Sunday, August 24, 2014

திரௌபதி கண்டு பிடித்த வழி!

“ஏன் அப்படிச் சொல்கிறிர்கள் பிரபுவே? அது என்ன அவ்வளவு முக்கியமானதா?”

“”திரௌபதி, எங்கள் தாய் நாங்கள் அனைவருமே உன்னை மணந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்த்தாள் என்பதை நீ நன்கறிவாய்!  அவள் வார்த்தையை உண்மையாக்கவே நாங்கள் விரும்பினோம்.  நாங்கள் பிறந்ததில் இருந்து அவள் வார்த்தைக்கு முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும், அந்த மதிப்பு உண்மையானதாக இருக்க வேண்டும் என்றும் சபதம் எடுத்துக்கொண்டோம்.  அதன் பின் விளைவுகள் எப்படி இருந்தாலும் எங்கள் தாயின் வார்த்தைகளைத் தட்டக்கூடாது என்பதே எங்கள் முதல் லக்ஷியமாக இருந்து வருகிறது.  இந்த விஷயத்தில் நாங்கள் அனைவரும் அவள் பேச்சைத் தட்டி இருந்தோமானால் அதனால் அவள் மனம் மிகவும் புண்பட்டிருக்கும்.  உடைந்தே போயிருக்கும்.  அதோடு மட்டுமல்ல, அவள் அன்பு வளையத்தால் எங்களைக் கட்டிப் போட்டிருக்கிறாள்.  அந்த வளையம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மந்திர வளையம்.  நாங்கள் ஐவரும் அதில் இணைந்திருக்கிறோம்.   எங்களோடு உன் திருமணம் நடக்கவில்லை எனில் அந்த மந்திர வளையத்தையும் அது உடைத்து எங்களைப் பிரித்துச் செயலற்றவர்களாக்கி இருக்கும்.” யுதிஷ்டிரன்  இதைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொன்னான்.

திரௌபதி தன் தலையைக் குனிந்து கொண்டு சற்று நேரம் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  விபரம் அறியாத ஒரு தாய் அறியாமையில் சொன்ன சில வார்த்தைகள் அவள் வாழ்க்கையில் எத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது! உண்மையில் அவள் மனம் இத்தகையதொரு திருமணம் தனக்கு நடந்ததை எண்ணி, எண்ணிக் கலவரம் அடைந்து, புரட்சியில் ஈடுபட்டிருக்கும்.  ஆனால் கடந்த பதினைந்து நாட்களாக அவள் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பைக் கண்டு வியந்து வருகிறாள்.  எத்தகையதொரு ஆழமான பாசம் அவர்கள் அறுவரையும் பிணைத்திருக்கிறது என்பதையும், குந்தியின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் உள்ளார்ந்த மதிப்பையும், பாசத்தையும், அவள் சொல்வதைத் தட்டக்கூடாது என்னும் அவர்கள் உயர்ந்த எண்ணத்தையும் அவள் சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறாள்.  ஆகவே இப்போது அவளுக்குக் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

யுதிஷ்டிரன் மேலும் பேசினான்:  “மீண்டும் குருநாதர் வியாசர் சொன்னதே உண்மையாயிற்று.  நாங்கள் ஐவரும் ஒன்றாக இருந்தால் தான் எங்கள் எதிரிகளை எங்களால் வெல்ல முடியும்.  எங்கள் விதியை மாற்ற இயலும்.  ஐவருக்கும் ஒரே மனைவி என்பதால் எங்களை எவராலும் வெல்ல முடியாமல் இருக்கும்.  நாங்கள் தவிர்க்க முடியாதவர்களாகவும் ஆகிப் போனோம். எங்கள் குறிக்கோளை, எங்கள் ஊழ்வினையை, எங்கள் வாழ்க்கையை நீ ஒருவரை மட்டும் மணந்திருந்தால் அந்த நிகழ்வு இடையிட்டுத் தடுத்திருக்கும். “

“உங்கள் குறிக்கோள், லக்ஷியம் என்ன பிரபுவே!”

“தர்மத்தின் பால் நிற்பதும், தர்மத்தைக் கடைப்பிடித்து ஆட்சி செய்வதும் தான்!”


திரௌபதி சிரித்தாள்.  “நானும்  தானே குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு உங்கள் ஐவரையும் மணந்தேன்.  ஏனெனில் அது தான் என் தர்மம் என்று எனக்குப் புரிந்தது.”


“நீ மிகவும் புத்திசாலி.  விவேகம் நிறைந்தவள் திரௌபதி.  ஆனால் நாங்கள் இதை எங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள முடியாது.  உன்னை நாங்கள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும் முடியாது;  கட்டுபடுத்தக் கூடாது.  நீ தேர்ந்தெடுக்காத கணவர்களோடு வாழ்ந்தாக வேண்டும் என உன்னை நாங்கள் நிர்ப்பந்தம் செய்ய முடியாது. அர்ஜுனன் தைரியமானவன்; பெருந்தன்மை மிக்கவன்.  உன்னை சந்தோஷப் படுத்துவது அவன் கைகளில் இருக்கிறது.  அவனிடம் மட்டுமே உள்ளது. உண்மையில் நீ அவனுக்கு மட்டுமே மனைவியாக இருப்பாய்!” யுதிஷ்டிரன் மெல்லிய புன்னகையுடன் ஒரு தந்தை தன் சிறு குழந்தைக்கு மென்மையாகச் சொல்வது போல் மிக அன்புடனும், கனிவுடனும் அவளிடம் கூறினான்.

“நான் ஐவரையும் மணந்திருக்கையில் ஒருவனுக்கு மட்டுமே மனைவியாக இருப்பது சரியா?  அது முறையானதா?  பின்னர் என் வாழ்க்கை பொய்ம்மை நிறைந்ததாகிவிடும்.  நான் பொய்யானதொரு வாழ்க்கையை வாழ்ந்தவளாவேன்.” திரௌபதி தைரியமாக யுதிஷ்டிரன் முகத்தை  நேருக்கு நேர் பார்த்தவண்ணம் சொன்னாள்.

“நீ சொல்வதும் ஒரு வகையில் சரியானது திரௌபதி.  ஆனால்…..நாம் எந்த வழியில் சென்றால் பாவம் செய்ய இடமில்லையோ அந்த வழியில் செல்வதே சிறப்பு.  அதைத் தான் நாம் இப்போது செய்ய வேண்டும்.  வா, நான் உன்னை அர்ஜுனனிடம் அழைத்துச் செல்கிறேன்.” என்று மனதில் எவ்விதமான வருத்தமோ, துக்கமோ இல்லாமல் இயல்பாகச் சொன்னான் யுதிஷ்டிரன்.

திரௌபதி நிமிர்ந்து அவனையே பார்த்தாள்.  யுதிஷ்டிரனிடம் அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பயமும்  இப்போது அறவே அகன்றுவிட்டது.  “என்னை மன்னியுங்கள் பிரபுவே. நான் நீங்கள் உட்பட ஐவரையும் மணந்திருக்கிறேன்.  உங்கள் மனைவியாக எனக்குள்ள கடமையிலிருந்து வழுவாமல் இருப்பதும் எனக்கு ஒரு கடமையாகும். “

“திரௌபதி, இது அவ்வளவு சாமானியமான கடமை அல்ல!” எச்சரித்தான் யுதிஷ்டிரன்.  “பிரபுவே, நீங்கள் மட்டுமா?  நானும் ஒரு தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்பவேண்டும் எனக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அதற்காகவே ஐவரையும் மணந்து கொண்டேன்.  உங்கள் ஐவருக்கும் விசுவாசமான, அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனைவியாக நான் இருக்க விரும்புகிறேன்.  நான் அப்படி இல்லை எனில் நான் கனவு காணும் தர்ம சாம்ராஜ்யம் எப்படி எழும்பும்?”

“இது மிகக் கடினமான வேலை திரௌபதி.  எங்களில் யாரேனும் ஒருவரை மன சங்கடப்படுத்திவிட்டாயோ என்னும் நினைவில் உனக்கு மன சங்கடம் மிகுந்து போகும்.  அந்த நினைவுகளில் நீ துடிப்பாய்!”

“அப்படி எனில் இப்போதே என் சோதனையை ஆரம்பித்து விடுகிறேன்.  நான் நிச்சயமாய் இதில் தேர்ச்சி பெறுவேன் என்னும் நம்பிக்கை என்னிடம் உள்ளது.” என்ற திரௌபதியிடம், “உன்னால் அது எப்படி இயலும்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன்.  “அனுபவ ரீதியாகவும் வயதிலும் நான் சிறியவளே ஐயா.  ஆனால் உங்கள் அனைவருக்கும் என்னால் செய்யக் கூடியது என்ன என்பதை நான் அறிவேன்.  பல்வேறு விதமான தேவைகளோ அது வேண்டும் என்றோ, அது கிடைக்கவில்லை, இது இல்லை என்னும் குறைகளோ இல்லாமல்  நான்  இருப்பேன் என்பதையும் நீங்கள் விரைவில் காண்பீர்கள்.”


திடீரென திரௌபதிக்கு ஏதோ தோன்ற யுதிஷ்டிரனை நிமிர்ந்து பார்த்தாள். சவால் விடும் கண்களோடு அவனைப் பார்த்தாள்.  “பிரபுவே, நீங்கள் நால்வரும் பெயரளவுக்கே எனக்குக் கணவனாக இருக்க விரும்புகிறீர்கள் அல்லவா?  அது தானே உங்கள் யோசனை?  திட்டம்?”


“ஆம் திரௌபதி, நாங்கள் நால்வரும் கூடி எடுத்து முடிவு அது.  அதுதான் சரியானதும் கூட!”


“ஆனால் அந்த முடிவின் மூலம் நான் உங்கள் ஐவருடனும் என் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு செயலற்றுப் போய்விடுமே!  பிரபுவே, எனக்கு ஒரு வழி தெரிகிறது.  அதற்கு உங்கள் உதவி தேவை!” என்றாள் திரௌபதி.  “என்ன?  உனக்கு நீயே ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாயா?  உண்மையாகவா?  என்ன அது? சொல் என்னிடம்!” யுதிஷ்டிரன் அவளிடம் மீண்டும் கனிவு பொங்கக் கேட்டான்.  உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக மனைவியாக என் கடமைகளைச் சரிவரச் செய்தால் தான் நான் நினைக்கும் தர்ம சாம்ராஜ்யத்தை என்னால் எழுப்ப முடியும்.  உங்கள் அனைவரையும் நான் அன்பாக நடத்த எண்ணுகிறேன்.  உங்கள் அனைவரின் அன்பையும் பெற எண்ணுகிறேன். உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை எனில் நான் உங்களில் ஒவ்வொருவருக்கும் வரிசைப்படி ஒவ்வொரு வருடம் மனைவியாக இருந்து வருவேன்.  ஒவ்வொரு வருடம் முடிந்த பின்னரும்  யாரிடம் நான் செல்கிறேனோ அவரின் மனைவி நான்.  இதில் உங்களுக்குச் சம்மதமா?”

“எல்லாம் சரிதான் திரௌபதி.  ஆனால் இதைக் கடைப்பிடிப்பது, அதுவும் ஒழுங்காகக் கடைப்பிடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்று.  “ என்றாலும் அவள் யோசனையைக் கேட்டு அவளை உள்ளூரப் பாராட்டினான் யுதிஷ்டிரன். “பிரபுவே, இதில் உங்களுக்கு ஏதும் கஷ்டம் இருக்கிறதா?” திரௌபதி கேட்டாள்.  “இல்லை திரௌபதி, உனக்குத் தான் சிரமம், சங்கடம் எல்லாமும்.”


“ஓ, நான் அதை முடிக்கிறேன்.  என்னால் முடியும் பிரபுவே.  உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை உள்ளது அல்லவா? ஒவ்வொரு வருடம் முடிவிலும் நான் சாந்திராயன விரதம் இருக்கிறேன்.  அதன் பின்னர் அடுத்த சகோதரனோடு வாழப் போகிறேன்.  ஆனால் நீங்கள் ஐவரும் இதை சந்தோஷமாக ஏற்கிறீர்களா?  நீங்கள் தான் உங்கள் மற்ற சகோதரர்களிடம் இதைக் குறித்துச் சொல்ல வேண்டும்.”


“அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் திரௌபதி.  திரௌபதி, உன் வயதுக்கு நீ மிகவும் விவேகத்துடன் இருக்கிறாய்.” என்று மனமார அவளைப் பாராட்டினான் யுதிஷ்டிரன்.  “ஓ, நான் புத்திசாலியும், விவேகமானவளாயும் இருப்பதாலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தேன்.” திரௌபதி குறும்புச் சிரிப்போடு கூறினாள்.  “நீங்கள் தர்மத்தைச் சிங்காதனத்தில் அமர்த்த நினைக்கிறீர்கள்.  உங்களுடைய மறுபாதியாக இருக்க நான் விரும்புவதில் என்ன தவறு?”


யுதிஷ்டிரன் பரிபூரணமாக திரௌபதியிடம் சரணடைந்துவிட்டான்.  “திரௌபதி, நீ எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். நாங்கள் அந்தப் பரம்பொருளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  உன்னை எங்களுக்குத் தந்தது அவன் தானே!”  “ம்ம்ம்ம்ம் அவன் மட்டுமில்லை……கோவிந்தனும் கூட!’ திரௌபதி இதைச் சொன்னதும் இருவரும் சிரித்தனர்.  அவர்களிடையே இருந்த கண்ணுக்குத் தெரியாத இடைவெளி மறைந்தது.  மறுநாள் காலை எழுந்தபோது திரௌபதி பாரிஜாத மலர்களால் சூழப்பட்டதொரு நந்தவனத்தில் அந்த மலர்களால் அபிஷேஹம் செய்யப்பட்டதொரு மனநிலையை அடைந்திருந்தாள். யுதிஷ்டிரனுடைய சாந்தமும், மென்மையும் அவளைச் சுற்றிலும் வியாபித்திருந்தது.


1 comment:

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு.