Wednesday, June 18, 2014

ஜராசந்தன் முன் கிருஷ்ண வாசுதேவன்!

என்ன கிருஷ்ண வாசுதேவனா?  இவனைக் குறித்துத் தானே இந்த அரசர்கள், மக்கள் அனைவரும் பேசிக் கொள்கின்றனர்!  சாகசங்களை நிகழ்த்துபவன்! அதிசயங்களை நடத்துவான்.  நடக்க முடியாத ஒன்றை நடத்திக்காட்டுவான். இவனைப் பார்த்தாலே போதும் என மக்கள் தவமிருக்கின்றனரே!  அவனா இங்கு?  அதுவும் ஜராசந்தனின் கூடாரத்தில்!  விதந்தாவின் கண்கள் ஆச்சரியத்திலும் திகைப்பிலும் அகல விரிந்தன.  அவனால் இதைச் சற்றும் நம்பமுடியவில்லை.  நிஜமாகவே கிருஷ்ண வாசுதேவனா ?  தன் கண்களை நன்கு தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.  இவன் உண்மையாகவே கிருஷ்ண வாசுதேவனா?  ஆம், ஆம், அப்ப்படித் தான் இருக்கும். அதோ அந்த நிறம்! கறுப்பா அது? எப்படிப் பளபளவென இருக்கிறது?  அழகான கறுப்பு நிறம்!  அதோடு அவன் தலையில் சூடி இருக்கும் மயில் பீலி! ஆம், இவன் உண்மையில் கிருஷ்ண வாசுதேவன் தான்!  அவன் தானே மயில் பீலியைச் சூடிக் கொள்வான் என்கிறார்கள்.  மற்ற யாதவர்களிலிருந்து இவன் தனியானவன் என்பது இந்த மயில் பீலியின் மூலம் அறியலாம் என்பார்களே! அதற்குத் தானே இதைச் சூடிக் கொண்டே வந்திருக்கிறான்.

அப்போது கிருஷ்ணன், “ நீ இப்போது போய் சக்கரவர்த்தியை எழுப்புகிறாயா இல்லையா?” என்று அமைதியாகக் கேட்டான்.  விதந்தாவுக்கு சக்கரவர்த்தி ஜராசந்தனும், மற்றவர்களும் கிருஷ்ண வாசுதேவனுடைய பகையையும் விரோதத்தையும் பெரிதும் பாராட்டி வருவதைக்  குறித்து நன்கு தெரியும். ஆகவே சக்கரவர்த்தி இவனைப் பார்க்க விரும்பமாட்டான் என்று நினைத்து, “ பிரபுவே, நீங்கள் அவரைப் பார்ப்பது இயலாத ஒன்று, “ என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் கூறினான்.

“ஓ, அப்படியா?  ஒருவேளை சக்கரவர்த்தி என்னைப் பார்க்க மறுத்தாரெனில் நான் அளிக்கும் செய்தியை அவரிடம் சேர்ப்பிக்க முடியுமா?  அப்படி உன்னால் நேரடியாகச் செய்ய இயலாதெனில், யுவராஜா சஹாதேவன் மூலம் அனுப்பி விடு.  சொல் உன் சக்கரவர்த்தியிடம்:  ஒரு முறை கோமந்தகத்தில் வாசுதேவன் உன் உயிரைக் காப்பாற்றினான்.   மீண்டும் உன் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறான்.  ஆனால் நீ அவன் அவ்வாறு செய்யும்படி அவனை சுதந்திரமாக விட வேண்டும்.” என்ற கிருஷ்ணன், மேலும் யோசித்து, “இதோ உனக்கு தைரியம் இருந்தால் இதையும் சேர்த்துக் கொள்: கிருஷ்ண வாசுதேவன் சொல்வது என்னவெனில் நீ இப்போது உடனடியாக அவனைப் பார்க்கவில்லையெனில் மூவுலகிலும் சேர்ந்து வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது. “ என்று நிறுத்தினான்.  விதந்தா கலக்கமடைந்தான்.  செய்தியின் உட்பொருள் அவனை வெகுவாகத் தாக்கியது.  திகைப்புடன், “நான் எப்படி இம்மாதிரி ஒரு பயங்கரமான எச்சரிக்கைச் செய்தியைச் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பிக்க இயலும்?” என்று கிருஷ்ணன் சொன்னதற்கு ஆக்ஷேபம் தெரிவித்தான்.

“நான் பயமுறுத்தவே இல்லை.  உண்மையில் அவனைக் காப்பாற்றவே வந்துள்ளேன்.” என்று கிருஷ்ணன் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.  இதைக் கேட்ட விதந்தா சற்று நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.  விஷயம் மிகவும் முக்கியமானது, தீவிரமானதும் கூட.  இவ்வளவு அதிகாரம் படைத்த இந்த விருந்தாளி சொல்வதைச் செய்ய முடியாது என்று அவனால் சொல்ல முடியாது.  அதைவிடப் பெரிய ஆபத்து வேறெதுவும் இல்லை.  கண்ணனைப் பார்த்து, “நீங்கள் தயவு செய்து சற்றுக் காத்திருக்க முடியுமா, பிரபுவே!  நான் உங்கள் செய்தியை முதலில் யுவராஜாவிடம் சேர்ப்பிக்கிறேன்.  நீங்கள் இருவருமே மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தியை தரிசிக்க விரும்புகிறீர்களா?” என்று பணிவுடன் கேட்டான்.

“இல்லை, நான் மட்டுமே சந்திக்கிறேன். உத்தவன் இங்கே காத்திருப்பான்.  யுவராஜாவிடம் சொல்வாய்.  என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை.  ஒரே ஒரு வாளை மட்டும் ஏந்தி வந்துள்ளேன். அதையும் இங்கே உத்தவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வரத் தயாராக இருக்கிறேன்.  நான் அமைதியின் தூதுவனாகவே வந்துள்ளேன்.”

“தங்கள் விருப்பம் என் சித்தம் ஐயா!” என்ற விதந்தா உள்ளுக்குள் தான் கொண்டு போக வேண்டிய செய்தியின் பயங்கரத்தைக் குறித்து ஆச்சரியம் அடைந்திருந்தான்.   இதைச் சக்கரவர்த்திக்கு எப்படிச் சொல்வது?  அவன் உள்ளே சென்றான்.  உத்தவன் கிருஷ்ணன் பக்கம் திரும்பினான். “நீ மிகவும் பிடிவாதக் காரனாக இருக்கிறாய் கிருஷ்ணா!  இப்போது தன்னந்தனியாகச் சக்கரவர்த்தி ஜராசந்தனைச் சந்திக்க வேண்டிய காரணம் என்ன?”

கிருஷ்ணன் சிரித்தான். “அவனுக்கு நம்மில் யாராவது ஒருவரைத் தான் கொல்ல முடியும்.  இருவரையும் அவனால் கொல்ல முடியாது.  ஆகவே நீ இதை நினைவில் வைத்துக்கொள்.  ஒரு வேளை எனக்கு ஜராசந்தனைச் சந்திக்கையில் ஏதேனும் நேர்ந்தாலும் நீ இருக்கிறாய்.  ஐந்து சகோதரர்களையும் எப்படியேனும் கண்டு பிடித்துவிடு! “ சொல்லிக் கொண்டே உத்தவனைத் தோள்களில் தட்டிக் கொடுத்து ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான்.  கிருஷ்ணன் ஒரு முடிவுடன் இருப்பதைக் கவனித்த உத்தவனும் மேலும் கேள்விகள் கேட்கவில்லை.   வெகு நேரம் அவர்கள் காத்திருந்த பின்னர் விதந்தா யுவராஜா சஹாதேவனுடன் திரும்பி வந்தான்.
“ஓ, இது கிருஷ்ண வாசுதேவன் அல்லவோ? உண்மையிலேயே இந்த இரவில் இந்த நேரத்தில் நீ சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புகிறாயா?” அவன் எவ்வளவு தான் அடக்கிக் கொண்டாலும் அளவு கடந்த சினத்தில் இருப்பது குரலில் வெளிப்பட்டது.


“ஆம், யுவராஜா!  உங்கள் ஆச்சரியமும், திகைப்பும், சந்தேகமும் எனக்குப் புரிகிறது.  நான் சக்கரவர்த்தியின் நண்பன் அல்ல.  அவருக்கும் நான் நண்பன் அல்ல.  என்றாலும் நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்.  அதுவும் தன்னந்தனியாக.  உங்களுடன் நான் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வந்து சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புகிறேன்.  நிராயுதபாணியாக வருகிறேன். இதோ என்னுடைய இந்த வாளை இங்கேயே உத்தவனிடம் கொடுத்துவிட்டு வருகிறேன்.  இதிலிருந்து நீங்கள் நான் என் உயிரைப் பணயம் வைத்து முக்கியமான ஒரு செய்தியைச் சக்கரவர்த்திக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”

“அப்படி அது அவ்வளவு முக்கியமானதா?”

“ஆம், முக்கியமானது தான். விஷயம் முக்கியம் இல்லை என்றால் நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன் என்பதை நீங்கள் அறியவில்லையா?”

விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்த சஹாதேவனும் கூடாரத்தினுள் சென்று மெதுவாக ஜராசந்தனை எழுப்பினான்.   கிருஷ்ண வாசுதேவன் காண விரும்புவதைச் சொல்லிவிட்டு, அவனை இங்கே அழைத்து வரலாமா என்றும் வினவினான்.   அவன் வருகையைச் சற்றும் விரும்பாத ஜராசந்தன் வேறு வழியின்றி அவனை இங்கே அழைத்து வரும்படி சொன்னான்.  என்றாலும் அவன் விருப்பமின்மை குரலில் பரிபூரணமாக வெளிப்பட்டது.  சஹாதேவன் கிருஷ்ணனைக் கூடாரத்தினுள் அழைத்துச் சென்றான்.  மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தூண்டிப் பெரிதாக்கிய காவலாளிகள் உடனே வெளியே சென்றனர்.  பெரியதொரு கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த விஸ்தாரமான மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஜராசந்தன் அதிலேயே எழுந்து அமர்ந்திருந்தான்.  இவ்வளவு வயதிலும் அவன் உடல் கட்டுடன் இருப்பதையும் எங்கும் சுருக்கங்களோ, வயதானதின் அடையாளங்களோ காணப்படவில்லை என்பதையும் கண்ணன் கவனித்தான்.   தன் நீண்ட தலைமயிரையும், தாடியையும் எடுத்துக் கட்ட முயன்று கொண்டிருந்த கோலத்தில் சிங்கத்தைப் போல் காணப்பட்டான்.  கண்ணன் அங்கே வந்ததில் அவனுடைய விருப்பமின்மை முகத்தில் கோபமாக வெளிப்பட்டு முகம் சிவந்திருந்தது.


எவரும் பேசவே இல்லை.  சஹாதேவன் கட்டிலுக்கு முன்னால் ஒரு ஆசனத்தை எடுத்துப் போட்டுக் கண்ணனை அதில் அமரும்படி ஜாடை காட்டினான்.  கண்ணனும் அமர்ந்து கொண்டான்.  ஒரு உறுமலின் மூலம் கண்ணனின் வரவைத் தான் தெரிந்து கொண்டதைக் காட்டினான் ஜராசந்தன். எவரும் பேசவே இல்லை.  அமைதி.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சுவாரஸ்யம்...

பித்தனின் வாக்கு said...

mikavum arumai. singathai athan kotaiyil santhippathu pola ullathu.

ஸ்ரீராம். said...

என்ன தைரியம் கண்ணனுக்கு!