Monday, July 28, 2014

திரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது?

பாஞ்சாலி ஏன் ஐந்து பேரை மணக்க நேர்ந்தது என்னும் கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.  ஆனால் சில காரியங்களுக்குக் காரணமோ, அல்லது அது ஏன் நடக்கிறது என்பதோ நமக்குத் தெரியவே போவதில்லை.  இந்த சந்தேகம் புதுசா நமக்கு மட்டும் ஏற்படவில்லை.  வியாசரின் சீடராக வியாசரோடு கூடவே இருந்து இந்நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஜைமினி முனிவருக்கும் ஏற்பட்டது.  மார்க்கண்டேயரை அணுகிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தப்பட அவரும் மார்க்கண்டேய முனிவரை அணுகிக் கேட்டார்.  மார்க்கண்டேயரோ விந்திய மலையில் இருக்கும் நான்கு பறவைகளைக் கேட்கும்படி சொல்கிறார்.  அந்த நான்கு பறவைகளும் வேதம் ஓதிக் கொண்டிருந்தன.  ஒரு சாபத்தால் துரோணரின் மகன்களான அவர்கள் பறவைகள் ஆகிவிட்டதாயும் கூறினார். (இவர் மஹாபாரத துரோணர் இல்லை!)

அந்தப் பறவைகளிடம் சென்று ஜைமினி மஹாபாரதத்தில் உள்ள தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாய்க் கேட்டார். முதல் கேள்வியே பாஞ்சாலி ஐவரை மணந்தது குறித்துத் தான். அதற்கு அந்தப் பறவைகள்  சொன்ன மறுமொழியாவது.  தேவேந்திரனுக்கும் தேவகுரு பிரஹஸ்பதிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் பிரஹஸ்பதி மறைந்துவிட, தேவேந்திரன் குரு இல்லாமல் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபனைத் தன் குருவாய்க் கொண்டான். விஸ்வரூபனோ அசுரர்களிடம் பிரியம் உள்ளவன்.  ஆகவே தேவர்களுக்கான அவிர் பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வர, இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் விஸ்வரூபனைக் கொன்றுவிடுகிறான். கோபம் கொண்ட துவஷ்டா தன் ஜடாமுடியிலிருந்து விருத்திராசுரனை உருவாக்குகிறான். விருத்திராசுரனிடம் நட்புப் பாராட்டி நயவஞ்சகமாய் அவனையும் தேவேந்திரன் கொல்கிறான்.

தேவேந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்ள, அவன் பலத்தில் பாதி, யமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்றடைகிறது.  அசுரர்களுக்கும், தேவர்களுக்கும்மீண்டும் போர் ஆரம்பிக்க மஹாவிஷ்ணு பூமி பாரம் குறைக்கக் கிருஷ்ணனாய் அவதரித்தார்.  அவருக்குத் துணையாக தேவேந்திரனைப் பாண்டவர்களாய்ப் பிறக்க வைத்ததாக ஐதீகம்.  தேவேந்திரனின் பெருமை யுதிஷ்டிரனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அஸ்வினி தேவர்களின் அழகு நகுல, சகாதேவர்களாகவும் பிறப்பு எடுத்ததாகச் சொன்னது அந்தப் பறவை.  ஆகவே பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்லப் பட்டாலும்  அவள் திருமணம் செய்து கொண்டது ஒருவரைத் தான் என்றும் கூறியது.

இது மார்க்கண்டேய புராணத்தில் உள்ள கதை.  ஆனால் திரௌபதி முந்தைய பிறவியில் நளாயினியாக இருந்தாள் எனவும் கூறுவார்கள்.  நளனின் மகள் ஆன நளாயினி விதி வசத்தால் மௌட்கல்ய முனிவரை /(சிலர் முனிவர் பெயர் கௌசிகர் என்பார்கள்.)மணந்து கொள்ள நேரிடுகிறது.  தொழு நோயால் பீடிக்கப்பட்ட முனிவர் அவளை மிகவும் பாடாய்ப் படுத்தி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்குகிறார்.  ஒரு சமயம் முனிவர் தனக்கு இஷ்டமான தாசி ஒருத்தரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு நளாயினியிடம் கட்டளை இட, அவளும் அவரை ஒரு கூடையில் வைத்துத் தலையில் தூக்கிச் சென்றாள்.  அப்போது  அங்கே கழுவில் ஏற்றப்பட்டிருந்த மாண்டவ்ய ரிஷியின் மேலே கூடை இடிக்க, மாண்டவ்யர் வலி பொறுக்க முடியாமல், "காலை சூரியோதயத்துக்குள்ளாக மௌட்கல்ய ரிஷி தலை வெடித்து இறக்கட்டும்!" என சாபம் கொடுத்துவிடுகிறார்.

இதைக் கேட்ட நளாயினி தான் பத்தினி என்பது உண்மையானால் நாளை சூரியனே வரக் கூடாது என ஆணையிடுகிறாள்.  மறுநாள் சூரியனே உதிக்கவில்லை.  உலகம் இருட்டில் மூழ்குகிறது.

4 comments:

ஸ்ரீராம். said...

துரோணர் டபுள் ஆக்ட் வேறயா! ம்ம்ம்...

முதல் வெர்ஷன் கதை படி திரௌபதி முன்பிறவியில் யார்?

sambasivam6geetha said...

ஶ்ரீராம், பறவைகளின் தந்தை துரோணர் வேறு, மஹாபாரத ஆசாரியர் துரோணர் வேறு. ஒரே பெயரைப் பலரும் வைத்துக்கொள்வது சகஜம் தானே. அப்படித் தான் இதுவும்.

sambasivam6geetha said...

முதல் வெர்ஷன் கதைப்படி திரௌபதி இந்திரன் மனைவியான இந்திராணி என்ற சசிதேவி. துருபதனுக்கு யாகத்தீயில் தோன்றுகிறாள். கர்ப்பத்தில் உதிக்கவில்லை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_5.html?showComment=1407198730380#c3047236352083437617

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-