Thursday, December 31, 2015

வாசுதேவக் கிருஷ்ணா, நீ திருடன்!

அறைக்குள் நுழைந்த மூவரில் சத்ராஜித் தன்னுடைய சுயக் கட்டுப்பாட்டிலேயே இல்லை. ஆகவே வழக்கமாய் அரசரைச் சந்திக்கையில் செய்யும் வணக்கங்களைக் கூட அவன் தெரிவிக்கவில்லை. அதே போல் மரியாதையுடனும் பேசவில்லை. உக்ரசேனரைச் சந்தித்ததுமே அவரைப் பார்த்துக் கூச்சல் போட்டான். “என் ச்யமந்தகம் திருடப்பட்டுவிட்டது. அதை அந்தத் திருடன் கிருஷ்ணன் தான் திருடி இருக்கிறான். இப்போது நான் இங்கே வந்ததன் காரணமே கிருஷ்ணன்ன் உடனே அதைத் திரும்பத் தரவேண்டும், இல்லை எனில் அவன் என்னால் கொல்லப்படுவான் என்பதைத் தெரிவிக்க மட்டுமே! என் வழியில் குறுக்கே எவர் நின்றாலும் என்னால் கொல்லப்படுவார்கள்.” என்று கூவினான்.

உக்ரசேனருக்குச் சற்றும் மரியாதையின்றி சத்ராஜித் இப்படி நடந்து கொண்ட விதம் ஆச்சரியத்தை அளித்தது. எனினும் அதை வெளிக்காட்டாமல், “மாட்சிமை பொருந்திய சத்ராஜித்! வருக, வருக! இப்படி இந்த ஆசனத்தில் அமரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அழைத்துத் தன்னருகே இருந்த ஆசனத்தைக் காட்டினார். மேலும் பங்ககராவையும் ஷததன்வா மற்றும் கூடவே கூட்டமாய் வந்திருந்த அதிரதிகள் அனைவரையும் பார்த்து, “நீங்களும் இங்குள்ள ஆசனங்களில் அமருங்கள்!” என உபசரித்தார். பின்னர் சத்ராஜித்தைப் பார்த்து, “உன்னை நீயே அமைதிப் படுத்திக் கொள் சத்ராஜித்! அமைதி கொள். என்னிடம் நிதானமாக என்ன விஷயம் என்பதைத் தெரியப்படுத்துவாய்! என்னால் நீ சொல்வதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்றும் கூறினார்.

மிகவும் சிரமத்துடன் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் சத்ராஜித். ஆனாலும் அவன் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது. கைகளும் நடுங்கின. கண்களை இப்படியும் அப்படியும் உருட்டினான். “சாந்தம், சாந்தம், சத்ராஜித்! அமைதி கொள்! என்ன விஷயம் என்பதை என்னிடம் சொல்!” என்று சாந்தமாகச் சொன்னார். தன் கதையைச் சொல்லும் முன்னர் தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சத்ராஜித். பின்னர் மேலும் பேசினான். “கிருஷ்ணன், அந்தத் திருடன், என்னுடைய ச்யமந்தகமணியைத் திருடிவிட்டான். நேற்று அவன் என்னிடம் கூறி இருந்தான். நேற்று மாலை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவன் என் ச்யமந்தகத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுவதாய்க் கூறி இருந்தான். அதே போல் செய்து விட்டான். அரசே, ஆணையிடுங்கள்! அந்தத் திருடன் கிருஷ்ணனை என் ச்யமந்தகத்தை உடனே திருப்பும்படி கூறுங்கள். இல்லை எனில் நானும் என் நண்பர்களும் அந்த ச்யமந்தகத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் போர் நடத்தக் கூடத் தயங்க மாட்டோம்.”

சத்ராஜித் தன்னுடைய கதையைச் சொல்லி முடித்த அதே கணம் வசுதேவர், கிருஷ்ணன்,  மற்றும் யாதவகுலத் தலைவர்கள் அனைவரையும் உடனே அழைத்துவரச் சொல்லி உக்ரசேனரால் அனுப்பப்பட்டிருந்த ப்ருஹத்பாலன் திரும்பினான். அவனுடன் வசுதேவர், சாத்யகன், அவன் மகன் யுயுதானா சாத்யகி ஆகியோரும் இருந்தனர். உக்ரசேனரின் அழைப்பின் பேரில் சாத்யகனும், வசுதேவரும் உக்ரசேனரின் படுக்கையில் அவருக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டனர்.

“சத்ராஜித் அவனுடைய ச்யமந்தகமணி இன்று காலை அதன் வழிபாட்டு அறையிலிருந்து திருடப்பட்டதாகக் கூறுகிறான்.” என்ற உக்ரசேனர் சத்ராஜித்தை மீண்டும் அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும்படி கூறினார். ப்ருஹத்பாலனை மீண்டும் அனுப்பிக் கிருஷ்ணனை அழைத்துவரச் சொன்னார். சத்ராஜித் தன் கதையை மீண்டும் அனைவருக்கும் எடுத்துச் சொன்னான். சாத்யகன் முகத்தில் கோபம் எழுந்தது. சத்ராஜித்தைப் பார்த்துக் கடுமையாக, “ நைனனின் மகனே! நீ சொல்வதில் ஒரு வார்த்தை கூட நம்பும்படியாக இல்லை. நான் அதை நம்பவும் இல்லை. கிருஷ்ணன் உன்னுடைய ச்யமந்தகத்தைத் திருடும்படியான கீழ்த்தரமான வேலையை ஒருக்காலும் செய்யமாட்டான். நேற்றே அதை உன்னிடமிருந்து பிடுங்க நாங்கள் அனைவரும் நினைத்தோம்; ஆனால் கிருஷ்ணன் தான் எங்களைத் தடுத்து நிறுத்தினான்.”

“அப்போது நான் பொய்யனா? அதைத் தானே நீ சொல்ல விரும்புகிறாய்? நான் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டுகிறாயா நீ? வ்ருஷ்ணியின் மகனே! நீ ஆரம்பத்திலிருந்தே எனக்கு எதிராகச் சதி செய்வதையும் சூழ்ச்சிகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாய். என்னை எப்போது அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறாய். என்னுடைய பொறுமை எல்லை கடந்து விட்டது.” என்று சீற்றத்துடன் கூவினான். சாத்யகன் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை. அப்படியே தன் கண்களை சத்ராஜித்தின் மேல் நிலைநாட்டி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். “நான் நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, சத்ராஜித்! அதே போல் நீ செய்ய உத்தேசித்திருப்பதைக் குறித்தும் எனக்குக் கவலை இல்லை! ஆனால் எனக்குக் கிருஷ்ணன் அவன் சிறு பிள்ளையாக மத்ராவுக்கு வந்ததில் இருந்து நன்கு அறிவேன். அவன் தர்மத்தின் மறு உருவம். தர்மத்தின் அவதாரம். அவன் உன்னுடைய ச்யமந்தகத்தைத் திருடி இருப்பான் என்பதை நான் சிறிதும் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்.”

“ஓ, பெரியவர்களான உங்கள் முடிவும், பார்வையும் இப்படியொரு கோணத்தில் இருக்கிறதா? எனில் நான் எனக்கு நியாயத்தை என் வழியிலே தேடிக் கொள்ளவேண்டியது தான். நான் இப்போது கிருஷ்ணனின் மாளிகைக்குச் செல்லப் போகிறேன். தேவைப்பட்டால் அந்த மாளிகையை அவனை உள்ளே வைத்து எரித்துச் சாம்பலாக்குவேன்.” என்று சீறியவண்ணம் தன் ஆசனத்திலிருந்து எழுந்தான் சத்ராஜித்.

இதற்குள்ளாக நகர் முழுவதும் ச்யமந்தகம் திருடப்பட்டது என்னும் செய்தியும் அதைக் கிருஷ்ணன் தான் திருடி இருக்கிறான் என சத்ராஜித் சொல்வதும் பரவிவிட்டது. மன்னரின் மாளிகையின் நிலா முற்றம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.அதோடு அரசமாளிகைக்குள் போர்க்கோலத்துடன் சத்ராஜித்தும் அவன் மகன் மற்றும் நண்பர்கள் சென்றதையும் அனைவரும் அறிந்திருந்தார்கள். ஆகவே அங்கு ஆவலுடன் அடுத்து என்ன என்று மக்கள் ஒருவருக்கொருவர் ஆவலுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன் அங்கே வர சத்ராஜித்தின் ஆத்ரவாளர்களில் சிலர், அவனைப் பார்த்து, “திருடன், திருடன்” என்று கூக்குரல் இட்டனர். கிருஷ்ணனை அவர்கள் திட்டியது குறித்தும் குற்றம் சாட்டியதும் குறித்தும் கோபம் அடைந்த மக்களில் பலருக்கும் சத்ராஜித்தின் ஆதரவாளர்கள் மேல் கோபம் வர, அவர்கள் சத்ராஜித்தின் ஆதரவாளர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் அங்கே மாபெரும் கலவரம் ஒன்று உருவானது. மேலும் மேலும் யாதவர்கள் அங்கே வர, வர கூச்சல், குழப்பம் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவது என்று தொடர்ந்து குழப்பமான நிலை உருவானது.

கிருஷ்ணன் உக்ரசேனரின் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே தன் தந்தையும் சாத்யகரும் உக்ரசேனரின் படுக்கையிலேயே அமர்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். சத்ராஜித் உக்ரசேனருக்கு எதிரே நின்று கொண்டிருக்க அவனுக்கு இருபக்கமும் பங்ககராவும் ஷததன்வாவும் நின்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்ததுமே சத்ராஜித், “இதோ! திருடன் வந்துவிட்டான்!” என்று கூச்சல் இட்டான். “திருடனா? நான் எதை எப்போது திருடினேன்?” கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. “ஹூம், நடிக்கிறாயா? அடே வாசுதேவக் கிருஷ்ணா! என் ச்யமந்தகத்தை இன்று காலை அதன் வழிபாட்டு அறையிலிருந்து நீ திருடிச் சென்று விட்டாய்!” என்றான் சத்ராஜித்.

“இன்று காலை நான் அதைத் திருடினேனா? ச்யமந்தகத்தையா?” மீண்டும் ஆச்சரியம் மேலோங்கக் கேட்டான் கிருஷ்ணன்.

“ஆம், இன்று காலைதான் திருடினாய். நான் அறைக்கு வெளியே தான் காவல் இருந்தேன். சில கணங்கள் அறையை விட்டு வெளியே செல்லும்படி நேரிட்டது. நீ அப்போது வழிபாட்டு அறையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ச்யமந்தகத்தை எடுத்துச் சென்று விட்டாய்! நான் திரும்பியபோது நீ நுழைவாயிலை நோக்கி ஓடியதைக் கண்டேன்!” என்றான்.

“ஆஹா, சத்ராஜித், சத்ராஜித்! ஒரு சாதாரணப் பாமரனைப் போல் நான் நீங்கள் சொல்வதை நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? நான் உங்கள் வழிபாட்டு அறையின் கதவுகளை உடைத்து ச்யமந்தகத்தைத் திருடினேன் என நீங்கள் சொல்வதை நான் நம்பவேண்டுமா?” எனச் சற்றும் கலங்காமல் கேட்ட கிருஷ்ணன் கடகடவெனச் சிரித்தான். “ஆஹா, நான் ஓடியதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? ஏன் என்னை ஓடி வந்து பிடிக்கவில்லை?” என்றும் கேட்டுவிட்டுச் சிரித்தான். “நீ அதற்குள்ளாகச் சில அடிகள் முன்னே ஓடி விட்டாய்! என்னால் அந்த இடைவெளியைக் கடந்து வந்து உன்னைப் பிடிக்க முடியவில்லை.” என்றான் சத்ராஜித்.

“ஓ, அப்போது நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்! அப்படித்தானே?”

சத்ராஜித் ஆமெனத் தலையசைத்தான். “ஓ, நான் தப்பி ஓடிக் கொண்டிருந்தேன் என்பது உண்மையானால், உங்களால் என் முகத்தை எப்படிப் பார்த்திருக்க முடியும்?”

“வேறு யார் ச்யமந்தகத்தைத் திருடப் போகிறார்கள்? நீ தான் என்னை மிரட்டினாய். அதை நீயாகவே எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாய். நேற்று மாலை சூரியோதயத்துக்குள்ளாக அதை எடுக்கப் போவதாகவும் சொல்லி இருந்தாய். ஆகவே நீ தான் இந்தத் திருட்டை நடத்தி முடித்திருக்கிறாய்!” என்று திருப்பிச் சொன்ன சத்ராஜித், தன் கண்களை மேலே உயர்த்தி, தன்னுடைய குடும்பத்துக்குப் பாதுகாவலாக இருக்கும் தெய்வம் என அவன் நம்பும் சூரிய பகவானைப் பிரார்த்திக்க ஆரம்பித்தான். “நான் சூரிய தேவன் சாட்சியாகச் சொல்கிறேன். நீ ஒருவனே, ஆம் நீ மட்டுமே ச்யமந்தகத்தைத் திருடி இருக்கிறாய். இது நிச்சயம்!” என்றான்.

சாத்யகர் அப்போது குறுக்கிட்டார். தன் பயங்கரமான விழிகளை மீண்டும் சத்ராஜித்தின் மேல் நிலை நாட்டினார். “கிருஷ்ணன் சொல்வது தான் சரியானது. நைனனின் மகனே! நீ கிருஷ்ணன் தான் திருடினான் என்பதற்கு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லையே! இங்கே எவ்விதமான சாட்சியங்களும் கிருஷ்ணன் தான் திருடினான் என்று காட்டிக் கொடுக்கவே இல்லை!” என்றார்.

“அது கிருஷ்ணன் தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இதோ பாருங்கள்! சாட்சி வைத்திருக்கிறேன். இது கிருஷ்ணனின் காதுக் குண்டலம். அவன் தப்பி ஓடுகையில் நழுவ விட்டது. இதை நான் நுழைவாயிலுக்கு அருகாமையில் பார்த்தேன்.” என்ற வண்ணம் தன்னிடமிருந்த காதுக் குண்டலத்தை எடுத்துக் காட்டினான் சத்ராஜித். “இது உன்னுடையது தானே! சொல், உடனே!” என்றான். கிருஷ்ணன், “ஆம், இது என்னுடையது தான். இது நேற்று உங்கள் மாளிகைக்கு நான் வந்தபோது நீங்கள் என்னைத் தாக்கியபோது கீழே விழுந்து விட்டது. என்னைக் கழுத்தை நெரிக்க முயல்கையில் கழன்று விழுந்து விட்டது.” என்றான்.

“பொய்யன், பொய்யன்! பொய் சொல்கிறான்.” என்று கூவினான் சத்ராஜித்.

அப்போது வெளியே பெரிய சப்தம் கேட்டது. வெளி முற்றத்திலும் அதை ஒட்டிய மைதானத்திலும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று உராயும் சப்தமும் மக்கள் கூக்குரலும் கேட்டது. ஆயுதங்கள் வேகமாய் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.

Tuesday, December 29, 2015

போர்க்கோலத்தில் சத்ராஜித்!

அதற்குள்ளாக பங்ககரா தன் தகப்பனைச் சமாதானம் செய்துவிட்டு அவரைக் காலைக்கடன்கள் கழிக்கவும், நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யவும் அனுப்பி வைத்தான். அவற்றை முடித்த பின்னர் தேடிச் செல்லலாம் என்றும் கூறினான். சத்ராஜித் கத்திய கத்தலும் அதன் கடுமையும் மற்ற அனைவரையும் மிகவும் பாதித்து விட்டிருந்தது. ஊழியர்களும் சத்ராஜித்தின் இந்தக் கோப முகத்தின் பயங்கரத்தில் பயந்து விட்டிருந்தனர். அவர்கள் தன்னிச்சையாக மாளிகையை நோக்கிச் சிலரும் மைதானங்களையும், தோட்டங்களையும் நோக்கிச் சிலரும் சென்று திருடனின் கால்தடமோ அல்லது வேறு ஏதேனும் அடையாளமோ கிடைக்கப்பெறுமா என்று பார்ப்பவர்கள் போல் கிளம்பினார்கள். அதற்குள்ளாகத் தன் காலைக் கடன்களையும் நித்திய கர்மானுஷ்டானங்களையும் அவசரமாக முடித்துக் கொண்டு வந்த சத்ராஜித் தன் ரதத்தையும், நான்கு குதிரைகளையும் கொண்டு வரும்படி சத்தம் போட்டான்.

சத்யபாமாவுக்குக் குழப்பத்திற்கு மேல் குழப்பம். சந்தேக ரேகைகள் அவள் முகத்தில் ஓடின. அவள் சிந்தனையிலும் சந்தேகங்கள் பல ஏற்பட்டன. “அதிகாலை விடியும் முன்னரே சித்தப்பா ப்ரசேனரைத் தந்தை எங்கே அனுப்பி வைத்தார்? அதுவும் மிகவும் ரகசியமாக? என்ன காரணம்? இதை நினைக்க நினைக்க அவள் மனம் குழம்பியதோடல்லாமல், கிருஷ்ணன், தர்மத்தின் காவலன் எனப் போற்றப்படுபவன், இந்த ச்யமந்தகத்தைத் திருடி இருப்பானா என்பதிலும் அவளுக்குச் சந்தேகம் இருந்தது. ஒரு சாதாரணத் திருடனைப்போல் அவன் நடந்து கொள்வானா? தந்தை காட்டிய காதுக்குண்டலம் அவனுடையது தானா? ஆனால் தந்தை தன்னிடமிருந்து எதையோ கீழே போட்டுவிட்டுப் பின்னர் எடுத்தாரே? அது இந்தக் காதுக்குண்டலம் தானா? அல்லது வேறே ஏதேனுமா? என்னுடைய இந்த எண்ணம் அல்லது தோற்றம், நான் கண்டது சரியா? அல்லது நான் கனவு ஏதேனும் கண்டேனா?

சத்யபாமா தன் தந்தையை மிகவும் நேசித்தாள். ஆகவே அவரால் தவறு செய்ய முடியும் என்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. கிருஷ்ணனைத் தக்க காரணம் இன்றி அவர் திருட்டுப் பட்டம் கட்டிக் குற்றம் சுமத்த மாட்டார் என்றே அவள் நம்பினாள். அதற்கு ஏற்பத் தன் எண்ணங்களை அமைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் தந்தையின் தந்திரங்களும் அவள் அறிந்தவையே! ஆகவே கிருஷ்ணனின் குணாதிசயங்கள் குறித்து அவள் தந்தையால் சொல்லப்பட்ட கதைகளையும் அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதன் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப அவள் மனதில் சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது. அதே சந்தேகம். கிருஷ்ணன், யாதவர்களின் காவலன்,  அவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், தன் சாமர்த்தியத்தால் சாம்ராஜ்யங்களை நிர்மாணிப்பவன், தர்மத்தின் பாதுகாவலன் என அனைவராலும் போற்றப்படுபவன் அப்படிப்பட்டவன் ஒரு சாமானியத் திருடனைப் போலவா நடந்து கொள்வான்? அதிலும் ஒரு நாள் முன்னர் தான் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை அவன் அவள் முன்னிலையிலும் சத்ராஜித் முன்னிலையிலும் காட்டி இருந்தான். தன்னைத் தாக்கிய சத்ராஜித்தைத் திரும்பத் தாக்காமல் தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதன் மூலம் அவன் எவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்தவன், தன்னைத் தானே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்பதைக் காட்டி இருந்தான்! வெகு எளிதில் அவனால் சத்ராஜித்தை வீழ்த்தி இருக்க முடியுமே! ஆனால் அதை அவன் செய்யவில்லை! அப்படிப்பட்டவனால் இப்படிஒரு திருட்டுச் செய்திருக்க முடியுமா? பாமாவுக்குக் குழப்பமே மிகுந்தது.

ஆனால் அவள் சந்தேகங்களை வீட்டில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே முடியாது. எல்லோருமே கிருஷ்ணனால் தான் ச்யமந்தகம் திருடப்பட்டது என்றும், அவன் திருடிக்கொண்டு ஓடும்போது காதுக்குண்டலம் நழுவி விட்டது எனவும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதை மாற்றும் சக்தி அவளிடம் இல்லை.

சத்ராஜித்தின் ரதம் தயாராகி விட்டது. மற்ற அதிரதர்களும், பங்ககரா, ஷததன்வாவுடன் தயாராகிக் காத்திருந்தனர். எல்லோரும் அவரவர் ரதத்தில் காத்திருந்தனர். மஹாரதர்களும் அவர்களுடன் கலந்து கொண்டனர். எல்லோரும் பூரண ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு தயாராகி இருந்தனர். சத்ராஜித் அவர்களிடம் கிருஷ்ணன் ச்யமந்தக மணியைத் திருடிச் சென்றதை மீண்டும் ஒரு முறை விவரித்தான். பின்னர் தன் ரதத்தை நோக்கிச் சென்றான். அப்போது பங்ககரா தன் தந்தைக்கு முன்னே வந்து நின்று கொண்டவன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். பின்னர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் பேச ஆரம்பித்தான்; “தந்தையே! உக்ரசேன மஹாராஜாவைப்பார்க்கச் செல்கையில் இப்படிப் பூரண ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு போர்க்கோலத்தில் ரதங்களோடு சென்று பார்க்க வேண்டுமா? இது இப்போது அவசியமா?” என்று மிகவும் விநயத்துடன் விண்ணப்பமாக வெளியிட்டான்.

ஆனால் சத்ராஜித் தன் மகனை முறைத்துப் பார்த்தான். “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ச்யமந்தகத்தின் புனிதம் குறித்துத் தெரியவில்லை. அவன் அதை அவமதித்து விட்டான். எனக்கு ச்யமந்தகம் சூரிய பகவானால் நேரடியாக அளிக்கப்பட்டது. அதை அவன் திருடிச் சென்று விட்டான். அந்தக் கிருஷ்ணனை நான் என் கைகளால் கழுத்தை நெரித்துக் கொல்லப் போகிறேன். அல்லது அவன் என் ச்யமந்தகத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். “ என்று தீர்மானமாகக் கூறினான்.

“தந்தையே, கொஞ்சம் யோசியுங்கள்! நிதானமாக முடிவு எடுங்கள். நான் மிகவும் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது மாபெரும் சிக்கலில் கொண்டு விட்டு விடும். நமக்குப் பெரிய பின் விளைவுகளை உண்டாக்கும். கிருஷ்ணன் மிகவும் அதிகாரம் படைத்தவன்; யாதவர்களின் அவன் செல்வாக்கு அளப்பரியது.” என்றான் பங்ககரா.

“முட்டாள், கோழை!” என்று சீறிய சத்ராஜித், ஒரு பெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தான். “இதோ பார்! நான் சொல்வதைக் கேள்! யாதவர்கள் எவரானாலும் அவர்களை நான் கொன்று விடுவேன். என் வழிக்குக் குறுக்கே எவர் வந்தாலும் அவர் என்னால் கொல்லப்படுவார்கள். இந்த துவாரகையையே நான் அழித்து விடுகிறேன். ஹூம்! நீ என் மகனா? ஒரு பெண்ணைப் போல் பயப்படுகிறாயே? நான் என் மகன் ஒரு பெண்ணைப் போல் அழுது புலம்புவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. உன் ரதத்துக்குப் போ! என்னைப் பின் தொடர்ந்து வா!” என்று உக்கிரமாக ஆணையிட்டான். சத்ராஜித் தன் ரதத்தை வேகமாகச் செலுத்தினான். மற்றவர்கள் தங்கள் தங்கள் ரதங்களில் அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினர் காவலுக்கு வந்தனர். செல்லும்போதே அவர்கள் ஒரு மாபெரும் பிரளயம் யாதவர்களைத் தாக்கி விட்டது என்று கூவினார்கள். ச்யமந்தகம் கிருஷ்ணனால் திருடப்பட்டு விட்டது என்றும் கூறிக் கொண்டு சென்றனர்.

இந்த ஊர்வலம் நகரத்தினுள் சென்றது. உக்ரசேனரின் மாளிகைக்கு எதிரே நிறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கே ஏற்கெனவே ஒரு மாபெரும் கூட்டம் கூடி இருந்தது. சத்ராஜித் உக்ரசேனரின் மாளிகையை அடைந்தான். உக்ரசேனர் அப்போது ஓய்வில் இருந்தார். அவருடைய உடல் நலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே ராஜ்யசபையின் வாதவிவாதங்கள் இல்லாத நாட்களில் தன் காலைக்கடன்களையும் நித்திய வழிபாடுகளையும் விரைவில் முடித்துக் கொண்டு தன் அறையில் படுத்து ஓய்வு எடுப்பார் உக்ரசேனர். சத்ராஜித் வற்புறுத்தியதன் மூலம் பிருஹத்பாலா, (உத்தவனின் சகோதரன்) உக்ரசேனரிடம் சென்று சத்ராஜித்தின் வரவைத் தெரியப்படுத்தினான். பிருஹத்பாலா தன் பாட்டனார் உக்ரசேனருடனே அவருக்கு உதவியாக இருந்து வந்தான். உக்ரசேனர் சத்ராஜித்தை அறைக்கு வரும்படி அழைத்தார். கூடவே அதிரதிகளும் வந்தனர். ஆனால் உக்ரசேனருக்கு வரவேற்பு அறைக்குச் சென்று அவர்களோடு சம்பாஷிக்கும் மனோநிலை இல்லை. ஆகவே இருந்த இடத்திலேயே வரவேற்றார்.

சத்ராஜித்துடன் பங்ககராவும் ஷததன்வாவும் சேர்ந்தே உக்ரசேனரைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் விற்கள், அம்புகள், வாள் போன்றவற்றால் தங்களைப் பூரண ஆயுதபாணியாக ஆக்கிக் கொண்டிருந்தனர். ஓய்வில் இருக்கும் மன்னனைச் சந்திக்கச் செல்லும் நடைமுறை இப்படி இல்லை! ஆனாலும் அவர்கள் அப்படியே சென்றனர். மன்னனைச் சந்திக்கச் செல்கையில் ஒரே ஒரு வாள் மட்டும் தான் இருக்கலாம். அதுவும் மன்னனைப் பாதுகாக்கவேண்டி இருந்தால் பயன்படுத்துவதற்காக மட்டுமே. ஆனால் இங்கே! இவர்கள் பூரண ஆயுதபாணிகளாகச் சென்றனர்.

Sunday, December 27, 2015

ச்யமந்தகம் திருடப்பட்டதா?

சத்ராஜித்தின் அரண்மனை. பொழுது விடியும் நேரம். கருக்கிருட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.  எங்கும் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. அப்போது அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென ஒரு குரல் கிரீச்சிட்டுக் கத்தியது. தொடர்ந்து குழப்பமான பல குரல்கள்! தெளிவில்லாமல் கூச்சல்கள்! உற்றுக் கேட்டால்! “திருடன், திருடன்! ச்யமந்தகமணியைத் திருடி விட்டான்!” “ஐயகோ! திருடன் வந்திருக்கிறான்! ச்யமந்தகமணியைக் காணவில்லையே!” மாளிகையின் உள்ளே காலை நேரத்து உறக்கம் கலையாமல் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர். கூக்குரல்களுக்கு நடுவே தனியாகத் தொனித்த குருவின் குரலை அடையாளம் கண்டு கொண்டார்கள். கூக்குரல்கள் வந்த திசையை நோக்கி அனைவரும் ஓடினார்கள்.

சத்யபாமா அந்த நேரம் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தாள். சற்று நேரத்திற்கு முன்னர் மறைந்திருந்த வண்ணம் அவள் பார்த்த விசித்திரமான காட்சிகளை மனதினுள் மீண்டும் மீண்டும் கொண்டு வந்து அலசிக் கொண்டிருந்தாள். தன் தந்தை தன் சிறிய தந்தையை வேறு ஏதோ முக்கியமான வேலையாக அனுப்பியதை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தாள். ப்ரசேனன் எங்கே சென்றான்? யோசித்து யோசித்து அவள் மூளை குழம்பியது. இப்போது இந்தக் கூக்குரல் கேட்டதும் தன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள். தாழ்வாரத்திற்குச் சென்றவள் முன்னால் தன் தந்தை செல்வதைக் கவனித்தாள். அவர் பின்னாலேயே அவளும் சென்றாள். அவர் கோயிலின் வாயிலுக்கருகே ஓடிச் சென்று அங்கே திருடன் ஓடினால் பிடிக்க வேண்டி சென்று கொண்டிருந்தார்.

சத்யபாமாவின் சொந்தச் சகோதரன் ஆன பங்ககராவும், மாற்றாந்தாயின் மக்களான வடபதி, தபஸ்வந்தா ஆகியோரும் சில காவலர்களுடன் அங்கே கூடினார்கள். அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டு சத்ராஜித்தைத் தொடர்ந்து சென்றனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தத் தாழ்வரையில் கூடி ச்யமந்தகம் காணாமல் போனதைக் குறித்து அதிசயித்துப் பேசிக் கொண்டனர். அனைவரும் திகைப்பிலும் பயத்திலும் உறைந்து போயிருந்தனர். அவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பேரிடர் கடைசியில் நிகழ்ந்தே விட்டது. வாசுதேவ கிருஷ்ணன் ச்யமந்தக மணியைத் திருடிச் சென்றுவிட்டான். அப்போது சத்யபாமாவுக்கு முன்னால் சென்ற சத்ராஜித் வாயிற்படியருகில் சற்றே குனிவதை பாமா பார்த்தாள். சத்ராஜித் எதையோ கீழே போடுவதையும் மீண்டும் எடுக்கையில் அது காதில் அணியும் குண்டலமாக இருந்ததையும் கவனித்தாள். அப்போது சத்ராஜித் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.

“இதோ! கிடைத்துவிட்டது! திருடன் அணிந்திருந்த குண்டலம்! ஆம்! இது அவனுடையது தான்! இல்லை எனில் இது யாருடையது?” என்று கூவினான் சத்ராஜித். சத்யபாமா திகைத்து நின்றாள். அவள் கண்களால் அவள் பார்த்திருக்கிறாள்: அவள் முன்னாலேயே அவள் தந்தை அந்தக் குண்டலத்தைக் கீழே போட்டுவிட்டுப் பின்னர் அனைவரும் பார்க்கும் வண்ணம் அதைக் கையில் எடுத்திருக்கிறார். அதை அவள் பார்த்தாள் அல்லவோ? அல்லது அதுவும் பொய்யோ? ஒருவேளை அவள் சரியாகக் கவனிக்கவில்லையோ? இல்லையே! அவள் நிச்சயம் பார்த்தாளே! எதைப் பார்த்தாள்? குனிந்து அவள் தந்தை எடுத்தது மட்டும் நிஜமோ? தான் பார்த்தது சரியா? அல்லது அவள் தந்தை இப்போது சொல்வது சரியா? என்ன செய்யலாம்? சத்யபாமாவின் மனம் குழம்பியது. இதற்குள் மற்றவர்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். சத்ராஜித் அப்போது அனைவரிடமும் காட்டினான் அந்தக் குண்டலத்தை! “அந்தத் திருடன், கிருஷ்ணன் ச்யமந்தகமணியைத் திருடிச் சென்று விட்டான்!” சத்ராஜித் கிருஷ்ணனைத் திட்டினான். பல சாபங்களையும் கொடுத்தான். அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கப் போவதாக சபதம் எடுத்தான். அப்போது அவனைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. வாரி முடியப்படாத குடுமி அவிழ்ந்து தொங்க, ஒழுங்காகத் தூக்கிக் கட்டப்படாத தாடி அங்குமிங்கும் காலைக்காற்றில் அலைய சிவந்த முகத்துடன் உக்கிரமான தோற்றத்துடன் காட்சி அளித்தான். “ச்யமந்தகம் என்னை விட்டுச் சென்று விட்டது. அந்தப் பாவி கிருஷ்ணன் அதைத் திருடி விட்டான்!” என்று உரக்கக் கத்தினான்.

ஆனால் சத்யபாமா விடவில்லை. “ஆனால் தந்தையே, நீங்கள் கோயிலுக்கு முன்னால் ச்யமந்தக வைத்திருக்கும் அறைக்கு எதிரே தானே படுத்திருந்தீர்கள்?” என்று தந்தையிடம் கேட்டாள். சத்ராஜித் அதற்கு, “சில விநாடிகளுக்காக நான் இங்கிருந்து சென்றிருந்தேன். நான் திரும்பியபோது வழிபாடுகள் நடக்கும் இந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ச்யமந்தகம் திருடப்பட்டு விட்டது!” என்றான். பின்னர் தன்னிரு கரங்களையும் உயரத் தூக்கியவண்ணம் கடவுளரிடம் இறைஞ்ச ஆரம்பித்தான் சத்ராஜித். “சூரிய தேவனே! உன்னுடைய உக்கிரமான கிரணங்களால் அந்தத் திருடனைச் சுட்டு எரித்துவிடு! அவனும் அவன் குடும்பமும் நரகத்தின் கொடிய நெருப்பில் வெந்து அழிந்து போகட்டும்!” என்றான்.

பங்ககரா தன் தந்தையை சமாதானம் செய்து மீண்டும் மாளிகைக்கு அழைத்து வந்தான். அவன் தந்தையிடம், “தந்தையே, திருடனைத் தாங்கள் நேரிலே பார்த்தீர்களா?” என்றும் கேட்டான். அதற்கு சத்ராஜித், “நான் அறைக்குத் திரும்பியபோது கருக்கிருட்டாக இருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்தில் எனக்கு எதுவும் சரியாகத் தெரியாவிட்டாலும் எவரோ ஓடிச் செல்வதை நிழலுருவாகக் கண்டேன். யாரேனும் அரண்மனைச் சேவர்கர்களாக இருக்கலாம் என நினைத்தேன். அப்போது திடீரென எழுந்த சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்தபோது திருட்டைக் கண்டு பிடித்தேன். என்னையும் அறியாமல் அலறினேன். அதன் பின்னர் நான் அறையை விட்டு வெளியே வந்து தாழ்வாரத்தினருகே வருகையில் அந்தத் திருடன் நுழைவாயிலுக்கு அருகே ஓடிச் செல்வதைக் கவனித்தேன். கோயில் இருக்கும் வளாகத்தினுள் அவன் நுழைந்து விட்டான். அவன் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. ஆனால் அது கிருஷ்ணனாகத் தான் இருக்க வேண்டும். இந்தக் குண்டலம் அவனுடையது தான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை!” என்றான்.

“யாதவர்கள் எவரையும் நான் விட்டுவிடப்போவதில்லை. கூண்டோடு அழிக்கிறேன். என் ச்யமந்தகம் எனக்கு வரவேண்டும். அதுவரை அனைவரையும் சும்மா விடமாட்டேன்.” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினான். அதன் பின்னர் என்ன நினைத்தானோ திடீரென பங்ககராவை நோக்கித் திரும்பினான். “என்ன, பேந்தப் பேந்த விழிக்கிறாய்? செல் உடனே செல்! என் ரதத்தைத் தயார் செய்! பெரிய ரதம்! சங்கை எடுத்து ஊது! ஷததன்வாவுக்குச் செய்தியை அனுப்பு! அவனையும் ரதத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்! உன் ரதத்தையும் தயார் செய்! நம்முடைய மஹாரதிகள அனைவரையும் ஒன்று சேர்! விரைவில் இதைச் செய்து முடி! அனைவரும் தயாராகட்டும்!” என்றான். பின்னர் காவலர்களிடம் திரும்பி, “முட்டாள்களே, நீங்கள் அனைவரும் முழு முட்டாள்கள்! உங்கள் காவலின் லட்சணம் இப்படி இருக்கிறது! என்னுடைய ச்யமந்தகம் மட்டும் கிடைக்கவில்லை எனில் உங்கள் அனைவரையும் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவேன். விரைவில் என் ரதத்தைத் தயார் செய்யுங்கள்! அந்தத் திருடன் இந்த உலகின் எந்த முனையிலிருந்தாலும் ஓடோடிப் போய்ப் பிடித்து வருவேன்!” என்று கத்தினான்.

Friday, December 11, 2015

கிருஷ்ணனின் முடிவே எங்கள் முடிவு!

இப்போது பலராமனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்துச் சிரித்தான். “உன்னிடம் இது தான் கஷ்டம், கிருஷ்ணா! உன்னைச் சமாளிப்பது பெரிய விஷயம்! நான் ஒரு பக்கம் உன்னோடு சண்டை இட்டுக் கொண்டிருக்க நீ இன்னொரு பக்கம் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு அவற்றை எங்களுக்குச் சிறிதும் புரியாத விதத்தில் நிறைவேற்றி விடுகிறாய்!” என்றான் பலராமன்.

“ஆஹா, அண்ணா? உங்களுக்கா புரியவில்லை? நன்கு புரிந்து கொள்கிறீர்கள்! அதை நீங்கள் உங்கள் பெரிய மனதால் ஆதரிக்கவும் செய்கிறீர்கள்! உங்களுடைய பெருந்தன்மையான போக்கினால் இதன் பலாபலன்களை என்னை அனுபவிக்கும்படி விட்டு விடுகிறீர்கள். அப்படி விட்டு விட்டு, இப்படி எல்லாம் நீ செய்தது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது, கிருஷ்ணா என்றும் சொல்வீர்கள்!”

சற்று நேரம் அங்கே எவரும் பேசவில்லை. அனைவரும் அமைதி காக்க, கர்காசாரியார் திடீரென நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நம்மிடையே இருக்கும் தேர்வுகளில் ஒன்று என்னவெனில் இந்தச் சண்டையை நாம் ஆயுதங்களுடன் கூடிய மோதலாக மாற்றினோம் எனில், நம்மிடையே ஒரு உள்நாட்டுப் போர் நிச்சயம் ஏற்படும். அது அவசியமானதாகவும் இருக்கலாம். சத்ராஜித்திடம் இருக்கும் வளங்கள், ஆயுதங்கள், வீரர்கள் அனைத்தையும் மீறி அவனை ஒரே நாளில் நாம் முடித்து விடலாம். ஆனால், அவனோடு சமாதானமாகச் செல்ல ஒரு வழி கிடைத்தது எனில் அதை ஏன் விடவேண்டும்? அதை முயன்று பார்க்கலாமே? கிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம்.”

“நான் ஒருக்காலும் அவன் செய்தவற்றை மறக்கவும் மாட்டேன்; அவனை மன்னிக்கவும் மாட்டேன். இன்னமும் அவன் நமக்கெல்லாம் கெடுதல்களைத் தான் செய்து வருகிறான். நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாண்டவர்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டிருக்கையில் அவனுக்கு மட்டும் அதில் கடமை ஏதும் இல்லையா? நம்மோடு அவனும் தானே சுமையைப் பகிர வேண்டும்? என்னால் அவனை வற்புறுத்திக் கொடுக்கும்படி செய்திருக்க முடியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. யாதவர்கள் அனைவருமே பெருந்தன்மையோடும் பெரும்போக்குடனும் அவர்கள் இஷ்டப்பட்ட அளவுக்குப் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்காகத் தான் நான் என்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருந்தேன். அவனிடம் என்ன இருந்து என்ன? அவன் என்ன சொன்னால் தான் என்ன? யாதவர்களை ஏமாற்றியதன் மூலம் அவன் தனிமைப்படுத்தப்பட்டு விட்டான். அவமானம் அடைந்திருக்கிறான். ஆகவே இப்போது அவன் பேரம் செய்கிறான். அவனுடைய பங்கு கொடுக்கப்படவில்லை என்பதற்காக மகளுக்குச் சீதனம் தருவதன் மூலம் அதை நியாயப்படுத்த விரும்புகிறான். அதற்காக என்னை வற்புறுத்துகிறான்.”

“இப்படி ஒரு பேரத்திற்கு நான் ஏற்றவன் இல்லை. அதில் நான் பங்கெடுக்கவும் மாட்டேன். இதை மட்டும் நான் ஒத்துக்கொண்டால் யாதவர்கள் செய்த தியாகம் அனைத்தும் வீணாகும். இந்த அச்சுறுத்தலுக்கு நான் பணிவதன் மூலம் யாதவர்கள் செய்ததை ஒன்றுமில்லாமல் போகவிட மாட்டேன். அதோடு அவன் பெண்ணைப் பொறுத்தவரை என் முடிவு இது தான். என் மகன் யுயுதானா சாத்யகி ஒரு நாளும் அவளை மணக்கமாட்டான். இது என் முடிவான முடிவு. அவள் மட்டும் என் குடும்பத்தின் மருமகள் ஆனாள் எனில் அவளுக்கும் எங்களிடம் மரியாதை ஏதும் இருக்காது! அதே போல் எங்களாலும் அவளை மரியாதையுடன் நடத்த இயலாது. குடும்பத்தின் தினசரிச் சட்டதிட்டங்கள் அனைத்தையுமே அவளுக்காக மாற்ற வேண்டி வரும். ஆனால் பலராமன் சொன்னதும் ஒரு வகையில் சரியே: நாம் என்ன தீர்மானிக்க வேண்டும் எனில், கிருஷ்ணனை அவன் தாக்கியதற்கு நாம் அவனுக்கு எவ்வகையில் பாடம் கற்பிக்கப் போகிறோம்? கிருஷ்ணன் நமக்கெல்லாம் அருமையானவன். நம் கண்ணின் கருமணி போன்றவன்.  நம்முடைய சொத்துக்களை எல்லாம் விட அவன் மதிப்பு மிக உயர்ந்தது. அவ்வளவு ஏன்? நம்முடைய உயிரை விட மேலானவன். நமக்கெல்லாம் அவன் ஓர் ரக்ஷகன்! நம்மைப் பாதுகாத்து வருகிறான். அவனைத் தாக்குபவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இறந்தே ஆகவேண்டும். இது தான் என் முடிவு!”

பலராமன் குறுக்கிட்டான். “நிச்சயமாக! ஆம் அதுதான் என்னுடைய கருத்தும் கூட! உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன். கோவிந்தனின் மேல் கைவைத்தவர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் கட்டாயமாய்த் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.”

“நான் முடிவு செய்துவிட்டேன். எப்போது சத்ராஜித் தன் கைகளைக் கண்ணன் மேல் வைத்ததைக் கேள்விப் பட்டேனோ அந்த நிமிடத்திலேயே நான் செய்த முடிவு இது! சத்ராஜித்தை உயிருடன் விட்டு வைக்கக் கூடாது! இது தான் என் முடிவு. கிருஷ்ணனின் புத்திமதிகளைக் கேட்டுக் கொண்டு நான் காத்திருப்பதோ, பலராமனின்  யோசனைகளைக் கேட்டு உடனே செயல்படுவதோ எதுவும் எனக்கு முக்கியமில்லை. என் முடிவு ஒன்றே!” என்றார் சாத்யகி.

“உங்கள் கருணையும் என் மீது நீங்கள் கொண்டிருக்கும் பாசமும் இதில் வெளிப்படுகிறாது சித்தப்பா சாத்யகி அவர்களே! என்னை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். சத்ராஜித் என்னைத் தாக்கினார் என்பதை நீங்கள் உங்களையே அவர் அவமதித்தாற்போல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் கொஞ்சம் பொறுங்கள், ஐயா! நான் அவரிடம் இருக்கும் விஷத்தை மெல்ல மெல்ல இறக்குகிறேன். அதற்கு எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதை எனக்குக் கொடுங்கள். இதில் நான் தோற்றேன் எனில் நீங்கள் உங்கள் முடிவை செயல்படுத்திக் கொள்வதில் எனக்கு எவ்விதமான ஆக்ஷேபணைகளும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய் கிருஷ்ணா?” என்று ராஜா உக்ரசேனர் கேட்டார்.

“பாட்டனார் அவர்களே, சத்ராஜித்தைக் குறித்து நீங்கள் அனைவரும் என்ன நினைத்தாலும் சரி. தற்காலிகமாகக் கொஞ்சம் பொறுங்கள். இந்த விஷயத்தை என்னிடம் விட்டு விடுங்கள். இதில் நான் தோற்றேன் எனில், என் அருமை அண்ணா பலராமனால் அவர் தலைச் சுக்குச் சுக்காக உடைக்கப்படுவதை நான் தடுக்க மாட்டேன். அவர் தன் கை முஷ்டிகளாலேயே சத்ராஜித்தின் தலையை உடைக்கட்டும்!” என்று கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் உக்ரசேனரைப் பார்த்துக் கூறினான்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நான் அதைத் தான் இப்போதே செய்வதாகக் கூறுகிறேனே? ஏன் நான் இப்போதே அதைச் செய்யக் கூடாது?” என்று பலராமன் கேட்டான்.

“அண்ணா, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சத்ராஜித்தின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நான் மெல்ல மெல்ல ஒழிக்கிறேன். ச்யமந்தகத்தை அவனிடமிருந்து பெற்று அக்ரூரரின் கஜானாவில் சேர்ப்பிக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.

“உன்னால் அது ஒருக்காலும் முடியாது, கிருஷ்ணா! அவன் அதற்கு இடம் கொடுக்க மாட்டான்!” என்றான் பலராமன்.

கர்காசாரியார் குறுக்கிட்டார்:”இதை நாம் கோவிந்தனின் பொறுப்பில் விட்டு விடுவோம். இந்தச் சண்டையின் போக்கையே சத்ராஜித் கிருஷ்ணனைத் தாக்கியதன் மூலம் மாற்றி விட்டது; முற்றிலும் மாற்றிவிட்டது. கோவிந்தன் இதைக் குறிப்பாகச் செய்ததன் மூலம் அவன் மனதில் ஏதோ ஓர் திட்டம் இருப்பது புலன் ஆகிறது. இதை அவனே வரவழைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே அவனே சத்ராஜித்தைச் சமாளிக்கட்டும். அந்தப் பொறுப்பை அவனிடமே விட்டு விடுவோம். எனக்குக் கண்ணனிடம் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அவன் என்ன செய்தாலும் தர்மத்தின் பாதையிலிருந்து பிறழ மாட்டான். முடிவில் தர்மமே வெற்றி பெறும்.”

உக்ரசேன மகாராஜா கூறினார்:”கிருஷ்ணா, உன்னிடம் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீ சொல்லும்வரையிலும் நாங்கள் எவ்விதமான முடிவையும் எடுக்க மாட்டோம். சத்ராஜித்தின் விஷயத்தில் தலையிட மாட்டோம். நீ நினைப்பதை நீ முழு சுதந்திரத்தோடு உன் வழியில் செய்து முடிப்பாய் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் வழியில் நீ செல்!”


Thursday, December 10, 2015

ச்யமந்தகத்தை அடைந்தே தீருவேன்!

“ஆனால், இப்போது தானே நீ சொன்னாய்? சத்ராஜித்தைப் பயமுறுத்தியதாகச் சொன்னாய் அல்லவா?”வசுதேவர் கேட்டார்.

“ஆம், தந்தையே, நான் சொன்னேன்!”

“உன்னால் எப்படிச் செய்ய முடிந்தது? அவனைப் பயமுறுத்தினால் கூட அவன் ச்யமந்தகமணிமாலையைப் பிரியமாட்டான். அவனிடம் தான் அது இருக்கும். அவனிடம் அது இருக்கையில், நீ இப்போது அனைவருக்கும் முன்னே அதைப் பிடுங்கிவிடுவதாய்க் கூறி இருக்கிறாய். இது நம் மக்களுக்கு நம் வ்ருஷ்ணி குலத்தோருக்கு ஒரு அவமானம்! அவர்கள் நம்பிக்கையை அழித்து ஒழுக்கத்தைச் சிதைத்துவிடும். உன்னை எவராலும் எதிர்க்க முடியாது என மிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கையையும் சிதைத்ததாக ஆகி விடும்.” வசுதேவர் தன் மெல்லிய குரலில் நிதானமாகச் சொன்னார்.

பலராமனுக்குப் பொறுமை போய்க் கொண்டிருந்தது. “கோவிந்தா, உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சத்ராஜித் உன்னைக் கொல்ல முயன்றிருக்கிறான்; ஆனால் நீ அவனைத் திரும்பத் தாக்கவே இல்லை நீ ச்யமந்தகத்தை எடுத்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி இருக்கிறாய்; ஆனால் உன்னால் அது இயலாது! அது உனக்கே தெரியும். ஹூம், என்னை விட்டிருந்தால் சில நொடிகளில் அவனை அழித்திருப்பேன்.ச்யமந்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்து அக்ரூரரின் கஜானாவில் சேர்த்திருப்பேன்.”

“அண்ணா, தயவு செய்து நீங்கள் சத்ராஜித்தை நானே எதிர்கொள்ளும்படி விடுவீர்களா? என்ன காரணமோ தெரியவில்லை. சாத்யகர் அவர்களை சத்ராஜித் தன்னுடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தை நான் என்பால் திருப்பிக் கொண்டிருக்கிறேன். நான் அவருடைய வெறுப்பை அடியோடு களையப் பார்க்கிறேன்.”

“தப்பு செய்கிறாய் கோவிந்தா!”சாத்யகர் குறுக்கிட்டார். “சத்ராஜித் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. அவனுடைய தற்பெருமை அழியப் போவதில்லை. மேலும் உன்னால் மென்மையாகப் பேசி எல்லாம் ச்யமந்தக மணிமாலையைச் சத்ராஜித்திடமிருந்து கொண்டு வர முடியாது. அதற்கு வலிமையைப் பிரயோகிக்க வேண்டி இருக்கும்.”

“உங்கள் தரப்பு நியாயத்தை நான் நன்கு புரிந்து கொள்கிறேன், ஐயா!ஆனால் அவருடைய வலிமையும், வளங்களும் இத்தனை ஆண்டுகளில் பல்கிப்பெருகி விட்டன. நாம் இல்லாமல் இருந்த இந்தச் சில ஆண்டுகளில் அவருடைய நடத்தைகளும் மாறிவிட்டன. ராஜ்யசபையில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அன்று நான் இவ்விஷயத்தைப் பிரஸ்தாபிக்கையில் நீங்கள் அனைவரும் எவ்வளவு தர்மசங்கடமான மனோநிலையில் இருந்தீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பார்க்கப் போனால் தன் பணபலத்தை வைத்து அவர் நம்மை எல்லாம் மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார். அவ்வாறே நடந்து கொண்டார்; இப்போதும் நடந்து கொள்கிறார் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அதை மௌனமாகப் பொறுத்துக் கொள்ளும் நம் மக்கள்! அவர்களுக்காகவே நான் ராஜ்யசபைக் கூட்டத்தில் இதைக் குறித்துப் பேச ஆரம்பித்தேன்.”

“அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்னும் முடிவை நாம் எடுப்பதற்கு இது ஒன்றே போதுமானது!” என்றான் பலராமன்.

“மன்னியுங்கள், அண்ணாரே! சத்ராஜித் நம் யாதவர்களுடன் சண்டை போடத் தான் விரும்புகிறார். நமக்குள்ளாகவே நாம் போர் புரிந்து கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். அதன் மூலம் சாத்யகர் அவர்களை அழித்துவிடலாம் என எண்ணுகிறார். ஆகவே நான் நம்முடைய நிலையைத் தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறிவிட்டேன். க்ஷத்திரிய தர்மத்தின் உயர்வை ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் படி நடந்து கொள்ளவேண்டும். சித்தப்பா சாத்யகரை மரியாதையுடன் நடத்த வேண்டும்.இல்லை எனில் நீ சிதறிப் போவாய் என எச்சரித்துவிட்டேன்!”

“ஆஹா! அவனை எப்படி அழிக்க எண்ணி இருக்கிறாய் கோவிந்தா? சத்ராஜித் தந்திரங்கள் நிறைந்தவன். சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவன்!” என்றார் சாத்யகர்.

“சித்தப்பா, கவலைப்படாதீர்கள்! ஏன் கவலைப்பட வேண்டும்? நான் உங்கள் கவலைகளையும் கஷ்டங்களையும் என் தோள்களில் சுமந்து கொள்கிறேன்.”

“என்னதான் செய்யப் போகிறாய், கிருஷ்ணா?” வசுதேவர் கேட்டார்.

“”அவர் இப்போது என்ன செய்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் தந்தையே, நிச்சயமாய் ச்யமந்தகம் கிடைத்துவிடும். அதை அக்ரூரரின் கஜானாவில் சேர்த்துவிடுவேன். இந்த விஷயத்தில் நீங்கள் என்னை முழுதாக நம்பலாம்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹூம், உன்னை மாதிரி மென்மையாக இருப்பவர்களுக்கு அது கனவு தான். நீ ஒருக்காலும் ச்யமந்தகத்தை அடையப் போவதில்லை. அது உனக்குக் கிடைக்காது!” பலராமன் கோபத்துடன் கூறினான். கிருஷ்ணன் தன் வசீகரமான புன்னகையுடன், “அண்ணா, அண்ணா, எப்போதாவது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் தந்திருக்கிறேனா? வாக்குறுதி கொடுத்தபின்னர் அது என்னால் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கிறதா?” என்று கேட்டான்.


Friday, November 27, 2015

சாத்யகன் பெருமை! சத்ராஜித் சிறுமை!

“உன்னுடைய இந்தக் கோரிக்கைக்கு அவன் என்ன பதில் சொன்னான்?” உக்ரசேனர் கேட்டார். “அரசே, சத்ராஜித் இவ்வாறு பதில் கூறினார்:”இந்த ச்யமந்தகமணிமாலை சூரியதேவனால் எனக்கு அளிக்கப்பட்டது. என் நன்மைக்காகவும், என் குடும்ப நன்மைக்காகவுமே இது அளிக்கப்பட்டது. இதை நான் ஒருக்காலும் பிரிய மாட்டேன்.” என்று கூறினார். பின்னர் நான் கூறினேன், “மேற்கண்ட பேரங்களை எல்லாம் விட்டுவிடுவோம். உங்கள் சொந்த நன்மைக்காக நீங்கள் ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் கொடுத்துத் தான் ஆகவேண்டும்.” என்றேன். அதற்கு அவர் மிகக் கோபம் கொண்டார். ஆனால் எனக்குச் சிறிதும் கவலையோ, பயமோ ஏற்படவில்லை. அவரின் கோபத்தை நான் ரசிக்கவே செய்தேன். அவர் எந்த நிமிடமும் என்னைத் தாக்கும் மனோநிலையில் இருந்தார்; அதை நான் கவனிக்கவே இல்லை. அவர் ஆசனத்திலிருந்து குதித்து எழுந்ததும், நான் அவரிடமிருந்து ச்யமந்தகமணிமாலையைப் பிடுங்கப் போகிறேன் என எண்ணி அவர் மிக எரிச்சல் அடைந்தார். ஆகவே உடனடியாகத் தன் கைகளை என் தோள்களின் மேல் வைத்து என்னை ஆசனத்திலே அப்படியே பின்னால் அழுத்தினார். அப்படியே அழுத்தியவண்ணம் என் கழுத்தை நெரிக்க முயன்றிருக்கலாம். அது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். நான் அவர் என்ன தான் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்தேன். அவரைத் திரும்பத் தாக்கவேண்டும் என்னும் என் எண்ணத்தை மிகக் கஷ்டத்தோடு அடக்கிக் கொண்டு காத்திருந்தேன். என்னைக் காத்துக்கொள்ளவும் முயலவில்லை!”

“இம்மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு ஏன் பேசாமல் இருந்தாய் கிருஷ்ணா? ஒரே குத்தில், ஒரே அடியில் நீ அவனை வீழ்த்தி இருக்கலாம் அல்லவா?” என்று உக்ரசேனர் கேட்டார்.

“அவர் கோபமும், ஆங்காரமும் இன்னும் எவ்வளவு தூரம் போகிறது என்பதைப் பார்க்க விரும்பினேன்.” என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணனைப் பெருமிதம் பொங்கப் பார்த்தார் சாத்யகர். பின்னர், “ கோவிந்தா, நீ இத்தனை கடினமான வேலையில் இறங்கி இருக்கக் கூடாது. உன் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நீ தனியாகவும் அங்கே சென்றிருக்கக் கூடாது. என் நிலையை நீ நியாயப்படுத்தி இருக்கவும் தேவை இல்லை. சத்ராஜித் ஒருக்காலும் என்னை மன்னிக்கமாட்டான். அவன் பெண்ணை நான் மருமகளாக ஏற்க மறுத்ததோடு அல்லாமல் இங்குள்ள யாதவர்கள் அனைவரையும் தங்கள் சொத்திலிருந்து பங்கைக் கொடுக்கச் செய்ததும் நான் தான் அல்லவா? அதன் மூலம் இப்போது அவன் தன்னுடைய பங்கைக் கொடுக்க வேண்டிச் சொத்தைப் பிரியவேண்டி நேரும் அல்லவா?”

“நீங்கள் சொத்தை மட்டும் பிரியவில்லை சித்தப்பா சாத்யகரே! அதற்கும் மேல் நீங்கள் அவனுக்குப் பாடம் புகட்டி இருக்கிறீர்கள். ஒரு மனிதனின் பெருந்தன்மையும், எதையும் விட்டுக் கொடுக்கும் போக்கும், தர்மத்திற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மையுமே அவனை மனிதரில் சிறந்தவனாக ஆக்குகிறது என்பதைப் புரிய வைத்து விட்டீர்கள்!” என்றான் கிருஷ்ணன்.

“நான் அப்படி எல்லாம் நினைத்து எதையும் செய்யவில்லை, கோவிந்தா!” என்று அவையடக்கத்துடன் சொன்ன சாத்யகர், “நான் தர்மம் என்னவோ அதைக் கைவிடாமல் பின்பற்ற நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை பின்பற்றுகிறேன். நீ எங்கள் சார்பில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எங்கள் உயிரைக் கூடக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.”

“பிரியமான சித்தப்பா, உங்கள் பெருந்தன்மை மட்டும் இல்லை என்றால் பாண்டவர்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியைச் சிறிதும் நிறைவேற்றி இருக்க இயலாது. உங்களிடம் இருந்த அனைத்தையும் அல்லவோ கொடுத்திருக்கிறீர்கள்!” என்று கிருஷ்ணன் மிகுந்த விநயத்துடன் சொன்னான். “ஆனால், கோவிந்தா, நீ எனக்காக சத்ராஜித்துடன் சண்டை போட்டிருக்கக் கூடாது! அதைத் தவிர்த்திருக்கலாம்.” என்றார் சாத்யகி.

“ஐயா, அது சத்ராஜித் அவர்களோடு உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சண்டை எதுவும் இல்லை! அது என்னுடனான சண்டையே! அல்லது சத்ராஜித் தர்மத்திற்கு எதிராகச் செயல்படுவதை எதிர்த்துச் செய்யும் போர் என்றும் சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால் இதன்மூலம் நீ என்னை ஒரு தர்மசங்கடமான நிலையில் கொண்டு விட்டிருக்கிறாயே, கிருஷ்ணா! அவன், அதாவது சத்ராஜித் ச்யமந்தகமணிமாலையைப் பிரியும் பட்சத்தில் நான் அவன் மகளை எனக்கு மருமகளாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். யுயுதானா சாத்யகியின் மனைவியாக ஆக்க வேண்டும். ஆனால், அந்த இளம்பெண்ணோ! உயர்குடிப் பிறப்புக்கு உரிய லட்சணங்கள் ஏதும் இல்லாமல், அவற்றைப் பின்பற்றாமல், அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்வச் செழிப்பில் அலட்சியமாக வளர்ந்தவள். அவளுக்கு என் மகன் மூலம் பிறக்கும் என் பேரக்குழந்தைகள் பின்னர் க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்பதையே மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பேரக்குழந்தைகள் எனக்கு வேண்டாம்! என் முன்னோர்களின் ஆசிகளும் எனக்கும், என் குடும்பத்துக்கும் கிடைக்காது!”

“ஆஹா, என்னை மிக மிக மன்னியுங்கள் சித்தப்பா அவர்களே!” என்ற வண்ணம் கிருஷ்ணன் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சாத்யகியைப் பார்த்துத் தன்னிரு கரங்களையும் கூப்பினான். “ஆனால் சத்ராஜித் ச்யமந்தகமணிமாலையைப் பிரியவே மாட்டான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்!” என்றும் கூறினான்.

“ஒருவேளை அவன் அதைப் பிரிந்துவிட்டான் எனில்? பின்னர் என்ன செய்வது?” சாத்யகிக்குக் கவலை வந்தது. “அப்படி எனில் அவன் மீண்டும் புதிதாய்த் தான் பிறக்கவேண்டும் ஐயா! அப்போது தான் அது நடக்கும். அவருடைய சுயநலத்துக்காகவும், அகந்தைக்காகவும், தற்பெருமைக்காகவும் அவர் சேர்த்த பொருட்கள் அனைத்தையும் பிரிவதன் மூலமாக அவர் தன்னைத் தானே புனிதப் படுத்திக் கொள்ளலாம் அல்லவா?” என்றான் கிருஷ்ணன். பின்னர் உக்ரசேனரைப் பார்த்து ஒரு புன்னகையுடன், “உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், பிரபுவே! யுயுதானா சாத்யகியை சத்ராஜித்தின் மகளை மணம் செய்து கொள்ளச் சம்மதிக்கச் சொல்லுங்கள். அப்போதாவது அவள் தந்தை தான் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெறட்டும். இது தான் அவர் செய்த பாவங்களுக்குச் சமன் செய்யும் ஒரே விஷயமாகவும் இருக்கும்.”

பலராமனுக்குப் பொறுமை போய்க் கொண்டிருந்தது. “இந்த விஷயங்களைப் பேசுவதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது? இப்போது எதற்கு இந்தத் தேவையற்ற விஷயங்களைப் பேச வேண்டும்? கோவிந்தா, உன்னைக் கொலை செய்யும் அளவுக்குத் தாக்கிய சத்ராஜித்தை நான் நொறுக்கித் தூள் தூளாக்கப் போகிறேன்.”என்றான். அவனைப் பார்த்துத் தன் காந்தக் குரலில்கிருஷ்ணன் சொன்னான்.” அண்ணா, தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அளப்பரிய அன்பினால் தான் உங்களால் சத்ராஜித் என்னிடம் நடந்து கொண்ட முறையைப் பொறுக்க முடியாமல் அவரைத் தாக்கவேண்டும் என நினைக்க வைக்கிறது. அதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தாற்காலிகமாக உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி வையுங்கள். இதை நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நானே அவனை என் முறையில் பார்த்துக் கொள்கிறேன்.”

“கோவிந்தா, சத்ராஜித்துக்கும் அவன் நண்பர்களுக்கும் யாதவர்கள் நீதி, நியாயம் செய்வதில் மோசமானவர்கள் அல்ல என்பதைப் புரிய வைக்கவேண்டும்!” என்று சாத்யகி கூறினார்.

“ஆமாம், சித்தப்பா! நீங்கள் சொல்வது சரியே! ஒரே அடியில் என்னால் சத்ராஜித்தை வீழ்த்தி இருக்க முடியும் தான்! அவ்வளவு ஏன்? அவரைக் கொன்றிருக்கவும் முடியும். ஆனால் நான் சத்ராஜித் என்னும் தனி மனிதனோடு போராட விரும்பவில்லை. அவர் அகந்தையைத் தான் அழிக்க நினைக்கிறேன். அவர் கொடுங்கோலராக இருப்பதால் நானும் ஒரு கொடுங்கோலனாக இருக்கவும் விரும்பவில்லை.” என்றவன் திரும்பி உக்ரசேனரைப் பார்த்து, “ என்னை அவர் தாக்கியபோது அவர் மகள் வந்து குறுக்கிட்டாள், பிரபுவே! அப்போது நீங்கள் அவர் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே! அவர் பெருமை எங்கோ போய்விட்டது. அகந்தை வீழ்ந்தது! அவர் வாழ்நாளிலேயே முதல்முறையாகத் தான் அதிகாரங்களையும், ஆணைகளை இடுவதையும் இழந்துவிட்டோம் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பான். மீண்டும் தன் தான் தன்னுடைய தன்னம்பிக்கையைப் பெற முடியாது என்பதையும் அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவரால் மீண்டும் தன்னம்பிக்கையைப் பெறவே இயலாது!” என்றான் கிருஷ்ணன்.

Monday, November 23, 2015

கிருஷ்ணன் செய்த பேரம்!

சத்ராஜித்தால் கண்ணன் தாக்கப்பட்டதை அறிந்த பலராமன் கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. பலராமன் இயல்பாக மிகப் பெருந்தன்மை படைத்தவன். அவனிடம் பொறாமை என்பதே சிறிதும் இல்லை. ஆகவே தன் இளையோன் இந்தச் சிறிய வயதில் சாதித்த அற்புதங்கள், அதிசயங்களால் அவன் கண்ணனிடம் மிகவும் பிரியமும், பெருமையும் கொண்டிருந்தான். கண்ணனைப் பொதுமக்கள் ஒரு கடவுளாக வணங்குவதை நினைத்தும் அவன் பெருமை கொண்டிருந்தான். அதில் அவனுக்கு உள்ளார்ந்த கர்வமும் உண்டு. ஆகவே பெரியவனான தான் கண்ணனை ஒரு தந்தையின் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் அவனைப் பாதுகாத்து வந்தான். இப்போது இதை அவனால் தாங்க முடியவில்லை. யோசித்த பலராமன் தன் தந்தையிடம் சென்றான்.

சத்ராஜித்தின் இந்த முறையற்ற செயலுக்கு அவனைத் தண்டித்துத் திருத்த வேண்டும் என்னும் எண்ணத்துடன் வசுதேவரிடம் தான் சத்ராஜித்தைப் பார்க்கப் போவதாகத் தெரிவித்தான். வசுதேவரோ நிதானம் உள்ளவர். அவசரப் படமாட்டார். ஆகவே பலராமனிடம் கண்ணனின் நேரிடையான வாக்குமூலம் வரும்வரை அவசரப் பட வேண்டாம், பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்குள்ளாக அவர் யாதவகுலத்து மற்றப் பெரியோர்களை அங்கே வரவழைக்கச் சொல்லிச் செய்திகளை அனுப்பினார். அக்ரூரர், சாத்யகன், யாதவர்களின் குலகுருவான கர்காசாரியார் அனைவரையும் உக்ரசேனரின் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பினார். அதே போல் கிருஷ்ணனுக்கும் உடனே அவரை வந்து சந்திக்கும்படிச் செய்தியை அனுப்பினார். ஏற்கெனவே துவாரகை முழுவதும் கிருஷ்ணனை சத்ராஜித் தாக்கிய செய்தி பரவி இருந்ததால் யாதவ குலத்தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து யாதவர்களும் சொல்ல முடியா வருத்தத்தில் ஆழ்ந்து போயிருந்தனர்.

கிருஷ்ணன் மேல் ஒருவன் கை வைத்தான் என்பதையே தாங்க முடியாமல் இருக்கையில் அவனைக் கொல்லப் பார்த்தான் என்பது அவர்களால் சற்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருந்தது. ஆகவே அனைவரும் கூட்டம் கூட்டமாக உக்ரசேனரின் மாளிகை வாயிலில் குவிந்து கொன்டிருந்தனர். உண்மை என்ன என்பதை அறிய விரும்பினார்கள். அவர்கள் உக்ரசேனரின் மாளிகை நிலாமுற்றத்தில் கூடி இருக்கையில் கிருஷ்ணனே அங்கே வந்தான். அவனைப் பார்த்தால் சற்றும் சங்கடத்தில் ஆழ்ந்தவன் போல் தெரியவே இல்லை. எந்தவிதத் தடுமாற்றங்களும், சங்கடங்களும் இல்லாமல் வெகு இயல்பாக நன்றாக அலங்கரித்துக் கொண்டு வழக்கமான புன்னகை ததும்பும் முகத்தோடு மக்களைப் பார்த்துத் தன் கைகளை ஆட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த வண்ணம் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த மக்கள் தங்களையும் அறியாமல், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று கோஷித்ததோடு இல்லாமல் முன்னணியில் இருந்த சிலர் அவனை நெருங்கி அவன் பாதங்களிலும் பணிந்தனர்.

அனைவரையும் நட்பாகப் பார்த்துச் சிரித்துத் தலையை அசைத்து அந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டான் கிருஷ்ணன். ஒரு யாதவன் மிக தைரியமாக, “பிரபுவே, என்ன நடந்தது?” என்று கேட்டும் விட்டான். அதற்குக் கிருஷ்ணன் சிரித்தவாறே, “கவலைப்படும்படி எதுவும் இல்லை. நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகலுக்குச் செல்லுங்கள்!” என்றான். அதற்குள்ளாக இன்னொருவன், “சத்ராஜித் உங்களைத் தாக்கினான் என்கிறார்களே? அது உண்மையா? கொல்லப் பார்த்தானாமே?” என்றும் கேட்டான். “என்னைப் பார்த்தால் யாரேனும் தாக்கி இருப்பார்கள் என்றா நினைக்கத் தோன்றுகிறது?” என்று கேட்ட கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான். அதைப் பார்த்த மக்களும் சிரிக்க, இதுதான் சமயம் எனக் கிருஷ்ணன் மாளிகை உள்ளே சென்று விட்டான். உள்ளே உக்ரசேன மகாராஜாவுடன், வசுதேவர், அக்ரூரர், சாத்யகன், கர்காசாரியார். பலராமன் ஆகியோர் கிருஷ்ணனின் வரவுக்குக் காத்திருந்தனர். அனைத்துப் பெரியோருக்கும் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்த கண்ணன் அவனுக்காகப் போட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

“கிருஷ்ணா! என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொல்!” என்று வசுதேவர் ஆணையிட்டார். கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “அது மிகவும் ருசிகரமான விஷயம்! சுவாரசியமாக இருக்கும்.” என்ற வண்ணம் தொடர்ந்தான் கிருஷ்ணன். “ சத்ராஜித் முதலில் தன் சொத்துக்களை என்னிடம் காட்டினார். அவருடைய பண்ணை, அவருடைய கால்நடைச் செல்வங்கள், குதிரைகள், இந்தக் குதிரைகளை அவர் அஸ்வமேத யாகத்துக்காகப் பயிற்சிகள் கொடுத்து வருகிறாராம். விரிவில் யாகத்தை நடத்தப்போகிறாராம்.” என்று நிறுத்தினான். “என்ன! அஸ்வமேத யாகமா?” என்று வியந்த சாத்யகன் ஏளனம் பொங்க, “அவன் என்ன மகாசக்ரவர்த்தியாக முயல்கிறானா?” என்றும் கேட்டான். கிருஷ்ணன் அதற்கு ஏதும் பதில் அளிக்காமல் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“பின்னர் அவர் நான் அவரைச் சந்திக்க வந்திருக்கும் காரணத்தைக் கேட்டார். நான் யாதவத் தலைவர்கள் அனைவரும் சத்ராஜித்துடன் நட்பாக இருக்கவே விரும்புவதைத் தெரிவித்தேன். அமைதியான முறையில் உறவு தொடர விரும்புவதையும் தெரிவித்தேன். அதோடு இல்லாமல் அவர் பங்குக்குக் கொடுக்க வேண்டியவற்றை இப்போதாவது கொடுத்து யாதவர்களின் பற்றாக்குறை நிலைமையை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டேன்.”

“அதற்கு அவன் என்ன சொன்னான்?”

“அவர் பேரம் பேசும் மனோநிலையில் இருந்தார். அவர் கூறினார்:சாத்யகர் அவர்கள் தன் மகனுக்கு சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்படி நடந்தால் வரதக்ஷணையாகத் தன்பங்குச் சொத்தைத் தருவதாய்க் கூறினார். சாத்யக மாமா அவர்களே! மேலும் சத்ராஜித் சொன்னது என்னவென்று தெரியுமா? நீங்கள் அவரை அவமானப்படுத்தி விட்டீர்களாம்! அவர் மகளை மறுத்ததன் மூலம் அவருக்கு அவமானம் நேரிட்டு விட்டதாம். அப்போது அவருக்கு நான் நன்றாக விளக்கிக் கூறினேன். சத்யபாமாவின் பணத்தைப் பார்த்துப் பொறாமையிலோ அல்லது உங்கள் செல்வத்தின் மேல் கொண்ட வெறுப்பினாலோ சாத்யகர் உங்கள் மகளை மருமகளாக ஏற்க மறுக்கவில்லை. சாத்யகரின் குடும்பம் வீரதீர சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட குடும்பம். அனைவரும் மாபெரும் வீரர்கள். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாதவர்கள். அப்படிப்பட்டதொரு குடும்பத்திற்குச் செல்வத்திலும், சுகபோகங்களிலும் திளைந்த உங்கள் பெண் சிறிதும் பொருந்த மாட்டாள். அதனாலேயே அவளைத் தன் மகனுக்கு மனைவியாக ஏற்க மறுத்துவிட்டார் என்பதை எடுத்துச் சொன்னேன். அப்படி வற்புறுத்தித் திருமணம் செய்திருந்தால் சத்யபாமாவும் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டாள். சாத்யகிக்கும் மன நிறைவு கிட்டி இருக்காது!” என்று கூறினேன்.

“நன்றாகச் சொன்னாய், குழந்தாய்! உண்மையும் அதுதானே! சாத்யகனைப் போன்றதொரு வீரன், மாபெரும் வீரன் இந்த ஆர்யவர்த்தம் முழுதும் தேடினால் கூடக் கிடைக்க மாட்டான். க்ஷத்திரிய தர்மத்தை விடாது கடைப்பிடித்து வருகிறான்.” என்று தன் முழுமனதோடு பாராட்டினார் உக்ரசேன ராஜா! சாத்யகர் அடக்கத்துடன் தலை குனிந்து கொண்டு மௌனத்தைக் கடைப்பிடித்தார். கிருஷ்ணன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “அப்போது நான் திரும்ப ஒரு மாற்று பேரத்தைக் கொண்டு வந்தேன். சத்ராஜித் அக்ரூரரின் பொறுப்பில் இருக்கும் உக்ரசேன ராஜாவின் கஜானாவிற்கு ச்யமந்தக மணியைக் கொடுத்தாக வேண்டும். அப்படி அவர் கொடுத்துவிட்டால் அது தான் அனைத்து யாதவர்களுக்கும் நன்மை பயக்கும். ஆகவே அப்படி நடந்தால், நான் சத்யபாமாவை சாத்யகி மணப்பதற்கு உதவுகிறேன்.” என்று சொல்லிவிட்டேன். “ என்று முடித்தான் கிருஷ்ணன்.

Saturday, November 21, 2015

தவிக்கும் பாமா! ரகசிய வேலையில் சத்ராஜித்!

ஒரு வழியா சுபத்ரா சமாதானம் ஆனதும் சத்யபாமா அவளிடம், ஒரு வீரனுக்குப்போருக்குச் செல்லும்போது விடை கொடுக்கையில் மனைவியரால் பாடப்படும், “பிரியாவிடை”ப் பாடலின் சில வரிகள் அவளுக்கு நினைவில் இல்லை எனவும், சுபத்ராவுக்குத் தெரிந்தால் அதைப் பாடிக்காட்டும்படியும் வேண்டினாள். மறந்து போன வரிகளை அவள் நினைவில் கொள்ள வசதியாக இருக்கும் எனக் கெஞ்சினாள். அவள் மிகவும் வேண்டிக்கொண்டதின் பேரில் சுபத்ரா அந்தப் பாடலைப் பாடினாள். பாடுகையிலேயே பாமா அந்த வரிகளைத் தன் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டாள்.

“என் தலைவா, என் பிரபுவே! போர்க்களம் உங்களை அழைக்கிறது!
தர்மத்தின் பெயரால் அழைக்கிறது! தர்மத்தை ரக்ஷிக்க அழைக்கிறது!
சென்று வாருங்கள்! நான் தடுக்க மாட்டேன்! உங்களை என்னருகில் இருக்கும்படி வற்புறுத்த மாட்டேன்! சென்று வாருங்கள் என் பிரபுவே!
என் சுயநலத்திற்காக உங்களை நான் என்னிடம் தக்க வைத்துக் கொண்டால்,
உங்கள் நண்பர்கள் எதிரில் நீங்கள் கேலிக்கு ஆளாவீர்கள்!
அதோடு மட்டுமா! உயர்குலத்துப் பெண்மணிகளின் ஏளனமான பார்வைக்கும், கேலிக்கும் ஆளாவீர்கள்! உங்களை ஏறெடுத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள்!
என் பிரபுவே, என் தலைவா! உங்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி நிலவி இருக்கட்டும்!
ஒரு க்ஷத்திரியனாக நீங்கள் வீரத்தின் விளைநிலமாக விளங்குகிறீர்கள்!
போர்க்களத்தின் முன்னணியில் நின்று பொருதுவதே உங்களுக்குத் தகும்! அதில் தான் உங்கள் புகழ் அடங்கி இருக்கிறது!
உன்னதமான உயர்குடிப்பிறப்பில் பிறந்த உங்கள் சகிப்புத் தன்மைக்குச் சோதனை வந்தால், என்றென்றும் அழியாத தர்மத்திற்குச் சோதனை வந்தால்
அதற்காகத் தாங்கள் போர்க்களம் சென்றே ஆகவேண்டும்.
ஒரு வேளை இப்படி ஒரு சமயம் வாய்க்கலாம். நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போர்க்களத்தில் எதிரிகள் கணக்கில்லாமல் இருக்கலாம். ஆனால் என் அன்பே, அதற்காகவெல்லாம் நீங்கள் அஞ்சாதீர்கள்!
ஏனெனில் சூரியன் ஒன்றே’:சந்திரன் ஒன்றே; ஆனால் கணக்கற்ற நக்ஷத்திரங்கள் உள்ளன!
நக்ஷத்திரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலா இருள் விலகுகிறது! இல்லை என் தலைவா! அந்த ஒரே ஒரு சூரியனாலோ, அல்லது சந்திரனாலோ அல்லவா இருள் அகல்கிறது! அதுவன்றோ வெளிச்சத்தைத் தருகிறது!
என் பிரபுவே! பெறற்கரிய பெருஞ்சிறப்புப் பெற்ற நீங்கள் வெற்றிகளையே கொண்டு வருவீர்கள்! விஜயலக்ஷ்மி உங்கள் பக்கம் தான் இருப்பாள்!
இத்தகைய பெரும் சிறப்புப் பெற்ற நீங்கள், வீராதி வீரரான நீங்கள் போர்க்களத்தில் துவண்டு போய்ப் பின் வாங்கவே மாட்டீர்கள்! முன் நின்று எதிர்த்துப் போராடுவீர்கள்! போர்க்களத்திலிருந்து தோற்றுப் பின் வாங்கி நீங்கள் ஓடி வருவதை நான் பார்த்ததும் இல்லை; இனியும் பார்க்க மாட்டேன்!
ஒருவேளை நம் கோட்டை, கொத்தளங்கள் எதிரிகளால் தகர்க்கப்பட்டு நம் மக்கள் அனைவரும் பூண்டோடு அழிய நேரலாம்!
உங்களை என்னால் திரும்பப் பார்க்க முடியாமலும் போகலாம்.
இறைவன் சித்தம் அப்படி இருந்தால், என் பிரபுவே! எனக்காக நீங்கள் ஒருசொட்டுக் கண்ணீர் கூட உகுக்காதீர்கள்!
உங்கள் எதிரிகள் உயிருடனும், கண்ணீருடனும் என்னைத் தூக்கிச் சென்று என் சுதந்திரத்தை, என் நாயகனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அப்படி அவர்களால் செய்ய இயலாது! என் பிரபுவே! அதற்குள்ளாகவே நான் உயிரிழந்து விட்டிருப்பேன்!
இதை மட்டும் நன்றாக நினைவு கூருங்கள் என் பிரபுவே!
இன்னொரு மனிதன் வீட்டில், அவன் நாட்டில் எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும், அவனுடைய இருப்பிடத்தில் என்னால் வசிக்க இயலாது! அதை விட என் உயிரை விடுவேன்!
அவனுக்காக நான் எவ்விதத்திலும் உழைக்க மாட்டேன்! குடிநீர் கொண்டு வரும் வேலை கூடச் செய்ய மாட்டேன்!
நிச்சயமாக நான் அழுது கொண்டிருப்பேன்; அதில் சந்தேகமில்லை; ஆனால் அது எனக்காக அல்ல, என் தலைவா!
நீங்கள் என்னிடம் கடைசிவரை காட்டிய அன்பை நினைந்து நினைந்து அந்த அன்பில் உருகி என் உயிரை உங்களுக்காக ஆகுதி செலுத்த வேண்டி உருகி உருகி அழுது கொண்டிருப்பேன். அந்தக் கண்ணீராகிய தாரையில் என் அன்பை உங்களுக்காக அர்ப்பணம் செய்வேன்!
என் தலைவா! அப்படி ஒருவேளை போர்க்களத்தில் நீங்கள் வீர மரணம் எய்திவிட்டால்! இல்லை, இல்லை! ஆனால் அப்படியும் ஒருவேளை நடந்துவிட்டால்! அதை மற்றொருவர் சொல்லும் வரைக்கும் என்னால் காத்திருக்க இயலாது! இன்னொரு பெண் அதை எனக்குச் சொல்ல வேண்டாம்! ஆம், என் தலைவா! உன் கணவன் இறந்து பட்டான் என்பதை இன்னொரு பெண் மூலம் அறிவிக்க நான் காத்திருக்க மாட்டேன்!
உங்களுடைய சிதையே எனக்கு மலர்ப்படுக்கை! ஆம், என் தலைவா! உங்களுடன் எப்படி உங்கள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேனோ அதே போல் சிதையையும் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன்! உங்களால் கூட அதைத் தடுக்க இயலாது!
என் பிரபுவே! அப்போது உங்கள் கரத்தை என் கரங்களுக்குள்ளாக வைத்துப் பொத்திக் கொள்வேன். உங்கள் கரங்களைப்பிடித்தபடியே நாம் மேலுலகம் சென்று கடவுளரிடம் செல்வோம். இல்லை, இல்லை முதலில் யம தர்ம ராஜாவிடம் செல்வோம்! சந்தோஷமாகச் செல்வோம்! அதைப் பார்த்து யமன் கூட அதிர்ச்சியில் ஆழ்வான்! ஆஹா! இவர்கள் திருமணத்தில் நடந்த சப்தபதியின் போது ஏழு அடி எடுத்து வைக்க எப்படிச் சேர்ந்தே சென்றார்களோ அப்படியே இப்போதும் வந்திருக்கின்றனரே என ஆச்சரியத்துடன் பார்ப்பான்!
என் தலைவா! சென்று வாருங்கள்! வென்று வாருங்கள்!”

அங்கிருந்து கிளம்பிய சத்யபாமாவின் மனதில் உற்சாகமே இல்லை! விவரிக்க இயலா சோகம் அவளை அப்பிக் கொண்டிருந்தது! அவள் குடுமப்த்தின் உறுப்பினர்கள் அனைவரும் மௌனத்தையே கடைப்பிடித்தாலும் உள் மனதில் வியாகூலத்துடனே இருப்பதும், அனைவரும் ஏதோ ஒரு வகையில் தர்மசங்கடமான மனோநிலையில் இருப்பதும் தெரிந்தது. அவள் தந்தையோ வழிபாட்டு அறைக்குள்ளே புகுந்தவர் உள்பக்கம் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு வெளியே வரவே இல்லை! அன்றிரவு வீட்டின் பிரதான வாயிலில் காவல் அதிகரிக்கப்பட்டதோடு இல்லாமல் வீட்டைச் சுற்றிலும் பலத்த காவல் போடப்பட்டது! ஏதோ ஒன்று நடக்கப் போகிறது! ஏதோ ஒன்று! நல்லதோ, கெட்டதோ! அல்ல, அல்ல! கடவுளரின் கடுங்கோபம் இந்த வீட்டைத் தாக்கப் போகிறது! அந்த இரவு அனைவருக்கும் தூங்கா இரவாக இருந்தது.

உதயத்திற்குச் சற்றே முன்னர் சத்யா ஊரி அவளுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு கட்டிலில் இருந்து குதித்து இறங்குவதைக் கவனித்தாள். ஏதேனும் எலி இருப்பதை மோப்பம் பிடித்திருக்கிறதோ என பாமா நினைத்தாள். ஆனால் இந்தச் சமயம் அப்படி இல்லை என்பதை ஊரியின் நடவடிக்கையிலிருந்து பாமா புரிந்து கொண்டாள். ஊரி நேரே தாழ்வாரத்தின் பக்கம் சென்று மிகக்கோபத்துடன், குரலெடுத்து, “மியாவ், மியாவ்!” என்று கத்திக் கொண்டே இருந்தது. தாழ்வரையில் இருந்த எவரோ அதை விரட்டுவதும் பாமாவுக்கு இங்கிருந்தே கேட்டது. ஆனால் பாமாவின் மனதில் ஏதோ நடக்கக் கூடாத ஒரு விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆகவே அவள் தன் கட்டிலில் இருந்து இறங்கினாள். மெல்ல மெல்லத் தன்னை ஒளித்துக் கொண்டு திருட்டுத் தனமாகத் தாழ்வாரத்தில் இருந்த ஒரு பெரிய தூணின் பின்னால் போய் நின்றாள். மறைந்து கொண்டிருந்த அஸ்தமனச் சந்திரனின் சோகையான வெளிச்சத்தில் அவளால் இரு நபர்களைக் காண முடிந்தது. அவர்களை பாமா உடனே அடையாளமும் கண்டு கொண்டாள். ஒருவர் அவள் தந்தை! இன்னொருவர் அவள் சிறிய தந்தை பிரசேனர்!

அங்கே ஒரு மட்டக்குதிரை பிரயாணத்துக்குத் தயாராகக் காத்திருந்தது. சற்று தூரத்தில் இன்னொரு மட்டக் குதிரையும் பிரயாணத்துக்குத் தயாராக இருப்பதை பாமா கவனித்தாள். அந்தக் குதிரையைத் தன் கையிலுள்ள கயிறுகளால் அடக்கிப் பிடித்த வண்ணம் குதிரை லாயத்தைச் சேர்ந்த ஒரு வீரன் நிற்பதையும் பாமாவால் பார்க்க முடிந்தது. இத்தனை அதிகாலையில் இவர்களுக்கு இங்கே என்ன வேலை! என்ன செய்கிறார்கள்? அல்லது செய்யப் போகிறார்கள்? சத்யபாமாவால் சிறிதும் ஊகிக்க முடியவில்லை. பொறுமையாகக் காத்திருந்தாள். என்ன தான் நடக்கிறது! கடைசிவரை பார்த்துவிடுவோம்!

அவள் தந்தையுடன் மெதுவாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டிருந்தார் அவள் சிற்றப்பன் பிரசேனன். பின்னர் விடைபெற்றுக் கொண்டு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு அதை விரட்டினார். குதிரையும் வேகமாகக் கிளம்பியது! குதிரை லாயத்தைச் சேர்ந்த வீரனும் உடனே தன் கையிலிருந்த கயிற்றால் குதிரையை விரட்டிக் கொண்டு தானும் அந்தக் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தவண்ணம் பிரசேனனைத் தொடர்ந்தான். பின்னர் அவள் தந்தை தான் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குத் திரும்பியதை பாமா கவனித்துக் கொண்டாள். அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவள் தந்தை காட்டில் உள்ள ஏதோ ஓர் இடத்துக்குச் செல்வார் என்பதும் அந்த இடம் உஜ்யந்த மலைகளால் சூழப்பட்டது என்பதும், அங்கே தான் ச்யமந்தக மணி முதன் முதலாக அவள் தந்தைக்கு சூரிய பகவானால் அளிக்கப்பட்டது என்பதும், அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அங்கே சென்று சூரிய பகவானுக்கு வழிபாடுகளை அவள் தந்தை செய்கிறார் என்பதும் நினைவில் வந்தது. ஆனால்! ஆனால்!

ஒரு போதும் சூரிய உதயத்துக்கு முன்னரோ, விடிகாலையிலே இத்தனை ரகசியமான முன்னேற்பாடுகளுடன் அவர் கிளம்பிச் சென்றதே இல்லை! இப்போது நடப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது! ஆனால் இதில் ஏதோ தப்பாகவும் ரகசியமாகவும் இருக்கிறது! அது நிச்சயம்! இரவு கழிந்து விடியும் முன்னரே அவள் சிற்றப்பன் இத்தனை ரகசியமாகக் காட்டுக்கு ஏன் கிளம்பிச் செல்ல வேண்டும்? பாமா திரும்பத் தன் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை!

Wednesday, November 18, 2015

பாமாவின் தனிமை!

சத்யபாமா படுக்கையை விட்டு எழுந்ததும், தன் வழக்கம் போல் கோயிலுக்குச் செல்வதற்காக அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அங்கிருந்து அவள் தன் தாயின் சகோதரியைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தாள். அவள் கிருதவர்மாவின் தாய். தன்னை அலங்கரித்துக்கொள்ளும்போதே, காலை நடந்தவை எல்லாம் அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்து போயிற்று.அவள் தந்தை கிருஷ்ணனைப் பார்த்துக் கத்தியது, “சூரிஅ பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணனை அவன் அமர்ந்திருந்த ஆசனத்திலே சேர்த்து அழுத்திக் கொல்ல முயன்றது! அப்போது கிருஷ்ணனின் தோள்கள் ஆசனத்தின் பின்னே சாய்ந்திருந்த விதம், அவன் தன்னிரு கரங்களால் ஆசனத்தின் கைப்பிடியை இறுகப்பிடித்திருந்த முறை! அவன் உடல் விறைப்பாகக் காணப்பட்டது! சத்ராஜித்தைத் தாக்கவேண்டும் என்னும் தன் மனோநிலையை அவன் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்த விதம்! ம்ம்ம்ம்ம்ம்…….. எப்படிப்பட்ட மனிதராலும், ஏன்! கடவுளரால் கூட இப்படியான சந்தர்ப்பங்களில் தன் மனோபலத்தால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! அதுவும் அவன் சத்ராஜித்தின் கரங்களால் கொல்லப்பட இருக்கையில்! நிச்சயமாய் இது எவராலும் சாத்தியமே இல்லை!

அவள் மனதின்/மூளையின் மூலை, முடுக்குகளில் எல்லாம், “ச்யமந்தகத்தை நானே எடுத்துக்கொண்டுவிடுவேன்!” என்று கண்ணன் கூறியது எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் குரலே திரும்பத் திரும்ப அவள் காதுகளில் மோதியது! என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? ச்யமந்தகத்தைத் தன் தந்தையிடமிருந்து பிடுங்கப் போகிறானா? அல்லது திருடப் போகிறானா? அப்போது அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. அது மிகவும் சிறந்தது என்றும் அவள் நினைத்தாள். அதாவது வழிபாட்டு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ச்யமந்தகத்தை அவளே எடுத்துச் சென்று கண்ணனிடம் கொடுத்துவிட்டால்? இந்த நினைப்பு அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவளால் இதைச் செய்ய முடியாது! ஏனெனில் அவள் தந்தை பகல் முழுவதும் அதை அணிந்து கொண்டிருப்பார்; இரவானதும் அதை வழிபாட்டு அறையில் வைத்துவிட்டு அந்த அறைக்குச் செல்லும் வழியிலேயே உள்ள ஓர் அறையில் தான் படுத்துத் தூங்குகிறார். ஆகவே அவருக்குத் தெரியாமல் அவளால் எதுவும் செய்ய இயலாது. கோயிலுக்குச் செல்லும் முன்னர் தந்தையை விசாரிக்கும் தோரணையில் அவள் அவருடைய அறைக்குச் சென்றாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல்!

அவள் தந்தை ச்யமந்தக மணிக்குத் தன் வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஓர் சிறுமேடையின் மேல் அது வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துத் தந்தையையும் விசாரித்த பின்னர் அவள் கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிருதவர்மாவின் வீட்டிற்குச் சென்றாள். செல்லும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய மனிதர்கள் காணப்பட்டனர். தெருவோரங்களிலும், அவரவர் வீட்டின் உள்ளேயும், தாழ்வாரங்களிலும் காணப்பட்ட அவர்கள் தங்களுக்குள்ளாக ஏதோ ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவளுக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது தெரிந்தே இருந்தது. அதே சமயம் அவளைப் பார்த்ததுமே அவர்களின் பேச்சு நின்றது. அவளையே முறைத்துப் பார்த்த வண்ணம் அனைவரும் அமைதியானார்கள். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள் சத்யபாமா!

அங்கே சென்றதுமே கிருதவர்மாவின் வீட்டு மனிதர்கள் பாமாவைச் சுற்றிக் கொண்டனர். காலையில் அவள் வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையா என விசாரித்தனர்! கிருஷ்ணன் அவர்கள் வீட்டிற்கு வந்தானா? அவள் தந்தையைச் சந்தித்தானா? மற்ற யாதவர்கள் இழந்த சொத்திற்கான நஷ்ட ஈட்டைக் கேட்டுப் பெறுவதற்காக வந்திருந்தானா? சத்ராஜித் கொடுக்க வேண்டிய பங்கைக் கேட்டானா? அவற்றை எல்லாம் மறுத்து சத்ராஜித் கிருஷ்ணனைக் கொல்ல முயன்றானா? அது உண்மையா? அப்போது பாமா உள்ளே புகுந்து தலையிட்டாளா? அதுவும் உண்மையா? சத்ராஜித்தின் தாக்குதலில் இருந்து கண்ணனை பாமா தான் காப்பாற்றினாளா? அப்போது அங்கிருந்து செல்லும் முன்னர் கிருஷ்ணன் சத்ராஜித்திடம் அவன் தானாகவே முன் வந்து ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் ஒப்படைக்கச் சொன்னானா? அது உண்மையா? நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொடுத்தாகவேண்டும் என்று கெடு வைத்திருப்பதும் உண்மையா?

சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. ஏனெனில் அனைத்தும் கசக்கும் உண்மை! நடந்தது என்னவோ உண்மை தானே! அவற்றை அவளால் மறுக்க இயலவில்லை. இதைக் கேட்டதும் கிருதவர்மா கோபத்தில் ஆழ்ந்தான். அவன் தாய்க்கும் கோபம் தான் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. சத்ராஜித் செய்த மன்னிக்க முடியாத குற்றம் அது என்பதை பாமா ஏற்கெனவே புரிந்து கொண்டிருந்தாள். யாதவர்களின் வீரதீரக் கதாநாயகனும், அவர்களின் கண்ணின் கருமணி போன்றவனும் ஆன கிருஷ்ணனை சத்ராஜித் தாக்க முயன்றது மிகவும் மன்னிக்க முடியாக்குற்றம்!  யாதவர்கள் அனைவரின் இந்த மனோபாவத்தை அறிந்து கொண்ட சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிருதவர்மாவின் வீட்டிலிருந்து விரைவில் வெளியேறிய அவள் தன் வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டு மனிதர்களின் போக்கைக் கண்டு திகைத்தாள். அனைவரும் கூடிக் கொண்டு மெல்லக் கிசுகிசுப்பான தொனியில் பேசிக் கொள்வதையும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டாற்போன்ற அவர்கள் நடவடிக்கையையும் பார்த்த அவளுக்குப் பேச்சே வரவில்லை. ஏதோ பிரளயம் வந்துவிட்டாற்போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

இரவை சத்யபாமா எப்படிக் கழித்தாள் என்றே கூறமுடியவில்லை. இரவு முழுவதும் குளிரால் நடுங்குவது போல் நடுங்கிக் கொண்டிருந்தாள். மிகவும் விரக்தி அடைந்து போயிருந்தாள். காலையில் நடந்த சம்பவங்களினால் அவளுடைய கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் செத்து விட்டது. இவ்வளவிற்குப் பிறகும் கிருஷ்ணன் அவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்னும் நம்பிக்கை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவக் கூட யாருமில்லை! ஆலோசனைகள் சொல்லவும் எவருமில்லை! தனியாக விடப்பட்டிருக்கிறாள் அவள் நம்பிக்கை, அவள் ஆசை, அவள் கனவு, அவள் வாழ்க்கை அனைத்தும் பொடிப் பொடியாகச் சுக்குச் சுக்காகச் சிதறிப் போய்விட்டது! எல்லாம் யாரால்? அவள் தந்தையால்! அவருடைய அசிங்கமான மோசமான நடவடிக்கையால்!

மறுநாள் இந்த வதந்தி கை, கால்கள் முளைத்துக் கொண்டு அருமையான விகிதாசாரத்தில் துவாரகை முழுவதும் பரவி இருந்தது. அவளுடைய சேடிப்பெண் மூலம் அவள் சுபத்ராவுக்கு ஓர் செய்தி அனுப்பி இருந்தாள். சுபத்ராவைக் கிருதவர்மாவின் வீட்டில் சத்யபாமா சந்திக்க விரும்புகிறாள். இது தான் அந்தச் செய்தி! மதியம் போல் அவள் கிருதவர்மாவின் வீட்டிற்குச் செல்கையில் சாலை முழுவதும் சிறு சிறு குழுக்களாக மனிதர்களைக் கண்டாள். அனைவரும் ஏதோ போருக்கு ஆயத்தமாவதைப் போல் ஆயுதபாணிகளாகக் காட்சி அளித்தனர். அனைவர் கண்களிலும் போர் வெறி தெரிந்தது. அதோடு இல்லாமல் யாதவர்களின் முக்கியத் தலைவர்களில் சிலர் உக்ரசேனரின் மாளிகை நோக்கி  நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தன் தந்தையின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தவே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பாமா புரிந்து கொண்டாள். எப்படியோ ஒருவாறாக அவள் கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள். அங்கே சுபத்ரா அவளுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் சுபத்ராவின் முகத்தில் கோபம் கூத்தாடியது. எப்போதும் சிரித்துப் பேசி வேடிக்கையும், விளையாட்டுமாக இருக்கும் சுபத்ரா அன்று கோபத்தின் உச்சியில் இருந்தாள். மிக மிகக் கடுமையான கோபத்தில் இருந்த சுபத்ராவைக் கண்டதுமே பாமாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதோடு இல்லாமல் சுபத்ரா சொன்னதைக் கேட்ட பாமாவுக்கு உயிரையே விட்டு விடலாம் என்றே தோன்றியது. சுபத்ரா பாமாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை என்றும் அவள் இப்போது வந்ததின் காரணமே அவள் தந்தையால் அவள் அருமைச் சகோதரன் கொல்லப்பட இருந்ததைத் தவிர்க்க வேண்டியே வந்ததாகவும் தெரிவித்தாள். பாமா சுபத்ராவைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

Friday, November 13, 2015

பாமாவுக்குக் குழப்பம்!

சத்யபாமா தன் தந்தையின் அருகிலேயே அவர் கைகளை ஆதரவாகப் பற்றிய வண்ணம் அமர்ந்திருந்தாள். தந்தையின் கைகள் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது. எழுச்சியுற்ற மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தவிப்பதையும் உணர்ந்தாள். அவன் மனதிலிருந்த கொலை வெறி குறைந்து வருவதை அவன் கண்கள் காட்டியது. ஆனாலும் அவன் இன்னமும் குழப்பமானதொரு மனோநிலையிலேயே இருந்தான். அவன் மனம் இன்னமும் தெளிவுறவில்லை. சத்யபாமாவின் சிற்றன்னைமாரும், அவர்களின் பெண்களும் அங்கே கூடி இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. பேச்சில்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். தெளிவற்றதொரு அச்சம் அவர்களைப் பீடித்திருந்தது. சற்று நேரம் அப்படியே அமைதியாய்ச் சென்றது.

திடீரென சத்ராஜித் கெட்ட கனவு கண்டு விழித்தவன் போலத் தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்து அமர்ந்தான். தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அவனையும் அறியாமல் அவன் கைகள் ச்யமந்தக மணிமாலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. பழக்கவசத்தினால் அவன் கைகள் தானாக அந்த மாலையை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டன. சற்றே கரகரத்த குரலில் பாமாவைப் பார்த்து, “சத்யா, என்னைக் கோவிலுக்கு அழைத்துச் செல்! உடனே!” என்றான். “சரி, தந்தையே!” என்ற சத்யா எழுந்து நின்றாள். அவள் தோள்களின் மேல் தன் கைகளை வைத்த வண்ணம் எழுந்து நடந்தான் சத்ராஜித். அவர்களுக்கு என்றிருந்த தனி வாயில் வழியாக சத்யபாமா அவனைக் கோயிலுக்கு வழி நடத்திச் சென்றாள். அங்கே போனதும் தன்னை கர்பகிரஹத்தினுள் அழைத்துச் செல்லச் சொன்னான் சத்ராஜித். பாமா அப்படியே செய்தாள். அங்கு வழிபாடுகள் செய்வதற்கென இருந்த பூஜாரிகளை வெளியேறச் சொன்னான் சத்ராஜித். அவர்கள் அங்கிருந்து அகன்றதும் பாமா கதவுகளை மூடினாள்.

அரண்மனையிலிருந்து வரும்போதிலிருந்து அப்போது வரை மெல்லிய குரலில் காயத்ரி மந்திரத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணமாகச் சொல்லிக் கொண்டே வந்தான் சத்ராஜித். இப்போதும் அதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சூரியனை வழிபட்டுக் கொண்டே இருந்தான். கதவுகள் மூடப்பட்டதும், அங்கே கல்லால் செதுக்கப்பட்டிருந்த சூரிய பகவானின் சிற்பத்திற்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் ஓட்டிக் கொண்டு பயணிப்பது போல் அந்தச் சிற்பம் செதுக்கப் பட்டிருந்தது. கீழே விழுந்து வணங்கிய சத்ராஜித் பின் தன் மகளைப் பார்த்து அவளையும் வெளியேறுமாறு தன் கை அசைவில் சொன்னான். சத்யபாமாவும் அங்கிருந்து வெளியேறினாள். சுமார் அரைமணி நேரம் சென்றது. சத்ராஜித் கர்பகிரஹத்திலிருந்து வெளியே வந்தான். அவன் முகத்தில் காணப்பட்ட குழப்பம் காணாமல் போயிருந்தது. மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அவன்.

“பாமா, வா, நாம் இப்போது உணவு உண்ணச் செல்லலாம்!” என்று அவளை அழைத்தான். சத்யபாமா தன் தந்தை தன்னியல்பு நிலைக்குத் திரும்பி விட்டதைப் பெரிதும் விரும்பினாள். அதற்காக சந்தோஷம் அடைந்தாள். ஆனால் அவனிடம் தன்னம்பிக்கை குறைந்திருந்தாற்போல் தோன்றியது அவளுக்கு. முன்னிருந்த தன்னம்பிக்கை இப்போது அவனிடம் காணப்படவில்லையோ என நினைத்தாள். சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தார்கள் இருவரும். அங்கு கூடி இருந்த பிராமணர்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினான் சத்ராஜித். மற்றும் உணவு உண்ணக் கூடி இருந்த குடும்பத்து ஆண் நபர்களையும் பார்த்து வரவேற்கும் முறையில் வணங்கினான். ஆனால் எங்கும் பேச்சே இல்லை. அசாதாரணமான மௌனம் அங்கே சூழ்ந்திருந்தது. காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தாக்கம் அனைவர் மனதிலும் இன்னமும் இருந்தது. உணவுக்குப் பின்னர் சத்யபாமா தன்னறைக்குச் சென்றாள். அவள் சிற்றன்னையின் மகள்கள் மூவர் அவளுடன் அந்த அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்றைக்குத் தன் எஜமானி தன்னுடன் சரியான நேரத்துக்கு உணவு உண்டதில் தானும் வயிறும், மனமும் நிறைய உண்டிருந்த ஊரி தன் எஜமானியின் பின்னேயே சென்றது. அறைக்குப் போனதும் ஊரியை வழக்கம் போல் நன்கு குளிப்பாட்டினால் சத்யபாமா! பின்னர் தன்னோடு அதை அணைத்த வண்ணம் மத்தியானக் குட்டித் தூக்கத்துக்காகத் தன் படுக்கைக்குச் சென்றாள் பாமா.

அவளால் தூங்க முடியவில்லை. அவளருகே நெருக்கமாய்ப் படுத்துக் கொண்டது ஊரி. அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் பாமா. பின் மெல்லிய குரலில் அதன் காதில் கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பித்தாள்.  “ஊரி, ஊரி, உனக்கு சுயநலம் அதிகம் ஆகிவிட்டது. நீ மட்டும் அவனை வழி அனுப்பி வைக்கப் போனாய்! கூடவே என்னையும் அழைத்துப் போவதற்கென்ன? முட்டாள் பெண்ணே!” என்றாள். சொல்லிக் கொண்டே பூனையின் காதைப் பிடித்து இழுக்கத் தன் எஜமானியின் மனநிலையைப் புரிந்து கொண்ட அந்தப் பூனையும், “மியாவ்” என்று கத்தித் தன் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டது. சத்யபாமா தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தாள். “ இதைக் கேள் ஊரி! முட்டாள் பெண்ணே! அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் நல்ல அழகான இளம்பெண்ணாம். நீ என்ன சொல்கிறாய் ஊரி? என்ன நினைக்கிறாய்? ஆஹா! நான் மெய் சிலிர்த்துப்போனேன் தெரியுமா ஊரி? எப்போது என்கிறாயா? அவன் தோள்களில் இருந்து தகப்பனாரின் கைகளை விலக்குகையில் அவன் தோளின் மேல் என் கைகள் பட்டன. அந்த ஸ்பரிசம்! ஆஹா! ஊரி! ஊரி! அந்த ஸ்பரிசம்!”

“ஆனால் ஊரி! நீ என்ன செய்தாய்? அவனை உனதாக்கிக் கொண்டாய்! திடுமென உள்ளே நுழைந்து அவனைப் பார்த்து உன்னுடையவனாக்கிக் கொண்டு விட்டாய்! எவ்வளவு சுயநலம் உனக்கு! அவனும் உன்னை ஆக்ஷேபிக்காமல் உன் முதுகில் தட்டிக் கொடுத்து உன்னைத் தன் சிநேகிதியாக்கிக் கொண்டு விட்டானே! ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை! பேச எதுவும் இல்லையா என்ன? என்னிடம்பேசவே இல்லை! ம்ம்ம்ம்ம்? இல்லை….இல்லை. அவன் என்னிடம் பேசினான் அன்றோ! ஆம், பேசினான். என்னிடம் கூறினான். தங்கப் பானைகளை எடுத்துக் கொண்டு நான் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போயிருக்கக் கூடாது என்று சொன்னான். ஆம்! அது என் தவறு தான்! எங்களுடைய செல்வத்தை இப்படி எல்லாம் நான் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கக் கூடாது! கோவிந்தன் சொன்னது சரிதான்! ம்ம்ம்ம்ம்… அவன் கூறிய அந்தப் பாடல்! என்னால் அந்தப் பாடலின் முழு வரிகளையும் நினைவு கூர முடியவில்லை. ஒரு வீரக் கதாநாயகனின் மனைவி பாடும் அந்தப்பிரியாவிடைப் பாடல்கள்! ம்ம்ம்ம்ம்? நினைவில் இல்லை!”

“ஊரி, நாம் இன்னமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் கடைப்பிடிக்கும் க்ஷத்திரியர்களின் மனைவிகளைக் குறித்து அறிய வேண்டும். நான் இவ்வளவு நாட்களாக ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். வீரம் செறிந்த நாயகர்களின் நீதியையும், நேர்மையையும் குறித்து அறியாமல் போய்விட்டேன். அவர்களின் கடமைகளைக் குறித்துத் தெரிந்து கொள்ளவே இல்லை. ஊரி, ஊரி! நானும் அப்படி செயற்கரிய வீரச் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்வது! அதை எப்படிச் செய்வது என்பது ஒன்றும் புரியவே இல்லை!”தன்னையும் அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள் சத்யபாமா. “ஊரி, ஊரி! எனக்கு நம்பிக்கையே இல்லை. நான் திறனற்றுச் செயலற்றுப் போய்விட்டேன்! நான் அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ள சந்தோஷங்கள் அனைத்தையும் காட்ட வேண்டுமென நினைத்தேன். இதுவரை அவன் யாரிடமும் பெற்றிராத சுகத்தையும் பெறவேண்டும் என எண்ணினேன். எவராலும் கற்பனை செய்ய முடியாததொரு ஆனந்த வாழ்க்கையைக் காட்ட நினைத்தேன். ஆனால்……. ஆனால்…….அவன் சுகத்தையும் சௌக்கியத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் விரும்பவில்லை. வெறுக்கிறான். அதைக் கண்டனம் செய்கிறான். நான் இவ்வளவு மோசமானதொரு பெண் என்பதை நான் இன்று வரை அறியவே இல்லை, ஊரி!”

Thursday, November 12, 2015

கண்ணனுக்கு ஆபத்து!

கிருஷ்ணனின் அமைதியான பேச்சும், சாந்தமான சிரிப்பையும் கண்ட சத்ராஜித்தின் கோபம் கொதித்தது. ஆங்காரம் அதிகம் ஆனது.அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் கை முஷ்டிகளைக் குவித்தும், விரித்தும், ஓங்கிக் குத்தும் பாவனையில் முஷ்டியை ஓங்கியும் ஏதேதோ செய்தான். விரல்களைப் பிரித்துப் பிரித்து விரித்தான். கண்கள் சிவந்து விட்டன. அவனை அப்போது பார்க்கவே பயமாக இருந்தது. எனினும் கிருஷ்ணன் சிறிதும் அஞ்சவில்லை. திடீரெனத் தன் ஆசனத்தில் இருந்து குதித்து எழுந்தான் சத்ராஜித். தன் கைகளைக் கிருஷ்ணன் தோள்பட்டையின் மேல் வைத்த வண்ணம் அவனை எழுந்திருக்க விடாமல் ஆசனத்தில் அழுத்தியபடியே அவனைப் பார்த்து உறுமினான். உறுமிய வண்ணம் அவனை அப்படியே ஆசனத்தில் பின்பக்கமாக அழுத்திச் சரித்தான். “என் ச்யமந்தகமணிமாலையை என்னிடமிருந்து பிடுங்கி விடுவாயா நீ?” என்ற வண்ணம் கிருஷ்ணனை வேகமாக அழுத்திய வண்ணம், “என் ச்யமந்தகத்தையா என்னிடமிருந்து பிடுங்க நினைக்கிறாய்? சூரிய பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று கூறினான். சத்யபாமா வெளியே இருந்து அனைத்தையும் பார்த்தவளுக்குப் பயம் மேலிட்டது. அவள் தந்தை செய்வதை அவள் சிறிதும் ரசிக்கவில்லை. அவள் தந்தை மிகவும் வலுவும், பலமும் பொருந்தியதொரு மனிதர். கோபம் அதிகரித்தால் அவர் என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது. சமயம் வாய்க்கையில் ஒரு மனிதனைத் தன் வெறும் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய வலு வாய்ந்தவர். சில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு ஊழியன் சொன்னபடி செய்யவில்லை என்பதற்காக அவனைக் கழுத்தை நெரித்துத் தூக்கி எறிந்ததை பாமா நேரிலேயே பார்த்திருக்கிறாள். அதோடு இல்லாமல் எப்போதுமே அவர் இடுப்பில் அரைக்கச்சையில் மெலிதாக இருந்தாலும் கூர் வாய்ந்ததொரு குத்துவாள் மறைந்திருக்கும்.

ஆகவே சிறிதும் தாமதிக்காமல் அவள் அறைக்கதவைப் படீரெனத் திறந்து கொண்டு உள்புகுந்தாள். அவள் தந்தையின் கண்களில் தெரிந்த கொலை வெறியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ‘க்ரீச்’சிட்டுக் கத்தினாள். அவள் உடல் அனைத்தும் நடுங்கியது. ஒவ்வொரு பாகமும் துடித்தன. அவளையும் அறியாமல், “அப்பா, அப்பா, தந்தையே, வேண்டாம். வேண்டாம்!” என்றாள். ஆனால் இதை அவள் சொன்னாளா இல்லையா என்பது கூட அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த அறையில் அவளின் கூக்குரலே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பயத்தில் அலறினாள் சத்யபாமா! மாபெரும் வித்தகன் ஆன கோவிந்தன், கம்சனைக் கொன்று யாதவர்களைக் காத்து ரக்ஷித்தவன், எவராலும் தவிர்க்க முடியாத போர் வீரன், யாதவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், சாம்ராஜ்யங்களின் சச்சரவுகளைத் தீர்த்து வைத்து நன்மை செய்யும் நடுநிலை தவறாத மனிதன், தர்மத்தின் காவலன், இப்படிப்பட்ட வாசுதேவக் கிருஷ்ணன், இதோ இப்போது அவள் தந்தையின் கரங்களால் மடியப்போகிறான். பாமாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.

தன்னையும் அறியாமல் கிருஷ்ணன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அசையாமல் அமர்ந்திருந்தான் கிருஷ்ணன். அவன் தோள்பட்டைகள் கடினமாக உறுதிப்பட்டிருந்தன. சற்றே சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த கிருஷ்ணன் தன்னிரு கைகளாலும் ஆசனத்தின் கைப்பிடிகளை இருபக்கமும் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் தனக்கு உதவிக்காக மட்டும் அப்படிப் பிடித்திருக்கவில்லை. அவ்வாறு தன் கரங்களை அவனே கட்டுப்படுத்தவில்லை எனில் எந்த நேரமும் தான் சத்ராஜித்தைத் தாக்கி விடுவோம் என்னும் எண்ணம் தான் காரணம்.எவ்விதமான கஷ்டமும் படாமல் வெகு இயல்பாக சாதாரணமாக அமர்ந்திருந்தான். அவன் முகம் எவ்விதக் கஷ்டத்தையும் சிறிதும் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் சத்ராஜித்தின் இந்த நடவடிக்கையின் அவன் சிறிது கூட ஆச்சரியப்பட்டதாகவோ, உணர்ச்சி வசப்பட்டதாகவோ காட்டிக் கொள்ளவே இல்லை. அப்படியே அமர்ந்திருந்தவன் சத்ராஜித்தின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பயமோ, திகிலோ, உயிர் போய்விடுமோ என்ற அச்சமோ சிறிதும் காணமுடியவில்லை. ஒளிவீசிப் பிரகாசித்தன அவன் கண்களின் மணிகள். சற்றும் மாறாமல் விழிகளைச் சிறிதும் அசைக்காமல் சத்ராஜித்தையே அவை பார்த்தன.

அவன் தொண்டைக்குழியில் சிறியதொரு அசைவு அவ்வப்போது ஏற்பட்டதை சத்யபாமா பார்க்கவில்லை எனில் அவனைச் சிலை என்றே சொல்லலாம். அவன் முகத்திலும் மிக மிக மெலிதான ஓர் சிரிப்புக் காணப்பட்டது. விளையாட்டின் போது குறும்புச் சேட்டை செய்த குழந்தை கையும் களவுமாகப்பிடிபட்ட போது பெரியவர்களுக்கு ஏற்படும் ஆனந்தச் சிரிப்பு! அதை அனுபவித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். பாமாவுக்குப் புரிந்து விட்டது. கிருஷ்ணனின் அசையாத உடல் நிலையும், இரு கைகளாலும் மிக இறுக்கமாக ஆசனத்தின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் நிலையையும் பார்த்ததுமே இது தன்னைத் தானே மிக லாகவமாகச் சுயக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும் ஒரு மனிதனின் நிலை என்பதையும் இவன் சாதாரணமானவன் இல்லை; அசாதாரணமானவன் என்பதையும் உடனே புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கு பயத்தில் வியர்த்தது. கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்து முடிவும் எடுத்து விட்டான். அவள் தந்தையின் கொலை வெறியைத் தன் வலிமையாலோ உடல் பலத்தாலோ அடக்கக் கூடாது; அது கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுகிறான் என்பதை பாமா புரிந்து கொண்டு விட்டாள்.

ஆகவே ஓடோடித் தன் தந்தையின் பக்கம் சென்றாள். தன்னால் இயன்ற மட்டும் வலுவாக முயன்று அவர் கைகளைக் கிருஷ்ணன் தோள்களிலிருந்து நீக்க முயன்றாள். “அவரைத் தடுக்காதே, பாமா! என்னை அவரிடமிருந்து நீ காக்க வேண்டாம்!” என்றான் கிருஷ்ணன். மீண்டும் அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. பாமாவுக்குக் கிருஷ்ணன் சொன்னதை உடனே செய்ய வேண்டும் என்று தோன்ற அப்படியே அவள் தன் கைகளைத் தந்தையிடமிருந்து நீக்கினாள். கிருஷ்ணன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான். அவனையே பார்த்த சத்ராஜித் தன் கரங்களைக் கிருஷ்ணன் மேலிருந்து விலக்கிக் கொண்டான். ஆனால் அவையோ அவனுக்குக் கட்டுப்படாமல் தொய்ந்து விழுந்தன. ஆசனத்தின் கைப்பிடிகளை இறுகப் பிடித்திருந்த கிருஷ்ணனின் கைகள் மேல் மீண்டும் அமுக்கப் பார்த்த அந்தக் கரங்கள் திடீரென வலுவிழந்து தொய்ந்தன. அதோடு இல்லாமல் சத்ராஜித்துமே தன் பலம் முழுதும் இழந்தவன் போல் தன் ஆசனத்தில் தொப்பென்று அமர்ந்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் என்னமோ இன்னமும் கிருஷ்ணனைக் கொல்லத் தான் நினைக்கிறான். ஆனால் இயலவில்லை.

அப்போது சத்யபாமாவைத் தொடர்ந்து அந்தத் தாழ்வரைக்கு வந்திருந்த பாமாவின் செல்லப் பூனை ஊரிக்கு அங்குள்ள மாறுபட்ட சூழ்நிலையைக் கண்டதும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. மூவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே சென்றதும் நேரே கிருஷ்ணனின் ஆசனத்தின் அருகே சென்று அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டது. அதன் பச்சைநிறக் கண்கள் ஒருவித ஜொலிப்புடன் கிருஷ்ணனையே பார்த்தன. கிருஷ்ணனும் அந்தப் பூனையைப் பார்த்தான். தன் கரங்களால் அதைத் தடவிக் கொடுத்தான். தன் ஜன்மமே சாபல்யம் பெற்றுவிட்டாற்போல் ஊரி ‘மியாவ்’ என்றது. சந்தோஷத்தில் வாலையும் ஆட்டியது. சில நிமிடங்களில் அந்த அறைக்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு அரண்மனையின் பெண்கள் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள். அங்கே அசையாமல் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்த்துத்திகைத்து நின்றார்கள். சத்யபாமா தன் தந்தையின் அருகே அமர்ந்திருந்தாள். உடலின் வலுவை எல்லாம் இழந்தாற்போல் களைத்துச் சோர்ந்து அமர்ந்திருந்த அவர் கைகளின் ஒன்றைத் தன் கரங்களுக்குள் வைத்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக்கையானது அவள் கரங்களுக்குள்ளாக நடுங்கியது என்பதை அவளால் உணர முடிந்தது. அவன் களைத்துச் சோர்ந்திருப்பதை அவன் முகம் காட்டியது. உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தான். நெற்றிப் பொட்டில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்பட்டன.

சத்யபாமா வீரிட்டுக் கத்திய குரலைக் கேட்ட பங்ககராவும் ஷததன்வாவும் உடனே ஓடோடி வந்திருந்தனர். என்ன நடந்ததோ என்ற ஐயம் அவர்களுக்கும் இருந்தது. யாகம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அதை நடத்தி வைத்த வேத பிராமணர்களில் ஒரு சிலருக்கும் என்னவோ ஏதோ என்னும் அச்சத்தால் ஓடோடி வந்திருந்தனர். வந்தவர்கள் பங்ககராவுக்கும் ஷததன்வாவுக்கும் பின்னால் மறைந்து கொண்டு சத்ராஜித்தையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனிடம் அவன் நடந்து கொண்டிருந்த முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. சற்று நேரம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.பின்னர் திடீரெனக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் சொல்வது சரி எனினும் அது உங்கள் அறியாமையின் எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டும். உங்கள் அறியாமை விலகும்போது உங்களுக்கு க்ஷத்திரிய தர்மம் என்னவெனப் புரியும். அப்போது நீங்கள் தானாகவே ஒப்புக் கொள்வீர்கள். நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டுமானால் க்ஷத்திரிய தர்மம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அதன் மூலம் வாழ்க்கையின் மேம்பாடுகள் கிடைக்கும் என்பதை நீங்களாகவே ஒப்புக் கொள்வீர்கள்.” கிருஷ்ணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான். அது அவன் தலையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருந்தது. சத்ராஜித் பேச முயற்சித்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. அவன் முகத்தில் இன்னமும் குரோதம் தெரிந்தது.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே, இப்போது நான் விடை பெறுகிறேன். உங்கள் உணர்ச்சிகள் சமன் அடைந்ததும், நான் சொன்னதில் உள்ள நியாயமும், நீதியும் உங்களுக்குத் தானாகவே தெரிய வரும். நாளை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள்ளாக ச்யமந்தகமணிமாலை அக்ரூரரின் கஜானாவிற்கு வந்துவிட வேண்டும். இல்லை எனில்! நானே அதை எடுத்துக் கொள்வேன்!” என்று சற்றும் இரக்கமே தெரியாத குரலில் சொன்ன கிருஷ்ணன், தன் கரங்களைக் கூப்பி விடைபெற்றுவிட்டு தாழ்வரையை நோக்கி நடந்தான். பங்ககரா அவனை வழி அனுப்பி வைக்கக் கூடவே நடந்தான். ஊரியும் அவர்களைத் தொடர்ந்தது. பிரதான நுழைவாயிலில் கிருஷ்ணன் விடைபெற்றுச் செல்கையில் ஊரியைத் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஊரியும் சந்தோஷமாக, “மியாவ்” என்று அதை வரவேற்றுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

Sunday, November 8, 2015

ச்யமந்தக மணியைக் கொடுத்துவிடு!

சத்ராஜித்தின் கோபத்தைப்பார்த்துக் கிருஷ்ணன் அவனை எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு விசித்திரச் சிரிப்புடன், “ கோபம் அடையாதீர்கள், சத்ராஜித் அவர்களே! நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொன்னீர்கள்! நான் அதை நிராகரித்துவிட்டேன். இப்போது என் முறை! நான் என் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லை எனில் நிராகரிக்கலாமே! கோபம் ஏன்?” என்றான் கிருஷ்ணன் நிதானமாக. “என்ன நடந்தாலும் சரி! நான் ஒரு போதும் ச்யமந்தக மணியை விட்டுப் பிரிய மாட்டேன். அது கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டது! எனக்கு மட்டுமே உரியது!அதைப் பிரிய நான் சம்மதிக்க மாட்டேன்!” என்று குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் சத்ராஜித்.

“சத்ராஜித் அவர்களே! இப்போது சற்று முன்னர் தான் நீங்கள் உங்கள் மகள் சத்யபாமாவை மிகவும் விரும்புவதாகச் சொன்னீர்கள். அதோடு மட்டுமில்லாமல் உங்கள் அருமை மகள் சாத்யகனுக்கு மருமகளாக விரும்புவதையும் கூறினீர்கள். சாத்யகன் குடும்பத்தின் மருமகளாக உங்கள் மகள் செல்ல வேண்டுமெனில் அதற்குச் ச்யமந்தகம் ஒரு சிறு பரிசு தான். சிறிய விலை தான்! சாத்யகன் குடும்பத்தின் மதிப்பைக் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என எண்ணுகிறேன். நம் யாதவ குலத்திலேயே மிகவும் அருமையான மனிதர் அவர்.”

“ச்யமந்தகம், ச்யமந்தகம்!” திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான் சத்ராஜித். அவனால் இன்னமும் கிருஷ்ணன் ச்யமந்தகத்தைக் கேட்டதை நம்பவே முடியவில்லை. தன்னிடம் வந்து கூட ஒருவனால் இப்படி எல்லாம் கேட்க முடியுமா என்னும் வியப்பு அவனை விட்டு மறையவில்லை. “இல்லை, ஒருக்காலும் இல்லை! என்னால் ச்யமந்தக மணியைப் பிரிய இயலாது!” என்று மீண்டும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் கூறினான். “அப்படி எனில் நான் கேட்ட விலையைக் கொடுக்க நீங்கள் தயாராக இல்லை! என் விருப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது! அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “நான் சொல்வது சரிதானே?” என்றும் கேட்டான்.

“வாசுதேவ கிருஷ்ணா! உன் யோசனை மிகவும் அபத்தமானது! இதை எனக்குக் கொடுத்தது சூரிய பகவான் ஆகும். யாதவர்கள் அனைவருக்கும் என்று சொல்லிக் கொடுக்கவே இல்லை! அதை முதலில் புரிந்து கொள். சூரிய பகவானுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.” என்று மிகக் கோபமாகச் சொன்னான். இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டவன் போல் கிருஷ்ணன் பரிகாசச் சிரிப்புச் சிரிக்க சத்ராஜித்தின் கோபம் அதிகம் ஆனது. ஆனால் கிருஷ்ணன் விடாமல், “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே என எதையும் கொடுப்பதில்லை; ஒரு தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் கொடுப்பதில்லை; இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்குமாய்த் தான் கொடுக்கிறார்.” என்றவன் தொடர்ந்து, “நாங்கள் உன்னை உன் பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கிறோம்.” என்றும் கூறினான்.

அதற்கு சத்ராஜித் கிருஷ்ணனை அவமதிக்கும் குரலில், “என் பொறுப்புக்களை நானே சுமக்கிறேன்; அதிலிருந்து விடுபட நான் விரும்பவே இல்லை!” என்றான். கருணையுடன் சிரித்தான் கிருஷ்ணன். “அதனால் பரவாயில்லை, சத்ராஜித் அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நான் உங்களை உங்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்போகிறேன்.” என்றான். மேலும் தொடர்ந்து, “உங்கள் நன்மைக்காகவும் சொல்கிறேன். மற்ற யாதவர்களின் நன்மைக்காவும் சொல்கிறேன். ச்யமந்தமணிமாலை இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானாவில் அக்ரூரரின் பாதுகாப்பில் மட்டுமே! அது இருக்க வேண்டிய இடம் அது தான்!” என்றான் தீர்மானமாக!

“ஹா! ஹா! எப்படி அதை என்னிடமிருந்து எடுத்துச் செல்வாய்? உன்னால் அது முடியுமா? உன்னைத் தானே எல்லோரும் கடவுள் என்று சொல்கின்றனர்? நீ எடுத்துவிடுவாயா? நான் சவால் விடுகிறேன்! எவரால் இயலும் அது? ச்யமந்தக மணியை என்னிடமிருந்து பிரிப்பதற்காகவே நீ கடவுளைப்போல் நடிக்கிறாய்! உன்னால் ஒருக்காலும் இயலாது!” என்றான் சத்ராஜித். “அதை நீங்களாகவே கொடுத்துவிடுவீர்கள்! அது சரி, உக்ரசேன மகாராஜாவின் ஆணை கிடைத்தால்? அப்போது என்ன செய்வீர்கள்? ச்யமந்தகத்தைக் கொடுக்க மாட்டேன் என்று உக்ரசேனரிடம் சொல்வீர்களா?”

“கேட்டுப் பார்க்கச் சொல் அவரை!” வெடுக்கென்று பதில் சொன்ன சத்ராஜித் தன் குரலை உயர்த்தி, “ச்யமந்தகம் உங்களுக்கு வேண்டுமென்று நீங்கள் அனைவரும் விரும்பினால், நான் ஒவ்வொரு யாதவனுடனும் போரிடுவேன். ச்யமந்தகத்தை மீட்கப் போரிடுவேன். கடைசியில் பணபலமும், படைபலமும் உள்ள நானே வெற்றி பெறுவேன்.” என்றான்.

“நான் சொல்வது உங்கள் காதுக்கும், கருத்துக்கும் இனிமையானதாக இருக்காது சத்ராஜித் அவர்களே! உங்கள் சொந்த நன்மைக்காகவே சொல்கிறேன்! ச்யமந்தகத்தை அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். இந்த ஆபரணம் மெல்ல மெல்ல உங்களை அழித்துவிடும்!” என்றான் கிருஷ்ணன். “என்னை அழிக்குமா? வாசுதேவ கிருஷ்ணா! இதைக் கேள்! நீ ஆர்யவர்த்தத்தில் பெற்றதாகச் சொல்லப்படும் வெற்றிகள், ஆனால் எனக்கு இதைக் குறித்து சந்தேகம் இருக்கிறது! உண்மையாகவே நீ வெற்றி பெற்றிருப்பாயா? தெரியவில்லை! அப்படி ஒரு வேளை வெற்றிகளை அடைந்திருந்தாயானால் அவற்றால் உன் கர்வம் அதிகம் ஆகிவிட்டது. அவை உன் தலையை அதன் இடத்தில் வைக்க மறுக்கிறது. தலை தெரியாமல் நீ ஆடுகிறாய்!” என்று சத்தமாகக் கூவின சத்ராஜித் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றான்.

ஒரு குழந்தையைப் போல் அவனை வேடிக்கை பார்த்த கிருஷ்ணன், “என் தலை என் உடம்பில் இருக்கிற இடத்திலேயே இருக்கும்! அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டியது உங்களைக் குறித்து! உங்கள் தலையைக் குறித்து! அதை நீங்கள் இழக்காதிருக்க வேண்டுமானால் ச்யமந்தகத்தைக் கொடுத்தே ஆக வேண்டும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹா, ஹா, என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்துகிறாயா? வாசுதேவா?”

“இல்லை, ஐயா, இல்லை!நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்: ச்யமந்தகத்தை விரும்பினால் நானே எடுத்துக் கொண்டிருப்பேன். இப்படிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் ஆகவே நீங்களாகவே கொடுத்துவிடுங்கள்!”

Friday, November 6, 2015

கண்ணன் கேட்ட விலை! சத்ராஜித் அதிர்ச்சி!

“மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். சரியான ஊகமும் கூட! இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலையில் சாத்யகி மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே அவனைத் தப்புவிப்பதற்காக மாட்சிமை பொருந்திய சாத்யகர் இம்முடிவை எடுத்திருக்கிறார்.” என்றான் கண்ணன். “இதோ பார் வாசுதேவா! அவள் மிகவும் நல்ல பெண். என் குழந்தைகள் அனைவரிலும் இவளே மிகப் பிடித்தமானவள். மற்றக் குழந்தைகளை விடவும் இவளை நான் அதிகம் நேசிக்கிறேன்.” என்றான் சத்ராஜித்.

“அப்படியா? நீங்கள் சத்யபாமாவை மிகவும் அதிகமாக நேசிக்கிறீர்களா? அப்படி எனில் நீங்கள் உங்கள் ஆடம்பரத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் அவளை சாத்யகிக்குத் திருமணம் முடிக்க நினைப்பதை அவள் அறிய நேர்ந்தால்? அவள் மனம் வருந்த மாட்டாளா? இதை ஏற்றுக்கொள்வாள் என்று நினைக்கிறீர்களா? இதைக் குறித்து யோசித்துப் பார்த்தீர்களா?”

அதற்கு சத்ராஜித் மிகவும் கர்வத்துடனும், அகந்தையுடனும், “என் குழந்தைகள் திருமணம் அவர்களின் நன்மைக்காகவே நான் ஏற்பாடு செய்கிறேன். என் பணபலத்தையோ, தற்பெருமையையோ நிலை நாட்ட அல்ல!” என்றான். பின்னர் என்ன நினைத்தானோ மேலும் கூறினான்:”வாசுதேவா, நாம் பேச நினைத்த விஷயத்திலிருந்து வெகு தூரம் நாம் விலகி வேறு மார்க்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டோம். இப்போது மீண்டும் கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில்? நான் கேட்ட விலையைக் கொடுக்க நீ சம்மதிக்கிறாய் அல்லவா?” என்று கேட்டான்.

“ஐயா, இதன் முக்கியத்துவம் குறித்து நான் நன்கு அறிந்துள்ளேன். நீங்கள் சாத்யகரைப் பயமுறுத்த நினைக்கிறீர்கள். அல்லது இதன் மூலம் மற்ற யாதவத்தலைவர்களான எங்கள் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறீர்கள்.’ சத்யபாமா மூச்சு விடக்கூட மறந்து அங்கே நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டாள். அவள் இதயம் “தட், தட்” என்று மிகப் பலமாக சப்தித்தது. எங்கே அந்த சப்தம் உள்ளிருந்தவர்களுக்குக் கேட்டுவிடுமோ என்று பயப்படுபவள் போல் அவள் தன் நெஞ்சின் மேல் கையை வைத்து அழுத்திக் கொண்டு மேலும் உன்னிப்பாகக் கேட்டாள்.

“நான் மிரட்ட நினைக்கவில்லை, வாசுதேவா! இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஓர் விலை உண்டு. அதைக் கொடுத்தே ஆகவேண்டும். ஏன்! நீ நிலைநாட்டுவதற்கு முயலும் அந்த தர்மம்! அதற்கும் ஓர் விலை உண்டு! அதைக் கடைப்பிடிக்கவும் உரிய விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்!” ஏளனம் பொங்கச் சிரித்தான் சத்ராஜித்!

“பேரம் பேசியே அனைத்தையும் வாங்கி விடலாம்! அதுவும் உங்கள் பணபலத்தினால் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! ஆனால் இவ்வுலகில் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத சில நல்ல விஷயங்கள் உண்டு! அவற்றை நம்மால் பணத்தைக் காட்டி வாங்கவோ, விற்கவோ முடியாது!” என்றான் கிருஷ்ணன். வெளியே பாமாவின் இதயம் குதூகலத்தில் ஆழ்ந்தது. “விரைவில் என் உதவிக்கு வா கோவிந்தா! எனக்கு உதவி செய்! நான் என் வாழ்நாள் முழுவதும் உன் அடிமையாக இருப்பேன்! உனக்கே சேவைகள் செய்வேன்!” என்று தன் மனதிற்குள்ளாகப் பிரார்த்தித்தாள் சத்யபாமா.

“நீ வெளிப்படையாகப் பேசுவதாக நீ தான் சொல்லிக் கொண்டாய்! ஆகவே நானும் அப்படியே பேசினேன்! பேசுவேன்! இந்த ஈரேழு பதினாலு உலகங்களிலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கத்தான் செய்கிறது. அதை எவராலும் மறுக்க இயலாது!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சற்று நேரம் தான் பேச வேண்டியது என்ன என்று சிந்திப்பவன் போல் மௌனம் காத்தான். அதன் பின்னர் அவன் எவ்விதப் பற்றுதலையும் பேச்சில் காட்டாமல் பேச ஆரம்பித்தான்.” மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் ராஜா உக்ரசேனரை அவமதிக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா? அதோடு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களையும் அவமதிக்கிறீர்கள். அவர்களை அவமானம் செய்கிறீர்கள். உங்கள் கால்நடைச் செல்வங்களையும், குதிரைகள், ரதங்கள் போன்றவற்றையும் உங்கள் பண்ணைகளையும் மற்றும் உங்கள் அளப்பரிய செல்வங்களையும் காட்டிப் பிரமிக்க வைத்து உங்களுக்கு அடி பணிய வைக்க நினைக்கிறீர்கள். உங்கள் பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றியதன் மூலம் மற்ற யாதவர்களை ஏழையாக்கினீர்கள். ஐந்து சகோதரர்களுக்கும் தேவையான நேரத்தில் உதவி செய்ய மறுத்து விட்டீர்கள். அப்படியும் உங்களுக்குத் திருப்தியாக இல்லை. இப்போது மீண்டும் உங்கள் செல்வ வளத்தின் மூலம் அனைத்து யாதவர்களையும் பயமுறுத்த நினைக்கிறீர்கள். உங்கள் அடியாட்களைக் காட்டி மிரட்ட எண்ணுகிறீர்கள். இந்த வீரர்கள், குதிரைகள், ரதங்கள் அனைத்தையும் வைத்து ஒரு சிறுபடையைத் திரட்டி வைத்து இதன் மூலம் ஒரு மாபெரும் சிக்கலை உண்டாக்க நினைக்கிறீர்கள். வீரர்களுக்கும் மோதலை உருவாக்க எண்ணுகிறீர்கள்.   சாத்யகர் தன் மகனுக்கு உங்கள் மகளை மணமுடிக்க மறுத்ததன் மூலம் உங்கள் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணுகிறீர்கள். அதற்காகவே, அதைச் சரி செய்வதற்காகவே மீண்டும் உங்கள் மகளை வியாபாரப் பொருளாக்கி அவளை சாத்யகிக்கு மணமுடிக்க நினைக்கிறீர்கள். அதன் மூலம் இழந்த கௌரவம் மீண்டும் வந்துவிடும் என்று எண்ணுகிறீர்கள்!” கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான்.

“வாசுதேவா, சில சமயங்களில் நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய்! எனக்கு அப்போது உன்னை மிகவும் பிடிக்கிறது. நீ எல்லாவற்றையும் மிக நன்றாக அலசி ஆராய்ந்திருக்கிறாய்! உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளாய்!” என்று ஏளனமாகச் சொன்னான் சத்ராஜித்!  “ஆமாம், நான் உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளேன்! எல்லாவற்றையும் கவனமாகப் பார்க்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் நோக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்து அதை வாங்கிவிடலாம்!” என்றான் கிருஷ்ணன். சத்ராஜித் மௌனமாகத் தலையை அசைத்தான்.

மீண்டும் சற்று யோசித்த கிருஷ்ணன் மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை விரிந்தது. “ உங்கள் எண்ணங்களின் தாக்கம் என்னிடமும் வந்துவிட்டது போல் தெரிகிறது! மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நானும் இப்போது ஒரு சின்ன பேரம் செய்யப் போகிறேன். எனக்கும் இப்போது அதற்கான சமயம் வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. மனமும் அதை விரும்புகிறது!” என்று புன்னகை மாறாமலேயே சொன்னான். அவன் புன்னகையைப் பார்த்தால் மிகவும் வெகுளித்தனமாகக் கண்ணன் பேசுவதாகவே தோன்றியது. சத்ராஜித் அவனைப் பார்த்து, “என்னவானாலும் கேள், கிருஷ்ணா! உன்னுடைய பேரம் என்ன? அதை வெளிப்படையாகச் சொல்! அப்போது தான் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இயலும்!” என்றான்.

“நீங்கள் உங்கள் மகள் சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? ரொம்ப நல்லது! அதற்கு நான் இப்போது கேட்கப் போகும் விலையைத் தர நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”

“ஆம், தயாராகவே இருக்கிறேன். சாத்யகியை என் மருமகனாக அடைய நான் என்ன விலையைக் கொடுக்க வேண்டும்? சும்மாவானும் வெட்டிப் பேச்சுப் பேசாமல் விஷயத்துக்கு வா!” என்றான் சத்ராஜித்!

“பொறுமை, பொறுமை! சத்ராஜித் அவர்களே! அவசரம் வேண்டாம்! நீங்கள் தான் பேரத்தை ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் தான் நான் இப்போது பேரம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.”

சத்யபாமா மனம் உடைந்து நைந்து போனாள். கிருஷ்ணன் அப்படி என்னதான் கேட்கப் போகிறான்? “கிருஷ்ணா, கிருஷ்ணா, கோவிந்தா! என் தந்தை என்னை அவருடைய பணத் திமிரில் விற்கும்படி செய்து விடாதே! என்னைக் காப்பாற்று! அவருடைய கௌரவம் இதன் மூலம் திரும்பி வரும் என அவர் நினைப்பதைப் பொடிப்பொடியாக்கு! கிருஷ்ணா! என்னைக் காத்தருள்வாய்! கோவிந்தா! நீயே சரணம்!” அதற்குள்ளாக அங்கே சத்ராஜித் பொறுமை இழந்து மீண்டும் கேட்டான்.”என்ன விலை கேட்கிறாய்? சீக்கிரம் சொல்!” என்று அவசரப் படுத்தினான்.

கிருஷ்ணன் சாந்தமாகத் தன் சுட்டுவிரலை சத்ராஜித்தின் கழுத்தின் மேல் சுட்டினான். அவன் கைவிரல் சத்ராஜித்தின் ச்யமந்தக மணிமாலையைச் சுட்டியது. சத்ராஜித்தின் முகத்தின் கோபம் அந்த மணிமாலையிலும் பிரதிபலித்தது போல் அதுவும் தன் சிவந்த கதிர்களை அந்த அறை முழுதும் பரப்பி அறையையே ஒரு கோபாகிருகமாக மாற்றிக் கொண்டிருந்தது. “சத்ராஜித் அவர்களே! உங்கள் ச்யமந்தக மணிமாலையை மாமா அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். அது இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானா ஆகும். அக்ரூரர் தான் அரசனின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொக்கிஷாதிகாரியாக இருக்கிறார்! ஆகவே அவரிடம் கொடுங்கள்!” என்றான். சத்ராஜித்திற்கு அவன் காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. கிருஷ்ணனையே முறைத்துப் பார்த்தான். அவன் கண்கள் கோபத்தில் அங்குமிங்கும் உருண்டன.

“என்ன? என் ச்யமந்தக மணிமாலையையா நீ கேட்கிறாய்?”கோபத்தில் உறுமினான் சத்ராஜித்!



Friday, October 30, 2015

கண்ணன் கேள்வி! பாமா தவிப்பு!

மீண்டும் தன் கண்களை உருட்டி விழித்தான் சத்ராஜித்! தான் அடிக்கடி அப்படிச் செய்வதால் அனைவரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் அவன் உள் மனதில் இருந்தது. பின்னர் பேச ஆரம்பித்தான். “வாசுதேவா, நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். கேள்! நான் ஏன் சாத்யகியின் திமிர்த்தனத்தைக் குறித்து வெளிப்படையாகக் குறை கூற ஆரம்பித்தேன் என்பதை நீ அறிவாயா? சூரியபகவானின் கட்டளை அது! அவரின் உரிமைக்கட்டளை! ஆணை! அதை ஏற்காமல் அவன் மறுதலித்தான்,. இதன் மூலம் சூரிய பகவானையே அவமதித்திருக்கிறான். என்னையும் இவ்வுலகுக்கு முன்னர் அவமானம் செய்து விட்டான். அவன் மனதில் என்ன நினைக்கிறான்? என் மகளுக்கு அவன் மகனைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் என் மகளுக்கு மாபெரும் பரிசு கிட்டும் என்ற எண்ணமோ? அவ்வளவு உயர்வானவனா அந்த யுயுதானா சாத்யகி? ஹூம்! இதைத் தவிர வேறே என்ன எண்ணமோ, காரணமோ அந்த சாத்யகனுக்கு இருக்க முடியும். மனதில் குமுறும் எண்ணங்களைக் கட்டுப்படுத்திய வண்ணம் சத்யபாமா கதவுக்குப் பின்னால் கிருஷ்ணனின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

“சத்ராஜித் அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்! உங்கள் மகளை நீங்கள் எவ்வாறு வளர்த்திருக்கிறீர்கள் என்பதை நினைவு கூருங்கள். எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சில நிமிடங்களே நான் அவளைப் பார்த்தேன். அவள் அழகாகப் பார்க்க லட்சணமாக இளம்பெண்ணாகவும் இருக்கிறாள் தான்! அங்கே கதவின் வெளியே நின்றிருந்த சத்யபாமாவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. நாணம் அவள் முகத்தில் செம்மையைப் போர்த்த அவள் குனிந்து தன் செல்லப் பூனையான ஊரியின் காதில், “ஊரி, ஊரி, கேட்டாயா? வாசுதேவக் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் கேட்டாயா? நான் அழகான லட்சணமான இளம்பெண்ணாம்! கேட்டாயா?” அதற்குள்ளாக உள்ளே கண்ணன் தொடர்ந்து பேசவே அதைக் கவனித்தாள் பாமா.

“ஐயா, உங்கள் மகளை நீங்கள் மிக ஆடம்பரத்திலும், மிதமிஞ்சிய செல்வத்திலும் வளர்த்திருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நீங்கள், உங்கள் அதே நடைமுறையை உங்கள் பெண்ணிற்கும் பழக்கப்படுத்தி இருக்கிறீர்கள்.”

“எதனால் அப்படிச் சொல்கிறாய்?”

“அன்று வரவேற்புக்கு வந்த யாதவகுலப் பெண்டிர், எளிமையான ஆடைகளோடும் அனைவரின் தலையிலும் செப்புப் பானைகளையே சுமந்து வந்திருந்தார்கள். ஆனால் உங்கள் பெண்ணோ ஆடை, ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்ததோடு அல்லாமல் தங்கப்பானையைச் சுமந்து வந்திருந்தாள். அத்தனை பெண்களுக்கு நடுவே இவள் ஒருத்தி மட்டும் தங்கப்பானையைச் சுமந்து வருவது அனைவர் மனதையும் புண்படுத்தாதா? அவர்களின் சுய கௌரவத்தைப் பாதிக்காதா?” வெளியே இருந்த சத்யபாமாவுக்குத் தன் கன்னத்தில் கிருஷ்ணன் ஓங்கி ஓர் அறை கொடுத்தாற்போல் இருந்தது. தன் கன்னத்தைத் தன்னையுமறியாமல் பிடித்துக் கொண்டாள்.

“ஐயா, நாம் போர் வீரர்கள். இந்த ஆர்யவர்த்தத்தின் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்த க்ஷத்திரியர்கள் ஆவோம். க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள். அதற்கென ஒரு தனிப்பாரம்பரியமே நமக்கு உள்ளது. நேர்மையோடு கூடிய ஒரு அற்புதமான வீரம் நிறைந்த முடிவையே நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே வாழ்கிறோம். நம் வாழ்க்கையை அந்த வீரம் செறிந்த தினத்துக்காகவே அர்ப்பணித்தும் வருகிறோம். நாம் அப்படி வாழ்வதோடு அல்லாமல், நம் குழந்தைகளையும் அத்தகையதொரு வாழ்க்கைக்கே பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறோம். இப்போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஆடம்பரத்திலும் மிதமிஞ்சிய செல்வ வாழ்க்கையிலும் பழகிய உங்கள் பெண்ணுக்கு ஒரு வீரனுக்குப் போருக்குச் செல்லும்போது  விடை கொடுத்து அனுப்பும் மனைவியால் பாடப்படும் “பிரியாவிடைப்பாடல்” ஒன்று இருப்பதாவது தெரியுமா? இந்தப் பாடலைப் பாடித் தான் தன் கணவனை, தன் மகனை ஒவ்வொரு யாதவகுல க்ஷத்திரியப் பெண்ணும் மிகவும் கர்வத்துடனும், பெருமையுடனும் போர்க்களத்துக்கு அனுப்புவதை அவள் அறிவாளா? இதைப் பாடும்போது அவர்கள் அடையும் பெருமிதம் குறித்து அவள் உணர்ந்திருக்கிறாளா?”

அவமதிப்பைக் காட்டும் வகையில் ஒரு சீற்றம் மிகுந்த ஒலியை எழுப்பினான் சத்ராஜித். “இப்படி எல்லாம் சொல்வதன் மூலம், நீங்கள் மட்டுமே மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடுடனும் வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாய்! அல்லவா? அப்படியே இருக்கட்டும்! மேலே சொல்! கேட்போம். உன் மனதிலுள்ளதை வெளிப்படையாகக் கூறு!”

கிருஷ்ணன் தொடர்ந்தான்.”ஐயா, சாத்யகரைக் குறித்துத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா? மாட்சிமை பொருந்திய சாத்யகர் க்ஷத்திரிய தர்மத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருவதை அறிவீர்கள் அல்லவா? அவருடைய நேர்மையும் வீரமும் இந்த ஆர்யவர்த்தம் முழுவதும் பேசப்படுவதை அறிவீர்களா? அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இந்த க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கெனவே அர்ப்பணித்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அவரை எங்கள் முன் மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மானசிகத் தலவர் அவரே!”
“ஹா! எனக்குத் தெரியாதா அவனைப் பற்றி? அவன் ஓர் ஏழை! பரம ஏழை!” என்றான் சத்ராஜித் ஏளனம் தொனிக்க. “ஏழையாக இருப்பது மாபெரும் மன்னிக்கவே முடியாத குற்றம் அல்ல ஐயா! அது கீழான ஒன்றும் இல்லை. ஆனால் அவர் இப்படி ஓர் நிலைக்கு ஏன் வந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! அவர் ஒன்றும் இல்லாமல் இருந்து விடவில்லை! அவருடைய இந்நிலைக்கு நீங்களே காரணம்! நீங்களே பொறுப்பு!”

“நானா? ஹூம், நான் தான் காரணம் எனில் அதற்குத் தகுந்த மறுக்கமுடியாத காரணம் ஒன்று இருந்தாக வேண்டும்.”

“இல்லை ஐயா, அவர் உங்களுக்கும் மற்றவர்க்கும் தக்க பாடத்தைப் புகட்டி இருக்கிறார். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் இருந்ததன் மூலம், அவருடைய வீரத்தின் மூலம், நேர்மையின் மூலம் அனைவருக்கும் ஓர் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறார். அது மட்டுமா? தன்னுடைய செல்வம் முழுவதையும் பாண்டவர்களின் ராஜ்யம் நிலைபெற்று நிற்பதற்காகக் கொடுத்துவிட்டார். அதுவும் நீங்கள் கொடுக்காமல் மறுத்ததால் ஏற்படுத்தப்பட்ட செல்வக் குறைவை ஈடுகட்ட தன்னுடைய அனைத்தையும் கொடுத்தார். அவருடைய இந்தச் செய்கையால் தான் மற்ற யாதவர்களால் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கணிசமான செல்வத்தைக் கொடுக்க முடிந்தது. அவர் கொடுப்பதைப் பார்த்துவிட்டே அவர்களும் மனமுவந்து கொடுத்து உதவினார்கள். செல்வக் குறைவினால் ஏற்பட்டிருந்த இடைவெளியை இட்டு நிரப்பினார்கள்.”

“போனதெல்லாம் போகட்டும்! நான் அவனுக்கு ஓர் வாய்ப்புக் கொடுக்கிறேன். என் மகளை அவன் மகனுக்கு மணமுடிப்பதன் மூலம் அவன் மீண்டும் பணக்காரன் ஆகலாம்! இதற்கு அவன் ஒத்துக்கொள்ள வேண்டும்.”

“உங்கள் செல்வத்துக்கு ஈடாகத் தன் மகனைப் பேரம் பேசி விற்க சாத்யகர் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.”

“இது உனக்கும் அவனுக்கும் உள்ள தற்பெருமை! அதனால் விளைந்த அகந்தை! உங்களுடன் பிறந்தது!”

“ஐயா, இந்தத் தற்பெருமையினால் விளைந்த அகந்தை வீரர்களுக்கே உரியது. பணத்துக்கு அடி பணிய மாட்டோம் என்பவர்களுக்கே உரியது. ஒரு பெண், தன் வாழ்நாளில் பணத்தைத் தவிர, செல்வத்தையும் அது அளித்த சுகபோகங்களையும் தவிர வேறொன்றையும் அறியாதவள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணால் கடுமையான கட்டுப்பாடுகளும், நியம, நிஷ்டைகளும் கொண்டதொரு பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பமான சாத்யகன் குடும்பத்து மருமகளாக எப்படிப்பொருந்தி வருவாள்? அவளால் அங்கே நிலைத்து வாழ இயலுமா?


“அது மட்டும் இல்லை! சாத்யகன் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் க்ஷத்திரிய தர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பவர்கள். அதற்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிப்பவர்கள். அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள். போர்க்களத்திற்கு எந்நேரமும் சென்று தங்கள் நாட்டுக்காகவும், நட்புக்காகவும் போரிட்டு மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பவர்கள்! அவர்கள் வீட்டுப் பெண்களோ எனில் இத்தகைய ஆண்களைப் போர்க்களத்திற்குப் புன்னகையுடன் அனுப்பி வைப்பதோடு அல்லாமல் அவர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட ஆண்களையும், பெண்களையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் உங்கள் மகளால், ஆடம்பரமாகச் செல்வ போகத்தில் வளர்க்கப்பட்டவளால் ஒத்திசைவுடன் வாழ முடியுமா? அவர்களுக்குள் ஒத்துப் போகுமா?”

“என் மகள் மாறலாம். அல்லது அவளுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி யுயுதானா சாத்யகியைத் தன் பக்கம் அவள் மாற வைக்கலாம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.” என்றான் சத்ராஜித்!

Thursday, October 29, 2015

கண்ணா! எனக்கு வாழ்வு கொடு!

“ஐயா, நீங்கள் உங்களைத் தவிர மற்றவர் எவரைக் குறித்தேனும் எப்போதேனும் சிந்தித்திருக்கிறீர்களா?” என்று சாந்தமாகக் கேட்டான் கிருஷ்ணன். “ஏன்? எதற்காக நான் மற்றவரைக் குறித்துக் கவலைப்பட வேண்டும்?” சத்ராஜித் கோபத்துடனும், திமிருடனும் கேட்டான். “ஆம், அதைத் தான் நானும் காண்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் சொந்த சந்தோஷத்தைவிடவும் வேறெதுவும் உயர்வாகத் தெரியவில்லை.” என்ற கிருஷ்ணன் குரலில் கவலையின் தீவிரம் தெரிந்தது. “நான் என்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் நினைக்க முடியும். அதைக் குறித்தே கவலைப்படவும் முடியும். மற்றவர் சந்தோஷத்தைக் குறித்து எனக்கு என்ன? அவர்களைக் குறித்து அவர்களே கவலைப்படவேண்டும்! நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”
“ஐயா, நீங்கள் எதைத் தேடி அலைகிறீர்கள்? ஏற்கெனவே உங்களிடம் இருப்பது போதுமென உங்களுக்குத் தோன்றவில்லையா? தெரியவில்லையா?”
“சூரிய தேவன் எனக்கு இந்த ச்யமந்தக மணியை அளித்தான். இது ஒவ்வொரு நாளும் பொன்னை வாரி வழங்கக் கூடியது. இதன் மூலம் என் கௌரவமும் என் சந்தோஷமும் அதிகரிக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் எப்போது சந்தோஷத்தில் வைத்திருக்கிறது. மற்றவர்களை விட நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் இங்கே வந்து யாகங்கள் செய்யும் வேத பிராமணர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகப்பொன்னையும், பொருளையும் நான் வழங்குகிறேன். ஆகவே அவர்கள் என்னுடைய வாழ்க்கை செம்மையாகவும், சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் செய்கின்றனர். ஒவ்வொரு யாகத்திலும் நான் கொடுக்கும் அர்க்கியங்களைப் போல் இந்த சௌராஷ்டிரத்தில் எவரும் அளிக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக இதுவரை கண்டிராத அளவுக்குப் பிரம்மாண்டமாகச் செய்கிறேன்.” என்றபடி தன் உதடுகளைக் கோணலாக மடித்துக் கொண்டான். வக்கிரமான அவன் மனபாவத்தை முகம் காட்டியது. அதே கோபத்தோடு அவன் மேலும் பேச ஆரம்பித்தான். அப்போது அவன் முன்பற்களில் சில இல்லை என்பதைக் கிருஷ்ணன் கண்டான். அது வேறு அவன் வாயைத் திறக்கையில் மேலும் பயங்கரத்தை ஏற்படுத்தியது.
“ஹூம், என்னுடைய எதிரிகளை அழித்தொழிக்க வேண்டி நான் செய்வது……..” என்று இழுத்தவன் கிருஷ்ணனைப் பார்த்து, “ நீ செல்வத்தை இகழ்ச்சியாகக் கருதுகிறாய். நான் அப்படி அல்ல! அதை உயர்வாகக் கருதுகிறேன்.” என்றான். கிருஷ்ணன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“நான் ஒருபோதும் செல்வத்தை இகழ்வாகக் கருதியதில்லை; இனியும் கருத மாட்டேன். நான் செல்வத்தைத் தன்னுடைய சொந்த சுகபோகங்களுக்கு மட்டும் பயன்படுத்துபவர்களை மட்டுமே இகழ்ச்சியாகக் கருதுகிறேன். ஒருவரிடம் சொத்துக்கள் இருப்பது அவர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு அல்ல. அப்படிப் பயன்படுத்துவதை முட்டாள்தனம் என்றே நான் கருதுகிறேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அல்லது தெரிந்திருக்கலாம்.கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட இந்த மாபெரும் செல்வத்தின் மீது தர்மத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்றும் தர்மத்திற்காகவும் இந்தச் செல்வம் செலவிடப்படவேண்டும் என்றும் அதற்கான உரிமை தர்மத்திற்கும் உண்டெனவும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; புரிந்திருக்கலாம்; அதை ஒப்புக்கொள்ளலாம்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவா, நான் என்னுடைய நிலையைத் தெளிவாக உன்னிடம் கூறிவிட்டேன். என்னுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியும். அது என் செல்வத்தை நான் பெருக்கிக் கொள்வது மட்டுமே ஆகும். எவருடைய கற்பனைக்கும் எட்டாத உயரத்திற்கு என் செல்வம் என்னைக் கொண்டு சேர்க்கும். மற்ற எவரையும் விட நானும் என் குடும்பமும் வாழ்க்கையை மிக நன்றாக ஆனந்தமாக அனுபவிப்போம்.” என்று சொன்ன சத்ராஜித்தின் குரலில் தெரிந்த மிதமிஞ்சிய கர்வம் கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தான். அவன் முகத்தில் எப்போதும் நிலை கொண்டிருக்கும் சிரிப்புக் காணாமல் போனது. பின்னர் மெல்ல சத்ராஜித்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஐயா, உங்கள் தற்பெருமையை விடவும், சுயப் புகழ்ச்சியை விடவும் உயர்ந்ததாக ஒன்று இவ்வுலகில் இருப்பதைத் தாங்கள் உணர்வீர்களா? அதைக் குறித்து அறிவீர்களா?” என்று கிருஷ்ணன் சத்ராஜித்தைப் பார்த்துக் கேட்டான். கிருஷ்ணனையே கோபத்துடன் முறைத்துப் பார்த்தான் சத்ராஜித். சில நிமிடங்கள் சஎன்றன. அதன் பின்னர் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா! நீ மற்றவர்க்கு வேண்டுமானால் ஒரு கடவுளாக இருக்கலாம். உன்னைப் புகழ்ந்து போற்றித் துதித்துக் கொண்டு உன் பின்னே வருபவர்களுக்கு நீ ஒரு கடவுளாக இருக்கலாம். ஆனால் உன்னைப் போன்ற ஒருவன் வாயால் என்னைக் குறித்த விமரிசனங்கள் செய்யப்படுவதை நான் சிறிதும் விரும்பவில்லை. ஆகவே நீ என்னைக் குறித்து எதுவும் பேசாதே!” என்றான். அவன் முகத்தில் தெரிந்த கோபத்தை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்திலேயே கிருஷ்ணன் எதிர்கொண்டான். “ஐயா, உங்களைக் குறித்த விமரிசனங்களை நீங்கள் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கக் கூடியது! இது தான் உங்கள் கடைசி பதிலா? அப்படி எனில், நான் இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சுக்களைப் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  யாதவர்களால் தர்மம் நிலைநாட்டப்படும். அது மட்டும் நிச்சயம்!” என்றான்.

பின்னர் தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான் கிருஷ்ணன். தன் ஆசனத்திலிருந்து விடை பெறும் பாவனையில் எழுந்து கொண்டான். அப்போது திடீரென சத்ராஜித்தின் முகம் மாறியது. அவன் மொத்த உடல் மொழியும் மாறத் தொடங்கியது. ஒரு தேர்ந்த நடிகனைப் போல் தன்னுடைய மனோபாவத்தை அவன் மாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவன் முகத்தில் இதுவரை இல்லாத சிரிப்பு மலர, கிருஷ்ணனைப் பார்த்து ஆசனத்தில் அமரும்படி வேண்டிக் கொண்டான். அதைப் பார்த்து வியந்த கிருஷ்ணன் ஆசனத்தில் அமர்ந்தான். அப்போது சத்ராஜித் பேச ஆரம்பித்தான்.

“வாசுதேவா, யாதவர்களுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியாது; உன்னுடைய சொந்த தர்மம் என்னவென்றும் நான் அறியேன். அது எனக்குத் தெரியவும் வேண்டாம். தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் மற்ற யாதவர்களால் கொடுக்கப்பட்ட என்னுடைய பங்குச் செல்வத்தை வேண்டியே நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் சத்ராஜித். “உங்களுக்கு அது புரிந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி ஐயா!” என்றான் கிருஷ்ணன்.

“வாசுதேவா, நீ உன்னுடைய தர்மம் என்று எதைச் சொல்கிறாயோ அதை நிறைவேற்ற நிலை நாட்ட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நான் சொல்லுகிறேன் கேள்! உன் எதிரே இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழியில் நீ எனக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கலாம். நீ துவாரகைக்குத் திரும்புகிறாய் என்னும் செய்தி கிடைத்த அந்த நாளில் இருந்தே இதற்கான சந்தர்ப்பம் உருவாகும், நீ உருவாக்குவாய் என்பதை எதிர்பார்த்து நான் அதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.” இந்த இடத்தில் சற்று நிறுத்திய சத்ராஜித் தன் கர்வம் பொங்கும் முகத்தில் புன்சிரிப்போடு கிருஷ்ணனைப் பார்த்தான். அதோடு நிற்காமல் எதிரே தெரிந்த பச்சைப்பசும்புற்கள் நிறைந்த மைதானத்தைச் சுட்டிக் காட்டினான். அங்கே அவனுடைய விலை உயர்ந்த குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதன் மூலம் தன் குதிரைப்படை வளத்தைச் சொல்கிறான் என்பதைக் கிருஷ்ணனும் அறிந்தான்.

“ஆம், நீங்கள் ஒரு மோதலுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்பதை நானும் அறிவேன்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் மெல்லத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேச ஆரம்பித்தான். ஆனால் அவன் குரலில் உறுதியும் தெரிந்தது. ஆழ்ந்து ஆராய்ந்து ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதைச் சொல்லும் தொனியும் தெரிந்தது. தன் ஒவ்வொரு வார்த்தைகளையும் திட்டமிட்டு அளந்து பேசினான். யாதவர்களின் மேல் மோதல் ஏற்படுத்தப்பட்டால் அதை நாங்கள் எதிர்கொள்வோம். தைரியமாக எதிர்கொள்வோம். தர்மத்தைக் காக்கவேண்டி அது ஏற்பட்டால், அதை நாங்கள் எதிர்த்து நிற்போம். தர்மம் அதைத் தேவை எனக் கருதினால் நாங்கள் அதை எதிர்கொள்வோம். நான் சொல்வது சத்தியமான வார்த்தை! அதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இறுதியில் வெல்லப்போவது நீங்கள் அல்ல! அதுவும் நிச்சயம்!” என்றான். பின்னர் திடீரென நினைத்துக் கொண்டவன் போல, “அது என்ன இன்னொரு வழி? அதைக் குறித்து நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே?” என்றும் கேட்டான்.

“அடுத்த வழியா? அது என்னவெனில் என்னுடைய பங்குச் செல்வத்தை நான் இழந்தே ஆகவேண்டுமெனில் அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்! அதைக் கொடுங்கள்!” என்றான் சத்ராஜித். “விலை? என்ன விலை? அதைச் சொல்லுங்கள்! யாதவர்கள் உங்களுக்கு என்ன விலை கொடுத்தால் நீங்கள் உங்கள் பங்குச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பீர்கள்? அது சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் சத்ராஜித் அவர்களே! இந்த பேரத்தைப் பேசுவதன் மூலமாக நீங்கள் மற்ற யாதவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள நினைக்கிறீர்கள்! அதை நினைவில் இருத்தவும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஆம், அப்படித்தான், என் விலையும் அப்படி ஒன்றும் கடினமான ஒன்றல்ல! எளிதில் கொடுக்கக் கூடிய ஒன்றே! என் ஒரே மகள், அருமை மகள் சத்யபாமாவை உன் அருமைச் சிநேகிதன் சாத்யகி, யுயுதானா சாத்யகி மணந்து கொள்ள வேண்டும். சாத்யகனிடம் உனக்கும், உன் தந்தை வசுதேவனுக்கும் உள்ள செல்வாக்கை நான் நன்கறிவேன். சாத்யகனை என் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துங்கள். அவனை இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வையுங்கள்!”

கதவுகளுக்குப் பின்னர் நின்று கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமா மயக்கமுறும் நிலைக்குப் போய்விட்டாள். அவள் தந்தையின் பேரம் அவளை அதிர வைத்தது. அவள் மெல்லக் கதவைக் கொஞ்சம் உள்ளே பார்க்கும்படியாகத் திறந்தாள். அப்போது தான் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைச் சிறிதும் விடாமல் கேட்க முடியும். அவள் தலைவிதியையே நிர்ணயிக்கும் இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவை அறிய அவள் மிகவும் ஆவலுடனும், ஆத்திரத்துடனும் காத்திருந்தாள்.

“சாத்யகி உங்கள் மகளை மணக்க விரும்பவில்லை. அவன் தற்சமயம் திருமணத்தையே விரும்பவில்லை!” என்றான் கிருஷ்ணன். “அது உங்கள் சொந்த விஷயம்! எனக்கு அதில் சம்பந்தம் ஏதும் இல்லை! என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய சிறந்த சிநேகிதன்!” என்று கொஞ்சம் வித்தியாசமான குரலில் கூறினான் சத்ராஜித். மேலும் தொடர்ந்து, “சத்யபாமாவை மனைவியாக ஏற்கும்படி அவனிடம் கூறு. உன் நட்பை வைத்து அவனை வற்புறுத்து. நிச்சயமாக என் மகள் ஓர் நல்ல மனைவியாக இருப்பாள். அதற்கு நான் உறுதிமொழி தருகிறேன்.” என்றான் சத்ராஜித்.

கிருஷ்ணன் இதற்குத் தரப்போகும் பதிலில் தான் தன் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக வெளியே காத்திருந்த சத்யபாமா நினைத்தாள். தன் மனதினுள் மானசிகமாகப் பிரார்த்தனைகள் செய்தாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா, ஓ, கோவிந்தா! நீ ஒரு கடவுள் என அனைவரும் சொல்கின்றனரே! அது மட்டும் உண்மையானால், தயவு செய்து, ஆம், தயவு செய் கிருஷ்ணா! என்னுடைய இந்தப் பிரார்த்தனைகள் உன் செவிகளில் விழட்டும்! சாத்யகியின் மனைவியாக நான் ஆவதைத் தடுப்பது இப்போது உன் கரங்களில் தான் இருக்கிறது!” என்று மௌனமாகப் பிரார்த்தித்தாள்.

கிருஷ்ணனோ சத்ராஜித்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லும் தொனியில் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! சாத்யகி ஏன் உங்களை மணக்க மறுக்கின்றான் என்பதற்கான காரணத்தை நீங்கள் கண்டு பிடித்தீர்களா? அதற்கான முயற்சிகளைச் செய்தீர்களா?” என்று கேட்டான்.

“ஓ, எனக்கு அது நன்றாகவே தெரியும். அந்த முட்டாள் சாத்யகன், என்னை விட அவன் மிகப் பெரிய தலைவன், சிறந்த தலைவன் என்று நினைக்கிறான். அதனால் என்னை அவமானப்படுத்துவதற்காகவே இந்தத் திருமணத்தை ஏற்க மறுக்கிறான்.  அவன் கண்களின் முன்னால் நான் தீண்டத்தகாதவனாகத் தெரிகிறேன். என் மகள் உயர்ந்த யாதவ குலத்தில் தான் பிறந்திருக்கிறாள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான். அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் மகனைப் போல் என் மகளும் ஒரு யாதவகுலப் பெண் தான் என்பது! அவனுடைய இந்தச் சூழ்ச்சியை நான் முறியடிப்பேன். அவன் தற்பெருமையை அடியோடு அழிப்பேன்!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சிரித்தான். “நிச்சயமாக நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தத் திருமணம் நடைபெறாமல் போனதற்கு இதைவிட வேறு காரணங்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நிச்சயமாய் வேறு காரணங்கள் தான்!” என்றான் கிருஷ்ணன்.