Monday, March 21, 2016

கண்ணன் குற்றவாளியா? கரடி அரசன் விசாரணை!

சாத்யகி சென்றதும் சற்று நேரத்துக்குப் பின்னர் கிருஷ்ணனும், சத்யபாமாவும் கூட கரடி அரசனிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லால் ஆனதொரு சிம்மாதனத்தில் மிகக் கம்பீரமாக அமர்ந்திருந்தார் ஜாம்பவான். சாம்பன் தன் கைகளால் அடித்துக் கொண்டிருந்த சின்ன மத்தளமும், அவன் தலையில் கிரீடம் போல் கட்டப்பட்டிருந்த இரு கரடி வால்களும் ஜாம்பவானின் எதிரே கிடந்தன. சாம்பன் இருந்தவரை மிகப் புனிதமானதாகக் கருதப்பட்டு வந்த அவை இரண்டும் இப்போது கீழே கிடந்தன. ஆறு கரடி மனிதர்கள் வெண்மையான தாடியுடனும் சுருங்கிக் கிடந்த தோல்களுடனும் ஜாம்பவானின் எதிரே தரையில் வரிசைக்கு மூவராய் இரு வரிசைகளாக அமர்ந்திருந்தனர். சாத்யகியும் ஜாம்பவானுக்கு எதிரே அமர வைக்கப்பட்டிருந்தான். அவனுக்குப் பின்னால் ஜாம்பவானின் மருமகனான கரடி அமர்ந்திருந்தான். மற்றக் கரடி மனிதர்களும், பெண்களும் மரியாதையாக சற்றுத் தூரத்தில் அமர்ந்த வண்ணம் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தப் புதுமையான சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்னும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அங்கே சென்றதுமே கிருஷ்ணனும், சத்யபாமாவும் கை கூப்பி வணங்கிவிட்டு ஜாம்பவானின் காலிலும் விழுந்து பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

ஜாம்பவான் தன் பார்வையாலேயே அவர்கள் இருவரையும் சாத்யகியின் அருகே அமரச் சொன்னார். சத்யபாமாவைப் பார்த்த பூனைக்குட்டி மேனகா அவள் மடியில் ஏறியது. ஆனால் அதனால் சற்று நேரமே அமர முடிந்தது. சற்று நேரம் மிகக் கஷ்டப்பட்டு அமர்ந்திருந்த அது பின்னர் அவள் மடியில் இருந்து கீழே குதித்துத் தானாகவே அங்குமிங்கும் சுதந்திரமாக நடமாடிற்று. அங்கே அமர்ந்திருந்த மனிதர்களை முகர்ந்து பார்த்து மோப்பம் பிடித்த வண்ணம் ஒவ்வொருவரிடம் சென்று சென்று முகர்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல ஜாம்பவானின் மருமகனான கரடியிடம் சென்று அமர்ந்தது. அப்போது ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். “வசுதேவக் கிருஷ்ணா! நீ எங்களுக்கு யதுகுலம் சார்பாக உன் மரியாதையும் வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்வதற்காக இங்கு வந்திருப்பதாய்ச் சொன்னாய்!” என்றார். அதை ஆமோதித்தான் கிருஷ்ணன்.

“மாட்சிமை பொருந்திய கரடிகளின் அரசரே! உண்மை தான்! அது மட்டுமல்ல ஐயா! உங்கள் அனுமதியுடன் என் நண்பனான சாத்யகியை நாங்கள் திரும்பும்போது எங்களுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.” என்றான் கிருஷ்ணன். அவன் இதைச் சொல்கையில் அவன் மிகவும் நட்புத் தொனிக்க இனிமையான தன் கவர்ச்சி மிகுந்த குரலில் பேசினான். ஆகவே ஜாம்பவானுக்குச் சம்பிரதாய ரீதியாக மேற்கொண்டு பேசுவதற்குத் தயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணனிடம் ஆரியர்களின் மொழியில் பேசித் தான் அறிந்து கொண்ட விஷயங்களைத் தங்கள் மொழியில் தன்னருகே அமர்ந்திருந்த பெரியோர்களிடமும் மற்ற மக்களிடமும் பகிர்ந்து கொண்டார் ஜாம்பவான். மேலும் ஜாம்பவான் பேசுவார்:”வாசுதேவா, வசுதேவ குமாரா! ச்யமந்தக மணியையும் நீ உன்னுடன் எடுத்துச் செல்ல விரும்புவதாய்க் கூறினாய்! அல்லவா? அது இங்கே தான் இருக்கிறது என்பதை நீ எப்படி அறிவாய்? யார் உனக்குச் சொன்னது?” ஜாம்பவான் தொடர்ந்து கேட்டார்.

“நான் அறிவேன் அது இங்கே தான் உள்ளது என்பதை!” என்றான் கிருஷ்ணன். “எனக்கு அது தெரியும் என்பதை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள்! இல்லையா?” என்ற கிருஷ்ணன் தன் வழக்கமான புன்னகையை வெளியிட்டான். “நீ சத்ராஜித்தால் அனுப்பப்படவில்லை என்பதை நான் எப்படி அறிவேன்?” ஜாம்பவான் கேட்டார். தன்னருகே அமர்ந்திருந்த சத்யபாமாவைக் காட்டிய கிருஷ்ணன், “இதோ, இந்தப் பெண்ணைக் கேளுங்கள். இவள் சத்ராஜித்தின் அருமை மகள்!” என்றான். இப்போது சத்யபாமாவிடம் திரும்பிய ஜாம்பவான், “உன் தந்தை உன்னை இங்கே ச்யமந்தகமணிக்காக அனுப்பி வைத்தாரா?” என்று கேட்டார். “இல்லை!” என்ற சத்யா தொடர்ந்து, “ என் தந்தை தன் சகோதரரைத் தான் அனுப்பி வைத்திருந்தார். அதிலும் ச்யமந்தகமணியை அவரிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அந்தப்புனிதக் குகையிலேயே ஒளித்து வைக்குமாறும் அறிவுறுத்தி இருந்தார். அதன் பின்னரே அவர் வசுதேவ குமாரனான வாசுதேவனை இதற்குப் பொறுப்பாக்கினார். அவர் தான் திருடிவிட்டார் என அவர் மேல் குற்றம் சுமத்தினார்.” என்றாள். பின்னர் மேலும் தொடர்ந்த சத்யபாமா, “திருட்டுப் பட்டம் வாங்கிக் கட்டிக் கொண்ட வாசுதேவக் கிருஷ்ணன் அப்போதே எங்கள் யதுகுல அரசர் முன்னர் சபதம் எடுத்துக் கொண்டார்.”

அதாவது அவர் தொலைந்து போன ச்யமந்தக மணிமாலையைக் கண்டு பிடிப்பதாகவும் தன் மேலுள்ள திருட்டுப் பழியை அதன் மூலம் நீக்கிக் கொள்ளப் போவதாயும் சொன்னார். அப்படி ஒரு வேளை ச்யமந்தகமணிமாலை கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தன்னைத் தானே எரித்துக் கொண்டு செத்துப் போவதாகவும் சபதம் செய்திருக்கிறார். நான் ஒளிந்திருந்து என் தந்தை என் சித்தப்பாவை அனுப்பி வைத்ததைக் கவனித்திருந்தேன். ஆகையால் ச்யமந்தக மணிமாலையைத் தந்தை புனிதமான அந்தக் குகையினுள் தான் ஒளித்து வைக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆகவே அவருக்குத் தெரியாமல், அவ்வளவு ஏன், வாசுதேவக் கிருஷ்ணனுக்கும் கூடச் சொல்லாமல், கிருஷ்ணனின் நண்பன் சாத்யகியின் உதவியுடன் ச்யமந்தகத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு இங்கே வந்து சேர்ந்தேன். அதன் மூலம் ச்யமந்தகத்தைக் கண்டுபிடிப்பதோடு அல்லாமல் வாசுதேவக் கிருஷ்ணனின் உயிரையும் காப்பாற்றலாம் என்பது என் நோக்கம். எங்கள் இருவரையும் அங்கே துவாரகையில் காணவில்லை என்றவுடன் வாசுதேவக் கிருஷ்ணனும் எங்களையும் ச்ய்மந்தகத்தையும் தேடிக் கொண்டு இங்கே வந்து சேர்ந்தார். இதோ, உங்கள் முன்னர் நாங்கள் இருக்கிறோம். அவர் உயிர் அந்த ச்யமந்தக மணிமாலையில் தான் இருக்கிறது. அதைத் திரும்பக் கொண்டு சேர்ப்பதில் தான் அவர் உயிர் உள்ளது.” என்று முடித்தாள் சத்யபாமா.

ஜாம்பவான் கிருஷ்ணனிடம் திரும்பி, “உன் நண்பன் என்னிடம் நீ வாழும் கடவுள் என்கிறான்! அது உண்மையா?” என்று கேட்டார்.”ஓ, அது அவன் பெருந்தன்மையைக் காட்டுகிறது ஐயா! நான் என்ன மாதிரி, எப்படி என்பதை நான் மட்டுமே அறிவேன்.” என்று சிரித்தான் கிருஷ்ணன். “அது சரி, அப்பனே! எங்கள் சக்தி வாய்ந்த, வலிமை பொருந்திய ஆசாரியன் சாம்பனை நீ எப்படிக் கொன்றாய்?” என்று ஜாம்பவான் கேட்டார். “ஐயா, அதை நீங்களே நேருக்கு நேர் பார்த்தீர்கள் அல்லவோ!” என்றான் கிருஷ்ணன். “ஆனால், சாம்பன் எல்லாம் வல்ல கடவுளின் முழுப் பாதுகாப்பில் அல்லவோ இருந்தான். அவனைக் கொல்வது எளிதல்ல!” என்றார் ஜாம்பவான். ஜாம்பவானால் இன்னமும் நம்பத்தான் முடியவில்லை. அவர்களின் கடவுள்,எல்லாம் வல்லவர் சாம்பனைத் தனக்குப் பிடித்த மகன் என்று காட்டிக் கொடுத்தவர், கடைசியில அவனை இப்படியா விட்டுக் கொடுப்பார்? இன்னொரு மனிதன் கைகளில் அவன் இறக்கும்படி செய்து விட்டாரே! இது எப்படி நிகழ்ந்தது? அவர் யோசனைகளைப் புரிந்து கொண்டு கிருஷ்ணன் சிரித்தான்.

“ஐயா, உங்கள் கடவுள் அவரை விட்டுத் தான் கொடுத்துவிட்டார். தன்னுடைய பாதுகாப்பை விலக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டிய வலிமையையும் எனக்குக் கொடுத்துவிட்டார். ஏனெனில் சாம்பன் ஒரு பாவமான காரியத்தைப் பண்ண இருந்தார்.”

“பாவமா, எது பாவம்? என்ன பாவமான காரியம்?” ஆச்சரியத்துடன் ஜாம்பவான் கேட்டார். “ஐயா, ஒரு பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக நிர்ப்பந்தம் செய்பவன் கொடிய பாவத்தைச் செய்பவன் ஆவான்!  அவன் அவளை வற்புறுத்தினால் அவன் இறந்தே ஆகவேண்டும். அவன் உயிருடன் நடமாடக் கூடாது! அவன் செய்யவிருந்த பாவச் செயலில் இருந்து நான் அவனைத் தடுத்தேன். அவன் என்னைக் கொல்ல இருந்தான்! அதுவும் எவ்வாறு தெரியுமா? வலிமையுள்ள ஒரு பெரிய கரடியின் முரட்டுத்தனமான மூர்க்கமான அணைப்பின் மூலம் என்னைக் கொல்ல இருந்தான்.” என்றான் கிருஷ்ணன்.

No comments: