Thursday, July 10, 2014

பார்வை துரத்தியது!

அதிர்ந்து போனான் துரியோதனன்.  அந்தச் சிரிப்பு.  பலமுறை கேட்ட சிரிப்பு. அங்கே நிலவி இருந்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு எழுந்த சிரிப்பு. அவன் எண்ணக் குகையில் அந்தச் சிரிப்பின் அடையாளம் ஆழப் பதிந்து கிடந்தது. அவன் மனமாகிய பிரகாரத்தில் அதன் எதிரொலிகள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தன.  இந்தச் சிரிப்பை அவன் அடிக்கடி கேட்டிருக்கிறான்.  அவனை அவமதிக்கும் வகையில் சிரிக்கும் சிரிப்பு இது.  அவனை எரிச்சல் படுத்த வைக்கும் சிரிப்பு இது.  அவனிடம் சவால் விடும் தோரணையில் எழும் சிரிப்பு இது. அவனை, திருதராஷ்டிரன் மூத்த மகன் துரியோதனனைக் கீழானவனாக நினைக்க வைத்த சிரிப்பு இது.  அவன் சிறுவனாக இருந்த போதிலும், பதின்ம வயதில் வளரும் பிராயத்தில் இருந்தபோதும் இப்போது வாலிபப் பருவத்தில் ஓரிரு ஆண்டுகள் முன்னரும் கேட்ட அதே சிரிப்பு இது.  இந்தச் சிரிப்பு ஒரே ஒருவரிடமிருந்து தான் வர முடியும்.  அது அவன் தந்தை வழிச் சிற்றப்பன் பாண்டுவின் மகன், துரியோதனனின்  சகோதரன் முறையான பீமனுடைய குரல். அவன் எண்ண ஓட்டத்தில் திடீரென ஒரு திகைப்பு, ஓர் எண்ணம்.  ஆனால்….ஆனால்….அப்படி இருக்க முடியாதே! வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவனைத் தான் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விட்டோமே! அவர்கள் ஐவருக்கும் கடைசியாக இறுதிக் காரியங்கள் கூட நடந்து முடிந்து விட்டதே! அவர்கள் ஐவரின் சாம்பலையும் கங்கையில் கரைத்தும் ஆகிவிட்டதே!

இது எங்கனம் நிகழ முடியும்?  துரியோதனன் உடலில் ஓர் நடுக்கம் பாய்ந்தது. அவன் முதுகுத் தண்டு சில்லிட்டது.  ஐவரும் உயிருடன் இருக்கிறார்களா? ஆஹா! அதிலும் அவர்கள் ஐவரும் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.  மீண்டும் அவனுக்குள் இந்த எண்ணம் ஓட திகில் அவன் நாடி, நரம்புகளில் எல்லாம் ஓடியது.  அவர்கள் ஐவரும் உண்மையாகவே உயிருடன் இருந்தால் அதன் விளைவுகள் மிகக் கொடியவையாக அன்றோ இருக்கும்.  ஒரு கண நேரம் அந்த விளைவுகள் அனைத்துமே அவன் கண்ணெதிரே ஒரு காட்சியாக ஓடி மறைந்தன.  மீண்டும் மிகவும் முயற்சி செய்து  இந்த எண்ணங்களை எல்லாம் தன் மனதிலிருந்து அகற்றினான். வில்லின் நாணை வளைத்து அம்பைத் தொடுப்பதில் முனைந்தான்.  அதிலே தன் முழு கவனத்தையும் பதித்தான். ஆனால்……ஆனால்…..இது என்ன?  சற்று நேரம் முன்னால் மிக சுலபமாகத் தோன்றிய ஒன்று இப்போது நினைக்கவே கடினமாக இருக்கிறதே! அவனால் முடியாது போல் தோன்றுகிறதே!  இதென்ன!  துரியோதனன் கைகள் நடுங்குகின்றனவே.  அவனால் சரியாகக் குறியைப் பார்க்கக் கூட முடியவில்லை.  கண்களை ஏதோ மறைக்கிறது.  அவனுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டது.  அவன் தோற்கப் போகிறான். ஆஹா!

இல்லை, இல்லை, அவன் தோற்கக் கூடாது;  தோற்க முடியாது.  அவனால் இந்தத் தோல்வியைத் தாங்க முடியாது. என்ன ஆனாலும் அவன் உயிரைக் கொடுத்தாவது இந்தப் போட்டியில் அவன் வென்றே ஆக வேண்டும்.  ஆனால் வில்லோ, அம்போ அவன் சொல்வதைக் கேட்கவே இல்லையே!  இது என்ன கொடுமை!  அம்பு அவன் கைகளிலிருந்து நழுவி அவனைக் காட்டிக் கொடுத்துவிடும் போல் உள்ளதே!  பற்களைக் கடித்த வண்ணம் அம்பை இறுகப் பிடித்து வில்லில் பொருத்தி நாணேற்றி குறியைத் தாக்க முயன்றான் துரியோதனன்.  ஆனால்….ஆனால்…அவன் எண்ணங்கள் இப்போது வேறு திசையில் பயணித்தன.  ஐவரும் உயிருடன் இருப்பது தெரிந்தால் ஹஸ்தினாபுரத்தில் கோலாகலமாக வரவேற்கப் படுவார்கள்.  மீண்டும் யுதிஷ்டிரனை யுவராஜா ஆக்கி விடுவார்களோ!  ஆம், அப்படித் தான் நடக்கும். அதிலும் தாத்தா பீஷ்மர் இதிலே தான் குறியாக இருப்பார்.  விதுரச் சித்தப்பாவும் ஆமோதிப்பார்.  ஒன்று மாற்றி ஒன்றாக வந்த இந்த எண்ணங்களை அவன் தன் தலையை உலுக்கிக் கொண்டு அகற்ற விரும்பினான்.  அவனுடைய நாடி, நரம்புகள் தளர்ந்து போயின.  அவன் கைகளோ, அல்லது விரல்களோ தங்கள் சாமர்த்தியத்தை இழந்து விட்டன.

வில்லின் நடுத்தண்டை இறுகப் பிடித்திருந்த அவன் கைகள் தளர்ந்து போக அவை அவன் கைகளிலிருந்து விடுபட்டன.  அதைத் திரும்பவும் பிடித்து தண்டை வளைக்க முனைந்தான்.  ஆனால் அவனால் இயலவில்லை.  மிக வேகமாக தண்டு பெரியதொரு சப்தத்துடன் நிமிர்ந்தது.   அவன் இடக்காலால் அழுத்திப் பிடித்திருந்த வில்லின் மற்றொரு நுனியானது அவன் பிடியிலிருந்து தளர்ந்து விட்டது. வில் தூக்கி அடிக்க துரியோதனன் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டுத் தன் நிலையை இழந்தான். கீழே முழுதும் விழுந்து விடாமல் இருக்கப்பெரும் பிரயத்தனம் செய்த துரியோதனன் அந்த முயற்சியில் தள்ளாடினான்.  தன்னைச் சமாளித்துக் கொண்டவனுக்கு அந்த மாபெரும் சபையிலிருந்து எழுந்த இகழ்ச்சி நிறைந்த கூச்சலைக் கேட்டுச் சகிக்க முடியவில்லை.  ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அலைகள் எழுப்பிய அலை ஓசை போல் கேட்ட அந்த சப்தத்தால் அவன் அந்தக் கடலின் ஆழத்துக்கே போய்விடுவானோ எனத் தோன்றியது.

கோபத்தை அடக்கிய வண்ணம் மீண்டும் குனிந்து வில்லை எடுக்க முனைந்தான்.  மீண்டும் அதன் தண்டை வளைத்து நாணை இறுகக் கட்டும் முயற்சியில் இறங்கினான்.  சுயம்வர மண்டபத்தில் மீண்டும் கூச்சல் , குழப்பம், சிரிப்புகள், கேலிப் பேச்சுகள்.  அவன் கைகளும், விரல்களும் தளர்ந்து விட்டன.  தண்டு வளைய மறுத்தது.  அவன் எவ்வளவு வலிமையுடன் தண்டை வளைக்க முயற்சித்தாலும் அவனை பலஹீனம் வந்து ஆட்கொண்டதை உணர்ந்தான்.  தண்டு மீண்டும் அவன் கைகளில் இருந்து நழுவியதோடு அல்லாமல் கீழேயும் விழுந்து அவனையும் சேர்த்துக் கீழே தள்ளிவிட்டது.  யாரோ கைகொட்டிச் சிரித்துவிட்டனர்.  சிரிப்புச் சப்தமும், கேலிப்பேச்சுகளும் அந்த சுயம்வர மண்டபத்தை நிறைத்தது.  ஆயிரமாயிரம் மன்னர்களின் கேலிச் சிரிப்பால் துரியோதனன் காதுகள் வலித்தன.  அவன்  முகம் கோபத்தால் சிவந்தது.  ஒரு குரல் அப்போது அங்கே கேட்டது!  அது மிகவும் தெளிவாகப் பேசியது.  ஆனால் வலிமை உள்ள சிங்கத்தின் கர்ஜனை போன்ற குரல்!  அது சொன்னது! “ ஒரு குருட்டுத் தகப்பனின் பிள்ளையால் இதற்கு மேல் என்ன செய்ய இயலும்?” என்றது. இது! இதே வார்த்தைகளை அவன் சிறு வயதில் இருந்து கேட்டு வந்திருக்கிறான்.  எழுந்த துரியோதனன் கோபத்தில் மனமும், கண்களும் பொங்கித் தவிக்க, தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தான்.  “நான் தோற்று விட்டேன்!’ என்னும் இந்த வாசகம் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் எதிரொலித்தது.

இத்தனை வருடங்களுக்குப் பின்னர் முதல்முறையாக துருபதனுக்குப் புன்னகை மலர்ந்தது.  தன் முகத்தின் புன்னகை மாறாமலேயே கிருஷ்ணன் அதைக் கவனித்துக் கொண்டான்.  திரௌபதியாலும் மகிழ்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை.  அவள் முகமும் புன்னகையால் மலர்ந்தது.  ஆனால் அப்போது தற்செயலாக துரியோதனனைப் பார்த்த போது அவள் புன்னகை அவள் முகத்திலேயே உறைந்து போனது.  அவன் முகம் மிகவும் வேதனையைச் சகிப்பதை எடுத்துக் காட்டியது.  பார்க்கவே பரிதாபமாகவும் காட்சி அளித்தான் அவன். ஆனால் அவன் கண்கள்!  அந்தப் பார்வை அது அவளுக்கு ஏதோ செய்தியைச் சொல்லாமல் சொல்லியது. முழு வெறுப்பையும் காட்டிய அந்தக் கண்கள்! திரௌபதியையே பார்த்த அந்தக் கண்கள்.  அந்தப் பார்வை அவளைத் திகைக்க வைத்தது.  மனம் பிறழ்ந்த ஒருவன் கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டான்.  அதே போல் மனம் பிறழ்ந்த நிலையில் அவளைக் கொலை செய்யும் வெறியில் காணப்பட்டது துரியோதனனின்  அந்தப் பார்வை.  இந்தப் பார்வையை திரௌபதி இனி வரும் நாட்களிலும் அவள் வாழ்க்கையின் முடிவு வரையிலும் கண்டே ஆகவேண்டும். அவள் வாழ்நாள் முழுதும் துரத்தப் போகும் பார்வை அது! அத்தகையதொரு பார்வையை துரியோதனன் கண்களில் கண்டாள்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்களால் பிரச்சனை ஆரம்பமாகி விட்டது...!

திண்டுக்கல் தனபாலன் said...

நேற்றைய பதிவை வாசித்தீர்களா...?

ஸ்ரீராம். said...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பற்றி ஒரு கருத்து உண்டு. எதிரணியை பலவிதமான விமர்சனங்களால் மனதளவில் பலவீனமாக அடித்து விடுவார்கள் என்று! இதை அப்போதே பீமன் செய்து விட்டான் போலும்! பாண்டவர்களிடம் நிறைய கள்ள ஆட்டம் இருக்கிறது போலும்! துரியின் அரக்கு மாளிகைக் கொலைச் செயல் சரியா என்று கேட்காதீர்கள்! அதுவும் தப்புதான்!!

பித்தனின் வாக்கு said...

mikavum arumai. ini varuvaikalukku kathu irukkinrom