடாமல் நிலைகொண்டு மிதந்து கொண்டிருக்கிறாள்.

அவள் அணிய இருந்த ஆடையில் நிறையத் தங்கம் கலந்திருந்தது.  அந்த ஆடையை  ஒருதரம் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டு அவளுக்குத் தோழிகள் அணிவித்தனர். மோதிரங்கள், மாலைகள், கழுத்தணிகள், வளைகள், தலைச்சுட்டி, நவரத்தினங்கள், முத்துக்கள் போன்றவற்றால் அவள் மேலும் அலங்கரிக்கப்பட்டாள்.  அவள் தலையில் பூவினால் விதவிதமான அலங்காரங்களைச் செய்தனர்.  ஒரு அழகான சிறிய கிரீடம் அவள் தலையை அலங்கரித்தது.  அந்தக் கிரீடத்தில் விலை உயர்ந்த சிவப்புக் கற்களும், வைரங்களும் பதிக்கப்பட்டிருந்தன.  வாசனை மிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்று அவள் கழுத்தை அலங்கரித்தது. கோயில் பூசாரிகளும், மற்ற நாட்டு இளவரசிகள் மற்றும் தோழிப் பெண்கள் புடை சூழ ஊர்வலமாக வந்து அவள் முதலில் யக்ஞசாலைக்குள் நுழைந்தாள். அங்கே சந்நிதியில் புனிதமான அக்னி எரிந்து கொண்டிருந்தது.  அவளும் த்ருஷ்டத்யும்னனும் பிறந்ததில் இருந்து அது அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.  அவளுடைய பாதுகாவலனே அக்னி என அனைவரும் கருதினார்கள்.

தன் கரங்களைக் கூப்பிய வண்ணம் திரௌபதி அந்த அக்னியைச் சுற்றி வந்தாள்.  அவள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மாபெரும் நிகழ்வுக்கு வெற்றியைத் தரும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்தனைப் பாடல்களை முணுமுணுத்தவண்ணம் சுற்றினாள்.  அதிலும் இது மாபெரும் துணிகர முயற்சி.  அதில் அவள் எப்பாடுபட்டேனும் வெற்றி கண்டே ஆகவேண்டும்.   அரசர்கள் மாபெரும் பலத்துடன் எழுந்து நிற்கவோ, அல்லது அனைவருமே பலவீனத்தாலும் தோல்வியாலும் அடிபட்டு விழவோ காரணமாய் இருக்கப் போவது அந்த முயற்சி.   அதற்காக அவள் எவ்விதமான கஷ்டத்துக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு இருக்கிறாள். யக்ஞசாலையிலிருந்து வெளிவரும்போதே அவள் பிரியத்துக்கு உகந்த பசு க்ஷீரா அங்கே நின்றிருப்பது தெரிந்தது.  அவளுடைய இனிமையான, அருமையான தோழி, அவளுக்காகக் காத்திருந்தாள்.   இந்தப் பசுவுக்குத் தன் கையாலேயே உணவூட்டி அதைக் கறப்பதும் தன் வேலை என்று வைத்திருந்தாள் திரௌபதி.  பசு அவளை அளவு கடந்த பாசத்துடன் பார்த்தது.


Friday, June 27, 2014

என்னுயிர் நின்னதன்றோ!

கடைசியில் கிருஷ்ணன் வாயைத் திறந்தான்.  “சாத்யகி, நீ விரைவில் தூங்கச் செல்!  காலையில் உன் சக்தி அனைத்தையும் செலவு செய்து போட்டியில் ஜெயிக்கும்படி இருக்கும்!” என்றான்.

“ஓ, கிருஷ்ணா!  நான் முழு சக்தியுடன் இருக்கிறேன்.  எனக்குச் சோர்வெல்லாம் இல்லை.   அதுவும் இப்போது நீ அந்த மகதனுக்கு எதிராக ஒரு வெற்றியை எதிர்பார்க்கிறாய் அல்லவா?  அது போதும் எனக்கு;  நான் எப்போதையும் விட வலிமையுடன் இருக்கிறேன்.” என்று உற்சாகமாகக் கூறினான் சாத்யகி.

“தூங்கச் செல் சாத்யகி!  உத்தவனுக்காக நான் காத்திருக்கிறேன்.  நீ காத்திருக்க வேண்டாம்.”

சாத்யகி தன் படுக்கையில் படுத்துக் கொண்டு கிருஷ்ணனையே பார்த்தான். துவாரகையில் அவனை விடுவித்த அந்த அழகான வம்புக்கார புத்திசாலிப் பெண் பாமா அவன் நினைவுக்கு வந்தாள்.  அவள் எப்படியேனும் கிருஷ்ணனை மணந்து கொள்ளப் போவதாகத் தன்னிடம் சபதம் போட்டிருப்பதை நினைத்துக் கொண்டவனுக்கு ஒரு புன்னகை தோன்றியது.  பாமாவை நினைத்துச் சிரித்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தான் சாத்யகி.  சாத்யகி நன்கு தூங்கி விட்டான் என்று தெரிந்ததும் கிருஷ்ணன் கூடாரத்துக்கு வெளியே வந்து உத்தவனுக்குக் காத்திருந்தான்.   அங்கிருந்த அமைதி அவனைத் தாக்கியது.  அத்தனை அமைதியிலும் அவன் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.  திடீரென ஒரு சந்தேகம் அவனுக்குள் தோன்றியது.  “அவன், வாசுதேவ கிருஷ்ணன் உண்மையிலேயே தர்மத்தை நிலை நாட்டத் தான் பிறந்திருக்கிறானா? அல்லது அவன் விரும்பும்படியாக அனைத்தும் நடைபெறுவது தற்செயலான ஒன்றா?"

இந்த மஹா பெரிய அதே சமயம் மிகவும் சிக்கலான சுயம்வரத்தைத் திட்டம் போடுவதிலும் அதை நடத்துவதிலும் அவன் மிகவும் அதிகமான அபாயங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.  இதில் அவன் மட்டும் தோற்றான் எனில் அனைத்தையும் இழந்து விடுவான்.  அதே போல் அவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்து இங்கே வரவழைக்க இருக்கும் பாண்டவர்கள் ஐவர்!  அவர்களுக்கும் இதன் மூலம் பெரிய அளவில் நஷ்டமே ஏற்படும்.   சற்று நேரத்தில் உத்தவன் வந்தான்.  வரும்போதே தலையை ஆட்டித் தன் எண்ணத்தைத் தெரிவித்தவன், கிசுகிசுப்பாக, “சிகுரி நாகனுக்குப் பாண்டவர்கள் குறித்த எந்தச் செய்தியும் வரவில்லையாம். அவனால் கண்டு பிடிக்கவும் முடியவில்லையாம்”  என்றான்.   உத்தவனையே கவலையுடன் பார்த்த கிருஷ்ணன், “ இப்போது அனைத்துமே மிகக் கடினமாக ஆகி வருகிறது, உத்தவா! நம்மையும் ஆபத்து சூழ்ந்து கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்.”

கிருஷ்ணனையே ஆவலுடனும், அன்புடனும் பார்த்த உத்தவன் தன் கைகளால் அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தான்.  பின்னர், “கிருஷ்ணா, நீ எப்போதுமே என்னிடம் அன்பு காட்டி நல்ல நண்பனாக இருந்து வருகிறாய்.  இப்போது எனக்கு ஓர் உதவி செய்வாயா?”

“என்ன அது உத்தவா?  நீ கேட்டு நான் இல்லை என்று சொல்வேனா?”

“அப்படி எனில் நாளை போட்டியில் சாத்யகி தோற்றான் எனில் நான் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள நீ எனக்கு அநுமதி கொடு!”

“நீயா?”  ஆச்சரியத்துடன்  வினவினான் கிருஷ்ணன். ‘ நீ போட்டியில் கலந்து கொள்கிறாயா?  உத்தவா?  திரௌபதியை மணந்து கொள்ள உனக்கு முழு மனதுடன் விருப்பமா?  உனக்கு எனத் தனியாக எவ்வித ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை என்பதை நான் அறிவேன். அதோடு நீ மென்மையான மனம் படைத்தவன்.   இப்படி ஒரு வலுவான போட்டியில் சேர்ந்து கொள்ளும் ஆவல் உனக்கு ஏற்பட்டதே இல்லையே?  இப்போது எப்படி?  நீ போட்டியில் வென்றால் திரௌபதியை மணந்து கொண்டு மகிழ்வோடு இருக்க முடியும் என எண்ணுகிறாயா?  அது முடியாத ஒன்று உத்தவா! அதோடு நீ மணந்து கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரிகள் மனதை நீ மிகவும் புண்படுத்தி விடுவாய்.  அவர்கள் இருவரும் மனம் உடைந்து போவார்கள்.”

“அது ஒன்றும் விஷயமே இல்லை கிருஷ்ணா!  துரியோதனனை மணக்கும்படியான நிலைமை ஏற்படாது என நீ திரௌபதிக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய்; நீயோ போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை.  சாத்யகியால் வெல்வது கடினம். அவனால் முடியவில்லை எனில் என்னைப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கொடு.  உன்னை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் சொல்லி விடாதே!”  உத்தவன் முழு மனதுடன் இந்தப் போட்டியில் தான் கலந்து கொள்ள நினைப்பது அவன் குரலில் தெரிந்தது.   கிருஷ்ணன் அவனை அன்போடு அணைத்துக் கொண்டு, “உத்தவா, என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்ற வேண்டி நீ எத்தனை முறைகள் உன்னையே தியாகம் செய்வாய்? “

“கண்ணா, வாசுதேவா, நான் உயிர் வாழ்வதே உனக்காகத் தான். நீ அளித்த வாக்குறுதிகள் உண்மையாக இருக்கத் தான் நான் வாழ்கிறேன்.  கிருஷ்ணன் வாக்குறுதி கொடுத்தால் அது நடக்கும் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் வாழ்நாள் குறிக்கோள்.  தயவு செய்து அனுமதி கொடு கிருஷ்ணா!”

“சரி உத்தவா!  நீ விரும்பினால் அவ்வண்ணமே நடக்கும்.  ஆனால் இதன் மூலம் நான் மகிழ்ச்சி அடையப் போவதில்லை. “ என்ற கிருஷ்ணனுக்கு ஒரு சந்தேகம் தோன்ற, “ அது சரி அப்பனே, நீயும் தோற்று, சாத்யகியும் தோற்று துரியோதனன் மட்டும் ஜெயித்தான் எனில்? அப்போது என்ன செய்வது?”

“அப்போது கூட துரியோதனன் போட்டியில் வெல்லாமல் நான் பார்த்துக் கொள்வேன், கிருஷ்ணா!”  அந்த இருட்டில் மங்கலான நிலவொளியில் உத்தவன் முகத்தில் தெரிந்த கிளர்ச்சியைப் பார்த்த கிருஷ்ணன் ஆச்சரியம் அடைந்தான்.   “எப்படி, அப்பா?” கிருஷ்ணன் ஆச்சரியம் பொங்க உத்தவனிடம் கேட்டான்.  “ம்ஹூம், அதெல்லாம் சொல்ல மாட்டேன்.  நீ மட்டும் மாட்டேன் என்று சொல்லாமல் என்னை அனுமதித்து விடு! அவ்வளவு தான் எனக்கு வேண்டியது.”  உத்தவன் குரல் தீர்மானமாக ஒலித்தது.

“உன் திட்டம் தான் என்ன உத்தவா?” கண்ணன் வற்புறுத்தினான்.

“ஒருவேளை துரியோதனன் வென்று விட்டான் எனில், என்னால் வெல்ல முடியவில்லை எனில், …… என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.”  உத்தவன் சகஜமாகச் சொன்னான்.  அவன் சாதாரணமாகச் சொல்வது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளூர அவன் திட்டத்தைக் குறித்துக் கண்ணனுக்கு யோசனையாக இருந்தது.  “என்ன செய்வாய்? செய்யப் போகிறாய்?”  கிருஷ்ணன் உத்தவன் குரலில் இருந்த உறுதியைக் கண்டு ஒரு கணம் மூச்சு விடக் கூட மறந்தான்.  உத்தவன் உடனடியாக எதுவும் பேசவில்லை.

“நான் அந்த வில்லைப் பார்த்தேன் கிருஷ்ணா!  மிகவும் கனமானது.  வலிமையானது.  அந்த வில் என்னை நசுக்கிக் கொல்லும் அளவுக்கு சக்தி உள்ளதும் கூட.  அவ்வளவு கடினமாக இருக்கிறது.  அப்படி ஒருவேளை நான் அந்த வில்லினால் நசுக்கிக் கொல்லப்பட்டால்…….”  சற்றே தயங்கிய உத்தவன், மீண்டும் தன் குரலை சகஜமாக சாதாரணமாகப் பேசுபவன் போல் மாற்றிய வண்ணம் தொடர்ந்தான். “ நான் நசுக்கிக் கொல்லப்பட்டால்…… இறந்தவன் உடல் இருக்குமிடத்தில் சுயம்வரம் நடத்த முடியாது.  அதன் புனிதம் கெட்டு விடும்.  சுயம்வரமே நின்று போய்விடும்.”

“உத்தவா, உத்தவா!” கண்கள் கண்ணீரைத் தானாகப் பெருக்க, குரல் உணர்ச்சி வசத்தில் நடுங்கக் கிருஷ்ணன் செய்வதறியாது தவித்தான்.  “என் வாக்குறுதியைக் காக்க வேண்டி உன் உயிரை நீ தியாகம் செய்ய வேண்டுமா?  ஏன் அப்படி?  ஏன் இப்படிச் செய்ய நினைக்கிறாய் உத்தவா?”

“கடவுளின் வார்த்தைகள் உண்மையானவையாக முழுமையானவையாக பூர்த்தி அடைபவையாக இருக்க வேண்டும், கோவிந்தா!  நீ என் கடவுள்.   நீ எங்கள் அனைவருக்குமே கடவுள்.  நீ எங்கள் கடவுளாக இருப்பதால் தான் நாங்கள் அனைவருமே இருக்கிறோம்.  உன்னில் நாங்கள்;  எங்களில் நீ! இருக்கிறாய்; இருக்கிறோம்.  இல்லை எனில் நாம் அனைவருமே இறந்து விடலாம்.  குறைந்த பக்ஷமாக நானாவது என் உயிரை அதற்காக விட்டு விடுகிறேன்.  உனக்காக கிருஷ்ணா!  நீ எங்கள் ரக்ஷகன்!  எங்களைக் காப்பவன்.  நீயே எங்கள் பர வாசுதேவன்!  உன்னிடம் பூரணமாகச் சரணாகதி அடைகிறோம் வாசுதேவா!”

கண்ணன் கண்கள் குளமாக உத்தவனைத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கட்டி அணைத்துக் கொண்டான்.

Tuesday, June 24, 2014

தர்ம சாம்ராஜ்யம் நிலைக்குமா? கண்ணன் கவலை!

பேரழிவை நெருங்கிக் கொண்டிருந்த ஜராசந்தன், ஸ்ரீருத்ரன் நூறு அரசர்களின் தலைகளைக் கொய்து கொண்டு வரச் சொன்னதாகக் கனவு கண்டு கொண்டிருக்க, இங்கே தங்கள் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கிருஷ்ண வாசுதேவனையும், உத்தவனையும் நாம் சற்றுப் பின் தொடர்வோம்.  ஆங்காங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்தவர்களையும், காவல் நேரம் முடிந்து மாற்றிக் கொள்ளும் காவலர்களின் குரலையும் தவிர்த்து அந்த முகாம் முழுவதும் அமைதியில் இருந்தது.  அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.  இந்த முகாம்களை ஒவ்வொன்றாகக் கடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணனும், உத்தவனும் சிறிது நேரம் வரை எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாகவே சென்றனர். சந்திரன் மெல்ல மெல்ல மேற்கு வானை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். விண்ணில் ஒளிவீசிக் கொண்டிருந்த நிலாக்கதிர்களிடையே கிளம்பிய விருச்சிகராசிக் கூட்ட நக்ஷத்திரங்கள் தனித்துப் பிரகாசித்தன. அவற்றின் ஒளி பூமியில் சின்னச் சின்ன வெள்ளிக்காசுகளைப் போல் விழுந்திருந்ததைக் கண்டு வியந்த வண்ணம் சென்றனர் இருவரும். உத்தவனால் வெகுநேரம் பொறுமையாக இருக்க முடியவில்லை. “கோவிந்தா, ஜராசந்தனைப் பணிய வைத்துவிட்டதாகத் தோன்றுகிறதா உனக்கு?  அதை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.”  என்றான்.

“திரௌபதியைக் கடத்தும் முயற்சியில் துணிவாக ஜராசந்தன் இறங்க மாட்டான் என்றே தோன்றுகிறது உத்தவா!  ஆனால் நமக்கு அது போதாது!  ஜராசந்தனின் முடிவால் நமக்கு எவ்விதப் பலனும் இல்லை;  நம் சகோதரர்கள்  எங்கிருக்கின்றனர்?  காம்பில்யம் நோக்கி வருகின்றனரா என எதுவுமே நாம் அறிய மாட்டோம்.”

“ஆமாம், இதுவரை எந்தத் தகவலும் இல்லை தான்.  ஐந்து சகோதரர்களும் அத்தையார் குந்தி தேவியும் இன்னும் காம்பில்யத்துக்கு வந்ததாகத் தெரியவில்லை.  சிகுரி நாகனுக்கும் இன்னும் எவ்விதச் செய்தியும் வரவில்லை!”  உத்தவன் கூறினான்.

“நாளைக்காலைக்குள் அவர்கள் வந்து சேராவிட்டால்??? நாளை நடக்கப்போகும் சுயம்வரப் போட்டியில் அவர்களால் கலந்து கொள்ளவே இயலாது உத்தவா!  அவர்களால் நாளைக்குள்ளாக வர முடியாதோ என அஞ்சுகிறேன்.  அப்படி மட்டும் நடந்து விட்டால்??? ஆஹா!  நாம் தோற்றுவிடுவோம் உத்தவா!” கண்ணன் குரல் கவலையில் நைந்து மெலிந்து கேட்டது.

“அப்போது என்ன நடக்கும்?” உத்தவன் கேட்டான்.

“எல்லாத் தரப்பிலும் கூர்ந்து கவனித்ததில் யோசித்துப் பார்த்தால் இதுவரை உள்ள போட்டியாளர்களில் துரியோதனனுக்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.   அப்படி ஒன்றும் அவன் பெரிய வில்லாளி இல்லை;  சாத்யகிக்குக் கொஞ்சம் வில் வித்தை தெரியும் தான்.  எனினும் போட்டியில் கலந்து கொண்டு வெல்லும் அளவுக்கு அவன் வில் வித்தை பிரமாதமானதல்ல.   ஆனால் அவன் முழு நம்பிக்கையுடன் இருக்கிறான்.” என்றான் கிருஷ்ணன்.

பின்னர் தொடர்ந்தான் கிருஷ்ணன்.  “ஆனால் திரௌபதி?? ம்ம்ம்ம்ம்? திரௌபதிக்கு துரியோதனனை எந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.  அவன் ஒருவன் மட்டுமே வென்றிருந்தால் கூட அவளுக்கு அதில் இஷ்டமில்லை.  தீர்மானமாக இருக்கிறாள்.  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தன் உயிரைக்கூட மாய்த்துக்கொள்ளத் தயங்க மாட்டாள். துருபதனுக்கோ இக்கட்டான நிலைமை ஏற்படும்; போட்டியில் ஜெயிக்கும் இளவரசனுக்குத் தன் மகளைக் கொடுப்பதெனில் துரியோதனன் வென்றால் கொடுத்தாக வேண்டும்;  இல்லை எனில் அவன் உறுதிமொழியை அவனே உடைத்தவன் ஆவான்.  அவன் சத்தியத்தை மீறியவன் ஆவான்.  அப்படி ஏதும் நேர்ந்தால்!  ஆர்யவர்த்தத்தின் அரசர்களுக்குள்ளே மாபெரும் யுத்தம் ஒன்று நேரிடும்.”

மனதில் கவலையுடனும், குழப்பத்துடனும் பேசின கண்ணன், சற்றே யோசித்த வண்ணம், மேலும் கூறினான்:  “அப்படி துரியோதனன் ஜெயிப்பான் எனத் தோன்றினால், அல்லது அவன் ஜெயித்துவிட்டால், அவனைத் தோற்கடித்துப் போட்டியிலிருந்து அவனை விலக்க என் ஒருவனால் மட்டுமே இயலும்.  நான் அந்தப் போட்டியில் கலந்து கொண்டாக வேண்டும்.  ஆனால்… அப்போது…….”கண்ணன் குரலில் மிகவும் கவலை.  அவன் மேலே பேசத் தயங்கினான்.

கிருஷ்ணனின் தடுமாற்றத்தைக் கண்ட உத்தவன், “ஒருவேளை துரியோதனனால் போட்டியில் வெல்ல முடியாமல் போகலாம்;  அவன் மட்டுமின்றி வேறு எவராலும் வெல்ல முடியாமல் போகலாம்.” என்று நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைப் பேசினான்.

“அப்போது திரௌபதி தன் மனதுக்குப் பிடித்த எவரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க இயலும்.”

“அப்படித்தான் நடக்கும். ஷ்வேதகேது என்னிடம் போட்டி மிக மிகக் கடுமையான ஒன்று எனக் கூறினார்.” என்றான் உத்தவன்.

“ஆனால் கர்ணனையும், அர்ஜுனனையும் விடுத்தால் மற்ற வில்லாளிகளில் துரியோதனனே சிறந்தவன் என்பதை மறவாதே உத்தவா!  நான் உன்னையும், என்னையும், சாத்யகியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை. “

“கிருஷ்ணா, போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நீ சபதம் செய்திருக்க வேண்டாமோ எனத் தோன்றுகிறது.  தவறு செய்துவிட்டாய் கோவிந்தா!”

“இல்லை உத்தவா!  நான் எந்த விஷயத்துக்காக தூது வந்திருக்கிறேனோ அதிலிருந்து பிறழ்ந்துவிடுவேன்.  அதாவது போட்டியில் நான் கலந்து கொண்டால் என் தூது வெற்றியடையாது.   நான் தர்மத்தைக் காக்க வேண்டும்.  அதற்காகவே நான் பாடுபடுகிறேன்.  அதற்காகவே இங்கே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவும் எடுத்திருக்கிறேன்.   இந்த சுயம்வரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆர்ய வர்த்தத்தில் ஒரு மாபெரும் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க விரும்புகிறேன்.  என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை இதில் நான் புகுத்தினேன் எனில், தர்ம சாம்ராஜ்யம் எழும்பாது.  தூள் தூளாக மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்.  “

“கஷ்டங்களைப் பற்றியே நினைக்க வேண்டாம் வாசுதேவா!  வா, மணிமானின் முகாமுக்குச் செல்வோம்.  அங்கே சிகுரி நாகன் ஏதேனும் செய்திகளைக் கொண்டு வந்திருக்கலாம். “ என்று ஆறுதலாகப் பேசினான் உத்தவன்.

“சரி, நீ சென்று பார்த்து வா உத்தவா!  நான் நம்முடைய முகாமில் உனக்காகக் காத்திருக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.  உத்தவன் மணிமானின் முகாமை நோக்கிச் சென்றான்.  கிருஷ்ணனின் முகாமில் சாத்யகி விழித்திருந்தான். உத்தவனைத் தவிர அவன் ஒருவனுக்கே கிருஷ்ணன் ஜராசந்தனைத் தனிமையில் சந்திக்கச் செல்கிறான் என்பது தெரியும்.  ஆகவே அவன் கிருஷ்ணனும், உத்தவனும் திரும்பி வந்து கொண்டு வரப் போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தான்.  முகாமின் வாயிலிலேயே சாத்யகி அவர்கள் இருவருக்காகவும் காத்திருந்தான்.  அவர்கள் வரும்வரையில் ஒவ்வொரு நிமிடத்தையும் எதிர்பார்ப்பிலும் எந்த விஷயமும் தெரியாததொரு இருட்டான நிலையிலும் கழித்திருந்தான்.  அவன் கவலைப்பட்டது கிருஷ்ணனின் உயிருக்காகவே.

ஏனெனில் தனிமையில் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகும் ஜராசந்தன் அந்த வாய்ப்பைத் தவற விடாமல் கிருஷ்ணன்மேல் பழி தீர்த்துக்கொண்டு விடுவான் என்று அவன் எண்ணி நடுங்கினான்.  ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்தான்.  ஆனால் அவற்றை எல்லாம் கிருஷ்ணன் பொருட்படுத்தவே இல்லை.  சென்று விட்டான்.  இப்போது கிருஷ்ணன் வந்ததைப் பார்த்ததுமே அவனுக்குள் நிம்மதி பிறந்தது. பத்திரமாகத் திரும்பி விட்ட கிருஷ்ணனிடம் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதத்தில் அவனை இறுக அணைத்துக் கண்ணீர் பெருக்கினான்.  பின்னர் மெல்ல அவனிடம், “என்ன ஆயிற்று?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.

“திரௌபதியைக் கடத்தும் முயற்சியை அவன் கைவிட்டுவிடுவான் என்று உறுதியாக நம்புகிறேன்.  “ என்று சுருக்கமாகக் கூறிய கிருஷ்ணன் தன் கிரீடத்தையும்,  வாளையும் சாத்யகியிடம் கொடுக்க அவன் அவற்றை அவற்றுக்காக உள்ள இடங்களில் வைத்தான்.   இருவரும் தங்கள் தங்கள் படுக்கையில் அமர்ந்தனர்.  கிருஷ்ணன் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான்.  சாத்யகிக்கு அவன் யோசனையும், கவலையும் புரிந்ததால் மௌனம் காத்தான்.  கிருஷ்ணனாக வாய் திறந்து பேசட்டும் என்று காத்திருந்தான்.


Sunday, June 22, 2014

ஜராசந்தா! நூறு அரசர்களின் தலையைக் கொண்டுவா!

ஜராசந்தன் மிகவும் புத்திசாலி.  அவனுக்கு எதையும் உடனே கிரஹித்துக் கொள்ளும் சக்தி இருந்தது.  ஆகவே தான் எத்தகையதொரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்வோம் என்பது அவனுக்குப் புரிந்தே இருந்தது. இந்தச் சுயம்வரத்தின் போட்டியில் அவன் மட்டும் பங்கெடுத்துக் கொண்டால் நடக்கப்போகும் விளைவுகள் அனைத்தும் அவன் கண்ணெதிரே தோன்றின. கிருஷ்ணன் மீண்டும் புன்னகைத்தான்.

“ஒருவேளை உனக்குள் இந்தப் போட்டியைக் குறித்தும் சுயம்வரம் குறித்தும் வியந்து போற்றும் எண்ணம் தோன்றலாம்;  அது இயற்கையான ஒன்று. அப்போது நீ போட்டியைக் குறித்த உன் வியப்பைத் தெரிவித்துவிட்டு, மணமகளான திரௌபதியையும் வாழ்த்தி ஆசி கூறிவிட்டுப் பின்னர் பின் வாங்கிச் செல்வாய்! உனக்கு என்னுடைய ஆலோசனைகள் பிடிக்கவில்லை எனில்  போட்டியில் இறங்கி அதன் விளைவுகளையும் சந்திப்பாய்!  ஆனால் நான் உனக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்று மட்டும் சொல்லாதே!”

ஜராசந்தனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அவன் தலை சுழன்றது.  அவனுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்த கோபாக்னியானது வெளியேறத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தது.  ஒரு சிறு இடைவெளி கிடைத்தால் கூடப் போதும்.  அவனுடைய கோபம் எல்லாம் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போல் பொங்கி வருவதோடு இல்லாமல் அவன் தன் வெறும் கைகளாலேயே கிருஷ்ணனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவான்.   ஆனால்…..ஆனால்…. அது தானே இயலாத ஒன்றாகிவிட்டது. இந்தக் கிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை, முழு உண்மை.  இப்படித் தான் நடக்கும்.  இப்போது இந்த நட்ட நடு இரவில் அவனைச் சந்திக்க வந்திருக்கும் விருந்தாளியை அவனால் ஏதும் செய்ய இயலாது என்பதோடு அவன் போட்டியில் கலந்து கொண்டாலோ, திரௌபதியைக் கடத்த நினைத்தாலோ ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்த்தால் மாபெரும் பயங்கரம் காத்திருக்கிறது என்பது புரிகிறது.   இந்த ஆரியர்களும், அவர்களின் நெறிமுறைகளும்!  ஹூம், யாருக்கு வேண்டும் இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம்! ஒவ்வொரு முறையும் அவன் இந்த ஆரியர்களின் உலகில் நுழைந்து அவர்களை வெற்றி கொண்டு மாபெரும் சக்கரவர்த்தியாகத் தன்னை நிலை நாட்டிக்கொள்ள முயலும் போதெல்லாம், ஏதேனும் தடைகள் வருகின்றன.  அவனுடைய ஆசைகள் நிராசைகளாகி விடுகின்றன.

கொஞ்ச நேரத்துக்கு இருவருமே ஏதும் பேசவில்லை.  கிருஷ்ணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் உத்தரீயத்தை எடுத்துத் தோள்களில் போர்த்திக் கொண்டான்.  ஜராசந்தனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மாமன்னா,  நான் எதற்காக தூது வந்தேனோ அந்த வேலை முடிவடைந்து விட்டது.  ஆனால் நான் ஏன் தூது வந்தேன் என்பதை நீ தெரிந்து கொள்ள விரும்புகிறாயா?” என்று கேட்டான்.  ஜராசந்தன் ஏதும் பேசவில்லை;  ஆனால் அவன் கிருஷ்ணனையே பாராதது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.  இந்த இளைஞனை, ம்ஹூம், சிறுவனை நேருக்கு நேர் பார்க்கக் கூடிய அளவுக்கு எனக்கு தைரியம் இல்லாது போனது ஏன்? என்றும் யோசித்துக் கொண்டிருந்தான்.

“நான் எனக்கு நானே சுயம்வரம் நன்கு நடைபெற வேண்டும் என உறுதி மொழி எடுத்துள்ளேன்.  யாராக இருந்தாலும் இந்த சுயம்வரம் நடப்பதற்கு பங்கம் விளைவிக்க முற்படுவதை என்னால் அனுமதிக்க இயலாது.  நான் சொல்வதை எல்லாம் மீண்டும் சிந்தித்துப் பார்!”  என்றான் கிருஷ்ணன்.

அவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமலேயே கிருஷ்ணன் அந்தக் கூடாரத்தை விட்டு வெளியேறினான்.  வெளியே காத்திருந்த உத்தவனுடன் ஆயிரக்கணக்கான மகத வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் படைத்தளத்தை விட்டும் வெளியேறினான்.  வெளியே காத்திருந்த மகத வீரர்கள் கிருஷ்ணனை நசுக்கிக் கொன்றுவிடத் தயாராகக் காத்திருந்தனர்.  அவர்களுக்குத் தங்கள் கண்ணெதிரே கிருஷ்ணன் எந்தவிதமான சிறு காயமும் இல்லாமல் வெளியேறிச் சென்றது ஏமாற்றத்தையே கொடுத்தது.  அவர்களையும் அறியாமல் அனைவரும் விலகி வழிவிட உத்தவனை அணைத்துக் கொண்ட வண்ணமே கிருஷ்ணன் மாறாத புன்முறுவலுடன் அங்கிருந்து வெளியேறினான்.

ஜராசந்தன் பிரமிப்போடு கிருஷ்ணன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.  அவன் மனம் பெரும்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.  தன்னிடம் இவ்வளவு அதிகாரம் இருந்தும், தானும் வலிமை மிக்கதொரு சக்கரவர்த்தியாக இருந்தும், இந்த இளைஞனை ஒன்றும் செய்ய முடியவில்லையே!  அது தான் ஏனென்று ஜராசந்தனுக்குப் புரியவில்லை.  ஒவ்வொரு முறையும் ஏதேனும் தந்திர உபாயங்களை மேற்கொண்டு அவன் கோபமோ, அல்லது அவன் அதிகாரமோ செல்லுபடியாகா வண்ணம் செய்து விடுகிறான்.  இந்த இடையன் யாதவத் தலைவனா?  அற்பன்! அற்பன்!  திடீரென முன்னுக்கு வந்துவிட்டான்.  அவன் கழுத்தை நெரித்து மூச்சுக்கூட விடமுடியாமல் திணற அடித்திருக்க வேண்டும்.  அதைத் தான் ஜராசந்தன் விரும்பினான்.  ஆனால் நடந்தது என்ன!  இந்த அற்பனையும் நசுக்கிக் கொல்ல முடியவில்லை;  ஆரியர்களின் அற்பத்தனமான நெறிமுறைகளையும் மாற்ற முடியவில்லை.  இவற்றை எல்லாம் என் குடைக்குக் கீழ் கொண்டு வந்தால் அடுத்த நிமிடமே உடைத்து ஒன்றுமில்லாமல் பண்ணி விட மாட்டேனா! அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேன் என்கிறதே!

தன் கரங்களால் கண்களை மூடிக்கொண்டான்.  அவன் தலை மீண்டும் சுழன்றது.  அவன் கால்களும், கைகளும் விறைத்துப் போயின.  அவன் வாயைத் திறந்து கொண்டு வேகமாக மூச்சு விட ஆரம்பித்தான். அவன் மூளை வேலை செய்யவில்லை.  எங்கெங்கு நோக்கினும் கருமையான இருட்டே தெரிந்தது.  அவ்வளவு கருமையில் அவனால் யோசிக்கவே முடியவில்லை. ஆனால் அந்தக் கருமையிலும் எலும்புகளால் ஆன மாலையை அணிந்த வண்ணம் ருத்ரன் தோன்றினார்.  அழிவின் கடவுள்!  அப்போது அவனுக்கு அதே வார்த்தைகள், ஏற்கெனவே முன்னொரு முறை அவன் கேட்ட அதே வார்த்தைகள் இப்போதும் கேட்டன! “ ஜராசந்தா, உன்னால் ஆரிய வர்த்தத்தை ஒருக்காலும் வெல்ல முடியாது. குறைந்தது நூறு அரசர்களின் தலைகளைக் கொய்து கொண்டு வந்து எனக்குச் சமர்ப்பணம் செய்!  பின் ஒருக்கால் முடியலாம்.  நினைவில் வைத்துக் கொள்! நூறு அரசர்களின் தலைகள்! “


Saturday, June 21, 2014

கண்ணன் எச்சரிக்கிறான்!

“நான் போய்க் கொண்டே இருக்கிறேன்.  ஆனால் மீண்டும் உனக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்.  திரௌபதியை மட்டும் கடத்த நினைத்தாயெனில், உன் தலை உன்னிடம் இருக்காது;  பூமியில் விழும்!” என்று சிரித்தபடியே சொன்ன கிருஷ்ணன் எழுந்திருக்கும் பாவனையில் இருந்தான்.  அவனை முறைத்துப் பார்த்த ஜராசந்தன், “நீ மகத நாட்டு வீரர்களைக் குறித்து எதுவும் அறியவில்லை;  உன் தலையை நான் இதோ இப்படி ஒரு நிமிஷத்தில் வெட்டிச் சாய்ப்பேன்!” என்ற வண்ணம் கைகளால் சொடுக்கிக் காட்டினான்.

“செய்; முடிந்தால் உடனே என் தலையை வெட்டிவிடு!” சவால் விட்டான் கிருஷ்ணன்.  அவனைப் பார்த்துக்குறும்பாகப் புன்னகைத்தான்.  “என்னிடம் சவால் விடாதே இளைஞனே!  என் வீரர்களின் வீர ஆவேசம் குறித்து நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  அவர்களுக்கு எப்போது  என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும்.”  உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான் ஜராசந்தன். அதோடு  தான் இப்போது கிருஷ்ணனை ஏதும் செய்ய முடியாது என்னும் உண்மை அவனைச் சுட்டது.  அது அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.  கிருஷ்ணன் சவால் விட்டதின் காரணத்தை நினைத்ததுமே உள்ளூற நடுங்கினான்.  அவன் கை, கால்களெல்லாம் பதறின.  கிருஷ்ணனின் ஒரு தலை மயிருக்கு ஊறு விளைவித்தால் கூட இங்கே கூடி இருக்கும் அனைத்து அரசர்களும் மாபெரும் புரட்சி செய்யக் கிளம்பிவிடுவார்கள்.  மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். யாதவர்கள் மட்டுமின்றி, பாஞ்சால நாட்டுக்காரர்கள், விராடர்கள், குரு வம்சத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.  பின்னர் மகதத்தை அழிப்பது அவர்களுக்குத் தூசு மாத்திரம்.  மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் ஒன்றில் இரண்டு பார்த்துவிடுவார்கள்.  இந்த ஆரியர்களின் விழாக்களிலோ, நிகழ்வுகளிலோ பங்கெடுத்துக் கொண்டால் இப்படித் தான்.  நமக்கு நாம் தான் கட்டுப்பாடு விதித்துக்கொள்ளவேண்டும்.

“மகத மன்னா!  நீ நன்கு அறிவாய்!  இப்போது இந்த இரவில் உன்னால் என்னைக் கொல்லவும் முடியாது.  அதே போல் நாளை விடிந்தால் உன்னால் திரௌபதியைக் கடத்தவும் முடியாது. “  கிருஷ்ணன் பேச்சை நிறுத்தியதும், ஜராசந்தன் அவனையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் கண்களில் கோபம் கொண்ட சிங்கத்தின் சீற்றம் காணப்பட்டது.   இவை எதற்கும் கிருஷ்ணன் கவலைப்படவே இல்லை.  தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“அவளை நீ கடத்துவதற்குக் கிடைக்கும் முதல்  வாய்ப்பு  யக்ஞசாலையில் இருந்து அவள் சுயம்வர மண்டபம் செல்லும்போது மற்ற நாட்டு இளவரசிகளால் சூழப்பட்டு ஊர்வலமாக வருவாள்;  அந்த நேரம் நீ கடத்த நினைக்கலாம்.  ஆனால் அந்த நேரம் நான் முக்கிய ராஜபாட்டையில் உனக்காகக் காத்திருப்பேன்.  நீ உன் ரதத்தைப் பாதை மாற்றிப் பயணப்பட யத்தனித்தாய் எனில்,  அதாவது மண்டபத்திற்குச் செல்லும் நேர்வழியை விட்டுவிட்டு, மகதம் செல்லும் சாலையில் பயணப்பட ஆரம்பித்தால், திரௌபதியுடன் தான், உன் தலை உன்னிடம் இருக்காது.  என் சுதர்சனச் சக்கரம் அதை வெட்டிச் சீவி விடும். “ கிருஷ்ணன் பேசுவதை எல்லாம் கேட்ட ஜராசந்தனுக்குக் கோபம் வந்தாலும் தலையையும் சுற்றியது.  தன் விதியே அங்கே வந்து கிருஷ்ணன் குரலில் பேசுவது போல் இருந்தது அவனுக்கு.   ஆனால் கிருஷ்ணன் தொடர்ந்தான்.

“அடுத்த வாய்ப்பு உனக்கு சுயம்வர மண்டபத்தில் கிடைக்கும்.  யாருமே போட்டியில் வெல்லாமல் போனாலோ அல்லது வென்றவர் திரௌபதியைத் தூக்கிக் கொள்ளும்போதோ, அங்கிருக்கும் அரசர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருப்பார்கள். அப்போது நீ முயலலாம்.  ஆனால் பெரிய அளவில்  கலகம் பிறக்கும்.  நான் அங்கே தான் அந்த அரசர்களுக்கு மத்தியில் தான் இருப்பேன். “

“என்னிடம் ஏன் இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?”  கோபமும், சீற்றமும் பொங்கக் கேட்ட ஜராசந்தன், இந்த இளைஞன் எவ்வளவு தூரம் யோசித்துத் தான் எப்படி எல்லாம் நடவடிக்கைகள் எடுப்போம் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறானே என வியந்தான்.   தான் திரௌபதியைக் கடத்திச் செல்லக் கூடிய வாய்ப்புக்களை எல்லாம் அலசி ஆராய்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அத்தோடு அவனை விடவில்லை.

“ ஆரியவர்த்தத்தின் நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் நினைவில் வைத்துக்கொள் மகத மன்னா!ஒரு பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அடைய விரும்புவனைக் கொன்றுவிடுவார்கள்.  அவனுக்குக் கொடுக்கும் அதிக பக்ஷ தண்டனை மரணம் தான். இதை மறவாதே!” என்றான்.

ஏளனமாகச் சிரித்தான் ஜராசந்தன். “நீ மட்டும் ருக்மிணியைக் கடத்தவில்லையா?  அப்போது?” என்றும் கேட்டான்.

“ஆம், கடத்தினேன்.  ஆனால் வற்புறுத்தி அவளைத் தூக்கிச் செல்லவில்லை.  அவளாக விரும்பி என்னிடம் வந்தாள்.  என்னை மணம் செய்து கொள்ள விரும்பினாள்.  அவள் விருப்பத்தின் மேலேயே நான் அவளைத் தூக்கிச் சென்று மணம் செய்து கொண்டேன்.  ப்ருஹத்ரதனின் அருமை மகனே, ஜராசந்தனே, நீயோ அல்லது  உன் மகனோ, அல்லது உன் பேரனோ, யாராக இருந்தாலும் திரௌபதியைக் கடத்திக் கலகம் உண்டு பண்ணாமல் இருக்க வேண்டும். “

“நீ யாரடா இடைச்சிறுவன் என்னை மிரட்டி பயமுறுத்துவது? “ மிக ஆவேசமாகக் கத்தின ஜராசந்தன் கிருஷ்ணனின் மேல் தன் கைகள் பாய்ந்து அவனைக் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்று விடுமோ என்னும் பயத்தில் இருகரங்களையும் கோர்த்துக் கட்டிக் கொண்டான்.  தன்னை அடக்கிக் கொள்ள மிகவும் பாடுபட்டான்.

“நான் உன்னை மிரட்டவும் இல்லை;  பயமுறுத்தவும் இல்லை.  திரௌபதியைக் கடத்த நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதைத் தான் உனக்கு விளக்கினேன்;  ஒரே ஒரு ஆலோசனை உனக்கு இப்போது கூற விரும்புகிறேன்.   ஆசாரியர் சாந்தீபனி மிகக் கடுமையான ஒரு வில் வித்தைப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.  உன்னுடைய இளவரசர்கள் எவராலும் அந்தப் போட்டியில் வெல்ல முடியாது.  ஒருவேளை உன்னால் இயலும்.  நீயும் அதில் கலந்து கொள்ள ஆசைப்படுவாய்!  திரௌபதியை விடக் கூடாது என்று உன்னுள்ளும் எண்ணம் இருக்கும்.  ஆனால் அது சரியாக இருக்குமா?  யோசித்துப் பார்!”

“நீ, உன்னுடைய இந்த முதுமைப் பிராயத்தில், இந்த வயதில்,  உன்னுடைய சக்கரவர்த்தித் தகுதியில், இந்தப் போட்டியில் கலந்து கொண்டு, உன் பேத்தியை விடக் குறைவான வயதுள்ள ஒரு இளம்பெண்ணை வெல்வது எனில்!   ஏற்கெனவே உனக்குக் கணக்கற்ற மகன்களும், எண்ணற்றப் பேரன்களும் உள்ளனர்.  நினைத்துப் பார்!  இதெல்லாம் நீ போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தால் ஏற்படப் போகும் விளைவுகள்.  மாறாக நீ தோற்று விட்டால்? இங்குள்ள அனைத்து அரசர்கள், இளவரசர்கள் அனைவருக்கிடையேயும் நகைப்புக்கிடமானவனாக மாறிவிடுவாய்.  அப்புறம் நீ என்ன சக்கரவர்த்தி! சக்கரவர்த்தி என்னும் உன்னுடைய கௌரவம் மண்ணோடு மண்ணாக நசித்துப் போகும். நீ வேண்டுமானால் உன்னைச் சக்கரவர்த்தி என அழைத்துக்கொள்ளலாம்;  ஆனால் எந்த அரசனும் உன்னுடன் சேர்வதற்குத் தயங்குவான். உனக்கு உதவிக்கும் வரமாட்டான்.  “Thursday, June 19, 2014

கண்ணனின் சிரிப்பும், ஜராசந்தன் கொதிப்பும்!

ஜராசந்தன் தைரியசாலி தான். வீரம் செறிந்தவனும் கூட.  அதோடு வாசுதேவ கிருஷ்ணன் வந்திருப்பதைக் கேட்டதும், அவனுள் ஏற்பட்ட ரௌத்திரம் தாங்க முடியாமல் இருந்ததால் அதை அப்படியே அவனிடம் நேரிலும் காட்ட விரும்பினான்.  ஆனால் அவன் என்னதான் தான் கோபமாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் உள்ளூற ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்தது. என்னதென்று அறியாத ஓர் உள்ளுணர்வு அவனை மிகவும் தொந்திரவு செய்தது.  காம்பில்யத்திற்கு சுயம்வரத்தில் பங்கெடுத்துக்கொள்ளக் கிருஷ்ண வாசுதேவன் வந்திருக்கிறான் என்னும் செய்தி கிட்டியதுமே அவன் முன் ஜாக்கிரதையுடன் தான் இருந்தான்.  அவன் எச்சரிக்கை நரம்புகள் தூண்டப்பட்டு எப்போதுமே எச்சரிக்கை உணர்வோடு இருந்தான்.  ஆனால் அதன் மூலம் குறிப்பிடத் தக்க நன்மை ஏதும் அவனுக்கு ஏற்படவே இல்லை.


ஒவ்வொரு சமயமும் இந்த மாட்டிடையன் அவனுடைய திட்டங்களை எல்லாம் மூழ்கடித்து வலுவற்றுப் போகச் செய்து விடுகிறான் என்பதே அவன் கடந்த காலங்களில் அனுபவித்த ஒன்று.  ஆனால் இப்போது இங்கே இந்நேரத்தில் தன்னந்தனியாக அன்றோ வந்திருக்கிறான்?  இப்போது தன் ஜன்ம வைரியின் எதிரே அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவன் பேரிடர் ஒன்று வரவிருக்கிறது என்பதை அனுமானித்தான்.   மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்த விளக்கொளியில் அவனெதிரே அமர்ந்திருந்த கிருஷ்ணன் உருவமற்ற ஒரு ஆவியைப் போல/ ஒரு பேயைப் போல் ஜராசந்தனுக்குத் தோன்றினான்.

அதற்கு மேல் ஜராசந்தனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.  “இங்கே ஏன் வந்தாய்?” என்று மிகக் கடுமையாகக் கண்ணனிடம் கேட்டான்.  

“சொல்கிறேன், கேள்!  வீணாக என்னை கோமந்தகம் முழுதும் தேடி அலைந்தாய்!  மத்ராவிலும் அப்படித் தான் தேடினாய்.  இதோ இங்கே உன் கண்ணெதிரே இந்த நள்ளிரவு நேரத்தில் உன் கூடாரத்தினுள்  நான் நிராயுதபாணியாக தன்னந்தனியாக  வீற்றிருக்கிறேன். “

“நீ என் ஜன்ம வைரி!” கத்தினான் ஜராசந்தன் ஆக்ரோஷம் பொங்க.  “ஆம், எனக்குத் தெரியும்.  இருந்தும் நான் என்னை உன்னிடம் ஒப்புக் கொடுக்க வந்துள்ளேன்.” என்று புன்னகையுடன் கூறினான் கிருஷ்ணன்.  தன் தாடியைப் பிடித்து நீவிக் கொண்டே ஜராசந்தன் யோசித்தான்.  எதுவும் பேசாமல் கிருஷ்ணனையே பார்த்தான்.  தன் மனதினுள் தன்னுடைய பலம் அனைத்தையும் சேகரிக்க முயன்றான்.    தான் உள்ளூர  அடைந்திருக்கும் அச்சம் வெளிப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.  கண்ணனைப் பார்த்து, “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டான்.

“இங்கே இதோ இருக்கும் யுவராஜா சஹாதேவன், இளவரசன் விதந்தா ஆகியோர் முன்னால் நான் அந்தக் காரணத்தைச் சொல்லியே ஆகவேண்டுமா?  ஒருவேளை நாம் பேசிக்கொள்வது நம் இருவருக்குள் மட்டுமே இருக்கட்டும் என நீ விரும்பலாம்.  நாம் மிகப் பழைய எதிரிகள் அல்லவா? இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் நம் சண்டையிலிருந்து விலகி இருக்கட்டும். “ சொன்ன கிருஷ்ணன் முகத்தில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது.  முதலில் கொஞ்சம் தயங்கிய ஜராசந்தன் பின்னர் தன் தலை அசைவின் மூலம் சஹாதேவனையும், விதந்தாவையும் வெளியேற்றினான். இருவருமே மிகத் தயக்கத்துடனேயே வெளியேறினார்கள்.  என்னதான் ஜராசந்தன் வலிமை மிக்கவனாக இருந்தாலும், தன் பரம வைரியின் தயவிலேயே இருக்கிறான் என்பதை மறவாமல் அந்தக் கூடாரத்தின் வெளியே அழைத்தாலோ, அல்லது விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்வது தெரிந்தாலோ உடனே செல்லும்படியாகத் தயார் நிலையில் நின்று  கொண்டனர்.

“ஏன் வந்தாய் நீ?” ஜராசந்தன் குரல் மீண்டும் பொறுமையற்றுக் கேட்டது கிருஷ்ணனை.

“உன்னைப்பேரழிவிலிருந்து காக்கவே!” என்றான் கிருஷ்ணன்.  “எனக்கு உன் உதவி தேவை இல்லை.  இப்போது மட்டுமல்ல.  எப்போதுமே! உன் நேரத்தை வீணாக்காமல் இங்கிருந்து செல்!” என்று கடுமையாகக் கூறினான் ஜராசந்தன்.

“நான் என் நேரத்தை வீணடிக்கவென்று வரவில்லை.  உனக்கு ஒரு ஆலோசனை கொடுக்கவே வந்தேன்.” என்றான் கிருஷ்ணன்.

“நீ எனக்கு ஆலோசனை கொடுக்கப் போகிறாயா? ஹூம்!” என்று இறுமாப்புடன் கூறினான் ஜராசந்தன்.

“ஆம்!” என்று பொறுமையுடன் கூறிய கிருஷ்ணன் தொடர்ந்து, “திரௌபதியைக் கடத்தும் எண்ணத்தை விட்டு விடு!” என்றான்.  “இதுவே என் ஆலோசனை!” என்றும் கூறினான்.

ஜராசந்தனின் பொறுமை எல்லாம் பறந்தே போய்விட்டது.  தன் இரை மீது பாயத்துடிக்கும் சிங்கத்தைப் போலப் பாய்ந்தான்.  தன் கைகளைப் பிசைந்து கொண்டான்.  செய்வதறியாமல் தவித்தான். “என்ன பேசுகிறாய் நீ! திரௌபதியைக் கடத்துவதா?  சற்றும் மரியாதையில்லாமல் துடுக்குத்தனமாக என்னவோ உளறுகிறாய்!  நாங்கள் இங்கே சுயம்வரத்தில் திரௌபதியை வென்று மருமகள் ஆக்கிக்கொள்ளவே வந்துள்ளோம்.” என்றான்.

“அப்படியா?  எனில் எனக்கு நீ வாக்குறுதி கொடு!  உன்னுடன் வந்திருக்கும் மகதர்களில் எவருமோ, உன் மகனோ, உன் பேரனோ எவருமே திரௌபதியைக் கடத்த முயற்சிக்க மாட்டார்கள் என வாக்குறுதி கொடு!” கிருஷ்ணன் கேட்டான்.  கோபத்தை அடக்கிக்கொள்ள முயன்ற ஜராசந்தன் தன் படுக்கையில் இருந்த மெத்தையையும் , தலையணைகளையும் கசக்கினான். தூக்கி எறிந்தான்!”எவ்வளவு தைரியம் உனக்கு!  என்னிடமா வாக்குறுதி கேட்கிறாய்? மகதச் சக்கரவர்த்தியிடமா? “ என்று பொங்கினான்.

“நான் ஒன்றும் ஒரு சாமானியன் அல்ல;  நானும் தகுதி படைத்தவனே.  நீ என்னை கோமந்தகத்தில் கொன்றுவிட மிகப் பாடுபட்டாய் ஆனால் இயலவில்லை;  உன்னை நான் கோமந்தகத்திலேயே கொன்றிருக்க முடியும். என் சகோதரனின் தண்டாயுதத் தாக்குதலில் இருந்து உன்னை நான் காப்பாற்றி அனுப்பினேன்.  இல்லை எனில் நீ இன்று உயிருடன் இருந்திருக்கவே முடியாது. “


“நீ விதர்ப நாட்டு   இளவரசியை  உன் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நடத்திச் செல்லவும் நினைத்தாய். உன்னுடைய அரசியல் கொள்கைகளை நிறைவேற்றக் கருவியாகப் பயன்படுத்த எண்ணினாய்.  அவளை நான் தூக்கிச் சென்றேன்.  அதுவும் உன் கண்ணெதிரே தூக்கிச் சென்றேன்.  யாதவர்களை அடியோடு ஒழித்துக்கட்ட எண்ணினாய்.  உன்னுடைய கொடுங்கோன்மையிலிருந்து தப்பிய அவர்கள் இன்று செல்வாக்குடனும், அதிகாரத்துடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.   நான் இங்கே உன்னை எச்சரிக்க வந்தேன் எனில் அது தகுதியான ஒன்று என்பதை ஒப்புக் கொள்! புரிந்து கொள்!  நான் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிந்து கொள்! ” கிருஷ்ணன் பேசப் பேச ஜராசந்தன் பற்களைக் கடித்தான்.  கோபத்தில் கொந்தளித்தான்.

கிருஷ்ணனின் சொல் வன்மை ஜராசந்தனைப் பிரமிக்க வைத்தாலும், அவனைப் பார்த்து, “நீ அகந்தை பிடித்த இளைஞன்!  கர்வக்காரன்!” என்றான் ஜராசந்தன்.  “ஆம், அதனால் என்ன? நான் உன் சிநேகிதனும் இல்லை தான்.  ஆனாலும் இங்கே உனக்கு தயவு செய்ய உனக்காக ஒரு சேவை செய்யவே வந்திருக்கிறேன்.”  இதைச் சொன்ன கிருஷ்ணன் குரலில் எவ்விதமான தடுமாற்றமும் இல்லை.

“நான் உன் சிநேகிதனாக இருக்க விரும்பவில்லை;  நீயும் என் சிநேகிதத்தை விரும்பாதே! இப்போது மட்டுமல்ல; எப்போதுமே! “ என்றான் ஜராசந்தன்.

“எனக்கு அது நன்றாகவே தெரியும்.  நானும் உன்னை என் சிநேகிதனாக அங்கீகரிக்கவே மாட்டேன்.” என்றான் கிருஷ்ணனும்.  “ என் மருமகன் கம்சனை நீ கொன்றதை என்னால் ஒரு போதும் மறக்க இயலாது;  அதற்காக உன்னை நான் மன்னிக்கவும் மாட்டேன்.  தெரிந்து கொள்!” என்றான் ஜராசந்தன்.

“நான் உன் மன்னிப்பை எதிர்பார்த்தெல்லாம் இங்கே வரவில்லை.  எனக்கு உன் மன்னிப்பும் தேவை இல்லை. உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்.  திரௌபதியைக் கடத்தும் எண்ணத்தை விட்டுவிடு!” என்றான் கிருஷ்ணன்.

கண்ணனின் துணிவு ஜராசந்தனை பிரமிக்க வைத்தது.  “யார் சொன்னார்கள் நான் திரௌபதியைக் கடத்தப் போவதாய்?  நீ யார் என்னை இதைச் செய்யாதே என்பதற்கும், செய் எனக் கட்டளை இடுவதற்கும் யார் நீ?  உனக்கு என்ன உரிமை?  இடைப்பயலே, என்னை மிரட்டவா செய்கிறாய்?  உன்னால் முடியுமா?  இதே ரீதியில் நீ பேசிக் கொண்டு போனாயானால் உன் தலையைச் சுக்கு நூறாக்கி விடுவேன். “

அவனைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பார்வையுடன் பார்த்த கிருஷ்ணன் சிரித்தான். “இதோ பார், என் தலையை உடைக்கும் துணிச்சல் உனக்கிருந்தால் அதை இப்போதே செய்!  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்;  அப்படி நீ செய்தால் இங்கே வந்திருக்கும் அரச குலத்தினர் அனைவரும் ஒன்று கூடி காம்பில்யப் படைகளுடன் சேர்ந்து உன்னுடன் போர் தொடுப்பார்கள்.  உன் உயிரை எடுக்க நினைப்பார்கள்.  சுயம்வரத்திற்கென ஏற்படுத்தப்பட்டப் புனிதமான நெறிமுறைகளை நீ மீறிவிட்டாய் என நினைப்பார்கள்.  சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஒரு விருந்தாளி கொல்லப்பட்டாலும் அதற்குப் பழி வாங்குவார்கள்.  எவன் கொன்றானோ அவன் உயிருடன் இருக்க மாட்டான்.”

“என்ன புனிதமான ஒழுங்கு நெறிமுறைகளா?  அப்படி எனில்? “ ஜராசந்தன் வியப்புடன் கேட்டான்.

“ஆம், தர்மத்திற்கு உட்பட்டப் புனிதமான ஒழுங்கு நெறிமுறைகள்;  அதற்கு உட்பட்டே சுயம்வரங்கள் நடக்கின்றான.  அநாதியான காலம் தொட்டு இவை கடைப்பிடிக்கப்படுகின்றன.  சுயம்வரம் என்பதே ஒரு புனிதமான கோலாகலமான விழா! “

“நீங்களும் உங்கள் ஆர்ய ஒழுங்கு நெறிகளும்!  இவற்றைக் கண்டாலே எனக்குக் குமட்டுகின்றது.”

“பின் ஏன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்தாய்? “

“போய்விடு, ஒழிந்து போ!  போய்விடு!” கத்தினான் ஜராசந்தன்.  கிருஷ்ணன் சொல்வதன் உண்மையான பொருள் புரிந்ததால் அவன் பொறுமை பறி போனது.  “என்னுடைய வேலைகளில் தலையை நுழைக்காதே!  இங்கிருந்து சென்றுவிடு!” என்றான் ஜராசந்தன்.


Wednesday, June 18, 2014

ஜராசந்தன் முன் கிருஷ்ண வாசுதேவன்!

என்ன கிருஷ்ண வாசுதேவனா?  இவனைக் குறித்துத் தானே இந்த அரசர்கள், மக்கள் அனைவரும் பேசிக் கொள்கின்றனர்!  சாகசங்களை நிகழ்த்துபவன்! அதிசயங்களை நடத்துவான்.  நடக்க முடியாத ஒன்றை நடத்திக்காட்டுவான். இவனைப் பார்த்தாலே போதும் என மக்கள் தவமிருக்கின்றனரே!  அவனா இங்கு?  அதுவும் ஜராசந்தனின் கூடாரத்தில்!  விதந்தாவின் கண்கள் ஆச்சரியத்திலும் திகைப்பிலும் அகல விரிந்தன.  அவனால் இதைச் சற்றும் நம்பமுடியவில்லை.  நிஜமாகவே கிருஷ்ண வாசுதேவனா ?  தன் கண்களை நன்கு தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.  இவன் உண்மையாகவே கிருஷ்ண வாசுதேவனா?  ஆம், ஆம், அப்ப்படித் தான் இருக்கும். அதோ அந்த நிறம்! கறுப்பா அது? எப்படிப் பளபளவென இருக்கிறது?  அழகான கறுப்பு நிறம்!  அதோடு அவன் தலையில் சூடி இருக்கும் மயில் பீலி! ஆம், இவன் உண்மையில் கிருஷ்ண வாசுதேவன் தான்!  அவன் தானே மயில் பீலியைச் சூடிக் கொள்வான் என்கிறார்கள்.  மற்ற யாதவர்களிலிருந்து இவன் தனியானவன் என்பது இந்த மயில் பீலியின் மூலம் அறியலாம் என்பார்களே! அதற்குத் தானே இதைச் சூடிக் கொண்டே வந்திருக்கிறான்.

அப்போது கிருஷ்ணன், “ நீ இப்போது போய் சக்கரவர்த்தியை எழுப்புகிறாயா இல்லையா?” என்று அமைதியாகக் கேட்டான்.  விதந்தாவுக்கு சக்கரவர்த்தி ஜராசந்தனும், மற்றவர்களும் கிருஷ்ண வாசுதேவனுடைய பகையையும் விரோதத்தையும் பெரிதும் பாராட்டி வருவதைக்  குறித்து நன்கு தெரியும். ஆகவே சக்கரவர்த்தி இவனைப் பார்க்க விரும்பமாட்டான் என்று நினைத்து, “ பிரபுவே, நீங்கள் அவரைப் பார்ப்பது இயலாத ஒன்று, “ என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் கூறினான்.

“ஓ, அப்படியா?  ஒருவேளை சக்கரவர்த்தி என்னைப் பார்க்க மறுத்தாரெனில் நான் அளிக்கும் செய்தியை அவரிடம் சேர்ப்பிக்க முடியுமா?  அப்படி உன்னால் நேரடியாகச் செய்ய இயலாதெனில், யுவராஜா சஹாதேவன் மூலம் அனுப்பி விடு.  சொல் உன் சக்கரவர்த்தியிடம்:  ஒரு முறை கோமந்தகத்தில் வாசுதேவன் உன் உயிரைக் காப்பாற்றினான்.   மீண்டும் உன் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறான்.  ஆனால் நீ அவன் அவ்வாறு செய்யும்படி அவனை சுதந்திரமாக விட வேண்டும்.” என்ற கிருஷ்ணன், மேலும் யோசித்து, “இதோ உனக்கு தைரியம் இருந்தால் இதையும் சேர்த்துக் கொள்: கிருஷ்ண வாசுதேவன் சொல்வது என்னவெனில் நீ இப்போது உடனடியாக அவனைப் பார்க்கவில்லையெனில் மூவுலகிலும் சேர்ந்து வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது. “ என்று நிறுத்தினான்.  விதந்தா கலக்கமடைந்தான்.  செய்தியின் உட்பொருள் அவனை வெகுவாகத் தாக்கியது.  திகைப்புடன், “நான் எப்படி இம்மாதிரி ஒரு பயங்கரமான எச்சரிக்கைச் செய்தியைச் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பிக்க இயலும்?” என்று கிருஷ்ணன் சொன்னதற்கு ஆக்ஷேபம் தெரிவித்தான்.

“நான் பயமுறுத்தவே இல்லை.  உண்மையில் அவனைக் காப்பாற்றவே வந்துள்ளேன்.” என்று கிருஷ்ணன் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.  இதைக் கேட்ட விதந்தா சற்று நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.  விஷயம் மிகவும் முக்கியமானது, தீவிரமானதும் கூட.  இவ்வளவு அதிகாரம் படைத்த இந்த விருந்தாளி சொல்வதைச் செய்ய முடியாது என்று அவனால் சொல்ல முடியாது.  அதைவிடப் பெரிய ஆபத்து வேறெதுவும் இல்லை.  கண்ணனைப் பார்த்து, “நீங்கள் தயவு செய்து சற்றுக் காத்திருக்க முடியுமா, பிரபுவே!  நான் உங்கள் செய்தியை முதலில் யுவராஜாவிடம் சேர்ப்பிக்கிறேன்.  நீங்கள் இருவருமே மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தியை தரிசிக்க விரும்புகிறீர்களா?” என்று பணிவுடன் கேட்டான்.

“இல்லை, நான் மட்டுமே சந்திக்கிறேன். உத்தவன் இங்கே காத்திருப்பான்.  யுவராஜாவிடம் சொல்வாய்.  என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை.  ஒரே ஒரு வாளை மட்டும் ஏந்தி வந்துள்ளேன். அதையும் இங்கே உத்தவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வரத் தயாராக இருக்கிறேன்.  நான் அமைதியின் தூதுவனாகவே வந்துள்ளேன்.”

“தங்கள் விருப்பம் என் சித்தம் ஐயா!” என்ற விதந்தா உள்ளுக்குள் தான் கொண்டு போக வேண்டிய செய்தியின் பயங்கரத்தைக் குறித்து ஆச்சரியம் அடைந்திருந்தான்.   இதைச் சக்கரவர்த்திக்கு எப்படிச் சொல்வது?  அவன் உள்ளே சென்றான்.  உத்தவன் கிருஷ்ணன் பக்கம் திரும்பினான். “நீ மிகவும் பிடிவாதக் காரனாக இருக்கிறாய் கிருஷ்ணா!  இப்போது தன்னந்தனியாகச் சக்கரவர்த்தி ஜராசந்தனைச் சந்திக்க வேண்டிய காரணம் என்ன?”

கிருஷ்ணன் சிரித்தான். “அவனுக்கு நம்மில் யாராவது ஒருவரைத் தான் கொல்ல முடியும்.  இருவரையும் அவனால் கொல்ல முடியாது.  ஆகவே நீ இதை நினைவில் வைத்துக்கொள்.  ஒரு வேளை எனக்கு ஜராசந்தனைச் சந்திக்கையில் ஏதேனும் நேர்ந்தாலும் நீ இருக்கிறாய்.  ஐந்து சகோதரர்களையும் எப்படியேனும் கண்டு பிடித்துவிடு! “ சொல்லிக் கொண்டே உத்தவனைத் தோள்களில் தட்டிக் கொடுத்து ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான்.  கிருஷ்ணன் ஒரு முடிவுடன் இருப்பதைக் கவனித்த உத்தவனும் மேலும் கேள்விகள் கேட்கவில்லை.   வெகு நேரம் அவர்கள் காத்திருந்த பின்னர் விதந்தா யுவராஜா சஹாதேவனுடன் திரும்பி வந்தான்.
“ஓ, இது கிருஷ்ண வாசுதேவன் அல்லவோ? உண்மையிலேயே இந்த இரவில் இந்த நேரத்தில் நீ சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புகிறாயா?” அவன் எவ்வளவு தான் அடக்கிக் கொண்டாலும் அளவு கடந்த சினத்தில் இருப்பது குரலில் வெளிப்பட்டது.


“ஆம், யுவராஜா!  உங்கள் ஆச்சரியமும், திகைப்பும், சந்தேகமும் எனக்குப் புரிகிறது.  நான் சக்கரவர்த்தியின் நண்பன் அல்ல.  அவருக்கும் நான் நண்பன் அல்ல.  என்றாலும் நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்.  அதுவும் தன்னந்தனியாக.  உங்களுடன் நான் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வந்து சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புகிறேன்.  நிராயுதபாணியாக வருகிறேன். இதோ என்னுடைய இந்த வாளை இங்கேயே உத்தவனிடம் கொடுத்துவிட்டு வருகிறேன்.  இதிலிருந்து நீங்கள் நான் என் உயிரைப் பணயம் வைத்து முக்கியமான ஒரு செய்தியைச் சக்கரவர்த்திக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”

“அப்படி அது அவ்வளவு முக்கியமானதா?”

“ஆம், முக்கியமானது தான். விஷயம் முக்கியம் இல்லை என்றால் நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன் என்பதை நீங்கள் அறியவில்லையா?”

விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்த சஹாதேவனும் கூடாரத்தினுள் சென்று மெதுவாக ஜராசந்தனை எழுப்பினான்.   கிருஷ்ண வாசுதேவன் காண விரும்புவதைச் சொல்லிவிட்டு, அவனை இங்கே அழைத்து வரலாமா என்றும் வினவினான்.   அவன் வருகையைச் சற்றும் விரும்பாத ஜராசந்தன் வேறு வழியின்றி அவனை இங்கே அழைத்து வரும்படி சொன்னான்.  என்றாலும் அவன் விருப்பமின்மை குரலில் பரிபூரணமாக வெளிப்பட்டது.  சஹாதேவன் கிருஷ்ணனைக் கூடாரத்தினுள் அழைத்துச் சென்றான்.  மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தூண்டிப் பெரிதாக்கிய காவலாளிகள் உடனே வெளியே சென்றனர்.  பெரியதொரு கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த விஸ்தாரமான மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஜராசந்தன் அதிலேயே எழுந்து அமர்ந்திருந்தான்.  இவ்வளவு வயதிலும் அவன் உடல் கட்டுடன் இருப்பதையும் எங்கும் சுருக்கங்களோ, வயதானதின் அடையாளங்களோ காணப்படவில்லை என்பதையும் கண்ணன் கவனித்தான்.   தன் நீண்ட தலைமயிரையும், தாடியையும் எடுத்துக் கட்ட முயன்று கொண்டிருந்த கோலத்தில் சிங்கத்தைப் போல் காணப்பட்டான்.  கண்ணன் அங்கே வந்ததில் அவனுடைய விருப்பமின்மை முகத்தில் கோபமாக வெளிப்பட்டு முகம் சிவந்திருந்தது.


எவரும் பேசவே இல்லை.  சஹாதேவன் கட்டிலுக்கு முன்னால் ஒரு ஆசனத்தை எடுத்துப் போட்டுக் கண்ணனை அதில் அமரும்படி ஜாடை காட்டினான்.  கண்ணனும் அமர்ந்து கொண்டான்.  ஒரு உறுமலின் மூலம் கண்ணனின் வரவைத் தான் தெரிந்து கொண்டதைக் காட்டினான் ஜராசந்தன். எவரும் பேசவே இல்லை.  அமைதி.


Monday, June 16, 2014

"நான் கிருஷ்ண வாசுதேவன்!"

நள்ளிரவு நேரம். கங்கை சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தாள்.  கங்கை நீரிலே நிலவின் பிரதிபிம்பம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.  விண்ணில் முக்கால் வடிவச்  சந்திரன் தன்னந்தனியாக உலா வந்து கொண்டிருந்தான்.  அவ்வப்போது பூமியை,குறிப்பாக காம்பில்யத்தையும், அதன் புறத்தே அமைக்கப்பட்டிருந்த விருந்தினருக்கான நகரையும், அங்கே தங்கி இருந்த ஆயிரக்கணக்கான மக்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்த முகாமில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் மெல்ல மெல்ல நித்திரா தேவிக்கு அடிமையாகிக் கொண்டிருந்தனர்.  பகல் முழுவதும் அங்குமிங்கும் சுற்றியும், ஆயுதப் பயிற்சி, வில் வித்தைப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளிலும் இன்னும் பிற நடவடிக்கைகளிலும் மூழ்கி இருந்துவிட்டு மறுநாள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப்போவதை எதிர்பார்த்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தனர்.   அதோ, அந்தப் பகுதியில் வலுவான காவலாளிகள் காவல் காத்து நிற்கின்றனரே.

ஓஹோ, இது நாம் ஏற்கெனவே பார்த்த இடம் தான்.  இங்கே இந்தக் கூடாரத்தில் தான் மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தன் தங்கி இருக்கிறான்.  காவலர்கள் மிகவும் மரியாதையுடன் நடப்பதிலிருந்தும் மெல்லக் கிசு கிசுவெனப் பேசிக் கொள்வதிலிருந்தும் ஊகிக்க முடிகிறது.  ஜராசந்தன் உறங்கச் சென்று விட்டான் போலும்.  அவன் மெய்க்காவலர்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தவர்கள் நேரம் ஆக, ஆகத் தங்களையும் அறியாமல் தூங்கி விழ ஆரம்பித்திருந்தனர்.  அப்போது கூடாரத்தை நோக்கி எவரோ வரும் காலடி சப்தங்கள் கேட்டன.  தூங்கிக் கொண்டிருந்த காவலாளிகள் சட்டென விழித்துக் கொண்டு எதற்கும் தயார் நிலையில் நின்றனர்.  இரு உருவங்கள் உடல் முழுதும் போர்த்துக் கொண்டு முகம் மட்டும் மறைக்கப்படாமல் அந்தக் கூடாரத்தை நோக்கி வந்தன.  காவலர் தலைவன் அதற்குள் அங்கே வந்துவிட, அந்த உருவங்களைப் பார்த்து, “அப்படியே நில்லுங்கள்!  யார் நீங்கள்?” எனக் கேள்வி எழுப்பினான்.  பேச்சுக்குரலிலும், புதியவர்கள் வந்த நடை சப்தத்திலும் ஆங்காங்கே காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.  கூடாரத்துக்குள்  யார் நுழைந்தாலும் அந்த மனிதனைச் சுக்குச் சுக்காகக் கிழித்துப்போடத் தயார் நிலையில் இருந்தனர்.

வந்திருந்த  இருவரின் ஒருவன், தெளிவான குரலில், “நாங்கள் சக்கரவர்த்தியைப் பார்த்தாக வேண்டும்.” என்று கூறினான்.  “ஹூம், சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமா?  அதற்கு நல்ல நேரம் பார்த்தாய் அப்பனே!  என்ன விளையாடுகிறாயா? ஓடி விடு! இல்லை எனில் தாக்கப்படுவாய்!” எனக் காவலர் தலைவன் எச்சரித்தான்.  “பைத்தியமாகி விட்டான் போலிருக்கிறது!” என்றும் கூறினான்.  அவனுடன் பேசிய மனிதன் தன்னை மூடி இருந்த போர்வையை நீக்கினான். அவன் தலையில் மிகப் பிரகாசமான ஜொலிக்கும் கிரீடம் அணிந்திருந்தான்.  விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டிருந்ததோடு அல்லாமல் அவன் வாளின் உறை கூடத் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.  யாரோ மிக உயர்ந்த அரச குலத்தவராக இருக்க வேண்டும் எனக் காவலாளி ஊகித்தான்.  அவர்களுக்குத் திகைப்பும் ஆச்சரியமும் மிகுந்தது.  குறைந்த பக்ஷம் இளவரசனாகவோ, யுவராஜாவாகவோ இருக்க வேண்டும்.  இப்போது என்ன செய்வது? இந்த நள்ளிரவு நேரத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி கூடக் காவலாளிகள் யாருமின்றி வந்திருக்கின்றாரே!  காவலர் தலைவன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “மன்னிக்கவும் இளவரசே, உங்களை நாங்கள் அனுமதிக்க முடியாது.  எங்களுக்குக் கண்டிப்பான கட்டளைகள் பிறந்திருக்கின்றன.”  என்றான்.

“இரவு நேரக் காவலுக்கு எந்த இளவரசனைப் போட்டிருக்கின்றனர் என்பது தெரியுமா உனக்கு?  அவனிடம் என்னை அழைத்துச் செல் அல்லது அவனை இங்கே வரவழைப்பாய்.  நான் எதற்காக தூது வந்திருக்கிறேனோ அது சிறிதும் தாமதிக்கக் கூடாது.  விரைவில் செய்தியைச் சொல்லியாக வேண்டும்.”சொன்ன விருந்தாளியின் குரலிலேயே மிக அவசரம் தொனித்தது.   காவலர் தலைவனோ, “எங்களால் உங்களை உள்ளே அனுமதிக்கவும் இயலாது;  இளவரசன் விதந்தாவை இங்கே அழைத்து வரவும் முடியாது.  அவர் இந்நேரம் நன்கு தூங்கிக் கொண்டிருப்பார். “ என்றான்.  வந்தவனோ ஏதோ நகைச்சுவையைக் கேட்டவன் போலச் சிரித்தான். “ தூங்கினால் உடனடியாக எழுப்பி விடு.  நான் வந்திருப்பது சக்கரவர்த்தியின் உயிரைக் குறித்த விஷயம். தாமதம் ஏதுமின்றி இளவரசன் விதந்தாவை நான் பார்க்க விரும்புகிறேன்.”

“என்ன அவசரமானாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம், பிரபுவே.  இப்போது இயலாது.”

“நான் உடனடியாக அவனை இப்போதே பார்த்தாகவேண்டும்.” கண்டிப்புடன் கூறினான் வந்தவன்.  அவன் கண்களும் தீவிரத்தைக் காட்டின.  “சற்றும் தயங்காமல் உடனே சென்று இளவரசன் விதந்தாவை அழைத்து வா.  செய்தியை அறிந்தால் அவன் உன்னைப் பாராட்டவே செய்வான்.  நன்றியும் கூறுவான்.  இல்லை எனில் நான் என் சங்கை எடுத்து ஊதுகிறேன்.  ஆனால் அப்படிச் செய்தால் இங்கே தண்டு இறங்கி இருக்கும் அனைவரும் விழித்தெழுவார்கள்.  இம்மாதிரி நடந்தமைக்காகச் சக்கரவர்த்தியின் தண்டனை கூட உங்களுக்குக் கிடைக்கலாம்.”


குழம்பிப் போனான் காவலர் தலைவன்.  அனைவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு விதந்தாவை எழுப்பச் சென்றான்.  வந்தவன் தன் நண்பனின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு விதந்தாவுக்குக் காத்திருந்தான்.
“என்ன வேண்டும் உனக்கு? இந்த அகாலத்தில் வந்திருக்கிறாயே?” விதந்தா தன் தூக்கம் பறிபோனதில் கடுகடுத்தான்.  அவன் கண்களில் தூக்கம் கலையவில்லை.  தாங்க முடியாச் சினத்தை முகம் காட்டியது.

“மாட்சிமை பொருந்திய இளவரசே, நான் உடனடியாகச் சக்கரவர்த்தியைப் பார்த்தாக வேண்டும்.” என்றான் வந்தவன்.  விதந்தாவின் கோபம் எல்லை மீறியது.  “இரவு இந்நேரத்தில் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமா?  முடியாத காரியம்.  என்னால் அவரை எழுப்ப இயலாது.  ஏன் இந்நேரம் வந்து தொந்திரவு செய்கிறாய்?”

“நீ எக்காரணம் கொண்டாவது அவரை எழுப்பியே ஆக வேண்டும்.” நிதானமாகச் சொன்னான் வந்தவன். “என்னால் முடியாது.  அவர் நன்றாகத் தூங்குகிறார்.” சொல்லிவிட்டுத் திரும்ப யத்தனித்தவனை அதிகாரக் குரல் ஒன்று தடுத்தது.  சட்டெனத் திரும்பியவன் இத்தனை நேரம் தன்னுடன் பேசியவன்  குரல் இப்போது அதிகாரமாக, “சக்கரவர்த்தியை எழுப்பு!” என்று கட்டளை இட்டதைக் கண்டான்.   வந்திருப்பவனை நன்றாகக் கவனித்த விதந்தாவுக்கு யாரோ இளவரசன் என்னும் நினைப்புத் தோன்ற மரியாதையுடன், “ மன்னிக்கவும் இளவரசே.  தாங்கள் யார்?” என்று கேட்டான்.

“நான் கிருஷ்ண வாசுதேவன். யாதவர் தலைவன். “சிரித்துக்கொண்டே சொன்னவன், தன்னுடன் வந்தவனைச் சுட்டிக் காட்டி, “இது யாரெனத் தெரிய வேண்டுமா?  இவன் உத்தவன்;  என் சகோதரன்; என் சித்தப்பா தேவபாகனின் மகன்.” என்றான்.
Saturday, June 14, 2014

துருபதன் முடிவு எடுத்துவிட்டான்!

“எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்ட துருபதன் ஷிகண்டினைப் பார்த்தான்.  தான் மிகப் பெரிய அவமரியாதைக்கும், அவமதிப்புக்கும் உள்ளானது போல் இருந்த அவன் முகத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தான்.  “அப்படிப் பார்க்காதே மகனே!  உன்னை நான் இனிமேல் அவமரியாதை செய்ய மாட்டேன்.  அதிலும் நீ சரியான நேரத்துக்கு அந்த தற்பெருமைக்காரனின் சந்தோஷத்தை நீர்க்குமிழியை உடைப்பது போல் உடைத்துவிட்டாய்.  ஆனால் உன் கேள்வியின் மூலம் நீ என்னதான் சொல்ல விரும்புகிறாய், மகனே?” என்று துருபதன் மிகவும் ஆதுரத்துடன் கேட்டான்.

“தந்தையே, பானுமதி, தான் இப்போது யுவராஜாவின் மனைவி.  அவளே பட்டமஹிஷியாகவும் ஆவாள் என அனைவரும் சொல்கின்றனர்.  இந்த பானுமதியை தான் பெற்றெடுத்த மகள் போலப் பிரியம் காட்டிப் பாசத்துடன் இருந்து வருகிறார் ஆசாரியர் துரோணர்.  பானுமதியின் இடத்துக்குப் போட்டியிட வரும் எந்த இளவரசியானாலும் அவளை துரோணருக்குப் பிடிக்காது.  அதுவும் திரௌபதி என்றால் இன்னமும் அதிகமாய் விரும்ப மாட்டார்.  பானுமதியின் இடத்தை திரௌபதி பிடித்துக்கொள்வதை அவரால் சகிக்க இயலாது.  வேறு எவரையும் அனுமதிக்கவும் மாட்டார்.”

இப்போது திரௌபதி தன் கண்களில் தெரிந்த ஜ்வலிப்புடன் துருபதனைப் பார்த்து, “தந்தையே, நான் துரியோதனனை மணக்க வேண்டிய அவசியம் நேரிடாது என உங்களிடம் சொன்னேன் அல்லவா?” என்று கேட்டாள். “எனக்கும் நீ அவனை மணப்பது என்பது விரும்பத் தகாத ஒன்று தான்! ஆனால் கிருஷ்ணா, அவன் போட்டியின் வென்று விட்டால்?  எப்படி நீ அவனைத் தவிர்ப்பாய்?  அவனிடமிருந்து நீ தப்பவே முடியாது மகளே!”  தன் மனதிலிருக்கும் வருத்தம் அனைத்தும் தெரியும்படியாகத் தன் கையாலாகாத் தனத்தை நினைத்து நொந்தவனாய்ப் பேசினான் துருபதன்.  அதற்குள் உடனே ஷிகண்டின் மீண்டும் குறுக்கிட்டான்.

“தந்தையே, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? “ என்று தந்தையிடம் அனுமதி கேட்டவனை உடனே அங்கீகரித்தான் துருபதன்.  அவனுக்குள்ளே ஷிகண்டினைக் குறித்த எண்ணங்கள் மெல்ல மெல்ல மாறி வந்தன.  தன் மகனா/மகளா எனச் சொல்ல முடியாமலிருந்த ஷிகண்டின் இப்போது பூரணமாக ஆண்மகனாக மாறி இருப்பதோடு அவனுடைய தைரியமும், வீரமும் சிக்கலான சமயங்களில் அவற்றைத் தீர்க்கப் பாடுபடும் முறையும் அவனுள் ஷிகண்டினின் மேல் கொஞ்சம் மரியாதையையே ஏற்படுத்தியது. ஷிகண்டின் மேலே பேசக் காத்திருந்தான்.

“தந்தையே, நீங்கள் அரச தர்மத்தைக் கைவிடாமல் காத்து வருபவர். அதிலும் கொடுத்த வாக்குறுதியைக் காக்கவேண்டும் என்பதில் முனைப்பாகவும் இருப்பீர்கள்.  வாக்குறுதியை உடைப்பது என்பது உங்களுக்கு அதர்மம். அரசநீதியை விட்டு விலகியது போல் நினைப்பீர்கள்; உணர்வீர்கள்.  அதே போல் அதர்ம வழியில் நடக்கும், அதர்மத்தையே கொள்கையாகக் கைப்பற்றி வரும் துரியோதனனுக்கு நம் வீட்டுப் பெண்ணை மணம் செய்து கொடுப்பதும் அதர்மமே! “ தன் தைரியத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு சொன்ன ஷிகண்டினின் உடல் நடுங்கியது.  உதடுகள் நடுக்கத்தில் நெளிந்தன.  அவன் கைகளும், கால்களும் ஆடின.  அவனுடைய நடுக்கத்தின் மூலம் அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட துருபதன் அவனை உற்சாகப்படுத்தும் விதமாக, “மகனே, அதிகமாய் உணர்ச்சி வசப்படாமல் நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதைச் சொல்லுவாய்!” என்று தைரியம் கொடுத்தான்.

ஷிகண்டின் கொஞ்சம் தைரியம் அடைந்தான். “ தன் மாமன் ஷகுனி, தன் அருமை சிநேகிதன் கர்ணன் ஆகியோரின் வழிகாட்டலின் படி நடந்து வரும் துரியோதனன் முழுக்க முழுக்கக் கொடூரம் நிறைந்தவன்.  அவன் இயல்பே கொடூரமானது தான்.  அவன் நினைத்ததை அடைவதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பான்.  எத்தகைய கேவலமான ஒன்றையும் செய்யத் தயாராக இருப்பான். அவனுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரம், பதவி,  போன்றவையே!  இதைப்பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பான்.”

“அவன் சதித்திட்டம் தீட்டியே ஐந்து சகோதரர்களையும் கொன்றான்.  அவர்கள் இருந்தால் தனக்கு யுவராஜா பதவியோ, அதிகாரமோ கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்து அவர்களை அகற்றிவிட்டான்.  அவர்கள் துரியோதனனால் தான் வாரணாவதத்தில் எரித்துக் கொல்லப்பட்டனர்.”

“ஆம், மகனே, நாங்களும் இவற்றைக் கேள்விப்பட்டோம்!  ஆனால் இவை எல்லாம் உண்மைதானா?”  துருபதன் கேட்டான்.

“ஆம் தந்தையே, அனைத்தும் உண்மை.  என் குருவே இதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர்களை நாட்டை விட்டுக் கடத்தவில்லை எனில் அவர்கள் அங்கே ஹஸ்தினாபுரத்திலேயே அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் வாரணாவதம் சென்றும் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிட்டவில்லை.  எனக்குச் சிகிச்சை அளித்த யக்ஷன் ஸ்தூனகர்ணன் மூலம் வாரணாவதத்தில் அவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை அறிந்தேன். ஸ்தூனகர்ணன் தான் வாரணாவதத்தில் அரக்கினால் ஒரு மாளிகை கட்டியுள்ளான்; மேலும் அதிலே கந்தகத்தைச் சேர்க்கவும் துரியோதனன் அவனுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறான்.  புரோசனன் தான் அதை எரிக்கக் கட்டளை பெற்றிருக்கிறான்.” என்றான் ஷிகண்டின்.  துருபதன் த்ருஷ்டத்யும்னனைப் பார்க்க அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  சற்று நேரம் அங்கே வேறு ஏதும் பேச்சே இல்லை.

“யார் இந்த யக்ஷன்?” துருபதன் கேட்டான்.  “ஓ, அவன் தான் அவனுடைய சிகிச்சையினால் தான் நான் இன்று முழுமனிதனாக ஆகியுள்ளேன்.  அவனும் என்னுடன் வந்திருக்கிறான்.  ரதத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்.  அனுமதி அளித்தீர்களானால் சென்று அழைத்து வருகிறேன்.” என்றான் ஷிகண்டின்.

துருபதன் அனுமதி அளிக்க வெளியே சென்ற ஷிகண்டின் ஒரு விசித்திரமானவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.  வந்தவன் உயரமாக, ஒல்லியாக,  நரம்புகளால் ஆன உடல் போல, வட்ட, வட்டமான தண்டுவடங்கள் தெரியும்படியாக, தலை காற்றில் அலைந்து அங்குமிங்கும் பறக்கச் சிவந்த கண்களோடு கையில் ஒரு திரிசூலத்துடன் தோன்றினான். துருபதனை அவன் பார்த்த பார்வையில் அவன் மேல் வந்த யக்ஷன் கொண்டிருக்கும் முழு ஈடுபாடு புலப்பட்டது.  தன் கைகளை உயர்த்தி அவனை ஆசீர்வதித்தான்.

இவ்வளவு விசித்திரமான தோற்றம் கொண்டவனை இன்று வரை துருபதன் பார்த்ததே இல்லை.  அவனை ஆச்சரியத்துடன் பார்த்து, “நீர் தான் யக்ஷன் ஸ்தூனகர்ணனா?” என விசாரித்தான்.  அந்த யக்ஷனோ வாயே திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினான்.  அதைக் கண்டு வியந்த துருபதனிடம் ஷிகண்டின், “தந்தையே, இந்த யக்ஷன் ஒரு நாளைக்கு இருபதே இருபது வார்த்தைகள் தான் பேசுவான்.  அதற்கு மேல் பேசமாட்டான்.  நாளைக் காலை சூரியோதயத்துக்குள் இவனுக்குப் பேச இன்னும் ஐந்து வார்த்தைகள் தான் மீதம் உள்ளன.  நீங்கள் எந்தக் கேள்வியை எப்படிக் கேட்டாலும் இவன் அதற்குத் தக்க பதிலைச் சொல்லுவான்.” என்றான்.

“ஷிகண்டினுக்கு நீ தான் சிகிச்சை அளித்தாயா?” என்று துருபதன் கேட்க யக்ஷன் தலை மட்டும் ஆட்டி ஆமோதித்தான்.  “அரக்கு மாளிகையும் கட்டி அதில் கந்தகத்தையும் நிரப்பியதும் நீ தானா? ஐந்து சகோதரர்களையும் கொல்ல வேண்டி இவற்றைச் செய்ததும் நீ தானா?”  மீண்டும் தலை ஆட்டி ஆமோதித்தான் யக்ஷன்.

“யார் கட்டளையின் பேரில் இதைச் செய்தாய்?”

“துரியோதனன்!”

“மாளிகைக்குத் தீ வைத்தது யாரென உனக்குத் தெரியுமா?”

“புரோசனன்!”

“அவன் தான் தீ வைத்தான் என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?”

“கட்டளைகள்!”

“எவருடைய கட்டளைகள்?”

“துரியோதனன்!”

“நீ எப்படி இதை அறிவாய்?”

“கேட்டேன்.”

“ஓ, அப்படி எனில் இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதை நீ கேட்டிருக்கிறாய்?  அது தானே நீ சொல்ல விரும்புவது?”
ஸ்தூனகர்ணன் தான் பேச வேண்டிய மிச்சம் ஐந்து வார்த்தைகளையும் தான் பேசி முடித்துவிட்டதாகச் சைகைகள் மூலம் தெரிவித்தான்.  தன் உதடுகளின் மேல் விரலை வைத்து இனி தான் பேச முடியாது என்றும் தெரிவித்தான்.  துருபதன் அவனிடம், “நீயே நேரில் இந்தக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதைக் கேட்டாயா?” என்று கேட்டான்.

தலையை ஆட்டி ஆமோதித்தான் ஸ்தூனகர்ணன்.

“நீ போகலாம்!” என உத்தரவு கொடுத்தான் துருபதன்.  ஷிகண்டின் அவனை வெளியே அழைத்துச் சென்று ஒரு காவலாளியை அழைத்து ஸ்தூனகர்ணனைத் திரும்ப ரதத்தில் கொண்டு விடும்படி கூறினான்.  அவன் திரும்பி வந்தபோது துருபதன் மிகவும் வெறுப்புடன், “கிருஷ்ணா துரியோதனனை மணக்க நேர்ந்தால் அதை விடப்பெரிய பாவம் ஏதுமில்லை. அவள் அவனை மணக்கக் கூடாது!” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.த்ருஷ்டத்யும்னன் அதை ஆமோதிக்க, திரௌபதியோ ஏற்கெனவே தன் மனம் துரியோதனனை மணக்க விரும்பாததை நினைத்துத் தன் உள் மனம் சொன்னதில் தவறில்லை என மகிழ்ச்சி அடைந்தாள்.  அவள் முகம் புன்முறுவலில் மலர்ந்தது.

“இப்போது நான் என்ன செய்வது என்றே புரியவில்லை! ரொம்பவே குழப்பமாய் உள்ளதே! என்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாது போல் இருக்கிறேன்.” துருபதன் மிகவும் சோர்வோடு கூறினான்.  ஷிகன்டின் அப்போது குறுக்கிட்டு மீண்டும் பேச அனுமதி கேட்டான்.  அவனுடைய அதீத மரியாதை தனக்குத் தொல்லையாக இருப்பதில் எரிச்சல் அடைந்த துருபதன், “சொல், நீ நினைப்பதைச் சொல்!  ஆரம்பத்தில் இருந்தே உன் மனதில் ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பது புரிந்தது!  உடனடியாகச் சொல்!” என்று கோபத்துடன் கத்தினான்.

“ஒருவேளை துரியோதனன் வில் வித்தைப் போட்டியில் ஜெயித்துவிட்டால், என் சகோதரியை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டி நான் குறுக்கிட வேண்டி இருக்கும், தந்தையே!  அந்த மஹாப் பாவத்தை அனுமதிக்க முடியாது.”

“உன்னால் என்ன செய்ய முடியும்?” துருபதன் கேட்டான்.  ஷிகண்டின் கூறினான்:”அனைத்து மன்னர்களும் நிறைந்த அந்த சபையிலே துரியோதனன் தன் சிற்றப்பன் மகன்களுக்குச் செய்த கொடூரத்தை எடுத்துக் கூறுவேன்.  அவன் எவ்விதம் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றான் என்பதை நிரூபிப்பேன்.  ரிஷி, முனிவர்களை அழைத்து நியாயம் கேட்பேன்.  இப்படி ஒரு அநியாயத்தைச் செய்தவன் அரசகுல தர்மப்படி நடக்கும் ஒரு போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்பேன்.”

இதைக் கேட்ட த்ருஷ்டத்யும்னன் அதன் விளைவுகளை எண்ணிப் பார்த்துவிட்டு, “இது மாபெரும் யுத்தத்தில் கொண்டு விடும்.  குருவம்சத்தினருக்கும் நமக்கும் இடையில் பெரிய போர் நடைபெறும்.” என்றான்.

“நடக்கட்டும்.  சரியான ஒரு கொள்கைக்காக யுத்தம் நடைபெறட்டும்.  நேர்மைக்கும், நேர்மை அற்றவர்க்கும் இடையில் நடைபெறும் யுத்தமாக இருக்கட்டும்.  மற்ற அரசர்கள் அனைவரும் நம் பக்கம் தான் இருப்பார்கள். அதிலும் கிருஷ்ண வாசுதேவன் நிச்சயம் நம் பக்கம் தான் நிற்பான்.  சந்தேகமே இல்லை.  அப்படி ஒரு யுத்தம் நடந்தால் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையில் நடக்கும் போராக இருக்கும்.” என்றான் ஷிகண்டின்.  த்ருஷ்டத்யும்னன் கொஞ்சம் யோசித்துவிட்டு, “தந்தையே, இந்த விஷயத்தைக் கொஞ்சம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.  தாமதம் கூடாது!” என்றான்.

துருபதன் கண்களை மூடிக் கொஞ்ச நேரம் யோசித்தான்.  ஆழ்ந்து யோசித்தவன் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் என்பது அவன் கண்களைத் திறந்ததும் புரிந்தது.  “த்ருஷ்டத்யும்னா!  எனக்கு இப்போது வழி புலப்பட்டு விட்டது!  நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.  ஷிகண்டின் சரியாகவே சொல்கிறான். துரியோதனன் ஜெயித்தான் எனில் கிருஷ்ணாவை மணக்க நாம் அனுமதிக்கக் கூடாது.  அவனுடைய கொடூரத்தை எடுத்துச் சொல்லியாகவே வேண்டும்.  வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.  இப்படிப் பட்ட ஒரு கொடூரனுக்கு என் மகளைக் கொடுப்பதை விட இதன் மூலம் நடக்கும் யுத்தத்தைப் புனிதமான ஒன்றாக நான் கருதுகிறேன்.”  என்று முடித்தான்.


Thursday, June 12, 2014

அஸ்வத்தாமா சத்தியம் செய்கிறான்!

இருவரில் அனுபவம் மிக்க ஷகுனி உடனடியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டான்.   தான் இதைக் கேட்டுப் பாதிப்பு அடையாதவன் போல் காட்டிக்கொள்ளப் பிரயாசைப் பட்டான்.  சோகம் ஒன்றையும் வரவழைத்துக் கொண்டான். மிகுந்த சோகத்துடன் இருப்பவன் போல் காட்டிக்கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு! “ஆஹா, ஆஹா, என்ன சொல்ல, என்ன சொல்ல!  ஐந்து சகோதரர்களும் இறந்துவிட்டனரே!  ஒருவர் கூடத் தப்பிக்கவில்லையே!  மனிதர்களில் மிகவும் சிறந்த உயர்குடிப் பிறப்பில் பிறந்த உயர்வான மனிதர்கள்!  அதிலும் அந்த அர்ஜுனன் இருந்தானே!  அவன் மிகச் சிறந்த வில்லாளி!  சிறந்த வில்லாளி!  நம் யுவராஜாவைப் போலவே!  நம் யுவராஜாவின் மென்மையான இதயம் ஐந்து சகோதரர்களின் துர்ப்பாக்கியமான முடிவைக் கேட்டதும் சுக்கு நூறாக உடைந்து விட்டது. அவரால் இதைத் தாங்க முடியவில்லை.  ஆனால் விதியை எவரால் வெல்ல முடியும்?”

ஷகுனியின் இந்திரியங்களும் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டாற்போலக் காணப்பட்டன.  அவன் கண்கள் கண்ணீரை மழையென வர்ஷிக்கத் தயாராக இருந்தன.  அவனுக்கு எப்போது தேவையோ அப்போது கண்ணீர் வரும்படியாக அவன் கண்களைப் பழக்கி இருந்தானோ?  அஸ்வத்தாமாவுக்கோ இந்தப் பேச்சைத் தொடருவதில் சற்றும் பொறுமை இல்லை.  எனினும் ஏதேனும் சொல்லவேண்டுமே!

“மாட்சிமை பொருந்திய அரசே, கர்ணன் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.  அவன் ஒரு தேரோட்டியால் வளர்க்கப்பட்ட மகன். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் கர்ணனை விட நான் மிகச் சிறந்த வில்லாளியாவேன்!” இதைப் பணிவுடனே சொல்ல நினைத்த அஸ்வத்தாமா அதில் தோற்றுவிட்டானோ என்னும்படி இருந்தது.

“ம்ம்ம்ம் ..அப்படி என்றால் உங்கள் யுவராஜா இந்தப் போட்டியில் வென்றுவிடுவது நிச்சயமாகி விட்டது!” என்றான் துருபதன்.  அனைவர் மனதிலும் நல்லெண்ணத்தை உண்டாக்கும்படியாக நிரந்தரமாக ஒரு சிரிப்பை முகத்திலேயே தேக்கி வைத்திருக்கும் ஷகுனி இப்போது குறுக்கிட்டான். “எனக்கு அதில் சந்தேகமே இல்லை அரசர்க்கு அரசே!  உங்கள் அழகான மகளை மணக்க வீரம் நிறைந்த துரியோதனனை விட்டால் வேறு எவருமே இல்லை என்பதே உண்மை! இப்படி ஒரு மருமகன் கிடைக்க நான் தவம் செய்திருக்க வேண்டும் மன்னா!  ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவர் இந்த குரு வம்சத்து ராஜ்யத்துக்கு மட்டுமின்றி ஆர்யவர்த்தத்துக்கே மாபெரும் சக்கரவர்த்தியாக ஆகப்போகிறான்.”

துருபதனுக்கு எரிச்சல் மூண்டது.  என்றாலும் மௌனம் காத்தான்.  அப்போது ஷகுனி துருபதனிடம்  “நாம் பழசை எல்லாம் மறந்து விடுவோம்.  அதன் மூலம் ஏற்பட்ட மனக்கசப்பை மறப்போம். அதற்காகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்!  என்ன அஸ்வத்தமா, நான் சொல்வது சரிதானே?” என்றான்.  துணைக்கு அஸ்வத்தாமாவையும் அழைத்துக் கொண்டான்.

“ஆம், நான் இங்கே ஒரு புனிதமான வாக்குறுதியை அளிக்கவே வந்துள்ளேன், அரசே!” என்றான் அஸ்வத்தாமா.  “அப்படி என்ன வாக்குறுதியை நீ எனக்கு அளிக்கப்போகிறாய்?” துருபதன் கேட்டான். அஸ்வத்தாமா கூறினான்:  “சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.  ம்ம்ம்ம்ம், வாசுதேவ கிருஷ்ணன் தான் கூறினான்.  யுவராஜா இளவரசி திரௌபதியைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்போது என் தந்தை ஆசாரியர் துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லக் கூடாது என!  அதற்கு நான் பாடுபட வேண்டும்.  ஆகவே நான் இங்கே உங்களுக்கு அதற்காகவே ஒரு சத்தியம் செய்து கொடுக்க வந்தேன்.  இது உறுதியான சத்தியம்.   உங்கள் குமாரி திரௌபதி யுவராஜாவை மணந்து கொண்டால் என் தந்தை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் நான் பார்த்துக்கொள்வேன்.  இதற்காக என் உயிரைக் கொடுக்க நேர்ந்தாலும் கொடுப்பேன்.”

வாய் திறந்து எதுவும் பேசாமலும், தன் முகத்திலும் எவ்வித உணர்வுகளையும் காட்டாமலும் துருபதன் மௌனமாகவே இருந்தான்.  ஆனால் அப்போது ஒரு கரகரப்பான நடுங்கும் குரல் பேசியது: “ எங்கள் சகோதரி குரு வம்சத்து யுவராஜாவுக்கு பட்டமகிஷியாக ஆவதற்கு ஆசாரியர் துரோணர் ஒத்துக்கொள்வாரா?  அது பற்றி உனக்கு நிச்சயமாகத் தெரியுமா அஸ்வத்தாமா?  உறுதியாக உன்னால் சொல்ல முடியுமா?”  இதைக் கேட்ட துருபதனுக்கு மனதில் கோபம் வந்தது.  புருவங்கள் நெரிய முகச் சுளிப்புடன் தன் குழந்தைகள் நின்றிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான்.  தான் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து  விருந்தாளிகளோடு விவாதிக்கையில் எப்படி நம் குழந்தைகளில் ஒருவர் சற்றும் நாகரிகம் இல்லாமல் அதில் தலையிட்டுத் தன் கருத்தைக் கூற முடியும்?  அதிலும் அவர்களை யாரும் கேட்கவும் இல்லை;  வந்திருக்கும் புதியவர்கள் முன்னால் இப்படியா நடந்து கொள்வது?

அந்த விசித்திரமான குரல் வந்த திக்கை நோக்கி  அனைவரின் விழிகளும் திரும்பின. த்ருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் விலகி வழிவிட, மெல்ல மெல்ல நடந்து முன்னால் வந்தான் ஷிகண்டின்.  மிகக் களைத்திருந்த அவனுடைய முகம் உணர்ச்சிவசப்பட்டு சிவந்து காணப்பட்டது.  ஷகுனிக்குத் தூக்கிவாரிப் போட அஸ்வத்தாமாவோ தன் பார்வையாலேயே அவனை எரித்துவிடுவது போல் பார்த்தான்.  முதலில் கோபம் கொண்ட துருபதனோ அந்தக் கேள்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதோடு அல்லாமல் ஷிகண்டினை அந்த க்ஷணத்துக்கு மன்னிக்கவும் செய்தான்.  இந்த நேரிடையான, வெளிப்படையான கேள்விக்கு அதே மாதிரி நேரிடையான, வெளிப்படையான பதிலையும் எதிர்பார்த்து அஸ்வத்தாமா பக்கம் திரும்பிப் பார்த்தான்.  அஸ்வத்தாமாவுக்கு எரிச்சல் வந்தாலும் ஷிகண்டினை அடையாளம் கண்டு கொண்டான்.  தந்தையிடம் சீடனாக வந்து சேர்ந்தவன்.

ஆனால் இவன் ஒரு புதிராகவன்றோ இருக்கிறான்!  அங்கே ஒரு துறவியைப் போன்று அல்லவோ  காணப்பட்டான்.  இங்கே ஓர் இளவரசனுக்குரிய உடைகளை அணிந்து காணப்படுகிறானே!இந்த இளைஞனின் மடத்தனமான துணிச்சலைக் கண்டு வியந்தான் அஸ்வத்தாமா! “நீ…நீ… ஓஹோ, யுத்தசாலையில் காணப்பட்ட துறவி அன்றோ!” எனத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

“இவன் என் மகன், ஷிகண்டின்!” என்றான் துருபதன்.  அஸ்வத்தாமாவின் திமிரான பேச்சினால் அதிருப்தி அடைந்த துருபதன் அவனுடைய தன்னம்பிக்கை ஆட்டம் கண்டதையும் லக்ஷியம் செய்யவில்லை.  ஆனால் ஷகுனியோ நிலைமையைச் சரிவரப் புரிந்து கொண்டு தன்னை உடனடியாகச் சமாளித்துக் கொண்டுவிட்டான்.  உடனேயே பேச ஆரம்பித்தான். “இளவரசே, தாங்கள் தவறாகப் புரிந்து கோண்டுள்ளீர்கள்.  ஆசாரியர் துரோணர் தன் உயிரை விட, உங்களை விட, அவர்களின் சீடர்கள் அனைவரையும் விடத் தன் மகன் அஸ்வத்தாமாவை மிகவும் நேசிக்கிறார்.  அந்த அஸ்வத்தாமா தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் சத்தியம் உடைந்து போக அவர் விரும்ப மாட்டார். “

துருபதனுக்கு இந்தச் சந்திப்பை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் எனத் தோன்றியது.  அஸ்வத்தாமாவைப் பார்த்து, “நீ மிகவும் உயர்ந்த மனிதன் அஸ்வத்தாமா!  இப்படி ஒரு சத்தியம் செய்து கொடுக்க மிக உயர்ந்த மனம் வேண்டும்.  அதோடு இல்லாமல் நீ யுவராஜாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பனும் கூட.   சந்தர்ப்பம் வந்ததெனில் உன்னுடைய சத்தியத்தை நான் நினைவில் கொள்கிறேன்.  உன் வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் கவனம் கொள்கிறேன்.”  என்று சொன்னவண்ணம் தன் ஆசனத்திலிருந்து எழுந்துவிட்டான் துருபதன்.

“என்ன நடந்தாலும், எதுவானாலும் நான் நிச்சயமாக என் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன்.” என்ற வண்ணம் அஸ்வத்தாமாவும் எழுந்தான்.  “நாங்கள் உங்களிடம் விடை பெறுகிறோம், மன்னர் மன்னா! நாளை மாலை இளவரசி திரௌபதி எங்கள் கூடாரத்துக்கு யுவராஜாவின் மணமகளாக வரும்போது வரவேற்புக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை நான் கவனிக்க வேண்டும். “ என்று பெருமிதமாகச் சொன்னான் ஷகுனி.   துருபதன் அவர்களின் வணக்கத்தை மிக அலக்ஷியமாகப் பெற்றுக்கொண்டு தலை அசைத்து விடை கொடுத்தான்.  அவர்கள் அனைவரும் சென்றதும் துருபதன் தன் மக்கள் பின் தொடரத் தன் படுக்கை அறை நோக்கிச் சென்றான்.  சத்யஜித்திடம் தன் கிரீடத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு அங்கே கூடவே வந்திருந்த ஷிகண்டினையே உற்றுப் பார்த்த வண்ணம் படுக்கையில் அமர்ந்தான்.  பின்னர் அவனிடம்,”ஷிகண்டின், எதற்காக அப்படி ஒரு கேள்வியைக் கேட்டாய்?  அதன் மூலம் நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் துருபதன்.

“தந்தையே, நான் முரட்டுத்தனமாக/அல்ல மூடத்தனமாக உங்கள் பேச்சு வார்த்தையின் போது குறுக்கிட்டதற்கு என்னை மன்னிக்கவும்.  காப்பாற்ற முடியாததொரு கஷ்டமான சத்தியத்தை அஸ்வத்தாமா கொடுக்கையில் என்னால் சும்மா இருக்க இயலவில்லை.  அஸ்வத்தாமா செய்திருக்கும் சத்தியத்தை அவனால் காப்பாற்ற முடியாது. “Sunday, June 8, 2014

சிரிப்பும், கொதிப்பும், திகைப்பும்!

அவ்வளவில் திரௌபதி அந்தப்புரம் சென்றாள்.  ஷகுனியும் அஸ்வத்தாமாவும்  துருபதனைச் சந்திக்க வரும்போது துருபதன் தன் அரச தர்பார் அறையில் அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தான்.  வெண்கல விளக்குகளில் நூற்றுக்கணக்கான திரிகள் ஏற்றப்பட்டு அந்த அறை பிரகாசமாக ஜொலித்தது.   தன் அரியணையில் துருபதன் வீற்றிருக்க அவனருகே சற்றுத் தள்ளி மரியாதையுடன் த்ருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களுக்குப் பின்னே நிற்க முடியாமல் அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்த வண்ணம் மிகவும் பலஹீனமான ஷிகண்டின் நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்தில் தன் குடும்பம் மீண்டும் தன்னை ஏற்றுக் கொண்டது குறித்த மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தாலும் அவன் உடல்நிலை அதைக் கொண்டாட விடவில்லை. அவனருகே அவனுக்கு ஆதரவு கொடுப்பது போல் திரௌபதி நின்றிருந்தாள்.                  

வந்தவர்களோடு குசலப் பிரச்னங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஷகுனி துருபதனைக் குனிந்து வணங்கினான்.  இதில் பெருமிதம் கொண்டவன் போல் நிமிர்ந்து எழுந்தவன் தன் பருத்த உடலை மிகவும் கஷ்டத்துடன் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் கிடத்தினான்.  அஸ்வத்தாமா கம்பீரமாக நடந்து வந்தவன், தன்னுடைய நிலைமையை மறக்காமல் தன் நீண்ட கைகளை உயர்த்தி துருபதனை ஆசீர்வதிக்கும் தோரணையில் ,”தீர்காயுஷ்மான் பவ; ஜய விஜயீ பவ!” போன்ற இன்சொற்களை மொழிந்தான். அவன் ஆசனத்தில் அமரும்போதே அங்கே நின்றிருந்த திரௌபதியைப் பார்த்துத் தன்னை மறந்தான்.   அவளின் எழிலான முகத்தையும், கண்களையும், அவள் மிக நளினமாக நின்றிருந்த மாதிரியையும் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைந்தான்.  அவன் கண்களை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை .  இந்தச் சம்பிரதாயங்கள் அனைத்தும் நடந்து முடிந்ததும் ஒரு சங்கடமான மௌனம் அங்கே நிலவியது.  பின்னர் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் விருந்தாளிகளைத் தானே கவனிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் துருபதன் அவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.  மிகவும் களைத்திருந்தாலும், மனதிற்குள் ஆயிரமாயிரம் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினான் துருபதன்.

“இந்த நேரத்தில் எங்களைக் காண வந்திருக்கும் உங்கள் இருவருக்கும் நாங்கள் எவ்விதம் தொண்டு செய்து மகிழ்விப்போம்?” என்று துருபதன் கேட்டான்.  ஷகுனி கொஞ்சம் நடிப்புடன் தன் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.  சிரித்துக் கொண்டான்.  துருபதனை உற்சாகப்படுத்தும் குரலில் பேச ஆரம்பித்தான்.  “மன்னர் மன்னா!  நாங்கள் வீரம் செறிந்த குரு வம்சத்து இளவலின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறோம்.  நாங்கள் வரப்போவதைக் குறித்து கிருஷ்ண வாசுதேவன் கூறி இருக்க வேண்டுமே!”

“ஆம், காந்தார இளவரசே! கூறினான்.  திரௌபதியிடம் நீங்கள் இருவரும் மிகவும் அவசரமாகச் சந்திக்க விரும்புவதாய்க் கூறினான்.”

தன் தேனொழுகும் குரலில் ஷகுனி கூறினான்:”ஆம் மன்னர் மன்னா!  மாட்சிமை பொருந்திய மன்னருக்குத் தன் நமஸ்காரங்களை யுவராஜா அனுப்பி உள்ளான்.  பெண்களுக்குள்ளே ரத்தினம் ஆன இந்த உன் அழகிய பெண்ணின் கரத்தைப் பிடிப்பதன் மூலம் உன்னுடன் ஆன நட்பையும், உன் உதவியையும் பெற்று பலம் பொருந்தியவனாகத் தான் திகழ்வோம் என யுவராஜா நம்புகிறான்.”


“எங்கள் சகோதரி அப்படி எல்லாம் இலவச சேவைகளைப் பிறருக்குப் பெற்றுக் கொடுக்கப்  பிறந்தவள் அல்ல!” என்று த்ருஷ்டத்யும்னன் உடனடியாக பதிலைக் கொடுத்தான்.  தந்தையைக் கூடிய வரை சிரமப்படுத்தாமல் தானே தன் கைகளில் இந்தப்பிரச்னையை எடுத்துக் கொண்டு தீர்க்க வேண்டும் என நினைத்தவன் போல் காணப்பட்டான்.  மேலும் தொடர்ந்து கூறினான்: “சுயம்வரத்திற்காக ஒரு வில் வித்தைப் போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதை நாங்கள் ஏற்கெனவே அறிவித்து விட்டோம்.  நீங்கள் எவரும் அதை இன்னமுமா அறியவில்லை?”

“இல்லை, நாங்கள் அது குறித்து எதுவும் அறியவில்லை!” எரிச்சல் மீதூறக் கூறினான் அஸ்வத்தாமா.  அவனுக்குள் ஏற்பட்ட எரிச்சலும் கோபமும் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

“எங்கள் சகோதரி வில் வித்தையில் சிறந்த வீரனையே மணக்கத் திட்டமிட்டுள்ளாள்.  அதுவும் இப்போது என் தந்தையால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்தப் போட்டியில் வெல்லும் வில் வித்தை வீரன் எவராக இருந்தாலும் அவர் கரங்களையே அவள் பிடிப்பாள்.”

வந்திருந்த விருந்தாளிகளான ஷகுனிக்கும், அஸ்வத்தாமாவுக்கும் தூக்கிவாரிப்போட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  இருவரில் ஷகுனி சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  தனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை மறந்தவனாக, “ அது தான் உங்கள் விருப்பம் எனில் எங்களுக்கு மிகவும் வசதியும், சுலபமாகவும் இருக்கும். மன்னர் மன்னா! இந்த ஆர்ய வர்த்தத்திலேயே நம் யுவராஜாவை விடச் சிறந்த வில் வித்தை வீரன் இல்லை. அஸ்வத்தாமா நான் சொல்வதைக் கேட்டுக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளட்டும்.  ஆனால் ஒரு விண்ணப்பம் மன்னர் மன்னா!  இளவரசி திரௌபதி இந்தப் போட்டிகள் ஏதும் இல்லாமலேயே நம் யுவராஜாவை மணாளனாகத் தேர்ந்தெடுத்தால் நல்லது.”

ரொம்பச் சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தான் துருபதன்.  ஷகுனியின் அளவு கடந்த பணிவு, அடக்கம் எல்லாம் நடிப்பு என்பது நன்கு புரிந்துவிட்டது அவனுக்கு.  அவனுடைய கோபத்தையும் வெறுப்பையும் அடக்கிக்கொண்டு, “போட்டி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது!” என்று மட்டும் சுருக்கமாய்க் கூறினான்.  பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியை ஆரம்பிப்பவன் போல் த்ருஷ்டத்யும்னன், “யுவராஜா வில்வித்தை வீரர் என்பதை நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம்.” என்றான்.

“ஆமாம், ஆமாம், வீரம் செறிந்தவன் எங்கள் யுவராஜா.  அவன் வில் வித்தை வீரன் என்பதில் ஐயமில்லை.  அவன் வில் வித்தை நாடெங்கும் பேசப்படும் ஒன்று.  எவரோடும் ஒத்துப் பேச முடியா அளவுக்குச் சிறந்த வில்லாளி.  அவன் இந்தப் போட்டியில் நிச்சயம் வெல்வான்.” நம்பிக்கையுடன் கூறினான் ஷகுனி.

“அப்படி எனில், யுவராஜாவின் தூதுச் செய்திக்கு இங்கே தேவையே இல்லை.   ஆனால் நான் வேறு மாதிரி அல்லவோ கேள்விப் பட்டேன்.  கர்ணன், அங்க தேசத்து மன்னன், அவன் தான் மிகச் சிறந்த வில்லாளி என்றல்லவோ கூறுகிறார்கள்?  அப்படித் தானே?”  அவன் குரலில் இருந்து வெளிப்படையாக எதுவும் தெரியாவிட்டாலும் உள்ளூரச் சிரிக்கிறான் என்பது புரிந்தது. இகழ்ச்சியாகச் சிரித்தான் ஷகுனி. “ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றைச் சொல்வார்கள் இளவரசே!  மக்களுக்கு என்ன?  அவர்களுக்குப் பிடித்தவர்களைப் புகழ்வார்கள்!  ஆனால் நம் யுவராஜாவின் தகுதியும், பெருமையும் நமக்குத் தெரியுமே! “

“ம்ம்ம்ம்ம், கர்ணனை விடவும் சிறந்த வில்லாளி அர்ஜுனன்!  இல்லையா?  வாரணாவதத்தில் கொல்லப்படவில்லை எனில் அவன் தான் ஆர்யவர்த்தம் என்ன இந்த பாரதம் முழுமையிலும் சிறந்த வில்லாளியாக இருந்திருப்பான். அல்லவா? “ துருபதனால் இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அவன் மனதில் நடந்தவை குறித்த எந்த சந்தேகமும் இன்றி இயல்பாகவே கேட்டான்.  அப்பாவியாகவே கேட்டான்.  ஆனால் இதைக் கேட்டதில் விருந்தாளிகள் இருவரும் அயர்ந்து விட்டனர். துருபதனின் கேள்விக்கணை இருவரையும் குறி பார்த்துத் தாக்கிவிட்டது.  அதிலிருந்து தப்ப முடியாமல் இருவரும் திகைத்தனர்.


Thursday, June 5, 2014

மனம் மாறிய துருபதன்!

“தந்தையே, அவனும் தன்னைக்குறித்து இப்படித் தான் கூறிக் கொள்கிறான்.  தான் ஒரு புதிர் எனத் தானே சொல்லிக் கொள்கிறான்.” திரௌபதியின் இந்தப் பதிலைக் கேட்ட துருபதனுக்குச் சட்டென அவன் அதுவரை இருந்த மனநிலை மாறிக் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது.  முகத்தில் புன்னகையுடன் திரௌபதியைப் பார்த்துச் சிரித்தவன், “ சரி, மகளே, இந்த இரவில் என்னால் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க இயலவில்லை.  நான் அதை விரும்பவும் இல்லை;  நீ உன் இஷ்டப்படியே செய்!  ஆனால் ஒன்று எதற்கும் த்ருஷ்டத்யும்னனைக் கலந்து ஆலோசித்துக் கொள்!  நீ சரியான வழியில் தான் செல்வாய் என்றும், சரியானதைத் தான் செய்வாய் என்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”


தந்தையைக் குறும்புடன் பார்த்த திரௌபதி, “தந்தையே, நான் ஷிகண்டினைத் திரும்பவும் அரண்மனைக்கு அழைத்து வருவதைக் கூட வரவேற்பீர்களா?” என்று கேட்டாள்.  “ஏன் அப்படிக் கேட்கிறாய் மகளே?” என துருபதன் கேட்க, திரௌபதி, “தந்தையே, அவன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவிருந்ததை கோவிந்தன் தான் தடுத்து அவனைக் காப்பாற்றி இருக்கிறான்.   அவனை ஓர் முழுமையான ஆண்மகனாக மாற உதவி செய்திருக்கிறான்.  இதன் மூலம் நம் குடும்பத்திற்கு நேரவிருந்த அபகீர்த்தியிலிருந்து நம்மைக் காத்துள்ளான்.  ஷிகண்டின் இப்போது மீண்டும் புதிதாய்ப் பிறந்துள்ளான் தந்தையே!  மறுபிறவி எடுத்து வந்திருக்கும் அவனை நாம் நிராகரித்துவிட்டோமே!” என்றாள் திரௌபதி.


“அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.” என்றான் துருபதன் மீண்டும் சினம் பொங்க!.  “தந்தையே, சாந்தி, சாந்தி!  கொஞ்சம் யோசியுங்கள் தந்தையே, ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.  உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கவும், சந்தோஷப்படுத்தவும் அவன் எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான் என்பதை யோசியுங்கள், தந்தையே! அவன் நாம் இதை வரவேற்போம் என்றே நம்பி இருப்பான்.  அவன் நம்பிக்கையை நாம் நாசம் செய்துவிட்டு அவனை மீண்டும் அந்தப் பழைய நரக நிலைக்கே திருப்பி அனுப்ப நினைக்கிறோம்; அல்ல, அனுப்பிவிட்டோம். “


“எல்லாம் சரிதான் மகளே, இப்போது பார்த்து அவன் திரும்பி வந்திருப்பதன் காரணம் என்ன?”


“எனக்குத் தெரிந்திருந்தால் நான் சொல்வேன் தந்தையே!  நானும் அறியத் தான் முயல்கிறேன்.  ஒருவேளை சுயம்வரம் நடக்கும் இந்தச் சமயத்துக் கொண்டாட்டங்களில் குடும்பத்தோடு தானும் பங்கு பெற வேண்டும் என அவன் நினைத்திருக்கலாம்.  என்னை விட்டுப் பிரிந்து செல்கையில் காணப்பட்ட அவனுடைய நம்பிக்கை இழந்த வருத்தமான அந்தப் பரிதாபகரமான தோற்றமும், அவன் முகத்தில் அப்பிக் கிடந்த கவலையையும் என்னால் மறக்கவே முடியாது.  அவன் இங்கிருந்து திரும்பி வாசுதேவன் இருக்குமிடம் போனதும் அவனிடம் ஒரு குழந்தையைப் போல் அழுது தீர்த்திருக்கிறான்.  வாசுதேவன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.”  என்றாள் திரௌபதி.


தன்னுள்ளேயே நடக்கும்  மனப்போராட்டத்தை அடக்கமுடியாத துருபதன் அங்கிருந்த விளக்கையே இலக்கின்றிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.  அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.  திரௌபதி மீண்டும் பேசினாள்: “தந்தையே, அவனை இறக்கவிட்டிருக்கலாம் துரோணர் இல்லையா?  அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கக் கூடாது.   தன் ஜன்ம வைரியின் மகன்;  எப்படி வேண்டுமானாலும் இறந்து போகட்டும் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?  ஆனால் துரோணர் இவ்விஷயத்தில் எதிரியின் மகன் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவனை முழுக்க முழுக்கத் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டு அவனைக் கண்ணும், கருத்துமாய்க் கவனித்து சிகிச்சை அளித்து அவனை ஒரு முழுமையான ஆண்மகனாக ஆக்கியதோடு அல்லாமல் சிறந்த வீரனாகவும் ஆக்கி இருக்கிறார்.   அவனுக்குப் புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்.  ஒருவேளை இந்த சுயம்வரத்தில் அவனும் கலந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும் என எண்ணி இருக்கலாம்.  தயவு செய்யுங்கள் தந்தையே,  அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.  இல்லை எனில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது.  அவன் திரும்பி வரும் வரையிலும் என் மனம் தவித்துக் கொண்டிருக்கும்.”


துருபதனுக்குள்ளாக ஒரு சந்தேகம் எழுந்தது;  அவன் அருமை மகள் கிருஷ்ணா மாறிவிட்டாள்.  அவன் மிகவும் வெறுத்த ஷிகண்டின், அவன் மகன் மாறிவிட்டான்.  அவ்வளவு ஏன்?  அவன் ஜன்ம வைரியான துரோணர் கூட அனைத்தையும் மறந்து ஷிகண்டினுக்கு உதவி செய்திருக்கிறார்.  இப்போது பழைய வன்மத்துடன் இருப்பது அவன் மட்டுமே தானோ?  அவன் தான் இன்னமும் துவேஷத்தையும் வெறுப்பையும் காட்டி வருகிறானோ?  துருபதனுக்குள்ளே நடந்து கொண்டிருந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.  பலஹீனமான ஒரு குழந்தையைப் போல் உணர்ந்தான்.  மகளிடம், “கிருஷ்ணா, உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்!” என்று உத்தரவு கொடுத்தான்.   மீண்டும் மீண்டும் அதையே சொன்னவன் மேல் நோக்கிப் பார்த்த வண்ணம் சற்று அமர்ந்திருந்தான்.  பின்னர் சட்டெனத் திரும்பியவன் எழுந்தபடியே திரௌபதியிடம், “ ஷகுனியும் அஷ்வத்தாமாவும் எப்போது வருகிறார்கள் என்பதை எனக்குத் தெரிவிப்பாய்.  நான் அவர்களைக் கட்டாயம் சந்திக்கிறேன்.  யக்ஞசேனன் துருபதனுக்குத் தன் பரம வைரியின் மகனைச் சந்திக்கத் துணிவில்லை என்னும் பெயரை நான் எடுக்க விரும்பவில்லை. “


ஷிகண்டின் குறித்தத் தந்தையின் சிந்தனை மாறியதில் மகிழ்வடைந்த திரௌபதி அங்கிருந்து வெளியே வந்தாள்.  சுயம்வர மண்டபத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த த்ருஷ்டத்யும்னனை வழியிலேயே சந்தித்தாள்.  தந்தையைச் சந்தித்தபோது நடந்தவற்றை அவனிடம் விவரித்தாள்.   தன் சகோதரனிடம், “சகோதரா, தந்தை ஷிகண்டினைத் திரும்பக் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளச் சம்மதம் கொடுத்துவிட்டார்.  இன்றிரவே அவன் திரும்ப வரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.  சுயம்வர மண்டபத்துக்குள் நுழைகையில் என் மனதில் அதிருப்தியோடு நுழைய நான் விரும்பவில்லை.  சத்யஜித்திடம் சொல்லி அவனைத் திரும்பக் கொண்டு விடுமாறு சொல்கிறேன்.”  என்றாள்.


அவளை ஏற இறங்கப் பார்த்த  த்ருஷ்டத்யும்னன் ஆச்சரியம் அடைந்தான்.  “ கிருஷ்ணா, இது என்ன மாற்றம் உன்னிடம்?  தந்தையும் எப்படி இவ்வாறு மாறினார்?  என்ன காரணம் இந்த மாற்றத்திற்கு?” என ஆச்சரியத்துடன் கேட்டான்.


“எனக்குத் தெரியவில்லை, மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது!  ஆனால் மாறிவிட்டது புரிகிறது.  சகோதரா, அந்தப் பழைய பகையை அதன் விளைவுகளை,   நாம் இன்னமும் அனுமதிக்கத் தான் வேண்டுமா?  அந்தப் பழைய அவமானம் நம் மனதைப் பாதித்துக் கொண்டிருப்பதை இன்னமும் நாம் நீட்டிக்க வேண்டுமா?”  முறையிடும் தொனியில் அவனிடம் கேட்டாள் திரௌபதி.   “ஏன் கேட்கிறாய்?” என்று த்ருஷ்டத்யும்னன் கேட்க, “தந்தையும் இப்போது அதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.  அதாவது நான் அவரை விட்டுப் பிரியும்போது!” என்றாள் திரௌபதி.  த்ருஷ்டத்யும்னனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.


“ஆஹா, வாசுதேவக் கிருஷ்ணன் ஏதோ மாயம் செய்துவிட்டான்.  உன்னைச் சந்தித்தபோது ஏதோ அற்புதம் நிகழ்த்தி உன் மனதை மாற்றிவிட்டான். “ என்றான்.  திரௌபதி சந்தோஷமாகச் சிரித்தாள்.”வாசுதேவனால் முடியுமென்றால் நம்மாலும் முடியாதா?  நாமும் அதிசயங்களை நிகழ்த்தலாம். மன்னர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக்கொள்ளும் வெறுப்பை எல்லாம் அவன் நட்பாக மாற்றுவது தர்மம் என நினைக்கிறான்.  அப்படி அவனால் மாற்ற முடியுமெனில் நம்மாலும் முடியாதா?”

Wednesday, June 4, 2014

கோவிந்தன் என்னும் புதிர்!

“திரௌபதி, எப்படி அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாய்?  நீ முழுவதும் மாறி விட்டாய் எனத் தெரிகிறது.”

“கவலை வேண்டாம் தந்தையே!   கண்ணன் எனக்குச் சரியான வழியைக் காட்டி இருக்கிறான்.  தர்மத்தின் பாதையை.  அதுவும் நான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தின் பாதையைக் காட்டி உள்ளான்.  இப்போது, இந்த நிமிடத்திலிருந்து நான் செய்ய வேண்டியது எல்லாம், எவ்விதக் கவலையும் இன்றி என் இஷ்டத்துக்குப் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் சுயம்வரத்தில் பங்கெடுக்க வேண்டியது ஒன்றே.   தந்தையே, நான் அதைத் தான் செய்யப் போகிறேன்.”  திரௌபதியின் வாக்கு வன்மை துருபதனைத் திகைப்பில் ஆழ்த்தியது.

“முடியவில்லை, என்னால் உன்னுடைய மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை, கிருஷ்ணா!” என்றான் துருபதன்.

“எனக்கும் தான் தந்தையே!’ என்றால் திரௌபதி பணிவாக.

“சரி, சரி, போகட்டும்.  வாசுதேவக் கிருஷ்ணனிடம் உனக்கு நம்பிக்கை இருந்தால் சரி.  நான் அதை அத்தோடு விட்டு விடுகிறேன்.   எனக்குச் சொல்ல வேறொன்றும் இல்லை.  ஆனால் துரோணரின் கர்வத்தை எவ்வாறுச் சுக்கு நூறாக்கப் போகிறான், இந்த வாசுதேவன்?  அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறான்?”

“தந்தையே, அதைக் குறித்தும் மற்ற விஷயங்களைக் குறித்தும் எந்தக் கேள்வியும் கேட்கவேண்டாமென அவன் என்னிடம் கெஞ்சினான்.  நானும் விட்டுவிட்டேன்.”

“ஓஹோ, அப்போது அவன் சொன்னதிலேயே நீ திருப்தி அடைந்து விட்டாயா?”

“ஆம், தந்தையே, எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டேன்.  தந்தையே, அவன் அனைவர் மனங்களிலும் மாபெரும் உயர்ந்த இடத்தைப் பெறுவான் என்பதோடு அனைவரின் ஆசைகள், அபிலாஷைகளையும் பூர்த்தியும் செய்வான்.  அதற்கெனவே அவன் பிறந்திருக்கிறான்.  இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.   தந்தையே, அதுமட்டுமல்ல,  அவன் என்னுள் புகுந்து விட்டான்.  அதில் தான் நான் மிகவும் மாறி விட்டேன்.  என்னுள் அவனைக்கண்டேன்; அதே சமயம் அவனுள் என்னையும் கண்டேன்.  இவ்வுலகையே கண்டேன், தந்தையே!  நீங்கள், நாம் அனைவரும், இந்தப் பாஞ்சாலம் மட்டுமின்றி பூவுலகு முழுவதையும் அவனில் கண்டேன்.  பூவுலகில் அவனைக் கண்டேன். அது ஓர் அற்புத அனுபவம் தந்தையே!”  இதைச் சொல்கையில் திரௌபதியின் முகமும் மிக மென்மையாக ஆனதோடு அவள் குரலிலும் இனம் புரியாத இனிமை தொனித்தது.

தன் மகளைப் புத்தம்புதியவளாக அப்போது தான் புரிந்து கொண்டவனாகப் பார்த்தான் துருபதன்.  அவனுக்குள் அவள் சொன்னவற்றின் தாத்பரியம் புரிந்தாலும் மனதில் பரிதாபமே எஞ்சியது.  தன்னால் எவ்வித உதவியும் செய்யமுடியவில்லையே என்னும் பரிதாப உணர்வோடு அவன் மேலே பேசினான்; “குழந்தாய், என் மற்ற மூன்று குழந்தைகளை விடவும் நீ எனக்கு மிகவும் அருமையானவள்.  உன்னிடம் நான் பெரிய சுகத்தையே கண்டேன்.  என்னுடைய அவமானங்களை நீ சரியாகப் புரிந்து கொண்டாய்; நான் பழிவாங்கத் துடிப்பதையும் சரியான கோணத்தில் தெரிந்து கொண்டாய்.  துரோணரை நான் ஏன் வெறுக்கிறேன் என்பதை உன்னைவிட வேறெவரும் சரியாகப் புரிந்து கொண்டதில்லை.  ஆனால் இப்போது……. இப்போது, மகளே, நான் செல்லப் போகும் பாதை எதுவென எனக்குப் புரியவில்லை.  என் வழியை என்னால் சரியாகக் காண முடியவில்லை.  நீ மிகப் புத்திசாலியான தைரியமான பெண்.  இந்த சுயம்வரத்தை நான் உன் கைகளில் விட்டு விடுகிறேன்.    ஆனால் பெண்ணே, இது மட்டும் தவறாகப் போய்விட்டால், அந்த அவமானத்தை என்னால் தாங்க இயலாது.  எனக்கு அதைவிட மிகப் பெரிய அவமானம் வேறெதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்.  புரிந்து கொள்வாய் அல்லவா?”

தன் மனத்தில் உள்ள பாசத்தை எல்லாம் கண்கள் வழியாகத் தந்தையைப் பார்த்த பார்வையில் காட்டினாள் திரௌபதி.  பாசத்துடன் தந்தையைப் பார்த்தவள், “ தந்தையே, உங்களை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நான் மட்டும் மகிழ்ச்சியோடு இருப்பேனா?  என்னை அவ்வாறு பார்த்திருக்கிறீர்களா? நான் எப்போதுமே உங்கள் சேவையில், உங்களுக்கு மகிழ்வை மட்டும் உண்டாக்கும் சேவையில் இருந்து கொண்டு உங்களை தீர்க்கமாகக் கவனித்தும் வருகிறேன்.  அதை அறிவீர்கள் அல்லவா?”

“என் கண்மணி, ஆமாம், ஆமாம், நீ அப்படித் தான் இருந்து வருகிறாய்,  சந்தேகமில்லை!” என்றவாறே தன் மகளின் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான் துருபதன்.

“எனில் தந்தையே, கோவிந்தனை நான் நம்புகிறேன்.  நீங்களும் என்னோடு சேர்ந்து கொண்டு அவனை நம்புங்கள். “

“ஓஹோ, அந்த மஹாதேவன் எனக்கு வேறு வேலை என்ன வைத்திருக்கப்போகிறான்!  இங்கே இந்த மந்திரவாதி தன் மந்திர, தந்திர வேலைகளை ஆரம்பித்துவிட்டான். “கஷ்டப்பட்டுப் புன்னகையை வரவழைத்துக் கொண்ட துருபதன் மேலும், “ அவன் மந்திர, தந்திரங்களுக்கு நாம் அடிமை.  அவற்றிற்கு நாம் பலியாட்களும் கூட.  ம்ம்ம்ம்ம்ம்ம் இனி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க நீ விரும்பினாயானால், உன்னோடு சேர்ந்து அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியும் எனக்கு இல்லை.”

“தந்தையே, வாசுதேவன் உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்திருக்கிறான்.” என்றாள் திரௌபதி.  மெல்ல மெல்லத் தன் தகப்பன்  சகஜ நிலைக்குத் திரும்ப முயற்சிப்பதையும் உணர்ந்தாள்.  “என்ன?  என்ன விண்ணப்பம்?” துருபதனுக்குள் ஆவல் அதிகரித்தது.  விபரீதமாக எதுவும் இருக்கக் கூடாதே என்னும் எண்ணமும் வந்தது. சந்தேகம் அதிகரித்தது.  “உன் மூலமாக என்னிடமிருந்து எதைப் பிடுங்க எத்தனிக்கிறான்?”

“அதெல்லாம் எதுவும் இல்லை தந்தையே!  துரியோதனனின் தாய் மாமன் ஷகுனியையும், அவன் நண்பனும், துரோணரின் ஒரே மகனும் ஆன அஸ்வத்தாமாவையும் நாம் இருவரும் சந்திக்க வேண்டுமாம்.”

“என்ன துரோணைன் மகனை நான் சந்திக்க வேண்டுமா?  என்ன தைரியம்?” துருபதனுக்கு மீண்டும் ஆத்திரம் அதிகரித்தது.  “என்ன அவனிடம் நான் ஏதேனும் வாக்குறுதி கொடுக்க வேண்டுமோ?” ஆத்திரத்துடன் கேட்டான் துருபதன்.

“”இல்லை தந்தையே, அதற்கு பதிலாக அவன் நமக்கு வாக்குறுதி கொடுப்பான்.  நாம் அதை ஏற்க வேண்டும்.  ஒரு வேளை விதி வசத்தால் நான் குரு வம்சத்து இளவலைக் கல்யாணம் செய்து கொள்ள நேரிட்டால், அப்போது அஸ்வத்தாமா, தன் உயிரைக் கொடுத்தாவது தன் தகப்பனார் துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் தடுப்பான்.”

“என்ன இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது?  முட்டாள் தனம்!  இதை விட மோசமான வாக்குறுதியை நான் கேட்டதுமில்லை; கண்டதுமில்லை.  ஒரு சமயம் உனக்கு வாக்குறுதி கொடுக்கிறான்.  அதுவும் எப்படி?  துரியோதனனை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேரிடாது என வாக்குக் கொடுக்கிறான்.  அது முடிவதற்குள்ளாக உன்னை குருவம்சத்து இளவரசன் மணமுடித்தால் எனச்  சொல்கிறான்.  இப்படிஒரு முட்டாள் தனத்தை நான் எங்கும் கண்டதில்லை.  இதை விட அபத்தமான வாக்குறுதியை எவரும் கொடுத்தது இல்லை!”

“எனக்கும் இதில் ஏதும் பொருள் இருப்பதாகப் படவில்லை தந்தையே!  எனக்கும் இது நகைப்புக்கு இடமாகத் தான் தெரிந்தது.  அஸ்வத்தாமா இப்படி ஒரு வாக்குறுதியை அளிக்க வேண்டும் என கோவிந்தன் நினைக்கிறான்.  அவன் ஏன் அப்படி நினைக்கிறான் என்பது எனக்குப் புரியத்தான் இல்லை.  ஆனால் தந்தையே, அவன் சொன்னபடியே நாம் செய்துவிடுவோம்.  இவற்றிற்குப் பின்னர் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறது.  நம்மால் ஆழமாக யோசித்து அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.” திரௌபதி சொல்ல துருபதன் கூறினான்: “கோவிந்தா!  திரௌபதி உன் கோவிந்தன் ஒரு புதிர்!  எவராலும் புரிந்து கொள்ள முடியாப் புதிர்!” என்று கூறினான்.  கிருஷ்ணனை திரௌபதி கோவிந்தன் என அழைத்ததைத் தான் கண்டு கொண்டதன் விதமாக அந்தப் பெயரைக் கூறுகையில் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னான் துருபதன்.Monday, June 2, 2014

கண்ணன் ஒரு சூதாடி!

அவ்வளவில் கிருஷ்ணன் அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.  திரௌபதிக்குக் கனவில் மிதப்பது போல் இருந்தது.  விசித்திரமானதொரு ஜோதி கண்ணனைச் சூழ்ந்ததையும், அவன் முகமே அதில் மிகப் பிரகாசமாகவும் அருள் நிறைந்ததாகவும் தெரிந்ததைக் குறித்தே அவள் சிந்தனை செய்தாள். அப்போது அவன் முகத்திலும் கண்களிலும் நிறைந்திருந்த எல்லையற்ற கருணையை இது வரை அவள் எங்கும் கண்டதில்லை.  அவள் காதுகளில் அவனுடைய அந்தக் குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவளை சமாதானம் செய்யும் குரலில், “கிருஷ்ணா, என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டதும், அதற்கு அவள், “நான் உன்னை நம்புகிறேன் கோவிந்தா!  நீ என்ன சொல்கிறாயோ அதன்படி நடக்கிறேன்.” என்று பதில் கூறியதும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.   இதுவரை அவளிடம் இருந்த அவநம்பிக்கையும் மகிழ்ச்சிக்குறைவும் போன இடம் தெரியவில்லை.  நாளை சுயம்வரத்தில் என்ன நடந்தாலும் அவளுக்கு அது குறித்து எந்தக் கவலையும் இல்லை.  அது குறித்து அவள் சிந்திக்கவே இல்லை.  அது அவள் வேலையும் இல்லை.  எவ்வித அக்கறையும் அவளுக்கு இல்லை. என்ன நடந்தாலும் அவள் அதை ஏற்றுக்கொண்டே தீருவாள்.  அதன் மூலம் அவள் தந்தையின் கௌரவத்தைக் காக்கும் பொருட்டு மட்டுமல்ல; அவர் சுமந்து கொண்டிருக்கும் பாரமும் லேசாகும்.


திரௌபதி தன் தந்தையைச் சந்திக்கச் சென்றாள்.  தாங்க முடியாத தலைவலியோடு தன் மஞ்சத்தில் படுத்துக் கிடந்தான் துருபதன்.  சுயமரியாதையும், அதனால் விளைந்த கௌரவமும், கர்வமும் நிறைந்த மன்னனான துருபதன் மனம் முழுவதும் கசப்பால் நிரம்பி வழிந்தது.  கண்களை மூடிப் படுத்திருந்த தந்தையை எழுப்பினாள் திரௌபதி.  அவனிடம் கிருஷ்ணனுக்கும் தனக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையைக் குறித்துக் கூறினாள். துருபதனுக்கு அதைக் கேட்க அவ்வளவு ஆர்வம் இல்லை.  என்றாலும் திரௌபதி விடவில்லை. கிருஷ்ணன்  தன் தகப்பனையோ, தன்னையோ ஒரு போதும் கைவிடமாட்டான் என உறுதிபடத் தெரிவித்தாள்.  சுயம்வரம் மாபெரும் வெற்றியில் முடியப் போகிறது என்றும் கூறினாள்.  ஜராசந்தனுக்கு திரௌபதியைத் தொடக் கூட தைரியம் இருக்காது.  அவன் அவளைக் கடத்திச் செல்ல மாட்டான் என்றும் தெரிவித்தாள்.  துரியோதனனாலும் அவளைத் தேர்ந்தெடுக்க இயலாது எனவும் துரோணரின் கர்வமும் அடங்கப்போகிறது என்றும் கூறினாள்.

“ஹூம், உறுதி மொழிகள், மீண்டும் மீண்டும் உறுதிமொழிகள்!  இந்த வாசுதேவனை நம்பாதே திரௌபதி.  அவன் எதுவேண்டுமானாலும் சொல்வான். “  களைப்படைந்து போயிருந்த துருபதன் தன் சலிப்பைக் காட்டினான்.  “நான் கதிகலங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறேன்.  அவன் எப்படி எல்லாவற்றையும் செய்து முடிக்கப் போகிறான்?”

“நமக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் வேண்டாம், தந்தையே!  என் மனதில் எவ்விதமான வியாகூலமும் இல்லை.  நான் தெளிவாக இருக்கிறேன்.  அனைத்தையும் கிருஷ்ணனின் தோள்களில் ஏற்றி விட்டேன்.  பாரத்தை அவன் சுமக்கிறான்.”

“குழந்தாய், அவன் உன்னை மயக்கிவிட்டான்.  ஏதேதோ தந்திரங்களைச் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறான்.” துருபதனுக்கு வாசுதேவன் மேல் நம்பிக்கை பிறக்கவில்லை.  கிருஷ்ணன் நிஜமாகவே இவை அனைத்தையும் சொல்கிறான் என்றோ அவற்றைச் செய்து முடிப்பான் என்றோ அவன் மனதில் நிச்சயமாகத் தோன்றவே இல்லை.  

“இல்லை , தந்தையே! எவ்வளவு தூரம் தான் அப்படி நடக்க முடியும்?  அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கிறான்.  அதற்குத் தன்னை அர்ப்பணம் செய்திருக்கிறான்.  நம்மை அவமானப்படுத்துவதிலோ, துரோணரோடு சேர்ந்து சதி செய்து நம்மை வீழ்த்துவதிலோ அவனுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?  எதுவும் இல்லை.”

“என்னால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை, திரௌபதி!   அவன் பேச்சைக் கேட்கும் நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம்.   ஏன் இப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை. “ துருபதனின் சுய பச்சாத்தாபமும், சுயவெறுப்பும் பூரணமாகப்புலப்பட்டது.

“தந்தையே, வாசுதேவன் சொன்னது போல தர்மம் நம்மை எப்படி வழி நடத்துகிறதோ அதன்படி நாம் நடப்போம்.  நாம் சுயம்வரத்தை எதிர்கொள்வோம். “ என்றாள் திரௌபதி.  திடீரெனத் தான் மிக வலுவிழந்தாற்போலவும், திரௌபதி முன்னை விட மன உறுதியும் பலமும் பெற்றிருப்பது போலவும் உணர்ந்தான் துருபதன்.  அப்போது தான் தன்னை திரௌபதி சமாதானம் செய்து கொண்டிருப்பதும் அவனுக்கு உறைத்தது.  “நாம் என்ன செய்ய முடியும்?  செய்ய எதுவும் இல்லை! நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!” என்று சொன்னவண்ணம் தன்னுடைய தலையைத் தன் இருகைகளாலும் பிடித்த வண்ணம் சூன்யத்தை வெறித்தான் துருபதன்.  அப்போது தான் அவனுக்கு திடீரென திரௌபதியிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் புரிந்தது.  சட்டெனத் திரும்பி அவளையே உற்றுப் பார்த்தான்.  அவளையே கவனித்துப் பார்த்த வண்ணம், “கிருஷ்ணா, திடீரென நீ ஏன் இப்படி மாறி விட்டாய்?  உன்னை யாரோ நன்றாக மயக்கி இருக்கின்றனர்!   அல்லது….. அல்லது தவறிப் போய் மதுவை அருந்திவிட்டாயா?  ம்ம்ம்ம்… அது கிருஷ்ண வாசுதேவனாகத் தான் இருக்கும். அவன் கூறியவற்றை உன் மூளையில் செலுத்திக் கொண்டு விட்டாயா என்ன? அவற்றை அப்படியே நம்புகிறாயா?”

“தந்தையே, நான் மதுவெல்லாம் அருந்தவில்லை.  என்னை யாரும் மயக்கவும் இல்லை.  நான் மயங்கிவிடவும் இல்லை.  ஆனால் அவற்றை எல்லாம் விட கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் நான் இருக்கிறேன்.”
“என்ன சந்தோஷம் உனக்கு மகளே! எனக்கு எதுவும் புரியவில்லையே!”

“தந்தையே!  நான் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டேன்.  பரிபூரண சரணாகதி அடைந்து விட்டேன்.”  தந்தையின் நெற்றியை ஆதுரமாகப் பிடித்து விட்டுக் கொண்டே கூறினாள் திரௌபதி.

“என்ன? பைத்தியமா உனக்கு?? அவன் அப்படி என்னதான் உன்னிடம் சொன்னான்?  அதை என்னிடம் அப்படியே சொல்லு!  ஏற்கெனவே தாங்க முடியாத் தலைவலியில் இருக்கும் எனக்கு இப்போது தலை சுற்றலும் சேர்ந்துவிட்டது. அப்படி என்ன வாக்குறுதியை உனக்கு அவன் அளித்திருக்கிறான் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  அதில் என்ன சிறப்பான செய்தி புதைந்து கிடக்கிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்.”

“வாசுதேவன் நிறையப் பேசினான் தந்தையே!  முக்கியமாக அவன் நம் பக்கமே நின்று நம்மைக் கைவிடமாட்டேன் என்னும் உறுதியை அளித்துள்ளான்.  அதோடு இல்லாமல் ஜராசந்தனால் என்னைக் கடத்தித் தூக்கிச் செல்ல முடியாது என்றும் உறுதி அளித்துள்ளான்.  துரியோதனனை நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நிர்ப்பந்தம் ஏற்படாது என்றும் கூறி இருக்கிறான்.  துரோணரின் கர்வம் தூள் தூளாக நொறுங்கி விடும் என்றும் கூறி உள்ளான். “

“அனைத்துமே  ஒரு தேர்ந்த சூதாடியின் வாக்குறுதிகள்!”  மனம் உடைந்த நிலையில் கூறினான் துருபதன்.  திரௌபதியோ சிரித்தாள்.  “ஆம் , தந்தையே, மிக வலிமை படைத்த சூதாடியும் கூட.  அவன் தன்னுடைய பெயர், புகழ், வீரம், எதிர்காலம், ஏன் அவன் உயிரைக் கூட இந்த சுயம்வரத்திற்காகப் பணயம் வைத்துள்ளான். “

“தனக்காக அவன் எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பணயம் வைத்துச் சூதாடட்டும்.  ஆனால், மகளே, உன்னுடைய எதிர்காலத்திலும், என்னுடைய கௌரவத்திலும் அவன் ஏன் பணயம் வைத்துச் சூதாட வேண்டும்?  அவனுக்கு இதில் என்ன லாபம்?”

“தந்தையே, அவன் நம்மோடா சூதாடுகிறான்?  இல்லையே, நமக்காகச் சூதாடி வெல்ல விரும்புகிறான். அவன் பணயம் வைப்பதெல்லாம் நம்மைக் காக்கவேண்டியே!”