Friday, November 13, 2015

பாமாவுக்குக் குழப்பம்!

சத்யபாமா தன் தந்தையின் அருகிலேயே அவர் கைகளை ஆதரவாகப் பற்றிய வண்ணம் அமர்ந்திருந்தாள். தந்தையின் கைகள் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது. எழுச்சியுற்ற மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தவிப்பதையும் உணர்ந்தாள். அவன் மனதிலிருந்த கொலை வெறி குறைந்து வருவதை அவன் கண்கள் காட்டியது. ஆனாலும் அவன் இன்னமும் குழப்பமானதொரு மனோநிலையிலேயே இருந்தான். அவன் மனம் இன்னமும் தெளிவுறவில்லை. சத்யபாமாவின் சிற்றன்னைமாரும், அவர்களின் பெண்களும் அங்கே கூடி இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. பேச்சில்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். தெளிவற்றதொரு அச்சம் அவர்களைப் பீடித்திருந்தது. சற்று நேரம் அப்படியே அமைதியாய்ச் சென்றது.

திடீரென சத்ராஜித் கெட்ட கனவு கண்டு விழித்தவன் போலத் தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்து அமர்ந்தான். தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அவனையும் அறியாமல் அவன் கைகள் ச்யமந்தக மணிமாலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. பழக்கவசத்தினால் அவன் கைகள் தானாக அந்த மாலையை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டன. சற்றே கரகரத்த குரலில் பாமாவைப் பார்த்து, “சத்யா, என்னைக் கோவிலுக்கு அழைத்துச் செல்! உடனே!” என்றான். “சரி, தந்தையே!” என்ற சத்யா எழுந்து நின்றாள். அவள் தோள்களின் மேல் தன் கைகளை வைத்த வண்ணம் எழுந்து நடந்தான் சத்ராஜித். அவர்களுக்கு என்றிருந்த தனி வாயில் வழியாக சத்யபாமா அவனைக் கோயிலுக்கு வழி நடத்திச் சென்றாள். அங்கே போனதும் தன்னை கர்பகிரஹத்தினுள் அழைத்துச் செல்லச் சொன்னான் சத்ராஜித். பாமா அப்படியே செய்தாள். அங்கு வழிபாடுகள் செய்வதற்கென இருந்த பூஜாரிகளை வெளியேறச் சொன்னான் சத்ராஜித். அவர்கள் அங்கிருந்து அகன்றதும் பாமா கதவுகளை மூடினாள்.

அரண்மனையிலிருந்து வரும்போதிலிருந்து அப்போது வரை மெல்லிய குரலில் காயத்ரி மந்திரத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணமாகச் சொல்லிக் கொண்டே வந்தான் சத்ராஜித். இப்போதும் அதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சூரியனை வழிபட்டுக் கொண்டே இருந்தான். கதவுகள் மூடப்பட்டதும், அங்கே கல்லால் செதுக்கப்பட்டிருந்த சூரிய பகவானின் சிற்பத்திற்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் ஓட்டிக் கொண்டு பயணிப்பது போல் அந்தச் சிற்பம் செதுக்கப் பட்டிருந்தது. கீழே விழுந்து வணங்கிய சத்ராஜித் பின் தன் மகளைப் பார்த்து அவளையும் வெளியேறுமாறு தன் கை அசைவில் சொன்னான். சத்யபாமாவும் அங்கிருந்து வெளியேறினாள். சுமார் அரைமணி நேரம் சென்றது. சத்ராஜித் கர்பகிரஹத்திலிருந்து வெளியே வந்தான். அவன் முகத்தில் காணப்பட்ட குழப்பம் காணாமல் போயிருந்தது. மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அவன்.

“பாமா, வா, நாம் இப்போது உணவு உண்ணச் செல்லலாம்!” என்று அவளை அழைத்தான். சத்யபாமா தன் தந்தை தன்னியல்பு நிலைக்குத் திரும்பி விட்டதைப் பெரிதும் விரும்பினாள். அதற்காக சந்தோஷம் அடைந்தாள். ஆனால் அவனிடம் தன்னம்பிக்கை குறைந்திருந்தாற்போல் தோன்றியது அவளுக்கு. முன்னிருந்த தன்னம்பிக்கை இப்போது அவனிடம் காணப்படவில்லையோ என நினைத்தாள். சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தார்கள் இருவரும். அங்கு கூடி இருந்த பிராமணர்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினான் சத்ராஜித். மற்றும் உணவு உண்ணக் கூடி இருந்த குடும்பத்து ஆண் நபர்களையும் பார்த்து வரவேற்கும் முறையில் வணங்கினான். ஆனால் எங்கும் பேச்சே இல்லை. அசாதாரணமான மௌனம் அங்கே சூழ்ந்திருந்தது. காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தாக்கம் அனைவர் மனதிலும் இன்னமும் இருந்தது. உணவுக்குப் பின்னர் சத்யபாமா தன்னறைக்குச் சென்றாள். அவள் சிற்றன்னையின் மகள்கள் மூவர் அவளுடன் அந்த அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்றைக்குத் தன் எஜமானி தன்னுடன் சரியான நேரத்துக்கு உணவு உண்டதில் தானும் வயிறும், மனமும் நிறைய உண்டிருந்த ஊரி தன் எஜமானியின் பின்னேயே சென்றது. அறைக்குப் போனதும் ஊரியை வழக்கம் போல் நன்கு குளிப்பாட்டினால் சத்யபாமா! பின்னர் தன்னோடு அதை அணைத்த வண்ணம் மத்தியானக் குட்டித் தூக்கத்துக்காகத் தன் படுக்கைக்குச் சென்றாள் பாமா.

அவளால் தூங்க முடியவில்லை. அவளருகே நெருக்கமாய்ப் படுத்துக் கொண்டது ஊரி. அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் பாமா. பின் மெல்லிய குரலில் அதன் காதில் கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பித்தாள்.  “ஊரி, ஊரி, உனக்கு சுயநலம் அதிகம் ஆகிவிட்டது. நீ மட்டும் அவனை வழி அனுப்பி வைக்கப் போனாய்! கூடவே என்னையும் அழைத்துப் போவதற்கென்ன? முட்டாள் பெண்ணே!” என்றாள். சொல்லிக் கொண்டே பூனையின் காதைப் பிடித்து இழுக்கத் தன் எஜமானியின் மனநிலையைப் புரிந்து கொண்ட அந்தப் பூனையும், “மியாவ்” என்று கத்தித் தன் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டது. சத்யபாமா தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தாள். “ இதைக் கேள் ஊரி! முட்டாள் பெண்ணே! அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் நல்ல அழகான இளம்பெண்ணாம். நீ என்ன சொல்கிறாய் ஊரி? என்ன நினைக்கிறாய்? ஆஹா! நான் மெய் சிலிர்த்துப்போனேன் தெரியுமா ஊரி? எப்போது என்கிறாயா? அவன் தோள்களில் இருந்து தகப்பனாரின் கைகளை விலக்குகையில் அவன் தோளின் மேல் என் கைகள் பட்டன. அந்த ஸ்பரிசம்! ஆஹா! ஊரி! ஊரி! அந்த ஸ்பரிசம்!”

“ஆனால் ஊரி! நீ என்ன செய்தாய்? அவனை உனதாக்கிக் கொண்டாய்! திடுமென உள்ளே நுழைந்து அவனைப் பார்த்து உன்னுடையவனாக்கிக் கொண்டு விட்டாய்! எவ்வளவு சுயநலம் உனக்கு! அவனும் உன்னை ஆக்ஷேபிக்காமல் உன் முதுகில் தட்டிக் கொடுத்து உன்னைத் தன் சிநேகிதியாக்கிக் கொண்டு விட்டானே! ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை! பேச எதுவும் இல்லையா என்ன? என்னிடம்பேசவே இல்லை! ம்ம்ம்ம்ம்? இல்லை….இல்லை. அவன் என்னிடம் பேசினான் அன்றோ! ஆம், பேசினான். என்னிடம் கூறினான். தங்கப் பானைகளை எடுத்துக் கொண்டு நான் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போயிருக்கக் கூடாது என்று சொன்னான். ஆம்! அது என் தவறு தான்! எங்களுடைய செல்வத்தை இப்படி எல்லாம் நான் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கக் கூடாது! கோவிந்தன் சொன்னது சரிதான்! ம்ம்ம்ம்ம்… அவன் கூறிய அந்தப் பாடல்! என்னால் அந்தப் பாடலின் முழு வரிகளையும் நினைவு கூர முடியவில்லை. ஒரு வீரக் கதாநாயகனின் மனைவி பாடும் அந்தப்பிரியாவிடைப் பாடல்கள்! ம்ம்ம்ம்ம்? நினைவில் இல்லை!”

“ஊரி, நாம் இன்னமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் கடைப்பிடிக்கும் க்ஷத்திரியர்களின் மனைவிகளைக் குறித்து அறிய வேண்டும். நான் இவ்வளவு நாட்களாக ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். வீரம் செறிந்த நாயகர்களின் நீதியையும், நேர்மையையும் குறித்து அறியாமல் போய்விட்டேன். அவர்களின் கடமைகளைக் குறித்துத் தெரிந்து கொள்ளவே இல்லை. ஊரி, ஊரி! நானும் அப்படி செயற்கரிய வீரச் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்வது! அதை எப்படிச் செய்வது என்பது ஒன்றும் புரியவே இல்லை!”தன்னையும் அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள் சத்யபாமா. “ஊரி, ஊரி! எனக்கு நம்பிக்கையே இல்லை. நான் திறனற்றுச் செயலற்றுப் போய்விட்டேன்! நான் அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ள சந்தோஷங்கள் அனைத்தையும் காட்ட வேண்டுமென நினைத்தேன். இதுவரை அவன் யாரிடமும் பெற்றிராத சுகத்தையும் பெறவேண்டும் என எண்ணினேன். எவராலும் கற்பனை செய்ய முடியாததொரு ஆனந்த வாழ்க்கையைக் காட்ட நினைத்தேன். ஆனால்……. ஆனால்…….அவன் சுகத்தையும் சௌக்கியத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் விரும்பவில்லை. வெறுக்கிறான். அதைக் கண்டனம் செய்கிறான். நான் இவ்வளவு மோசமானதொரு பெண் என்பதை நான் இன்று வரை அறியவே இல்லை, ஊரி!”

1 comment:

ஸ்ரீராம். said...

ஊரி எனும் நட்பு!