ஷாந்தனு சோகத்துடன் இருக்க அதைக்
கவனித்த தேவ விரதன் தந்தையிடம் காரணம் கேட்கிறார். முதலில் மறுத்த ஷாந்தனு பின்னர் தன் ஆசையையும்,
அதற்கு நிபந்தனை விதித்த சத்யவதியின் தகப்பனின் கருத்தையும் கூறினான். இதைக் கேட்ட தேவ விரதன் தன் தகப்பனின் சந்தோஷமே
தன் சந்தோஷம் எனக் கூறித் தான் அரியணை ஏறப்போவதில்லை என்கிறான். ஆனால் ஷாந்தனுவோ மகனிடம், “மகனே, நீ அரியணை ஏறவில்லை
எனினும் உனக்குப் பிறக்கப்போகும் உன் குமாரர்கள் அவ்விதம் இருப்பார்களா?” என சந்தேகத்துடன்
கேட்க, தேவவிரதன், தான் திருமணமே செய்து கொள்ளாமல் கடும் பிரமசரியம் அநுஷ்டிக்கப் போவதாய்க்
கடும் சபதம் செய்கிறார். இத்தகைய கடும் சபதத்தைக்
கேட்ட வானவர்களும், ரிஷி, முனிவர்களும் தேவ
விரதனை வாழ்த்தி, “பீஷ்ம” “பீஷ்ம” என அழைக்க,
அன்று முதல் தேவ விரதனின் பெயர் “பீஷ்மர்” என்று மாறிற்று. அவரும் அன்று முதல் ஹஸ்தினாபுரத்தின் மேன்மை ஒன்றையே
தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்கிறார்.
இதன் மூலம் அவருக்கு அவர் விரும்பும்போது உயிரை விடலாம் என்னும் மாபெரும் வரமும்
கிடைக்கிறது. ஆகவே ஷாந்தனு சத்யவதியை மணந்து
குழந்தைகள் பெற்ற பின்னர் அந்தக் குழந்தைகளில் ஒருவர் விரைவில் இறக்க, மற்றொருவனுக்குப்
பட்டம் கட்டி, அவனும் வாரிசின்றி இறக்கப் பின்னர் அவன் மனைவியருக்கு வேத வியாசர் மூலம்
பிறந்த குழந்தைகள் தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர். இப்போது அவர்களின் குழந்தைகளாலேயே ஹஸ்தினாபுரத்தில்
பல்வேறு பிரச்னைகள்.
சத்யவதி மீனவப் பெண்ணாக இருந்தாலும்,
அனைத்தையும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் எதிர்கொண்டாள். ஷாந்தனுவுடன் ஆன தாம்பத்தியத்தில் பிறந்த பிள்ளைகளில்
சித்திராங்கதன் இளவயதில் இறந்தபோதும், அதன்
பின்னர் வாரிசில்லாமல் விசித்திர வீரியன் இறந்தபோதும் அவள் தைரியத்தை விட வில்லை. பீஷ்மரைத் தன் சபதத்தை விடச் சொல்லிக் கெஞ்சினாள். ஆனால் அவரோ திட்டமாக மறுத்திவிட்டார். அதன் பின்னர்
வியாசர் மூலமாகப் பிறந்த குழந்தைகளில் திருதராஷ்டிரன் பிறவிக்குருடாகப் பிறந்த போதும்,
பாண்டுவுக்கு ஏற்பட்ட சாபமும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட மரணமும் அவள் திட நெஞ்சத்தைக்
கலங்கவே அடித்தது. எனினும் பீஷ்மரின் உதவியோடு
அனைத்தையும் தாங்கிக் கொண்டாள். பாண்டுவின்
ஐந்து புத்திரர்களையும் கடவுள் அவர்கள் குரு வம்சத்துக்கு அளித்த ஈடு இணையில்லாப் பரிசு
என ஏற்றுக் கொண்டாள். திருதராஷ்டிரனுக்கோ நூறு குழந்தைகள் பிறந்தன. அனைவரையும் சமாளித்து வளர்க்கும் பொறுப்பும் அரண்மனை
வாசிகளுக்கு ஏற்பட்டது. பாண்டுவின் ஐந்து புத்திரர்களால்
குரு வம்சம் மேன்மை பெறப் போகிறது என்ற நம்பிக்கையும் அவள் மனதில் ஏற்பட்டது. ஆனால் திருதராஷ்டிரனின்
புத்திரர்களோ பாண்டுவின் புத்திரர்களை எதிரிகளாகவே பார்த்தனர். அதோடு அவர்கள் பாண்டுவின் புத்திரர்களை நாட்டை
விட்டே வெளியேற்றி வாரணாவதத்துக்கு அனுப்பியதோடு இல்லாமல், அங்கே அவர்கள் மாளிகை எரிந்து
சாம்பலாகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த முதிர்ந்த வயதில் இத்தனையையும்
பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த சத்யவதிக்கு எல்லாம் வல்ல மஹாதேவனைத்
தொழுவதை விட வேறு வழி தெரியவில்லை. எந்நேரமும்
வழிபாடு, பூஜை எனக் காலம் கழித்தாள். யாரையும்
பார்க்கவிரும்பவில்லை. எப்போதேனும் வரும் பீஷ்மரையும்
விதுரரையும் தவிர மற்றவர்கள் அவள் அருகில் செல்லவே அஞ்சினார்கள். ராஜரீக விஷயங்களில் நேரிடையாகத் தலையிடாவிட்டாலும்
அவளுடைய கண்கள் அனைத்தையும் கவனித்து அவள் மனதுக்குச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தன. அதோடு பீஷ்மரும்,
விதுரரும் நியாமாகத் தான் நடந்து கொள்வார்கள் என்பதிலும் அவளுக்குச் சிறிதும் சந்தேகம்
இல்லை. அவர்கள் செய்வதை அவள் உள்ளூர ஆதரித்தாள். முக்கியமான நேரங்களில், முக்கியமான விஷயங்களில்
தன் ஆலோசனைகளையும், உதவியையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தாள். மொத்தத்தில் அவளுடைய உயர்வான நடவடிக்கைகளாலும்,
அரும் குணங்களினாலும் ஹஸ்தினாபுரத்து அரண்மனை வாசிகள் மட்டுமின்றி மக்களும் அவளை வாழும்
தெய்வம் எனத் தொழுது வந்தனர். அத்தகைய சத்யவதி
இப்போது கண்ணனைக் காணத் தயாராகக் காத்திருந்தாள்.
கண்ணன் அவளைக் காண வந்தபோது சத்யவதி, தனக்கென அந்த அரண்மனையில் கட்டப்பட்டிருந்த சங்கர மஹாதேவரின் கோயிலில் அவர் சந்நிதியில் அமர்ந்திருந்தாள். இந்த எழுபது வயதிலும், அவளிடம் இன்னமும் இளமையின் மிச்சங்கள் இருந்தன. இவள் சிறு வயதில் எத்தனை அழகாக இருந்திருப்பாள் எனக் கண்ணனால் ஊகிக்க முடிந்தது. இந்த எழுபது வயதிலும் அவள் அழகையும், மென்மையான தோலையும் உடல் கட்டுடன் இருந்ததையும் கண்ட கண்ணன் இவளைக் கண்டு ஷாந்தனு மயங்கியதில் வியப்பில்லை என நினைத்தான். இத்தனை துக்கத்திலும் ஒளிர்ந்த கண்களையும், நரைத்த தலைமுடி கூட அவளுக்கு ஒரு அழகான கிரீடம் சூட்டியது போன்றிருந்ததையும் கண்டு வியந்தான். கண்ணனைத் தன் பார்வையாலும், புன்னகையாலும் வரவேற்ற அவள் தனக்கருகே இருந்த ஒரு ஆசனத்தில் அவனைச் சைகையாலேயே அமரச் சொன்னாள். கண்ணன் அவளை வணங்கிவிட்டு அமரவும், விதுரரையும் உடன் அமரச் சொன்னாள். அவள் காலடியில் விதுரர் அமர்ந்தார்.