Sunday, January 12, 2014

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

தன் நிலையைத் தனக்குள்ளேயே எண்ணிய கிருஷ்ணன், தன் அதிர்ஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டான்.  ஆனால் தன் நண்பர்கள் அனைவருமே தான் எங்கிருந்தாலும் அங்கே தர்மம் இருக்கிறது என்னும் எண்ணம் கொண்டிருப்பதையும் அவன் நினைவு கூர்ந்தான்.  அந்த தர்மம் தனக்கு எப்போதுமே வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தான்.   அவனுக்கு நிறையவே வெற்றிகள் கிடைத்துள்ளன.  அது என்னமோ உண்மை தான்.  ஆனால் அவன் தான் செல்லுமிடமெல்லாம் தர்மத்தைப் பின்பற்றி அதையும் கொண்டு செல்கிறனா?  இல்லை என்றே தோன்றுகிறது.  அப்படி அவன் தர்மத்தைக் கொண்டு சென்றிருந்தால் இன்றைக்கு அவன் உறவினர்கள் கண்களில் அது ஏன் படவில்லை?  அவன் செய்ய நினைத்தது சரி என அவனுக்கு மட்டும் ஏன் தோன்றவேண்டும்? அவர்களுக்கும் ஏன் தோன்றவில்லை?  என் சொந்த மனிதர்களையே என்னால் தர்மத்தின் பாதையில் தொடரச் செய்ய இயலவில்லை எனில் வரவிருக்கும் தலைமுறைகளை எவ்வாறு அதர்மத்தின் பக்கம் செல்லாமல் என்னால் மீட்க இயலும்??  அதர்மத்தின் பக்கம் அரசர்கள் போகாமல் அவர்களை எவ்விதம் நான் தடுப்பேன்?  தர்மத்தை நிலைநாட்டுவதும், அதை என்றென்றும் அனைவரும் பின்பற்றுமாறு காப்பது எப்படி?   அவன் இருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு மட்டுமில்லால் எப்போதும், என்றென்றும் நிலைக்கும்படியாக தர்மத்தை எவ்வாறு அவன் பாதுகாப்பான்?  தர்மத்தின் பாதுகாவலனாக அவன் எவ்விதம் தன் கடமையை ஆற்றுவான்?

விடைகாண முடியாத புதிர் ஒன்றின் கேள்விகளை எதிர்கொண்டிருக்கும் மாணவனைப் போல் உணர்ந்தான் கிருஷ்ணன்.   அவன் இப்போது போராடிக் கொண்டிருக்கும் தர்மம் என்பது தான் என்ன? இந்த தர்மத்தைப் பாதுகாத்து அதன் பால் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அவன் செய்யப் போவது என்ன? மனிதர்களின் கட்டுக்கடங்கா உணர்ச்சி வெள்ளத்திலும், அவர்களின் பலஹீனங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை அவன் எவ்விதம் பாதுகாக்கப்போகிறான்?

அன்றிரவு புயலும், காற்றுமாக மழை கொட்டித் தீர்த்தது.  இடியின் சப்தம் காதைப் பிளந்தது என்றால் மின்னல் கண்களைப் பறித்தது.   கடல் அலைகளோ ஒரு தென்னை மர உயரத்துக்கு எழும்பிக் குதித்தன.  கரையை உடைத்துக் கொண்டு கடல் வெள்ளம் உள்ளே புகுந்துவிடுமோ என்னும் அளவுக்கு அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை மோதின.  மழைச் சப்தமோ அது மழை நீரா அல்லது பெரிய கூழாங்கற்கள் விழுகின்றனவா என்னும்படியான சப்தத்துடன் கூரையில் பேரிரைச்சலுடன் விழுந்தது. அப்போது அந்த அனைத்து சப்தங்களையும் மீறிக் கொண்டு ஒரு குரல் அதிகாரத்துடனும், கம்பீரம் குன்றாமலும், “தர்மம் என்றால் என்ன?” என்ற கேள்வியைக் கேட்டது.   கண்ணனின் தூக்கத்தை அந்தக் குரல் கலைத்ததோடு அல்லாமல் அவனைக் கனவுலகில் இருந்தும் எழுப்பி விட்டது.  விண்ணுக்கும், மண்ணுக்குமாய் எழுந்த அந்தக் குரல் “தர்மம் என்றால் என்ன?” என்று கேட்டது ஈரேழு பதிநாலு லோகங்களிலும் எதிரொலிக்கும்படியான சப்தத்தை உண்டாக்கியது.


தெளிவற்ற, குழப்பமான காட்சிகள் உருவமில்லாமல் ஏதோ தோற்றங்கள் கண்ணன் முன் தோன்றின.    மிதந்து கொண்டும், உருண்டு கொண்டும், மறைந்து கொண்டும், தெரிந்து கொண்டும் பல தோற்றங்களில் ஆடவர்கள் தோன்றினர்.   அனைத்தும் மறைந்து திடீரென விருந்தாவனம் அதன் அழகான மரம், செடிகொடிகளோடும், பழங்களைப் பறித்து உண்ணும் குரங்குகளின் “ஈ” என்ற இளிப்போடும்,  ஆடும் மயில்களோடும், பாடும் குயில்களோடும் கண்ணன் கண் முன்னே தோன்றியது.  ம்ஹ்ஹூம்,  ராதை, அதோ ராதை, கண்ணனால் கைவிடப்பட்ட ராதை! ஆஹா, அவள் தான் அன்று பூத்த மலர் போல எத்தனை புதுமையுடன் காணப்படுகிறாள்.  என் உயிரை விட மேலான என் ராதை!  அவளை அவள் விதி இவ்விதம் தள்ளிவிட்டது!  தன்னந்தனியாக என்னை நினைத்து உருகுகிறாளே.  இது அவள் விதியா?  அல்லது இது தான் என் தர்மமா?

ராதை மறைந்தாள்.  மத்ராவின் மல்யுத்த மேடை கண்ணன் கண்ணெதிரே தோன்றியது.  சுற்றிலும் மக்கள் கூட்டம்.  மக்கள் அனைவரும் கண்ணனின் புகழ் பாடி கோஷமிடுகின்றனர்.  வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம் என்ற தொனி எங்கும் எழுகிறது.  ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் அவ்வளவு ஏன் ?  வயது முதிர்ந்தோர் கூடக் கண்ணனைப் புகழ்ந்து கோஷம் இடுகின்றனர்.  கண்ணனின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.  கம்சன், கொடூர மனம் படைத்த கம்சனின் உடலைத் தூக்கிச் சுழற்றிக் கண்ணன் அந்த மல்யுத்த மேடையில் வீசி எறிகிறான்.  கம்சனின் இறந்த உடலைக் கண்ட மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.  தங்கள் ரக்ஷகன் வந்தே விட்டான் எனக் கிருஷ்ணனைக் கொண்டாடுகிறது.   ஆனால், ஆனால், கண்ணன் கொன்றது யாரை?? அவன் தாய் வழி மாமனை!  இது தர்மமா?

கம்சன் மறைந்தான்;  அந்தக் காட்சிகள் மறைந்தன.  பலராமனும், கிருஷ்ணனும் மத்ராவை விட்டு ஓடுகின்றனர்.  ஜராசந்தனிடமிருந்து தப்பிக்க வேண்டி கோமந்தக மலை அடிவாரம் செல்கின்றனர்.  சஹ்யாத்திரி மலை அடிவாரத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கின்றனர்.  ஏனெனில் கண்ணன் ஒருவனுக்காக யாதவ குலத்தையே ஜராசந்தன் அழித்துவிட்டால்?? ஆகவே யாதவ குலத்தைக் காக்க வேண்டிக் கண்ணன் பலராமனோடு கோமந்தகத்துக்கு வந்துவிடுகிறான்.  யுத்தத்தை நேரிடையாக எதிர்கொள்ளாமல் இப்படித் தப்பித்து வந்தது சரியா?  அவன் சுத்த வீரனா? அல்லது கோழையா?  இது தர்மமா?

ஜராசந்தனின் மண்டையை உடைக்க பலராமன் தயாராக இருந்தான். கோமந்தக மலையில் அவன் காலடி எடுத்து வைத்திருந்தால் அடுத்த நிமிடம் அது நடைபெற்றிருக்கலாம்.  ஆனால் கண்ணன் தலையிட்டு பலராமனின் கதையைத் தடுத்து  அவன் கோபத்தையும் குறைத்து,  ஜராசந்தனின் உயிரைக் காப்பாற்றினான்.  ஆர்யவர்த்தத்தின் அக்கிரமங்களுக்கெல்லாம், அதர்மங்களுக்கெல்லாம் துணை போகும் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினான்.  ஆனாலும் ஜராசந்தன் திருந்தினானா?  இல்லையே! எத்தனை அரசர்களைத் துன்புறுத்தி வருகிறான்?  எத்தனை எத்தனை ரிஷி, முனிவர்களின் குருகுலங்கள் கலைக்கப்பட்டன!  எத்தனை பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தான்?  அவனை நான் காப்பாற்றியது தர்மமா?

குண்டினாபுரத்தில் விதர்ப்ப இளவரசியின் வேண்டுகோளின் பேரில் அவளைத் தூக்கிச் சென்றதோடு அல்லாமல் அவளை விடுவிக்கப் போராடிய அவள் சகோதரனையும் காயப்படுத்தினேன்.  ருக்மிணியின் சுயம்வரமே ஒரு கேலிக்கூத்தாக, பெண்களின் கோபக் குமுறலுக்கும், அரசர்கள், இளவரசர்களின் கடித்த பற்களிடையே கொண்ட கோபாவேசமான பேச்சுக்களுக்கும், அரச குலப்பெண்களின் புலம்பலுக்கும் காரணம் ஆகிவிட்டது.   இளகிய நல்ல சுபாவம் கொண்ட  பீஷ்மகனின் மனம் நொறுங்கி விட்டது.  ருக்மியோ தண்டனையாக தனக்குத் தானே நாடு கடத்திக் கொண்டான்.  இது தர்மமா?

ஹஸ்தினாபுரம்!! துரியோதனனுக்கு அவன் செய்வது தர்மமா?  நன்மையா? தவறைச்சரி செய்கின்றானா?  அடுத்து கர்ணன்!  அவன் தாயால் பிறந்ததுமே ஒதுக்கப்பட்டவன்.   அதிர்ஷ்டம் கெட்டவன்.  அவனை அவன் தாய் மட்டுமா ஏமாற்றினாள்.  மனிதர்களும்தானே!  என்றாலும் அவன் தன் உயர்ந்த குடிப்பிறப்பினால் விளைந்த மனோதிடத்துடன் அனைத்தையும் எதிர்கொள்கின்றானே!  தன் சொந்தத் திறமையினாலும் அதனால் விளைந்த பலனாலுமே தன் நற்குணங்களை நிலைநாட்டவும் முயற்சிக்கின்றானே! அவன் பாதையில் நான் குறுக்கிடலாமா?  இது தர்மமா?

காம்பில்யம்,  அங்கே நடந்ததோ!  துருபதனும், அவன் மக்களும் தங்கள் மனதைத் திறந்து அவனிடம் காட்டிவிட்டனர்.  அவர்கள் நம்பிக்கையைக் கண்னன் ஒத்துக் கொண்டான், எனினும் குருவம்சத்தினரிடம் போரிட்டு ஜெயிக்கவேண்டும் என்னும் பேராபத்தை எதிர்கொள்ள மறுத்துவிட்டான். ஆனால் அடுத்து அவன் செய்யப் போவது என்ன? அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்து அதை நடத்தி முடிக்க எண்ணுகிறான்.  அது அவ்வாறே நடைபெறுமா?  தோல்வியுறுமா? அநேகமாய்த் தோல்வி தான் கிட்டும்.  இது தர்மமா?

கண்ணன் உடல் நடுங்கியது.  அப்போது இரு மிருதுவான கரங்கள் அவனைத் தொட்டன.  கண்களைத் திறந்து பார்த்த கண்ணன் ருக்மிணி அன்பும், ஆதுரமும் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  ஒரு புன்னகையோடு தன் கண்களை மூடிக்கொண்ட கண்ணன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.  ஆனால் உறங்கினானா?
4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கண்களைத் திறந்து பார்த்த கண்ணன் ருக்மிணி அன்பும், ஆதுரமும் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஒரு புன்னகையோடு தன் கண்களை மூடிக்கொண்ட கண்ணன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான். ஆனால் உறங்கினானா?//

தெரியலையே! நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

தமிழ் படத்தில் மனசாட்சிக் காட்சி பார்ப்பது போல இருக்கிறது! :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத்து நடை மிகவும் சுவாரஸ்யம் அம்மா...வாழ்த்துக்கள்... ஆவலுடன்...

sambasivam6geetha said...

அனைவருக்கும் நன்றி.விடாமல் நீங்கள் மூவரும் மட்டும் தொடர்ந்து வருவதற்கும் நன்றி.:)))