Friday, January 31, 2014

பலராமன் சிந்திக்கிறான்!

பின்னர் தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வு தலை தூக்க பலராமன், “ அது சரி, கண்ணன் அவன்மனைவியை விட்டு என்னைத் தொந்திரவு செய்து காலைத் தூக்கம் என்ற இனிய நேரத்திலிருந்து என்னை எழுப்ப வைப்பானேன்?  அதற்காகவே இந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருப்பானோ?” என்றான்.  ஆனால் அவனுடைய இந்த நகைச்சுவையை இருவருமே ரசிக்கவில்லை என்பதை அவர்கள் முகமே காட்டிக் கொடுத்தது.  சுதாரித்துக் கொண்ட பலராமன், கொஞ்சம் நிதானத்துக்கு வந்து,  விளையாட்டில்லாமல் பேச ஆரம்பித்தான்.  இன்னும் வேறு ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது;  தன்னுடைய இந்தப் பேச்சு அவர்களை அதைச் சொல்ல விடாமல் தடுக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட பலராமன், “இன்னும் என்ன சொன்னான்?” என்று கேட்டான்.  ருக்மிணி தாங்கள் மூவரைத் தவிர அங்கே ஒருவரும் இல்லை என்பதை மறுபடியும் நிச்சயப்படுத்திக் கொண்டாள்.  “அவர் உங்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறச் சொல்லிச் சென்றார்.  ஹஸ்தினாபுரத்தின் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதிக்கும் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.  அது….அது……. ஐந்து சகோதரர்களும் சுயம்வரம் நடைபெறும்போது உயிருடன் தோன்றுவார்கள் என்பதே!”

தன் கண்களை ஆச்சரியத்தில் விரித்த பலராமன், “தன்னுடைய இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியா அவன் சென்றிருக்கிறான்?” என்று கேட்டான். “உங்களால் அவருக்கு உதவ முடியவில்லை; யாதவர்கள் எவராலும் இயலவில்லை.  யாருக்கும் மனம் இல்லை.  ஆனால் அவர் தான் மேற்கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின் வாங்குபவர் அல்ல. எப்படியேனும் நிறைவேற்றுவார்.” என்றாள் ருக்மிணி.  இதைச் சொல்கையில் அவள் கோபம் வெளிப்பட்டது.   “ஆக, அவன் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளச் சென்றுவிட்டான்? அல்லவா?” பலராமன் கேட்டான்.

“அவர் நிரந்தரமாக நம்மை விட்டுச் சென்று விட்டார்.  எனக்கு அவரை நன்கு தெரியும்.” இதைச் சொல்கையில் நிராசையிலும் துக்கத்திலும் ஏற்பட்ட மனக்கசப்பில் ருக்மிணியின் குரல் தழுதழுத்தது.  “ஆனால் அவன் ஏன் நிரந்தரமாக நம்மை விட்டுப் பிரிய வேண்டும்?” பலராமனுக்கு இவை எல்லாவற்றையும் கேட்டதும் குழப்பமே அதிகரித்தது.  இவை எல்லாம் எதைக் குறிக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை.  ருக்மிணி,”அவர் கடைசியாக என்னிடம் என்ன சொன்னார் என்பது தெரியுமா?  அவர் சொன்னார்: “நான் யார் யாருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேனோ அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.  நான் சொன்னவை அனைத்தும் உண்மை என்றும் என் வாக்குறுதிகள் உண்மை என்றும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.  அவை உண்மையாகவே நிலைபெற்றிருக்கும். “  மேலும் அவர் சொன்னார்,


 “ இவ்வளவு நாட்களாக நான் தர்மத்தை என் பக்கம் இழுக்க முயன்று கொண்டிருந்தேன்;  ஆனால் இன்று தர்மம் என் பக்கம் வந்துவிட்டது.  யாதவர்கள் தர்மத்தை ஏமாற்ற விரும்பினால், வஞ்சிக்க விரும்பினால், நான் தர்மத்தின் பக்கம் எவர் இருக்கிறார்களோ, அங்கே அவர்களைக் கண்டு கொண்டு சென்று விடுவேன். “ மூத்தவரே, இதைச் சொல்லிவிட்டு அவர் விரைந்து விட்டார்.  என் பிரபு, என் பிரபு, மீண்டும் இங்கே உங்களை எல்லாம் பார்க்க வரப் போவதில்லை.  அதிலும் நீர், மற்றவர்களை விட ஒரு படி மேலே போய் அவரைக் கஷ்டமான சூழ்நிலையில் தள்ளி விட்டீர்கள்.”  இதைச் சொன்ன ருக்மிணி அப்படியே சரிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள்.


“ஆஹா, என் பிரபு, என் பிரபு, அவருக்கு என்ன நடக்கப்போகிறதோ, தெரியவில்லையே!  அவர் திரும்ப உங்களிடம் எல்லாம் வந்து நிற்க மாட்டார் என்பதை நான் நன்கறிவேன்.  நீங்கள் அனைவருமாகச் சேர்ந்து கொண்டு அவரைத் தோற்கடிக்க வைத்துவிட்டீர்கள்.  அவரை ஏற்காமல் மறுத்து விட்டீர்கள். அதிலும் நீர், அவரின் மூத்த சகோதரர், உடன் பிறந்த சகோதரர் அவரை வெளியேற வைத்துவிட்டீர்கள்.” இந்த அதீதமான உணர்ச்சிப் பிரவாகம் தாங்க முடியாத ருக்மிணி அப்படியே மயங்கி விழுந்தாள்.


ரேவதி அவளை மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள். பலராமன் எழுந்து ஒரு குவளை நிறையக் குளிர்ந்த தண்ணீரால் தன் முகம், தலையை நனைத்துக் கொண்டு முதல் நாளிரவு குடித்ததினால் இன்னும் மிச்சம் இருந்த குடி மயக்கத்தைத் தீர்த்துக் கொண்டான்.  சிங்கம் தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொள்வது போல் சிலிர்த்துக் கொண்ட பலராமன் ஒழுங்கற்ற தன் தாடியையும் தன் கைகளால் தடவிக் கொடுத்தான்.  முள்ளம்பன்றியின் கூரிய முட்களைப் போலிருந்த அந்தத் தாடி குத்தியதோ என்னமோ, திடீரென ரேவதியைப் பார்த்து, “அந்த சாத்யகி எங்கே, எப்படி, ஏன் ஓடிப் போனான்? எனக்குப் புரியவே இல்லை!” என்றான்.


“பொறுங்கள் பிரபுவே.  ருக்மிணி சொல்வது தான் சரி.  சாத்யகி எங்கும் ஓடிப் போகவில்லை.  அவனைக் கொலை செய்திருக்க வேண்டும் அல்லது கடத்தப்பட்டிருக்க வேண்டும்.” என்றாள் ரேவதி.  “யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறது?” என்றான் பலராமன்.  ஒரு இளைஞன்;  அதுவும் வீரம் மிகுந்த இளைஞன்;  யாதவ இளைஞர்களின் அன்பைப் பெற்றவன்;  ஒரு தலைவனாக உருவாக வேண்டிய குணாதிசயங்கள் நிரம்பியவன். உக்ரசேனருக்கும், வசுதேவருக்கும் அடுத்தபடியாகத் தலைவனாக வேண்டிய நிலையில் இருப்பவன். அப்படிப்பட்ட சாத்யகியைக் கொன்றுவிட்டார்கள் என்பதோ அல்லது கடத்திவிட்டார்கள் என்பதோ, அதுவும் துவாரகையில். யாதவர்களின் சொந்த பூமியில்!  நம்பக் கூடியதாக இல்லையே!  ஏதோ தெய்வக் குற்றமோ?  யாரேனும் தெய்வ நிந்தை செய்துவிட்டார்களோ? இல்லை எனில் இது எப்படி நடந்தது?

பின்னர் கோவிந்தனின் வெளியேற்றத்தின் பாதிப்பு எல்லாம் ஒருசேர பலராமனைத் தாக்கியது.  தன் கண்களை மூடிக் கொண்டான்.  பின்னர் கண்களைத் திறந்து பார்த்து, “ருக்மிணி நீ சொல்வது சரியே.  நான் தான், என்னால் தான் கோவிந்தன் வெளியேறிவிட்டான்.  நாங்கள் அனைவரும் சேர்ந்து அவனைத் தோற்கடித்துவிட்டோம்.  அவனைக் கைவிட்டு விட்டோம். அதனால் தான் அவன் வெளியேற நேர்ந்தது!’ என்றான்.  இதைச் சொல்கையில் அவன் தன்னைத் தானே நொந்து கொள்கிறான் என்பது அவன் கம்மிய குரலில் இருந்து தெரிந்தது.


Thursday, January 30, 2014

பலராமனின் கோபம்!

ருக்மிணி மிகுந்த மனக் கலக்கத்தில் இருந்தாள்.  அவளுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை.  அவள் உடனே ஷாய்ப்யாவின் அந்தப்புரத்துக்கு விரைந்தாள்.  ஷாய்ப்யா தூங்கிக் கொண்டிருந்தாள்.  அவளை எழுப்பிய ருக்மிணி, “ஷாய்ப்யா, பிரபு சென்றுவிட்டார்!” எனத் தழுதழுத்த குரலில் கூறினாள்.  ஒன்றும் புரியாமல் விழித்த ஷாய்ப்யாவிடம், ருக்மிணி தனக்கும், கண்ணனுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்ர்த்தைகளை விவரித்தாள். ஷாய்ப்யா இயல்பாகவே தன்னம்பிக்கை நிறைந்தவள்.  அதோடு விரைவில் உணர்ச்சிவசப்படாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவள். ஆகவே அவள் கிருஷ்ணன் செய்த காரியத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொண்டாள்.  ருக்மிணியிடன் உடனே பலராமனிடம் சென்று கிருஷ்ணனின் செய்தியைக் கூறுமாறு அறிவுரை கொடுத்தாள்.  மேலும் அவளே நேரில் சென்று தேவகி அம்மாவிடமும், வசுதேவரிடமும் செய்தியைக் கூறுவதாய்ச் சொன்னாள்.

தன் உடையைக் கூடச் சரிப்படுத்திக்கொள்ள மனமில்லாமல் விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருதி ருக்மிணி விரிந்த தலையுடன் பொறுமை சிறிதும் இன்றிப் பக்கத்து மாளிகையில் இருந்த ரேவதியின் அந்தப்புரம் சென்றாள்.  ரேவதியை எழுப்பச் சொன்னாள்.  ரேவதி வந்ததும், “நான் மூத்தவரைச் சந்திக்க விரும்புகிறேன் ரேவதி.  உடனே அவரைப் பார்க்க வேண்டும்.  எங்கள் பிரபு சென்றுவிட்டார்.  அவர் மூத்தவருக்கு ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். உடனடியாக அவரிடம் இந்தச் செய்தியை நான் சொல்ல வேண்டும்.” என்றாள் ருக்மிணி.  பலராமனை இவ்வளவு சீக்கிரம் எழுப்புவதற்கு ரேவதி மிகவும் யோசித்தாள்.  இரவு முழுதும் சூதாட்டங்களிலும், மது விடுதிகளிலும் யாதவத் தலைவர்களோடு உல்லாசமாகப் பொழுது போக்கிவிட்டு நடு இரவு சென்ற பிறகே அரண்மனை திரும்பும் வழக்கம் உள்ள பலராமன் சூரியன் உச்சிக்கு வரும்போது தான் எழுந்திருப்பது வழக்கம்.  ஆகவே ரேவதி தயங்கினாள்.  ஆனால் ருக்மிணி மேலும் மேலும் வற்புறுத்தவே ரேவதி பலராமனை எழுப்பினாள்.  தன் வலிமை வாய்ந்த பெரும் உடலைத் தூக்கிக் கொண்டு மிகுந்த சிரமத்துடனேயே எழுந்தான் பலராமன்.  அரைத்தூக்கத்தில் இருந்த பலராமன் மிகவும் மந்தமான மனநிலையுடனே சிரிப்பு இல்லாத முகத்துடன் காணப்பட்டான்.  அவன் மூக்கு மட்டும் சிவந்து வீங்கி இருந்தது தனித்துத் தெரிந்தது.

தன்னுடைய தூக்கத்தைக் கலைத்ததற்கு  ரேவதியிடம் கத்தினான் பலராமன். அந்த அரைத் தூக்க நிலையிலேயே மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தவன் காதுகளில் திரும்பத் திரும்ப ரேவதி கூறிய ஏதோ ஒரு விஷயம் வந்து மோதின.  அரைத் தூக்கத்திலேயே மீண்டும் ரேவதி சொல்வதைக் கேட்டவனுக்கு அவள், “பிரபுவே, கோவிந்தன் இங்கே இல்லை;  அவன் சென்றுவிட்டானாம்!” என்ற வார்த்தைகள் விழுந்தன.  அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள சில விநாடிகள் பிடித்தன அவனுக்கு.   அதன் முக்கியத்துவம் மெல்ல மெல்ல அவன் காதுகள் வழியாக அவன் மூளையைச் சென்றடைந்து அதன் தீவிரம் புரிய மேலும் சில விநாடிகள் சென்றன.  புரிந்ததோ இல்லையோ, விருட்டென எழுந்தவன், ரேவதியைப் பார்த்து, “என்ன முட்டாள் தனமாக உளறிக் கொண்டிருக்கிறாய்?” என்று கூச்சலிட்டான்.

“இதோ, இங்கே ருக்மிணி இருக்கிறாள் பிரபுவே!  நீங்கள் அவளையே கேட்டுக் கொள்ளுங்கள்.  உங்களுக்குச் சொல்ல ஒரு செய்தியும் கொண்டு வந்திருக்கிறாள்.”

“இவ்வளவு சீக்கிரமாகவா? என்ன விஷயம்?” இவ்வளவு கத்தியதில் முழுத் தூக்கமும் கலைந்தே போனது பலராமனுக்கு.

“கோவிந்தன் சென்று விட்டான்.” என மீண்டும் ரேவதியே சொன்னாள்.

“எங்கே?” பலராமன் கேட்டான்.  “திடீரென அவன் புஷ்கரத்தை நோக்கிச் சென்றுவிட்டான்.  ஏனெனில் இன்று செல்ல வேண்டிய சாத்யகி திடீரென மறைந்து விட்டான்." ரேவதி கூறியதில்  தூக்கம் கலைந்து தெளிந்த அறிவு வந்துவிட்ட உணர்வு முகத்தில் தெரியத் தன் பெருத்த உடலைக் கட்டிலில் இருந்து மெல்ல மேலே தூக்கிக் கொண்டு எழுந்தான் பலராமன்.  “உள்ளே வரச் சொல் ருக்மிணியை!  இதெல்லாம் என்ன கூத்து!  என்ன நடக்கிறது இங்கே?” என்று மீண்டும் கூச்சலிட்டான்.   ருக்மிணி உள்ளே வந்து தனக்குத் தெரிந்த விஷயங்களை பலராமனிடம் விவரித்தாள்.  அவள் பேசும்போதே அவள் குரலிலும், முகத்திலும் தெரிந்த கசப்பு உணர்ச்சியைப் பார்த்தான் பலராமன்.   தொண்டையை துக்கம் அடைக்க, கண்களில் கண்ணீர் பெருக, கோபத்திலும், தாபத்திலும் உணர்வுகள் பெருகி ஓட, கசப்பு தொண்டையை மீண்டும் அடைக்க, சமாளித்த வண்ணம், “ யாதவர்கள்…யாதவர்கள்,  அதாவது நீங்கள் அனைவருமே  அவரைத் தோற்கடித்துவிட்டீர்கள். என் பிரபுவைத்  தோல்வி காண வைத்துவிட்டீர்கள்.  மூத்தவரே, நீர் அவரைக் கைவிட்டு விட்டீர்! ஆனால் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டி அவர் சென்றுவிட்டார்.” இதைச் சொல்கையில் பெருமிதம் எட்டிப் பார்த்தது ருக்மிணியின் குரலில்.

பலராமனுக்கு எதுவும் புரியவில்லை.  “ஏன், ஏன், ஏன்?” என்று இன்னமும் குழம்பிய தொனியிலேயே கேட்டான்.  “மூத்தவரே, அவர் செல்வதற்கு முன்னர் என்னைச் சந்திக்க வந்தார்.  உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி ஒரு செய்தியும் கொடுத்துச் சென்றார். “

“என்ன செய்தி அது? விரைந்து சொல்!”

“இது தான் அவர் உங்களிடம் சொல்லும்படி கூறியது: “அண்ணா, செகிதனாவுக்குப் புஷ்கரத்தைத்திரும்ப வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளேன்.  நாக மன்னன் கார்க்கோடகனின் நாக ராஜ்யப் பிரதேசத்திலிருந்து யாதவர்கள் அனைவரும் விரைவில் வெளியேறுவார்கள் என கார்க்கோடகனுக்கு நான் வாக்குக் கொடுத்துள்ளேன்.  பாஞ்சால மன்னன் துருபதனுக்கு அவன் மகளின் சுயம்வரம் வெற்றியில் முடித்துக் காட்டுவதாய் வாக்குக் கொடுத்துள்ளேன்.  அதோடு இல்லை;  திரெளபதியிடமே அவள் வில் வித்தையில் சிறந்த தக்க மணாளனைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் கூறியுள்ளேன்.  “ என்று கூறிய ருக்மிணி சற்றே நிறுத்தினாள்.

“கோவிந்தனுக்கு வேறு வேலையே இல்லையா?  இத்தகைய பயங்கரமான வாக்குறுதிகளை மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறானே!  அவன் ஏன் இப்படிச் செய்கிறான்?” பலராமன் கேட்டான்.


Tuesday, January 28, 2014

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்!

“எப்போது நீங்கள் கிளம்பவேண்டும்?”  கிருஷ்ணன் கேட்டான்.
:சூரிய உதயம் ஆகி ஒன்றரை நாழிகையில் கிளம்பவேண்டும்.” என்று பதிலளித்த அஹுகா, “அனைத்து வேத விற்பன்னர்களும், பிராமணர்களும் எங்களை வாழ்த்தி அனுப்ப வந்து விட்டனர்.  எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. “ என்றான்.  திடீரென ஏற்பட்ட ஒரு உந்துதலில் கண்கள் பளிச்சிடக் கண்ணன், “ குறித்த நேரத்தில் கிளம்பத் தயாராகுங்கள்.” என்றான்.


“பிரபுவே, அது எப்படி முடியும்?  தலைவர் இல்லாமல், படைகளை நாங்கள் எவ்விதம் நடத்திச் செல்ல முடியும்?  தலைவர் கிளம்பும் நேரத்துக்கு வந்து எங்களோடு கலந்து கொள்ளவில்லை எனில் மற்ற யாதவத் தலைவர்கள் என்ன நினைப்பார்கள்?”  ஆனால் கண்ணனுக்கோ நம்பிக்கைக் கீற்றுத் தெரிந்தது.  அவன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் என்னவெனப் புரிந்து விட்டது.  அதுவாகவே அவனைத் தேடியும் வந்துவிட்டது.   மன உறுதியுடனும் நிச்சயத்துடனும் பேசினான் கிருஷ்ணன்.

“அஹுகா, உங்கள் தலைவனின் நற்பெயரைக் குறித்து உன்னை விட எனக்கு அதிக அளவில் கவலையும் அதைக் காக்கவேண்டுமே என்னும் எண்ணமும் உண்டு.  நீங்கள் அனைவரும் உங்கள் தலைவன் உங்களிடம் சொல்லி இருந்தபடி, அவன் விரும்பிய வண்ணம் குறித்த நேரத்தில் கிளம்பிவிடுங்கள்.  தாமதிக்க வேண்டாம்.”

“ஆனால் எங்களை வழிநடத்திச் செல்லும் தலைவன் யாரோ?” அஹூகா கேட்டான்.

“நான் இருக்கிறேன்.” அமைதியாகச் சொன்ன கண்ணன் திரும்பினான். அங்கே கடன் நின்று கொண்டிருந்தான். கண்ணனின் ரதப்படையை நடத்திச் செல்லும் முக்கியத் தலைவன் கடன்.  அவனிடம், கண்ணன், “கடா, நான் இப்போது மாளிகைக்குச் சென்று என்னுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரும்பி வருவேன்.  சூரிய உதயம் ஆவதற்குள்ளாகத் திரும்புவேன்.  நம் வீரர்களைத் தயார் செய்து தக்க ஆயுதங்களோடு என்னைப் பின் தொடரச் செய்ய உனக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?  எவ்வளவு விரைவில் உன்னால் அவர்களைத் தயார் செய்ய முடியும்?” என்று கேட்டான்.  “குறைந்த பக்ஷமாக இரண்டு நாட்கள் தேவைப்படும், பிரபுவே!” என்றான் கடன்.

“இல்லை, இல்லை, “கண்ணன் தீர்மானமாகச் சொன்னான்.  “நம் படை வீரர்களை விரைவில் திரட்டு.  நாளை இரவுக்குள்ளாக என்னைப் பின் தொடரச் செய்! “

“பிரபுவின் கட்டளைப்படியே!”தலை வணங்கினான் கடன்.  கண்ணன் அவன் ரத ஓட்டியான பஹுகாவை நகரச் சொல்லிவிட்டுப் பொறுமையில்லாமல் தானே அவனை நகர்த்திவிட்டுக் குதிரைகளைப்  பிணைத்திருந்த கயிறுகளைத் தான் வாங்கிக் கொண்டான்.   சாட்டையைச் சொடுக்கும் சப்தம் மட்டுமே கேட்டது.  அடுத்த கணம் குதிரைகள் காற்றாய்ப் பறந்தன.  விரைவில் கிருஷ்ணனின் மாளிகையை அடைந்தன.  கிட்டத்தட்டப்பறந்தன குதிரைகள். வாயில்காப்போன் இவ்வளவு விரைவில் கிருஷ்ணன் திரும்பியதையும் எதிர்பார்க்கவில்லை.  அவன் அவசரமும், விரைவும் புரியவும் இல்லை.   ஆச்சரியத்தோடு திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.   கிருஷ்ணன் நேரே ருக்மிணியிடம் சென்று அவளை எழுப்பினான்.

“என் சார்ங்கத்தை எடுத்துக் கொடு வைதர்பி.  அப்படியே சக்கரத்தைக் கட்டிக் கொள்ளவும் உதவி செய்.  பஹூகா, நீ சென்று என் கதையான கெளமோதகியை எடுத்துக் கொண்டு ரதத்துக்கு விரைந்து செல்!” மளமளவென ஆணைகளைப் பிறப்பித்தான் கிருஷ்ணன்.  “என்ன ஆயிற்று?” ருக்மிணிக்கு ஆச்சரியம் மட்டுமின்றி இப்படி அவசரம், அவசரமாகக் கிளம்பும்படியான சூழ்நிலை என்னவென்றும் புரியவில்லை.  “என்ன நடந்தது?” என்று மீண்டும் கேட்டாள்.

“சாத்யகி மறைந்துவிட்டான்.  ம்ம்ம்ம்,, அவனை யாரோ கடத்திச் சென்றிருக்கிறார்கள்.  இல்லை எனில் அவன் வீரர்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டான்.  அதுதான் எனக்குப் புரியவில்லை.  வீரர்களோடு இருக்க வேண்டியவன் எங்கே சென்றிருக்க முடியும்?   ஆனால் இப்போது அதை எல்லாம் யோசிக்கவோ, அவனைத் தேடவோ நேரமில்லை.  அவனுடைய வீரர்கள் குறித்த நேரத்தில் கிளம்பியாக வேண்டும்;  அதற்குத் தான் நான் தலைமை தாங்கிச் செல்லப் போகிறேன்.”

“ஆனால் பிரபுவே?  அதற்கு ஏன் இவ்வளவு அவசரம்? படபடப்பு?”

“தலைவன் இல்லாமையால் சாத்யகியின் வீரர்களால் குறித்துச் சொல்லப்பட்ட நல்ல நேரத்தில் கிளம்ப முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்ல முடியாது.  அப்படிச் சொல்வது சரியும் இல்லை;   எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்துக் கடைசியில் கிளம்பும் நேரத்தில் அவன் படை வீரர்கள் கிளம்ப முடியாமல் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி விட்டார்களானால்! ஆஹா, நாம் தோற்றவர்கள் ஆகிவிடுவோமே!”

பஹூகா உதவி செய்யக் கிருஷ்ணன் தன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டான்.  ருக்மிணியிடம் திரும்பி, “வைதர்பி, தர்மம் என்றால் என்னவென்று ஒரு நாள் உனக்குச் சொல்கிறேன் என்று கூறி இருந்தேன் அல்லவா?”

“ஆம் பிரபுவே!”

“இப்போது நான் சொல்கிறேன்.  தர்மம் என்றால் என்னவென்று.  கேள் வைதர்பி.  போய்ப் பெரிய அண்ணன் பலராமனிடம் சொல்வாய்:”சாத்யகி மறைந்துவிட்டான்.  நான் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை உணர்கிறேன்; சந்தேகிக்கிறேன்.  நான் செகிதனாவுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன்.  புஷ்கரத்தை அவனுக்கு மீட்டுக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்துள்ளேன்.  யாதவர்கள் அனைவரும் நாகர்களின் பிரதேசத்திலிருந்து நீங்கி வெளியேறுவார்கள் என நாகர்களின் அரசன் கார்க்கோடகனுக்கும் வாக்குக் கொடுத்துள்ளேன்.  பாஞ்சால மன்னன் துருபதனுக்கு அவன் மகள் திரெளபதியின் சுயம்வரம் வெற்றியுடன் நடைபெறவும் வாக்குக் கொடுத்துள்ளேன்.  அதை வெற்றி பெறச் செய்வதாகவும் உறுதி கூறியுள்ளேன். மேலும் திரெளபதிக்கு, இந்த பாரத வர்ஷத்திலேயே சிறந்ததொரு வில் வித்தை வீரனுடன் திருமணம் நடைபெற, அத்தகையதொரு வீரனை அவள் தேர்ந்தெடுக்க உதவுவதாக  வாக்குக் கொடுத்துள்ளேன். “ உத்வேகத்துடன் பேசி வந்தான் கிருஷ்ணன்.  பின்னர் பெருமிதம் குறையாத கம்பீரமான குரலில் ஆனால் அதே சமயம் கிட்டத்தட்டக் கிசுகிசுப்பாக மேலே கூறினான் : “ பலராமனிடம் சொல் ருக்மிணி,  ஆனால் இதைக் கவனம் வைத்துக் கொள்.  இந்த விஷயம் அவன் காதுகளுக்கு மட்டுமே போக வேண்டும்.”

“மஹாராணி சத்யவதியிடம் திரெளபதியின் சுயம்வரத்தின் போது பாண்டவர்கள் வெளிப்பட்டு தங்களை உலகுக்குக் காட்டுவார்கள் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்.  ம்ஹூம், யாதவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்;  அவர்கள் என்னை ஏமாற்றலாம்.  ஆனால் என்னை நம்பியவர்களை, நான் யாருக்கெல்லாம் வாக்குக் கொடுத்துள்ளேனோ அவர்களை என்னால் ஏமாற்ற இயலாது.  என் வாக்குறுதிகள் முற்றிலும் உண்மையானது என நிரூபிப்பேன்."  அவன் கண்கள் நம்பிக்கையுடன் ஒளி வீசிப் பிரகாசித்தன.  “ருக்மிணி, நீண்ட நாட்களாக நான் தர்மத்தை எவ்வகையிலேனும் எனக்கு உட்படுத்திக் கைப்பற்ற நினைத்திருந்தேன். ஆனால் இன்றோ என்னை தர்மம் தானாகவே வந்து பற்றிக் கொண்டு விட்டது.  ம்ம்ம்ம், இந்த யாதவர்கள், தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் ஏமாற்ற நினைத்தார்களானால்,  நான் யார் தர்மத்தின் பால் நிற்கின்றனரோ அவர்களை நாடிச் செல்கிறேன்.”

கண்ணனின் இந்த ஆவேசப் பேச்சைக் கேட்ட ருக்மிணி பேச்சிழந்து அவன் கால்களில் அப்படியே விழுந்து வணங்கினாள்.  அவளைத் தூக்கி நிறுத்தி அணைத்த கண்ணன் அவள் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்துவிட்டு அவள் இரு கன்னங்களையும் தன் கைகளால் அணைத்த வண்ணம் அவளை உற்று நோக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.



Monday, January 27, 2014

சாத்யகியைக் காணவில்லை!

வஞ்சக மனம் படைத்த சத்ராஜித் என்னும் யாதவத் தலைவன் மிகுந்த எச்சரிக்கையுடன் கிருஷ்ணனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.  திறமைசாலியும், இளைஞனும் ஆன கிருஷ்ணனின் புரிந்து கொள்ள இயலா வழிமுறைகளை அவன் நன்கறிவான்.  இந்த இளைஞன் ஆச்சரியங்களை ஆழ்த்துவதில் மன்னன்.   சற்றும் தயக்கமில்லாமல் அவன் ராஜசபையின் முடிவை ஏற்றுக் கொண்டதன் பின்னால் ஏதோ விஷயம் இருக்கிறது.  ஏதோ சூழ்ச்சி மறைந்திருக்கிறது.   ஆகவே தான் அவன் எப்போதும் போல் சுறுசுறுப்பாகத் தன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.  ம்ம்ம்ம்ம்ம்?? அவர்கள் நிஜமாகவே சுயம்வரத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் தான் அங்கே செல்கிறார்களா?  ம்ம்ம்ம்?


அப்படி எனில் எதற்காக சாத்யகியும், கிருதவர்மாவும் அவர்கள் படை வீரர்களை மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் இவ்வளவு கவனமாகப் பயிற்சி அளிக்கவேண்டும்??   சாத்யகி சுயம்வரத்தில் நடைபெறப்போகும் வில் வித்தைப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை எனில் அவன் இங்கே ஏன் மும்முரமாகவும் தீவிரமாகவும் வில் வித்தைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான்?  வரும் நாட்களில் யுத்தம் எதுவும் நடைபெறப்போவதில்லை எனில், எதற்காகக் குதிரைகளுக்குக் கூடப்பயிற்சி அளித்திருக்க வேண்டும்??  புத்தம்புதிய ரதங்கள் தயார் செய்யப்பட்டன. கதாயுதங்கள் புதியனவாகவும் வலிமை உள்ளதாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  வலிமையான கூர்மையான அம்புகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  இவை எல்லாம் எதற்கு?

இவை அனைத்துமே சுட்டிக் காட்டுவது ஒன்றே ஒன்றைத்தான்.  அது புஷ்கரத்தை எவ்வகையிலேனும் கைப்பற்ற வேண்டும் என்பதைத் தான் சுட்டுகிறது.   சத்ராஜித் இதுவாகத் தான் இருக்க வேண்டும் என அனுமானித்தான்.   அதோடு அல்லாமல் சாத்யகி கிருஷ்ணனுக்கு முன்னால் சென்று அக்ரவனத்தின் தலைவனைச் சந்தித்து மற்ற யாதவ இளவரசர்களோடும் அங்கே ஒரு விருந்துடன் கூடிய சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யச் செல்கிறான்.  இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?  சாத்யகி கிருஷ்ணனுக்கு வலக்கை போன்றவன்.  அவனுடன் இணையாக நின்று யுத்தம் செய்யும் வல்லமை கொண்டவன்.  நிச்சயம் அவன் புஷ்கரத்தைக் கைப்பற்றி செகிதனாவிடம்  ஒப்படைத்துவிட்டே சுயம்வரத்திற்குச் செல்லப் போகிறான்.  திரெளபதியையும் அவனே ஜெயிக்கவேண்டும் என எண்ணுகிறான்.  அவனுடைய சந்தேகாஸ்பதமான நடவடிக்கைகளுக்கு எல்லாம் இதுவே காரணமாக இருக்கும்.  வேறென்ன இருக்க முடியும்?


 இந்த வஞ்சகமான நடவடிக்கைகளை எவ்வாறேனும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.  யாதவ வீரர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ளப் போகிறார்களா? அதையும் பார்த்துவிடலாம்.  ஒரு காலத்தில் இளமையும், வீரமும், கம்பீரமும் வாய்ந்த சாத்யகியை சத்ராஜித்துக்கு மிகவும் பிடித்தே இருந்தது.  நல்ல குணமும் நடவடிக்கைகளும் நிறைந்தவனாய் இருந்தான்.    அவன் தந்தையும் யாதவர்களிடையே குறிப்பிட்டுப் பேசும் அளவுக்கு ஒரு நல்ல தலைவனாக இருந்தான்.  சில சமயங்களில் குழப்பமாகப் புரிந்து கொள்ள முடியாமல் நடந்தாலும்  பொதுவாக அவனுடைய உயர்ந்த குணத்துக்காகப் பாராட்டக் கூடியவனாகவே இருந்தான்.

சத்ராஜித் தன் மகள் சத்யபாமையை  சாத்யகிக்கு மணமுடிக்க நினைத்திருந்தான்.  ஆனால் சாத்யகியின் தந்தை சாத்யகா இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டான்.   சாத்யகியும் இதை ஏன் எதற்கு என ஆராய்ந்து பாராமல் ஏற்றுக் கொண்டுவிட்டான்.  ஏனெனில் கிருஷ்ணனுடன் சேர்ந்து அவன் செய்து வந்த வேலைகளில் சாத்யகி அவ்வளவு ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தான்.  அந்த நேரம் அவனுக்குக் கிருஷ்ணைன் வேலைகளை முடிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு நினைவே இல்லை. திருமணம் குறித்தெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை.   தன் செல்வத்தில் கர்வம் கொண்டிருந்த சத்ராஜித்தை இது மிகவும் புண்படுத்தி விட்டது. உயர்குடியில் பிறந்த சாத்யகா தன் மகனுக்குத் தான் அளிப்பதாய்ச் சொன்ன மணமகளை, தன் சொந்த மகளை மறுத்துவிட்டானே!  இது அவனுக்கு அழகா? இப்போது இந்த யுத்தத்தை நிறுத்துவதெனில் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கிருஷ்ணனிடமிருந்து அவன் நண்பர்களைப் பிரிக்க வேண்டும்.

கிருஷ்ணனின் திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.  அதற்கு ஒரே வழி அவன் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் அவன் அருமை நண்பர்களை அவனிடமிருந்து கவர்ந்து கொள்வது தான்.   அதுவும் யாதவர்களிடையே சத்ராஜித்தின் சொல்லுக்கும், செயலுக்கும், முக்கியத்துவம் வர ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் சரியான ஒன்றாகவும் இருக்கும்.   சத்ராஜித் தனக்குள் தீர்மானித்துக் கொண்டிருந்தான்.

சாத்யகியோ முன்பிருந்ததை விடவும் மும்மடங்கு அதிகரித்திருக்கும் தன் ராணுவப் பிரிவோடு துவாரகையை விட்டு அக்ரவனம் செல்லும் ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தான்.  மார்கசீர்ஷ மாதத்தின் அந்த நல்ல நாளில் அவன் கிளம்பிய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் கிருஷ்ணன் கிளம்பப் போகிறான் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.  அவனுடைய படை வீரர்களும் நீண்ட பயணத்துக்குத் தயாராகி வந்தனர்.  கிளம்பவேண்டிய நாள் அதிகாலை வெள்ளி முளைக்கும் முன்னேயே கிருஷ்ணன், தன் முக்கியத்துவம் வாய்ந்த மஹாரதர்களோடு துவாரகையை விட்டு வெளியேறி சாத்யகியும் அவன் வீரர்களும் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். சாத்யகியும் அவன் படை வீரர்களும்  செல்ல வேண்டிய வழியில் அவன் படை வீரர்கள் தண்டு இறங்கி இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.  அங்கே சென்ற அவன் சாத்யகியை அங்கே காணாமல் திகைத்தான்.  அவன் வீரர்கள் பொறுமையின்றி சாத்யகிக்காகக் காத்திருப்பதையும் கண்டான்.  சாத்யகி அங்கே  வந்த அடுத்த நிமிடமே அவர்கள் அக்ரவனம் நோக்கிச் செல்லத் தயாராகக் காத்திருப்பதையும் பார்த்தான்.  படை வீரர்கள் அனைவரும் சாத்யகியிடம் மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.  தங்கள் தலைவனின் வீரத்தின் மேலும் அவன் தலைமையின் மேலும் கர்வம் கொண்டவர்கள்.  ஆனால் இப்போது இந்தக் கடைசி நிமிடத்தில் சாத்யகியைக் காணோம் என்றதும் அவன் பின் வாங்கி விட்டானோ என்னும் எண்ணம் தோன்றி மனம் கூசி, மனம் உடைந்து செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆக்ரோஷமும், வீரமும் ஒருங்கே அமைந்த சாத்யகி திடீரெனக் கோழையாக மாறிப் போனானா?  இது நினைக்கக் கூட இயலாத ஒன்றாய் உள்ளதே. அல்லது அவன் உடல் நிலை சரியில்லையா?  ம்ஹூம் அப்படி எல்லாம் இருக்காது.  இருக்கவும் முடியாது.  இதை எல்லாம் என்னவென்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லையே!  ஏ, மஹாதேவா!  இந்த துவாரகை மக்கள் சாத்யகியின் இந்தப் படை வீரர்களைக் குறித்து என்ன எண்ணுவார்கள்? ஏற்கெனவே நம்மைக் கேலி செய்தவர்கள் ஆயிற்றே! வேண்டாத போருக்குச் செல்கிறார்கள் எனக் கேலி பேசி வந்தனரே!  இப்போது சாத்யகி, நம் அருமைத் தலைவன், அவனைக் காணாமல் நாம் எங்கும் போக முடியவில்லை என்பதை இந்த ஊரும், இதன் மக்களும் யாதவத் தலைவர்களும் எவ்விதம் எதிர்கொள்ளப்போகின்றனர்? என்னென்ன கூறப் போகிறார்கள்?  சிரிக்க மாட்டார்களா? சிரிப்போர் கண் முன்னே இடறி விழுந்தாற்போல் ஆகாதா?

தன் ரதத்திலிருந்து எட்டிப் பார்த்த கிருஷ்ணன், அங்கிருந்த அஹுகா என்பவனிடம் சாத்யகி எங்கே எனக் கேட்டான்.  அஹூகா தன் ரதத்திலிருந்து குதித்துக் கீழே இறங்கிக் கிருஷ்ணனிடம் வந்து, “பிரபுவே, அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை!” என்றான்.  “அவன் மாளிகையில் பார்த்தாயா?” கிருஷ்ணன் கேட்டான்.  இந்தப் புதியதொரு சூழ்நிலையைக் கிருஷ்ணனால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அஹுகாவோ, “விசாரித்தேன் பிரபுவே,  அவர் நேற்றிரவு மாளிகைக்குத் திரும்பவே இல்லை.  அவர் விட்டுச் சென்ற இடத்திலேயே ரதம் நின்று கொண்டிருக்கிறது.  “ மீண்டும் கிசுகிசுத்தான் அஹூகா.

“ஆச்சரியமாய் இருக்கிறது.  தன் தாய்மாமனைச் சந்திக்கப் போவதாய்ச் சொல்லிவிட்டு என்னிடம் இருந்து கிளம்பினான்.  அது நேற்று மாலை. ஆனால் அவன் இரவை அங்கே கழிக்கப் போவதாய்ச் சொல்லவே இல்லையே!” கிருஷ்ணனுக்கு திடீரென ஏற்பட்ட இந்தப் புதிரை விடுவிக்க இயலவில்லை.  “ நான் ரதம் ஓட்டியைக் கேட்டேன், பிரபுவே. தாய் மாமன் வீட்டில் இறங்கிக் கொண்டு, ரதம் ஓட்டியைத் தலைவர் திரும்பி அனுப்பி விட்டாராம்.  அங்கிருந்து வீட்டிற்கு நடந்தே சென்றுவிடுவதாயும் கூறினாராம்.” என்றான் அஹுகா.  “சாத்யகி அப்படிச் செய்யக் கூடியவனே!  அது சரி, அவன் தாய்மாமனை நீ விசாரித்தாயா?” என்று கிருஷ்ணன் கேட்டான்.  “விசாரித்தேன் பிரபுவே.  வாயிற்காப்போன் தலைவர் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டி வாயிலைக் கடந்தபோது பார்த்திருக்கிறான்.  அவன் சொன்னான் தலைவர் தன் வீட்டிற்குத் தான் திரும்பிக் கொண்டிருந்தார் என!”  கண்ணன் சற்று நேரம் யோசித்தான்.  படை வீரர்கள் கிளம்பவேண்டி நிர்ணயித்திருந்த நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.  சாத்யகிக்கு ஏதோ ஆகிவிட்டது.  இவ்வளவு நேரம் தூங்கக் கூடியவனே அல்ல.  அதோடு எந்த வேலையைக் கொடுத்தாலும் அந்த வேலையைச் செய்யத் தன்னால் தாமதம் ஏற்படுவதை விரும்புபவனும் அல்ல.  நேரத்தைக் கடைப்பிடிப்பதில் வல்லவனும் கூட.  தன் கடமையிலிருந்து பின்வாங்குபவனும் அல்ல.  ஏதேனும் செய்ய வேண்டும். அதுவும் அதை இப்போதே உடனே செய்தாக வேண்டும்.  உடனே!  என்ன செய்வது?




Friday, January 24, 2014

ராஜ சபையின் முடிவும், கிருஷ்ணனின் ஒப்புதலும்!

மழை முற்றிலும் நின்றுவிட்டது.  காற்றும் ஓய்ந்துவிட்டது. கடல் அதீத அமைதி காத்தது.  கப்பல்கள் கடலில் மிதக்கத் தொடங்கிவிட்டன. காலைக்காற்று வெகு சுகமாய் அற்புதமானதொரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்படியாக மெல்ல வீசிற்று.  பக்ஷிகள் இன்பகானம் இசைத்தன. மலர்கள் மலர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. காம்பில்யத்திலிருந்து ஒரு தூதுக்குழு துவாரகை வந்து சேர்ந்தது.  துருபதன் தன் மகளின் சுயம்வரத்திற்கான அழைப்பை அனுப்பி இருந்தான்.  யாதவத் தலைவன் உக்ரசேனன் உள்ளிட்ட அனைத்து அதிரதிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.  புஷ்ய மாதத்தின் பெளர்ணமி வருவதற்கு முந்தைய  சுக்ல பக்ஷத்தின் பதினோராம் நாளில் சுயம்வரம் நடக்கப் போவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சம்பிரதாயப்படி தலைவர் ஆன உக்ரசேனரால் அறிவிக்கப்பட்டனர்.


கிருஷ்ண வாசுதேவன், சாத்யகி, கிருதவர்மாவுடன் பொறுக்கி எடுக்கப்பட்ட யாதவ அதிரதர்கள் காம்பில்யம் நோக்கிப் பயணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.  சுயம்வரத்தில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே தவிர அங்கே நடைபெற விருக்கும் எந்தவிதப் போட்டிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.  சபையின் இந்த முடிவைக் கேட்ட கண்ணன் தனக்குள் எவரும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத விசித்திரமானதொரு சிரிப்பைத் தன் இதழ்களில் தவழவிட்டான். சத்ராஜித்தும், அவன் நண்பர்களான கிருஷ்ணனின் மற்ற எதிரிகளுக்கும் இதைக் கேட்டதும் உள்ளுக்குள் ஏற்பட்ட அல்ப சந்தோஷம் அவர்கள் முகங்களிலும் கண்களிலும் பளிச்சிட்டது.  இதைக் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாக நினைத்தனர் அவர்கள்.

சாத்யகியும், கிருதவர்மாவும் அவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே.  ஆனாலும் வெளிப்பார்வைக்கு தலைவன் கட்டளைக்குக் கண்ணன் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதைப் போன்றதொரு தோற்றம் ஏற்பட்டது கண்ணனுக்கு மகிழ்ச்சியே!  ஆனால் சாத்யகியால் தன் ஏமாற்றத்தை மறைக்க இயலவில்லை.  போட்டியில் முன்னுக்கு வர வேண்டி வேகமாய் ஓடிக் கொண்டிருந்த குதிரையைப் பாதியில் தடுத்து நிறுத்தினால் அந்தக் குதிரைக்கு ஏற்படும் தடுமாற்றங்களை அவனும் அனுபவித்தான். கோழைத்தனமான முடிவு என்று கூறினான்.  எவ்விதமான கஷ்டங்களும் இல்லாமல் அவன் தனியாகவே அவன் சொந்த வீரர்கள் துணையோடு புஷ்கரத்தைக் கைப்பற்றி இருக்க முடியும் என்றான்.  அதேபோல் அவன் வில்வித்தைத் திறமையால் போட்டியிலும் வென்று திரெளபதியின் கரமும் பிடித்திருப்பான்.  இப்படி ஒரு சந்தர்ப்பம் அவன் வாழ்க்கையில் மீண்டும் அமையுமா?  ஆகவே சாத்யகிக்கு மிகவும் ஏமாற்றம் ஏற்பட்டது.  இதை எப்படிக் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டான்?  அதுதான் சாத்யகிக்குப் புரியவே இல்லை.  ம்ம்ம்ம்ம்?? ஆனால் சாத்யகி கிருஷ்ணனை நன்கு அறிவான்.  அவன் மனதின் ஆழத்தை எவராலும் அறிய இயலாது.  அதில் ஓடும் எண்ணங்களையும் எவராலும் புரிந்து கொள்ள இயலாது என்பதை சாத்யகி அறிவான்.

இப்போது ஏற்பட்ட இந்தப் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்திய ஆர்வத்தில் அவன் தன்னுடைய திறமைகளை மேலும் பரிக்ஷை பார்த்து மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.  ஆயுதங்களில் தன் பயிற்சியை மேன் மேலும் விருத்தி செய்து கொண்டதோடு அல்லாமல் தங்களுடன் வரப் போகும் யாதவ வீரர்களுக்கும் பயிற்சியை அளித்தான்.  தன் சொந்த வீரர்களுக்கு மட்டுமில்லாமல் கண்ணனின் படை வீரர்கள், கிருத வர்மாவின் வீரர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்தான்.  மல் யுத்தம், கதையின் மூலம் யுத்தம் செய்யும் முறை, வில் வித்தை, குதிரைகள் பூட்டிய ரதத்தை செலுத்திய வண்ணமே வில்லினாலும் வாளினாலும் போர் செய்யும் முறை என அனைத்தையும் கற்பித்தான்.  யாராவது அவனுடைய எதிர்பார்ப்புக்கேற்பத் திறமையற்றவர்களாக இருந்தார்களானால் அவர்களிடம் கோபம் கொண்டு சப்தம் போட்டு அவர்கள் திறமையை மேலும் மேம்படுத்தினான்.  யாதவத் தலைவர்களுக்கோ சாத்யகியின் இம்முயற்சிகளைப் பார்த்துச் சிரிப்புத் தான் வந்தது.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு எள்ளி நகையாடினார்கள்.  சாத்யகி தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தியதோடு இல்லாமல் மற்றவர்களின் நேரத்தையும் வீணடிப்பதாகச் சொல்லிச் சிரித்தனர்.  இதற்காக அவனுக்கு எவ்வித வெகுமதிகளும் கிடைக்கப்  போவது இல்லை.  அவனைக் கண்டாலே கோபத்துடன் சீறினார்கள்.  “நீ என்ன செய்தாலும், உனக்கு திரெளபதி கிடைக்க மாட்டாள்!” என்று கேலி செய்தனர்.  அப்படிப்பட்ட வார்த்தைகள் சாத்யகியின் மனதைப் புண்ணாக்கியதோடு அவனைக் கோபத்துடன் திரும்பப் பேசவும் வைத்தது.  சில சமயங்களில் அது அடிதடியிலும் முடிந்தது.


கார்த்திகை மாதம் வந்தது.  கிருதவர்மா தன் சொந்த வீரர்களோடு துவாரகையை விட்டுத் தக்க ஏற்பாடுகளோடு கிளம்பிச் சென்றான். அக்ரவனத்தின் அரசன் சாருதேஷ்னாவுக்குக் கிருஷ்ணனிடம் இருந்து ஒரு செய்தியையும் அவன் எடுத்துச் சென்றான்.  சுற்று வட்டாரங்களை ஆட்சி புரிந்து வந்த யாதவ இளம் அரசர்கள், இளவரசர்கள் அனைவரும் அவனுடைய தலை நகரத்தில் கூடுமாறு அழைப்பு விடுக்கச் சொன்னான்.     மார்கசீர்ஷ மாதம் சுக்லபக்ஷப் பதினோராம் நாளன்று நடைபெறப் போகும் விழாவில் கிருஷ்ணனோடு அவர்களையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளச் சொன்னான்.  உத்தவனுக்கும் ஒரு தனிப்பட்ட சிறப்புச் செய்தி காத்திருந்தது.

யாதவத் தலைவர்கள் கிருஷ்ணனின் நண்பர்களின் இந்த அசாதாரண நடவடிக்கைகளை அவ்வளவாகக் கவனிக்கவில்லை.  ராஜ சபையின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்ட அறிவிப்பிற்குக் கிருஷ்ணன் சம்மதம் கொடுத்திருக்கிறான்.  ஆகவே அவன் அதை ஏற்று நடப்பான்.  இதுவே அவர்கள் எதிர்பார்த்தது.  அவனுக்கு அதில் இஷ்டம் இல்லை எனில் மீண்டும் ராஜசபையைக் கூட்டித் தன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.  அது தான் முறையானது.  பொறுமையில்லாத சாத்யகியோ கத்தினான்; கூச்சலிட்டான்;  சண்டை போட்டான்.  இத்தனைக்கும் நடுவில் தன் வீரர்களையும், மற்ற வீரர்களையும் எவ்விதத் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்கும்படியாக வலுவானவர்களாகப் பயிற்சியும் அளித்து வந்தான். சாத்யகி கிருஷ்ணன் செல்வதற்குப் பதினைந்து நாட்கள் முன்னால் துவாரகையிலிருந்து கிளம்பிச் செல்லவேண்டும் என்றும் உத்தரவானது.


Monday, January 20, 2014

கண்ணன் தன்னைத் தானே கண்டு கொண்டான்!

கடல் அலைகள் பேரோசையுடனும், கோபத்துடனும் கரையில் வந்து முட்டி மோதிவிட்டுத் திரும்பும் சப்தம் கேட்டது.  மீண்டும் ஒரு மின்னல்.  அந்த மின்னலின் பேரொளி கிருஷ்ணனின் படுக்கை அறைக்குள்ளும் நுழைந்தது. இடி இடிக்கையில் அதிர்ந்து கொண்டிருந்த மாளிகைச் சுவர்கள் எல்லாம் மின்னலின் பேரொளியில் பற்பல உருத்தெரியாத நிழல்களைக் காட்டின. உள்ளே நுழைந்த மின்னலில் தன் படுக்கை அறையைப் பார்த்த கிருஷ்ணனுக்குத் தன்னுள்ளேயும் உள்ளே, உள்ளத்தின் உள்ளே ஒரு பேரொளி தெரிந்தது.  அதைக் கிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்தான். தன்னுள்ளே ஏதோ தெய்வாம்சம் பெற்ற பேரொளி நுழைந்திருப்பதாக உணர்ந்தான்.


இத்தனை நாட்களாக அவன் தேடிக் கொண்டிருந்து, தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்துவிட்டது என்பதைத் தெளிவாக, எளிதில் புரியும்படியா உணர்ந்தான் கண்ணன்.ஆஹா! வாழ்க்கை:  அது பாவங்கள் நிறைந்தும், இழிவானதாகவும் இருக்கலாம். அல்லது மிக உயர்வாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கலாம்.  ஆனால் அது இவ்வாறு எனப் பகுத்து அறிய முடியாதது.  வாழ்க்கையில் உயர்ந்ததொரு நிலைக்கு வருவதற்காக அவன் போராடியே ஆகவேண்டும்.  அந்தப் போராட்டத்தை அவன் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  அவன் சார்ந்திருப்பது இதற்காகவே, இது அவன் வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல; இவன் வாழ்க்கையே இது தான். இம்மாதிரியான ஓர் உயர்வு நிலையைக் கொண்டு வருவது தான்;  அதற்காகப் போராடுவதே அவன் வாழ்க்கை.


அறிந்தோ அறியாமலோ அவன் ஒரு மகனாக, கணவனாக, நண்பனாக, சகோதரனாக அனைவர் வாழ்க்கையிலும் அவரவருக்கென உள்ள எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கு மிகக் கஷ்டப்பட்டு வருகிறான். பூர்த்தி செய்தும் வருகிறான். அதே சமயம்  ஒரு வீரனாகவும், ஒரு தலைவனாகவும்,   ஒரு ரக்ஷகனாகவும் அவன் சரியான பாதையில் சென்று வெற்றியடையப் போராடி வருகிறான்.  ஒவ்வொரு முறையும் அவன் விரும்பும் யாருக்கோ அது எவ்வகையிலோ திருப்தியைத் தருகிறது. அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களைக் கவர்கிறான். மற்றவர்களின் சிறப்புக்களோடு  அவனை ஒப்பிட்டுப் பார்த்து வித்தியாசங்களைக் காண்பதில் அவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.  அவனிடம் கவர்ந்து இழுக்கப்படுகின்றனர். இதுவே பலரையும்  அவன் கவர்ந்து இழுத்ததன் ரகசியம் ஆகும்.  ஆனால் அவனுக்கோ?  இங்கேயே ஒரு தேக்கம் ஏற்பட்டு விட்டது.  அது எதனால்??  அவனிடம் உள்ள இந்தச் சிறப்புக்களைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த மக்கள் அவனை அந்த சந்தோஷத்திலேயே கொண்டாடுகின்றனர்.  அவர்கள் இத்தனை நாட்கள் யாருக்காகக் காத்திருந்தார்களோ அந்தக் கடவுள், ரக்ஷகன் வந்துவிட்டான் என நம்புகின்றனர்.  தங்களை மீட்க வந்த காப்போனாக நினைக்கின்றனர். அவர்களின் கோவிந்தனாகக் கருதுகின்றனர்.  சாக்ஷாத் அந்தப்  பரம்பொருள் ஆன மஹாதேவன், பர வாசுதேவன் அனைத்துமே அவன் என நம்புகின்றனர்.

கடவுளை நம்பும் அனைவருக்கும் அந்தப் பர வாசுதேவனே கடவுள் என்பதை அனைவரும் அறிவார்கள்.  அவன் தாயான தேவகியும், அக்ரூரரும் அவனையும் அந்தப் பர வாசுதேவன் என்றே நம்புகின்றனர்.  வசுதேவனின் பிள்ளையான வாசுதேவனாக அவனை அவர்கள் நினைக்கவில்லை;  அப்படிப் பார்க்கவும் இல்லை.  முழுக்க முழுக்க அவர்கள் பார்வை பக்திபூர்வமாகவே அந்தப் பரவாசுதேவனாகவே அவனைப் பார்த்து வருகின்றனர்.  அவன் அந்தப் பரவாசுதேவனாகவே இருந்தாக வேண்டும்; அவ்வளவு தான்; அந்தப் பரம்பொருளாக அவனால் இயன்ற அளவுக்கு இருக்க வேண்டும்.  சிந்தித்த கண்ணன் இந்த முடிவுக்கு வந்தான்.  அப்போது தான் அவன் அனைவர் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியும்.  அப்போது தான் அவன் தர்மத்தின் பக்கம் நிற்க முடியும்.  அனைத்து மனிதர்களையும் அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் தன் பக்கம் இழுக்க முடியும்.   எல்லா நேரமும்! ஆனால் அவனுடைய தர்மம் தான் என்னவாக இருக்க முடியும்?

தனக்குள்ளே வாய்விட்டுச் சிரித்துக் கொண்டான் கிருஷ்ணன்.  இந்தச் சோதனையான கால கட்டத்திலும் கூடக் கண்ணனுக்கு வாழ்க்கை அவனைச் சுற்றி நெய்திருக்கும் வலைப்பின்னல் அவனைச் சுற்றி நெருக்குவதை அறியவில்லையோ? தன் கண்களைத் திறந்தான் கண்ணன்.  ருக்மிணி ஆவலுடனும், கவலையுடனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  “ப்ரபோ, தங்கள் தூக்கம் கலைந்து விட்டதா?  தாங்கள் சரியாகத் தூங்கவில்லை போல் தெரிகிறதே?” என்றும் கேட்டாள்.  “இல்லை ருக்மிணி, நான் தூங்கவே இல்லை;  சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான் கண்ணன்.


 “அது என்ன ப்ரபு?” என்றாள் ருக்மிணி.  “வைதர்பி, (விதர்ப நாட்டு இளவரசி என்பதால் வைதர்பி), உன் தர்மம் என்னவென்று நீ எண்ணுகிறாய்?” என்று அவளிடமே கேட்டான் கண்ணன்.  பூரணமாய்த் தன் கணவனிடம் திருப்தி கொண்ட மனைவியான ருக்மிணி மிகவும் சந்தோஷமான ஒரு புன்னகையைச் செய்தாள்.  அதில் அவள் கண்ணனிடம் கொண்டிருக்கும் பக்தியும் தென்பட்டது.  “என்னுடைய தர்மமா? அதில் என்ன இருக்கிறது ப்ரபோ?  வெகு எளிது.  உங்களுடன் வாழ்ந்து உங்கள் மனதில் நான் இடம் பெறவேண்டும்.  நீங்கள் என் மனதில் இடம் பெற வேண்டும். என்றென்றும், நிரந்தரமாக.”

கிருஷ்ணன் தன் கரங்களால் அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின் தன் கண்களை மூடினான்.  மெல்லத் தூங்க ஆரம்பித்தான் கண்ணன்.  அதிகாலை நேரம் அரைத் தூக்கத்தில் தான் கண்ட கனவுகள் மீண்டும் தொடர்ந்து ஒரு சங்கிலி போல் வரக் கண்டான்.  தர்மம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல; அதே சமயம் வியாபாரமும் இல்லை;  பேரம் பேசக் கூடியது அல்ல; சடங்குகள் மட்டும் நிறைந்தது அல்ல; கோபத்தின் மூலமாகவோ, பேராசையின் காரணமாகவோ, பயத்தினாலோ ஏற்படுவது எல்லாம் தர்மமே அல்ல;   அது ஒருவனை முழு மனிதனாக்குகிறது என்பது என்னமோ உண்மை. மனோதிடம் கொண்டவனாக ஆக்குகிறது.  பலஹீனங்களுக்கு இடையே ஒரு மனிதனை சூழ்நிலைகளைப் பொறுத்து மேம்பட்டவனாக ஆக்குகிறது.  

ம்ஹ்ஹும், இல்லை; இல்லை;  இது போதுமானது அல்ல.  ஒவ்வொருவரின் தர்மமும் ஒவ்வொரு வகையானது.  அது எதிர்காலம் குறித்த பார்வையை மட்டும் இணைக்கவில்லை; மன உறுதியையும் செயல்களையும் சேர்த்தே இணைக்கிறது.  அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக மூன்று அல்ல; அனைத்தும் இணைந்த ஒன்றே!  அப்போது தான் ஒருவன் தர்மத்துக்காகப் போராட முடியும். அவரவர் வழியில், அவரவருக்காக மட்டுமில்லாமல் அனைவருக்காகவும் வாழ வேண்டும்.  அதுவும் எப்படி!  வாசுதேவனாக! அந்தப் பரம்பொருளாக.  அவன் அனைவருக்காகவும் வாழ்ந்தால் அனைவரிடத்திலும் அவனும் வாழ்வான்.   அவனில் அனைவரும், அனைவரிடமும் அவன்!

மறுநாள் காலையில் சாத்யகியும் கிருதவர்மாவும் கண்ணனைப் பார்க்க வந்தனர்.  இருவரும் மனம் உடைந்து போயிருப்பது தெரிந்தது.  அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  மெதுவாகக் கிசுகிசுவென்ற குரலில் சாத்யகி கேட்டான்:”பிரபுவே, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?  யாதவர்கள் எவருக்கும் நாம் செய்யப் போவதில் நம்பிக்கை இல்லையே?” என்றான்.  கண்ணன் கண்கள் பளிச்சிட்டன.  அதில் ஏதோ புதியதொரு ஒளி வந்தது போல் இருந்தது சாத்யகிக்கு.  அவன் சிரித்த சிரிப்பிலும் ஏதோ தெளிவு, அவனுள்ளேயும் அவனைச் சுற்றிலும்  ஏதோ சுயம்பிரகாசம் ஏற்பட்டது போல் புன்னகையும் பிரகாசித்தது.  “அவர்களைக் குற்றம் சொல்லாதே சாத்யகி! அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை;  தோல்வியும் அடையவில்லை.  நாம் தான் அவர்களை ஏமாற்றிவிட்டோம் ; தோல்வி அடைந்துவிட்டோம் எனலாம்.”

“ஆனால் இப்போது நாம் என்ன செய்வது கிருஷ்ணா? நாம் மூவரும் இப்போது ஒரு முட்டாள்த்தனமான தூது செல்லப் போகிறோம் என நம்புகிறேன்.  “

“சாத்யகி, அவர்கள் வருவார்கள்.  முதலில் நாம் நம்மை நம்பவேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

“எப்படி நம்பச் செய்வது?”

மீண்டும் தன் வசீகரச் சிரிப்பைச் சிரித்தான் கிருஷ்ண வாசுதேவன்.  “ நாம் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்போம் சாத்யகி, புஷ்கரத்தை முதலில் மீட்போம்; திரெளபதிக்காக ஒரு மணமகனைத் தேடுவோம்;  துரோணருக்கும், துருபதனுக்கும் இடையில் உள்ள வெறுப்பை நீக்குவோம்.  இப்போது உடனேயே என்ன நடக்கும் என்று கவலைப் படாமல் இருப்போம்.  எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் தானாகவே நடக்கும்.  பொறுத்திருந்து பார்!” என்றான் கண்ணன்.



Saturday, January 18, 2014

மனிதருக்கு மனிதர் மாறுபடும் தர்மம்!

 மேலே சென்ற கண்ணன் காதுகளில் தன்னுள்ளே திருப்தி அடைந்த ஒரு மனிதனின் குரல் கேட்டது.  அது கூறியது: “தர்மம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும்.  முக்கியமாக என் தர்மம் என்னவென்பதை நான் அறிவேன். நான் கடவுளருக்கே கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரியவன். ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் பிச்சையிடுவதன் மூலம் கடவுளருக்குக் கடன் கொடுக்கிறேன்.  நான் கொடுப்பதை எல்லாம் சரியாகக் கணக்கில் வைத்துள்ளேன்.   என் வாழ்க்கையின் முடிவில் மரணம் என்னை வந்தடைந்ததும் தர்மத்தின் காவலனின் எதிரே நான் நிற்கையில் அவன் கணக்குப்பிள்ளையான சித்திரகுப்தன் வெகு எளிதாக என் கணக்கைப்பார்த்து மதிப்பிடலாம்.  என்னுடைய கணக்குகளைப் பார்த்துவிட்டு அதற்கேற்ற வட்டி விகிதங்கள் கிடைத்து நான் மேல் உலகில் சுகமானதொரு வாழ்க்கையை வாழலாம்.  அதற்கேற்றாற்போல் இப்போது வாழ்ந்து வருகிறேன்.”

“சேச்சே, நீயா தர்மவான்?  உன் தர்மமும் ஒரு தர்மமா?  வெறும் வியாபாரம். கடவுளரிடம் பேரம் பேசுகிறாய்!  ஒன்றைக் கொடுத்துப் புண்ணியங்களை வாங்குவதா தர்மம்?” அங்கிருந்தும் நடந்த கண்ணன் காதுகளில் வேறொரு குரல் இப்போது.  அந்தக் குரலில் கொஞ்சம் கரகரப்பும், பிசுபிசுப்பும் இருந்ததாய்த் தோன்றியது கண்ணனுக்கு.  அந்தக் குரல் கூறியது! “ நான் என் தர்மம் என்னவென்று அறிவேன்.  நான் என்ன செய்கிறேன் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை!  கொலையும் செய்வேன், திருடுவேன், பழி வாங்குவேன்.  எல்லாப் பாவங்களையும் செய்வேன்.  ஆனால் இறைவனின் மேல் உள்ள தோத்திரங்களை மனம் உருகிப் பாடுவேன். கேட்பவர் மனம் மட்டுமின்றி அந்த இறைவனின் மனமும் உருகும்.  என் பாவங்களை மறந்து மன்னிப்பார்.  நான் எவ்வளவு பொல்லாதவனாக இருந்தாலும் இறை நம்பிக்கை என்னிடம் இருப்பதால் கடவுள் என்னை மன்னிப்பார்..  என் கடவுள் கருணை மிக்கவர். இரக்கம் உள்ளவர்!”

“அட ஏமாற்றுக்காரா!  நீயா தர்மவான்? அனைத்துப்பாவங்களையும் செய்துவிட்டு இறைவனைத் தோத்திரம் செய்தால் உன்னை மன்னிப்பாரா? “ கண்ணன் மேலே செல்கையில் விவேகமும், ஞானமும் நிறைந்ததொரு குரல் கேட்டது.  அது கூறிய வார்த்தைகள் ஒரு துறவியினுடையதைப் போல் இருந்தன.  அது கூறியதாவது! “ “தீமைகளை எதிர்த்துப் போராடுவது என் வேலை அல்ல.  என் தர்மமும் அல்ல.  மெளனமாக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு விண்ணுலகின் மேம்பட்ட அரசனாக ஆகிவிடுவேன். என் பொறுமை அனைத்தையும் வென்று கொடுக்கும்.  தீயவர்கள் அவர்களின் முடிவை அவர்களே காண்பார்கள்.  அவர்களைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.  கொண்ட கொள்கைக்காக நான் செய்யும் இந்தத் தியாகத்தின் மூலம் பெரும் பதவியையும், புகழையும் அடைவேன்.”

“உன் தர்மம் குழந்தைகள் எப்படி எந்த வேலையும் செய்யாமல் நிஷ்கவலையாக இருக்கின்றனவோ அதை ஒத்துள்ளது.  குழந்தைகளுக்கு அது சரியானது! ம்ஹூம், வெட்டியாய் இருப்பதும் ஒரு தர்மமா?”  நீண்ட பெருமூச்சுடன் கிருஷ்ணன் மேலே நடந்தான்.  எலுமிச்சை வாசம் அடிக்கும் உடலுடன் எண்ணெய்ப் பசை கொண்ட தலைமயிரோடு, இளித்துக் கொண்டு ஒரு உருவம் வந்தது.  “இப்போது நீ பார்த்த, கேட்ட அனைத்து தர்மங்களும் பொய்யானவை.  மாயையானவை.  நான் என் இஷ்டப்படி சாப்பிடுவேன், குடிப்பேன், சந்தோஷம் அனுபவிப்பேன்.   என் உடலே எனக்குக் கோயில்.  என் உடலுக்கு நான் அளிக்கும் இன்பமே என் வழிபாடுகள், முக்கியச் சடங்குகள். அதற்கப்பால் ஒன்றுமே இல்லை;  எனக்குப் பின்னரும் ஒன்றுமே இல்லை!”

“நீ சாத்தானின் குழந்தை!  உன்னை என்னால் மன்னிக்கவே முடியாது.” கிருஷ்ணன் வெறுப்பிலும், அருவருப்பிலும் முகத்தைச் சுளித்த வண்ணம் திரும்பிக் கொண்டான்.  திடீரென இத்தனை நேரமாக அவன் கண்ட இந்த மாபெரும் ஊர்வலம் முடிந்து மறைந்து போனது.  தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தான் கிருஷ்ணன்.  அவன் மார்பு படபடவென அடித்துக் கொண்டது.  தனக்குத் தானே மெல்லச் சிரித்துக் கொண்டான் கிருஷ்ணன்.  அவன் கனவுகளின் மூலம் அவன் அறிந்தது, மனிதர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கோணத்தில் தர்மத்தைப் பார்க்கிறார்கள் என்பதே!  ஆனால் அவனுக்கும் தர்மம் என்றால் என்னவென்று தெரியும். துருபதனையும், பீஷ்மரையும்  போன்ற ஆட்சியாளர்களின் தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன் அறிவான்.  தங்கள் மக்களைக் காத்துக்கொள்ள வேண்டி அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் முக்கியமானவை.  அவை அவர்களின் தர்மம்.  தங்கள்குடிமக்கள் பசியில்லாமல் இருக்கவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும், கல்லாதவர்கள் கற்க உதவுவதும், பாரம்பரியமான வழிமுறைகளைக் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், அதன் மூலம் ஒரு உயர்ந்த அற வாழ்க்கையை வாழ்வதும் அவர்கள் தர்மம்.

ஒரு குடும்பத்தின் தர்மம் இதிலிருந்து மாறுபட்டது.  துருபதனின் குடும்பத்தைப் பார்த்தால்; ஆஹா, துருபதன் அவனுக்கும், அவன் குழந்தைகளுக்கும் இடையில் எப்படிப்பட்டதொரு அன்பால் ஆன வலையைப் பின்னி இருக்கிறான்.   அதை எவராலும் அறுக்க இயலாது.  மேலும் சொல்லப் போனால் குருவம்சத்தில்  இந்தக் குடும்ப தர்மம் எப்படி எனில், அது பாண்டவர்கள் ஐவரையும் ஒன்றாகப் பின்னிப் பிணைத்திருக்கிறதே.  அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்க்காகவும் அவர்கள் தாய்க்காகவும் அன்றோ வாழ்ந்து வருகின்றனர்.  யோசித்த வண்ணம் தன்னருகே பார்த்த கண்ணன் அந்த தர்மம் ருக்மிணியையும் ஷாய்ப்யாவையும் அன்றோ அன்பால் பின்னிப் பிணைத்துள்ளது.  அது தேவகி அம்மாவையும் அல்லவோ எட்டியுள்ளது! அவள் தன் குழந்தையான என்னிடம் அனைத்தையும் பார்க்கிறாள்; அனைத்திலும் என்னைப் பார்க்கிறாள்.   அதே போல் குரு மஹராஜ், ஆசாரிய தேவர் வியாசரின் தர்மமும் ஒரு வகைப்பட்டது.  தன்னிடம் நாடி வரும் அனைவரையும் அவர் அநுதாபத்துடன், கருணையுடன் அணுகுகிறார். அவர்களும் அவர் அன்பால் பிணைப்புண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு முன்னர் இருந்ததை விடத் தங்கள் நிலைமை சீராகி விட்டதை உணர்ந்து கொள்கின்றனர்.  இவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் என்று ஏற்பட்ட தர்மம் தான்;  இல்லை எனச் சொல்ல முடியாது.  என்னால் மறுக்கப்பட்டவர்களுக்கும் அவரவர்க்கென ஒரு தர்மம் இருக்கத் தான் செய்யும்.


அந்த தர்மம் அவர்களை ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் உயர்வைக் காட்டத்தான் செய்கிறது.  ஏதோ ஒரு உயர்ந்த தர்மம் அவர்களைப் பொறுத்த வரையில். அது உண்மையன்றோ!  மனதின் பலஹீனங்களையும் தாண்டிக் கொண்டு வாழ்க்கைப்படியில் அவரவர் தர்மத்தைக் கைக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்லும் என எண்ணுகின்றனர். இந்த ஏணிப்படியில் ஒவ்வொரு படியில் ஏறுகையிலும் அவர்கள் தாங்கள் முன்னை விட இப்போது முன்னேறிவிட்டதாகவும் எண்ணுகின்றனர்.  அதிலும் ஆண்கள் தனித் தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.  ஆகவே ஒவ்வொருவரும் அவரவர்க்கென தனி ஏணிப்படிகளை விரும்புகின்றனர்.  அதற்காக அவர்கள் எத்தகைய நிலைக்கும் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் இளித்துக் கொண்டும், தன்னிறைவு பெற்றவர்கள் போல் நடித்துக் கொண்டும், பிசாசுகளைப் போலவும், சாத்தான்களைப்போலவும்!  ஆஹா, எங்கே கண்டேன்?  ஆம் கனவில் வந்த ஊர்வலத்தில் இத்தகைய முகங்கள் தோன்றின.  அவரவர் உடலே கோயில் என நினைத்த வண்ணம், அப்படி நினைத்தாலும் இந்த உடலுக்கான போஷாக்குகளையும், இன்பங்களையும் பெற்றுத் தருவதே சிறந்த வழிபாடு என்னும் எண்ணத்துடனும்!

பெரிய இடி ஒன்று இடித்ததோடு அல்லாமல் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று விண்ணின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தாவியது. கண்ணன் மின்னலின் ஒளியில் தன்னையறியாமல் கண்களை மூடினான்.



Wednesday, January 15, 2014

கண்ணன் சந்தித்த பல்வேறு மனிதர்களின் உண்மை சொரூபம்!

தூங்க ஆரம்பித்த கண்ணனுக்கு மீண்டும் கண்ணெதிரே ஆடவரும், பெண்டிரும் தோன்றினர்.  முடிவில்லாத ஊர்வலமாக வந்தவர்கள் ஆங்காங்கே கோஷம் போட்டுக்  கொண்டும் , புருவ நெரிப்பிலும், முகச் சுளிப்பிலும் தங்கள் அதிருப்தியைக் காட்டிய வண்ணமும் வந்தனர். அவர்களில் சிலர் அழுது புலம்பிக் கொண்டு தர்மத்தைக் குறித்துப் பேசினர். இன்னும் சிலர் தர்மம் என்றால் என்ன என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்.  கண்ணனை அங்கே கண்டதும் அவனிடம் தர்மம் என்றால் என்ன எனக் கேட்டனர்!  அவர்கள் மனம் திருப்தி அடையும்படியான பதிலைக் கண்ணனால் சொல்ல முடியவில்லை.  அப்போது கண்ணனே அவர்களைப் பார்த்து தர்மம் என்றால் என்ன? என்று கேட்பதைக் கண்ணனே பார்த்தான்.  அவன் குரலையும் அவனே கேட்டான்.  அவர்களில் ஒருவர், “எனக்குத் தெரியும்”, என்றது கண்ணனுக்குத் தெரிந்தது.

 அந்த மனிதன் எதற்கு நெகிழ்ந்து கொடுக்காதவனாகத் தெரிந்ததோடு அல்லாமல், அவன் முகம் சத்ராஜித்தைப் போல் இருந்தது.  ஆனால் சத்ராஜித் முகத்தை விட இன்னமும் அதிகக் கோணல்களோடும், கபடம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.  அந்த முகம் சொல்லியது.  தன் கோணல் சிரிப்போது, “நான் தர்மத்தை விலைக்கு வாங்கி விட்டேன். பிராமணர்களிடமிருந்து வாங்கினேன்.  அவ்வளவு ஏன், அனைத்துக் கடவுளரிடமிருந்தும் வாங்கிவிட்டேன்.  என் குடும்பத்திற்கு நான் உணவளிக்கிறேன்.  அத்தோடு இல்லாமல் பல வழிபாட்டுத் தலங்களிலும் வழிபட்டு வருகிறேன்.  எனக்கு மட்டுமே தெரியும்.  எப்படிப் பணத்தைச் சேர்ப்பது என்பது மட்டுமின்றிப் பணக்காரர்களைச் சேர்ப்பதும்,  நான் மட்டுமே அறிவேன்.  செல்வத்தைச் சேகரிப்பது மட்டுமில்லாமல் அதைக் கொடுப்பதும் எவ்வாறு என நான் மட்டுமே அறிவேன்.”

“ஆஹா, பேராசை நிறைந்த உன் தர்மம் தர்மமே அல்ல!  வெறும் பணத்தாசையும் தர்மம் அல்ல.  நீ தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் அல்ல!”  கிருஷ்ணன் தான் இதைச் சொல்லிக்கொண்டே மேலும் நகர்ந்து செல்வதைக் கவனித்தான்.  தன்னைத் தானே பார்த்துக் கொண்டும், தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் ஒரு மூன்றாம் நபர் போல் அனைத்தையும் கிரஹித்துக் கொண்டும் இருந்தான் கிருஷ்ணன்.  “நான் அறிவேன் தர்மத்தை!  அதைக்குறித்து எனக்குத் தெரியும்!” இன்னொரு குரல் அங்கே கேட்டது.  அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த கிருஷ்ணன், புனிதச் சின்னங்களைத் தரித்துக் கொண்டிருந்த ஒரு உருவத்தைக் கண்டான்.  அது மேலும் சொன்னது!” நான் புனிதமானவன்.  பாவங்களிலிருந்து விலகி இருப்பவன்.  நான் எவரையும் கொல்லவில்லை; எங்கும் திருடவில்லை; பிறன் மனை நாடியதில்லை.  என் பாதை மட்டுமே சரியான பாதையாகும்!”

“ஆஹா, எல்லையற்ற பயத்தின் காரணமாகவன்றோ நீ இத்தகையதொரு தர்மத்தைக் கடைப்பிடிக்கிறாய்??  ம்ஹூம், நீ தக்க மனிதன் அல்ல.  தர்மம் உன்னிடமும் இல்லை!” இதைச் சொன்ன கண்ணன் மேலே சென்றான். மூன்றாவதாக இப்போது பேசிய குரல் எங்கோ அடி பாதாளத்திலிருந்து வருவது போல் கேட்டது.  யாரென்று கூர்ந்து கவனித்த கண்ணன் அது ஒரு துணிச்சல்காரரின் குரல் என்பதைக் கண்டான்.  பிசாசைப்போன்ற தைரியம் உள்ளவனோ?  அப்படித்தான் இருக்க வேண்டும்.  அந்தக் குரல் கூறியது.  “நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறேன்.  ஏனெனில் என் தர்மம் என்னவென நான் அறிவேன்.  என் எதிரிகளை ஒழித்துக் கட்டிவிட்டேன். ஏனெனில் என்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பாவத்தின் விளைநிலங்கள்.  பல உயிர்ப்பலிகளையும் கருணையோடு கொடுத்திருப்பதோடு அதன் மூலம் என் வெற்றியையும் இவ்வுலகிற்குப் பறை சாற்றுகின்றேன்.  நான் பிராமணர்களுக்கு உணவளிக்கிறேன்.  அவர்கள் என்னை வாழ்த்திப் பாடுகின்றனர்.” என்றது அந்தக் குரல்.  “ஆஹா, இந்தத் தற்பெருமைக்காகவன்றோ நீ தர்மத்தைக் கடைப்பிடிப்பதாய்ச் சொல்கிறாய்!  நீயும் அல்ல!” கண்ணன் இன்னும் மேலே சென்றான்.


 இப்போது ஒரு பணிவான குரல் அவன் காதுகளில் விழுந்தது.  மிகமிகப் பணிவும் விநயமும் நிரம்பிய குரலில் அது கூறியது!  “நான் அறிவேன் எது உண்மையான தர்மம் என்பதை!  வேறு எவரும் அறிய மாட்டார்கள்.  தர்மம் என்பதில் பணிவு வேண்டும். விநயம் வேண்டும்.  அடக்கம் இருக்க வேண்டும். என்ன கெடுதல்கள் நேர்ந்தாலும் நான் மகிழ்வோடு தாங்கிக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன்.  பசி, தாகம், குளிர், துரதிருஷ்டம் போன்றவற்றைக் கூடப் பொறுத்துக் கொள்கிறேன்.  என்னைப் போன்ற சாதுவான பொறுமைசாலிகளுக்கு இந்த உரிமைகள்  உயிரைப் போன்றது.   தர்மத்தின் பெரும்புகழ் இதில் தான் அடங்கியுள்ளது.  ஆகவே பொறுமையுடன் அனைத்தையும் பொறுத்துக் கொள்வதே தர்மம்!” என்றது.  “ஆஹா, நீ ஒரு அடிமையைப் போல் அன்றோ செயல்படுகிறாய்?? உனக்குள்ளே இருக்கும் தெய்வீகம் குறித்து நீ சிறிதேனும் அறிவாயா?   அதைத் தெரிந்து கொள்ளாத நீ தர்மவானா?  இல்லவே இல்லை.  உன் அடிமைப் புத்தி உன்னை விட்டு விலகவில்லை!”  கண்ணன் இன்னும் மேலே சென்றான்.

பின்னர் வந்தது ஒரு குரல்.  சூழ்ச்சி மிக்க நரியைப் போன்ற குரலாகத் தெரிந்தது அது.  மெதுவாக ரகசியக் குரலில் அது கூறியதாவது!”  எனக்குத் தெரியும் என் தர்மம் என்னவென்று!  பல கடினமான சூழ்நிலைகளில் இருந்தும், நிகழ்வுகளில் இருந்தும் நான் விலகியே இருப்பேன்.  சிங்கக் கூட்டங்களிடையே செல்ல மாட்டேன்.  எப்போதும் பத்திரமான, சுகமான வழியிலேயே செல்வேன்.  அங்கே அமைதியும் நிரம்பி இருக்கும்.  கடவுளரின் கடுமையைக் குறித்த பயமும் இருக்கும்!” “ஆஹா, இப்படியும் உண்டா?  நீ ஒரு கோழை.  உன் தர்மம் கோழைத்தனம் நிரம்பியது.  உன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்கிறாய்!  நீ அல்ல!”  கண்ணன் இன்னும் மேலே சென்றான். இப்போது இன்னொரு குரல் கேட்டது.  “எனக்கு செல்வத்தை அள்ளித் தரும் கடவுளர்களுக்கு ஆதரவாக நான் நடந்து கொள்வேன்.  அவர்களைக் குறித்து அவர்கள் சார்பாகப் பேசுவேன்.  ஒன்றுமே இல்லாதவர்களுக்கு எல்லாவற்றையுக் கொடுத்து ரக்ஷிப்பதாகச் சொல்வேன்.  ரக்ஷிப்பேன் என்னும் நம்பிக்கையை விதைப்பேன்.  அந்த நம்பிக்கைச் சொல்லைக் கேட்ட அவர்கள் ஆனந்தத்தில் குடித்துவிட்டு ஆடிப்பாடுவார்கள்.  சந்தோஷமாக இருப்பார்கள்.”

“பித்தலாட்டக்காரா!  நீ செய்வது பித்தலாட்டம்., நம்பிக்கை மோசடி.  இதுவா தர்மம்?? “கண்ணன் இன்னும் மேலே சென்றான்.  இப்போது ஒரு குரல் கேட்டது.  குரலிலேயே அதன்  உயர்வும், மேன்மையும் புரிந்தது.  கம்பீரம் குறையாமல் அது, “எனக்குத் தெரியும் எது தர்மம் என!  வாழ்க்கையின் சிக்கலான பொறிகளிலிருந்து தப்பிக்கும் வழி தான் அது.  ஏக்கங்களையும், கனவுகளையும் ஒடுக்குவதற்காக ஏற்பட்டது அது.  மனித மனத்தின் பலஹீனங்களைக் காட்டுவது.  என்னிடம் உள்ள பலஹீனத்தை நானே நன்கறிந்திருக்கிறேன்.  அதை வெறுக்கிறேன்.  அதே போல் மற்றவர்களின் பலஹீனங்களையும் அடியோடு வெறுக்கிறேன்.  ஆகவே பற்றற்ற தன்மையைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதோடு அனைவரிடமிருந்தும் விலகியும் நிற்கிறேன்.  மக்களிடமிருந்து தொடர்புகளை முழுமையாக அறுத்துக்கொண்டு அனைவருக்கும் மேலே தனித்து உயர்ந்து நிற்கிறேன்.”

“அடடா!  இது ஒரு வாழ்க்கையா?  நீ உனக்கு நிகரில்லை என்னும் இறுமாப்பிலும், அகந்தையிலும் இருக்கிறாய்!  இப்படி விலகி நிற்பதும் ஒரு வாழ்க்கையா?  நீயா தர்மவான்??” கண்ணன் மேலே சென்றான்.

Sunday, January 12, 2014

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

தன் நிலையைத் தனக்குள்ளேயே எண்ணிய கிருஷ்ணன், தன் அதிர்ஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டான்.  ஆனால் தன் நண்பர்கள் அனைவருமே தான் எங்கிருந்தாலும் அங்கே தர்மம் இருக்கிறது என்னும் எண்ணம் கொண்டிருப்பதையும் அவன் நினைவு கூர்ந்தான்.  அந்த தர்மம் தனக்கு எப்போதுமே வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தான்.   அவனுக்கு நிறையவே வெற்றிகள் கிடைத்துள்ளன.  அது என்னமோ உண்மை தான்.  ஆனால் அவன் தான் செல்லுமிடமெல்லாம் தர்மத்தைப் பின்பற்றி அதையும் கொண்டு செல்கிறனா?  இல்லை என்றே தோன்றுகிறது.  அப்படி அவன் தர்மத்தைக் கொண்டு சென்றிருந்தால் இன்றைக்கு அவன் உறவினர்கள் கண்களில் அது ஏன் படவில்லை?  அவன் செய்ய நினைத்தது சரி என அவனுக்கு மட்டும் ஏன் தோன்றவேண்டும்? அவர்களுக்கும் ஏன் தோன்றவில்லை?  என் சொந்த மனிதர்களையே என்னால் தர்மத்தின் பாதையில் தொடரச் செய்ய இயலவில்லை எனில் வரவிருக்கும் தலைமுறைகளை எவ்வாறு அதர்மத்தின் பக்கம் செல்லாமல் என்னால் மீட்க இயலும்??  அதர்மத்தின் பக்கம் அரசர்கள் போகாமல் அவர்களை எவ்விதம் நான் தடுப்பேன்?  தர்மத்தை நிலைநாட்டுவதும், அதை என்றென்றும் அனைவரும் பின்பற்றுமாறு காப்பது எப்படி?   அவன் இருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு மட்டுமில்லால் எப்போதும், என்றென்றும் நிலைக்கும்படியாக தர்மத்தை எவ்வாறு அவன் பாதுகாப்பான்?  தர்மத்தின் பாதுகாவலனாக அவன் எவ்விதம் தன் கடமையை ஆற்றுவான்?

விடைகாண முடியாத புதிர் ஒன்றின் கேள்விகளை எதிர்கொண்டிருக்கும் மாணவனைப் போல் உணர்ந்தான் கிருஷ்ணன்.   அவன் இப்போது போராடிக் கொண்டிருக்கும் தர்மம் என்பது தான் என்ன? இந்த தர்மத்தைப் பாதுகாத்து அதன் பால் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அவன் செய்யப் போவது என்ன? மனிதர்களின் கட்டுக்கடங்கா உணர்ச்சி வெள்ளத்திலும், அவர்களின் பலஹீனங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை அவன் எவ்விதம் பாதுகாக்கப்போகிறான்?

அன்றிரவு புயலும், காற்றுமாக மழை கொட்டித் தீர்த்தது.  இடியின் சப்தம் காதைப் பிளந்தது என்றால் மின்னல் கண்களைப் பறித்தது.   கடல் அலைகளோ ஒரு தென்னை மர உயரத்துக்கு எழும்பிக் குதித்தன.  கரையை உடைத்துக் கொண்டு கடல் வெள்ளம் உள்ளே புகுந்துவிடுமோ என்னும் அளவுக்கு அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை மோதின.  மழைச் சப்தமோ அது மழை நீரா அல்லது பெரிய கூழாங்கற்கள் விழுகின்றனவா என்னும்படியான சப்தத்துடன் கூரையில் பேரிரைச்சலுடன் விழுந்தது. அப்போது அந்த அனைத்து சப்தங்களையும் மீறிக் கொண்டு ஒரு குரல் அதிகாரத்துடனும், கம்பீரம் குன்றாமலும், “தர்மம் என்றால் என்ன?” என்ற கேள்வியைக் கேட்டது.   கண்ணனின் தூக்கத்தை அந்தக் குரல் கலைத்ததோடு அல்லாமல் அவனைக் கனவுலகில் இருந்தும் எழுப்பி விட்டது.  விண்ணுக்கும், மண்ணுக்குமாய் எழுந்த அந்தக் குரல் “தர்மம் என்றால் என்ன?” என்று கேட்டது ஈரேழு பதிநாலு லோகங்களிலும் எதிரொலிக்கும்படியான சப்தத்தை உண்டாக்கியது.


தெளிவற்ற, குழப்பமான காட்சிகள் உருவமில்லாமல் ஏதோ தோற்றங்கள் கண்ணன் முன் தோன்றின.    மிதந்து கொண்டும், உருண்டு கொண்டும், மறைந்து கொண்டும், தெரிந்து கொண்டும் பல தோற்றங்களில் ஆடவர்கள் தோன்றினர்.   அனைத்தும் மறைந்து திடீரென விருந்தாவனம் அதன் அழகான மரம், செடிகொடிகளோடும், பழங்களைப் பறித்து உண்ணும் குரங்குகளின் “ஈ” என்ற இளிப்போடும்,  ஆடும் மயில்களோடும், பாடும் குயில்களோடும் கண்ணன் கண் முன்னே தோன்றியது.  ம்ஹ்ஹூம்,  ராதை, அதோ ராதை, கண்ணனால் கைவிடப்பட்ட ராதை! ஆஹா, அவள் தான் அன்று பூத்த மலர் போல எத்தனை புதுமையுடன் காணப்படுகிறாள்.  என் உயிரை விட மேலான என் ராதை!  அவளை அவள் விதி இவ்விதம் தள்ளிவிட்டது!  தன்னந்தனியாக என்னை நினைத்து உருகுகிறாளே.  இது அவள் விதியா?  அல்லது இது தான் என் தர்மமா?

ராதை மறைந்தாள்.  மத்ராவின் மல்யுத்த மேடை கண்ணன் கண்ணெதிரே தோன்றியது.  சுற்றிலும் மக்கள் கூட்டம்.  மக்கள் அனைவரும் கண்ணனின் புகழ் பாடி கோஷமிடுகின்றனர்.  வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம் என்ற தொனி எங்கும் எழுகிறது.  ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் அவ்வளவு ஏன் ?  வயது முதிர்ந்தோர் கூடக் கண்ணனைப் புகழ்ந்து கோஷம் இடுகின்றனர்.  கண்ணனின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.  கம்சன், கொடூர மனம் படைத்த கம்சனின் உடலைத் தூக்கிச் சுழற்றிக் கண்ணன் அந்த மல்யுத்த மேடையில் வீசி எறிகிறான்.  கம்சனின் இறந்த உடலைக் கண்ட மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.  தங்கள் ரக்ஷகன் வந்தே விட்டான் எனக் கிருஷ்ணனைக் கொண்டாடுகிறது.   ஆனால், ஆனால், கண்ணன் கொன்றது யாரை?? அவன் தாய் வழி மாமனை!  இது தர்மமா?

கம்சன் மறைந்தான்;  அந்தக் காட்சிகள் மறைந்தன.  பலராமனும், கிருஷ்ணனும் மத்ராவை விட்டு ஓடுகின்றனர்.  ஜராசந்தனிடமிருந்து தப்பிக்க வேண்டி கோமந்தக மலை அடிவாரம் செல்கின்றனர்.  சஹ்யாத்திரி மலை அடிவாரத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கின்றனர்.  ஏனெனில் கண்ணன் ஒருவனுக்காக யாதவ குலத்தையே ஜராசந்தன் அழித்துவிட்டால்?? ஆகவே யாதவ குலத்தைக் காக்க வேண்டிக் கண்ணன் பலராமனோடு கோமந்தகத்துக்கு வந்துவிடுகிறான்.  யுத்தத்தை நேரிடையாக எதிர்கொள்ளாமல் இப்படித் தப்பித்து வந்தது சரியா?  அவன் சுத்த வீரனா? அல்லது கோழையா?  இது தர்மமா?

ஜராசந்தனின் மண்டையை உடைக்க பலராமன் தயாராக இருந்தான். கோமந்தக மலையில் அவன் காலடி எடுத்து வைத்திருந்தால் அடுத்த நிமிடம் அது நடைபெற்றிருக்கலாம்.  ஆனால் கண்ணன் தலையிட்டு பலராமனின் கதையைத் தடுத்து  அவன் கோபத்தையும் குறைத்து,  ஜராசந்தனின் உயிரைக் காப்பாற்றினான்.  ஆர்யவர்த்தத்தின் அக்கிரமங்களுக்கெல்லாம், அதர்மங்களுக்கெல்லாம் துணை போகும் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினான்.  ஆனாலும் ஜராசந்தன் திருந்தினானா?  இல்லையே! எத்தனை அரசர்களைத் துன்புறுத்தி வருகிறான்?  எத்தனை எத்தனை ரிஷி, முனிவர்களின் குருகுலங்கள் கலைக்கப்பட்டன!  எத்தனை பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தான்?  அவனை நான் காப்பாற்றியது தர்மமா?

குண்டினாபுரத்தில் விதர்ப்ப இளவரசியின் வேண்டுகோளின் பேரில் அவளைத் தூக்கிச் சென்றதோடு அல்லாமல் அவளை விடுவிக்கப் போராடிய அவள் சகோதரனையும் காயப்படுத்தினேன்.  ருக்மிணியின் சுயம்வரமே ஒரு கேலிக்கூத்தாக, பெண்களின் கோபக் குமுறலுக்கும், அரசர்கள், இளவரசர்களின் கடித்த பற்களிடையே கொண்ட கோபாவேசமான பேச்சுக்களுக்கும், அரச குலப்பெண்களின் புலம்பலுக்கும் காரணம் ஆகிவிட்டது.   இளகிய நல்ல சுபாவம் கொண்ட  பீஷ்மகனின் மனம் நொறுங்கி விட்டது.  ருக்மியோ தண்டனையாக தனக்குத் தானே நாடு கடத்திக் கொண்டான்.  இது தர்மமா?

ஹஸ்தினாபுரம்!! துரியோதனனுக்கு அவன் செய்வது தர்மமா?  நன்மையா? தவறைச்சரி செய்கின்றானா?  அடுத்து கர்ணன்!  அவன் தாயால் பிறந்ததுமே ஒதுக்கப்பட்டவன்.   அதிர்ஷ்டம் கெட்டவன்.  அவனை அவன் தாய் மட்டுமா ஏமாற்றினாள்.  மனிதர்களும்தானே!  என்றாலும் அவன் தன் உயர்ந்த குடிப்பிறப்பினால் விளைந்த மனோதிடத்துடன் அனைத்தையும் எதிர்கொள்கின்றானே!  தன் சொந்தத் திறமையினாலும் அதனால் விளைந்த பலனாலுமே தன் நற்குணங்களை நிலைநாட்டவும் முயற்சிக்கின்றானே! அவன் பாதையில் நான் குறுக்கிடலாமா?  இது தர்மமா?

காம்பில்யம்,  அங்கே நடந்ததோ!  துருபதனும், அவன் மக்களும் தங்கள் மனதைத் திறந்து அவனிடம் காட்டிவிட்டனர்.  அவர்கள் நம்பிக்கையைக் கண்னன் ஒத்துக் கொண்டான், எனினும் குருவம்சத்தினரிடம் போரிட்டு ஜெயிக்கவேண்டும் என்னும் பேராபத்தை எதிர்கொள்ள மறுத்துவிட்டான். ஆனால் அடுத்து அவன் செய்யப் போவது என்ன? அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்து அதை நடத்தி முடிக்க எண்ணுகிறான்.  அது அவ்வாறே நடைபெறுமா?  தோல்வியுறுமா? அநேகமாய்த் தோல்வி தான் கிட்டும்.  இது தர்மமா?

கண்ணன் உடல் நடுங்கியது.  அப்போது இரு மிருதுவான கரங்கள் அவனைத் தொட்டன.  கண்களைத் திறந்து பார்த்த கண்ணன் ருக்மிணி அன்பும், ஆதுரமும் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  ஒரு புன்னகையோடு தன் கண்களை மூடிக்கொண்ட கண்ணன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.  ஆனால் உறங்கினானா?




Friday, January 10, 2014

அதிர்ஷ்டம் இல்லாக் கண்ணன்!

விசுவாசமும், நம்பிக்கையும் தரும் மனைவி மட்டும் இருந்து விட்டால் ஒரு மனிதனால் எதைத் தான் சாதிக்க முடியாது!  கண்ணனுக்கோ இரு மனைவியரும் அப்படியே கிடைத்து இருந்தனர். கரவீரபுரத்தின் இளவரசியான ஷாய்ப்யா  கண்ணனின் உள் மனதுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைத் தன் அதீத புத்திசாலித் தனத்தினால் புரிந்து கொண்டாள். எப்போதும் அதிகம் பேசாமல் பார்வை ஒன்றாலேயே கண்காணிக்கும் அவளுக்கு வீர, தீர, பராக்கிரமசாலியான கண்ணனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு புரிந்து கொள்ள முடிந்தது.   எவராலும் சமாளிக்க முடியாத செயல்களைச் செய்வதினாலேயே கண்ணன் சிறந்தவனாக விளங்குவதையும் அவளால் உணர முடிந்தது.  அவன் கடுமையான போராட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பல சந்தர்ப்பங்களை அவள் கண்டிருக்கிறாள்.  பேரழிவிலிருந்து விரைவான செயல்பாட்டின் மூலம் வெளிவர அவனுக்கு எவ்வளவு சக்தி தேவைப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவாள்.  தீங்கு வரக்கூடும் என்பது தெரிந்தே தன் அதிசய சக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவன் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு வந்திருக்கிறான்.  இது நிச்சயம்.  ஆகவே அவள் இப்போதும் அதிகம் பேசவே இல்லை.  ஆனால் கண்ணனின் மனநிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டதோடு, அவனுடைய  ஒரு பார்வையிலோ, சொல்லிலோ, செய்கையிலோ அவன் மனதைப் புரிந்தவளாக அவனுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் விதமாக நம்பிக்கை ஊட்டி வந்தாள்.

கண்ணனுக்குத் தன் தாயும், இரு மனைவியரும் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும், அன்பும், பரிவும் பாசமும் நன்கு புரிந்தது.  ஆகவே அவன் தன்னிடம் எவ்வித மாற்றமும் இல்லாதவன் போல எப்போதும் போல மாறாப் புன்னகையுடன் இருந்தான்.  ஆனால் அடி மனதில் அவனுக்கு வேதனையும், தொந்திரவும் தொடர்ந்து இருந்து வந்தன.   உண்மையான சூழ்நிலை என்ன என்பதைக் குறித்து அவன் தீர்மானமாக அறிந்திருந்தான்.  யாதவர்கள் காற்றில் ஆடும் கொடியைப்போல ஆட்டம் கண்டுவிட்டனர்.   அவன் இவ்வளவு வருடங்களாகப் போற்றிப் பாதுகாத்து வந்த தர்மத்தின் வழியில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள், அதன் மூலம் தர்மத்துக்குக் கிடைக்கவிருந்த வெற்றி அனைத்தும் நெருங்கி வருவதைப் போல் வந்துவிட்டு மறைந்துவிட்டது.  இனி நம்பிக்கைக்கே இடமில்லாமல் போய்விட்டது.  இப்போது அவன் செய்ய வேண்டியது எல்லாம் வாய் பேசாமல் சுயம்வரத்தில் கலந்து கொள்வது ஒன்று மட்டுமே!  ஆனால் இந்த சுயம்வரத்தில்  தர்மத்தின் மாட்சிமை பொருந்திய சக்தி தன்னிடம் உள்ளது என்ற எண்ணத்துடன் அந்த கம்பீரத்துடன் அவனால் கலந்து கொள்ள இயலாது.  யாதவர்கள் எவரும் அவனுக்குப் பின்னால் துணையாக இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டுவிடுவார்கள்.  மற்ற அரசர்களைப் போல அவனும் அவர்களில் ஒருவனாகவே இருக்க வேண்டும்.  அவன் மகிமையோ, அவன் வீரமோ, மாட்சிமையோ தனித்து உணர முடியாது.

உத்தவனை கண்ணன்  பீஷ்மரிடம் தூது அனுப்பி இருக்கிறானே!  அதுவும் தோற்றுவிடுமோ?  அப்படித் தோற்றுவிட்டால்?? பீஷ்மருக்குக் கண்ணன் விடுத்த வேண்டுகோளை  பீஷ்மர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்??  நியாயம் என்ன என்பதையும், நீதியின் வழி செல்லவேண்டிய அவசியத்தையும் பீஷ்மரும் உணராவிட்டால்??   உத்தவன் தலைமையில் நாகர்கள் புஷ்கரத்தை வலுவில் பிடுங்கி செகிதானாவுக்குக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டால்?? இல்லை; இல்லை. அப்படி எல்லாம் நடவாது.  புஷ்கரம் மட்டும் செகிதானாவிற்குத் திரும்பக் கொடுக்கப்படாவிட்டால்!! ஆஹா, கண்ணன் தோற்றே விடுவான்.   தவிர்க்க இயலாமல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் கண்ணனின்  வசீகரம் மெல்ல மெல்ல மறைந்தே போகும்.  கண்ணன் தன் தலையை உலுக்கிக் கொண்டான்.  ஆனால் ஒன்று நிச்சயம், கண்ணன் திட்டப்படி ஐந்து சகோதரர்களும் சுயம்வரத்தில் எப்படியேனும் கலந்து கொண்டே ஆக வேண்டும்.

கண்ணனின் திட்டப்படி, அவர்கள் ஐவரும் அனைவரும் பிரமிக்கும் விதத்தில் இந்த சுயம்வரத்தின் போது வெளிப்பட வேண்டும்.  அப்படி இல்லை எனில் அவர்கள் ஐவருமே குரு வம்சத்தினரின் கெளரவர்கள் நூற்றுவரின் அடிமைகளாக அவர்களைச் சார்ந்தவர்களாகவே என்றென்றும் வாழும்படி ஆகிவிடும்.  குரு வம்சத்தினரின் முன்னர் வேறு உதவிகள் இல்லாதவராய் நிராதரவாய் நிற்கும்படி ஆகிவிடும்.  சகோதரச் சண்டை அதிகம் ஆகும்; அல்லது துரியோதனன் தன் முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பதால் எதுவுமே செய்ய முடியாமலும் போகலாம்.  அதோடு விட்டதா?  மேலும் இந்த ஜராசந்தன் ஒருவன் இருக்கிறானே!  மகத நாட்டுச் சக்கரவர்த்தி!  ஆரியர்களை அழிப்பதே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.  ஆரியர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அழிப்பதே அவனுக்கு முக்கியம். அதற்காகவே பாஞ்சால இளவரசியைக் கடத்தித் தூக்கிச் செல்லவும் தயங்க மாட்டான்.  ஒன்றையொன்று தொடர்ந்து வரும் சத்யம், யக்ஞம், தபஸ் போன்ற ஆசார, அநுஷ்டானங்கள், ரிஷி, முனிவர்களால் சொல்லப்பட்ட, சொல்லப்படுகின்ற அவர்கள் ஆசிரமங்களில் கற்பிக்கப்படுகின்ற இந்த வாழ்க்கை முறைக்கெல்லாம் அழிவு ஏற்பட்டு விடும்.  அவர்களால் அன்றோ ஆரியர்களின் வாழ்க்கை கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும், ஒரே சீராக நடந்து வருகிறது.  இவை மறைந்து போய்விடுமோ?   இவற்றைக் காக்க எவரும் இல்லாமல், இவற்றை மேம்படுத்த, இவற்றைக் கற்க எவரும் இல்லாமல் ஒரேயடியாக மறைந்து விடுமோ?  என்ன செய்யப் போகிறேன்!

இந்த தர்மசங்கடமானதொரு இக்கட்டானதொரு சூழ்நிலையைக் குறித்து நினைக்க, நினைக்க, கண்ணனுக்குத் தான் ஏதோ, எதையோ விட்டு விட்டது போல், மறந்துவிட்டது போல் இருந்தது.  அனைவரும் அவனைக் கடவுள் எனக் கொண்டாடுகின்றனர்.  ஆனால் அவனோ ஒரு சாமானியனாக, பலஹீனனாகவன்றோ இருந்து வருகிறான்!  ஆஹா, அனைவருமே நான் ஏதோ அதிசயங்களை நிகழ்த்துபவனாக, ஒரு சாகசக்காரனாக நினைக்கையில் நான் இப்படி இருக்கிறேனே!  நான் ஒரு சாமானியன். ஆனால் கெட்டிக்காரன்.  அதிர்ஷ்டம் என்பது என் கதவுகளை எப்போதோ ஒரு முறை தான் தட்டுகிறது.

Wednesday, January 8, 2014

கண்ணன் படும் பாடு!

இது வரையிலும் கிருஷ்ணன் சொன்னவற்றை ஆமோதித்து வந்தவர்களுக்குக் கூட இப்போது கொஞ்சம் தயக்கம் வந்துவிட்டது.   பலராமனின் யோசனையை அனைவரும் ஏற்கலாம் என நினைத்தனர்.  துரியோதனன் புஷ்கரத்தை ஆக்கிரமித்ததில் அவர்களுக்கு உடன்பாடாகவே  இருந்தது.  அதில் தாங்கள் தலையிட வேண்டாம் என எண்ணினார்கள்.  சாத்யகியுடனும், கிருதவர்மாவுடனும் கிருஷ்ணன் மட்டும் சுயம்வரத்துக்குச் செல்லட்டும்.  ஆனால் போட்டிகளில் ஈடுபட வேண்டாம்.  துரோணரை எதிரியாக்கும் விதமாகவும், ஜராசந்தனின் கொடுங்கோன்மை அதிகரிக்கும் வண்ணமாகவும் இந்த சுயம்வரத்தில் போட்டிகளில் கலந்து கொண்டு திரெளபதியை ஜெயிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.  அவர்கள் அனைவரின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு ஜெயித்து மனைவியாக்கிக் கொள்ள திரெளபதி அப்படி ஒன்றும் உயர்ந்தவள் அல்ல.  அதற்கான தகுதி அவளிடம் இல்லை.


இந்த ஆலோசனை சபையிலிருந்து திரும்பிய கிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்தான்.  அவன் போட்ட  திட்டங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டன.  யாதவத் தலைவர்கள் அவனை மிக மோசமாக ஏமாற்றிவிட்டனர்.  தங்கள் குலத்தின் தற்போதைய சுகத்தையும், சுதந்திரத்தையும் மட்டுமே எண்ணிக் கொண்டு, நாட்டின்  வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க மறுக்கின்றனர். அவன் உதவியால் அவர்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்துவிட்டனர்.  அதோடு அவன் யாதவ குல ரக்ஷகன் என்பது முடிந்துவிட்டது.

இப்போது அவர்கள் அனைவரும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும், பெரும்பணக்காரர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.  ஆகவே அவனுடைய பணி என்ன, எதற்காக அவன் அரும்பாடுபட்டு தூது செல்கிறான் என்பது குறித்தெல்லாம் அவர்களுக்குக் கவலை ஏதும் இல்லை.   அவ்வளவு ஏன்? அவர்களின் தர்மம் என்ன என்பது குறித்தும் அக்கறை இல்லை.  ஒரு நல்ல சிறந்த ஆரியன் எப்படி வாழவேண்டும், ஒரு ஆரிய அரசன் எப்படி ஆட்சி நடத்த வேண்டும், அவன் அரச தர்மம் என்ன என்பதை எல்லாம் ஆர்ய வர்த்தம் முழுமைக்கும் யாதவர்கள் மூலம் நடத்திக்காட்ட வேண்டும் என்று கிருஷ்ணன் கண்ட கனவுகளெல்லாம் கரைந்து போயின!  அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக அவன் நினைத்தது ஊமை கண்ட கனவாக ஆனதோடு அல்லாமல்  முட்டாள் தனம் என்னும் பெயரை அன்றோ வாங்கி விட்டது.  ஆரியர்களின் வாழ்க்கையோடு தான் தங்கள் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்தது என்பதை யாதவர்கள் உணரவே இல்லையே!  இவை அனைத்தும் தங்கள் நன்மைக்கே என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவே இல்லையே!

கிருஷ்ணனின் மனதில் துரியோதனனால் செகிதனாவுக்கு நடந்த தவறைச் சரி செய்ய நினைக்கும்  எண்ணம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது தான்.  அதில் அவர்கள் தலையிட மறுப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே!  அல்லது இந்த சுயம்வரத்தின் மூலம் ஆர்யவர்த்தம் முழுதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் ஜராசந்தனின் முயற்சியையும் அவர்கள் தடுக்க நினைப்பார்கள் என எண்ண முடியாது தான்.  இது அதர்மம் என்றும்  அதன் வெற்றி என்றும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் தான்.  ஆனால் அதன் மூலம் துரோணருக்கும், துருபதனுக்கும் இடையில் இருக்கும் மனக்கசப்பையையும், பகைமை உணர்வையும் அடியோடு அழிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லையே! அதிலே இவர்களுக்குக் கொஞ்சமும் ஆர்வம் இல்லையே!  இந்த மனக்கசப்பும், வெறுப்பும் எந்த அளவுக்குத் துன்பத்தை ஆர்யவர்த்தம் முழுமைக்கும் அளிக்கும் என்பதையும் யோசிக்க மறுக்கின்றரே!  யாதவர்கள் நடுநிலைமை வகிப்பவர்கள்;  அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பதை எல்லாம் இந்தப் பகைமையை ஒழிப்பதன் மூலம் நிரூபிக்கலாமே!   தங்கள் இருப்பும், தங்கள் தலையீடும் அங்கே எவ்வளவு தேவை என்பதை உணர மறுக்கின்றனரே!

ஆனால் இந்த சுயம்வரத்தின் மூலம் பாண்டவர்கள் ஐவரையும் கிருஷ்ணன் வெளிக்கொண்டுவர நினைப்பது குறித்து யாதவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.  அது மட்டுமின்றி அர்ஜுனனை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்து திரெளபதியை வெல்ல முயற்சி செய்யச் சொல்லவேண்டும் என்று கண்ணன் திட்டம் வகுத்திருப்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.  ம்ஹூம், இல்லை; இல்லை;  கண்ணனும் அவர்களுக்குச் சொல்லப் போவதில்லை.  இப்போது இல்லை.  எப்போதும் இல்லை; அப்படியே சொன்னாலும் அவர்கள் இதைக் கேட்டுவிட்டுக் கேலியாகச் சிரிப்பார்கள்.   இதை முட்டாள்தனமாகவும் நினைப்பார்கள்.  பார்க்கப் போனால் இது ஒரு சூதாட்டம் போலத் தான்.

ஒருவேளை அர்ஜுனனை இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் இருந்து ஏதேனும் காரணங்கள் தடுக்கலாம்.  எவரேனும் தடுக்கலாம்.  அவ்வளவு ஏன்? அவன் துரோணரின் அருமைச் சீடன் என்பது ஒன்றே போதுமே!  திரெளபதியை அவன் வெல்ல முயன்றால் அதுவே பெரும் தடையாகுமே! அல்லது திரெளபதி அவன் துரோணரின் சீடன் என்பதால் அவனைத் தேர்ந்தெடுக்க மறுக்கலாம்.  அதனால் வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்கள் எல்லாருடைய  மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் கலவரம் செய்யலாம்.  அல்லது ஜராசந்தனால் திரெளபதி கடத்திச் செல்லப்படலாம். இவை எதுவும் நிகழாமல் இருக்க வேண்டுமானால்!!!!!!!!!!!!!!  கண்ணனின் அனைத்து நம்பிக்கைகளும், வாக்குறுதிகளும் செகிதனாவை மீண்டும் புஷ்கரத்துக்கு அரசனாக்கிவிட்டு அந்த வழியே செல்ல அர்ஜுனனுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாமல் உதவிகள் செய்வதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.   இந்த உதவியை அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் யாதவர்களைத் தவிர எவரால் செய்ய முடியும்?  அவனுடைய அனைத்து நம்பிக்கைகளும் மண்ணோடு மண்ணாகிவிட்டனவே!

கண்ணனின் தன்னம்பிக்கையே ஆட்டம் கண்டுவிட்டதோ என்னும்படி கண்ணன் அவன் வாழ்க்கையிலேயே முதல்முறையாகக் கவலை கொண்டான்.  என்ன செய்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய இந்தத் துன்பங்களில் அவனோடு பங்கு கொள்வார் எவருமே இல்லாதது போல் உணர்ந்தான்.   எவரிடமும் மனம் விட்டுப் பேசக் கூட அவனால் முடியவில்லை.  உத்தவன் எங்கோ இருந்தான்.  சாத்யகி, ஒரு நல்ல விசுவாசமுள்ள நண்பன் தான்.   இளம் யாதவ வீரர்களை வரவிருக்கும் மாபெரும் யுத்த சாகசங்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இருந்து அவன் தவறவில்லை.  தவறாமல் பயிற்சி அளித்து வந்தான் தான்.  ஆனாலும் அவனுக்கு உள்மனதில் இத்தனை பெரிய ஒரு வீர, தீரப் பராக்கிரமச் செயலைச் செய்தே ஆகவேண்டுமா?  அது நடக்குமா என்னும் சந்தேகம்  தோன்றிக் கொண்டே தான் இருந்தது.  


அவன் தாய் தேவகி, அவன் இரு மனைவியர் ருக்மிணி, ஷாய்ப்யா,  ஆகிய மூவரும் தங்கள் உள்ளுணர்ச்சியால் கண்ணன் மனப்போராட்டத்தை எவ்விதமோ புரிந்து கொண்டனர்.  ஆகவே மூவரும் அவரவர் வழியில் அவனுக்கு உதவியும், ஆறுதலும் அளிக்க முற்பட்டனர்.   தேவகி அம்மா அவனுடைய துன்பங்களினால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் அன்புக்கும், பாசத்துக்கும் இடையூறு ஏற்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.  என்றாலும் அவளுக்குள் தன்னுடைய கோவிந்தன் ஒரு கடவுள் என்னும் எண்ணமும், அவன் இருக்கும் வரையில் எதிர்காலம் குறித்த சிந்தனையோ, கவலையோ வேண்டாம் என்னும் எண்ணமும் தொடர்ந்து இருந்தன.  


தாய்மை எய்தி இருந்த ருக்மிணி தன் அன்பாலும், அழகாலும் கண்ணன் மனதைக் கவர்ந்து அவன் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினாள்.  தான் கண்ணனை மிகவும் காதலிப்பதையும், அவன் மேல் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையையும் தன் செயல்களாலும், பேச்சுக்களாலும் வெளிப்படுத்தினாள்.  கண்ணனுக்குத் தோல்வி என்பதே இல்லை என்றும், அவன் தர்மத்தை நிலைநாட்டவே பிறந்திருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெளிவு படுத்தினாள்.  அதோடு கண்ணனுடைய அபரிமித வெற்றிக்காகவே இத்தனை கஷ்டங்களையும் மனத் துன்பத்தையும் அவன் அனுபவிக்கிறான் என்றும் அடுத்து அவன் பெறப்போவது மாபெரும் வெற்றி என்றும் தீர்மானமாகக் கூறினாள்.  தன் அன்பும், ஆதரவும் என்றென்றும் கண்ணனுக்கே என்று  கூறியதோடு அல்லாமல் அவன் செயல்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி கூறினாள்.



Tuesday, January 7, 2014

சத்ராஜித்தின் வாதமும், கண்ணனின் நிராதரவான நிலையும்!

கிருஷ்ணன் எவ்வளவு சொல்லியும், எத்தனை விளக்கியும் அவன் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றதாகத் தெரியவில்லை.  யாதவத் தலைவர்கள் எவருக்கும் அவன் சொன்னதின் மேல் எந்தவிதமான அபிப்பிராயமும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.  அவர்களில் தலைமை வகித்தவன் சத்ராஜித் என்னும் வலிமை வாய்ந்த, மிகப் பெரிய பணக்காரன் ஆன யாதவத் தலைவன் ஆவான்.  இங்குள்ள மற்ற யாதவர்களிடையே மட்டுமின்றி ஆர்யவர்த்தம்,  மற்றும் அதைத் தாண்டி வாழ்ந்து வந்த அனைத்து யாதவர்களிடையேயும் சத்ராஜித்தின் அதிகாரம் சென்று கொண்டிருந்தது.  அனைவரும் அவனை முக்கியமான தலைவர்களில் ஒருவனாக மதித்து அவன் சொல்வதைக் கேட்பார்கள்;  கேட்டும் வந்தார்கள்.  சியமந்தக மணி என்னும் விலை மதிக்க முடியாத ஒப்பற்ற அதிசய சக்தி வாய்ந்த மணியை அவன் எவ்விதமோ பெற்றிருந்தான். (இது குறித்து விரிவான தகவல்கள் பின்னர் வரும்.)  அந்த மணியின் சக்தியும், ஒளியும் எங்கெங்கும் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒன்று.  அந்த மணியின் ஸ்பரிசம் எதன் மேல் பட்டாலும் அது பத்தரைமாற்றுத் தங்கமாக மாற்றிக் கொண்டிருந்ததாகவும் சொல்லி வந்தனர். அதோடு இல்லாமல் சத்ராஜித்திடம் பல பெரிய வணிகக் கப்பல்கள், போர்க்கப்பல்களும் இருந்தன.  எண்ண முடியாத அளவுக்கு மிகப் பெரிய சொத்திற்கும் அதிபதியாக இருந்தான்.  ஆடம்பரமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்ததோடு அல்லாமல், துவாரகையின் பணக்கார யாதவர்களைக் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலமும், மற்றும் பலவிதங்களிலும் மகிழ்விப்பதிலும், அவர்களோடு நெருங்கிப் பழகுவதிலும் முன்னணியில் இருந்து வந்தான்.

ஆனால் என்ன காரணத்தினாலோ சத்ராஜித்திற்குக் கிருஷ்ணன் மேல் சிறிதும் நம்பிக்கை என்பதே இல்லை.  இப்போதோ கேட்கவே வேண்டாம். கிருஷ்ணனின் யோசனைகளுக்கும், அவன் எடுத்த முடிவுகளுக்கும் பலத்த ஆக்ஷேபங்களைத் தன் முழு மனதோடு தெரிவித்தான்.  கிருஷ்ணனின் மேல் தனக்குள்ள அவநம்பிக்கையையும் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டான்.   கொஞ்சமும் நிம்மதி இல்லாமல் மத்ராவுக்கு வெளியே வாழ்ந்து வந்த அவன் கம்சனின் மறைவுக்குப் பின்னரே மத்ரா திரும்பினான்.  ஒரு அகதியைப் போல மத்ரா திரும்பினவனுக்கு யாதவக் குடிகள் அனைவரும், இடையனாகவும், மாடு மேய்ப்பவனாகவும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் திரிந்து வந்தவனும் ஆன ஒரு சின்னஞ்சிறு இளைஞனை நம்பி இருப்பது ஆச்சரியத்தை மட்டுமின்றி, இது பேராபத்துக்கு வழி வகுக்கும் என்றும் தோன்றியது. இவனை நம்புவதில் உள்ள ஆபத்தை யாதவர்கள் உணரவே இல்லையே?  எப்படிக் காட்டுத்தனமாய் வளர்க்கப்பட்டானோ அவ்விதமே எல்லையில்லாத கனவுகள் கண்டு இவ்வுலகத்து மக்கள் அனைவரையும் தர்மத்தின் பாதையில் திருப்பப் போவதாய்ச் சொல்லிக்கொண்டு திரியும் இவனா யாதவர்களின் தலைவன்?   இவனா அனைவரையும் வழி நடத்துகிறான்?  இது சரியாக வருமா?  சத்ராஜித்துக்குக் கோபம் மட்டுமில்லாமல் கண்ணன் மேல் தனக்கிருந்த அவநம்பிக்கையையும் வெளிப்படையாகவே காட்டி வந்தான்.

சத்ராஜித் எப்போதோ உணர்ந்துவிட்டான்.  யாதவர்கள் கிருஷ்ணனால் வழி நடத்தப்பட்டு, பல தலைமுறைகளுக்கும் இப்படியான இடர் விளைவிக்கும் வாழ்க்கையை ஒரு சாகசம் என நினைத்து வாழ்ந்து வந்தார்களானால்??? மொத்த ஆர்யவர்த்தமும் யாதவர்களுக்கு உட்பட்டு ஆளப்பட வேண்டும் என்ற கனவு கண்டார்களானால்??  ம்ஹூம், இதெல்லாம் நடக்கக் கூடியதே அல்ல! வெறும் கனவு!  வெறும் வாய்ப்பந்தல் போடுகிறான் அந்தக் கிருஷ்ணன். இல்லை, இல்லை, எனக்கு ஆர்யவர்த்தத்தை ஆளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.  சத்ராஜித் கிருஷ்ணனின் யோசனைகளைத் திட்டவட்டமாக மறுத்தான்.  எல்லாம் சொல்லி முடித்தாயிற்று!  இனி என்ன? யாதவர்கள் ஒரு போதும் மற்றவர்களின் சொந்த விஷயங்களிலோ அவர்கள் உள்நாட்டு விவகாரங்களிலோ தலையிடமாட்டார்கள். அதோடு இல்லாமல் சத்ராஜித்துக்கே இவை எதுவும் பிடிக்காது.  அவனுக்கு வாழ்க்கையை எல்லா விதங்களிலும் அனுபவித்து வாழ்வதும், யாதவர்களிடையே தன்னுடைய கெளரவம் காப்பாற்றப்படுவதுமே முக்கியமான ஒன்று.  மற்றவை பற்றி அவனுக்குக் கவலையில்லை.    அவனை வளமாகவும், செழிப்பாகவும் மாற்றாத எதுவும் தர்மத்தோடு சேர்ந்தது இல்லை.

கிருஷ்ணனின் யோசனைகளைக் கேட்ட சத்ராஜித் வாய் விட்டுச் சிரித்தான். ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எப்படிப் போனால் யாதவர்களுக்கு என்ன வந்தது?  அவர்களுக்கு இதன் மூலம் என்ன லாபம் அல்லது நஷ்டம்?  ஜராசந்தன் அவர்களை நிர்மூலமாக்க முயன்று கொண்டிருந்த போது எந்த அரசன் அவர்களின் உதவிக்கு வந்தான்??  அவர்களின் அதிகாரங்களை அவர்களுக்குள்ளாகப் போர் செய்து முடிவு செய்துகொள்வதே சிறந்தது.   இதில் எல்லாம் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதிலேயே யாதவர்களுக்கு கெளரவம்.  அதுவே அவர்களுக்குச் சிறப்பையும் உயர்வையும் கொடுக்கும்.   துருபதன் ஜராசந்தனின் பேரனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பினால்,  அது நிச்சயமாகப் பாஞ்சாலத்தின் அழிவுக்கும், துருபதனின் அதிகாரத்துக்கும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.  அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.  ஆனால் அது நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு, குரு வம்சத்தினருக்கே இதன் மூலம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும்.  ஆகவே பீஷ்மர் தான் இது குறித்தும், மகத நாட்டு அதிகாரத்தை ஒழிப்பது குறித்தும் கவலைப்பட வேண்டுமே தவிர, யாதவர்கள் அல்ல.  அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளட்டும்.  அப்படித் தான் நடக்கப் போகிறது.   இது தான்  அவர்களுக்கு விதித்த விதி.  இதில் யாதவர்களுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை.  அவர்களை இதில் நுழைப்பதில் எவ்விதமான புத்திசாலித்தனமும் தென்படவும் இல்லை. சத்ராஜித் மேலும் நிதானமாக விவரிக்க ஆரம்பித்தான்.   அமைதியான இந்த நாட்களின் இனிமையைக் குறித்தும், அதன் மூலம் தங்களுக்குக் கிடைத்துள்ள அருளாசிகள் குறித்தும் எண்ணிப்பார்க்கச் சொன்னான்.

யாதவ குலமே இப்போது தான் செழுமையையும், வளத்தையும், சுகத்தையும் கண்டு வருகிறது.  அவர்களின் அக்கறை யாதவ குல முன்னேற்றத்தில் தான் இருக்கவேண்டுமே அன்றி, எதிரிகளின் அதிகாரங்களைப் பறித்து வெல்வதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் இல்லை.  கடவுள் யாதவர்களுக்கு வாழ்க்கையை இப்படியான வெட்டி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு வீணாக்கவா கொடுத்திருக்கிறார்??  ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடவே யாதவர்கள் பிறந்திருக்கின்றனர்.   மற்றவர்களின் சண்டையில் தலையிடுவதற்காகவா யாதவர்களுக்கு ஆண்டவன் உயிர் கொடுத்து வாழ வைத்திருக்கிறான்?   கிருஷ்ணனின் அடுத்தடுத்த சமாதானப் பேச்சுக்களும், யாதவர்கள் தர்மத்தின் நெறியில் வாழ்ந்து  தர்மத்தைக் கடைப்பிடித்து அதை செளராஷ்டிராவில் மட்டுமின்றி ஆர்யவர்த்தம் முழுமைக்கும் கடைப்பிடிக்கவேண்டும் எனக் கிருஷ்ணன் கூறியதும் எவருக்கும் காதுகளில் ஏறவில்லை.  அதற்கு எவரும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.  எவரோ எங்கேயோ போட்டுக்கொள்ளும் யுத்தத்துக்காக, நம் யாதவ இளைஞர்கள் அங்கே போய் அவர்களுக்காகப் போரில் ஈடுபட்டுத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமா என்பதே பெரும்பாலான முதிய யாதவத் தலைவர்களின் கருத்தாக இருந்தது.


Monday, January 6, 2014

கண்ணனை நம்புபவர்கள் எவருமே இல்லையா?

பெரியோர்களின் இந்தக் கருத்தைக் கண்டு ஏமாற்றம் அடைந்த கிருஷ்ணன் தன் சகோதரன் பலராமன் பக்கம் திரும்பினான்.  கிருஷ்ணனை ஒரு போதும், ஒரு நொடியும் பலராமன் விட்டுக் கொடுத்ததே இல்லை.  இது வரை வாழ்ந்திருந்த வாழ்க்கையில் எல்லாம் கிருஷ்ணனின் பக்கமே நின்று அவனுக்குப் பேருதவிகள் செய்திருக்கிறான்.  ஆனால் இப்போது??? பலராமனுக்குத் தன் வாழ்க்கையில் பெரும் திருப்தி ஏற்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.  கஷ்டங்களோடு வாழ்ந்து வந்த வாழ்க்கையின் மேல் அவனுக்கு அவனையும் அறியாமல் ஒரு வெறுப்பு வளர்ந்திருந்தது.  தன் அருமை நண்பர்களோடு நேரத்தைச் செலவிடுவதிலும், அவர்களோடு மதுபானம் அருந்திய வண்ணம் சூதாட்டங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிப்பதிலும், அனைவரையும் அதிகாரம் செய்த வண்ணம் நடந்து கொள்வதிலும், சிறு வயது சாகசங்களை நினைத்து நினைத்து மகிழ்ந்து வாழ்வதிலும் அவன் பொழுது கழிந்து கொண்டிருந்தது.  தன்னுடைய இள வயது சாகசங்களை நினைத்து நினைத்துப் பெருமை கொண்டிருந்த அவனுக்கு யாதவர்களோடு இனி யாரும் போர் புரிய மாட்டார்கள்; யாதவர்கள் வலிமை பெற்றுவிட்டனர் என்பதில் ஐயமே இல்லை.

பலராமன் வெளிப்படையாக இருந்தான்.  ஆனால் கோவிந்தனோ!  அவன் சற்றும் மாறவில்லை.  இளவயதில் இருந்த அதே கோவிந்தனாகவே இப்போதும் சாகசங்களை நிகழ்த்த ஆசைப்படுபவனாக, அதிசயங்கள் நிகழ்த்துவதில் பிரியமுள்ளவனாகவே இருந்து வருகிறான்.  எப்போது பார்த்தாலும் அதிசயங்களை நிகழ்த்த முடியுமா?  போதும்; போதும். பலராமனுக்கு இதுவரை நடைபெற்றவையே போதும் எனத் தோன்றியது. கண்ணனுக்கு திரெளபதியின் சுயம்வரத்துக்குச் செல்ல வேண்டும் என ஆசை இருந்தால் தடுப்பவர்கள் யார்?  தாராளமாய்ப் போகட்டுமே!   கோவிந்தன் விரும்பினால் பலராமன் அவனுடன் துணைக்கு மட்டுமே செல்வான்.  அந்தப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டான்.  ஆஹா, இன்னொரு மனைவியைக் கொண்டு வருவதன் மூலம் குரு வம்சத்தினரின் பகைமை அல்லவோ வரதக்ஷணையாக வந்து சேரும்!   அதோடு அவர்களோடு யுத்தம் செய்யும்படியும் நேரிடலாம்.  வேண்டாம் வேண்டாம்.  இது என்ன புதுத் தொல்லை.  அவள் கழுத்தில் கட்டிய கல்லாக அன்றோ இருந்து வருவாள்!  நமக்கு வேண்டாம்.

அது மட்டுமா?  துரியோதனன் என் அன்பான மாணவன் ஆயிற்றே!   தன் பிரியத்துக்கு உகந்த அந்த மாணவனை பலராமன் மிகவும் நேசித்தான்.  ஹூம்! பாவம் துரியோதனன்!  அவன் விதி தான் எப்படி அவனை மோசம் செய்திருக்கிறது!  அரச குலத்தில் பிறந்தவன் ஒரு குருட்டுத் தந்தைக்கா பிறக்க வேண்டும்!  துரதிர்ஷ்டம் பிடித்தவன்!  அதனால் அவன் தன் வாரிசு உரிமையையே இழக்க நேரிட்டு விட்டதே!  என்ன துரதிர்ஷ்டம்!   செகிதனா இருந்தாலும் சரி இல்லை எனினும் சரி,   யாராக இருந்தால் எனக்கு என்ன?  துரியோதனன் போரிட்டு ஜெயித்ததைப் பிடுங்கி அவனிடம் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் பலராமனுக்கு இல்லை.   புஷ்கரத்தை துரியோதனனிடமிருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது.  செகிதனா தோற்றவன் தோற்றவனே!   அவன் துவாரகைக்குத் திரும்பட்டுமே!  இங்கிருக்கும் எண்ணற்ற யாதவத் தலைவர்களுள் அவனும் ஒருவனாக இருக்கட்டுமே! என்ன குறைந்துவிடப் போகிறது?  அங்கே காட்டில் ஆட்சி செய்வதை விடவும் இது நல்லதே!   அவனுக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை.  ஒரு போர் என்று ஏற்பட்டால் யாரேனும் ஒருவர் தான் ஜெயிக்கலாம்.  இரு தரப்பும் எப்படி ஜெயிக்க முடியும்.  ஒருவர் தோற்றே ஆகவேண்டும்.  இதற்காக யாதவர்கள் இந்த உலகெங்கும் சுற்றிக் கொண்டு எல்லா மனிதர்களின் தவறுகளையும் சரி செய்து கொண்டிருக்க முடியுமா என்ன?  தன் மனதில் உள்ளவற்றைக் கிருஷ்ணனிடம் தெரிவித்த பலராமன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.  சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும்படிக் கிருஷ்ணனிடம் கூறிவிட்டே சென்றான்.

அடுத்து யாதவத் தலைவர்களைச் சந்தித்த கிருஷ்ணன் அவர்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி இருந்தது.  மொத்த சூழ்நிலையையும் தெளிவாக விளக்கினான் கிருஷ்ணன்.   புஷ்கரத்தை துரியோதனனிடமிருந்து மீட்டு அதை ஆண்டு வந்த செகிதனாவிடம் ஒப்படைக்க வேண்டியதன் கட்டாயச் சூழ்நிலையைத் தெளிவாகக் கூறினான்.  இதன் மூலம் யாதவர்களின் கெளரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினான்.  இந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறக் கூடாது.  அப்படித் தவறினால் பாரதத்தின் வட பாகத்தை ஆண்டு வந்த யாதவ இளவரசர்களின் மேல் அவர்களின் கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் செலுத்தி வரும் அதிகாரங்களை இழக்க நேரிடும்.  அவர்களின் ஒத்திசைவு கிடைக்காமல் போய்விடும்.  அவர்களின் சொந்த பூமியான மத்ராவையும் அவர்கள் புனர் நிர்மாணம் செய்ய நேரம் வராமலும் போய்விடலாம்.  இப்போது நாம் செய்யப் போகும் இந்தச் செயலின் மூலம் அதற்கு ஒரு வழி பிறக்கலாம்.  மத்ரா மட்டும் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுவிட்டால் வட பாரதத்தில் யாதவர்களின் சக்தியை ஒருவராலும் அழிக்க முடியாது.

அது மட்டுமா?  மகதநாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் இந்தச் சுயம்வரத்தில் தன் பேரனுக்கு திரெளபதியை நிச்சயம் செய்துவிட்டான் எனில்?? அதை நினைத்தே பார்க்க முடியவில்லை!  ஜராசந்தன் துருபதனோடு திருமண ஒப்பந்தம் போட்டுக்கொள்வதை எப்படியேனும் தடுக்க வேண்டும்.  இது மட்டும் நிகழ்ந்தால்!! துருபதனுக்கும் பேரழிவு காத்திருக்கிறது.  இன்றைக்குச் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகளும், அரசர்களும், மன்னர்களும், இளவரசர்களும் ஜராசந்தனின் பணியாளர்களாக மாறிவிடுவார்கள்.  ரிஷிகளாலும், முனிவர்களாலும் நடைபெற்று வரும் குருகுலங்கள் மூடப்பட்டுவிடும்;  அல்லது அவற்றை ஆதரிக்கும் மன்னர்கள் இல்லாமல் அவை தவிக்க நேரலாம்.  ஜராசந்தன்  யாதவ குலத்துக்கே ஒரு முக்கியமான மன்னிக்க முடியாத, எளிதில் விலக்க முடியாத ஒரு எதிரி ஆவான்.  இந்த சுயம்வரத்தில் மட்டும் யாதவர்களின் நண்பர்களான ஒரு வீரன், அதிரதர்களான  யாதவர்களின் உதவியோடு அவன் திரெளபதியை வென்று விட்டான் எனில் ஜராசந்தனை முழுமையாகச் செயலிழக்கச் செய்து விட முடியும்.  என்ன ஆனாலும் சரி, கிருஷ்ணன் போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை.  ஆனால் யாதவர்களிலேயே சிறந்த வில் வித்தை வீரர்களான கிருதவர்மன், சாத்யகி, மற்றும் அவன் சிற்றன்னை குமாரன் ஆன கடன் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.  அவர்களில் எவரேனும் திரெளபதியை வெல்லலாம்.