Saturday, August 16, 2014

தடுமாறும் துரியோதனன்! சாந்தமான சத்யவதி!

“பிரபுவே, இப்போது இந்தச் சமயம் நாம் பாண்டவர்களை வரவேற்கவில்லை எனில் அதைவிட மடமையான செயல் வேறேதும் இல்லை.  நம்மிடையே இருக்க வேண்டி அவர்கள் வந்தால் நாம் ஏற்கத் தான் வேண்டும்.  அவர்களை நாம் உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டோம் என்ற தீராத களங்கம் இதோடு முடிவடைந்தது.  அதிலே நாம் மகிழ்ச்சி அடையவேண்டும்.  சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைத்து அரசர்களும் அவர்களின் வரவை முழு மனதோடு வரவேற்றிருக்கின்றனர்.  அதோடு இல்லாமல் சக்தி வாய்ந்த பாஞ்சால நாட்டின் மருமகன்களாகவும் ஆகி இருக்கின்றனர்.  இன்னும் அதிகமாய் யாதவர்கள் தலைவர்களான பலராமன், வாசுதேவக் கிருஷ்ணன் ஆகியோரின் உதவியும்,நட்பும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது.  இவ்வளவு பலம் பொருந்திய பாண்டவர்களை உங்களால் எவ்வாறு தடுக்க இயலும்?  ஹஸ்தினாபுரம் முழுவதும் அவர்களை மீண்டும் உயிருடன் காண ஆவலுடன் காத்திருக்கிறது.  இனிமேலும் நடந்தவைகளைக் குறித்துப் பேசாமல், அவற்றை நினைக்காமல் நாம் அவர்களை வரவேற்று உரிய மரியாதைகளைக் கொடுத்து அவர்களுக்கு உரிமையானதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.”  என்றார் விதுரர்.தன் தாடியை நீவி விட்டுக்கொண்டிருந்த பீஷ்மர் உறுதியான தீர்க்கமான முடிவுடன் பேச ஆரம்பித்தார்.”நாம் அனைவருமே இப்போது பாண்டவர்களை, பாண்டுவின் புத்திரர்களை வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்.  அதற்காக ஒத்துக்கொண்டுள்ளோம்.  இப்போது நாம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை வரவழைக்கும்படியான ஒரு தீர்வைக் காணலாம்.  அவனும் மகிழ்வோடு இருக்கவேண்டும்.”


“ஹா!  பாண்டுவின் புத்திரர்கள்!  அவர்களை நான் பாண்டுவின் புத்திரர்களாக நினைத்து வரவேற்க வேண்டுமா?” பற்களைக் கடித்துக் கொண்டு தனக்குள்ளே முணுமுணுத்தான் துரியோதனன்.  ஆனால் அது பீஷ்மர் காதுகளிலே நன்றாகவே விழுந்தது.  அடக்க முடியாக் கோபம் தீக்கங்குகளெனக் கண்களில் தெரிய பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து விழித்தார். பின்னர் அவனைச் சட்டை செய்யாதவராய், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பினார்: “  திருதராஷ்டிரா, இனி சொல்ல ஏதுமில்லை. அதற்கான தேவையும் இல்லை.  சகலவிதமான அரச மரியாதைகளுடன் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தில் வரவேற்கப்படுவார்கள்.  அது மட்டுமில்லை.  நான் மாட்சிமை பொருந்திய ராணிமாதா சத்யவதியையும் சென்று சந்தித்து என் ஆலோசனைகளைக் குறித்துக் கலந்து ஆலோசிக்கப் போகிறேன்.  அவர்கள் என்னுடைய திட்டத்திற்குச் சம்மதித்தார்களானால் விதுரன் உடனடியாகக் காம்பில்யம் சென்று சகலவிதமான அரச மரியாதைகள், மற்றும் பரிசுகள் சகிதம் துருபதனைச் சந்தித்து அவனுடன் கலந்து பேசிப் பாண்டவர்கள் ஐவரையும், குந்தியையும், திரௌபதியையும் ஹஸ்தினாபுரம் அழைத்து வருவான். “ இதைச் சொல்லிய வண்ணம் எழுந்த பீஷ்மர், “விதுரா, உன் கைகளைக் கொடுத்து என்னை எழுப்பி விடு!” என்றவண்ணம், “ விதுரா, நீ உடனே ராணிமாதாவிடம் சென்று நான் என் மாலை சந்தியாவந்தனங்கள், நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு அவரைச் சந்திக்க விரும்புகிறேன் என்று சொல்.” என்ற வண்ணம் எழுந்து நடந்தார்.  மற்றவர்கள் ஏதும் பதில் பேசுமுன்னர் பீஷ்மர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து விதுரரின் தோளின் மேல் கையை வைத்த வண்ணம் அந்த அறையை விட்டு வெளியேறினார்.


துரியோதனனுக்கோ ரத்தம் கொதித்தது.  அவன் தலையிலிருந்து கால் வரை சிவந்த வண்ணத்தில் காட்சி அளித்தான்.  ஆனாலும் இந்தக் கிழவன் பொல்லாதவன்.  எவராலும் அவனை எதிர்த்துப் பேச முடியாது. சக்திமட்டுமில்லாமல் அதிகாரமும்  படைத்த  கிழவன்.  அவனை மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது.  துரியோதனனுக்கு அவன் நினைத்ததை நடத்தி வைக்க தைரியம் இல்லை;  என்ன செய்யலாம் என்று யோசித்தான். இவர்களுக்காக ஹஸ்தினாபுரத்தை முழுவதுமாகத் தானே ஆளவேண்டும் என்னும் ஆசையை விட்டொழிக்க இயலுமா?  அதுவும் இயலாது!  பின் என்னதான் செய்வது?  ஆம், அதுதான் சரி. தன் கையிலுள்ள கடைசித் துருப்புச் சீட்டைப் பயன்படுத்த எண்ணினான் துரியோதனன்.  அவன் நினைத்ததை உடனே செயலாற்றத் துடித்தான்.  திருதராஷ்டிரனும் அந்த அறையை விட்டு வெளியேறியதும், அவன் மட்டும் தனியாக சத்யவதியின் மாளிகையை நோக்கி நடந்தான்.


மாளிகையில் சத்யவதி தன்னுடைய ஆசனத்தில் வழக்கமான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தாள்.  வழிபாட்டுக்குரிய சாமான்கள் அவளுக்கெதிரே வைக்கப்பட்டிருந்தன.  இத்தனை வயதுக்கும் தலை மட்டுமே நரைத்திருந்த அவளின் அழகோ, இன்னமும் மிச்சம் இருந்த இளமையோ குறையவே இல்லை.  அவளைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடும் வண்ணம் மரியாதைக்குரியவளாகக்  காட்சி தந்தாள். அப்போது வாயிலில் நின்று கொண்டிருந்த சேடிப் பெண் வேகமாய் ஓடி வந்தாள்.  தன் கைகளைக் கும்பிட்ட வண்ணம், “ தாயே, யுவராஜா துரியோதனர் வந்திருக்கிறார்.  உங்கள் அநுமதி கேட்டு வெளியில் காத்திருக்கிறார்.” என்று பணிவுடன் சொன்னாள்.  அவளைக் கனிவோடு பார்த்துச் சிரித்த சத்யவதி, “ ஓ, அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கின்றான் போலும். அவனை உள்ளே அநுமதி!” என உத்தரவு கொடுத்தாள்.  செக்கச் சிவந்த முகத்துடனும், அதை விடச் சிவந்த விழிகளுடனும் வேகமாய் உள்ளே நுழைந்தான் துரியோதனன்.  அவன் மனவேதனையைக் கண்களே காட்டிக் கொடுத்தன.  வந்தவுடனே ராணிமாதாவை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டான்.  ராணிமாதா அவனிடம், “குழந்தாய், எப்படி இருக்கிறாய்? காம்பில்யத்திலிருந்து நேற்றுத் தான் திரும்பினாய் எனக் கேள்விப் பட்டேன்.  இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.


“நான் எப்படி இருக்கிறேனா?” பேச ஆரம்பித்த துரியோதனன் குரல் தழுதழுத்தது.  “நான் எப்படி இருக்கிறேன்? பாட்டியம்மா, பாட்டியம்மா! எப்படி இருக்கிறேன் என்றா கேட்கிறீர்கள்?  நான் மோசமான கிரஹச் சேர்க்கையினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.  அனைவரும் எனக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். “ அவனுடைய துக்கத்தில் மூழ்கிப் போன துரியோதனன் அப்படியே கீழே அமர்ந்து தன்னிரு கரங்களால் தன் கண்களை மூடிக் கொண்டு கண்ணீரை மறைத்தான்.


“மனதைத் தளர விடாதே! குழந்தாய்!” கனிவான குரலில் கூறினாள் ராணிமாதா.  “தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொள்.  இவை நமக்கு இறைவனால் அளிக்கப்படுபவை. நாம் அவற்றை சந்தோஷமாக வரவேற்கவேண்டும்.  அவமானங்களாகவே இருந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். இவையே நம்மை சந்தோஷத்துக்கு அழைத்துச் செல்லும் வழியாகும்.”


“என்ன அவமானத்தை வரவேற்பதா?”வெடித்துக் கதறினான் துரியோதனன்.  தன் கண்களை மறைத்த கைகளை எடுத்த வண்ணம், “நான் காம்பில்யத்திற்கு எதற்காகச் சென்றேன்?  துருபதனின் மகளைப் போட்டியில் வெல்வதற்காகச் சென்றேன்.  ஆனால்?  நடந்தது என்ன?  மிக மோசமாக, மிகக் கேவலமாகத் தோற்றுப் போனேன்! ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் பேரவையில் நகைப்புக்கிடமாகிப் போனேன்.  அந்த பீமன் என்னைக் “குருடனின் பிள்ளை” என அழைக்கிறான்.  அர்ஜுனன், என் ஜன்ம வைரி, திரௌபதியை வென்றுவிட்டான்.  திடீரென ஐந்து சகோதரர்களும், பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் ரத்தமும், சதையுமாக எழுந்துவிட்டனர்.  எல்லாம் அந்தத் தந்திரக்கார வாசுதேவக் கிருஷ்ணனின் தந்திர உபாயங்களினால் தான் இருக்கும். “ பேசும்போதே வார்த்தைகள் முன்னுக்குப் பின்முரணாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரப் பேச முடியாமல் தடுமாறினான் துரியோதனன்.


1 comment:

ஸ்ரீராம். said...

சத்யவதியின் பதிலுக்காய்க் காத்திருக்கிறேன்.