Saturday, August 30, 2014

பீமனின் வம்பும், திரௌபதியின் திகைப்பும்!

என்ன பேசுகின்றனர் என்பதை திரௌபதி கவனித்தாள்.  கிருஷ்ணன் விராடனிடம், பாண்டவர்களிடம் தனி கவனம் செலுத்தும்படி வேண்டிக் கொண்டிருந்தான்.  மிகவும் கனிவாகவும், இனிமையாகவும் அவன் பேசிய தொனியே அவன் கேட்பதை எவராலும் மறுக்க இயலாது என்பதைச் சுட்டியது. இதை அந்தரங்கமாகவும் கூறினான்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் பீமன்.  கொஞ்சம் ஒழுங்கின்றி இருந்த தன் தாடியை ஒழுங்கு செய்து எண்ணெய் தடவி வைத்திருந்தான்.  இப்போது உள்ளூரக் கிருஷ்ணன் பேசுவதை அனுபவித்த வண்ணம் தன் அருமையான தாடியையும் நீவி விட்டுக் கொண்டிருந்தான்.  விராடன் அங்கிருந்து சென்ற பின்னர் பீமன் கிருஷ்ணனை விட்டு அகலுவான் எனத் தோன்றவில்லை. ஆனால் திரௌபதிக்கு முதல் நாளிரவு யுதிஷ்டிரனோடு செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி இப்போது பீமனைச் சந்திக்கவும் இஷ்டமில்லை.  அதோடு பீமன் கடந்த பதினைந்து நாட்களில் அவளைக் காணும்போதெல்லாம் குறும்பும், விஷமமும் கலந்த பேச்சுக்களால் திணற அடித்து வந்தான்.


ஆகவே அவள் அங்கிருந்து செல்ல விரும்பினாள்.  ஆனால் அதற்குள்ளாக அவளைக் கவனித்துவிட்ட பீமன் பெரிதாகச் சிரித்துக் கொண்டே வந்து கதவுகளை விரியத் திறந்தான்.  கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒளிந்திருந்தவர்களைப் பிடித்து விட்ட சிறுவனின் சந்தோஷத்துடன் அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தான் பீமன்.  முழுக்க முழுக்க ஒரு இளவரசிக்குரிய மரியாதைகளோடு வாழ்ந்து, வளர்ந்து பழக்கப்பட்டிருந்த திரௌபதிக்கு இத்தகையதொரு முரட்டுத்தனமான பழக்கம் பிடிக்கவில்லை. அவளுக்கு இது பழக்கமும் இல்லை.  மென்மையாகவே கையாளப் பட்டிருக்கிறாள் அவள். இப்படித் தான் நடத்தப்படுவது அவள் வரையிலும் ஓர் அவமானமாக இருந்தது.  ஆனால் இப்படிக் கேலியும், கிண்டலுமாகச் செயல்படும் இந்த வலிமை படைத்த குண்டனான கணவனைக் கையாள்வது எப்படி என்று தான் திரௌபதிக்குப் புரியவில்லை.


கிருஷ்ணனைத் திரும்பிப் பார்க்க அவனோ ரகசியமாக அவளுடைய தர்மசங்கடமான நிலையை ரசித்துக் கொண்டிருந்தான்.
பீமன் கிட்டத்தட்ட அவளைக் கீழே தள்ளி இருப்பான்.  அதற்குள்ளாக அவளைத் தூக்கி அமரவைத்துவிட்டான்.  அவள் எப்போதும் கடைப்பிடிக்கும் கௌரவமான மனோநிலை அவளை விட்டுச் சென்று விட்டது. தான் ஓர் அரசகுமாரி என்னும் நினைப்பு எப்போதும் அவளிடம் இருக்கும்.  இப்போது அதெல்லாம் அகன்று ஒரு சிறு பெண்ணைப் போல் உணர்ந்தாள். எல்லாமே வேடிக்கை தான் பீமனுக்கு.  ஆகவே இதில் தான் தலையிடுவது முட்டாள்தனம் என உணர்ந்து விட்டாள். பீமன் முரட்டுத்தனமான அதே சமயம் போலியான பரிகாசத்துடன் கிருஷ்ணனைக் குற்றம் சாட்டினான். “எப்படிப் பட்டதொரு மனைவியை நீ என் தலையில் கட்டி  விட்டாய் வாசுதேவா!  கதவுக்குப் பின்னால் ஒரு திருடனைப் போல் ஒளிந்து கொள்கிறாளே!” என்ற வண்ணம் அவன் சிரித்த சிரிப்பில் அந்த அறையே எதிரொலித்தது.


திரௌபதி பீமன் படுத்திய பாட்டில் அவள் ஆபரணங்கள் இடம் மாறி இருப்பதையும் அவள் தலையில் சூடி இருந்த மலர்கள் தரையெங்கும் வியாபித்திருப்பதையும் கண்டாள்.  இப்படித் தன் அன்பை முரட்டுத்தனமாகக் காட்டும் ஒரு கணவனை என்ன செய்வது, அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் தவித்தாள் திரௌபதி.  திடீரென பீமன் அவளைப் பார்த்து அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல் புன்னகை புரிந்தான்.  தன்னைக் கண்டு அவள் பயந்திருப்பாளோ என்னும் எண்ணம் அவனிடம் தோன்றி இருக்க வேண்டும்.  “பயப்படாதே திரௌபதி! நான் உன்னைக் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதைக் குற்றமாகச் சொல்லவில்லை;  அப்படிச் சொல்லவும் மாட்டேன்.  எல்லாப் பெண்களுமே திருடிகள் தான் என்னைப்பொறுத்தவரையில்.  இல்லையா கிருஷ்ணா? முதலில் அவர்கள் நம் இதயத்தை நம்மிடம் இருந்து திருடி விடுகின்றனர்;  பின்னர் நம் இளமையை; பின்னர் மெல்ல மெல்ல நம்மிடம் இருப்பதை எல்லாம் திருடி விடுகின்றனர்!”  மிக சந்தோஷமான குரலில் இதைச் சொன்னான் பீமன்.


திரௌபதி பீமனைக் கோபத்துடன் பார்க்க அவனோ சிறிதும் அதைச் சட்டை செய்யாமல், “ஓஹோ, இதுக்கெல்லாம் கவலைப்படாதே திரௌபதி! கிருஷ்ணனுக்குப் பெண்களைப் பற்றி நம்மை விட அதிகம் தெரியும்.  நன்கு அறிந்தவன் அவன்.”  கிருஷ்ண வாசுதேவன் இப்போது சிரித்துவிட்டு, “பீமா, பீமா, நீ திரௌபதியை மிகவும் பயமுறுத்துகிறாய்!” என்று சிரித்த வண்ணம் கூறினான். “ஆஹா, நான் பாஞ்சால இளவரசியை பயமுறுத்திவிட்டேனா? “ ஆக்ஷேபம் தெரிவித்த பீமன் திரௌபதியை ரகசியமாகப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்.  “ஆஹா, அவளல்லவோ எங்களை எல்லாம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள்.  உனக்குத் தெரியுமா, வாசுதேவா! நேற்றிரவு இவள் எங்கள் மூத்த சகோதரர் யுதிஷ்டிரரை ஒரு பொல்லாத சபதம் எடுக்க வைத்திருக்கிறாள்.  ஆஹா, மஹாதேவா!  இந்தப் பெண்மணி எத்தனை பொல்லாதவள்!  எங்கள் மனைவியாக வந்து வாய்த்துவிட்டாளே! “இப்படிச் சொன்னதன் மூலம் தன்னுடைய மனபாரத்தைக் குறைத்துக் கொண்டவனாக பீமன் மறுபடி கிருஷ்ணனைப் பார்த்துத் திரும்பினான்.  “ஆஹா, கிருஷ்ணா, உன்னால் இதை நம்ப முடியுமா? இந்தப் பெண் எங்கள் ஐவரையும் ஒருவருக்கொருவர் சண்டை போட வைத்துவிட்டாள்! இதற்கு முன்னால் நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையே போட்டதில்லை என்பது தான் நீ அறிவாயே!  ஆனால் இப்போது!”  மீண்டும் பலமாகச் சிரித்தான் பீமன்.  அந்த அறை முழுவதும் அவன் சிரிப்பொலியால் நிறைந்தது.


குழப்பத்திலும் வெட்கத்திலும் திரௌபதியின் முகம் சிவந்து விட்டது.  அவள் இந்த சபதம் எடுக்கையில் அதைத் தனக்கும், தன் கணவர்களுக்கும் மத்தியிலான ஓர் ரகசிய ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்றே நினைத்தாள்.  ஆனால் அதை இவ்வளவு பகிரங்கமாக பீமன் போட்டு  உடைப்பான் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லை.  அவன்  உரத்த குரலில் இதைச் சொன்னது, தர்பார் அறையில் இருக்கும் அவள் தந்தையின் காதுகளுக்குக் கூடக் கேட்டிருக்கும் என்றும் அவள் எண்ணினாள்.


“உண்மையாகவா?  திரௌபதி, நீ மிகவும் பயங்கரமான பெண்ணாக இருக்கிறாயே?  பீமன் சொல்வதெலாம் உண்மையா? அப்படி எனில் நீ சாமானியப் பெண்ணே அல்ல!” குறும்பு கொப்பளிக்கக் கண்ணன் சொன்னான்.  திரௌபதி மிகவும் நாணமடைந்தவள் போல் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  ஆனாலும் அவள் கன்னக்கதுப்புகள் அவள் உள்ளூரச் சிரிப்பதை எடுத்துச் சொன்னது.  அதற்குள் பீமன், “ உனக்குத் தெரியுமா, கிருஷ்ணா! இவள் என்ன செய்திருக்கிறாள், தெரியுமா?  இவள் என் தமையனார் யுதிஷ்டிரனை ஒரு சபதம், சத்தியம் எடுக்க வைத்திருக்கிறாள்.  வெகு தந்திரக்காரி இந்தப் பெண்!” சொல்லிக் கொண்டே திரௌபதியின் அருகே வந்து அவள் மென்மையான கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினான் பீமன்.  ஆனாலும் திரௌபதிக்கு வலித்தது.


திரௌபதிக்கோ தன் தன்மானம் சுட்டுப் பொசுக்கப்பட்டதாய்த் தோன்ற உள்ளூரத் தோன்றிய சீற்றத்தை மறைக்கத் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  நிமிரவே இல்லை.  “ரொம்ப வெட்கப்படாதே திரௌபதி.  கிருஷ்ண வாசுதேவன் வேறு யாரோ அல்ல.  என் சிறிய சகோதரன்.  அவன் இங்கிருப்பதைக் குறித்து நீ கவலை கொள்ளாதே!  ஒரு நாள் நீ அவனுக்கும் சேர்த்துத் தாயாக ஆகிவிடுவாய்!”  என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அறையே அதிரும்படி சிரித்தான் பீமன்.  “இதோ பார் திரௌபதி, அவன் மற்றவர்களுக்கு வேண்டுமானால் வாசுதேவனாகவோ, கோவிந்தனாகவோ இருக்கலாம்.  ஆனால் அவன் தினம் காலை என்னைப் பார்த்ததும் என்னைக் கீழே விழுந்து நமஸ்கரித்துத் தான் ஆகவேண்டும். இல்லையா கிருஷ்ணா!”  கிருஷ்ணனுக்கும் சிரிப்பு வந்தது.


“”ஆம், ஆம் உண்மைதான்.  நான் பீமனை நமஸ்கரித்தே ஆகவேண்டும்.  இல்லை எனில் அவன் என்னைக் கட்டித் தழுவுகிற சாக்கில் என்னுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிடுவான்.  அதற்காகவாவது நான் அவனைப் பார்த்ததுமே கீழே விழுந்து வணங்கி விடுவேன். அது சரி, இது என்ன சபதம்?  சத்தியம்?  புதுமையானதாக இருக்கிறதே!” கிருஷ்ணன் திரௌபதியைப் பார்த்துக் கேட்டான். “ஆஹா, நீ தேடித் தேடி எங்களுக்கு அளித்த இந்த மனைவியின் வேலை இது கிருஷ்ணா!  இவள் என் தமையனார் யுதிஷ்டிரரிடம் ஒரு சத்தியம் வாங்கி இருக்கிறாள்.  அதை மீறாமல் இருக்கவேண்டும் என்னும் சபதமும் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இவள் ஒரு வருஷம் ஒருத்தருக்கு என வரிசைக்கிரமப்படி எங்களுக்கு மனைவியாக இருப்பாளாம்.  அதான் விஷயமே!’  பீமன் நம்பிக்கை இழந்தவன் போல் மேலே பார்த்துக் கைகளைத் தூக்கினான்.


 “அதாவது, கிருஷ்ணா, நான்கு வருடங்கள், ஆம் , நான்கு வருடங்கள் எங்களில் ஒருவரைத் தவிர மற்ற நால்வரும் மனைவி இல்லாமல் இருக்க வேண்டும்.  இது நல்லதா, கெட்டதா? நன்மையும், உண்டு, கெடுதலும் உண்டு. “ பின்னர் தன் தலையைத் தட்டிக்கொண்டு, மேலே பேசினான்:”ம்ம்ம்ம்ம் ராக்ஷச வர்த்தத்தின் ராஜா வ்ருகோதரன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.  மிகக் கடுமையாக யோசிக்கிறான்.  இதோ, இப்போது அவன் ஹிடும்பிக்காக ஆளை அனுப்பி வைக்கப்போகிறான்.  அவள் வ்ருகோதரனுக்காக என்றும், எப்போதும், எங்கேயும், எதையும் செய்ய மறுக்க மாட்டாள்!”  கடகடவென மீண்டும் சிரித்தான் பீமன்.


இதற்குள்ளாக திரௌபதியின் குழப்பங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அவள் தன் தலைமுடியைச் சரிப்படுத்திக் கொண்டு, கீழே விழுந்திருந்த மலர்களைப் பொறுக்கினாள்.  பீமனைப் பார்த்து அந்த மலர்களைச் சுட்டிக் காட்டிய வண்ணம், “சரி, சரி, நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். இன்னும் மோசமாகவும் சொல்லிக் கொள்ளுங்கள்.  எனக்கு என்ன வந்தது? இதோ நான் குந்தி அம்மாவிடம் தான் போகப் போகிறேன்.  அவரிடம் போய் உங்களைக் குறித்துப் புகார் அளிக்கப் போகிறேன்.  நீங்கள் என் கைகளைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியதாகச் சொல்லப் போகிறேன்.  என் தலைப்பின்னலில் இருந்த பூக்களையும் பறித்து வீசியதாகச் சொல்லப் போகிறேன்.”


“ஓஹொ, திரௌபதி, உனக்குத் தெரியாதா?  கவலையே படாதே! அம்மாவுக்கு ஒரு மனைவியை நான் எப்படி என் வழிக்குக் கொண்டு வருவேன் என்பது நன்கு தெரியும்! முதல் முதல் நான் ஹிடும்பியைப் பார்த்ததும், நான் அவளை அப்படியே தூக்கினேன்.  தூக்கி மேலே காற்றில் வீசி அடித்தேன்.  பின்னர் அவள் கீழே விழப் போகையில் அவளை நான் பிடித்தேன். என்னுடைய அந்த விளையாட்டு அவளுக்கு மிகவும்  பிடித்துப் போய் என்னுடைய அடிமையாகவே ஆகிவிட்டாள்.  ஆஹா, ஆனால் அவள் எத்தனை குண்டான பெண் என்பது தெரியுமா?”


இப்போது கிருஷ்ணன் அடக்க முடியாமல் சிரித்தான்.  “பீமா, பீமா, உனக்கு ஒரு ராக்ஷசியிடம் எப்படி நடந்து கொள்வது என்பது மட்டுமே தெரியும். ஆனால் திரௌபதி உணர்ச்சி வசப்படும் மென்மையான ஆரிய வம்சத்து இளவரசி.  அவளை மென்மையாகக் கையாள வேண்டும்.”


“என்ன?  இவள் உணர்ச்சி வசப்படுகிறவளா? சரியாய்ப் போயிற்று கிருஷ்ணா!  இதை நீயா சொல்கிறாய்?  இவள் மிகவும் கடினமான இதயம் படைத்த பெண்மணி.  நான் பார்த்தவர்களுள் இவளுக்கே கடினமான இதயம் உள்ளது.  அவள் இன்னும் நான்கு வருடங்களுக்கு எனக்கு மனைவியாக இருந்து எனக்குத் துணையாக இருக்கப் போவது இல்லை. அதை நினைத்துப் பார்த்தாயா?  நான் எப்படி உயிர் வாழ்வேன்?”  இதைச் சொல்கையில் அடக்க முடியாத துக்கத்தில் இருப்பவனைப் போலவும் உடனே அழுதுவிடுவான் போலவும் பீமன் முகத்தை வைத்துக்கொள்ள இருவரும் சிரித்தனர்.

Tuesday, August 26, 2014

கண்டேன், கண்டேன், கண்ணுக்கு இனியன கண்டேன்!

அன்று காலை திரௌபதி தன் அந்தப்புரம் சென்று அங்கே தங்கி இருந்த தன் மாமியார் குந்தியைப் பார்த்தபோது மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள். தனக்கு உடலே இல்லாதது போலவும், தான் காற்றில் மிதப்பது போலவும் உணர்ந்தாள்.  அதை அதிகப்படுத்தும் விதமாக கிருஷ்ண வாசுதேவன், பலராமன், சாத்யகி ஆகியோர் தாங்கள் தங்கி இருந்த முகாம்களில் இருந்து கிளம்பி அரண்மனைக்கு வந்து பாண்டவர்களுக்கென ஏற்படுத்தப்பட்டிருந்த தாற்காலிக அறைகளுக்குப் பக்கத்தில் தங்கி இருந்தார்கள்.  ஆஹா, இதன் மூலம் கண்ணனை எவ்விதத் தடங்கல்களும் இல்லாமல் இங்கேயே பார்க்கலாமே!  திரௌபதி உண்மையில் மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். ஆனால், கண்ணனைத் தனிமையில் சந்திப்பது என்பதே இயலாத ஒன்றாகத் தெரிந்தது.  அவன் மாளிகையில் வந்து தங்குகிறான் என்பது தெரிந்ததுமே மாளிகை வாசிகள் இதையும் ஒரு கோயிலாக நினைத்துக் கண்ணனை வணங்க வரிசையில் காத்திருந்தார்கள்.


பல்வேறு நாடுகளின் அரசர்கள், இளவரசர்கள், இன்னும் மிகப் பெரிய பதவிகளை வகித்த திறமைசாலிகளான வீரர்கள், அதிரதர்கள், மஹாரதர்கள் போன்றோர் அவள் சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் கண்ணன் ராஜ மாளிகையில் தங்கி இருக்கும் செய்தி அறிந்ததும், தனித்தோ அல்லது கூட்டமாகவோ அங்கே வந்து அவனைப் பார்த்து அவன் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டார்கள்.  ஒரு சிலர் தங்கள் மரியாதையை மட்டும் தெரிவித்துச் சென்றனர்.   பாஞ்சாலத்தில் இருந்த ரிஷிகள், முனிவர்கள், துறவிகள், சந்நியாசிகள் போன்றோர் அங்கே வந்து கண்ணனுக்குத் தங்கள் ஆசிகளைத் தெரிவித்துச் சென்றனர்.


இவர்களைத் தவிர பொதுமக்கள் பலரும் கண்ணனைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள்  யாரும் அழைக்காமலேயே கூட்டம் கூட்டமாக வந்து அரண்மனையின் முன் வாயிலின் முற்றத்தை நிறைத்தனர்.  அவர்களைத் திருப்பி அனுப்ப முடியாமல் காவலாளிகள் திண்டாடினார்கள்.  அவர்கள் கூட்டமாக அங்கே தங்கி இருந்ததோடு அல்லாமல் கண்ணனைக் குறித்தும் அவன் சாகசங்கள் குறித்தும் இடைவிடாமல் பேசியது அலைஓசை போல் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.  ஆஹா, இவன் தான் எப்படிப்பட்ட மனிதன்! உண்மையிலேயே கடவுளோடு சமமாக மதிக்கும் அளவுக்குத் தகுதி வாய்ந்தவன்.  நம் தந்தையைத் தான் எப்படிப் பேசி சுயம்வரம் நடத்த ஒப்புக் கொள்ள வைத்தான்.  அதோடு மட்டுமா?  தன்னுடைய மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தி  ஜராசந்தனை சுயம்வரத்திலிருந்தே விலக வைத்தான்.   இல்லை எனில் அவன் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தன் பேரன் மேகசந்திக்குத் திருமணம் முடித்திருப்பான்.  அதோடு மட்டுமா?  பாண்டவர்கள் ஐவரையும் சரியான சமயத்தில் உயிருடன் திரும்பக் கொண்டு வந்தானே!


அவளையும் எப்படியோ பேசி ஐவரையும் மணக்கவும் வைத்துவிட்டான்.   கண்ணனின் இத்தகைய நடவடிக்கைகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதோடு, அவன் அதிசயங்களைப் புரிகிறான் என்னும் எண்ணத்தையும் அதன் மூலம் அவன் மேல் பிரமிப்பும்,பெருமதிப்பும் ஏற்படுத்துகிறது.  அவன் இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாவாகி விடுகிறான். முற்றத்திலேயே பொதுமக்கள் இன்னமும் கூட்டமாக அமர்ந்து கண்ணனைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கிறார்கள். நாள் முழுதும் சலிக்காமல், “ஜயது, ஜயது கிருஷ்ண வாசுதேவா!” என்னும் முழக்கத்தைச் செய்த வண்ணம் காத்திருக்கின்றனர்.  கிருஷ்ணன் உடனே அவர்களிடையே வரவேண்டும் என்று கூச்சலிட்ட வண்ணம் பெருத்த ஆரவாரங்கள் செய்கின்றனர்.  அதைக் கேட்டு அவன் வந்ததும், சிலர் அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றனர்; அவனைக் கட்டி அணைக்க விரும்புபவர்கள் பலர். அவன் பார்வை பட்டாலே போதும் என நினைப்பவர்கள் பலர். அத்தனையையும் மீறிச் சிலரிடம் அவன் பேசி அவர்களை நலம் விசாரித்தால் அப்படி விசாரிக்கப்பட்டவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ந்தால் மற்றவர்கள் அவர்களைப் பொறாமையுடன் பார்த்தனர். அவன் ஒருவரைப் பார்த்துச் சிரித்தாலே அந்த மனிதர் தான் உயர்ந்ததொரு இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்.


கிருஷ்ணன் தன் குடும்பத்தையும், குந்தியின் குடும்பத்தையும் தன் கல்யாணத்தின் மூலம் எப்படி அழகாக ஒன்று சேர்த்துவிட்டான் என எண்ணி எண்ணி வியந்தாள் திரௌபதி.  அவள் தந்தை எப்போதுமே ஏதோ ஆழ்ந்த யோசனையில் முகம் கடுத்தவராய்க் காணப்படுவார்.  ஆனால் இப்போதோ அவர் பேச்சே மென்மையாக ஆகி இருப்பதோடு கிருஷ்ண வாசுதேவனைக் குறித்துப் பேசினால் மிகவும் மரியாதையுடன் பேசுகிறார்.  த்ருஷ்டத்யும்னனோ இயல்பாகவே தைரியமும், தன்னம்பிக்கையும் வாய்ந்தவன்.  யாருக்கும் எளிதில் தலை வணங்க மாட்டான்.  ஆனால் கிருஷ்ணனுக்கு எதிரே தன்னைச் சிறியவனிலும் சிறியவனாக உணர்கிறான் என்பதை அவன் நடவடிக்கையிலேயே புரிந்து கொள்ள முடிகிறது.  சாத்யகி, சிறுவன், இளைஞன், கிருஷ்ணன் நடந்த பூமியைத் தொழும் ரகம் அவன்.


குந்தியோ எனில் தன் தாய்மை அன்பு முழுதையும் திரௌபதியிடம் மட்டுமின்றிக் கிருஷ்ணனிடமும் காட்டுகிறாள் என்பது அவனைக் குறித்து மிக அன்பாகவும், ஈடுபாட்டுடனும், பாசம் காட்டி அவள் பேசுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.  யுதிஷ்டிரனை அவன் மற்ற சகோதரர்கள் கடவுளைப் போல் நினைக்கிறார்கள் என்றாலும் ஐவருமே கிருஷ்ணன் விஷயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை.  யுதிஷ்டிரனும் கிருஷ்ணனை நடமாடும் தெய்வமாகவே கருதுகிறான்.  பீமன் விளையாட்டு புத்தி கொண்டவன். அவ்வப்போது கிருஷ்ணனிடம் சம்பிரதாய விரோதமான  ஹாஸ்யங்களை உதிர்த்தாலும் உள்ளூர அவனுக்கும் கிருஷ்ணனிடம் பக்தி இருப்பதை அவன் பணிவே எடுத்துச் சொல்கிறது.   அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு உற்றதொரு நண்பனாக அவன் காலடியை ஒற்றியே செல்கிறான்.  மகிழ்ச்சி ஒன்றையே தன் இயல்பாகக் கொண்ட நகுலனும், புத்திசாலியும், விவேகமுள்ளவனுமான சஹாதேவனும் கூடக் கிருஷ்ணனை வழிபடுவதே தங்களுக்கு உகந்தது எனப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.


இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.  அவள் அவனை அவன் உண்மையான சொரூபத்தில் பார்த்திருக்கிறாள்.  அவன் அப்படியே இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆஹா, அந்த அனுபவம்! கிருஷ்ணன் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டு அவளிடம் சுயம்வரத்திற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும் அது தான் அவளுடைய தர்மம் எனவும் கூறிய அந்த விநாடி! அவள் இந்த உலகம் முழுதையும் பார்த்ததோடு அல்லாமல், உலகத்தினுள் தன்னையும் கிருஷ்ணனையும் பார்த்தாள்.  அது மட்டுமா? தன்னில் கிருஷ்ணனையும், கிருஷ்ணனிடம் தன்னையும் கண்டாளே! அதை மறக்க முடியுமா?  அது தான் அவன் உண்மையான சொரூபம்! ஆம் அன்றிலிருந்து அவனுடன் தான் ஆன்மிக ரீதியாகப் பிணைக்கப்பட்டிருப்பதை திரௌபதியால் உணர முடிந்தது.  அவளுடைய எண்ணங்களையும், செயல்களையும் பரிசோதித்து அவள் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளக் கிருஷ்ணனின் பாராட்டு மொழிகள் உரைகல்லாக அமைந்தன.


யோசித்துக் கொண்டே திரௌபதி அந்தப்புரத்தைக் கடந்து வெளியே வந்து ஒரு சிறிய தோட்டத்தையும் கடந்தாள்.  கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் தாழ்வாரத்தில் இருக்கும் சிறியதொரு முற்றத்தை அடைந்தாள்.  அங்கே காணப்பட்ட அறையின் கதவு பாதி மூடி இருந்தது.  மெல்ல மெல்லச் சென்ற திரௌபதி அந்தப் பாதி மூடப்பட்ட கதவைத் திறந்து உள்ளே பார்வையைச் செலுத்தினாள்.  கிருஷ்ணன் தனியாக இல்லை.  அவள் இரண்டாவது கணவன் பீமனும், மத்ஸ்ய நாட்டரசன் விராடனும் உடன் இருந்தனர்.  இந்த நெருக்கமான சந்திப்பால் கிருஷ்ணன் மேல் அவள் வைத்திருந்த மதிப்பு இன்னமும் கூடியது.  அதோ அவன் உட்கார்ந்திருக்கிறான்.  தன்னியல்பு மாறாமல், சிறுபிள்ளை போல் விளையாட்டுத் தனம் தெரியும் வண்ணம், அவன் எழிலும், நளினமும் ஒவ்வொரு அங்கத்திலும் தெரியும்படியாக, விசாலமான பேசும், சிரிக்கும் அவன் கண்கள் அவனுடைய ஒவ்வொரு மனோநிலைக்கும் ஏற்றவாறு மாற்றங்களை உடனுக்குடன் காட்டியபடி இருக்கப் பேசிக் கொண்டிருந்தான்.


ஆசனத்திலிருந்த திண்டில் பாதி சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த கிருஷ்ணனனின் நீண்ட சுருட்டை முடிகள் அவன் தோளைத் தொட்டுக்கொண்டிருக்க, அவன் அமர்ந்திருந்த நிலையால் அணிந்திருந்த மாலை சற்றே இடம் மாறிக் காணப்பட, அவன் மார்பிலுள்ள பிறப்பு அடையாளம் நன்கு தெரியவர, ஆஹா! என்ன ஒரு கோலம் இது! இது என்ன நிறம்?  கறுப்பா? அல்லது நீலமா?  கரு நீலமா? என்ன நிறம் இது? கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும் மழைமேகங்களின் நிறமா இது? ஆனால்…. ஆனால் இது  மற்றக் கருநிறத்தவருக்கு இருப்பதைப் போல் இல்லாமல் ஒளி வீசுகிறதே!  காணக்கிடைக்காத காட்சி இது!

Sunday, August 24, 2014

திரௌபதி கண்டு பிடித்த வழி!

“ஏன் அப்படிச் சொல்கிறிர்கள் பிரபுவே? அது என்ன அவ்வளவு முக்கியமானதா?”

“”திரௌபதி, எங்கள் தாய் நாங்கள் அனைவருமே உன்னை மணந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்த்தாள் என்பதை நீ நன்கறிவாய்!  அவள் வார்த்தையை உண்மையாக்கவே நாங்கள் விரும்பினோம்.  நாங்கள் பிறந்ததில் இருந்து அவள் வார்த்தைக்கு முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும், அந்த மதிப்பு உண்மையானதாக இருக்க வேண்டும் என்றும் சபதம் எடுத்துக்கொண்டோம்.  அதன் பின் விளைவுகள் எப்படி இருந்தாலும் எங்கள் தாயின் வார்த்தைகளைத் தட்டக்கூடாது என்பதே எங்கள் முதல் லக்ஷியமாக இருந்து வருகிறது.  இந்த விஷயத்தில் நாங்கள் அனைவரும் அவள் பேச்சைத் தட்டி இருந்தோமானால் அதனால் அவள் மனம் மிகவும் புண்பட்டிருக்கும்.  உடைந்தே போயிருக்கும்.  அதோடு மட்டுமல்ல, அவள் அன்பு வளையத்தால் எங்களைக் கட்டிப் போட்டிருக்கிறாள்.  அந்த வளையம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மந்திர வளையம்.  நாங்கள் ஐவரும் அதில் இணைந்திருக்கிறோம்.   எங்களோடு உன் திருமணம் நடக்கவில்லை எனில் அந்த மந்திர வளையத்தையும் அது உடைத்து எங்களைப் பிரித்துச் செயலற்றவர்களாக்கி இருக்கும்.” யுதிஷ்டிரன்  இதைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொன்னான்.

திரௌபதி தன் தலையைக் குனிந்து கொண்டு சற்று நேரம் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  விபரம் அறியாத ஒரு தாய் அறியாமையில் சொன்ன சில வார்த்தைகள் அவள் வாழ்க்கையில் எத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது! உண்மையில் அவள் மனம் இத்தகையதொரு திருமணம் தனக்கு நடந்ததை எண்ணி, எண்ணிக் கலவரம் அடைந்து, புரட்சியில் ஈடுபட்டிருக்கும்.  ஆனால் கடந்த பதினைந்து நாட்களாக அவள் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பைக் கண்டு வியந்து வருகிறாள்.  எத்தகையதொரு ஆழமான பாசம் அவர்கள் அறுவரையும் பிணைத்திருக்கிறது என்பதையும், குந்தியின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் உள்ளார்ந்த மதிப்பையும், பாசத்தையும், அவள் சொல்வதைத் தட்டக்கூடாது என்னும் அவர்கள் உயர்ந்த எண்ணத்தையும் அவள் சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறாள்.  ஆகவே இப்போது அவளுக்குக் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

யுதிஷ்டிரன் மேலும் பேசினான்:  “மீண்டும் குருநாதர் வியாசர் சொன்னதே உண்மையாயிற்று.  நாங்கள் ஐவரும் ஒன்றாக இருந்தால் தான் எங்கள் எதிரிகளை எங்களால் வெல்ல முடியும்.  எங்கள் விதியை மாற்ற இயலும்.  ஐவருக்கும் ஒரே மனைவி என்பதால் எங்களை எவராலும் வெல்ல முடியாமல் இருக்கும்.  நாங்கள் தவிர்க்க முடியாதவர்களாகவும் ஆகிப் போனோம். எங்கள் குறிக்கோளை, எங்கள் ஊழ்வினையை, எங்கள் வாழ்க்கையை நீ ஒருவரை மட்டும் மணந்திருந்தால் அந்த நிகழ்வு இடையிட்டுத் தடுத்திருக்கும். “

“உங்கள் குறிக்கோள், லக்ஷியம் என்ன பிரபுவே!”

“தர்மத்தின் பால் நிற்பதும், தர்மத்தைக் கடைப்பிடித்து ஆட்சி செய்வதும் தான்!”


திரௌபதி சிரித்தாள்.  “நானும்  தானே குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு உங்கள் ஐவரையும் மணந்தேன்.  ஏனெனில் அது தான் என் தர்மம் என்று எனக்குப் புரிந்தது.”


“நீ மிகவும் புத்திசாலி.  விவேகம் நிறைந்தவள் திரௌபதி.  ஆனால் நாங்கள் இதை எங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள முடியாது.  உன்னை நாங்கள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும் முடியாது;  கட்டுபடுத்தக் கூடாது.  நீ தேர்ந்தெடுக்காத கணவர்களோடு வாழ்ந்தாக வேண்டும் என உன்னை நாங்கள் நிர்ப்பந்தம் செய்ய முடியாது. அர்ஜுனன் தைரியமானவன்; பெருந்தன்மை மிக்கவன்.  உன்னை சந்தோஷப் படுத்துவது அவன் கைகளில் இருக்கிறது.  அவனிடம் மட்டுமே உள்ளது. உண்மையில் நீ அவனுக்கு மட்டுமே மனைவியாக இருப்பாய்!” யுதிஷ்டிரன் மெல்லிய புன்னகையுடன் ஒரு தந்தை தன் சிறு குழந்தைக்கு மென்மையாகச் சொல்வது போல் மிக அன்புடனும், கனிவுடனும் அவளிடம் கூறினான்.

“நான் ஐவரையும் மணந்திருக்கையில் ஒருவனுக்கு மட்டுமே மனைவியாக இருப்பது சரியா?  அது முறையானதா?  பின்னர் என் வாழ்க்கை பொய்ம்மை நிறைந்ததாகிவிடும்.  நான் பொய்யானதொரு வாழ்க்கையை வாழ்ந்தவளாவேன்.” திரௌபதி தைரியமாக யுதிஷ்டிரன் முகத்தை  நேருக்கு நேர் பார்த்தவண்ணம் சொன்னாள்.

“நீ சொல்வதும் ஒரு வகையில் சரியானது திரௌபதி.  ஆனால்…..நாம் எந்த வழியில் சென்றால் பாவம் செய்ய இடமில்லையோ அந்த வழியில் செல்வதே சிறப்பு.  அதைத் தான் நாம் இப்போது செய்ய வேண்டும்.  வா, நான் உன்னை அர்ஜுனனிடம் அழைத்துச் செல்கிறேன்.” என்று மனதில் எவ்விதமான வருத்தமோ, துக்கமோ இல்லாமல் இயல்பாகச் சொன்னான் யுதிஷ்டிரன்.

திரௌபதி நிமிர்ந்து அவனையே பார்த்தாள்.  யுதிஷ்டிரனிடம் அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பயமும்  இப்போது அறவே அகன்றுவிட்டது.  “என்னை மன்னியுங்கள் பிரபுவே. நான் நீங்கள் உட்பட ஐவரையும் மணந்திருக்கிறேன்.  உங்கள் மனைவியாக எனக்குள்ள கடமையிலிருந்து வழுவாமல் இருப்பதும் எனக்கு ஒரு கடமையாகும். “

“திரௌபதி, இது அவ்வளவு சாமானியமான கடமை அல்ல!” எச்சரித்தான் யுதிஷ்டிரன்.  “பிரபுவே, நீங்கள் மட்டுமா?  நானும் ஒரு தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்பவேண்டும் எனக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அதற்காகவே ஐவரையும் மணந்து கொண்டேன்.  உங்கள் ஐவருக்கும் விசுவாசமான, அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனைவியாக நான் இருக்க விரும்புகிறேன்.  நான் அப்படி இல்லை எனில் நான் கனவு காணும் தர்ம சாம்ராஜ்யம் எப்படி எழும்பும்?”

“இது மிகக் கடினமான வேலை திரௌபதி.  எங்களில் யாரேனும் ஒருவரை மன சங்கடப்படுத்திவிட்டாயோ என்னும் நினைவில் உனக்கு மன சங்கடம் மிகுந்து போகும்.  அந்த நினைவுகளில் நீ துடிப்பாய்!”

“அப்படி எனில் இப்போதே என் சோதனையை ஆரம்பித்து விடுகிறேன்.  நான் நிச்சயமாய் இதில் தேர்ச்சி பெறுவேன் என்னும் நம்பிக்கை என்னிடம் உள்ளது.” என்ற திரௌபதியிடம், “உன்னால் அது எப்படி இயலும்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன்.  “அனுபவ ரீதியாகவும் வயதிலும் நான் சிறியவளே ஐயா.  ஆனால் உங்கள் அனைவருக்கும் என்னால் செய்யக் கூடியது என்ன என்பதை நான் அறிவேன்.  பல்வேறு விதமான தேவைகளோ அது வேண்டும் என்றோ, அது கிடைக்கவில்லை, இது இல்லை என்னும் குறைகளோ இல்லாமல்  நான்  இருப்பேன் என்பதையும் நீங்கள் விரைவில் காண்பீர்கள்.”


திடீரென திரௌபதிக்கு ஏதோ தோன்ற யுதிஷ்டிரனை நிமிர்ந்து பார்த்தாள். சவால் விடும் கண்களோடு அவனைப் பார்த்தாள்.  “பிரபுவே, நீங்கள் நால்வரும் பெயரளவுக்கே எனக்குக் கணவனாக இருக்க விரும்புகிறீர்கள் அல்லவா?  அது தானே உங்கள் யோசனை?  திட்டம்?”


“ஆம் திரௌபதி, நாங்கள் நால்வரும் கூடி எடுத்து முடிவு அது.  அதுதான் சரியானதும் கூட!”


“ஆனால் அந்த முடிவின் மூலம் நான் உங்கள் ஐவருடனும் என் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு செயலற்றுப் போய்விடுமே!  பிரபுவே, எனக்கு ஒரு வழி தெரிகிறது.  அதற்கு உங்கள் உதவி தேவை!” என்றாள் திரௌபதி.  “என்ன?  உனக்கு நீயே ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாயா?  உண்மையாகவா?  என்ன அது? சொல் என்னிடம்!” யுதிஷ்டிரன் அவளிடம் மீண்டும் கனிவு பொங்கக் கேட்டான்.  உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக மனைவியாக என் கடமைகளைச் சரிவரச் செய்தால் தான் நான் நினைக்கும் தர்ம சாம்ராஜ்யத்தை என்னால் எழுப்ப முடியும்.  உங்கள் அனைவரையும் நான் அன்பாக நடத்த எண்ணுகிறேன்.  உங்கள் அனைவரின் அன்பையும் பெற எண்ணுகிறேன். உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை எனில் நான் உங்களில் ஒவ்வொருவருக்கும் வரிசைப்படி ஒவ்வொரு வருடம் மனைவியாக இருந்து வருவேன்.  ஒவ்வொரு வருடம் முடிந்த பின்னரும்  யாரிடம் நான் செல்கிறேனோ அவரின் மனைவி நான்.  இதில் உங்களுக்குச் சம்மதமா?”

“எல்லாம் சரிதான் திரௌபதி.  ஆனால் இதைக் கடைப்பிடிப்பது, அதுவும் ஒழுங்காகக் கடைப்பிடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்று.  “ என்றாலும் அவள் யோசனையைக் கேட்டு அவளை உள்ளூரப் பாராட்டினான் யுதிஷ்டிரன். “பிரபுவே, இதில் உங்களுக்கு ஏதும் கஷ்டம் இருக்கிறதா?” திரௌபதி கேட்டாள்.  “இல்லை திரௌபதி, உனக்குத் தான் சிரமம், சங்கடம் எல்லாமும்.”


“ஓ, நான் அதை முடிக்கிறேன்.  என்னால் முடியும் பிரபுவே.  உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை உள்ளது அல்லவா? ஒவ்வொரு வருடம் முடிவிலும் நான் சாந்திராயன விரதம் இருக்கிறேன்.  அதன் பின்னர் அடுத்த சகோதரனோடு வாழப் போகிறேன்.  ஆனால் நீங்கள் ஐவரும் இதை சந்தோஷமாக ஏற்கிறீர்களா?  நீங்கள் தான் உங்கள் மற்ற சகோதரர்களிடம் இதைக் குறித்துச் சொல்ல வேண்டும்.”


“அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் திரௌபதி.  திரௌபதி, உன் வயதுக்கு நீ மிகவும் விவேகத்துடன் இருக்கிறாய்.” என்று மனமார அவளைப் பாராட்டினான் யுதிஷ்டிரன்.  “ஓ, நான் புத்திசாலியும், விவேகமானவளாயும் இருப்பதாலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தேன்.” திரௌபதி குறும்புச் சிரிப்போடு கூறினாள்.  “நீங்கள் தர்மத்தைச் சிங்காதனத்தில் அமர்த்த நினைக்கிறீர்கள்.  உங்களுடைய மறுபாதியாக இருக்க நான் விரும்புவதில் என்ன தவறு?”


யுதிஷ்டிரன் பரிபூரணமாக திரௌபதியிடம் சரணடைந்துவிட்டான்.  “திரௌபதி, நீ எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். நாங்கள் அந்தப் பரம்பொருளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  உன்னை எங்களுக்குத் தந்தது அவன் தானே!”  “ம்ம்ம்ம்ம் அவன் மட்டுமில்லை……கோவிந்தனும் கூட!’ திரௌபதி இதைச் சொன்னதும் இருவரும் சிரித்தனர்.  அவர்களிடையே இருந்த கண்ணுக்குத் தெரியாத இடைவெளி மறைந்தது.  மறுநாள் காலை எழுந்தபோது திரௌபதி பாரிஜாத மலர்களால் சூழப்பட்டதொரு நந்தவனத்தில் அந்த மலர்களால் அபிஷேஹம் செய்யப்பட்டதொரு மனநிலையை அடைந்திருந்தாள். யுதிஷ்டிரனுடைய சாந்தமும், மென்மையும் அவளைச் சுற்றிலும் வியாபித்திருந்தது.


Saturday, August 23, 2014

யுதிஷ்டிரன் ஆர்வமும், திரௌபதியின் ஆச்சரியமும்!

மாட்சிமை பொருந்திய ராணிமாதா எங்களுக்குக் கொள்ளுப்பாட்டி முறையினர் ஆவார் திரௌபதி.  நாங்கள் அவர்களை மிகவும் மதிக்கிறோம். அவர்களுக்கும் எங்களிடம் அதீதமான பாசம் உண்டு. உண்மையில் அவர்களை நாங்கள் எங்களைக் காக்க வந்த தேவியாகவே நினைக்கிறோம்.  பூஜித்து வருகிறோம்.  உனக்குத் தெரியுமா?  ஆசாரியர்…..குருதேவர் …..வியாசர் அவர் பெற்ற மகன் என்பது?”


தெரியும் என்பது போல் தலையை அசைத்தாள் திரௌபதி.  “நீ அவர்களைக் குறித்து எவ்விதக் கவலையும் படவேண்டாம் திரௌபதி.  அவர்கள் மிகப் பெருந்தன்மையானவர்கள்.  மிகவும் விவேகம் நிரம்பியவர்கள்.  புத்திசாலி.  எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை உள்ளவர்கள்.  அவர்கள் சம்மதம் இல்லை எனில் சித்தப்பா விதுரர் இங்கே வந்திருக்கவே மாட்டார். அது நிச்சயம்.”


“ம்ம்ம்ம்ம், பிரபுவே, துரியோதனர்? “  இதைக் கேட்கையிலேயே திரௌபதிக்கு சுயம்வரத்தில் போட்டியில் தோற்ற துரியோதனன் அங்கிருந்து செல்கையில் தன்னைப் பார்த்த தீய பார்வை நினைவுக்கு வந்து உடல் நடுங்கியது.  “நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு அவன் தன்னைத் தானே சமரசம் செய்து கொண்டுவிட்டான் என எண்ணுகிறேன். ம்ம்ம்ம் அவன் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன் திரௌபதி.  தவறுக்கு மேல் தவறாகச் செய்து கொண்டு வருகிறான்.  அதற்காக வருந்துவதற்காகவே வாழ்கிறான் போலும்!”


“அவர் நிஜமாகவே சமரசம் செய்து கொண்டு விட்டாரா, பிரபுவே?  அது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? அவருடைய தீய பார்வை, அந்தப் போட்டியில் தோற்றபின்னர் அவர் என்னைப் பார்த்த அந்தக் கொடிய பார்வை….. இன்னமும் என்னைத் துரத்துகிறது பிரபுவே!  அதை நினைத்தால் இரவுகளில் எனக்குத் தூக்கமே வருவதில்லை!” திரௌபதியின் உடல் நடுங்கியது மீண்டும் .


“திரௌபதி, நீ அவனை அவன் பலஹீனத்திற்காக மன்னிக்கவேண்டும். அவனைச் சிறிதும் பொருட்படுத்தாதே! பாவம் அவன். கெட்ட கிரஹங்களின் ஆதிக்கத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறான்.  நாம் அவனை மன்னித்துப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.”


“அப்புறம் உங்கள் குரு துரோணாசாரியர்?  அவர் என்னை ஏற்றுக் கொள்வாரா?  உங்கள் மனைவியாக அங்கீகரிப்பாரா?  நான் அவருடைய ஜன்ம வைரியின் மகள்.”


யுதிஷ்டிரன் இதைக் கேட்டதும் கலகலவெனச் சிரித்தான். “திரௌபதி. அதில் ஏதும் கஷ்டம் இருக்காது.  உன்னுடைய அருமை அண்ணன் கோவிந்தா ஆசாரியரிடம் உன் சகோதரன் ஷிகண்டினை அனுப்பியபோதே அந்தக் கஷ்டத்தைத் தாண்டி விட்டான்.  உன் சகோதரன் ஒரு பெண்ணாக இருந்து ஆணாக மாறியவன் அன்றோ!  அதோடு உனக்குத் தெரியுமே! கிருஷ்ணன் அஸ்வத்தாமாவையே உன் தந்தையிடம் உறுதிமொழி கொடுக்கச் செய்துவிட்டான் அல்லவா?”


“ஆம், எனக்குத் தெரியும்.” என்ற திரௌபதி கிருஷ்ணனின் சாமர்த்தியத்தயும், அவன் தனக்குச் செய்திருக்கும் உதவிகளையும் மனதில் நினைத்துக் கொண்டு நன்றியுடன் சந்தோஷம் அடைந்தாள்.  “ திரௌபதி! ஆசாரியதேவரை நாம் நிச்சயமாக வென்றாக வேண்டும். ஒரு விஷயத்தில் நாம் இருவரும் ஒத்துப் போகிறோம். கிருஷ்ணன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் வரையில் நமக்கு நம் வாழ்க்கையில் எவ்விதமான கடுமையான முட்களும்  இல்லாமல் மலர்ப்பாதையாக இருக்கும்.”  தன் விரிந்த விசாலமான நயனங்கள் தனிப்பட்டதொரு ஒளியைக்காட்ட திரௌபதி, “ஆம், ஆம், அது எனக்குத் தெரியும். கோவிந்தன் இல்லை எனில் இந்தச் சுயம்வரத்தை என்னால் எதிர்கொண்டிருக்கவே முடியாது.  இதைத் தாங்கக்கூடிய வல்லமையை அவன் தான் எனக்கு அளித்தான்.”


“ஆமாம், அவன் இல்லை எனில் நாங்களும் ராக்ஷசவர்த்தத்தில் ஒன்றுக்கும் பயன்படாமல் அழுகிச் செத்திருப்போம்.  அல்லது ராக்ஷசர்களுக்கு உணவாகி இருப்போம்.” என்றான் யுதிஷ்டிரன்.  உடனே இருவரும் சேர்ந்தே சிரித்தனர்.  “உனக்குப் பகடை ஆடத்தெரியுமா?” திரௌபதியின் எதிரே விரிக்கப்பட்டிருந்த பகடைச் சித்திரத்தையும், அவளருகில் கிடந்த பகடைக்காய்களையும், பாய்ச்சிகளையும் பார்த்தவண்ணம் யுதிஷ்டிரன் அவளிடம் கேட்டான்.  “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.” என்றாள் திரௌபதி.  “நாம் ஓர் ஆட்டம் ஆடுவோமா?” என்றான் யுதிஷ்டிரன்.  சொல்லிய வண்ணம் மான் தோலால் செய்யப்பட்டிருந்த பகடைச் சித்திரத்தை இருவருக்கும் எதிரே விரித்தான்.  பின்னர் அதில் காய்களை வைத்து ஆட்டம் ஆட ஏற்பாடுகள் செய்தான்.  திரௌபதி ஒரு புன்சிரிப்போடு கணவனுக்கு உதவினாள். “எனக்கு இந்த விளையாட்டு மிகப் பிடிக்கும்.  இது க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வீரத்துக்கு ஓர் அடையாளம்.  திறமையின் அடையாளம்.” என்றான் யுதிஷ்டிரன்.


“ஆமாம், பார்த்திருக்கிறேன்.  தந்தையும் சகோதரர்களும் விளையாடுவார்கள்.” என்றாள் திரௌபதி.  விளையாட ஆரம்பித்ததுமே யுதிஷ்டிரனிடம் தென்பட்ட மாறுதல்களைக் கண்டு வியந்தாள் திரௌபதி. அவன் முன்னர் இருந்தது போல் பற்றில்லாதவனாக, சாந்தமானவனாக, ஒரு மனச் சிந்தனை உள்ளவனாக  அவனுடைய இயல்பான தன்மையுடன் இப்போது இல்லை.  அவன் கண்கள் ஆர்வத்திலும், ஆசையிலும் பளபளத்தன.  பகடை விளையாட்டில் ஒரே கவனத்துடன் அவன் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன.  பகடையின் பாய்ச்சிகளை அவன் கைகளில் மிகவும் மென்மையாக எடுத்துக் கொண்டு ஒரு ஆர்வத்துடனும் அன்புடனும் அவற்றைப் போட்டான்.   தனக்குரிய காய்களை அதன் இடத்தில் வைக்க எடுக்கையில் பூவை எடுப்பது போன்ற மென்மையுடன் எடுத்து அவற்றை அன்போடு வருடிக் கொடுத்தான்.  அவனுக்குச் சாதகமாகக் காய்கள் விழும்போதெல்லாம் சந்தோஷம் அடைந்தவன், பாதகமாக விழுந்தால் வருத்தம் அடைந்தான்.


அவள் தந்தையோ, சகோதரர்களோ இத்தனை ஈடுபாட்டுடன் பகடை விளையாடி திரௌபதி பார்த்திருக்கவில்லை.  அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண விளையாட்டு.  அவ்வளவே. ஆனால் அவள் கணவனுக்கோ?  இது ஓர் கட்டுக்கடங்கா உணர்ச்சியாகவும், அல்லது மிகத் திறமையுடன் விளையாடும் ஓர் கௌரவமான விளையாட்டாகவும், அதன் விதிகளைக் குறித்து எவ்விதக் குற்றமும் இல்லாமல் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைக் காட்டுபவனாகவும் இருந்தான்.  இரண்டு விளையாட்டுகள் விளையாடி முடித்தனர். இரண்டிலும் யுதிஷ்டிரனே வென்றான்.  இப்போது அவன் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டான். அவள் பக்கம் திரும்பி, “திரௌபதி, உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்.  நீ எங்கள் பக்கம் நின்று எங்களை மணந்ததன் மூலம் எங்களை மிகவும் கௌரவித்து விட்டாய்.  நீ இல்லை எனில் நாங்கள் அனைவருமே மிகவும் மோசமான சங்கடங்களில் சிக்கி இருப்போம்.”


“நான் தேர்ந்தெடுக்கவில்லை ஐயா.  இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.” என்று அடக்கத்துடன் சொன்னாள் திரௌபதி.  “திரௌபதி, குருநாதர் உன்னிடம் அர்ஜுனனை மட்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது எங்கள் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறியபோது நீ எங்கள் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாய் என்றே நாங்கள் நம்பினோம்.  முக்கியமாய் நான் அப்படித்தான் நினைத்தேன்.  பின் எங்கள் முழு வாழ்க்கையும், தர்மத்திற்காக நாங்கள் நடத்தும் போராட்டங்களும், தர்மத்தின் மீது நாங்கள் எழுப்பி வந்த வாழ்க்கையும், சிதறிச் சுக்குச் சுக்காக ஆகி இருக்கும்.” என்றான் யுதிஷ்டிரன்.

Thursday, August 21, 2014

திரௌபதிக்கு வந்த சந்தேகங்கள்!

அன்று காலை அவளைச் சந்திக்க வந்த கண்ணன் இன்று ஒரு முக்கியமான, அதிசயமான சம்பவம் நடக்கப் போவதாகக் கூறினான்.  நம் அறிவுக்கு எட்டாத அவன் விசித்திரப் பேச்சில் தன் வயமிழந்த திரௌபதி  என்ன நடக்கப் போகிறதோ என யோசித்தாள்.  அவள் தன்னுடைய அனைத்து நன்முயற்சிகளையும் அந்தத் தொலைநோக்குடன் கூடிய சம்பவம் நிகழ்வதற்குக் காரணமாக அமைத்துக் கொள்ள வேண்டும் எனத்தான்   எதிர்பார்ப்பதாய்க் கிருஷ்ணன் கூறினான்.  கிருஷ்ண வாசுதேவன் அவளைப் பல வகைகளிலும் முகஸ்துதி செய்தான்.  இதன் மூலம் ஏதேனும் நன்மை கிட்டினால் அது கண்ணனின் விநோதமான திட்டமிடலின் மூலமே கிடைத்த வெற்றியாக  இருக்கும்.  மிக சாமர்த்தியமாக அவளைப் புகழ்ந்து அவன் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாலும், அவனின் இந்தப் புகழ்ச்சியான மொழிகளின் மூலம் அவள் தன்னம்பிக்கை அதிகரிக்கவே செய்தது.  சுயம்வரத்திற்கு முன்னரும், சுயம்வரத்தின் பின்னர் நடந்த நிகழ்வுகளின் போதும் அவள் தன்னம்பிக்கை அற்றவளாகவே இருந்தாள்.  இப்போது அது மீண்டும் கைவரப் பெற்றவளாக இருந்தாள்.


யுதிஷ்டிரன் உள்ளே நுழைந்தான். திரௌபதியின் இதயம் படபடவெனத் துடித்தது.  அவள் மன எழுச்சியில் அவள் இதயம் வெளியே குதித்துவிடுமோ என பயந்தவள் போலத் தன் நெஞ்சில் கையை வைத்து அழுத்திக் கொண்டாள். யுதிஷ்டிரன் அதே நிதானத்துடனும், விவேகத்துடனும், அவளைப் பார்த்து நட்பும், கனிவும் தோன்றச் சிரித்த வண்ணம் கண்களில் அவள் மேல் விசேஷமான பாசத்தையும், பிரியத்தையும் காட்டிய வண்ணம் நுழைந்தவன் அறைக் கதவைச் சார்த்தித் தாளிட்டான்.  அவன் அருகே வருவதை அறிந்த திரௌபதி எழுந்து நின்றாள்.  புதுமணப்பெண்ணுக்கே உரிய இயல்பான நாணம் அவளைக் கட்டிப் போடத் தலையும் தானாகக் குனிந்தது.  பெண்ணுக்கே உரிய இயல்பான திறமையும் மனதை அறியும் சாமர்த்தியமும் திரௌபதிக்குக் கூடுதலாகவே வாய்த்திருந்தது.  அதன் மூலம் தன் கணவனின் எண்ணங்களையும், அவன் மனதையும் ஓர் ரகசியமான ஓரப் பார்வையின் மூலம் படிக்க விரும்பினாள். அவளைப் பார்த்த யுதிஷ்டிரன் சந்தோஷமாகச் சிரித்தான்.  அவன் சிரிப்பில் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது.


“திரௌபதி, நீ சந்தோஷமாக இருக்கிறாயா?” என்றும் கேட்டான்.


கனிவுடனும், கருணையுடனும் தன்னைப் பார்த்துக் கேட்ட அவனை நிமிர்ந்து பார்த்தாள் திரௌபதி.  அவள் கண்கள் இது வரை இல்லாப் புதுமையானதொரு மென்மையைக் காட்டியதோடு அல்லாமல் அவள் தன்னம்பிக்கையும் அதிகரித்தது.  அவன் தன் கிரீடத்தைத் தலையிலிருந்து கழற்றி அதற்கென உரிய இடத்தில் வைக்கப்போனபோது தன்னையும் அறியாமல் இரண்டடிகள் முன்னே வைத்த திரௌபதி அந்தக் கிரீடத்திற்காகத் தன் கையை நீட்டினாள்.  அவள் தந்தை அவள் இருக்கையில் கிரீடத்தைக் கழற்றும்போதெல்லாம் இப்படித் தான் உதவி வந்தாள்.  இப்போது ஒரு மனைவியின் கடமையாக இதை நிறைவேற்ற முன் வந்தாள்.


சிரித்த வண்ணம் அவள் நீட்டிய கரங்களில் தன் கிரீடத்தை வைத்தான் யுதிஷ்டிரன்.  பின்னர் தன் ஆபரணங்களையும் ஒவ்வொன்றாகக் கழட்டி அவளிடம் நீட்ட அனைத்தையும் உரிய இடங்களில் வைத்தாள் திரௌபதி. அங்கிருந்த ஒரு திண்டில் சாய்ந்து உட்கார்ந்த வண்ணம், யுதிஷ்டிரன், “நீயும் உட்கார்ந்து கொள் திரௌபதி.  மிகவும் களைப்பாகக் காணப்படுகிறாய்!” என்றான்.  அவன் காலடியில் அவள் அமர்ந்தாள். அவளைப் பார்த்து, “நீ எங்களுக்குக் கிடைத்தது மிகவும் மங்களகரமானதொரு நிகழ்வு!” என முழு மனதோடு சொன்னான்.  அவன் அதைச் சொன்ன விதத்திலிருந்து அவன் உள் மனதிலிருந்து சொல்கிறான் என்பதும் புலப்பட்டது.  அவளைப் போலவே அவனுக்கும் சம்பாஷணையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புலப்படவில்லை போலும்.  சற்றுத் தயங்கினான்.  பின்னர் அவளை பார்த்து, “இன்று மாலை யார் வந்தார்கள் என்று எண்ணுகிறாய்?  ஏதேனும் தெரியுமா உனக்கு?” என்று கேட்டான். அவன் அதைக் கேட்ட விதத்தில் இருந்து அவள் மனதில் ஏதேனும் சிறு தயக்கம் இருந்தாலும் அதை நீங்கும்படி யுதிஷ்டிரன் செய்துவிட்டான்.


ஆனாலும், “எனக்குத் தெரியாது!” எனச் சிறு தயக்கத்துடனேயே சொன்னாள் திரௌபதி.  இது ஒரு விந்தையான, விசித்திரமான நிகழ்வு. அதிசயமான அனுபவம்.  நேற்று வரை இந்த மனிதன் யாரோ!  எவரோ!  இன்று?  என் கணவன்! என் பிரபு! நான் இவன் மனைவியாகி விட்டேன்.  இவன் உயிரோடு உயிராக, எலும்போடு எலும்பாக, ரத்தத்தோடு ரத்தமாக, சதையோடு சதையாக!  அதுவும் எப்போது!  புனிதமான அக்னியின் எதிரே இவனுடன் ஏழு அடிகள் கூட நடந்ததுமே நான் இவனுக்கு உரியவளாகவும், இவன் எனக்கு உரியவனாகவும் ஆகி விட்டான்.  யுதிஷ்டிரன் தொடர்ந்தான்.


“ஹஸ்தினாபுரத்திலிருந்து சித்தப்பா விதுரர் திடீரெனப் புறப்பட்டு வந்திருக்கிறார்.  இன்று மாலை இங்கு வந்து சேர்ந்தார்.  தாத்தா பீஷ்மரிடமிருந்தும் ராணிமாதா சத்யவதியிடமிருந்தும் நமக்கு ஆசிகளைச் சுமந்து வந்திருக்கிறார்.  மேலும் என் பெரிய தந்தை திருதராஷ்டிரரும் தன் பங்குக்குத் தன் ஆசிகளைத் தெரிவித்திருக்கிறார்.  அதோடு மட்டுமா? கணக்கில்லா விலை உயர்ந்த பரிசுகளும் சுமந்து வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் நம்மை ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்திருக்கின்றனர். அழைத்துச் செல்லக் காத்திருக்கின்றனர். “


யுதிஷ்டிரன் குரலில் தோன்றிய சந்தோஷம் திரௌபதியையும் தொத்திக் கொண்டது.  திரௌபதியின்  முகம் சந்தோஷத்தில் மலர்ந்து பிரகாசித்தது. அவள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.  தன் கணவனின் பாட்டனார் பீஷ்மரும், பெரிய தந்தை திருதராஷ்டிரனும் அவர்களை ஹஸ்தினாபுரத்துக்கு அழைப்பார்கள் என்பதை அவள் சிறிதும் நினைக்கக் கூட இல்லை.  அவளுக்கு இருந்த சந்தோஷத்தில் அடுத்து என்ன சொல்வது, என்ன பேசுவது எனத் தெரியாமல், ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள். “இந்த விதுரச் சித்தப்பா என்பவர் யார்?”


“ஓ, அவர் தான் குரு வம்சத்து சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரி.  ஆனால் அவர் அனைத்துக்கும் மேலே.  எல்லாவற்றிலும் சிறந்தவர்.  இப்போது உயிருடன் இருப்பவர்களிலேயே மிகவும் விவேகமும், புத்திசாலித் தனமும் கொண்டவர் அவர் ஒருவர் தான்.  அவர் எங்களுக்குத் தந்தை போன்றவர்.  துரியோதனன் நினைத்தாற்போல் நாங்கள் ஐவரும் வாரணாவதத்தில் எரிந்து சாம்பலாகவே ஆகி இருக்க வேண்டும்.  ஆனால் அது நடக்க விடவில்லை விதுரச் சித்தப்பா.  அவர் உதவி இல்லை எனில் நாங்கள் அங்கிருந்து சுரங்கப்பாதையில் தப்பித்துச் சென்றிருக்க முடியாது. இன்று உயிருடனும் இருக்க மாட்டோம்.  உனக்கு நிச்சயமாக அவரைப் பார்த்தாலே பிடித்துப் போகும்.  அவர் காந்தம் போல் அனைவரையும் தன் பக்கம் இழுத்துவிடுவார்.”


திரௌபதி புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  “விதுரச் சித்தப்பா என்ன சொன்னார் தெரியுமா?  தாத்தா பீஷ்மர் என்னை ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் அரசனாக அமர வைக்கப்போகிறாராம்.”தனக்குள் இந்தத் தகுதி இருக்கிறதா என்னும் சந்தேகம் கொண்டவன் போல இதைக் கொஞ்சம் வெட்கத்துடனேயே சொன்னான் யுதிஷ்டிரன்.  திரௌபதியின் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. அவள் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை.  சக்தி வாய்ந்த குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்தின் அரியணையில் தானும் ஒரு நாள் ராணியாக அமர்ந்து கொள்வோம் என்பதை அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  ஐந்து சகோதரர்களையும் ஒவ்வொருவராக மணந்து கொள்ளும் போது கூட இந்த நினைப்பு அவளுக்கு இருக்கவில்லை. யுதிஷ்டிரனை அவள் நிமிர்ந்து பார்த்த அதே சமயம் அவனும் அவளைப் பார்க்க இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்தனர்.  அவன் மனதில் ஒரு குறிப்பிடத் தக்க இடத்தைத் தான் பெற்றுவிட்டோம் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இருக்கவில்லை.  அவன் அன்பு தனக்குக் கிடைத்து விட்டது என்பதையும் உணர்ந்தாள்.


அவள் தன் கணவனை முதல்முறையாகத் தனியே சந்திக்க இருந்ததைக் கொஞ்சம் உள்ளார்ந்த நடுக்கத்துடனேயே எதிர்பார்த்து வந்தாள். திருமணத்திற்குப் பின்னர் வந்த நாட்களில் யுதிஷ்டிரனின் சாந்தம் நிறைந்த அமைதியான போக்கும், தன் உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்ட பாங்கும் அவளைப் பெரிதும் கவலையுறச் செய்திருந்தது.  தான் அவனுடன் சமமாக இருக்கத் தகுதியற்றவளாக இருப்போம் என்னும் உணர்வு அவளைத் தகித்துக் கொண்டிருந்தது. இப்போது அவளுக்கு அந்தக் கவலையே இல்லை.  அவளுக்குள் நிச்சயம் பிறந்து விட்டது.  அவளால் முடியும் என்று தோன்றி விட்டது.  யுதிஷ்டிரன் மிகவும் கருணையானவன், மென்மையானவன், அன்பானவன்.  இப்போது அவளுக்கு அவனிடம் எந்தக் கேள்விகளையும் கேட்கத் தயக்கமே இல்லை.  “பிரபு, உங்கள் தாத்தா அனைவரும் சொல்வது போல் மிகவும் பயங்கரமான மூர்க்க குணம் கொண்டவரா?” என்று கேட்டாள்.


“ஆம், அவர் பயங்கரமானவர் தான்.  மூர்க்கமானவர் தான்!  ஆனால் எவருக்கு?  தர்மத்தின் வழியிலிருந்து பிறழ்ந்து நடப்பவர்களுக்கு மட்டுமே! “ இதைச் சொன்ன வண்ணம் திரௌபதியின் கண்களுக்குள்ளே பார்த்தவன்,”உனக்கு அவரிடம் எந்த பயமும் இல்லாமல் பழக முடியும் திரௌபதி. கவலை வேண்டாம்.”  என்றான்.


“உங்களுக்கு ஒரு பாட்டியாரும் இருக்கின்றனர் அல்லவா?  அனைவருமே அவரை ராணிமாதா என அழைப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  நம்முடைய இந்த விசித்திரமான கல்யாணத்தை அவர்கள் அங்கீகரிப்பார்களா?  நம்முடன் அன்பாகப் பழகுவார்களா? நம்மை ஏற்றுக் கொள்வார்களா?”



Wednesday, August 20, 2014

திரௌபதியின் கலக்கம்!

பௌஷ மாதத்தின் முடிவு நாட்கள்.  இன்னும் குளிர்காலம் மீதம் இருந்தது. குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது.  பாஞ்சால நாட்டின் காம்பில்யத்தில் குளிர் அதிகமாகவே தெரிந்தது.  அதன் ஓர் அரண்மனையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தன் படுக்கை அறையில் பாஞ்சால மன்னன் துருபதனின் அழகு மகள் திரௌபதி நன்றாக அலங்கரிக்கப்பட்டுத் தன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.  தன் அழகிய மோவாய்க்கட்டையைக் கைளால் தாங்கிக் கொண்டிருந்தாள்.  அவள் அந்த அறையில் தன் கணவன் குரு வம்சத்து இளவரசன் ஆன யுதிஷ்டிரனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.  கருத்த நிறத்தால் கிருஷ்ணா என அழைக்கப்பட்ட திரௌபதி நல்ல உயரமாகவும் பெண்மையின் எழில் பரிபூரணமாக அமையப் பெற்றும் விசாலமான பேசும் விழிகளோடும்,  அழகான வடிவமைப்புடன் கூடிய மோவாய் அவள் மன உறுதியைக் காட்டும் விதமாகவும் இருந்தாள்.


தன்னுடைய முதல் இரவில் ஒரு இளவரசி தன் கணவனை முதல் முதலாகச் சந்திக்கையில் எப்படி அலங்கரிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.  அவள் உச்சந்தலையில் பின்னல்களிடையே பதிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வைர நகையின் ஒளி கண்ணைக் கூசியது.  கழுத்திலும், காதுகளிலும் தங்கமும், கற்களும் சேர்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்திருந்தாள்.  அந்த அறையில் ஏற்றப்பட்டிருந்த பல்வேறு தீபங்களின் ஒளியில் அவற்றின் பிரகாசம் பலமடங்கு அதிகரித்துக் காணப்பட்டது.   அவளுடைய திறந்த தோள்களின் மேல் முழுதும் தங்க இழைகளால் நெய்யப்பட்டதொரு சால்வையை அவள் போர்த்தி இருந்தாள்.  ஓர் ஓரத்தில் நெருப்பு மூட்டப்பட்டு சந்தனக் கட்டைகள் எரிந்து சுகந்தமான மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.  மான் தோலால் செய்யப்பட்ட பகடை  விளையாட்டுச் சாதனம் அவள் எதிரே இருந்தது.  அவள் அருகே  நான்கு விதமான காய்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், செம்பு ஆகியவற்றால் செய்தவை  ஒவ்வொன்றிலும் நான்கு காய்கள் காணப்பட்டன.  இன்னொரு பக்கம் பகடை விளையாடப் பயன்படுத்தும் பாய்ச்சிக்காய்கள் (தாயக்கட்டைகள் போன்றவை) தந்தத்தால் செய்யப்பட்டவை இருந்தன.  முதல் இரவன்று கணவனை முதல் முதல் சந்திக்கையில் மங்களகரமாகப்பகடை விளையாடி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவர்கள் வழக்கமாக இருந்தது.


தன் கண்களை வாசல் நிலையிலேயே வைத்துக் கொண்டு கணவனுக்குக் காத்திருந்த திரௌபதி தன்னை ஐவருக்கும் மனைவியாக ஆக்கிய அந்தப் பொல்லாத விசித்திரமான, வித்தியாசமான விதியை நினைத்துக் கொண்டு பழைய சம்பவங்களை மீண்டும் நினைவு கூர்ந்தாள்.  பல நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் முன்னர் அவள் தந்தை துரோணரால் சிறிதும் வெட்கமில்லாமல் ஒரு சிறைக்கைதியாகப் பிடிபட்டு அவர் வாழ்க்கையே அதனால் சீர்குலைந்தது.  குரு வம்சத்து ஆசாரியரான துரோணர் ஒரு காலத்தில் தந்தையின் பால்ய நண்பர்.  தந்தையின் இந்தப் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். அப்போது தான் அவள் தந்தை இந்தத் தவற்றைச் சரிசெய்து தான் அடைந்த அவமானத்துக்குப் பழி தீர்த்துக்கொள்ள சபதம் எடுத்தார்.


முதலில் அவள் தந்தை அவளைக் கிருஷ்ணனுக்குத் தான் கொடுக்கவிருந்தார்.  துவாரகையின் பிரபல யாதவத் தலைவன் ஆன கிருஷ்ண வாசுதேவன் ஆரிய வர்த்தத்தின் கதாநாயகனாகவும், மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தவனாகவும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியவனாகவும் பேசப்பட்டான்.  ஆனால் அவனோ காம்பில்யம் வந்து தந்தையைச் சந்தித்துப் பேசியும் மிகவும் மரியாதையுடன் தனக்களிக்கப்பட்ட திரௌபதியை மறுத்துவிட்டான். ஆனால் எப்போதும் தந்தைக்கு உதவியாக அவர் பக்கமே நிற்பதாக வாக்களித்தான்.  ஆரிய வர்த்தத்து அரசர்களுக்குள்ளே மிகவும் பிரபலமாக இருந்த சுயம்வர முறைத் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யும்படி அவன் தான் அவள் தந்தையிடம் கூறினான்.  உண்மையில் கிருஷ்ணன் ஓர் பேரதிசயத்தையே நிகழ்த்திக் காட்டினான்.  ஆரிய வர்த்தம் மட்டுமின்றி மற்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பேரரசர்களின் மத்தியில் அவள் தந்தையின் அரச பதவிக்கும், அவருக்கும் மிகவும் மதிப்புக் கூடி உயர்ந்ததொரு நிலையை அவள் தந்தை அடைந்தார்.


வல்லமை மிக்க மகதச் சக்கரவர்த்தியான ஜராசந்தன் கூட அவளைத் தக்க பேரங்களின் மூலமோ அல்லது வலுக்கட்டாயமாய்த் தூக்கிச் சென்றோ அவன் மகன் வயிற்றுப் பேரன் மேகசந்திக்கு மணமுடிக்க எண்ணிக் காம்பில்யம் வந்திருந்தான்.  ஆனால் அவன் தன் நோக்கத்தில் தோற்றுப் போனான்.  தோற்க வைத்தவன் கிருஷ்ண வாசுதேவன்.  ஜராசந்தன் அவனால் முடிந்தவரை பெருந்தன்மையாக இருப்பதாய்க் காட்டிவிட்டு சுயம்வரத்திலிருந்தே வெளியேறிவிட்டான்.  மோசமான பொல்லாத யுவராஜாவான ஹஸ்தினாபுரத்து துரியோதனன் அவளைப் போட்டியில் வெல்ல நினைத்துக் கடைசியில் தோற்றுப் போனான்.  அனைவரின் வியப்புக்கும் ஆச்சரியத்திற்கும் நடுவே இந்த ஐந்து சகோதரர்கள் எங்கிருந்தோ தோன்றினார்கள்.  பாண்டுவின் புத்திரர்களான இவர்கள் வாரணாவதத்தில் உயிருடன் எரிந்து சாம்பல் ஆனதாகச் சொல்லிக் கொண்டிருந்தனர் அனைவரும்.  இதைச் செய்தவன் துரியோதனன் தான் என்பதும் அனைவரும் காதோடு பேசிக் கொண்ட ஓர் ரகசியம்.  அவர்கள் இந்த சுயம்வரத்தில் உயிர்த்தெழுந்து விட்டனர்.  அவர்களில் மூன்றாவதான அர்ஜுனன், மிகச் சிறந்த வில்லாளி, ஆர்யவர்த்தத்தின் தேர்ந்த வீரன் அவளைப் போட்டியில் வென்று விட்டான்.   அதன் பின்னர் குந்தியின் சில வார்த்தைகள் விளைவித்த விளைவாக அவள் ஐவரையும் மணக்க நேரிட்டது.  அவளைப் போன்ற சிறந்ததொரு சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசியின் தகுதிக்கு மாறாக அவள் ஐவரை மணந்தது விசித்திரமான விதியின் விளையாட்டில்லாமல் வேறென்ன!  அது ஒரு மோசமான பொல்லாத கொடுங்கனவு போன்ற சம்பவம்.


அனைவராலும் “சுவாமி” என்றும், “ஆசாரியரே” என்றும், “குருவே” என்றும் அழைக்கப்படும் வேத வியாசர் அனைவரின் ஆர்வத்தையும் அதிகரிக்கும் வண்ணம் அப்போது காம்பில்யத்துக்கு விஜயம் செய்தார்.  அவர் வந்தது அவள் சுயம்வரத்தின் மறுநாள்.  அவர் மூலமே ஆர்யவர்த்தத்தில் இப்படி ஒரு பழைமையான வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது.  சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரே பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனின் சகோதரர்களையும் சேர்த்து மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதே அது.  ஆனால் அவர் இதை அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். அனைவரையும் மணந்து கொள்ளலாம் அல்லது அர்ஜுனனை மட்டுமே மணக்கலாம்.  இது அவள் விருப்பம் என்றார்.  அவர் வார்த்தைகளினால் ஊக்கம் பெற்று  அவள் ஐவரையும் மணக்கலாம் என முடிவு செய்தாள்.  கிருஷ்ண வாசுதேவன், அவள் அன்புடன் கோவிந்தா என அழைப்பாள்; அவன் தன் வாழ்க்கையை தர்மத்தின் வழி செல்வதற்கென அர்ப்பணித்திருக்கிறான்.  அவன் அவளைத் தன் சொந்த சகோதரியாக ஏற்றிருக்கிறான்.  அந்தக் கிருஷ்ண வாசுதேவன் அவளையும் இந்த நீண்ட நெடும் பயணத்தில் தன் பக்கம் நின்று தனக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டான்.  தான் இவர்கள் ஐவரையும் மணப்பதன் மூலம் அவனுடைய அறப் போராட்டத்துக்குத் தான் உதவி செய்ய முடியும் என்னும் எண்ணமும் அவளுள் இருந்தது.


திருமணத்திற்குப் பிந்தைய பதினைந்து நாட்கள் நடந்த சடங்குகளின் போதெல்லாம் அவ்வப்போது தனக்கு ஏற்பட்ட ஐந்து கணவர்களை நினைத்து நினைத்து அவள் மனம் ஒடுங்கிக் குன்றிப் போகும்.  அந்த நினைவு இல்லாத போதெல்லாம் அவள் மகிழ்வுடனேயே காணப்பட்டாள். அதிலும் அவள் மாமியாராக வாய்த்த குந்தி மிகவும் புரிதல் உள்ளவளாக, கருணையுள்ளவளாக, பொறுமையுடனும் அக்கறையுடனும் அவளைப் பார்த்துக்கொள்பவளாக இவ்வளவு நாட்களாக அவள் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு தாயாக இருந்தாள்.  பல விதங்களிலும் அவளைத் தேற்றினாள்.  அவளுடைய ஐந்து மகன்களுமே மிகவும் நல்லவர்கள் என்றும் புரிதல் உள்ளவர்கள் என்றும் இத்தகையதொரு அசாதாரணக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டது குறித்து அவள் வருந்தும்படி நேரிடாது என்றும் தெரிவித்தாள்.  ஆனாலும் திரௌபதிக்குத் தான் ஐவரையும் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.  அந்த நினைப்பே அவளுக்கு நடுக்கத்தைத் தந்தது.


அனைவரிலும் மூத்தவனான யுதிஷ்டிரன் மிகவும் இளமையாகவும், அழகான தோற்றத்துடனும் அதே சமயம் தன் கௌரவம், மதிப்பு ஆகியன தெரியும்படியாகவும் இருந்தான்.  அனைவரையும் பார்த்தால் நட்புடன் சிரித்தான்.  அவன் மிகவும் புத்திசாலி என்பதும், புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவன் என்பதும் அவன் சிரிக்கும் கண்கள் எடுத்துக் காட்டியது.  அவன் எதிரே பேசும்போது நம்மால் எந்த விஷயத்தையும் மறைக்க முடியாது என்றும், அவனிடம் வெளிப்படையாகவே பேசியாக வேண்டும் என்பதும் புரிந்தது.  அவனும் அப்படியே வெளிப்படையாகத் திறந்த மனதோடு பேசினான். ஆனாலும் அவளுக்கு இப்போது இங்கிருந்து ஓடிப் போகவேண்டும்போல் இருந்தது.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், நான்காம் பாகம்

சென்ற அத்தியாயத்துடன் மூன்றாம் பாகம் முடிவடைந்தது.  பின்னுரையில் சத்யவதியின் கருத்துக்களைக் கேட்டதோடு முடிவடைந்திருக்கிறது. நான்காம் பாகம் சத்யபாமாவின் கதை எனத் தவறாகப் பார்த்து இருக்கிறேன்.  அது ஐந்தாம் பாகம்.  நான்காம் பாகமும் ஐந்து சகோதரர்களின் திருமண வாழ்க்கை குறித்தும் கௌரவர்களை அவர்கள் சந்திக்கையில் ஏற்படும் விளைவுகளுமே வரும். இவற்றில் பீமன் முக்கிய பங்கு வகிப்பான். வழக்கம் போல் கண்ணனும் வருவான். கண்ணன் இல்லாமல் கதையா? அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.  நன்றி வணக்கம்.  திரு கே.எம். முன்ஷி அவர்கள் எழுதியது என்பதை நினைவில் கொண்டு அனைவரும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  கூடியவரையில் அவர் சொல்லி இருக்கும் தர்க்கரீதியான எண்ணங்களை இந்தத் தொகுப்புக்களின் மூலம் கொண்டு வர முயன்றிருக்கிறேன்.  ஆங்காங்கே தேவையான இடங்களில் சில சேர்க்கைகள், வர்ணனைகள் என்னால் சேர்க்கப்பட்டிருக்கும்.  கர்ணனின் முன் கதை, ஜராசந்தனின் கதை, திரௌபதியின் கதை போன்றவை அதில் அடக்கம். இனி நான்காம்பாகம் தொடரும். 

Tuesday, August 19, 2014

சத்யவதி சொன்ன நீண்ட நெடிய கதை!

மிகவும் வருத்தத்தில் சத்யவதி இருப்பது அவள் குரலில் இருந்து தெரிந்தது.  “நான் சொல்வதை நன்கு கவனித்துக் கேள் குழந்தாய்!  நீ எப்போது ஹஸ்தினாபுரத்தின் சிங்காதன உரிமை குறித்துப் பேச ஆரம்பித்து விட்டாயோ அப்போதே நீ இதைத் தெரிந்து கொண்டாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.  இந்தச் சிங்காதனம் நிலைபெற்று நிற்கப் பாடுபட்டவர்களின் கதையைக் கேள்! இது கட்டப்பட்டு நிலைபெற்ற விதம் குறித்துத் தெரிந்து கொள்! இது பல வருடங்கள் முந்தைய மிகப் பழைமையானதொரு கதை!”  சத்யவதி மீண்டும் அந்த நாட்களுக்குள் சென்று விட்டாள் என நினைக்கும்படி தன் கண்களை மூடிக் கொண்டாள்.  உண்மையிலேயே அவள் மனதுக்குள்ளாகப் பழைய சம்பவங்கள் திரும்ப ஒருமுறை வந்து தோன்றி மறைந்தன.  அரைக்கண்களை மூடியவண்ணம் கடந்த காலத்தின் சம்பவங்கள் கண்ணெதிரே தோன்ற அவள் பேச ஆரம்பித்தாள்.


 “என் பிரபு, என் உயிரினுமினிய என் கணவர் தன் கடைசிக்காலத்தில் என்னைத் தன்னருகே அழைத்தார். மகனே, உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் நான் ஒரு மீனவப் பெண் என்றும், என் பிரபு என்னை மணந்து கொண்டதன் மூலம் ஒரு உயர்ந்த இடத்தில் என்னை அமர வைத்தார் என்பதையும் நீ அறிந்திருப்பாய்.  பரதன் ஆட்சி செய்த ஆர்யவர்த்தத்தின் மிகச் சிறந்த இந்த ராஜ்யத்தின் சிங்காதனத்தில் பட்டமகிஷியாக நான் வீற்றிருந்தேன்.  என்னை அழைத்து அவர் கூறியது:” தேவி, நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.  என் தந்தை சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி பிரதிபாவிடமிருந்து இந்த தர்ம சிங்காதனம் எனக்கு உரிமையானது. அப்போதிலிருந்து நான் ஒருக்காலும் தர்மத்தைக் கைவிட்டதில்லை.  இதன் பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து வந்துள்ளேன். ஆனால், தேவி, இப்போது இது மிகப் பெரிய அபாய கட்டத்தில் உள்ளது.  பீஷ்மன் என்னும் பெயர் பெற்ற தேவவிரதன் தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்னும் கடுமையான சபதம் செய்துள்ளான் என்பதை நீ அறிவாய்.  அவன் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இந்தச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யப்போவதில்லை.  உன் மகன்களோ மிகச் சிறியவர்களாக இருக்கின்றனர்.  ஆகவே இந்த சாம்ராஜ்யத்தின் மாபெரும் சுமையை உன் தோள்களில் சுமத்திவிட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “


இந்த இடத்தில் சற்று நிறுத்தித் தன் தொண்டையைச் சரிபண்ணிக் கொண்ட சத்யவதி மீண்டும் பேச ஆரம்பித்தபோது கனவுலகில் தான் கண்டதொரு தோற்றத்தைக் குறித்துப் பேசுபவள் போல் காட்சி அளித்தாள்.”என் பிரபு என் இருகைகளையும் இறுகப் பிடித்துக்கொண்டார்:” சத்தியம் செய் தேவி, குரு வம்சத்தினரின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதாகச் சத்தியம் செய்.  இதற்கு முன்னர் இல்லாத வகையில் நேர்மையையும், நீதியையும் அவர்கள் கடைப்பிடித்து ஆட்சி புரிந்து வந்தார்கள். ஏழைகளைக் கைவிட்டதில்லை.  உதவி கேட்டு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்பியதில்லை. கற்றறிந்த பண்டிதர்களும் சரி, தெய்வபக்தி நிரம்பிய மனிதர்களும் சரி அவர்களின் எல்லாத் தேவைகளும்  நிறைவேற்றப்பட்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.  வேதம் கற்ற பிராமணர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்து வருகின்றனர்.  பசுக்கள் பாலைப் பொழிகின்றன.  பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கிடைத்து வருகிறது.  விவசாயிகள் தங்கள் விவசாயத்தின் பலனை நன்கு அனுபவித்து வருகின்றனர். வலிமையுள்ளவன், வலிமையற்றவனைத் தாக்குவதில்லை.  எங்கேயானும் வன்முறை நிகழ்ந்தால் படை வீரர்கள் தலையிட்டு அதை அடக்குகின்றனர்; அமைதியை நிலைநாட்டுகின்றனர். நாட்டை வளப்படுத்த வேண்டியே வரிகளும் சிற்றரசர்களிடமிருந்து கப்பங்களும் வசூலிக்கப்பட்டன.  இப்படி ஒரு நல்லாட்சியைத் தான் இன்று வரையிலும் குரு வம்சத்தினர் இந்த உலகுக்கு அளித்து வந்திருக்கின்றனர்.  குரு வம்சம் என்பது என்னைப் பெருமிதம் கொள்ளவும் வைக்கிறது.  எனக்கு இவற்றை எல்லாம் அழியாமல் காப்பாற்றுவேன் எனச் சத்தியம் செய் தேவி!  குரு வம்சத்தினரின் இந்த நீண்ட நெடிய பாரம்பரியம் காப்பாற்றப்படும் எனச் சத்தியம் செய்!”


மிக மிக மெதுவாக ரகசியம் பேசும் குரலில் பழையனவற்றை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்த சத்யவதியின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது.  கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அடைத்த தன் தொண்டையைச் சரிபடுத்திக் கொண்டு, “நான் என் பிரபுவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன்.  அதன் பின்னரே அவர் சந்தோஷமாகத் தன் உயிரை விட்டார்.”  என்றாள்.  மீண்டும் அவள் கண்களில் இருந்து பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவள் சற்று நேரம் மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.  பின்னர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்ணீரையும் துடைத்த வண்ணம் மீண்டும் பேச ஆரம்பித்தாள்:” குழந்தாய், துரியோதனா, அன்றிலிருந்து நான் சிறகொடிந்த பறவையாக பலவீனமானவளாக ஆகிவிட்டேன்.  ஆனாலும் பல வருடங்கள் முன்னர் நான் சத்தியம் செய்து கொடுத்த அன்றிலிருந்து அந்தச் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியே நான் உயிருடன் இருக்கிறேன்.  எனக்கு ஒன்றே ஒன்று தான் லக்ஷியம்.  என் பிரபு மிகவும் மாட்சிமையுடனும், புகழுடனும் அமர்ந்திருந்த அந்தக் குருவம்சத்து சிங்காதனத்தில் அடுத்து அமர்பவர் யாராக இருந்தாலும், நேர்மையையும், நீதியையும் கடைப்பிடித்துப் பாரம்பரியத்துக்குப் புகழ் சேர்ப்பவராக இருத்தல் வேண்டும்.”


மீண்டும் நிறுத்தினாள் சத்யவதி.  மிக அழகாகக் கோர்வையாகக் கேட்பவர் மனம் உருகும் வண்ணம் சொல்லிக் கொண்டு வந்த சத்யவதியின் இந்தக் கதையை துரியோதனன் மிகவும் ஆவலுடன் கேட்டு வந்தான்.  சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் சத்யவதி தொடர்ந்தாள்:  “குழந்தாய், நீ இப்போது முன்னை விட வலுப்பெற்ற ஹஸ்தினாபுரத்தையே பார்க்கிறாய்.  ஆகவே அதை ஆட்சி செய்யவும் எண்ணுகிறாய்.  ஆனால் பீஷ்மனுக்கும், எனக்கும் இதைக் கட்டிக்காக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது என்பதை நீ அறிவாயா?  இதற்காக நாங்கள் கொடுத்த விலையை நீ அறிவாயா? “மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் சத்யவதி.  அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.  பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்ற அவள் நினைவில் அவள் எதிரே துரியோதனன் இருப்பதை மறந்தவள் போல் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேச ஆரம்பித்தாள்.  “பீஷ்மன் சிங்காதனத்தை ஏற்க மறுத்துவிட்டான்.  நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்த்துவிட்டேன்.  அவனைத் திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தினேன்.  ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.  என் மகன்களோ மிகச் சிறு வயதிலேயே திருமணம் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டனர்.  துரியோதனா, நீ உன்னை பரதனின் நேரடி வாரிசு எனச் சொல்லிக் கொள்கிறாய் அல்லவா? இதைக் கேள்!”


“என் குழந்தாய், பரதனின் நேரடி வாரிசு உன் கொள்ளுப்பாட்டனோடு முடிந்துவிட்டது.  அதற்குப் பின்னர் இறந்த என் மகன்கள் பரதனின் நேரடி வாரிசாக இருந்தாலும் அவர்களும் உயிருடன் இல்லை.  அவர்களுடன் எல்லாமும் முடிந்துவிட்டது.  பீஷ்மனோ திருமணத்துக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தான். ஆகவே மகனே, பாண்டுவின் புத்திரர்களுக்கு வாரிசுரிமை இல்லை என நீ எப்படிச் சொல்கிறாயோ அப்படியே உனக்கும் இல்லை.  அவர்களுக்கு இருந்தால் உனக்கும் வாரிசுரிமை உண்டு.  நீ எப்படித் தகுதி வாய்ந்தவன் என நினைக்கிறாயோ அப்படியே அவர்களும் தகுதி வாய்ந்தவர்களே!  நீயோ உன் சகோதரர்களோ அல்லது பாண்டவர்களோ எவருமே பரத குலத்தின் நேரடி வாரிசு இல்லை.”


துரியோதனனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  ஆச்சரியமும், அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்தான்.  சத்யவதியின் நடுங்கும் குரலை ஊன்றிக் கவனித்து எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டான்.  இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ என்னும் அதிர்ச்சியில் காத்திருந்தான்.  மனதை உருக வைக்கும் சோகம் அந்தக் குரலில் ததும்பி இருப்பதையும் கவனித்தான்.  சத்யவதி தொடர்ந்தாள். “குழந்தாய்!  எப்படி ஆனாலும் நான் என் பிரபுவுக்குக் கொடுத்த சத்தியத்தை மீறக் கூடாது என உறுதி பூண்டிருந்தேன்.  அதில் திடமாகவும் இருந்தேன்.  ஆகவே நான் என் மகன் கிருஷ்ண த்வைபாயனனை அழைத்தேன்.  நீங்கள் அனைவரும் இப்போது குரு என அழைக்கின்றீர்களே அந்த வியாசன் என் மகன்.  அவனை அழைத்து நியோக முறையில் என் மகன் விசித்திரவீர்யனின் இரு மனைவிகளுக்கும் பிள்ளைப்பேறு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.  குழந்தாய், வியாசனின் மூலமே உன் தந்தையும், பாண்டுவும் பிறந்தனர்.  வியாசன் தான் அவர்களின் உண்மையான தகப்பன். நான் இந்த ரகசியம் அரண்மனையின் மிகச் சிலரோடு முடிவடைய வேண்டும் என நினைத்தேன்.  அப்படியே பார்த்துக் கொண்டேன். உங்கள் அனைவரையுமே  முறைகேடாகப்பிறந்தவனின் குழந்தைகள் என யாரும் அழைக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினேன். இது வெளியே தெரிந்தால் ஆர்யவர்த்தம் மட்டுமல்ல, இங்கே அரண்மனையிலும் குரு வம்சத்திலும் உட்பகை பெரிதாகி சர்வ நாசத்தை உண்டு பண்ணும் என நினைத்தேன்.  பின்னர் இந்த சாம்ராஜ்யமே அழிந்துவிடும் என எண்ணினேன்.”


இப்போது துரியோதனன் ஏதோ பேச விரும்பித் தன் வாயைத் திறந்தான்.  ஆனால் சத்யவதி தன் கைகளைத் தூக்கி அவனைத் தடுத்தாள்.  பெருகிய கண்ணீரைத் துடைத்த வண்ணம், “ உன் தந்தை மூத்தவன் தான்.  ஆனால் அவன் குருடனாகப்பிறந்துவிட்டான்.  ஆகவே ஒரு குருடனை அரசனாக்க முடியாது என்பதால் அவன் அரியணைக்கு உரியவனாக இல்லாமல் போய்விட்டான்.  நம் ஆரியர்களின் சட்டதிட்டப்படி உன் தந்தையின் மகனான உனக்கும் அந்த உரிமை கிடையாது. கொடுக்க முடியாது. மிகவும் நன்கு ஆலோசித்தே பின்னர் பாண்டுவை இந்த சாம்ராஜ்யத்தின் மன்னனாக்கினோம்.  ஆனால் அவனுக்கும் சாபத்தின் காரணத்தால் எந்தக் குழந்தையையும் இரு மனைவிகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.  ஆனால் என் சத்தியம்?  என் வாக்குறுதி?  என் பிரபுவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் என்னாவது?  க்ருஷ்ண த்வைபாயனனைக் கலந்து ஆலோசித்தேன்.  குந்தியை நியோக முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதித்தேன். அதற்குப் பாண்டுவும் சம்மதம் கொடுத்தான்.  அதன் பேரில் குந்தி பழையகால முறைப்படி பாண்டுவை நினைத்த வண்ணம் மூன்று குழந்தைகளைப் பெற்றாள்.  அதன் பின்னர் மாத்ரிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு அவள் இரட்டையர்களைப் பெற்றாள். துரியோதனா! நீ காட்டுமிராண்டி போல் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறாய்.  பாண்டவர்கள் ஐவருக்கும் இந்த சிங்காதனத்தில் உரிமை இல்லை என்றால் உனக்கும் இல்லை; நீ அதைப் புரிந்து கொள் முதலில்.  புரிந்து கொள்ள மறுக்கிறாய்! உங்கள் அனைவருக்கும் இந்த சிங்காதனத்தில் உரிமை உண்டெனில் அது என்னால் தான்!  குற்றம் செய்த என்னால் தான்! அதையும் புரிந்து கொள்!”


இப்போது கொஞ்சம் நிதானத்துக்கு வந்துவிட்ட சத்யவதி தன் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு நடுங்காத தெளிவான குரலில் மீண்டும் தொடர்ந்தாள்.  “நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் கேள்! நான் வயதானவள் தான்.  பலவீனமானவளும் கூட.  ஆனாலும் என் கணவன் எனக்குச் சொன்னபடியே இந்தக் குரு வம்சத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் வேலையைத் தான் செய்யப் போகிறேன். என் பிரபு என்னிடம் கேட்டது இதைத் தான்.  அதை நான் அவருக்காகக் கட்டாயமாய்ச் செய்வேன்.”


சத்யவதி தன் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள்.  அழகிய அவள் தலையில் வெண்ணிற முடியை எடுத்துக் கட்டி இருந்த விதமே ஒரு கிரீடம் போல் காட்சி அளித்தது.  எத்தனை வயதானாலும் அவள் இன்னமும் ராணிதான் என்பதை அந்தக் கிரீடமும், துரியோதனனை அவள் பார்த்த கம்பீரமான பார்வையும் காட்டிக் கொடுத்தது.  “துரியோதனா!  உன் இந்த வயதில் கூட குரு வம்சமும், இந்த சாம்ராஜ்யமும், ஹஸ்தினாபுரமும் ஆரியவர்த்தத்தில் எத்தகைய பெயரைப் பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? ஆர்யவர்த்தம் முழுமைக்கும் ஹஸ்தினாபுரம் என்றால் என்ன நினைவு வரும் என்பது தெரியுமா உனக்கு?  தர்மத்தின் ஆட்சி!  அது தான் குரு வம்சம்.  ஹஸ்தினாபுரம் என்பதன் அர்த்தம். இந்த மக்களுக்கு இது எத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை அறிவாயா?”


துரியோதனன் நிமிர்ந்தே பார்க்கவில்லை.  கடலில் முழுகிக் கொண்டிருப்பவன் கடைசியாகக் கிடைத்த சின்னஞ்சிறு மரப்பலகையைக் கூடக் கைவிட்டு விட்ட நிலையில் இருந்தான் அவன்.  இந்த சாம்ராஜ்யக் கடலில் மூழ்கி நீந்திக் கையும் மனமும், உடலும் களைத்துச் சோர்ந்துவிட்டது அவனுக்கு.  இனி என்ன?  அவன் கடைசித் துருப்புச் சீட்டும் அவன் கையிலிருந்து நழுவி விட்டது. சத்யவதி மீண்டும் பேச ஆரம்பித்தாள்:” குழந்தாய், உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.  நீ உன்னுடைய நல்லதையும், கெட்டதையும் குறித்து நினைக்கையிலும், சரியானதையும், தவறானதையும் நினைக்கையிலும், இந்த வயதான கிழவியை நினைவு கூர்!  இந்த சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காக்க அவள் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்! சக்ரவர்த்தி பரதனின் நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் காப்பாய் என உன்னை நம்பிய இந்தக் கிழவியை மறக்காதே!”  மிகவும் இரக்கமாகக் கேட்டாள் சத்யவதி.


தன் வார்த்தைகளின் தாக்கத்தைத் தானே தாங்க முடியாமல் மீண்டும் கண்ணீர்  வடிக்க ஆரம்பித்தாள் சத்யவதி.  தன் கண்களைத் தன் கைகளால் மூடிக் கொண்டாள். அப்படியும் பெருகிய கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.  துரியோதனனுக்கோப் பேச்சே வரவில்லை.  இருவருமே சற்று நேரம் எதுவும் பேசமுடியாமல் இருந்தனர்.  பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்ட சத்யவதி, “துரியோதனா!  நானோ, பீஷ்மனோ அல்லது மற்ற யாருமோ உனக்கோ, பாண்டுவின் புத்திரர்களுக்கோ அநீதி செய்ய விரும்பவில்லை. அது எங்கள் எண்ணமும் இல்லை.  ஆனால் இங்கு யாருமே உங்கள் தந்தையின் பிறப்பையோ உங்கள் பிறப்பையோ கொச்சைப் படுத்த விரும்பவில்லை.  ஏனெனில் உங்கள் தந்தைமார்களின் பிறப்பு ஆரியர்களின் பழைமையான சடங்குகளையும், சட்டங்களையும் நீதியையும், விதிகளையும் கவனித்துக் கொண்டே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே நீ அதில் அவமானம் அடைய வேண்டாம்.”



“தர்மத்தின் எதிர்காலத்தைக் குறித்து நினைக்க ஆரம்பிப்பாய் துரியோதனா! ஹஸ்தினாபுரத்தின் அரசர்கள் எவரானாலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதிலேயே வல்லவர்களாக இருந்தனர்.  அதுவே அவர்களின் சபதமாகவும் இருந்து வந்தது.  பீஷ்மனும், நானும் உன்னை யுவராஜா பதவியில் இருந்து விலக்க விரும்பவில்லை.  நீ தொடர்ந்து யுவராஜாவாகவே இருந்து வருவாய்.  யுதிஷ்டிரன் அரசனாக அரியணையில் அமரட்டும். அவன் உன்னை விட மூத்தவன்.  ஐந்து சகோதரர்களும் பாண்டுவின் புத்திரர்களாக இப்போது மருமகள் திரௌபதியுடன் ஹஸ்தினாபுரத்தில் பிரமாண்டமான வரவேற்பைப் பெறுவார்கள்.  வெறுப்பு உன்னை ஆளும்படியான நிலையில் நீ இருக்காதே! உன் கனவுகளை அந்த வெறுப்பு அழித்து ஒழித்துவிடும்.  எல்லாம் வல்ல மஹாதேவன் உங்கள் அனைவருக்கிடையிலும் எவ்விதமான சண்டையோ, சச்சரவுகளோ இல்லாமல் அமைதியைக் கொடுத்து உங்கள் அனைவரையும் காப்பாற்றட்டும்.  பெருந்தன்மையைக் கடைப்பிடி துரியோதனா! குரு வம்சமும் இந்த சாம்ராஜ்யமும் வளத்துடனும், புகழுடனும் இருக்க உதவி செய்.  இதுவே உன் லக்ஷியமாக இருக்கட்டும்.  சென்றுவா குழந்தாய்!” துரியோதனன் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் மேற்கண்டவாறு கூறிவிட்டு உள்ளே சென்றாள் சத்யவதி.


Monday, August 18, 2014

சத்யவதி மனம் திறக்கிறாள்!

வார்த்தைகள் வரமுடியாமல் தொண்டையை அடைத்துக்கொள்ள, துரியோதனன் மேலும் தடுமாறிய வண்ணம் பேச ஆரம்பித்தான். “இப்போது அனைவருமே எனக்கு எதிரிகளாகிவிட்டனர் பாட்டியம்மா.  தாத்தா பீஷ்மர் விதுரச் சித்தப்பாவை காம்பில்யத்துக்கு அனுப்பி பாண்டவர்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.  என் சொந்த குருநாதர், என் அத்தியந்த சிநேகிதர் என நான் நினைத்துக் கொண்டிருந்த துரோணாசாரியரோ, பாண்டவர்களையே ஆதரிக்கிறார்.  அவருக்கு நான் என் குருகுல காலம் முழுவதும் தகுந்த சேவைகளைச் செய்து வந்திருக்கிறேன்.  தந்தையும் பாண்டவர்களை வரவேற்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.  இங்கே எவருக்கும் நான் முக்கியம் அல்ல; என்னுடைய தேவை எவருக்கும் வேண்டாம்.” பொருமினான் துரியோதனன்.  “ஏன் அப்படிச் சொல்கிறாய், குழந்தாய்?  இப்படி எல்லாம் பேசாதே!  பாண்டவர்கள் எனக்கு எத்தனை அருமையானவர்களோ அப்படியே நீயும், உன் சகோதரர்களும் எனக்கு அருமையானவர்களே!  உன் வாழ்க்கையே ஏமாற்றத்தில் கழிவதாக நீ நினைப்பது எனக்குத் தெரியும். ஆனால் உன்னுடைய இந்த மோசமான சுபாவமே இதற்குக் காரணம் என்பதை நீ அறியவோ, புரிந்து கொள்ளவோ மறுக்கிறாய், குழந்தாய்! அதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்?” சாவதானமாக, நிதானமாகத் தன் குரலின் கனிவு மாறாமல் கேட்டாள் சத்யவதி.


துரியோதனன் தன் கைகளைக் கூப்பி சத்யவதியை வணங்கினான்.  “மாட்சிமை பொருந்திய ராணிமாதா, தயவு செய்து தாங்கள் இப்போது என்னைக் காப்பாற்று ரக்ஷிக்க வாருங்கள்.  இந்தக் குரு வம்சத்தினரின் மாபெரும் சாம்ராஜ்யத்துக்குக் காவல் தேவதையாகவும், ஆலோசனைகளை அளிக்கும் முக்கியமான நபராகவும் தாங்கள் தான் செயல்படுகிறீர்கள்.  நீங்கள் இல்லை எனில் குரு வம்சம் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை அடைந்திருக்காது என்பதை நான் பெரியவர்களின் பேச்சுக்களின் மூலம் அறிந்துள்ளேன்.  தாயே! பாண்டவர்களை இங்கே கொண்டு வந்து தங்க வைத்தால் நாங்கள் நூற்றுவரும் இங்கே வாழ முடியாது.  நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை.  தாயே, நானும் என் சகோதரர்களும் அழியத் தாங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள்.”


கனிவான புன்சிரிப்பு  இதழ்களில் ஓட அவனைப் பொறுமையுடன் பார்த்தாள் சத்யவதி.    அவனுடைய துக்கம் காரணமாக மீண்டும் தொண்டையை அடைத்துக்கொள்ள துரியோதனனின் பேச்சுத் தடைப்பட்டது.  சத்யவதி அப்போது அவனைப் பார்த்து “துரியோதனா! ஏன் அப்பா, எல்லா விஷயத்திலும் எதிர்மறையாகவே சிந்திக்கிறாய்? இருட்டான அந்தப் பாதையை விட்டுவிட்டு வெளிச்சமான நேர்மறையான பாதைக்கு வா!  உன்கண்களை நேர்மை, நீதியின் பக்கம் திருப்பு.  பாண்டவர்கள் யார்?  உன் சித்தப்பனின் மகன்கள்.  உன் சகோதரர்கள்.  சக்கரவர்த்தி பரதன் அமர்ந்து ஆண்டு வந்த இந்தத் தொன்மையான சிங்காதனத்துக்கு முழு உரிமை பெற்றவர்கள்.  உனக்கு முன்னர் பிறந்தவர்கள்.  ஏற்கெனவே அவர்கள் பல விஷயங்களிலும் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்கள்.  அவர்களின் தந்தையின் வீடான இங்கு அவர்களுக்கு உரிமையானதைப் பெற அவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டாமா? ஒரு மரியாதையான இடத்தைக் கொடுக்க வேண்டாமா? “ சத்யவதி மிகவும் உருக்கமாகக் கல்லும் கரையும் வண்ணம் இவற்றைக் கூறினாள்.  ஆனால் துரியோதனனைத் தவிர வேறு யாராக இருந்தாலும் இந்த வார்த்தைகளுக்கு உருகி இருப்பார்கள் தான்.  துரியோதனனுக்கு வந்த கோபத்தில் அவன் பழிப்புக்காட்டுவது போல் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  அவன் மனம் சிறிது கூட இளகவே இல்லை.


“அவர்களுக்கு இங்கே இடம் இல்லை.  தாயே, ஹஸ்தினாபுரம் அவர்களுக்கு உரியதன்று. தாயே, மற்ற அனைவரையும் விடத் தாங்கள் அனைத்தும் அறிந்தவர்.  இல்லையா?  உண்மையைச் சொல்லுங்கள்.  இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள் ராணி மாதா!  அவர்கள் அனைவரும் உண்மையிலேயே பாண்டுவின் புத்திரர்களா? அவர்கள் ஐவருக்கும் இந்த வீட்டில், இந்த அரண்மனையில் மட்டுமல்ல, ஹஸ்தினாபுரத்தில் வசிக்கக் கூட உரிமை இல்லை. “ துரியோதனன் தன்னிலையை இழந்தவனாகப் பேச ஆரம்பித்தான்.


சத்யவதியின் அழகான முகம் சொல்லொணா துக்கத்தைக் காட்டியது.  நிலவைக் கருமேகம் மறைப்பது போல் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி காணாமல் போனது.  சில கணங்கள் எல்லையற்ற பரிதாபத்துடனும், கருணையுடனும் துரியோதனனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் என்னதான் பொறுத்துக் கொண்டிருந்தாலும் அவள் உள் மனது துரியோதனனின் இந்தத் தகாத வார்த்தைகளால் கசந்து நொந்து போனது.  என்றாலும் பொறுமையைக் கைவிடாமல், “குழந்தாய், துரியோதனா!  நீ எப்போது உன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் போகிறாய்? உன் பொறாமை, தீரா வெறுப்பு ஆகியவற்றை எப்போது வெல்லப் போகிறாய்? “ சத்யவதி நிதானமாகவே கேட்டாள்.


“நான் பாண்டவர்கள் ஐவரையுமே வெறுக்கிறேன். ஒன்று அவர்கள் சாகவேண்டும்;  இல்லையேல்  நான் சாகவேண்டும்.” விரக்தியுற்றவன் போல் பேசினான் துரியோதனன். “மனம் இருந்தால் மார்க்கமுண்டு, துரியோதனா! நீங்கள் அனைவருமே இணக்கமாக இருந்து ஒற்றுமையுடன் இந்த நாட்டை ஆள முடியும். நீ என்ன செய்துவிட்டாய் என்பதை நீ அறிவாயா, துரியோதனா?  நீ என் மனதில் ஆறாமல் இருந்த ஒரு பழைய காயத்தை, ஆழமான காயத்தை , நான் இன்று வரை ஆறிவிட்டது என நினைத்திருந்த ஒன்றைக் குத்திக் கிளறிப் புண்ணாக்கி விட்டாய்!  அந்தக் காயத்தில் இருந்து இப்போது ரத்தம் கொட்டுகிறது, குழந்தாய், ரத்தம் கொட்டுகிறது.” சொல்லும்போதே தாங்கொணா துக்கத்தைக் காட்டிய அவள் குரல் இப்போது நடுங்கியது.  மேலும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி அந்த அழகான அமைப்பான கன்னங்களில் வழிந்தோடியது.  நீண்ட அவள் கண்களில் பெருகி இருந்த கண்ணீரானது  கரையை உடைத்துக் கொண்டு வரும் நதியின் வெள்ளம் போல் வர ஆரம்பித்தது.


தன் வார்த்தைகளால் ராணிமாதாவுக்கு இவ்வளவு தாங்கொணாத் துயர் ஏற்படும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்காத துரியோதனன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.  எப்போதும் கனிவையும், கருணையையும், மகிழ்ச்சியையும் காட்டும் அந்த முகத்தில் இப்போது தெளிவாகக் காணப்பட்ட துக்கத்தை அதிசயமாகப் பார்த்தான்.  “துரியோதனா, உன் வயதுக்கு நீயாகப் புரிந்து கொள்வாய் என எதிர்பார்த்தேன். பாண்டவர்கள் ஐவரையும் குறித்து நீ சொன்னவை கொடிய வார்த்தைகள்.  அவை அவர்களைக்குறித்து மட்டுமல்ல.  என்னைக் குறித்தும் சொல்லப்பட்டவையே!  நீ மட்டும் இதை பீஷ்மனிடம் சொல்லி இருந்தாயானால் என்ன நடந்திருக்குமோ, தெரியாது.  ஆனால் நான் எவ்விதப் பாதுகாப்பும், உதவியும் இல்லாத வயதான பெண்மணியாகிவிட்டேன்.” தன் எண்ணங்களை முழுதும் வெளிக்காட்டாமல் அடக்கமாகவே பேசினாள் சத்யவதி.


“ஆனால், ஆனால், தாயே, அனைவருமே எனக்கு எதிராகச் சதி செய்து வருவதை நீங்கள் அறியவே மாட்டீர்கள்! “


“மீண்டும் நீ சொல்வது சரியல்ல, மகனே!  நீ உண்மை பேசவில்லை.  நீ ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனம் குறித்தும், ஆட்சியைக் குறித்தும் பேசுகிறாய்.  உன் மனதில் அது உனக்கு மட்டுமே சொந்தம் என்னும் எண்ணம் இருக்கிறது.  சரி,போகட்டும், இதைக் கேள்.  இன்று வரை யாருக்கும் சொல்லாத ஒரு விஷயத்தை உனக்கு நான் சொல்லப் போகிறேன். உங்களில் எவருக்கும் இவ்விஷயம் தெரியாது.  பீஷ்மன், என் மகன் கிருஷ்ண த்வைபாயனன் ஆகிய இருவரும் மட்டுமே என்னைத் தவிர இவ்விஷயம் அறிந்தவர்கள் ஆவார்கள்.  கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக இந்த சாம்ராஜ்யம் எப்படி வளர்ந்தது? எப்படிக் கட்டி ஆளப்பட்டது?  இதன் பூர்வ சரித்திரம் என்ன என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா?  இதை எப்படி இவ்வளவு பலமும், வலிமையும் வாய்ந்த சாம்ராஜ்யமாக ஆக்கினார்கள் என்பதை நீ அறிவாயா?”


துரியோதனன் ஆர்வத்துடனும், அச்சத்துடனும் சத்யவதியைப் பார்ர்த்தான். அவன் மனம் முழுதும் எரிச்சலும், கோபமும் மண்டிக்கிடந்தாலும், அந்நிலையிலும் அவனுக்கு சத்யவதி இன்று வரையிலும் எவரும் அறியா ஓர் ரகசியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்பது புரிந்தது.  அது மிக முக்கியமான ஒன்று என்பதும், அது தான் தன் வாழ்க்கையையும், பாண்டவர்களின் வாழ்க்கையையும் நிர்ணயம் செய்யப் போகிறது என்பதும் புரிந்தது.  அவன் உடல் தன்னையறியாமல் நடுங்கியது. அவனையே அன்புடன் பார்த்தாள் சத்யவதி.  அவள் கண்கள் ஏதோ திரை போட்டாற்போல் மங்கிக் காணப்பட்டது.  கனவுலகிருந்து பேசுவது போல் அவள் பேச ஆரம்பித்தாள்.


Saturday, August 16, 2014

தடுமாறும் துரியோதனன்! சாந்தமான சத்யவதி!

“பிரபுவே, இப்போது இந்தச் சமயம் நாம் பாண்டவர்களை வரவேற்கவில்லை எனில் அதைவிட மடமையான செயல் வேறேதும் இல்லை.  நம்மிடையே இருக்க வேண்டி அவர்கள் வந்தால் நாம் ஏற்கத் தான் வேண்டும்.  அவர்களை நாம் உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டோம் என்ற தீராத களங்கம் இதோடு முடிவடைந்தது.  அதிலே நாம் மகிழ்ச்சி அடையவேண்டும்.  சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைத்து அரசர்களும் அவர்களின் வரவை முழு மனதோடு வரவேற்றிருக்கின்றனர்.  அதோடு இல்லாமல் சக்தி வாய்ந்த பாஞ்சால நாட்டின் மருமகன்களாகவும் ஆகி இருக்கின்றனர்.  இன்னும் அதிகமாய் யாதவர்கள் தலைவர்களான பலராமன், வாசுதேவக் கிருஷ்ணன் ஆகியோரின் உதவியும்,நட்பும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது.  இவ்வளவு பலம் பொருந்திய பாண்டவர்களை உங்களால் எவ்வாறு தடுக்க இயலும்?  ஹஸ்தினாபுரம் முழுவதும் அவர்களை மீண்டும் உயிருடன் காண ஆவலுடன் காத்திருக்கிறது.  இனிமேலும் நடந்தவைகளைக் குறித்துப் பேசாமல், அவற்றை நினைக்காமல் நாம் அவர்களை வரவேற்று உரிய மரியாதைகளைக் கொடுத்து அவர்களுக்கு உரிமையானதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.”  என்றார் விதுரர்.



தன் தாடியை நீவி விட்டுக்கொண்டிருந்த பீஷ்மர் உறுதியான தீர்க்கமான முடிவுடன் பேச ஆரம்பித்தார்.”நாம் அனைவருமே இப்போது பாண்டவர்களை, பாண்டுவின் புத்திரர்களை வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்.  அதற்காக ஒத்துக்கொண்டுள்ளோம்.  இப்போது நாம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை வரவழைக்கும்படியான ஒரு தீர்வைக் காணலாம்.  அவனும் மகிழ்வோடு இருக்கவேண்டும்.”


“ஹா!  பாண்டுவின் புத்திரர்கள்!  அவர்களை நான் பாண்டுவின் புத்திரர்களாக நினைத்து வரவேற்க வேண்டுமா?” பற்களைக் கடித்துக் கொண்டு தனக்குள்ளே முணுமுணுத்தான் துரியோதனன்.  ஆனால் அது பீஷ்மர் காதுகளிலே நன்றாகவே விழுந்தது.  அடக்க முடியாக் கோபம் தீக்கங்குகளெனக் கண்களில் தெரிய பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து விழித்தார். பின்னர் அவனைச் சட்டை செய்யாதவராய், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பினார்: “  திருதராஷ்டிரா, இனி சொல்ல ஏதுமில்லை. அதற்கான தேவையும் இல்லை.  சகலவிதமான அரச மரியாதைகளுடன் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தில் வரவேற்கப்படுவார்கள்.  அது மட்டுமில்லை.  நான் மாட்சிமை பொருந்திய ராணிமாதா சத்யவதியையும் சென்று சந்தித்து என் ஆலோசனைகளைக் குறித்துக் கலந்து ஆலோசிக்கப் போகிறேன்.  அவர்கள் என்னுடைய திட்டத்திற்குச் சம்மதித்தார்களானால் விதுரன் உடனடியாகக் காம்பில்யம் சென்று சகலவிதமான அரச மரியாதைகள், மற்றும் பரிசுகள் சகிதம் துருபதனைச் சந்தித்து அவனுடன் கலந்து பேசிப் பாண்டவர்கள் ஐவரையும், குந்தியையும், திரௌபதியையும் ஹஸ்தினாபுரம் அழைத்து வருவான். “ இதைச் சொல்லிய வண்ணம் எழுந்த பீஷ்மர், “விதுரா, உன் கைகளைக் கொடுத்து என்னை எழுப்பி விடு!” என்றவண்ணம், “ விதுரா, நீ உடனே ராணிமாதாவிடம் சென்று நான் என் மாலை சந்தியாவந்தனங்கள், நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு அவரைச் சந்திக்க விரும்புகிறேன் என்று சொல்.” என்ற வண்ணம் எழுந்து நடந்தார்.  மற்றவர்கள் ஏதும் பதில் பேசுமுன்னர் பீஷ்மர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து விதுரரின் தோளின் மேல் கையை வைத்த வண்ணம் அந்த அறையை விட்டு வெளியேறினார்.


துரியோதனனுக்கோ ரத்தம் கொதித்தது.  அவன் தலையிலிருந்து கால் வரை சிவந்த வண்ணத்தில் காட்சி அளித்தான்.  ஆனாலும் இந்தக் கிழவன் பொல்லாதவன்.  எவராலும் அவனை எதிர்த்துப் பேச முடியாது. சக்திமட்டுமில்லாமல் அதிகாரமும்  படைத்த  கிழவன்.  அவனை மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது.  துரியோதனனுக்கு அவன் நினைத்ததை நடத்தி வைக்க தைரியம் இல்லை;  என்ன செய்யலாம் என்று யோசித்தான். இவர்களுக்காக ஹஸ்தினாபுரத்தை முழுவதுமாகத் தானே ஆளவேண்டும் என்னும் ஆசையை விட்டொழிக்க இயலுமா?  அதுவும் இயலாது!  பின் என்னதான் செய்வது?  ஆம், அதுதான் சரி. தன் கையிலுள்ள கடைசித் துருப்புச் சீட்டைப் பயன்படுத்த எண்ணினான் துரியோதனன்.  அவன் நினைத்ததை உடனே செயலாற்றத் துடித்தான்.  திருதராஷ்டிரனும் அந்த அறையை விட்டு வெளியேறியதும், அவன் மட்டும் தனியாக சத்யவதியின் மாளிகையை நோக்கி நடந்தான்.


மாளிகையில் சத்யவதி தன்னுடைய ஆசனத்தில் வழக்கமான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தாள்.  வழிபாட்டுக்குரிய சாமான்கள் அவளுக்கெதிரே வைக்கப்பட்டிருந்தன.  இத்தனை வயதுக்கும் தலை மட்டுமே நரைத்திருந்த அவளின் அழகோ, இன்னமும் மிச்சம் இருந்த இளமையோ குறையவே இல்லை.  அவளைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடும் வண்ணம் மரியாதைக்குரியவளாகக்  காட்சி தந்தாள். அப்போது வாயிலில் நின்று கொண்டிருந்த சேடிப் பெண் வேகமாய் ஓடி வந்தாள்.  தன் கைகளைக் கும்பிட்ட வண்ணம், “ தாயே, யுவராஜா துரியோதனர் வந்திருக்கிறார்.  உங்கள் அநுமதி கேட்டு வெளியில் காத்திருக்கிறார்.” என்று பணிவுடன் சொன்னாள்.  அவளைக் கனிவோடு பார்த்துச் சிரித்த சத்யவதி, “ ஓ, அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கின்றான் போலும். அவனை உள்ளே அநுமதி!” என உத்தரவு கொடுத்தாள்.  செக்கச் சிவந்த முகத்துடனும், அதை விடச் சிவந்த விழிகளுடனும் வேகமாய் உள்ளே நுழைந்தான் துரியோதனன்.  அவன் மனவேதனையைக் கண்களே காட்டிக் கொடுத்தன.  வந்தவுடனே ராணிமாதாவை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டான்.  ராணிமாதா அவனிடம், “குழந்தாய், எப்படி இருக்கிறாய்? காம்பில்யத்திலிருந்து நேற்றுத் தான் திரும்பினாய் எனக் கேள்விப் பட்டேன்.  இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.


“நான் எப்படி இருக்கிறேனா?” பேச ஆரம்பித்த துரியோதனன் குரல் தழுதழுத்தது.  “நான் எப்படி இருக்கிறேன்? பாட்டியம்மா, பாட்டியம்மா! எப்படி இருக்கிறேன் என்றா கேட்கிறீர்கள்?  நான் மோசமான கிரஹச் சேர்க்கையினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.  அனைவரும் எனக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். “ அவனுடைய துக்கத்தில் மூழ்கிப் போன துரியோதனன் அப்படியே கீழே அமர்ந்து தன்னிரு கரங்களால் தன் கண்களை மூடிக் கொண்டு கண்ணீரை மறைத்தான்.


“மனதைத் தளர விடாதே! குழந்தாய்!” கனிவான குரலில் கூறினாள் ராணிமாதா.  “தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொள்.  இவை நமக்கு இறைவனால் அளிக்கப்படுபவை. நாம் அவற்றை சந்தோஷமாக வரவேற்கவேண்டும்.  அவமானங்களாகவே இருந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். இவையே நம்மை சந்தோஷத்துக்கு அழைத்துச் செல்லும் வழியாகும்.”


“என்ன அவமானத்தை வரவேற்பதா?”வெடித்துக் கதறினான் துரியோதனன்.  தன் கண்களை மறைத்த கைகளை எடுத்த வண்ணம், “நான் காம்பில்யத்திற்கு எதற்காகச் சென்றேன்?  துருபதனின் மகளைப் போட்டியில் வெல்வதற்காகச் சென்றேன்.  ஆனால்?  நடந்தது என்ன?  மிக மோசமாக, மிகக் கேவலமாகத் தோற்றுப் போனேன்! ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் பேரவையில் நகைப்புக்கிடமாகிப் போனேன்.  அந்த பீமன் என்னைக் “குருடனின் பிள்ளை” என அழைக்கிறான்.  அர்ஜுனன், என் ஜன்ம வைரி, திரௌபதியை வென்றுவிட்டான்.  திடீரென ஐந்து சகோதரர்களும், பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் ரத்தமும், சதையுமாக எழுந்துவிட்டனர்.  எல்லாம் அந்தத் தந்திரக்கார வாசுதேவக் கிருஷ்ணனின் தந்திர உபாயங்களினால் தான் இருக்கும். “ பேசும்போதே வார்த்தைகள் முன்னுக்குப் பின்முரணாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரப் பேச முடியாமல் தடுமாறினான் துரியோதனன்.


Friday, August 15, 2014

பிதாமகரின் ஆலோசனை!

“திருதராஷ்டிரா, உன்னுடைய மகன்களுக்கும், பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் நாங்கள் இல்லை, இல்லை,, நாம் எப்படி வேறுபாடுகளைக்காட்ட முடியும்?  நம்மைப் பொறுத்தவரை இருவருக்கும் சமமான உரிமைகளே உள்ளன.” தன் அதிகாரக் குரலில் திட்டவட்டமாகச் சொன்னார் பீஷ்மர்.  அதற்கு மேல் வாய் திறக்க வழியின்றி திருதராஷ்டிரன் மௌனமானான்.  பீஷ்மரைப் பார்க்கும்போதெல்லாம் தன்னுள் எழும் பக்திபூர்வமான அச்சத்தை எப்படியானும் துடைத்தெறிய வேண்டும் என நினைத்தான் துரியோதனன்.  ஆகவே தன்னைச் சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.  எனினும் தயக்கம் அவனுக்குப் போகவில்லை.  “தாத்தா அவர்களே, பாண்டவர்கள் ஐவரும் நாடு கடத்தப்பட்டவர்கள் இல்லையா?” என வினவினான்.  “ஆம்,  அன்றைய சூழ்நிலையில் பல தர்மசங்கடங்களையும் தவிர்க்க வேண்டியே அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.  ஹஸ்தினாபுரத்தின் நன்மைக்காகவே அவர்கள் நாட்டை விட்டு வெளியே சென்றனர்.  எல்லாம் வல்ல மஹாதேவன் கிருபையில் அவர்கள் உயிருடன் இருப்பதோடல்லாமல் இந்த பூவுலகில் உள்ள அரசர்களுக்குள்ளேயே மிக உயர்ந்த இடத்தையும் கொடுத்து அவர்களை கௌரவப் படுத்தி இருக்கிறான்.” பீஷ்மர் பெருமையுடன் கூறினார்.

“அவர்கள் இப்போது இங்கே வந்து விட்டார்களானால் நாங்கள் அனைவரும் எங்கே செல்வது?”  தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்காமல் மீண்டும் கேட்டான் துரியோதனன்.  சற்று நேரம் எதுவுமே பேசாமல் தன் உறுதியான கண்களால் துரியோதனனை அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் பீஷ்ம பிதாமகர்.  பின்னர் மீண்டும் தன் உறுதி வாய்ந்த குரலில், “நீ இப்போது எங்கே இருக்கிறாயோ, அங்கேயே இருப்பாய்! ஹஸ்தினாபுரத்தில்!” என்றார்.  “ஆ, தாத்தா அவர்களே, இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை நாங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?  அது எப்படி சாத்தியம்?  ஒன்று அவர்கள் மட்டும் இங்கே இருக்க வேண்டும் இல்லை எனில் நாங்கள் இருக்க வேண்டும்.”  மிகவும் மூர்க்கத்தனமாக உளறினான் துரியோதனன்.  “அப்படி எல்லாம் பேசாதே என் மகனே!” திருதராஷ்டிரன் நடுவில் புகுந்து பீஷ்மருக்கும், துரியோதனனுக்கும் இடையில் ஏற்படும் சினம் மிகுந்த கடுமையான சூழ்நிலையை மாற்ற விரும்பினான்.  தன்னுடைய வெண்மையான தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்த பீஷ்மர் கோபத்தை அடக்கிய வண்ணம் சற்று நேரம் மௌனமாகவே இருந்தார். பின்னர் பேச ஆரம்பித்த போது குரலில் அமைதி குடி கொண்டிருந்தது.

“துரியோதனா! நீ ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனம் சாதாரணமான ஒன்றல்ல.  தர்மத்தின் இருப்பிடம்.  தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களே அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாதனம்.  நேர்மை ஒன்றுக்கே இங்கே மதிப்பும், மரியாதையும். நேர்மையாகவும், நீதியைக் கடைப்பிடிப்பவர்களுமே இதற்கு உரிமை கொண்டாட முடியும்.  இது வரையிலும் குரு வம்சத்தினர் அப்படித் தான் இருந்து வருகின்றனர்.  ஆகவே பாண்டவர்கள் ஐவருக்கும் உரிய இடத்தை நாம் அளிக்கப் போவதை எவராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.” தீர்மானமாகச் சொன்னார் பீஷ்மர்.  “பாட்டா!” பலவீனமான குரலில் பேச ஆரம்பித்தான் திருதராஷ்டிரன்.  “பாண்டவர்களுக்கும், துரியோதனன் மற்றும் அவன் சகோதரர்கள்  இடையில் எவ்விதப் பிரச்னைகளும் இல்லாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் நடந்துவிட்டால் அது தற்கொலைக்குச் சமமானது. “

“நாம் முயன்றால் முடியாததில்லை.  நல்லதொரு வழியைத் தேடினோமானால் நல்வழியே கிட்டும்.” பீஷ்மர் பதில் கூறினார். திருதராஷ்டிரனைச் சமாதானம் செய்யும் வகையில் அன்போடும், கனிவோடும் அவன் தோள் மேல் தன் கையை வைத்து அவனுக்கு ஆறுதல் கூறும் பாணியில் பேசினார் பீஷ்மர்.”நான் ஆசாரியர்களுடன் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்திருக்கிறேன்.  உன் மகன்களுக்கும், பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் சமமான பங்கீடு செய்யப்படும்.  பாண்டவர்களின் உரிமையை நாம் மறுக்க முடியாது.” என்றார் பீஷ்மர்.  “ஆசாரியர் எப்படி ஆலோசனை கூறியுள்ளார்?” திருதராஷ்டிரன் கேட்டான்.  அவன் உள் மனம் தன் மகன் பக்கமே இருந்தது.  ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் பீஷ்மரின் நேர்மைக்கும்,  நீதிக்கும், தன் மகனின் மேல் உள்ள அளவு கடந்த பாசத்துக்கும் இடையில் திண்டாடினான் திருதராஷ்டிரன்.  பீஷ்மரிடம் அவனுக்கு உள்ளூற பயமும் உண்டு. அதற்குள்ளாக, " நான் மாட்சிமை பொருந்திய பாட்டனாரின் யோசனைகளை ஆதரிக்கிறேன்;  அவற்றோடு ஒத்துப் போகிறேன் மன்னா!”  என ஆசாரியர் துரோணர் கூறினார்.

“ஆனால் துருபதனின் மகள்  குரு வம்சத்தினரின் மருமகளாக இங்கே ஹஸ்தினாபுரம் வந்தால் என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே? துருபதன் உங்களுக்கு ஜன்ம வைரியாய் இருக்கிறானே ஆசாரியரே!   இதில் ஏதும் சூது இருந்து பின்னர் அதன் மூலம் கிளர்ச்சிகள் ஏற்பட்டால்? இதைத் தான் துரியோதனன் சுயம்வரம் செல்லவேண்டும் என்றபோது நீங்கள் கூறி இருந்தீர்கள்!” திருதராஷ்டிரன் கேட்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னா! அதன் பின்னர் பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன.  துரியோதனன் என்னுடைய கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிட்டான்.  என் மகன் அஸ்வத்தாமாவை ஒரு உறுதி மொழி எடுக்கச் செய்துள்ளான் துரியோதனன்.  ஒரு குரு வம்சத்து இளவரசனை திரௌபதி தன் மணாளனாகத் தேர்ந்தெடுத்து ஹஸ்தினாபுரம் வர நேரிட்டால், தன் உயிரைக் கொடுத்தாவது நான் இங்கிருந்து செல்லாமல் அஸ்வத்தாமா பாதுகாப்பான்.  இது தான் அவன் துருபதனுக்கு அளித்திருக்கும் உறுதிமொழி. அப்படித்தானே துரியோதனா?” துரோணர் கேட்டார்.

தனக்கெனப் போடப்பட்ட திட்டம் தனக்கெதிராகப் போனதில் அவமானமடைந்த துரியோதனன் தன் உதடுகளை ரத்தம் வரும்வரை கடித்தவண்ணம் தலையை மட்டும் ஆட்டினான்.  “ஆஹா, துரியோதனன் இதை ஆமோதித்து விட்டான்.  இது உண்மைதான் எனக் கூறிவிட்டான்.  துரியோதனனின் வற்புறுத்தலின் மேல் அஸ்வத்தாமா இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறான்.  என்றாலும் என் ஒரே மகனின் உயிருக்குப் பாதகம் விளைவிக்கும் ஒரு செயலை என்னால் செய்ய முடியாது.  ஆகவே நான் அவன் உறுதிமொழியைக் காப்பாற்றப் போகிறேன்.  இப்போது பேசுகையில் பிதாமகர் ஒரு யோசனையைக் கூறினார்.  இப்போதுள்ள பிரச்னையைத் தீர்க்கும் விதமான அந்த யோசனைக்கு என் முழு ஆதரவு உண்டு.”

கர்ணனால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருதராஷ்டிரன் பக்கம் திரும்பிச் சீறிய குரலில், “மாட்சிமை பொருந்திய மன்னா!  உங்கள் உப்பைத் தின்று வளர்ந்து முன்னுக்கு வந்தவர்கள் இன்று உங்களுக்கே துரோகம் செய்கின்றனர். “பற்களைக் கடித்த வண்ணம் சீறினான் கர்ணன். அவனை இறுமாப்புடன் பார்த்தார் துரோணர். “ராதேயா! கர்ணா! உன்னுடைய ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருந்தால் அது தான் குரு வம்சத்தீனரின் முடிவாக இருந்திருக்கும்.  அனைவரும் அழிந்து போயிருப்பார்கள்.” எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிந்தனை நிறைந்த முகத்தோடு பீஷ்மர் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்தார்.

திருதராஷ்டிரன் விதுரர் பக்கம் திரும்பி, “நீ என்ன சொல்கிறாய் விதுரா?” என்று கேட்டான்.

திருதராஷ்டிரனுக்கு ஏற்பட்ட கவலை!

நாம் இப்போது திரௌபதியின் சுயம்வரத்தின் போது உயிர்த்தெழுந்த பாண்டவர்கள் குறித்தும், ஐவரையும் திரௌபதி திருமணம் செய்து கொண்ட செய்தியைக் கேட்டபோதும் துரியோதனனுக்குள்ளே எழுந்த எண்ணங்கள் குறித்து ஒரு பார்வை பார்க்கப் போகிறோம்.  ஊருக்குப் போய்விட்டதால் பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுகள் போடமுடியவில்லை.  கைக்காயம் காரணமாக எழுதுவதிலும் தாமதம். ஆகவே கொஞ்சம் மெதுவாகப் பதிவுகள் வரும்.  பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.  இவை அனைத்தும் திரு முன்ஷிஜி அவர்கள் கற்பனையே!  இப்படி நடந்திருக்கலாம் என்னும் அவர் அனுமானமே என்பதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி.

துரோணரிடம் ஷிகண்டின் வந்து சேர்ந்த சிலநாட்களுக்குப் பின்னர் துரியோதனன் தன் சகோதரர்கள், தன் மாமன் ஷகுனி மற்றும் நண்பர்களோடு ஹஸ்தினாபுரம் வந்தடைந்தான்.  தன்னை யாரோ நன்கு அடித்து,  நசுக்கிக் கொல்ல முயன்றதைப் போல் அவன் உணர்ந்தான். அவமானம் தாங்க முடியாமல் தவித்தான். பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர் என்பதோடல்லாமல், வலிமை மிக்க பாஞ்சால நாட்டின் அரசனுக்கு ஐவரும் மருமகன்களாகவும் ஆகிவிட்டனர்.  அவன்  மிகச் சிரமப்பட்டு அமைத்த திட்டங்கள் அனைத்தும் வியர்த்தமாகிவிட்டன.  அவன் வாழ்நாள் முழுதுக்குமாக நாசமாகிவிட்டான். இனி அவனால் எழுந்திருக்க இயலுமா? மிக மோசமாக அவன் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறான். இந்த ஆரிய வர்த்தம் முழுதும் அவனைப் பார்த்துச் சிரிக்கும் வண்ணமாக அவமானப் படுத்தப்பட்டிருக்கிறான்.  அவன் எதிர்காலத்திற்கென நிர்ணயித்திருந்த அந்த அற்புதமான ஏற்பாட்டை விதி தன் கரங்களால் நசுக்கி நாசமாக்கிவிட்டது.  விதியா?  இல்லை, இல்லை! கிருஷ்ண வாசுதேவன், மஹா பாவி, போக்கிரி, தன் போக்கிரித்தனத்தைக் காட்டி அவன் எதிர்காலத்தையே பொசுக்கிவிட்டான்.

அந்த ஐவரும் ஹஸ்தினாபுரத்துக்கு வந்துவிட்டால்?? பின் அவனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் இங்கே இடமின்றிப் போய்விடுமே!  அனைவர் மனதிலும் சுயம்வரத்தில் நடந்தவையே இருக்கின்றன.  அனைவரும் அதையே திரும்பத் திரும்பப் பேசுகின்றனர்.  மக்கள் அனைவரும் ஐந்து சகோதரர்களும் இறக்கவில்லை என்பதைக் கொண்டாடுவதோடு அவர்களுக்குப் பலமான ராஜ்யத்தின் இளவரசி மனைவியாக அமைந்தது குறித்தும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.  அனைவரும் பாண்டவர்கள் திரௌபதியை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் வருவதற்குக் காத்திருக்கின்றனர்.  வந்ததுமே அவர்களுக்குப் பிரமாதமான ஒரு வரவேற்பை அளிக்கக் காத்திருக்கின்றனர்.  இதைத் தடுப்பது என்பது கடினம்.  ஆனால்…… ஆனால்…… ஒரே ஒரு வழி இருக்கிறது.  அவர்கள் ஹஸ்தினாபுரம் அடையும் முன்னரே அனைவரையும் ஒருசேரத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும்.  இங்கே வரவே விடக் கூடாது.  ஆம் அது ஒன்றே வழி.

மறுநாள் காலை, துரியோதனன் தன் அருமை நண்பன் கர்ணனுடனும், தன் மாமன் ஷகுனியுடனும் தன் தந்தை திருதராஷ்டிரனைச் சென்று சந்தித்தான்.  விதுரன் மூலமாக காம்பில்யத்தில் நடந்தவற்றை அனைத்தையும் திருதராஷ்டிரனும் அறிந்திருந்தான்.  விதுரனின் வற்புறுத்தலுக்காக பாண்டவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படவேண்டும் என அரை மனதாக ஒத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.  இதைக் கேட்ட துரியோதனன் ஆத்திரம் தாங்காமல் கத்தினான்; கதறினான்; தன் பற்களைக் கடித்துக் கொண்டான்.  விதுரனிடம் விட்டுக்கொடுத்து அவனுக்காக வளைந்து கொடுத்த தன் தந்தையை மிகவும் மோசமாகக் கடிந்து கொண்டான். விதுரச் சித்தப்பா எப்போதும் நமக்கு எதிரிதான். துரியோதனன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் சொன்னான்:  காம்பியத்திற்குத் திறமை வாய்ந்த சகல நுணுக்கங்களையும் அறிந்த தூதுவர்களை உடனடியாக அனுப்பிப் பாண்டவர்களுக்கும், துருபதனுக்கும் இடையில் எப்படியாவது மன வேறுபாடுகளை உருவாக்க வேண்டும் என்றான்.  மனவேறுபாடுகளை உருவாக்கி துருபதனின் காவலில் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்திப் பின் கொன்றுவிட வேண்டும் என்றும் கூறினான்.  ஆனால் திருதராஷ்டிரனோ விதுரனுக்கு ஏற்கெனவே பாண்டவர்களை நல்ல முறையில் வரவேற்று உபசரிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தான்.  அதை எப்படி மீற முடியும்?  க்ஷத்திரியன் வாக்குக் கொடுத்தால் மீறுவது என்பது சரியல்லவே!  ஆனால் இங்கேயோ சொந்தப் பிள்ளை கதறுகிறான். அதையும் பார்க்க முடியவில்லை அவனுக்கு.  கோபத்திலும், மனக்கசப்பிலும் மூழ்கிப் போயிருந்த  பிடிவாத குணம் படைத்த தன் அருமை மகனுக்கு அடங்கிப் போவதைத் தவிர இப்போது வேறு வழி அவனுக்குத் தெரியவில்லை.  மகனின் கடுமையான எதிர்ப்பைக் கண்டு அஞ்சினான்.  அவனுக்குப் பணிவதைத் தவிர வேறு வழி இப்போது இல்லை.

ஆனால் துரியோதனனின் திட்டத்திற்கு அவனுக்கு நெருங்கியவர்களிடமிருந்தே எதிர்ப்பு வந்தது.  ஆம், கர்ணன் அவ்வளவு நேரம் பேசாமல் தகப்பனும், மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். இப்போது அவனை ஆலோசனை கேட்கவும், துரியோதனன் திட்டத்திற்குத் தன் முழு எதிர்ப்பைக் காட்டினான்.  இது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றான் கர்ணன்.  ஐவரும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கையில் அவர்களைப் பிரிப்பது எங்கனம்? அவர்களிடையேயும், துருபதனுக்கும் இடையேயும் மனவேறுபாடுகளை ஏற்படுத்துவது அசாத்தியம் என்றான்.  எந்த மருமகனையும் மீறி துருபதன் எதுவும் செய்யமாட்டான் என்பதோடு ஐவரையும் அவன் கைவிடவும் மாட்டான் என்பதையும் எடுத்துக் காட்டினான்.  மேலும் வாசுதேவக் கிருஷ்ணன் அங்கே தான் இருக்கின்றான்.  அவர்களுக்கு நண்பனாகவும் உள்ளான்.  இந்நிலையில் ஒரே வழிதான் இருக்கிறது.

குரு வம்சத்தினரின் படைகளை ஒன்று திரட்டிக் காம்பில்யத்தின் மேல் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நடத்த வேண்டும்.  புயல்காற்றைப் போல் தாக்கி எதிர்பாராத் தோல்வியை துருபதனுக்குக் கொடுக்க வேண்டும்.  ஐந்து சகோதரர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைவதோடு இல்லாமல் அவர்களும் தோல்வியைத் தழுவுவார்கள்.  சரியான முறையில் படைதிரட்டி அவர்களை வழிநடத்திச் சென்றால் துரியோதனாதியருக்கு  வெற்றி மட்டும் அல்ல அவர்களும் தவிர்க்க முடியாததொரு வன்மையான சக்தியாக இருப்பார்கள்.  சுயம்வரத்தின் போது மறைந்திருந்த சில அரசர்கள் கூட அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.  பலராமனும், கிருஷ்ணனும் அவர்களோடு சேர்ந்து குரு வம்சத்தினரின் படையை எதிர்க்கலாம்.  ஆனால் அவர்கள் வைத்திருக்கும் சைன்னியம் மிகச் சிறியது. ஒதுக்கித் தள்ள வேண்டிய ஒன்று.  இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் விதுரர் அங்கே வந்தார்.  அரச மாளிகையில்  ராஜ சபையில் பீஷ்மரும், துரோணரும் பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரவேற்பைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாயும், இங்கிருக்கும் அனைவரும் அந்த ஆலோசனையில் கலந்து கொள்ள அங்கே அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரை மனதாக துரியோதனன் தன் தகப்பனையும் அழைத்துக்கொண்டு ராஜ சபைக்குச் சென்றான்.  சில மூத்த மந்திரிகள், கிருபாசாரியார் மற்றும் துரோணருடன் பீஷ்மர் இந்த விஷயத்தைக் குறித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.  பீஷ்மர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த துரியோதனன் வயிறு எரிந்தது.  இவ்வளவு சந்தோஷத்தைத் தாத்தா பீஷ்மர் முகத்தில் அவன் ஒருபோதும் கண்டதே இல்லை.  சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவர் இவர்கள் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்த சிம்மாதனத்தில் அமர அழைத்துச் செல்லப்பட்ட திருதராஷ்டிரனைக் கனிவோடு பார்த்தார்.   திருதராஷ்டிரனைப் பார்த்து பீஷ்மர், “திருதராஷ்டிரா, இன்று ஒரு சுபதினம்.  பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  துருபதனின் மகள் திரௌபதியை ஐவரும் மணந்திருக்கின்றனர்.  பாண்டவர்களின் மரணத்திற்கு நாம் தான் பொறுப்பு என்று நம் மேல் சுமத்தப்பட்டிருந்த களங்கம் இன்றுடன் அகன்றுவிட்டது. ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் இதைக் கொண்டாடுகின்றனர் எனக் கேள்விப் பட்டேன். ஐவரும் திரும்பி வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.  இன்று   சந்தியாகாலத்தில்  விளக்குகள் ஏற்றப்பட்டு அனைவரும் கொண்டாடுகின்றனர்.  மற்றச் சடங்குகளும், வழிபாடுகளும் நாளையிலிருந்து தொடங்கப் படுகிறது.  அனைத்துக் கோவில்களிலும் பாண்டவர்களுக்கு ஆசிகளையும், இறைவனின் கருணையையும் பெறுவதற்காகச் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. “

தன் குருட்டுக் கண்களை பீஷ்மர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் திருப்பினான் திருதராஷ்டிரன்.  அவனால் உடனடியாகப் பேச முடியவில்லை.  அங்கிருக்கும் அனைவரும் அமைதி காத்தனர்.  பின்னர் தன்னைச் சற்றுச் சமாளித்துக் கொண்ட திருதராஷ்டிரன், பீஷ்மரைப் பார்த்து, “என் மகன்கள்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது?  அவர்கள் கதி என்ன?” என்று கேட்டான்.