Monday, October 31, 2016

யுதிஷ்டிரன் கெஞ்சல், பீமன் மறுப்பு!

மூன்று தினங்கள் சென்றன. சகோதரர்கள் ஐவரும், கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோருடனும், மற்றும் த்வைபாயனரும், தௌம்யரும் தலைமை வகிக்க நகரில், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கண்டறியக் கிளம்பினார்கள். “இப்போது அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று யுதிஷ்டிரன் வினவினான். பீமனோ அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். எல்லையற்ற மகிழ்ச்சி! “கவலைப்படாதே, மூத்தவனே! நான் இருக்கிறேன். என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்து முடித்தாயிற்று. நாங்கள் இங்கிருந்து கிரிவ்ரஜம் சென்று திரும்ப இந்திரப் பிரஸ்தம் வந்ததற்கான பயணத்துக்கான நாட்கள் மூன்று வாரங்கள். அவை கூட வீணாகப் போகவில்லை.”

“நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?” யுதிஷ்டிரன் கேட்டான்.

“மரியாதைக்குரிய நம் மாமனாரும் பாஞ்சால அரசருமான துருபதர் அவர் மகன் பட்டத்து இளவரசன் த்ருஷ்டத்யும்னனை இங்கே நமக்கு உதவிகள் செய்ய வேண்டி அனுப்பி உள்ளார்.  இவர்களோடு காசியின் சுஷர்மனும், மகதத்தின் சகாதேவனும், மத்ராவின் ஷால்யனும்  கூட நம் படைகளுடன் ஓர் குழுவாகச் சேர்வதற்குத் திட்டமிடுகின்றனர். அதைத் தவிர யாதவர்களில் சிலரும் தங்கள் ரதப் படை வீரர்களுடன் வருவார்கள் என்று கிருஷ்ணனும் சொல்லி இருக்கிறான்.” என்றான் பீமன்.

“ஆஹா! இது என்ன பீமா? இத்தனை வலிமை வாய்ந்த படை திரட்டலுக்குக் காரணம் என்ன? நாமோ அமைதியைத் தானே விரும்புகிறோம்! இவ்வளவு பிரம்மாண்டமான படை திரட்டலைக் கண்டு எனக்கு சந்தோஷம் ஏதும் உண்டாகவில்லை! இது மாபெரும் யுத்தத்தையே உண்டாக்கும்.” என்றான் யுதிஷ்டிரன். “இன்னும் பதினைந்து நாட்களில் இருநூறு மஹாரதிகளும், இருபது அதிரதிகளும் இங்கே கூடிவிடுவார்கள்.” என்றான் பீமன் கண்கள் பளிச்சிட. தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் முறையில் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான். “மூத்தவனே, மறந்தே போய் விட்டேன். ஒரு ராக்ஷசவர்த்தத்தில் இருந்தும் ஒரு சின்ன ராணுவக் குழு வீரர்கள் கிளம்பி வருகின்றனர்.” என்றான் சிரித்த வண்ணம். இதைக் கேட்டதும் த்வைபாயனரைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

“ராக்ஷசர்களா?” என்றான் யுதிஷ்டிரன். “ஆம், அவர்களுக்கு என் மகன் கடோத்கஜன் தலைமை வகித்து வருகிறான்.” என்றான் பீமன். அவன் முகமே புன்னகையில் விரிந்தது. “மூத்தவனே, அவன் முகம் வேண்டுமானால் கொடூரமாகக் கடுமையாகக் காட்சி அளிக்கலாம். ஆனால் அவன் இதயம் மிகவும் மென்மையானது. அன்பு நிறைந்தது. கருணை மிக்கவன். ஒவ்வொரு வருஷமும் அவன் என்னை வந்து சந்தித்துத் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்தே ஆகவேண்டும் என்று செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான். அதனால் இப்போது வரச் சொன்னேன்.” என்றான். அதிர்ச்சியில் திகைத்து நின்றிருந்த யுதிஷ்டிரனோ மீண்டும், “கடோத்கஜனா? அவன் எதற்கு இங்கே? இங்கே வந்து என்ன செய்யப் போகிறான்?” என்றான் மறுபடி மறுபடி.

“அவன் வந்து நம்முடைய எதிரிகளான ராக்ஷசர்களை அழிப்பான்!” என்றான் பீமன். “அதெல்லாம் சரி அப்பா. ஆனால் அவன் மக்கள், ராக்ஷசர்கள்? அவர்கள் மனித மாமிசம் சாப்பிடுபவர்களே! அவர்கள் இங்கே வந்தால் அதன் மூலம் புனிதமான அக்னியே புனிதம் இழந்து விடும்.” என்றான் யுதிஷ்டிரன். பீமனின் இந்த முன்னேற்பாடுகள் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தான். இப்படியா நடக்கக் கூடாதவை எல்லாம் நடக்க வேண்டும்!

“ஹூம், அண்ணா, என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாய்? நான் முன்னரே இடும்பிக்குச் செய்தி அனுப்பி விட்டேன். கடோத்கஜனோ அல்லது அவனுடன் வரும் வீரர்களோ மனித மாமிசத்தைத் தொடக் கூட அனுமதி இல்லை என்று. அதற்கு அவளும் சம்மதித்துவிட்டாள். புனிதமான அக்னி வளர்க்கப்படும்போது கடைப்பிடிக்கும் நியமங்களைக் கடைப்பிடிப்பதாகவும் மனித மாமிசத்தைத் தொடக் கூடப் போவதில்லை என்றும் கடோத்கஜனும் எனக்குச் செய்தி அனுப்பி விட்டான்.” என்றான் பீமன். பின்னர் சிரித்த வண்ணம் த்வைபாயனரை கள்ளப் பார்வை பார்த்தவண்ணம் சொன்னான். “மாட்சிமை பொருந்திய ஆசாரியருக்கு அவனை நன்றாகத் தெரியும். நான் அவனைக் கடத்தியபோது ஆசாரியர் தான் அவனைக் கவனித்துக் கொண்டார். ஒரு தாயைப் போல் கவனித்துக் கொண்டார்.” என்றான் பீமன். த்வைபாயனரும் அதைக் கேட்டுச் சிரித்து விட்டார். மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

பீமன் தொடர்ந்தான்: “கடோத்கஜன் உண்மையில் எவ்வளவு நல்லவன் தெரியுமா? அண்ணா, அவன் வரட்டும், நீ அவனுடன் பழகிப் பார்த்ததும் அவன் மேல் அளவற்ற அன்பு கொள்வாய்! அவன் என்னை விட மிகச் சிறந்தவன் நல்லவனும் கூட!” என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான். ஆனாலும் யுதிஷ்டிரனுக்குச் சமாதானம் ஆகவில்லை. “அதெல்லாம் சரி, பீமா. இத்தனை பெரிய படையைத் திரட்டி நாம் என்ன செய்யப் போகிறோம்? இவை எல்லாம் எதற்காக?” என்று மீண்டும் கவலையுடன் கேட்டான். “ஹா, அப்படிக் கேள், பெரியவனே! நாங்கள் திக்விஜயம் கிளம்பப் போகிறோம். இந்த உலகையே சுற்றி வரப் போகிறோம். வெற்றி கொள்ளப் போகிறோம். ஜராசந்தனை எதற்காக நான் கொன்றேன் என்று நினைக்கிறாய்? அவனுடைய ஆட்களிடம் என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்வதற்கா? ஒரு நாளும் இல்லை! அதோடு இதை மறக்காதே!”

“சேதி நாட்டு அரசன் சிசுபாலன், தந்தவக்கிரன் மற்றும் ஷால்வ நாட்டு மன்னன் ஆகியோர் நம்முடைய நண்பர்கள் அல்ல. துரியோதனனின் நண்பர்கள். ஜராசந்தன் இறந்தாலும் சரி, இருந்தாலும் சரி இவர்கள் எப்போதும் நம்முடைய எதிரிகளே! முக்கியமான எதிரிகள். நம்முடைய இந்திரப் பிரஸ்த நகருக்கு அவர்களிடமிருந்து எந்த வழியிலேனும் தாக்குதல்கள் வராமல் இருக்க வேண்டும். அதற்காகவே நான் இவ்வளவு பெரிய ராணுவப் படைகளைத் தயார் செய்து வருகிறேன். எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க விரும்புகிறேன்.”

“தயவு செய், பீமா, தயவு செய்! போர் மட்டும் வேண்டாம்.” என்றான் யுதிஷ்டிரன் மீண்டும் கெஞ்சலாக. “ஆஹா, அண்ணா, நான் யார்? நாம் யார்? க்ஷத்திரியர்கள்! அரச குலத்தினர்! அரசகுலத்தினருக்கும் க்ஷத்திரியர்களுக்கும் இது ஓர் தர்மம் அன்றோ? க்ஷத்திரிய தர்மத்தை மீற என்னால் முடியாது! ஒரு போருக்கு நீ ஆயத்தம் ஆனால் தான் முழு அமைதியை நிலை நாட்டவே முடியும்!” என்றான் பீமன் மீண்டும்.

“பீமா, பீமா, தயவு செய்து நான் சொல்வதைக் கேள்! நம்முடன் வந்து சேர்ந்திருக்கும் அரசர்களின் காரணமாகவோ அல்லது வரவிருக்கும் அரசர்களாலோ நாம் அவர்களை வெற்றி கொண்டதாக அர்த்தம் இல்லை. எந்தப் போரும் அவர்களுடன் நமக்கு இல்லை. ஆனால் அதற்கும் நான் உனக்குத் தான் நன்றி சொல்லியாக வேண்டும். எவ்விதமான போரும் இல்லாமல் ரத்தமும் சிந்தாமல் இவ்வளவு பெரிய ஆதரவாளர்களைத் திரட்டியதற்கு உனக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றான் யுதிஷ்டிரன்.

“நாம் வேண்டிய அளவு ரத்தம் சிந்தியாகி விட்டது. ஆம், ஜராசந்தனை நான் இரு கூறாகப் பிளந்த போது ரத்தம் கொட்டியது.” என்ற பீமன் மீண்டும் மனக்கண்களில் அந்தக் காட்சியைக் கண்டு ரசித்துச் சிரித்தான். பின்னர் கொஞ்சம் தீவிரமான தொனியில், “நேர்மையாகவும், சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாமலும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பவர்களும் ஒழுங்காகவும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டுமெனில் தீமைகளும் தீமைகளைச் செய்பவர்களும் அழிய வேண்டும். அதர்மம் மேலோங்காமல் இருக்க வேண்டுமெனில் தர்மம் தழைக வேண்டுமெனில் இது நடக்க வேண்டும். இதைத் தான் தர்மம் வேண்டுகிறது.” என்றவன் சற்று நிறுத்தினான். பின்னர் ஏளனமாக, “நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்பதும் உனக்கு என்ன தேவை என்பதும் நான் அறிவேன் மூத்தவனே! நன்கறிவேன். உனக்கு அமைதி, சமாதானம் தேவை.. அதற்கு என்ன விலை கொடுத்தேனும் வாங்க நினைக்கிறாய். அதற்காக இந்திரப்பிரஸ்தத்தை துரியோதனன் கேட்டால் கூடக் கொடுத்து விடுவாய், அது மட்டுமல்ல, எங்களையும் அவனிடம் கொடுத்துவிடுவாய்!” என்றான்.  

Sunday, October 30, 2016

இந்திரப் பிரஸ்தத்தை நோக்கி!

மகதச் சக்கரவர்த்தி சகாதேவனும், அவன் மகன்களும் ராஜசூய யாகத்திற்குக் கட்டாயமாய் வருவதாக வாக்களித்தார்கள். மேகசந்தி தன் தந்தை சகாதேவன் யுதிஷ்டிரனுக்கு அளித்த விலை மதிக்க முடியாத பரிசுகளுடன் கிருஷ்ண வாசுதேவன், பீமன், அர்ஜுனன் ஆக்யோருடன் இந்திரப் பிரஸ்தம் கிளம்பினான். உத்தவனும் மற்ற அதிரதிகளும், மஹாரதிகளும் பின் தொடர விடுவிக்கப்பட்ட அரசர்களும் மகிழ்வுடன் இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள். அவரவருக்குக் கிடைத்த ரதங்களிலும் மாட்டு வண்டிகளிலும் பயணத்தைத் தொடர்ந்தனர். மல்லர்களில் பலரும் மிகவும் மகிழ்வோடு இந்திரப் பிரஸ்தம் நோக்கிக் கால்நடையாகவே வந்தார்கள். மொத்தத்தில் போரில் வெற்றியடைந்த படை வீரர்கள் மகிழ்ச்சியுடன் தாய் நாடு திரும்பும் கோலத்தை நினைவூட்டியது அது.

ஜராசந்தன் மரணத்தை வென்றவன் என அனைவராலும் நம்பப் பட்டிருக்க இப்போது அவன் கொல்லப்பட்ட செய்தியும் எவ்விதமான போரோ முற்றுகையோ இல்லாமல் ஜராசந்தனால் அடைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதும் மகத நாட்டு கிரிவ்ரஜத்திலிருந்து வாய் வழிச் செய்தியாகவே அண்டை நாடுகளுக்கெல்லாம் பரவியது. இந்த விஷயத்தைக் கேள்விப் பட்ட பலரும் இத்தகைய அரிய செயலைச் செய்த வெற்றி வீரர்களை தரிசிக்க வேண்டி சாலையோரத்தில் கூடினார்கள். சாலையின் இருமருங்கும் மக்கள் கூடி நின்று ஆர்ப்பரித்து வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகள் சொன்னார்கள். கிருஷ்ண வாசுதேவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்கள் பிறவிப் பயன் பூர்த்தி அடைந்ததாகவே நினைத்துக் கொண்டனர். செல்லும் வழியில் காசி ராஜ்யத்தின் அரசனும், பீமனின் மைத்துனனும் ஆன சுஷர்மா அவர்களை வரவேற்றுப் பெரும் விருந்தளித்துப் பெருமைப் படுத்தினான். அதே போல் திரௌபதியின் தந்தை துருபதனும் இந்த வீர தீர சாகசங்களை நிகழ்த்திய வீரர்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளித்து கௌரவம் செய்தார். பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசனும், திரௌபதியின் சகோதரனும் ஆன திருஷ்டத்யும்னன் கிருஷ்ணன் முதலானோருடன் சேர்ந்து கொண்டு அவனும் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்வதற்காக இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினான்.

இந்திரப் பிரஸ்தமும் வந்தது. நகரின் மக்கள் அனைவரும் நகருக்கு வெளியே உள்ள புற வாயிலில் கூடி இருந்தனர். மொத்த நகரமும் அங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு வந்தது போல் இருந்தது. தங்கள் அபிமானத்துக்கும் பாசத்துக்கும் உரிய இளவரசர்களும், கிருஷ்ண வாசுதேவனும் செய்த வீர தீர சாகசங்கள் அவர்களையும் வந்து எட்டி இருந்ததால் ஆரவாரமாக மிகப் பெரிய முறையில் வரவேற்பு அளிக்க வேண்டி அங்கே குழுமினார்கள். யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீருடன் அனைவரையும் வரவேற்றான். கிருஷ்ண வாசுதேவன் அவன் கால்களில் விழுந்து வணங்கினான். எப்படி ஒரு மகா துஷ்டனும், கொடுமைக்காரனும் ஆன சக்கரவர்த்தியை எவ்விதமானப் போர் முற்றுகையோ, மோதல்களோ இல்லாமல் கொன்றதன் மூலம் தன்னுடைய சக்கரவர்த்தி பதவிக்கு மாபெரும் அங்கீகாரத்தைக் கிருஷ்ணன் பெற்றுக்கொடுத்து விட்டதாக யுதிஷ்டிரன் நினைத்தான். யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ண வாசுதேவன் வெற்றியுடன் திரும்பி வரும் செய்தி கிட்டியதுமே த்வைபாயனருக்குச் செய்தி சொல்லி அவரையும் வரவழைத்திருந்தான். ஆகவே அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி வீரர்களுக்கு ஆசிகள் வழங்கவென த்வைபாயனரும் வந்திருந்தார்.

விழா இனிதே முடிந்ததும் த்வைபாயனர் தௌம்யரின் ஆசிரமம் திரும்பினார். ஆனால் அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்ததை அவர் முகம் காட்டியது. அவரைப் போன்ற முனிவர்கள், ரிஷிகளுக்கு ஜராசந்தன் செய்யவிருந்த உயிர்ப்பலி போன்ற விஷயங்கள் மிகவும் பாவம் என்பதோடு அது கண்டிக்கத்தக்க மாபெரும் குற்றமும் ஆகும். அதிலும் ஜராசந்தன் நூறு அரசர்களைத் திரட்டி அவர்களை யாகம் என்னும் பெயரில் பலி கொடுக்கப் போகிறான் என்னும் செய்தி அவரை எட்டியதிலிருந்தே அவர் இரவும், பகலும் தூங்கவில்லை. ஒவ்வொரு சமயம் அவருக்குத் தாமே நேரில் சென்று ஜராசந்தனைச் சந்தித்து இந்த விஷயத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம் என்றும் அப்படித் தம்மை அவன் கொல்ல நேர்ந்தால் இதற்காகத் தாம் உயிர் துறக்கலாம் என்றும் நினைத்திருந்தார். ஆனால் அவர் கடவுளரிடம் இதைக் குறித்துப் பேசியதில் அவருக்கு ஜராசந்தனைச் சென்று பார்க்க அனுமதி கிட்டவில்லை. அதிலும் சூரிய பகவான் இதற்கெனத் தகுந்த மனிதன் இருக்கிறான் என்றும் அவனைப் போய்த் தேடிப்பார்க்குமாறும் அந்த மனிதனால் மட்டுமே உயிர்ப்பலியைத் தடுக்க இயலும் என்றும் அவருக்குச் சில அடையாளங்கள் மூலம் காட்டி இருந்தான். ஆகவே சூரிய பகவானின் உத்தரவை அவரால் மீற முடியவில்லை!

கடந்த இரு வருடங்களாகவே குரு வம்சத்தில் நல்ல திடமான வலுவான சாம்ராஜ்யத்தை அளிக்கும் அளவுக்கு மனோபலமுள்ள அரசன் யாரும் பட்டம் ஏறவில்லை. இது அவருக்குக் கவலையை அளித்தது. அவர் நியோக முறையில் குழந்தைகளைப் பெற்றதே இப்போது வீணாகிவிடுமோ என்னும் அளவுக்குக் கவலை கொண்டிருந்தார். ஆகவே அவர் திரும்பத் திரும்ப சூரியனிடம் வேண்டிக் கொண்டார். ஆத்மபலத்தை அதிகரிக்கச் செய்யும் காயத்ரி மந்திரத்தை நாள் முழுவதும் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வந்தார். அதன் மூலம் ஓர் நிரந்தரமான தர்மத்தின் பாதுகாவலனைத் தனக்குக் கிடைக்கச் செய்யுமாறு வேண்டி வந்தார். அந்த மனிதனே பின்னாட்களில் சாஸ்வதமான தர்ம குப்தாவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினார். எல்லையற்ற, அழிவற்ற தர்மத்தை அவன் ஒருவனால் மட்டுமே பாதுகாக்க முடியும். த்வைபாயனரால் அஸ்திவாரம் போட்டு எழுப்பப் பட்ட தர்மத்தின் கோட்டையை அவன் தூக்கி நிறுத்த வேண்டும். அத்தகையதொரு மனிதனே அவருக்குத் தேவை.

ஏற்கெனவே ஓரிரு முறைகள் கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்ததில் இருந்து த்வைபாயனருக்கு அவன் மேல் தனியானதொரு ஈடுபாடு இருந்து வந்தது. அவனுடைய குண நலன்களால் அவர் வசீகரிக்கப்பட்டார். அவனுடைய மெல்லிய ஆனால் அதே சமயம் வலுவுள்ள உடல், எப்போதும் சிரிக்கும் கண்களோடும் புன்னகையுடன் கூடிய உதடுகளோடும் கூடிய வசீகரமான முகம், அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டால் கூட அந்த முகத்தில் விகாரம் என்பதையே பார்க்க முடியவில்லை. அவன் பேசுகையில் கண்ட அவன் சொல் வன்மை, அந்த வன்மையினால் அனைவரையும் தன் பக்கம் கட்டிப் போடும் அவன் திறமை! அவன் திறமையால் கண்டுகொள்ளும் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் குறித்த அவன் தீர்க்கமான முடிவுகள், தீர்ப்புகள், எவ்விதமான பிரச்னைகளையும், சங்கடமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் சமயோசிதமான செயல்கள் எல்லாவற்றுக்கும் மேல் தர்மத்தைப் பாதுகாக்கவேண்டும் என்னும் அவனுடைய துடிப்பு, அதற்கான அவன் ஈர்ப்பு, உணர்வுகள். அனைத்துமே அவரைக் கவர்ந்திருந்தன.

ஜராசந்தன் இறந்துவிட்டான் என்னும் செய்தியும், ஆரிய வம்சத்து  அரசர்கள் 98 பேர்களும் விடுவிக்கப் பட்டனர் என்னும் செய்தியும் ஆசாரியர் வியாசரை வந்தடைந்தபோது அவர் இது கிருஷ்ணன் செயல் தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். ஆரியர்களிடையே புதியதொரு சகாப்தம் உருவாகப் போகிறது என்பதையும் அதன் காரணகர்த்தாவாக இந்தக் கிருஷ்ண வாசுதேவன் விளங்குவான் என்றும் புரிந்து கொண்டார். அவர் கண்களுக்குமே அவன் ஓர் கடவுளாகவே தெரிந்தான். எல்லையற்ற ஆற்றல் படைத்த கடவுள்! ஜராசந்தனை முறியடித்ததன் மூலம் அவன் 98 அரசர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறான். எப்போது என்று சொல்ல முடியாததொரு கால கட்டத்தில் வருண பகவான், கடவுளரில் மிகவும் பெரியவனாக இருப்பவன், ராஜா ஹரிசந்திரன் பலி கொடுக்கவிருந்த ஷுனக்ஷேபனைக் காப்பாற்றி அருளியது போல் இப்போது கிருஷ்ணன் செய்திருக்கிறான்.
கிருஷ்ண வாசுதேவன் ஆசாரியர் வியாசர் கால்களிலும் விழுந்து வணங்கினான். ஆசாரியரோ அவனை ஆசீர்வதிக்கும் முன்னர் அவனைத் தூக்கி நிறுத்தித் தன்னோடு அணைத்துக் கொண்டார். அவன் தனக்குக் கிடைத்ததே சூரிய பகவானின் அருள் என்னும்படியாக மிகவும் நன்றியுடனும், அன்புடனும் அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். த்வைபாயனர் இத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்தவனைக் கண்டு பிடித்து விட்டார். ஆம்! அவர் தேடியது நிரந்தரமாக தர்மத்தின் பாதுகாவலன் ஒருவனை! அந்த ஒருவன் இதோ! இங்கே இருக்கிறான்! இவனை விட யார் அதற்குத் தகுதி வாய்ந்தவர். அவர் தேடல் முடிந்து விட்டது! வரவேண்டியவன் வந்து விட்டான்!

Saturday, October 29, 2016

மகதச் சக்கரவர்த்தியானான் ஜராசந்தன் மகன் சகாதேவன்!

கிருஷ்ணன் தன் இடத்தில் உட்கார முடியாமல் ஏற்கெனவே தவித்துக் கொண்டிருந்தவன் பீமனிடம் ஓடோடி வந்து அவனை அணைத்துக் கொண்டு முகமன் கூறி வாழ்த்துகள் தெரிவித்தான். ஆனால் அங்கே குழுமி இருந்த மக்கள் கூட்டமோ திகைப்பிலும் அச்சத்திலும் அங்கும் இங்குமாக ஓடித் தப்பிக்க முயன்றது. பெண்கள் பயத்தில் அலறினார்கள். குழந்தைகள் அதைக் கண்டு மேலும் பயத்துடன் தங்கள் தாய்மாரைக் கட்டிக் கொண்டு அழுதனர். ஒரு சிலர் வாயிலுக்கு ஓடோடிச் சென்று வெளியேற முற்பட்டனர். புனிதமானவர்கள் என்று கருதப்பட்ட மல்லர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் திகைத்தனர். தங்கள் தலைவனுக்கும் மரணம் நேரிடும் என்பது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இப்போது அவன் உண்மையாகவே இறந்துவிட்டான். இனி என்ன? திகைத்தனர்! அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்து போய் நின்றனர். அவர்கள் இது நாள் வரையிலும் ஜராசந்தனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த மக்களைப் பாடாய்ப் படுத்தி வந்தனர். இப்போது அவற்றுக்கெல்லாம் இந்த மக்கள் நம்மைப் பழிவாங்கி விடுவார்களோ என்று அச்சம் கொண்டனர்.

மேகசந்தி ஒரு கண் ஜாடை காட்டவே தயாராகக் காத்திருந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு அந்த மல்லர்களைச் சுற்றி நின்று கொண்டனர். அனைவரும் கைகளில் உருவிய வாளோடு அடுத்த ஆணைக்குக் காத்திருந்தனர். இந்த மல்லர்கள் இனிப் புனிதமானவர்கள் அல்ல. இவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம். அதைப் பார்த்த மக்கள் மனதில் தங்கள் கொடூரமான அரசன் உண்மையாகவே இறந்துவிட்டான் என்பதும், இந்த மல்லர்களால் இனி தங்களுக்குக் கேடு ஒன்றும் விளையப் போவதில்லை என்பதும் தெரிந்ததும் அச்சம் மெல்ல மெல்ல நீங்கியது. அவர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். மேகசந்தியின் தகப்பன் ஆன சகாதேவனோ இத்தனை வருடங்களாகத் தன் தகப்பனின் கொடூரத் தன்மையின் ஆழத்தில் இருந்தவன். அதில் தன்னிலை இழந்திருந்தான். இப்போதும் அவனுக்கு நடப்பது என்னவெனத் தெரியாமல் போகவே கிருஷ்ணன் கூறியபடி அர்ஜுனன் அவனருகே சென்று அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தான். சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்ததும் தன்னைப் பிடித்திருந்த மாயவலை அறுபட்டதைப் போல் கண்ணீர் பொங்கக் கிருஷ்ணன் கால்களில் விழுந்து வணங்கினான்.

நடுங்கும் கரங்களுடன் கைகளைக் கூப்பிய வண்ணம் தழுதழுத்த குரலில், “கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெய மங்களம்! வெற்றி உண்டாகட்டும்!” என்று வாழ்த்தினான். கிருஷ்ணன் சகாதேவனைத் தூக்கி அணைத்துக் கொண்டான். “உன் தந்தை மிகப் பெரிய மனிதர் தான். மகா மனிதர் தான்! ஆனால் அவருக்குப் பெரிய மனிதராகவும் மகானாக்கவும் இருப்பது எப்படி என்று புரியவில்லை. தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு அவருடைய மகத்துவம் உதவி இருக்க வேண்டும். மாறாக நடந்து கொண்டார். உன் தந்தையின் அளப்பரிய சக்தியுடன் தர்மத்தின் பால் அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வும் இருந்திருக்குமானால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். போனது போகட்டும்! இனி மகத நாட்டுக்கு நீயே சக்கரவர்த்தி! உன்னுடைய முதல் ஆணை சிறைப்பிடித்து வைத்திருக்கும் அரசர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்வதே! அதற்கான ஆணையை உடனே பிறப்பித்து விடு!” என்றான்.

சகாதேவன் உடனடியாக ஜராசந்தனின் ராஜரதத்தை அங்கே வரவழைத்தான். கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன் உடன் வர அந்த கிரிவ்ரஜ மலையின் உச்சிக்குச் சென்றான். அங்கே தான் அரசர்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலை இருந்தது. கிருஷ்ணனை அங்கே பார்த்ததுமே அங்கே காவலுக்கு இருந்த மல்லர்கள் ஓட்டமாக ஓடிவிட்டனர். போதாதற்கு ஜராசந்தனின் ராஜரதத்திலே அவர்கள் வந்திருந்தார்கள். ஆகவே அவர்களுக்கு முழுவதுமாகப் புரியாவிட்டாலும் ஓரளவுக்குப் புரிந்து விட்டது. அங்கிருந்த குகைகள் திறக்கப்பட்டு உள்ளே அடைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். அந்த அரசர்களின் மகிழ்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. கண்களில் கண்ணீருடன் தங்களைக் காப்பாற்ற சாகசங்கள் நிகழ்த்திய கதாநாயகர்கள் மூவரையும் பார்த்துக் கை கூப்பி வணங்கினார்கள். அப்போது அர்ஜுனன் அவர்களிடம் ஜராசந்தன் உயிருடன் இல்லை என்பதையும் இனி அவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் கூறியதோடு இப்போது மகதச் சக்கரவர்த்தியாக சகாதேவன் நியமிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தான்.

மேகசந்தி தன்னுடைய சகோதரர்கள் மற்றும் க்ஷத்திரிய வம்சத்துத் தலைவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜராசந்தனின் உடல் பாகங்களை எடுத்துக் கொண்டு மயானம் சென்று அரசமுறைப்படி மரியாதைகள் செய்து எரியூட்டினான். ஜராசந்தன் இப்படிச் செத்ததில் யாருக்கும் வருத்தம் இல்லை. அந்த அளவுக்கு அவன் கொடுமைகள் இழைத்திருந்தான். அவன் எப்போதுமே பயங்கரமான காரியங்களைச் செய்து மற்றவர்களைத் துன்புறுத்தித் தனக்குத் தீமையையும் கடவுளரின் கோபத்தையும் வலிய வரவழைத்திருந்தான். கிரிவ்ரஜத்தின் மக்களுக்கு இப்போது மிக சந்தோஷமாக இருந்தது. சுதந்திரமாக மூச்சு விட்டனர். பல ஆண்டுகளாக அவர்கள் பட்டு வந்த கஷ்டங்கள், சிரமங்கள் அனைத்தும் இப்போது தீர்ந்து விட்டது. மல்லர்களுக்கோ தங்கள் முக்கியத்துவம் குறைந்தது புரிந்ததோடு அல்லாமல் தாங்கள் இனியும் புனிதமான மத குருக்களாக மதிக்கப்படப் போவதில்லை என்பதும் க்ஷத்திரியத் தலைவர்களால் தாங்கள் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்றும் புரிந்து கொண்டனர். எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அனைவரும் பீமன் கால்களில் விழுந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். தாங்கள் தங்கள் சொந்த ஊருக்கே போய்விடுவதாகவும் இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அவர்களைக் காக்குமாறும் வேண்டினார்கள்.

பீமன் அவர்களுக்கு உறுதி அளித்தான்; “கவலை வேண்டாம். உங்களில் எவருக்கும் எவ்விதத் துன்பமும் நேராது. அதற்கான உறுதி மொழியை அளிக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லோரும் ஏன் உங்கள் ஊருக்குப் போவதாகச் சொல்கிறீர்கள்? ஏன் என்னுடன் இந்திரப் பிரஸ்தம் வரக் கூடாது? என்னிடம் உலகில் சிறந்த மல்லர்கள் இருக்கின்றனர். மல்யுத்தப் பயிற்சிக்கான அருமையான களமும் அமைத்திருக்கிறோம்.  அவர்களின் தலைவன் பலியா, பல் இல்லாக் கிழவன்!” என்று சொல்லிவிட்டுக் கடகடவென்று சிரித்தான்.

“என்ன? ஹஸ்தினாபுரத்தின் பலியாவா? எங்களுக்கு அவரை நன்கு தெரியும்!”என்று அவர்களில் தலைவன் கூறினான். “விரைவில் நீங்கள் பலியாவின் பேரன் கோபுவைச் சந்திப்பீர்கள். அவன் எனக்கு மல்வித்தை கற்றதன் மூலம் சகோதரன் ஆனவன்!” என்றான் பீமன். பின்னர் மீண்டும் அவர்களிடம், “இந்திரப் பிரஸ்தம் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்தான். மல்லர்கள் அனைவரும் மகிழ்வுடன், “கட்டாயம் வருகிறோம்!” என்று ஒரே குரலில் கூறினார்கள். சகாதேவனுக்கு கிரிவ்ரஜத்தின் க்ஷத்திரியத் தலைவர்கள் மல்லர்களைப் பழி வாங்கக் காத்திருப்பது நன்கு தெரியும். ஆகவே அவர்களையும் அவன் திருப்தி செய்ய நினைத்தான். ஆகவே இப்போது பீமனுக்கும் மல்லர்களுக்குமான சம்பாஷணையின் நடுவில் புகுந்து, “இவர்கள் தான் எங்களுடைய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம் ஆவார்கள்!” என்று கடுமையுடன் கூறினான்.

அதை அலட்சியம் செய்த பீமன், “எல்லாவற்றுக்கும் மூல காரணம் எதுவோ அது இப்போது இல்லை! இந்த மல்லர்கள் ஜராசந்தனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அனைவரையும் அடக்கி ஆண்டார்கள். ஜராசந்தனின் கொடூரத்துக்கு ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே இவர்களை நீ க்ஷத்திரியர்களிடம் ஒப்படைக்க நினைத்தால் நீயும் தான் ஜராசந்தனின் கொடூரத்திற்கு ஒருவகையில் காரணம் ஆவாய்! ஆகவே இவற்றை எல்லாம் மறந்து மன்னித்துவிடு. அவனுடைய கருவிகளாகச் செயல்பட்ட இவர்களை நீ மன்னித்தே ஆகவேண்டும். இவர்களாக எதுவும் செய்யவில்லை! அனைவரையும் பொதுவாக மன்னிப்பதாக அறிவிப்புச் செய்வதன் மூலம் ஓர் அழகான அமைதியான சாம்ராஜ்யத்தை ஆள்வதற்குத் தக்கவனாக உன்னை மாற்றிக் கொள். இந்தப் புனிதமான காரியத்தை உடனடியாக அறிவித்துவிடு! கிரிவ்ரஜத்தை விட்டு வெளியேற விரும்பும் மல்லர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், தங்கள் உடமைகளுடனும் தாராளமாக வெளியேறிச் செல்லலாம் என்றும் அறிவித்து விடு!” என்றான் பீமன்.

கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் மூவரும் கிரிவ்ரஜத்தில் சில நாட்கள் சகாதேவனின் விருந்தாளிகளாகத் தங்கினார்கள். ஜராசந்தனின் ஈமச் சடங்குகள் முடியும் வரை அங்கே இருந்தனர். அதற்குள்ளாக உத்தவன் தலைமையில் அங்கே வந்து சேர்ந்த யாதவப் படைகளுடனும், பாரதப் படைகளுடனும் அவர்கள் சேர்ந்து கொண்டனர். உத்தவன் மட்டும் அங்கே வராமல் அருகிலுள்ள விதேஹ நாட்டிலேயே தங்கி விட்டான். தேவை எனில் வந்து சேர்ந்து கொள்வதாகத் தகவல் கொடுத்திருந்தான். விரைவில் அருகிலுள்ள நாடுகளுக்கெல்லாம் சகாதேவன் மூலம் செய்தி சென்றது. ஜராசந்தன் இறந்துவிட்டதாகவும், சகாதேவன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டதாகவும் சிறைப்பிடித்து வைத்திருந்த அரசர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள் என்றும் செய்திகள் சென்றன. இந்த அற்புத சாதனைகளை நிகழ்த்தியவன் கிருஷ்ண வாசுதேவன் என்றும் அனைவரும் அறிந்து கொண்டனர். உயிர்ப்பலியைத் தடுக்க முக்கியக் காரணமாக இருந்தவன் கிருஷ்ண வாசுதேவனே என்றும் அனைவருக்கும் சொல்லப்பட்டது.

இந்தச் சமயங்களில் கிரிவ்ரஜத்தையும் சுற்றி உள்ள நாடு, நகரங்களிலிருந்தும் எல்லாம் மக்கள் கூட்டம்கூட்டமாகத் திரண்டு வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுப் போனார்கள். இவ்வளவு பெரிய மாவீரனுக்கு நாம் என்ன கொடுக்க முடியும் என்று திணறிய மக்கள் தங்களால் இயன்றதைக் கொண்டு வந்து அவனுக்குப் பரிசளித்தார்கள். எவராலும் வெல்ல முடியாத, மரணம் என்பதே இல்லை என்னும்படியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கொடுங்கோலனுக்குக் கிருஷ்ண வாசுதேவன் அளித்த தண்டனையை நினைத்து நினைத்து மக்கள் மகிழ்ந்தனர். இதுநாள் வரை ஜராசந்தனின் கொடுங்கோல் ஆட்சியில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த ஸ்ரோத்திரியர்கள் இப்போது வெளியே வந்தார்கள். காசி, விதேஹம் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களும் இந்த விஷயம் தெரிந்து கொண்டு மீண்டும் திரும்பினார்கள். கிருஷ்ணனைச் சந்தித்து ஆசிகள் வழங்கி ஜராசந்தனைக் கொன்ற பீமனை வாழ்த்தி அவன் சகோதரன் அர்ஜுனனுக்கும், மகதச் சக்கரவர்த்தி சகாதேவனுக்கும் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துச் சென்றார்கள்.

Thursday, October 27, 2016

ஜராசந்தன் இறந்தான்!

இந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அங்கே ஜராசந்தனின் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களை எடுத்து வந்திருந்தனர். கோயிலுக்கு முன்னிருந்த விசாலமான பெரிய முற்றம் அங்கே வந்திருந்த கூட்டத்தால் நிரம்பி இருந்தது. பீமன் கண்ணனும், அர்ஜுனனும் புடைசூழ அங்கே வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் முதலில் கூட்டத்தில் அமைதி நிலவியது. பின்னர் மெல்லக் கிசுகிசுவென்று அவர்களுக்குள் முணுமுணுப்பாகப் பேச ஆரம்பித்தனர். பலரும் பீமனின் தைரியத்தைப் பாராட்டிப் பேசினார்கள். அதோடு பீமனை அடையாளம் காணுவதும் சிரமமாக இல்லை. நல்ல உயரமாக அதற்கேற்ற பருமனுடன் வலுவான தேக அமைப்புடன், நீண்ட கைகள், கால்களுடன் காணப்பட்டான். அதோடு கிருஷ்ண வாசுதேவனையும் அடையாளம் கண்டு பிடிப்பது எளிதாகவே இருந்தது. அமைதியும், சாந்தமும், கருணையும் நிறைந்த அவன் முகமே பார்ப்போர் மனதில் மரியாதையைத் தூண்டி விட்டது. அவனுடைய சரீரம் மிகவும் மென்மையாகவும் ஒரு பெண்ணின் தோலைப் போல் மிருதுவாகவும் காணப்பட்டது. இவன் கைகளால் ஆயுதத்தையே எடுத்திருக்க மாட்டான் என்று எண்ணும்படியான மென்மையான கைகள். நீளமான விரல்கள். இன்னொருவன் ஆன அர்ஜுனனோ பார்க்கவே இளமையான தோற்றத்துடன் கம்பீரமாகக் காணப்பட்டான். இவன் உடலும் மெல்லியதாகக் காணப்பட்டாலும் எளிதில் வளையக் கூடியதாக இருந்தது. ம்ம்ம்ம், இவன் தான் அந்த பீமசேனனின் தம்பி அர்ஜுனனாக இருக்க வேண்டும். இவன் நீண்ட கைகளைப் பார்த்தாலே வில் வித்தையில் சிறந்தவனாகத் தான் தெரிகிறது. ஆகவே இவன் தான் திரௌபதி தேர்ந்தெடுத்த மணாளனாகவும் இருப்பான். இந்த சுயம்வரத்தில் தானே ஜராசந்தனை வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்லிக் கிருஷ்ணன் நிர்ப்பந்தித்தான்.

சற்று நேரத்தில் சக்கரவர்த்தி ஜராசந்தன் வந்துவிட்டான் என்பது அறிவிக்கப்பட்டது. அவனுடன் பழைய ராஜகுருவும் வந்தார். அவர் அங்கே வருகை தந்திருந்த விருந்தாளிகளைப் பார்த்த பார்வையிலிருந்து அவர்கள் மேல் அவர் பரிதாபப் படுகிறார் என்பது தெரிந்தது. என்னவென்று தெரியாமல், புரியாமல் வந்து மாட்டிக் கொண்டிருக்கின்றார்களே! அவர்கள் மரணத்தின் திசை நோக்கி நடக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லையே! அவர் மிகவும் பரிதாபம் அடைந்தார். சுற்றிக் குழுமி இருந்த மக்கள் அனைவரும் மௌனமாக எழுந்து நின்று சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். தங்கள் தலையைக் குனிந்து கொண்டு கைகளைக் கூப்பிக் கொண்டு தரையில் விழுந்து வணங்கினார்கள் அனைவரும். புலித்தோலால் ஆன ஆடையை இடையில் தரித்துக் கொண்டு தன் வயதை மீறிய கம்பீரத்துடன் ஜராசந்தன் அந்த மாபெரும் மக்கள் கூட்டத்ஹ்டின் முன்னே தோன்றியதும் அவன் மிக வலிமை மிக்கவன் என்பதை அனைவரும் ஒரே சமயத்தில் உணர்ந்தார்கள். அவனுடைய நீண்ட தாடியும், தலை மயிரும் எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. தாடியைச் சுருட்டிக் கன்னத்தோடு சேர்த்துக் கட்டி இருந்தான். தலை மயிர் உயரே எடுத்துக் கட்டி இருந்த விதம் அவன் வெள்ளை நிறக் கிரீடம் ஒன்றை அணிந்திருப்பது போலவும் சில சமயம் வயதான சிங்கத்தின் வெண்மையான பிடரி மயிர் போன்றும் காணப்பட்டது.

பீமன் மல்யுத்தம் நடைபெறப் போகும் பகுதிக்குள் உள்ளே சென்றான். தன்னுடைய அரை ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு மேலே போர்த்திருந்த மான் தோலை அர்ஜுனன் கைகளில் கொடுத்தான். மல் யுத்தம் செய்யத் தயாராக நின்றான். ஜராசந்தன் மிகவும் கம்பீரமாக ஓர் ஆண் சிங்கத்தைப் போல் வீர நடை போட்டு வந்தான். முதலில் ருத்ரனின் சந்நிதிக்குச் சென்று அங்கே அவருக்கு வழிபாடுகள் நடத்தினான். கீழே விழுந்து வணங்கி நீரால் அபிஷேஹம் செய்து மலர்களைச் சார்த்தி வணங்கினான். பீமன் பக்கம் திரும்பி அவனையும் அருகே வந்து ருத்ரனுக்கு வழிபாடுகள் செய்யச் சொன்னான். பீமனும் மௌனமாக அங்கே வந்து மனதுக்குள்ளாகப் பிரார்த்தனைகள் செய்து கொண்டான். முதலில் ருத்ரனை வணங்கித் தனக்கு பலத்தையும் வலிமையையும் தரும்படி கேட்டுக் கொண்டு பின்னர் அவன் குருவிடம் தனக்கு தைரியத்தைத் தரும்படி கேட்டுக் கொண்டு கடைசியில் தன் அன்னையிடம் மானசிகமாக ஆசிகளைக் கேட்டுக் கொண்டான். பின்னர் திரும்பி கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் பாசம் பொங்கப் பார்த்தான். அவர்கள் அவன் மேல் நம்பிக்கை மிகவும் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது. அதில் மகிழ்ச்சி அடைந்த பீமன் அவர்கள் நம்பிக்கையைத் தான் பொய்யாக்கக் கூடாது என்று உறுதி பூண்டான்.

பின்னர் அவன் மல்யுத்தம் செய்யும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் வந்து தன்னிரு கரங்களாலும் தொடையைத் தட்டி ஆக்ரோஷித்துத் தான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொண்டான். அதைப் பார்த்த ஜராசந்தனும் தன் ஆடையான புலித்தோலைத் தன் அருகே இருந்த தலைமை மல்லனிடம் கொடுத்துவிட்டு பீமனுக்கு பதில் சொல்லும் விதமாகத் தானும் தன் தொடைகளைத் தட்டினான். உடனடியாக அவன் குதித்து பீமன் மேல் பாய்ந்தான். பீமன் லேசாக நகர்ந்து கொண்டான். கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரை பிடிக்க முயன்று கொண்டிருந்தனர். ஆனால் இருவராலும் மற்றவரைப் பிடிக்க முடியவில்லை. கூடி இருந்த கூட்டம் முழுவதும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இருவருமே இணையான ஜோடியாக இருந்தனர். நல்ல உயரமாக திடகாத்திரமான மேனியுடனும் இறுக்கமான தசைகளோடும் வலுவான உடல் அமைப்புடனும் ஒரே மாதிரியான பருமனுடனும் காணபப்ட்டனர். ஜராசந்தன் வயதுக்கு மீறிய சுறுசுறுப்புடன் காணப்பட்டான். ஒரு கை தேர்ந்த ஆசானைப் போல் அவன் மல்யுத்தம் செய்தான். பீமனின் ஒவ்வொரு அசைவையும் முன் கூட்டியே எதிர்பார்த்து அதைத் தன் திறமையால் எதிர்கொண்டான்.

கொஞ்ச நேரம் இப்படிப் பட்ட மோதல்களுக்குப் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு பலவிதமான பிடிகளின் மூலம் மற்றவரைத் தோற்கடிக்க முயன்றனர். இருவருக்குமே மூச்சு வாங்கினாலும் ஜராசந்தனுக்கு வயதின் காரணமாக அதிகமாக மூச்சு வாங்கியது! ஜராசந்தனால் மூச்சு விடுவதற்குத் திணற ஆரம்பித்ததும் அவன் பீமனைக் கழுத்தை நெரிக்க முயன்றான். அதே சமயம் அவன் இடுப்புக்குக் கீழ் அவனை ஓங்கி ஓர் உதை உதைத்துக் கீழே தள்ளுவதற்கும் முயன்றான். பீமன் ஜராசந்தனின் தந்திரமான வேலைகளைப் புரிந்து கொண்டான். ஜராசந்தன் தன் யுத்த முறையை மாற்றிக் கொண்டு விட்டதையும் கவனித்துக் கொண்டான். ஆகவே அவனைக் கொல்வதற்காக அவன் மேல் குனிந்தான். இப்போது போட்டி ஓர் பயங்கரமான நிலைக்கு வந்து சேர்ந்து விட்டது. பீமன் சத்தம் போடாமல் கிருஷ்ணனைப் பார்த்தான். அவன் ஓர் இலையைக் கையில் எடுத்து அதை நேர் கீழாகக் கிழித்துப் போட்டான். கிருஷ்ணன் கொடுத்த குறிப்பை பீமன் புரிந்து கொண்டான்.

மிகவும் முயற்சி செய்து ஜராசந்தனைக் கீழே தள்ளினான். தன் கால்களில் ஒன்றை ஜராசந்தனின் பாதத்தின் மேல் வைத்து அமுக்கிக் கொண்டான். மற்றொரு காலைத் தன்னிரு கரங்களிலும் பிடித்துக் கொண்டான். தன்னுடைய பலம் அனைத்தையும் பிரயோகித்து ஜராசந்தனின் உடலை இருகூறாகப் பிளக்க பீமன் முயற்சித்தான். ஓர் பயங்கரமான அலறல் ஜராசந்தனின் வாயிலிருந்து கிளம்பியது. அந்த அலறல் மெல்ல மெல்லத் தேய்ந்து போய் களகளவென்னும் ஓசை கேட்டுப் பின்னர் அதுவும் மறைந்தது. எலும்புகள் நொறுங்கும் சப்தம் கேட்டது. ஜராசந்தன் உடல் இரு கூறாகப் பிளக்கப்பட்டிருந்தது. அவன் தலையிலிருந்து கால் வரையிலும் இரு கூறாகக் கிடந்தான். பீமன் அந்த இரு பாதி உடல்களையும் தன் கைகளிலிருந்து தூக்கி எறிந்தான். அவனுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான். அவன் ஜெயித்து விட்டான்.

அவன் ஜராசந்தனின் உடலைப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! பீமனின் கண்களில் விழி பிதுங்கி விடும் போல் இருந்தது. ஜராசந்தனின் உடல் இருகூறாகப் பிளக்கப்பட்டவை சுற்றிக்கொண்டும் திரும்பிக் கொண்டும் மீண்டும் ஒன்று சேரப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அந்த உடல் பாகங்களிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. பீமனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரண்டு பாகங்களும் மெல்ல மெல்ல ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொண்டன. ஜராசந்தன் தன் கண்களைத் திறந்தான். மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தன் உடலை உலுக்கிக் கொண்டு எழுந்து நின்று பீமனைப் பார்த்து ஹூங்காரம் செய்தான். பீமனைப் பார்த்துப் போட்டி முடியவில்லை என்றும் இன்னும் இருக்கிறது என்றும் நினைவூட்டினான். மீண்டும் பொருதத் தயாரானான்.

களைப்பிலும் சோர்விலும் தள்ளாடிக் கொண்டிருந்த பீமனுக்கு இப்போது மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. உடல் நடுங்கியது. நிச்சயமாக இந்த ஜராசந்தன் அழிவற்றவன். இவனுக்கு மரணமே இல்லை! எல்லோரும் சொல்வது உண்மைதான் போலும். மீண்டும் கிருஷ்ணன் பக்கம் திரும்பிப் பார்த்தான் பீமன். ம்ம்ம்ம், இது தான் நான் கிருஷ்ணனைப் பார்க்கும் கடைசிப் பார்வை என்றும் நினைத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணனை அவன் பார்க்கையில் கிருஷ்ணன் கலவரமே படவில்லை. பீமனைப் பார்த்துப் புன்னகைத்தான். அவன் கைகளில் மீண்டும் ஓர் இலை இருந்தது. அந்த இலையை அவன் இரு பாகங்களாகக் கிழித்து வலப்பக்கத்து இலையை இடப்பக்கமும் இடப்பக்கத்து இலையை வலப்பக்கமும் மாற்றிப் போட்டான். பீமனுக்கு இப்போது தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.

பீமனுக்குள்ளாக புதிய சக்தி ஊற்று எடுத்து ஓடுவது போல் உணர்ந்தான். ஆகவே இப்போது புத்துணர்ச்சியோடு ஜராசந்தன் மேல் பாய்ந்தான். மீண்டும் அவனைக் கீழே தள்ளி அவன் உடலை இரு கூறாகக் கிழித்து எறிந்தான், இம்முறை நினைவாக வலப்பக்கத்து உடலை இடப்பக்கமாகவும் இடப்பக்கத்து உடலை வலப்பக்கமாகவும் மாற்றிப்போட்டான். சற்று நேரம் அந்த உடல் பாகங்களையே கண்காணித்தான். அவை இருந்த இடத்திலேயே இருந்தன. ரத்தம் குளம் போல் தேங்கி நின்றது. பீமன் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த உடல் பாகங்கள் போட்ட இடத்திலேயே இருந்தன. அவை இப்போது ஒன்று சேரவில்லை. ஜராசந்தன் உண்மையாகவே இப்போது இறந்து விட்டான் என்பதும் பீமனுக்குப் புரிந்தது. ருத்ரனுக்குப் பிரியமானவன், அவனின் அத்யந்த சீடன் ஜராசந்தன் இறந்து விட்டான். பீமன் உடலிலிருந்து வியர்வை வெள்ளமாகப் பெருக அவன் உடலெல்லாம் ரத்தக்களறியாகக் காட்சி அளிக்க அந்த மல்யுத்த மேடையிலிருந்து கீழே இறங்கினான்.

Wednesday, October 26, 2016

மல்யுத்தப் போட்டிக்குக் காத்திருப்பு!

கிரிவ்ரஜத்தின் மக்களைக் கவர்ந்திழுக்க ஜராசந்தன் எப்போதுமே பல முயற்சிகளைச் செய்வான். இப்போது கேட்கவேண்டுமா? தன்னுடைய அசாத்தியமான பலத்தையும் வீரத்தையும் அதிகாரத்தையும் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது! ஆகவே அவன் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பைச் செய்தான். “மாட்சிமை பொருந்திய மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தான், மல் வித்தையின் ஈடு இணையற்ற தலைவன், ருத்ர பகவானின் அன்புக்குப் பாத்திரமானவன், ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகளுள் மிகவும் பிரக்கியாதி பெற்றவனும், அனைவருக்கும் தலைவனுமான, மஹாச் சக்கரவர்த்தி, ஜராசந்தன், ருத்ரபகவானின் சந்நிதியில் பஹு யுத்தம் எனப்படும் மல்யுத்தப் போரை நாளைக் காலை, குரு வம்சத்து அரசனான காலம் சென்ற பாண்டுச் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகன் ஆன பீமசேனனுடன் நாளை பொருதுவான். பீமசேனன் தன் இளைய தம்பி அர்ஜுனனுடனும், மாட்டிடையன் கிருஷ்ண வாசுதேவனுடனும் வந்துள்ளான். அவர்களும் பார்வையாளர்களாக இடம்பெறுவார்கள்.”

மேற்சொன்னபடி நகரம் முழுவதும் பறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிரிவ்ரஜத்தின் மக்கள் அனைவரின் மனதிலும்  தாங்கள் இந்தப் போட்டிக்கு ஒரு சாட்சியாக இருந்து பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரவரும் அவரவர் மனப்போக்கின்படி பேச ஆரம்பித்தனர். விசித்திரமான எண்ணங்கள் உலவின. பல்வேறு விதமான வதந்திகள் பேசப்பட்டன.  மக்கள் இதற்கு முன்னர் இப்படி எல்லாம் நினைத்ததும் இல்லை; பேசினதும் இல்லை என்னும் விதமாக இந்தப் போட்டி குறித்து மக்கள் பேசிக் கொண்டனர். மல்லர்கள் பார்த்தவரையிலும் யாருமே ஜராசந்தன் சொன்னதுக்கு மாறாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாறாகச் செய்யவும் இல்லை! ஏனெனில் அப்படி யாரேனும் ஜராசந்தனுக்கு மாறாக ஒரு வார்த்தை உச்சரித்தாலே போதும்! அவர்கள் எலும்புகள் நொறுங்கி விடும். அதைக் குறித்து எவரும் எங்கேயும் சென்று புகார் செய்யக் கூட முடியாது! அதைக் குறித்துப் புகார் செய்ய முடிந்தாலும் ஜராசந்தனால் அவை அலட்சியம் செய்யப்படும்.

ஆனாலும் பீமசேனனுடன் ஜராசந்தனுக்கு மல்யுத்தப் போர் நடைபெறப் போவதாக அறிவித்த பின்னர் அதுவும் அரசன் பெயரால் அறிவித்த பின்னர் மக்கள் அதைக் குறித்துப் பேசிக் கொள்வதை எவராலும் தடுக்க முடியவில்லை. முதலில் மெதுவாக ஆரம்பித்த பேச்சு பின்னர் யார் வெல்வார்கள் என்ற கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியில் வந்து நின்றது. அதோடு இல்லாமல் வந்திருக்கும் விருந்தினர்களைக் குறித்தும் மக்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் பேசிக் கொண்டனர். அதோடு இல்லாமல் கிருஷ்ண வாசுதேவன் தான் ஜராசந்தனின் மாப்பிள்ளையும் மத்ராவை ஆண்டவனுமான கம்சனைக் கொன்றவன் என்பதும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அதைக் குறித்தும் பேசிக் கொண்டார்கள். இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியக் கட்டுக்கடங்காத ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்தனர். சிலருக்கு ஒருவித நம்பிக்கையும் இருந்தது. ஆனால் வயதானவர்களோ ஜராசந்தனின் முதிர்ந்த பருவத்தை நினைத்து வியந்து கொண்டிருந்தனர். ஆகவே அவர்களுக்கு ஜராசந்தன் எவராலும் அழிக்க முடியாதவன், மரணத்தை வென்றவன் என்னும் எண்ணம் இருந்து வந்தது.

அவனை எவராலும் கொல்ல முடியாது. அதே போல் எவராலும் அவனை வெல்லவும் முடியாது. அதுவும் மல்யுத்தத்தில் நிபுணனான ஜராசந்தனால் தோற்கடிக்கப்பட்ட மல்லர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். அப்படிப்பட்டவனைத் தோற்கடிக்க எவரால் முடியும்? ஹூம், பாண்டுவின் மகன் பீமசேனன் மிகவும் வலிமை உள்ளவனாகத் தான் தெரிகிறான். ஆனால் அவன் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டு ஜராசந்தனால் கொல்லப்படப் போகிறான். பாவம், இள வயது! பீமசேனனைப் பார்க்கப் பார்க்க அவர்கள் மனதில் துக்கம் பொங்கியது. துக்கத்தில் தலையை ஆட்டிக் கொண்டார்கள். ஆஹா! இந்தக் கிருஷ்ண வாசுதேவன் இப்படியா கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு ஜராசந்தன் விரித்த வலையில் வந்து விழுவான்? பாவம்!

கிரிவ்ரஜத்தின் மற்ற அரச குலத்தினரும் இந்தப் போட்டியைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். மல்லர்களால் அவர்கள் பெரிதும் மிரட்டி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஆகையால் இப்போது ஜராசந்தன் என்ன செய்யப் போகிறான் என்பது மட்டுமில்லாமல் கிருஷ்ண வாசுதேவனின் கைகளிலிருந்து எப்படித் தப்பப் போகிறான்? ஆரியர்கள் அவனைக் கடவுளாகவே வணங்குகிறார்கள். பலவிதமான சக்திகள் படைத்தவன் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இளவரசன் மேகசந்தி ஏதோ திட்டங்கள் போட்டு வைத்திருப்பதாகச் சில வதந்திகள் உலவின. அது என்ன? எவராலும் அதைக் குறித்து அறிய முடியவில்லை. அதைக் குறித்துப் பேசவும் முடியவில்லை. யாருமே வாய் திறக்கவில்லை.

ஜராசந்தனுக்கும் கிருஷ்ண வாசுதேவனுக்கும் இடையே நடந்த சம்பாஷணைகளைக் குறித்தும் அவர்கள் அறிந்திருந்தார்கள். முழுவதும் தெரியாவிட்டாலும் முக்கியமான சம்பாஷணைகள் அவர்கள் வரை எட்டி இருந்தன. அதிலிருந்து தான் அவர்களுக்கு முதல் முதலாக இப்போது தான் ஜராசந்தனைக் குறித்த சில உண்மைகள் தெரியவந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் கோமந்தகத்தில் ஜராசந்தன் தோல்வியுற்றுத் திரும்பியது. அதன் பின்னர் இந்தக் கிருஷ்ண வாசுதேவன் மற்ற யாதவர்களுடன் ஜராசந்தன் முற்றுகையிடும் முன்னர் மத்ராவை விட்டுத் தப்பி துவாரகையை நோக்கிச் சென்றது, இதன் மூலம் கிருஷ்ண வாசுதேவனையும் யாதவர்களையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஜராசந்தனின் நோக்கம் பொசுங்கிப் போனது. மத்ராவை எரித்து அழித்ததோடு ஜராசந்தன் திருப்தி அடைய வேண்டி இருந்தது என ஒவ்வொன்றாய்த் தெரிய வந்தது.

அதோடு இல்லாமல் கிருஷ்ணனின் உத்தரவின் பேரிலேயே ஜராசந்தன் காம்பில்யத்தில் அந்தப் பெரிய சுயம்வர அரசர்களின் பங்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் திரும்ப நேர்ந்தது. வெளியேறியது! எல்லாமும் அறிந்து கொண்டனர். அதோடு இல்லாமல் முதல்நாள் கிருஷ்ண வாசுதேவன் ஜராசந்தனைப் பார்த்த போது அவனிடம் அவன் பிடித்துச் சிறையில் வைத்திருக்கும் இந்த அரச குலத்தினர் 98 பேர்களையும் விடுவிக்கச் சொன்னான் என்றும் அவர்களை யாக அக்னியில் உயிர்ப்பலி இடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் என்பதும் அவர்கள் காதுகளுக்கு எட்டி இருந்தது. ஆனால் ஜராசந்தன் அதை முற்றிலும் மறுத்திருக்கிறான். மெல்ல மெல்ல மல்யுத்தப் போட்டி நடைபெறும் நாளும் வந்தது.

மல்லர்கள் அனைவரும் மறுநாள் நடைபெறப் போகும் போட்டியைக் காணவும் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கவும் தங்களைத் தயார் செய்து கொண்டார்கள். தங்கள் புலித் தோலை ஆடையாக அணிந்து கொண்டு அந்தப் போட்டி நடைபெறும் இடத்தின் இரு மருங்கிலும் பாதுகாப்பாக நின்று கொண்டனர். அந்த நகரத்து மாந்தர் அனைவரும் அங்கே கூடிவிட்டனர். அனைவருக்கும் ஒருவித ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர். இப்படி ஒரு அதிசயமான, அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விதத்தில் நடைபெறப் போகும் போட்டியைக் காண்பதற்கு அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இங்கே இதற்கான புனிதச் சடங்குகள் என்னும் போர்வையில் நடைபெறுவது அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் இம்முறை அதை உண்மையாகவே புனிதமான மதச் சடங்காகவே அவர்கள் உணர்ந்தனர். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. அது பயங்கரமானதா? அல்லவா? புரியவில்லை! பயங்கரமானது நடக்கப் போவது என்னமோ நிச்சயம்! ஆனால் அது ஜராசந்தனின் சாவாக இருக்காது. அவனை எவராலும் கொல்ல முடியாது! அவன் அழிவற்றவன்! ஆகவே வந்திருக்கும் மூன்று விருந்தினர்களும் தான் உடல் நசுங்கித் துண்டு துண்டாகச் செத்துப் போகப் போகின்றனர்

Tuesday, October 25, 2016

நான் கிருஷ்ண வாசுதேவன்!

“என்ன, நான் உன்னைத் தேடுகிறேனா?” ஜராசந்தன் கோபத்துடன் கேட்டான். தன் கண்களைச் சுருக்கியவண்ணம் கிருஷ்ண வாசுதேவனையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான். “நீ யார்? உன்னை எங்கே சந்தித்திருக்கிறேன்?” என்று கேட்டான். “ஆஹா, நீ என்னைப் பலமுறைகள் பார்த்திருக்கிறாயே! மறந்து விட்டதா?” என்ற கிருஷ்ண வாசுதேவன் ஏளனச் சிரிப்புடன், “கோமந்தகத்தை மறந்து விட்டாயா? அங்கே நான் உன்னைக் கொன்றிருக்கலாம். அப்போது அதற்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. ஆனால் நான் உன்னைத் தப்பிச் செல்ல விட்டேன். அனுமதி கொடுத்தேன். அதன் பின்னர் நீ மீண்டும் என்னைத் தேடி மத்ரா வந்தாய்; ஆனால் உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உன்னுடைய ஆத்திரத்தை அடக்க முடியாமல் மத்ராவை எரித்துச் சாம்பலாக்கியதன் மூலம் நீ திருப்தி அடைய வேண்டி இருந்தது. உன்னுடைய சூழ்ச்சிக்கும் தற்பெருமைக்கும், அகந்தைக்கும் அது மரண அடியாக விழுந்து விட்டது!” என்றான்.

“என் சூழ்ச்சியா? என்னுடைய தற்பெருமையா? நீ என்னுடைய நம்பிக்கையை நான் ருத்ர பகவானிடம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சொல்கிறாயா? ம்ஹூம், அது ஒருநாளும் ஆட்டம் கண்டதில்லை.” என்றான் ஜராசந்தன். தன்னுடைய ஒரு கண்ணசைவால் அங்கிருந்த மல்லர்களை விட்டு இந்த முரடனை முடிக்கச் சொல்லி இருக்கலாம். அந்த மல்லர்களும் தங்கள் அரசனின் கட்டளைக்கே காத்திருந்தனர். ஆனா ஜராசந்தன் என்ன காரணத்தாலோ ஓர் சைகை மூலம் அவர்களைத் தடுத்தான். தன் வழியிலேயே இந்தப் பகைமைக்குப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான். கிருஷ்ணன் தொடர்ந்தான்.

“ஜராசந்தா! குன்டினாபுரத்தில் நிகழ்ந்தவற்றை மறந்து விட்டாயா? விதர்ப்ப நாட்டு அரசன் தாமகோஷனால் நான் வரவேற்கப்பட்டதை அறிய மாட்டாயா? அப்போது நீயும் தான் அங்கே வந்திருந்தாய் அல்லவா? அதன் பின்னர் நான் உன்னைக் காம்பில்யத்தில் தான் சந்தித்தேன். பாஞ்சால இளவரசி திரௌபதியின் சுயம்வரத்தில். அங்கேயும் என்னுடைய ஆலோசனையின் பேரில் தான் நீ மற்ற அரசர்கள், இளவரசர்களின் பரிகாசப் பேச்சிலிருந்து தப்பிக்க வேண்டி வெளியேற வேண்டி வந்தது.” ஜராசந்தன் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டான். யோசனையில் ஆழ்ந்தான். அவன் அந்த நிகழ்ச்சியை மறக்கவே இல்லை. “ஹூம், அது ஒரு பழைய கதை!” என்றான் கிருஷ்ணனிடம். “அதோடு நீ பொய் சொல்கிறாய்! நான் காம்பில்யத்தை விட்டு வெளியேறியது நீ சொன்ன காரணத்தால் அல்ல. நான் அப்படிச் செய்வது தான் சரி என்று நினைத்தேன். அதனால் நானாகவே வெளியேறினேன்.” என்றான்.

ஜராசந்தன் தன் மல்லர்களை விட்டுக் கிருஷ்ணனைக் கிழித்துப் போட்டுவிடலாம் என்று நினைத்தான். ஆனாலும் அவன் அப்படிச் செய்யவில்லை. அவன் தான் தன் மல்லர்களுக்கு எதிரே மிகவும் அவமானப்பட்டு விட்டதாக நினைத்தான். ஆகவே தான் இந்த அவமானத்திலிருந்தும் தப்ப வேண்டும்; வாசுதேவக் கிருஷ்ணனையும் அழிக்க வேண்டும் எனில் இப்போது செய்ய வேண்டியது அவனை இந்த மல்லர்களுக்கு எதிரே மிகவும் மோசமான முறையில் அவமானம் செய்ய வேண்டும். “ம்ம்ம், நீ யார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நீ ஓர் கோழை. பேடி! மாட்டிடையன். இடையனான நீ எனக்குச் சமானம் இல்லை. என்னை எதிர்க்க முடியவில்லை உன்னால். ஓர் க்ஷத்திரியன் எனில் உண்மையான க்ஷத்திரியன் எனில் நீ என்னை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் உன்னால் அது முடியவில்லை. போர்க்களத்தில் என்னைச் சந்திக்க முடியாமல் நீ தப்பி ஓடி விட்டாய்!”

“இப்படிப் பட்ட உன்னை என்னுடைய புனிதமான கைகளால் உன்னைத் தொட்டு மல்யுத்தம் செய்வதற்கு அதுவும் அந்த ருத்ரன் முன்னிலையில் செய்வதற்கு எப்படி அழைத்தாய்? என்னால் என்னுடைய புனிதமான கைகளால் உன்னைத் தொட்டு மல்யுத்தம் செய்வது என்பது இயலாது! ஆனால் நீ என்னை இப்போது நாடி வந்துள்ளாய்! ஆகவே நான் உன்னை இப்போது விட மாட்டேன்; அதுவும் உயிருடன் உன்னைத் திரும்பிப் போக விடமாட்டேன். அந்த உறுதியை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று  கிருஷ்ணனைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்போடு கூறிய ஜராசந்தன் பற்களைக் கடித்தான். கிருஷ்ணன் சிரித்தான்.

“இதோ பார் ஜராசந்தா! நேரம் வரட்டும்! என் கைகள் புனிதமானவையாக இல்லாமல் இருக்கலாம்; உன்னுடைன் பொருதத் தகுதியற்றவையாகவும் இருக்கலாம். ஆனால் திரௌபதியின் சுயம்வரத்தில் உன்னைப் பார்த்து நான் எச்சரித்தாற்போல் இப்போதும் உன்னை எச்சரிக்கவே வந்திருக்கிறேன். அநேகமாக இது தான் கடைசித் தடவையாக இருக்கலாம். நீ உன் யாகங்களில் உயிர்ப்பலிகளைக் குறிப்பாக அரசர்களைப் பலி கொடுப்பதை நிறுத்து. அப்படிச் செய்தால் நான் உன்னை மன்னிக்கிறேன். நீ செய்த மற்ற அதர்மங்களையும் பொறுத்துக் கொள்கிறேன்.” என்றான் வாசுதேவக் கிருஷ்ணன்.

“ஏ, இடையா, கர்வம் கொள்ளாதே! உன் அகந்தையைக் குறைத்துக் கொள்! நீ யார் என்னிடம் இதை எல்லாம் பேச? தர்மத்தைக் குறித்து உனக்கு என்ன தெரியும்? தர்மம் என்றால் என்ன என்பதை எனக்கு எடுத்துச் சொல்ல நீ யார்? என்னை மன்னிக்கவும் நீ யார்? உனக்கு என்ன அதிகாரம்?” என்று கேட்டான் ஜராசந்தன்.

“நான் இங்கே வந்திருப்பதே அது என்ன என்று சொல்லத் தான். நீ 98 ராஜாக்களையும், இளவரசர்களையும் உன்னுடைய சிறையில் வைத்திருக்கிறாய். அவர்கள் தலைகளை வெட்டி ருத்ரனுக்குச் செய்யும் யாகத்தில் ஆஹூதியாகக் கொடுக்க நினைக்கிறாய். உன்னுடைய கணக்குப்படி மொத்தம் நூறு அரசர்களை அப்படிப் பலி கொடுக்க வேண்டும். அந்த நேரத்துக்காகக் காத்திருக்கிறாய்! அதற்கான முஹூர்த்த நேரத்துக்காக நீ காத்திருக்கிறாய்! அந்த நேரம் சூரியன் மகர ராசியில் நுழையும்போது வருகிறது. நான் இங்கே வந்திருப்பதே இப்படி ஒரு தீமையான காரியத்தை, பிசாசுகள் கூடச் செய்ய அஞ்சும் ஒன்றைச் செய்யாதே என்று உன்னை எச்சரிக்கத் தான்!” என்றான் கிருஷ்ணன்!

மீண்டும் அந்தப் புனிதமானவர்கள் எனக் கருதப்பட்ட மல்லர்கள் ஜராசந்தனைப் பார்த்து கிருஷ்ணனைக் கொன்று முடிக்க வேண்டி அவன் அனுமதியைக் கண்களின் ஜாடைகள் மூலம் கேட்டனர். ஆனால் ஜராசந்தன் அவர்களைத் தடுத்தான். “நாம் இப்போது விருந்தாளியாக வந்திருக்கும் இவனைக் கொல்லக் கூடாது! அதுவும் ருத்ரனுக்காக நம் மதச் சடங்குகள் நடக்கும் வேளையில் இது வேண்டாம். இவன் ஏதேனும் தந்திரங்கள் செய்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” என்று சொன்னான். ஆனாலும் ஜராசந்தனின் உள் மனதில் அந்த மல்லர்கள் உள்ளூறக் கிருஷ்ணன் தனக்குச் செய்த அவமானங்களை எல்லாம் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று தோன்றியது! ஹூம், இந்த மாட்டிடையனால் நமக்கு எவ்வளவு அவமானம்!

“இரு, இரு! நான் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன். இம்முறை நீ என்னிடம் இருந்து தப்பவே முடியாது!” என்றான் ஜராசந்தன். கிருஷ்ணன் அதற்கு, “நான் தயாராகக் காத்திருக்கிறேன். நீ எப்படி வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி! உன் விருப்பம்!” என்றான். “முதலில் இதோ இந்த இளைஞனோடு என்னுடைய பங்கைச் சரி செய்து கொள்கிறேன்,” என்ற ஜராசந்தன் அர்ஜுனன் பக்கம் திரும்பினான். “இளைஞனே, நீ என்னுடம் மல் யுத்தத்தில் பொருதத் தயாரா? அதை நீ விரும்புவாயா? ஆனால் நீ ஆண் தன்மை இல்லாதவன் போல் தெரிகிறதே! நான் அப்படிப் பட்டவர்களுடன் போர் புரிவதில்லை! உன் காதுகளில் நீ போட்டிருக்கும் குண்டலங்கள் நீ ஆண் தன்மை இல்லாதவன் என்று காட்டுகிறது! நேரம் வரும்போது உன்னைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று நினைக்கிறேன்.” என்றவன் பீமன் பக்கம் திரும்பி, “ நீ யார் குண்டனே!” என்று கேட்டான்.

“நான் பீமசேனன்! பாண்டு மஹாராஜாவின் மகன். இந்திரப் பிரஸ்தத்தின் அரசன் யுதிஷ்டிரனின் சகோதரன். நீ நினைக்கிறாய். இந்த மல்யுத்தம் ருத்ர பகவானுக்கு உரியது; மிகப் புனிதமானது என்றெல்லாம் நினைக்கிறாய். நானும் அப்படித் தான் நினைக்கிறேன். உன்னுடன் தோளோடு தோள் பொருதுவதற்கு நான் தயார். உன்னுடைய தற்பெருமையை நான் அடியோடு ஒழித்துக் கட்டுவேன் என்று சத்தியம் செய்கிறேன்.” என்றான்.

“ஹூம் உனக்கு மரியாதையே தெரியவில்லையே! ஓர் அரசனிடம் நடந்து கொள்ளும் முறை தெரியவில்லை. இப்போது இங்கிருந்து நீ போய்விடு!  மேகசந்தி உன்னைப் பார்த்துக் கொள்ளுவான். நாளைக்காலை நம்முடைய அன்றாட நியமங்கள் முடிந்ததும் வழிபாடுகள் முடிந்ததும் நாம் இங்கே சந்திப்போம். ஏதேனும் தந்திரங்கள் செய்தால் தவிர உன்னால் தப்பிக்க முடியாது! ஆகையால் உன் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இரு!”

“ ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்! மரணம் உனக்கும் சம்பவிக்கலாம்!” என்று பீமன் சொன்னான். பீமனின் சொற்களை அலட்சியம் செய்த ஜராசந்தன் திரும்பித் தன்னுடைய இஷ்ட தெய்வமான ருத்ரனின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஆனாலும் கிருஷ்ணனால் கிடைத்த அவமானங்களின் காயம், அதன் உள்ளார்ந்த ரணம் அவன் மனதில் ஆறாமல் இருந்தது. அதை இப்போது கிருஷ்ணனின் வரவு மீண்டும் குத்திக் கிளறி விட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போன்றதொரு வேதனையில் ஜராசந்தன் ஆழ்ந்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகக் கிருஷ்ணன் முன்னால் பட்ட அவமானங்கள் அவன் கண்ணெதிரே தோன்றித் தோன்றி மறைந்தன.

Monday, October 24, 2016

கிரிவ்ரஜத்தில் அந்நியர்கள் வருகை!

மத்ராவை எரிக்கையில் தான் அவன் முன்னே ருத்ர பகவான் தோன்றினார். அவனுடைய அளவிலா பக்தியில் மனம் மகிழ்ந்தார். ஜராசந்தன் அவரிடம் தான் எப்போது இந்த பூவுலகுக்கே சக்கரவர்த்தியாக அரசாள முடியும் என்று கேட்டான். அதற்கு அவர் அவனை ஓர் யாகம் வளர்த்து நூறு அரசர்களை அதில் பலியிடும்படி கூறினார். அதன்படி தான் அவன் ஒவ்வொரு அரசனாகப் போரிட்டுச் சிறைப்பிடித்து அவர்களைத் தன் யாகத்தில் பலியிட்டு வருகிறான். இந்தச் சமயத்தில் தான் அவன் மத்ராவில் இருந்த அரச குடும்பத்தின் மல்யுத்த வீரர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களை அவன் கிரிவ்ரஜத்துக்கு வரவழைத்துப் பரவலான அதிகாரத்தை அளித்துத் தன்னை எதிர்ப்பவர்கள் இருந்தாலும் தன் பேச்சை மறுப்பவர்களையும் நசுக்கச் செய்தான்.  அவன் தன்னுடைய ருத்ர ஜபங்கள் அனைத்தையும் முடித்துக் கோண்டு தினந்தோறும் இந்த மல்லர்களுடன் மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபடுவதை ஓர் வழக்கமாக வைத்திருந்தான். அதையும் ஓர் சமயச் சடங்கைப் போலச் செய்து வந்தான்.

கிரிவ்ரஜக் கோட்டையில் அமைந்திருந்த ஈசனின் கோயில், ருத்ரன், சங்கரன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆலயம் ஓர் திறந்த வெளியில் அமைந்திருந்தது. ஜராசந்தா சிங்கத்தோலை அணிந்து கொண்டு அதன் முற்றத்தில் அமர்ந்து தன் வழிபாடுகளை நடத்துவான். அவனைப் பாதுகாக்க அங்கே வேலையில் இருக்கும் மல்லர்கள் இருப்பார்கள். ஜராசந்தன் உண்மையில் பார்க்கவும் பெரிய உடலோடும் நீளமான கைகள், கால்களோடும் காணப்படுவான். அவனுடைய வயதுக்கு அவன் பார்க்க இளமையோடும் திடகாத்திரமான உடலோடும் காணப்பட்டான். அவனுடைய தாடி நீளமாக வெண்மையாகப் பரவிப் படர்ந்திருந்தது. வலிமையான தோள்களோடும் இறுக்கமான தசைப்பிடிப்பான உடலோடும், அகன்ற மார்புடனும் காணப்பட்டான். அவன் கண்கள் நெருக்கமான வெண்மையான நரைத்த புருவத்தின் கீழ் காணப்பட்டன.

இப்போது ஜராசந்தன் என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்போம். தன்னுடைய இளைய பேரன் மேகசந்தியின் முகத்தையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். மேகசந்தி இளமையுடனும், வலுவான தேகத்துடனும் அழகாகவும் காணப்பட்டான். ஆனாலும் அவன் கொஞ்சம் பயத்துடனேயே ஜராசந்தன் எதிரில் காத்திருந்தான். எந்த நேரம் ஜராசந்தன் வெடித்துச் சிதறுவான் என்று காத்திருந்தான். ஜராசந்தன் கிரிவ்ரஜத்தின் பொறுப்பை முழுதும் மேகசந்தியிடம் கொடுத்திருந்தான். ஆகவே அவன் ஒருவன் மட்டுமே ஜராசந்தன் எதிரில் ஆயுதங்களைத் தரிக்கும் உரிமை பெற்றிருந்தான். இப்போது ஜராசந்தன் கடும் கோபத்தில் இருக்கிறான் என்று தெரிந்தது.

“முட்டாள்!” என்று கத்தினான் ஜராசந்தன் கோபத்துடன். அவன் குரல் ஓங்கி ஒலித்தது. “எப்படி நீ மூன்று அந்நியர்களை இந்த நகரத்துக்குள் வர அனுமதித்தாய்? யார் அவர்கள்? எப்படிப்பட்டவர்கள்?” என்று கேட்டான். “பிரபுவே!” என்ன தான் மேகசந்தி ஜராசந்தனின் பேரனாக இருந்தாலும் ஜராசந்தனுக்கு இப்படி மரியாதையுடன் அழைப்பதே பிடித்தமானது என்பதை மேகசந்தி அறிந்திருந்தான். “அவர்கள் மூன்று பேர்கள். ஒருவன் மிகப் பெரியவனாக பலவானாக, தேர்ந்த மல்யுத்த வீரனாகக் காணப்படுகிறான். அவன் மார்பு அகன்று விரிந்து காணப்படுகிறது. அவன் தோள்களிலிருந்து தொங்கும் கரங்களும் நீண்டு மிகவும் வலிமை பெற்றதாகத் தெரிகிறது. யானைத் துதிக்கையைப் போன்ற நீண்ட கரங்களைக் கொண்டிருக்கிறான்.”

“மற்ற இருவர்?” ஜராசந்தன் கேட்டான்.

“மற்ற இருவரும் சாமானியராகத் தெரிகின்றனர். அவர்களில் உயரமானவன் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் அவனும் வலிமையானவனே! மூன்றாமவன் மிக அழகான இளமை பொருந்திய முகத்துடனும் ஒளிவீசும் கண்களும் முகத்தில் எப்போதும் புன்னகையுடனும் காணப்படுகிறான்.”

“அவர்கள் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள்?”

“அவர்கள் ஸ்ரோத்திரியர்கள்  என்று அவர்களே சொன்னார்கள். இங்கே கிரிவ்ரஜத்தில் நீங்கள் இருப்பது தெரிந்து உங்களைச் சந்தித்து மரியாதை செலுத்தி விட்டுப் போக வந்திருக்கிறார்கள்.” என்றான் மேகசந்தி. மேகசந்திக்குத் தன் தாத்தாவுக்கு மட்டும் கோபம் வந்து விட்டால் அவர் கோபத்தைத் தணிக்க யாராக இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டார் என்பதை நன்கறிந்திருந்தான். எல்லாவற்றையும் விட மோசமானது என்னவெனில் இந்த யாகத்தில் நூறு அரசர்கள் என்ற கணக்கைச் சரிக்கட்டுவதற்காக மேகசந்தியின் தகப்பன் சகாதேவனும், மேகசந்தியின் சகோதரர்களையும் கூட ஜராசந்தன் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் அவனிடம் விசுவாசமாக இல்லை என்பது ஜராசந்தனின் கருத்து. ஆகவே இது நடக்கும் முன்னரே இங்கே கிருஷ்ண வாசுதேவன் வந்தாக வேண்டும். இதுவே மேகசந்தியின் விருப்பமாக இருந்தது.

“ம்ம்ம்ம்ம், அவர்களை மக்கள் கவனித்தார்களா? மக்களுக்கு இவர்களிடம் ஏதேனும் ஆர்வம் காணப்பட்டதா?”
“ஆம், ஐயா!” என்றான் மேகசந்தி.

“உனக்கு எப்படித் தெரியும்?”

“அவர்கள் பார்க்க விசித்திரமாகத் தெரிந்ததால் நான் என் நேரத்தை முழுதும் அவர்களுடன் செலவழித்தேன். அவர்கள் தங்கள் உடலில் சந்தனத்தை அரைத்துப் பூசி இருந்தார்கள், மலர் மாலைகளை அணிந்திருந்தார்கள். உள்ளே நுழையும் நுழை வாயிலில் நேரத்தை அறிவிக்க வைத்திருந்த இரு பேரிகைகளையும் அவர்கள் உடைத்து விட்டார்கள். அவர்கள் வீதிகளில் நடந்து வருகையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆண்களும், பெண்களும் வெளியே வந்து அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். நம்முடைய ஓர் அதிரதி அவர்களை இரவு உணவுக்குத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தான்.”

“நீயும் அந்த விருந்துக்குச் சென்றிருந்தாயா?”

“ஆமாம், இல்லை எனில் அவர்கள் ஏதேனும் சதி செய்தால்? தெரியாமல் போய்விடுமே!”

“என்ன நடந்தது? விருந்துக்குப் பின்னர்?”

“உணவு உண்டு முடித்ததும் அவர்கள் கிரிவ்ரஜத்தின் வாயிலருகே வந்தனர். குடியிருப்பின் அருகே போக நினைத்த போது அங்கே இருந்த மல்லர்களால் மேலே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர்.”

“அவர்களை உடனடியாக வெளியேறச் சொல்லி உத்தரவிடு! அவர்க்ள் அப்படிச் செய்யாமல் சொன்னதைக் கேட்கவில்லை எனில் கிரிவ்ரஜ மலையின் உச்சியிலிருந்து அவர்களைக் கீழே உருட்டி விட்டு விடு! அல்லது தூக்கி எறிந்து விடு!” கத்தினான் ஜராசந்தன். அப்போது மேகசந்தியுடன் அங்கே வந்திருந்த மல்லர்களில் ஒருவன் வாய் திறந்தான். “மஹாப்ரபு! அவர்களில் ஒருவன் மல் வித்தையில் சிறந்த பயிற்சி பெற்றவனாகத் தெரிகிறான், அவன் உடலமைப்பு அப்படிச் சொல்கிறது. அவன் என்ன சொன்னான் எனில் இங்குள்ள அனைத்து தெய்விக மல்லர்களுக்கும் கடவுளைப் போன்ற நீங்கள் உத்தரவு கொடுத்தால் இங்கே நடைபெறும் மல்யுத்தச் சடங்குகளில் உங்களுடன் பொருத அவனும் பங்கு பெறுவதாகச் சொல்கிறான்.” என்றான்.

ஜராசந்தன் புன்னகைத்தான்; அவன் எப்போதுமே அவனுடைய பிரியமான கடவுள் ருத்திரனுக்கு இப்படி ஓர் வழிபாட்டை நடத்துவதில் ஆவல் அதிகம். அதிலும் நான் மல்யுத்தத்தில் பிரபலமானவன் என்று சொல்லிக் கொண்டு வருபர்களோடு மோதித் தோற்கடித்து ருத்திரனுக்கு பலியாக்குவது ஜராசந்தனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த மனிதன் மட்டும் அவனருகே வந்து அவனைத் தொடட்டும். ஜராசந்தனின் வலிமையான கைகள் இரண்டும் அவன் தலையைப் பிடித்து மோது மோதி நசுக்கி அவனைக் கொன்று விடும். இந்த விஷயத்தில் மல்யுத்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளெல்லாம் ஜராசந்தனுக்கு முக்கியமல்ல. எதிராளியை அழிப்பது ஒன்றே அவனுக்கு முன்னர் தோன்றும். இப்போது அப்படி ஓர் சந்தர்ப்பம் தேடிக் கொண்டு வந்திருக்கிறது.

“நல்லது! மிக நல்லது!” என்றான் ஜராசந்தன். “அவர்களிடம் சொல்லி வை. அவர்களைக் கோட்டைக்குள் தங்க வைப்பதாகச் சொல்! நாளைக்காலை வரை அவர்கள் அங்கேயே தங்கட்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடு. நல்ல உணவு கொடு! நாளைக் காலை ருத்ரனுக்கு வழிபாடு முடிந்ததும் எனக்கும் அவனுக்குமான மல்யுத்தப் போட்டி நடைபெறும். ஆனால் ஒன்று! அவர்கள் மூவரிடமுமே சொல்லி வை இதை! அவர்கள் ஏதேனும் சூழ்ச்சி செய்தாலோ தந்திரமாக என்னை ஏமாற்ற நினைத்தாலோ அவர்கள் எலும்பை நொறுக்கி விடுவேன். அதற்கென உள்ள ஆலிங்கனத்தைச் செய்து உடல் எலும்புகளை நொறுங்கிப் போகும்படி செய்வேன். அவன் இறந்ததும் அவன் உடலை மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுவேன்.” என்றான் ஜராசந்தன்.

அப்போது கோட்டைக்கு வெளியே ஏதோ களேபரம் நடப்பதன் அறிகுறியாக சத்தமாக இருந்தது. யாரோ எதற்கோ சத்தம் போட, பதிலுக்கு சத்தம் கேட்க ஒரே குழப்பமாகப் பல்வேறு குரல்களில் த்வனி கேட்டது. அவனருகே அமர்ந்திருந்த மல்லர் தலைவனைத் திரும்பிப் பார்த்தான் ஜராசந்தன். “அங்கே என்ன சப்தம்? ஏன் இவ்வளவு கூக்குரல்கள்?” என்று கேட்டான். “அங்கே போய் விசாரித்து வா! அந்தப் புதிய மனிதர்கள் ஏதேனும் தொந்திரவு செய்திருந்தால் அவர்களைக் கைகளையும், கால்களையும் கட்டி இங்கே இழுத்து வா!” என்றான்.

மல்லர் தலைவன் அந்தக் கோட்டையின் வெளிவாசல் கதவுக்கு அருகே செல்வதற்கு முன்னரே, அந்த அந்நியர்கள் மூவரும் சுவர் ஏறிக் குதித்துச் சுவரின் மேலே கைப்பிடிச்சுவரில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வெற்றி முழக்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் மிக உயரமானவன் அனைவரையும் தன்னுடன் பொருத அழைத்துக் கொண்டிருந்தான். தன் தோள்களில் தட்டியும், தொடைகளில் தட்டியும் அனைவரையும் அழைத்துத் தன்னுடன் பொருத வருமாறு அறைகூவல் விடுத்தான். அவனுடைய எதிர்ப்பும் அறைகூவலும் ஜராசந்தனுக்கு மிக அதிகமாகத் தெரிந்தது. வந்தவன் ஏதோ ஜம்பம் அடிக்கிறான் என்று நினைத்தான். அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து கொண்டு நான்கு மல்லர்களைத் தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அழைத்தான். அவன் அந்த அந்நியர்கள் மூவரும் குதித்து இறங்கிய அந்தக் குறிப்பிட்ட வாயில் கதவருகே சென்றான்.

அங்கே அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை நோக்கிச் சென்ற ஜராசந்தன், “நீங்கள் மூவரும் யார்? என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்? ஏன் என் மல்லர்களை எதிர்க்கிறீர்கள்? என் கட்டளைகளை அவமதித்து எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“நாங்கள் இந்தக் கோட்டைக்குள் இப்படி ஏறிக் குதித்துத் தான் நுழைந்தோம். ஏனெனில் உனக்கு இதன் மூலம் சர்வ நிச்சயமாக நாங்கள் தெரிவிக்க விரும்பியது நாங்கள் மூவரும் உன் எதிரிகள்! நண்பர்களாக இருந்திருந்தால் கோட்டை வாயில் வழியாக அனைவரும் வரவேற்க உள்ளே நுழைந்திருப்போம். நாங்கள் எதிரிகள் என்பதைக் காட்டவே இப்படி ஏறிக் குதித்து வந்தோம்!”

ஜராசந்தன் மிகப் பெரிய குரலில் சிரித்தான். “ஆஹா, நீங்கள்? என் எதிரிகளா? ஹூம், சிறுவர்களே! உங்களை நான் ஈயை நசுக்குவது போல் என் வெறும் கைகளாலேயே நசுக்கிக் கொன்று விடுவேன். ஆனால் நீங்கள் மூவரும் என்னுடன் பஹுவித்தையில் நுழைந்து போரிடத் தகுதி வாய்ந்தவர்களா? அப்படித் தெரியவில்லையே! அவ்வளவு தகுதி உங்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். ஆகையால் நீங்கள் மூவரும் என்னுடைய மல்லர்களுடனேயே பொருதுங்கள்! உங்கள் தகுதிக்கு அதுவே அதிகம்!” என்றான் ஜராசந்தன்.

“ஓ, அதுவும் அப்படியா? ஜராசந்தா! உனக்கு என்ன தெரிய வேண்டும்? நான் உன்னுடன் மல்யுத்தத்தில் மோத முடியுமா என்று தானே? விசித்திரமாக இருக்கிறதே! என்னை நீ அறியவில்லையா? நிச்சயமாக நீ என்னை அறிந்திருப்பாய்! புரிந்து கொள்வாய்! உன் வாழ்நாள் முழுவதும் நீ என்னைத் தேடுவதிலும் என்னைக் கொல்வதிலும் அன்றோ செலவு செய்திருக்கிறாய்! அது தான் இப்போது நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்.” என்றான் கிருஷ்ண வாசுதேவன்.


Sunday, October 23, 2016

ஜராசந்தனின் குறிக்கோள்கள்!

ஜராசந்தனால் ஆட்சி செய்யப்பட்ட மகத நாடு நீர் வளம் நிரம்பியது. பல நதிகள், ஆறுகள் அதில் பாய்ந்தன. அவற்றில் முக்கியமானது கங்கை நதி. அங்கே மிக அகலமாகவும் ஆழமாகவும் பாய்ந்த கங்கை வெகு தூரத்துக்குக் கிழக்கே ஓடினாள். அந்த கங்கை நதியின் மூலம் அனைவரும் பக்கத்தில் உள்ள நகரங்கள், கிராமங்களுக்குச் செல்லவும், அக்கரையில் உள்ள நகரங்களை அடையவும் படகுப் பயணத்தையே நம்பி இருந்தனர். படகுப் போக்குவரத்தும் அங்கே முக்கியமான ஒன்றாக இருந்து வந்தது. தூர தூர தேசங்களின் மக்களை எல்லாம் அந்த நாட்டின் நீர் வளமும், நில வளமும் கவர்ந்திழுத்தது. அதோடு அங்கே இயற்கையாக உருவெடுத்த வெந்நீர் ஊற்றுக்களும் மக்களைக் கவர்ந்திருந்தன. கிரிவ்ரஜ மலை கோட்டை அரணைப் போல் பாதுகாக்க அதைச் சுற்றித் தலைநகரம் உருவாகி இருந்தது. மக்கள்  வசிப்பதும் அந்தப் பரந்த நகரத்தில் தான் அதிகமாக இருந்தது.

ஜராசந்தனின் தகப்பன் ஆன பிருஹதரதன் என்னும் அரசன் அனைவருடனும் ஒத்து வாழ்ந்து ஆட்சி நடத்தினான். அவன் ஆட்சியில் மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். மகதமே மிகவும் புகழ் பெற்றிருந்தது. அண்டை நாடுகளான காசி தேசத்துடனும், மிதிலையுடனும் நட்புப் பாராட்டி வந்தது. ஜராசந்தன் பட்டம் ஏறியதும் தன்னுடைய மாளிகையை நகரின் நடுவில் அமைத்துக் கொண்டான். அவன் அரியணை ஏறியதிலிருந்து அவனுக்கு வாழ்க்கையில் இரண்டே குறிக்கோள்கள் இருந்தன. மரணத்தை வெல்ல வேண்டும். எவராலும் தன்னை அழிக்க முடியாது திகழ வேண்டும். இந்த நாடு மொத்தத்துக்கும் ஒரே சக்கரவர்த்தியாக இருந்து அரசாள வேண்டும், அதற்கு அண்டை நாடுகளைத் தன் வயப்படுத்த வேண்டும். தன்னுடைய முதல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவன் மிகவும் விடாமுயற்சியுடன் பயிற்சிகள் பல செய்தான். தன் உடல் பலத்தை அதிகப்படுத்திக் கொண்டான்.

அவன் ஆரம்ப காலத்தில் நடத்திய போர்ப் பிரசாரங்களின் போது மல்லர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் இடைவிடாத பயிற்சிகளினால் அழியாமல் என்றென்றும் வலிமையுடன் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. மல் வித்தைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். அந்த வித்தையை அரச குலத்தினருக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மல் வித்தையைத் தங்கள் மதரீதியானதொரு சடங்காகப் போற்றி வந்தார்கள். ஜராசந்தன் அவர்களில் சிலரை கிரிவ்ரஜம் அழைத்து வந்தான். அவர்களில் சிறந்தவர்கள் நிறைந்ததொரு படையை உருவாக்கினான். அவர்கள் வசதியாக வாழ ஏற்பாடுகள் செய்து கொடுத்தான். விரைவில் மல் யுத்தம் செய்யும் மல்யுத்த வீரர்களை வழிபாட்டுக்குரியவர்கள் என்னும் அந்தஸ்து கிடைக்கச் செய்தான். அவர்கள் அனைவரும் கோயில் பூசாரி, அர்ச்சகர் என்னும் அளவில் மதிக்கப் பட்டனர். தன்னைத் தானே தலைமை குருவாக அறிவித்துக் கொண்டான். ருத்ரனை வழிபடுவதற்கான சிறந்த வழி இது என்று சொன்னதோடு அல்லாமல் ருத்ர வழிபாட்டைப் பிரதானமாக அறிவித்தான்.

இந்தப் புனிதமான பெயரைப் பெற்றிருந்த மல்யுத்த வீரர்களோ பார்ப்பதற்கு வாட்டம் சாட்டமாக இருந்ததோடு அல்லாமல் அவர்களுக்குள் ஓர் உலகைச் சிருஷ்டி செய்து கொண்டு அதில் வசித்து வந்தனர். ஜராசந்தனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளை வேறு வழியில்லாமல் பின்பற்றியதோடு அல்லாமல் அவனிடம் கெஞ்சிப் பணிந்து இரந்து வாழ்ந்து வந்தனர். மல் வித்தையை அவனுடைய துணையோடு கற்றுக் கொடுத்தும் வந்தனர். இதன் மூலம் அங்கே வாழ்ந்து வந்த மக்களை மிரட்டியும், பயமுறுத்தியும் சாமானிய மக்களுக்குத் தொந்திரவு கொடுத்தும் வந்தனர். யாரும் இதைக் குறித்துக் கேட்கவே இல்லை! இதைத் தவிரவும் அவர்கள் ஜராசந்தனுக்காக ரகசிய ஒற்று வேலைகளும் செய்து வந்தனர். அவனுடைய கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நடந்ததோடு அல்லாமல் எவரேனும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை என்றாலோ அல்லது அவனிடம் விசுவாசமாக இல்லை என்றாலோ அவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். இதன் பின்னர் அவர்களுக்குச் சாட்டையடி, ஜராசந்தன் கைகளாலே அடி, உதை, மண்டையை உடைத்தல் போன்ற பரிசுகள் கிடைக்கச் செய்வார்கள்.

கிரிவ்ரஜ மலையின் அடிவாரத்தில் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்தார்கள் மல்லர்கள் அனைவரும். ஆனாலும் ஒரு வாரத்தின் மூன்று நாட்கள் அவர்கள் மாறி மாறி சக்கரவர்த்தியின் சேவையில் ஈடுபட வேண்டும். அப்போது குடியிருப்பில் இருக்கும் மற்ற மல்லர்கள் அங்கே உள்ள க்ஷத்திரிய வீரர்களையும் மற்ற மக்களையும் வேவு பார்க்க வேண்டும். அங்கே வியாபாரம் செய்ய வரும் வணிகர்களிடம் பணம் பறிப்பார்கள். இதை எல்லாம் ஜராசந்தன் காதுகளுக்குக் கொண்டு போனாலும் அவன் இவற்றை லட்சியம் செய்வதே இல்லை. அங்கே மல்லர்கள் வைத்ததே சட்டமாக இருந்து வந்தது. அந்த நகரின் மையப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையில் ஜராசந்தனும் அவன் குடும்ப நபர்களும் தங்கி இருந்தனர். அவன் மகன் சகாதேவன், பேரன்களான சோமாஜி, மர்ஜாரி, மேகசந்தி ஆகிய மூவரும் அவனை தினமும் முன்காலைப் பொழுதில் சந்திக்க வேண்டும் என்று கட்டாயமான கட்டளை இருந்தது. ஆகவே அவர்கள் அவனைச் சந்திக்கக் காத்திருப்பார்கள்.

ஜராசந்தனுக்கு மனம் இருந்தால் தன் ராணிகளில் எவரேனும் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடன் படுக்கை அறைக்கு அழைத்து வைத்துக் கொள்வான். ஆனால் ராணிகளுக்கு அது உகப்பாக இருந்ததில்லை. அவனுடன் தங்குவதை விடத் தற்கொலை செய்து கொண்டு விடலாம் என்றே நினைப்பார்கள். அவனுடன் தங்கப் போகும் ராணி மரணத்தை வலிந்து விரும்புகிறாள் என்றும் நினைப்பார்கள். அன்றைய தினத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணியானவள் மல்லர்கள் புடை சூழ்ந்து வர பல்லக்கும் அவர்களில் சிலரால் தூக்கப்பட அதில் அமர்ந்து ஜராசந்தனுடன் தங்குவதற்கென வருவாள். அவள் வருகையினால் சந்தோஷம் அடைந்தால் சரி, இல்லை எனில் ஜராசந்தன் பல சமயங்களிலும் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் அப்படியே திருப்பி அனுப்பியதும் உண்டு. அவள் சலித்துப் போனாலும் பேசாமல் திருப்பி அனுப்பி விடுவான்.

இந்த பூவுலகை வெற்றி கொண்டு அனைவருக்கும் தானே ஒரே அரசனாகச் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும் என்னும் ஆசையில் ஜராசந்தன் தன் படைகளை அங்குமிங்கும் அழைத்துச் சென்று அக்கம்பக்கத்து அரசர்களோடு போரிட்டு அல்லது அவர்களைப் பிடித்துத் துன்புறுத்தித் தன் நாட்டோடு அவர்களைச் சேரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, அவர்கள் நகரங்களைக் கொள்ளையடித்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். அவனால் பிடிக்கப்பட்ட பல அரசர்களும் அவனுடைய அந்தக் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதோடு அவனால் ருத்ரனுக்கு பலியாகவும் கொடுக்கப்பட்டார்கள். இதைத் தவிர அவன் வலிமை பொருந்திய பல அரசர்களோடு சம்பந்தமும் வைத்துக் கொண்டு இருந்தான். அவர்களில் சேதி தேசத்து அரசன் சிசுபாலன், காருஷ நாட்டு அரசன் தந்தவக்கிரன், மற்றும் சௌப நாட்டு அரசன் ஷால்வன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அதோடு இல்லாமல் அவன் தன்னுடைய அதிகாரத்தை மேலும் விஸ்தரிக்க வேண்டி ஆர்யவர்த்தத்தின் முக்கிய நகரமான மத்ராவை ஆண்டு வந்த யாதவ குல அரசன் கம்சனுக்குத் தன் இரு பெண்களையும் மணமுடித்துக் கொடுத்திருந்தான். கம்சனுக்கும் அவனளவில் பல ஆசைகள், குறிக்கோள்கள் இருந்தன. என்றாலும் அவன் ஜராசந்தனுக்கு விசுவாசமாகவே இருந்தான். என்றேனும் ஓர் நாள் மாப்பிள்ளை என்பதால் ஜராசந்தனின் ராஜ்யத்தின் ஒரு பகுதியேனும் அவன் கைகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்த்திருந்தான்.  ஆனால் கம்சனும், ஜராசந்தனும் எதிர்பாரா விதமாகக் கம்சன் வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். ஜராசந்தனுக்கு இது தனக்கிழைத்த பெரிய அநீதி என்றும் அநியாயம் என்றும் அவமரியாதை என்றும் தோன்றியது. தன் இருபெண்களும் விதவைகள் ஆனதை அவனால் பொறுக்க முடியவில்லை.  கிருஷ்ணனை அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனை மட்டுமின்றி யாதவ குலத்தையே பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணனோடு சேர்த்து அவன் சகோதரன் பலராமனையும் பழி வாங்கியே ஆகவேண்டும். இது அவன் வாழ்நாள் குறிக்கோள் ஆயிற்று.

ஜராசந்தன் மத்ராவை முற்றுகையிட்டு அதன் மூலம் கிருஷ்ணனைப் பிடித்துக் கொல்வதோடு நகரையும் நகர மாந்தரையும் யாதவத் தலைவர்களையும் அழிக்க நினைத்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனால் அதைச் செய்ய முடியாமல் கிருஷ்ணனும் பலராமனும் அங்கிருந்து வெளியேறிவிட்டதோடு அவர்கள் எங்கே போனார்கள் என்பது உடனடியாகத் தெரியாதபடியால் அவனால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டது. சில மாதங்கள் கழித்துக் கிருஷ்ணனும் பலராமனும் திரும்பி மத்ரா வந்து சேர்ந்தார்கள். இப்போது முழு மூச்சுடன் மத்ரா முற்றுகையை நடத்துவதற்கு ஜராசந்தன் முயன்றான். ஆனால் அங்கே கிருஷ்ணனின் தலைமையில் யாதவர்கள் அனைவரும் சௌராஷ்டிரக் கடற்கரை நகருக்குச் சென்று விட்டார்கள். செல்லும்போது அவர்களின் ரதங்கள், கால்நடைச் செல்வங்கள், உணவுப் பொருட்கள், மற்றும் எவற்றை எல்லாம் எடுத்துச் செல்லமுடியுமோ அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நகரைக் காலியாகவே விட்டிருந்தனர். கோபம் கொண்ட ஜராசந்தனால் மத்ராவைத் தீயிட்டு எரிக்க மட்டுமே முடிந்தது.

Saturday, October 22, 2016

மகதத்தை நோக்கிப் பயணம்!

“என்னால் இதை சிறிதும் நம்பவே முடியவில்லை!” என்ற த்வைபாயனருக்கு உடல் நடுங்கியது. “இது நம் போன்ற ஆரியர்களுக்கு உகந்ததே அல்ல! பாவம் செய்கிறான். விஷமக்காரன்! விஷம் தோய்ந்த மனதுள்ளவன். கொடியவன், வெறுக்கத் தக்கவன். இத்தனை வருடங்களாக நாம் கட்டிக் காத்து வந்த தர்மம் இப்போது முற்றிலும் அழிந்து விடும். இதை நாம் எப்படியேனும் தடுக்க வேண்டும்!” என்றார். அப்போது கிருஷ்ணன், “ஆசாரியரே, உங்களுக்குத் தெரிந்து வேறு எந்த ஆரிய அரசரேனும் இப்படி உயிர்ப்பலி கொடுத்து யாகங்கள் செய்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நீங்கள் பார்த்தது உண்டா?” என்று கேட்டான் கிருஷ்ணன்!

“இல்லை, கிருஷ்ணா! பல்லாண்டுகளுக்கு முன்னர் ராஜா ஹரிசந்திரன் என்பவன் ஷுனசேபா என்பவனைப் புனித அக்னிக்கு இரையாக்கவும் யாகம் செய்யவும் முனைந்தான். ஆனால் அது அப்போது வருணனால் தடுக்கப்பட்டது. வருணன் அவனை விடுவித்துவிட்டான். அதன் பின்னர் எந்த ஆரிய அரசனும் மனிதரைப் பலி கொடுத்து யாகம் செய்ததில்லை!” என்றார் த்வைபாயனர். அளவுக்கடங்காத கோபத்தில் இருந்த அவர் குரல் நடுங்கியது. “உயிர்ப்பலி என்பதும் அதுவும் ஓர் அரசன் கொடுப்பதும் சற்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை! இதை நாம் எப்படியேனும் தடுத்தே ஆகவேண்டும்.” என்றார் த்வைபாயனர்.

“நம் படைகளை அவ்வளவு தூரம் மகதம் வரைக்கும் கூட்டிச் சென்று ஜராசந்தனை அழிப்பது என்றால் நடக்கிற காரியமா? அது எவ்வாறு இயலும்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன்! பீமன் தன் கைகளைத் தட்டினான். சொடுக்குப் போட்டுக் காட்டினான். “இதோ, இப்படித்தான்! நிமிடத்தில் முடிக்கலாம். நம்முடைய மஹாரதிகள் ஜராசந்தனை எப்போது முடிப்போம் என்று காத்திருக்கின்றனர்.  மற்றவர்களில் துருபதன் நமது மாமனார் மேலும் நண்பர். காசி தேசத்து அரசனும் அப்படித் தான்!”

“அவர்கள் ஆரம்பத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வார்களா என்பதும் மும்முரமாக இதில் ஈடுபடுவார்களா என்பதும் சந்தேகமே! அதில் எனக்குச் சந்தேகம் உள்ளது!” என்றான் கிருஷ்ணன். “நீ வெற்றி பெறுவாய் என்பது உறுதியாகத் தெரிந்தால் தான் அவர்கள் உன் உதவிக்கே வருவார்கள் என நினைக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் மேலும். “ம்ம்ம்ம்ம், மகத நாட்டை ஊடுருவுவதும் முற்றுகையிடுவது சாதாரணமான விஷயமே அல்ல! கடினமான ஒன்று!” என்றான் யுதிஷ்டிரன். அவன் எப்படியேனும் இதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினான். “அப்படியானால் நாம் என்ன செய்யலாம்?” கிருஷ்ணனிடம் பீமன் கேட்டான்.

“நமக்கிருக்கும் ஒரே வழி நான் சொன்னது மட்டுமே!” என்றான் கிருஷ்ணன். “தோல்வியே இல்லாத ஓர் சுமுகமான சூழ்நிலைக்கு அனைவரையும் கொண்டு வர வேண்டும். அப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஜராசந்தனை நாம் முற்றிலும் ஒதுக்கிவிட்டால் இது சாத்தியம். இல்லை எனில் கஷ்டம் தான்!” என்றான் கிருஷ்ணன். “எல்லாப் போர்களிலும் தோல்வி என்னும் ஆபத்து இருக்கத் தான் செய்கிறது!” என்றான் யுதிஷ்டிரன். “நாம் ராஜசூய யாகத்தைத் தொடங்கும் முன்னர் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்!” என்றான் கிருஷ்ணன். யாரும் வாயே திறக்கவில்லை. பின்னர் மெல்ல த்வைபாயனர் பேச ஆரம்பித்தார்.

“ம்ம்ம்ம். வாசுதேவக் கிருஷ்ணா, நான் உடனே என்னை குருவாக ஏற்று என் சொற்படி கேட்டு ராஜ்ய நிர்வாகத்தை நடத்தி வரும் அரசர்களுக்குச் செய்தியை அனுப்புகிறேன். மகத நாட்டு அரசனுடன் போர் துவக்கவேண்டும் என்று சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் ஆபத்து இருப்பதால் அனைவரும் நம்முடன் சேர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே!” என்றார். அவர் முகம் அளப்பரிய வேதனையைக் காட்டியது. வேறு வழியில்லை என்பதை அறிந்தே இதைச் சொல்ல நேர்ந்தது என்பது புலப்பட்டது. மேலும் கூறினார். “இது ஓர் தவிர்க்க இயலாத போராக இருக்கும். துரதிர்ஷ்டவசமானது. அதிலும் ஆரிய அரசர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் என்ன செய்வது! வேறு வழியில்லையே! இந்த உயிர்ப்பலியைக் கட்டாயமாய்த் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். இல்லை எனில் தர்மம் அழிந்து விடும். மனிதரை மனிதரே மதிக்காமல் போய்விடுவார்கள். நாமும் அதன் பின்னர் ஆரியர்களாக இருக்க மாட்டோம்! ராக்ஷசர்களாக ஆகிவிடுவோம்.” என்றார் த்வைபாயனர்.  அனைவரும் அவரவர் யோசனையில் ஆழ்ந்தனர்.

த்வைபாயனர், கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா, நீ என்ன சொல்கிறாய்? உன் கருத்து என்ன?” என்று கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணனும் யோசனையில் இருந்ததால் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். ஆனால் பேசப் பேச வார்த்தைகள் திடமாக விழுந்தன. “எனக்குக் கிடைத்த செய்தி தெளிவாகச் சொல்கிறது. இளவரசன் மேகசந்தி இந்த அக்கிரமமான செயலைச் செய்ய விடாமல் தடுப்பதற்கு என் உதவியை நாடி இருக்கிறான்.”

“என்னை அழைக்க நகுலன் துவாரகைக்கு வரும் முன்னர் நான் ஏற்கெனவே மேசந்திக்கும் அவன் தகப்பனும் பட்டத்து இளவரசனும் ஆன சகாதேவனுக்கும் செய்தி அனுப்பி விட்டேன். ராஜநியாஸைக் காப்பாற்றுவதற்கு நான் கட்டாயம் வருவதாகச் செய்தி அனுப்பி விட்டேன்.”

ஆனால் யுதிஷ்டிரன் விடாமல் கூறினான். “கிருஷ்ணா, மகதத்துக்குப் படைகளை அனுப்புவது என்பது சாதாரணமான விஷயமே அல்ல!” என்றான். “அப்படியா? அப்படி எனில் நாம் மோதல்களோ சச்சரவுகளோ இல்லாமல் ஜராசந்தனை அழிக்க ஒரு வழி கண்டு பிடித்தாகவேண்டும்!” என்ற கிருஷ்ணன் யுதிஷ்டிரனைப் பார்த்துச் சிரித்தான். “அது எப்படி முடியும் கிருஷ்ணா?” என்று கேட்டான் யுதிஷ்டிரன். “யுதிஷ்டிரா, இந்தத் துணிகரமான முயற்சியில் ஈடுபடுவதோ, ஈடுபடாமல் இருப்பதோ உன் விருப்பம். அது உன் கைகளில் உள்ளது. ஆனால் நான் அப்படி இருக்க முடியாது. எனக்கு வேறு வழியில்லை. ஜராசந்தன் என்னை அழிக்கவென்றே அலைகிறான். மேகசந்தியோ என்னிடம் விண்ணப்பம் செய்திருக்கிறான். ஏனெனில் இது அநியாயச் செயல் என்றும் இப்படி ஒன்று நடப்பதையும் தர்மத்திற்குப் புறம்பாக இருப்பதையும் நான் விரும்ப மாட்டேன் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதோடு இல்லை! இயன்றால் ஜராசந்தன் பேரனான மேகசந்தியையும், அவன் தகப்பன் சகாதேவனையும் கூட யாக அக்னியில் போடுவதற்குத் தயங்க மாட்டான். இதை நினைத்துத் தான் மேகசந்தியும் அஞ்சுகிறான்.”

“ஹூம், அவனுக்கு என்ன பைத்தியமா? முட்டாள்!” என்று சீறினான் பீமன்.

“மூத்தவரே, உங்கள் விருப்பம் போல் நடவுங்கள். நான் இங்கிருந்து நேரே மகதம் தான் செல்லப் போகிறேன். உங்களால் இயன்றால் பீமனையும் அர்ஜுனனையும் என்னோடு அனுப்பி வையுங்கள். அவர்கள் எனக்கு உதவியாக இருப்பார்கள். நீங்கள் ராஜசூய யாகம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும் என்னும் எண்ணமும் நிறைவேறும். ஆகவே நீங்கள் இங்கேயே இருந்து ஏற்பாடுகளைக் கவனிக்கலாம்!” என்றான் கிருஷ்ணன். இதைக் கேட்ட குந்தி அதிர்ச்சியும் திகிலும் அடைந்தாள்.”கிருஷ்ணா, கிருஷ்ணா, உனக்கோ அல்லது பீமன், அர்ஜுனன் ஆகியோருக்கோ ஏதேனும் ஆகிவிட்டால்? என்ன செய்வது? எப்படி உங்களைக் காப்பாற்றிக் கொள்வீர்கள்?” என்று கேட்டாள்.

கிருஷ்ணன் புன்னகைத்தான்.”அத்தை, ஒரு உண்மையான க்ஷத்திரியன் தன் தலையை உள்ளங்கைகளில் தான் தாங்கிக் கொண்டு இருக்கிறான், எப்போதுமே! ஆகையால் கவலைப் படாதீர்கள். மூவாயிரம் அதிரதிகளால் முடியாத காரியத்தை நாங்கள் மூவரும் நடத்திக் காட்டலாம். சொல்ல முடியாது. நாங்கள் உங்கள் ஆசிகளையும், ஆசாரியரின் ஆசிகளையும் வேண்டுகிறோம். ஜராசந்தனுடன் போரிடுவதற்கு எனக்குத் தனிப்பட்ட காரணங்களும் இருக்கின்றனவே! என் வாழ்க்கை முழுவதும் அவன் என்னைப் பின் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறான். பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன அவனைக் கொல்வதற்கு. ஆனால் நான் தான் அவனைத் தப்பிச் செல்ல அனுமதித்தேன். ஏனெனில் தனிப்பட்ட விரோதத்துக்காக நான் அவனைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால் இம்முறை எனக்குத் தயக்கமே இல்லை. ஏனெனில் அவன் ஆரிய தர்மத்தையே பூண்டோடு அழிக்க விரும்புகிறான். மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்ளப் பார்க்கிறான். மனித வாழ்க்கையின் புனிதத்தையும் அழிக்க நினைக்கிறான்.”

“ஆனால் நீயும், உன் வாழ்க்கையும் கூட விலை மதிப்பற்ற ஒன்று கிருஷ்ணா! அதை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வீணடித்துக் கொள்ளாதே!” என்றாள் குந்தி மீண்டும்.

“அத்தை, நான் இதில் ஈடுபடவில்லை எனில், ஜராசந்தன் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருப்பான். ஆரிய தர்மம் மட்டுமில்லாமல் மனிதாபிமானமும் செத்துவிடும். ஆரியர்களின் வாழ்க்கையில் இருக்கும் கட்டுக்கோப்பே சிதைந்துவிடும். மேக சந்தி முயற்சிகள் பல எடுத்து இதில் கலந்து கொள்ளும் அரசர்களின் எண்ணிக்கையை நூறுக்கும் குறைவாகச் செய்து வருகிறான். நடு நடுவில் பல அரசர்களை இதிலிருந்து தப்பிக்கவும் ஏற்பாடு செய்து தருகிறான். இதற்கு மேல் அவனால் என்ன செய்ய முடியும்?” கிருஷ்ணன் த்வைபாயனரைப் பார்த்துத் திரும்பினான். “ஆசாரியரே, நாங்கள் திரும்பி வருவோம். அப்படி ஒருக்கால் வராவிட்டால், நீங்கள் ஆரிய வர்த்தத்தின் மற்ற அரசர்களை மகதத்தை முற்றுகையிடச் சொல்லுங்கள். ஆனால் நாங்கள் தோல்வி அடைய மாட்டோம்! வெற்றி பெறுவோம்!” என்றான் கிருஷ்ணன். த்வைபாயனர் கிருஷ்ணன் சொல்வதன் முழுப் பொருளும் உணர்ந்து கொண்டார். அவன் முகத்தோற்றமும், அவனுடைய நிச்சயமான தொனியும் அவன் கட்டாயம் வெற்றி பெறுவான் என்று அவருக்கு உணர்த்தியது.

தலை குனிந்து கிருஷ்ணன் வணங்க த்வைபாயனர் அவனை ஆசீர்வதித்தார். “சர்வ வல்லமை பொருந்திய வாசுதேவ கிருஷ்ணா! இந்த சர்வ நாசத்தை மட்டும் உன்னால் தடுக்க முடியுமானால் நல்லது. அப்படி நீ தடுத்துவிட்டாயெனில் நீ தான் இவ்வுலகின் இந்த யுகத்தின் சாஸ்வத தர்ம குப்தன் என்று ஆணையிட்டு நான் சொல்கிறேன். இப்படி ஒருவனைத் தான் நான் என் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டிருந்தேன்!” என்றார்.  கிருஷ்ணனும், பீமனும் அங்கிருந்து வெளியேறினார்கள். திரௌபதி அவர்களைத் தொடர்ந்தாள். கிருஷ்ணனிடம் அவள், “பிரபுவே, இரு சகோதரர்களையும் மிகவும் பத்திரமாக என்னிடம் ஒப்படைத்துவிடு! எனக்கு அந்த உறுதிமொழியைக் கொடு கிருஷ்ணா! அவர்கள் இல்லாமல் நீ மட்டும் திரும்பி வராதே! அப்படி வருவதில்லை என்று வாக்குக் கொடு!” என்று கேட்டாள். பீமன் உச்சஸ்தாயியில் சிரித்தான். “ஆஹா, திரௌபதி, உன் கணவன்மாரிடம் உனக்கு நம்பிக்கையே இல்லையா? ஏன் என்னிடம் கிருஷ்ணன் இல்லாமல் நீங்கள் இருவரும் திரும்பக் கூடாது என்று கேட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் உரக்கச் சிரித்தான்.

Friday, October 21, 2016

மீண்டும் ஜராசந்தன்!

“ஆசாரியரே, அதெல்லாம் சரிதான். ஆனால் நாம் வெற்றி அடைவோம் என எப்படி உறுதி கொள்வது? அதில் என்ன நிச்சயம்?” என்றான் யுதிஷ்டிரன். “போர் என்றால் எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்.” என்று கூறிக் கொண்டே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்தான். எப்படியேனும் தன்னை இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணன் காப்பாற்றி விடுவான். தான் அந்தச் செய்தியினால் ஏற்பட்டிருந்த தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தான் யுதிஷ்டிரன். “அறநெறிக்குட்பட்டு எந்த அரசன் உன்னுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்கிறான் என்று பார்க்க வேண்டும். அதோடு இல்லாமல் அப்படி ஒரு சூழ்நிலையை நீ உருவாக்கவேண்டும். சச்சரவுகளோ, மோதல்களோ இல்லாமல் உன்னைத் தன் தலைவனாக மற்ற அரசர்கள் ஏற்கும் சூழ்நிலை வரவேண்டும்.” என்றான் கிருஷ்ணன். “சச்சரவுகளோ, மோதல்களோ இல்லாமலா? அது எவ்வாறு சாத்தியம்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன். “ஆம், மூத்தவரே, சச்சரவுகளோ மோதல்களோ இல்லாமல் தான்!” என்றான் கிருஷ்ணன்.

“அதை எப்படிக் கொண்டு வரவேண்டும்? என்ன நிபந்தனைகளை விதிக்க வேண்டும்? கிருஷ்ணா, விளக்கமாகச் சொல்! தேவை எனில் அவற்றை நாம் உருவாக்குவோம்.” என்றான் பீமன். “எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் ஐவரும் போருக்குத் தயாராகுங்கள். தக்க ஆயுதங்களோடும், குதிரைப்படைகளோடும், வில்லாளிகள் நிறைந்த ரதப்படைகளோடும் அவற்றைச் செலுத்தும் விசுவாசமிக்க வீரர்களோடும் போருக்கு ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். இதிலேயே உங்கள் நிபந்தனைகள் முழுதும் நிறைவேற்றப்பட்டு விடும்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் கிருஷ்ணன் திரும்பி திரௌபதியைப் பார்த்தான். “உன் தந்தையின் நிலைமை குறித்து என்ன செய்தி, திரௌபதி?” என்று விசாரித்தான்.

“பிரபுவே, கிருஷ்ணா! என் தந்தை துருபதன் கட்டாயமாய் எங்களுக்கு உதவிகள் செய்வார். அதில் சந்தேகம் இல்லை. ஆகவே ராஜசூய யாகம் நடப்பதிலும் தடை ஏதும் இருக்காது!” என்றாள் திரௌபதி. பிறந்த அரச குடும்பத்தில் மட்டுமில்லாமல் வாழ்க்கைப்பட்ட அரச குடும்பத்திலும் திரௌபதியின் சொல்லுக்குச் செல்வாக்கு இருந்தது. அவளுடைய வார்த்தைகளும், கருத்துகளும் மதித்து அனைவராலும் கேட்கப்பட்டது. எப்போதுமே இம்மாதிரியான முக்கிய சமாசாரங்களைக் குறித்து விவாதிக்கையில் அவற்றில் திரௌபதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

கிருஷ்ணன் பீமனைப் பார்த்து, “உங்கள் நாட்டு மக்களின் நிலை குறித்து என்ன சொல்கிறாய் பீமா? அவர்கள் தங்கள் முழு ஆதரவையும் உங்களுக்கு அளிப்பார்கள் அல்லவா?” என்று விசாரித்தான். “ஓ, அவர்கள் விசுவாசம் அளப்பரியது! அதில் சந்தேகமே இல்லை.” என்றான் பீமன். “ம்ம்ம்ம்ம்ம் அப்படியா சொல்கிறாய்? பீமா! அவர்கள் விசுவாசத்தில் உனக்கு எந்த அளவு நம்பிக்கை இருக்கிறது? ஒருவேளை நீ ஒன்றிரண்டு போர்களில் தோற்றுப் போய் வந்துவிட்டாலும் அவர்களிடம் இதே மாறா விசுவாசத்தை எதிர்பார்க்கலாமா? அதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “ஆம், என்றே நம்புகிறேன்.” என்றான் பீமன். பின்னர் தொடர்ந்து, “ஆனால் நாங்கள் ஓரிரு போர்களில் தோற்றுப் போய்த் திரும்புவோம் என்பதை என்னால் நம்பவும் முடியவில்லை; அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை!” என்றான்.

கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “நீ எப்போதுமே வசதியாக வாய்ப்பாக உள்ளவற்றை மட்டுமே பார்க்கிறாய்! பிரச்னைகளின் எல்லாக் கோணங்களையும் அலசி ஆராய்வதில்லை!” என்று கிண்டலாகச் சொன்னான். “ஆஹா, அப்படி நான் செய்யவில்லை என்றால் உன் கண்ணீர் வெள்ளத்தில் என்னை மூழ்கடித்துவிட மாட்டாயா? கிருஷ்ணா, கிருஷ்ணா” என்ற வண்ணம் வழக்கம்போல் பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பீமன். “அது சரி அப்பா! உங்கள் மற்றத் துணைவர்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்? அவர்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான் கிருஷ்ணன். “ஓஓ, அவர்களைக்குறித்துக் கவலை வேண்டாம், கிருஷ்ணா! எப்போதும்போல் அவர்கள் அனைவரும் நம்மிடம் விசுவாசம் பூண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். ஒரு சிலர் மனது தடுமாறலாம் ஆனாலும் வெகு எளிதில் நாம் அவர்களையும் நம் பக்கம் வர வைத்துவிடலாம். ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல. “ என்றான்பீமன்.

“அப்படி எனில், அது போருக்கே வழி வகுக்கும்!” என்றான் மெல்லிய குரலில் யுதிஷ்டிரன். “ம்ம்ம்ம், சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவன் உங்கள் எதிரி. அதே போல் காருஷ நாட்டின் தந்தவக்கிரன், ப்ரக்யோதிஷ நாட்டின் பகதத்தன், விதர்ப்ப நாட்டின் ருக்மி மேலும் பௌண்டுரக வாசுதேவன். இவர்களை மறந்துவிடாதீர்கள். விட்டு விடாதீர்கள். இவர்கள் அனைவருமே ஜராசந்தனின் துணைவர்கள் என்பதையும் மறக்காதீர்கள்!” என்றான் கிருஷ்ணன். அதற்கு அர்ஜுனன், “சிசுபாலனையும் தந்த வக்கிரனையும் நாம் எளிதில் வெல்லலாம்.” என்றான். கிருஷ்ணன் மறுப்பாகத் தலை அசைத்தான்.

“அது அவ்வளவு எளிதல்ல சகோதரா! நீ சிசுபாலனுடனும், தந்தவக்கிரனுடனும் போரில் மும்முரமாக ஈடுபட்டிருப்பாய். அப்போது தான் ஜராசந்தன் நேரம் பார்த்துத் தன்னை உள்ளே நுழைத்துக்கொள்ளப் பார்ப்பான். அவர்கள் பக்கம் தன் பலத்தைக் கொண்டு வந்து காட்டுவான். அதோடு மட்டுமல்ல! உங்கள் பெரியப்பா மகன், உங்கள் சகோதரன் துரியோதனனுக்கு உங்கள் மேல் அன்பு பெருக்கெடுத்து ஓடவில்லை! உங்களை வெறுக்கிறான். அவன் இதெல்லாம் தெரிந்தால் ஒருவேளை ஜராசந்தனுக்குத் தன் ஆதரவைத் தெரிவிக்கலாம். பீஷ்மர், துரோணாசாரியார், கிருபாசாரியார் ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் துரியோதனன் விட மாட்டான். அதிலும் அவன் நண்பன் அந்த ராதேயன் கர்ணன் இருக்கிறானே, அவன் உங்களைத் தாக்க எது சந்தர்ப்பம் என்று காத்துக் கிடக்கிறான். அர்ஜுனா முக்கியமாய் உன்னோடு தான் அவனுக்குப் போர் புரிந்து உன்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஆவல். அதிலும் தன் நண்பன் ஆருயிர் சிநேகிதன் துரியோதனனுக்காக இந்தக் கர்ணன் எதை வேண்டுமானாலும் செய்வான்!” என்றான் கிருஷ்ணன்.

“நீ என்னதான் சொல்கிறாய்? கிருஷ்ணா! அதைத் தெளிவாகச் சொல்!” என்றான் பீமன். கிருஷ்ணன் இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு காரணங்களாக அடுக்கிக் கொண்டே போவதைப் பார்த்தால் ராஜசூய யாகம் செய்வதிலிருந்து அவர்களைத் தடுப்பான் போல் தெரிகிறதே! பீமனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் கிருஷ்ணன் உடனே பதில் பேசவில்லை! ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் கண்கள் இடுங்கிக் கொண்டு தொலைதூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. பின்னர் அவன் சொன்னான்:”நீங்கள் அனைவரும் நான் ராஜசூய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பங்கெடுக்க வேண்டுமென்றால்……………….” என்று இழுத்தான்.

“அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் ஒருவேளை என்றெல்லாம் இல்லை கிருஷ்ணா! எங்களுடன் நீ கலந்து கொண்டு ராஜசூய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பங்கெடுக்கவில்லை எனில் நாங்கள் இந்த யாகம் செய்வதையே விட்டு விடுகிறோம்.” என்றான் பீமன். “கிருஷ்ணா, உனக்கே நன்றாகத் தெரியும்! நாங்கள் போர் என்று ஆரம்பித்தால் போதும், நீ எங்கிருந்தாவது வந்து உதவிகள் செய்து எங்களைக் காப்பாற்றுவாய்! எங்களைப் பாதுகாப்பாய்!” என்றான் பீமன்.

“சரி, அப்போது நாம் முதலில் ஜராசந்தனை ஒழித்துக் கட்டிவிட வேண்டும். அவன் நம் எதிரிகளில் மிக முக்கியமானவன். மிகக் கசப்பான அனுபவங்களை நமக்குத் தந்தவன். அதிலும் யாதவர்களாகிய எங்களை அடியோடு அழிப்பதில் மிகவும் ஊக்கம் கொண்டவன். அதற்காக எவ்விதமான வழிமுறைகளைக் கூடக் கையாள்வான். கையாண்டும் பார்த்திருக்கிறான். என்னை அழிப்பதற்காக ஈடுபட்ட முற்றுகையில் அவன் எங்கள் புராதன நகரான மத்ராவை அடியோடு அழித்து எரித்து விட்டான். என்னை அகற்றவேண்டும் என்று செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் அவனால் என்னைக் கண்டே பிடிக்க முடியவில்லை. திரௌபதியைக் கடத்திக் கொண்டு போய் அவன் பேரனுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் திரௌபதியின் சுயம்வரத்திற்கும் வந்திருந்தான். ஆனால் நான் குறுக்கிட்டுத் தடுத்து அவனை ஊரை விட்டே போகச் செய்தேன்!” என்றான் கிருஷ்ணன்.

“எப்படி நாம் ஜராந்தனை அழிப்பது? கிருஷ்ணா, விளக்கமாய்ச் சொல்! அவன் இங்கே பக்கத்திலும் இல்லையே! எங்கோ தொலைதூரத்தில் மகதத்தில் அல்லவா இருக்கிறான்! அவன் சகோதரன் ஆன காசி தேசத்து அரசன் சுஷர்மா கூட அவனைக் கண்டாலே நடுங்குகின்றான்.” என்றான் யுதிஷ்டிரன். “ஆம், சகோதரரே! நீங்கள் சொல்வது சரியே! இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். சூரியன் மகர ராசிக்கு வரும்போது ஜராசந்தன் நூற்றுக்கணக்கான அரசர்களின் உதவியுடனும், ஆதரவுடனும் ஓர் மாபெரும் யாகத்தை நடத்துகிறான், உயிர்ப்பலிகள் கொடுக்கிறான் போலும். ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிப்பான்.”

“உண்மையாகவா? இது உண்மை எனில் இதை விட மோசமான ஒரு செய்தி ஏதும் இல்லை!” என்று குறுக்கிட்டார் த்வைபாயனர். கிருஷ்ணன் சொன்ன செய்தியினால் அவருக்கு ஏற்பட்டிருந்த தாக்கம் அவர் குரலிலும் முகத்திலும் தெரிந்தது. “அப்படி அவன் செய்வதும் மனுஷத்தன்மையே இல்லாத இப்படி ஓர் யாகத்தை அவன் நடத்துவதும் உண்மைதானா? வாசுதேவக் கிருஷ்ணா! நீ சொல்வது உண்மையா?” என்று கேட்டார் த்வைபாயனர். அதற்குக் கிருஷ்ணன், “இந்தச் செய்தியை எனக்குக் கொண்டு வந்தது ஆசாரிய இந்திரபிரமதர் ஆவார். ஆசாரிய ஷ்வேதகேதுவின் சீடர் இவர். காசிக்கு அருகே இவர் ஆசிரமம் உள்ளது. இது இளவரசன் மேகசந்தியிடமிருந்து தெரிய வந்தது!” என்றான் கிருஷ்ணன்.

“ஆஹா, நான் இந்திரபிரமதரை நன்கறிவேனே! இப்போது அவர் எங்கே?” என்று கேட்டார் த்வைபாயனர். அவர் திரும்பவும் கிரிவ்ரஜம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். அங்கே போய் ஜராசந்தனின் பேரன் சகாதேவனிடமும் மேகசந்தியிடமும் இப்படி ஓர் யாகத்தைச் செய்வது கூடாது என்று தடுப்பதற்காகவும் சென்றிருக்கிறார். குறைந்த பட்சமாக நான் அங்கே சென்றடையும் வரையிலும் அந்த உயிர்ப்பலியைக் கொடுக்காமல் தடுக்க நினைக்கிறார்.” என்றான் கிருஷ்ணன்.



Thursday, October 20, 2016

ஆலோசனைகள் தொடர்கின்றன!

கிருஷ்ணன் மேலே தொடர்ந்து பேசினான். “நம்முடைய படைகள் அனைத்தும் ஒரு யுத்தத்தில் ஜெயிக்கப் போதுமானவையாக உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் இது நம்பிக்கையைக் கொடுத்துவிடுமா? தர்மத்தின் பாதையிலிருந்து விலகுபவர்களை மீண்டும் தர்மத்தின் பாதையிலேயே கொண்டு சேர்க்கிறது எனப்தை நம்புவார்களா! எப்போதும் தர்மமே ஜெயிக்கும் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?”

“நீ சொல்வது சரியே வாசுதேவா! அதனால் தான் ராஜசூய யாகம் ஆரம்பிக்கப்படும் முன்னரே நாம் ஒரு சில ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இது நம் அதிகாரத்தையும் ஆட்சியையும் நிலைநாட்ட மட்டுமல்ல! அவர்கள் ராஜ்யத்தை நம்முடன் சேர்த்துக்கொள்வதற்காகவும் இல்லை!  மாறாக தர்மத்தின் வழியிலேயே வாழும் மன்னர்களை ஆதரித்து நம் பக்கம் துணையாகச் சேர்த்துக் கொள்வதற்காகவும் தான். மற்ற அரசர்களுக்கும் நாம் துணையாக இருப்போம் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதற்காகவும் தான். அதர்மம் என்றும் வெல்லாது என்று சொல்லவும் தான்!” என்றார் கிருஷ்ண த்வைபாயனர். கிருஷ்ணன் அர்ஜுனன் பக்கம் திரும்பினான். “அர்ஜுனா, உனக்கும் ரதப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் படைகள் மற்றும் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோருக்கிடையில் நல்ல முறையில் உறவு இருந்து வருகிறது அல்லவா?” என்று கேட்டான்,

“ஆம்,” என்ற அர்ஜுனன் மேலும் தொடர்ந்து, “நம்மிடம் இப்போது இருபது அதிரதர்களும் நாற்பத்தி மூன்று மஹாரதர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். இதைத் தவிர அவர்களை இடம் மாற்றுவதற்குத் தேவையான வில்லாளிகளும் தயார் நிலையில் இருக்கின்றனர்.” என்றான். “உன் விஷயம் என்ன, நகுலா?” என்று நகுலனிடம் கிருஷ்ணன் கேட்டான். நகுலன், “என் குதிரைகள் மிகவும் ஆரோக்கியமாகவும் விரைவாகச் செயல்படும்படியும் தயார் நிலையில் உள்ளன. அவற்றுக்கு இப்போது உடனே போர் தேவை! போரில்லாமல் சும்மா இருக்க முடியாமல் போரை நினைத்துக் கனைத்துக் கொண்டிருக்கின்றன!” என்றான் நகுலன். ஒரு புன்னகையைப் பரிசாகத் தந்த கிருஷ்ணன் அர்ஜுனன், நகுலன் இருவரையும் பார்த்தான் இப்போது! “சரி, இப்போது உங்களுடன் சேர்ந்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு நடைபெறப் போகும் யுத்தம் எந்த நாட்டையும் நீங்கள் ஜெயிப்பதற்காக இல்லை என்றும் தர்மத்தைக் காப்பாற்றி நிலை நிறுத்துவதற்கான யுத்தம் என்றும் அறிவார்களா? அவர்கள் புரிதல் சரியானபடி உள்ளதா?” என்று கிருஷ்ணன் இருவரையும் பார்த்துக் கேட்டான்.

“நாங்கள், அதாவது நான் என்ன நினைக்கிறேன் எனில், நம்முடைய ராணுவத் தலைவர்கள் அனைவருமே தர்மத்தைக் காக்கவேண்டும் என்னும் உணர்ச்சியில் தான் இருந்து வருகின்றனர். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். குறிப்பாக க்ஷத்திரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்!” என்றான் பீமன். அப்போது யுதிஷ்டிரன், “நாம் ஏற்கெனவே ஓர் உன்னதமான இடத்தை இந்த ஆரிய வர்த்தத்து அரசர்களிடம் பெற்றிருக்கிறோமே! அது போதாதா? மேலும் யுத்தம் தேவையா?” என்று கேட்டான். கிருஷ்ணன் தன் முகவாயில் கை வைத்துக் கொண்டான். “மூத்தவரே! உண்மைதான். நாம் ஓர் குறிப்பிட்ட உன்னத நிலைக்கு ஏற்கெனவே போய் விட்டோம் தான்! ஆனால் அதற்காகச் சும்மா இருக்கக் கூடாது. இதை விட மிக அதிகமான உன்னத நிலைக்குச் சென்றாக வேண்டும். இல்லை எனில் நம் நிலைமை மாறி நாம் சின்னாபின்னமாகவும் ஆகிவிடலாம். ஆகவே எப்போதும் முன்னேற்றத்தையே நினைக்கவேண்டும்.” என்றான் கிருஷ்ணன். பீமன் கிருஷ்ணனைப் பாராட்டும் கண்களுடன் பார்த்தான்! “கிருஷ்ணா! நீ சொல்வது சரியே! நானும் அப்படித் தான் நினைத்தேன். நம்முடைய அடுத்த வேலை அல்லது அடுத்த குறி நம் அதிகாரத்தை மேலும் பரவலாக ஆக்குவது தான். மற்ற மன்னர்களிடையே குறிப்பாக நம்மை ஒதுக்கும், அல்லது நம்மை ஏற்காதவர்களிடையே நம்மை ஏற்கச் செய்யவேண்டும் என்பதே நம் அடுத்த இலக்காக இருக்க வேண்டும். நாம் நம்முடைய சிறிய எதிரியைக் கூட நம் பக்கம் சேர்த்துவிட வேண்டும். இப்படித் தான் எதிரிகளே இல்லாமல் செய்ய வேண்டும்.” என்றான் பீமன்.

“இதை நாம் ராஜசூய யாகம் செய்யாமலேயே செய்து விட முடியாதா?” என்று கேட்ட யுதிஷ்டிரனுக்குத் திடீரெனத் தன் தந்தையின் செய்தி மீண்டும் நினைவலைகளில் மோதியது! அப்போது த்வைபாயனர் பேசினார்: “ நம்முடைய முன்னோர்கள் இப்போதும் பித்ருலோகத்திலே கடவுளரிடம் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றிருப்பார்கள். தெய்விகமான சடங்குகளை முறைப்படி செய்து கடவுளரைத் திருப்தி செய்து தானங்கள் அளித்து என்று பல்வேறு விதமாகச் செய்திருப்பார்கள்.  இப்போது நாம் முன்னோர்களையும் திருப்தி செய்ய வேண்டும். நீத்தோருக்கான சடங்குகளை முறைப்படி செய்து விட வேண்டும். அதைத் தவிர மற்ற அரசர்களையும் நாம் அவர்களின் சின்னச் சின்ன ஆவல்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் சந்தோஷப்படுத்த வேண்டும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கப் பாடுபட வேண்டும். பிரமதேஜஸுக்கும் க்ஷத்திரிய தேஜஸுக்கும் இடையே ஓர் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இரண்டும் ஒருங்கிணைந்தால் தான் தர்மம் வெல்ல முடியும்!”

சற்று நேரம் அங்கே யாரும் எதுவும் பேசவில்லை. பின்னர் த்வைபாயனரே தொடர்ந்தார். “யுதிஷ்டிரா, மற்றப் போர்களுக்கும் இந்த ராஜசூய யாகம் செய்யப்படும் முன்னர் செய்யப் போகும் போருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. மற்றவை ஆதிக்கத்திற்காகச் செய்யப்படுபவை! உயிர்ப்பலி அதிகம் இருக்கும். ஆதிக்க மனப்பான்மை மேலோங்கும். ஆனால் இந்தப் போர் அப்படிக் கொடூரமான ஒன்றல்ல! தார்மீக ரீதியாக நம்முடைய மேலாதிக்கத்தை அனைவரையும் ஒப்புக் கொள்ள வைக்கப்போகும் போர் இது! இதில் உயிர்ப்பலி என்பதே இருக்காது! அப்படி இருந்தாலும் குறைவாக இருக்கும். கொடூரமான தாக்குதல்கள் கூடாது!” என்று விளக்கினார். “ஆம், யுதிஷ்டிரா, அது அப்படித்தான். அதனால் தான் நீ இத்தகையதொரு போரை நடத்தாமல் ராஜசூய யாகத்தைச் செய்யக் கூடாது என்று சொல்கிறோம். மற்றப் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் அரசர்கள் அனைவரும் உனக்கு உதவி செய்ய வேண்டும் எனில் இந்தப் போர் அவசியம்! அவர்கள் உதவி இல்லாமல் நீ ராஜசூய யாகத்தை நடத்தவே முடியாது!” என்று கிருஷ்ணன் த்வைபாயனரை ஆதரித்துப் பேசினான்.

“அதற்கான உறுதியும் நீ ஒரு திறமை வாய்ந்த ராணுவத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுத்துப் போரில் வென்றால் தான் கிடைக்கும். நிச்சயம் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை பிறக்கும். இப்போதுள்ள நிலைமை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டிய ஒன்று. அநேகமாகப்பல நாட்டு மன்னர்களும் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்வதன் மூலமே உன்னை அங்கீகாரம் செய்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில் நீ போரில் அவர்களைச் சந்தித்து வென்றே ஆகவேண்டும். நீ தோற்றாயானால் இது நாள் வரை நீ சம்பாதித்த புகழ், உன் அதிகாரம், உன் சக்கரவர்த்தி என்னும் அங்கீகாரம் அனைத்துக்கும் கேடு தான்! உன்னால் ராஜசூய யாகத்தை நடத்தவே முடியாது!” என்றார் த்வைபாயனர்.

Wednesday, October 19, 2016

வியாசரின் வருத்தம்!

“இப்படி ஓர் புனிதமான வேள்வியை நீங்கள் தலைமை தாங்கி நடத்தி எவ்வளவு காலம் ஆகிறது ஆசாரியரே!” என்று வினவினான் யுதிஷ்டிரன். “ஓ, அது பல காலம் ஆகிவிட்டது அரசே! மஹாராஜா ஷாநதனுவின் ஆட்சியின் போது ஒரு முறை வாஜ்பேய யக்ஞம் நடத்தப்பட்டது. அதில் நான் முக்கியப் பங்கு வகித்தேன். அதன் தாக்கம் அடுத்த இருபது வருடங்களுக்கு இருந்தது என்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கும் அப்போது இருபது வயதுக்குள் தான் இருக்கும்!” என்றார் த்வைபாயனர் புன்னகையுடன். “ஆசாரியரே, ராஜசூய யாகம் செய்வதற்கென இப்போது படையைத் திரட்டிக் கொண்டு போருக்குச் செல்வது சரியானதா? ஒப்புக் கொள்ளக் கூடியதா?” என்று கேட்டான் யுதிஷ்டிரன்.

“நாம் யுத்தத்தை விரும்பவே இல்லை. அது நிச்சயம். ஆனால் அக்கம்பக்கத்து அரசர்கள் நம்முடன் சரியானபடி உறவு கொண்டு இருக்க வேண்டுமெனில் நம்மிடம் ஒத்துப் போக வேண்டும். நம்முடைய அதிகாரத்தை ஏற்க வேண்டும். அப்படி ஏற்காதவருடன் போர் புரிவதே சரியானது!”என்றான் பீமன் அவசரம் அவசரமாக. யுதிஷ்டிரன் தன் தலையை மறுப்பாக அசைத்தான். அதற்குள்ளாகத் தந்தையின் செய்தியைக் குறித்த நினைவு அவனுள் வந்துவிடும் போல் இருந்தது. அந்த நினைவு வந்துவிட்டால் அந்தச் செய்தியை நாரதர் தன் அருகிலிருந்து நேரடியாகக் கூறுவது போன்ற உணர்வை ஒவ்வொரு சமயமும் அவன் அனுபவித்தான். அதன் பின்னர் அதன் தாக்கத்திலிருந்து அவனால் மீள முடியவில்லை. அவன் வேண்டாம் என்று நினைப்பதை அவன் வாய் கூறுவதோடு அவனையும் அறியாமல் அதை ஒத்துக் கொண்டு விடுகிறான். ஆகவே அந்தச் செய்தியின் தாக்கம் தன்னை ஆக்கிரமிக்கும் முன்னர் பேசவேண்டும் என்ற எண்ணத்தோடு யுதிஷ்டிரன் கூறினான்:” அனைவரையும் அடக்கி ஆள்வது அவ்வளவு முக்கியமான ஒன்றா?” என்று கேட்டான்.

அனைவரும் யுதிஷ்டிரனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்பதை அவன் கண்டான். யுதிஷ்டிரனுக்கு க்ஷத்திரிய தர்மத்திலும், அரச தர்மத்திலும் ஆர்வம் இல்லையா? அதை அவன் ஏற்கவில்லையா? விட்டுவிட்டானா? அவர்கள் சந்தேகம் அனைவரின் கண்களிலும் தெரிந்தது. அதைக் கண்ட யுதிஷ்டிரன், “நான் தந்தையின் ஆவலைப் பூர்த்தி செய்யவே விரும்புகிறேன். அதை ஒதுக்கித் தள்ள நம்மால் இயலாது. ஆனால்………………………….” என்று இழுத்தான். “ஆனாலும் இல்லை, ஆகாவிட்டாலும் இல்லை!” என்று வெடுக்கென்று கூறினான் பீமன். மேலும் தொடர்ந்து, “நம் தந்தையின் கட்டளையை நாம் சிரமேற்கொண்டு செய்யவேண்டும். அது கண்டிப்பாக நடைபெற்றே ஆகவேண்டும்.” என்றான் கடுமையுடன்.

நாரதர் மூலம் தனக்குக் கிடைத்த செய்தியின் தாக்கத்திலே பேசினாலும் யுதிஷ்டிரனுக்குள் கொஞ்சம் அதற்கான எதிர்ப்பு உணர்ச்சியும் இருந்தது. அவனுக்கு முழுச் சம்மதமில்லை. ஆனால் அதற்காகத் தந்தையின் செய்தி வந்ததை அவனால் மறைக்கவும் முடியவில்லை. ஏனெனில் அவன் பொய் சொல்லவே மாட்டான். எப்போதும் உண்மையையே பேசுவான். இப்போது வேறு வழியில்லை. அவன் மற்றவர்கள் கருத்தை ஆதரித்தே ஆகவேண்டும். “ஆம், ஆம், தந்தையின் கட்டளையை மீற முடியாது தான். நிச்சயமாய் நிறைவேற்றியாக வேண்டும். “ என்றவன், தனக்குள் முணுமுணுப்பாகப் பேசுவது போல், “ஆனால்,,,,, ஆனால்,,,,,, நான் போரை வெறுக்கிறேன். முழு மனதுடன் வெறுக்கிறேன்.” என்றான். தந்தையின் செய்தி வந்த தினத்திலிருந்து யுதிஷ்டிரன் அமைதியாகவே இல்லை. அவன் மனதில் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. வேறு வழியில்லாம் அவன் ஓர் அறிவிப்புச் செய்தான். ஆனால் அவனே அதைத் தன் சொந்த விருப்போடு செய்த அறிவிப்பாக நினைக்கவே இல்லை. எனினும் அந்த அறிவிப்பை அவன் செய்தாக வேண்டி இருந்தது. மேலும் அவன், “இந்த ராஜசூய யாகத்தின் மூலம் தவறிழைத்த க்ஷத்திரியர்கள் யாராக இருந்தாலும், அரசர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு க்ஷத்திரிய தர்மத்தையும், அரச தர்மத்தையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.” என்றான்.

“அண்ணா, ஏற்கெனவே பல அரசர்கள் நம்முடைய ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் ஏற்றிருக்கின்றனர். இப்போது நமக்குத் தேவையானது எல்லாம் அவர்கள் நமக்குக் கீழ்ப்படிந்து இருப்பதோடு அல்லாமல், க்ஷத்திரிய தர்மத்தையும் அரச தர்மத்தையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்களா என்று பார்ப்பது மட்டும் தான்!” என்றான் பீமன். சற்றே பேச்சை நிறுத்தச் சொல்லித் தன் கையை உயர்த்திய வியாசர், வாசுதேவக் கிருஷ்ணனிடம் திரும்பி, “கிருஷ்ணா, இதற்கு உன் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். கிருஷ்ணன் மாறாப் புன்னகையுடன், “ஆசாரியர் விருப்பப்படி அனைத்தும் நடக்கட்டும்!” என்றான். பின் தொடர்ந்து, “மாட்சிமை பொருந்திய ஆசாரியரே! இதோ இந்த யுதிஷ்டிரன் மாண்பு மிக்கவன் ஓர் சக்கரவர்த்தி என்பதற்குரிய தகுதியை ஏற்கெனவே அடைந்து விட்டான். என்றாலும் அதற்குரிய அந்தஸ்து அவனுக்கு விரைவில் வரவேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

“எனக்கு அப்படி ஓர் நிலை வந்ததெனில் அதற்குக் காரணம் முழுக்க முழுக்க நீ தான் வாசுதேவக் கிருஷ்ணா! என்னால் எதுவும் நடக்கவில்லை; இனியும் எதுவும் நடக்காது!” என்றான் யுதிஷ்டிரன். கிருஷ்ணன் வாய்விட்டுச் சிரித்தான். “உனக்கு நீயே அநீதியைச் செய்து கொள்ளாதே அண்ணா! ராஜ சூய யாகம் செய்வது சாமானியமானது இல்லை. அது கடவுளரைத் திருப்தி செய்து உரிய தேவதைகளுக்கு ஆஹுதிகள் கொடுப்பதோடு நின்று விடாது. அல்லது நம் முன்னோர்களுக்கு உரிய நேரத்தில் நாம் செய்யும் நீத்தார் கடனோ நன்றிக்கடனோ இல்லை. அது க்ஷத்திரியர்களை மட்டுமல்ல, தவறிழைத்த ஸ்ரோத்திரியர்களையும் சரியான பாதைக்கு வர வழி வகுக்கும். பிரம தேஜஸ் பிரகாசித்தால் அதன் மூலம் க்ஷத்திரிய தேஜஸும் பிரகாசிக்க வழி வகுக்கும். க்ஷத்திரிய தர்மம் பாரம்பரிய முறைப்படி வலுப்பெற்றுப் பாதுகாக்கப்படும்.” என்றான்,

“ஆம், கிருஷ்ணா, நீ சொல்வது சரியே!” என்றார் வேத வியாசர். கிருஷ்ணன் தொடர்ந்தான். “இந்த யாகத்தின் மூலம் ஸ்ரோத்திரியர்களும் க்ஷத்திரியர்களும், அரசர்களும் ஒன்று சேருவதோடு மட்டும் நிற்காது. சாமானிய மக்களுக்கும் இதன் மூலம் நல்ல நன்மை பயக்கும். அவர்களும் ஒன்று சேர்ந்து யாகத்தில் பங்கெடுப்பதன் மூலம் நற்பலன்களைப் பெறுவார்கள். அவர்களுக்கும் அப்போது தான் புரியும் தர்மம் தலை காக்கும் என்பதும் தர்மம் ஒன்றைக் கடைப்பிடிப்பதன் மூலமே உலகில் அமைதி நிலவும் என்பதையும் இம்மாதிரி யாகங்களாலும் யக்ஞங்களாலும் தர்மம் பாதுகாக்கப்படும் என்பதையும் தெரிந்து கொள்வார்கள். ஆரியர்கள் மட்டுமின்றி ஆர்ய வர்த்தமே புத்துணர்ச்சி பெறும்.”

பீமன் அடக்கமாட்டாமல் சிரித்தான். “கிருஷ்ணா, ராஜசூய யாகத்தின் நன்மை, தீமைகளைப் பற்றி உன்னைவிட அழகாக என்னால் சொல்லி இருக்க முடியும். நானே சொல்லி இருந்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. அப்படி நான் மட்டும் சொல்லி அது இங்கே அனைவராலும் கேட்கப்பட்டிருந்தால் உன் உதவியே இங்கே தேவைப்பட்டிருக்காது!” என்றான்.  கிருஷ்ணன் சிரித்த வண்ணம், “அது சரி அப்பா, ஆனால் நீ ஒன்றும் அவ்வளவு சுயநலம் மிக்கவன் அல்லவே! இதன் பலாபலனை என்னோடும் பகிர்ந்து கொள்வாய் அல்லவா?” என்று சொன்னான். அப்போது யுதிஷ்டிரனுடைய முகம் மாறியது. தலையை அழுத்திக் கொண்டான். மீண்டும் மீண்டும் அந்தச் செய்தியின் குரல் அதைச் சொன்ன முனிவரின் குரல் அவனுள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவனால் மேற்கொண்டு ஏதும் பேசமுடியவில்லை. ஆனால் மௌனமாகத் தலையை அசைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் கொஞ்சம் தயக்கம் இன்னமும் மிச்சம் இருந்தது. “ஒரு போர் நடப்பதும் அதன் துயரங்களும் துன்பங்களும் நம்மால் அளவிடமுடியாத ஒன்று. உயிர்ச்சேதம், பொருட்சேதம், வளங்கள் சேதம், குடும்பம் உடைந்து போய் நிர்க்கதியில் நிற்கும் மனிதர்கள், எல்லாவற்றுக்கும் மேல் பல ஆசிரமங்களும் அழிக்கப்படுகின்றன.” அவன் குரல் துயரம் தோய்ந்து வெளிப்பட்டது. யுதிஷ்டிரனுடைய துயரத்தின் அளவு கிருஷ்ணனுக்குப் புரிந்தது. போரை அவன் முழு மனதோடு வெறுக்கிறான். ஒரு சின்ன ராணுவத் தாக்குதலைக் கூட அவன் விரும்பவில்லை. அவனுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதா வேண்டாமா என்பது இப்போது கிருஷ்ணன் கைகளில் இருக்கிறது.

“சகோதரா, நீங்கள் உண்மையிலேயே முழு மனதுடன் போரினால் ஏற்படும் துன்பங்களை எடுத்துக் கூறினீர்கள். மனித குலம் துன்பத்தில் ஆழ்வது உண்மை தான். ஆனால் அந்த அவலநிலைகளையும் மீறித்தான் இப்போது நாம் முடிவெடுத்தாக வேண்டும். ராஜசூய யாகம் நடக்கவேண்டுமா வேண்டாமா என்னும் முடிவை எடுத்தாக வேண்டும். தர்மம் தன் மதிப்பை இழந்து விடும்.அரசர்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட மாட்டார்கள். நேர்மையான வாழ்க்கை முறை இருக்காது. அதை அனைவரும் மறந்துவிடுவார்கள். குடும்பம் சிதைந்து விடும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பம் உடைந்து சிதறிப் போவதால் துன்பமுறுவர்கள். ஸ்ரோத்திரியர்கள் தங்கள் புனிதத்தன்மையை இழந்து விடுவார்கள். வேதத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும். அதன் மதிப்பை இழந்து விடும்!”

வேத வியாசர் கிருஷ்ண வாசுதேவனை அன்புடனும் பாராட்டுத் தெரிவிக்கும் கண்களுடனும் பார்த்தார். அவரால் கூட இதை இத்தனை அழகாக எடுத்துச் சொல்லி இருக்க முடியாது. கிருஷ்ணனின் மனதின் தெளிவையும் அந்தத் தெளிவு அவன் பேச்சில் இருந்ததையும் கவனித்தார் வியாசர். என்ன ஓர் மனத்தெளிவு! என்று தன் மனதுக்குள் வியந்தார். பெருமூச்சு விட்டார் வியாசர். இந்த யாதவ குலத் தலைவனுக்குள் ஓர் சக்கரவர்த்திக்குரிய தகுதிகள் மட்டுமில்லாமல் குணங்கள் நடத்தை அனைத்துமே நிரம்பி இருக்கிறது. தர்மத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் ஓர் அரசனே இல்லை; அரச குடும்பத்தில் பிறக்கவும் இல்லை. ஆகவே எந்த அரசர்களும் இவனை ஓர் சக்கரவர்த்தியாக அங்கீகரிக்கவே போவதில்லை; அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

Tuesday, October 18, 2016

வேத வியாசர் ஆலோசனைகள் கூறுகிறார்!

ஏற்கெனவே குரு வம்சத்தின் ராஜகுலத்தில் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் வேத வியாசர் அமைதியின்றி மிகவும் கலங்கிப் போயிருந்தார். திரும்பத் திரும்ப அந்தக் குடும்பத்தையே துரதிர்ஷ்டம் தாக்குவது குறித்து வேதனை அடைந்தார். தன் தாய் சத்யவதியிடம் முன்னர் கூறிய வார்த்தைகள் அவர் நினைவில் இப்போதும் பசுமையாக நினைவில் இருந்தன. “நான் கடவுளரால் மேலுலகுக்கு அழைக்கப்படும் வரை தர்மத்திற்காகவே பாடுபடுவேன்! இந்தக் குரு வம்சத்தில் அதற்கிசைவாகச் சக்கரவர்த்தி எவரும் தோன்றவில்லை எனில் என் இஷ்ட தெய்வமான சூரிய பகவான் அருளால் சாஸ்வத தர்மகுப்தனாக ஒருவரைக் கண்டடைவேன். அப்படி யார் பிறந்திருக்கின்றார்கள் என்பதைத் தேடிப் பார்ப்பேன். தீமைகளை ஒழித்து நன்மைகளைப் பாதுகாத்து தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துபவர்களைக் கண்டடைவேன். இது நிச்சயம் ஓர் நாள் நடக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது!” என்று சொல்லி இருந்தார்.

அவை தீர்க்கதரிசனமான வார்த்தைகள் என்பதை இப்போது அவர் புரிந்து கொண்டிருந்தார். அவர் தீமைகளை அழிக்கவும், தர்மத்தைப் பாதுகாக்கவும் யாரைத் தேடினாரோ அவரை அவருடைய தெய்வமான சூரிய பகவான் எங்கே இருப்பதாகக் காட்டிக் கொடுத்திருக்கிறான்! இதோ எதிரே உள்ளானே! கிருஷ்ண த்வைபாயனர் மனதுக்குள்ளாக வாசுதேவக் கிருஷ்ணனை ஆசீர்வதித்தார். ஒரு பெருமூச்சுக் கிளம்பியது அவரிடமிருந்து! அதை அடக்கிக் கொண்டார். ஹூம், இவன் மட்டும் ஓர் அரசன் மகனாகப் பிறந்திருந்தான் எனில் நிச்சயம் விரைவில் ஓர் மஹா சக்கரவர்த்தியாக ஆகி இருப்பான். இந்த ஆரிய வர்த்தம் முழுமையையும் ஓர் குடைக்குள் அடக்கி தர்ம சாம்ராஜ்யத்தின் ஒரே பிரதிநிதியாக இதற்கு முன் ஆட்சி புரிந்தவர்களை எல்லாம் விட அதிகமாகப் புகழ் பெற்று விளங்கி இருப்பான். இப்படி ஓர் தர்மத்தின் பிரதிநிதி, தர்மத்திற்காக உண்மையாக உழைப்பவன் தான் இப்போதுள்ள சூழ்நிலையில் ஆர்யவர்த்தத்தின் முக்கியத் தேவையும் கூட! ஆனாலும் அவர் தன் நினைவுகளை வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாது. நடக்கிறபடி நடக்கட்டும். நிச்சயித்த நேரத்தில் சூரியனால் ஏற்பாடு செய்யப் பட்ட மனிதன் கட்டாயம் வெளிப்பட்டே தீர வேண்டும். எல்லாவற்றுக்கும் அந்தக் கடவுள் அருள் புரிய வேண்டும்.

சற்று நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் வேத வியாசர் யுதிஷ்டிரனைப் பார்த்தார். “யுதிஷ்டிரா, எங்களை நீ இங்கே அழைத்ததற்கான காரணங்களையும் சூழ்நிலையையும் நன்றாக விளக்கமாகச் சொல்! அது மிகப் பெரிய முக்கியமான விஷயம் என்பது புரிகிறது.” என்றார். “ஆம், ஐயா, ஆம்! அது மிக மிக முக்கியமானதொரு பெரிய விஷயம் தான்! “ என்ற யுதிஷ்டிரனுக்குத் தனக்கு அந்தச் செய்தி கிடைத்த விதம் நினைவில் வர, அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஓர் எதிரொலி போல் அவன் காதுகளில் ஒலித்தன. அவன் மனதை அந்த நிகழ்ச்சி முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டது.”ஆசாரியரே! எங்கள் முன் இருக்கும் ஒரு பெரிய கேள்விக்குப் பதில் தேவை! அதற்கு உங்கள் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் ராஜசூய யாகத்தை ஏற்று நடத்தலாமா? அல்லது நடத்தாமல் இருந்தால் நல்லதா?” என்று கேட்ட யுதிஷ்டிரன் தன் தந்தை பாண்டு ராஜசூய யாகம் நடத்த ஆசைப்பட்டதையும் அது நிறைவேறாமல் அவர் இறந்ததையும் வியாசரிடம் குறிப்பிட்டான். பின்னர் அவன் யமுனைக்கரையில் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது நாரத முனி, கடவுளரின் மனசாட்சியாகச் செயல்படுபவர்  அங்கே தோன்றியதையும், முன்னோர்களின் பித்ருலோகத்தில் இருக்கும் பாண்டுவிடமிருந்து தனக்குச் செய்தியை எடுத்து வந்ததையும் தெரிவித்தான்.

இவற்றைச் சொன்ன பிறகு யுதிஷ்டிரனால் தன் உண்மையான எண்ணத்தை மறைக்க இயலவில்லை. அந்தச் செய்தியைச் சொன்ன விதம் அது தான் இறுதி முடிவு என்பதாகவும் அவன் அதற்கு அடங்கியே கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றும் தெரிய வருவதாகக் குறிப்பிட்டான். “என் சகோதரர்கள் தந்தையின் நிறைவேறாத இந்த ஆசையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிறார்கள். அது தான் சரியோ?” என்று தயக்கம் கலந்த விதமாகக் கேட்டான் யுதிஷ்டிரன். அவனால் தான் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்ததும் புரிய வந்தது. வியாசர் அதற்கு, “உன் சகோதரர்கள் என்ன கருத்ஹ்டுச் சொல்கின்றனர்?” என்று கேட்டார். பீமன் அப்போது குறுக்கிட்டான்.

“ஆசாரியரே, நாங்கள் ஏற்கெனவே பல மன்னர்களை வென்றிருக்கிறோம். எங்கள் மேலாதிக்கத்தை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இப்போது நாங்கள் ராஜசூய யாகம் செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆசிகளும் கிருஷ்ண வாசுதேவனின் உதவியும், ஆலோசனைகளும் தேவை!” என்றான். சஹாதேவனைப் பார்த்துத் திரும்பிய வியாசர் சிரித்தார். “சஹாதேவா, உனக்கு எதிர்காலம் குறித்து சொல்வதற்கு நன்கு தெரியும்! ஆனாலும் நீ ஏன் வாயே திறப்பதில்லை? யாரேனும் கேட்டால் தவிர நீ உன் வாயைத் திறப்பதில்லை என்று வைத்திருக்கிறாய் போலும்! எல்லாம் சரி! அந்த சுப முஹூர்த்த நேரம் வந்து விட்டதா? உங்கள் வீரர்கள் அனைவரும் இந்த யாகத்திற்கான வேலைகளில் ஈடுபடலாமா?” என்று கேட்டார். சகாதேவனோ தன் ஒற்றை விரலைக் கிருஷ்ண வாசுதேவன் பக்கம் நீட்டிய வண்ணம், “அதோ, அவனைக் கேளுங்கள்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் வாயை மூடிக் கொண்டான்.

“சரி, இப்போது என்ன கஷ்டம்? புரியவில்லையே!” என்றார் வியாசர். “ஒரு பிரச்னையும் இல்லை. கஷ்டம் ஏதும் இல்லை. உங்கள் ஆசிகள் எங்களுக்குத் தேவை, ஆசாரியரே! நாங்கள் ராஜசூய யாகத்தை ஏற்று நடத்தினால் அதற்குத் தலைமை தாங்குவது நீங்களாகத் தான் இருக்க வேண்டும். உங்கள் ஆசிகளும் தேவை!” என்றான் பீமன். “ஆம் என் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு. அதோடு தேவை எனில் ராஜசூய யாகத்தை நடத்துவதற்கும் தலைமை தாங்குகிறேன். “என்றார் வேத வியாசர்.

“ஆசாரியரே, இந்த ராஜசூய யாகத்தை ஏற்று நடத்துவது அனைவராலும் விரும்பத் தக்கதாக இருக்குமா?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். வியாசர் அதற்கு, “ஆம், இருக்கும். ஆனால் நீ நினைக்கும் காரணங்கள் ஏதும் இல்லை. என்னுடைய சொந்தக் காரணங்கள் இதற்கென உள்ளன.” என்றார் வியாசர். “அவை என்ன, ஆசாரியரே!” என்று யுதிஷ்டிரன் கேட்டான்.

“இந்த ராஜசூய யாகம் மூலம் பல நூற்றுக்கணக்கான ஸ்ரோத்திரியர்கள் ஒன்று சேர்ந்து எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வேத கோஷம் செய்து சூழ்நிலையைப் புனிதமாக்குவார்கள். ஸ்வர சுத்தமாக அவர்களால் ஒலிக்கப்படும் வேத கோஷத்தால் மக்கள் நன்மையுறுவார்கள். நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களையும் சரி, அப்படி வாழ முடியாமல் போனவர்களையும் சரி நல்வழிக்குத் திருப்பும். தவறுகள் சரி செய்யப்படும். வேதத்தின் அதிகாரம் அதன் புனிதம் பாதுகாக்கப்பட்டு வலிமை பெற்று ஓங்கும்.” என்றார்.

Monday, October 17, 2016

இந்திரப் பிரஸ்தத்தில் இரண்டு கிருஷ்ணர்கள்!

மேற்கண்ட சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் ஆன பின்னர் ஆசாரியர் வேத வியாசர் தன் முக்கிய சீடர்களோடு படகுப் பயணமாக இந்திரப் பிரஸ்தம் வந்து சேர்ந்தார். சில நாட்களில் கிருஷ்ண வாசுதேவனும் துவாரகையிலிருந்து வந்து சேர்ந்தான். அவனுடன் உத்தவனும் யாதவர்களில் முக்கியமான மஹாரதிகளும் வந்திருந்தனர். அவர்களோடு குறிப்பிடத் தக்க அளவில் ரதப் படை ஒன்றும் வந்திருந்தது. இந்திரப் பிரஸ்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே சம்யத்தில் அங்கே இரண்டு கிருஷ்ணர்கள் வந்திருந்தார்கள். இருவரில் ஒருவர் மிகவும் வணங்கத்தக்கவராக இருந்தார். இன்னொரு கிருஷ்ணன் அனைவராலும் விரும்பி அன்பு செலுத்துபவராக இருந்தார். எனினும் மக்களுக்கு இருவரையும் போற்றி அன்பு செலுத்தி வணங்குவதில் எவ்விதமான கருத்துவேறுபாடும் இல்லை. அதோடு இல்லாமல் ஆசாரிய தௌமியர் அங்கே ராஜகுருவாக இருந்தார். ஆகையால் அவருடைய அழைப்பின் பேரிலும் வேத வியாசர் அங்கே வந்திருந்தார். அவருடைய விருந்தாளியாகவே தங்கினார்.

கிருஷ்ணன் தன் அத்தை மகன்கள் ஐவருடனும் அவர்கள் குடும்பத்துடனும் அரச மாளிகைகளில் ஒன்றில் தங்கினான். அனைவரும் கிருஷ்ணனை அன்புடன் வரவேற்று கௌரவப்படுத்தினர். அவர்கள் அனைவரும் அங்கே வந்து சில நாட்களில் குடும்ப நபர்கள் அனைவரும் வெளியேறினார்கள். பீமன் விரைவில் திரும்பி வந்து அப்போதுள்ள சூழ்நிலை குறித்துக் கிருஷ்ணனிடம் தெரிவித்தான். ஆனால் அவர்களின் குழந்தைகள் அவர்கள் நினைத்தபடி செய்ய விடவில்லை. அவர்கள் ஐவரும் திரௌபதிக்குப் பஞ்ச பாண்டவர் மூலம் பிறந்த குழந்தைகள். அவர்கள் எப்போதும் கிருஷ்ணனை விட்டுப் பிரியாமல் அவனையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் அணைப்பில் ஆனந்தம் அடைந்தனர். அவனைப் பார்த்து நடனம் ஆடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

திரௌபதியைத் தவிர அர்ஜுனன் கிருஷ்ணனின் சகோதரி சுபத்ராவையும் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் அபிமன்யு என்ற பெயரில் வளர்ந்து வந்தான். அவன் தன் மாமனைப் பார்த்ததும் தாயின் கைகளிலிருந்து கிருஷ்ணனிடம் தாவினான். கிருஷ்ணன் மட்டும் உரிய நேரத்தில் அவனைப் பிடிக்கவில்லை எனில் தரையில் விழுந்திருப்பான். இப்படி அனைவரும் கிருஷ்ணனிடம் அளவற்ற அன்பு பாராட்டினார்கள். கிருஷ்ணனிடம் தான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போன கோபத்தில் பீமன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னான். “கிருஷ்ணா, இந்தச் சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் விளையாடிப் பொழுது போக்கவா வந்தாய்? ஆனால் இவர்கள் அனைவரும் எங்களை விட உன்னை மிகவும் அதிகம் நேசிக்கிறார்கள்!” என்று சொன்னான்.

“அப்படி எனில் இது உங்கள் தவறுதான்!” என்றான் கிருஷ்ணன் குறும்புடன். “இல்லையா, ப்ரதிவிந்தியா? (யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் பிறந்த மகன்) என்று அவர்களில் மூத்தவனைப் பார்த்துக் கேட்டான். அவனும் ஆமோதித்தான். “ஆஹா, நீ நம் புராதனமான நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்ல முயல்கிறாய், கிருஷ்ணா! இது நியாயமா? நம் முன்னோர்கள் தாய், தந்தையரைத் தான் தெய்வங்களாக வணங்கச் சொல்லி இருக்கிறார்கள். இல்லையா? உன்னைப் போன்ற தாய்வழி மாமன்களை அல்ல!” என்றான். கிருஷ்ணன் அதைக் கேட்டதும் வாயைக் குவித்துக் கொண்டு குழல் போல் ஊதினான். அதைப் பார்த்த அபிமன்யு சிரித்தான். கிருஷ்ணன் அவன் கன்னங்களை அழுத்திக் கொண்டு கொஞ்சினான். “நீ உன் தாய், தந்தையரை விட என்னைத் தானே அதிகம் நேசிக்கிறாய்? ஏனடா, குண்டுப்பயலே! அப்படித்தானே!” என்ற வண்ணம் அவன் மோவாயில் தடவிக் கொடுத்தான். குழந்தையும் அதை ஒரு பெரிய சிரிப்பாலும் உற்சாகக் கூச்சலாலும் அங்கீகரித்தது. பீமனைப் பார்த்த கிருஷ்ணன், “அவர்கள் உன்னை விட என்னை அதிகம் நேசிக்கவில்லை பீமா! உனக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரியவில்லை! இவர்களுக்கு அது தெரிந்திருக்கிறது!” என்றான் கிருஷ்ணன்.

“ஹூம், வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்!” என்ற பீமன் கேலியான கோபத்துடன் சிரித்தான். “எனக்கும் தெரியும், என் அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்பது! உன்னைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் நான் கட்டி அணைத்தால் நீ மூச்சுத் திணறுவாயே! அதனால் உனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்! இப்போதைக்கு நீ இறக்க வேண்டும் என்று நான் எதிர்பாக்கவே இல்லை! இன்னும் சிறிது காலம் இரு! அப்புறம் ஓர் சமயம் வரும்! அப்போது நான் நினைத்ததை நடத்துகிறேன்!” என்றான். “முயற்சி செய்து தான் பாரேன்! கடைசியில் உன்னை நீயே கொன்று கொள்வாய்! அதுதான் நடக்கும்!” என்றான் கிருஷ்ணன் அதே கேலியுடன். அனைவரும் சிரித்தனர். குழந்தைகள் உற்சாகக் கூச்சலுடன் குதித்தனர். ஆஹா, மாமாவுடன் நம் தந்தையும் மோதிக்கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சித்தால்! வேடிக்கையாகத் தான் இருக்கும்! என்று கூச்சல் போட்டனர்.

மறுநாள் காலைக் கடன்கள் முடிந்து அனைவரும் அனுஷ்டானங்களைச் செய்து முடித்த பின்னர், ஆசாரிய தௌமியரின் ஆசிரமத்தில் யாக குண்டத்தைச் சுற்றி அனைவரும் அமர்ந்து ஓர் ரகசியக் கூட்டத்தை நடத்தினார்கள். ஆசாரிய வேத வியாசர் தலைமை தாங்கினார். அவரைத் தவிர ஆசாரிய தௌமியர், கிருஷ்ண வாசுதேவன், உத்தவன், ஐந்து சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவி திரௌபதி, தாய் குந்தி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். இது ஒரு சம்பிரதாயமான கூட்டமாக இருக்கவில்லை. வழக்கமான அரச உடைகளிலோ அல்லது அவரவர் தகுதிக்கேற்ற கிரீடங்கள், ஆடை ஆபரணங்கள் பூண்டோ ஆயுதங்கள் சகிதமாகவோ சகோதரர்கள் ஐவரும் காணப்படவில்லை! எப்போதும் வில்லை விட்டுப் பிரியாத அர்ஜுனன் அன்று வில்லும் அம்பும் இல்லாமல் வந்திருந்தான். கதை இல்லாமல் பீமன் அமர்ந்திருந்தான். ஆசாரியர் வேத வியாசரின் நரைத்த தலை மயிர் வழக்கம் போல் மேலே எடுத்துக் கட்டப்படாமல் பரந்து விரிந்து அவர் முதுகில் காணப்பட்டது. ஆனால் ஆசாரிய தௌமியரோ தன் தலை மயிரை எடுத்து மேலே கட்டி இருந்தார். ஏனெனில் வேத வியாசர் அவருடைய குரு என்பதால் குருவைச் சரியான முறைப்படி உடை அணியாமலோ தலையை விரித்துப் போட்ட வண்ணமோ பார்க்கக் கூடாது என்பதால் மயிரை நன்கு இறுக்கிக் கட்டி இருந்தார்.

வாசுதேவக் கிருஷ்ணனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த வேத வியாசருக்கு அவன் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் வியப்பைத் தந்தது. அவன் வயதுக்கும் போர்ப் பயிற்சிக்கும் ஏற்றவாறு இல்லாமல் கிருஷ்ணனின் உடல் இன்னமும் மென்மையாகவே காணப்பட்டது. கண்கள் ஒளி வீசிப் பிரகாசித்தன. அன்பு, ஆசை, கருணை ஆகிய உணர்ச்சிகள் அந்தக் கண்களிலிருந்து பிரவாகமாகப் பெருக்கெடுத்தது. அதோடு இல்லாமல் அவன் வயதை விடக் குறைவாகவே மதிப்பிடும்படி சிறு பிள்ளையாகவும் இருந்தான். ஆசாரியர் வேத வியாசர் வாசுதேவக் கிருஷ்ணனைப் போற்றிப் பாராட்டினார். அவனுடைய பரந்து விரிந்து பட்ட பார்வையையும் அவனுக்கு வெளி உலகிலுள்ள நல்லறிவையும் கண்டு வியந்தார். அவன் சிந்தனை வளமும் அவரைப் பிரமிக்க வைத்தது. அவனும் நம்மைப் போன்ற மனிதன் என்றாலும் ஏதோ ஓர் தனித்தன்மை, ஓர் கௌரவம், ஓர் மதிப்பு அல்லது கடவுளரைப் போன்றதொரு தெய்விகத் தன்மை அவனிடம் இருந்தது. அவனை மிகவும் மதிக்கும்படியும் வணங்கும்படியும் செய்தது. அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நம்ப வைத்தது. அது அவன் முகத்திலேயே தெரிந்தது.