Wednesday, March 30, 2016

ரோகிணியின் கண்ணீர்!

ரோகிணியின் முகத்தைக் கூர்ந்து கவனித்த கிருஷ்ணனுக்கு அவளுடைய ஆழ்ந்த துக்கம் புரிந்தது. மனம் உடைந்து துக்கத்தின் விளிம்பில் இருக்கும் அவளைக் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தான் கிருஷ்ணன். “வேண்டாம், வேண்டாம்,பறவைப் பெண்ணே! நான் உன்னை மணந்து கொள்கிறேன்! ஆம் மணந்து கொள்கிறேன். உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்.” என்று ஒரு தாய் தன் மகவிடம் பேசுவது போன்ற வாத்சல்யத்துடன் கூறினான். அவள் தன் தலையை ஆட்டி மறுத்தவண்ணம் அவன் கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். பின்னர் மெதுவாகக் கூறினாள்; “இல்லை, இது சரியில்லை! நீ என்னை மணந்தால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. நான் உன் மனைவியாக இருப்பதற்குத் தகுதி வாய்ந்தவள் அல்ல!” என்றாள். மீண்டும் கலவரம் அடைந்திருக்கும் அவள் முகத்தையும் பயத்தில் காணப்பட்ட கண்களையும் கவனித்த கிருஷ்ணன் மனதில் அன்பு பிரவாகம் எடுத்தது. அவள் தோள்களின் மேல் தன் கையை அன்புடன் வைத்துக் கொண்டே, “ பறவைப்பெண்ணே! நீ ஏன் எனக்கு மனைவியாக ஆவதற்கு இவ்வளவு பயப்படுகிறாய்? பயப்படாதே! உன்னை மணந்து கொண்டு நான் சந்தோஷமாகவே இருப்பேன்!” என்றான்.

அவர்களிடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அனைத்துக் கரடி இன மனிதர்களும் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். ரோகிணியும், கிருஷ்ணனும் ஆரியர்களின் மொழியிலேயே பேசிக் கொண்டதால் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அவர்கள் எவருக்கும் புரியவில்லை. ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு மகிழ்வானதாக இருந்தது. இருவரில் எவரோ ஒருவர் நெருப்பில் தள்ளப்படுவதை வேடிக்கை பார்த்து ஆனந்திக்கலாமே! சிறிது நேரம் தரையையே பார்த்துக் கொண்டிருந்த ரோகிணி எதுவும் பேசவில்லை. பின்னர் கிருஷ்ணனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் சொல்லவொணாத் துயரம் மேலோங்கிக் கொண்டிருந்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்த அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அதே சமயம் துயரத்தின் தாக்கம் தாளாத அவள் மயங்கிக் கீழே சரிய இருந்தாள். நல்லவேளையாக அருகே நின்றிருந்த சத்யபாமா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். விக்கி விக்கி அழுத ரோகிணி தன் தந்தையாகிய ஜாம்பவானை நோக்கி, “தந்தையே, என்னை நெருப்பில் போட்டுக் கருநிறக் கடவுளிடம் ஒப்படையுங்கள்!” என்று வேண்டினாள். கிருஷ்ணன் ஜாம்பவான் பக்கம் திரும்பித் தன் மொழியில் பேச ஆரம்பித்தான். “ஐயா, தயை கூர்ந்து நான் சொல்வதை ரோகிணிக்கு உங்கள் மொழியில் எடுத்துச் சொல்லுங்கள். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் மொழியில் சொல்லப்பட்டு அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினான்.

ஜாம்பவான் சம்மதிக்கக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான். “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்னுடைய மனைவியாக ஆக உன் சம்மதத்தைத் தெரிவிப்பாயாக!” என்று வேண்டிக் கேட்கும் பாவனையில் கிருஷ்ணன் கூறினான். இதன் மூலம் அவள் தனக்குத் தான் ஒரு உதவியைச் செய்யும்படி அவள் நினைக்குமாறு செய்தான். அத்தனை வேதனையிலும் தென்பட்ட நம்பிக்கைக்கீற்று ரோகிணியைக் கிருஷ்ணன் பால் திரும்பிப் பார்க்க வைத்தது. கிருஷ்ணன் மேலும் கூறினான். “மாட்சிமை பொருந்திய கரடிகளின் அரசரே! கொண்டாட்டங்களையும் சடங்குகளையும் தொடருங்கள். நான் அவளை மணக்க விரும்புகிறேன்.” என்றான். ஜாம்பவான் ரோகிணியின் பக்கம் திரும்பினார். “ நான் கரடிகளின் அரசன், உன்னைக் கேட்கிறேன் ரோகிணி, ஜாம்பவானின் மகளே! இதோ இங்கே இருக்கும் இந்த வாசுதேவக் கிருஷ்ணனை மணந்து கொள்வதாக நீ நம் கருநிறக்கடவுள் மேல் சங்கல்பித்து உறுதி மொழி கொடுப்பாயா? உன்னால் இவனை மணக்க முடியுமா?” என்று கேட்டார். “அதை மீண்டும் அவளுக்குத் தெளிவாக்குங்கள், ஐயா!” என்ற கிருஷ்ணன், ரோகிணியைப் பார்த்து, “பறவைப் பெண்ணே! நான் உன்னை மணக்க விரும்புகிறேன். உன் தந்தையும் உன்னை எனக்கு மணம் செய்து கொடுக்க விரும்புகிறார்.” என்றான்.

ஜாம்பவான் மீண்டும் ரோகிணியிடம் கேட்பதற்கான கேள்வியைக் கிருஷ்ணனிடம் கூறினார். “ நீ என்னைத் திருமணம் செய்து கொண்டு உன் இந்தப் பிறந்தகத்தை விட்டு விட்டு என்னுடன் என் மனைவியாக வருவதற்குத் தயாராக இருக்கிறாயா?” எனக் கேட்கும்படி கூறினார். ஆரியர்களின் மொழியில் மிகச் சிறிய அளவே பரிச்சயம் உள்ள ரோகிணி, கிருஷ்ணனைப் பார்த்துத் தன் நடுங்கும் குரலில் கூறினாள்:”ஏ, அந்நியனே நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் என்றேனும் ஓர் நாள் நீ என்னை விட்டுச் சென்று விடுவாய். பின்னர் நான் கணவன் இல்லாமல் தனியாக வாழப் பழகவேண்டும். அப்படி இல்லாமல் நீ என்னைத் திருமணம் செய்து கொண்டு உன்னுடன் அழைத்துச் சென்றாயானால் உன் மனிதர்களோடு எனக்குப் பழகத் தெரியாமல் தவிப்பேன். என்னை ஏன் அழைத்து வந்தோம் என்று நீ வருந்தும்படி ஆகி விடும்.” என்றாள். ரோகிணியின் பேச்சைக் கேட்ட சத்யாவின் மனம் மிக நெகிழ்ந்தது. ரோகிணியைப் பார்த்து அவள், “ரோகிணி, சொல், சத்தியம் செய்வதாகச் சொல்!” என்று கூறினாள். கிருஷ்ணனும் அவளை மிகவும் அன்புடன் பார்த்து நம்பிக்கை தொனிக்கும் குரலில், “நீ எங்கிருந்தாலும் நானும் அங்கிருப்பேன்; நான் எங்கே சென்றாலும் உன்னையும் அழைத்துச் செல்வேன்! என் மனைவியாக உனக்குச் சம்மதமா? நீ அதற்காகக் கருநிறக்கடவுளின் பெயரால் சத்தியம் செய்கிறாயா?” என்று கேட்டான்.

தன் தலையைக் குனிந்து கொண்ட ரோகிணி, “நான் சத்தியம் செய்கிறேன்!” என மெல்லிய குரலில் வாக்களித்தாள். கரடி அரசன் ஜாம்பவான் கிருஷ்ணனைப் பார்த்து, “ஏ, அந்நியனே, வாசுதேவக் கிருஷ்ணா! அவளிடம் அவளை நன்கு கவனித்துக்கொள்வதாக உறுதி மொழி கொடுப்பாய்!” என்றான்.  அதன் பின்னர் ஜாம்பவான் மேலும் ஒரு சடங்கைக் குறித்துச் சொன்னவண்ணம் கிருஷ்ணனிடம் தான் சொல்வதைத் திரும்ப அப்படியே கூறச் சொன்னான். “எல்லோரிலும் வல்லவராகவும், எவருக்கும், எதற்கும் பயப்படாதவராகவும், எல்லோருக்கும் தலைவராகவும் இருக்கும் எங்கள் கருநிறக் கடவுளே! மேலும் தர்மத்தின் காவலன் ஆன இறப்புக் கடவுள் ஆன யமனே! உங்கள் இருவருக்கும் நான் இந்த உறுதிமொழியைத் தருகிறேன். நான் மீறினேன் எனில் என்னை மரணம் தழுவட்டும்!” என்றான். கிருஷ்ணன் அதை அப்படியே திருப்பிச் சொன்னான். பின்னர் ரோகிணியிடம் திரும்பிய ஜாம்பவான், “ரோகிணி, நான் சொல்வதைத் திரும்பச் சொல்! “நான், ரோகிணி, கருநிறக்கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன். என் கணவனாகப் போகும் இந்த வாசுதேவக் கிருஷ்ணன் எங்கே இருப்பாரோ அங்கெல்லாம் அவருடன் நானும் இருப்பேன். அவர் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பேன்.” என்று சொல்லச் சொன்னான். ரோகிணியும் அதைத் திரும்பக் கூறினாள். நிமிர்ந்து கிருஷ்ணனுக்குத் தன் அழகிய சின்னஞ்சிறிய முகத்தைக் காட்டிய ரோகிணி, “அந்நியரே, இப்போதும் ஒன்றும் மோசமாக வில்லை. இப்போது கூட நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம். என்னை நீங்கள் மணக்கவேண்டும் என்று கட்டாயமெல்லாம் இல்லை!” என்றாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மழையெனப் பொழிந்தது.

Tuesday, March 29, 2016

ரோகிணியின் முடிவு!

அவர்கள் மூவரும் திரும்பியதும், கரடி மனிதர்கள் தங்கள் உணவில் அவர்களுக்கும் பங்கு கொடுத்தனர். அனைவரும் இருப்பதைப் பங்கிட்டு உண்டனர். கரடி மனிதர்கள் அதீத சந்தோஷத்திலும் மன நிம்மதியிலும் இருந்தனர். ஆகவே நன்கு உண்டு குதித்துக் கும்மாளமிட்டனர். ஆனால் அதற்கு மாறாகக் கரடிகள் அரசனான ஜாம்பவான் கடுமையான முக பாவத்துடன் அமைதியைக் கடைப்பிடித்தான். உணவு உண்டு முடித்ததும், நான்கு கரடி மனிதர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி எழுந்து ஒரு பெரிய கரடியின் தோலைக் கொண்டு வந்தார்கள். அதன் தலை அது இருக்குமிடத்திலேயே எப்போதும் போல் காணப்பட்டது. இதைத் தான் சாம்பன் அணிந்திருந்தான். அந்த உடையை இப்போது கொண்டு வந்த கரடி மனிதர்கள் நால்வரும் அதைக் கிருஷ்ணனுக்கு அணிவித்தனர். அதன் பின்னர் சாஸ்திர ரீதியான சம்பிரதாய ரீதியான சடங்குகள் தொடங்கின. தங்கள் கரகரத்த குரலில் பெண்கள் வாழ்த்துப் பாடல்களைப் பாட ஆண்களோ அவர்களின் கருநிறக்கடவுளைத் துதித்து அழைக்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்த நெருப்பில் இருந்து கொஞ்சம் சாம்பலைக் கைகளில் எடுத்த கரடி அரசன் அதைக் கிருஷ்ணனின் நெற்றியிலும் உடலிலும் தடவினான். பின்னர் பிரார்த்தனை செய்து கொண்டான். “என்றென்றும் வல்லவரே, என்றென்றும் எவருக்கும் பயப்படாதவரே! அனைவருக்கும் கடவுளாக இருப்பவரே! எங்கள் கருநிறக் கடவுளே! எங்களைக் காத்து ரக்ஷிப்பாய்! உன்னுடைய அடிமைகளான நாங்கள் கரடி மனிதர்கள்! எங்களைக் காத்து அருள்! இதோ வசுதேவனின் குமாரன் வாசுதேவக் கிருஷ்ணன்! இவனை உன்னுடைய பிரியத்துக்கும் விருப்பத்துக்கும் உகந்த மகனாக அங்கீகாரம் செய்து விடு! இவனை ஏற்றுக் கொள்! கரடி மனிதர்களாகிய நாங்கள் இன்றையிலிருந்து நான்காம் நாள் உன் முன்னர் உன் அங்கீகாரத்திற்கென இவனைச் சமர்ப்பிக்கிறோம்.”

அவன் முகமும், உடலும் விபூதியால் பூசப்பட்டபோது கிருஷ்ணனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அதிலும் அந்த நெருப்பு யாக நெருப்பு எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் அதில் தான் பல மிருகங்களும், பல கரடி மனிதர்களும் தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர். இதை நினைக்கையில் அவன் கலங்கினான். பின்னர் கரடி அரசன் கரடிகளின் பற்களால் ஆன கழுத்தில் அணியும் ஆபரணம் ஒன்றைக் கிருஷ்ணனுக்கு அணிவித்தான். கரடி மனிதர்கள் சந்தோஷம் தாங்காமல் கூச்சலிட்டுத் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் கிருஷ்ணனை, “எல்லாம் வல்ல கருநிறக்கடவுளின் பெயரில் அவருடைய கட்டளைகளைத் தான் ஏற்றுக் கீழ்ப்படிந்து நடப்பதாக” உறுதிமொழி எடுக்க வைத்தான். கிருஷ்ணனைத் தான் சொன்னவற்றை அப்படியே திரும்பச் சொல்லச் சொன்னான். கிருஷ்ணனும், “எல்லாம் வல்ல, எவருக்கும் பயமில்லாத கருநிறக் கடவுள் மேல் தான் அவருடைய கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நடத்துவேன்!” என உறுதி மொழி கொடுத்தான். அதன் பின்னர் சாம்பன் அதுவரை அமர்ந்திருந்த ஆசாரியர்களுக்கே உரிய தனியான ஆசனத்தில் அமரும்படி கிருஷ்ணனை ஜாம்பவான் கேட்டுக் கொண்டான். அதன் பின்னர் அவர் கரடி மனிதர்களின் மொழியில் ஏதேதோ கட்டளைகளைக் கூற அங்கிருந்த கரடிப் பெண்களில் சிலர் எழுந்து சென்று ஜாம்பவானின் மகளான அந்தப் பறவைக்குரலில் பாடும் பெண்ணை அழைத்து வந்தனர். அவள் தலையிலிருந்து கால் வரை கரடித் தோலால் மூடப்பட்டிருந்தாள். அவள் தயக்கத்துடனும், விருப்பமில்லாமலும் வேறு வழியின்றி நடுங்கியபடி அங்கே வந்திருந்தாள் என்பது அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததிலிருந்து புரிந்தது.

பின்னர் கரடி அரசன் எழுந்து நின்று உரத்த குரலில் தன் ஆசிகளைத் தெரிவித்துவிட்டுக் கிருஷ்ணனை எழுந்து நிற்கச் சொன்னான். அதன் பின்னர் ஜாம்பவான் கேட்டார்:”கரடிகளின் ஆசாரியரே! இந்தக் கரடி உலகு முழுதுக்கும் குருவானவரே! நீங்கள் எல்லாம் வல்ல கருநிறக்கடவுளால் அவரின் பிரியத்துக்குப் பாத்திரமானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீஈர்கள். இதோ இங்கே நிற்கும் இந்த இளம்பெண், ரோகிணியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இவள் கரடிகளின் அரசனான ஜாம்பவான் ஆகிய என்னுடைய பெண்! இவளை நீங்கள் ஏற்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணன், “கரடிகளின் அரசரே! என்னை உங்கள் ஆசாரியன் என நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள்! ஆகவே அதன்படி நான் தீர்மானித்திருப்பது என்னவெனில் நான் இவளைத் திருமணம் செய்யப் போவதில்லை என்பதே!” என்றான் திட்டவட்டமாக! ஜாம்பவானுக்குக் கோபம் எல்லை மீறியது. அவர் கண்கள் பயங்கரமான கோபத்தில் சிவந்து காணப்பட்டன. கிருஷ்ணனிடம், “நீ ஆசாரியனாக இருந்தாலும் எங்கள் கருநிறக்கடவுளால் ஏற்கப்படும்வரை நீயாக எந்த முடிவும் எடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது!” என்றார். திடமாக அதே சமயம் எவராலும் எதிர்க்க முடியாவண்ணம் ஜாம்பவான் பேசினார். “எங்கள் கருநிறக்கடவுளின் சட்டதிட்டங்களின் படி இதுவரை இருந்து வந்த ஆசாரியனை எவன் ஒருவன் வெல்கிறானோ அல்லது கொல்கிறானோ அந்த வென்றவன், தோற்றவனுக்கு என நிச்சயித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மணந்தே ஆகவேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது! மறுக்கவும் கூடாது! அப்படி நீ  அவள் பிறந்ததில் இருந்து சாம்பனுக்கு என நிச்சயிக்கப்பட்டிருந்த ரோகிணியை மணக்க மறுத்தாயெனில், ரோகிணி இந்த எரியும் நெருப்பினுள் தள்ளப்படுவாள். ஏனெனில் அவளுக்கென நிச்சயிக்கப்பட்டிருந்த மணாளனை நீ கொன்று விட்டாய்! ஆகவே இந்தக் கரடி உலகச் சட்டப்படி நீ அவளை மணந்தே ஆகவேண்டும்; அல்லது ரோகிணி நெருப்பினுள் தள்ளப்படவேண்டும்! அதுவும் இங்கேயே, இப்போதே அது நடக்க வேண்டும்!”

இந்த இறுதி எச்சரிக்கைக்கு அங்கு கூடி இருந்த கரடி மனிதர்களிடையே இதை ஆதரித்துக் கூக்குரல்கள் எழுந்தன..”எல்லாம் வல்ல கருநிறக்கடவுள் இந்தக் கரடி மனிதர்களைக் காப்பாற்றட்டும்; ரக்ஷிக்கட்டும்!” என்றெல்லாம் கூச்சல் இட்டனர். சற்று நேரம் கூக்குரலிட்ட அனைவரும் அமைதி அடைந்த பின்னர் கிருஷ்ணன் மேலும் பேசுவான்; “ உங்கள் கடவுளால் இயற்றப்பட்ட சட்டத்தையோ சம்பிரதாயத்தையோ நான் மீற விரும்பவில்லை. ஆனால் எனக்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ விருப்பமே இல்லாத ஒரு திருமணத்தை நடத்துவதற்கு அந்தக் கடவுளே ஒத்துக்கொள்ள மாட்டார்! அவரும் மறுதலிப்பார்!” என்றான் கிருஷ்ணன். ஜாம்பவான் தன் கைகளைத் தூக்கிய வண்ணம் அவர்களின் கருநிறக்கடவுளைத் துதித்துக் கொண்டு அவரின் கட்டளைகளைத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பிக்கக் கூடி இருந்த கூட்டமும் ஜாம்பவானுடன் அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டது. அதன் பின்னர் கரடி அரசன் ஜாம்பவான் கிருஷ்ணன் பக்கம் திரும்பித் தன் கண்டிப்பான குரலில் மீண்டும் கேட்டார்:”உன்னை முடிவாகக் கேட்கிறேன். இந்தப் பெண்ணை நீ ஏற்கப் போகிறாயா? இல்லையா? நீ ஏற்க மறுத்தாயெனில் இவளை எல்லாம் வல்ல கருநிறக் கடவுளுக்குப் பலி கொடுத்தே ஆகவேண்டும்; வேறு வழியில்லை! என்ன செய்யப் போகிறாய்? விரைவில் சொல்!”

கிருஷ்ணன் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளுடைய அழகிய குழந்தை போன்ற முகம் துக்கத்தால் நிரம்பி இருந்தது. அவள் கண்கள் பயத்தைக் காட்டின. அவள் திரும்பி அந்த எரியும் நெருப்பைப் பார்க்கையில் அவள் கண்கள் மழையென வர்ஷித்தன. ஆனால் கரடி மனிதர்கள் அதற்கெலலம் அஞ்சாமல், “தூக்கி நெருப்பில் தள்ளுங்கள் அவளை!” என்று மீண்டும் மீண்டும் கூக்குரலிட்டனர். மீண்டும் அங்கு கஷ்டப்பட்டு அமைதியை நிலை நாட்டிய ஜாம்பவான் கிருஷ்ணனிடம், “ஆசாரியனே, நீ என்ன சொல்கிறாய்? ஜாம்பவானின் பெண்ணாகிய இந்தப் பெண்ணை நீ மணக்கப் போகிறாயா இல்லையா?” என்று மீண்டும் கேட்டான். ரோகிணி மயங்கிக் கீழே விழ இருந்தாள். ஆனால் மற்றக் கரடிப் பெண்கள் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். ஓர் வயது முதிர்ந்த கரடிப் பெண்மணி ரோகிணியின் முதுகில் ஓங்கி ஓர் குத்து வைத்து அவள் மயங்கி விழுவதிலிருந்து அவளைத் தடுத்தாள். தன் கையிலிருந்த ஓர் குடிக்கும் பானத்தை சத்யபாமா ரோகிணியிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். ரோகிணி தனக்கு யார் குடிக்கக் கொடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்தாள். சத்யபாமா என்று தெரிந்ததும் அவளைப் பார்த்து, “நீ மிக மிக நல்லவள், அந்நியளே!” என்றபடி அவள் தோள்களில் சாய்ந்து விம்மினாள். சற்று நேரம் ஆசுவாசம் செய்து கொண்ட ரோகிணி பின்னர் தன் தந்தையைப் பார்த்துப் பேசினாள்.

“தந்தையே, என்னை நெருப்பிலிட்டு நம் கருநிறக்கடவுளிடம் ஒப்படைப்பீராக! இந்த அந்நிய மனிதனைத் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை!” என்றாள். இதைச் சொல்லிவிட்டு மிகப் பரிதாபமாகத் தன் தந்தையைப் பார்த்தாள். கிருஷ்ணன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் இளம்பெண் என்று சொல்லப்பட்டாலும் இன்னமும் சிறுமிப் பருவத்தைத் தாண்டவில்லை. ஆனால் அவள் அவனைத் திருமணம் செய்து கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை. அவன் அவளுடைய விருப்பத்தை அந்தத் திருவிழா நாளன்று மறுத்துவிட்டான் அல்லவா? அதோடு இல்லாமல் அவளுக்குக் கிருஷ்ணன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறான் என்பதும் புரிந்திருந்தது. “என்ன?” என்று கோபத்துடனும் ஆங்காரத்துடனும் ரோகிணி சொன்னதைக் கேட்டுக் கரடி அரசன் ஜாம்பவான் கூச்சலிட்டான். தன்னுடைய அத்தனை துக்கத்திலும், துயரத்திலும் கூட நடுங்கும் குரலில் உடலெல்லாம் நடுக்கத்தில் ஆழ்ந்திருக்க ரோகிணி பேசினாள்: “தந்தையே, நான் நெருப்பில் மூழ்க விரும்புகிறேன்!” என்ற வண்ணம் நெருப்பை நோக்கி நடந்தாள்.

Thursday, March 24, 2016

திருமணம் இல்லையேல் மரணம்!

அவளுடைய அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டிய கிருஷ்ணன் அவளிடம், “எனக்குத் தெரியும் சத்யா, நான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்தேன் எனில் நாம் மூவரும் மிருகங்களுக்கு உணவாகி விடுவோம். இதை நான் புரிந்து தான் வைத்திருக்கிறேன்.” என்று அன்பொழுகக் கூறினான். அதற்கு சத்யபாமா, “அது மட்டுமா? பிரபுவே, நீங்கள் ரோகிணியைத் திருமணம் செய்ய மறுத்தால் அவளை நெருப்பில் தூக்கிப் போட்டுவிடுவார்களே!” என்ற சத்யா வேதனை மிகுந்த தன் மன எழுச்சியை வெளிக்காட்டாதிருக்கத் தலையைக் குனிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள். மேலும் அவள் நடுங்கும் குரலில், “பிரபுவே, நீங்கள் ஜாம்பவானின் மகளை மணந்து கொண்டால் இருவருமே தப்பி விடுவீர்கள்!” என்றாள். கண்ணன் அப்போது சாத்யகியின் பக்கம் திரும்பி, “இங்கே பார், சாத்யகி! நீங்கள் இருவரும் மட்டுமில்லாமல் நானும் ச்யமந்தகமணி மாலையைத் திரும்பக் கொண்டு வருவதாக துவாரகையில் நம் குலத்தவர் அனைவரிடமும் சபதம் செய்திருக்கிறோம். ஆகவே நாம் ச்யமந்தகமணி மாலையைத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது அந்த முயற்சியைக் கை விட வேண்டும். கருநிறக் கடவுள் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நம் முயற்சியை விடக் கூடாது!” என்றான் கிருஷ்ணன்.  அதற்கு சாத்யகி, “இதை நாம் எப்படிச் செய்யப் போகிறோம்? கோவிந்தா? வழியை நீயே சொல்!” என்றான்.

“ம்ஹூம், இல்லை, சாத்யகி, இதுவரை எனக்கு வழி ஏதும் புலப்படவில்லை. மனதில் ஒரு உணர்வு தோன்ற வேண்டும், அது தோன்றவில்லை. ஒரு வேளை நாளைக்குள் நெருக்கடி முற்றினால் நாளை தோன்றுமோ என்னமோ!” என்றான் கிருஷ்ணன். மூவரும் வெகு நேரம் ஏதும் பேசாமல் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணன் ஏதோ முடிவுக்கு வந்தவன் போலப் பேச ஆரம்பித்தான்:”எனக்கு என் மனதில் ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. நாம் ஒருவெளை இங்கிருந்து தப்பினால் அது நாம் மூவர் மட்டுமின்றி ச்யமந்தகமணியும் சேர்த்துத் தான் செல்ல வேண்டும். அது மட்டும் உறுதி!” என்றான்.அப்போது கரடி மனிதர்களில் மூத்தவர் ஒருவர் அங்கு வந்து அவர்களை அரசனின் குகைக்குள் அழைத்தார். தன் மற்றத் தோழர்களைப் பார்த்த கிருஷ்ணன், இருவரிடமும், “முகத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் வருத்தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டாம். முக்கியமாக சத்யபாமா, நீ கவனமாக இருக்க வேண்டும். கண்ணீர் விட்டு விடாதே! அல்லது வெறி கொண்ட கூச்சல் போட்டு விடாதே! எல்லாவற்றிற்கும் மேல் மயக்கம் போட்டு விழுந்துவிடாதே! என்ன நடந்தாலும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். நாம் மூவரும் இப்போது ஒன்றே! இதோ பார் பாமா! நீ மட்டுமல்ல, உன் அருமையான பொல்லாத ஊரியும் அதன் அழகிய குட்டியும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஹூம், என்னை விட்டு ஒரு நிமிடம் கூட இந்தக் குட்டி பிரிய மறுக்கிறதே!” என்ற வண்ணம் அந்தக் குட்டியை சத்யபாமாவிடம் கொடுத்தான் கிருஷ்ணன்.

அரசனின் குகைக்குள் மூவரும் வந்தபோது அவருக்கென உரிய கல்லால் ஆன சிங்காதனத்தில் வீற்றிருந்தார் ஜாம்பவான். அவர் பார்வை கடுமையாகவும், யாரையும், எதற்காகவும் மன்னிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாகவும் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தார். முதல் நாளன்று கிருஷ்ணனைச் சந்தித்தபோது இருந்த நட்பான தொனியும், நட்பான முகபாவனையும் இன்று அறவே இல்லை. அவருடன் மற்ற ஆறு பெரியோர்களும் கூட இருந்தனர். சற்றுத் தள்ளி மற்றக் கரடி மனிதர்கள் அரை வட்ட வடிவில் அமர்ந்து கொண்டு இங்கே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜாம்பவான் அவர்களை அமரச் சொல்ல மூவரும் ஜாம்பவானை வணங்கி விட்டு அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் ஜாம்பவான் தன் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அனைவரும் மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அவர் தன் மேல் தங்கள் கருநிறக் கடவுள் ஆவிர்ப்பவித்திருப்பதைப் போல தலையை உலுக்கத் தொடங்கினார். ஒரு மோசமான முடிவை எடுக்கப் போவதால் அதற்கெனத் தன்னைப் பல விதங்களிலும் அவர் தயார் செய்து கொண்டிருந்தார் என்பது புரிந்தது. பின்னர் தன் சிவந்த கண்களைக் கிருஷ்ணன் மேல் நாட்டி அவனையே உற்றுக் கவனித்தார்.

பின்னர் அவர் பேச ஆரம்பித்தபோது தன் நினைவை இழந்ததொரு மயக்க நிலையில் பேசுவது போல் இருந்தது. “ஏ, அந்நியனே! எல்லாம் வல்ல இறைவனின் மாற்றவே முடியாத கட்டளைகளைக் குறித்து நீ அறிவாயா? அவற்றை நீ புரிந்து கொண்டாயா?” ஜாம்பவான் கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணன் அந்தச்  சூழ்நிலையின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவனாக அதைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே ஆனால் அதே சமயம் இனிமையாகவும், பணிவாகவும், ஜாம்பவானிடம், “ஆம், அரசே!” என்று பதிலளித்தான். அங்கிருந்த மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கரடி அரசன் அதைத் தங்கள் மொழியில் மொழி பெயர்த்து அங்கிருந்த மற்றப் பெரியோருக்கும் மற்றக் கரடி மனிதர்களுக்கும் விளக்கினார். மேலும் தொடர்ந்து கிருஷ்ணனிடம்,
“நீ எங்கள் ஆசாரியனும் எங்கள் கடவுளுக்கு மிகவும் பிடித்தவனும் ஆன, சாம்பனைக் கொன்று விட்டாய்! ஆகவே, நீ அடுத்த ஆசாரியனாக அறிவிக்கப்பட்டிருக்கிறாய்!” என்ற வண்ணம் கரடிகள் உலகின் சட்டத்தைக் கிருஷ்ணனுக்குப் புரியும்படி சொன்னார் ஜாம்பவான். “இப்போது இதன் பின்னர், மூன்று நாட்கள் கழித்து, நாங்கள் உன்னைக் கரடி உலகின் கடவுள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வோம். எங்கள் கருநிறக்கடவுள், எவராலும் வெல்ல முடியாதவரிடம் நீ உன் ஆராதனைகளைத் தெரிவிக்க வேண்டும். அவரை நீ வணங்க வேண்டும். அவர் உன்னை ஆசாரியனாக ஏற்கச் சம்மதித்தால், நீ தான் அவரின் பிரியத்துக்கு உகந்த மகனாகவும் அறிவிக்கப்படுவாய்! புரிகிறதா உனக்கு?” என்று கேட்டார். “ஆம், ஐயா, நன்கு புரிகிறது. நான் புரிந்து கொண்டேன்.” என்று கிருஷ்ணனும் தீர்க்கமான உறுதியான குரலில் கூறினான்.

“அப்போது நீ எங்கள் கடவுளின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறாயா?”

“ஆம், ஐயா!”

“இன்னமும் கேள்! சாம்பனைக் கொன்று  விட்டதால் அவனுக்கென நிச்சயிக்கப்பட்டிருக்கும் ரோகிணியை நீ மணந்தே ஆகவேண்டும். அது தான் எங்கள் கடவுளின் மறுக்கவே முடியாத சட்டமும் கூட!” என்று ஜாம்பவான் தனது கம்பீரமான குரலில் அதே சமயம் பயபக்தி நிரம்பிய உணர்வுடன் மெதுவாக அதே சமயம் திட்டவட்டமாகக் கூறினார். “ஆனால் அவளுக்கு இதில் விருப்பமா? அதைக் கேட்டீர்களா? அவள் மனம் இதைக் குறித்து, இந்த மாற்றத்தைக் குறித்து என்ன நினைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு இருக்கிறீர்களா?” கிருஷ்ணன் கேட்டான்.

ஜாம்பவானோ, “அவளுக்கு வேறு வழியே இல்லை! இதை அவள் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். எங்கள் கருநிறக் கடவுளாக் நிர்ணயிக்கப்பட்ட இந்தச் சடங்கு பற்றிய இந்தச் சட்டம் வெளிப்படையானது! அவள் அறிந்ததும் கூட!” ஜாம்பவானின் குரலில் அவர் இந்த விஷயத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் பற்றற்றுப் பேசுவது போலவும் ஓர் உணர்வு தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்பதைக் கிருஷ்ணன் கவனித்தான். மேலும் ஜாம்பவான் தொடர்ந்து, “அப்படி ஒருவேளை நீ அவளை மணக்க மறுத்தாயானால் இங்கே எரியும் பெரு நெருப்பில் அவள் பலியிடப்படுவாள்.” என்ற வண்ணம் அங்கே தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த அவர்கள் குலத்து அடையாளமான நெருப்பைக் காட்டினார். சத்யபாமாவுக்குக் கண்களில் கண்ணீர் வந்ததோடு ஒரு பெரும் விம்மலும் எழுந்தது. அதைக் கஷ்டப்பட்டு அவள் அடக்கிக் கொண்டாள். “அது சரி ஐயா! ச்யமந்தகமணியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அல்லது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“அந்த மந்திர சக்தி வாய்ந்த விலை உயர்ந்த மணிமாலைக்கு நாங்களே பாதுகாவலர்கள். எங்களுடைய புனிதமான குகைக்கு அது சொந்தமானது. சத்ராஜித் அதை இங்கே வந்தபோது எடுத்துச் சென்றுவிட்டான். ஏனெனில் இதை அவனுடைய கடவுள் சூரியன் கொடுத்ததாகச் சொல்கிறான். அவன் இதை எடுத்துச் செல்லும்போது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கே எங்கள் கடவுளைச் சந்திக்க நிலாப் பெண் வரும்போது அந்த மணிமாலைக்குத் தக்கபடி ஆராதனைகள், வழிபாடுகள் நடத்துவதாக வாக்குக் கொடுத்திருந்தான். இப்போது அது இங்கே மீண்டும் வந்துவிட்டபடியால், நாங்கள் எங்கள் கடவுளிடம் கேட்க வேண்டும். அதை என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் வழிகாட்டுதலின் பேரில் செய்வோம்.”

சிறிது நேரம் இந்த விஷயத்தைக் குறித்துக் கரடி அரசனும் அவன் மனிதர்களும் தங்கள் மொழியில் விவாதித்துக் கொண்டனர். “இப்போது நீங்கள் மூவரும் உங்கள் குகைக்குச் செல்லலாம்.:” என்று உத்தரவு கொடுத்தான் ஜாம்பவான். பின்னர் மேலும் தொடர்ந்து, “நாம் மீண்டும் மத்தியானம் இந்த நெருப்புக்கு அருகே சந்திப்போம். எங்கள் கடவுளால் அளிக்கப்பட்ட சடங்குகளும், சட்டங்களும் நிறைவேற்றுவது குறித்து விவாதித்து மாலையில் அவற்றை முடித்து வைப்போம்.” என்றார் ஜாம்பவான். கிருஷ்ணனும் மற்ற இருவரும் தங்கள் குகைக்குச் சென்றனர். அனைவர் மனதிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்னும் எதிர்பார்ப்புக் கலந்த பரபரப்பு இருந்தது.  விரைவில் சூரியன் நடு உச்சிக்கு வந்தான். ஜாம்பவானும் அவன் மனிதர்களும் நெருப்பருகே கூடியவர்கள் கிருஷ்ணனுக்கும் அவன் நண்பர்களுக்கும் அங்கே வந்து சேரும்படி அழைப்பு அனுப்பினார்கள்.

Wednesday, March 23, 2016

பாமாவின் வேண்டுகோள்!

ஜாம்பவான் உள்ளே சென்றதும், பெரியோர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றும் அங்கிருந்த மீதம் உள்ள கரடி மனிதர்கள் ஒவ்வொருவராகக் கலைய ஆரம்பித்தனர். சிலர் திரும்பிக் கண்ணனையும் அவன் நண்பர்களையும் பார்த்தனர். அவர்கள் பார்வையில் தீய எண்ணமே மிகையாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கிருஷ்ணனும், மற்ற இருவரும் சற்று நேரத்தில் தனியாக விடப்பட்டனர். ஆனால் அது வெறும் பார்வைக்குத் தான் என்பதும், காவலர்கள் சற்றுத் தூரத்தில் அவரவரின் துணைக்கரடிகளோடு அங்கே அமர்ந்திருந்ததையும் அவர்கள் பார்வை இவர்கள் மூவரை விட்டு அகலாமல் இருந்ததையும் காணும்போது இவர்கள் எங்கே சென்றாலும் காவலர்கள் தங்கள் கரடிகளோடு சற்றும் தயங்காமல் பின் தொடர்வார்கள் என்பது புரிந்தது.

சத்யபாமாவுக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியதும், கிருஷ்ணனும் சாத்யகியும் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர். கிருஷ்ணன் கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பீடபூமியை மூவரும் சுற்றி வந்தனர். ஆனால் சிறிதும் தப்ப வழியில்லை என்பதைக் கண்டு கொண்டனர். எந்தச் சுரங்கப்பாதை வழியாக அவர்கள் மூவரும் வந்தனரோ அந்தப் பாதையின் நுழை வாயிலில் இப்போது சில கரடி மனிதர்கள் தங்கள் கரடிகளோடு காவல்காத்துக் கொண்டு இருப்பதையும் ஒரு சிலர் அங்கேயே தங்கி இருப்பதையும் காண முடிந்தது. இவ்வளவு பேரையும் தாண்டி அவர்கள் செல்வது என்பது எளிதல்ல!  அவர்கள் மூவரும் தாங்கள் தங்கி இருந்த குகைக்கு வந்தனர். அப்போது அவர்கள் அந்தப் பீடபூமியின் விளிம்புக்கு வந்திருப்பதைக் கண்டார்கள். கீழே உள்ள அடிவாரத்தைத் தொடும்படியாகத் தொங்கிக் கொண்டிருந்தது அந்த முனை! கிருஷ்ணன் அந்தப் பக்கமும், மலைப்பக்கமும் தப்பிச் செல்லும் வழி ஏதேனும் தென்படுகிறதா என்பதை அலசி ஆராய்ந்தான். ம்ஹூம், சுரங்கப்பாதை வழியாகப் புனிதக் குகைக்குச் சென்று அதன் பின்னரே நாட்டுக்குச் செல்லும் வழி இருக்கிறது. வேறு வழியே இல்லை. இதில் கிருஷ்ணனுக்குச் சந்தேகமே இல்லை!

சாத்யகி அப்போது கிருஷ்ணனிடம், “கிருஷ்ணா, இங்கிருந்து தப்ப வேறு வழியே இல்லை! புனிதக்குகை வழி ஒன்று தான் உள்ளது. ஆனால் அந்த வழியும் இப்போது அடைபட்டுள்ளது. தடுக்கப்பட்டுள்ளது!” என்று கூறினான். அவன் கிருஷ்ணன் தப்பிச் செல்ல வழி தேடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டே மேற்கண்டவாறு கூறினான். “ஜாம்பவான் நம்மிடம் நட்பாக இருப்பதாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் நாம் தப்புவதற்கு வழியே இல்லாமல் எல்லா வழிகளையும் எச்சரிக்கையுடன் அடைத்து விட்டான். நாம் இங்கிருந்து தப்புவது  கடினம்.” என்றும் கூறினான். மேலும், “ஒரு வேளை நீ ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் ஆசாரியனாக மாறினாயானால் அவர்களுக்கு உன் மேல் நம்பிக்கை வரக்கூடும். அப்போது நாம் புனிதக்குகை வழியே தப்பவும் இயலலாம்.” என்றும் ஆலோசனை கூறினான். “அது வரை நாம் உயிருடன் இருந்தால் தானே!” என்றான் கிருஷ்ணன். மேலும் தொடர்ந்து,”நம்மால் புனிதக்குகை வழியே தப்ப இயலவில்லை எனில், இந்த மலைப்பக்கம் மேலே ஏறித் தப்பிச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டியது தான்! அங்கிருந்து அடிவாரம் செல்ல வழியில்லாமல் போகாது!” என்றான். தூரத்தே தெரிந்த மலைச்சிகரங்களையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.

“ஆனால் அங்கே தான் இவர்களுடைய பயங்கரமான கருநிறக்கடவுள் வசிக்கிறார். அந்த வழியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது!” என்றாள் சத்யபாமா.

“சரி, அதனால் என்ன? அந்த ஒரு வழி தான் நாம் தப்பிச் செல்ல இருக்கும் வழி எனில் அப்படி தான் நாம் சென்றாக வேண்டும். வேறு வழியே இல்லை. அப்படிச் செல்லும்போது எவ்வளவு கொடூரமானவராக இருந்தாலும் அந்தக் கருநிறக்கடவுளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.”அங்கிருந்து கீழே பள்ளத்தாக்கிற்குச் செல்ல வழி இருக்குமா?” என்று சாத்யகி கேட்டான். “இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லை எனில், நாம் உருவாக்குவோம்.” என்றான் கிருஷ்ணன். பின்னர், “சரி, இப்போது நாம் நம் குகைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொள்வோம். ஏனெனில் நாம் இன்னும் கடுமையான நாட்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.” என்ற வண்ணமே மீண்டும் அந்த மலைச்சிகரத்தையே உற்று நோக்கினான். அன்று மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் சமயம். அப்போது ரோகிணி மிகவும் சந்தோஷமான குரலில் பறவைகளின் குரலில் கீதம் இசைத்தாள். கிருஷ்ணன் அவள் தன் தந்தை தன்னை அவளை மணக்கும்படி கேட்டுக் கொண்டதைக் கேட்டிருக்கிறாள் என்றும் அவனை அப்போது அங்கே அவளிடம் அழைக்கிறாள் என்றும் தன்னை ஏற்கும்படி ஜாடையாகச் சொல்கிறாள் என்றும் புரிந்து கொண்டான். உடனே அவன் தன் புல்லாங்குழலை எடுத்து மிகக் கடுமையான, கோபமான ஒரு ஸ்வரத்தை இசைத்தான். ரோகிணி மனம் உடைந்து போனாள் என்பதை அவளின் பரிதாபமான இசைக்குரலின் மூலம் அறிந்து கொண்ட கிருஷ்ணன் அது திடீரெனப் பாதியில் நின்று விட்டது என்பதையும் கண்டான்.

சத்யபாமா உறங்குவதற்காகப் படுக்கையில் படுத்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மழை வர்ஷித்தது. அவர்கள் மூவரும் கரடிகளின் அந்தக் கருநிறக்கடவுளுக்குப் பலியிடப்படப் போகின்றனர். அத்துடன் அவள் கனவுகள் அனைத்தும் முடிந்து விடும். அவள் ஒரு கதாநாயகனுக்கு, சாகசங்களைப் புரியும் வீராதி வீரனுக்கு மனைவியாக வேண்டும் என ஆசைப்பட்டாள்! அது தவறா? ஆனால் இப்போது அவர்கள் மூவரும் இருக்கும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் எவ்விதமான சாகசங்களோ, அல்லது வீராதி வீரனின் திறமைகளோ வெளிப்பட வாய்ப்பே இல்லை. சத்யபாமாவின் மனதைப் புரிந்து கொண்டாற்போல் ஊரி அவளருகே மெதுவாக அமர்ந்து கொண்டது. ஊரி தன் யஜமானி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டிருந்தது. அவள் குட்டி மினி என்னும் மேனகா மெல்ல மெல்லக் கிருஷ்ணன் படுத்திருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு சென்று அவன் அருகே தானும் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்த சத்யா, “மினி உங்களிடம் கண்மண் தெரியாமல் பாசமும், அன்பும் வைத்திருக்கிறது. உங்களை மிகவும் நம்புகிறது! பிரபுவே! அதைப்பாருங்கள்!” என்றாள்.

“ம்ம்ம்ம்? அப்படியா? நான் நீங்கள் அனைவருமே மினியைப் போல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இதோ பார் மினியை! எவ்வளவு நம்பிக்கையுடன் என் அருகே வந்து படுத்துக் கொண்டு விட்டது! இத்தனைக்கும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே நம் யாருக்கும் தெரியாது என்றபோது மினிக்கு மட்டும் என்ன தெரியும்? நம்பிக்கையுடன் என் அருகே வந்து விட்டது!” என்ற கண்ணன், பாமாவின் முகத்திலும், சாத்யகியின் முகத்திலும் தெரிந்த மன வாட்டத்தை நீக்க முயன்றான். அவன் மினியைத் தூக்கி சத்யபாமாவிடம் கொடுத்தான். பாமாவும் அதை வாங்கித் தன்னருகே படுக்க வைத்துக் கொண்டாள். ஆனால் அது உடனே உர்ர்ரென்ற உறுமலுடன் கண்ணன் இருக்குமிடத்தை மீண்டும் தன் முகரும் சக்தியால் கண்டு பிடித்துக் கொண்டு அவனருகே சென்று விட்டது. “நான் என்ன சொன்னேன், பார்த்தாயா, சத்யா? மினி தன் அனைத்துக் கவலைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்கப் போகிறது! அதற்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கை!” என்றான் கிருஷ்ணன்.

“பிரபுவே, நீங்கள் எங்கள் அனைவரையும் மினியைப் போல் இருக்கச் சொல்கிறீர்கள்? எல்லோருமேவா? பின்னர் உங்களால் எதுவும் செய்ய இயலாது!  எங்களுக்கு முதுகு சொறிந்து விடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் பாமா! “முயன்று பார் பாமா! இப்போது நீ தூங்கப் போ! நன்றாகத் தூங்கு!” என்றான் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே. மறுநாள் விடிந்ததும் மூவரும் அங்குள்ள பிரவாகத்தில் குளித்துத் தங்கள் காலைக்கடன்களை வழக்கம்போல் முடித்துக் கொண்டனர். திரும்பும்போது மூவருக்குள்ளும் ஒரு மாபெரும் யுத்தம் தொடங்கியது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து அவரவர் கருத்தைப் பரிமாறிக்கொள்ள அது மாபெரும் சண்டையில் முடிந்தது. சத்யபாமா ஒரு வீராதி வீரனின் மனைவியாக வேண்டும் என நினைத்தாள் தான். ஆனால் இப்போது அது இயலாது; என்றாலும் கிருஷ்ணன், அவளுடைய பிரபு உயிர் பிழைக்க வேண்டும்; அவன் உயிருடன் இருந்தாக வேண்டும். அதற்கு அவன் ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும்; வேறு வழியில்லை! இதைச் சொன்ன பாமா தன் தைரியத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு மேலே சொன்னாள். “பிரபுவே, என் வார்த்தையைக் கொஞ்சம் கேளுங்கள். நீங்கள் நேற்றிரவு சொன்னது உண்மையே! மினியைப் போன்றதொரு அர்ப்பணிப்பு உணர்வு என்னிடம் இல்லைதான்!” இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்தது. அவள் மனம் கிருஷ்ணன் நேற்றிரவு சொன்ன வார்த்தைகளையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தது என்பதும் புலப்பட்டது. ஆகவே அவளால் அதற்குத் தக்க பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ஆம் ஐயா! எங்களால் மினியைப் போல் இருக்க முடியவில்லைதான். எங்களால் என்ன கொடுக்க முடியுமோ அதைத் தான் உங்களுக்கு அளிக்கிறோம். ஆனாலும் நாங்கள் சொல்வதையும் எப்போதேனும் ஓர் முறையாவது தாங்கள் கேட்டே ஆகவேண்டும். இப்போது அந்த முறை வந்துள்ளது. ஆகவே நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். கரடி அரசனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்று சத்யபாமா வேண்டினாள்.

Tuesday, March 22, 2016

ரோகிணி உன் மனைவி! ஜாம்பவான் கட்டளை!

வாசுதேவா, நேற்று முழுவதும் எங்கள் குலதெய்வத்திடம் நாங்கள் வேண்டிப் பிரார்த்தனைகள் செய்து வழிபட்டோம். அவர் உன்னை இங்கே தங்கச் சொன்னார். அவரின் பிரியத்துக்கு உகந்த ‘மகனா’க உன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறினார். ஆகவே நீ இங்கேயே தங்கிவிடு!” என்றார் ஜாம்பவான். “அப்படியா? எல்லாம் வல்ல கடவுள் உங்களிடம் இப்படிக் கூறினாரா? நான் அடுத்த ஆசாரியன் என்றாரா? அப்படி எனில் நான் அவரிடம் பேசியாக வேண்டுமே!” என்றான் கிருஷ்ணன். ஜாம்பவான் அந்த மலைச் சிகரத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் நிழலில் அதன் அடிவாரத்தில் வசிக்கும் தன் மக்களையும் பார்த்தார். பின் கண்ணனிடம், “கேலி செய்யாதே வாசுதேவா! அவரை அவமதிக்காதே! அவர் மிக மிகச் சக்தி வாய்ந்தவர்! நீ அவரை அவமதித்தால், அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தால் உன்னை அடியோடு ஒழித்துக் கொன்றுவிடுவார்.”

“ஐயா நான் உங்களையோ, உங்கள் கடவுளையோ அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ விரும்பவில்லை; அப்படிச் செய்யவும் மாட்டேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள். நான் அவரை மிகவும் மதித்துப் போற்றுகிறேன். எல்லாக் கடவுளரும் கடைசியில் சென்று அடைவது ஒருவரிடம் தானே! நாம் மட்டும் முழு அர்ப்பணிப்புடன் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். பரிபூரண சரணாகதி அடைய வேண்டும்.” கிருஷ்ணனின் உறுதிமொழியை ஜாம்பவானால் முழுதுமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் இதை மட்டும் கூறினார்.” நீ நம்புவது எனில் அவருடைய கட்டளைகளை மதித்து நடக்கவேண்டும். இந்தக் கரடி உலகுக்குள் வந்த அந்நியன் எவனுமே திரும்பப் போனதில்லை. அதனால் தான் சத்ராஜித்தும் கூடப்புனிதக் குகையோடு தன் பயணத்தை முடித்துக் கொண்டு விடுவான். இங்கே காலடி எடுத்து வைக்க அஞ்சுவான்! “ என்றார் ஜாம்பவான்.

“நான் எப்படி இங்கே தங்கி இருக்க முடியும்? என் மக்கள் அனைவரும் துவாரகையில் இருக்கிறார்கள். என் தாய், தந்தை, சகோதரன், மனைவியர் இருவர், குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என அனைவருமே துவாரகையில் இருக்கிறார்கள். நான் திரும்பி வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். வெளியே இதை விடப்பெரியதொரு உலகம் உள்ளது ஐயா! அதைக் குறித்துத் தாங்கள் அறியவில்லை. அந்த உலகுக்கு என்னுடைய இருப்பு மிக அவசியம். ஆகவே நான் திரும்பிச் செல்வது மிக முக்கியம்!” என்றான் கண்ணன். “ஹா, இந்தக் கரடி உலகை விடவா இன்னொரு உலகம் பெரியதாக இருக்க முடியும்? இருக்கவே இருக்காது. அதோடு எங்கள் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதன் பிறகே மற்றவை!” என்று கண்டிப்பும் கறாருமாகச் சொன்னார் ஜாம்பவான். அதற்குக் கிருஷ்ணன் மனப்பூர்வமாகப் பதில் கூற நினைத்தான். ஆகவே யோசனையுடன் நிறுத்தி நிதானமாக, “ஐயா, அதற்காகத் தான் உங்கள் கடவுளுடன் நான் நேரில் தனிமையில் பேச வேண்டும் என்று கூறினேன். மாட்சிமை பொருந்திய கரடிகளின் அரசரே! இப்போதாவது புரிந்து கொள்ளும்! நான் உங்கள் கடவுளுடன் பேசியே ஆகவேண்டும் என்பதை! நான் அவரிடம் பிரார்த்தனைகள் செய்து கொண்டு உங்களை அவருடைய பிரியத்துக்கு உகந்த, ‘மகனாக’ ஏற்கும்படி கேட்டுக் கொள்வேன். அதற்கான முழுத் தகுதியும் உங்களிடம் உள்ளது.”

“உங்களுக்குத் தான் உங்கள் மக்களின் தேவைகள் என்னவென்று தெரியும். அதைப் பூர்த்தி செய்யவும் தெரியும். அதோடு நீங்கள் வயது முதிர்ந்து பல்வேறு அனுபவங்களையும் கொண்டவர். மிகப் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறவர். உங்கள் கடவுளிடம் உங்களுக்குப் பரிபூரண நம்பிக்கையும் இருக்கிறது. உங்கள் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற உறுதி கொண்டவர் நீங்கள். ஐயா, நீங்கள் மட்டும் என்னுடைய பிரார்த்தனையை உங்கள் கடவுளிடம் வைத்தால் அவரின் பரிபூரண சம்மதம் கட்டாயம் கிட்டும் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.”ஜாம்பவான் கிருஷ்ணன் சொன்னதைத் தங்கள் மொழியில் தன்னுடைய மக்களுக்கும் அங்கு கூடியிருந்த கரடிகள் உலகப்பெரியோர்களுக்கும் எடுத்து உரைத்தார். அதைக் கேட்டதுமே அனைவர் முகங்களும் சொல்லவொணா மரியாதையிலும், மகிழ்ச்சியிலும் மாறியது. அனைவரும் கிருஷ்ணனைப் புதியதொரு நம்பிக்கையும் மரியாதையும் கலந்த பார்வையில் பார்த்தனர்.  அதற்குள்ளாகக் கிருஷ்ணனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார் ஜாம்பவான்.

 “இல்லை, இல்லை நீ சொல்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதெல்லாம் நடக்கவே முடியாத ஒன்று. அங்கே மறு கேள்விக்கு இடமே இல்லை. எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்கள் ஆசாரியனாக நியமித்துள்ளான். அதுதான் அவர் விருப்பம். நீ தான் அவருடைய “பிரியத்துக்கு உகந்த மகன்” என்று முடித்தார் ஜாம்பவான்.


கண்ணன் இயன்றவரை பணிவும் விநயமுமாக, “நான் அதற்கெல்லாம் தகுந்தவனே அல்ல!” என்று மொழிந்தான். கிருஷ்ணன் உண்மையாக மனப்பூர்வமாக மொழிந்த அந்தச் சொற்களால் ஜாம்பவான் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், :நீ தெய்வ நிந்தனை செய்கிறாய்!” என்று கிருஷ்ணன் மேலேயே பழி போட்டார். “ஐயா, என்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் தெய்வ நிந்தனை அல்ல! தயவு செய்து என்னுடைய மனப்பூர்வமான, நேர்மையான, உண்மையான பிரார்த்தனைகளை உங்கள் கடவுளிடம் முன் வையுங்கள். அது கீழ்க்கண்டவாறு இருக்கட்டும்!


“எல்லாம் வல்ல இறைவனே! என்றும் அனைவராலும் போற்றத்தக்கவனே! எவருக்கும் அஞ்சாதவனே! கரிய நிறக் கடவுளே! உங்களுடைய பயங்கரமான தோற்றத்தையும், கடுமையான பார்வையையும் இந்த எளிய கரடி இன மக்களுக்காக மாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து எளிமையான தோற்றமும் அருட்பார்வையும் கொள்ளுங்கள். இந்தக் கரடி இன மக்களுக்குக் கருணை காட்டுங்கள். ஐயா, அவர்களுக்கு நீங்கள் அன்பு என்றால் என்னவென்று காட்டிக் கொடுங்கள். உங்களிடம் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் அவர்களுக்கு விலை மதிக்க முடியாத தைரியம் என்னும் ஆயுதம் பெறுவார்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். இதோ இது தான் என் பிரார்த்தனை; ஜபம்! எல்லாம் வல்லவரே! கரடி மக்களை பயம் என்னும் ஆழ்கடலில் இருந்து வெளியேற வழி காட்டுங்கள். நேர்மையான பாதையையும், உண்மையான பாதையையும் அவர்களுக்குக் காட்டித் தாருங்கள். அவர்களுக்கு நேர்மையைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள். அவர்களை எல்லை இல்லா மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துங்கள். வலிமை பெறச் செய்யுங்கள். அவர்களுக்கு எண்ணற்ற சந்தான பாக்கியத்தை அள்ளித் தாருங்கள். நீண்ட ஆயுளை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்து ஆசீர்வதியுங்கள். அவர்களில் ஒருவனை உங்கள் அபிமான மகனாக ஏற்று உங்களில் அவன் இணைந்தவன் என்பதை இந்த சாமானியக் கரடி இன மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்.”

கிருஷ்ணன் மிகவும் பணிவாகவும், பக்தியுடனும் இவற்றைக் கூறியபோது அவன் குரலின் காந்த சக்தி அனைவரையும் ஈர்த்தது. அங்கே அனைவரிடமும் சொல்ல முடியாததொரு அதிர்வு அலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் மனதில் பெரும் சாந்தி நிலவியதைப் புரிந்து கொண்டார்கள். ஜாம்பவான் கிருஷ்ணன் கூறியவற்றை எல்லாம் கரடி மனிதர்களின் மொழியில் அவர்களுக்கு எடுத்து விளக்கினார். அனைவரும் மிகவும் ஆச்சரியமும், சந்தோஷமும் கலந்ததொரு மனோநிலையில் அவற்றைக் கேட்டுக் கொண்டனர். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்தான். “மாட்சிமை பொருந்திய கரடிகள் அரசே, இந்தப் பிரார்த்தனை மட்டும் கரடி மனிதர்கள் சார்பாகப்பிரார்த்திக்கப்பட்டு அது உங்கள் சர்வ சக்தி வாய்ந்த கறுப்புக் கடவுளும் கேட்டாரெனில் நிச்சயமாக நம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிப்பார்!” என்றான். ஜாம்பவான் அதற்கு, “கரடி உலகக் கடவுளின் உரிமையையும் கட்டளையையும் குறித்து நாம் விவாதிக்க முடியாது; விவாதிக்கவும் கூடாது! அதில் பலன் இல்லை. இப்போதைக்கு நீ எங்களுடன் வசித்தாக வேண்டும். அதற்குள்ளாக சர்வ சக்தி வாய்ந்த எங்கள் கறுநிறக் கடவுள் ஏதானும் சொல்கிறாரா அல்லது செய்கிறாரா என்பதைப் பார்க்கலாம்.” என்றார்.

“நான் வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?” கிருஷ்ணன் கேட்டான். “ஆம், என்றென்றும் சாசுவதமாய்க் காணப்படும் எங்கள் கரடி உலகின் சட்டத்தின் படியும் எங்கள் கருநிறக்கடவுள் விதித்தபடியும் நீ என் மகள் ரோகிணியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிலும் நீ சாம்பனை இப்போது கொன்று விட்டாய். அவள் பிறந்ததுமே அவனுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்தாள். இப்போது அவளை யார் மணப்பார்கள்? ஆகவே நீ தான் அவளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று ஆணையிட்டார். “ஆனால் நான் ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையே!” என்றான் கண்ணன். “அதற்கு நான் என்ன செய்ய முடியும் வாசுதேவா? எங்கள் சட்டம் மாற்ற முடியாத ஒன்று ஆகும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றான் எனில் அவன் மனைவியை வென்ற மனிதன் ஏற்றே ஆகவேண்டும்.”

“நான் மறுத்தால்?” கிருஷ்ணன் கேட்டான். “வேறு வழியே இல்லை வாசுதேவா! நீ அவளை ஏற்க மறுத்தாயெனில் அவள் எங்கள் குல வழக்கப்படி பலி பீடத்தில் அமர்த்தப்பட்டு பலி கொடுக்கப்படுவாள்.” என்றார் ஜாம்பவான். “ஏன் இவ்வளவு குரூரமாக நடந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டான் கிருஷ்ணன் வருத்தத்துடன்.

“வாசுதேவா! வேறு வழியே இல்லை. ஒன்று நீ ரோகிணியை மணந்தாக வேண்டும். அல்லது அவள் பலி பீடத்தில் அமர்ந்தாக வேண்டும். நீ அவளை மணக்க மறுத்தாயெனில் சர்வ சக்தி வாய்ந்த எங்கள் கருநிறக் கடவுளுக்கு அவளைப் பலி கொடுப்பதைத் தவிர்த்து வேறு வழியே இல்லை!” என்று திட்டவட்டமாகக் கூறினார் ஜாம்பவான்.

“சரி, என்னை யோசிக்க விடுங்கள். நான் நாளைக்குள் உங்களுக்குத் தக்க பதிலைச் சொல்கிறேன்.” என்றான் கிருஷ்ணன். “சரி, வசுதேவரின் குமாரனே! நாளை மதியத்துக்குள் நீ உன் விருப்பத்தைத் தெரிவிப்பாய். உனக்கு எங்கள் கடவுளின் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவதில் விருப்பமா இல்லையா, அதை நீ ஒப்புக்கொள்கிறாயா இல்லையா என்பதைத் தெரிவித்துவிடு!” என்றார் ஜாம்பவான். மற்றவர்களுக்கும் இவை விளக்கிக் கூறப்பட்டதும் அனைவரும் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தனர். பின்னர் தங்கள் பிரார்த்தனைகளைத் தங்கள் கடவுளரிடம் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஜாம்பவான் தன் குகைக்குள் சென்று விட்டார். அவரின் மருமகன் ஆன கரடியும் அவரைப் பின் தொடர்ந்தான். பூனைக்குட்டியும் அவனைத் தொடர்ந்து சென்று விளையாட விரும்பியது. ஜாம்பவான் அதைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தவர் பின்னர் உல்லாசமாக அதை எடுத்துத் தன் கைகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு குகைக்குள் சென்றார். அனைவரும் ஒவ்வொருவராக அங்கிருந்து அகன்றனர். அவர்களின் அறிவுக்கெட்டாத வண்ணமான ஒரு பார்வையைக் கிருஷ்ணனின் கண்களில் சாத்யகியும், பாமாவும் கண்டனர். சாத்யகி இனம் காணாத் திகைப்பில் ஆழ சத்யபாமாவோ மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டாள்.

Monday, March 21, 2016

கண்ணன் குற்றவாளியா? கரடி அரசன் விசாரணை!

சாத்யகி சென்றதும் சற்று நேரத்துக்குப் பின்னர் கிருஷ்ணனும், சத்யபாமாவும் கூட கரடி அரசனிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லால் ஆனதொரு சிம்மாதனத்தில் மிகக் கம்பீரமாக அமர்ந்திருந்தார் ஜாம்பவான். சாம்பன் தன் கைகளால் அடித்துக் கொண்டிருந்த சின்ன மத்தளமும், அவன் தலையில் கிரீடம் போல் கட்டப்பட்டிருந்த இரு கரடி வால்களும் ஜாம்பவானின் எதிரே கிடந்தன. சாம்பன் இருந்தவரை மிகப் புனிதமானதாகக் கருதப்பட்டு வந்த அவை இரண்டும் இப்போது கீழே கிடந்தன. ஆறு கரடி மனிதர்கள் வெண்மையான தாடியுடனும் சுருங்கிக் கிடந்த தோல்களுடனும் ஜாம்பவானின் எதிரே தரையில் வரிசைக்கு மூவராய் இரு வரிசைகளாக அமர்ந்திருந்தனர். சாத்யகியும் ஜாம்பவானுக்கு எதிரே அமர வைக்கப்பட்டிருந்தான். அவனுக்குப் பின்னால் ஜாம்பவானின் மருமகனான கரடி அமர்ந்திருந்தான். மற்றக் கரடி மனிதர்களும், பெண்களும் மரியாதையாக சற்றுத் தூரத்தில் அமர்ந்த வண்ணம் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தப் புதுமையான சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்னும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அங்கே சென்றதுமே கிருஷ்ணனும், சத்யபாமாவும் கை கூப்பி வணங்கிவிட்டு ஜாம்பவானின் காலிலும் விழுந்து பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

ஜாம்பவான் தன் பார்வையாலேயே அவர்கள் இருவரையும் சாத்யகியின் அருகே அமரச் சொன்னார். சத்யபாமாவைப் பார்த்த பூனைக்குட்டி மேனகா அவள் மடியில் ஏறியது. ஆனால் அதனால் சற்று நேரமே அமர முடிந்தது. சற்று நேரம் மிகக் கஷ்டப்பட்டு அமர்ந்திருந்த அது பின்னர் அவள் மடியில் இருந்து கீழே குதித்துத் தானாகவே அங்குமிங்கும் சுதந்திரமாக நடமாடிற்று. அங்கே அமர்ந்திருந்த மனிதர்களை முகர்ந்து பார்த்து மோப்பம் பிடித்த வண்ணம் ஒவ்வொருவரிடம் சென்று சென்று முகர்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல ஜாம்பவானின் மருமகனான கரடியிடம் சென்று அமர்ந்தது. அப்போது ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். “வசுதேவக் கிருஷ்ணா! நீ எங்களுக்கு யதுகுலம் சார்பாக உன் மரியாதையும் வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்வதற்காக இங்கு வந்திருப்பதாய்ச் சொன்னாய்!” என்றார். அதை ஆமோதித்தான் கிருஷ்ணன்.

“மாட்சிமை பொருந்திய கரடிகளின் அரசரே! உண்மை தான்! அது மட்டுமல்ல ஐயா! உங்கள் அனுமதியுடன் என் நண்பனான சாத்யகியை நாங்கள் திரும்பும்போது எங்களுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.” என்றான் கிருஷ்ணன். அவன் இதைச் சொல்கையில் அவன் மிகவும் நட்புத் தொனிக்க இனிமையான தன் கவர்ச்சி மிகுந்த குரலில் பேசினான். ஆகவே ஜாம்பவானுக்குச் சம்பிரதாய ரீதியாக மேற்கொண்டு பேசுவதற்குத் தயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணனிடம் ஆரியர்களின் மொழியில் பேசித் தான் அறிந்து கொண்ட விஷயங்களைத் தங்கள் மொழியில் தன்னருகே அமர்ந்திருந்த பெரியோர்களிடமும் மற்ற மக்களிடமும் பகிர்ந்து கொண்டார் ஜாம்பவான். மேலும் ஜாம்பவான் பேசுவார்:”வாசுதேவா, வசுதேவ குமாரா! ச்யமந்தக மணியையும் நீ உன்னுடன் எடுத்துச் செல்ல விரும்புவதாய்க் கூறினாய்! அல்லவா? அது இங்கே தான் இருக்கிறது என்பதை நீ எப்படி அறிவாய்? யார் உனக்குச் சொன்னது?” ஜாம்பவான் தொடர்ந்து கேட்டார்.

“நான் அறிவேன் அது இங்கே தான் உள்ளது என்பதை!” என்றான் கிருஷ்ணன். “எனக்கு அது தெரியும் என்பதை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள்! இல்லையா?” என்ற கிருஷ்ணன் தன் வழக்கமான புன்னகையை வெளியிட்டான். “நீ சத்ராஜித்தால் அனுப்பப்படவில்லை என்பதை நான் எப்படி அறிவேன்?” ஜாம்பவான் கேட்டார். தன்னருகே அமர்ந்திருந்த சத்யபாமாவைக் காட்டிய கிருஷ்ணன், “இதோ, இந்தப் பெண்ணைக் கேளுங்கள். இவள் சத்ராஜித்தின் அருமை மகள்!” என்றான். இப்போது சத்யபாமாவிடம் திரும்பிய ஜாம்பவான், “உன் தந்தை உன்னை இங்கே ச்யமந்தகமணிக்காக அனுப்பி வைத்தாரா?” என்று கேட்டார். “இல்லை!” என்ற சத்யா தொடர்ந்து, “ என் தந்தை தன் சகோதரரைத் தான் அனுப்பி வைத்திருந்தார். அதிலும் ச்யமந்தகமணியை அவரிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அந்தப்புனிதக் குகையிலேயே ஒளித்து வைக்குமாறும் அறிவுறுத்தி இருந்தார். அதன் பின்னரே அவர் வசுதேவ குமாரனான வாசுதேவனை இதற்குப் பொறுப்பாக்கினார். அவர் தான் திருடிவிட்டார் என அவர் மேல் குற்றம் சுமத்தினார்.” என்றாள். பின்னர் மேலும் தொடர்ந்த சத்யபாமா, “திருட்டுப் பட்டம் வாங்கிக் கட்டிக் கொண்ட வாசுதேவக் கிருஷ்ணன் அப்போதே எங்கள் யதுகுல அரசர் முன்னர் சபதம் எடுத்துக் கொண்டார்.”

அதாவது அவர் தொலைந்து போன ச்யமந்தக மணிமாலையைக் கண்டு பிடிப்பதாகவும் தன் மேலுள்ள திருட்டுப் பழியை அதன் மூலம் நீக்கிக் கொள்ளப் போவதாயும் சொன்னார். அப்படி ஒரு வேளை ச்யமந்தகமணிமாலை கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தன்னைத் தானே எரித்துக் கொண்டு செத்துப் போவதாகவும் சபதம் செய்திருக்கிறார். நான் ஒளிந்திருந்து என் தந்தை என் சித்தப்பாவை அனுப்பி வைத்ததைக் கவனித்திருந்தேன். ஆகையால் ச்யமந்தக மணிமாலையைத் தந்தை புனிதமான அந்தக் குகையினுள் தான் ஒளித்து வைக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆகவே அவருக்குத் தெரியாமல், அவ்வளவு ஏன், வாசுதேவக் கிருஷ்ணனுக்கும் கூடச் சொல்லாமல், கிருஷ்ணனின் நண்பன் சாத்யகியின் உதவியுடன் ச்யமந்தகத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு இங்கே வந்து சேர்ந்தேன். அதன் மூலம் ச்யமந்தகத்தைக் கண்டுபிடிப்பதோடு அல்லாமல் வாசுதேவக் கிருஷ்ணனின் உயிரையும் காப்பாற்றலாம் என்பது என் நோக்கம். எங்கள் இருவரையும் அங்கே துவாரகையில் காணவில்லை என்றவுடன் வாசுதேவக் கிருஷ்ணனும் எங்களையும் ச்ய்மந்தகத்தையும் தேடிக் கொண்டு இங்கே வந்து சேர்ந்தார். இதோ, உங்கள் முன்னர் நாங்கள் இருக்கிறோம். அவர் உயிர் அந்த ச்யமந்தக மணிமாலையில் தான் இருக்கிறது. அதைத் திரும்பக் கொண்டு சேர்ப்பதில் தான் அவர் உயிர் உள்ளது.” என்று முடித்தாள் சத்யபாமா.

ஜாம்பவான் கிருஷ்ணனிடம் திரும்பி, “உன் நண்பன் என்னிடம் நீ வாழும் கடவுள் என்கிறான்! அது உண்மையா?” என்று கேட்டார்.”ஓ, அது அவன் பெருந்தன்மையைக் காட்டுகிறது ஐயா! நான் என்ன மாதிரி, எப்படி என்பதை நான் மட்டுமே அறிவேன்.” என்று சிரித்தான் கிருஷ்ணன். “அது சரி, அப்பனே! எங்கள் சக்தி வாய்ந்த, வலிமை பொருந்திய ஆசாரியன் சாம்பனை நீ எப்படிக் கொன்றாய்?” என்று ஜாம்பவான் கேட்டார். “ஐயா, அதை நீங்களே நேருக்கு நேர் பார்த்தீர்கள் அல்லவோ!” என்றான் கிருஷ்ணன். “ஆனால், சாம்பன் எல்லாம் வல்ல கடவுளின் முழுப் பாதுகாப்பில் அல்லவோ இருந்தான். அவனைக் கொல்வது எளிதல்ல!” என்றார் ஜாம்பவான். ஜாம்பவானால் இன்னமும் நம்பத்தான் முடியவில்லை. அவர்களின் கடவுள்,எல்லாம் வல்லவர் சாம்பனைத் தனக்குப் பிடித்த மகன் என்று காட்டிக் கொடுத்தவர், கடைசியில அவனை இப்படியா விட்டுக் கொடுப்பார்? இன்னொரு மனிதன் கைகளில் அவன் இறக்கும்படி செய்து விட்டாரே! இது எப்படி நிகழ்ந்தது? அவர் யோசனைகளைப் புரிந்து கொண்டு கிருஷ்ணன் சிரித்தான்.

“ஐயா, உங்கள் கடவுள் அவரை விட்டுத் தான் கொடுத்துவிட்டார். தன்னுடைய பாதுகாப்பை விலக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டிய வலிமையையும் எனக்குக் கொடுத்துவிட்டார். ஏனெனில் சாம்பன் ஒரு பாவமான காரியத்தைப் பண்ண இருந்தார்.”

“பாவமா, எது பாவம்? என்ன பாவமான காரியம்?” ஆச்சரியத்துடன் ஜாம்பவான் கேட்டார். “ஐயா, ஒரு பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக நிர்ப்பந்தம் செய்பவன் கொடிய பாவத்தைச் செய்பவன் ஆவான்!  அவன் அவளை வற்புறுத்தினால் அவன் இறந்தே ஆகவேண்டும். அவன் உயிருடன் நடமாடக் கூடாது! அவன் செய்யவிருந்த பாவச் செயலில் இருந்து நான் அவனைத் தடுத்தேன். அவன் என்னைக் கொல்ல இருந்தான்! அதுவும் எவ்வாறு தெரியுமா? வலிமையுள்ள ஒரு பெரிய கரடியின் முரட்டுத்தனமான மூர்க்கமான அணைப்பின் மூலம் என்னைக் கொல்ல இருந்தான்.” என்றான் கிருஷ்ணன்.

Saturday, March 19, 2016

சிறையில் கண்ணனும், தோழர்களும்!

தனிமையில் விடப்பட்ட கிருஷ்ணனும், பாமாவும் சாத்யகியைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிருஷ்ணன் சாத்யகியை அப்படியே அணைத்துக் கொண்டான். அவன் முதுகில் செல்லமாயும் அன்பாயும் ஓங்கி ஓர் அடி அடித்த கிருஷ்ணன்,”சாத்யகி, உன்னால் எனக்கு நேர்ந்திருக்கும் முடிவற்ற தொல்லையைப் பார்த்தாயா?” என்றும் வினவினான். சத்யபாமா அதற்குள் குறுக்கிட்டு, “ஆம், அவர் என்னை இந்த மலைப்பிராந்தியத்துக்குத் தூக்கி வர நேர்ந்தது. அதோடு இல்லாமல் இந்தக் கொடுமை நிறைந்த மனிதனிடமிருந்து தன் உயிரைப் பணயம் வைத்து என்னைக் காத்திருக்கிறார்.” என்றாள். இந்த நேரத்தை, இந்த நிமிடத்தை சத்யபாமா மிகவும் ரசித்து அனுபவித்தாள். கிருஷ்ணனுடனும், சாத்யகியுடனும் தனிமையில் இருக்க நேர்ந்தது அவள் வாசாலகத்தை மீட்டுக் கொணர்ந்தது.

மூவரும் நெருங்கி அமர்ந்து கொண்டனர். “அவர்கள் உன்னைக் கொல்ல நினைத்தார்களா? அதற்காக முயற்சித்தார்களா?” என்று கிருஷ்ணன் சாத்யகியிடம் கேட்டான். “இல்லை!” என்று யோசனையுடன் கூறிய சாத்யகி, “ஆனால் கரடி அரசன் ஜாம்பவானுக்கு என்னைக் கடத்துவதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது. என்னால் அதைப்புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது நம் மூவரையுமே மரணம் நெருங்குகிறது. ஏனெனில் நீ அவர்கள் ஒருவனை அதிலும் முக்கியமான ஆசாரியனைக் கொன்று விட்டாய்!” என்றான் சாத்யகி.
“நம்மை என்ன செய்வார்கள் என்று உனக்குத் தோன்றுகிறது?” என்று கிருஷ்ணன் அவனிடம் கேட்டான். “என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது கிருஷ்ணா!  நம்மை அவர்கள் கரடிகளுக்கு உணவாக்கலாம், அல்லது அவர்களின் கறுப்புக் கடவுளுக்கு ஏற்ற பலி என நினைத்து பலி கொடுக்கலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். நான் இங்கு வந்த அன்று ஒரு இளைஞன் சாம்பனை எதிர்த்தவன் முதலில் நெருப்புக்குள் தூக்கி எறியப்பட்டான். பாதி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியே எடுக்கப்பட்டுக் கரடிகளுக்கு உணவாய்க் கொடுக்கப்பட்டான்.” என்றான் சாத்யகி நடுங்கும் குரலில்.

“அது சரி, சாத்யகி, அந்தப் பெண் ஏன் மரங்களின் உச்சியிலேயே குடி இருக்கிறாள்? அதுவும் பறவைகளைப் போல் பறவைக்குரலில் ஏன் பாடுகிறாள்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “ஓ, அவள் ஜாம்பவானின் கண்ணின் கருமணியைப்போன்றவள். ஜாம்பவானுக்குத் தன் பெண்ணிடம் அதிக அன்பு, பாசம். அவள் விழித்திருக்கும் நேரம் எல்லாம் இப்படித் தான் மரத்துக்கு மரம் தாவி ஊஞ்சலாடிக் கொண்டிருப்பாள். குரங்குகளிடம் பேசுவாள். அல்லது பறவைகளைப் பார்த்து அவற்றின் குரலில் பாடுவாள். பறவைகளின் குரலைப் போல போலிக் குரலில் பாடுவாள்; பேசுவாள். “ம்ம்ம்ம்ம், எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. நான் அப்படித் தான் நினைக்கிறேன். அவள் தன் தந்தையின் உத்தரவின் பேரில் தான் நம்மை எல்லாம் இங்கே இழுத்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. “ என்றான் கிருஷ்ணன்.

சத்யபாமா கிண்டலாகவும் குறும்பாகவும் சிரித்தாள். “சாத்யகி, பிரபு கிருஷ்ணன் அவர்களுக்கு இந்தப் பெண்ணிடம் அதீதமான அபிமானம் உருவாகி விட்டது. அதன் காரணமாகவே அவளைப் பின் தொடர்ந்து இந்தக் கரடிகள் ராஜ்ஜியத்துக்கு வந்திருக்கிறார். இப்போது பாரேன், அவள் இவரைத் தன் கணவனாக ஏற்கப் போகிறாள்.” என்றாள். கிருஷ்ணனைப் பொய்க் கோபத்துடன் பார்த்து முறைத்தாள். கிருஷ்ணனோ இவை எதற்கும் கலங்காமல் சத்யபாமாவைப் பார்த்துச் சிரித்துவிட்டு சாத்யகியிடம், “சாத்யகி, ச்யமந்தக மணி எங்கே இருக்கிறதை நீ கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டான். சாத்யகி இல்லை என்று பதிலளித்தான். “ம்ம்ம்ம்ம், ஆனால் அது இங்கே தான் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. நான் அந்தச் சங்கிலியின் ஒரு பாகத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். அது பிரசேனன் கொல்லப்பட்ட இடத்தில் கிடந்தது. இன்னொரு பாகம் இந்தக் கரடிகளின் உலகுக்கு வரும் வழியில் உள்ள மேல் குகையில் கண்டெடுத்தேன். ஜாம்பவான் அதை இங்கே தான் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை நான் எப்படிக்கண்டு பிடித்தேன் எனில் கரடி அரசன் ஜாம்பவானின் மருமகனின் தோள்பட்டையின்  கரடித்தோல் அங்கே செத்துக் கிடந்த சிங்கத்தின் பாதங்களில் காணப்பட்டது. ஆகவே கரடிகள் தான் அந்த ச்யமந்தகமணியைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.”

“அப்படியா? நமக்கு இப்போது என்ன நடக்கும்?” சாத்யகி ஆவலுடன் கேட்டான். “ம்ம்ம்ம், கரடி அரசன் ஜாம்பவானின் அன்புக்குப் பாத்திரமான அவன் மருமகன் ஆன கரடிக்கு நம்மை உணவாக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவும் அந்தக் கரடி மருமகன் சத்யாவைப் போன்றதொரு இனிமையும், இளமையும் பொருந்திய சதைகள் நிரம்பிய உணவு இதுவரை கிடைத்திருக்காது. ஆகவே அனுபவித்துச் சாப்பிடுவான்.” சொல்லிவிட்டுக் கிருஷ்ணன் சிரித்தான். அதற்கு சத்யபாமா குறுக்கிட்டு, “அதனால் என்ன? நாம் மூவருமே தானே அந்த மருமகனுக்கு உணவாகப் போகிறோம்? அதில் எனக்கு சந்தோஷமே! ஆனால் அந்தப் பறவைப் பெண் உங்களை அதற்குள்ளாகக் கடத்தாமல் இருக்கவேண்டுமே, பிரபுவே!” என்று சற்றும் பயமில்லாமல் கூறிய பாமா உள்ளுக்குள் கரடியின் வயிற்றிலாவது கிருஷ்ணனும் தானும் ஒன்றாக இருக்க வாய்ப்புக் கிடைப்பதில் உள்ளூர சந்தோஷம் அடைந்தாள். “சரி, போகட்டும், எப்படியாயினும் ஊரியையும் அவள் குட்டியையும் நாம் தப்பிக்க வைத்தாகவேண்டும்!” என்றான் கிருஷ்ணன். ஊரி அப்போது அங்கு காவல் இருந்தவர்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு குகைக்குள் வந்திருந்தது. பூனைக்குட்டியும் தன் தாயைத் தொடர்ந்து வந்திருந்தது. கிருஷ்ணனைக் கண்டதும் அவன் மேல் அன்போடு உரசியது.

அவர்கள் மூவரும் அங்கிருந்த இலைப்படுக்கைகளில் படுத்தனர். அன்று பூராவும் அலைந்த அலைச்சலும், கரடி மனிதர்களோடு ஏற்பட்ட சம்பவங்களாலும் உடல், மனம் இரண்டுமே சோர்ந்திருக்க விரைவில் அவர்களை நித்திராதேவி பரிபூரணமாய் ஆட்கொண்டாள். காலை பறவைப் பெண்ணின் பறவைக்குரல் சங்கீத ஒலி கிருஷ்ணனை எழுப்பி விட்டது. உடனே அவன் தன் புல்லாங்குழலை எடுத்து அவளுக்கு அதன் மூலம் பதில் சொன்னான். இருவரும் ஒருவரை போட்டி போடும் வண்ணம் அடுத்தடுத்து இனிமையான சங்கீதத்தில் ஆழ்ந்தனர். விரைவில் சூரியன் உதயம் ஆக, காவலர்கள் மாறினார்கள். குகையில் வாயிலில் வைத்திருந்த பெரிய பாறையை அகற்றினார்கள். காவலர்கள் துணையுடன் கிருஷ்ணனும், அவன் கூட இருந்த சாத்யகியும், பாமாவும் நீர்ப் பிரவாகத்துக்குக் காலைக்கடன்களை முடிக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கேயே கிருஷ்ணனும், சாத்யகியும் தங்கள் காலை அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டனர்.

திரும்பி வருகையில் தங்கமயமான மண் கலவை இருந்த இடத்தில் கரடி மனிதர்கள் முழங்காலளவுத் தண்ணீரில் நின்று கொண்டு மண்ணைச் சலித்துச் சலித்துத் தங்கத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த சத்யபாமா கண்ணனிடம் திரும்பி, “பிரபுவே, புனித குகையில் நாம் பார்த்த தங்கத் துகள்கள் அனைத்தும் இங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்!” என்றாள். “ஆம்!” என்றான் கண்ணன். மேலும் தொடர்ந்து, “உன் தந்தை இந்தப் புனிதக்குகையில் ச்யமந்தக மணியின் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்படும் தங்கம் அனைத்தும் இந்த மணல் மூலமும் கரடி மனிதர்கள் மூலமும் பெற்றவையாக இருக்க வேண்டும். “இந்தக் கரடிப்பெண்களுக்கு இந்தத் தங்கத்தினால் ஏதும் பலன் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. அவர்கள் உன்னை விட மிகவும் புத்திசாலிகள்.”

பின்னர் குகைக்குத் திரும்பியதும் மூவருக்கும் காவலாளிகளால் உணவு அளிக்கப்பட்டது. மதிய நேரத்தில் அங்கிருந்த கரடி மனிதர்களில் பெரியவரான ஒருவர் வந்து சாத்யகியை மட்டும் அழைத்தார். கண்ணன் அவனிடம், “சென்று வா சாத்யகி! ஆனால் பொறுமையைக் கடைப்பிடி! அவர்கள் உன்னை எவ்வளவு அவமதித்தாலும் பொறுமையாக இரு! எதற்கும் கலங்காதே! கோபம் கொள்ளாதே! நாம் அனைவருமே ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருப்பதை நினைவில் கொள் சாத்யகி! குறைவாகவே பேசு! நீயாக எந்த முடிவையும் எடுக்காதே! இந்த மனிதர்கள் நம்மை எத்தகையதொரு சூழ்நிலையில் கொண்டு விடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் எனக்குக் கரடி அரசன் நம் நண்பன் என்றொரு எண்ணம் தோன்றுகிறது.” என்றான் கிருஷ்ணன்

Thursday, March 17, 2016

சாம்பன் மரணம்; கரடி அரசன் கோபம்!

கடைசியில் நிலவுத் திருவிழா மிகவும் சோகமாக முடிவடைந்தது. கரடி மனிதர்கள் அனைவரும் சிலையைப் போல் திகைத்து நின்றனர். அனைவரும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டதால் அவர்கள் பயம், அதிர்ச்சி எல்லாம் மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. அவர்கள் தொண்டையிலிருந்து இன்று வரை அவர்கள் அறியாததொரு குரலில் சோகமான ஓலம் கிளம்பியது! புலம்பல் அதிகமாயிற்று! அவர்களால் கற்பனை கூடச் செய்து பார்த்திராத வகையில் அவர்களின் ஆசாரியனும், அவர்களின் குலதெய்வமான கரடிகளின் கடவுளின் மிக விருப்பமான மகனுமான சாம்பன் கிருஷ்ணனால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடக்கிறான். அவர்களைப் பொறுத்தவரை சாம்பனின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அது உடனடியாக நிறைவேற்றப்படும். அவனைப் பார்க்கையிலேயே பயம் கலந்த பக்தியுடனேயே பார்ப்பார்கள். இது வரை எவருக்கும் இல்லாததொரு சக்தியுடன் இருந்து வந்த அவன் இப்போது ஒரே நிமிடத்தில் செத்தவனைப் போல் கீழே விழுந்துவிட்டானே! உண்மையிலேயே இறந்து விட்டானா?  கடவுள் அவனுக்குக் கொடுத்த சக்தியைத் திரும்ப எடுத்துக் கொண்டு விட்டாரா? தனக்குப் பிடித்த மகனாக இருந்தவனை இப்போது  தனக்கு வேண்டாம் என்று விட்டு விட்டானா? அவனுக்குக் கொடுத்த சக்தியை இந்தப்புதிய மனிதனுக்குத் திருப்பி விட்டானா?
ஆஹா, ஆம், அவன் இறந்துவிட்டான். உண்மையாகவே இறந்து தான் விட்டான். இது என்ன? ஜாம்பவான் அதிர்ச்சி அடைந்தார். மெல்ல மெல்ல அவன் அருகே வந்து தொட்டுப் பார்த்தார். பின்னர் கிருஷ்ணன் முகத்தைப்பார்த்தார். அதிர்ச்சியும், ஆச்சரியமும் அவர் கண்களில் தென்பட்டன. கரடிகளின் நன்மைக்காகவும், கரடி உலகின் நன்மைக்காகவுமே அவர் இத்தனை நாட்கள் சாம்பனின் அதிகக் கொடுமையையும், துர் நோக்கங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தார். அவனுடைய கடுமையான சட்டதிட்டங்களை ஏற்றுக் கொண்டார். இப்போது வாசுதேவக் கிருஷ்ணன், இந்தக் கரடி உலகுக்கே புதியவன், கறுப்புக் கடவுளால் அனுப்பப் பட்டு நம் குலத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறான். ஒரு தூதனாகவா? அல்லது இவனும் கொடூரமானவனா? நல்லவனா, கெட்டவனா இவன்? ஆனால் ஜாம்பவான் மற்றவர்களைப் போல் இல்லாமல் வெகு விரைவில் தன்னைச் சமாளித்துக் கொண்டார். நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கக் கரடி அரசனாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து விரைவில் செயலாற்றினார். தன் கையில் சாம்பனின் மத்தளத்தை எடுத்துக் கொண்டு தங்கள் கடவுளை அழைக்க ஆரம்பித்தார். பாரம்பரியமாக முறையில் நடனமும் ஆடினார். உடனே எல்லாக் கரடி மனிதர்களும் தங்கள் தலையைக் குனிந்த வண்ணம் நெஞ்சில் தங்கள் கைகளைக் குறுக்காகப்போட்டுக் கொண்டனர். சீக்கிரமாக அங்கே அமைதி வந்தது. அப்போது கரடிகள் அரசனான ஜாம்பவான் தங்கள் கடவுளை எழுப்பினான். “ஏ, உலக நாயகனே! எவர்க்கும் அஞ்சாதவனே!கறுப்புக் கடவுளே! எங்களைக் காத்து ரக்ஷிப்பாயாக! எங்கள் கரடி மக்களைக் காப்பாற்று. இந்தப் புதிய மனிதன் சாம்பனை உங்களிடமிருந்து பிரித்துவிட்டான். அவன் பாதுகாப்பு எங்களுக்கு இப்போது இல்லை! நாங்கள் அனைவரும் சேர்ந்து உன்னிடம் பாதுகாப்பைக் கோருகிறோம். உங்கள் வழிகாட்டுதலும் எங்களுக்குத் தேவை!”

கூட்டத்தில் அனைவரும் கத்தினார்கள். அனைத்தும் தெரிந்தவரே! அனைவருக்கும் வல்லவரே, உலக நாயகரே, எவருக்கும் அஞ்சாதவரே! எங்களைக் காப்பாற்று. காப்பாற்று! நாங்கள் உன்னுடைய மக்கள்.” என அனைவரும் ஒரே குரலில் கத்தினார்கள். அப்போது சாம்பனின் தாயும் ஜாம்பவானின் மூத்த மகளும் ஆனவள் முன்னே வந்தாள். அவள் அழுத அழுகை நெஞ்சைப் பிளந்தது. சோகமான தொனியில் பல்வேறு புலம்பல்களைப் புலம்பிய வண்ணம் அவள் தீனமாக அழுதாள். தன் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டாள். தலையைச் சோகத்தில் ஆட்டினாள். தலையில் அடித்துக் கொண்டாள். இறந்து கிடந்த மகனின் அருகே சென்றாள். ஆனால் அவளால் தொட முடியவில்லை. அது கரடிகள் உலகுக்கு சாஸ்திர ரீதியானது அல்ல. அந்தக் கரடி உலகின் நம்பிக்கையானது இறந்து போன ஆசாரியனின் உடலைத் தொடுவதிலிருந்து தடுத்தது. ஏனெனில் அவனுக்குக் கடவுள் கொடுத்து வந்த பாதுகாப்பை நீக்கிக் கொண்டார். ஆகவே அவனைத் தொடக் கூடாது. அவன் உடலைக் கரடிகள் தின்னக் கொடுக்க வேண்டும். ஆகவே அந்தக் கூட்டத்திலிருந்த சில பெரியோர்கள் முன்னே வந்து சாம்பனின் தாயை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். அவள் அவர்கள் கைகளில் நடுங்கினாள். துள்ளினாள். துடித்தாள். விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தாள். ஆனால் அவளால் இயலாமல் அப்படியே கீழே விழுந்தாள். உடனே மற்றவர்கள் அவளைத் தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு சென்றார்கள்.

கரடி அரசனின் கட்டளையின் பேரில் ஐந்து கரடி மனிதர்கள் கிருஷ்ணனையும், சத்யபாமாவையும், சாத்யகியையும் ஒரு காலியான குகைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் கரடி மனிதர்கள் அந்த எரியும் நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். மீண்டும் மீண்டும் அவர்கள் கடவுளை அழைத்தூ மன்னிப்பும், பாதுகாப்பும் கேட்டனர். பின்னர் அங்கேயே அமர்ந்து இப்படி ஒரு எதிர்பாரா நிகழ்வு ஏற்பட்டது குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர். ஆனால் குகைக்குள்ளே சிறை வைக்கப்பட்டவர்களில் சத்யபாமா தான் இருக்கும் நிலையை நினைத்துக் கவலைப்படாமல் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். அவள் இத்தனை வருடங்களாக சாத்யகியிடம் தன்னைக் கிருஷ்ணனிடம் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் கிருஷ்ணனை சாத்யகி இருக்குமிடம் அழைத்து வந்துவிட்டாள். இது ஓர் அதிசயம் தான். பாமாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

Tuesday, March 15, 2016

சாம்பனின் முடிவு?

அதற்குள்ளாக நெருப்பில் வாட்டப்பட்ட மாமிசம் வெந்து தயார் நிலையில் இருக்கவே ஒரு பாறையின் முனையையே நன்கு சீவிச் சீவிக் கத்தி போல் ஆக்கி இருந்ததை வைத்து மாமிசம் துண்டுகளாக வெட்டப்பட்டது. சாப்பாடு தயாராகிவிட்டது என்று தெரிந்ததும் அங்கே இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் பேச முற்படக் குழப்பமான சப்தங்களுக்கு நடுவே மாமிசம் அனைவருக்கும் பகிர்ந்து தரப்பட்டது. காத்திருந்த கரடிகளும் தங்கள் உறுமலால் தாங்களும் பசியோடு காத்திருப்பதை நினைவூட்டின. அப்போது “கடவுளின் பிரியமான மகன்” சாம்பன் எழுந்து நின்றான். தன் கைகளை உயர்த்திய வண்ணம் தங்கள் கடவுளைத் தங்களிடம் அழைத்தான். பின்னர் தன் தோளில் இருந்து தொங்கிய மத்தளத்தை வாசித்த வண்ணம் அவர்களுக்கே உரிய நடன முறையில் நடனம் ஆடத் துவங்கினான். ஒவ்வொருவரும் தங்கள் தலையைத் தாழ்த்திய வண்ணம் தங்கள் நெஞ்சைத் தொட்டுக் கொண்டு மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் உணவு உண்ண ஆரம்பித்தனர். சாப்பாடு முடிந்ததும் ஆசாரியன் ஆன சாம்பன் மீண்டும் எழுந்து நின்று தங்கள் கடவுளைக் கூவி அழைத்தான். மத்தளத்தைத் தட்டிய வண்ணம் சாஸ்திரிய நடனத்தின் இரு அடிகளை முன்னும், பின்னுமாக ஆடத் துவங்கினான். பின்னர் உரத்த குரலில் “இன்றிரவு உங்கள் படுக்கைக்கு நிலாப்பெண் வரப் போகிறாள், எல்லாம் வல்லவரே! தயாராக இருங்கள். இதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவோம். உங்களுடைய பிரியத்துக்கு உகந்த கரடி குலப் பிரதிநிதிகளான நாங்கள் இதை விழாவாக எடுக்கிறோம்.” என்றான்.

அதன் பின்னர் துள்ளும் நடையில் அவன் காட்டை நோக்கிச் சென்றான். செல்லும்போது தன்னுடைய கரடித்தோலை அங்கேயே விட்டு விட்டுச் சென்றான். அவன் முகமூடியும் மத்தளமும் கூட அங்கேயே அவன் ஆசனத்தில் இருந்தன. உடனேயே இளம்பெண்களான கரடிப் பெண்களும் மற்றும் நடுத்தர வயதான பெண்களும், தங்கள் தலைக்கேசத்தைச் சரி செய்தபடி உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு சாம்பனின் பின்னால் ஓடினார்கள். விரைவில் அந்தப் பசுமையான காட்டுக்குள் மறைந்தும் போனார்கள். அதன் பின்னர் அங்கிருந்த அனைத்துக் கரடி மனிதர்களும், ஜாம்பவானைத் தவிர,மற்றும் ஒரு சில வயதானவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெண்களைப் பின் தொடர்ந்து காட்டுக்குள்ளே ஓடினார்கள். ஒரு சிலர் அவர்களுக்கு இஷ்டமான பெண்களைத் துரத்த, சில பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த ஆண்களின் பின்னே மகிழ்ச்சியோடு ஓட அங்கிருந்த கரடிகளும் அந்த மனிதக் கூட்டத்தோடு அந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள ஓடிப் போயின. இப்படிப்பட்டப் புரட்சிகரமான நிகழ்வுகளை அதுவரை பார்த்திராத சத்யபாமாவுக்கு மயக்கம் போடும் நிலைமை வர, கிருஷ்ணன் ஆறுதல் தரும் விதத்தில் அவள் இடையைப் பிடித்துத் தன்னோடு அருகே இழுத்துக் கொண்டான். சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த சாத்யகி கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணனின் சைகைகளின் மூலம் கண் பார்வைகள் மூலமும் இருவருக்கும் இடையே இருக்கும் உறவும் நட்பும் அந்தக் கரடி மனிதர்களுக்குத் தெரிய வேண்டாம் என்பதில் அவனும் கவனத்தோடு இருந்தான்.

அந்தப் பறவைப் பெண்ணும் காட்டை நோக்கி ஓடினாள்; எனினும் சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தவள் கிருஷ்ணன் எதிரே மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் தான் கொண்டு வந்திருந்த ஒரு பூவை அவன் காதுகளின் பின்னே அலங்காரமாக வைத்தாள். தன் முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள். கிருஷ்ணன் அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். தன் காதுகளில் வைக்கப்பட்டிருந்த பூக்களை எடுத்து அவளிடம் திரும்பக் கொடுத்தான். அப்போது அந்தப் பறவைப் பெண் சிறிதும் நாணமற்ற ஓர் செயலைச் செய்தாள். கிருஷ்ணன் கைகளைப் பிடித்துக் காட்டின் பக்கம் செல்லலாம் என்று சைகை காட்டியபடி இழுத்தாள் அவனை. அவளைப் பொறுத்தவரை இது ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் நடைபெறும் உற்சாகத் திருவிழா. ஆனால் கிருஷ்ணனுக்கு அது வெறுப்பையும், அருவருப்பையும் உண்டாக்கிற்று. ஆனால் அவளிடம் அதை வெளிக்காட்டமல் மெல்லப் புன்னகைத்த கிருஷ்ணன் அவள் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டான். அவளும் சிரித்தபடி தன் கண்ணிமைகள் படபடக்க அவனைப் பார்த்தவள் பின் மெல்லக் காட்டின் பக்கம் திரும்பிப் போனாள். விரைவில் முழு நிலவு உதயம் ஆயிற்று. அப்போது சாம்பன் திரும்ப வந்தான். வந்தவன் நேரே சத்யபாமாவின் கைகளைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். அவளைக் காட்டின் பக்கம் அழைத்தான். சத்யபாமா பயத்தின் உச்சிக்குப் போனாள். அவன் தொட்டதுமே கத்த ஆரம்பித்தவள் தன் கத்தலை நிறுத்தவில்லை. அவன் தன்னை எதற்காக அழைக்கிறான் என்பதை சத்யபாமா புரிந்து கொண்டாள். ஆகவே அவள் உடல் நடுங்கியது.

கிருஷ்ணன் சாம்பனின் கைகளை வேகமாகத் தட்டி விட்டான். தள்ளியும் விட்டான். அவன் தள்ளிவிட்டதின் வேகம் தாங்க முடியாமல் சாம்பன் நிலை தடுமாறினான். அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அவன் அங்கே அந்த ராஜ்ஜியத்தில் ஒரு மதகுருவாக இருந்து வருகிறான். அதிலும் அவன் அவர்களின் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மகனும் ஆவான். இன்று வரை அவர்களின் கரடிக்குலம் அவனை மிகவும் மரியாதையாகவே நடத்தி வந்திருக்கிறது. தன்னையும் இப்படி ஒருவன் ஒதுக்கித் தள்ள முடியும் என்பதை அவன் இன்று வரை நினைத்தும் பார்க்கவில்லை. அதிலும் இவ்வளவு கடுமையாக அவனை இன்று வரை யாரும் நடத்தியது இல்லை. அங்கிருந்த மற்றக் கரடி மனிதர்களும், மற்றும் காட்டிலிருந்து திரும்பி வருகின்றவர்களும் தங்களுடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மதகுரு எங்கிருந்தோ வந்த ஒருவனால் அவன் ஆசைகள நிறைவேற்றிக்கொள்ள விடாமல் தடுக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமும் திகைப்பும் கொண்டனர். இன்றுவரை அவர்கள் மதகுருவின் ஆசைகள் எதுவானாலும் அது அவர்களுக்கு மீற முடியாத ஓர் சட்டமாக இருந்தது. அதைத் தலைமேல்கொண்டு நடந்து வந்தார்கள். அதைப் பார்த்த சாத்யகி கிருஷ்ணனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் என நினைத்து அவன் அருகே எழுந்து வந்தான்.

கிருஷ்ணன் அவனை சாம்பனுக்கும், சத்யபாமாவுக்கும் இடையில் அமர்த்தினான். சாம்பன் இதற்குள்ளாகத் தன்னைச் சமாளீத்துக் கொண்டிருந்தான். அதன் பின்னர் கிருஷ்ணன் தனக்குத் தெரிந்த விதத்தில் சாம்பனை எதிர்கொள்ள ஆரம்பித்தான். அவன் நிபுணனாக இருந்த மல்யுத்த முறையைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். அவன் விலா எலும்பில் சாம்பன் கொடுத்த  அழுத்தத்தைக் கிருஷ்ணன் வேறு விதத்தில் எதிர்கொண்டான். அவன் தலை மயிரைப் பிடித்து இழுத்து அவன் தலையை மேலும் கீழும் ஆட்டினான். வேகமாக உலுக்கினான். தன் வலது உள்ளங்கையால் சாம்பனின் கழுத்தில் பேயறை அறைந்தான் கிருஷ்ணன். தன் விரல்களை நீட்டி விறைத்த வண்ணம் கத்தியைப் பயன்படுத்துவது போல் தன் உள்ளங்கையைப் பயன்படுத்தி அவன் கழுத்தில் கிருஷ்ணன் அறைந்த அறையில் சாம்பன் கழுத்தில் கோடரி வெட்டுப் போல் பட்டது. கிருஷ்ணனின் விலாவில் அவன் கொடுத்த அழுத்தம் மெல்ல மெல்லக் குறைந்தது. அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள்ளாகக் கிருஷ்ணன் விரைந்து செயல்பட்டான். சாம்பன் தலையை அவன் மயிராலேயே மேலே இழுத்து மீண்டும் அவன் தொண்டையில் ஓங்கிக் குத்தினான். அவ்வளவில் கழுத்து உடைந்து போன சாம்பன் கீழே விழுந்தான்.

Sunday, March 13, 2016

ஜாம்பவான் பாசம்! சாம்பன் கோபம்!

இவை அனைத்திலிருந்தும் அந்த மனிதன் அங்கே உள்ள இந்தக் கரடி-மனித இனத்தின் ஆசாரியன் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஜாம்பவான் மெதுவாகக் கிருஷ்ணன் காதுகளில் கிசுகிசுத்தார்! “அவர் தான் புனிதமான ஆசாரியர், சாம்பன் என்பவர்! மஹாவல்லமை பொருந்தியவரும், கரடி உலகைச் சிருஷ்டி செய்தவருமான வல்லமை பொருந்தியவரின் மிகவும் பிரியமான மகன் இவர், இந்த சாம்பன் என்பவர்! இந்தக் கரடி உலகைப் பல்லாண்டுகளாக இவரே காத்து வருகிறார். அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்!” என்றார். கரடிகளின் அரசனான ஜாம்பவான் தன்னுடைய தோள்களில் தட்டிக் கொண்டு மார்பில் அடித்துக் கொண்டு அவர்கள் வழக்கப்படி அந்தப் புனிதமான கரடி மனிதனுக்குத் தன் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். அதற்குப் பதில் தரும் விதமாக சாம்பன் லேசாக உறுமினார். ஆசிகளைத் தெரிவிக்கும் விதமாக அரசனின் கழுத்தருகே முகர்ந்து பார்த்துவிட்டு அவர் கன்னங்களைத் தன் இரு விரல்களால் தட்டிக் கொடுத்தார். கரடிகளின் அரசனான ஜாம்பவான் கண்ணனையும், பாமாவையும் தான் எப்படிச் சந்திக்க நேர்ந்தது என்பதை சாம்பனுக்கு விளக்கிக் கூறினார். அதைக் கேட்ட சாம்பன் கொஞ்சம் முகச் சுளிப்புடனேயே அவர்கள் இருவரையும் பார்த்தார். கிருஷ்ணனுக்குப் புரிந்து விட்டது! இந்த மனிதனுக்குப் பிடிக்கவில்லை எனில் தங்களுக்கு இங்கே வரவேற்பு இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டான்.

அவர்கள் இருவரும் கீழே குனிந்து சாம்பனின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்கள். சாம்பன் தன் முகத்தில் கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் கழுத்தருகே முகர்ந்து பார்த்தான். அதையே சத்யபாமாவிடமும் செய்ய முயன்றான். ஆனால் சத்யபாமா உடனே விலகிக் கொண்டாள். பின்னே நகர்ந்து விட்டாள். அவளுக்குப் பயம் வந்து விட்டது! சாம்பனின் முகத்தில் தெரிந்த புன்னகை மெல்ல மெல்ல மறைந்தது. ஒரு கொடூரமான பார்வை அவர் கண்களில் தெரிந்தது. ஏதோ தீமையைச் செய்யப் போகிறான் என்று கிருஷ்ணன் மனதில் தோன்றியது. அதற்குள்ளாக ஜாம்பவான் இது எதையும் கவனிக்காமல் சாம்பனின் அருகே அமர்ந்த வண்ணம் கிருஷ்ணனை அழைத்துத் தன்னருகே அமரச் சொன்னார். சாம்பனின் இடப்பக்கம் ஒரு குண்டான பெண்மணி அமர்ந்திருந்தாள். அவள் சற்று நகர்ந்து கொண்டு சத்யபாமாவுக்கு அங்கே அமரும்படி இடம் கொடுத்தாள். அங்கே சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த இடைவெளியில் சாம்பனின் அருகே அமர்ந்திருந்த பெண்மணி சத்யபாமாவின் கையில் இருந்த பூனைக்குட்டியைப் பிடுங்கினாள். அதையும் நெருப்பில் போட்டு வேக வைத்து உண்ணவேண்டும் என்பது அவள் ஆசை! சத்யா உடனே கிருஷ்ணனின் பக்கம் ஓடிச் சென்று தன் கையிலிருந்த குட்டியை அவனிடம் கொடுத்துவிட்டாள். அந்தப் பெண்மணியின் கோபம் தலைக்கேறியது. அவளும் உடனே எழுந்து கொண்டு அவர்கள் மொழியில் கிருஷ்ணனையும், பாமாவையும் திட்டிக் கொண்டு கிருஷ்ணனிடமிருந்து அந்தக் குட்டிப் பூனையைப் பிடுங்க வந்தாள். சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த ஊரிக்கு அவள் எண்ணம் புரிந்து விட்டது. கிருஷ்ணன் அருகே வந்து நிலை கொள்ளாமல் தவித்த வண்ணம் மியாவ், மியாவ் என்று விடாமல் கத்தியது.

கிருஷ்ணன் ஊரியைப்பார்த்து ஆறுதல் அளிக்கும் பார்வை ஒன்றால் தான் அதன் குட்டியை விட்டுப் பிரிய மாட்டேன் என வாக்குறுதி அளித்தான். கரடி மனிதனுக்கு இந்த மௌன யுத்தம் எதன் காரணமாக என்று புரிந்து விட்டது. அவன் அந்தப்பெண்மணியிடம் பூனைக்குட்டியை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். அந்தப் பெண்மணி அரசனின் மூத்தமகள் என்றும் அவள் தான் சாம்பனின் தாய் என்பதையும் கிருஷ்ணன் பின்னால் அறிந்து கொண்டான். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. மீண்டும் மீண்டும் குட்டியைக் கிருஷ்ணனிடமிருந்து வாங்கித் தர நிர்ப்பந்தம் கொடுத்தாள். ஜாம்பவானோ அந்தக் குட்டியைக் கிருஷ்ணனிடமிருந்து எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு அதைச் சீராட்டித் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். கிருஷ்ணனைக் கொலை செய்துவிடுவது போல் குரோதமாகப் பார்த்த அந்தப் பெண்மணி வேறு வழியின்றித் தன் ஆசனத்தில் சென்று அமர்ந்தாள். சற்று நேரம் கழித்து அந்தக் குட்டிப் பூனை தன் தாய் அருகே இருப்பதை உணர்ந்து தாயிடம் சென்று விட்டது. அப்போது திடீரென அந்தப் பறவைக்குரல் சங்கீதம் எங்கிருந்தோ கேட்டது. கிருஷ்ணன் அந்தப் பகுதியினுள் நுழைகையில் மரத்தின் மேலே இருந்து கேட்ட அந்தக் குரல் இப்போது மிக அருகே கேட்டது. உடனே சற்றும் தயங்காமல் கிருஷ்ணன் தன் புல்லாங்குழலை எடுத்து அதே ஸ்வரத்தில் அதில் கீதம் இசைத்தான். அங்கிருந்த அனைவருக்கும் இந்த இசையின் மூலம் இருவரும் பேசிக் கொண்டது மிகப் புதுமையாகத் தென்பட்டது.

அப்போது சாம்பன் உரத்த குரலில், “முட்டாள் பெண்ணே, கீழே இறங்கு! உன் மடத்தனத்தால் ஏற்கெனவே நாங்கள் அவதிப்பட்டு விட்டோம். போதும், போதும், கீழே இறங்கு!” என்று கடிந்து கொண்டான். அந்தப் பிசாசுப் பெண் மெல்ல மெல்லத் தரைக்கு இறங்கினாள். சாம்பனுக்கு மிக அருகே அவள் இறங்கினாள். அது மெலிதாக உடலில் பல வளைவுகளைக் கொண்ட ஓர் இளம்பெண் என்பதைக் கிருஷ்ணன் பார்த்தான். அவள் கருத்த நிறத்தோடு, அழகிய கரிய, பெரிய விசாலமான கண்களோடு காணப்பட்டாள். நரித்தோலை இடையில் தரித்திருந்தாள். அவள் உடலின் மற்ற பாகங்களை அவள் நீண்ட கூந்தல் மூடி இருந்தது. அவள் சாம்பனை நெருங்கியதும் அவரை வணங்கும் தோரணையில் தன் மார்பில் அடித்துக் கொண்டு தலைக் கீழே தாழ்த்தி வணங்கினாள். ஜாம்பவானுக்குச் செய்தது போல சாம்பன் இந்தப் பெண்ணின் கழுத்தருகேயும் முகர்ந்து பார்த்து அவள் கன்னத்தில் இரு விரல்களால் தட்டிக் கொடுத்தான். அதன் பின்னர் அவள் ஜாம்பவானை இறுக்கித் தழுவிக் கொண்டாள். ஜாம்பவானும் பாசத்துடன் அவளை அணைத்துக் கொண்ட வண்ணம் கிருஷ்ணனிடம், “இவள் என் மகள், பெயர் ரோகிணி!” என்றார். ரோகிணி கிருஷ்ணனின் பக்கம் திரும்பியவள் அவன் எதிர்பாராதவண்ணம் புல்லாங்குழலை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பின் மீண்டும் புல்லாங்குழலைக் கொடுத்துவிட்டாள்.

அங்கு கூடி இருந்த அனைவருமே அவளை மிகப் பிரியத்துடன் ரோகிணி, ரோகிணி என்று அழைத்துப் பாசத்தைக் காட்டினார்கள். சுறுசுறுப்பும் அதே சமயம் எல்லோரிடமும் பழகும் கலகலப்பும் கொண்ட அந்தப் பெண் எழுந்து தன் மூத்த சகோதரியின் அருகே சென்று அவள் தோள்களை அன்புடனும் பரிவுடனும் அழுத்தினாள். அதோடு இல்லாமல் எப்படியோ சத்யாவுக்கும், அந்த குண்டான பெண்மணிக்கும் இடையே தனக்கென ஓர் இடத்தையும் தேடிக் கண்டு கொண்டாள். அங்கே அமர்ந்ததோடு இல்லாமல் தன் ஒரு கையைத் தன் சகோதரியின் தோள் மீதும் இன்னொரு கையை சத்யாவின் தோள் மீதும் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். கிருஷ்ணனுக்கு அவள் ஆரியர்களின் பாரம்பரிய மொழியில் பேசுவதைக் கண்டு ஆச்சரியம் வந்தது. ஆனால் அவளாலும் ஜாம்பவானைப் போலவே மெதுவாக நிறுத்தி நிறுத்தித் தான் பேச முடிந்தது. வேகமாகப் பேச முடியவில்லை.

Saturday, March 12, 2016

கரடிகளின் ராஜ்ஜியத்தில் நந்தலாலா! 2

“கரடி அரசரைச் சந்தித்து நட்புக் கொள்ளும் எண்ணம்! அதனால் தான் வந்திருக்கிறோம்.” என்றான் கண்ணன் மீண்டும். அதற்கு அந்தக் கரடி மனிதன் சிரித்தான். “ஓஹோ! கரடிகளின் அரசனைச் சந்திக்க வேண்டுமா உனக்கு? அப்படி எனில் இதோ நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாய்!” என்ற வண்ணம் தன் நெஞ்சில் ஓங்கி ஓர் அடி அடித்துக் கொண்டான். “நான் தான் கரடிகளின் அரசன் ஜாம்பவான். நீ யாரப்பா?” என்று ஜாம்பவான் கேட்டார்.
“நான் கிருஷ்ணன், வாசுதேவக் கிருஷ்ணன், விருஷ்ணி குலத்தலைவரான வசுதேவரின் மகன்!” என்றவண்ணம் கிருஷ்ணன், “மாட்சிமை பொருந்திய கரடி அரசருக்கு என் வணக்கம்.” என்ற வண்ணம் கீழே குனிந்து ஜாம்பவானை வணங்கினான். அதைப் பார்த்த பாமாவும் அப்படியே செய்தாள். கண்ணன் மேலும் பேச ஆரம்பித்தான்.

“எங்கள் அரசர் மாட்சிமை பொருந்திய உக்ரசேனர், என்னுடைய தந்தை வசுதேவர், மற்றும் எங்கள் யாதவகுலத்தின் அனைத்துத் தலைவர்களும் உங்களை நான் சந்திக்க நேர்ந்தது குறித்துக் கூறும்போது மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் சார்பாகவும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களிடமும் நான் போய்ச் சொல்கிறேன்.” என்றான் கிருஷ்ணன். “ஆனால் அது நீ திரும்பினால் தான் அப்பனே!” என்றார் ஜாம்பவான். ஆனால் கிருஷ்ணன் அதை லட்சியம் செய்யவே இல்லை. “நம் நட்புக்கு அடையாளமாக என் ஆயுதங்களை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன், ஐயா!” என்ற கிருஷ்ணன் தன் ஆயுதங்களை ஜாம்பவானிடம் ஒப்படைத்தான். பின்னர் தன் வழக்கமான அனைவரையும் கவர்ந்திழுக்கும் புன்னகையுடன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டான். ஜாம்பவானுக்கு உள்ளூர ஆச்சரியம்! இப்படியான ஒரு நிகழ்வை அவர் இதுவரை பார்த்ததே இல்லை. நட்பு என்றால் ஆயுதங்களைக் கூடவா ஒப்படைப்பார்கள்? ஆனாலும் அவர் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு தன்னருகே இருந்த கரடி மனிதனிடம் அவற்றை ஒப்படைத்தார். பின்னர் அவர்களை அங்கிருந்த ஒரு செங்குத்தான பாதை வழியாக உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே நுழைகையில் அதே இசைக்கும் குரல் வானம்பாடியைப் போல் இசைத்தது. ஆனால் கொஞ்சம் தூரத்திலிருந்து அந்தக் குரல் கேட்டது. அதைக் கேட்ட கிருஷ்ணா அதே போல் இசையைத் தன் புல்லாங்குழல் மூலம் இசைத்தான். அதைப் பார்த்த ஜாம்பவான் கிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் அவன் கையிலிருந்து புல்லாங்குழலைப் பிடுங்கித் தான் இசைக்கப் பார்த்தார். ஆனால் அதிலிருந்து காற்றுத் தான் வந்ததே தவிர இசை வரவில்லை. அதைத் திரும்பவும் கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டுக் கரடி உறுமுவதைப் போன்ற குரலில் சந்தோஷமாகச் சிரித்தார். அந்த இருகுரலிசை நின்றதும், ஜாம்பவான் மேலுள்ள மரத்தின் உச்சியைப் பார்த்தார். அங்கே தான் அந்தப் பிசாசுப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். அங்கே பார்த்த ஜாம்பவான் சந்தோஷம் தாங்க முடியாமல் க்ரீச் எனச் சத்தம் கொடுத்தார். அதே போன்ற சப்தம் அங்கிருந்தும் வந்தது.
சற்று நேரத்தில் அவர்கள் ஒரு பீடபூமிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கிட்டத்தட்ட 40, 50 குகைகள் இருந்தன. அவற்றில் சிறிய, பெரிய கரடிகள் பல வசித்து வந்தன. அவை அனைத்தும் சற்றும் கவலையும், பயமும் இன்றி அங்குமிங்கும் உலாவின.

அந்தப் பீடபூமி ஒரு தனி உலகமாய்க் காட்சி அளித்தது கண்ணனுக்கு! சுற்றிலும் பெரிய பெரிய மலைச் சிகரங்கள் அரணாகப் பாதுகாத்தன. இன்னொரு பக்கமோ மிகப் பாதாளமாகப் பாதாள உலகமே அங்கு இருக்கிறதோ என்னும் வண்ணம் அதலபாதாளமாகக் காட்சி அளித்தது. இதைப் பார்த்த கண்ணன் அங்கே வரக்கூடிய ஒரே வழி சூரியனின் அந்தப் புனிதமான குகை வழி ஒன்று தான் என்பதைப் புரிந்து கொண்டான். அங்கே வந்து சேர்ந்து விட்டால் வெளி உலகத் தொடர்பே அடியோடு அற்று விட்டாற்போலவும் இருந்தது. அவர்கள் அந்தப் பீடபூமியின் மையப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அங்கே சுமார் அறுபது, எழுபது நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருந்தனர். அவர்கள் பார்க்கவே மிகக் கொடூரமாகக் காட்சி அளித்தனர். காட்டு மிராண்டிகள் போல் இருந்தனர். அங்கே அனைவருக்கும் பொதுவாக ஓர் இடத்தில் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. அனைவரும் அந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்து இருந்தனர். அவர்களில் பெரியோர்களான ஆண்கள் கரடித் தோலை ஜாம்பவானைப் போல் போர்த்தி இருந்தனர். மற்றச் சிறியவர்களும், நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் நரித்தோலை ஆடையாக அணிந்திருந்தனர். எல்லாப் பெண்களும் தங்கள் உடலை மூடும் வண்ணம் நீண்ட கூந்தலை வளர்த்து இருந்தனர். அவர்கள் இடுப்பில் நரித்தோல் ஆடையாகக் காணப்பட்டாலும் மார்பின் பெரும்பகுதி கூந்தலாலேயே மூடப்பட்டிருந்தது. சிறு குழந்தைகள் அங்கிருந்து குட்டிக்கரடிகளைத் துரத்திக் கொண்டு அவற்றுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

எரிந்து கொண்டிருந்த நெருப்பில், பன்றி இறைச்சி, நரி மற்றும் முயல்களின் இறைச்சிகள் வெந்து கொண்டிருந்த மணம் அந்தச் சுற்றுப்புறத்தில் தாக்கியது. அதைத் தவிர உண்ணக்கூடிய வேர்ச்செடிகள், காய்கள், கனிகள், கொட்டைகள் பலவும் உணவுக்காகத் தயார் ஆகிக் கொண்டிருந்தது. பழங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. கொட்டைகளும், காய்களும் வேகும் மணம் மூக்கைத் துளைத்தது. அனைவரும் தங்களுக்குள்ளாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு ஜாம்பவானின் வரவால் தடைப்பட்டது. அதோடு தங்களுக்குச் சிறிதும் பழக்கமில்லாத இரு வெளிநபர்கள் ஜாம்பவானோடு வருவதையும் அவர்கள் பார்த்தார்கள். ஒரு சிலர் தங்கள் இடத்திலிருந்து எழுந்து வருபவர்கள் யார் என்பதை இன்னும் கொஞ்சம் கவனமாக உன்னிப்பாகப் பார்த்தனர். அவர்களுக்குப் பின்னால் பல கரடிகள் தங்கள் உணவுக்காகக் காத்துக் கொண்டு இருந்தன. சில கரடிகளின் வாய் ஒரு கெட்டியான நூலால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவை அதிகம் கடிக்கும் என்பதால் அப்படிக் கட்டி இருக்கலாம். இதைப் பார்த்த கண்ணனுக்கு அங்கே மனிதர்களும், மிருகங்களுமாகச் சேர்ந்து ஓர் அற்புதமான நட்பு உலகைச் சித்திரித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அப்போது கிருஷ்ணனும், பாமாவும் அங்கே சற்றுத் தள்ளி எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு அருகே சாத்யகி அமர்ந்திருந்ததைக் கண்டார்கள். இருவர் மனமும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாலும் சாத்யகியின் கண்களில் தெரிந்த எச்சரிக்கை அவர்களைக் கட்டிப் போட்டது. அந்த எச்சரிக்கை அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறது என்பதைக் கண்ணனும் , பாமாவும் புரிந்து கொண்டனர்.

அந்தக் கரடி அரசன் ஜாம்பவான் அவர்களை அங்கே நெருப்பினருகே இருந்த மேடையில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் அருகே அழைத்துச் சென்றார். அவன் குட்டையாகவும் அதே சமயம் வலிமை படைத்தவனாகவும் இருந்தான். கறுநிறத் தாடியுடன், கரடிப் பற்களால் ஆன மாலை ஒன்றை அணிந்திருந்தான். கரடித்தோலை அணிந்திருந்தான் ஜாம்பவானைப்போல் கரடி முகமூடியுடனும் காணப்பட்டான். ஆனால் ஜாம்பவானைப் போல் கவண் கற்கள் எறியும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை. தலைக்கவசத்தில் 2 கரடிகளின் வாலை இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவன் கண்களின் மேல் பாகம் சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்ததோடு, அவன் தோளில் இருந்து மத்தளம் போன்றதொரு வாத்தியம் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது.


Friday, March 4, 2016

கரடிகளின் ராஜ்ஜியத்தில் நந்தலாலா! :)

அப்போது ஓர் எதிர்பாராத அதிசயம் நடந்தது. குட்டிப் பூனை மினிக்கு அன்று கண்கள் திறந்துவிட்டன. அது இவ்வுலகைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. உலகைப் பார்க்க ஆரம்பித்த முதல் நாளிலேயே அது கண்டது தன்னெதிரே ஓர் பெரிய கரடியைத் தான். அது கரடி என்பதெல்லாம் மினிக்குப் புரியவில்லை. அது தன்னை உணவாகக் கொள்ளும் என்பதெல்லாம் அறியவில்லை. அதைக் கண்டதுமே மினிக்கு ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தை தானே அது! தன்னெதிரே கண்டது தான் விளையாட இருக்கும் ஓர் கருவி என நினைத்திருக்குமோ என்னமோ! சத்யாவின் தோள்களில் அமர்ந்திருந்த அது அங்கிருந்து மெல்லக் கீழே குதித்தது. அந்தக் கரடியை நோக்கிச் சென்றது. இன்னும் சரிவர நிற்கவோ, நடக்கவோ தெரியவில்லை அதற்கு. தத்தித் தத்தி அந்தப் பெரிய கரடியின் பக்கம் சென்றது. செல்லும்போதே சந்தோஷத்தில் மியாவ் மியாவ் என்று கத்தல் வேறு! அந்தக் கரடிக்கும் இந்தப் பூனைக்குட்டியைக் கண்டதும் ஆர்வம் வந்தது. ஆகவே பூனைக்குட்டியை வரவேற்க ஆயத்தமானது. ஆனால் ஊரிக்குப் பயம் வந்துவிட்டது. தன் குட்டியை எப்படியேனும் கரடியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அது வேகமாக ஓடோடிச் சென்று தன்குட்டியை வாயில் கவ்விக் கொண்டு வந்து திரும்பியது. அது திரும்புவதற்குள்ளாக அந்தப் பூனைக்குட்டி எப்படியோ தாயின் வாயிலிருந்து தப்பி மீண்டும் அந்தக் கரடியை நோக்கி ஓடிச் சென்றது.

கரடி மனிதனுக்கும், அவனுடன் இருந்த கரடிக்கும் இந்தப் பூனை இங்கே வந்திருப்பது முற்றிலும் புதியது. இன்று வரை அவர்கள் உலகில் பூனை ஏதும் வந்தது இல்லை. அந்தப் புனிதக் குகையைத் தாண்டி எதுவும் வந்ததே இல்லை. ஆகவே அந்தக் கரடி மனிதனுக்கு வெள்ளையும் கறுப்புமான தோலுடன் பளபளவென இருந்த அந்தப் புத்தம் புதிய குட்டிஓர் ஆச்சரியமாகவே காணப்பட்டது. அது தத்தித் தத்தி நடந்ததும் அவன் இருக்கும் திசையை மூக்கால் முகர்ந்து பார்த்து மோப்ப சக்தியின் மூலம் கண்டு பிடித்ததும் இன்னும் ஆச்சரியம் தந்தது. இத்தனை சின்னக் குட்டி இப்படிக் கண்டு பிடிக்கிறதே என்னும் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தவன் கலகலவெனச் சிரித்தான். தன்னுடன் இருந்த கரடிக்கு ஏதோ மொழியில் சில கட்டளைகளைக் கொடுத்தான். அந்தக் குட்டிப் பூனை இதற்குள்ளாக இவர்களை நெருங்கி விட்டது.  சத்யா நடுங்கினாள்.

“எங்களைக் கண்டோ இந்தக் கரடியைக் கண்டோ பயப்படாதே!” என்று சத்யாவைப் பார்த்து அந்தக் கரடி மனிதன் கூறினான். ஆஹா! அவன் பேசும் மொழி ஆரியர்கள் பேசும் மொழியே தான்! ஆனால் நடுவில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாறி இருக்கின்றன. “இந்தக் கரடி இந்தக் குட்டியை ஒன்றும் செய்ய மாட்டான். அதற்குத் தொந்திரவு ஏதும் ஏற்படாது. இவன் என் கரடிச் சகோதரனின் மகன்.” என்றான்.
“என்ன? கரடிச் சகோதரனா?” ஆச்சரியத்துடன் கேட்டாள் சத்யபாமா. “உங்கள் சகோதரர் ஒரு கரடியா?” என்றும் மீண்டும் கேட்டாள். கிருஷ்ணன் அந்தக் கரடியை நோட்டம் விட்டான். அதன் ஒரு பக்கத்தோள்பட்டையில் தோல் கிழிந்திருந்த அடையாளம் தெரிந்தது. ம்ம்ம்ம்ம். இங்கே வரும் வழியில் சிங்கராஜாவின் கைகளில் காணப்பட்ட கரடித்தோல் இதுவாக இருக்கலாம் என்றும் ஊகித்துக் கொண்டான். உடனே கரடி மனிதனைப் பார்த்து, “உங்கள் சகோதரன் மகன் மிகவும் பயப்படுத்த வைப்பவராய் இருக்கிறாரே! அவர் நினைத்தால் ஓர் சிங்கத்தின் எலும்புகளைக் கூட நொறுக்கிவிடுவார் போல!” என்று சொல்லிச் சிரித்தான். அதில் புதைந்திருந்த உண்மையைப் புரிந்து கொண்ட கரடி மனிதன் அதை ஆமோதிப்பது போல் சிரித்தான்.
கிருஷ்ணனுக்குக் கரடி மனிதன் தங்களுக்குக் கொடுத்த வரவேற்பு மிகப் பிடித்திருந்தது. கரடி மனிதன் நட்புப் பாராட்டியதை அவன் வரவேற்றான். ஆகையால் தன்னுடைய கத்தியைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். பின்னர் கரடி மனிதனைப் பார்த்து இரு கைகளையும் கூப்பினான். அவனைப் பார்த்து சத்யபாமாவும் தன் கைகளைக் கூப்பிக் கரடி மனிதனை வணங்கினாள். கரடி மனிதனும் தன் கவண், கற்கள் ஆகியவற்றைத் தன் இடுப்பில் வைத்துக் கட்டினான். கிருஷ்ணனைப் பார்த்துக் குட்டிப் பூனையைத் தன்னிடம் தரச் சொல்லிக் கேட்டான். கிருஷ்ணனும் மினியைத் தூக்கி அந்தக் கரடி மனிதனிடம் கொடுத்தான். தன்னுடைய தோள்களில் அதை வைத்துக் கொண்ட கரடி மனிதன் அதைத் தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்து அதைத் தனக்கு நட்பாக்கிக் கொண்டான். சிறிது நேரம் அதோடு விளையாடினான். பின்னர் சத்யபாமாவிடம் அதைத் திரும்பக் கொடுத்தான். பின்னர் அவன் ஏதோ ஒரு மாதிரியாக வாயைக் குவித்துக் கொண்டு ஒரு சப்தம் போட எங்கிருந்தோஇரு மனிதர்கள் தங்களுடன் இரு கரடிகளுடன் அங்கே வந்து சேர்ந்தனர்.

பின்னர் கரடி மனிதன் குகையின் வாயிலைப் பார்த்த வண்ணம், “சத்ராஜித் எங்கே?”என்று கேட்டான். “உங்களுடன் அவனும் இருக்கிறான் என்றல்லவோ நினைத்திருந்தேன். இன்றிரவு நிலாப்பெண் மாட்சிமை பொருந்திய சர்வ வல்லமை பொருந்திய கறுப்புக்கடவுளின் படுக்கைக்கு விஜயம் செய்யப் போகிறாள் அல்லவா? அதற்காக சத்ராஜித்தின் வருகையை எதிர்பார்த்தேன்.” இதைக் கேட்டக் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தங்கள் வருகை கரடி மனிதனுக்குத் தெரிந்திருக்கிறதே! அவன் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறானே!

“சத்ராஜித் எங்களுடன் வரவில்லை! அவரால் இப்போது வரவும் முடியாது! இனியும் வருவாரா என்பதும் சந்தேகமே!” என்றான் கிருஷ்ணன். பின்னர் தொடர்ந்து, “இதோ, இந்தப் பெண் தான் சத்ராஜித்தின் மகள்!” என்றும் அறிமுகம் செய்து வைத்தான். கரடி மனிதனுக்கு ஏனோ இனம் புரியா நிம்மதி வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவன், “எங்களுடைய இந்தப் பகுதிக்கு நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?” என்று வினவினான்.

“ஓ, நாங்கள் சூரியனின் புனிதக்குகையின் வழியாக இங்கே வந்து சேர்ந்தோம். நாங்கள் இங்கே வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இங்கே வந்ததினால் உங்களை எல்லாம் பார்க்க முடிந்தது. அந்தப் புனிதக் குகை மிகத் தெய்வீகமானவர்களால் பாதுகாக்கப் படுகிறது என்பதையும் அறிந்திருக்கிறோம். அவர்கள் ஒருவேளை நீங்களும் உங்கள் மக்களும் தானா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் கரடி மனிதன் கிருஷ்ணனைக் கேட்டான்.” புனிதக் குகையைத் தாண்டுவதின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். தெரியுமா அது உங்களுக்கு? புனிதக் குகையைத் தாண்டி இந்தப் பக்கம் வந்தவர்கள் எவரும் திரும்பிப் போக முடியாது. போக அனுமதி இல்லை! எங்களுடன் ஒருவராகத் தான் இனி நீங்கள் இருந்தாக வேண்டும். ஆனால் அதற்கும் எங்கள் கரடி உலகின் ஈடு இணையற்ற எவராலும் வெல்ல முடியாத எங்கள் கடவுள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கு அனுமதி கிட்டும்!” என்றான்.

“ஆனால் நாங்கள் இந்தக் கரடி உலகுக்கு நட்பு முறையில் தான் வந்திருக்கிறோம். தங்கும் எண்ணம் ஏதும் இல்லை!” என்று கிருஷ்ணன் கூறினான்.

Thursday, March 3, 2016

மனிதனா, கரடியா, பிசாசா?

கண்ணன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே குகையின் சுரங்கப்பாதையில் தெரிந்த அந்த துவாரத்தின் வழியாக மேலேறினான். கீழே இருந்து சத்யபாமா அவனைத் தன்னால் இயன்றவரைக்கும் உள்ளே தள்ளினாள். ஒரு கையில் கத்தியை வைத்திருந்த கண்ணன், இன்னொரு கையால் புல்லாங்குழலைப் பற்றிக் கொண்டு இசைத்தவண்ணம் முன்னேறினான். இந்த இசைப் போட்டியில் தோற்க விரும்பாத அந்தப் பிசாசுப் பெண்ணும் தன்னால் இயன்ற அளவுக்கு சங்கீத ஸ்வரங்களை மிக இனிமையாக இசைத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் கண்ணன் மேல் குகைக்குச் சென்றுவிட்டான். அந்தக் குகையின் கூரையில் நிறைய வெடிப்புக்கள் காணப்பட்டதால் குகை வெளிச்சமாக இருந்தது. கிருஷ்ணன் மேலேறியதும் சத்யபாமா அவனிடம் அவனுடைய வில்லையும், அம்புகளையும் கீழிருந்த வண்ணம் கொடுத்தாள். பின்னர் கிருஷ்ணன் துவாரத்தின் உள்ளே சென்றதைப் போல் அவளும் துவாரத்தின் உள்ளே சென்றாள். மறக்காமல் ஊரியின் குட்டி மினியையும் கையில் எடுத்துக் கொண்டாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஊரியோ வெகு எளிதாக மேலேறி விட்டது. சத்யபாமாவோ அப்போதும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். எந்நேரம் வேண்டுமானாலும் அந்தப் பிசாசை நேருக்கு நேர் சந்திக்கும்படி இருக்கும் என்னும் எதிர்பார்ப்பில் தவித்தாள். இப்போது அதன் சங்கீதம் மிக மிக மெல்லிய ஒலியில் கேட்டது. மிகவும் ஹீனமாக இருந்தது. அப்படியானால் அது அந்தக் குகையில் மேலும் முன்னேறிச் செல்கிறது என்பது புரிகிறது. ஆனால் இவர்களைக் கண்டு பயந்து ஓடவில்லை. அப்படி இருந்தால் சங்கீதம் கேட்காதே! ஆகவே அவர்களை இன்னமும் முன்னே அழைக்கிறது. அவர்கள் அதைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றே விரும்புகிறது.

“எங்கே போகிறோம் பிரபுவே?” என்று பாமா கண்ணனைக் கேட்டாள். அவளுக்கு இன்னமும் அச்சம் போகவில்லை. பீதியோடு அந்தக் குகையில் அது சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த நேரமும் அது தன் முகத்தை இங்கே காட்டிவிடும் என்ற பயத்தில் உறைந்து போயிருந்தாள். ஆனால் கண்ணனோ அவளைத் தேற்றினான். “பயப்படாதே, சத்யா! எதுவும் நடக்காது. நாம் இந்தக்குகையின் தெய்வீகக் காவலர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறோமோ என்னமோ! ஒருவேளை சாத்யகி அவர்களால் கூடக் கடத்தப்பட்டிருக்கலாம், அல்லவா?” என்றான். பின்னர் ஏதோ நினைத்தவனாக, “அது சரி, சாத்யகியைக் கடத்தியவர்களை உன்னால் அடையாளம் காட்ட முடியும் அல்லவா?” என்று கேட்டான். அதற்கு பாமாவும், “முடியும்! அவை இரண்டு கரடிகள். மிகப் பெரிய கரடிகள். சின்னக் கரடி உன்னைப் போல் உயரம் இல்லை! உயரம் குறைவாகவே இருந்தது. ஆனால் நல்ல உடல் பருமனுடன் இருந்ததோடு அல்லாமல் எப்போதும் தன் பின்னங்கால்களாலேயே நின்று கொண்டிருந்தது. இன்னொன்று மிகப்பெரியது!  அது தனது பெரிய உடலுடன் நான்கு கால்களாலும் நடந்து சென்றது.” என்றாள். “ஆனால் உன்னுடைய “பிசாசு” ஒரு கரடியாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், சத்யா! மேலும் நான் இனிமையாகக் கீதம் இசைக்கும் கரடியை இன்று வரை பார்த்ததில்லை!” என்று சிரித்தான்.

அவர்கள் மேலே சென்றார்கள். குகையில் வாயில் அவர்களை ஓர் அடர்ந்த காட்டினுள் கொண்டு விட்டது. அடர்ந்து பரந்திருந்த மரங்களாலும், மரக்கிளைகளாலும் சூரிய ஒளி மிகக் குறைவாகவே அங்கே வந்தது. ஆங்காங்கே தெரிந்த சிறிய இடைவெளிகள் தெரிந்த ஒளி போதுமானதாக இல்லை. அவர்கள் கீழ்க்குகையில் பார்த்த குளத்திற்கு ஆதாரமாக விளங்கிய ஊற்றுக்கண் இங்கே இருந்து தான் தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் விதமாக நீர் வேகமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இன்னும் என்னென்ன ஆபத்துகள், ஆச்சரியங்கள் காத்திருக்கின்றனவோ என நினைத்துக் கிருஷ்ணன் வியந்தான். ஆனாலும் அவனுடைய இயல்பான நகைச்சுவை உணர்ச்சி அவனை விட்டு முழுதும் பிரியவில்லை. “சத்யா! உன் தந்தை உன்னை இப்போது பார்க்க வேண்டும். ஒரு வேடுவச்சி போல் குறைந்த அளவே உடை உடுத்துக் கொண்டு ஆபரணங்கள் ஏதுமின்றி காணப்படுகிறாய். அதோடு மட்டுமா? ஒரு கையில் அரிவாளைப் பிடித்திருக்கும் இந்த மூர்க்கனுடன் தோள் தொட்டு அணைத்தவண்ணம் நடந்து வருகிறாய்! உன் ஒரு கையிலோ பூனைக்குட்டி! உன் முன்னே உன் அருமை ஊரி நடந்து செல்ல நாம் நம்முடைய விதியைத் தேடிக் கொண்டு செல்கிறோம். அதுவும் சந்தோஷமாக!

“பிரபுவே, நான் சந்தோஷமாக இல்லை! மிகப் பயந்திருக்கிறேன். இந்தப் பிசாசு நம்மை மரணத்துக்கே அழைத்து செல்லப் போகிறது என்றே நினைக்கிறேன்.” என்று இன்னமும் பீதி குறையாத குரலில் கூறினாள் சத்யபாமா. “பாமா, இறப்பதற்கு இவ்வளவு அஞ்சுபவள் எப்படி இந்தப் பயணத்தை அதுவும் முடிவில்லாப் பயணத்தை ஆரம்பித்தாய்? மிகவும் ஆபத்தான இந்தப் பயணம் உன்னை மரணத்தின் வாயிலில் கொண்டு தள்ளும் என்று எவரும் உன்னை எச்சரிக்கவில்லையா?”

“கோவிந்தா, உனக்கு பயமாக இல்லையா?” பாமா கேட்டாள். “ஹா, பாமா, மரணம் என்பது மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும். எனக்கும், உனக்கும் மட்டும் இல்லையே! அது வரும்போது வரட்டும்! நான் ஏன் அதைக் கண்டு பயப்பட வேண்டும்?  இப்போதைக்கு நான் அந்தப் பிசாசை நேரில் சந்திக்கும் ஆவலில் மட்டுமே இருக்கிறேன். ஒருவேளை இந்தப் புனிதக் குகையின் தெய்வீகக் காவலர்களையும் சந்திக்க நேரிடலாம். உன் தந்தை அப்படித்தானே சொல்கிறார்!” என்றன் கண்ணன். குளிர்ந்த காற்று எங்கிருந்தோ வீசியது. மரங்கள் அந்தக் காற்றில் அசைந்ததும், மரங்களின் அடர்ந்த இலைகளின் “மர்மர” சப்தமும் அங்கே ஓர் கீதம் போல் கேட்டது. அதன் லயம் சத்யபாமாவுக்குள் மகிழ்ச்சியை ஊட்டியது. அப்போது இருந்த பயத்தையும் மீறி அவள் இந்தக் காற்றையும் அதன் தாக்கத்தையும் அனுபவித்தாள். ஏனெனில் இப்போது அவள் அவளுடைய “பிரபு”வுடன் தனித்திருக்கிறாள். இந்த நாள் அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமானது. அவள் மட்டுமே இப்போது கோவிந்தனின் இந்த நாளை அவனுடன் வாழ்கிறாள். இந்த நேரம் மரணம் சம்பவித்தாலும் அதுவும் அவளுக்கு இனிமையாகவே இருக்கட்டும். அது அவள் உரிமை! அவர்கள் மேலே நடந்தனர். அந்தப் பிசாசு தன்னை அவர்களுக்குக் காட்டிய வண்ணம் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குத் தாவி ஊஞ்சலாடிய வண்ணமும், இனிமையாகப் பாடிய வண்ணமும் சென்றது. சில சமயம் அதன்குரல் குயிலின் இனிமையான சங்கீதம் போலவும், சில சமயங்களில் செம்போத்தின் குரல் போலவும், சில சமயங்களில் பாடும் பறவையின் குரலிலும் அது இனிமையான ஸ்வரங்களைச் சொல்லும். சில சமயம் மயிலைப் போல் உரத்த குரலில் அகவும்.

“இது பிசாசா? இல்லை ஏதேனும் இசைபாடும் பறவையா?” என்று சத்யபாமா கண்ணனைக் கேட்டாள். “இரண்டும் இல்லை. இது ஓர் விசித்திரமான பிரகிருதியாகத் தெரிகிறது.” என்றான் கண்ணன். அப்போது சத்யபாமா திடீரெனக் கண்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு தன் கண்களையும் மூடிக் கொண்டாள். “அதோ, அந்தக் கரடி, கரடி! அங்கே பார் கோவிந்தா!” என்றாள். ஒரு பெரிய பருத்த உயரமான கரடி சோம்பலுடன் நடந்து வந்து கொண்டிருந்தது. அது தேனடைகளையும், எறும்புப்புற்றுக்களையும் அங்குமிங்கும் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தது. அது தங்கள் பக்கம் திரும்பினால் அதை வில்லில் அம்பைக் கோர்த்து அதன் மேல் எய்வதற்குத் தயாராகக் கிருஷ்ணன் வில்லையும் அம்பையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டான். பாமாவைப் பார்த்து, “கவலைப்படாதே சத்யா! அந்தக் கரடி மனிதர்களை உண்பதில் விருப்பம் காட்டவில்லை!” என்றான். இப்போது அவர்களுக்கு அந்தப் பிசாசு தெளிவாகத் தெரிந்தது. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருந்த மரங்களின் கிளைப்பின்னல்கள் அங்கே கொஞ்சம் குறைந்திருந்ததால் இடைவெளியும், வெளிச்சமும் ஏற்பட்டிருந்தது. நீண்ட தலைமுடியுடன் காணப்பட்ட அது ஓர் காட்டேரியாகவோ அல்லதே வேதாளமாகவோ இருக்கலாமோ?  அதன் நீண்ட தலைமயிர் காற்றில் அங்கும் இங்கும் பறக்க அது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குத் தாவிக் கொண்டிருந்தது. அதைக் குரங்குகளும் தொடர்ந்தன.

“அது ஒரு பாடும் ரத்தக்காட்டேரி!” என்றாள் சத்யபாமா.

“ஆனால் நான் அதன் இரு கால்களையும் பார்த்தேன். அது பிசாசும் இல்லை, ரத்தக்காட்டேரியும் இல்லை, வேதாளமும் இல்லை!” என்றான் கிருஷ்ணன். அதற்குள்ளாக ஊரி மிகக் கடுமையாக மியாவ் எனக் கத்தியவண்ணம் ஓட்டமாக ஓடியது! பூனை ஓடிய திசையில் பாமாவும் கிருஷ்ணனும் பார்த்தனர். ஒரு கரடி என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த உருவம் இப்போது ஒரு மனிதனைப் போல் இரு கால்களால் நடந்த வண்ணம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. சத்யபாமாவுக்குப் பயத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது. வாய் பேசமுடியாமல் கிருஷ்ணனிடம் அந்த வேதாளம் அல்லது காட்டேரியை நோக்கித் தன் கையையும் பின்னர் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த உருவத்தையும் பார்த்துக் கை காட்டினாள். “இவர்கள் இருவரும் தான் சாத்யகியைக் கடத்தியவர்கள்!” என்றாள். நடுங்கும் குரலில் குளறிக் குளறிக் கூறிய அவள் மயங்கும் நிலைக்கு வந்துவிட்டாள். கிருஷ்ணன் வில்லையும் அம்பையும் எடுத்து வைத்துவிட்டு ஒரு கையில் அரிவாளையும் இன்னொரு கையில் கத்தியையும் பிடித்தவண்ணம் அந்த உருவத்தையே கவனித்துக் கொண்டிருந்தான்.

“சத்யா, இப்போது தான் உண்மையாகவே ஆபத்து நம்மை நெருங்கி உள்ளது. என் பின்னே நின்று மறைந்து கொள்! உன்னை நீயே வெளிப்படுத்திக் கொள்ளாதே! என்ன நடந்தாலும் பேசாமல் இரு!” என்றான் கிருஷ்ணன். அந்தக் கரடிகள் அவர்கள் அருகே வந்தன. அவர்கள் அருகே வந்ததும் தான் புரிந்தது. ஒன்று நிஜமாகவே கரடி! அது தன் நான்கு கால்களால் நடந்தது. இன்னொன்று மனிதன். கரடித்தோலை ஆடையாக அணிந்திருந்தான். அவன் உடல் முழுவதும் கரடித்தோல் மூடி இருந்தது. இடுப்பில் நரித்தோலால் ஆன ஆடையை அணிந்திருந்தான். அவன் தலையின் மேல் அணிந்திருந்த முகமூடியில் சிரிக்கும் கரடியின் உருவம் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் அவன் தனக்கு இரு முகங்களை வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. ஒன்று மனித முகம், இன்னொன்று கரடி முகம். அவன் மார்பகம் பரந்து விரிந்து காணப்பட்டது. அவன் தோள்கள் விரிந்து கைகள் நீண்டு முழங்கால் வரை தொங்கிற்று. அந்தக் கைகள் வலுவானவை எனப் பார்த்ததுமே புரிந்தது. அவன் மார்பில் புரண்ட அவன் தாடி அடர்த்தியாகக் காணப்பட்டதோடு அல்லாமல் அவன் இடுப்பு வரை நீண்டு இருந்தது. மனிதனா, கரடியா என்பது புரியாவண்ணம் குழப்பமான நடையில் நடந்து வந்தான். மெல்லிய, நீண்ட அவன் முகத்தில் மூக்கு சதைப்பிடிப்போடு காணப்பட்டது. அவன் பெரிய விசாலமான கண்கள் அவ்வப்போது கருணையையும், பாசத்தையும் கூடக் காட்டும் என்று புரியும் வண்ணம் இருந்தது. தன் கைகளில் ஓர் கவணையும் அதில் வைத்து அடிப்பதற்காகக் கற்களையும் அவன் வைத்திருந்தான்.

Wednesday, March 2, 2016

இனிமையான கீதம் இசைக்கும் பிசாசு!

அது சரி, இந்தக் குட்டிப் பூனையை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?” பாமா கேட்டாள்.

“நீ என்ன சொல்கிறாய்?”

“இதனுடைய தாயை நான் ஊர்வசி எனப் பெயரிட்டிருந்தேன்; ஊரி என அழைத்து வந்தேன். ஆகவே இந்தக் குட்டியை நான் மேனகா என அழைக்கலாம் என நினைக்கிறேன்.” என்றாள்.

“ஓ, ஊர்வசி, மேனகா! நம்மிடம் இரு தேவலோகத்து நாட்டியகன்னிகைகள் இருக்கின்றனரா? சரி, சரி, ஆனால் நான் இவளை, “மினி” என்றே அழைக்கப் போகிறேன்.” என்றான் கண்ணன். மறு நாள் விடிந்தது. சத்யபாமா இன்று கொஞ்சம் நலமாக உணர்ந்தாள். கண்ணன் உதவியின்றித் தானாக எழுந்து நின்றாள்; அவள் உடல் வலி குறைந்திருந்ததோடு அல்லாமல், காயங்களும் வெகுவாக ஆறி வந்தன. குளக்கரைக்குத் தானே தனியாகச் சென்று தன் வேலைகளை யார் உதவியும் இல்லாமல் முடித்துக் கொண்டாள். என்றாலும் மனம் கேட்காமல் குளக்கரை வரை சத்யபாமாவுக்குத் துணையாகச் சென்றுவிட்டுத் திரும்பிய கிருஷ்ணன், தாங்கள் படுத்திருந்த இலைப்படுக்கையைச் சுத்தம் செய்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இன்னமும் கட்டைகளைப் போட்டுத் தீயை அணையாமல் பாதுகாத்தான். சுற்றுப்புறம் எங்கும் ஒரே அமைதி! பறவைகளின் க்ரீச் குரல் கூட அதிகம் கேட்கவில்லை. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சத்யபாமாவின் “ஐயோ” என்னும் அலறல் கிருஷ்ணன் செவியைக் கிழித்தது. கிருஷ்ணன் வெகு வேகமாகக் குளக்கரைக்கு ஓடினான். குளத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த சத்யபாமாவின் கால்கள் இரண்டும் நீருக்குள் கிடந்தன. அவள் உடல் மோசமாக நடுங்கிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அவள் அருகே வந்ததும் அப்படியே சாய்ந்து அவன் கால்களைத் தன்னிரு கரங்களால் பிடித்துக் கொண்டாள். பீதியில் அவள் முகம் வெளுத்துக் கிடந்தது. கண்கள் சொல்லவொணா அச்சத்தைக் காட்டியது!

“அதோ, அந்தப் பேய்! பிசாசு!, பேய், பிசாசு!” என்ற வண்ணம் சத்யபாமா தன் கரங்களால் குளத்தின் மறுபக்கத்தை சுட்டிக் காட்டினாள். கிருஷ்ணன் அந்தக் குளத்தில் அமுங்கிக் கிடந்த பாறைகளை ஒவ்வொன்றாகத் தாண்டிய வண்ணம் அதைக் கடந்தான். அப்போது நீண்ட மயிருடன் கூடிய அந்த விசித்திரமான உருவத்தைக் கண்டான். அது ஓடிப் போய் அந்தக் குகையின் மேல் பாகத்தினுள் சென்று மறைந்தது. ஆனால் அது உள்ளே செல்லும் முன்னர் கிருஷ்ணன் அதன் முகத்தை உற்றுக் கவனித்தான். ஒரு கணமே பார்க்கக் கிடைத்த அந்த முகம் ஒரு பெண்ணுடையது என்பதையும் தெரிந்து கொண்டான். அந்த உருவம் பின்னர் சுரங்கப்பாதையினுள் சென்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியது. கிருஷ்ணன் தன்னைத் தொடர்ந்து வருகிறானா என்று அது பார்த்திருக்க வேண்டும். பின்னர் மீண்டும் குகையின் மேல் தளத்தில் இருந்து இனிமையான குரலில் இசைக்கும் சப்தம் கேட்டது. அது அந்தப் பெண் உருவம் தான் எனப் புரிந்து கொண்ட கிருஷ்ணன், ஏன் இந்த உருவம் இப்படி இருக்கிறது? இது என்ன மாதிரியான உருவம்? என்று வியந்தான். கிருஷ்ணன் அந்த விசித்திரமான உருவத்தைத் தொடர்ந்து தானும் செல்லலாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டுப் பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டான்.

அந்தக்குகையில் இருந்து திரும்பிக் கீழே வந்த கிருஷ்ணன் ஓர் இடத்தில் தண்ணீர் கணுக்கால் வரையுமே ஓடியது என்பதைக் கண்டான். அந்த இடத்தின் மணல் முழுக்க முழுக்கத் தங்கம் போல் மஞ்சளாகவும் இருந்தது. பளபளவென மின்னவும் செய்தது! கையில் எடுத்துப் பார்த்தால் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமே மேலிட்டது. அந்த மணல் சின்னச் சின்னத்தங்கத் துகள்களால் ஆகி இருப்பதைப் புரிந்து கொண்டான். ம்ம்ம்ம், புனிதக்குகையிலும் சூரியனின் சந்நிதிக்கு நேரே இப்படி ஓர் தங்கத்தை வர்ஷித்திருப்பதைக் கண்டான். யாரோ மனிதர்கள் தங்கத்தால் அர்ச்சித்திருக்கலாம் என எண்ணி இருந்தான். ஆனால் இப்போது புரிந்தது. மேலுள்ள ஊற்றிலிருந்தோ அல்லது அருவியோ இந்தக் குளத்துக்குத் தண்ணீரை மட்டும் கொண்டு சேர்க்கவில்லை. இப்படிப்பொடிப் பொடியாகத் துகள்களாக ஆன தங்கமணிகளையும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். திரும்பி சத்யபாமா இருக்கும் இடம் வந்த கிருஷ்ணன் அந்தப் பிசாசு ஒரு பெண் எனவும் அது நட்பாக இருக்கும் போல் தெரிவதாகவும், ச்யமந்தகத்தைக் கண்டு பிடிக்க அதன் உதவியை நாடலாம் எனவும் தெரிவித்தான்.

திரும்ப குகைக்கு வந்த சத்யபாமா அமர்வதற்காகத் தன் இலைப்படுக்கையைச் சரி செய்து கொண்டாள். அதைக் கண்ட கிருஷ்ணன் அவளிடம், “பாமா, பயப்படாதே! நான் உன்னுடைய வீங்கிய கணுக்காலுக்கு ஒத்தடம் கொடுத்து விடுகிறேன். அதன் பின்னர் நாம் உணவருந்திவிட்டு மேலுள்ள குகைக்குச் செல்வோம். இப்போது நீ சற்று ஓய்வெடுத்துக்கொள்!” என்றான். பின்னர் எரியும் நெருப்பில் மேலும் கட்டைகளை இட்டான். மூலிகைகளைப் பறித்து வந்திருந்த கிருஷ்ணன் அவற்றை எடுத்தான். ஒரு துணியில் போட்டு மூலிகைகளை எரியும் நெருப்பில் வாட்டினான். சத்யபாமாவின் கணுக்காலில் சுளுக்கு இருந்த இடத்தில் ஒத்தடம் கொடுத்தான். அதன் பின்னர் இருக்கும் உணவைப் பங்கிட்டு இருவரும் உண்டனர். ஊரி வெளியே சூரிய வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு சூரியனின் கதிர்களால் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டது. பின்னர் தான் பிடித்து வந்திருந்த ஒரு சின்ன முயல்குட்டியைத் தன் உணவாக உட்கொண்டது. அதன் குட்டி தாயின் அருகே அமர்ந்த வண்ணம் தாயிடம் பாலைத் தேடியது. சத்யபாமா தூங்கிவிட்டாள். கிருஷ்ணன் பல வருடங்கள் கழித்துத் தன் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு அந்தச் சுரங்கப்பாதையின் திறந்த வாயில் பக்கம் சென்று நின்று கொண்டான்.

அவன் அதிக நேரம் காத்திருக்காமல் மதிய நேரத்திற்குச் சற்று முன்னரே அந்த இனிமையான சங்கீதக் குரல் கேட்டது. இப்போது அந்தக் குரலின் இனிமையும், அதன் சங்கீத ஒலியும் கிருஷ்ணனுக்குப் பழகிவிட்டது. குகைக்குள்ளிருந்து அது வருகிறது என்பதைப் புரிந்து கொண்டான். தன் இடுப்பிலிருந்து புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு அதில் விளையாடினான் கிருஷ்ணன். இனிமையான கீதம் பிறந்தது. காட்டின் அனைத்து ஜீவன்களும் அதில் மயங்கி நின்றன. கண்ணனின் இனிமையான புல்லாங்குழல் கீதம் கேட்டதும், அந்தப் பிசாசு தன் கீதத்தை நிறுத்திவிட்டது. அதற்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். யாரோ நம்முடன் சேர்ந்து பாட முயற்சிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் கிருஷ்ணனோ தன் கீதத்தை நிறுத்தவில்லை. மேலும் மேலும் இசைத்தான். அந்த விசித்திர உருவம் பாடிய பறவைகளின் சங்கீத ஒலி போன்ற கீதத்தை மேலும் மேம்படுத்தித் தன் வயப்படுத்திப் பாடினான். அதன் பின்னர் சற்றே தன் புல்லாங்குழல் இசையை நிறுத்தினான். இப்போது உடனே மீண்டும் அந்தப்பிசாசைப் போன்ற உருவம் பறவைகளின் சங்கீத ஒலியைப் போல் பாட ஆரம்பித்தது. கிருஷ்ணன் தன் புல்லாங்குழலை மீண்டும் இசைத்து அதனுடன் கூடத் தயக்கமின்றி இசைத்தான். விரைவில் அங்கே கிட்டத்தட்ட இரு குரலிசை ஆரம்பித்துத் தன் முழு வேகத்தில் பயணப்பட்டது. சற்று நேரம் கண்ணன் புல்லாங்குழல் இசைக்க, அந்த விசித்திரமான பிசாசு உருவம் கேட்டுக் கொண்டிருக்கும். பின்னர் அது தன் கீதத்தை இசைக்க ஆரம்பிக்கச் சற்றுக் கேட்கும் கண்ணன் பின்னர் அதன் குரலோடு இசைந்து தன் புல்லாங்குழலை இசைக்க ஆரம்பிப்பான். இந்த கீதங்களைக் கேட்ட சத்யபாமா எழுந்து வந்தாள்.

சற்றே நொண்டிய வண்ணம் வந்த பாமா கிருஷ்ணனிடம், “அந்தப் பிசாசைப் பார்த்தீர்களா? எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள். “ஓ, அது ஒரு பிசாசு அல்ல. அப்படிப்பிசாசாக இருந்தால் அது இத்தனை நட்பாக இருக்காது. அது நட்புடன் இருக்கிறது. மேலும் இசையில் சுத்தமான இசையில் மிகப் பிரியம் வைத்துள்ளது. நன்கு இசைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறது.” என்றான் கண்ணன். பின்னர் அவளிடம், “நீ போய் நம் பொருட்களை எல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்து வா! எதையும் விட்டு விடாதே! ஊரியையும் அதன் குட்டியையும் அழைத்து வர மறக்காதே!  நாம் இந்தச் சுரங்கப்பாதையின் வழியே உட்சென்று அந்தப் பிசாசைப் பார்த்துவிடுவோம்.” என்றான். ஆனால் சத்யபாமா ஆக்ஷேபித்தாள். “ஆனால், பிரபுவே, நாம்…….” என்று இழுத்தாள் பாமா. ஆனால் கிருஷ்ணன் உறுதியுடன் அவளைப் பார்த்துக் கூறினான்.”நாம் ச்யமந்தகத்தை மட்டுமின்றி சாத்யகியையும் உயிருடன் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பதை மறக்காதே!” என்றான். அதன் பின்னர் எதுவும் பேசாமல் சத்யபாமா குகைக்குள் சென்று அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாள். அந்தப் பிசாசு உருவம் பிடிவாதமாகத் தன் இசையை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தது. மேலுள்ள சுரங்கப்பாதையின் வாயிலருகே சத்யபாமா வரும் வரையில் அது பாடிக் கொண்டிருந்தது.

கண்ணன் பாமாவைப் பார்த்தான். “ உன் கையிலுள்ள கத்தியை என்னிடம் கொடு. நான் உள்ளே இந்த துவாரம் வழியே செல்கிறேன். பாதுகாப்புக்கு இந்தக் கத்தி போதும். நான் தவழ்ந்த வண்ணம் மேலே செல்வேன். என் கால்கள் கீழே இருக்கும். நீ ஏதேனும் ஆபத்தை உணர்ந்தாயானால் என்னைக் கால்களைப் பிடித்து உன்னால் இயன்ற அளவுக்கு வலிமையுடன் மேலே தள்ளு! நான் எப்படியும் அந்தக் குகைக்குள் போய் உள்ளே எதிரி இருந்தால் அவரைச் சந்திக்கலாம். ஒன்றும் நடக்கவில்லை எனில் என்னுடைய வில்லையும் அம்புகளையும், பின்னர் அரிவாளையும் கொடுத்துவிடு! அதன் பின்னர் பூனைக்குட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு நீ எப்படியாவது சமாளித்துக் கொண்டு வளைந்து, நெளிந்து இந்தக் குகையின் சுவரில் கால் வைத்துக் கொண்டு மேலே ஏறப்பார். நான் முதலில் ஏறிவிடுவேன் ஆதலால் உன்னை உள்ளே இழுத்துக் கொள்கிறேன். ஊரியை நீ கவனிக்க வேண்டியதில்லை. அது தானாகவே குகையின் துவாரத்தின் வழியாக மேலேறிவிடும்.” என்றான். இதைச் சொல்வதற்குள்ளாகக் கிருஷ்ணன் மிகச் சிரமப்பட்டான். ஏனெனில் அவன் தன் புல்லாங்குழல் இசையை நிறுத்த முடியவில்லை. ஆகவே இசைப்பதை நிறுத்தும் சில நொடிகள் தாமதத்தில் இதை மிக வேகமாகவும் கவனமாகவும் பாமாவிடம் சொல்ல வேண்டி இருந்தது. அங்கே மேலே அந்த விசித்திரமான உருவம் படைத்த பிசாசுப் பெண்ணும் தன் இசையை நிறுத்தவில்லை. பாடிக் கொண்டிருந்தது. பின்னர் மனதில் ஏதோ தோன்ற கிருஷ்ணன், பாமாவிடம், “என் புல்லாங்குழல் இசையில் குறுக்கிட்டு நிறுத்த முயலாதே! அப்படியானால் அந்த விசித்திர உருவம் என்னைத் தன் சிநேகிதன் இல்லை என நினைத்துக் கொள்ளும்.” என்றும் எச்சரித்தான்.