Saturday, October 29, 2016

மகதச் சக்கரவர்த்தியானான் ஜராசந்தன் மகன் சகாதேவன்!

கிருஷ்ணன் தன் இடத்தில் உட்கார முடியாமல் ஏற்கெனவே தவித்துக் கொண்டிருந்தவன் பீமனிடம் ஓடோடி வந்து அவனை அணைத்துக் கொண்டு முகமன் கூறி வாழ்த்துகள் தெரிவித்தான். ஆனால் அங்கே குழுமி இருந்த மக்கள் கூட்டமோ திகைப்பிலும் அச்சத்திலும் அங்கும் இங்குமாக ஓடித் தப்பிக்க முயன்றது. பெண்கள் பயத்தில் அலறினார்கள். குழந்தைகள் அதைக் கண்டு மேலும் பயத்துடன் தங்கள் தாய்மாரைக் கட்டிக் கொண்டு அழுதனர். ஒரு சிலர் வாயிலுக்கு ஓடோடிச் சென்று வெளியேற முற்பட்டனர். புனிதமானவர்கள் என்று கருதப்பட்ட மல்லர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் திகைத்தனர். தங்கள் தலைவனுக்கும் மரணம் நேரிடும் என்பது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இப்போது அவன் உண்மையாகவே இறந்துவிட்டான். இனி என்ன? திகைத்தனர்! அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்து போய் நின்றனர். அவர்கள் இது நாள் வரையிலும் ஜராசந்தனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த மக்களைப் பாடாய்ப் படுத்தி வந்தனர். இப்போது அவற்றுக்கெல்லாம் இந்த மக்கள் நம்மைப் பழிவாங்கி விடுவார்களோ என்று அச்சம் கொண்டனர்.

மேகசந்தி ஒரு கண் ஜாடை காட்டவே தயாராகக் காத்திருந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு அந்த மல்லர்களைச் சுற்றி நின்று கொண்டனர். அனைவரும் கைகளில் உருவிய வாளோடு அடுத்த ஆணைக்குக் காத்திருந்தனர். இந்த மல்லர்கள் இனிப் புனிதமானவர்கள் அல்ல. இவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம். அதைப் பார்த்த மக்கள் மனதில் தங்கள் கொடூரமான அரசன் உண்மையாகவே இறந்துவிட்டான் என்பதும், இந்த மல்லர்களால் இனி தங்களுக்குக் கேடு ஒன்றும் விளையப் போவதில்லை என்பதும் தெரிந்ததும் அச்சம் மெல்ல மெல்ல நீங்கியது. அவர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். மேகசந்தியின் தகப்பன் ஆன சகாதேவனோ இத்தனை வருடங்களாகத் தன் தகப்பனின் கொடூரத் தன்மையின் ஆழத்தில் இருந்தவன். அதில் தன்னிலை இழந்திருந்தான். இப்போதும் அவனுக்கு நடப்பது என்னவெனத் தெரியாமல் போகவே கிருஷ்ணன் கூறியபடி அர்ஜுனன் அவனருகே சென்று அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தான். சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்ததும் தன்னைப் பிடித்திருந்த மாயவலை அறுபட்டதைப் போல் கண்ணீர் பொங்கக் கிருஷ்ணன் கால்களில் விழுந்து வணங்கினான்.

நடுங்கும் கரங்களுடன் கைகளைக் கூப்பிய வண்ணம் தழுதழுத்த குரலில், “கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெய மங்களம்! வெற்றி உண்டாகட்டும்!” என்று வாழ்த்தினான். கிருஷ்ணன் சகாதேவனைத் தூக்கி அணைத்துக் கொண்டான். “உன் தந்தை மிகப் பெரிய மனிதர் தான். மகா மனிதர் தான்! ஆனால் அவருக்குப் பெரிய மனிதராகவும் மகானாக்கவும் இருப்பது எப்படி என்று புரியவில்லை. தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு அவருடைய மகத்துவம் உதவி இருக்க வேண்டும். மாறாக நடந்து கொண்டார். உன் தந்தையின் அளப்பரிய சக்தியுடன் தர்மத்தின் பால் அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வும் இருந்திருக்குமானால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். போனது போகட்டும்! இனி மகத நாட்டுக்கு நீயே சக்கரவர்த்தி! உன்னுடைய முதல் ஆணை சிறைப்பிடித்து வைத்திருக்கும் அரசர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்வதே! அதற்கான ஆணையை உடனே பிறப்பித்து விடு!” என்றான்.

சகாதேவன் உடனடியாக ஜராசந்தனின் ராஜரதத்தை அங்கே வரவழைத்தான். கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன் உடன் வர அந்த கிரிவ்ரஜ மலையின் உச்சிக்குச் சென்றான். அங்கே தான் அரசர்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலை இருந்தது. கிருஷ்ணனை அங்கே பார்த்ததுமே அங்கே காவலுக்கு இருந்த மல்லர்கள் ஓட்டமாக ஓடிவிட்டனர். போதாதற்கு ஜராசந்தனின் ராஜரதத்திலே அவர்கள் வந்திருந்தார்கள். ஆகவே அவர்களுக்கு முழுவதுமாகப் புரியாவிட்டாலும் ஓரளவுக்குப் புரிந்து விட்டது. அங்கிருந்த குகைகள் திறக்கப்பட்டு உள்ளே அடைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். அந்த அரசர்களின் மகிழ்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. கண்களில் கண்ணீருடன் தங்களைக் காப்பாற்ற சாகசங்கள் நிகழ்த்திய கதாநாயகர்கள் மூவரையும் பார்த்துக் கை கூப்பி வணங்கினார்கள். அப்போது அர்ஜுனன் அவர்களிடம் ஜராசந்தன் உயிருடன் இல்லை என்பதையும் இனி அவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் கூறியதோடு இப்போது மகதச் சக்கரவர்த்தியாக சகாதேவன் நியமிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தான்.

மேகசந்தி தன்னுடைய சகோதரர்கள் மற்றும் க்ஷத்திரிய வம்சத்துத் தலைவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜராசந்தனின் உடல் பாகங்களை எடுத்துக் கொண்டு மயானம் சென்று அரசமுறைப்படி மரியாதைகள் செய்து எரியூட்டினான். ஜராசந்தன் இப்படிச் செத்ததில் யாருக்கும் வருத்தம் இல்லை. அந்த அளவுக்கு அவன் கொடுமைகள் இழைத்திருந்தான். அவன் எப்போதுமே பயங்கரமான காரியங்களைச் செய்து மற்றவர்களைத் துன்புறுத்தித் தனக்குத் தீமையையும் கடவுளரின் கோபத்தையும் வலிய வரவழைத்திருந்தான். கிரிவ்ரஜத்தின் மக்களுக்கு இப்போது மிக சந்தோஷமாக இருந்தது. சுதந்திரமாக மூச்சு விட்டனர். பல ஆண்டுகளாக அவர்கள் பட்டு வந்த கஷ்டங்கள், சிரமங்கள் அனைத்தும் இப்போது தீர்ந்து விட்டது. மல்லர்களுக்கோ தங்கள் முக்கியத்துவம் குறைந்தது புரிந்ததோடு அல்லாமல் தாங்கள் இனியும் புனிதமான மத குருக்களாக மதிக்கப்படப் போவதில்லை என்பதும் க்ஷத்திரியத் தலைவர்களால் தாங்கள் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்றும் புரிந்து கொண்டனர். எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அனைவரும் பீமன் கால்களில் விழுந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். தாங்கள் தங்கள் சொந்த ஊருக்கே போய்விடுவதாகவும் இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அவர்களைக் காக்குமாறும் வேண்டினார்கள்.

பீமன் அவர்களுக்கு உறுதி அளித்தான்; “கவலை வேண்டாம். உங்களில் எவருக்கும் எவ்விதத் துன்பமும் நேராது. அதற்கான உறுதி மொழியை அளிக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லோரும் ஏன் உங்கள் ஊருக்குப் போவதாகச் சொல்கிறீர்கள்? ஏன் என்னுடன் இந்திரப் பிரஸ்தம் வரக் கூடாது? என்னிடம் உலகில் சிறந்த மல்லர்கள் இருக்கின்றனர். மல்யுத்தப் பயிற்சிக்கான அருமையான களமும் அமைத்திருக்கிறோம்.  அவர்களின் தலைவன் பலியா, பல் இல்லாக் கிழவன்!” என்று சொல்லிவிட்டுக் கடகடவென்று சிரித்தான்.

“என்ன? ஹஸ்தினாபுரத்தின் பலியாவா? எங்களுக்கு அவரை நன்கு தெரியும்!”என்று அவர்களில் தலைவன் கூறினான். “விரைவில் நீங்கள் பலியாவின் பேரன் கோபுவைச் சந்திப்பீர்கள். அவன் எனக்கு மல்வித்தை கற்றதன் மூலம் சகோதரன் ஆனவன்!” என்றான் பீமன். பின்னர் மீண்டும் அவர்களிடம், “இந்திரப் பிரஸ்தம் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்தான். மல்லர்கள் அனைவரும் மகிழ்வுடன், “கட்டாயம் வருகிறோம்!” என்று ஒரே குரலில் கூறினார்கள். சகாதேவனுக்கு கிரிவ்ரஜத்தின் க்ஷத்திரியத் தலைவர்கள் மல்லர்களைப் பழி வாங்கக் காத்திருப்பது நன்கு தெரியும். ஆகவே அவர்களையும் அவன் திருப்தி செய்ய நினைத்தான். ஆகவே இப்போது பீமனுக்கும் மல்லர்களுக்குமான சம்பாஷணையின் நடுவில் புகுந்து, “இவர்கள் தான் எங்களுடைய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம் ஆவார்கள்!” என்று கடுமையுடன் கூறினான்.

அதை அலட்சியம் செய்த பீமன், “எல்லாவற்றுக்கும் மூல காரணம் எதுவோ அது இப்போது இல்லை! இந்த மல்லர்கள் ஜராசந்தனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அனைவரையும் அடக்கி ஆண்டார்கள். ஜராசந்தனின் கொடூரத்துக்கு ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே இவர்களை நீ க்ஷத்திரியர்களிடம் ஒப்படைக்க நினைத்தால் நீயும் தான் ஜராசந்தனின் கொடூரத்திற்கு ஒருவகையில் காரணம் ஆவாய்! ஆகவே இவற்றை எல்லாம் மறந்து மன்னித்துவிடு. அவனுடைய கருவிகளாகச் செயல்பட்ட இவர்களை நீ மன்னித்தே ஆகவேண்டும். இவர்களாக எதுவும் செய்யவில்லை! அனைவரையும் பொதுவாக மன்னிப்பதாக அறிவிப்புச் செய்வதன் மூலம் ஓர் அழகான அமைதியான சாம்ராஜ்யத்தை ஆள்வதற்குத் தக்கவனாக உன்னை மாற்றிக் கொள். இந்தப் புனிதமான காரியத்தை உடனடியாக அறிவித்துவிடு! கிரிவ்ரஜத்தை விட்டு வெளியேற விரும்பும் மல்லர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், தங்கள் உடமைகளுடனும் தாராளமாக வெளியேறிச் செல்லலாம் என்றும் அறிவித்து விடு!” என்றான் பீமன்.

கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் மூவரும் கிரிவ்ரஜத்தில் சில நாட்கள் சகாதேவனின் விருந்தாளிகளாகத் தங்கினார்கள். ஜராசந்தனின் ஈமச் சடங்குகள் முடியும் வரை அங்கே இருந்தனர். அதற்குள்ளாக உத்தவன் தலைமையில் அங்கே வந்து சேர்ந்த யாதவப் படைகளுடனும், பாரதப் படைகளுடனும் அவர்கள் சேர்ந்து கொண்டனர். உத்தவன் மட்டும் அங்கே வராமல் அருகிலுள்ள விதேஹ நாட்டிலேயே தங்கி விட்டான். தேவை எனில் வந்து சேர்ந்து கொள்வதாகத் தகவல் கொடுத்திருந்தான். விரைவில் அருகிலுள்ள நாடுகளுக்கெல்லாம் சகாதேவன் மூலம் செய்தி சென்றது. ஜராசந்தன் இறந்துவிட்டதாகவும், சகாதேவன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டதாகவும் சிறைப்பிடித்து வைத்திருந்த அரசர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள் என்றும் செய்திகள் சென்றன. இந்த அற்புத சாதனைகளை நிகழ்த்தியவன் கிருஷ்ண வாசுதேவன் என்றும் அனைவரும் அறிந்து கொண்டனர். உயிர்ப்பலியைத் தடுக்க முக்கியக் காரணமாக இருந்தவன் கிருஷ்ண வாசுதேவனே என்றும் அனைவருக்கும் சொல்லப்பட்டது.

இந்தச் சமயங்களில் கிரிவ்ரஜத்தையும் சுற்றி உள்ள நாடு, நகரங்களிலிருந்தும் எல்லாம் மக்கள் கூட்டம்கூட்டமாகத் திரண்டு வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுப் போனார்கள். இவ்வளவு பெரிய மாவீரனுக்கு நாம் என்ன கொடுக்க முடியும் என்று திணறிய மக்கள் தங்களால் இயன்றதைக் கொண்டு வந்து அவனுக்குப் பரிசளித்தார்கள். எவராலும் வெல்ல முடியாத, மரணம் என்பதே இல்லை என்னும்படியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கொடுங்கோலனுக்குக் கிருஷ்ண வாசுதேவன் அளித்த தண்டனையை நினைத்து நினைத்து மக்கள் மகிழ்ந்தனர். இதுநாள் வரை ஜராசந்தனின் கொடுங்கோல் ஆட்சியில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த ஸ்ரோத்திரியர்கள் இப்போது வெளியே வந்தார்கள். காசி, விதேஹம் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களும் இந்த விஷயம் தெரிந்து கொண்டு மீண்டும் திரும்பினார்கள். கிருஷ்ணனைச் சந்தித்து ஆசிகள் வழங்கி ஜராசந்தனைக் கொன்ற பீமனை வாழ்த்தி அவன் சகோதரன் அர்ஜுனனுக்கும், மகதச் சக்கரவர்த்தி சகாதேவனுக்கும் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துச் சென்றார்கள்.

2 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பகுதி.

பித்தனின் வாக்கு said...

ஒரு ராஜா ( தலைவன்) எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அப்படி நடந்துகொண்டால் மக்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை இப்பதிவின் மூலம் கற்கலாம்.