Friday, October 14, 2016

யுதிஷ்டிரனுக்குப் பாண்டுவிடமிருந்து செய்தி!

தன் சகோதரர்கள் நால்வருமே ராஜசூய யாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான்; ஆனால் அவனளவில் அதை ஏற்று நடத்துவதை நினைத்து யுதிஷ்டிரனுக்குள் பெரும் திகைப்பு மூண்டது. எப்படிச் செய்யப் போகிறோம் என்று கவலை அடைந்தான். இந்த யாகத்தை நடத்துவதன் மூலம் அவர்கள் ராணுவ ரீதியான பிரசாரங்களை அண்டை நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டி இருக்கும். யுதிஷ்டிரனுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் அண்டை நாட்டு அரசர்களை அவன் வெல்ல வேண்டும். அவர்களிடையே அதிக செல்வாக்கும், ஆதிக்கமும் அடைய வேண்டும். அப்போது தான் ராஜசூய யாகத்துக்கு அவன் ஏற்றவனாகக் கருதப்படுவான். அதோடு இல்லாமல் அவன் தாய் குந்தி வேறு இது பாண்டுவின் நிறைவேறாத ஆசை என்று சொல்லி விட்டாள். ஆகவே தந்தையின் நிறைவேறா ஆசையை நிறைவேற்றி வைக்கவும் அவன் கடமைப்பட்டவனாகிறான். இது அவனை மிகவும் தொந்திரவு செய்தது. மனதை பாதித்தது. எப்படி அவனால் அந்த ஆசையைத் தடுக்க இயலும்? அவன் தாயின் ஆசையை ஆசை என்றே யுதிஷ்டிரன் நினைக்கவில்லை. தவிர்க்க இயலாமல் அது தாயினால் இடப்பட்ட ஓர் கட்டளையாகவே எண்ணினான்.

அன்றிரவு இதை எல்லாம் யோசித்து யோசித்து யுதிஷ்டிரன் மனதளவில் நிம்மதி இல்லாமல் பதட்டத்துடன் இருந்தான். அவன் மனதை ராஜசூய யாகமே ஆக்கிரமித்திருந்தது. அவனால் தூங்க முடியவில்லை. மேல் மாடத்தில் வந்து நின்று கொண்டான். யமுனை நதியையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். விண்ணைப் பார்த்தான். சப்தரிஷி மண்டலத்தின் விண்வெளிப் பயணத்தையும் பார்த்த வண்ணம் நின்றிருந்தான். தன் மனதுக்குள்ளாக அந்த ரிஷிகளிடம் மௌனமாகப் பிரார்த்தனைகள் செய்து கொண்டான். தனக்கு ஒரு வழி காட்டும்படி வேண்டிக் கொண்டான். ஆனால் அங்கே இருந்து எவ்விதமான பதிலும் வரவில்லை. மெல்ல மெல்ல அந்த மேல்மாடத்திலிருந்து இறங்கிக் கீழே யமுனைக்கரைக்கு வந்தான். அவனுக்குத் தான் தூக்கத்தில் நடக்கிறோமா அல்லது இது எல்லாம் தான் காண்பது கனவா என்னும் சந்தேகம் ஏற்பட்டது! கனவா, நனவா என்னும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அந்த நதிக்கரையிலிருந்து காட்டுக்குச் செல்லும் வழியில் தன்னையும் அறியாமல் நடந்து சென்றான். எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் அந்தக் குறுகிய காட்டுப்பாதையில் யமுனைக்கரையை ஒட்டி நடந்து கொண்டிருந்தான். எவ்வளவு தூரம் சென்றான் என்பதோ, எந்தத் திசையை நோக்கிச் சென்றான் என்பதோ அவனுக்குப் புரியவில்லை. அவனுக்குப் புரிந்ததெல்லாம் ராஜசூய யாகத்தை நடத்தியாக வேண்டும் என்பதே! அது மட்டுமே அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது. எங்கும் மௌனம் குடி கொண்டிருந்தது. திடீரென அந்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு ஓர் இனிமையான குரலில் பாடல் ஒலி கேட்டது. கூடவே தம்புராவின் இனிமையான சுருதியும் கேட்டது. அந்த இசை வந்த பக்கம் நோக்கி அவன் கால்கள் தானாக நடந்தன. என்ன செய்கி’றோம் என்பதே புரியாமல் இசை வந்த திசை நோக்கி யுதிஷ்டிரன் சென்று கொண்டிருந்தான்.

நதிக்கரையில் ஓர் பெரிய பாறையைக் கண்டான் யுதிஷ்டிரன். அது சந்திர ஒளியில் நீல நிறமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாறையையே அவன் பார்த்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்து பாடும் குரலும் ஓர் உருவமும் தோன்றியது. அந்த உருவம் அந்தப் பாறையின் உச்சியில் அமர்ந்து கொண்டு தன் இசையில் முழுமையாக ஈடுபட்டது. கூர்ந்து பார்த்தால் அது ஓர் முனிவர் என்றும் தெரிந்தது. யுதிஷ்டிரன் தன்னையும் அறியாமல் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றான். சற்று நேரத்தில் இசை நின்றது. அந்த முனிவரிடத்தில் ஓர் மாற்றம் ஏற்பட்டது. அவரைச் சுற்றி ஏற்பட்ட ஒளி அவர் முகத்தில் பாய்ந்தது. சிறுபிள்ளைத் தனமான சிரிப்புடன் அங்கே ஓர் முனிவர் நின்றிருந்தார்.

“என் தாழ்மையான வணக்கங்கள், மஹரிஷி!” என்ற வண்ணம் அவரைத் தலை குனிந்து வணங்கிய யுதிஷ்டிரன், “நீங்கள் ஏன் இந்த நேரத்தில் இந்தப் பாறையின் மேல் அமர்ந்து கொண்டு இசைக்கிறீர்கள்? என் மாளிகைக்கு வந்திருக்கலாமே? இந்த இரவில் இங்கே ஏன் இருக்க வேண்டும்? என் மாளிகைக்கு வந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!” என்றான். “இல்லை, இல்லை, மன்னா! எனக்கு இம்மாதிரியான திறந்த வெளிகளில் சஞ்சரிப்பது தான் மிகவும் பிடிக்கும். நான் இதைத் தான் விரும்புகிறேன்.” என்றார் அந்த முனிவர் அதே சிரிப்புடன்.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? முனிவரே, என்னிடம் சொல்லலாமா?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். “எனக்கெனத் தனியாக ஓர் இடமோ, வீடோ இல்லை, மன்னா! நான் எங்கு தங்குகிறேனோ அது தான் என் வீடு! என் இருப்பிடம். மனிதர்கள் இருக்கும் இடம் மட்டுமில்லை. முன்னோர்கள் வசிக்கும் இடம், கடவுளரின் இருப்பிடம், பாதாளம் கூட என் இருப்பிடம் தான்!” என்று புன்னகைத்தார் அந்த முனிவர். அவர் குரலே மிகவும் இனிமையாகவும் பேசுவதே சங்கீதம் போலவும் இருந்தது. “இப்போது நான் முன்னோர்களின் இருப்பிடத்திலிருந்து இங்கே உன்னைச் சந்திக்க வேண்டியே வந்துள்ளேன்!” என்றார்.அவர் கைகள் அவர் பேசுகையில் தம்பூரின் நாண்களை மீட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அப்படி அவர் திரும்பத் திரும்ப மீட்டியும் அந்தத் தம்பூரிலிருந்து எந்த நாதமும் வரவில்லை என்பது யுதிஷ்டிரனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மறுபடியும் அவனுக்குத் தான் விழித்திருக்கிறோமா, தூங்குகிறோமா என்பதே புரியவில்லை. ஆனால் அதை விசாரிக்க வேண்டுமெனில் அதன் மூலம் அந்த ரிஷிக்கு மரியாதைக்குறைவாக ஏதேனும் செய்து விடுவதாக இருக்குமோ என்றும் அஞ்சினான். ஆகவே அதைக் குறித்துக் கேட்கவில்லை. மேலும் அது குறித்து அவன் மேலும் பேசினால் அந்த முனிவர் மறைந்துவிடுவாரோ என்றும் அஞ்சினான்.

“ரிஷிகளில் சிறந்தவரே! தாங்கள் இப்போது இந்த பூவுலகுக்கு மனிதர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்விதத்தில் நான் சேவை செய்து கடமை ஆற்ற முடியும் என்பதைத் தெரிவியுங்கள். நான் ஹஸ்தினாபுரத்துச் சக்கரவர்த்தியாக இருந்த குரு வம்சத்துப் பாண்டுவின் மூத்த குமாரன், யுதிஷ்டிரன். இப்போது இந்த இந்திரப் பிரஸ்தத்தை ஆண்டு வருகிறேன்.” என்று அறிமுகம் செய்து கொண்டான். “ஆஹா, உன்னை நான் அறிய மாட்டேனா? யுதிஷ்டிரா, உன்னை நான் நன்கறிவேன். நான் உனக்குக் கொண்டு வந்திருக்கும் செய்தியைக் கேட்டு அதன்படி நடப்பதே நீ எனக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை ஆகும்!” என்றார் அந்த முனிவர். “என்ன? எனக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறீர்களா? எங்கிருந்து? யாரிடமிருந்து?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் யுதிஷ்டிரன்.

“உன் தந்தை பாண்டுவிடமிருந்து!” என்றார் முனிவர்.