Tuesday, September 1, 2015

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், ஐந்தாம் பாகம் ஆரம்பம்! பாமா பரிணயம்!

அனைவருக்கும் வணக்கம். இது வரை பொறுமையாக நான்கு பாகங்களாகக் கண்ணனின் கதையைப் படித்து வந்ததற்கும், ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. இன்றிலிருந்து ஐந்தாம் பாகம் ஆரம்பிக்கிறது. இதில் பாமா பரிணயம் தான் முக்கிய இடம் பிடிக்கிறது. நாம் படிப்பது கண்ணன் கதைகள். அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள். அதை தர்க்கரீதியாகப் பார்த்து இப்படி நடந்திருக்கலாம்; இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்து கொள்வதே இதன் அடிப்படை. கண்ணனின் சாகசங்களை, மாயாஜாலங்கள் என்னாமல் உண்மையில் எப்படி நடந்திருக்கும் என்று திரு முன்ஷி ஜி கற்பனை கண்டதன் விளைவே இந்தக் கதைகள். ஆகவே இனி வரப்போகும் ஐந்தாம் பாகத்தில் வழக்கம் போல் கண்ணனின் சாகசங்கள் இடம் பெறும். பாண்டவர்கள் குறித்தோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தோ நாம் தெரிந்து கொள்ளப் போவதில்லை. பாமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது இது. ஆகவே அதை மனதில் கொண்டு படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
*********************************************************************************


நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. துவாரகையிலேயே மிகப் பெரிய மாளிகை சத்ராஜித்துடையது தான். முழுவதும் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்த அந்த மாபெரும் மாளிகையைச் சுற்றிலும் தாழ்வாரம் நீண்டு ஓடிக் கொண்டிருந்தது. சௌராஷ்டிரக் கடற்கரையை ஒட்டி இருந்த அந்த மாபெரும்   மாளிகையை ஒட்டியே, அதன் பரந்து விரிந்த தோட்டப்பகுதியில் வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள் ஆகியோருக்கான சிறு வீடுகளும், குடில்களும் காணப்பட்டன. ஓர் பக்கம் குதிரை லாயம் ஒன்று பெரிதாகக் காணப்பட்டது. இன்னொரு பக்கம் பசுக்கள் இருக்கும் தொழுவமும் இருந்தது. நூற்றுக்கணக்கில் பசுக்கள் காணப்பட்டன. வீட்டின் பின் பகுதியில் ஏதோ சப்தம்! என்ன?

வீட்டின் பின்பக்கக் கதவு வழியே ஓர் அழகான இளம்பெண் உள்ளே நுழைகிறாள். அவள் வேறு யாரும் அல்ல. சத்யபாமா தான். சத்ராஜித்தின் ஒரே பெண். சத்யா என அனைவராலும் அழைக்கப்படுவாள். சூரியனுக்காக அவள் தந்தை அங்கே ஓர் கோயில் கட்டி இருந்தார். அதை ஒட்டிய முற்றத்தில் தான் அந்தக் கதவு திறக்கிறது. சத்யபாமா சிறு பெண்ணாகக் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தாள். அதனாலோ என்னமோ கொஞ்சம் குண்டாகவும் தெரிந்தாள். எனினும் அது அவளுக்கு நன்றாகவே இருந்தது. வெள்ளை வெளேர் என வெண் தாமரையைப் போல் காணப்படும் அவள் முகம் இப்போது வெயிலில் இருந்து வந்ததால் சிவந்து வெண்மையும், சிவப்பும் கலந்ததொரு அபூர்வ நிறத்தில் காணப்பட்டது. கவர்ச்சிகரமான எழிலோடு காணப்பட்டாள். அவள் கண்களில் அவளுடைய புத்திசாலித்தனமும், திறமையும் பளிச்சிட்டது.

உள்ளுக்குள்ளே ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தாள் பாமா. அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாள் இந்நாளே என அவள் நினைத்தாள். சற்றுத் தொலைவில் வீட்டின் சுற்றுச் சுவருக்கு அப்பால் காணப்பட்ட சமுத்திரத்தையும் அதன் அலைகள் ஓயாமல் கரையில் வந்து மோதுவதையும் பார்த்தவளுக்கு அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து விட்டே சமுத்திர ராஜன் தன் அலைக்கரங்களை விரித்துக் கொண்டு ஆனந்த நடனம் ஆடுவதாகத் தோன்றியது.  அந்தப்புரம் நோக்கி நடந்த பாமா அங்கே யாரும் இல்லை என்பதை உணர்ந்தாள். சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட பாமாவுக்குச் சிற்றன்னையர் இருந்தனர். ஆனால் அவர்களும் அந்தப்புரத்தின் மற்ற மகளிரும் வீட்டின் முன் முற்றத்தில் அவள் தந்தைக்கு உணவு படைப்பதில் மும்முரமாக இருந்தனர். அவருடன் கூட அவரின் அலுவலர்கள், மற்றும் தினந்தோறும் யாகம் வளர்த்து வழிபாடுகளை நடத்தித் தரும் பிராமணர்கள் ஆகியோரும் அமர்ந்து உணவு உண்டனர்.

எவரும் அறியாமல் அருந்தும் நீர் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்த சத்யா தன் கைகளில் அதுவரை வைத்திருந்த தங்கப் பானையை அதன் இடத்தில் வைத்தாள். இப்போது முன் முற்றம் சென்று அங்கே தந்தைக்கு உணவு படைக்கும் சிற்றன்னையருடனும், மற்ற மகளிருடனும் சேர்ந்து கொள்ள அவளுக்கு இஷ்டமில்லை. இவ்வளவு நேரம் அவள் எங்கிருந்தாள் என்னும் கேள்வி எழும்! அவள் இவ்வளவு நேரம் இல்லை என்பதும் ஏன் என்பதும் அனைவர் மனதையும் கேள்வியில் ஆழ்த்தும்! ஆகவே அந்தப்புரத்தின் தாழ்வாரத்திற்குச் சென்று அங்கே தொங்க விட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மெல்லிய குரலில் “உய்” எனக் குரல் கொடுத்த வண்ணம், “ஊரி” என்றும் அழைத்தாள்.

அவள் அழைப்பைக் கேட்டதும், “ஊர்வசி” என்னும் பெயருள்ள, ஆனால் அனைவராலும், “ஊரி” என அழைக்கப்படும் அவள் செல்லப் பூனை அங்கே ஓடோடி வந்தது. அது வருவதைப் பார்த்தால் வெள்ளைப்பூக்களால் ஆனதொரு பெரிய பூங்கொத்து நான்கு கால்களைப் பெற்று ஓடி வருவதைப் போல் காட்சி அளித்தது. சத்யபாமா தன் கைகளை நீட்டவும் அது துள்ளிக் குதித்து அவள் முழங்காலில் ஏறி அமர்ந்து கொண்டு, தன் பச்சை நிறக் கண்களால் அவளையே பார்த்தது.

மெல்ல அதனிடம், “ஊரி, யார் வந்தார்கள், தெரியுமா?” என்று கேட்டாள் பாமா. பூனை, “மியாவ்” என்றது. அதன் முகத்தைத் தன்னிரு கரங்களிலும் அடக்கிய வண்ணம் பாமா, “நாம் இன்று அவரைப் பார்த்தோம், ஊரி!” என மெல்லக் கிசுகிசுத்தாள். பூனை என்ன சொல்லும்! எந்த மறுமொழியும் அதனிடமிருந்து வரவில்லை. சத்யா யாரைப் பார்த்தால் எனக்கென்ன? பார்க்காவிட்டால் எனக்கென்ன? என்று அது வாளாவிருந்தது. அதற்கு அவற்றில் ருசியில்லை. இப்போது அதன் நோக்கமே வேறு. அது மிக்க பசியோடு இருந்தது.  தன் எஜமானியோடு உணவு அருந்தும் நேரத்துக்காகக் காத்திருந்தது அது. சத்யா அதைச் செல்லமாக அடித்தாள். பூனை வருத்தமாக “மியாவ்” என்றது. “இதைக் கேள், ஊரி! முட்டாளே! என்ன நடந்தது தெரியுமா? அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் அவனைக் கண்டு சிரித்தேன்!” என்று அதன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தாள்.

சந்தோஷம் தாங்க முடியாத சத்யபாமா ஊஞ்சலை வேகமாக ஆட்டினாள். ஊர்வசியைத் தன் கைகளால் பிடித்த வண்ணம் ஆடினாள் அவள். பூனை தன் கண்களை மூடிக் கொண்டு விட்டது. தன் எஜமானி எப்போது உணவு உண்ணப் போகிறாளோ! அப்போது தான் நமக்கு இன்று சாப்பாடு என்பதை அது தீர்மானித்துவிட்டாற்போல் இருந்தது. சத்யபாமா அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட ஆரம்பித்தாள். நடந்தவை அனைத்தும் அவள் கண்கள் முன்னர் வந்தன. என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்த்தாள். இன்றைக்கு ஆரியவர்த்தத்தில் பற்பல வெற்றிகளைப் பெற்று துவாரகைக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்த வாசுதேவ கிருஷ்ணன், பலராமன் மற்ற அதிரதர்கள் அனைவருக்கும் துவாரகை நகர வாயிலில் நகரத்துப் பெண்கள் அனைவரும் சேர்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.

சத்யபாமா எப்படியோ அந்தக் கும்பலில் கலந்து கொண்டு விட்டாள். அவள் கைகளிலும் ஒரு தங்கக்குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்ற மகளிரோடு அவளும் சென்றாள். அவள் தந்தை இந்த வரவேற்பில் கலந்து கொள்ளாதது தவறு என அவள் நினைத்தாள். அது மட்டுமா? சத்ராஜித்தின் மாளிகையிலிருந்து வேலைக்காரர்கள் கூட அந்த வரவேற்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையும் இட்டிருந்தான். துவாரகை முழுவதும் கொண்டாட்டங்களிலும் ஆடல்,பாடல்களிலும் களித்திருக்கையில் அவள் குடும்பம் மட்டும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பது முட்டாள் தனம் என பாமா நினைத்தாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.