Monday, September 28, 2015

சாத்யகியைச் சந்திக்கிறாள் பாமா!

இதோ பார் பாமா, நான் உன்னை எச்சரிக்க நினைக்கிறேன். அவன் பழகுவதற்கும், அனுசரித்துப் போவதற்கும் மிகவும் கஷ்டமானவன். வைதர்பியான ருக்மிணியும், சரி, ஷாயிப்யாவும் சரி அவனுடன் ஒத்துப் போய் வாழ்க்கை நடத்த மிகக் கஷ்டப்படுகின்றனர். அவர்களால் அவனுடைய போக்குடன் ஒத்துப் போக முடியவில்லை. தனக்குள் சிரித்துக்  கொண்டாள் பாமா. “ஆஹா! அப்படியே இருக்கட்டும். இப்படி ஒரு கஷ்டமான மனிதனைத் திருமணம் செய்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்.” என்று தன்னையும் அறியாமல் சொன்ன பாமா, சட்டெனத் தன்னைத் திருத்திக் கொண்டாள். “உன் அண்ணன் கோவிந்தன் ஒருவன் மட்டுமே துவாரகையில் பழகவும், அனுசரிக்கவும் கஷ்டமானவன் இல்லை! “ என்று மாற்றிக் கொண்டு தன்னைச் சமாளித்துக் கொண்டாள். “சரி, சரி!” என்று சிரித்த சுபத்ரா, “ உன்னுடைய ரகசியம் உன்னுடனேயே இருக்கட்டும்! நீ எப்போதும் என்னை மட்டும் என் ரகசியங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்வாய்! ஆனால் உன் பக்கம் உள்ள ரகசியங்களை நீ சொல்வதே இல்லை! நீ எல்லாம் என்ன சிநேகிதி! “ என்று அலுத்துக் கொண்டாள்.

அவர்கள் பிராகாரம் சுற்றுவதை முடித்துக் கொண்டு இப்போது கோயிலை விட்டு வெளியே வந்தனர். பின்னர் பாமா கோயிலில் இருந்து கிருதவர்மாவைச் சந்திக்க வேண்டி தன் தாயின் சகோதரி வீட்டிற்குச் சென்றாள். அவள் அப்போது சந்தோஷமான மன நிலையில் இருந்தாள். கிருதவர்மாவின் வீட்டில் அனைவரும் அவனைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஆர்யவர்த்தம் சென்ற யாதவ அதிரதிகள் அங்கே நிகழ்த்திய சாகசங்களையும், வீர, தீரப் பிரதாபங்களையும் தன்னால் முடிந்தவரை விரிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான் கிருதவர்மா. முக்கியமாய்க் கிருஷ்ணன் நிகழ்த்திய அற்புதங்கள் அங்கே விவரிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதைக் கண்ட பாமாவும் தானும் அங்கேயே உட்கார்ந்து அவற்றைக் கவனத்துடன் கேட்டு மகிழ்ந்தாள். கிருதவர்மா பேச்சை நிறுத்தியதும் அவள் உடனே கிண்டலாகவும், கேலியாகவும் பேச்சை ஆரம்பித்தாள். அப்போது கிருதவர்மா அவளிடம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில், “பக்கத்துத் தாழ்வாரத்திற்குச் செல். அவன் உனக்காக அங்கே காத்திருக்கிறான்.” என்று கூறினான்.

அதைக் கேட்டதும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்ட பாமா, மெல்ல கிருதவர்மாவின் தாயிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அந்த மாளிகையின் பக்கவாட்டுத் தாழ்வாரத்தை நோக்கிச் சென்றாள். மாளிகை எங்கும் மாலை நேர விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தாலும் அந்தத் தாழ்வாரம் மட்டும் அரை இருட்டாகவே இருந்தது. அந்த இருட்டான பகுதியில் ஒரு தூண் மேல் சாய்ந்தவண்ணம் சாத்யகி அவளுக்காகக் காத்திருந்தான்.  அவனைக் கண்டாலும் சத்யபாமா எச்சரிக்கையாக, “சாத்யகி” என மெல்லவே குரல் கொடுத்தாள். “ஆம், நான் தான்!” என்றான் சாத்யகி.

“சாத்யகி, இன்று காலை நீ என்னைக் கிருஷ்ணனிடம் அறிமுகம் செய்து வைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி? அது என்னவாயிற்று? அதை நிறைவேற்ற ஏதேனும் முயற்சி செய்கிறாயா? “ என்று கேட்டாள் பாமா. “பாமா, நான் உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன்.” என்ற சாத்யகி, “மீண்டும், மீண்டும் நான் அவனிடம் உன்னைக் குறித்துச் சொல்லி உன் பால் அவன் கவனத்தை ஈர்க்க முயல்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அதில் தோற்றுவிடுகிறேன்.  கிருஷ்ணன் மிகவும் பொறுமையானவன் தான். அனைவர் மேலும் அவனுக்கு இரக்கமும் உண்டு. ஆனால் அவனுடைய ஒரு கண்ணசைவு கூட உன் மேல் அவன் தன் கவனத்தை வைத்திருப்பதை எடுத்துக் காட்டவே இல்லை. அவன் உன்னைக் குறித்து எதுவும் கேட்கவோ, கவனம் எடுத்துக்கொள்ளவோ இல்லை! இப்போது அது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.”

“என்ன! அசாத்தியமான ஒன்றா?” சத்யபாமாவின் மனம் தளர்ந்தது. அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. “சாத்யகி! ஏன் அப்படிச் சொல்லிவிட்டாய்?”

“பாமா, பாமா! உனக்கே அவனைக் குறித்து நன்றாகத் தெரியும். அனைவரையும் எவ்வளவு ஆதரவாகக் கவனிப்பான் என்பதை நீ நன்கு அறிவாய்! துவாரகைக்குள் நாங்கள் நுழைந்ததுமே அவன் முதலில் கவனித்தது, யாதவப் பெண்மணிகள் அனைவரும் தங்கள் ஆபரணங்கள் எதையும் அணியாமல் வந்திருக்கிறார்கள் என்பதைத் தான். சாதாரணமாக இம்மாதிரியான விழாக்களில் அவர்கள் நகைகள் அணியாமலேயே இருக்க மாட்டார்கள். அதோடு மேலும் அவன் கூறியது உன் தந்தை சத்ராஜித், அவர் சகோதரர் மற்றும் உன் சகோதரர்கள், உங்கள் உறவினர்கள் எவரும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதையும் கவனித்திருக்கிறான்.”

“ஓ, அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. அவர்கள் யாகங்களில் கவனம் செலுத்தி அதில் மும்முரமாக இருந்தனர். “

“ஓ, பாமா, பாமா! கிருஷ்ணனை ஏமாற்ற உங்களால் இயலுமா?  நீ கூறுவது உண்மையா? உன் தந்தை நினைத்திருந்தால் இந்த யாகத்தை அடுத்த மாதம் நடத்தி இருக்கலாம் அல்லவா?”

“அடக் கடவுளே!” என்று பாமா மேலே பார்த்தாள். “அது மட்டுமில்லை, பாமா! அவன் சந்தித்த யாதவத் தலைவர்களின் மாற்றங்களையும் கண்ணன் கவனித்தான். அவர்கள் கண்ணனின் வரவில் மகிழ்ந்தாலும், அவர்கள் உள்ளூர வேறு ஏதோ ஒன்றை நினைத்து அடக்கிக் கொண்டு இருந்ததும் கண்ணன் புரிந்து கொண்டான்.”

“ம்ம்ம்ம், அப்படியா? கண்ணன் வேறு என்ன செய்தான்?”

“தன் தந்தைக்கும், தாய்க்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்த கிருஷ்ணன், உத்தவனையும், என்னையும் அழைத்துக் கொண்டான். தன் மாளிகைக்குச் சென்றான். அங்கே வைதர்பி ருக்மிணியும், ஷாயிப்யாவும் வாசலிலேயே காத்திருந்து அவனை வரவேற்றனர். சிறிது நேரம் அவர்களுடன் அளவளாவிய கண்ணன், ருக்மிணி, ஷாயிப்யா மற்றும் நகரில் உள்ள யாதவப் பெண்கள் அனைவரும் ஏன் நகைகளையே அணியாமல் இருக்கிறார்கள்? இதற்கு என்ன காரணம் என்று கேட்டான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இதற்கு பதில் சொல்லும் பொறுப்பை உத்தவனிடம் விட்டு விட்டார்கள்.”

“உத்தவன் அதற்கு என்ன சொன்னார்?”

“உத்தவனின் வார்த்தைகளை அப்படியே உனக்குச் சொல்கிறேன். உத்தவன் கிருஷ்ணனிடம் சொன்னான்: “ நீ என்னையும் மாமா அக்ரூரரையும் துவாரகைக்கு அனுப்பினாய் அல்லவா? நம்முடைய மொத்த சொத்துக்களில் ஐந்தில் ஒருபாகம் குதிரைகள், ரதங்கள், பசுக்கள் மற்றும் தங்கங்கள் என்று கொண்டு வரச் சொல்லி இருந்தாய். அவை அனைத்தும் பாண்டவர்களுக்கு நாம் அளிக்கும் பரிசாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தாய். நாங்களும் இங்கே வந்தோம்!” பாமா, உத்தவன் சொன்னது அத்தனையும் அப்படியே உன்னிடம் கூற வேண்டும் என எதிர்பாக்கிறாயா?” சாத்யகி மீண்டும் கேட்டான் பாமாவிடம்.

“ஆம், ஆம், அப்படியே நடந்ததை நடந்தவாறே சொல்லி விடு சாத்யகி! கிருஷ்ணனுடைய நல்லெண்ணத்தில் தான் என் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்பதை நீ உணரமாட்டாயா? ஆகவே நடந்ததை நடந்தவாறே சொல்! அப்போது தான் கிருஷ்ணனை என்னால் புரிந்து கொள்ள முடியும்.” என்றாள் பாமா.

Sunday, September 20, 2015

தோழியர் இருவர்!

“ஓஹோ! சரி, சரி, நீ உன் அண்ணன் தேர்வு செய்திருப்பவரையே திருமணம் செய்து கொண்டு நல்ல பெண்ணாக நடந்து கொள்! ஆனால் இப்போது எனக்கு சாத்யகியை உடனே பார்க்க வேண்டும்! இது வாழ்வா, சாவா என்னும் பிரச்னை!” என்று சொன்ன பாமா சுபத்ராவின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அதற்குள்ளாக அவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டு விட்டது. அதை சுபத்ராவும் கவனித்தாள். அவள் ஆதரவாக பாமாவை அணைத்துக் கொண்டாள். “இவ்வளவு துக்ககரமானவளாகவும், பரிதாபமான நிலைமையிலும், நான் உன்னை இதுவரை பார்த்தது இல்லை! சாத்யகியை நீ சந்திக்க வேண்டியது அவ்வளவு முக்கியமான ஒன்றென்றால் நான் நிச்சயம் அவனை அழைத்து வருகிறேன். ஆனால் நீ அவனை எங்கே சந்திக்க இருக்கிறாய்?”

ஒரு கணம் யோசித்த பாமா பின்னர் அவளிடம், “மாலை விளக்குகள் ஏற்றும் நேரம் அவனை கிருதவர்மாவின் வீட்டுக்கு வரச் சொல்!” என்றாள். “ஓ, அது கஷ்டம், பாமா! என் தாய் என்னைச் சந்தியாகாலத்தில் வெளியே அனுப்பவே மாட்டாள்.” என்றாள் சுபத்ரா. “ஓ, நீயும் உடன் வரவேண்டியதெல்லாம் இல்லை. நான் பின்னர் உனக்கு விளக்கமாக அனைத்தையும் தெரிவிக்கிறேன்.” என்றாள் பாமா. சுபத்ராவுக்கு ஆவல் அதிகரித்தது. “அது சரி, பாமா! நீ என்ன விஷயமாக சாத்யகியை உடனே பார்க்க விரும்புகிறாய்? அவனிடம் நீ கலந்து ஆலோசிக்க வேண்டிய முக்கியமான செய்தி தான் என்ன? நான் என்ன உனக்காகத் தூது போகும் சேடிப் பெண்ணா? ம்ஹூம், உன் ரகசியத்தை நீ என்னிடம் பகிர்ந்து கொண்டால் தான் ஆயிற்று!” என்றாள் சுபத்ரா.

“இது மிக முக்கியம் என்பதால் தான் நான் உன்னைத் தொந்திரவு செய்து இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். இல்லை எனில் உன்னைத் தொந்திரவு செய்திருப்பேனா? அதோடு இதன் மூலம் உன் சகோதரனும் பாதிக்கப்படுவான்.” என்றாள் பாமா. இதை மிக மெதுவாகக் கூறினாள். சுபத்ராவை வழிக்குக் கொண்டு வர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. கிருஷ்ணனுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொன்னால் தான் அவள் கொஞ்சமானும் அசைந்து கொடுப்பாள். அவள் நினைத்தாற்போலவே சுபத்ராவின் முகம் பீதியில் வெளுத்தது. “இது உன் தந்தை சம்பந்தப்பட்ட ஏதேனும் சதியா? கிருஷ்ணன் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறானா?”

“நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.” என்றாள் பாமா.

சுபத்ராவுக்கு ஏதோ புதியதொரு எண்ணம் உதயமாயிற்று. அவள் கிட்டத்தட்ட பாமாவின் மனதைப் படித்துவிட்டாளோ என்னும்படி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். அவள் கண்களும் முகமும் குறும்பிலும், பரிகாசத்திலும் கூத்தாடியது. அவள் பாமாவைப் பார்த்துக் குறும்பு மாறாமலேயே, “நீயும் ஒருவேளை கோவிந்தனைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாயோ?” என்று கேட்டுவிட்டாள்.  பாமாவின் முகம் சிவந்தது. “ஏன் அப்படி நினைக்கிறாய்?” என்று சுபத்ராவைத் திரும்பக் கேட்டாள்.
 “ம்ம்ம்ம், இன்று காலை தான் பார்த்தேனே! கோவிந்தனிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கும்போது சிறிதும் வெட்கமில்லாமல் அவனையே நீ பார்த்துக் கொண்டு இருந்தாயே! உண்மையைச் சொல்லிவிடு பாமா! நீ கோவிந்தனைத் தானே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாய்?” என்று விடாமல் சுபத்ரா கேட்டாள்.

பாமா தலையைக் குனிந்து கொண்டு யோசித்தாள். வேறு வழி இல்லை. இவளிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியது தான் என நினைத்தவள் போல் தலை நிமிர்ந்தாள். சுபத்ராவிடம், “நேரடியாகக் கேட்கிறேன், சுபத்ரா! வைதர்பி, அதுதான் விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணி, அவளும், உன் அண்ணனின் இன்னொரு மனைவியான ஷாயிப்யாவும் நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்வார்களா? இருவரும் சம்மதிப்பார்களா? நீ என் சிநேகிதி! என் அருமைச் சிநேகிதி! இதுவரை எனக்குக் கிடைத்த சிநேகிதிகளில் எல்லாம் நீ தான் என் நெருங்கிய சிநேகிதி! நீ இப்போது இதற்கு பதில் சொல்! நான் தேர்ந்தெடுத்திருக்கும் மணாளனை நான் மணந்து கொள்ள நீ எனக்கு உதவி செய்வாயா?”

“ம்ம்ம்??? ஆனால் பாமா, சாத்யகியை விட நல்ல கணவன் உனக்குக் கிடைக்க மாட்டான். அவன் தந்தை ஒத்துக் கொண்டாரெனில் அவனே உனக்கு ஏற்ற கணவன். ஆனால் நீ வேறு எவரையோ தேர்ந்தெடுத்திருக்கிறாய் போலும்! யார் அவர்?”

“என்னை வற்புறுத்தாதே சுபத்ரா! இன்னும் சில நாட்களில் நானே உன்னிடம் அவரைப் பற்றி எல்லாம் கூறுகிறேன். ஆனால் நான் திரும்பவும் உன்னிடம் உறுதியாகச் சொல்கிறேன். நான் மணந்தால் அவரைத் தான் மணப்பேன்; வேறு எவரையும் அல்ல. என் தந்தை பார்க்கும் எந்த மணாளனையும் மணக்கச் சம்மதியேன்!”

சுபத்ரா குறுகுறுவென்று பாமாவையே பார்த்தாள். அவள் மனதையே படித்துவிட்டவள் போலப் புரிந்து கொண்டவள் போலக் காணப்பட்டாள். பின்னர் கலகலவெனச் சிரித்தாள். “எனக்குப் புரிந்து விட்டது. நீ என் சகோதரன் கோவிந்தனைத் தான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாய்! அவனுக்காக நீ ஏங்குகிறாய். அதை உன் கண்களில் நான் காண முடிகிறது. தன்னுடைய காதலனுக்காகத் தவிக்கும் ஒரு பெண்ணின் உள்ளத்தை அவள் உடல்மொழியே காட்டிக் கொடுத்துவிடும். அப்படி நீயும் காட்டிக் கொடுத்துவிட்டாய்! உன் உடலும், உள்ளமும் அவனுக்காகத் தவிக்கிறது! ஆஹா! விரைவில் நீயும் அவன் அந்தப்புரப் பெண்களில் ஒருத்தியாக அவனுடைய ஒரு சிரிப்புக்காகத் தவம் கிடக்கும் எத்தனையோ இளம்பெண்களில் ஒருத்தியாக மாறப் போகிறாய்! எத்தனை பெண்கள் அவனை நினைந்து தங்கள் மனதை வருத்திக் கொள்கின்றனர்! நீயும் அவர்களில் ஒருத்தியா? இத்தனைக்கும் அவனால் திரும்பக் கொடுக்க முடிந்தது எல்லாம் ஒரு புன்சிரிப்புத் தான்!” என்றாள் சுபத்ரா.

“அப்படி ஏன் நினைக்கிறாய் சுபத்ரா?”

Thursday, September 17, 2015

பாமாவின் கலக்கம்! சுபத்ராவின் சிரிப்பு!

“தந்தையே, அவன் பல அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்துவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.” என்று ஒரு சிறு குழந்தையின் உற்சாகத்தோடு சத்யா கூறினாள். “அவனைக் குறித்தும் அவன் செயல்கள் குறித்தும் நீ என்னிடம் எதுவும் கூறாதே சத்யா! அவன் உண்மையில் எதுவும் செய்வதில்லை. செய்வதைப் போல் நடிக்கிறான். எல்லாம் தெரிந்தவன் போல் நடிக்கிறான். இனிமையாக அனைவரையும் கவரும் வண்ணம் பேசத் தெரிந்து வைத்திருக்கிறான். அவனைக் குறித்து நான் நன்கறிவேன். விஷயம் ஏதும் இல்லா வெற்று ஆள் அவன். பார்த்துக்கொண்டே இரு! விரைவில் நான் அவன் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாவண்ணம் ஒரு பாடம் கற்பிக்கிறேன்.” என்றான் கோபத்துடன்

பாமா எதுவும் பேசாமல் விடை பெறும் பாவனையில் கீழே விழுந்து தந்தையை நமஸ்கரித்தாள். அவள் தலையைத் தடவிக் கொடுத்தான் சத்ராஜித். பின்னர் ஆதுரத்துடன் அவளிடம், “சத்யபாமா, என்னை நம்பு! இன்னும் சில வாரங்கள் பொறுத்திரு. அந்த சாத்யகனை என்னிடம் வந்து கெஞ்ச வைக்கிறேன். “உன் பெண்ணை என் மகன் யுயுதானா சாத்யகிக்குக் கொடு!” என்று அவனே இறைஞ்சும் வண்ணம் அவனை மாற்றுகிறேன். அதுவும் என்னுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டே திருமணம் நடந்தாகவேண்டும் என்னும் உறுதிமொழியையும் கொடுக்க வைக்கிறேன். அதன் பின்னர் சாத்யகி உன் கணவனாகி விடுவான். நீயும் மன ஆறுதல் பெறுவாய்!” என்றான். அவளைப் பார்த்துக் கனிவாகப்புன்னகைத்தவனிடம் சத்யபாமா, “தந்தையே! உங்கள் நிபந்தனைகள் என்னவென நான் அறியலாமா? “ என்ற வண்ணம் தந்தையைப் பேசத் தூண்டும் குரலில்,” அதைத் தெரிந்து கொண்டால் நான் சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்வேன்.” என்றாள்.

“ஹா! அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவன் கிருஷ்ணனைப் பிரிந்து என் பக்கம் வர வேண்டும். அது தான் முக்கியமான நிபந்தனை! அவனை அதைச் செய்ய வைக்கிறேன். என்னை நீ சாதாரணமாக நினைத்துவிடாதே! உன் தந்தையின் அதிகாரம் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை நீ பார்க்கப் போகிறாய்! என்னை விட எவனும் சாதுரியமாகப் பேசி எதையும் வெல்ல முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளப்போகிறாய்!” என்றான்.

தன் தந்தையிடம் பேசிவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்ற பாமாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. அவள் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தந்தை அவள் சாத்யகியை நினைத்து நினைத்து உருகுவதாக நம்புகிறார்! பாவம்! அது போகட்டும்! இப்போது அடுத்து அவள் செய்ய வேண்டியது என்ன? அது தான் அவள் கவலையும் கூட! சாத்யகியைக் கலந்து பேசி விட்டுத் தான் முடிவு செய்யும்படி இருக்கும் என அவள் நினைத்தாள். அவனிடம் பேசினால் தான் கிருஷ்ணனை அவள் மணக்க எத்தகைய வேலையை, முன்னேற்பாடுகளை சாத்யகி செய்து வைத்திருக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும். அவள் சாப்பாட்டுக் கூடத்துக்குச் சென்று அவள் சிற்றன்னைமாரோடும், மற்றப் பெண்மணிகளோடும் சேர்ந்து மதிய உணவு உட்கொண்டாள். அதன் பின்னர் அவள் ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாடுகளின்படி அவள் தந்தையால் கட்டப்பட்ட சூரியதேவன் கோயிலுக்குச் சென்றாள். அங்கே அவள் சுபத்ராவைச் சந்திப்பதாக முன்னேற்பாடு செய்திருந்தாள்.

பாமாவுக்கு சுபத்ராவை மிகவும் பிடித்திருந்தது. அவள் நிறமும் கிருஷ்ணனைப் போலவே இருந்தது. மிகவும் உல்லாசமான மனப்போக்குடனும், நகைச்சுவை உணர்வுடனும் அனைவராலும் விரும்பத் தக்கவளாகவும், மிகுந்த மன முதிர்ச்சியுடனும், விளையாட்டாகப் பேசினாலும் விரைவில் தன் மன முதிர்ச்சியை வெளிக்காட்டும் போக்குடனும் இருந்தாள்.  கோவிலுக்குப் போன பாமா சுபத்ராவைப் பார்த்ததும் அவள் கைகளைத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த பிராகாரத்தில் அவளுடன் கைகோர்த்த வண்ணம் நடக்கத் துவங்கினாள். பின்னர் மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள்.

“சுபத்ரா, எனக்கு உன்னுடைய உதவி வேண்டும்!” என்றாள் பாமா. அதை மிக மெதுவாகக் கிசுகிசுவெனச் சொன்னாள். “நான் சாத்யகியை உடனே சந்திக்க வேண்டும். இன்று மாலையே அவனை உடனே என்னை வந்து சந்திக்கச் சொல்!” என்றாள். “ஓ, இன்றா? அவன் தன் குடும்பத்து மூத்தோர்களையும், மற்ற உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதிலும், பேசுவதிலும் இன்று மும்முரமாக இருக்கிறானே!  ஆனால் நீ ஏன் அவனைச் சந்திக்க வேண்டும்? அதில் ஏன் இத்தனை அவசரம்? கொஞ்சம் பொறுமை காட்டக் கூடாதா? ஒரு நாள் காத்திருக்க முடியாதா உனக்கு?” என்றவள் மிகவும் அன்புடன் பாமாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு அவளைக் குறும்பாகப் பார்த்துச் சிரித்தாள். அனைவருக்கும் சாத்யகியை பாமாவுக்கு மணமுடிக்கும் எண்ணம் சத்ராஜித்துக்கு இருந்தது என்பது தெரிந்தே இருந்தது.

அவள் மனதைப் புரிந்து கொண்ட பாமா கொஞ்சம் எரிச்சலுடனேயே, “சுபத்ரா, நீ ஒரு முட்டாள். சாத்யகன் என்னை அவர் வீட்டுக்கு மருமகளாக ஆக்கிக் கொள்ள மாட்டார். அவருக்கு அந்த எண்ணமே சிறிதும் இல்லை! உன் எண்ணத்தை மாற்றிக் கொள்!” என்றாள்.

“ஓ!ஓ! எனக்கு அது நன்கு தெரியும் பாமா! சாத்யகனின் எதிர்ப்பையும் மீறி நீ சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய் என்பதையும் அறிவேன்.” என்றாள் சுபத்ரா!  பாமாவின் முகம் மாறியது! “தயவு செய், சுபத்ரா! சாத்யகியை எப்படியும் நான் இன்று மாலை சந்திக்க வேண்டும். சந்தித்தே ஆக வேண்டும். விஷயம் மிகவும் முக்கியமானது! தீவிரமானது. நாளை வரை எல்லாம் என்னால் காத்திருக்க இயலாது!” என்றாள் கெஞ்சலாக. “ஆஹா! காதலனால் கைவிடப்பட்ட பொறுமையில்லாத காதலி, அந்தக் கைவிட்ட காதலனை உடனே சந்திக்க விரும்புகிறாள்.” சுபத்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலகலவெனச் சிரித்தாள். சத்யாவுக்கு இப்போது அழுகையே வந்துவிட்டது. என்ன இவள்! சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லையே! இவளிடம் சொல்லியே ஆகவேண்டும். “இதோ பார் சுபத்ரா! ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன் கேட்டுக் கொள்! எனக்கு சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையே இல்லை! சிறிதும் இல்லை. நான் ஏற்கெனவே எனக்கு உரிய மணாளனைத் தேர்ந்தெடுத்து விட்டேன். அவனைத் தான் நான் அடைய வேண்டும். அதற்குத் தான் உன் உதவியையும்,சாத்யகியின் உதவியையும் நாடுகிறேன். என் மணாளனை நான் வெற்றியுடன் அடைய உதவி செய்!” என்றாள்.

“ஆஹா! நீ இவ்வளவு பொல்லாத தந்திரக்காரியா?” சுபத்ராவின் கண்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன. பொல்லாத கண்கள்! கிருஷ்ணனின் கண்களைப் போலவே அவை நாட்டியம் ஆடின! “யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்? என்னிடம் சொல்வாய் அல்லவா?”

அவள் கேள்விக்கு சத்யபாமா நேரடியாகப் பதில் சொல்லவில்லை. நழுவினாள். “இதோ பார் சுபத்ரா! சாத்யகி என் கணவன் இல்லை. நான் அவனைத் திருமணம் செய்யப் போவதில்லை. அது நிச்சயம்! ஒருவேளை உனக்கு அவனைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தால், உன் அண்ணன் வாசுதேவனை தூது அனுப்பு! அவன் தந்தையிடம் போய்ச் சொல்லச் சொல்!” என்றாள் உள்ளூர வெறுப்புடன். சுபத்ரா இப்போது வெட்கம் அடைந்தாள். “பாமா, நானும் சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை! எனக்கும் அதில் இஷ்டமில்லை. என் அண்ணன் கோவிந்தன் என்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறான்.” கொஞ்சம் தயங்கிய சுபத்ரா, பின்னர் அவளிடம், “ஏற்கெனவே எனக்கான கணவனை என் அண்ணா தேர்ந்தெடுத்து விட்டானாம்! இது ஒரு ரகசியம்! என்னிடம் மட்டும் என் அண்ணா கோவிந்தன் சொல்லி இருக்கிறான். “

“யார் அது?”

“அது ஒரு ரகசியம்! கோவிந்தன் என்னிடமும் சொல்லவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கோவிந்தனால் எனக்காக மணாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன் நிச்சயம் ஒரு ராஜகுமாரனாக, வீரனாகத் தான் இருப்பான்.

Sunday, September 13, 2015

கண்ணனை நம்பாதே!

“முதலில் அந்தப் பூனையைத் தலையைச் சுற்றி சமுத்திரத்தில் மூழ்கடித்துக் கொன்று விடு!” என்றான் சத்ராஜித் கோபமாக.

“தந்தையே, தந்தையே! பாவம் ஊரி! இவள் என்ன செய்தாள் உங்களை? அவளுக்குக்கோபம் வந்தால் உங்களைப் பார்த்து சீறுகிறாள். மற்றபடி மிக மிக நல்லவள். என்னிடம் மிகவும் அன்பு காட்டுவதோடு உங்களிடம் மரியாதையும் வைத்திருக்கிறாள். இவளைப்போய் நான் மூழ்கடிப்பேனா? வாய்ப்பே இல்லை தந்தையே!”சத்ராஜித்துக்கு என்ன சொல்வது என்பதோ அல்லது அடுத்து என்ன செய்யலாம் என்றோ தெரியவில்லை. இந்தப் பூனையைத் தானே வாங்கித் தூக்கி எறிந்துவிடலாமா என்று கூட நினைத்தான்; அல்லது இதை ஒரேயடியாக மறந்துவிட்டு பாமாவிடம் தான் தொடங்கிய சம்பாஷணையின் தீவிரம் குறையும் முன்னர் தொடரவேண்டும்! எதைச் செய்யலாம்? முடிவாக அவன், “இந்தச் சனியனை என் கண்பார்வையிலிருந்து அப்புறம் கொண்டு செல்!” என்றான். தன்னுடைய அடக்கம் மாறாமலேயே அதே கீழ்ப்படிதலுடன் சத்யபாமா அறை வாயிலுக்குச் சென்று பூனையை அறைக்கு வெளியே விட்டுவிட்டுத் திரும்பத் தந்தையிடம் வந்தாள்.

அவள் எதிர்பார்த்தது நடந்து விட்டது; அவள் திரும்புவதற்குள்ளாக சத்ராஜித்தின் கோபம் மறைந்து போயிருந்தது. என்றாலும் சத்யபாமாவிடம் பேசுகையில் பழைய கோபமும், உறுதியும் இருக்கிறாற்போலவே பேச ஆரம்பித்தான். “இதோ பார்! சத்யபாமா! முதலும் முடிவுமாக உனக்கு ஒன்றைக் கூறுகிறேன். சாத்யகியைக் குறித்த என்னுடைய திட்டத்தில் நீ தலையிட்டாயெனில் உன்னைச் சாட்டையால் அடிப்பேன்!” என்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். சொல்லிக் கொண்டே தன் தாடியை நீவி விட்டுக் கொண்டான். சத்யபாமா மாறாப் பணிவை மீண்டும் காட்டிய வண்ணம் தீவிரமான குரலில், “தந்தையே, என் மனப்பூர்வமான உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கிறேன். சாத்யகியை என் கணவனாக அடைய வேண்டும் என்னும் எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. அதற்காக நான் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.”

“உனக்காக நான் செய்வேன்! நான் செய்கிறபடி செய்தால் அந்த சாத்யகன் வழிக்கு வருவான். தன் பிள்ளைக்கு உன்னை மணமுடித்துக் கொள்வான். அவன் கர்வத்தை எப்படி ஒடுக்குவது என்பது எனக்குத் தெரியும்.”

“ஆம், தந்தையே!” என்ற பாமா கொஞ்சம் தயங்கினாள். என்றாலும் தந்தைக்கு மீண்டும் உறுதிமொழியை அளித்தாள். சந்தோஷமாகவே இந்த் உறுதிமொழியை அளித்தாள். ஏனெனில் சாத்யகிக்கும் அவளை மணக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். அவள் தந்தை என்ன செய்தாலும் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. அவள் நடந்து கொள்ளும் முறையை நினைத்து நினைத்து அவளுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. சாத்யகன் நிச்சயமாக அவளைத் தன் மகனுக்கு மணமுடிக்க ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அவன் மகனான யுயுதானா சாத்யகியோ கிருஷ்ணனை அவள் மணக்க அவளுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறான்.

ஆனால் சத்யபாமா இந்த உறுதிமொழியை அவள் தந்தைக்கு அளிக்கையில் சத்ராஜித்தின் முகம் பெருமையிலும், கர்வத்திலும் மலர்ந்தது.  தாயற்ற தன் ஒரே மகளான சத்யபாமாவை அவன் மிகவும் நேசித்தான். அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் முகம் வாடுவதை அவன் விரும்பியது இல்லை. அதோடு அவளை நீண்ட நேரம் கோபித்துக் கொண்டு அவளை வாட விடுவதையும் அவன் விரும்பியது இல்லை. ஆகவே தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டான் சத்ராஜித். இப்போது அவன் மனம் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தது. முற்றிலும் மாறிவிட்டான். அவளிடம் சமாதானமாகப் பேசும் தோரணையில் விவரித்தான்: “பாமா! இந்த யாதவத் தலைவர்களை சாமான்யமாக எண்ணாதே! மிகவும் கர்வம் பிடித்தவர்கள். நம்மை என்னவோ அவர்களுக்கு அடிமை என்றே நினைக்கிறார்கள். நீ எதற்கும் கவலைப்படாதே! அவர்கள் செருக்கை நான் அடியோடு ஒழித்துக் கட்டுகிறேன். விரைவில் நீ சாத்யகியின் மனைவியாக ஆகிவிடுவாய்!” என்றான்.

“சரி, பெண்ணே, நீ இப்போது இங்கிருந்து செல்! உன் சிற்றன்னையர் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். “ என்று கூறிய சத்ராஜித்தின் உள் மனதில் தன் பெண்ணின்  மனதை மாற்றிவிட்டோம் என்ற பெருமிதம் நிரம்பி இருந்தது. சத்யபாமா அங்கிருந்து செல்ல எண்ணி எழுந்தாள். ஆனால் அவளுள் திடீரென ஓர் எண்ணம்! தந்தை இப்போது நல்ல மனதோடு சுமுகமான மனநிலையில் இருக்கிறார். இப்போது கிருஷ்ணனைப் பற்றிக் கூறி ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன? தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவளால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு இயல்பாகவும், இனிமையாகவும் தன் குரலை வைத்துக் கொண்டு தந்தையைப் பார்த்து, “தந்தையே, வாசுதேவன் என்ன சொன்னான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டாள்.

“எந்த வாசுதேவன்? பலராமனா? அல்லது அந்தக் கிருஷ்ணனா?”

“கிருஷ்ணா!” என்று சொன்ன பாமாவின் குரல் அந்தப் பெயரைச் சொல்லும்போதே அந்தக் குரலுக்குடையவன் தனக்குத் தான் சொந்தம் என்னும் எண்ணம் தோன்றும்படியாகச் சொன்னாள்; அல்ல; சொல்ல நினைத்தாள்; ஆனால் அவள் குரல் அந்தப் பெயரைச் சொல்கையில் தழுதழுத்தது. அவளுக்குக் குரலே வரவில்லை. இதை எல்லாம் சற்றும் கவனிக்காத சத்ராஜித் கடுகடுவென்ற குரலில்,” அவன் ஒரு மோசக்காரன்; வஞ்சகன்!” என்றவன் மேலும் தொடர்ந்து, “அவன் என்னமோ தன்னை ஒரு கடவுள் அல்லது கடவுளுக்கு நிகரானவன் என்றல்லவோ நினைக்கிறான்! அவன் யார், என்ன, எப்படி இருந்தான், எப்படி இருக்கப் போகிறான் என்பதை எல்லாம் நான் விரைவில் அவனுக்குக் காட்டுகிறேன்.” என்றான்.

“ஆனால், தந்தையே, அவன் நம்முடன் நட்புப் பாராட்டவே விரும்புகிறான்.”

“எனக்கு அதைப் பற்றியெல்லாம் எவ்விதக் கவலையுமில்லை; அக்கறையும் இல்லை! பெண்ணே! அவன் நண்பனாக இருந்தால் என்ன? எதிரியாக இருந்தால் தான் என்ன?” என்றவனுக்குள் திடீர் சந்தேகம் தலை தூக்க, “அது சரி, பாமா, உனக்கு அவன் கூறியது எப்படித் தெரியும்?” என்று கேட்டான். “ஓ, அவனே என்னிடம் கூறினான், தந்தையே! சுபத்ரா அவனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து சத்ராஜித்தின் மகள் என்று கூறினாள். உடனே அவன், என்னிடம், “பெண்ணே, மாட்சிமை பொருந்திய  உன் தந்தையைச் சந்தித்து என் நமஸ்காரங்களை அவரிடம் தெரிவித்து ஆசிகள் வாங்க நானே உங்கள் மாளிகைக்கு ஒரு நாள் வருகிறேன்.” என்றான்.

“ஆஹா, அவன் சொல்வதை எல்லாம் நீ நம்பிவிடாதே! உனக்கு என்ன தெரியும்?” என்று இறுமாப்புடன் அலட்சியமாகப் பேசிய சத்ராஜித் தொடர்ந்து அவளிடம், “ அவன் மிக இனிமையாகத் தான் பேசுவான்; ஆனால் அவன் மனமெல்லாம் விஷம்! யாதவ குலத்தையே அவன் தான் கெடுத்துவிட்டான். அவனைத் தலைவனாக அவர்கள் ஏற்றதிலிருந்து தீராத சங்கடங்களையும், பிரச்னைகளையும் யாதவர்கள் சந்தித்து வருகின்றனர். பொறுத்திரு பெண்ணே! இவனையும் நான் ஒரு கை பார்க்கிறேன். என் வழியில் இவனுடைய அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு காணுவேன்.”

“ஆனால் தந்தையே, கம்சனை மட்டும் இவன் கொன்றிராவிட்டால், நாம் இருந்த இடத்திலிருந்து திரும்ப மதுரா வந்திருப்போமா? சந்தேகம் தான் இல்லையா? ஜராசந்தனின் கொடுங்கோன்மையிலிருந்தும் தப்பினோம். இவை அனைத்தும் வாசுதேவ கிருஷ்ணனால் தான் அல்லவா?”

“இம்மாதிரி முட்டாள் தனமான பேச்சுக்களை எல்லாம் கேட்டு அவற்றை நம்பாதே! அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டித் தன் மாமன் ஆன கம்சனைக் கொன்றான். இந்தக் காட்டுக்கு நம்மை அழைத்து வந்ததும் அவன் தானே! அதுவும் எதற்காக? ஜராசந்தனிடமிருந்து தப்புவதற்காக!  ஜராசந்தன் இந்தக் கிருஷ்ணனை மட்டும் ஒப்படைத்திருந்தால் நம்மை எல்லாம் விட்டிருப்பான். அவன் ஒருவனைக் காப்பாற்ற வேண்டி நம்முடைய ராஜ்யத்தையும் ஊரையும் விட்டு விட்டு இந்தக் காட்டில் வந்து அடைக்கலம் புகுந்திருக்கிறோம். அவன் மட்டும் ஜராசந்தனிடம் சரண் அடைந்திருந்தால் யாதவர்கள் இப்படிக் கடுமையான பிரயாணம் செய்து இங்கே வந்திருக்க வேண்டியதே இல்லை. மதுராவிலேயே சந்தோஷமாக இருந்திருக்கலாம்.” என்றவன் மேலும் தொடர்ந்து, “இவனால் தான் மதுராவில் இருந்த நம் பூர்விக வீடு எரிக்கப்பட்டுச் சாம்பலாயிற்று!” என்றான்.

Friday, September 11, 2015

பாமாவின் சாகசங்கள்!

வரவேற்பு விழாவுக்கு பாமா சென்றதன் உண்மையான காரணத்தை அவள் தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் பாமா சந்தோஷமே அடைந்தாள். ஆனாலும் தந்தையிடம் இன்னும் அடக்கமாகத் தலையைக் குனிந்த வண்ணமே, “இல்லை  தந்தையே!” என்றாள். “ஹூம்! நிமிர்ந்து என்னைப் பார் பாமா!” சத்ராஜித் கோபமாக ஆணையிட்டான். பாமா நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களோ நீரை மழையாக வர்ஷித்தன. சத்ராஜித் அவளைக் கோபமாகப் பார்த்தான்.

“நீ அவனிடம் பைத்தியமாக இருக்கிறாய்!” என்றான் குற்றம் சாட்டும் தொனியில். பாமா வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. ஆனாலும் அவள் தந்தை தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தும் அவள் அதை மாற்றச் சிறிதும் முயலவில்லை. ஏன் வரவேற்புக்குச் சென்றோம் என்பதையும் அவரிடம் கூறவில்லை. “வெட்கம் கெட்ட பெண்ணே! இரு வருடங்கள் முன்னர் தான் நீ அவனைக் கடத்தி வந்தாய்! ஒரு திருடனைப் போல் என் குதிரைகளைத் திருடி அவனுக்குக் கொடுத்தாய்! ரதங்கள், படைக்கலங்கள் எனப் பலவும் அவனிடம் ஒப்படைத்தாய்!” சத்யபாமா அவனிடம் முறையிடும் தொனியில் பேச ஆரம்பித்தாள். “தந்தையே! பலராமனிடம் இருந்தும் முக்கியமாய் அவருடைய கடுங்கோபத்திலிருந்தும் உங்களைக் காக்க வேண்டியே நான் இதைச் செய்தேன். சாத்யகியை நீங்கள் ஆட்களை வைத்துக் கொன்று விட்டீர்கள் என சந்தேகப்பட்டார். அவருடைய கோபம் உசுப்பி விடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்களே தந்தையே! உங்களை இந்தப் பழியிலிருந்து நீக்க வேண்டி சாத்யகியை நான் ராஜா உக்ரசேனரின் முன்னால் ஒப்படைக்க வேண்டி இருந்தது. “ மிகவும் யோசித்து யோசித்துப் பேசினாள் சத்யபாமா.

“அது என்னவோ உண்மை தான்! என்னை ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து நீ காப்பாற்றித் தான் விட்டாய்! ஆனால் அதன் பிறகு? நடந்தது என்ன? நான் உன்னை எவ்வளவு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தினேன்! அந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது கொஞ்சம் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தினேன். உனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக இளைஞர்களைக் கடத்தாதே என அறிவுறுத்தினேன். நீ யாருடைய பெண்? சத்ராஜித்தின் பெண்! என் பெண்ணாக இருந்து கொண்டு நீ இம்மாதிரியான அசிங்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். இவற்றில் எல்லாம் நீ கலந்து கொள்ளவே கூடாது!”
சொல்லொணா அடக்கத்துடன், “சரி, தந்தையே!” என்று தலையை ஆட்டினாள் சத்யபாமா! ஆனால் சத்ராஜித் சமாதானம் அடையவில்லை. “ஒவ்வொரு முறையும், நீ சரி அப்பா! என்று தான் கூறுகிறாய்! அதனால் என்ன பயன்? அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நீ உன் திருமணத்தை சாத்யகியுடன் நடத்துவது குறித்த முடிவை முழுக்க முழுக்க என்னிடம் விட்டிருந்தாய்! அதுவாவது உன் நினைவில் இருக்கிறதா? “ “ஆம் தந்தையே! நான் அப்படித் தான் சொன்னேன்!” என்றாள் பாமா.

“உனக்குக் கொஞ்சமாவது தன்மானமோ, சுய மரியாதையோ இருக்கிறதா? இருந்திருந்தால், இப்படிப் போவாயா? அந்த சாத்யகி, திமிர்பிடித்தவன், துஷ்டன், பொல்லாதவன் என்னையும் நம் குடும்பத்தினர் மொத்தப் பேரையும் எப்படி அவமதித்து விட்டான்!” மேலும் கடுமையாகப் பேசினான் சத்ராஜித். “தன் மகனுக்கு உன்னை மணமுடிக்க மறுத்ததன் மூலம் அந்த சாத்யகன் என்னையும் நம் குடும்பத்தினரையும் அவமரியாதை செய்துவிட்டான். “கடுமையாகப் பேசினான் சத்ராஜித். முகத்தைச் சுளித்துக் கொண்டு, கோபத்தில் வளைந்த உதடுகளுடன், “உன்னை அவன் மகனுக்கு மணமுடிக்க மறுத்திருக்கிறான். அவன் மனதில் தான் என்னவோ பெரிய சக்கரவர்த்திக் குடும்பம் என்னும் நினைப்புப் போலும்! நம்மை விட எவ்விதத்தில் அவர்கள் உயர்ந்தவர்கள்?”

“ஆம், தந்தையே!”

“நிறுத்து, உன்னுடைய ஆமாம், ஆமாம் என்னும் சொல்லைக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது.” கோபம் வரும் சமயங்களில் எல்லாம் குரலை உயர்த்திப் பேசுவது சத்ராஜித்தின் வழக்கம். இதன் மூலம் எதிராளிகள் பயந்துவிடுவார்கள் என்று எண்ணினான். “அப்போதும் நீ என்னை அவமதித்தாய்; அவமானம் தேடிக் கொடுத்தாய்! இப்போதும் நீ என்னை அவமதித்து விட்டாய்! அவமானம் தேடிக் கொடுத்திருக்கிறாய்!” என்று கத்திக் கொண்டே தன் கண்களைப் பயங்கரமாக உருட்டி விழித்த வண்ணம் அவளைப் பார்த்தான் சத்ராஜித். சத்யபாமாவோ கண்ணீரை ஏராளமாகப் பெருக்கினாள். அதன் பின்னர் தன் கையிலிருந்து ஒரு துணியினால் முகத்தை மூடிக் கொண்டு நெஞ்சைப் பிளக்கும்படி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளுக்கு நினைத்த நேரம் கண்ணீர்  வருவதோடு விம்மி அழுவதையும் அவள் வழக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தாள். அவள் தந்தையை சாந்தப்படுத்த இது நல்லதொரு தீர்வாகவும் இருந்தது.

அந்தப்புரத்திலிருந்து சத்யபாமாவுடன் வந்திருந்த அவள் செல்லப் பூனை ஊர்வசி சிறிது நேரம் அங்கேயே தன் எஜமானிக்காகக் காத்திருந்தது. ஏற்கெனவே பொறுமையின்றி இருந்த அந்தப்பூனை இப்போது தன் எஜமானியின் விம்மல் கேட்டதும், அது தானும் இந்தப் பிரச்னையில் நுழைய இதுவே தக்கதொரு சந்தர்ப்பம் என நினைத்தது போலும்! மெதுவாக ஆனால் உறுதியாகத் தன் அடிகளை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து வந்தது அது. சத்ராஜித் அந்த வீட்டின் தலைவன் என்றாலும் அது அவனை லட்சியம் செய்ததே இல்லை. அவனை ஒரு பார்வை கூடப் பார்த்தது இல்லை. இப்போதும் அது தன் எஜமானியிடம் சென்று அவளை உரசிக்கொண்டு தன் வாலை உயர்த்திக் கொண்டு நின்றது. சத்ராஜித்தைப் பார்த்து, ஒரு “மியாவ்” என்னும் குரல் மூலம் தன் எதிர்ப்பையும் தெரிவித்தது. சத்யபாமாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவள் தன் சிரிப்பை அடக்கிக் கொள்ளப் பெரும்பாடு பட்டாள். அவள் தந்தை மிகக் கோபத்துடன் அந்தப் பூனையைப் பார்த்தார். பின்னர் அவளிடம் அதே கோபத்துடன் “சத்யா, இந்தப் பூனையை வீட்டை விட்டு வெளியே விரட்டு என உன்னிடம் எத்தனை முறை கூறியாகி விட்டது!” என்றான். அவன் கோபம் இப்போது ஊர்வசியின் பால் சென்றது.

“தந்தையே! நான் என்ன செய்ய முடியும்?” என்று வேறு வழியில்லை தனக்கு என்பதைக் காட்டும் வண்ணம் பேசிய பாமா மேலும் கூறினாள். “ நான் இந்தப் பூனையை வெளியே விரட்டும்படி பலமுறை நீங்கள் கூறிவிட்டீர்கள் தான். நானும் பலமுறை முயன்றேன். ஆனால் இந்தப் பூனை வெட்கம் கெட்டதாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் வெளியே இதை விரட்டும்போதெல்லாம் இவள் துவாரகை முழுதும் சென்று சுத்துகிறாள். மற்றப் பூனைகளுடன் பழகுகிறாள். அதன் பின்னர் நடு இரவில் உடல் முழுக்க அழுக்கோடு மிக அலங்கோலமான நிலையில் திரும்புகிறாள். நான் இரவு முழுதும் செலவு செய்து அவளைச் சுத்தப்படுத்த வேண்டி உள்ளது. ஆஹா! இவள் மிகவும் பயங்கரமானவளாகத் தான் இருக்கிறாள், தந்தையே!” என்ற வண்ணம் அந்தப் பூனையைத் தன் கைகளில் எடுத்து அணைத்துக் கொஞ்சினாள் பாமா.

Tuesday, September 8, 2015

சத்ராஜித்தின் கோபம்!

தன் தந்தையைப் பார்க்கச் சென்ற பாமாவுக்கு அவரின் கோபம் அச்சமூட்டியது. கண்ணில் படுபவர்களைக் கொன்று விடும் அளவுக்குக் கோபத்துடன் காணப்பட்டார். அவள் தந்தையின் கோபம் அவளுக்குப் புதிதல்ல! என்றாலும் இன்று கூடுதலாக நொறுங்கிப் போனவர் போலக் காணப்பட்டது அவள் மனதை உறுத்தியது. அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சத்ராஜித் உயரமாகவும் நல்ல உடல் வலுவுடனும் காணப்பட்டான். இளைஞனாக இருந்தபோது நல்ல இறுக்கமான தசைப்பிடிப்புடன் இருந்திருக்க வேண்டும். இப்போது தசைகள் தளர்ந்து காணப்பட்டது. அதோடு அவன் வயிறும் செல்வம் வந்தபிறகு வாழ்ந்து வரும் செழிப்பான வாழ்க்கை முறையால் பெரிதாகவே காணப்பட்டது. பார்ப்பதற்குக் கண்ணியமாகவே தெரிந்தான். நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட தாடியும், வழுக்கையாகிக் கொண்டிருக்கும் தலையோடும் காணப்பட்டான். அவன் முன்பற்களில் இரண்டு இல்லை; ஆகையால் அவன் கோபத்துடன் சீறும்போது அது அவன் முக அழகைக் கெடுத்துக் கோரமாக ஆக்கிக் கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த உடைகளால் அவனுடைய செல்வச் செழிப்பு அனைவருக்கும் தெரியும் வண்ணம் இருந்தது. ஏகப்பட்ட தங்க நகைகளையும் அணிந்திருந்தான். கை மணிக்கட்டில் கங்கணங்கள், தோள் வளைகள், விரல்களில் மோதிரங்கள் என அணிந்திருந்தான்.

அவனுடைய அரைக்கச்சை கூட தங்கத்தால் ஆகி இருந்ததோடு அதில் முத்துக்கள், மணிகள், பவளங்கள் என தொங்கிக் கொண்டிருந்தன.  மூன்று தங்கச் சங்கிலிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய பதக்கம் அவன் மார்பில் தொங்கியது. அதில் ஒரு கோழிமுட்டை அளவுக்குப் பெரிய வைரம் பதித்திருந்தது. பதக்கத்துடன் கூடிய அந்த மாலையைத் தான் அதிலும் அதில் பதித்திருந்த அந்த ரத்தினத்தைத் தான் ச்யமந்தக மணி என்று அழைத்தனர். இது சூரியக் கடவுளால் அவனுக்கு அளிக்கப்பட்டதாக ஊரெங்கும் பேச்சு! அவனுக்கு சூரியன் செய்த மிகப் பெரிய அநுகூலம் இது என்றும் நினைத்தனர். சூரியன் எந்த இடத்தில் வைத்து இதை அவனுக்குக் கொடுத்தாரோ அதே இடத்தில் இந்த ச்யமந்தக மணியை வைத்து முறைப்படி பூஜித்து எடுத்தால் மண்ணும் பொன்னாகும் என்று அனைவரும் பேசிக் கொண்டனர். தங்களுடைய செல்வச் செழிப்புக்கு இந்த ச்யமந்தக மணியே காரணம் என அவள் தந்தை கூறுவார்.

ஊர் மக்களும் அதையே பேசிக் கொண்டனர். அவன் சூரியனுக்கு நெருக்கமாக இருப்பது குறித்து அவனைக் கண்டு பிரமித்தனர். தங்கத் தகடுகளால் வேயப்பட்டதொரு சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான் சத்ராஜித். தரையெங்கும் கரடித் தோலால் விரிப்புகள் நெய்யப்பட்டு போடப்பட்டிருந்தன. அவனுடைய அந்த வயதுக்கும் உடல்நிலைக்கும் மாறாக முதுகுத் தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருந்தது. நேராக அமர்ந்திருந்தான் சத்ராஜித். சத்யபாமா அங்கே வருவதைப் பார்த்ததுமே அவ்வளவு நேரமாக அங்கிருந்த தன் மூத்த மகன் பாங்ககராவையும் குடும்பத்து ஆசானையும் அங்கிருந்து செல்லச் சொல்லி சைகை காட்ட்டினான். சத்யபாமாவுக்கு யாரும் எதுவும் சொல்லாமலேயே என்ன பிரச்னை என்பது புரிந்து விட்டது. இந்த யாகத்தை நடத்திக் கொடுத்துக் கொண்டிருந்த பிராமணர்கள் அனைவரும் யாதவர்களின் குலகுருவான கர்காசாரியாருடன் சேர்ந்து கிருஷ்ணனை வரவேற்கச் சென்று விட்டனர்.  ஆகவே அன்றைய யாகம் தாமதமாகி விட்டது. அவர்கள் அனைவரும் திரும்பி வரும் வரை மதிய உணவும் தாமதம் ஆகிவிட்டது. இது தான் அவள் தந்தையை மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. ஆகவே கண்ணெதிரே அகப்பட்ட தன் மூத்த மகனையும், குடும்பத்து ஆசானையும் கண்டித்துக் கொண்டு இருந்திருக்கிறான் சத்ராஜித்!

அவர்கள் அங்கிருந்து சென்றதும் சத்யபாமாவைப் பார்த்தான் சத்ராஜித். அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான். யாரையேனும் தன் கோபாக்னியில் மூழ்க அடிக்கும் முன்னர் அப்படிப் பார்ப்பது சத்ராஜித்தின் வழக்கம். சத்யபாமா அவனை நமஸ்கரித்தாள். பின்னர் தன் கீழ்க்கண்களால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவனையே பார்த்த வண்ணம் நின்றாள். கைகளை மிக்க மரியாதையுடன் கூப்பிக் கொண்டாள். “என்னிடம் வா!” என்றான் சத்ராஜித் ஆணையிடும் தோரணையில். மிகப் பொறுமையானவள் போல சத்யபாமா அதற்கு உடனே கீழ்ப்படிந்தாள்.

“உட்கார் என் அருகே!”

“தங்கள் உத்தரவுப்படியே!”

“எங்கே போயிருந்தாய்?” தன் கோபக்கண்களை உருட்டிய வண்ணம் கேட்டான். ஆனால் பாமாவிடமிருந்து பதிலே இல்லை. தரையில் பதித்திருந்த தன் கண்களை அங்கிருந்து அவள் மீட்கவும் இல்லை. “உண்மையைச் சொல்!” என்று சொல்லிய வண்ணம் தன் தொடையில் ஓங்கி அடித்துக் கொண்டான் சத்ராஜித். இது அவனுடைய மிதமிஞ்சிய ஆத்திரத்தைக் காட்டியது. அதோடு அவன் எந்த முட்டாள் தனத்தையும் பொறுக்க மாட்டான் என்பதையும் இதன் மூலம் தெரிவித்தான்.

“தந்தையே! மாட்சிமை பொருந்திய யாதவத் தலைவர் வசுதேவரின் மகள் சுபத்ரா என்னுடைய அருமைச் சிநேகிதி, நானும் அவளுடன் வரவேண்டும் என விரும்பினாள். “ அவள் சொன்ன விதம் இது தான் உண்மை என்பது போல் தொனித்தாலும் உண்மையில் பாமாதான் தானாக அந்த வரவேற்பில் கலந்து கொள்ளச் சென்றால் என்பது அவள் மட்டுமே அறிந்தது.

“எங்கே?”

“வரவேற்பு நிகழ்ச்சிக்கு!” மென்று விழுங்கினாள் சுபத்ரா!
அளவிலடங்காக் கோபத்துடன் சத்ராஜித் சிறிது நேரம் அவளையே பார்த்தான்.பின்னர் கேட்டான். இல்லை இல்லை ஆச்சரியத்தைத் தெரிவித்தான்! “என்ன, நீ அந்த வரவேற்புக்குப் போயிருந்தாயா?” நிமிர்ந்தே பார்க்காமல் ஆமென்று தலையை மட்டும் அசைத்தாள் பாமா. “ஏன்? எதற்கு? அந்தப் பிச்சைக்கார்ன் சாத்யகியைப் பார்க்கவா?” சத்ராஜித் கோபம் அதிகம் ஆனது.  உள்ளூர வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் பாமா.

Sunday, September 6, 2015

பாமாவும் கண்ணனும்!

அதோடு அவள் தந்தைக்கு சூரியனின் அருளினாலும் கருணையினாலும் கிடைத்த இவ்வளவு அரிய சொத்துக்களில் இருந்து சிறு பாகமே ஆனாலும் அவர் ஏன் பிரித்துக் கொடுக்க வேண்டும்! அவர் சேர்த்த சொத்துக்கள் அவருக்கே உரியவை! வேறு யாருக்கும் கொடுக்க இயலாது! அதிலும் பாண்டு புத்திரர்களுக்கு நிச்சயமாய்க் கொடுக்க இயலாது. சத்ராஜித் பாண்டவர்களுக்கு உதவ மறுத்த அந்தக்குறிப்பிட்ட நாளில் இருந்து மற்ற யாதவ உயர் தலைவர்களுக்கும், சத்ராஜித் குழுவினருக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வந்தது. ஆனாலும் இது அவள் தந்தையின் தவறே அல்ல! ஹூம்! ஏழை மானுடர்கள் இப்படித் தான் பணக்காரர்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள். என்ன செய்வது!

அது போகட்டும்! இதற்காகவெல்லாம் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை பாமா மாற்றிக் கொள்வாளா? ஒருக்காலும் இல்லை! வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுபத்ராவுடன் சென்ற மகளிர் கூட்டத்தில் அவளும் இணைந்து கொண்டாள். கூட்டம் நகர வாயிலுக்கு அருகே சென்றதும் இரு வரிசையாகப் பிரிந்து நின்றது. அனைவரும் கண்ணனின் புகழைப்பாடும் நாடோடிப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். வேத பிராமணர்கள் பலரும் அங்கே வந்திருந்து வேத கோஷங்களை முழக்கிக் கொண்டிருந்தனர். அனைவர் மேலும் அக்ஷதைகளைத் தூவி ஆசீர்வதித்தனர். அந்தக் கண்கொள்ளாக் காட்சியை பாமா ஒரு நாளும் மறக்கவே மாட்டாள். தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அங்கே வந்த யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணன், பலராமன் தலைமையில் தங்கள் ரதங்களிலிருந்து கீழிறங்கி அங்கே வந்து அவர்களை வரவேற்கக் காத்திருந்த உக்ரசேனரை வணங்கினார்கள். பின்னர் வசுதேவன், சாத்யகன் மற்ற யாதவத் தலைவர்களையும் வணங்கினார்கள். வணங்குபவர்கள் கூட்டத்தில் பாமாவின் கண்கள் கிருஷ்ணனைத் தேடின! அதோ அவன்! பாமா கிருஷ்ணனைப் பார்த்துவிட்டாள்! ஆஹா! எவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கிறான்! இத்தனை நாட்கள் வெளியே இருந்துவிட்டு வந்தவன் துளிக்கூட மாறவே இல்லை. அன்றிருந்த அதே கிருஷ்ணனாய் இளமையுடனேயே காட்சி அளிக்கிறான். இவனுக்கு முதுமையே வராது போலும்! அவன் தன் ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்த அந்தக் காட்சியானது அனைவர் கண்களையும் ஈர்த்ததோடு அல்லாமல் அவர்கள் நாள் முழுதும் செய்து கொண்டிருந்த அலங்காரத்தை எல்லாம் ஒன்றுமில்லாததாக ஆக்கிக் கொண்டிருந்தது. அனைவரும் தாங்கள் இரவல் உடையை அணிந்து வந்திருப்பது போல் உணர்ந்தனர்.

பாமாவின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் காலில் விழ வேண்டும்; தன்னை அர்ப்பணிக்க வேண்டும்; என்றெல்லாம் அவள் நினைத்தாள். அவனில் ஓர் அங்கமாக விரும்பினாள். ஊர்வலம் மெல்ல மெல்ல நகருக்குள் சென்றது. பெண்மணிகள் அனைவருக்கும் சுபத்ரா தலைமை தாங்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத மக்களைத் தவிர அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து ஊர்வலத்தைப் பார்க்கக் கூடி இருந்தனர். யாதவர்களில் பெருந்தலைவர்கள் அனைவரும் அங்கே திரண்டிருந்தனர். அவர்களில் அவள் தந்தையும்,அவள் சிற்றப்பன் பிரசேனனும் அவர்களின் மற்ற சிநேகிதர்களும் மட்டும் காணப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை அவள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள். ஊர்வலம் வசுதேவரின் மாளிகையில் சென்று முடிந்தது. கூட்டம் அங்கே கலைந்து சென்றது. சுபத்ரா கிருஷ்ணனிடம் ஓடோடிச் சென்றாள். கூடவே தன் கைகளில் பிடித்திருந்த பாமாவையும் இழுத்துச் சென்று விட்டாள். கிருஷ்ணனை நெருங்கியதுமே தன் கைகளில் இருந்த பானையை அருகே இருந்த ஓர் பெண்மணியிடம் கொடுத்த சுபத்ரா கிருஷ்ணன் தோள்களில் குழந்தையைப்போல் சாய்ந்து விட்டாள்.

இந்தப் பீறிடும் அன்பை அங்கே எவரும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் சுபத்ராவின் வயதில் இத்தகையதொரு நிகழ்வை யாருமே நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பதினைந்து வயதான சுபத்ரா இப்படி அனைத்துப் பெரியோர்களுக்கும் முன்னால் நடந்து கொள்வாள் என்பதை யாரும் எதிர்பாக்கவில்லை. அனைவருக்கும் இது அதிர்ச்சியைத் தந்தது. அவள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அவன் கால்களில் விழுந்து வணங்கி இருக்கலாம். அவன் பாததூளியைச் சிரசின் மேல் தரித்திருக்கலாம். ஆனால் கிருஷ்ணன் இதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அவள் தலையைத் தடவிக் கொடுத்து, காதைத் திருகிப் பின் அவளிடம் சொன்னான்:”சுபத்ரா! எவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டாய்!” அவன் குரலில் தான் எவ்வளவு பாசம்! அந்தக் குரலின் இனிமை பாமாவையும் மயக்கியது. தங்கை மேல் இவ்வளவு பாசமா? அதன் பின்னர் அவன் நிமிர்ந்தபோது பாமா அவன் கண்களில் பட்டாள். கிருஷ்ணனை அவள் பார்த்த அதே நேரம் அவனும் அவளைப் பார்த்தான்! அவன் அருகே பாமா நின்று கொண்டிருந்தாள். அந்த அண்மையே அவளை என்னவோ செய்தது! அப்படி இருக்க இப்போது இருவர் பார்வைகளும் மோதிக்கொள்ள, பாமாவுக்கு அந்த க்ஷணமே அவன் தோள்களில் சாய்ந்துவிடலாமா என்றே தோன்றியது. அந்த ஆசை அதிகரித்தது அவளுக்கு.

வெகு நாட்களாக அவள் அவனைத் தன் கனவுகளிலேயே கண்டு கொண்டிருந்தாள். அப்போது தான் அவள் சந்தோஷம் அடைந்து வந்தாள். ஆனால் அவை எல்லாம் அவளுடைய ரகசியங்கள். ஆனால் இது கனவில்லை! நனவு! நிஜம்! இதோ அவன் நேரில் எதிரே நிற்கிறான். உயிரும் உணர்வுகளுமாக! நீல நிற மேனியில் மஞ்சள் வண்ணப் பீதாம்பரம் அணிந்து தலையில் மயில் பீலி சூடிக் கழுத்தில் வண்ணமயமான மாலைகளை அணிந்து கொண்டு நிற்கிறான். அவள் தான் உயிருடன் இருப்பதன் பொருளே இந்தச் சந்திப்பு ஒன்றிற்காகத் தான் என நினைத்தாள். அவள் தான் உயிருடன் இருப்பதைக் குறித்து மகிழவும் செய்தாள். மற்ற எந்த மனிதனையும் விட இவன் ஒருவனே நிஜமான மனிதன்! அவ்வளவு ஏன்! அவள் அறிந்த மற்ற எந்த மானுடனையும் விட ஆண்களையும் விட இவன் ஒருவனே சிறந்த ஆண்மகன்! இது நிச்சயம்!

அவள் மனதில் அப்போது புரட்சிகரமான எண்ணங்கள் ஓடின. அதனால் அவள் குழப்பமடைந்தாள். இவன் விருந்தாவனத்து கோபியர் மனதிலும் குடி இருந்தான்; இருக்கிறான். அங்கே யாரோ ராதையாமே! இவனுக்கு அணுக்கமானவள்! அதைத் தவிர இவன் முதல் மனைவி ருக்மிணி, பின்னர் இன்னொரு மனைவியான ஷாயிப்யா! இவர்கள் மட்டுமா!  துரியோதனன் மனைவி பானுமதி! பின்னர் காம்பில்யத்து இளவரசி திரௌபதி! ஆனாலும் இத்தனையையும் தாண்டிக் கொண்டு அவன் அவள் மனதில் குடி புகுந்தான். நிரந்தரமாக வசிக்கிறான். வேறு எவருக்கும் அங்கே இடமில்லாதபடி முழுமனதையும் அவன் ஒருவனே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்.  வேறு எந்தப் பெண்ணின் மனதிலும் இவன் இப்படிக் குடி இருந்திருக்க முடியாது! அவள் மனதில் தோன்றிய எண்ணங்களினால் அவள் உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. அதனால் அவளுள் தோன்றியதோர் எண்ணம் இவன் நிச்சயம் கடவுளே தான்! அந்த மஹாவிஷ்ணுவே தான்! இவனை எவராலும் வெல்ல முடியாது. இவனால் வெல்ல முடியாப் போர்க்களங்களும் இருக்க முடியாது! இவனால் தோற்கடிக்க முடியா எதிரிகளும் இருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட ஒருவனுக்கு அவள் மனைவியாக வேண்டும்! ஆம்! என்ன நடந்தாலும் சரி! என்ன விலை கொடுத்தாலும் இவன் மனைவியாகத் தான் வேண்டும்.

அப்போது கண்ணன் அருகே நின்றிருந்த சாத்யகி கண்ணனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்:”வாசுதேவா, இந்த இளம்பெண் யாரென நீ அறிவாயா?”
“ஓ! எப்போதோ ஓர் முறை இவளைப் பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது!” என்ற வண்ணம் அவளைப் பார்த்து மோகனமாகச் சிரித்தான் கண்ணன். சத்யபாமாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. “ஆனால் இவள் தந்தை யார்? யாருடைய பெண் இவள்? எனக்கு அது நினைவில் இல்லை!” என்றான். மேலும் கூறினான்: “இப்போது எனக்கு இவளை தங்கப்பானையுடன் கூடிய தங்க யுவதி என்னும் அளவிலேயே நினைவில் இருக்கும்.” என்றும் சொன்னான். அப்போது சுபத்ரா இடை மறித்தாள்.

“கோவிந்தா! இது என்ன நீ சொல்வது! உண்மையிலேயே இவள் யாரென நீ அறிய மாட்டாயா?” என்றவள், “இவள் என் அருமைச் சிநேகிதி! சத்யபாமா! சத்ராஜித்தின் ஒரே மகள்!” என்றதும் கிருஷ்ணன் உடனே சாத்யகியைத் திரும்பிப் பார்த்து, “ஓஹோ! இந்தப் பெண் தானே உன்னைக் கடத்தினவள்?” என்றும் கேட்டான். பின்னர் கண்ணன் அவள் பக்கம் திரும்பி மகிழ்ந்தவன் போலக் கேட்டான்! “ இளம்பெண்ணே! மிக அருமை! நானும் எத்தனையோ கடத்தல்கள் குறித்துக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு ஏன்? விதர்ப்ப நாட்டு இளவரசியை நானே கடத்தி வந்தேன்! ஆனால் சாத்யகி போன்ற ஓர் சகல கலா வல்லவனை, வீரனைக் கடத்திய முதல் பெண்மணி நீ தான்!” என்ற வண்ணம் கண்ணன் சிரித்தான். அங்கே ஓர் இனிமையான இன்னிசை கேட்பதாக பாமா நினைத்தாள். அவள் மனதில் பூச்சொரிந்தது. அவன் பேசினாலும் இசை, சிரித்தாலும் இசை!

ஆனால் இந்தப் புகழ்ச்சி! புகழ்ச்சியா இது! இதைக் கேட்டுவிட்டு பாமாவிற்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவள் வாயையே திறக்கவில்லை. ஆனால்  கிருஷ்ணன் மேல் மின்னலைப் போன்றதொரு ஒளி கொடுக்கும் பார்வையைத் தன் கீழ்க்கண்களினால் பளிச்சிட்டுக் காட்டினாள். இதற்குக் கிருஷ்ணன் மறுமொழி சொல்வான் என அவள் எதிர்பார்த்திருந்தால் அதில் தோற்றுப் போனாள். கிருஷ்ணன் அதற்கு எவ்விதப் பிரதிபலிப்பையும் காட்டவில்லை. சுபத்ரா பக்கம் திரும்பி “சரி, சுபத்ரா, நீ உன் அந்தப்புரம் செல்! நான் அம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டும்! என் வணக்கங்களைத் தெரிவிக்க வேண்டும்! “என்ற வண்ணம் பாமா பக்கம் பார்த்தவன்,”சத்ராஜித்தின் மகளே! நீ என்னையும் என் நண்பர்களையும் வரவேற்க வந்தது உன் கருணையினால். உன் அன்பான உள்ளத்தினால். உன் தந்தையையோ அல்லது உன் சிற்றப்பாவையோ பல மாதங்களாக நான் பார்க்கவே இல்லை. ஒரு நாள் உங்கள் மாளிகைக்கு வந்து அவர்கள் இருவருக்கும் என் நமஸ்காரங்களைத் தெரிவிக்கிறேன்.” என்றான்.  சத்யபாமாவுக்குத் தன் தந்தையும் சிற்றப்பனும் கிருஷ்ணன் விஷயத்தில் நடந்து கொள்ளும் முறையினால் அவமானமாக இருந்தது. ஹூம்! கிருஷ்ணன் வரப்போகிறான் என்று தெரிந்தே நான்கு நாட்கள் முன்னால் யாகத்தை அவள் தந்தை ஆரம்பித்து வைத்துவிட்டார். சரி, அதுதான் போகட்டும் எனில் வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சிற்றப்பா பிரசேனனையோ, அண்ணன் பாங்ககராவையோ அனுப்பி வைத்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை! என்ன மனிதர் அவர்!

அந்தக் கூடத்தில் ஊஞ்சலில் ஆடியபடியே யோசித்துக் கொண்டிருந்த பாமாவின் மனதில் அடுக்கடுக்காக எண்ணக்குவியல்கள் தோன்றிய வண்ணம் இருந்தன. எண்ணங்களின் வேகத்துக்கு ஏற்ப ஊஞ்சலும் வேகமாக ஆடியது. யந்திரத்தனமாக அவள் கைகள் தன் செல்லப்பூனை ஊர்வசியின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. அவள் மனமெல்லாம் கிருஷ்ணனே நிறைந்திருந்தான். அவனைப் பார்க்க நேர்ந்த அந்த நேரம் அவள் கண்கள் எதிரே தோன்றியது! கிருஷ்ணனே அவள் முன் தோன்றினான். அவன் புன்சிரிப்பு அவள் மனதைக் கவர்ந்தது! எப்படிச் சிரித்தான் அவளைப் பார்த்து! அந்தக் கண்களில் தான் எவ்வளவு கருணை! ஹூம்!

அப்போது பார்த்து ஒரு சேடிப் பெண் உள்ளே நுழைந்தாள். உடனே அவள் எண்ணச் சங்கிலி பட்டென அறுந்தது. ஊஞ்சல் ஆட்டுவதை நிறுத்தினாள். ஊர்வசி அவள் மடியிலிருந்து கீழே குதித்தது. தன் வாலை உயரே உயர்த்திய வண்ணம் அந்தச் சேடிப் பெண்ணைப் பார்த்துச் சீறியது. சேடிப் பெண் பாமாவிடம், “அம்மா! பிரபு அவர்கள் தங்களை உடனே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களை உடனே வரச் சொன்னார்.” என்று சொன்னாள். “அடக் கடவுளே!” என்று தனக்குள்ளே முணுமுணுத்தாள் பாமா! இனி என்ன செய்யலாம்! வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போன போது அணிந்திருந்த விழாக்கால உடைகளை அவள் மாற்றாமல் இருந்து விட்டாளே! அதோடு நகைகளை வேறு நிறைய அணிந்து கொண்டிருந்தாள். அவற்றை எல்லாம் எடுக்க இப்போது சமயமே இல்லையே! இதனால் அவள் தாமதமாகச் சென்று தந்தையைச் சந்தித்தால் அவருக்குக் கோபம் வரும். அவரைக் காத்திருக்க வைத்திருக்க இயலாது. அவள் தன் உடைகளைக் கொஞ்சம் சரி செய்து கொண்டு அவரைச் சந்திக்கச் சேடிப் பெண்ணோடு சென்றாள்.

Thursday, September 3, 2015

பாமா செய்த தந்திரங்கள்!

ஆகையால் தன் மூத்த சகோதரன் ஆன பங்ககராவைத் தன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நினைத்த பாமா அவனுடன் தன் லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டாள். தன் தந்தைக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே உள்ள உறவைச் சரியாகப் புரிந்து வைத்திருந்த அவனோ இவள் நோக்கத்தைக் கேட்டுச் சிரித்தான். முட்டாள் தனமாகக் கனவு காண்கிறாள் எனக் கேலியும் செய்தான். ஆனால் பாமாவோ தன்னளவில் தீர்மானமாக இருந்தாள்; கிருஷ்ணன் ஒருவனே அவள் கணவன்! தன் எண்ணத்தையும் உறுதியையும் அவளால் மாற்றிக் கொள்ள இயலாது. தன் வீட்டு மனிதர்களின் துணையின்றியே அவள் கிருஷ்ணனைக் குறித்த நல்ல விதமான பிரசாரங்களின் மூலம் அனைவர் மனதையும் மாற்றவும் நினைத்தாள். சில காலம் முன்னர் கிருஷ்ணன் யுதிஷ்டிரனின் அழைப்பை ஏற்று ஹஸ்தினாபுரம் சென்று  அங்கிருந்து வடநாட்டிற்கு மற்ற அதிரதர்களுடன் சென்றதுமே அவள் தன் முயற்சியைத் தொடங்கி விட்டாள்.

தன் தாயின் சகோதரியின் மகனும், கிருஷ்ணனின் சிறந்த நண்பனுமான கிருதவர்மனைத் தன் நம்பிக்கைக்குப் பாத்திரனாகக் கொண்டாள். அவன் மூலம் அவள் கிருஷ்ணனுக்குக் குதிரைகளையும் ஆயுதங்களையும் அவன் அறியாமல் கொடுத்து உதவி வந்தாள். அவள் தந்தையின் குதிரை லாயங்களில் கணக்கில்லாமல் இருந்த குதிரைகளாலும், ஆயுதக் கிடங்குகளில் கிடந்த எண்ணிக்கையற்ற ஆயுதங்களாலும் அவளால் இதைச் செய்ய முடிந்தது. அத்தனை அதிகமான அளவில் இருந்ததால் அவள் எடுத்ததே எவருக்கும் தெரியவில்லை. அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது. கிருஷ்ணனோடு ஹஸ்தினாபுரம் செல்லத் தயாராக இருந்த சாத்யகியைப் போகவிடாமல் தடுக்கவும் அதோடு அவனை அடியோடு கொன்றுவிடவும் அவள் தந்தை ஜயசேனனை ஏற்பாடு செய்திருந்தார். அது அவளுக்குத் தெரியவந்தது. அவள் சிற்றப்பன் தன்னுடன் சூதாடுவதிலும் குடிப்பதிலும் ஜயசேனனுக்கு உதவிகள் செய்து அவனைத் தங்கள் பக்கம் வளைத்தான். அதுவும் அவளுக்குத் தெரிய வந்தது.

அவள் தந்தை சாத்யகியைக் கடத்துவதற்கும், அவனைக் கிருஷ்ணனோடு சேர விடாமல் தடுப்பதற்கும் செய்த ஏற்பாடுகள் மட்டுமின்றி அதற்கான காரணங்களைக் கூட அவள் அறிந்திருந்தாள். அவளை மணக்க முடியாது என மறுத்தது ஒரு காரணம் எனில் கிருஷ்ணனின் ஏற்பாடுகளை முற்றிலும் தகர்த்து அவனை ஒன்றுமில்லாதவனாக ஆக்க வேண்டும் என்பது இன்னொன்று. ஆகவே அவள் எதிர் நடவடிக்கை எடுத்தாள். அவளுக்கு மிகவும் பழக்கமான அவள் அந்தரங்கக் காவலர்கள் சிலரின் உதவியை நாடினாள். அவர்கள் உதவியுடன் சாத்யகியைக் கடத்தினாள். அதிலும் அவள் முந்திக் கொண்டாள். ஜயசேனனும் அவன் ஆட்களும் சாத்யகியைக் கொல்லும் முன்னரே அவனை அவள் கடத்தி மறைத்துவிட்டாள். கிருஷ்ணனின் வேலை முழுவதுமாக வெற்றியுடன் முடிவடையவே அவள் விரும்பினாள். அதில் அவன் தோற்றுப் போகவோ அவன் தூது செல்லக் கிளம்ப முடியாமல் அவனைத் தடுப்பதிலோ அவளுக்கு விருப்பமில்லை.  தன் தந்தையின் அனுமதி இன்றி கிருஷ்ணனுக்குக்குதிரைகள் மட்டுமின்றி ரதங்கள், ஆயுதங்கள் என அளித்தாள். இதை சாத்யகியின் மூலம் செய்து முடித்தாள். இதற்கு பதிலாக சாத்யகியிடம் அவள் வாங்கிய உறுதிமொழி கிருஷ்ணனை அவள் மணப்பதற்கு வேண்டிய உதவிகளை அவன் செய்ய வேண்டும் என்பதே! இப்போது சாத்யகி மட்டுமின்றி அவனுடைய நெருங்கிய இரு நண்பர்களும் அவளுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் அவள் பல முறை முயன்றும் கிருஷ்ணனின் இரு மனைவியரின் உதவியும் அவளுக்கு எவ்வகையிலும் கிட்டவில்லை. ருக்மிணி ஒரு யாதவத் தலைவரின் மகள் என்ற முறையில் அவளை மரியாதையுடனேயே நடத்தினாள். ஷாயிப்யாவோ அவளை ஒரு சிறு குழந்தையாகவே நினைத்தாள். தேவகியின் உதவியைப் பெறலாம் என நினைத்து அவள் செய்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. அவள் சத்ராஜித்தின் மகள் என்னும் உண்மை அவர்களுக்கு அவ்வப்போது நினைவில் வந்து அவளுடன் அவர்கள் நெருங்குவதைத் தடுத்துத் தொலை தூரத்தில் நிறுத்தியது.  ஆனால் சத்யபாமா தோல்வியை ஏற்க மாட்டாள். அவள் மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்தை நெருங்கி கிருஷ்ணனின் இளைய சகோதரி சுபத்ராவின் நட்பைப் பெற்று விட்டாள். உல்லாசமாயும், சுறுசுறுப்பாகவும், அதே சமயம் வேடிக்கையாகவும் பேசும் சுபத்ராவுக்குத் தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணின் சிநேகிதம் பிடித்திருந்தது. இந்த நட்பை வைத்துக் கிருஷ்ணனின் குடும்பத்தில் நடப்பதை எல்லாம் அவ்வப்போது சத்யபாமா அறிந்து வந்தாள்.

இந்தப் புகழ் பெற்ற கதாநாயகர்கள் வெற்றியடைந்து திரும்பியதைக் கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவள் தந்தை கலந்து கொள்ளப் பிரியப்படவில்லை. குடும்பத்தினரையும் தன்னுடைய கட்டுப்பாட்டினுள் இருக்கும் மற்ற யாதவத் தலைவர்களையும் அவர் தடுத்துவிட்டார். அதோடு கிருஷ்ணன் திரும்பி வரும் செய்தி கிடைத்ததுமே அவன் திரும்பும் நாளுக்குச் சரியாக நான்கு நாட்கள் முன்னரே வேத பிராமணர்களை வைத்து யாகங்களையும்,யக்ஞங்களையும் அவள் தந்தை ஆரம்பித்து வைத்தார். வெகு நேரம் நடைபெறும் இவற்றைச் சாக்கு வைத்து வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போகாமல் இருக்கலாம் என்பதால் தான் அவர் இப்படிச் செய்கிறார் என்பதை பாமா புரிந்து கொண்டாள்.  ஆனால் அதற்காக அவள் போகாமல் இருந்துவிடுவாளா என்ன?  அவள் போக முடிவு செய்து விட்டாள்.

கிருஷ்ணன் இப்போது பெரும்புகழுடன் வந்திருக்கிறான். அவனுடைய தெய்விகத் தன்மையையும் நிரூபித்திருக்கிறான். அவள் தகப்பனின் கொடுங்கோன்மையைத் தாண்டி அவள் இதில் வெற்றியடையும்படியாகக் கிருஷ்ணனைக் குறித்து நல்லபடியாகப் பேசியாக வேண்டும்.  இன்று அதிகாலையிலே அவள் சுபத்ராவுடன் கிருஷ்ணனை துவாரகை வாயிலில் வரவேற்கும் நிகழ்ச்சிக்குச் சென்றாள். மற்ற யாதவப் பெண்களுடன் சேர்ந்து கொண்ட அவள் அவர்களைப் போலவே ஒரு தாமிரப் பானையையும் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவள் தந்தை ஒரு செல்வந்தர் ஆயிற்றே. தங்கப்பானையைக் கொண்டு சென்றாள் பாமா. அனைத்து யாதவப் பெண்களும் அவளைக் கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்த்தனர். அவர்கள் எல்லாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் செல்வம் என்று வரும்போது அவள் தந்தையிடம் இருக்கும் செல்வம் அவர்களிடம் இல்லை. அவர்கள் இதில் அவளோடு போட்டி போட முடியாது.

யாதவத் தலைவர்கள் அனைவரும் அவள் தந்தையின் செல்வத்தையும் அவரையும் மதிப்பதே இல்லை. அவரைக் கீழ்த்தரமாகவே நினைக்கின்றனர். அதிலும் அந்த அக்ரூரர்! சில மாதங்கள் முன்னர் அவள் மாளிகைக்கு வந்திருந்தார். அவள் தந்தையிடம் பாண்டவர்களுக்காக அவர்கள் சொத்தில் ஐந்தில் ஒரு பாகம் குதிரைகள், ரதங்கள், தங்கம், பசுக்கள் எனக் கொடுக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு அவள் தந்தை நிச்சயமாக மறுத்துவிட்டார். யாதவர்கள் அனைவரும் பாண்டவர்களின் படை வீரர்களா? அவர்களுக்காகச் செலவழிக்க யாதவர்கள் யார்? அவர்களின் சொத்தை ஏன் பாண்டவர்களுக்காகக் கொடுத்து அழிக்க வேண்டும்? யுதிஷ்டிரன் என்ன பெரிய சாம்ராஜ்யச் சக்க்ரவர்த்தியா? நாம் அவனுக்குக் கப்பம் செலுத்தவேண்டுமா? அதெல்லாம் முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

Wednesday, September 2, 2015

பாமாவின் கனவில் கிருஷ்ணன்!

செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணன் நிகழ்த்தி வந்த சாகசங்களைக் குறித்து அவள் நிறையக் கேள்விப் பட்டிருந்தாள். துவாரகையில் அவற்றைக் குறித்துப் பேசாத நபர்களே இல்லை! இதைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி மக்கள் மகிழ்ந்தனர். அதிலும் குரு வம்சத்து அரசனான பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ராக்ஷசவர்த்தத்தில் இருந்து கண்ணன் மீட்டுக் கொண்டு வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.  வாரணாவதத்தில் துரியோதனாதியரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஐவரும் அங்கிருந்து உயிருடன் தப்பிச் சென்றது ஒரு அதிசயம் எனில் அவர்கள் ராக்ஷஸவர்த்தத்தில் உயிருடன் இருந்து தப்பி வந்தது இன்னொரு அதிசயம். அதோடு மட்டுமில்லாமல் யாதவர்களின் நீண்ட வருடங்களாக எதிரியான ஜராசந்தனைக் கண்ணன் தனி ஒருவனாக  திரௌபதியின் சுயம்வரத்திலிருந்து விலக வைத்ததும், அவனைக் காம்பில்யத்தை விட்டே ஓட வைத்ததையும் பேசப் பேச அவர்களுக்கு அலுக்கவில்லை. துருபதனின் அருமையும், பெருமையும் நிறைந்த மகளைக் கரம்பிடிக்கப் பாண்டவர்களுக்கு உதவி செய்தது, இறந்து கொண்டிருந்த பானுமதிக்கு அளித்த வாக்குறுதி, அவள் கணவன் துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதி, அதை அவன் நிறைவேற்றிய விதம். ஐந்து சகோதரர்களையும் எவ்விதச் சண்டையும் பூசலும் இல்லாமல் ஹஸ்தினாபுரத்திலிருந்து காப்பாற்றிக் காண்டவப்ரஸ்தம் கொண்டு சேர்த்தது. அங்கே புதியதொரு நகரை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்னும் பெயரைச் சூட்டியது அனைத்தையும் துவாரகை மக்கள் பேசும்போது பாமா கேட்டுக் கொண்டிருப்பாள்.

இதைக் குறித்துப் பேசிய துவாரகை மக்கள் அனைவரும் கிருஷ்ணனை மனிதனே அல்ல; கடவுள் என்றே நினைத்தனர். வெளிப்படையாக அதைச் சொல்லவும் செய்தனர். ஆனால் சத்ராஜித் அதை ஏற்கவில்லை என்பதோடு அவனைத் தங்கள் தலைவனாக ஏற்றிருந்த ஒரு சிறிய யாதவக் குழுவினருக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. கிருஷ்ணனின் சாகசங்களைப் பிறர் பேசும்போது கேட்ட அவர்கள் அதைக் கேலி செய்து சிரித்தனர். பரிகாசமாகப் பேசினார்கள். சத்யாவுக்கு இது எல்லாம் மனதை வருத்தியது. பாமாவுக்கு அது மட்டும் வருத்தமில்லை; கிருஷ்ணன் மேல் அவள் தந்தை காட்டிய விரோத மனப்பான்மையும் அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவரான உக்ரசேனரைக் கூட சத்ராஜித் சிறிதும் மதிக்கவில்லை. வெளிப்படையாக அவமதித்தான்.

ஆனால் இந்த அவமதிப்புக்கான காரணங்கள் அவள் தந்தையிடம் உண்டு என்பதும் அவற்றை எவராலும் மறுக்க முடியாது என்பதையும் அவள் உணர்ந்தே இருந்தாள். ஏனெனில் அனைவருக்கும் சத்ராஜித்தின் அளவு கடந்த செல்வமும், அதன் காரணத்தால் அவன் கைப்பிடிக்குள் இருக்கும் சில யாதவர்களையும் நினைத்தே அவர்கள் சத்ராஜித்தை வெறுத்து வந்தனர். அவன் மேல் பொறாமை கொண்டனர். மற்ற யாதவத் தலைவர்களுக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்றே அவள் தந்தை நினைத்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அதற்காகவே அவள், பாமா யுயுதானா சாத்யகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். கிருஷ்ணன் குடும்பத்துடன் வலிமை வாய்ந்த சாத்யகன் குடும்பம் நெருக்கமானது. யுயுதானா சாத்யகியை பாமா மணப்பதன் மூலம் அவர்களிடையே உள்ள இடைவெளியை ஓரளவாவது நீக்கலாம்.  ஆனால் எவ்வித சம்பிரதாயத்திற்கும் கட்டுப்படாமல் அந்த விருப்பம் முற்றிலும் நிராகரிக்கபப்ட்டது. அதிலிருந்து சத்ராஜித்தின் கௌரவம் பாழாகி விட்டது என்பது போல் அவனுக்கு மனதுக்குள் வருத்தம். அவன் மனம் காயப்பட்டு விட்டது. அதிலிருந்து அந்த மேன்மை தாங்கிய குடும்பத்து நபர் எவரானாலும் அவரை எவ்வகையிலாவது அவமானம் செய்தே ஆக வேண்டும் என்னும் எண்ணம் சத்ராஜித்திடம் தோன்றியதோடு அல்லாமல் அதற்கான ஆவன செய்தும் வந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்த மேன்மை பொருந்திய குடும்பத்தின் மேன்மையை எவ்வகையில் குறைக்கலாம் என்றே எண்ணினான்.

ஆனால் யுயுதானா சாத்யகிக்கு அவளை மணமுடிக்க சாத்யகி தந்தை சாத்யகன் ஒத்துக் கொள்ளாதது பாமாவைப் பொறுத்தவரை நல்லதே! அதில் அவள் மகிழ்ச்சியே அடைந்தாள். சாத்யகி இளைஞன், கவர்ச்சிகரமான இளைஞன், பலசாலி, வீரன் எல்லாமும் தான். ஆனாலும் அவனை மணக்கும் அளவுக்கு அவன் மேல் பாமாவுக்குப் பெரிய விருப்பு எல்லாம் இல்லை. யாதவத் தலைவர்களிலேயே பிரபலமான வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணனைத் தான் பாமா மணக்க விரும்பினாள். ஆனால் இந்த விருப்பத்தைத் தன் சிற்றன்னையரிடமோ அல்லது தந்தையிடமோ தெரிவிக்க அவளுக்கு முடியவில்லை. தெரிவிக்க யோசித்தாள். அவள் குடும்பத்தினருக்குக் கனவில் கூடக் கிருஷ்ணனுக்கு அவளை மணமுடிக்கும் எண்ணம் வராது. அவள் தந்தைக்கு யாதவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சிறு சிறு கஷ்டத்திற்கும் வசுதேவனின் குடும்பம் தான் காரணம் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதை எவ்வாறு கடந்து வருவது என்பதைக் குறித்து அவள் தினமும் யோசித்து வந்தாள்.

அவள் தந்தைக்கு அவர் செய்வது என்னமோ நியாயமாகவே இருக்கலாம். யாதவர்களில் மிகவும் பணக்காரர் என்பதோடு வலிமை வாய்ந்த தலைவரும் ஆவார். சத்ராஜித்தின் மாளிகையின் செல்வ வளமும், செழிப்பும் துவாரகை முழுதும் பேசப்படும் ஒன்று. அவள் தந்தையிடம் விலை உயர்ந்த பல நல்ல ஜாதிக்குதிரைகள், பசுக்கள் என உள்ளன. எல்லாவற்றுக்கும் மேல் அவள் தந்தை சூரியதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பிரபாஸ தீர்த்தத்தின் காவல் தெய்வமான சூரியன் அவள் தந்தையை ஆசீர்வதித்திருக்கிறான். அதற்கு அடையாளமாக சூரிய தேவனால் சத்ராஜித்துக்கு விலை மதிக்க முடியாத “ச்யமந்தக மணி” என்னும் ஒப்பற்ற ரத்தின ஆபரணம் கிடைத்துள்ளது. அந்த ச்யமந்தக மணியை வைத்து முறைப்படி ஒழுங்காக வழிபாடுகள் செய்தால் அது கல்லைக் கூடப்பொன்னாக மாற்றும் வல்லமை உள்ளது. அவளுக்கு அவள் தந்தை மேல் மிகவும் பாசம் உள்ளது. அவள் தந்தையும் அவளிடம் பாசம் அதிகம் உள்ளவரே!  ஆனால் இதற்காக அவளால் கிருஷ்ணனை மறக்கவே முடியாதே! அவனைப் பார்க்கக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கவும் செய்கிறாள்.

மதுராவில் கிருஷ்ணன் தன் மாமன் ஆன கம்சனோடு போரிட்டுக் கொண்டிருந்த அந்தச் சமயத்திலேயே அவள் முடிவை எடுத்து விட்டிருந்தாள். அப்போது அவள் வயது ஆறு மட்டுமே! அந்த வயதிலேயே கிருஷ்ணன் மேல் அவளுக்கிருந்த ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்ததோடு தன் சிநேகிதிகளோடு விளையாடும் போதெல்லாம் அவள் தன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்றே அழைத்துக் கொள்வாள். கிருஷ்ணனின் நினைவுகள் அவளைத் துரத்தின. அவள் கனவுகளில் அவன் மட்டுமே வந்தான். அவளைக் கவர்ந்து தன் மணமகளாக ஏற்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். பல சமயங்களிலும் அவள் கனவுகளில் கிருஷ்ணனோடு தான் குடும்ப வாழ்க்கை நடத்துவதாகக் கண்டிருக்கிறாள். அது தான் உண்மையோ என்னும்படியாக இருக்கும். பின்னர் கனவு கலைந்து திடீரெனத் தூக்கிவாரிப் போட்டு எழுந்திருக்கையில் தன்னைப் போன்ற உயர்குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படி எல்லாம் கனவுகள் வரலாமா என்று அவள் வெட்கம் அடைவாள். ஆனால் அதற்காக தன் கனவுகளில்கிருஷ்ணன் வராமல் போய்விடப் போகிறானே என நினைத்து அவள் தினமும் இரவு தூங்கப் போகையில் இன்று கனவில்கிருஷ்ணன் வர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வாள்.

அவள் வளர வளர அவள் மனம் கிருஷ்ணன் பால் அதிகம் சென்றது. அவனைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் உறுதிப்பட்டது. அவள் இல்லாமல் கிருஷ்ணன் என்ன செய்வான்? அவளால் தான் அவனுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும். அவளால் மட்டுமே அவனுக்கு ஓர் ஆதர்ச மனைவியாக வாழ்க்கை நடத்த முடியும். அவள் இல்லையேல் கிருஷ்ணனுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. இது வரை அவன் வாழ்க்கையில் சந்தித்த எந்தப் பெண்ணும் கொடுக்காத அளவுக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி அவனுடைய வேலைகளிலும், மற்றப் பிரச்னைகளிலும் பங்கெடுப்பாள். பெருந்தன்மையுடன் அவனைப் பகிர்ந்து கொள்வாள். அவன் வாழ்வில் இத்தகைய பெண்ணையே இதுவரை சந்தித்ததில்லை என அவன் எண்ணும்படி நடந்து கொள்வாள்.

ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல கிருஷ்ணனை மணக்க முடியும் என்னும் நம்பிக்கை அவள் மனதில் ஆட்டம் கண்டது. அவள் தந்தையும் மற்ற யாதவர்களும் மற்ற யாதவர்களிலிருந்து பிரிந்தே காணப்பட்டார்கள். அவர்களை இவர்கள் லட்சியமே செய்யவில்லை.

Tuesday, September 1, 2015

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், ஐந்தாம் பாகம் ஆரம்பம்! பாமா பரிணயம்!

அனைவருக்கும் வணக்கம். இது வரை பொறுமையாக நான்கு பாகங்களாகக் கண்ணனின் கதையைப் படித்து வந்ததற்கும், ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. இன்றிலிருந்து ஐந்தாம் பாகம் ஆரம்பிக்கிறது. இதில் பாமா பரிணயம் தான் முக்கிய இடம் பிடிக்கிறது. நாம் படிப்பது கண்ணன் கதைகள். அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள். அதை தர்க்கரீதியாகப் பார்த்து இப்படி நடந்திருக்கலாம்; இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்து கொள்வதே இதன் அடிப்படை. கண்ணனின் சாகசங்களை, மாயாஜாலங்கள் என்னாமல் உண்மையில் எப்படி நடந்திருக்கும் என்று திரு முன்ஷி ஜி கற்பனை கண்டதன் விளைவே இந்தக் கதைகள். ஆகவே இனி வரப்போகும் ஐந்தாம் பாகத்தில் வழக்கம் போல் கண்ணனின் சாகசங்கள் இடம் பெறும். பாண்டவர்கள் குறித்தோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தோ நாம் தெரிந்து கொள்ளப் போவதில்லை. பாமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது இது. ஆகவே அதை மனதில் கொண்டு படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
*********************************************************************************


நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. துவாரகையிலேயே மிகப் பெரிய மாளிகை சத்ராஜித்துடையது தான். முழுவதும் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்த அந்த மாபெரும் மாளிகையைச் சுற்றிலும் தாழ்வாரம் நீண்டு ஓடிக் கொண்டிருந்தது. சௌராஷ்டிரக் கடற்கரையை ஒட்டி இருந்த அந்த மாபெரும்   மாளிகையை ஒட்டியே, அதன் பரந்து விரிந்த தோட்டப்பகுதியில் வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள் ஆகியோருக்கான சிறு வீடுகளும், குடில்களும் காணப்பட்டன. ஓர் பக்கம் குதிரை லாயம் ஒன்று பெரிதாகக் காணப்பட்டது. இன்னொரு பக்கம் பசுக்கள் இருக்கும் தொழுவமும் இருந்தது. நூற்றுக்கணக்கில் பசுக்கள் காணப்பட்டன. வீட்டின் பின் பகுதியில் ஏதோ சப்தம்! என்ன?

வீட்டின் பின்பக்கக் கதவு வழியே ஓர் அழகான இளம்பெண் உள்ளே நுழைகிறாள். அவள் வேறு யாரும் அல்ல. சத்யபாமா தான். சத்ராஜித்தின் ஒரே பெண். சத்யா என அனைவராலும் அழைக்கப்படுவாள். சூரியனுக்காக அவள் தந்தை அங்கே ஓர் கோயில் கட்டி இருந்தார். அதை ஒட்டிய முற்றத்தில் தான் அந்தக் கதவு திறக்கிறது. சத்யபாமா சிறு பெண்ணாகக் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தாள். அதனாலோ என்னமோ கொஞ்சம் குண்டாகவும் தெரிந்தாள். எனினும் அது அவளுக்கு நன்றாகவே இருந்தது. வெள்ளை வெளேர் என வெண் தாமரையைப் போல் காணப்படும் அவள் முகம் இப்போது வெயிலில் இருந்து வந்ததால் சிவந்து வெண்மையும், சிவப்பும் கலந்ததொரு அபூர்வ நிறத்தில் காணப்பட்டது. கவர்ச்சிகரமான எழிலோடு காணப்பட்டாள். அவள் கண்களில் அவளுடைய புத்திசாலித்தனமும், திறமையும் பளிச்சிட்டது.

உள்ளுக்குள்ளே ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தாள் பாமா. அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாள் இந்நாளே என அவள் நினைத்தாள். சற்றுத் தொலைவில் வீட்டின் சுற்றுச் சுவருக்கு அப்பால் காணப்பட்ட சமுத்திரத்தையும் அதன் அலைகள் ஓயாமல் கரையில் வந்து மோதுவதையும் பார்த்தவளுக்கு அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து விட்டே சமுத்திர ராஜன் தன் அலைக்கரங்களை விரித்துக் கொண்டு ஆனந்த நடனம் ஆடுவதாகத் தோன்றியது.  அந்தப்புரம் நோக்கி நடந்த பாமா அங்கே யாரும் இல்லை என்பதை உணர்ந்தாள். சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட பாமாவுக்குச் சிற்றன்னையர் இருந்தனர். ஆனால் அவர்களும் அந்தப்புரத்தின் மற்ற மகளிரும் வீட்டின் முன் முற்றத்தில் அவள் தந்தைக்கு உணவு படைப்பதில் மும்முரமாக இருந்தனர். அவருடன் கூட அவரின் அலுவலர்கள், மற்றும் தினந்தோறும் யாகம் வளர்த்து வழிபாடுகளை நடத்தித் தரும் பிராமணர்கள் ஆகியோரும் அமர்ந்து உணவு உண்டனர்.

எவரும் அறியாமல் அருந்தும் நீர் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்த சத்யா தன் கைகளில் அதுவரை வைத்திருந்த தங்கப் பானையை அதன் இடத்தில் வைத்தாள். இப்போது முன் முற்றம் சென்று அங்கே தந்தைக்கு உணவு படைக்கும் சிற்றன்னையருடனும், மற்ற மகளிருடனும் சேர்ந்து கொள்ள அவளுக்கு இஷ்டமில்லை. இவ்வளவு நேரம் அவள் எங்கிருந்தாள் என்னும் கேள்வி எழும்! அவள் இவ்வளவு நேரம் இல்லை என்பதும் ஏன் என்பதும் அனைவர் மனதையும் கேள்வியில் ஆழ்த்தும்! ஆகவே அந்தப்புரத்தின் தாழ்வாரத்திற்குச் சென்று அங்கே தொங்க விட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மெல்லிய குரலில் “உய்” எனக் குரல் கொடுத்த வண்ணம், “ஊரி” என்றும் அழைத்தாள்.

அவள் அழைப்பைக் கேட்டதும், “ஊர்வசி” என்னும் பெயருள்ள, ஆனால் அனைவராலும், “ஊரி” என அழைக்கப்படும் அவள் செல்லப் பூனை அங்கே ஓடோடி வந்தது. அது வருவதைப் பார்த்தால் வெள்ளைப்பூக்களால் ஆனதொரு பெரிய பூங்கொத்து நான்கு கால்களைப் பெற்று ஓடி வருவதைப் போல் காட்சி அளித்தது. சத்யபாமா தன் கைகளை நீட்டவும் அது துள்ளிக் குதித்து அவள் முழங்காலில் ஏறி அமர்ந்து கொண்டு, தன் பச்சை நிறக் கண்களால் அவளையே பார்த்தது.

மெல்ல அதனிடம், “ஊரி, யார் வந்தார்கள், தெரியுமா?” என்று கேட்டாள் பாமா. பூனை, “மியாவ்” என்றது. அதன் முகத்தைத் தன்னிரு கரங்களிலும் அடக்கிய வண்ணம் பாமா, “நாம் இன்று அவரைப் பார்த்தோம், ஊரி!” என மெல்லக் கிசுகிசுத்தாள். பூனை என்ன சொல்லும்! எந்த மறுமொழியும் அதனிடமிருந்து வரவில்லை. சத்யா யாரைப் பார்த்தால் எனக்கென்ன? பார்க்காவிட்டால் எனக்கென்ன? என்று அது வாளாவிருந்தது. அதற்கு அவற்றில் ருசியில்லை. இப்போது அதன் நோக்கமே வேறு. அது மிக்க பசியோடு இருந்தது.  தன் எஜமானியோடு உணவு அருந்தும் நேரத்துக்காகக் காத்திருந்தது அது. சத்யா அதைச் செல்லமாக அடித்தாள். பூனை வருத்தமாக “மியாவ்” என்றது. “இதைக் கேள், ஊரி! முட்டாளே! என்ன நடந்தது தெரியுமா? அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் அவனைக் கண்டு சிரித்தேன்!” என்று அதன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தாள்.

சந்தோஷம் தாங்க முடியாத சத்யபாமா ஊஞ்சலை வேகமாக ஆட்டினாள். ஊர்வசியைத் தன் கைகளால் பிடித்த வண்ணம் ஆடினாள் அவள். பூனை தன் கண்களை மூடிக் கொண்டு விட்டது. தன் எஜமானி எப்போது உணவு உண்ணப் போகிறாளோ! அப்போது தான் நமக்கு இன்று சாப்பாடு என்பதை அது தீர்மானித்துவிட்டாற்போல் இருந்தது. சத்யபாமா அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட ஆரம்பித்தாள். நடந்தவை அனைத்தும் அவள் கண்கள் முன்னர் வந்தன. என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்த்தாள். இன்றைக்கு ஆரியவர்த்தத்தில் பற்பல வெற்றிகளைப் பெற்று துவாரகைக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்த வாசுதேவ கிருஷ்ணன், பலராமன் மற்ற அதிரதர்கள் அனைவருக்கும் துவாரகை நகர வாயிலில் நகரத்துப் பெண்கள் அனைவரும் சேர்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.

சத்யபாமா எப்படியோ அந்தக் கும்பலில் கலந்து கொண்டு விட்டாள். அவள் கைகளிலும் ஒரு தங்கக்குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்ற மகளிரோடு அவளும் சென்றாள். அவள் தந்தை இந்த வரவேற்பில் கலந்து கொள்ளாதது தவறு என அவள் நினைத்தாள். அது மட்டுமா? சத்ராஜித்தின் மாளிகையிலிருந்து வேலைக்காரர்கள் கூட அந்த வரவேற்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையும் இட்டிருந்தான். துவாரகை முழுவதும் கொண்டாட்டங்களிலும் ஆடல்,பாடல்களிலும் களித்திருக்கையில் அவள் குடும்பம் மட்டும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பது முட்டாள் தனம் என பாமா நினைத்தாள்.