Thursday, July 17, 2014

அநுமதி கொடு கிருஷ்ணா!

திரும்பத் திரும்ப யோசித்தாலும் தன்னால் இவர்களிடமிருந்து பிரிந்து செல்வதோ, அறுத்துக்கொண்டு விடுவதோ இயலாத காரியம் என்பது அர்ஜுனனுக்கு நன்கு புரிந்தது.  அவன் ஏதேனும் முன்னேற்றம் அடைய விரும்பினால் அது அவர்கள் ஐவருக்கும் சேர்த்துத் தான் இருக்க முடியும்.  ஏதேனும் நல்ல வழியில் போக விரும்பினாலும் ஐவருக்கும் சேர்த்துச் செல்லும்படியாகத் தான் அவனால் சிந்திக்க முடியும்.  அதை அவன் எப்படிச் செய்யப் போகிறான்!  அவனால் தான் இது நடக்க வேண்டும். இந்தக் கேள்வி அவனை எப்போதும் அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கிறது.  இதற்கு பதிலை அவனால் சொல்ல முடியவில்லை. அவன் தாயுடனோ மற்ற சகோதர்களுடனோ அவன் இதைப் பகிரவும் முடியவில்லை.  அவனே தான் இதற்கு ஒரு பதிலைக் கண்டு பிடித்து ஆகவேண்டும்.  அர்ஜுனன் முடிவு கட்டினான்.  அதுவும் காம்பில்யத்தை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருக்கையில் பல சமயங்களிலும் அர்ஜுனன் தனித்து விடப்பட்டான். அப்போது அவன் தனக்குத் தானே சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.

அவன் வேண்டுவது என்ன? புகழும், பெரும் சிறப்புமா? ஆம், அவனுக்குப் பெரும் புகழும் வேண்டும்;  சிறப்பும் வேண்டும்.  இன்பமும் சந்தோஷமும் வேண்டுமா?  ஆம், அதுவும் வேண்டும்!  வலிமையும், மாபெரும் சக்தியும் பெற வேண்டுமா?  ஆம், ஆம் அவனுக்கு அதுவும் வேண்டும். அதெல்லாம் சரி தான். அவன் சுயம்வரத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அவன் பெரியப்பன் வழி சகோதரன் ஆன துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் அவமதிப்பைச் செய்யப் போகிறானா? அவர்களைப் பல விதங்களிலும் அவமானம் செய்யத் திட்டம் போடப் போகிறானா? ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களின் மாபெரும் பரிசுகளையும் அவன் ஒருவனே அடையப் போகிறானா? ஆம், அவன் இவை அனைத்தையும் விரும்புகிறான். எல்லோருக்குமே அபிலாஷைகள் உண்டு.  அவை உயர்ந்தவையாகவும் இருக்கலாம்;  தாழ்ந்தவையாகவும் இருக்கலாம்.  ஆனால் அவன் இவற்றோடு எல்லாம் திருப்தி அடையப் போவதில்லை.  இவை அனைத்துக்கும் மேல் அவனுக்குத் தேவையானது வேறு. அவன் வாழ்நாளில் இழந்ததை எல்லாம் பெற விரும்புகிறான்.  அவன் அவனாக சுயம் அழியாமல் இருக்க விரும்புகிறான்.  அது ஒன்றே ஒரே நிவாரணம்.  ஒரே தீர்வு.

தீர்க்க இயலாத இந்தப் பிரச்னையைத் திரும்பத் திரும்ப யோசித்த அர்ஜுனன் மனம் உறுதியின்மையில் மூழ்கித் தத்தளித்தது.  அதிலிருந்து அவன் கரையேற விரும்பினான்.  தன்மேலேயே அவனுக்குக் கோபம்.  எப்போதும், எந்தக் காரியத்திலும் அவன் பிறரை நம்பியே வாழ வேண்டி உள்ளது. ஆசாரியர் வியாசர், அல்லது விதுரச் சித்தப்பா அல்லது கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரால் அளிக்கப்படும் ஏதேனும் ஒரு சமிக்ஞை, அல்லது சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வாழ்க்கையில் சரியான இடத்தில் அமர முடிகிறது. இம்மாதிரியான எண்ணங்களால் நிரம்பப்பட்டே அவன் தன் சகோதரர்களுடன் சுயம்வர மண்டபத்தை அடைந்தான்.  இப்போது அனைத்துமே உண்மையாக அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறது என்பதையும் அர்ஜுனன் உணர்ந்தான்.  ஆனால் எப்போது? எப்படி?  எப்போது கிருஷ்ணன் அவர்கள் உயிருடன் இந்த உலகில் இருப்பதை அறிவிக்கப் போகிறான்?  அவர்கள் ஜீவனுள்ள வாழ்க்கையை எப்போது வாழ ஆரம்பிக்கப் போகின்றனர்!

சுயம்வர மண்டபத்தில் நுழைந்த அர்ஜுனன் அங்கே வீற்றிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள் அனைவரையும் பார்த்தான்.  அனைவரும் ராஜாங்க உடை தரித்து, நல்லாபரணங்கள் பூண்டு, தங்கள் பரிவாரங்களோடு சகலவிதமான ராஜ மரியாதைகளும் அளிக்கப்பட்டு வீற்றிருந்தனர். அவர்களுடைய ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடங்களும், மாலைகளின் விலை உயர்ந்த கற்களும், நன்கு செப்பனிடப்பட்டு எண்ணெய் தடவிப் பளபளத்த வாட்களும், மற்ற ஆயுதங்களும் ஜொலித்த ஜொலிப்பில் அர்ஜுனன் கண்கள் மட்டும் கூசவில்லை;  தங்கள் அற்பமான நிலையை நினைத்து அவன் மனமும் கூசியது.  சொல்லப் போனால் அத்தனை மன்னர்களிடமும் அவனுக்குப் பொறாமை  பீறிட்டெழுந்தது.  எல்லாம் சரியாக இருந்திருந்தால், அவனும் அவர்களில் ஒருவனாக ராஜாங்க உடை தரித்து ஹஸ்தினாபுரத்து இளவரசனாக தன்னுடைய அருமை வில்லுடனும், அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணியோடும் இங்கே வீற்றிருப்பான்.  இத்தனை இளவரசர்களிலும் அவனைப் போல் இளமை, வடிவம், வீரம், துணிச்சல், சுறுசுறுப்பு நிறைந்த இளவரசன் இருக்க மாட்டான். வெகு எளிதாக சுயம்வரத்தில் வென்று திரௌபதியை அடைந்திருப்பான்.  ஆனால், எல்லாம் தங்கள் பெரியப்பன் மகன் துரியோதனனால் பாழாகி விட்டது.  அவன் ஒரு அரசகுமாரனாக இங்கே வந்து கலந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு விட்டது.


வேறு வழியில்லாமல் அவர்கள் பிராமணர்களோடு கலந்து உட்கார்ந்து கொண்ட சமயம் ஒரு வாயாடியான பிராமணன் அங்கே வந்திருக்கும் அரசர்கள், மன்னர்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள் அனைவரையும் குறித்து விளக்கிச் சொன்னான். அப்போது அங்கே வீற்றிருந்த அரசர்களிடையே தன் பெரியப்பன் மகன்களை அர்ஜுனன் உடனடியாக அடையாளம் கண்டு கொண்டான்.  ஆஹா!  அவர்கள் மட்டும் தனியே அவன் கைகளில் சிக்கிக் கொண்டால்!  அர்ஜுனன் கைகளை முறுக்கினான்! அவர்களை எப்படி நசுக்கிக் கொன்றிருக்கலாம்!  என்னையும் என் சகோதரர்களையும் உயிருடன் எரிக்க முற்பட்ட இவர்களைச் சும்மா விடுவதா? ம்ஹூம், இப்போது ஒன்றும் செய்ய முடியாது!  அதோ, கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் மற்ற யாதவத் தலைவர்களுடன் வந்து அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர்.  கிருஷ்ணன், எங்களை எப்போது இந்த உலகுக்கு நாங்கள் உயிருடன் இருப்பவர்கள் என அறிவிப்பான்? நமக்கு நாமே சுதந்திரமாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு முடிவை நமக்காப் பிறர் எடுப்பதும் அவர்கள் அதை அறிவிக்கக் காத்திருப்பதும் மிகவும் தொந்திரவும், கஷ்டமும் கொடுக்கும் ஒரு வேலை.  இதற்காகக் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

அதற்குள் சங்குகளும், எக்காளங்களும் முழங்க, பேரிகைகளும், முரசங்களும் ஒலிக்க இளவரசி திரௌபதி தன் தமையன் த்ருஷ்டத்யும்னனோடு சுயம்வர மண்டபத்தினுள் நுழைந்தாள்.  அவளுக்குத் துணையாகச் சில இளவரசிகளும் காணப்பட்டனர்.  திரௌபதியைக் குறித்து அவனுக்குக் கூறி இருந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்தான் அர்ஜுனன்.  அவன் எதிர்பார்த்தது மிகவும் கர்வம் கொண்ட, அபிலாஷைகளால் நிரம்பிய, எதற்கெடுத்தாலும் கோபம் அடையும் ஒரு படபடப்பு மிகுந்த பெண்ணை.  அப்படித் தான் அவன் காம்பில்யம் வரும் வழியில் அனைவரும் பேசிக் கொண்டனர்.  ஆனால் இங்கேயே நேர்மாறாக அன்றோ பார்க்கிறான்!  இங்கே அவன் பார்த்ததோ சுறுசுறுப்பும், அழகும், நளினமும், எளிமையும், நேர்மையும் கண்களில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் ஒரு அழகான பெண்ணை! அவன் இது வரை பார்த்த பெண்களிலேயே இவளைப் போன்ற ஒருத்தியை அவன் பார்த்திருக்கவில்லை. அவள் முகம் தனித்தனியாக அவன் மனதில் பதிந்தது.  அவள் கன்னங்களின் சிவப்பு, பெரிய கடல் போன்ற பேசும் கண்கள், அவற்றில் நீந்தும் மீன்களைப் போன்ற கண்மணிகள், மாதுளம்பழத்தைப் பிளந்தாற்போல் தெரிந்த சற்றே திறந்திருந்த சிவந்த உதடுகள், அவற்றின் உள்ளே முத்துக்களைப் போன்ற பற்களின் வரிசை, அவளுடைய நீண்ட கூந்தல், அதில் பின்னப்பட்டிருந்த பின்னல்கள், அவள் சூடியிருந்த பூக்கள், கழுத்தில் அணிந்திருந்த வாசனையான மாலை, எடுப்பான மோவாய், கீழ் உதட்டுக்குக் கீழே தெரிந்த சின்னஞ்சிறு குழி, அந்த மோவாயும், அதில் தெரிந்த சின்னக் குழியுமே அவள் தீர்க்கமான முடிவை எடுப்பவள் என்றும், தைரியமானவள் என்பதையும் சொல்லாமல் சொல்லியது.  இவ்வளவு அழகான இளம்பெண்ணை அவன் அன்று வரை பார்த்தது இல்லை.  அழகான இளம்பெண்!  வாழ்க்கையை ரசனையோடு அனுபவிப்பவள் என்பதும் புரிந்தது அர்ஜுனனுக்கு. அகம்பாவமே இல்லாத, கர்வம் துளியும் இல்லாத அரசகுமாரிகளுக்கே இருக்கும் இயல்பான கம்பீரத்துடன் இருக்கும் அவளைப் பார்த்ததுமே அர்ஜுனனின் மனம் கவி பாட ஆரம்பித்துவிட்டது!  ஆஹா!  இவள் மட்டும் எனக்குக் கிடைத்தால்!


அரசர்கள் ஒவ்வொருவராகப் போவதும், முயற்சிகள் செய்வதும், தோற்றுத் திரும்பி வருவதுமாக இருந்தார்கள்.  அர்ஜுனன் அனைத்தையும் பார்த்தான்.  பல அரசர்களாலும் அந்த மாபெரும் வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. அனைவருமே அந்த வில்லைச் சரியான முறையில் தூக்க முயலவில்லை என்பதை அர்ஜுனன் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான்.  வில்லை இப்படித் தான் தூக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்னும் அவா அவனுள் எழுந்தது.  அவனால் ஒரே நொடியில் அந்த வில்லைத் தூக்க இயலும்,  அவன் அதற்கு அங்கே செல்ல வேண்டும்.  ஆனால்! காத்திருக்க வேண்டும்.  அவன் செல்லலாம் என்பதற்கான சமிக்ஞை கிடைக்கும் வரை அவன் செல்ல முடியாது.  யாரோ கொடுக்கப் போகும் அந்த சமிக்ஞைக்கு அவன் காத்திருந்து தான் ஆக வேண்டும். துரியோதனன் கலந்து கொள்ள எழுந்ததுமே அவன் மனம் மிகவும் கசந்து வழிந்தது.  இங்கே அவன், அர்ஜுனன், ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்லாளி எதுவும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் பெரியப்பா மகன் இந்தப் போட்டியில் ஜெயித்துத் திரௌபதியை மணந்து விடுவானா?


துரியோதனன் வீணாக வில்லைத் தூக்கி நாண் ஏற்றி அம்புகளைப்பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவன் தடுமாற்றங்களைக் கண்டு பீமனால் சும்மா இருக்க முடியவில்லை.  தன்னை மீறி… தன்னை மறந்து அவன் சிரித்துவிட்டான். அவன் சிரிப்பு சுயம்வர மண்டபம் முழுமையும் எதிரொலித்தது.  துரியோதனன் தோல்வி அடைந்தான்.  அவமானகரமான தோல்வி.  சுயம்வர மண்டபமே அவனைப் பார்த்துச் சிரித்துக் கெக்கலி கொட்டியது.  அர்ஜுனனுக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் அவனுக்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது.  அவன் யாதவர்கள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் திரும்பி அங்கே அசையாமல் ஒரு கடவுளைப் போல் அமர்ந்து கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்தான். அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.  அவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி பரவி இருந்தது போல் தோன்றியது அர்ஜுனனுக்கு.


2 comments: