Friday, March 4, 2016

கரடிகளின் ராஜ்ஜியத்தில் நந்தலாலா! :)

அப்போது ஓர் எதிர்பாராத அதிசயம் நடந்தது. குட்டிப் பூனை மினிக்கு அன்று கண்கள் திறந்துவிட்டன. அது இவ்வுலகைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. உலகைப் பார்க்க ஆரம்பித்த முதல் நாளிலேயே அது கண்டது தன்னெதிரே ஓர் பெரிய கரடியைத் தான். அது கரடி என்பதெல்லாம் மினிக்குப் புரியவில்லை. அது தன்னை உணவாகக் கொள்ளும் என்பதெல்லாம் அறியவில்லை. அதைக் கண்டதுமே மினிக்கு ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தை தானே அது! தன்னெதிரே கண்டது தான் விளையாட இருக்கும் ஓர் கருவி என நினைத்திருக்குமோ என்னமோ! சத்யாவின் தோள்களில் அமர்ந்திருந்த அது அங்கிருந்து மெல்லக் கீழே குதித்தது. அந்தக் கரடியை நோக்கிச் சென்றது. இன்னும் சரிவர நிற்கவோ, நடக்கவோ தெரியவில்லை அதற்கு. தத்தித் தத்தி அந்தப் பெரிய கரடியின் பக்கம் சென்றது. செல்லும்போதே சந்தோஷத்தில் மியாவ் மியாவ் என்று கத்தல் வேறு! அந்தக் கரடிக்கும் இந்தப் பூனைக்குட்டியைக் கண்டதும் ஆர்வம் வந்தது. ஆகவே பூனைக்குட்டியை வரவேற்க ஆயத்தமானது. ஆனால் ஊரிக்குப் பயம் வந்துவிட்டது. தன் குட்டியை எப்படியேனும் கரடியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அது வேகமாக ஓடோடிச் சென்று தன்குட்டியை வாயில் கவ்விக் கொண்டு வந்து திரும்பியது. அது திரும்புவதற்குள்ளாக அந்தப் பூனைக்குட்டி எப்படியோ தாயின் வாயிலிருந்து தப்பி மீண்டும் அந்தக் கரடியை நோக்கி ஓடிச் சென்றது.

கரடி மனிதனுக்கும், அவனுடன் இருந்த கரடிக்கும் இந்தப் பூனை இங்கே வந்திருப்பது முற்றிலும் புதியது. இன்று வரை அவர்கள் உலகில் பூனை ஏதும் வந்தது இல்லை. அந்தப் புனிதக் குகையைத் தாண்டி எதுவும் வந்ததே இல்லை. ஆகவே அந்தக் கரடி மனிதனுக்கு வெள்ளையும் கறுப்புமான தோலுடன் பளபளவென இருந்த அந்தப் புத்தம் புதிய குட்டிஓர் ஆச்சரியமாகவே காணப்பட்டது. அது தத்தித் தத்தி நடந்ததும் அவன் இருக்கும் திசையை மூக்கால் முகர்ந்து பார்த்து மோப்ப சக்தியின் மூலம் கண்டு பிடித்ததும் இன்னும் ஆச்சரியம் தந்தது. இத்தனை சின்னக் குட்டி இப்படிக் கண்டு பிடிக்கிறதே என்னும் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தவன் கலகலவெனச் சிரித்தான். தன்னுடன் இருந்த கரடிக்கு ஏதோ மொழியில் சில கட்டளைகளைக் கொடுத்தான். அந்தக் குட்டிப் பூனை இதற்குள்ளாக இவர்களை நெருங்கி விட்டது.  சத்யா நடுங்கினாள்.

“எங்களைக் கண்டோ இந்தக் கரடியைக் கண்டோ பயப்படாதே!” என்று சத்யாவைப் பார்த்து அந்தக் கரடி மனிதன் கூறினான். ஆஹா! அவன் பேசும் மொழி ஆரியர்கள் பேசும் மொழியே தான்! ஆனால் நடுவில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாறி இருக்கின்றன. “இந்தக் கரடி இந்தக் குட்டியை ஒன்றும் செய்ய மாட்டான். அதற்குத் தொந்திரவு ஏதும் ஏற்படாது. இவன் என் கரடிச் சகோதரனின் மகன்.” என்றான்.
“என்ன? கரடிச் சகோதரனா?” ஆச்சரியத்துடன் கேட்டாள் சத்யபாமா. “உங்கள் சகோதரர் ஒரு கரடியா?” என்றும் மீண்டும் கேட்டாள். கிருஷ்ணன் அந்தக் கரடியை நோட்டம் விட்டான். அதன் ஒரு பக்கத்தோள்பட்டையில் தோல் கிழிந்திருந்த அடையாளம் தெரிந்தது. ம்ம்ம்ம்ம். இங்கே வரும் வழியில் சிங்கராஜாவின் கைகளில் காணப்பட்ட கரடித்தோல் இதுவாக இருக்கலாம் என்றும் ஊகித்துக் கொண்டான். உடனே கரடி மனிதனைப் பார்த்து, “உங்கள் சகோதரன் மகன் மிகவும் பயப்படுத்த வைப்பவராய் இருக்கிறாரே! அவர் நினைத்தால் ஓர் சிங்கத்தின் எலும்புகளைக் கூட நொறுக்கிவிடுவார் போல!” என்று சொல்லிச் சிரித்தான். அதில் புதைந்திருந்த உண்மையைப் புரிந்து கொண்ட கரடி மனிதன் அதை ஆமோதிப்பது போல் சிரித்தான்.
கிருஷ்ணனுக்குக் கரடி மனிதன் தங்களுக்குக் கொடுத்த வரவேற்பு மிகப் பிடித்திருந்தது. கரடி மனிதன் நட்புப் பாராட்டியதை அவன் வரவேற்றான். ஆகையால் தன்னுடைய கத்தியைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். பின்னர் கரடி மனிதனைப் பார்த்து இரு கைகளையும் கூப்பினான். அவனைப் பார்த்து சத்யபாமாவும் தன் கைகளைக் கூப்பிக் கரடி மனிதனை வணங்கினாள். கரடி மனிதனும் தன் கவண், கற்கள் ஆகியவற்றைத் தன் இடுப்பில் வைத்துக் கட்டினான். கிருஷ்ணனைப் பார்த்துக் குட்டிப் பூனையைத் தன்னிடம் தரச் சொல்லிக் கேட்டான். கிருஷ்ணனும் மினியைத் தூக்கி அந்தக் கரடி மனிதனிடம் கொடுத்தான். தன்னுடைய தோள்களில் அதை வைத்துக் கொண்ட கரடி மனிதன் அதைத் தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்து அதைத் தனக்கு நட்பாக்கிக் கொண்டான். சிறிது நேரம் அதோடு விளையாடினான். பின்னர் சத்யபாமாவிடம் அதைத் திரும்பக் கொடுத்தான். பின்னர் அவன் ஏதோ ஒரு மாதிரியாக வாயைக் குவித்துக் கொண்டு ஒரு சப்தம் போட எங்கிருந்தோஇரு மனிதர்கள் தங்களுடன் இரு கரடிகளுடன் அங்கே வந்து சேர்ந்தனர்.

பின்னர் கரடி மனிதன் குகையின் வாயிலைப் பார்த்த வண்ணம், “சத்ராஜித் எங்கே?”என்று கேட்டான். “உங்களுடன் அவனும் இருக்கிறான் என்றல்லவோ நினைத்திருந்தேன். இன்றிரவு நிலாப்பெண் மாட்சிமை பொருந்திய சர்வ வல்லமை பொருந்திய கறுப்புக்கடவுளின் படுக்கைக்கு விஜயம் செய்யப் போகிறாள் அல்லவா? அதற்காக சத்ராஜித்தின் வருகையை எதிர்பார்த்தேன்.” இதைக் கேட்டக் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தங்கள் வருகை கரடி மனிதனுக்குத் தெரிந்திருக்கிறதே! அவன் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறானே!

“சத்ராஜித் எங்களுடன் வரவில்லை! அவரால் இப்போது வரவும் முடியாது! இனியும் வருவாரா என்பதும் சந்தேகமே!” என்றான் கிருஷ்ணன். பின்னர் தொடர்ந்து, “இதோ, இந்தப் பெண் தான் சத்ராஜித்தின் மகள்!” என்றும் அறிமுகம் செய்து வைத்தான். கரடி மனிதனுக்கு ஏனோ இனம் புரியா நிம்மதி வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவன், “எங்களுடைய இந்தப் பகுதிக்கு நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?” என்று வினவினான்.

“ஓ, நாங்கள் சூரியனின் புனிதக்குகையின் வழியாக இங்கே வந்து சேர்ந்தோம். நாங்கள் இங்கே வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இங்கே வந்ததினால் உங்களை எல்லாம் பார்க்க முடிந்தது. அந்தப் புனிதக் குகை மிகத் தெய்வீகமானவர்களால் பாதுகாக்கப் படுகிறது என்பதையும் அறிந்திருக்கிறோம். அவர்கள் ஒருவேளை நீங்களும் உங்கள் மக்களும் தானா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் கரடி மனிதன் கிருஷ்ணனைக் கேட்டான்.” புனிதக் குகையைத் தாண்டுவதின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். தெரியுமா அது உங்களுக்கு? புனிதக் குகையைத் தாண்டி இந்தப் பக்கம் வந்தவர்கள் எவரும் திரும்பிப் போக முடியாது. போக அனுமதி இல்லை! எங்களுடன் ஒருவராகத் தான் இனி நீங்கள் இருந்தாக வேண்டும். ஆனால் அதற்கும் எங்கள் கரடி உலகின் ஈடு இணையற்ற எவராலும் வெல்ல முடியாத எங்கள் கடவுள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கு அனுமதி கிட்டும்!” என்றான்.

“ஆனால் நாங்கள் இந்தக் கரடி உலகுக்கு நட்பு முறையில் தான் வந்திருக்கிறோம். தங்கும் எண்ணம் ஏதும் இல்லை!” என்று கிருஷ்ணன் கூறினான்.

2 comments:

ஸ்ரீராம். said...

ஆச்சர்யத் தகவல். இதெல்லாம் நான் படித்ததேயில்லை.

வல்லிசிம்ஹன் said...

மிக சுவார்ஸ்யம் கீதா. அபூர்வமாகத்தான் இது போலப் படிக்கக் கிடைக்கும்.