Tuesday, June 24, 2014

தர்ம சாம்ராஜ்யம் நிலைக்குமா? கண்ணன் கவலை!

பேரழிவை நெருங்கிக் கொண்டிருந்த ஜராசந்தன், ஸ்ரீருத்ரன் நூறு அரசர்களின் தலைகளைக் கொய்து கொண்டு வரச் சொன்னதாகக் கனவு கண்டு கொண்டிருக்க, இங்கே தங்கள் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கிருஷ்ண வாசுதேவனையும், உத்தவனையும் நாம் சற்றுப் பின் தொடர்வோம்.  ஆங்காங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்தவர்களையும், காவல் நேரம் முடிந்து மாற்றிக் கொள்ளும் காவலர்களின் குரலையும் தவிர்த்து அந்த முகாம் முழுவதும் அமைதியில் இருந்தது.  அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.  இந்த முகாம்களை ஒவ்வொன்றாகக் கடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணனும், உத்தவனும் சிறிது நேரம் வரை எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாகவே சென்றனர். சந்திரன் மெல்ல மெல்ல மேற்கு வானை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். விண்ணில் ஒளிவீசிக் கொண்டிருந்த நிலாக்கதிர்களிடையே கிளம்பிய விருச்சிகராசிக் கூட்ட நக்ஷத்திரங்கள் தனித்துப் பிரகாசித்தன. அவற்றின் ஒளி பூமியில் சின்னச் சின்ன வெள்ளிக்காசுகளைப் போல் விழுந்திருந்ததைக் கண்டு வியந்த வண்ணம் சென்றனர் இருவரும். உத்தவனால் வெகுநேரம் பொறுமையாக இருக்க முடியவில்லை. “கோவிந்தா, ஜராசந்தனைப் பணிய வைத்துவிட்டதாகத் தோன்றுகிறதா உனக்கு?  அதை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.”  என்றான்.

“திரௌபதியைக் கடத்தும் முயற்சியில் துணிவாக ஜராசந்தன் இறங்க மாட்டான் என்றே தோன்றுகிறது உத்தவா!  ஆனால் நமக்கு அது போதாது!  ஜராசந்தனின் முடிவால் நமக்கு எவ்விதப் பலனும் இல்லை;  நம் சகோதரர்கள்  எங்கிருக்கின்றனர்?  காம்பில்யம் நோக்கி வருகின்றனரா என எதுவுமே நாம் அறிய மாட்டோம்.”

“ஆமாம், இதுவரை எந்தத் தகவலும் இல்லை தான்.  ஐந்து சகோதரர்களும் அத்தையார் குந்தி தேவியும் இன்னும் காம்பில்யத்துக்கு வந்ததாகத் தெரியவில்லை.  சிகுரி நாகனுக்கும் இன்னும் எவ்விதச் செய்தியும் வரவில்லை!”  உத்தவன் கூறினான்.

“நாளைக்காலைக்குள் அவர்கள் வந்து சேராவிட்டால்??? நாளை நடக்கப்போகும் சுயம்வரப் போட்டியில் அவர்களால் கலந்து கொள்ளவே இயலாது உத்தவா!  அவர்களால் நாளைக்குள்ளாக வர முடியாதோ என அஞ்சுகிறேன்.  அப்படி மட்டும் நடந்து விட்டால்??? ஆஹா!  நாம் தோற்றுவிடுவோம் உத்தவா!” கண்ணன் குரல் கவலையில் நைந்து மெலிந்து கேட்டது.

“அப்போது என்ன நடக்கும்?” உத்தவன் கேட்டான்.

“எல்லாத் தரப்பிலும் கூர்ந்து கவனித்ததில் யோசித்துப் பார்த்தால் இதுவரை உள்ள போட்டியாளர்களில் துரியோதனனுக்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.   அப்படி ஒன்றும் அவன் பெரிய வில்லாளி இல்லை;  சாத்யகிக்குக் கொஞ்சம் வில் வித்தை தெரியும் தான்.  எனினும் போட்டியில் கலந்து கொண்டு வெல்லும் அளவுக்கு அவன் வில் வித்தை பிரமாதமானதல்ல.   ஆனால் அவன் முழு நம்பிக்கையுடன் இருக்கிறான்.” என்றான் கிருஷ்ணன்.

பின்னர் தொடர்ந்தான் கிருஷ்ணன்.  “ஆனால் திரௌபதி?? ம்ம்ம்ம்ம்? திரௌபதிக்கு துரியோதனனை எந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.  அவன் ஒருவன் மட்டுமே வென்றிருந்தால் கூட அவளுக்கு அதில் இஷ்டமில்லை.  தீர்மானமாக இருக்கிறாள்.  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தன் உயிரைக்கூட மாய்த்துக்கொள்ளத் தயங்க மாட்டாள். துருபதனுக்கோ இக்கட்டான நிலைமை ஏற்படும்; போட்டியில் ஜெயிக்கும் இளவரசனுக்குத் தன் மகளைக் கொடுப்பதெனில் துரியோதனன் வென்றால் கொடுத்தாக வேண்டும்;  இல்லை எனில் அவன் உறுதிமொழியை அவனே உடைத்தவன் ஆவான்.  அவன் சத்தியத்தை மீறியவன் ஆவான்.  அப்படி ஏதும் நேர்ந்தால்!  ஆர்யவர்த்தத்தின் அரசர்களுக்குள்ளே மாபெரும் யுத்தம் ஒன்று நேரிடும்.”

மனதில் கவலையுடனும், குழப்பத்துடனும் பேசின கண்ணன், சற்றே யோசித்த வண்ணம், மேலும் கூறினான்:  “அப்படி துரியோதனன் ஜெயிப்பான் எனத் தோன்றினால், அல்லது அவன் ஜெயித்துவிட்டால், அவனைத் தோற்கடித்துப் போட்டியிலிருந்து அவனை விலக்க என் ஒருவனால் மட்டுமே இயலும்.  நான் அந்தப் போட்டியில் கலந்து கொண்டாக வேண்டும்.  ஆனால்… அப்போது…….”கண்ணன் குரலில் மிகவும் கவலை.  அவன் மேலே பேசத் தயங்கினான்.

கிருஷ்ணனின் தடுமாற்றத்தைக் கண்ட உத்தவன், “ஒருவேளை துரியோதனனால் போட்டியில் வெல்ல முடியாமல் போகலாம்;  அவன் மட்டுமின்றி வேறு எவராலும் வெல்ல முடியாமல் போகலாம்.” என்று நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைப் பேசினான்.

“அப்போது திரௌபதி தன் மனதுக்குப் பிடித்த எவரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க இயலும்.”

“அப்படித்தான் நடக்கும். ஷ்வேதகேது என்னிடம் போட்டி மிக மிகக் கடுமையான ஒன்று எனக் கூறினார்.” என்றான் உத்தவன்.

“ஆனால் கர்ணனையும், அர்ஜுனனையும் விடுத்தால் மற்ற வில்லாளிகளில் துரியோதனனே சிறந்தவன் என்பதை மறவாதே உத்தவா!  நான் உன்னையும், என்னையும், சாத்யகியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை. “

“கிருஷ்ணா, போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நீ சபதம் செய்திருக்க வேண்டாமோ எனத் தோன்றுகிறது.  தவறு செய்துவிட்டாய் கோவிந்தா!”

“இல்லை உத்தவா!  நான் எந்த விஷயத்துக்காக தூது வந்திருக்கிறேனோ அதிலிருந்து பிறழ்ந்துவிடுவேன்.  அதாவது போட்டியில் நான் கலந்து கொண்டால் என் தூது வெற்றியடையாது.   நான் தர்மத்தைக் காக்க வேண்டும்.  அதற்காகவே நான் பாடுபடுகிறேன்.  அதற்காகவே இங்கே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவும் எடுத்திருக்கிறேன்.   இந்த சுயம்வரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆர்ய வர்த்தத்தில் ஒரு மாபெரும் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க விரும்புகிறேன்.  என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை இதில் நான் புகுத்தினேன் எனில், தர்ம சாம்ராஜ்யம் எழும்பாது.  தூள் தூளாக மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்.  “

“கஷ்டங்களைப் பற்றியே நினைக்க வேண்டாம் வாசுதேவா!  வா, மணிமானின் முகாமுக்குச் செல்வோம்.  அங்கே சிகுரி நாகன் ஏதேனும் செய்திகளைக் கொண்டு வந்திருக்கலாம். “ என்று ஆறுதலாகப் பேசினான் உத்தவன்.

“சரி, நீ சென்று பார்த்து வா உத்தவா!  நான் நம்முடைய முகாமில் உனக்காகக் காத்திருக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.  உத்தவன் மணிமானின் முகாமை நோக்கிச் சென்றான்.  கிருஷ்ணனின் முகாமில் சாத்யகி விழித்திருந்தான். உத்தவனைத் தவிர அவன் ஒருவனுக்கே கிருஷ்ணன் ஜராசந்தனைத் தனிமையில் சந்திக்கச் செல்கிறான் என்பது தெரியும்.  ஆகவே அவன் கிருஷ்ணனும், உத்தவனும் திரும்பி வந்து கொண்டு வரப் போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தான்.  முகாமின் வாயிலிலேயே சாத்யகி அவர்கள் இருவருக்காகவும் காத்திருந்தான்.  அவர்கள் வரும்வரையில் ஒவ்வொரு நிமிடத்தையும் எதிர்பார்ப்பிலும் எந்த விஷயமும் தெரியாததொரு இருட்டான நிலையிலும் கழித்திருந்தான்.  அவன் கவலைப்பட்டது கிருஷ்ணனின் உயிருக்காகவே.

ஏனெனில் தனிமையில் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகும் ஜராசந்தன் அந்த வாய்ப்பைத் தவற விடாமல் கிருஷ்ணன்மேல் பழி தீர்த்துக்கொண்டு விடுவான் என்று அவன் எண்ணி நடுங்கினான்.  ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்தான்.  ஆனால் அவற்றை எல்லாம் கிருஷ்ணன் பொருட்படுத்தவே இல்லை.  சென்று விட்டான்.  இப்போது கிருஷ்ணன் வந்ததைப் பார்த்ததுமே அவனுக்குள் நிம்மதி பிறந்தது. பத்திரமாகத் திரும்பி விட்ட கிருஷ்ணனிடம் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதத்தில் அவனை இறுக அணைத்துக் கண்ணீர் பெருக்கினான்.  பின்னர் மெல்ல அவனிடம், “என்ன ஆயிற்று?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.

“திரௌபதியைக் கடத்தும் முயற்சியை அவன் கைவிட்டுவிடுவான் என்று உறுதியாக நம்புகிறேன்.  “ என்று சுருக்கமாகக் கூறிய கிருஷ்ணன் தன் கிரீடத்தையும்,  வாளையும் சாத்யகியிடம் கொடுக்க அவன் அவற்றை அவற்றுக்காக உள்ள இடங்களில் வைத்தான்.   இருவரும் தங்கள் தங்கள் படுக்கையில் அமர்ந்தனர்.  கிருஷ்ணன் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான்.  சாத்யகிக்கு அவன் யோசனையும், கவலையும் புரிந்ததால் மௌனம் காத்தான்.  கிருஷ்ணனாக வாய் திறந்து பேசட்டும் என்று காத்திருந்தான்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

துரியோதனனே சிறந்தவன் என்று ஆக்கப்பட்டது... ம்... எல்லாம்_______

ஸ்ரீராம். said...

ம்ம்ம்ம்.... அந்தக் காலத்தில் செல்போன் இல்லையே.... "அர்ஜுனா! கிளம்பி விட்டாயா?" என்று கேட்டிருக்கலாம்! அட, ஒரு டெலிபதி கூட இல்லை!! :)))