Tuesday, July 29, 2014

துரோணருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சென்ற இரு அத்தியாயங்களில் கூறியவை மார்க்கண்டேய புராணத்திலிருந்தும் மற்றப் புத்தகங்களில் படித்தவைகளில் இருந்தும் தொகுத்து அளிக்கப்பட்டவை ஆகும்.  திரு முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரா புத்தகத்தில் இதைக் குறித்த தகவல்கள் கிடையாது.
இப்போது முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரான ஆசாரியர் துரோணர் இந்தத் திருமணம் குறித்து அறிந்ததும் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.  இது முன்ஷிஜி எழுதியவற்றிலிருந்து தருகிறேன்.

துரோணர் குரு வம்சத்தின் தலை சிறந்த ஆசாரியர், குரு வம்சத்தினரின் பிரதமத் தளபதியும் ஆவார்.  இரவு நேரம்!  தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரெனத் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தார்.  யுத்தசாலையின் வாயிலுக்கு அருகே இரண்டு, மூன்று ரதங்கள் வேகமாய் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. குதிரைகளை இழுத்துப்பிடிக்கும் ரத ஓட்டிகளின் குரல்களும், ரதங்கள் கிறீச்சிட்டு நிற்கும் தொனியும் கேட்கவே எழுந்த துரோணர் யாராக இருக்கும் என யோசித்தார். சோகை பிடித்தாற்போல் வெளிறிக் கிடந்த சந்திரன் தாமதமாய் வந்ததாலோ என்னமோ மெல்லிய வெளிச்சத்தைக் காட்டியபடி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான்.  அந்த மங்கிய வெளிச்சத்தில் சாளரத்தின் வழியே பார்த்த துரோணருக்கு அங்கே ரதங்கள் நிற்பவை நிழலைப் போல் தெரிந்தது.  வாயிற்காப்போனிடம் பேசிய குரல் எங்கேயோ கேட்ட குரலாக, பழக்கப்பட்ட குரலாகத் தெரிந்தது. ஹா!  அது ஷிகன்டினின் குரல் தான்.  துருபதனின் மகன், தன்னிடம் மாணாக்கனாகச் சேர்ந்தவன், ஆரம்பத்தில் ஆணா, பெண்ணா எனச் சந்தேகிக்கும்படி இருந்தவன், இப்போது முழு ஆணாக மாறிவிட்டான். அவன் குரல் தான் அது.

துரோணருக்குக்கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.  ஷிகண்டின் ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வந்துவிட்டானா?  சுயம்வரம் முடிந்து அதற்குள்ளாகவா? சுயம்வரத்தில் ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும்.  இல்லை எனில் இந்த நட்ட நடு இரவில் ஷிகண்டின் சுயம்வரம் முடிந்து சில நாட்களுக்குள்ளாக இங்கே வந்திருக்க மாட்டான்.  தன்னுடைய சீடன் ஷங்கா என்பவனை எழுப்பினார் துரோணர்.  அவன் எப்போதும் அவர் தூங்கும் இடத்துக்கு அருகிலேயே கூப்பிடும் தூரத்தில் படுப்பான்.  அவனை எழுப்பிய துரோணர் வெளியே யாரோ வந்திருப்பதாகவும், யார் வந்திருந்தாலும் அவர்களை உடனே உள்ளே அழைத்துவரும்படியும் கூறி அனுப்பினார். ஷங்கனும் வெளியே சென்றான்.  வெளியே சென்று கதவுகளை விரியத் திறந்த ஷங்கன், வெளுத்து, சக்தியெல்லாம் இழந்த நிலையில் இருந்த ஷிகண்டினை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.  மெல்லிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து வந்த ஷிகண்டின் துரோணரின் படுக்கைக்கு அருகே மண்டியிட்டு அவரை வணங்கி அவர் பாததூளியைத் தன் சிரசில் தரித்துக் கொண்டான்.

“ஷிகண்டின், என்ன விஷயம்?  நீ ஏன் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாய்?” என்று துரோணர் கேட்டார்.  ஷிகண்டினின் கண்களை ஏதோ மறைத்தது.  அவன் மயங்கி விழுந்துவிடுவானோ என்னும்படி தள்ளாடினான்.  அவனுடன் கூடவே வந்த ஸ்தூனகர்ணன் அவனைத் தாங்கிப் பிடித்து ஆசாரியரின் எதிரே அமர வைத்தான்.  ஷிகண்டின் தன் குரலே தனக்குக் கேட்குமா என்னும்படியான மெல்லிய குரலில் நடுங்கிய வண்ணம், “ஆசாரியரே, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் ஐவரும் என் சகோதரியை மணந்து கொண்டிருக்கின்றனர். “ மூச்சுவிடக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அவன் உடனே தன் நினைவற்று மயங்கி விழுந்து விட்டான். ஸ்தூனகர்ணன் அவனை மெல்லத் தூக்கி ஒரு படுக்கையில் கிடத்தினான். துரோணரின் மனைவி கிருபாதேவி ஒரு தாயின் பாசத்தோடு அவன் அருகே சென்று தலைக்கடியில் ஒரு தலையணையைக் கொடுத்து அவனைச் சரியாகப் படுக்க வைத்தாள்.  ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவன் வாயில் புகட்டினாள்.  முகத்தையும் துடைத்தாள்.  அவன் கண்ணிமைகளை நீரால் நனைத்தாள்.

துரோணர் இது எதையும் கவனிக்கவில்லை.  அவர் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தார்.  என்ன? பாண்டவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவரால் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை.  ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருப்பதோடு மட்டுமில்லை.  ஐவரும் திரௌபதியை மணந்திருக்கின்றனர்.  யக்ஷன் ஸ்தூனகர்ணன் பக்கம் திரும்பிய துரோணர், “இது உண்மையா?” என்று அவனைக் கேட்டார்.  யக்ஷன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டினான்.  “எப்படி? எப்படி?  எப்படி இது நடந்தது?  அவர்கள் ஐவரும் இறந்து விட்டனரே?” என்று துரோணர் மீண்டும் கேட்டார்.  ஆனால் ஸ்தூனகர்ணன் ஒரு நாளைக்கு இருபதே வார்த்தைகள் தான் பேசுவான். ஆகையால்  அவன் துரோணரிடம் ஷிகண்டினைச் சுட்டிக் காட்டி அவனிடம் கேட்குமாறு ஜாடைகள் காட்டினான்.  மேலும் ஜாடைகள் மூலம் தான் அன்றைய தினம் பேச வேண்டிய 20 வார்த்தைகளையும் பேசி முடித்துவிட்டதாகவும், இனி மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னரே தன்னால் பேசமுடியும் என்பதையும் தெரிவித்தான்.

துரோணர் கிருபாதேவியுடன் சேர்ந்து தானும் ஷிகண்டினை நினைவுக்குக் கொண்டுவர உதவி செய்தார். சற்று நேரம் முயன்றதும் ஷிகண்டின் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.  தன் எதிரே நிற்கும் ஆசாரியரைப் பார்த்து, அவருக்கு மரியாதை காட்டும் பாவனையில் மெல்ல எழுந்து உட்கார முயன்றான்.  அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. துரோணர் அவனிடம்   “ம்ஹூம், எழுந்து நிற்க முயற்சி செய்யாதே, மகனே!  நீ மிகவும் களைத்திருப்பதோடு,  உனக்கு உறக்கமும் அவசியம்.  நீ நீண்ட நேரம் தூங்கவும் வேண்டும்.  காலையில் நீ எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிக் கொள்ளலாம்.” என்று கூறினார். ஆனால் ஷிகண்டினோ மிகவும் முயற்சி செய்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். “இல்லை, ஆசாரியரே, மற்ற எவருக்கும் தெரிவதற்கு முன்னால் உங்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.”என்ற வண்ணம் கிருபாதேவி அளித்த நீரைப் பருகித் தனக்குக் கொஞ்சம் சக்தியை வரவழைத்துக் கொண்டான்.

“ஐந்து சகோதரர்களும் எவ்வாறு உயிருடன் இருந்தனர்? அவர்களை வெளிப்படுத்தியது யார்?”

“ஐயா, உத்தவன், என்னுடன் தான் வந்தான்.  ஆனால் விதுரரின் வீட்டுக்குப் போய்விட்டான்.  அவனுக்குத் தான் அனைத்தும் தெரியும்.  ஆனால் இது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.  சுயம்வரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அர்ஜுனன், பிராமணத் துறவி போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து போட்டியில் வென்று திரௌபதியை அடைந்தான்.”

“துரியோதனனுக்கு என்ன நடந்தது?”

“துரியோதனனால் நாணை இழுத்துக் கட்டக் கூட முடியவில்லை. உடைந்த இதயத்தோடு அவன் திரும்பி விட்டான்.  அஸ்வத்தாமாவுக்கோ வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை.  கர்ணன் தூக்கினான்.  நாணையும் இழுத்துக்கட்ட ஆரம்பித்தான்.  ஆனால் என் சகோதரி, ஒரு தேரோட்டி மகன் போட்டியில் கலந்து கொள்வதை அனுமதிக்கவில்லை.  மற்ற அரசர்களும் அப்படியே தோற்றுப் போனார்கள்.  ஆனால் அர்ஜுனன் முதல் முறையிலேயே மேலே சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணில் குறி பார்த்துத் தாக்கி அதைக் கீழே செயற்கைக் குளத்தில் தள்ளி விட்டான். “

“ஆனால் அவன் தான் அர்ஜுனன் என்பதை எப்போது அனைவரும் அறிந்து கொன்டனர்?”

“ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை தான்! அனைவருமே அவன் ஒரு பிராமணன் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் திரௌபதி அவன் போட்டியில் வென்றதும் அவனுக்கு  மாலையைப் போடப் போனாள். போட்டும் விட்டாள்.  அப்போது சில அரசர்களும், இளவரசர்களும் ஒரு பிராமணனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதன் மூலம் துருபதன் தங்களை அவமதித்து விட்டான் என அவனிடம் கூச்சல் போட்டனர்.  ஆக்ஷேபத்தைத் தெரிவித்தனர்.  அப்போது அர்ஜுனனின் மூத்த சகோதரர்களில் ஒருவனான பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக அர்ஜுனனின் உதவிக்கு வந்துவிட்டான். “

“ஓஹோ, அப்படி எனில் அங்கே அப்போது பீமனும் இருந்தானா?”

“ஆம், அவனும் இருந்தான். மற்ற சகோதரர்கள் மூவரும் அப்போது ஏற்பட்ட கூட்டத்திலும், கூச்சல், குழப்பத்தினாலும் அர்ஜுனன் அருகே வரமுடியாமல் தாங்கள் தங்கி இருந்த குயவன் வீட்டிற்கே திரும்பி விட்டனர் என நினைக்கிறேன்.”

“ஆனால் அர்ஜுனனை எப்படிப் புரிந்து கொண்டனர்?”

“ அதுவா? கிருஷ்ண வாசுதேவன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு அல்லாமல், பீமன் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  அப்போது தெரிந்து கொண்டனர்.”

“ஓஹோ, அப்படியா?  மீண்டும் கிருஷ்ண வாசுதேவன்!  அவனும் அங்கு இருந்தானா?  அப்படி எனில், இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருந்து செயல்பட்டிருப்பது அவன் தான்!  இல்லையா?  உன்னை இங்கே யார் அனுப்பினார்கள்?  யார் சொல்லி நீ எனக்குத் தெரிவிக்க வந்திருக்கிறாய்?”

“கிருஷ்ண வாசுதேவன் தான் சொன்னான்.  மேலும் ஐந்து சகோதரர்களும் தங்களுடைய  குரு, ஆசாரியர் என்னும் முறையில் பாண்டவர்களான தாங்கள் ஐவரும்  உயிருடன் இருப்பது முதல் முதலாக உங்களுக்குத் தான் தெரியவேண்டும் என விரும்பினார்கள்.  என் தந்தையும் உங்கள் ஆசிகள் திரௌபதிக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பினார்.”


3 comments:

sambasivam6geetha said...

shedule பண்ணினால் பப்ளிஷ் ஆகிவிட்டது. :))))

அப்பாதுரை said...

சில இடங்களில் பாதியில் நிற்பது போல இருக்கிறதே என்று நேற்று படிச்சப்போ நினைச்சேன்.

20 வார்த்தை பேசும் ஆசாமி சூப்பர். இதெல்லாம் படிச்சதேயில்லை.

ஸ்ரீராம். said...

மிக விரைந்த தகவல் தொழில் நுட்பம்!