Thursday, July 31, 2014

துரோணர் கண்ட தீர்வு!

துரோணருக்கு இது பெரும் புதிராக இருந்தது.  “ஷிகண்டின், ஐந்து சகோதரர்களும் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறாயே?  இது உண்மையா?  அப்படி எனில் இது எவ்வாறு நடைபெற்றது?” என்று கேட்டார்.


“ஆசாரியரே ஆரம்பத்தில் அதை நினைத்துக் கூடப்பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமான ஒன்றாக இருந்தது.  அனைவருக்குமே இது மாபெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.”


“ஆனால் இது எப்படி நடந்தது?  இதை எவ்வாறு அனுமதித்தார்கள்?  ஒரு ஆரிய குலத்து இளவரசி ஒரு கணவனுக்கும் மேல் ஐந்து கணவர்களைப் பெற்றது எப்படி அனுமதிக்கப்பட்டது?  இது மாபெரும் அதர்மம் அல்லவோ!”


“குருதேவா, விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன!  அர்ஜுனன் த்ருஷ்டத்யும்னனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு என் சகோதரி திரௌபதியுடன்  பாண்டவர்கள் அனைவரும் தங்கி இருந்த குயவனின் குடிசைக்குச் சென்றான். உள்ளே நுழையும் முன்னர் அர்ஜுனன் விளையாட்டாகத் தன் தாயிடம், தான் அன்று மிக விலை உயர்ந்ததொரு அபூர்வமான பிக்ஷையைப் பெற்று வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறான். அந்த பிக்ஷை என்னவெனத் தெரிந்து கொள்ளாமலேயே குந்தியும், உள்ளிருந்த வண்ணமே, “குழந்தாய், நீ எவ்வளவு விலை உயர்ந்த பிக்ஷையைக் கொண்டு வந்திருந்தாலும் அதை உன் சகோதரர்களுடன் சமமாகப் பங்கிட்டுக் கொள்!” என்று கூறி இருக்கிறாள்.  பின்னால் அந்த பிக்ஷையானது என் சகோதரியைத் தான் குறிப்பிடப்பட்டது எனத் தெரிந்ததும், அவள் மிகவும் குற்ற உணர்ச்சி கொண்டவள் ஆகிவிட்டாள். அவள் துயரம் அதிகமாகி விட்டது.  ஏனெனில் அவள் பிள்ளைகள் ஐவரும் அவள் என்ன சொன்னாலும் அதைத் தட்ட மாட்டார்கள்.  அவள் விருப்பத்துக்கே முதலிடம் கொடுப்பார்கள்.  அவள் விருப்பத்தை ஆணையாக ஏற்று நடப்பார்கள் என்பதை அவள் நன்கறிவாள்.  அப்படி ஒரு உறுதிமொழியை அவர்கள் எடுத்திருப்பதை அவள் நன்கறிவாள்.”


“ஆனால் இதெல்லாம் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்து கொண்டதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது!” துரோணர் கூறினார்.


“அவை அனைத்துமே பெரிய புதிராகத் தான் இருக்கிறது, குருதேவரே!  அர்ஜுனன் தன் மூத்த சகோதரர்கள் இருவர் இருக்கையில் தான் மட்டும் மணம் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான்.  ஆனால் மூத்தவரான யுதிஷ்டிரரோ, இந்தப் பெண்ணைப் போட்டியில் வென்றவன் அர்ஜுனன். ஆகவே இவளை நான் மணக்க முடியாது என்கிறார்.  பீமனும் தனக்கு மூத்தவன் ஆன யுதிஷ்டிரன் மணக்கவில்லை எனில் தானும் மணந்து கொள்ள முடியாது என்கிறான்.  அனைவருக்குமே இது ஒரு மோசமான சூழ்நிலையாக இருந்தது.  மிகுந்த குழப்பமாகவும் இருந்தது.  பின்னர் யுதிஷ்டிரர் ஐவருமே அவளை மணந்து கொள்ளலாம் என்னும் யோசனையைத் தெரிவித்தார். “


“யுதிஷ்டிரனா அப்படிச் சொன்னான்!  இருக்கவே முடியாது!” துரோணர் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனார்.  “அவன் இப்போது இருப்பவர்களுக்குள்ளே நேர்மையும், நியாயமும் நிரம்பியவன்.  அவன் எப்படி இவ்வாறு ஒரு முட்டாள் தனமான முடிவை எடுக்க முடியும்?  உன் தந்தை அதற்கு என்ன  சொன்னார்?”


“தந்தையும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.  அவர் இந்த யோசனை அதர்மமான ஒன்று என்றே கூறினார்.  அப்போது மாட்சிமை பொருந்திய கிருஷ்ண வாசுதேவன் கூறினான்:  இது ஒரு மோசமான சூழ்நிலை; கஷ்டமான நேரம். எப்படி முடிவெடுத்தாலும் அது ஒரு மாபெரும் பேரழிவில் கொண்டு விடும். ஆகவே யோசித்து முடிவெடுக்க வேண்டும்.” என்றான்.  அப்போது தான் யுதிஷ்டிரர் கூறினார்: முன்னொரு காலத்தில் ஆரியர்களிடையே ஒரே பெண் பல கணவர்களை முக்கியமாக சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்று கூறினார்.”


“பின்னர் இந்த விஷயம் எப்படி முடிவடைந்தது?”


“மறுநாள், வேத வியாசர், தன் சீடரான தௌம்ய ரிஷியுடன் அங்கே வந்தார். குரு வம்சத்தினரின் ஆதிகுருவான அவர் வந்ததும் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  நீண்ட வாத, விவாதம் நடைபெற்றது.”


“வியாசர் என்ன சொன்னார்?”


“அவர் கூறினார்: குந்தி தேவியின் வார்த்தைகள், யோசனை ஏதுமின்றித் தெரிவிக்கப்பட்டாலும் அதில்ஆழமானதோர்  தனிச் சிறப்பு இருக்கிறது என்று கூறினார்.  திரௌபதி ஒருவேளை அர்ஜுனனை மட்டும் மணந்து கொண்டால் சகோதரர்கள் ஐவரும் பிரிக்கப்படுவார்கள் என்றார்.  பின்னர் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் பலமாற்றங்கள் ஏற்படும் என்றும், துரியோதனனுடனும், மற்ற கௌரவர்களுடனும் போரிட்டோ அல்லது பேச்சு வார்த்தைகள் மூலமோ தங்கள் பாரம்பரிய அரசை வாங்குவதற்கான வலிமையை இழந்துவிடுவார்கள் என்றும் குரு வம்சத்தினரின் பெருமையே அழிந்தாலும் அழிந்து விடும் என்றும் கூறினார்.”


“இப்படிப் பட்ட திருமணத்தின் தகுதி அல்லது தகுதியின்மை குறித்து ஆசாரியர் அளித்த கருத்து என்ன?”


“குருவே, ஆசாரியர் வியாசர் கூறினார்: முன் காலங்களில், தவிர்க்க முடியாத சமயங்களில் பல சகோதரர்கள் ஒரே மனைவியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டது உண்டு என்றார்.  குறிப்பிட்ட சில ஆரியப் பழங்குடியினரிடையே இப்படிப்பட்ட வழக்கம் இன்றும் இருப்பதாகக் கூறினார்.  குறிப்பாக இமயமலைப் பிராந்தியத்தில் இருப்பதாய்ச் சொன்னார். சில திருமணங்கள் வெற்றி அடைந்திருப்பதாகவும் கூறினார்.”


“ஆஹா, அப்படியா?  ஆசாரியர் வியாசர் இப்படிப்பட்ட ஒரு திருமணத்தை ஆதரிப்பார் என்றோ அதை நடத்திக் காட்ட முனைவார் என்றோ நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.”


“இறுதியாக ஆசாரியர் இது திரௌபதி மட்டும் தனித்து யோசித்து எடுக்க வேண்டிய முடிவு என்று கூறினார்.  அவள் எடுக்க வேண்டிய வழிமுறைகளை அவளுக்கு விளக்கிக் காட்டினார்.  மூன்று வழிமுறைகளைக் கூறி அதன் சாதக, பாதகங்களை அவளுக்கு எடுத்துச் சொன்னார்.  முதல் வழியில் அவள் அர்ஜுனனை மட்டும் மணந்து கொண்டு, மற்ற சகோதரர்களிடமிருந்து அவனைப் பிரித்து அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திப்பது.   இரண்டாவதாக அவள் மீண்டும் சுயம்வரத்திற்குச் செல்வது.  ஆனால் முதல் சுயம்வரத்தை மறுத்து மீண்டும் செல்வதின் மூலம் திரௌபதி நகைப்புக்கு இடமானவளாக ஆகிவிடுவாள்.  கடைசியாக யுதிஷ்டிரன் சொன்னமாதிரியே ஐவரையும் மணந்து கொள்ள வேண்டும்.  ஆனால் இதன் மூலம் அவள் பத்தினி என்னும் பெயரை இழக்க நேரிடும்.  எல்லாவற்றையும் ஆசாரியர் அவளுக்கு எடுத்துக் கூறினார்.  முதலில் என் சகோதரிக்கு இவை எதுவுமே ஏற்க முடியாமல் மன மகிழ்ச்சி குறைந்தே காணப்பட்டாள்.  பின்னர் நன்கு யோசித்த பின்னர் அவள் இந்த முடிவுக்கு வந்தாள்.  அவள் சம்மதம் கிடைத்த உடனேயே திருமணம் மறுநாளே செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.  உடனடியாக அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன்.  துரியோதனன் வந்து சேர இன்னும் 2 அல்லது  நாட்கள் ஆகலாம்.  உங்களுக்கு முன்கூட்டியே இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்காக நான் இங்கே அனுப்பப்பட்டேன்.”  என்று ஷிகண்டின் முடித்தான்.



பின்னர் ஷிகண்டின் அவன் ஸ்தூனகர்ணனுடன் இங்கிருந்து கிளம்பியதில் இருந்து நடந்தவற்றை எல்லாம் துரோணருக்கு விவரித்தான்.  காம்பில்யத்தில் நடந்தவற்றை விவரித்தான்.  அவன் தந்தை முதலில் அவனிடம் கட்டுக்கடங்காக் கோபம் கொண்டதையும் கூறினான்.  தன் ஜன்ம வைரி துரோணர் அவனை ஒரு ஆணாக மாற்றியதன் மூலம் தனக்குப் பரிசளித்துப் பெருமைப்பட்டுக் கொண்டதாக துருபதன் எண்ணியதே காரணம் என்பதையும் தெரிவித்தான்.  வாசுதேவ கிருஷ்ணன் அப்போது வந்து தன் சகோதரியிடம் பேசித் தன்னை ஏற்க வைத்தான் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  பின்னர் ஷகுனியும், அஸ்வத்தாமாவும் காம்பில்யத்தில் அரண்மனைக்கு வந்து துருபதனையும், திரௌபதியையும் சந்தித்து, துரியோதனனைத் தேர்ந்தெடுக்கக் கேட்டுக் கொண்டதையும், அப்படி நடந்துவிட்டால், அஸ்வத்தாமா தன் உயிரைப் பணயம் வைத்தாவது துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி கொடுத்ததையும் கூறினான். அப்போது அவர்கள் சென்றதும் தன் தந்தையும், மற்ற சகோதரர்களும், சகோதரியும் துரியோதனனைத் திருமணம் செய்து கொள்வதை விட குரு வம்சத்தினரோடு போரிட்டு இறக்கலாம் என்று பேசிக் கொண்டதையும் தெரிவித்தான்.



ஷிகண்டின் இவற்றை எல்லாம் சொல்லும்போது துரோணருக்கு இவ்வளவு நாட்களாக அறிந்திராத ஓர் உண்மை புலப்பட்டது.  ஷகுனியையும், துரியோதனனையும் குறித்து அவர் நினைத்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு அவர்கள் இருப்பதை இப்போது அவர் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்.  வியக்கத்தக்க விதத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டுத் தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய கிருஷ்ண வாசுதேவனை மனதிற்குள்ளாக மகிழ்ந்து பாராட்டினார்.  இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிக்கையில் துரோணருக்கு துருபதன் பால் அதுவரை இருந்த ஜன்ம விரோதம் கூடக் குறைந்துவிட்டது போல் தோன்றியது.  ஆனால் அவர் துருபதனைக் குறித்து எடுத்து இருக்கும் சபதம் கைவிட முடியாத ஒன்று.  அவர் மகன் அதில் பிடிவாதமாக இருக்கிறான். அவருடைய ஒரே மகன்.  அவர் தன் உயிரை விட மேலாக மதிக்கும் மகன் அஸ்வத்தாமாவுக்கு அது பிடிக்கவில்லை. இது ஒரு சங்கடமான சூழ்நிலையைச் சிருஷ்டித்துள்ளது.  என்ன செய்யலாம்?


மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.  பாதி இரவில் கண் விழித்த துரோணர் அதுவரை தூங்காமல் இருந்தார்.  அருணோதயத்தைக் கண்டதும் நதிக்கரைக்குச் சென்று தன்னுடைய நித்திய கர்மாநுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார். காலை சந்தியாவந்தனம் முடிந்து சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தார். புனிதமான மந்திரங்களை ஓதுகையில் அவருக்குள்ளே ஏதோ பளிச்சிட்டது.  ஆஹா!  கிடைத்துவிட்டது தீர்வு!  துரோணர் தன் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விட்டார். அது ஒன்று தான் ஒரே வழி!  அந்த வழி சாம்ராஜ்யத்தை இரு கூறாகப் பிரிப்பது ஒன்றே.


அடுத்து துரியோதனன் எப்படி எதிர்கொண்டான் என்பது குறித்துப் பார்ப்போம்.






Tuesday, July 29, 2014

துரோணருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சென்ற இரு அத்தியாயங்களில் கூறியவை மார்க்கண்டேய புராணத்திலிருந்தும் மற்றப் புத்தகங்களில் படித்தவைகளில் இருந்தும் தொகுத்து அளிக்கப்பட்டவை ஆகும்.  திரு முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரா புத்தகத்தில் இதைக் குறித்த தகவல்கள் கிடையாது.
இப்போது முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரான ஆசாரியர் துரோணர் இந்தத் திருமணம் குறித்து அறிந்ததும் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.  இது முன்ஷிஜி எழுதியவற்றிலிருந்து தருகிறேன்.

துரோணர் குரு வம்சத்தின் தலை சிறந்த ஆசாரியர், குரு வம்சத்தினரின் பிரதமத் தளபதியும் ஆவார்.  இரவு நேரம்!  தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரெனத் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தார்.  யுத்தசாலையின் வாயிலுக்கு அருகே இரண்டு, மூன்று ரதங்கள் வேகமாய் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. குதிரைகளை இழுத்துப்பிடிக்கும் ரத ஓட்டிகளின் குரல்களும், ரதங்கள் கிறீச்சிட்டு நிற்கும் தொனியும் கேட்கவே எழுந்த துரோணர் யாராக இருக்கும் என யோசித்தார். சோகை பிடித்தாற்போல் வெளிறிக் கிடந்த சந்திரன் தாமதமாய் வந்ததாலோ என்னமோ மெல்லிய வெளிச்சத்தைக் காட்டியபடி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான்.  அந்த மங்கிய வெளிச்சத்தில் சாளரத்தின் வழியே பார்த்த துரோணருக்கு அங்கே ரதங்கள் நிற்பவை நிழலைப் போல் தெரிந்தது.  வாயிற்காப்போனிடம் பேசிய குரல் எங்கேயோ கேட்ட குரலாக, பழக்கப்பட்ட குரலாகத் தெரிந்தது. ஹா!  அது ஷிகன்டினின் குரல் தான்.  துருபதனின் மகன், தன்னிடம் மாணாக்கனாகச் சேர்ந்தவன், ஆரம்பத்தில் ஆணா, பெண்ணா எனச் சந்தேகிக்கும்படி இருந்தவன், இப்போது முழு ஆணாக மாறிவிட்டான். அவன் குரல் தான் அது.

துரோணருக்குக்கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.  ஷிகண்டின் ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வந்துவிட்டானா?  சுயம்வரம் முடிந்து அதற்குள்ளாகவா? சுயம்வரத்தில் ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும்.  இல்லை எனில் இந்த நட்ட நடு இரவில் ஷிகண்டின் சுயம்வரம் முடிந்து சில நாட்களுக்குள்ளாக இங்கே வந்திருக்க மாட்டான்.  தன்னுடைய சீடன் ஷங்கா என்பவனை எழுப்பினார் துரோணர்.  அவன் எப்போதும் அவர் தூங்கும் இடத்துக்கு அருகிலேயே கூப்பிடும் தூரத்தில் படுப்பான்.  அவனை எழுப்பிய துரோணர் வெளியே யாரோ வந்திருப்பதாகவும், யார் வந்திருந்தாலும் அவர்களை உடனே உள்ளே அழைத்துவரும்படியும் கூறி அனுப்பினார். ஷங்கனும் வெளியே சென்றான்.  வெளியே சென்று கதவுகளை விரியத் திறந்த ஷங்கன், வெளுத்து, சக்தியெல்லாம் இழந்த நிலையில் இருந்த ஷிகண்டினை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.  மெல்லிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து வந்த ஷிகண்டின் துரோணரின் படுக்கைக்கு அருகே மண்டியிட்டு அவரை வணங்கி அவர் பாததூளியைத் தன் சிரசில் தரித்துக் கொண்டான்.

“ஷிகண்டின், என்ன விஷயம்?  நீ ஏன் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாய்?” என்று துரோணர் கேட்டார்.  ஷிகண்டினின் கண்களை ஏதோ மறைத்தது.  அவன் மயங்கி விழுந்துவிடுவானோ என்னும்படி தள்ளாடினான்.  அவனுடன் கூடவே வந்த ஸ்தூனகர்ணன் அவனைத் தாங்கிப் பிடித்து ஆசாரியரின் எதிரே அமர வைத்தான்.  ஷிகண்டின் தன் குரலே தனக்குக் கேட்குமா என்னும்படியான மெல்லிய குரலில் நடுங்கிய வண்ணம், “ஆசாரியரே, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் ஐவரும் என் சகோதரியை மணந்து கொண்டிருக்கின்றனர். “ மூச்சுவிடக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அவன் உடனே தன் நினைவற்று மயங்கி விழுந்து விட்டான். ஸ்தூனகர்ணன் அவனை மெல்லத் தூக்கி ஒரு படுக்கையில் கிடத்தினான். துரோணரின் மனைவி கிருபாதேவி ஒரு தாயின் பாசத்தோடு அவன் அருகே சென்று தலைக்கடியில் ஒரு தலையணையைக் கொடுத்து அவனைச் சரியாகப் படுக்க வைத்தாள்.  ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவன் வாயில் புகட்டினாள்.  முகத்தையும் துடைத்தாள்.  அவன் கண்ணிமைகளை நீரால் நனைத்தாள்.

துரோணர் இது எதையும் கவனிக்கவில்லை.  அவர் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தார்.  என்ன? பாண்டவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவரால் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை.  ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருப்பதோடு மட்டுமில்லை.  ஐவரும் திரௌபதியை மணந்திருக்கின்றனர்.  யக்ஷன் ஸ்தூனகர்ணன் பக்கம் திரும்பிய துரோணர், “இது உண்மையா?” என்று அவனைக் கேட்டார்.  யக்ஷன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டினான்.  “எப்படி? எப்படி?  எப்படி இது நடந்தது?  அவர்கள் ஐவரும் இறந்து விட்டனரே?” என்று துரோணர் மீண்டும் கேட்டார்.  ஆனால் ஸ்தூனகர்ணன் ஒரு நாளைக்கு இருபதே வார்த்தைகள் தான் பேசுவான். ஆகையால்  அவன் துரோணரிடம் ஷிகண்டினைச் சுட்டிக் காட்டி அவனிடம் கேட்குமாறு ஜாடைகள் காட்டினான்.  மேலும் ஜாடைகள் மூலம் தான் அன்றைய தினம் பேச வேண்டிய 20 வார்த்தைகளையும் பேசி முடித்துவிட்டதாகவும், இனி மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னரே தன்னால் பேசமுடியும் என்பதையும் தெரிவித்தான்.

துரோணர் கிருபாதேவியுடன் சேர்ந்து தானும் ஷிகண்டினை நினைவுக்குக் கொண்டுவர உதவி செய்தார். சற்று நேரம் முயன்றதும் ஷிகண்டின் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.  தன் எதிரே நிற்கும் ஆசாரியரைப் பார்த்து, அவருக்கு மரியாதை காட்டும் பாவனையில் மெல்ல எழுந்து உட்கார முயன்றான்.  அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. துரோணர் அவனிடம்   “ம்ஹூம், எழுந்து நிற்க முயற்சி செய்யாதே, மகனே!  நீ மிகவும் களைத்திருப்பதோடு,  உனக்கு உறக்கமும் அவசியம்.  நீ நீண்ட நேரம் தூங்கவும் வேண்டும்.  காலையில் நீ எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிக் கொள்ளலாம்.” என்று கூறினார். ஆனால் ஷிகண்டினோ மிகவும் முயற்சி செய்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். “இல்லை, ஆசாரியரே, மற்ற எவருக்கும் தெரிவதற்கு முன்னால் உங்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.”என்ற வண்ணம் கிருபாதேவி அளித்த நீரைப் பருகித் தனக்குக் கொஞ்சம் சக்தியை வரவழைத்துக் கொண்டான்.

“ஐந்து சகோதரர்களும் எவ்வாறு உயிருடன் இருந்தனர்? அவர்களை வெளிப்படுத்தியது யார்?”

“ஐயா, உத்தவன், என்னுடன் தான் வந்தான்.  ஆனால் விதுரரின் வீட்டுக்குப் போய்விட்டான்.  அவனுக்குத் தான் அனைத்தும் தெரியும்.  ஆனால் இது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.  சுயம்வரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அர்ஜுனன், பிராமணத் துறவி போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து போட்டியில் வென்று திரௌபதியை அடைந்தான்.”

“துரியோதனனுக்கு என்ன நடந்தது?”

“துரியோதனனால் நாணை இழுத்துக் கட்டக் கூட முடியவில்லை. உடைந்த இதயத்தோடு அவன் திரும்பி விட்டான்.  அஸ்வத்தாமாவுக்கோ வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை.  கர்ணன் தூக்கினான்.  நாணையும் இழுத்துக்கட்ட ஆரம்பித்தான்.  ஆனால் என் சகோதரி, ஒரு தேரோட்டி மகன் போட்டியில் கலந்து கொள்வதை அனுமதிக்கவில்லை.  மற்ற அரசர்களும் அப்படியே தோற்றுப் போனார்கள்.  ஆனால் அர்ஜுனன் முதல் முறையிலேயே மேலே சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணில் குறி பார்த்துத் தாக்கி அதைக் கீழே செயற்கைக் குளத்தில் தள்ளி விட்டான். “

“ஆனால் அவன் தான் அர்ஜுனன் என்பதை எப்போது அனைவரும் அறிந்து கொன்டனர்?”

“ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை தான்! அனைவருமே அவன் ஒரு பிராமணன் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் திரௌபதி அவன் போட்டியில் வென்றதும் அவனுக்கு  மாலையைப் போடப் போனாள். போட்டும் விட்டாள்.  அப்போது சில அரசர்களும், இளவரசர்களும் ஒரு பிராமணனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதன் மூலம் துருபதன் தங்களை அவமதித்து விட்டான் என அவனிடம் கூச்சல் போட்டனர்.  ஆக்ஷேபத்தைத் தெரிவித்தனர்.  அப்போது அர்ஜுனனின் மூத்த சகோதரர்களில் ஒருவனான பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக அர்ஜுனனின் உதவிக்கு வந்துவிட்டான். “

“ஓஹோ, அப்படி எனில் அங்கே அப்போது பீமனும் இருந்தானா?”

“ஆம், அவனும் இருந்தான். மற்ற சகோதரர்கள் மூவரும் அப்போது ஏற்பட்ட கூட்டத்திலும், கூச்சல், குழப்பத்தினாலும் அர்ஜுனன் அருகே வரமுடியாமல் தாங்கள் தங்கி இருந்த குயவன் வீட்டிற்கே திரும்பி விட்டனர் என நினைக்கிறேன்.”

“ஆனால் அர்ஜுனனை எப்படிப் புரிந்து கொண்டனர்?”

“ அதுவா? கிருஷ்ண வாசுதேவன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு அல்லாமல், பீமன் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  அப்போது தெரிந்து கொண்டனர்.”

“ஓஹோ, அப்படியா?  மீண்டும் கிருஷ்ண வாசுதேவன்!  அவனும் அங்கு இருந்தானா?  அப்படி எனில், இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருந்து செயல்பட்டிருப்பது அவன் தான்!  இல்லையா?  உன்னை இங்கே யார் அனுப்பினார்கள்?  யார் சொல்லி நீ எனக்குத் தெரிவிக்க வந்திருக்கிறாய்?”

“கிருஷ்ண வாசுதேவன் தான் சொன்னான்.  மேலும் ஐந்து சகோதரர்களும் தங்களுடைய  குரு, ஆசாரியர் என்னும் முறையில் பாண்டவர்களான தாங்கள் ஐவரும்  உயிருடன் இருப்பது முதல் முதலாக உங்களுக்குத் தான் தெரியவேண்டும் என விரும்பினார்கள்.  என் தந்தையும் உங்கள் ஆசிகள் திரௌபதிக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பினார்.”


Monday, July 28, 2014

பாஞ்சாலி ஏன் ஐவரை மணந்தாள்?

உலகமே இருட்டில் மூழ்கியது.  அதன் காரணத்தை அறிந்த பிரம்மா நளாயினியைத் தம்மால் சமாதானம் செய்ய இயலாது என்று உணர்ந்து கொண்டு, அத்ரி முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார்.  அத்ரி முனிவரின் மனைவியான சதி அநசூயாவிடம் நளாயினியின் கோபத்தையும் மாண்டவ்ய ரிஷியின் சாபத்துக்குப் பதில் சாபம் கொடுத்ததையும், அதனால் சூரியன் உதிக்க முடியவில்லை என்பதையும் கூறுகிறார்.  இதற்கு ஒரு வழி காணவேண்டும் என்றும் வேண்டுகிறார்.  அநசூயா நளாயினியின் வாழ்க்கையைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்கிறாள்.  இன்று வரை இல்வாழ்க்கை சுகமே அவள் அனுபவித்தறியவில்லை என்பதையும், இதெல்லாம் மௌத்கல்ய ரிஷி  தன் மனைவிக்கு வைக்கும் பரிக்ஷை என்பதையும் புரிந்து கொள்கிறாள்.

சூரியோதயத்துக்கு வழி வகுக்குமாறு பிரம்ம தேவன் கூறியதை ஏற்றுக் கொண்ட அநசூயா நளாயினியில் இல்லத்தை அடைகிறாள்.  நளாயினியிடம் சமாதானமாகப் பேசி சூரியோதயத்துக்கு வழி செய்யுமாறு கூறுகிறாள்.  ஆனால் நளாயினியோ மறுக்கிறாள்.  சூரியோதயம் ஆனால் தன் கணவன் இறந்துவிடுவார் என்று கூறி சூரியோதயத்துக்கு மறுக்கிறாள்.  அப்போது அநசூயை சூரியோதயம் ஆனதும் உன் கணவர் இறந்தாலும் இந்தத் தொழுநோய் நீங்கி சுந்தர புருஷனாக மீண்டு வருவார் என்றும் அவருடன் நீ சுகமான ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்தலாம் என்றும் கூறுகிறாள்.  அநசூயா பதிவிரதை என்பதைத் தெரிந்து கொண்டிருந்த நளாயினி அநசூயாவின் சொல்லுக் கட்டுப்படுகிறாள்.

சாபம் விலகவேண்டி நளாயினி கூற சாபம் விலகி சூரியனும் உதிக்கிறான்.  மௌத்கல்யரும் இறக்கிறார்.  ஆனால் அருகேயே இருந்த அநசூயா அவர் ஒரு சுந்தரபுருஷனாக எந்தவிதமான வியாதியும் இல்லாதவராக வர வேண்டும் என்று கூற அவ்விதமே அவர் தொழு நோய் நீங்கி சுந்தர புருஷனாக வருகிறார்.  நளாயினியும் அவரோடு ஆனந்தமாக இல்வாழ்க்கையைத் துய்க்கிறாள்.  காலம் செல்கிறது.  மௌத்கல்ய ரிஷிக்குத் தான் தவத்துக்குப் போக வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பது புரிந்தது.  ஆகவே நளாயினியிடம், "இல்வாழ்க்கைச் சுகத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்.  இப்போது நாம் இருவரும் அற வழியிலான இல்வாழ்க்கையை வாழ்வோம்." என்று கூறுகிறார்.

நளாயினிக்கோ மனதில் ஆசை போகவில்லை.  திருப்தியும் ஏற்படவில்லை.  ஆகவே மறுக்கிறாள். மீண்டும், மீண்டும் சொல்லிப் பார்த்த ரிஷி, அவள் பிடிவாதமாக மறுப்பதைக் கண்டு தன் தவநிலைக்குச் சென்று விடுகிறார்.  தன்னை லக்ஷியம் செய்யாத கணவனைக் கண்டு கோபம் அடைந்த நளாயினி என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தாள். பின்னர் ஈசனை நினைத்துத் தவம் செய்து அடுத்த பிறவியிலாவது நல்ல கணவனைப் பெறலாம் என நினைத்துத் தவம் செய்கிறாள்.  அவள் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவள் முன் தோன்றுகிறார்.  நளாயினி தான் எதிர்பார்க்கும் குணங்களை எல்லாம் அடுத்த பிறவியில் தனக்குக் கணவனாக இருக்கப் போகிறவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு திரும்பத் திரும்ப ஐந்து முறை அப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று கேட்கிறாள்.

ஈசனும் அவளிடம், "ஒரே மனிதனிடம் இப்படி எல்லாக் குணங்களும் நிறைந்திருப்பது அரிது.  ஆகையால் உனக்கு ஐந்து கணவர்கள் அடுத்த பிறவியில் வாய்ப்பார்கள்.  நீயும் இப்போது இந்த வரத்தை ஐந்து முறை கேட்டுவிட்டாய்.  ஆகையால் அடுத்த பிறவியில் உன் ஐந்து கணவர்களோடு கூடி வாழ்வாய்!" என வரமளித்து விடுகிறார்.  மனம் நொந்து போன நளாயினி பின்னர் தான் எப்படிப் பத்தினியாவோம் எனக் கேட்க  ஒருவனுடய அம்சமே ஐந்து கூறுகளாகப் பிரிந்து ஐந்து ஆண்களாகப்பிறப்பார்கள் என்றும் ஆகவே நபர்கள் ஐவராக இருந்தாலும் அவள் மணக்கப் போவது ஒருவனைத் தான் என்றும் கூறுவதோடு. ஒவ்வொருத்தரோடும் ஒவ்வொரு வருஷம் இல்வாழ்க்கை நடத்திய பின்னர் அவள் மீண்டும் கன்னித் தன்மை பெறுவாள் எனவும், அதன் பிறகு மற்றொருவருடன் அவள் இல்வாழ்க்கை தொடரும் என்றும் கூறுகிறார்.

ஐவரையும் பாஞ்சாலி சமமாக அன்பு செலுத்தியதாகச் சொல்லப்பட்டாலும் தனனை வென்ற அர்ஜுனனிடமே அவள் மனம் மிகுந்த பக்ஷத்துடன் இருந்தது.  அதனாலேயே பாண்டவர்கள் ஐவருடன்  இறுதி யாத்திரை செல்லும் வழியில்  பாஞ்சாலியால்  இந்தப்பாபத்தின் சுமையைத் தாங்க முடியாமல் பயணம் தடைப்பட்டு முதல் முதல் அவளே சுருண்டு விழுந்துவிடுகிறாள்.

எது எப்படியானாலும் சில விஷயங்களுக்குக் காரண, காரியங்கள் கற்பித்தல் என்பது விளக்கம் சொல்ல முடியாத ஒன்று. ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் ஆராய முற்பட்டோமானால் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கும்.  இதுவும் அபப்டிப் பட்ட ஒரு கேள்வி தான்.

திரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது?

பாஞ்சாலி ஏன் ஐந்து பேரை மணக்க நேர்ந்தது என்னும் கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.  ஆனால் சில காரியங்களுக்குக் காரணமோ, அல்லது அது ஏன் நடக்கிறது என்பதோ நமக்குத் தெரியவே போவதில்லை.  இந்த சந்தேகம் புதுசா நமக்கு மட்டும் ஏற்படவில்லை.  வியாசரின் சீடராக வியாசரோடு கூடவே இருந்து இந்நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஜைமினி முனிவருக்கும் ஏற்பட்டது.  மார்க்கண்டேயரை அணுகிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தப்பட அவரும் மார்க்கண்டேய முனிவரை அணுகிக் கேட்டார்.  மார்க்கண்டேயரோ விந்திய மலையில் இருக்கும் நான்கு பறவைகளைக் கேட்கும்படி சொல்கிறார்.  அந்த நான்கு பறவைகளும் வேதம் ஓதிக் கொண்டிருந்தன.  ஒரு சாபத்தால் துரோணரின் மகன்களான அவர்கள் பறவைகள் ஆகிவிட்டதாயும் கூறினார். (இவர் மஹாபாரத துரோணர் இல்லை!)

அந்தப் பறவைகளிடம் சென்று ஜைமினி மஹாபாரதத்தில் உள்ள தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாய்க் கேட்டார். முதல் கேள்வியே பாஞ்சாலி ஐவரை மணந்தது குறித்துத் தான். அதற்கு அந்தப் பறவைகள்  சொன்ன மறுமொழியாவது.  தேவேந்திரனுக்கும் தேவகுரு பிரஹஸ்பதிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் பிரஹஸ்பதி மறைந்துவிட, தேவேந்திரன் குரு இல்லாமல் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபனைத் தன் குருவாய்க் கொண்டான். விஸ்வரூபனோ அசுரர்களிடம் பிரியம் உள்ளவன்.  ஆகவே தேவர்களுக்கான அவிர் பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வர, இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் விஸ்வரூபனைக் கொன்றுவிடுகிறான். கோபம் கொண்ட துவஷ்டா தன் ஜடாமுடியிலிருந்து விருத்திராசுரனை உருவாக்குகிறான். விருத்திராசுரனிடம் நட்புப் பாராட்டி நயவஞ்சகமாய் அவனையும் தேவேந்திரன் கொல்கிறான்.

தேவேந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்ள, அவன் பலத்தில் பாதி, யமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்றடைகிறது.  அசுரர்களுக்கும், தேவர்களுக்கும்மீண்டும் போர் ஆரம்பிக்க மஹாவிஷ்ணு பூமி பாரம் குறைக்கக் கிருஷ்ணனாய் அவதரித்தார்.  அவருக்குத் துணையாக தேவேந்திரனைப் பாண்டவர்களாய்ப் பிறக்க வைத்ததாக ஐதீகம்.  தேவேந்திரனின் பெருமை யுதிஷ்டிரனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அஸ்வினி தேவர்களின் அழகு நகுல, சகாதேவர்களாகவும் பிறப்பு எடுத்ததாகச் சொன்னது அந்தப் பறவை.  ஆகவே பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்லப் பட்டாலும்  அவள் திருமணம் செய்து கொண்டது ஒருவரைத் தான் என்றும் கூறியது.

இது மார்க்கண்டேய புராணத்தில் உள்ள கதை.  ஆனால் திரௌபதி முந்தைய பிறவியில் நளாயினியாக இருந்தாள் எனவும் கூறுவார்கள்.  நளனின் மகள் ஆன நளாயினி விதி வசத்தால் மௌட்கல்ய முனிவரை /(சிலர் முனிவர் பெயர் கௌசிகர் என்பார்கள்.)மணந்து கொள்ள நேரிடுகிறது.  தொழு நோயால் பீடிக்கப்பட்ட முனிவர் அவளை மிகவும் பாடாய்ப் படுத்தி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்குகிறார்.  ஒரு சமயம் முனிவர் தனக்கு இஷ்டமான தாசி ஒருத்தரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு நளாயினியிடம் கட்டளை இட, அவளும் அவரை ஒரு கூடையில் வைத்துத் தலையில் தூக்கிச் சென்றாள்.  அப்போது  அங்கே கழுவில் ஏற்றப்பட்டிருந்த மாண்டவ்ய ரிஷியின் மேலே கூடை இடிக்க, மாண்டவ்யர் வலி பொறுக்க முடியாமல், "காலை சூரியோதயத்துக்குள்ளாக மௌட்கல்ய ரிஷி தலை வெடித்து இறக்கட்டும்!" என சாபம் கொடுத்துவிடுகிறார்.

இதைக் கேட்ட நளாயினி தான் பத்தினி என்பது உண்மையானால் நாளை சூரியனே வரக் கூடாது என ஆணையிடுகிறாள்.  மறுநாள் சூரியனே உதிக்கவில்லை.  உலகம் இருட்டில் மூழ்குகிறது.

Sunday, July 27, 2014

கண்ணனுக்காக! ஒர் அறிவிப்பு!

எல்லோரும் எதிர்பார்க்கிறாப்போல் திரௌபதியின் திருமண நிகழ்வுகளை நம்மால் காண முடியாது.  சென்ற அத்தியாயத்துடன் மூன்றாம் பாகம் முடிவடைந்து விட்டது.  நான்காம் பாகம் தொடரும் முன்னர் துரோணர், துரியோதனன் ஆகியோர் இருவருக்கும் இந்தத் திருமணச் செய்தி ஏற்படுத்திய விளைவுகளைச் சுருக்கமாய்க் காண்போம்.  கூடவே திரௌபதியின் முன் பிறவியும், அவள் பெற்ற வரமும் அவள் ஏன் ஐவரைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது என்பதையும் சுருக்கமாய்ப் பார்ப்போம். நான்காம் பாகமும் கண்ணனின் கதை தான்.  இது முழுக்க முழுக்கக் கண்ணன் எவ்வாறு தர்க்கரீதியாக அனைத்து சாகசங்களையும் செய்ய முடிந்தது என்பது தான்.  கண்ணனைக் குறித்த கதைகள் மட்டுமே.  நான்காம் பாகத்தில் சத்யபாமா கண்ணனை எவ்வாறு அடைகிறாள் என்பதையும் கூடவே மற்ற விபரங்களையும் பார்ப்போம். அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்.   படித்துக் கருத்துப் பகிர்பவர்களுக்கும், படித்துவிட்டுக் கருத்துச் சொல்லாமல் இருப்பவர்களுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


இந்தப் பக்கமே கண்ணனுக்காக மட்டும் தான்!  ஆகையால் கண்ணன் குறித்த செய்திகளே இடம் பெறும்.  நன்றி.

திரௌபதி முடிவெடுத்தாள்!

அதைக் கேட்டதும் துருபதன் முகம் சுளித்தான். த்ருஷ்டத்யும்னன் கண்கள் தீப்பிழம்பென மாறின.  திரௌபதியோ அடக்க முடியாமல் விம்மினாள். அனைவரையும் பார்த்த வியாசர் தன் நிலையிலிருந்து சற்றும் மாறாமல், “இப்போது மூன்றவது வழியைப் பற்றிப் பார்ப்போம்.  யுதிஷ்டிரன் சொன்ன ஆலோசனையின்படி  நீ ஐந்து சகோதரர்களையும் திருமணம் செய்து கொண்டால், உன் நற்பெயர் கெட்டுவிடும். மக்கள் வம்பு பேசுவார்கள். அரசர்களும், சிற்றரசர்களும் இளவரசர்களும் அவதூறாகப் பேசுவார்கள். உன்னிடம் புனிதத் தன்மை இல்லை;  நீ பத்தினி அல்ல என்பார்கள். அனைத்து மக்களுக்கும், அனைத்துக் கடவுளருக்கும் முன்னால் ஒரு பெண்ணிற்கு இதைவிடப் பெரிய அவமானம் ஏதும் இல்லை.  உன்னுடன் சமநிலையில் உள்ள மற்ற இளவரசிகள் உன்னை ஒதுக்கிவிடுவார்கள்; அவ்வளவு ஏன்? உன் சொந்த தோழிப் பெண்களும், சேடிகளும் கூடக் கேலி பேசுவார்கள்.  ஐந்து பேரையும் திருமணம் செய்து கொண்டு இரவும், பகலும் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.  அதிலும் நினைவுகள் கொடுக்கும் சித்திரவதை அதிகமாக இருக்கும்.  அது இவ்வாறெல்லாம் கேட்கும். “நான் அனைவரிடமும் ஒழுங்காக நடந்து கொள்கிறேனா?  அனைவரையும் சந்தோஷப் படுத்துகிறேனா? எவரையேனும் திருப்திப் படுத்தாமல் இருந்துவிட்டேனோ? எவரிடமாவது பாரபக்ஷமாக நடந்து கொள்கிறேனோ?  அல்லது ஒருவர் இன்னொருவரைப் பார்த்துப் பொறாமை கொள்ள வைத்துவிட்டேனோ?  இவர்கள் அனைவருக்குமே நான் சமமான பிரியத்தைக் காட்டி வருகிறேனா? ஒழுங்காக நடந்து கொள்கிறேனா?  அனைவரையும் சந்தோஷப் படுத்துகிறேனா?”  இவ்வாறெல்லாம் எண்ணங்கள் அலை போல மோதும்.”

“குழந்தாய், ஒரு கணவனைத் திருப்திப் படுத்துவதே இயலாத காரியம்.  அது எவ்வளவு கடினம் பெண்களுக்கு என்பதை நான் நன்கறிவேன்.  அப்படி இருக்கையில் உன் முன்னே ஐந்து கணவர்கள். “ லேசாகச் சிரித்த வண்ணம் கூறினார் வியாசர்.

“நீங்கள் சொல்வது சரிதான், ஆசாரியரே. என் அருமை கிருஷ்ணா, எப்போதும் துக்கத்திலேயே இருப்பாள்.” வியாசர் சொன்ன விதத்தைக் கேட்டுவிட்டு அதனால் ஈர்க்கப்பட்ட துருபதன் மேற்கண்டவாறு கூறினான்.

“ஆனால் இதை இப்படிப் பார் திரௌபதி! இதன் மூலம் உனக்குக் குந்தி ஒரு தாயாகக் கிடைப்பாள்.  இவளைப் போன்றதொரு அன்பான தாய் இனி பிறக்கப் போவதில்லை. அதோடு உனக்கு ஐந்து கணவர்களும் கிடைப்பார்கள்.  உன்னிடம் அன்புடனும், பாசத்துடனும், புரிதலுடனும் நடந்து கொள்வார்கள்.  உன்னைப் பற்றி அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் சொல்லிலும், செயலிலும் ஒற்றுமையைக் காட்டுபவர்கள். உன்னுடைய பிளவை ஏற்படுத்தாத பக்தி கலந்த அர்ப்பணிப்பு உணர்வு இதற்கு மேலும் வலுவைக் கூட்டும். தந்திரமும், கபடமும் நிறைந்த ஷகுனியையும், வன்மம் பாராட்டி இவர்களை அழிக்க நினைக்கும் துரியோதனனையும் எதிர்த்து நிற்கும் வலிமை இவர்களுக்கு ஏற்படும். பாண்டவர்கள்  குரு வம்சத்தின் அரசர்களாக ஆட்சி புரியலாம்; அல்லது தங்களுக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்துக் கொள்ளலாம்.  இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  இவர்கள் ஐவரும் ஒற்றுமையாக இருந்து மாபெரும் சக்கரவர்த்திகளாக, இவ்வுலகம் காணாப் பெரும் புகழுடன் இருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.  இது நிச்சயம் நடக்கும்.  உனக்கு நான் உறுதி அளிக்கிறேன் திரௌபதி!”

சற்றே நிறுத்திய வியாசர் தன் நீண்ட தாடியைத் தடவிய வண்ணம் சற்று யோசித்தார்.  அனைவரும் அவர் மேலே தொடரக் காத்திருந்தனர்.  பின்னர் நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னதாவது:  “ நீ ஐந்து சகோதரர்களை மட்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை திரௌபதி.  ஆனால் நீ மணக்கப் போவது தர்மத்தை.  இந்த தர்மம் தான் பாண்டவர்களின் வலுவான ஆயுதம்.  உன் தந்தை எதற்காக உயிருடன் இருக்கிறானோ, எந்த நோக்கம் நிறைவேறக் காத்திருக்கிறானோ அது முழுமையாகப் பூர்த்தி அடையும்.  இந்தச் சுயம்வரமும் தனிப்பட்ட முறையில் மாபெரும் வெற்றி அடைந்ததாய்க் கருதப்படும்.  இந்த ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்ப நினைக்கும் கிருஷ்ண வாசுதேவனின் எண்ணமும் பூர்த்தியாகும்.  அது சரியானது என உலகு அறியும்.”

மூச்சுவிடும் ஓசை கூடக் கேட்காமல் அனைவரும் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர்.  திரௌபதியின் கண்ணீர் காய்ந்து போக ஆரம்பித்தது. முதிர்ந்த முனிவர்கள் யஜரும், உபயஜரும் அவ்வப்போது வியாசரை ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர்.   “ கொஞ்சம் யோசித்துப் பார், குழந்தாய்! திரௌபதி, தர்மத்தின் பாதையில் செல்ல ஆரம்பிக்கையில் இப்படிப்பட்ட முரண்பாடுகளும், அதன் காரணமான சர்ச்சைகளும் கட்டாயம் எழும்.   நன்மையையே நாடும், உள்ளூர நேர்மையும், நியாயமும், நீதியுமே தங்கள் சொத்து என நினைக்கும் மனித மனங்களுக்கு அதர்மத்தின் கெட்ட வாசனையையும் மீறி தர்மத்தின் நறுமணம் தெரிய ஆரம்பிக்கும்.  உன்னுடைய விருப்பமே இங்கே முக்கியம் திரௌபதி!  இப்படிப்பட்ட கடுமையானதொரு பிரச்னையை இன்று வரை எந்தப் பெண்ணும் எதிர்கொண்டிருக்கவே மாட்டாள். அதை நான் நன்கறிவேன்.  அவ்வளவு ஏன்?  நானே ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உன் நிலைமை எனக்கு வரக் கூடாது என்றே நினைப்பேன்.  நான் உன்னைப் போன்றதொரு அழகிய சிறந்த இளம்பெண்ணாக இருந்தாலும் என்னால் இயலாது.” மீண்டும் சிரித்தார் வியாசர்.  அனைவருமே சிரித்தனர்.  த்ருஷ்டத்யும்னனுக்குக் கூடச் சிரிப்பு வந்துவிட்டது.  வியாசர் இளம்பெண்ணாக இருந்திருந்தால் என்பதை நினைத்து நினைத்து அவனும் சிரித்தான்.  “நீ தைரியமான பெண் திரௌபதி! புத்திசாலித்தனமாக முடிவெடுப்பாய்.  நான் சொன்னதை எல்லாம் நன்கு நினைத்துப் பார்.  தீர்க்கமாக யோசி! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்.  ஒருவேளை உனக்கு முடிவெடுக்க தாமதம் ஆகலாம். அதனால் எங்கள் ஆலோசனைகளை தள்ளி வைக்கும்படி நினைக்கலாம். ஆனால் எப்போது ஆனாலும் உன் முடிவு தான் இங்கே முக்கியமானது. அது என்னை மட்டுமல்ல, உன் தந்தை மாட்சிமை பொருந்திய மன்னன் துருபதன், ஐந்து சகோதரர்கள், கிருஷ்ண வாசுதேவன் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும், கிருஷ்ண வாசுதேவனை  நீ உன் சகோதரனாக ஸ்வீகரித்துள்ளாய் அல்லவா? உன் சுயம்வரம் வெற்றியடைய அவன் தன் உயிரைப் பணயம் வைத்திருந்தான். அதை மறந்துவிடாதே!" என்றார் வியாசர்.


“எனக்கு இதை யோசிக்க நேரம் தேவை இல்லை. “ சொல்லும்போதே திரௌபதிக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது போலும்.  தன் கைகளால் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மேலே பேசினாள்:” என் சுயம்வரத்தின் மூலம், திருமணத்தின் மூலம் ஏற்படப் போகும் இத்தனை கஷ்டங்களும் வெளியே தெரிந்தால்!!! அனைத்து மக்களின் சந்தோஷமும் ஒரு துளி பாலில் விஷம் கலந்தாற்போல் மாறிவிடும்.  நம் எதிரிகளுக்கோ, நாம் அனைவருமே நகைப்புக்கு இடமாவோம். என்ன செய்வது?” என்று கலங்கினாள்.  “நீ என்ன சொல்கிறாய், த்ருஷ்டத்யும்னா? முடிவை இப்போதே எடுத்து விடுவோமா?  அல்லது தள்ளிப் போடலாமா?” வியாசர் த்ருஷ்டத்யும்னனைப் பார்த்துக் கேட்டார்.

“இல்லை, ஐயா. தள்ளிப் போடவேண்டாம்.  தயவு செய்து உடனே முடிவெடுக்கலாம். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன் ஐயா!” என்ற த்ருஷ்டத்யும்னன் வியாசர் கால்களில் விழுந்தான்.  “பொய்யான வதந்திகள் பரவுவதில் எங்களுக்கு விருப்பமில்லை.  எந்த முடிவை நாங்கள் எடுத்தாலும், அதை இங்கே, இப்போதே, இந்த இடத்திலேயே எடுத்து விடுவோம்.  அது தான் கடைசியான முடிவாகவும் இருக்க வேண்டும்.  இந்த சந்தேகங்களை நினைத்தாலே எனக்கு எரிச்சலாக வருகிறது.” என்றான்.

“நானும் அதை ஒப்புக் கொள்கிறேன். “ என்றான் துருபதன்.  “நாம் நம் முடிவை இங்கே இப்போது எடுக்க வேண்டும். இங்கிருந்து நாம் கிளம்புகையில் அனைவருமே ஒரே முகமான முடிவை எடுத்த திருப்தியோடு செல்ல வேண்டும். ஏற்கெனவே நான் நிறையக் கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.  மேலும், மேலும் கஷ்டங்களைச் சுமக்க நான் விரும்பவில்லை.  இப்போதே முடிவை எடுப்போம்.” என்றான் துருபதனும்.  “முடிவு எடுக்க வேண்டியது நீயோ, உன் மகனோ அல்ல, துருபதா! திரௌபதி தான் முடிவெடுக்க வேண்டும். “ என்று அவனைத் திருத்திவிட்டுச் சிரித்தார் வியாசர். “ஆம், ஆம், நான் நம்முடைய முடிவு எனத் தவறாய்க் குறிப்பிட்டு விட்டேன். ஆசாரியரே, நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள்.  திரௌபதியே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வது சரியானது.  ஏனெனில் அவள் தான் பின் விளைவுகளை எதிர்கொள்ள இருப்பவள். “

“குழந்தாய், நான் கூறிய மூன்று வழிகளில் எந்த வழி உனக்கு உகந்தது என நினைக்கிறாய்?” குரலில் குழைவுடன் கேட்டார் வியாசர்.   திரௌபதி தன் தலையைக் குனிந்து கொண்டு ஒரு கணம் பூமியைப் பார்த்தாள்.  பின்னர் நிமிர்ந்து வியாசர் தன்னையே ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.  அவர் கண்களில் அவளைப் புரிந்து கொண்ட உணர்வு தெரிந்தது. பின் ஐந்து சகோதரர்களையும் ஒரு முறை பார்த்தாள்.  அவர்கள் அனைவரின் முகத்திலும் திரௌபதி என்ன முடிவெடுக்கப்போகிறாளோ எனத் தெரிந்து கொள்ளும் ஆவலைக் கண்டாள்.  பின்னர் குந்தியைப் பார்த்தாள்.  குந்தி அவள் மனதுக்கு மிகவும் இனியவளாக, ஒரு சிநேகிதியாக, நம்பிக்கை உள்ளவளாக, பாசம் மிகுந்தவளாகத் தெரிந்தாள். அவள் கண்கள் திரௌபதிக்கு அன்பான வரவேற்பை அளித்தன.  ஒரு கணம் அவள் கண்கள் பயந்த மாதிரியான உணர்வோடு காணப்பட்டு இமைகள் மூடிக் கொண்டன.  அதில்  திரௌபதி எங்கேனும் தவறான முடிவை எடுத்துவிடுவாளோ என்னும் அச்சம் தெரிந்தது.   திரௌபதிக்கு அவளிடம் நம்பிக்கை பிறந்தது.  இப்படி ஒரு தாயிடம் நாம் குடியேறினால் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்.  மதிப்பு இருக்கும் என நினைத்தாள். இந்த ஐவரையும் தான் மணந்து கொண்டு ஆர்யவர்த்தத்தின் தர்ம சாம்ராஜ்யத்துக்கு மாபெரும் அஸ்திவாரமாக என்றென்றும் நிலைத்து நிற்கலாம் என்பதையும் புரிந்து கொண்டாள்.

பின்னர் அவள் கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்தாள்.  அவனோ திரௌபதி எந்த முடிவை எடுத்தாலும் தான் அவள் பக்கமே நிற்பதாகச் சொல்லாமல் சொன்னான்.  தன் கண்களாலேயே அவளுக்குத் தான் என்றென்றும் அருகே இருந்து காப்பதாக உறுதி மொழி கொடுத்தான்.  கோவிந்தன் சொன்ன மாதிரி அவள் இந்த சுயம்வரத்தை நம்பிக்கையுடன் கடந்து விட்டாள்.  இதுவும் அதில் ஒரு பகுதியே!  இதையும் அவள் கடந்தாக வேண்டும்.  தீர்மானம் எடுக்க முடியாமல் அவள் மனதை அலைபாய விடக் கூடாது.  திரௌபதி நிமிர்ந்து பார்த்தாள்.  “மதிப்புக்குரிய ஆசாரியரே!  நான் முடிவெடுத்துவிட்டேன்.” என்றாள் தீர்க்கமான குரலில்.  “என்ன முடிவு, குழந்தாய்!” வியாசர் கேட்டார்.

“நீங்கள் கூறிய மூன்றாம் வழியை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், ஆசாரியரே!  நான் ஐந்து சகோதரர்களையும் ஆரிய வம்சத்தின் பழைமையான சடங்குகளின் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன்.” சொல்லும்போதே திரௌபதி அப்படியே உடைந்து போனாள்.  அவளை அந்தச் சூழ்நிலையின் அழுத்தம் மிக வேகமாய்த் தாக்கிவிட்டது.  தன்னைச் சமாளித்துக் கொண்டு வியாசரின் கால்களில் விழுந்து வணங்கினாள் திரௌபதி.  “என் நல்லாசிகள் உனக்கு எப்போதுமே உண்டு, குழந்தாய்!” என்றார் வியாசர்.  தன் கைகளால் அவளைத் தூக்கி அவள் உச்சியைத் தடவிய வண்ணம், “துருபதா, நான் என்ன சொன்னேன் உன்னிடம் உன் மகளைப் பற்றி!  இதோ பார், அவள் சாக்ஷாத் அம்பிகையே தான்!” என்றார் உண்மையான பக்தியுடன்.  “அப்படியே ஆகட்டும்!” தாய்மையின் உணர்வு மேலோங்க அதை ஆமோதித்தாள் குந்தி. திரௌபதியைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டாள். “அப்படியே ஆகட்டும்!” துருபதனும் ஒரு விதமான நிம்மதி உணர்வோடு சொன்னான். “இது எல்லாம் நாம் போடும் முடிச்சே அல்ல.  சாக்ஷாத் அந்தப் பரம்பொருள் போடும் முடிச்சு!  இதை அவிழ்க்கவோ, மாற்றவோ நம்மால் எப்படி இயலும்?   எந்த மனிதனாலும் இயலாத ஒன்று! எல்லாம் அவன் செயல்!" என்றான் துருபதன்.

 வாசுதேவக் கிருஷ்ணன் புன்னகை புரிந்தான்.  அவன் தர்ம சாம்ராஜ்யம் அமைக்கவேண்டி திரௌபதி அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்துவிட்டாள்.


Saturday, July 26, 2014

வியாசரின் ஆலோசனைகள்!

“உண்மைதான் மன்னா!  நீ சொல்வது சரியே!   கிருஷ்ண வாசுதேவன் இவற்றைச் சரியாகவே சொல்லி இருக்கிறான்.  இது ஓர் பேரழிவு தான். இவ்வளவு நாட்கள் ஒளிந்து வாழ்ந்த சகோதரர்கள் ஐவரும் இப்போது தான் உலக வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கின்றனர்.  அவர்களுக்குப் பரம்பரையாகக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்கள் இன்னமும் அடைந்தாக வேண்டும்.  சமரசம் செய்து கொண்டு ஒத்து வாழ்வதற்குச் சற்றும் இடம் தரமாட்டான் துரியோதனன்.  அவன் விரோதத்தை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.  அது மட்டுமா? அவர்களின் தாய் மாமன் ஷகுனியின் தந்திரங்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை முழு ஹஸ்தினாபுரமுமே இவர்கள் வரவை எதிர்த்தால்?  அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.  இப்போது நாம் சுயம்வரத்தினால் விளைந்திருக்கும் பலன்களை எல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டு திரௌபதிக்கு இன்னொரு கணவனைத் தேடித் தர முடியுமா?” வியாசர் கேட்டார்.

“அந்தக் கஷ்டம் எனக்கும் புரிகிறது, ஆசாரியரே!  ஆசாரியரே, எனக்கு என்ன செய்வது என ஒன்றுமே புரியவில்லை.  தயவு செய்து எங்களுக்குச் சரியான வழியைக் காட்டுங்கள்.  நீங்கள் தர்மத்தின் ஊற்று. உங்களால் தான் சரியாகச் சொல்ல முடியும்.” என்று இறைஞ்சினான் துருபதன்.

“மன்னா, மாட்சிமை பொருந்திய மன்னா! நீ என்னைக் கேட்பதன் மூலம் தவறு செய்கிறாய்.  கிருஷ்ணை திரௌபதி தனக்குத் தானே ஒரு வழியைக் கண்டுபிடிப்பாள்.  அவளால் முடியும்.  இது அவள் திருமணம்;  அவள் வாழ்க்கை.  ஆகவே அவள் விருப்பமே இங்கு முக்கியம்.  என்ன செய்யலாம் என அவளே தேர்ந்தெடுக்கட்டும்!” என்று சொன்னவண்ணம் ஆசாரியர் வேத வியாசர் திரௌபதியின் பக்கம் திரும்பிக் கனிவுடனும், பாசத்துடனும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“அவள் ஒருக்காலும் ஐந்து கணவர்களைத் தேர்ந்தெடுக்க மாட்டாள்!  நான் நிச்சயமாக அறிவேன்.” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  அவனைப் பார்த்துச் சிரித்த வியாசர், “நீ சற்றும் பொறுமையற்று இருக்கிறாய், மகனே!” எனக் கூறினார்.  “நாம் அனைவரும் இவ்வளவு விவாதித்தும், நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.  திரௌபதியால் மட்டும் எப்படி முடியும்?” என்றான் த்ருஷ்டத்யும்னன்.

உடனே துருபதனும், “ஆசாரியரே!  துரதிர்ஷ்டம் படைத்த என் மகளிடம் தயவு செய்து இந்தக் கஷ்டமான கேள்விக்குப் பதிலைத் தேடச் சொல்லாதீர்கள்.  இந்த மாபெரும் பொறுப்பு அவளுக்கு வேண்டாம்.  அவள் போதும், போதும் என்னும் அளவுக்கு அழுது தீர்த்து விட்டாள்.  அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. “ என்றான்.

“மன்னா, மாட்சிமை பொருந்திய மன்னா!  அவள் உனக்குத் தான் குழந்தை!  ஒரு பெண் தன் பிறந்த வீட்டில் மட்டுமே குழந்தையாக நடத்தப்படுவாள்.  அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைக்கப்படுகிறாளோ, அந்த நிமிடத்தில் இருந்தே எல்லாப் பிரச்னைகளையும் தன்னந்தனியாகத் தீர்க்கும் அறிவையும், முடிவெடுக்கும் திறனையும் பெற்று விடுகிறாள். உனக்குப் பெண்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை, மன்னா!  இதோ, பீமன் இருக்கிறானே, அவனைக் கேட்டுப் பார்! ஹிடும்பி அவனை எப்படிச் சமாளித்து வந்தாள் என்பதைக் கதையாகச் சொல்லுவான். “ என்ற வண்ணம் மீண்டும் இறுக்கமாக ஆரம்பித்த சூழ்நிலையைத் தன் கேலிப் பேச்சால் மாற்ற முனைந்தார் வியாசர்.

பீமனால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.  அதோடு ஆசாரியரைப் பார்த்து ஒரு நண்பனிடம் கண்ணடிப்பது போல் கண்ணடித்துக் கொண்டு, “ஆசாரியரே, பெண்களைப் பற்றி நீங்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பது எவ்வாறோ?” என்று கேலியாகவும் கேட்டான்.  “உன்னைப் போன்ற பொல்லாத  பயல்களின் மூலமே நான் பெண்களைப் பற்றித் தெரிந்து கொண்டேனாக்கும்.” என்று திருப்பினார் வியாசர்.  பின்னர் மனம் விட்டுச் சிரித்த வண்ணம் திரௌபதியின் பக்கம் திரும்பினார்.  “குழந்தாய்!  அழாதே!  உதவிக்கு யாரும் இல்லை என நினையாதே! நீ எவ்வளவு தைரியமான பெண் என்பதை நான் நன்கறிவேன். “  இதைச் சொன்னவர் துருபதனிடம் திரும்பி, “துருபதா, உன் மகள் சாதாரணமானவள் என நினையாதே!  இவள் சாக்ஷாத் அந்த அம்பிகையே ஆவாள்!” என்றார்.

“நான் என்ன செய்யட்டும் ஆசாரியரே!  என்ன சொல்லட்டும்?” திரௌபதி வியாசரைக் கேட்டாள். “நீ ஒருத்தி மட்டுமே இதற்கான சரியான முடிவை எடுக்க முடியும் மகளே! உனக்கெதிரே மூன்று வழிகள் இருக்கின்றன.  “

வியாசர் இப்போது யஜர், உபயஜர் ஆகியோரைப் பார்த்த வண்ணம், “மதிப்புக்குரிய முனிவர்கள் இருவரும் நான் பேசப் போவதைப் பொறுத்துக்கொள்வார்கள் என எண்ணுகிறேன்.” என்று அனுமதி வேண்டினார். முனிவர்கள் இருவரும், “துறவிகளில் சிறந்தவரே!  நீர் சொல்லக் காத்திருக்கிறோம்.”  என்றனர். அனைவருமே மிகவும் மரியாதையுடனும், ஆவலுடனும் காத்திருந்தனர்.

“முதலில் நான் சொல்லப் போவது முதலாவதான வழியை.  குழந்தாய் கேள்!   இப்போது ஏற்பட்டிருக்கும் துன்பங்களையும், கஷ்ட, நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் சுயம்வரத்தின் முடிவை ஏற்றுக்கொள் மகளே! நீ அர்ஜுனனை உன் மணமகனாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறாய்.  அவனும் உன்னை மணந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.  நீ அவனை மணந்து கொண்டால் மிகவும் சந்தோஷமாக இருப்பாய்!  எனக்கு அதில் சந்தேகமே இல்லை.  அர்ஜுனன் ஒரு நல்ல, விசுவாசமுள்ள, அர்ப்பணிப்பு உணர்வுள்ள கணவனாய்த் திகழ்வான்.  நீ அவன் அருகில் இருப்பதன் மூலம் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற்று மிகச் சிறந்ததொரு உன்னதமான இடத்துக்கு வருவான்.  அவன் இங்கேயே உன் தந்தையுடன் வாழலாம், அல்லது கிருஷ்ண வாசுதேவனுடன் செல்லலாம்.  அவன் எங்கிருந்தாலும் ஒரு நல்ல கணவனாக, ஒரு திறமையான போர் வீரனாக, நேர்மையான மனிதனாக வாழ்வான்.”

“ஆனால் ஒன்றை நினைவில் கொள், மகளே!  இதன் மூலம் அவன் தன் மற்ற சகோதரர்களோடு சேர்ந்து எடுத்திருக்கும் உறுதிமொழியை உடைத்தாக வேண்டும்.  வாழ்நாள் முழுவதும் தாயின் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன் என சகோதரர்கள் ஐவரும் எடுத்திருக்கும் உறுதிமொழியில் இருந்து அவன் மட்டும் தனியாக விலகி வந்தாக வேண்டும்.  திரௌபதி, உனக்குக் குந்தியைப் பற்றி அதிகம் தெரியாது.  நீ அறிய மாட்டாய்!”  சற்றே நிறுத்திய வியாசர் குந்தியின் பக்கம் திரும்பினார்.


பின்னர் கனிவோடு அவளைப் பார்த்துக் கொண்டே, “ இவளைப் போன்றதொரு அற்புதமான தாய் கிடைப்பது அரிது.  இவ்வுலகிலேயே இவளைப் போன்றதொரு தாயைக் காண முடியாது.  தன் ஐந்து மகன்களுக்காக மட்டுமே அவள் வாழ்கிறாள்.  தன்னுடைய அன்பெனும் பாசக் கயிற்றால் ஐந்து சகோதரர்களையும் பிணைத்திருக்கிறாள்.  அவளுடைய விருப்பத்திலிருந்து விலகுவதன் மூலம் அர்ஜுனன் இந்த அழகான ஒற்றுமையான பிணைப்பைக் குலைத்துவிடுவான்.  அது மட்டுமல்ல மகளே, இவர்கள் ஐவரும் ஒன்றாக இருந்தால் தான் துரியோதனனின் கொடுங்கோன்மையை வெல்ல முடியும். பிரிந்து விட்டார்களானால் இவர்களால் அவனை எதிர்கொள்ள முடியாது.  இது நாள் வரை அப்படித் தான் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். துரியோதனனை எதிர்கொள்ளவில்லை எனில், இவர்களால் தங்கள் பரம்பரை ஆட்சியைப் பெற முடியாது.  என்பதோடு சக்கரவர்த்தியாகவும் ஆக முடியாது.  இவர்கள் ஒற்றுமையாக இணைந்திருந்தால் என்றேனும் ஓர் நாள் பரம்பரை ஆட்சியைப் பிடித்து அதன் மூலம் மாபெரும் சக்கரவர்த்தியாக ஆவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதற்கு அவர்கள் ஒற்றுமை தேவை!”

“இவர்களைப் பிரிந்து வாழ்வதன் மூலம் அர்ஜுனன் தன் வாழ்நாள் முழுதும் ஆற்ற முடியாத மனக் காயத்தோடு தான் வாழ்ந்து வருவான்.  வெளியே தெரியாவிட்டாலும் உள்ளூரப் புழுங்கி மனம் வெந்து துடிப்பான். உனக்காக, உன்னை மனைவியாக அடைவதற்காகத் தன் சகோதரர்களுக்கும், தன்னைப்பெற்ற தாய்க்கும் உண்மையாக நடந்து கொள்ள முடியவில்லையே என வேதனைப் படுவான்.  நீ அவன் ஒருவனோடு கட்டாயமாய் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை நடத்துவாய்.  ஆனால் அவன் மனதுக்குள்ளே சொல்ல முடியாத துக்கத்தால் மனம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும்.  உடைந்த மனதோடு தான் உன்னுடன் வாழ்க்கை நடத்துவான்.  ஒன்றை நினைவில் கொள், திரௌபதி, எந்த மனிதனுக்கும் தன் மனைவி தன்னைத் தன் பெற்றோர், சகோதரர்களிடமிருந்து தனியே பிரித்துக் கூட்டி வந்தால் அந்த மனைவியிடம் சொல்லொணா வெறுப்பு ஏற்படும்.”

அனைவரும் இதை மிகுந்த கவனத்துடன் கேட்டு வந்தனர்.  யஜரும், உபயஜரும் வியாசர் சொல்வதை எல்லாம் அவ்வப்போது ஆமோதித்ததோடு அல்லாமல், தங்களுக்குள்ளாக, “சாது, சாது” என முணுமுணுத்துக் கொண்டனர்.  தன்னுடைய கண்ணீரை அடக்க முடியாத திரௌபதி தொடர்ந்த விம்மல்களை எப்பாடுபட்டேனும் அடக்க எண்ணினாள்.  விம்மல்களை அடக்கிய வண்ணம் ஆசாரியர் வியாசர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.  வியாசர் மேலும் பேச ஆரம்பித்தார்.

“இப்போது நாம் இரண்டாம் வழியைக் குறித்து ஆராய்வோம்.  இப்படிப்பட்டதொரு பேராபத்தை நீயாக விலைக்கு வாங்கவில்லை.  அதை இங்கே அனைவரும் அறிவோம்.  இதைக் குறித்து உனக்கோ, உன் தந்தைக்கோ, உன் சகோதரனுக்கோ மாறுபட்ட எண்ணம் இருந்தால், இது சரியில்லை என்னும் வலுவான கருத்து இருந்தால், அந்த நிமிடமே அர்ஜுனனை மறுத்துவிடு.  இது தான் தைரியமான அதே சமயம் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.  ஆனால் இங்கே வேறொரு உறுதிமொழி உடைக்கப்படும்;  அது தான் உன் தந்தை கொடுத்த உறுதிமொழி. சுயம்வரத்தில் வில் வித்தைப் போட்டியில் வெல்பவனுக்குத் தன் மகளைக் கொடுப்பேன் என அனைத்து அரசர்களுக்கும் முன்னால் உன் தந்தை அளித்த வாக்குறுதியைப் பொய்யாக்கியாக வேண்டும். "


 இது அனைத்து அரசர், பேரரசர்களுக்கு நடுவே உன் தந்தை அடையும் மிகப் பெரிய அவமானமாக இருக்கும்.  உன் தந்தையின் வாழ்நாள் நோக்கம் துரோணரை வெல்வது.  அதை வெறுத்து ஒதுக்கவேண்டி இருக்கும்.  அர்ஜுனனும், மற்ற சகோதர்களுமே சகஜமான  வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகி விடுவார்கள்.  உன்னால் ஒதுக்கப்பட்டது அவர்களுக்கும் அவமானமான ஒன்றே. இனி நேர்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்வது எப்படி? அதோடு இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை எதிர்த்துப் போராட உன் தந்தையின் உதவியும் கிட்டாது.   துரியோதனன் மிகச் சுலபமாக இவர்களை எதிர்கொண்டு இம்முறை நிச்சயம் அழித்துவிடுவான்.  பின்னர் உனக்கு நடக்கப் போவது என்ன? சுயம்வரத்தின் மூலம் நீ தெய்வீகத் தன்மை வாய்ந்தவளாக இருப்பாய் தான்.  ஆனால் துராசை வசப்பட்ட மன்னர்களுக்கோ? நீ ஒரு மறுக்கப்பட்ட மணமகளாக  இருப்பதோடு அல்லாமல், வெகு சிலரே உன்னை வெல்ல ஆசைப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.  ஒருமுறை உன்னை மறுத்துவிட்டதால் மற்ற மன்னர்கள் உன்னை மீண்டும் வென்று ஏற்க மிகவும் யோசிப்பார்கள்.”


Thursday, July 24, 2014

த்ருஷ்டத்யும்னன் கோபமும், யுதிஷ்டிரன் விவேகமும்!

தன்னுடைய நிதானமான அதே சமயம் மதிப்புக் குறையாக் குரலில் யுதிஷ்டிரன் கூறினான்: “ ஆசாரியரே!  நீங்கள் என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள்! தேவையில்லாமல் நான் எந்தவிதமான அவசர முடிவையும் அநாவசியமாக எடுக்க மாட்டேன்.  இதுநாள் வரை நான் உண்மையை மட்டுமே பேசி வந்தேன்;  இனியும் உண்மையையே பேசுவேன்.  என் வாழ்நாள் முழுதும் உண்மையைப் பேசுவதை மட்டுமே என் லக்ஷியமாகவும் கொண்டிருக்கிறேன். அதை எப்பாடுபட்டாவதுக் காப்பாற்றுவேன்.  பாபமான நினைவுகள் எதுவும் என் சிந்தனையில் தோன்றுவதைக் கூட நான் அனுமதிப்பதில்லை.  ஆகவே நான் ஏற்கெனவே கூறியது ஒன்றுதான் ஒரே தீர்வாக நான் நினைக்கிறேன். பாஞ்சால இளவரசி எங்கள் ஐவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.”

“இது கொடிய பாவம்!  அதர்மம்!” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  தன் அமைதி குலையாமலேயே அதை மறுத்தான் யுதிஷ்டிரன். “ முன்னொரு காலத்தில் கௌதம ரிஷியின் மகள் ஜடிலா என்பவள் ஏழு சகோதரர்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.  அவர்கள் எழுவருமே ரிஷிகள் தான்.  அதோடு ப்ரசேதஸ சகோதரர்கள் பத்துப்பேரும் தங்கள் அனைவருக்கும் ஒரே மனைவியைக் கொண்டிருந்தனர்.  இவர்கள் அனைவருமே  நேர்மையும், தூய்மையும் உருவெடுத்தவர்கள்.  இதுவே பண்டைய பாரம்பரியம் கூறுவது. மாட்சிமை தாங்கிய மன்னர் பிரான் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டாரானால், நாங்களும் அதை விட்டு விலக மாட்டோம். “

“ஆரியர்களின் பண்டைய பாரம்பரியத்திலும் அதன் சட்டதிட்டங்களிலும் ஐந்து கணவர்களை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதை அனுமதித்திருக்கிறதா?” என த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.  யுதிஷ்டிரன் கூறியவற்றால் அவன் மிக அதிர்ச்சி அடைந்திருந்தான்.  ஆசாரியர் வியாசர் அப்போது த்ருஷ்டத்யும்னனைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பின்னர் யுதிஷ்டிரனை நோக்கித் திரும்பினார். “ குழந்தாய், நீ ஆரியர்களின் பழைய பாரம்பரிய வாழ்க்கை முறையைக் குறித்து நன்கு விளக்கினாய்.  நீ சொல்வது மிகச் சரியே.  ஆரியர்களின் பழைமையான சட்டதிட்டங்களின்படி சூழ்நிலைக்கு ஏற்ப, அது அநுமதித்தால்,  சகோதரர்கள் தங்களுக்குள் ஒரே மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. இப்போதும் சில இடங்களில் இம்முறை வழக்கத்தில் உள்ளது. மலைநாடுகளில் உள்ள ஆரியர்களில் பெரும்பாலானோருக்கு இவ்வழக்கம் இன்றும் உள்ளது. அம்மாதிரித் திருமணங்கள் வெற்றியிலும் முடிவடைகிறது. மனைவி, விவேகமும், புத்திசாலித்தனமும் நிரம்பியவளாகவும், சகோதரர்கள் தங்களுக்குள் எண்ணிப் பார்த்து முடிவெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.” வியாசர் அனைவரையும் பார்த்து முறுவலித்தார்.

“ஒரு பெண் எப்படி ஒரு சகோதரனுக்கும் மேல் மணந்து கொள்ள முடியும்? அவள் பின்னர் எப்படிப் பத்தினிப் பெண்ணாவாள்?  ஒவ்வொரு ஆரியப் பெண்மணியும், புனிதமானவளாகவும், தன்னைக் கணவனுக்கு அர்ப்பணம் செய்பவளாகவும், பக்தி பூண்டவளாகவும் இருக்க வேண்டும் அல்லவா? அப்படிப் பட்ட ஒரு பத்தினிப்பெண் கடவுளையே தன் காலடியில் கொண்டு வந்து கிடத்திவிடுவாள் என்பார்கள்!  ஐந்து சகோதரர்களைத் திருமணம் செய்து கொண்டால் என் சகோதரி எப்படிப் பத்தினியாவாள்?  அவள் பெயருக்கே சர்வ நாசம் விளையுமே!” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  துருபதன் குழப்பத்தில் என்ன சொல்வது, என்ன செய்வது என்றறியாமல் தடுமாறிக்கொண்டே தன் மகனைப்பார்த்தான்.

“நீ சொல்வதும் சரியே த்ருஷ்டத்யும்னா!  ஒரு பக்திபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனைவி தான் பத்தினியாவாள்.  வாழ்க்கையை நேர்மையாகவும், கண்ணியமாகவும், அறவழியிலும் வாழவேண்டுமெனில் இப்படிப்பட்ட பத்தினி ஒருத்தியின் மன வலிமையும் அவள் கட்டுப்பாடுமே குடும்பத்தின் ஆணிவேராக அமையும். “இதைச் சொன்ன வண்ணம் வியாசர் தன் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கும் பாவனையில் சற்று நேரம் இருந்தார்.  “அப்படி எனில், நீங்கள் ஏன் ஒரு அதர்மமான காரியத்தைச் செய்யச் சொல்லி என் சகோதரியைக் கட்டாயப்படுத்துகிறீர்கள்?  ஆசாரியரே, யுதிஷ்டிரர் சொல்வதை நீங்கள் ஏன் ஆமோதிக்கிறீர்கள்?” என த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.

“எது அதர்மம்? நாம் கண்டு பிடிக்கலாம் த்ருஷ்டத்யும்னா!” என்றார் வியாசர்.  ‘நம் தெய்வீகமான ரிஷிகள், முனிவர்கள் அனைவருமே  குடும்பம் என்பது ஓர் ஆதர்ச மனைவியைச் சுற்றியே இருக்க வேண்டும் என வகைப்படுத்தி இருக்கின்றனர்.  அவள் கொஞ்சம் நிலை குலைந்தாலும் குடும்பமே நிலை குலையும்.  குழந்தைகள் ஒழுக்கமும், நேர்மையும் இல்லாமல் வளர்வார்கள்.  குழப்பம் நீடித்து இருக்கும்.  மிருகங்களை விட மோசமாக ஆண்களும், பெண்களும் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள்.   அடங்காக் காமத்தில் மூழ்கி அதற்கு அடிமையாகி விடுவார்கள்.  குலதர்மத்துக்கு எவ்விதமான மரியாதையும் கொடுக்கவில்லையெனில் பேரழிவு ஏற்படும். “

“யுதிஷ்டிரரின் ஆலோசனையாலும் அத்தகைய பேரழிவு ஏற்படலாம் இல்லையா ஆசாரியரே!”  த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.  வியாசர் சற்று நேரம் எதுவும் பேசவில்லை.  அனைவரும் வியாசர் பேசக் காத்திருந்தனர்.

 “இளவரசனே, காமம் என்பது எல்லா நற்குணங்களையும் விழுங்கி விடும் ஒரு மாபெரும் நெருப்பு! அது ஒவ்வொரு நம்முடைய உந்நதமான ஒவ்வொரு தூண்டுதலையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிச் சாம்பலாய்ப் பொசுக்கி விடும். மிருகங்கள் கடவுள் கொடுத்த உள்ளுணர்வால் இவற்றிலிருந்து காப்பாற்றப்பட்டுத் தங்களுக்குள் ஒரு நெறிமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இனப்பெருக்க  காலம் என்பது அவைகளுக்குத் தனியாக இருக்கும்.   ஆனால் மனிதர்களுக்கோ, ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அப்படி ஒரு நெறிமுறையோ, உள்ளுணர்வோ கிடையாது.  மனிதர்களுக்குத் திருமண பந்தம் என்னும் ரசவாதத்தின் மூலமே இவை பூர்த்தி அடைகிறது. முற்காலத்து ரிஷி, முனிவர்கள் என்ன சொல்லிக் கொடுத்தனர் என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். புனிதமான அக்னி சாட்சியாக  சப்தபதி என்னும் சடங்கில் கணவனும், மனைவியும் சேர்ந்து எடுத்து வைக்கும் ஏழு அடிகள் அவர்கள் இருவரையும் ஒருவராக்குகிறது.  ஒன்றாக இணைக்கிறது.  அவர்கள் இருவரும் மற்றொருவரின் எலும்பாக, ரத்தமாக, சதையாக, இருப்பதோடு தங்களுக்காக மட்டுமில்லாமல் மனைவி தன் கணவனுக்காகவும், கணவன் தன் மனைவிக்காகவும் வாழ ஆரம்பிக்கிறான்.  அதே சமயம் மற்றவர்களுக்காக அவர்கள் இருவரும் இணைந்தும் செயலாற்றுகின்றனர். குடும்பம் என்பது மிக உன்னதமான ஒன்று. “  வியாசர் சற்றே நிறுத்தினார்.

“எல்லாம் சரி ஆசாரியரே, ஆனால் ஒரே ஒரு பெண் ஐந்து கணவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இத்தகைய ரசவாதத்தை எவ்வாறு நிகழ்த்த முடியும்?” துருபதன் கேட்டான்.

“கொஞ்சம் பொறுமை தேவை, மன்னா!  மாட்சிமை பொருந்திய மன்னா!  கேள்! ஆணோ, பெண்ணோ குறைபாடு அற்றவர்கள் அல்ல.  பூரணமானவர்கள் அல்ல. அவரவர் பலவீனங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வரைமுறையற்ற காமத்துக்கு இணங்குவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.  ஆகவே நம் முன்னோர்களான ரிஷிகள் இதற்காகவே ஆபத் தர்மத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.  எதிர்பாரா சமயங்களில் ஏற்படும் சில சம்பவங்களால்  முன்னர் கண்டிராத வகையில் இல்லாத திருமண பந்தங்களை, முறையற்ற திருமணங்களை ஒழுங்கு செய்து பரிசுத்தப்படுத்தும் வழி தான் ஆபத் தர்மம்.”

“இது உண்மைதான் சக்கரவர்த்தி!” என்றார் யஜ முனி.

“தன் கணவன் இறந்து போனதும் அந்த மனைவிக்கு அவனோடு சதியாக மனமகிழ்வோடு உடன்கட்டை ஏற மனம் இல்லை எனில் அவளுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இருக்கலாம்.  ஆகவே நம் முன்னோர்களான ரிஷிகள், தெய்வீக முனிவர்கள் அனைவரும் இதற்காக அவள் மீண்டும் மற்றொரு திருமணம் செய்து கொண்டு அந்தக் கணவனுடன் அவனுக்கு உகந்தவளாக, அவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவளாக, மீண்டும் ஒரு சதியாக இருக்கலாம் என வகுத்திருக்கின்றனர். “  மீண்டும் கொஞ்சம் நிறுத்தினார் வியாசர்.

“உனக்கு நன்றாகத் தெரியும், மன்னா!  நியோகம் நம் ஆரியரிடையே மிகவும் பரந்து பட்ட ஒரு வழக்கம் என்பதை நீ நன்கறிந்திருப்பாய்.  அதை தர்மம் அங்கீகரித்துள்ளது.  இந்தச் சடங்கினால் குழந்தையே பெற்றுக்கொள்ளாத ஒரு விதவைப் பெண்மணி  தன் கணவனின் சகோதரன் அல்லது நன்கு கற்றறிந்த ஒரு பிராமணன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.  இது கீழ்ப்பட்ட வகைக் காமத்தைச் சேர்ந்தது அல்ல;  ஆனால் இது ஒரு மதரீதியான சடங்கு ஆகும்.  குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே அவள் இன்னொருவருடன் கூட அனுமதிக்கப்படுவாள்.”

“ஆமாம், ஆனால் ஒரு சமயத்தில் ஒரு கணவனுக்கு மேல் இருக்காது!  இல்லையா?” த்ருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான்.  “பொறு!” எனத் தன் விரலை நீட்டி எச்சரித்தார் வியாசர்.  “அதே போல் ஒரு மாபெரும் பேரழிவு நடைபெறுவதைத் தடுக்க வேண்டுமானால் ஒரு பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளனனின் சகோதரர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுவும் நம் முன்னோர்களான தெய்வீக ரிஷிகள், முனிவர்கள் சொன்னதே!  ஆனால் அந்த மனைவி அனைத்துக் கணவர்களுக்கும் தனித்தனியே உண்மையானவளாக, அனைவரையும் சமமாக நடத்துபவளாக, எந்தவிதப் பாசாங்கும் இல்லாதவளாக, முழுமையாக நம்பும்படியானவளாக, ஒளிவுமறைவற்றவளாக இருத்தல் வேண்டும். “

“நாம் உண்மையாகவே இப்போது பேரழிவு ஒன்றைச் சந்திக்க இருக்கின்றோம்.” என்றான் துருபதன்.



Tuesday, July 22, 2014

தர்மத்துக்கு ஆபத்து!

“எல்லாம் என்னால் வந்தது ஆசாரியரே!  என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரிகளால் வேறேன்ன நடக்கும்?” குந்தி தன்னைத் தானே நொந்து கொண்டாள்.  அவள் குரல் தழுதழுத்தது.  “அர்ஜுனன் திரௌபதியை நாங்கள் தங்கி இருந்த குயவனின் வீட்டுக்கு அழைத்து வந்தான்.  உற்சாக மிகுதியில் வெளியில் இருந்தே அவன், “அம்மா, நான் ஒரு அதிசய பிக்ஷை வாங்கி வந்திருக்கிறேன். மிகவும் விலை மதிப்பில்லாத பிக்ஷை அது!” என்றான். முட்டாள் பெண் நான்!  என்னைப் போன்ற முட்டாளும் உண்டோ?  அவன் வழக்கமாய்க் கொண்டு வரும் பிக்ஷை தான் அது என நினைத்தேன். பெண் என நினைக்கவில்லை.  ஆகவே நானும் உள்ளிருந்து கொண்டே, “என் குழந்தாய், நீ கொண்டு வந்த பிக்ஷை எத்தனை உயர்வானதாக இருந்தாலும் அதை உன் மற்ற சகோதரர்களுடன் சமமாகப் பங்கிட்டுக் கொள்வாய்!” என்று சொல்லிவிட்டேன். அதன் பின்னர் தான் அவன் கொண்டு வந்த பிக்ஷை ஒரு பெண் என்றும், அவனுக்கு மனைவியாகக் கொண்டு வந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டேன். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஏனெனில் என் மகன்கள் ஐவரும் என்னுடைய வார்த்தையை, என் உத்தரவை மீற மாட்டார்கள்.  நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே மறு கேள்வி கேட்காமல் செய்வார்கள்.  இதை அவர்கள் பல வருடங்களாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.  அவர்களின் வாழ்நாள் முழுதும் இதைக்கடைப்பிடிப்பதாக உறுதிமொழியும் எடுத்திருக்கின்றனர்.” என்று சொல்லிக் கொண்டே தன் கண்ணீரைத் துடைத்தாள் குந்தி.

“இப்போது என்னை இந்தச் சூழ்நிலையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள அனுமதியுங்கள்.” என்று மென்மையாக வியாசர் கூறினார்.  மேற்கொண்டு அவர், “அர்ஜுனன், சுயம்வரத்தில் திரௌபதியை வென்றான் அல்லவா? திரௌபதி ஆர்யவர்த்தத்தின் மிகச் சிறந்த வில்லாளியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள்.  அவள் ஆசை பூர்த்தியாகிவிட்டது.  மிகச் சிறந்த வில்லாளி கிடைத்துவிட்டான்.  குந்தியின் வார்த்தைகளைத் தவிர்த்தால் வேறு ஏதேனும் தொந்திரவுகள் இருக்கின்றனவா அர்ஜுனா?” வியாசர் அர்ஜுனனைக் கேட்டார்.

அர்ஜுனன், “ மதிப்புக்குரிய ஆசாரியரே, நான் இந்தப் பெண்ணை வென்று அடைந்திருக்கிறேன்.  அது சரிதான்.  சந்தேகமே இல்லை.  ஆனால், ஆசாரியரே, என் மூத்தவர் ஆன யுதிஷ்டிரருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.  பீமனோ ஒரு ராக்ஷசியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அதைத் திருமணம் எனச் சொல்ல முடியுமா?  என் மூத்தவர்கள் இருவரும் இப்படி இருக்கையில் நான் மட்டும் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும்?  இது நித்திய கர்மாநுஷ்டானங்களைச் செய்கையில் மனைவி இல்லாமல் அவர்கள் செய்வது சரியல்லவே!  அது மட்டுமல்ல,  ஆரியர்களின் எல்லையற்ற   சட்டதிட்டங்களுக்கும் குலதர்மத்துக்கும் விரோதமான ஒன்று.  இதை நான் எவ்விதம் நிறைவேற்ற முடியும்? ஆகவே நான் மூத்தவர்கள் இருவரையும் திரௌபதியை ஏற்கச் சொல்லி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றான் மிகவும் வருத்தத்தோடு!

“ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் அர்ஜுனா!  யுதிஷ்டிரா, நீ ஏன் திரௌபதியை மணக்கக்கூடாது?” யுதிஷ்டிரன் பக்கம் திரும்பிக் கேட்டார் ஆசாரியர்.  “ஆசாரியரே, அவளை நான் வெல்லவில்லை.  சுயம்வரத்தில் அர்ஜுனன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவளைத் தன் மணமகளாக அடைந்திருக்கிறான்.  திரௌபதியும் அவனைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.  என் இளைய சகோதரனிடமிருந்து அவளை நான் திருடிக் கொள்ள முடியுமா? அதுவும் தர்ம விரோதமானதே!” என்றான் யுதிஷ்டிரன்.  “பீமன் என்ன சொல்கிறான்?” என்று கேட்டுக் கொண்டே பீமனைப் பார்த்து வியாசர் சிரித்தார்.  “பீமனும் அவளை ஏற்க மறுக்கிறான்.” என்று சொன்னான் அர்ஜுனன்.

“ஆமாம், ஆமாம், அவனுக்கு ஏற்கெனவே திருமணம் தான் ஆகிவிட்டதே!” என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொன்னார் வியாசர்.  அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை சற்றே தளர்ந்தது. “ஓ, ஆசாரியரே,  அவன் திருமணம் செய்திருப்பது ஒரு ராக்ஷசியை.  அவன் ஒரு ஆர்ய குலத்து மனைவியை யுதிஷ்டிரன் திருமணம் செய்து கொள்ளும் வரை கொண்டு வர முடியாது. “ என்று மிகவும் சோகத்தோடு அர்ஜுனன் கூறினான். “அவன் சொல்வது சரியே!  ஒரு ராக்ஷசி சகல விதத்திலும் மாறுபட்டவளே, வித்தியாசமானவளே!  இல்லையா பீமா?” என்று  தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியவண்ணம் வியாசர் பீமனைப் பார்த்துக் கேட்டார்.  ஆனால் பீமனோ சத்தமாகச் சிரித்தான்.  அவன் சிரிப்பு அந்தச் சந்தர்ப்பத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை.  மற்றவர்கள் முகம் சுளித்தனர்.

“ஆம், நான் அந்த ராக்ஷசியைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டி இருந்தது.  அந்த நேரம் ஏதேனும் செய்தாகவேண்டும் என அம்மாவும் கட்டளையிட்டு விட்டாள்.  இது சரியான தர்மம் அல்ல;  ஆனாலும் அந்த நேரத்தின் அவசரத்தை முன்னிட்டுச் செய்தாகவேண்டிய ஆபத் தர்மம் ஆனது அது.  ஒரு பேரிடரில் இருந்து எங்கள் அனைவரையும் காத்துக்கொள்ள வேண்டிச் செய்தது.  நான் மட்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் ராக்ஷசர்கள் அனைவருமாகச் சேர்ந்து எங்கள் அறுவரையும் கொன்று தின்றிருப்பார்கள்.  அது தான் நிச்சயம் நடந்திருக்கும். “சிரிப்பை அடக்கிய வண்ணம் பீமன் மேலே பேசினான். “ஆறு உயிர்களைக் காக்க வேண்டி நான் செய்த பக்தி வேள்வி அது எனலாம்.”என்றபடியே வியாசரைப் பார்த்துக் கண்ணடித்தான் பீமன்.  “ஆனால் அதற்காக நான் ஹிடும்பியைக் காதலிக்கவில்லை;  அவள் பால் ஈர்க்கப்படவில்லை எனச் சொல்ல முடியாது!” என்று முடித்தான்.

சத்தமாய்ச் சிரித்த வியாசர், “என்னிடம் அப்படி எல்லாம் கூறினாலும் நான் நம்ப மாட்டேன். அதை நினைவில் வைத்துக்கொள், குழந்தாய்! அன்றிரவு நீ அவள் படுக்கையில் திருட்டுத்தனமாகப் புகுந்து செய்த வேலையை நான் மறந்துவிடவில்லை.  நடு இரவில் உன் வேலைத் தனத்தைக் காட்டினாயே!” என்று கூறியவண்ணம் ஆள்காட்டி விரலை நீட்டி அவனைப் பயமுறுத்துவது போல் விளையாட்டாக மிரட்டினார்.  இந்த நகைப்பை உண்டாக்கிய பேச்சுக்கு அனைவருமே சிரித்தனர்.  சூழ்நிலையின் இறுக்கம் முழுதும் குறைய ஆரம்பித்தது.  வியாசர் ஒரு அதிசயமான இணக்கமான சூழ்நிலையை அங்கே தன் பேச்சால் உருவாக்கிவிட்டார்.  அநீதி நடந்துவிட்டது என ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலை மெல்ல மெல்ல மாறியது.  அனைவரும் சகஜபாவத்துக்கு வர ஆரம்பித்தனர்.


“இப்போது சொல், யுதிஷ்டிரா, இதற்கு நீ சொல்லும் தீர்வு தான் என்ன? நீ மிகவும் புத்திசாலி. விவேகம் உள்ளவன்.  யோசித்துச் சொல்!” என்றார் வியாசர்.

“என் தாயின் வார்த்தைகள், அவை எந்த நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும், அவள் உண்மை தெரியாமல் பேசி இருந்தாலும், அது ஒன்றே ஒரே தீர்வு!  நாங்கள் ஐவருமே திரௌபதியை மணந்து கொள்கிறோம்.”  என்றான் யுதிஷ்டிரன்.

“மஹாதேவா, மஹாதேவா!” குறுக்கே புகுந்தான் துருபதன்.  நீண்டதொரு பெருமூச்சு விட்டுக் கொண்டு, “ஐந்து ஆண்கள் என் ஒரே பெண்ணைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.  கொடூரம்!” என்றான்.  த்ருஷ்டத்யும்னனும் கோபத்தோடு, “ என் சகோதரி ஐந்து ஆண்களை மணந்து கொள்வதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.” என்று கத்தினான்.  அப்போது தன் மாறாப் புன்னகையோடு கிருஷ்ணன் குறுக்கிட்டான்.

“மதிப்புக்குரிய ஆசாரியரே, இது மிகவும் கடினமான விஷயம்.  இது பாஞ்சால அரசன் துருபதனின் கௌரவத்தை மட்டுமில்லாமல் திரௌபதியின் எதிர்காலத்தையும் குறித்தது.   ஐந்து சகோதரர்களின் எதிர்காலமும் இதில் அடங்கியுள்ளது.  நம்மெதிரே ஒரு பேராபத்து உருவாகியுள்ளது.  எல்லாப் பக்கங்களில் அந்த ஆபத்து சூழ்ந்துள்ளது.  யுதிஷ்டிரன் சொன்னபடி மட்டும் நடந்து விட்டால் அது பரதனின் வம்சத்துக்கே மாபெரும்  களங்கமாக அமைந்துவிடும்.  பாண்டவர்களின் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவு ஏற்படும்.   ஒரு வேளை திரௌபதி யுதிஷ்டிரனின் யோசனையை ஏற்க மறுத்தாளானால், ஆர்யவர்த்தத்திலேயே ஒரு பேரழிவு ஏற்படும்.  அந்தப் பேரழிவு ஆர்யவர்த்தத்தையே மூழ்கடித்துவிடும்.  மரியாதைக்குரிய அரசர் துருபதன் இவ்வளவு வருடங்களாகப் பாடுபட்டதற்கும், நான்   இந்த சுயம்வரம் நடைபெற வேண்டிச் செய்த அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.  எப்படிப் பார்த்தாலும் தர்மம் ஆபத்தில் இருக்கிறது.  எந்த வழியில் சென்றாலும் பிரச்னை தான்.”  என்றான்.

அங்கே அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த திரௌபதி கண்ணீர் உகுத்தாள்.  அவள் கண்ணீர் நிற்கவே இல்லை. இப்போது கிருஷ்ணன் பேசினதைக் கேட்டதும் விம்மி அழவே ஆரம்பித்தாள். அந்நிலையிலும் தனக்குச் சொல்லப்பட்டதை நினைத்து அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.  “ஐந்து கணவர்கள்!  எனக்கு!  ஓ, மஹாதேவா! ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறாய்?” என்று இறைஞ்சினாள்.  உடனே தன் முகத்தை மூடியவண்ணம் வேகமாய் அழவும் ஆரம்பித்தாள்.  “யுதிஷ்டிரா, நீ என்ன சொல்கிறாய்?” ஆசாரியர் யுதிஷ்டிரனைப் பார்த்துக் கேட்டார்.



Monday, July 21, 2014

குதூகலமான மக்களும், கொந்தளிக்கும் மணமகளும்!

காம்பில்ய நகரமே கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது.  எங்கெங்கும் மக்கள் வெள்ளம்.  உற்சாகம், ஆடல், பாடல், கேளிக்கைகள்! பல்வேறு விதமான போட்டிகள்.  நடனமணிகளின் நாட்டியக் கலை நிகழ்ச்சிகள்! பாடகர்களின் சிறந்த பாடல் போட்டிகள்!  இன்னிசை விருந்து! இவற்றோடு ஆங்காங்கே பெரிய  பெரிய அடுப்புக்களில் மகத்தான விருந்து சமைக்கப்பட்டுக் கூடி இருக்கும் மக்களுக்கும், வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும் வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் விருந்து படைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திரௌபதியின் சுயம்வரம் மிகவும் வெற்றிகரமாக முடிந்ததோடல்லாமல், பரத வம்சத்தினரின் ஒரு பிரிவான குருவம்சத்துச் சக்கரவர்த்தியாக இருந்த பாண்டுவின் மூன்றாம் மகன், இளவரசன் பாண்டவ குமாரன், நிகரற்ற வில் வித்தை வீரன் அர்ஜுனன் போட்டியில் ஜெயித்து திரௌபதியை வென்றது குறித்து அனைவருக்கும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.

 அரசர்கள், பேரரசர்கள் வந்து  இறங்கி இருந்த கூடாரங்களில் பலருக்கும் இந்தப் போட்டியின் முடிவினால் மனம் உடைந்துவிட்டது.  சிலருக்கு சந்தோஷமாகவும் இருந்தது. பெரும்பாலோருக்கு மனதில் வருத்தமே! அதிலும் பாண்டவர்கள் உயிருடன் இருப்பது குறித்துப் பெருவாரியான அரசர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சிலருக்கு அதனால் வருத்தமே!  தங்களுக்குள் ஏற்பட்ட கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தனர்.  இப்போது பாண்டவர்களுடன் ஏற்படப் போகும் இந்தத் திருமண பந்தத்தால் ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் கூட்டணி எப்படி, எந்தத் திசையில் செல்லும் எனச் சிலர் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர்.  யார் எவருக்கு எப்போது ஆதரவளிப்பார் எனத் தங்களுக்குள் கணித்துக்கொண்டனர்.

நகருக்கு வெளியே இப்படிக் கொண்டாட்டங்களும், குதூகலங்களும், ஆடல், பாடல்கள் கேளிக்கைகளுமாகக் காட்சி அளிக்க, நகரின் உள்ளே மையமான பகுதியில் அமைந்திருந்த துருபதனின் அரண்மனையில் மட்டும் மௌனமே கோலோச்சியது.  அரண்மனைக்குள் நுழைந்து என்ன காரணம் என்று பார்ப்போமா?  எங்கே ஒருத்தரையும் காணவில்லையே!  அனைவரும் மௌனமாகவே பேசிக் கொள்கின்றனரே!  அதோ, அந்த அறைதான் துருபதனின் தனி ராஜாங்க அறை.  இங்கே தானே துருபதன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவான்!  உள்ளே எட்டிப் பார்ப்போம்!  ஆஹா!  இங்கே சிலர் அமர்ந்திருக்கின்றனர்.  அதோ துருபதனின் சிம்மாதனம்.  அதில் அமர்ந்திருப்பதும் அவனே!  ஆனால் இது என்ன ?  அவன் முகத்தில் மகிழ்வுக்குப் பதில் வருத்தம்!  மனச்சோர்வடைந்திருப்பவன் போல் காணப்படுகிறானே!

தன் கைகளால் தலையைத் தாங்கிய வண்ணம் ஏமாற்றமும், விரக்தியும், சோர்வும் கண்களில் தெரிய செய்வதறியாது ஏன் அமர்ந்திருக்கிறான்?  என்ன காரணம்! அவனருகே முகத்தைச் சுளித்த வண்ணம்  கடுகடுப்போடு காணப்படுவது த்ருஷ்டத்யும்னன்.  சத்யாஜித்தும் ஷிகண்டினும் கண்களில் ஆர்வம் மீதூற த்ருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் நின்று கொண்டு அனைவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதோ!  மணப்பெண் திரௌபதி!  என்ன இது? புது மணமகளுக்குரிய சந்தோஷத்தையே அவள் முகத்தில் பார்க்க முடியவில்லையே!  மாபெரும் துயரில் மூழ்கிப் பரிதாபமாகவன்றோ காட்சி அளிக்கிறாள்!  அவளருகே அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணியை எங்கே பார்த்திருக்கிறோம்!  ஆம் அது குந்தி தேவி தான்.  சாட்சாத் குந்தியே தான்.  இது ஏன் திரௌபதியைப் பரிதாபம் பொங்கப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்? அவளருகே அமர்ந்திருப்பது துருபதனின் அரண்மனையின் ராஜ வம்சப் பெண்மணியர் போலும்!

அனைவருமாகக் கூடி என்ன செய்யப் போகின்றனர்?  ஏன் இங்கே கூடி இருக்கின்றனர்?  இன்னும் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆவலுடன் வந்திருக்கின்றனரே!  ஆம், அதோ கிருஷ்ண வாசுதேவன்!  மாறாப் புன்னகையுடன் எது நடந்தாலும் கலங்காத திட நெஞ்சுடன் தன் சுயக் கட்டுப்பாட்டையும், நிதானத்தையும் இழக்காமல் நடைபெறப் போகும் ஆலோசனையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாக அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அடுத்து வரிசைப்படி அமர்ந்திருப்பவர்கள் பாண்டவர் ஐவரும். யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன்.


யுதிஷ்டிரன் தன் கண்ணியத்தை விடாமல்  சாந்தம் கண்களில் தெரிய, அமைதி பொங்கும் முகத்துடன் அமர்ந்திருந்தான்.  பீமன், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி தன் விளையாட்டுத்தனத்தை விட்டுவிட்டு அமர்ந்திருக்க நினைத்தாலும் அவன் இயல்பு அவனை அவ்வாறிருக்க விடவில்லை.  உள்ளூர இதை ரசித்தானோ என்னும்படியான முகபாவம்! அர்ஜுனன் ஆவல், ஏக்கம், ஆர்வம் அனைத்தையும் தன் கண்களில் காட்டியவண்ணம் வியாகூலமான முகத்துடன் அமர்ந்திருந்தான்.  நகுலனுக்கு இந்தக் கூட்டமே எரிச்சலைக் கொடுத்தது போலும்.  சஹாதேவனோ தனக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதவன் போல விண்ணிலிருந்து ஏதேனும் அசரீரி வந்து தங்களுக்கு ஆலோசனை கொடுக்குமோ என்னும் வண்ணம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

துருபதனுக்கு எதிரே ஒரு உயரமான பீடத்தின் மேல் ஓர் மரப்பலகையில்  மான் தோலை விரித்து அதில் அமர்ந்திருந்தார் குரு வேத வியாசர் அவர்கள். அவரருகே வலப்பக்கமாக யஜர் மற்றும் உபயஜர் ஆகியோரும் காணப்பட்டனர்.  வேத வியாசரின் சீடர்களான தௌம்யர், ஜைமினி ஆகியோரும் வியாசருக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு நடுவே குரு சாந்தீபனியும் காணப்பட்டார்.  காம்பில்யத்துக்கு அருகிலிருந்த ஒரு முக்கியமான புண்ணிய தீர்த்தத்தில் வேத வியாசர் தன் குருகுலத்தை அப்போது ஸ்தாபித்து இருந்தார்.  அவர் காம்பில்யத்தின் சுயம்வரத்தின் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டியே அங்கே காத்திருந்தார்.


போட்டியில் அர்ஜுனன் வென்றான் என்பது தெரிந்ததுமே அவர் காம்பில்யம் செல்லத் தயாரானார்.  அதற்கேற்றாற்போல் துருபதனும் ஆசாரியர் அங்கு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டு வியாசரைக் காம்பில்யத்துக்கு வருவதற்கு அழைப்பு அனுப்பி வைத்தான்.  அன்று காலை தான் வியாசர் தன் சீடர்களான தௌம்யரோடும், ஜைமினியோடும் அங்கே வருகை புரிந்திருந்தார்.  துருபதன் தன் பரிவாரங்களோடு அவரை எதிர்கொண்டு அழைத்து வந்தான்.  நதிக்கரையிலிருந்து  அரண்மனைக்கு வரும்வரை வியாசர் நடந்தே ஊர்வலமாக வந்தார்.  மக்கள் கூட்டம் வழியெங்கும் ஆசாரியரை வணங்கவும், ஆசிகளைப் பெறவும் காத்திருந்தது.  மக்கள் கூட்டத்துக்கு அவரவருக்குத் தேவையான ஆசிகளை வழங்கியும், மக்களுக்கு தரிசனம் கொடுத்தும் வியாசர் அரண்மனையை அடைந்தார்.

வியாசர் வந்ததுமே  அன்று நடைபெறவிருக்கும் குடும்பத்தினரின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளைத் தரவேண்டும் என மன்னனால் கேட்டுக் கொள்ளப்பட்டார். மிகவும் அந்தரங்கமான கூட்டம் என்றும் பிரச்னை சிந்தித்துப்பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமான, எவரும் கேள்விப் படாத ஒன்று எனவும் சொல்லப்பட்டது.  அரச குடும்பத்தினரால் திரௌபதியின் கல்யாணக் கோலாகலங்களில் உற்சாகமாய்க் கலந்து கொள்ள முடியாமல் இந்தப் பிரச்னை தடுப்பதாயும், இப்போதைக்குப் பொதுமக்களுக்கு இது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்றும் முடிவு எடுத்த பின்னரே மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.  அனைவரும் மன்னன் துருபதனின் ராஜாங்க அறைக்குள் சென்று அமர்ந்ததும் கதவுகள், ஜன்னல்கள் கூட நன்கு அழுத்திச்  சார்த்தப்பட்டன.  வெளியே மந்திரி உத்போதனரே காவல் காத்தார்.  எவரும் அங்கே பேசப் போவதை ஒட்டுக்கேட்டுவிடக் கூடாது என்பதால் இந்த மாபெரும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

அனைவரும் அமர்ந்ததும் வியாசர் பேச ஆரம்பித்தார். “மன்னா! அனைவருமே மிகக் கவலையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்திருக்கிறீர்கள்!  என்ன விஷயம்? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” என்று வியாசரே ஆரம்பித்தும் வைத்தார்.  வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் கடைசிப் போராட்டமாகத் தோன்றியது அவருக்கு.  சூழ்நிலையின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட அவர் வெளிப்படையாகப் பேசும்படி தன் சிரிப்பினால் அழைப்பு விடுத்தார்.  

“சுயம்வரம் தான் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதே மன்னா!  உன் வாழ்நாளின் மாபெரும் சாதனை இது! உனக்கு மட்டுமில்லை;  கிருஷ்ண வாசுதேவனுக்கும் இது மாபெரும் வெற்றி!  சாதனை!  “என்ற வண்ணம் கிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்த வியாசர், “காம்பில்யமே இன்று கோலாகலத்தில் ஆழ்ந்துள்ளது.  அவ்வளவு ஏன்?  ஆர்யவர்த்தம் முழுமையுமே கோலாகலத்தோடு இருக்கிறது.  அனைவருமே இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.  இப்போது பார்த்து நீங்கள் அனைவரும் முகவாட்டத்துடன், உலகமே இடிந்து விழுந்துவிட்டாற்போல் இருக்க வேண்டிய காரணம் என்ன?”  என்று கேட்டார் வியாசர்!

துருபதன் தன் கரங்களைத் தலையிலிருந்து எடுத்தான். வியாசரைப் பார்த்தான். பின்னர் கிருஷ்ண வாசுதேவனைக் கடுமையாகப் பார்த்துக் கொண்டே, “நான் இந்த சுயம்வரத்தையே நடத்தி இருக்கக் கூடாது.  என் வாழ்நாளின் மிகப் பெரிய தோல்வியும் இது தான்;  சோகமும் இது தான்!” என்றான் வெறுப்போடு. “என்னதான் காரணம் என்று சொல், துருபதா!” என மீண்டும் கேட்டார் வியாசர்.


“என்ன காரணமா?  என்னவென்று சொல்வது, ஆசாரியரே!  இந்தப் பாண்டு புத்திரர்கள்  ஐவரும் என் மகள் கிருஷ்ணையை மணம் செய்துகொள்ளப் போகிறார்களாம்.  இது எங்கும் கேட்டிருக்கிறீர்களா?  ஒரே ஒரு பெண் ஐந்து ஆண்களை மணந்து கொள்வது என்பது?  எங்கேனும் உண்டா இப்படி ஒரு கொடுமை? இதற்கு என்ன சொல்வது?”   உள்ளார்ந்த சீற்றத்துடனும், அதனால் விளைந்த கண்ணீரால் தழுதழுக்கும் குரலுடனும் கூறினான் துருபதன்.   “என்ன?  ஆனால் எப்படி இது ஆரம்பம் ஆயிற்று?  யார் இப்படிக்கூறினார்கள்?” வியாசர் பிரச்னையின் ஆணிவேரைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.



Saturday, July 19, 2014

திரௌபதி மாலையிட்டாள்!

அர்ஜுனனின் நடவடிக்கையால் கவரப்பட்ட அந்த சபையின் அனைத்து அரசர்கள், இளவரசர்கள் அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அர்ஜுனன் அங்கே நின்று கொண்டிருந்த திரௌபதிக்கும், த்ருஷ்டத்யும்னனுக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்தான். குரு சாந்தீபனியைப் பார்த்துத் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான்.  சாந்தீபனியும், “ஜெய விஜயீ பவ!” என அவனை ஆசீர்வதித்தார்.  சுறுசுறுப்பைக் காட்டிய வண்ணம் நடந்தவன் செயற்கைக் குளத்தருகே சென்றதும் ஒரே பார்வையில் தான் தாக்க வேண்டிய குறியின் தூரத்தைக் கணித்துக் கொண்டான். அதன் பிரதிபலிப்புக் குளத்தில் விழுந்திருக்கும் கோணத்தையும் பார்த்துக் கொண்டான். மின்னலைப் போன்ற வேகத்துடன் தன் இடக்கையால் வில்லின் நடுத்தண்டைச் சரியான இடத்தில் பிடித்தான்.  அர்ஜுனன் இடக்கைப் பழக்கம் உள்ளவனாக இருப்பானோ என அனைவரும் நினைத்தனர். அவன் அந்த வில்லை எடுத்த விதமே மிக அழகாகவும் நளினமாகவும் இருந்தது. அர்ஜுனனுக்கு உள்ளூர சந்தோஷம்.  இத்தனை நாட்கள் கழித்துத் தன் அருமை வில்லாயுதத்தை, (அது யாருடையதானால் என்ன) தொட ஒரு சந்தர்ப்பம் கிட்டியதில் மிகவும் மகிழ்ந்தான்.

கீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்த நாணை எடுத்து வில்லின் மற்றொரு நுனியில் பொருத்தி நாணேற்றினான் அர்ஜுனன்.  அவ்வளவு தான் தெரியும் அவனுக்கு.  இனி அவனுக்கு எவரும் லக்ஷியமில்லை.  எதுவும் பிரச்னை இல்லை.  அவன்;  அந்த வில்;  அதில் பொருத்திய அம்பு;  அவன் பார்க்க வேண்டிய குறி!  இதைத் தவிர வேறெதுவும் அவன் சிந்தனையில் இல்லை. அவனுக்கு  மிகவும் பிடித்த அருமையான ஆயுதம் அவன் கைகளில்.  அவன் ஊனக் கண்கள் பார்ப்பதை விடக் கூர்மையாக அவன் மனக் கண்களில் அவன் தாக்கி வீழ்த்த வேண்டிய குறி மட்டுமே தெரிந்தது.  அவன் ஒரே முனைப்போடு இருந்தான்.  மூச்சு விடக் கூட மறந்து சபையே அமைதியில் ஆழ்ந்தது. திரௌபதியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  இந்த இளம் துறவியை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.  அவன் கண்ணியத்தோடு நடந்து கொண்ட முறையும், அவன் தன்னம்பிக்கையும்  அவன் குளத்தருகே வந்தபோதே அவளுக்குப் புலப்பட்டு விட்டது.  அவன் கண்கள் அவளைக் காந்தம் போல் ஈர்த்தன.  அந்தக் கண்களில் தெரிந்த ஒளியும் அவளைக் கவர்ந்தது. அவளும் மூச்சு விடக் கூட மறந்தவளாய் அர்ஜுனன் அடுத்துச் செய்யப் போவதற்குக் காத்திருந்தாள்.  அதற்கு ஏன் இத்தனை நேரம் ஆகிறது என்றே அவளுக்குத் தோன்றியது.

அர்ஜுனன் குளத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான்.  அதில் தெரிந்த பிரதிபிம்பத்தை ஒரு முறை பார்த்தான். விரைப்பான வில்லின் நாணைத் தன் இடது காதின் ஓரம் வரை இழுத்தான்.  கண்களை மூடி குரு துரோணாசாரியாரையும், கிருஷ்ண வாசுதேவனையும் வணங்கிக் கொண்டான். அவ்வளவு தான் அவன் அறிவான்.  அவன் கைகள் அம்பை விடுவித்தன. சபையில் அனைவரும் கண்கொட்டாமல் பார்த்திருக்க, அம்பு அங்கே மேலுள்ள கம்பத்தில் வளையத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணைச் சரியாகப் போய்த் தாக்கியது.  மீன் அந்த வளையத்திலிருந்து விடுபட்டுக் குளத்திற்குள் “தொப்” என்னும் சப்தத்துடன் விழுந்தது.  சபையில் அனைவருக்கும் இந்த ஒரே தாக்குதலில் மீனை வீழ்த்திய இளைஞனைப் பார்த்து மூச்சுத் திணறியது.  எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.  குரு சாந்தீபனி மட்டுமே அப்போது தன் வசத்தில் இருந்தார்.  அவர் தன் கைகளைத் தூக்கி ஜெய கோஷம் செய்துவிட்டு, “சாது!  சாது!” என்றும் கோஷித்தார்.  அதன் பின்னரே தூக்கத்திலிருந்து விழித்தாற்போல் சபையினர் அனைவரும் “சாது, சாது” என எதிரொலித்தனர்.  பேரிகைகள் முழங்கின.  சங்குகள் ஊதப்பட்டன.  எக்காளங்கள் ஊதப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் மிக மிக உற்சாகம் ஏற்பட்டது.

அங்கே அமர்ந்திருந்த பிராமணர்கள் அனைவரும் எழுந்திருந்து அர்ஜுனனை நோக்கி விரைந்து நடை போட்டனர்.  அர்ஜுனன் வில்லை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கையில் திரௌபதி  தன் கண்களிலேயே உற்சாகத்தைக் காட்டியவண்ணம் வந்து அவன் கழுத்தில் தன் கையிலிருந்த மணமாலையைப் போட்டாள்.  அரசர்கள் சிலர் மிகுந்த மனக்கிளர்ச்சி கொண்டு எழுந்தனர்.  தங்கள் கைகளை உயர்த்திய வண்ணம், “இது மிகப் பெரிய அவமானம்!  மோசடி!” என்று கூச்சலிட்டனர்.  அரசர்களில் ஒருவர், “இளவரசியை ஒரு பிராமணனுக்கு மணம் செய்து வைக்கக் கூடாது.  சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கு மட்டுமே!” என்று கூச்சல் போட்டார்.   இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷகுனி, துரியோதனனைப் பார்த்தான். அவன் அப்படியே திகைத்து அமர்ந்திருந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.  அவன் காதுகளில் ஷகுனி மெல்லக் கிசுகிசுத்தான். “இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அர்ஜுனனை ஒரேயடியாக அகற்றிவிடலாம்.  விரைந்து செயல்படுவோம்!” என்றான். அப்போது அங்கே அருகில் அமர்ந்திருந்த சோமதத்தன் என்னும் அரசனின் மகன் பூரிஷ்ரவஸ் எழுந்தான்.  தன் கைகளை அழுத்தமாக துரியோதனன் தோள்களில் வைத்து அழுத்தினான்.  “இப்போது இம்மாதிரி எதையும் நாம் எவரும் செய்ய இயலாது;  அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல!  அதோ, அங்கே பார்!  யாதவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர்.  சேதி நாட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அர்ஜுனனின் சகோதர முறையானவர்கள்.  தெரியும் அல்லவா?”  என்று கூறினான்.  இதைக் கேட்ட துரியோதனன் செய்வதறியாமல் தன்னிடத்திலேயே அமர்ந்துவிட்டான்.

சில இளவரசர்கள் துருபதனை நோக்கிச் செல்வதை பீமன் பார்த்தான்.  அந்தக் கூட்டத்தைத் தன் கைகளால் தள்ளிக் கொண்டு அர்ஜுனனைச் சுற்றி இருந்த பிராமணர்களையும் விலக்கிக் கொண்டு சென்றான்.  அந்த அரங்கமே அதிரும்படியான உறுமிக் கொண்டு சென்றான்.  அங்கே அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த மரம் ஒன்றைப் பிடுங்கித் தன் கைகளில் தண்டாயுதம் போல்  ஏந்திக் கொண்டான்.  அர்ஜுனனைச் சூழ வந்த அரசர்கள், இளவரசர்களைப் புறம் தள்ள ஆரம்பித்தான். அனைவரும் திகைப்போடு பின்னடைந்தனர்.  இவன் யார் ராக்ஷசன் போல் உள்ளானே? கண்களானால் நெருப்பாய் எரிகிறது!  திரௌபதிக்கும் அர்ஜுனனுக்கும் அருகிலோ, அல்லது துருபதன் அருகிலோ துணிச்சலாக வரப் போகும் முதல் மனிதனின் மண்டையை உடைத்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பான் போலிருக்கிறது.  அர்ஜுனனும் சும்மா இருக்கவில்லை.  வில்லை மீண்டும் கைகளில் எடுத்து நாணில் அம்பைப் பூட்டிக் குறி பார்த்து எய்வதற்குத் தயார் ஆனான்.  பீமனோ அர்ஜுனனைப் பார்த்து, “அர்ஜுனா, வில்லையும் அம்பையும் திரும்ப வை!  நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொன்னான். இதைச் சொல்லிய வண்ணம் திரௌபதியின் கரங்களைப் பிடித்து அர்ஜுனன் கைகளில் ஒப்படைத்துப் பின்னர் இருவரையும் துருபதன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றான்.

மணமகனும், மணமகளும் துருபதனுக்கு நமஸ்கரிக்கையில் மின்னல் வேகத்தில் செயல்படும் அர்ஜுனனின் வீர, தீரத்தில் மயங்கிய கூட்டம், “சாது, சாது!” என உற்சாக கோஷம் எழுப்பியது.  விராடனும் மற்ற நட்பு நாட்டு அரசர்களும் புடை சூழ, கிருஷ்ணனும், பலராமனும், மற்ற யாதவ அதிரதிகளும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கி விரைந்தனர்.  அர்ஜுனன் திரும்பியபோது கிருஷ்ணனின் சிரிக்கும் கண்களைப் பார்த்தான்.  திரௌபதியின் கரங்களைப் பிடித்த வண்ணம் நின்றிருந்த அவன், தன்னோடு அவளையும் குனிந்து கிருஷ்ணனையும், பலராமனையும் வணங்க வைத்தான். இருவரையும் சேர்த்து அன்போடு தூக்கிய கிருஷ்ணன் அர்ஜுனனைத் தன் நெஞ்சாரத் தழுவிக் கொண்டான்.  அதன் பின்னர் நடந்தது தான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.  கிருஷ்ணன் தன்னை அர்ஜுனனிடமிருந்து விடுவித்துக்கொண்டு அர்ஜுனன் அருகே அவனுக்குக் காவலாக நின்றிருந்த ராக்ஷசன் போல் இருந்த பீமனைக் குனிந்து வணங்கினான்.  பீமன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன் அல்லவா!  அங்கிருந்த அனைவரும் இதைக் கண்டு மிகவும் அதிசயித்தனர்.  என்ன?  அனைவரும் கடவுளென மதித்து வணங்கும் கிருஷ்ண வாசுதேவன், இந்த ராக்ஷசன் கால்களில் வீழ்ந்து வணங்குகிறான். அந்த ராக்ஷசனும் சற்றும் சம்பிரதாயத்தைக் குறித்து நினைத்தே பார்க்காமல்  கிருஷ்ணனின் முதுகில் ஓங்கி அடிக்கிறானே!  விளையாட்டாகத் தான் என்றாலும்  அனைவரும் பார்த்து பிரமிக்கும் கிருஷ்ணனிடமா இந்த விளையாட்டு?

ஆனால் துருபதன் வேறு விதமாக எண்ணினான்!  இந்த பிராமண இளைஞன் என்ன இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறான்!  பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதா?  இது என்ன புதுமை!  துருபதனுக்கு அதை விட அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது அடுத்துக் கிருஷ்ணன் பேசிய சொற்களே!  அந்த ராக்ஷச பிராமணனைக் குனிந்து வணங்கியவன் போட்டியில் ஜெயித்த இந்த இளம் பிராமணனைப் பார்த்து,”என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, குந்தியின் மகனே!” என்கிறானே! அப்போது……அப்போது….. துருபதனின் கண்கள் ஆச்சரியம் தாங்க முடியாமல் விரிந்தன.  விளங்காத பல விஷயங்கள் விளங்கின. இவர்கள் இருவரும் பாண்டவர்கள் ஐவரில் இருவர்.  துருபதனுக்குத் தன் வயது மறந்து போனதோடல்லாமல், இவ்வளவு நேரமும் ஆக்கிரமித்திருந்த பலவீனம் அனைத்தும் போய்ப் புத்துணர்ச்சி உண்டாயிற்று.  ஒரு இளைஞனைப் போல் குதித்து எழுந்தான்.   தன் சிம்மாதனத்தில் இருந்து கீழே இறங்கினான்.  கிருஷ்ணனைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.  அவனால் பேசவே முடியவில்லை.  “வாசுதேவா, வாசுதேவா, உன் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டாய்!” திரும்பத் திரும்ப இதையே முணுமுணுத்தான்.  துக்கத்தினால் ஏற்பட்ட மனக்கிலேசம், உடல் கோளாறு ஆகியவற்றால் மெலிந்திருந்த துருபதன் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவாகம் எடுத்தது.



Friday, July 18, 2014

அர்ஜுனன் முடிவெடுத்தான்!

துரியோதனன் திரும்பிச் சென்றதும் அங்கே அனைவரும் எதிர்பார்த்தாற்போல் நீண்டதொரு மௌனம் நிலவியது. திடீரென அங்கே பல குரல்கள் ஒரே சமயத்தில் பேச ஆரம்பித்தன.  கர்ணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து மண்டபத்தின் மையத்தை நோக்கி வர வேண்டிக் கீழே இறங்கினான். எவரோடும் ஒப்பிட முடியாததொரு எழிலான கம்பீரத்துடன் நடந்து வந்தவன், துருபதனைப் பார்த்து வணங்கி விட்டு செயற்கைக்குளத்தருகே சென்று நின்று கொண்டு அங்கே குழுமி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். கர்ணனைப் பார்த்த அர்ஜுனனுக்கு மனம் தளர்ந்து விட்டது. அவன் மனம் நம்பிக்கை இழந்தது. சொல்லத் தெரியாததொரு வேதனையில் ஆழ்ந்தான். கர்ணன் எப்போதுமே அவனுக்குச் சரியான போட்டி!  அவன் எதிரி! அதிலும் வில் வித்தையில் அவனுக்கு நிகரானவனே!  அதோ!  தன் இடக்காலை பூமியில் அழுந்த ஊன்றிக் கொண்டு கர்ணன்  சூரியனைப் போல் பிரகாசிக்கும் தன் கண்களில் சிரிப்பின் ஒளி தோன்ற வில்லைக் கையில் எடுத்துவிட்டான். அவையே அமைதியில் மூழ்கிக் கிடந்தது.  அடுத்து நடக்கப் போவதை அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.  தேர்ந்த திறமையான கைகளுடன் அந்த நாணை வெகு எளிதாக வில்லின் மற்றொரு முனையில் இழுத்துப் பூட்டினான்.  வில்லைத் தன் கைகளில் ஏந்திய வண்ணம் அம்பையும் எடுத்துப் பூட்ட ஆரம்பித்துவிட்டான்.

அதுவரை அமைதியாகச் சிலை போல் நின்றிருந்தாள் திரௌபதி.  அப்போது தான் தனக்கு உயிர் வந்தவள் போல் திடுக்கிட்டு விழித்தாள். கொஞ்சம் முன்னால் வந்து தன் தமையன் த்ருஷ்டத்யும்னன் காதுகளில் ஏதோ மெல்ல முணுமுணுத்தாள்.  உடனே த்ருஷ்டத்யும்னன் குறி பார்த்துக் கொண்டிருந்த கர்ணனைத் தடுத்து நிறுத்திவிட்டு அவன் அருகே வந்தான்.

“அங்க மன்னா!  நமஸ்காரங்கள்.  ஆனால் நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது!” என்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும்படி சொன்னான்.  “நீர் ஒரு தேரோட்டியின் மகன்!” என்றும் மேலே கூறினான்.  மிகுந்த இறுமாப்புடனும், அவமதிப்புச் செய்யும் தொனியுடனும் பலர் சிரிக்கும் தொனி அங்கே கேட்டது.  ஆனால் கர்ணன் அசைந்து கொடுக்கவில்லை.  புன்னகை மாறாமல் தன் கையிலிருந்த வில்லைக் கீழே தாழ்த்திய வண்ணம் பணிவாக அதே சமயம் தன் கௌரவத்தையும் விட்டுக் கொடுக்காமல் பேச ஆரம்பித்தான்.  “ பாஞ்சால இளவலுக்கு வணக்கம். எனக்குத் தெரியும் நான் வென்றாலும் இளவரசியை மணக்க முடியாது என்பது.  ஆர்ய வர்த்தத்தின் நெறிமுறைகளுக்கு மாறானது என்பதும் அறிவேன்.  அப்படிப்பட்ட மணம் தடை செய்யப்பட்டிருப்பதையும் அறிவேன். தர்மத்திற்குப் புறம்பானது என்றும் அறிவேன்.  ஆனால் நான் இங்கே அனைவருக்கும் காட்ட விரும்பியது குரு வம்சத்தினருக்கு இந்தப் போட்டியில் வெல்லும் அளவுக்குத் திறமைவாய்ந்த நண்பர்கள் உண்டு என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே!  நான் வெல்வதன் மூலம் குரு வம்சத்தினருக்குத் திறமையான நண்பர்கள் இருப்பது உறுதியாகத் தெரிந்து விடும் அல்லவா?”  சத்தமாய்ச் சிரித்தான் கர்ணன்.  பின்னர் தானே நாணை அகற்றினான். மிகவும் கவனமாக அங்கே இருந்த தர்ப்பைப்புற்களின் மேல் வில்லையும், அம்பையும் வைத்தான்.  தன் நிமிர்ந்த தலை நிமிர்ந்தவாறே கம்பீரம் சற்றும் குறையாமல் சென்று தன் இருப்பிடத்தில் அமர்ந்தான்.

அவன் சென்று அமர்ந்த பின்னரும் எழுந்த சிரிப்புச் சப்தம் அஸ்வத்தாமா எழுந்த வேகத்தில் அடங்கியது. அவன் வந்ததில் இருந்தே காம்பில்யத்தில் அனைவருக்கும் அவன் வரவு பிடிக்கவில்லை.  ஆகவே அவன் எழுந்ததுமே பலர் முகமும் சுளித்துக்கொண்டது.  அஸ்வத்தாமா எதையும் கவனிக்காமல் வேகமாய் நடந்து சென்றவன் சற்றும் பொறுமையின்றிச் செல்லும்போதே துருபதனைப் பார்த்துத் தன் கைகளைத் தூக்கி ஆசீர்வதிக்கும் பாவனையில் உயர்ர்த்தினான்.  விரைவில் குளத்தருகே சென்றான்.  அவன் மிகக் கோபத்தில் இருந்தது அவன் முகத்திலிருந்தே தெரிய வந்தது.  கீழே குனிந்து வில்லை எடுக்க முயன்றான்.  ஆனால் அவனால் குனிந்தவண்ணம் வில்லை எடுக்க முடியவே இல்லை;  தன் பற்களைக் கடித்த வண்ணம் மீண்டும் மீண்டும் முயன்றான்.  அம்முயற்சியில் அவன் நாடி, நரம்புகளெல்லாம் கூடப் புடைத்துக்கொண்டன.  ஆனால் அவனால் முடியவில்லை.  கையில் எடுத்த வில்லின் தண்டை வேகமாய்த் தூக்கி எறிந்தான்.  “வில்லா இது?  இல்லை! இல்லவே இல்லை! இது வில்லே இல்லை.  இதெல்லாம் ஒரு போட்டியா? இப்படி ஒரு போட்டியும் நடக்கக் கூடாது!” எனக் கடித்த பற்களுக்கிடையே சீறினான்.  அவமானத்தால் தலை குனிந்தவண்ணம் தன் இடத்திற்குத் திரும்பினான்.  அவை மீண்டும் சிரிப்பில் ஆழ்ந்தது.

சிறிது நேரத்தில் சபை மீண்டும் அமைதி அடைந்தது.  இப்போது அனைவரின் எதிர்பார்ப்புகளும் உச்சத்தில் இருந்தன.  சிசுபாலன், துரியோதனன், விராடன், அஸ்வத்தாமா போன்ற தேர்ந்த வில்லாளிகளாலேயே முடியாத ஒன்றைத் துணிகரமாக முயலப் போவது யார்?  இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்?  அனைவருமே இப்போது யாதவர்கள் பக்கம் பார்த்தார்கள்.  அவர்களில் ஒருவரா?  அர்ஜுனன் இப்போது திரௌபதி மலர்ந்த முகத்துடன் இருப்பதையும், தன் கண்களால் கிருஷ்ணனைப் பார்த்து மௌனமாகக் கேள்விகள் கேட்பதையும் கவனித்தான்.   அவள் கண்கள் அவள் தன் மண வாழ்க்கையின் கதாநாயகனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்வதாய் அவனுக்குத் தோன்றியது.  அந்த நாயகன் இன்னும் வரக் காணோமே என அந்தக் கண்கள் தேடுவதாகவும் நினைத்தான்.  அவனுக்குள் ஏதோ ஒன்று அவனைத் தூண்டியது.  இது தான் என நிச்சயமாகச் சொல்ல முடியாததொரு ஏதோ ஒரு இனம்புரியா உணர்ச்சி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது.  அவன் தான் இதை முடிக்க வேண்டும் என்றும் அது சொன்னது.

ஒரு நிமிடமே தோன்றியதொரு உணர்ச்சிப் பிரவாகத்தில் அவன் தன்னைத் தானே அலசி ஆராய்ந்தான்.  அவன் தான் எவ்வளவு முட்டாளாக இருந்து வருகிறான்!  அவனுக்கென ஏற்பட்டவற்றைக் கூட அடையப் பிறரை எதிர்நோக்கித் தானே எந்த முடிவும் எடுக்காமல் யோசித்துக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறானே!  முடிவை அவனல்லவோ எடுக்க வேண்டும்!  இது அவன் வாழ்க்கை!  அவன் தான் தீர்க்கமான முடிவை எடுத்தாக வேண்டும்.  இப்போது அவன் எடுக்கப் போகும் இந்த முடிவு தான் அவர்களுக்கு இழந்த வாழ்க்கையை  மீட்டுக் கொண்டு வந்து தரப் போகிறது.  அது அவன் கைகளில் தான் உள்ளது.  அவன் முடிவின் மூலம் அவர்களுக்கு மாபெரும் அதிகாரங்களும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கப் போகிறது.  இந்த முடிவை இப்போது அவன் எடுத்துவிட்டான் எனில் பின்னர் திரும்பியே பார்க்க வேண்டாம்.  வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்குப் போய் விடுவான்.  தன் இருக்கையில் இருந்து அவன் எழுந்தான்.  அவனருகே அமர்ந்திருந்த மற்ற பிராமணர்கள் அவனை அமரச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  அவன் நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.  குளத்தருகே நடப்பவை பற்றி அவர்கள் பார்க்க முடியவில்லை.  ஆனால் அர்ஜுனன் அவர்களை லக்ஷியம் செய்யவில்லை.

மெல்ல எழுந்து நடந்தான்.  தன் சகோதரர்களைக் கூடக் கலந்து ஆலோசிக்கவில்லை.  பெரிய அண்ணா யுதிஷ்டிரரின் சம்மதத்தை வாங்க வில்லை. ஆகவே தன்னை அமரச் சொன்ன பிராமணர்களையோ, தன்னருகே அமர்ந்திருந்த சகோதரர்களையோ நோக்காமல் நேராகக் குளத்தைப் பார்த்த வண்ணம் நடந்தான். கிட்டத்தட்டக் குதித்தான்.  சற்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்.  அவன் அழகிய முகம் உணர்ச்சி வசத்தில் சிவந்திருந்தது.  கண்கள் பளீரென ஜொலித்தன.

மொத்த சபையும் ஆச்சரியவசப்பட்டு அதே சமயம் சினத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தது.  எங்கும் நிசப்தம்! ஒரு இளந்துறவி,  அதிலும் பிராமணன் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறானா?  மோசம், மோசம்! கோரமானதொரு நிகழ்வு இது! அரசர்களும், இளவரசர்களும் ஏளனமாகப் பார்த்து நகைத்தனர்.  பலராமன், கிருஷ்ண வாசுதேவன், உத்தவன் ஆகியோர் மட்டும் அமைதி காத்தனர்.  மற்ற பிராமணர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த இளைஞன் போட்டியில் தோற்றுப் போய்த் தனக்குத் தானே தன்னை முட்டாளாக்கிக் கொள்வதல்லாமல் நம் குலத்தையும், இந்நிகழ்வையும் மிகவும் மோசமானதாக ஆக்கிவிடப் போகிறான்.  ஆனால் அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனோ ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தான்.  இன்று வரை அவனைக் கேட்காமல் ஓர் அடி கூட அர்ஜுனன் எடுத்து வைத்ததில்லை.  இப்போது எப்படி அவனுக்கு தைரியம் வந்தது?   பீமன் கட்டுக்கடங்காத சந்தோஷத்தால் துள்ளினான்.  நகுலனுக்கோ தன் அண்ணனைக் குறித்த மிதமிஞ்சிய பெருமை.  வழக்கம் போல் சஹாதேவனின் பொருள் புரியாச் சிரிப்பு.

அர்ஜுனன் மிக எளிதாகவும், கலக்கமே இல்லாமலும் துருபதன் அமர்ந்திருக்கும் இடம் சென்றான். பொதுவாக உயர் பதவியிலிருக்கும் அரசர்களானாலும், சக்கரவர்த்திகளே ஆனாலும் பிராமணர்கள் அவர்களை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அரசர்கள் க்ஷத்திரியர்களாக இருப்பதால் பிராமணர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் இருந்தது.  அந்தப் பழக்கப்படித் தன் வலக்கையைத் தூக்கி துருபதனை ஆசீர்வதித்தான் அர்ஜுனன். அவனிடம் போட்டியில் தான் கலந்து கொள்ள அநுமதி அளிக்கும்படி கோரினான்.துருபதன் அவனையே கூர்ந்து கவனித்தான்.  அந்த இளந்துறவியின் இளமை பொங்கும் கவர்ச்சியான முகமும், நெற்றியில் அவன் அணிந்திருந்த திருநீறும், அவன் கண்களில் தெரிந்த உறுதியும், வலிவாகவும் சக்தியுடனும்  காணப்பட்ட தோள்பட்டையின் அமைப்பும், ஆங்காங்கே ஒழுங்கற்றுக்காணப்பட்ட தாடியும் அவன் போர்ப்பயிற்சி உள்ளவன் என்பதை எடுத்துச் சொல்லியது.  அவன் நின்ற கோலமும் துருபதனுக்கு அவன் குருவான பரசுராமரை நினைவூட்டியது.  தன் இளமைக்காலத்தில் அவரும் இப்படித் தானே இருந்திருப்பார் என நினைத்துக் கொண்டான்.  பின்னர் அவனைப் பார்த்துக்கை கூப்பிய வண்ணம், “பிராமணோத்தமரே, உமக்கு என் அநுமதியை அளித்தேன்.  அதுவும் நீங்கள் கேட்டதால் அளித்தேன்.  ஆனால் நீங்கள் என் அனுமதியை வேண்டி இருக்கவே வேண்டாம்.  இந்தப்போட்டியில் கலந்து கொள்ள உமக்குப் பூரண உரிமை உண்டு!” என்றான்.


யாதவர்களிடையே அமர்ந்திருந்த பலராமனுக்குத் தன் ஆவலை அடக்க முடியவில்லை.  துள்ளிக் குதித்தான்.  ஆனால் கிருஷ்ணன் அவனை அடக்கினான்.  “உங்களை நீங்களே அடக்கிக் கொள்ளுங்கள் பெரிய அண்ணா! “ என்றும் கூறினான்.  துரியோதனன் அந்த இளம் துறவி யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டான்.  சிற்றப்பன் மகன் அர்ஜுனன்! சந்தேகமே இல்லை;  அந்த கெக்கலி கொட்டிச் சிரித்த குரலும் பீமனுடையதே!  அதிலும் சந்தேகம் இல்லை.  துரியோதனனின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆயிற்று.  பாண்டவர்கள் இறக்கவே இல்லை.  உயிருடன் இருக்கின்றனர்.  ஐவரும் இப்போது இந்த நிமிடம் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களில் ஒருவனான திறமைசாலி அர்ஜுனன் அதோ போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான்.  திரௌபதியை வெல்லவும் போகிறான்.  அவனுக்குத் தான் திரௌபதி கிடைக்கப் போகிறாள்.  ஆஹா!  இது என்ன சதி!  சூழ்ச்சி! இத்தனைக்கும் பின்னால் இருப்பது யார்? ஆம், அந்தக் கிருஷ்ண வாசுதேவன் தான்!  ரத்தம் வருவது போல் சிவந்த தன் கண்களைக் கிருஷ்ணன் பக்கம் திருப்பி அவனைக் கொன்றுவிடுவது போல் பார்த்த வண்ணம் தன் மாமன் ஷகுனியிடம், “மாமா, அவர்கள் வந்துவிட்டனர்!” என்றான்.  ஷகுனியின் முகத்தின் நிரந்தரப்புன்னகை மறைந்து எழுத்தில் எழுதமுடியாததொரு வார்த்தையை அவன் பிரயோகம் செய்தான்.

அதற்குள் துஷ்சாசனும் அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்டு பற்களைக் கடித்த வண்ணம் தன் தமையன் பக்கம் திரும்பினான்.  “அண்ணா, அவர்கள் வந்துவிட்டனர்!  இது என்ன மாயமா, மந்திரமா, தந்திரமா?” என்றான். “இந்த சுயம்வரமே அதோ எல்லாத் திட்டங்களையும் சப்தமின்றிப்போட்டுவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருக்கும் அந்த மாட்டிடையனுடைய மாபெரும் திட்டம்!  அதில் இதுவும் ஒன்று!” என்று சீறினான் துரியோதனன்.






Thursday, July 17, 2014

அநுமதி கொடு கிருஷ்ணா!

திரும்பத் திரும்ப யோசித்தாலும் தன்னால் இவர்களிடமிருந்து பிரிந்து செல்வதோ, அறுத்துக்கொண்டு விடுவதோ இயலாத காரியம் என்பது அர்ஜுனனுக்கு நன்கு புரிந்தது.  அவன் ஏதேனும் முன்னேற்றம் அடைய விரும்பினால் அது அவர்கள் ஐவருக்கும் சேர்த்துத் தான் இருக்க முடியும்.  ஏதேனும் நல்ல வழியில் போக விரும்பினாலும் ஐவருக்கும் சேர்த்துச் செல்லும்படியாகத் தான் அவனால் சிந்திக்க முடியும்.  அதை அவன் எப்படிச் செய்யப் போகிறான்!  அவனால் தான் இது நடக்க வேண்டும். இந்தக் கேள்வி அவனை எப்போதும் அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கிறது.  இதற்கு பதிலை அவனால் சொல்ல முடியவில்லை. அவன் தாயுடனோ மற்ற சகோதர்களுடனோ அவன் இதைப் பகிரவும் முடியவில்லை.  அவனே தான் இதற்கு ஒரு பதிலைக் கண்டு பிடித்து ஆகவேண்டும்.  அர்ஜுனன் முடிவு கட்டினான்.  அதுவும் காம்பில்யத்தை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருக்கையில் பல சமயங்களிலும் அர்ஜுனன் தனித்து விடப்பட்டான். அப்போது அவன் தனக்குத் தானே சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.

அவன் வேண்டுவது என்ன? புகழும், பெரும் சிறப்புமா? ஆம், அவனுக்குப் பெரும் புகழும் வேண்டும்;  சிறப்பும் வேண்டும்.  இன்பமும் சந்தோஷமும் வேண்டுமா?  ஆம், அதுவும் வேண்டும்!  வலிமையும், மாபெரும் சக்தியும் பெற வேண்டுமா?  ஆம், ஆம் அவனுக்கு அதுவும் வேண்டும். அதெல்லாம் சரி தான். அவன் சுயம்வரத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அவன் பெரியப்பன் வழி சகோதரன் ஆன துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் அவமதிப்பைச் செய்யப் போகிறானா? அவர்களைப் பல விதங்களிலும் அவமானம் செய்யத் திட்டம் போடப் போகிறானா? ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களின் மாபெரும் பரிசுகளையும் அவன் ஒருவனே அடையப் போகிறானா? ஆம், அவன் இவை அனைத்தையும் விரும்புகிறான். எல்லோருக்குமே அபிலாஷைகள் உண்டு.  அவை உயர்ந்தவையாகவும் இருக்கலாம்;  தாழ்ந்தவையாகவும் இருக்கலாம்.  ஆனால் அவன் இவற்றோடு எல்லாம் திருப்தி அடையப் போவதில்லை.  இவை அனைத்துக்கும் மேல் அவனுக்குத் தேவையானது வேறு. அவன் வாழ்நாளில் இழந்ததை எல்லாம் பெற விரும்புகிறான்.  அவன் அவனாக சுயம் அழியாமல் இருக்க விரும்புகிறான்.  அது ஒன்றே ஒரே நிவாரணம்.  ஒரே தீர்வு.

தீர்க்க இயலாத இந்தப் பிரச்னையைத் திரும்பத் திரும்ப யோசித்த அர்ஜுனன் மனம் உறுதியின்மையில் மூழ்கித் தத்தளித்தது.  அதிலிருந்து அவன் கரையேற விரும்பினான்.  தன்மேலேயே அவனுக்குக் கோபம்.  எப்போதும், எந்தக் காரியத்திலும் அவன் பிறரை நம்பியே வாழ வேண்டி உள்ளது. ஆசாரியர் வியாசர், அல்லது விதுரச் சித்தப்பா அல்லது கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரால் அளிக்கப்படும் ஏதேனும் ஒரு சமிக்ஞை, அல்லது சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வாழ்க்கையில் சரியான இடத்தில் அமர முடிகிறது. இம்மாதிரியான எண்ணங்களால் நிரம்பப்பட்டே அவன் தன் சகோதரர்களுடன் சுயம்வர மண்டபத்தை அடைந்தான்.  இப்போது அனைத்துமே உண்மையாக அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறது என்பதையும் அர்ஜுனன் உணர்ந்தான்.  ஆனால் எப்போது? எப்படி?  எப்போது கிருஷ்ணன் அவர்கள் உயிருடன் இந்த உலகில் இருப்பதை அறிவிக்கப் போகிறான்?  அவர்கள் ஜீவனுள்ள வாழ்க்கையை எப்போது வாழ ஆரம்பிக்கப் போகின்றனர்!

சுயம்வர மண்டபத்தில் நுழைந்த அர்ஜுனன் அங்கே வீற்றிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள் அனைவரையும் பார்த்தான்.  அனைவரும் ராஜாங்க உடை தரித்து, நல்லாபரணங்கள் பூண்டு, தங்கள் பரிவாரங்களோடு சகலவிதமான ராஜ மரியாதைகளும் அளிக்கப்பட்டு வீற்றிருந்தனர். அவர்களுடைய ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடங்களும், மாலைகளின் விலை உயர்ந்த கற்களும், நன்கு செப்பனிடப்பட்டு எண்ணெய் தடவிப் பளபளத்த வாட்களும், மற்ற ஆயுதங்களும் ஜொலித்த ஜொலிப்பில் அர்ஜுனன் கண்கள் மட்டும் கூசவில்லை;  தங்கள் அற்பமான நிலையை நினைத்து அவன் மனமும் கூசியது.  சொல்லப் போனால் அத்தனை மன்னர்களிடமும் அவனுக்குப் பொறாமை  பீறிட்டெழுந்தது.  எல்லாம் சரியாக இருந்திருந்தால், அவனும் அவர்களில் ஒருவனாக ராஜாங்க உடை தரித்து ஹஸ்தினாபுரத்து இளவரசனாக தன்னுடைய அருமை வில்லுடனும், அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணியோடும் இங்கே வீற்றிருப்பான்.  இத்தனை இளவரசர்களிலும் அவனைப் போல் இளமை, வடிவம், வீரம், துணிச்சல், சுறுசுறுப்பு நிறைந்த இளவரசன் இருக்க மாட்டான். வெகு எளிதாக சுயம்வரத்தில் வென்று திரௌபதியை அடைந்திருப்பான்.  ஆனால், எல்லாம் தங்கள் பெரியப்பன் மகன் துரியோதனனால் பாழாகி விட்டது.  அவன் ஒரு அரசகுமாரனாக இங்கே வந்து கலந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு விட்டது.


வேறு வழியில்லாமல் அவர்கள் பிராமணர்களோடு கலந்து உட்கார்ந்து கொண்ட சமயம் ஒரு வாயாடியான பிராமணன் அங்கே வந்திருக்கும் அரசர்கள், மன்னர்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள் அனைவரையும் குறித்து விளக்கிச் சொன்னான். அப்போது அங்கே வீற்றிருந்த அரசர்களிடையே தன் பெரியப்பன் மகன்களை அர்ஜுனன் உடனடியாக அடையாளம் கண்டு கொண்டான்.  ஆஹா!  அவர்கள் மட்டும் தனியே அவன் கைகளில் சிக்கிக் கொண்டால்!  அர்ஜுனன் கைகளை முறுக்கினான்! அவர்களை எப்படி நசுக்கிக் கொன்றிருக்கலாம்!  என்னையும் என் சகோதரர்களையும் உயிருடன் எரிக்க முற்பட்ட இவர்களைச் சும்மா விடுவதா? ம்ஹூம், இப்போது ஒன்றும் செய்ய முடியாது!  அதோ, கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் மற்ற யாதவத் தலைவர்களுடன் வந்து அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர்.  கிருஷ்ணன், எங்களை எப்போது இந்த உலகுக்கு நாங்கள் உயிருடன் இருப்பவர்கள் என அறிவிப்பான்? நமக்கு நாமே சுதந்திரமாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு முடிவை நமக்காப் பிறர் எடுப்பதும் அவர்கள் அதை அறிவிக்கக் காத்திருப்பதும் மிகவும் தொந்திரவும், கஷ்டமும் கொடுக்கும் ஒரு வேலை.  இதற்காகக் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

அதற்குள் சங்குகளும், எக்காளங்களும் முழங்க, பேரிகைகளும், முரசங்களும் ஒலிக்க இளவரசி திரௌபதி தன் தமையன் த்ருஷ்டத்யும்னனோடு சுயம்வர மண்டபத்தினுள் நுழைந்தாள்.  அவளுக்குத் துணையாகச் சில இளவரசிகளும் காணப்பட்டனர்.  திரௌபதியைக் குறித்து அவனுக்குக் கூறி இருந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்தான் அர்ஜுனன்.  அவன் எதிர்பார்த்தது மிகவும் கர்வம் கொண்ட, அபிலாஷைகளால் நிரம்பிய, எதற்கெடுத்தாலும் கோபம் அடையும் ஒரு படபடப்பு மிகுந்த பெண்ணை.  அப்படித் தான் அவன் காம்பில்யம் வரும் வழியில் அனைவரும் பேசிக் கொண்டனர்.  ஆனால் இங்கேயே நேர்மாறாக அன்றோ பார்க்கிறான்!  இங்கே அவன் பார்த்ததோ சுறுசுறுப்பும், அழகும், நளினமும், எளிமையும், நேர்மையும் கண்களில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் ஒரு அழகான பெண்ணை! அவன் இது வரை பார்த்த பெண்களிலேயே இவளைப் போன்ற ஒருத்தியை அவன் பார்த்திருக்கவில்லை. அவள் முகம் தனித்தனியாக அவன் மனதில் பதிந்தது.  அவள் கன்னங்களின் சிவப்பு, பெரிய கடல் போன்ற பேசும் கண்கள், அவற்றில் நீந்தும் மீன்களைப் போன்ற கண்மணிகள், மாதுளம்பழத்தைப் பிளந்தாற்போல் தெரிந்த சற்றே திறந்திருந்த சிவந்த உதடுகள், அவற்றின் உள்ளே முத்துக்களைப் போன்ற பற்களின் வரிசை, அவளுடைய நீண்ட கூந்தல், அதில் பின்னப்பட்டிருந்த பின்னல்கள், அவள் சூடியிருந்த பூக்கள், கழுத்தில் அணிந்திருந்த வாசனையான மாலை, எடுப்பான மோவாய், கீழ் உதட்டுக்குக் கீழே தெரிந்த சின்னஞ்சிறு குழி, அந்த மோவாயும், அதில் தெரிந்த சின்னக் குழியுமே அவள் தீர்க்கமான முடிவை எடுப்பவள் என்றும், தைரியமானவள் என்பதையும் சொல்லாமல் சொல்லியது.  இவ்வளவு அழகான இளம்பெண்ணை அவன் அன்று வரை பார்த்தது இல்லை.  அழகான இளம்பெண்!  வாழ்க்கையை ரசனையோடு அனுபவிப்பவள் என்பதும் புரிந்தது அர்ஜுனனுக்கு. அகம்பாவமே இல்லாத, கர்வம் துளியும் இல்லாத அரசகுமாரிகளுக்கே இருக்கும் இயல்பான கம்பீரத்துடன் இருக்கும் அவளைப் பார்த்ததுமே அர்ஜுனனின் மனம் கவி பாட ஆரம்பித்துவிட்டது!  ஆஹா!  இவள் மட்டும் எனக்குக் கிடைத்தால்!


அரசர்கள் ஒவ்வொருவராகப் போவதும், முயற்சிகள் செய்வதும், தோற்றுத் திரும்பி வருவதுமாக இருந்தார்கள்.  அர்ஜுனன் அனைத்தையும் பார்த்தான்.  பல அரசர்களாலும் அந்த மாபெரும் வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. அனைவருமே அந்த வில்லைச் சரியான முறையில் தூக்க முயலவில்லை என்பதை அர்ஜுனன் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான்.  வில்லை இப்படித் தான் தூக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்னும் அவா அவனுள் எழுந்தது.  அவனால் ஒரே நொடியில் அந்த வில்லைத் தூக்க இயலும்,  அவன் அதற்கு அங்கே செல்ல வேண்டும்.  ஆனால்! காத்திருக்க வேண்டும்.  அவன் செல்லலாம் என்பதற்கான சமிக்ஞை கிடைக்கும் வரை அவன் செல்ல முடியாது.  யாரோ கொடுக்கப் போகும் அந்த சமிக்ஞைக்கு அவன் காத்திருந்து தான் ஆக வேண்டும். துரியோதனன் கலந்து கொள்ள எழுந்ததுமே அவன் மனம் மிகவும் கசந்து வழிந்தது.  இங்கே அவன், அர்ஜுனன், ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்லாளி எதுவும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் பெரியப்பா மகன் இந்தப் போட்டியில் ஜெயித்துத் திரௌபதியை மணந்து விடுவானா?


துரியோதனன் வீணாக வில்லைத் தூக்கி நாண் ஏற்றி அம்புகளைப்பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவன் தடுமாற்றங்களைக் கண்டு பீமனால் சும்மா இருக்க முடியவில்லை.  தன்னை மீறி… தன்னை மறந்து அவன் சிரித்துவிட்டான். அவன் சிரிப்பு சுயம்வர மண்டபம் முழுமையும் எதிரொலித்தது.  துரியோதனன் தோல்வி அடைந்தான்.  அவமானகரமான தோல்வி.  சுயம்வர மண்டபமே அவனைப் பார்த்துச் சிரித்துக் கெக்கலி கொட்டியது.  அர்ஜுனனுக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் அவனுக்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது.  அவன் யாதவர்கள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் திரும்பி அங்கே அசையாமல் ஒரு கடவுளைப் போல் அமர்ந்து கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்தான். அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.  அவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி பரவி இருந்தது போல் தோன்றியது அர்ஜுனனுக்கு.






Monday, July 14, 2014

அர்ஜுனன் சிக்கிய அன்பு வலை!

இப்போது நாம் பாண்டவர்கள் அங்கே வந்ததைக்குறித்துப் பார்ப்போம்.  ஐவரும் நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டு காம்பில்யம் வந்தடைந்தனர்.  அங்கே ஒரு குயவன் வீட்டில் அவர்களுக்குத் தங்க இடம் கிடைத்தது.  அங்கே தங்கிக் கொண்டனர். துறவிகளைப் போல் உடை அணிந்திருந்த ஐவரும் சுயம்வர மண்டபத்துக்குக்கிளம்புகையில் அர்ஜுனன் மனதில் இனம் தெரியா மகிழ்ச்சி. தனக்கென ஒரு அருமையான எதிர்காலம் காத்து இருப்பதாக உள்ளூர நம்பினான். இன்றைய தினம் அவன் செய்யப்போகும் சாகசம் அதற்கு அஸ்திவாரம் அமைக்கப்போகிறது. துணிகர சாகசங்களும், மகிழ்ச்சி நிறைந்த அனுபவங்களுமே அவன் நீண்ட நாள் கனவாக இருந்தது.  இப்போது அந்தக் கனவுகள் நிறைவேறப் போவதை அவன் உணர்ந்து  கொண்டான்.  அவனுடைய முன்னோரான பரதன் செய்த சாகசங்களை விடப் புதுமையாகவும், துணிவாகவும் அவன் செய்யப் போகிறான்.  தேவதையைப் போன்ற அழகுடைய மணமகளை அவன் பொறுமைக்குப் பரிசாகவும், அவன் திறமைக்குப் பரிசாகவும் பெறப் போகிறான். அவன் வாழ்க்கையே கவிதை மயமாகவும், ஆடல், பாடல்களிலும் ஆனந்தமாகக் கழியப் போகிறது.

என்னதான் தன் நான்கு சகோதரர்களையும், தன் தாயையும் அவன் மிகவும் நேசித்தாலும் அவனுக்கென ஒரு தனி உலகம் அவனுள் இருந்து வந்தது. அவன் எண்ணங்கள் அவர்களோடு பகிரப்பட்டது.  வாழ்க்கையையும் பங்கு போட்டுக் கொண்டனர்.  ஆனாலும் தான் மட்டுமே தனியாக வாழ்வது போல ஒரு கனவுலகம் அவனுள் உருவாகி இருந்தது. ராக்ஷசவர்த்தத்தில் அவர்கள் கழித்த மாதங்களில் அவன் மிகவும் மனச்சோர்வு அடைந்திருந்தான்.  அதிலும் பீமனும் அந்த ராக்ஷசி ஹிடும்பியும் ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்டிருந்த காதலை நினைக்கையில் எல்லாம் அவனுக்குள் சொல்லவொண்ணா கோபமும் எரிச்சலும் வரும்.  அர்ஜுனன் அழகை மிகவும் ரசிப்பவன்.  தான் இளமையாகவும் அழகாகவும் இருப்பதில் பெருமை கொண்டவன்.  அப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு மனைவியிடம் தன் அண்ணன் பாசமும், காதலும் கொண்டிருப்பதைக் கண்டால் அங்கேயே உள்ள ஒரு பெரிய மரத்தில் முட்டிக் கொண்டு கதறலாம் போல் இருந்தது.   இந்தத் துன்பியல் நாடகத்தை அதன் பின்னராவது தன் அண்ணன் நிறுத்துவானோ என்றெல்லாம் நினைத்துக் கொள்வான்.


ராக்ஷச வர்த்தத்தை விட்டு அவர்கள் கிளம்பியது அவனுக்குள் பெரிய ஆறுதலை ஏற்படுத்தியது. அவனுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளும் புத்துணர்ச்சி பெற்றன.  ஆற்றல் மிகுந்தாற்போல் ஓர் எண்ணம் அவனுள் ஏற்பட்டது.  அவனுடைய நீண்டநாள் ஆசைக்கு ஏற்ப வழியெங்கும் பலவிதமான அனுபவங்கள், சாகச நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.  அவன் ஆற்றலுக்கும் ஆர்வத்துக்கும் தீனி போட்டாற்போல் இருந்தன அவை. முக்கியமாக வழியில் ஒரு மோகங்கொண்ட கந்தர்வனின் விளையாட்டுக்களை அவன் வெல்ல வேண்டி இருந்தது.  பீமனுக்கோ கேட்கவே வேண்டாம். அவன் இருக்குமிடம் தேடிக் கொண்டு வீர, தீர சாகசங்கள் வந்து விடுகின்றன. அதிர்ஷ்டக்காரன்!  ஏகசக்ரத்தில் ஒரு ராக்ஷசன் தினம் ஒரு வீட்டில் ஒரு நபரை அனுப்பச் சொல்லிக்கொன்று தின்று கொண்டிருந்தான்.  அவனை முடித்துவிட்டான் பீமன்.  பின்னர் அவர்கள் அனைவரும் வியாசர் சொன்னபடி உத்கோசகத்தில் இருந்த தௌம்ய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.  அவர்களுடைய நீண்ட நெடும் பயணத்தில் இது ஓர் ஓய்வுக்கு உகந்த இடமாக அமைந்தது.  எனினும் காட்டில் முட்கள் நிறைந்த பாதையில் ஆங்காங்கே ஊரும் விஷ நாகங்கள், எப்போது பார்த்தாலும் ஊளையிடும் ஓநாய்கள், மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருக்கும் குரங்குகள், காட்டின் பழமரங்களின் வித விதமான பெயர் தெரியாத பழங்கள். அனைத்துமே கவர்ந்தன.

ஆனாலும் ஆசிரமத்தின் அமைதியோ, அங்கே மெல்லப் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த வேத மந்திர முழக்கங்களோ, பசுக்களைக் கறக்கும் சப்தமோ எதுவுமே அர்ஜுனன் மனதை அமைதிப்படுத்தவில்லை. அவனுக்குள் இனம் புரியாத தவிப்பு.  எப்போது அவன் அவர்களுக்கே உரித்தான அரண்மனைக்குச் செல்வான்? அங்கே நாட்டியத் தாரகைகள் நடனம் ஆட இசை வல்லுநர்கள் இன்னிசை பொழிய உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க முடியுமா? அவனுக்கென சொந்தமாக ஒரு சாஸ்த்ர சாலையை அவனால் ஏற்படுத்திக் கொள்ள இயலுமா?  அங்கே வித விதமான அம்புகள்  சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்க, அவன் வில்லின் நாணைச் சுண்டி விட, அது போடும் “ட்ர்ங்ங்ங்ங்” என்னும் சப்தமே காதுக்கு இனிமையாக இருக்குமே. அதை எல்லாம் எப்போது கேட்கப்போகிறான்?  தௌம்யரும் அவர்களுக்கு ஆசானாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டு, அவர்களைக் காம்பில்யத்துக்குச் செல்ல அநுமதி கொடுத்ததோடு ஆசிகளும் வழங்கினார்.  ஏதோ போர்க்களத்தில் போரிட்டு வெல்லப் போவதாக அவனுக்குத் தோன்றியது.  இதற்கு முன்னரும் பல அரசர்களும் இப்படியான சாகசங்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.  வெற்றியும் அடைந்திருக்கின்றனர்.  அனைவருக்கும் சொந்தமான ஆசாரியர்கள் இருந்து வழிகாட்டி ஆசிகளையும் தந்திருக்கின்றனர்.

என்றாலும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அவன் அறிந்திருக்கவில்லை. அவனுக்குள் ஒரு திருப்தியும் ஏற்படவில்லை.  கொஞ்சம் அமைதியின்றியே காணப்பட்டான்.  காம்பில்யத்தில் என்ன நடக்கப் போகிறது?  அவர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?  மேலும் உலகளவில் இப்போது அவர்கள் இறந்தவர்கள்.  கிருஷ்ணன் எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் அவர்களை உலகுக்குக் காட்டப் போகிறான்?  அவர்கள் இருப்பு எப்போது அனைவராலும் உணரப் படும்? எப்படி ஒரு விசித்திரமான நிலைமை அவர்கள் ஐவருக்கும்!  உயிருடன் இருக்கின்றனர்!  ஆனால் செத்துவிட்டனர்.  வேறு எவராவது அவர்களுக்கு சமிக்ஞை செய்தால் தான் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முடியும்.  புத்துயிர் பெற முடியும்.  கிருஷ்ண வாசுதேவனை அர்ஜுனன் மிகவும் மதிக்கிறான்;  அன்பும் செலுத்தி வருகிறான். ஆனால் இம்மாதிரி மறைந்திருந்து ஒருவர் வெளியே வரலாம் என சமிக்ஞை கொடுத்ததும் வெளியே தலைகாட்டுவதைப் போன்றதொரு அவமானகரமான நிகழ்வு வேறில்லை.  கிருஷ்ணன் பொருட்டல்லவோ இவை எல்லாம் சகிக்க வேண்டி உள்ளது!

அது மட்டுமா?  காம்பில்யத்தில் அவர்கள் தங்கி இருந்த குயவனின் குடிசை துர்நாற்றமடித்துக்கொண்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. எல்லாவற்றையும் விட மோசம் என்னவெனில்!  ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் ஆனால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட குடிசைகள், ஒரு குவியலாகக் காட்சி அளித்தன.  சுத்தமான ஆடை அணியாத சின்னஞ்சிறு குழந்தைகள்,  எந்த நேரமும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கழுதைகள், ஓயாது சுற்றிக் கொண்டிருந்த குயவர்களின் சக்கரங்கள், எங்கு பார்த்தாலும் மூத்திரநாற்றம், உவர்ப்பு மண்ணின் நாற்றம் என்று போதும் போதுமென்றாகி விட்டது.  அவனுக்கு ஒரு பிராமணனைப் போல் வேஷம் மாற்றிக் கொண்டு சுயம்வரத்தில் கலந்து கொள்வதிலும் விருப்பமே இல்லை.  அவன் விருப்பத்திற்கு விட்டிருந்தால் ஒரு யானையின் மேல் சவாரி செய்து கொண்டு வந்து கலந்து  கொண்டிருப்பான்.  ஆனால் பெரியண்ணா யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதிக்கவில்லை.  அவர் பிராமணர் வேஷத்தில் தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  கிருஷ்ணன் தோன்றி அவர்கள் உலகுக்குத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று சமிக்ஞை செய்ய வேண்டும். அது வரை பொறுத்துத் தான் ஆகவேண்டும். அதைத் தான் நம்முடைய குருவான வியாசமுனியும் சொல்லி இருக்கிறார்.  நாம் அதைத் தான் பின்பற்றியாக வேண்டும். யுதிஷ்டிரன் உறுதியாகத் தெரிவித்து விட்டான்.

இம்மாதிரியானதொரு நிலைமையைத் தன் சகோதரர்கள் எதிர்கொண்ட விதம் அர்ஜுனனுக்கு வெறுப்பையும், கோபத்தையும் அளித்தது.  யுதிஷ்டிரனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  எப்போதுமே பொறுமையாக இருப்பவன். எப்படிப்பட்ட கீழ்த்தரமான நிலையிலும் அதற்காகக் கவலைப்படாதவன். அதை அவமானமாகவே நினைக்க மாட்டான்.  எவ்வளவு மோசமான நிலையையும் சந்தோஷத்துடன் வரவேற்று ஏற்றுக் கொள்வான்.  இப்படி ஏற்படும் ஒவ்வொரு சோதனையான நிகழ்விலும் தாங்கள் ஐவரும் புடம் போடப்படுவதாகவும், பக்குவப்படுத்தப்படுவதாகவும் இதுவே தங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்த ஏற்பட்டதாகவும் நினைத்துக் கொள்வான். இதன் மூலம் பரிசுத்தம் அடைவதாகவும் சொல்வான். பீமனுக்கோ எனில் மனநிலை எப்போதுமே அலைபாய்ந்தது இல்லை.  எப்போதுமே எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்வதோடு அவற்றைக் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பான். எப்படிப்பட்ட இழிந்த நிலையிலும்  என்ன நடந்தாலும் அவன் மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துவான்.  நகுலனுக்குக் கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும் அவனுக்கு அவற்றை வெளிப்படுத்தும் வழக்கம் இல்லை.  சஹாதேவனோ தன் எண்ணங்களில் தானே ஆழ்ந்து போனவனாகக் காணப்படுவதோடு கேட்கப் படும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையிலேயே பதிலைக் கொடுப்பான். பொதுவாக அவன் மௌனமாகவே இருப்பான்.  தன் தாய் மற்றும் சகோதரர்களிடம் இப்படி ஒரு அன்பு வலையில் தான் சிக்கிக் கொண்டிருப்பதை நினைக்கையில் பல சமயங்களில் அர்ஜுனனுக்குக் கோபமும், எரிச்சலும் வரும்.  ஆனால் அதை உடைக்கவேண்டும் என அவன் நினைத்தாலும் அதை அவனால் செய்யமுடியவில்லை.   அவனால் எப்படி முடியும்?