Wednesday, November 30, 2011

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை!

ஏழு வருடங்களுக்கு முன்னர் வந்த ஒரு சரத் ருதுவில் என் பதின்மூன்று வயதில் உங்களை முதன்முதல் பார்த்தேன். அப்போதே ஜன்ம ஜன்மாந்திரங்களுக்கும் நீ என்னுடைய துணைவனாக வந்திருக்கிறாய்; இனி வரும் ஜன்மங்களிலும் தொடர்ந்து துணையாக வருவாய் எனப் புரிந்துவிட்டது எனக்கு. என்னை அப்போதே, அன்றே, அந்த நிமிடமே உன்னிடம் ஒப்புக் கொடுத்துவிட்டேன் நான்.


நான் விழித்திருந்தாலும், தூக்கத்திலும், என் கனவுகளிலும், நனவுகளிலும் என் முன்னே தெரிவது உங்கள் உருவம் தான். நான் உங்களுடையவள் என்பதை ஒரு நாளும் மறக்கவில்லை. அதே போல் நீங்களும் என்னுடையவர் என்பதையும் மறக்க மாட்டேன். ராக்ஷசனும், கொடுங்கோலனுமான ஜராசந்தனால் சுயம்வரம் வைசாக மாதம் அக்ஷயத்ரிதியை அன்று என நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. என் பிரபுவே! எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லையே! நான் என்ன செய்வேன்!


என் எதிரே எந்த வழியும் புலப்படவில்லை. மணந்தால் வாசுதேவ கிருஷ்ணனின் மனைவியாக ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக மணக்க விரும்புகிறேன். எனக்கு வேறெதுவும் தேவையில்லை. நான் ஏற்கெனவே உம்மை என் பதியாக வரித்துவிட்டேன். என் தேவனே! வா, வந்து என்னை ஆட்கொள்வாயாக! உன்னுடைய கருடக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு உன் ரதத்தில் கிளம்பி வருவாய்! இந்த மடலைக் கண்டதும் சற்றும் தாமதிக்காதே! தாயைப் பிரிந்த பசுங்கன்று எவ்வாறு துடித்துக் கதறுமோ அப்படி உனக்காக நான் கதறுகின்றேன்.


என் தலைவா, நீ வரும் வேளையில் நான் உயிருடன் இருந்தால் என்னை உன்னுடன் அழைத்துச் சென்று மணம் புரிந்து கொள். அல்லது….அல்லது……. விதிவசத்தால் … உன்னுடைய வருகை தாமதம் ஆனால், என்னுடைய உயிரற்ற உடலை நீ தான் எடுத்துச் சென்று தகனம் செய்ய வேண்டும். அந்தச் சாம்பலை நீ வசிக்கும் துவாரகை நகரெங்கும் தூவிவிடு. இது என் வேண்டுகோள்.

ருக்மிணி மேற்கண்ட கடிதத்தைத் தன் கண்ணீரால் எழுதி ஜாஹ்னுவிடம் கொடுக்க அவனும் அதை எடுத்துக்கொண்டு அவந்திக்கு விரைந்தான்.

Tuesday, November 29, 2011

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ! காற்றில் கரைவேனோ!

ஆனாலும் ருக்மிணியின் மனம் அலை பாய்ந்தது. யாதவர்கள் அனைவரும் காடுகளையும், மலைகளையும், பாலைவனத்தையும், நதிகளையும் கடந்து செளராஷ்டிரக் கடற்கரைக்குச் சென்றிருப்பார்களா? கிருஷ்ணன்? அவனுக்கு என்னவாகி இருக்கும்? பத்திரமாகத் தானிருப்பான். ம்ம்ம்ம்?? அல்லது வழியில் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ? கார்த்திகை மாதம் போய் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாசமும் வந்துவிட்டது. ஆனால் கண்ணனைக் குறித்தோ யாதவர்களைக்குறித்தோ தகவல்கள் எதுவும் வரவில்லை. பெளஷ மாசம் என்றழைக்கப்படும் தை மாசமும் பிறந்துவிட்டது. ஒன்றுமே தெரியாமல் இருந்தது. தை மாத நடுவில் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அதைக் கேட்டதும் ஏன் செய்தி வந்தது என ஆகிவிட்டது ருக்மிணிக்கு. மனமும் உடலும் பதறித் துடித்தது. ஆனால் அப்போதும் கொஞ்சம் ஆறுதலான செய்தியாகவும் இருந்தது. ஜராசந்தன் காலியாக இருந்த மதுரா நகரைக் கண்டதும் ஆத்திரம் தாங்க முடியாமல் நகரைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டானாம். நகரமே எரிந்து சாம்பலாகி விட்டதாம். போகட்டும்; நல்லவேளையாக யாதவர்கள் எவரும் இல்லை. அவர்களைப் பற்றிய எந்தச் செய்தியும் கிட்டவும் இல்லை. செய்தி இல்லாததும் நன்மைதான். ஒன்றும் வரவில்லை எனில் எல்லாரும் க்ஷேமம் எனத் தானே அர்த்தம். ருக்மிணி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

எதிர்பார்ப்பு, அதனால் விளந்த ஏமாற்றம், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஊசலாடும் மனம் என ருக்மிணி படாத பாடு பட்டாள். சுவ்ரதா முன்போல் இப்போது நட்போடு பழகுவதில்லை. ருக்மிணிக்குச் சுயம்வரம் நடக்கப் போகிறது என்ற போது அவள் ருக்மிணிக்கு உறுதுணையாக இருந்தாள். ஏனெனில் அந்தச் சுயம்வரம் நடந்திருந்தால் ஜராசந்தனின் பேத்தியை ருக்மி திருமணம் செய்து கொண்டு அவளுக்குப் பிறக்கும் மகனைத் தன் அடுத்த பட்டத்துக்கு வாரிசாக நியமித்திருப்பான் இப்போதோ சுயம்வரமே நடக்கவில்லை; அதோடு ஜராசந்தனும் முன்னைப் போல் இப்போது ருக்மிக்குத் தன் பேத்தியைக் கல்யாணம் செய்து கொடுக்கும் ஆர்வத்தோடு இல்லை. ஆகவே ருக்மிணியின் துணை அவளுக்கு இப்போது தேவையில்லை. இப்போது அவள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். எப்பாடுபட்டாவது ருக்மியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி ருக்மிணியோடு பேச்சு, வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருப்பதே! சற்றும் தயக்கமின்றி ருக்மிணியோடான தன் உறவை முறித்துக்கொண்டுவிட்டாள் சுவ்ரதா.

பாட்டனார் கைசிகனைப் பற்றிக்கேட்கவே வேண்டாம். அவருக்குக் கிருஷ்ணன் மேல் இருந்த நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அவரே தன்னிரக்கத்திலும், சுய பச்சாத்தாபத்திலும் வெந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்மிணிக்கு ஆறுதல் சொல்வது எவ்வாறு! கிருஷ்ணன் வரவும் மாட்டான்; ருக்மிணியைக் காப்பாற்றவும் மாட்டான். அதெல்லாம் நடவாத காரியம். தன்னந்தனியாக வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ருக்மிணியின் வேதனையை அதிகரிக்கும் வண்ணம் சக்கரவர்த்தி ஜராசந்தன் ஒரு செய்தியை அனுப்பி இருந்தான். எப்பாடு பட்டேனும் ருக்மிணியின் சுயம்வரம் நடந்தே தீர வேண்டும். சிசுபாலன் தான் மாப்பிள்ளை; வேறு எவரும் இல்லை. வைசாக மாதத்தின் (நமக்கெல்லாம் சித்திரை) பெளர்ணமியும் அக்ஷய த்ரிதியையும் ஆன சுபநாள் அன்று இந்தச் சுயம்வரம் நடந்தே தீர வேண்டும். அதோடு இல்லாமல் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட வேண்டிய நபர்களை ஜராசந்தன் பட்டியலிட்டு அனுப்பி இருந்தான். அவர்களுக்கு மட்டுமே உடனடியாக அழைப்பு அனுப்பப்படவேண்டும். மதுராவின் சர்வநாசத்தை நிச்சயமாகக் கண் குளிரப் பார்த்துவிட்டு மகதம் திரும்பும் முன்னர் ஜராசந்தன் ருக்மிணிக்கும், சிசுபாலனுக்கும் நடைபெறப் போகும் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக இரு தரப்புப் பெற்றோரின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொள்வான்.

இதே போன்ற செய்தி; சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும் என்ற குறிப்போடு சேதி நாட்டரசன் ஆன தாம கோஷனுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. பீஷ்மகனைச் சந்தித்து செய்தியைக் கொடுக்க வந்திருந்த தூதுவன் அதை நிச்சயம் செய்தான். ஜராசந்தன் தன்னுடைய கட்டளைகள் இறுதியானவை என்று தெரிவித்துவிட்டான். வேறு தப்பிக்கும் வழியோ, வேறு ஆலோசனைகளோ பீஷ்மகனுக்கோ, தாமகோஷனுக்கோ இருக்கக்கூடாது என்பதையும் மறைமுகமாய்ச் சுட்டி இருந்தான். இந்தச் செய்தியை அரசவையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு சேடிப் பெண் ருக்மிணிக்கு வந்து சொன்னாள். தன் தலையில் அடித்துக்கொண்டாள் ருக்மிணி. தன் உதடுகளை ரத்தம் வரும்வரை அழுந்தக் கடித்துக்கொண்டாள். எதிர்காலமே சூன்யமாய்த் தெரிந்தது அவளுக்கு. நம்பிக்கையின் ஒரு சிறு கீற்றுக் கூடக் காணமுடியவில்லை. யாதவர்களைக்குறித்தோ, கண்ணனைக் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. கண்ணன் வந்து என்னைக் காப்பானா? ருக்மிணியின் மனதில் நம்பிக்கை என்பதே இல்லை. மரணம்! ஆம் , எனக்கு மரணம் ஒன்றே நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..ஆனால்… அந்த கோவிந்தன் அதிசயங்களை நிகழ்த்துபவனே! அனைவரும் கூறுகின்றனர். அவன் ஒரு கடவுள் எனவும் சொல்கின்றனர். இதைக் கேட்டுக் கேட்டு ருக்மிணியும் கண்ணனைக் கடவுள் என்றே நம்பத் தொடங்கி விட்டாள். யாருக்குத் தெரியும்! கடைசி நிமிடத்தில் கூடக் கண்ணன் திடீரெனத் தோன்றி அவளைக் காக்க முடியும். ருக்மிணிக்கு ஒரு கணம் மனதில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த கணம் உள்ள நிலையை உள்ளபடி உணர்ந்து கொண்டிருக்கும் புத்திசாலிப் பெண்ணான அவளுக்குத் தான் காண்பது கனவு என்றும் முட்டாள் தனமாகச் சிந்திக்கிறோம் என்பதும் புரிந்தது. செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கிப் பயணித்த யாதவர்களுக்கு என்ன ஆனது என்பது யாருமே அறியாத ஒன்றாக இருந்தது. அதுவும் என்னவோ தொலைதூரத்தில் உலகத்தின் இன்னொரு கோடியில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது! யோசித்த ருக்மிணி ஜாஹ்னு மூலம் கண்ணனுக்குச் செய்தியை அனுப்ப நினைத்தாள். அவன் ஆசாரிய ஷ்வேதகேதுவிடம் அதைச் சமர்ப்பிக்கட்டும். அவர் எப்படியேனும் கண்ணன் பார்வைக்குக் கொண்டு சென்றுவிடுவார். தன் மனதைக் கொட்டி எழுத ஆரம்பித்தாள் ருக்மிணி.

“யாதவர்களுக்குக் கடவுளானவனும், மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணனுக்கு,

குண்டினாபுரத்தின் இளவரசி ருக்மிணி, தலை வணங்கி நமஸ்கரித்து எழுதும் மடல்.”

Monday, November 28, 2011

என் மனம் மிக அலை பாயுதே, கண்ணா!

தங்களை மறந்து பஜனையின் ஒன்றிப் போயிருந்த மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. மூவரும் திரும்பிப் பார்க்கத் திரிவக்கரையின் கைகளில் வைத்திருந்த பூஜைப்பொருட்கள் அடங்கிய தாம்பாளம் “கணீர்” என்ற ஓசையோடு கீழே விழுந்து, “டங்ங்ங்ங்ங்” என்ற நாதத்தை எழுப்பிய வண்ணம் சுற்றிச் சுழன்றது. தன் கண்களைத்துடைத்த வண்ணம் ஓடோடி வந்த திரிவக்கரை கண்ணனின் எதிரில் நின்று கொண்டு அவனை உற்றுப்பார்த்துவிட்டு மீண்டும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அப்படியே அவன் கால்களில் விழுந்தாள். “கண்ணா, கண்ணா!” அவளால்ல் மேலே பேச முடியவில்லை. அவளைத்தூக்கக் கண்ணன் முயன்றான்; அதற்குள்ளாக அவன் தாயும், அக்ரூரரும் கண்ணனின் அருகில் வந்தனர். இத்தனை நாட்களில் தேவகி அம்மா இளைத்து உருமாறிப் போயிருந்ததோடு அல்லாமல், மூப்படைந்த மாதிரியும் காணப்பட்டாள். அழுது அழுது கண்கள் சிவந்து வீங்கிக் காணப்பட்டன. தன் கண்களையே நம்பாதவள் போல் கண்களை அகல விரித்துக் கண்ணனையே பார்த்தாள். அன்னையின் அருகே சென்ற கண்ணன், “அம்மா,அம்மா,” என மீண்டும் அழைத்தான். “என் கண்ணா, என் கோவிந்தா, என் கிருஷ்ணா!” தேவகியால் மேலே பேசமுடியாமல் ஆனந்த அதிர்ச்சியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே மயங்கி ஒரு குவியலாகக்கண்ணனின் காலடியில் வீழ்ந்தாள். தன் அன்னையைத் தன் இரு கைகளால் தூக்கிய கிருஷ்ணன், ஒரு குழந்தையைத் தூக்குவது போன்ற அதி தீவிர கவனத்தோடு அவளை எடுத்துக்கொண்டு மாளிகையின் உட்புறம் நுழைந்தான்.
***********************************************************************************************


பல மாதங்கள் பிரிந்த பெற்றோருடன் கண்ணன் பேசிக் களித்து ஆசுவாசம் செய்து கொள்ள விட்டுவிட்டு நாம் இப்போது ருக்மிணியைக் கவனிப்போம். ஆம்; ருக்மிணி என்னவானாள்? அவள் நிலை இப்போது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆகவே வெகு கவனத்தோடு வாருங்கள். இதோ விதர்ப்பா! ருக்மிணியின் கன்னிமாடம். யாரோ சேடிப் பெண் வந்து ருக்மிணியின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்கிறாளே! என்னவாயிருக்கும்?? கொஞ்சம் கிட்டே போய்க் கேட்கலாமா? செய்தி அப்படி ஒன்றும் நல்லதில்லை போலிருக்கிறதே! ஆம்.

ருக்மிணியின் மனம் நொறுங்கும்படியான செய்தி தான் வந்துள்ளது. சக்கரவர்த்தி ஜராசந்தன் மதுராவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறான். மதுராவை நெருங்கிவிடுவான். மதுராவையும் அதன் குடிகளையும் சாம்பலாக்கும்வரை விடப்போவதில்லை என்று சபதம் செய்திருக்கிறானாம். செய்தி கேட்ட ருக்மிணியால் அதன் பாரம் தாங்கவே முடியவில்லை. மயங்கிக் கீழே விழுந்தாள். அதோடு ஜராசந்தன் தன்னுடைய அணியில் இருக்கும் அரசர்களையும், இளவரசர்களையும் இந்த மாபெரும் சாதனையைத் தான் தனியாகவே செய்ய விரும்புவதாயும் யாரும் உதவிக்கு வரவேண்டாம் எனவும் திட்டவட்டமாய்க் கூறிவிட்டான். ருக்மியும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான் . தானும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளலாம் எனக் காத்திருந்தான். ஆனால் ஜராசந்தன் அவனை வரக் கூடாது எனத் திட்டவட்டமாக மறுத்து நிறுத்திவிட்டான். “இம்முறை எந்தக் குழப்பமும், நாடகமும் இருக்காது; இருக்க விட மாட்டேன். நானே தன்னந்தனியாக என்னுடைய பழைய தாக்குதல் முறையைக் கடைப்பிடித்து, கொஞ்சம் கூடக் கருணை காட்டாமல் அந்த யாதவக் கூட்டத்தை ஒரு புழுவை நசுக்குவது போல் நசுக்கிக் காட்டுகிறேன். நான் எவ்வளவு கொடூரமானவன் என்பதை அவர்கள் அப்போது புரிந்து கொள்வார்கள்.” ஜராசந்தனின் எண்ணம் இதுவே.


இதைக் கேட்டதிலிருந்து தடுமாறிய வண்ணம் நாட்களைக் கடத்திய ருக்மிணிக்கு இன்னமும் மோசமான செய்தியும் வந்து சேர்ந்தது. காலயவனனும் ஜராசந்தனோடு கூட்டுச் சேர்ந்துவிட்டானாம். இன்னொரு திசையிலிருந்து கண்ணனைத் தாக்கப் புறப்பட்டுச் செல்கிறானாம். ஆஹா, இந்தக் காலயவனனின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் பற்றியும், கொலைகள் பற்றியும் பலரும் பலவாறு கூறுவரே. இம்முறை கண்ணன் அடியோடு ஒழிந்தான். கண்ணன் என்ன! யாதவர்களே ஒழிந்தார்கள். ருக்மிணியால் தன் மனத்தின், யோசனையின் பாரம் தாங்க முடியவில்லை. நேரே தன் பாட்டனிடம் சென்று தன் மனதில் உள்ளவை அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். கைசிகன் ஏற்கெனவே வயதானவர். தற்சமயம் அவரால் செய்ய முடிவது எதுவுமில்லை. அவருக்கே கண்ணன் தப்ப முடியும் என்ற நம்பிக்கை வரவில்லை. ருக்மிணிக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. இரவு, பகல் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை. கோவிந்தனின் சிரித்த முகம், மயில் பீலி அசைந்தாட சிரிக்கும் கண்களோடு அவன் பேசுவதும் தான் கண் முன்னே தோன்றுகிறது. அப்புறம் உறங்குவது எங்கனம்? அழுதாள் ருக்மிணி. சில சமயம் சிரித்தாள். தன் முன்னே தோற்றமளித்த கோவிந்தனோடு பேசினாள். அவனைக் கவனமாக எச்சரிக்கையோடு இருக்கச் சொன்னாள். கண்ணீர் விட்டாள். கிட்டத்தட்ட பைத்தியம் போல் நடந்து கொண்டாள் ருக்மிணி.


கார்த்திகை மாத ஆரம்பம். ஆசாரிய ஷ்வேதகேதுவின் முக்கிய சீடர்களான அப்லவனும், ஜாஹ்னுவும் ஷ்வேதகேதுவின் செய்தியை எடுத்துக்கொண்டு குன்டினாபுரம் வந்து சேர்ந்தனர். ஆசாரிய ஷ்வேதகேது இப்போது அவந்தியில் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் இருப்பதாகவும் கைசிக அரசருக்கும், ருக்மிணிக்கும் செய்திகளை அனுப்பி இருப்பதாகவும் கூறினார்கள். ஆவலுடன் கேட்டாள் ருக்மிணி. கண்ணன் யாதவர்களைக் குடும்பங்களோடு அழைத்துக்கொண்டு மேற்கே கடற்கரையோரம் தொலைதூரத்தில் இருக்கும் செளராஷ்டிராவை நோக்கிப் பயணிக்கிறானாம். மதுரா நகரை ஜராசந்தன் கைகளுக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஒப்படைத்துவிட்டு அவன் அனைத்துக்குடிமக்களையும் அழைத்துக்கொண்டு இடம் பெயர்ந்து செல்கிறானாம். மதுராவில் யாதவர்களின் ஒரு சின்னஞ்சிறு குழந்தை கூட இல்லையாம். மதுரா நகரை அதன் விதியின் கரங்களில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறானாம். பல மாதங்களுக்குப் பின்னர் ருக்மிணியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

Thursday, November 24, 2011

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

கண்ணனுக்கு இந்த விசித்திரமான சூழ்நிலை ஆச்சரியத்தைக் கொடுத்தது. தான் உயிரோடு இருக்கையிலேயே தன்னெதிரிலேயே தான் இறந்துவிட்டதற்கு துக்கம் அநுஷ்டிக்கும் தன் சொந்த மக்கள். இவர்கள் மனம் தான் எவ்வளவு துயரத்தில் ஆழ்ந்துள்ளது? தன்னிடம் எவ்வளவு அன்பும், பாசமும் இருந்தால் இந்த அளவுக்கு துயரம் அவர்களைத் தாக்கி இருக்கும்! ஆனால் ஒரு விஷயம். கடைசியாய் தான் அனுப்பி வைத்த செய்தி இளம் யாதவர்களைச் சென்றடைந்துவிட்டது. பலராமனும், உத்தவனும் இளைஞரக்ளின் துணையுடனும், விசுவாசத்துடனும் சரியாகவே அந்த வேலையைச் செய்து முடித்திருப்பார்கள். ஆனால்....... அவர்கள் ருக்மிணியைக் காப்பாற்றச் சென்றிருந்தால்?? தான் இருக்க வேண்டிய இடமும் அதுவன்றோ? கண்ணன் சிந்தனை வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவன் நடையின் வேகமும் அதிகரித்தது. வேக வேகமாய் அடிகளை எடுத்து வைத்துத் தன் தாய், தந்தையர் இருப்பதாய்ச் சொன்ன மாளிகையின் எதிரே வந்து நின்றான்.

வீட்டினுள் பலரும்போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அவர்களில் அனைவரையுமே கண்ணன் நன்கறிவான். அவன் தகப்பனிடம் ஆலோசனை கேட்கவும், உதவிகள் கேட்கவும் வருவார்கள். அனைவருக்கும் வசுதேவரிடம் மாளாத மதிப்பும், விசுவாசமும் உண்டு. எல்லாம் சரி! ஆனால் அம்மா! தேவகி அம்மா! அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? வீட்டினுள்ளே கும்பல் கும்பலாகச் சென்று கொண்டிருந்த மனிதர்கள் பக்கத்திலுள்ள ஒரு கதவின் வழி சென்றதையும் ஒவ்வொரு முறை கதவு திறந்து மூடுகையிலும் வீட்டின் ஒரு பாகமே அங்கு கோயிலாக மாற்றப்பட்டிருப்பதையும், ஏதோ ஓர் சந்நிதி தெரிந்ததையும் கவனித்தான். அதோ! யாரோ ஒரு குண்டான அம்மாள்......ஓ, அது வேறு யாருமில்லை. கம்சாச் சித்திதான். உக்ரசேனத் தாத்தாவின் சொந்த மகளும் சித்தப்பா தேவபாகனை மணந்திருப்பவளும், உத்தவனின் தாயும் ஆவாள். ம்ம்ம்ம்...இவள் தானே ஒரு சமயம் என்னைக் கொல்ல நினைத்தாள்! பாவம்,பாவம் சித்தி கம்சா! மிக மிகப் பாவம். தன் மூன்று பிள்ளைகளில் ப்ருஹத்பாலன் ஒருவனுக்கே அவள் தன் அன்பையும் பாசத்தையும் காட்டி வளர்த்தாள். அவனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராயும் இருந்தாள்.

ம்ம்ம்ம்ம்... ப்ருஹத்பாலன் இப்போது எங்கே போயிருப்பான்?? பலராமனோடு விதர்ப்பா சென்றிருப்பானோ? அல்லது அவன் வழக்கம்போல் பயந்து ஒதுங்கி இருப்பானா? கண்ணன் மெல்லக் கொஞ்சம் நகர்ந்து முன் சென்று உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம், தானும் உள்ளே சென்று அந்தக் கோயிலைக்காண விரும்புவதைத் தெரிவித்தான். தான் அப்போது உள்ளே செல்ல முடியுமா என்றும் கேட்டான். அந்தப் பெண்மணி அவன் செல்லலாம் என்று சொன்னாலும் அப்போது வழிபாடு முடிந்துவிட்டதாயும் தெரிவித்தாள். கண்ணன் தன் கரத்தை உயரே தூக்கி அவளை நமஸ்கரித்துவிட்டு மேலே சென்றான். அவளுக்கோ இந்தத் துறவியை எங்கோ பார்த்திருக்கிறோமே! எங்கே பார்த்திருக்கிறோம் என்ற சந்தேகம். அக்கம்பக்கம் கூட இருந்தவர்களிடம் இது குறித்துக் கேட்டாள். தெரிந்த முகமாய் இருக்கிறதே என யோசித்தாள். இன்னொருவனோ, இம்மாதிரியான துறவிகள் அடிக்கடி துவாரகைக்கு வருவதாய்க் கூறினார்கள். அவர்களில் எவரேனும் இருக்கலாம் என்றும் பேசிக்கொண்டனர்.

உள்ளே சென்ற கண்ணன் அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் தன் தாயை மட்டும் தனியாகச் சந்திக்க விரும்பிக் கதவருகே தயங்கி நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். அடுத்த அறையின் ஒரு கோடியில் ஒரு அழகானமேடையின் மேலே அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனம்காணப்பட்டது. கண்ணனின் இதயமே தொண்டை வழியாக வெளியே வந்துவிடும்போல் அடித்துக்கொண்டது. தன் நெஞ்சத்தை அமுக்கியவண்ணம் கண்ணன் மேலும் கவனித்தான். அந்த சிம்மாசனத்தின் மேலே கண்ணனின் தலைக்கிரீடம், மயில்பீலிகள், அவன் அணியும் மாலைகள் புதிதாய்த் தொடுக்கப்பட்டவை, அவனுடைய ஆபரணங்கள், எல்லாவற்றுக்கும் மேல் அவனுடைய அருமையான சக்கரம், சுதர்சனம் என கோமந்தக மலையில் அவனால் தயாரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட சக்கரம், புண்யாஜனா ராக்ஷஸர்களிடமிருந்து கண்ணன் வெற்றி கொண்டு பெற்ற பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, எல்லாம் வைக்கப்பட்டு, அந்த சிம்மாசனத்தின் எதிரே அவனுடைய சொந்த வில்லான சார்ங்கம், அவனுடைய அருமை தண்டாயுதம், அவன் அதற்கு கெளமோதகி எனப் பெயரிட்டிருந்தான். அனைத்தும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த சிம்மாசனமும் இதில் அலங்கரிக்கப்பட்ட கண்ணனின் சொந்தப் பொருட்களும் அவன் நினைவாக இங்கே போற்றி வணங்கப் படுகின்றன என்பதையும், இந்த சிம்மாசனத்தை அவனுக்கே அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான். அங்கே இருந்த பல பக்தர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது அந்த சிம்மாசனத்தின் அருகே மூன்று அல்லது நான்கு நபர்கள் காணப்பட்டனர். அவன் தாய் தேவகி, உத்தமரான அக்ரூரர், அவனுக்கு தாசியாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரிவக்கரை, ஆகியோரின் குரலை அவனால் அடையாளம் காண முடிந்தது.

"ஹே கிருஷ்ண, கோவிந்த, ஹரே, முராரே
ஹே நாதா, நாராயணா, வாசுதேவா"
மேற்கண்ட பாடலை மூவரும் திரும்பத்திரும்பப் பாடினார்கள். எவ்வளவு நேரம் பாடி இருப்பார்களோ, தெரியாது. தேவகி அம்மாவிற்கு உணர்ச்சிகள் அதிகமாகி கண்ணன் நினைவில் தன் மனபாரம் அதிகமாகி மனம் உடைந்து சுக்குநூறாக ஆகிவிட்டாற்போல் தோன்ற ஓவென அழத்தொடங்கினாள். கிருஷ்ணனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.

"தாயே, நான் வந்துவிட்டேன்!"

Wednesday, November 23, 2011

கண்ணன் இறந்து விட்டானா? துவாரகையில் கலக்கம்!

துவாரகை நகரின் வெளியே கிரிநகர் மலைக்கோட்டையை நோக்கிச் செல்லும் பாதையில் நூற்றுக் கணக்கான குடியிருப்புக்கள் புதியதாய்க் காணப்பட்டன. அவற்றைப் பார்த்ததுமே மதுராவின் யாதவர்களுக்கான புதிய குடியிருப்புகள் தான் அவை எனப் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். அதிலும் அந்த வீடுகளின் வெளியே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களைக் கண்டதுமே புரிந்து கொண்டான் கண்ணன். இவை மதுராவின் பசுக்களே தான். அமைதியாகவும், நிம்மதியாகவும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் அதற்குள்ளாக தங்களுக்கான நிலங்களைப் பங்கிட்டுக்கொண்டு உழுவதற்கும் தொடங்கி விட்டனர். நகரின் வெளியே செல்கையில் கிருஷ்ணன் அங்கே நிலவியிருந்த அசாதாரண அமைதியைக் கண்டு மிகவும் வியப்படைந்தான். அவனைக் கடந்து சென்ற அனைவருமே நடுவயதைத் தாண்டியவர்களாகவும், வயதானவர்களாகவுமே காணப்பட்டனர். இளைஞர்கள் அனைவரும் போருக்குச் சென்றிருக்க வேண்டும்.

சரி, இந்தப் பெண்களுக்கு என்னவாயிற்று? அனைவர் கண்களும் சோகக்கடலில் கண்ணீரில் மிதக்கின்றனவே! அனைவருமே கறுப்பு வண்ண ஆடை அணிந்து ஆபரணங்களை நீக்கிவிட்டுக் காணப்பட்டனர். யாதவர்கள் அனைவருமே ஏதோ பொதுவான துக்கம் ஒன்றை அனுசரிக்கின்றனர். அது என்னவாக இருக்கும்? கிருஷ்ணனால் புரிந்து கொள்ள இயலவில்லை. மெல்ல மெல்ல நகரினுள் சென்று மாளிகைகள் காணப்பட்ட திசையை நோக்கி நடந்தான். பல மாளிகைகளும் கட்டுமான வேலைகள் செய்யப்பட வேண்டிய நிலையில் காணப்பட்டன. சிலவற்றில் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய மாளிகையின் முன்னால் நின்ற கண்ணன் உள்ளே யிருந்து எவரேனும் வருவார்களோ எனக் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் சில ஆண்களும், பெண்களும் ஏதோ புனித தரிசனத்திற்குச் சென்று வந்தாற்போல் பேசிக்கொண்டு அங்கே வந்தனர். ஒரு வயதான பெண்மணி கிருஷ்ணன் நின்று கொண்டிருந்த வீட்டை நோக்கி வந்தாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்திருந்தன. அனைவருமே ஏதோ தாங்க முடியாத் துக்கத்தில் காணப்பட்டனர்.

கிருஷ்ணன் அந்தப் பெண்மணி ஷங்கு என்ற முன்னாள் தளபதியின் மனைவி எனப் புரிந்து கொண்டான். மதுராவின் கோட்டையின் பாதுகாவலனாக இருந்தவனே இந்த ஷங்கு. கண்ணனைப் பலமுறை தன் வீட்டிற்கு அழைத்துத் தன் கைகளால் உணவு படைத்திருக்கிறாள். அவளிடம் கண்ணன், "அம்மா, வசுதேவரின் வீடு எங்கே உள்ளது?" என்று கேட்டான். அவள் கண்ணனையே உற்றுப் பார்த்துவிட்டு, "இளம் துறவியே! அதோ அங்கே தெரிகிறது பார்! இந்தச் சாலையோடு நேரே சென்று வலப்பக்கம் திரும்பினால் வௌச்தேவரின் வீடு வரும். ஆனால் அங்கே இன்று நீ பிக்ஷைக்குச் செல்லாதே; அவர்கள் அனைவருமே மாபெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். உனக்கு வேண்டிய பிக்ஷையை நான் இடுகிறேன். வா." என அழைத்தாள். தன்னுடன் வந்தவர்களையும் உள்ளே அழைத்த வண்ணம் அவர்களில் ஒருவரை உள்ளே வேகமாய்ச் சென்று வந்திருக்கும் துறவிக்கு உணவு படைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு கூறினாள்.

"ஓஓ, தாயே! ஏன் அப்படி? என்னவாயிற்று வசுதேவரின் வீட்டில்? யாரும் இறந்துவிட்டனரா?"

அந்தப் பெண்மணி அங்கேயே உட்கார்ந்த வண்ணம் கண்ணனோடு பேச ஆரம்பித்தவள் துக்கம் தாங்க முடியாமல் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். சற்றே தன்னை சமாளித்துக்கொண்டு, அனைவரின் வீட்டிலும் துக்கம் அனுஷ்டிப்பதாய்க் கண்ணனிடம் கூறினாள். கண்ணனின் ஆச்சரியம் அதிகமானது. யுத்தத்தில் அனைத்து இளைஞர்களும் இறந்துவிட்டனரா என்று கேட்டான் கண்ணன். அவனால் ஊர்க்காரர்களை அனைவராலும் ஒருமித்து அனுசரிக்கப்படும் துக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் பெண்மணி பேச ஆரம்பித்தாள்.

"அனைவருமே ருக்மிணியை விடுவித்து அழைத்துவர விதர்பா சென்றார்கள். எங்கள் கண்ணின் கருமணியான கிருஷ்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணப்பெண் விதர்பாவின் இளவரசி ருக்மிணி. ஆனால் அவன் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான். நாங்கள் அனைவருமே மனம் உடைந்துவிட்டோம். " கஷ்டப்பட்டுத் தன் விம்மலை அடக்கியவண்ணம் அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "கடந்த இரு மாதங்களாக நாங்கள் அனைவரும் எங்கள் கண்ணீர் வற்றும்வரை அழுது தீர்த்துவிட்டோம். இனி எங்கள் கண்களில் கண்ணீரே இல்லை என்னும்படி அழுது முடித்தாயிற்று."

இப்போது கண்ணனுக்கே அழுகை வரும்போல் ஆயிற்று. தான் இறந்துவிட்டதாய் நினைத்து இவள் இவ்வளவு அழுகிறாளே என வருந்தினான். "என்ன ஆயிற்று கண்ணனுக்கு?" கூடியவரையிலும் தன் குரலில் மாற்றத்தைக் காட்டாமல் கேட்டான் கண்ணன். "ஓ, கண்ணனைப் போல் அற்புதமானவர்களே இல்லை; அருமையானவன்; எங்கள் கண்ணின் கருமணி போன்றவன்; எங்கள் பாதுகாவலன், எங்கள் கடவுள், எங்கள் உயிர் அவனே. " சொல்லிக்கொண்டே போனாள் அந்தப் பெண்மணி. "எங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி மதுராவில் இருந்து துவாரகைக்கு அழைத்து வந்தான் கண்ணன். இந்த அற்புதமான பூமியைத் தேடிக் கண்டுபிடித்து எங்களைக் குடி வைத்தான். இவ்வளவும் செய்துவிட்டு அவன் காலயவனன் கைகளில் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்டுவிட்டான். "

அந்தப் பெண்மணியால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் அழுத அழுகையில் மயங்கி விடுவாள் போல் ஆகிவிடக் கூட வந்திருந்த இரு இளம்பெண்களும் தங்கள் புடைவைத் தலைப்பால் விசிறிவிட்டு அவளை ஆச்வாசப்படுத்தினார்கள்.

"ஏதானும் கோயிலில் இருந்து வருகிறீர்களா என்ன?" என்று கேட்டான் கிருஷ்ணன்.

"ஆம்,, நாங்கள் கிருஷ்ணை வணங்கவென்றே ஒரு கோயிலைக் கட்டி இருக்கிறோம்." என்றாள் அந்தப் பெண்மணி. இந்த அசாதாரணமான நன்றியின் உயர்வைக் கண்டு கண்ணன் மனதைப் பிசைந்தது. அவளிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான்.

Thursday, November 17, 2011

சித்தத்திலே சிவம் நாடுவார்!

"நாம் வாழும் விதத்தில் அதைப் பயனுள்ளதாய் ஆக்கலாம் ஐயா! இவ்வுலக வாழ்க்கையைத் துறக்காமலேயே அமைதியை அடையலாம். லக்ஷியத்தை அடையலாம், திருப்தியும் கொள்ளலாம்" கண்ணன் மிகப் பணிவோடு கூறினான். "நான் அவ்வாறே கண்டேன், கண்டிருக்கிறேன்; கண்டு வருகிறேன்." கண்ணன் மேலும் கூறினான். "எப்படி மகனே? எப்படி?" துறவி கேட்டார். "நம்மால் முடிந்த நன்மைகளை அவை சரியான பாதையில் தான் செய்கிறோமா எனத் தெரிந்து கொண்டு செய்தால் போதும்; சில சமயம் அதன் மூலம் புரியாமல் நமக்கு எதிர்ப்பும் வரலாம்; ஆனால் இதுவே நல்வழி எனத் தெரிந்து கொண்டால், தர்மம் இதுவே எனப் புரிந்து கொண்டால் அந்த வழியில் சென்றால் போதுமானது. அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் எதிர்கொள்ளலாம். ஜயிக்கலாம்." கண்ணன் கூறினான்.

"அற்புதம் குழந்தாய்! அற்புதம்! நீ ஓர் அதிசயமான, அற்புதமான இளைஞன். நீ வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து காட்டுகிறாய். அதிலே உயிர்ப்பையும் ஜீவனையும், மனமகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் கண்டு கொள்கிறாய். இந்தக் கோட்பாடும் புதியதாகத் தான் இருக்கிறது. ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. வித்தியாசமானதாயும் உள்ளது."

"ஆம் ஐயா, நான் அப்படி வாழவே பழகிக் கொண்டிருக்கிறேன்; முழு முயற்சிகளும் எடுக்கிறேன்." கண்ணன் கூறினான். அவனுக்கு அங்கிருந்து சென்று தன் கூட்டத்தாரோடு சேர்ந்து கொள்ளும் ஆவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அனைவரும் குஷஸ்தலை சென்றிருப்பார்கள். நாமும் அங்கே செல்லவேண்டும். ஆனால்... ஆனால்....... துறவியின் சீடர்கள் கீழே இறங்கிச் சமவெளிக்குச் சென்று பார்த்துவிட்டுக் காலயவனனின் ஆட்களின் நடமாட்டம் சமவெளிப்பக்கம் அதிகம் இருப்பதாயும் காலயவனன் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குக் கிடைத்துவிட்டதாயும், அதற்குக் காரணமானவனைக் கொல்ல வேண்டி அவர்கள் காத்திருப்பதாயும் கூறுகின்றனரே. இந்தத் துறவியின் சீடர்கள் தினமும் அந்தப் பக்கம் போய்ப் பார்த்துப் புதுப் புதுத் தகவல்களைக் கூறுகின்றனர். ஆகவே செளராஷ்டிரக் கடற்கரைப் பக்கம் இப்போது செல்வது மிகவும் ஆபத்தாக முடியும். என்ன செய்யலாம்?

அவர்களுடைய தத்துவங்களில் இருந்து கண்ணனுக்குப் பல மாறுபாடான கருத்துக்கள் இருந்தன. என்றாலும் அவர்களின் யோக முறையை அவனும் கற்றுக்கொண்டான். சற்றும் நேரத்தை வீணாக்காமல் அவர்களுக்குத் தெரிந்தவைகளை அவனும் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்களைப் போலவே தலையை முண்டனம் செய்துகொண்டு, கையில் திரிசூலம் ஏந்தியவண்ணம், உடல் முழுதும் விபூதிச் சாம்பலைப் பூசிக்கொண்டு மஹாதேவனை நினைத்துக்கொண்டு மணிக்கணக்காய் தியானத்தில் அமர்ந்தான். இப்படிக் கண்ணன் தானாக அந்தச் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டதைக் கண்ட மூத்த துறவி மிகவும் மனம் மகிழ்ந்தார். சில வாரங்கள் இவ்வாறு சென்றன. அந்த மூத்த துறவியும், அவரின் சீடர்களும் பிரபாஸ க்ஷேத்திரத்தில் இருந்த சோமநாதர் ஆலயம் சென்று அங்கே ஶ்ரீ மஹாதேவரின் தரிசனம் காண விரும்பினார்கள். ஆகவே அவர்கள் பயணத்திற்கு ஆயத்தம் செய்தனர். கண்ணனும் தன் விபூதிச் சாம்பல் பூசிய உடலுடனேயே கையில் திரிசூலம் ஏந்திய வண்ணம், "ஹர ஹர மஹாதேவா!" என கோஷமிட்டவண்ணம் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஹிரண்ய நதி கடலுடன் சேரும் சங்கமத்தில் கண்ணன் புனித நீராடிக் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக்கொண்டான். சோமநாத் கோயில் இருக்கும் நகரத்தில் சில நாட்களாக சப்தமில்லாமல் ஒரு கிளர்ச்சி நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கான யாதவத்தலைவர்கள் அங்கு வந்து கப்பல்களில் ஏறிக் கொண்டு தூரத்துத் தீவுகளுக்குச் சென்று ராணுவப் பாசறைகள் அமைத்து வீரர்களுக்கு ராணுவப் பயிற்சியும், ராணுவப் பிரசாரமும் செய்வதாகப் பேசிக் கொண்டனர். கண்ணனுக்குக் குழப்பமாக இருந்தது. குஷஸ்தலை வந்தடைந்ததுமே யாதவத் தலைவர்களுக்கு, அதுவும் இளம் தலைவர்களுக்கு இப்படிச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன? கண்ணனுக்கு உடனே குஷஸ்தலை செல்லவேண்டும் என மனம் துடித்தது. மூத்த துறவியைக் கண்டுத் தண் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு குஷஸ்தலை நோக்கித் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான். இவ்வளவு நாட்களில் குஷஸ்தலையின் பெயர் மாறி துவாரகை என்னும் புதிய பெயரைப் பெற்றிருந்தது.

Wednesday, November 16, 2011

அறநீதி முறை வழுவாமலே எந்த நேரமும் பூமித் தொழில் செய்து!

மறுநாள் காலயவனனின் உடல் கண்டெடுக்கப்பட்டு தக்க மரியாதைகளுடனும், நியமங்களுடனும் கடைசிச் சடங்குகள் செய்யப்பட்டன. கிருஷ்ணன் இந்தத் துறவிகளின் வித்தியாசமான நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அங்கே மூட்டப்பட்டிருந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்த வண்ணம் அவர்கள், "சம்போ மஹாதேவா!" என்னும் மந்திரத்தைப் பல மணிநேரம் உச்சரித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் ஆவல் பொறுக்கமுடியாமல் கிருஷ்ணன் அந்தப் பெரிய துறவியிடம், "குருவே, இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் வசிப்பதன் காரணம் என்னவோ?" என்று கேட்டுவிட்டான்.

அதற்கு அவர், "குழந்தாய், நாங்கள் இங்கே பல வருடங்களாக வசிக்கிறோம்." பழைய விஷயங்களை நினைவு கூரும் குரலில் அவர் தொடர்ந்தார். "ஏன், உன் தந்தை கூடப் பிறந்திருக்க மாட்டார். அதற்கும் முன்னரே நாங்கள் இந்தக் குகைக்கு வசிக்க வந்துவிட்டோம். இவை முசுகுந்தன் என்னும் அரசனின் தங்குமிடமாக இருந்து வந்தன. சத்ய யுகத்தில், இந்திரனுக்காக அவனுக்கு உதவி செய்யவெனப் போரிட்ட ஓர் உயர்ந்த மன்னனாம் அந்த முசுகுந்தன். இந்த குகைகளில் அவன் ஓய்வெடுக்க வந்து தங்குவானாம். இவை முசுகுந்தன் குகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. பல காலமாய் இங்கே தங்குவதால் மக்கள் என்னையும் "முசுகுந்தன்" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்."

"அப்படியா ஐயா, அது சரி, நீங்கள் ஏன் இவ்வளவு தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" கிருஷ்ணன் தொடர்ந்து கேட்டான்.

"மகனே, வாழ்க்கையும், மனிதர்களும் எனக்கு அலுத்துவிட்டனர். எவர்க்கும் பயனில்லாமல் ஒரு வாழ்க்கையை வாழும் இந்த மனிதர்களின் கேவலமான, கொடூரமான நடவடிக்கைகளைக் கண்டு வெறுத்துப் போய்விட்டேன். ஒரு காலத்தில் நான் ஓர் மாபெரும் தலைவனாக இருந்தேன். மனைவி, மக்கள், நண்பர்கள் என அனைவரும் உண்டு. அவர்களை எல்லாம் துறந்துவிட்டேன். அமைதியை நாடி இங்கே வந்துவிட்டேன். இங்கே அமைதி மட்டும் இல்லை; என்ன என்னவோ கிடைத்துவிட்டன." மிகவும் மகிழ்வோடு கூறினார் அந்தத் துறவி.

"குருவே, க்ஷமிக்கவேண்டும். வாழ்க்கை அதிலும் மனிதர்கள் வாழும் இல்வாழ்க்கையைப் பயனற்றது எனக் கூற முடியாது. " மறுத்துக் கூறினாலும் கிருஷ்ணன் குரலில் தெரிந்த விநயம் துறவியைக் கவர்ந்தது. "வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு, முழுமையாக, நல்ல வலுவோடும், ஆற்றலோடும், அழகோடும் அனுபவித்து சந்தோஷமாக வாழ்ந்து காட்டவேண்டும். விதியை மதியால் வெல்லவேண்டும். இது தான் இல்வாழ்க்கையின் உண்மையான தர்மம்." கண்ணன் முடித்தான்.

"மகனே, என் வயதுக்கு வருகையில் நீ வாழ்க்கை எவ்வளவு பயனற்றது! அதிலும் இல்வாழ்க்கையின் துன்பங்களைப் புரிந்து கொள்வாய். ஒருவேளை அப்போதும் நான் உயிரோடு இருந்தேன் எனில் நீ என்னைத் தேடி அலுத்துச் சலித்து வருகையில் நான் உன்னை முழு மனதோடு வரவேற்பேன். துன்பங்களும், துயரங்களும், ஏமாற்றங்களும் நிறைந்த வாழ்க்கையைத் துறப்பதே தர்மம் ஆகும்." துறவி முடித்தார்.

கண்ணன் விடவில்லை. "குருவே, மன்னியுங்கள். என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முற்படுவது அவ்வளவு துயரம்; அதிலிருந்து தப்பிவிடவேண்டும்; என்கிறீர்கள். அதுதான் தர்மம் எனவும் கூறுகிறீர்கள். எனில் படைப்புக்கடவுள் ஏன் தொடர்ந்து தன் தொழிலைச் செய்து வருகிறான்?"

"நீ உன் வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்து வருகிறாய், மகனே?"

"வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன், குருவே. என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அதுவே என் தர்மம். அப்படி வாழ்வது தான் சிறப்பாகவும் தோன்றுகிறது எனக்கு."

துறவி சிரித்தார். அவர் குரல் வறண்டு காணப்பட்டது. எவ்வித உணர்ச்சியையும் காட்டாமலே அவர் கண்ணனிடம் மேலும் பேசினார்:" நீ இன்னும் உன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை, மகனே. நீ போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. உனக்கு எவ்வித அனுபவமும் ஏற்படவும் இல்லை. உலகில் வாழ்வதன் கொடூரத்தை நான் கண்டு அனுபவித்தாற்போல் நீ பார்த்திருக்கவே முடியாது." அவர் மனதினுள் கிருஷ்ணன் மேல் அனுதாபம் ஏற்பட்டது. தவறான வழியில் இந்த இளைஞன் செலுத்தப்படுகிறானே எனப் பரிதாபப்படுபவர் போல் காணப்பட்டார். " உனக்கு அமைதி, சாந்தி, திருப்தி வேண்டுமானால் உலக வாழ்க்கையைத் துறந்துவிடு." என்றார் முடிவாக.

Monday, November 14, 2011

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!

உள்ளே நுழைந்த காலயவனனின் கண்களுக்கு மஞ்சள் பீதாம்பரத்தைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த உருவம் கண்களில் பட்டது. கிருஷ்ணன் தான் அங்கே வந்து படுத்துவிட்டான் என்றே எண்ணிய காலயவனன் தன் இடையில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை வெளியே எடுத்தான். தூங்கிக் கொண்டிருந்த மனிதனிடம் ஒரே ஓட்டமாய் ஓடி அவனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினான். "மோசக்காரா! வஞ்சகா!" கூவினான் காலயவனன். தூங்கிக் கொண்டிருந்த அந்த வயதான மனிதன் மெல்ல எழுந்தான். அவன் ஒரு பக்கத்துத் தோளில் காலயவனனின் கத்தி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவன் தன் கண்களைத் திறந்தான். புருவம் கூட மஞ்சள் நிறமாக மாறிப் போய்க் காணப்பட்டது. அந்த மஞ்சள் நிற அடர்த்தியான புருவங்களின் கீழே காணப்பட்ட அவன் கண்கள் தீச்சுடரைப் போல் ஒளிர்ந்தன. அந்த மனிதனின் வயதுக்குச் சிறிதும் பொருத்தமின்றி அவன் இளைஞனைப் போல் துள்ளி எழுந்தான். காலயவனன் மேல் பாய்ந்தான். கத்தியைப் பிடித்திருந்த அவன் கையைத் தோளோடு சேர்த்து முறுக்கினான். தன் முழு பலத்தோடு அவனைக் குகையின் ஒரு மூலையில் சுவரோடு சேர்த்துத் தள்ளி நசுக்கினான். அங்கே அணையாமல் நீறு பூத்துக் கொண்டிருந்த நெருப்பில் அவனைத்தள்ளி அந்தச்சூட்டில் அவனை அழுத்தினான். சூடுதாங்காமல் காலயவனன் அலற ஆரம்பித்தான்.

காலயவனன் அலறிய அலறலில் குகைக்கு வெளியே இருந்து நான்கு நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஓடோடி வந்தனர். அவர்கள் கைகளில் செம்பாலான கூரிய திரிசூலம் போன்றதொரு ஆயுதம் இருந்தது. அதைக் காலயவனன் மேல் வீசினார்கள். நாலாபக்கமிருந்தும் குறிதவறாமல் பாய்ந்த அந்தத் திரிசூலங்கள் காலயவனன் உடலில் பட்டு ரத்தம் கொப்பளித்தது. அவன் அப்படியே மயக்கமானான். அவன் உடலோ அந்தத் தீயில் பட்டு கருக ஆரம்பித்தது. நெருப்பில் வாட்டப்பட்ட காலயவனனின் நினைவு தப்பிய உடலைச் சற்றும் இரக்கமில்லாமல் மலையின் உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்டான் அந்த வயதானவன். கிருஷ்ணன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அந்த வயதானவனை நமஸ்கரித்தான். அவன் ஒரு துறவி எனக் கிருஷ்ணன் எண்ணியது சரியாக இருக்கும் எனத் தோன்றியது அவனுக்கு. தன்னுடைய பீதாம்பரத்தைக் கிழித்து அந்த வயதானவன் கால்களில் பட்டிருந்த காயத்தைக் கட்டுவதற்கு முனைந்தான் கண்ணன்.

"ஹர ஹர மஹாதேவா!" தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது போல் சொன்ன அந்த வயதானவன் கண்ணனைப் பார்த்து, " நீ யாரப்பா?" என வினவினான். "மாட்சிமை பொருந்திய குருவே, நான் கிருஷ்ண வாசுதேவன்." பதில் சொன்ன கண்ணன் தன் வேலையிலேயே கவனமாக அந்தக் கிழவனின் காயத்தைக் கட்டுவதில் முனைந்தான். "கிருஷ்ண வாசுதேவன்!" மீண்டும் தனக்குள்ளேயே முணுமுணுத்த அந்தக் கிழவன் எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தான். "பத்ரா! பத்ரா!" தன்னுடைய சீடர்களில் ஒருவனை அழைத்தவண்ணம் அவனிடம், "கிருஷ்ண வாசுதேவன்! வாசுதேவன்! எங்கே கேட்டோம் இந்தப் பெயரை? பத்ரா நினைவிருக்கிறதா உனக்கு?" என்று கேட்டான். " மரியாதைக்குரிய குருவே, இரண்டு வருடங்கள் முன்னர் நாம் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் சென்றபோது அங்கே மக்கள் அனைவருமே ஒரு பிரசித்திபெற்ற வீரக் கதாநாயகனைப் பற்றிக் கூறினார்கள்." பத்ரனும் கொஞ்சம் யோசனையோடேயே இருவருடத்துக்கு முன்னர் நடந்ததை நினைவில் கொண்டுவர முயற்சித்தான்.

"அங்கே தான் கேள்விப்பட்டோம். யமப்பட்டணத்துக்கே போய் யமனையே ஜெயித்துவந்தான் கிருஷ்ண வாசுதேவன் என்று கூறினார்கள். அதோடு... அதோடு, அந்தக் கொடூரமான மகத அரசன்! ஆஹா, அவன் பெயர் என்னவோ! மறந்தேன். அவனைக் கூட விரட்டிவிட்டான் என்றார்களே!" பத்ரன் கஷ்டப்பட்டு நினைவு கூர்ந்தான்.

"இதோ பார், நீ ஏன் உன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்று கூறிக்கொள்கிறாய்?" வயதான துறவிக் கிழவன் கண்ணனைப் பார்த்துக் கேட்டான்.

"ஏனெனில் நான் தான் அவன். அவன் தான் நான். நான் ஒரு வீரனுமில்லை; கதாநாயகனுமில்லை. மதுராவின் ஒரு யாதவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் இளைய குமாரன். ஆனால் நீங்கள் கேள்விப்பட்டது என்னவோ உண்மைதான். நான் நாகலோகம் சென்றிருந்தேன். அங்கே தன்னை யமன் என்றும் மரணத்தின் கடவுள் என்றும் அழைத்துக்கொண்டவனை வெற்றி கொண்டிருக்கிறேன். அதோடு மகதத்தின் அரசன் ஜராசந்தனை மகதத்துக்கு ஓட ஓட விரட்டி அடித்தேன்."

"ஆஹா, இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. அந்தக் கொடுங்கோல் அரசன் பெயர் ஜராசந்தன்." கிழவனின் சீடன் கூறினான்.

"இங்கே ஏன் வந்தாய்?" கிழவன் கண்ணனைக் கேட்டான். கண்ணனும் தன் கதையைக் கூறி அனைத்தும் விளக்கித் தான் எவ்வாறு அங்கே வர நேர்ந்தது என்பதையும் கூறினான். அவன் கூறி முடித்ததும் கிழவன் தன் சீடரக்ளைக் கண்ணனுக்குக் குகையில் தங்கத் தேவையான செளகரியங்களைச் செய்து தருமாறு கூறினான். கண்ணன் அன்றிரவு அங்கே தங்கினான்.

Thursday, November 10, 2011

பகைமை முற்றி முதிர்ந்திடுமட்டிலும் பார்த்திருப்பான்!

மிக்க கவனத்தோடு மலைகளின் பாறைகளோ, மரங்களின் முட்களோ குத்திவிடாமல் சென்றான் கண்ணன். சற்றுத் தூரம் போனதும் தன்னைத் தொடர்ந்து வந்தவனின் குதிரை தன் குதிரை படுத்துக்கிடக்கும் இடத்தினருகே நிற்கிறது என அப்போது எழுந்த சப்தங்களை வைத்து ஊகித்துக்கொண்டான். குதிரையின் சப்தம் மட்டுமா?? ஒரு பயங்கரமான குரல் ஆங்காரத்தோடு சாபம் ஒன்றை இடுவதும் காதில் விழுந்தது. ஆஹா! இது வேறு எவரும் இல்லை! காலயவனன் தான்! அவனா நம்மைப் பின் தொடர்ந்திருக்கிறான். இதோ, இது என்ன? இந்தப்பாதையில் யாரோ நடந்து வரும் சப்தம்! அவன் தான் நம்மைத் தொடர்கிறான். அங்கிருந்து வேறேதும் பாதை செல்லவில்லை அல்லவா? கிருஷ்ணன் வேகமாக ஓடினான். தன் உயிரைக்கைகளில் பிடித்துக்கொண்டு ஓடினான் என்று சொல்லலாம்.

மெல்ல மெல்ல சூரியோதயம் ஆகிக் கொண்டிருந்தது. பொன்னிறக் கதிர்கள் காட்டுக்குள்ளே ஊடுருவின. ஆங்காங்கே தங்கக் காசுகளை வாரி இறைத்தாற்போல் வெளிச்சத் துகள்கள். கண்ணன் ஓடுவதை நிறுத்திக்கொண்டு பெருமூச்சுவிட்ட வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னால் வருபவரை இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது. அது காலயவனனே தான்! கண்ணனை அவனும் பார்த்துவிட்டான். கண்ணன் இருக்குமிடம் நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறான். தன்னுடைய உடலின் பாரம் போதாதெனத் தான் சுமந்து கொண்டிருந்த ஆயுதங்கலும் பாரமாக இருந்திருக்கவேண்டும். ஆகையால் பெரும்பாலான ஆயுதங்களைக் களைந்திருந்தான். உடல் கவசம், தலைக்கவசம், நீண்ட கத்தி போன்றவற்றைக் காணவில்ல்லை. இப்போது அவனுடன் போடும் சண்டை அதிகாரத்திற்காகவும், உடல் பலத்தை மட்டும் காட்டியும் தான். மற்றபடி ஆயுதச் சண்டை இல்லை. இந்தச் சண்டையில் காலயவனனை வெல்லவேண்டும்.

கிருஷ்ணன் தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா எனச் சுற்றும் முற்றும் ஆராய்ந்தான். சற்றுத் தொலைவில் ஒரு சிறிய குன்று இருப்பதையும், அதன் உச்சியில் குகைகள் போல் தெரிந்த இடத்திலிருந்து புகை வருவதையும் கண்ட கிருஷ்ணன் அங்கே யாரோ வசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றே வழி. வேறு வழியில்லை என்பதையும் கண்டான். அந்தக்குன்றை நோக்கி வேகமாய் ஓடினான். குன்றின் அடிவாரத்தை அடைந்ததும் திரும்பிப் பார்த்தான். காலயவனன் களைத்துப் போயிருப்பதையும் இப்போது அவன் வேகம் குறைந்திருப்பதையும் கண்டு கொண்டான். குன்றின் மேல் ஏறத் தொடங்கிய கண்ணன் கிட்டத்தட்ட பாதிவழி ஓடினான் என்றே சொல்லலாம். ஒரு வளைவான பாதையும் காணப்பட்டது. அந்தப் பாதையில் சென்றவன் குன்றின் அடிவாரத்தை நோக்கியபோது காலயவனன் மேலே ஏற முயற்சித்ததையும், அப்போது தடையாக இருந்த கடைசி ஆயுதமான கத்தி ஒன்றையும் விட்டெறிந்ததைக் கண்டான். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டான். இப்போது இருவரும் சம பலமுள்ளவர்களாகி விட்டோம்.

ஆஹா, இப்போது யுத்தம் செய்வதெனில் மல்யுத்தம் ஒன்றுதான். ஆனால் இந்தப்பிசாசு மனிதனை நம்ப முடியாது. அவன் இடுப்பில் ஒரு சின்னக் கத்தி வைத்திருப்பானே! ஆகவே கவனமாகவே இருக்க வேண்டும். கண்ணனின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. காதுகளில் ஓவென்ற இரைச்சல் சப்தம்! இப்போது காலயவனன் கண்களில் பட்டால் அவனோடு மல்லுக்கட்ட கண்ணன் உடலில் தெம்பு இல்லை. சற்றாவது ஓய்வெடுக்க வேண்டும். மெல்லமெல்ல மேலே ஏறினான். குன்றின் மேலே உச்சிக்குச் சென்ற கண்ணன் அங்கே ஆறு குகைகள் இருப்பதைக்கண்டான். சிலவற்றின் எதிரே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. கண்ணன் ஓட்டத்தை நிறுத்தி மெல்ல நடக்க ஆரம்பித்தான். திரும்பிப் பார்க்க காலயவனன் குன்றின் மேல் பாதி தூரமே வந்திருப்பதைக் கண்டான். அடிமேல் அடியெடுத்து வைத்து நடுவில் இருந்த குகையை நோக்கிச் சென்றான் கண்ணன். எல்லாவற்றையும் விட அந்தக் குகை பெரிதாக இருந்தது. அதனுள்ளே உற்று நோக்கினான். உள்ளே ஒரு வயதான மனிதன் கிட்டத்தட்ட நிர்வாணமாகக் காட்சி அளித்தான். அவன் தலைமயிர் நீளமாக மஞ்சள் நிறத்தோடு காணப்பட்டது. அதே நிறத்தில் நீண்ட தாடியும் இடுப்பு வரை வந்திருந்தது. அந்த மனிதன் தூங்கிக் கொண்டிருந்தான். குகையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இட்டிருந்த கட்டைகள் கரியாகி விட்டன.. தன் உடலைப் போர்த்திக்கொண்டிருந்த மஞ்சள் நிறச் சால்வையால் அந்த மனிதனுக்குக் கனிவோடு போர்த்திவிட்ட கண்ணன், சப்தமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து குகையின் ஓரத்திலிருந்த ஒரு தனியான இடத்திற்குச் சென்று இருளில் மறைந்து கொண்டான்.

தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குகையின் வாசலில் காலயவனன் வரும் சப்தம் கேட்கிறதா எனக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். நேரம் சென்றது. கண்ணனுக்கு இப்போது மூச்சு ஒழுங்காக வந்தது. இனிமேல் காலயவனன் வந்தால் ஒரு கை பார்த்துவிடலாம். கண்ணன் தயாரானான். அதற்குள்ளாக குகையின் வாசலில் யாரோ ஓட்டமாய் ஓடிவரும் சப்தம் கேட்டது. கண்ணன் குகையின் வாசலை உற்று நோக்கினான். வாசலில் தெரிந்த வெளிச்சம் ஒரு கணம் மறைந்து மறுகணம் வெளிப்பட்டது. யாரோ குகைக்குள்ளாக நுழைந்திருக்கின்றார்கள். அது காலயவனனாய்த் தான் இருக்கும் எனப் புரிந்து கொண்ட கண்ணன் அவனோடு நேருக்கு நேர் மல்யுத்தம் செய்யத் தயாரானான். ஆனால் காலயவனனோ படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனிதனை நோக்கிக் கூச்சலிட்டுக்கொண்டு ஓடினான்.

Wednesday, November 9, 2011

தனி நடுநின்று விதிச் செயல் கண்டு மகிழ்வான்!

இந்த இளைஞனையும், அவன் மலர்ந்த புன்னகை ததும்பும் முகத்தையும், சிரிக்கும் கண்களையும், தலையில் சூடி இருக்கும் மயில் பீலியையும் எல்லாவற்றிற்கும் மேல் அவன் நிறம்..... இப்படி ஒரு கருநீல நிறத்தை இதற்கு முன்னரும் பார்த்ததில்லை; இனிமேலும் பார்க்கப் போவதில்லை. இவற்றை எல்லாம் மறக்க முடியுமா? அந்த இருவரும் உடனே கிருஷ்ணனை அடையாளம் கண்டுகொண்டார்கள். இவன் தான் அந்தக் கூட்டத்தை, மாபெரும் கூட்டத்தை வழிநடத்திச் சென்றான். இவனை அருகில் கண்டாலேயே அந்த மக்கள் உற்சாகப் பெருக்கெடுத்து ஜெயஶ்ரீ கிருஷ்ணா, என்று கோஷித்தனர். அவ்வளவு ஏன்? வெகு நாட்களாக உணவு கிடைக்காமல் பட்டினியாக இருந்த அவர்களுக்கு வேண்டிய உணவு, தானியங்களையும் வழங்கினார்களே! இவனைக் காட்டிக் கொடுப்பதா? நன்றி ஒருபக்கமும், காலயவனனின் கொடுமையை நினைத்து அச்சம் இன்னொரு பக்கமும் வாட்டி வதைத்தது இருவருக்கும். கிருஷ்ணன் அந்த இருவரின் நிலைமையைப் பார்த்தான். அவர்களுடைய தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டான்.

""ஏன் அவர்களைக் கேட்கிறீர்கள்? என்னைப் பற்றிக் கேட்க வேண்டுமானால் என்னிடமே கேட்கலாமா?" காலயவனனைப் பார்த்துக் கூறிய கிருஷ்ணன், மேலும், " ஒரு மாதம் முன்னால் தான் நான் இந்தப் பாதையைக் கடந்து சென்றேன்." என்று நேருக்கு நேரே காலயவனனை விழிகளோடு மோதவிட்டவண்ணம் கூறினான். "ஆஹா, அதுவும் அப்படியா? யார் இருந்தார்கள் உன்னோடு?" கேட்டவண்ணமே காலயவனன் தன் உடைவாளை உருவினான். "மதுராவின் யாதவர்கள்." சற்றும் தயக்கமின்றி பதில் வந்தது கிருஷ்ணனிடமிருந்து. "என்றால் நீ என்னிடம் பொய் சொல்லி இருக்கிறாய்!" காலயவனன் முகம் பயங்கரமாக மாறியது.

"இல்லை; நான் பொய்யெல்லாம் சொல்லவில்லை. மதுரா உனக்காகக் காத்திருக்கிறது. காலியாகத் தன்னந்தனியாகக் காத்திருக்கிறது. காப்பாற்ற எவருமில்லாமல் உன்னால் ஆக்கிரமிக்கப்படவெனக் காத்திருக்கிறது." என்றான் கண்ணன்.

"அப்படி என்றால் யாதவர்கள் நகரை விட்டு நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள்? இல்லையா? வஞ்சகா, சூழ்ச்சிக்காரா!" காலயவனன் தன் வாளை உருவிக்கொண்டு தன் குதிரையைக் கிருஷ்ணன் இருக்கும் பக்கம் செலுத்திய வண்ணம் அவன் மேல் பாயத் தயாரானான். கிருஷ்ணன் இந்த நிமிடத்திற்காகவே காத்திருந்தான். எப்படியாவது இம்மாதிரியான ஒரு தருணம் வரும் எனவே காத்திருந்தான். தன்னிரு கால்களால் குதிரையின் விலாவில் ஓர் அழுத்து அழுத்தினான். அவனுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டாற்போல் அந்தக் குதிரை தன் முன்னிரு கால்களை உயரத் தூக்கிப் பெரிதாகக்கனைத்தது. பின்னர் ஒரு அரை வட்டம் அடித்துச் சுற்றிச் சூழ்ந்திருந்த காவலர்களை லக்ஷியம் செய்யாமல் அந்த வட்டத்தை உடைத்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பாய்ந்தது. கண்ணன் இவ்வளவு நாட்களாக இந்தக் குதிரையைப் பழக்கி வந்ததற்கு அது அவனை ஏமாற்றவில்லை.

காலயவனனும், அவன் ஆட்களும் திகைத்து நின்றனர். காலயவனன் உடனடியாக சுதாரித்துக்கொண்டான். தன் பற்களைக் கடித்தான். ஆத்திரம் அலை மோதியது அவனுக்கு. உடனடியாகத் தான் கிருஷ்ணனைத் தொடரவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கத் தன் குதிரையைக் கிருஷ்ணன் சென்ற திசை நோக்கிச் செலுத்தினான். ஒரு சில காவலாட்களும், வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். கிருஷ்ணனின் மெல்லிய உடலும் ஆயுதங்கள் இல்லாமையும் அவனுக்குப்பல விதத்திலும் உதவி செய்தது. குதிரையால் அவனுடைய பாரத்தைச் சுமக்க கஷ்டப்பட வேண்டி இருக்கவில்லை. அதே அவனுடைய எதிரிகளின் வலுவான புஷ்டியான கட்டுமஸ்தான உடலின் எடையும், பல்வேறுவிதமான ஆயுதங்களின் எடையும் அந்தக் குதிரைகளால் சுமக்க முடியாமல் காணப்பட்டது.

கண்ணனின் குதிரையோ வில்லில் இருந்து கிளம்பிய அம்பைப்போல் நேரே வேகமாய்ச் சென்றது. விரைவில் தன்னைப் பின் தொடர்பவர்களின் பாரவையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. மாலையில் ஒரு ஊற்றின் அருகே கண்ணன் குதிரையை நிறுத்திக் அதற்கு நீர் காட்டினான். பின்னர் குதிரை அவிழ்த்து மேய விட்டு விட்டுத் தானும் ஒரு மரத்தடியில் படுத்துக் கொஞ்சம் ஓய்வு எடுத்தான். சிறிது நேரம் கழித்துக் குதிரையை மீண்டும் சேணம் பூட்டி மெல்ல நடத்திச் சென்றான். இருள் கவ்வ ஆரம்பித்துவிட்டது. கிருஷ்ணன் காதுகளில் சற்றுத் தூரத்தில் குதிரை கனைக்கும் சப்தம் கேட்டது. உற்றுக் கேட்டான். சந்தேகமே இல்லை. இன்னொரு குதிரை முன்னே செல்கிறது அல்லது இந்தப் பக்கமாய் வருகிறது. ம்ம்ம்ம்? பின் தொடர்ந்தவர்களில் எவரோ நம்மைக் கண்டு விட்டார்கள். ம்ம்ம்ம் இல்லை; இல்லை பின் தொடர்கிறது. கண்ணன் தன் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தான். எச்சரிக்கையுடன் மெல்ல மெல்ல நகர்ந்தான். ஆனால் அதே எச்சரிக்கையுடனேயே பின் தொடர்ந்த குதிரையும் வந்து கொண்டிருந்தது.

மெல்ல இரவு கடந்தது; பின் தொடர்ந்த குதிரையும் விடவில்லை. கண்ணனும் பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால் என்ன இது? கண்ணனின் குதிரை திடீரெனக்கால்கள் மடிந்து கீழே வீழ்ந்துவிட்டதே! கண்ணனுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. எந்த நிமிடமும் பின் தொடருபவன் தன்னை வந்து அடைந்துவிடுவான். என்ன செய்யலாம்? சுற்றும்முற்றும் பார்த்தான். புலர்ந்தும் புலராத அந்தக் காலைப் பொழுதிலே அரை இருட்டிலே ஒரு சிறு பாதை தெரிந்தது. அதிலே ஒரு மனிதனோ அல்லது ஆடோ, மாடோ ஓடிக் காட்டுக்குள் ஒளியலாம். தன் குதிரையைப் பச்சாத்தாபத்துடன் திரும்பிப் பார்த்த கண்ணன் வேறு வழியில்லாமல் அந்தப் பாதையோடு செல்லத் தீர்மானித்தான்.

Tuesday, November 8, 2011

இதனிடை நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன!

"சிறுவனே! என்னிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றாயானால் உன்னைத் துண்டுகளாக்கிவிடுவேன்." என்று கடூரமான குரலில் கூறிய காலயவனன் கிருஷ்ணனோடு செல்லத் தயாரானான். இரண்டு நாட்களுக்குக் கண்ணனும் அவன் வழிகாட்டியும் காலயவனனை பாலைவனத்தின் வடக்குப் பக்கமாய் அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து வடகிழக்கே தொடர்ந்து செல்லும் ராஜபாட்டைதான் மதுராவுக்குச் செல்லும் பாதையைச் சென்றடையும் என்றும் கண்ணன் தெரிவித்தான். மூன்றாம் நாள் கண்ணனுக்கு நிம்மதி பிறந்தது; மகிழ்ச்சியும் உண்டாயிற்று. சாத்யகி இதற்குள்ளாக லவனிகா நதியைக் கடந்திருப்பான். ஐந்தாம் நாள் காலயவனனோடு திரும்பவும் அவனுடைய முகாமிற்குத் திரும்பினார்கள். முகாமைக் கலைத்துக்கொண்டு கண்ணன் காட்டிய புதுவழியில் செல்ல ஆயத்தமானார்கள். காலயவனன் பரிவாரங்களின் கடைசியில் நான்கு பக்கமும் ஆயுதம் தாங்கிய வீரர்களால் சூழப்பட்ட கண்ணன் தன் பார்வையிலிருந்து விலகாவண்ணம் தொடர்ந்தான். காலயவனனின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கிருஷ்ணன் எப்படியாவது தப்பிச் செல்ல முயல்வான் என எதிர்பார்த்தான். ஆனால் கண்ணனோ அதற்கான எண்ணமே தன்னிடம் இல்லை என்பது போலவே நடந்து கொண்டான்.

கண்ணனைப் பார்த்தால் காலயவனனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பவன் போல் தெரியவில்லை. வெகு சாதாரணமாக இந்த நிகழ்வும் தன் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதிபோலவே நிதானமாக அத்தனை வேலைகளையும் செய்தான். தன் அநுஷ்டானங்களைக் கைவிடவில்லை; குதிரைக்குத் தீனி போட மறக்கவில்லை. மறக்காமல் உணவு வேளையில் விரும்பியதைக் கேட்டு வாங்கி உண்டான். மிகவும் இயல்பாகவே காணப்பட்டான். சில நாட்களில் பரிவாரங்களோடு காலயவனன் மதுராவுக்குச் செல்லும் முக்கியப் பாதையை வந்தடைந்தது. அந்தப் பாதையைக் கண்ட காலயவனன் அங்கே பெரிய பெரிய அடுப்புக்களை மூட்டிச் சமையல் செய்திருப்பதற்கான அடையாளங்களையும், அப்போது மூட்டின தீ இன்னமும் அணையாமல் இருப்பதையும், சில கால்நடைகள் இறந்திருப்பதையும், வயதான முதியோர்கள் இறந்திருப்பதையும் கண்டான். பிணம் தின்னிக் கழுகுகள் அந்தப் பிணங்களைச் சுற்றி அமர்ந்து தின்று கொண்டிருப்பதையும் கண்டான். ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் அந்தப் பாதையைச் சில நாட்கள் முன்னே கடந்திருக்கிறது. எவரோ? சில இடங்களில் இறந்த உடல்களை எரித்த அடையாளங்கள் கூடக் காணப்படுகிறதே!


காலயவனன் தன் ஆட்களை அனுப்பிப்பக்கத்து ஊர்களில் இருந்து எவரையாவது அழைத்துவரச் செய்தான். அவன் ஆட்கள் சென்று மிகவும் சிரமத்துடன் இரு நபரை அழைத்து வந்தனர். இருவரும் நடுங்கிக் கொண்டிருந்தனர். காலயவனனை நேரில் கண்டதும் இருவருக்கும் உயிரே போய்விட்டது. அவன் கேட்ட கேள்விகளுக்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் சென்றதைத்தான் தாங்கள் கண்டதாகச் சொல்ல முடிந்தது அவர்களால். பல ரதங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், கால்நடைகள் எனக் கடந்து சென்றதாகவும், ஒரு நகரமே பெயர்ந்து சென்றதாய்த் தோன்றியதாகவும் கூறினார்கள். எத்தனை பேர் எனத்தெரியாது எனவும் எவர் என்றும் அவர்களுக்குத் தெரியாது என்றும் கூறினார்கள்.

ஆனாலும் காலயவனனுக்கு சந்தேகம் தீரவே இல்லை. மீண்டும் மீண்டும் உண்மையைக் கூறும்படி அவர்களை வற்புறுத்த அவர்களோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். காலயவனன் தன் தளபதியைப் பார்த்து, "இவர்களை எவ்வாறேனும் உண்மையைச் சொல்ல வை. இல்லை எனில் நாக்குகளைத் துண்டாக்கி அனுப்பு." என்றான். நடுங்கிப் போனார்கள் இருவரும். காலயவனனின் கால்களில் விழுந்தார்கள். "ஐயா, எங்கள் தெய்வமே! அவர்கள் அனைவரும் பெரிய பெரிய பிரபுக்களாகவும், அரசர்களாகவும், மிகுந்த வீரமுள்ளவர்களாகவும், அதே சமயத்தில் பெருஞ்செல்வம் படைத்தவர்களாகவும் இருந்தனர். எனக்கு அவர்களில் எவரையும் தெரியாது. ஆனால் அவர்கள் அடிக்கடி கோஷமிட்ட போது சொன்ன ஒரு பெயரை மட்டும் நன்றாய் நினைவில் இருக்கிறது. அந்தப்பெயரைச் சொல்லி ஜெயகோஷமிட்டனர்." என்று அவர்களில் ஒருவன் சொன்னான்.

"அப்படியா? யார் பெயரைச் சொல்லி கோஷமிட்டனர்?"

"கிருஷ்ண வாசுதேவனுக்கு மங்களம், ஜெய மங்களம்!" என்று கோஷமிட்டனர் ஐயா!" அவர்கள் இருவரும் ஒருமித்த குரலில் கூறினர். கண்ணன் எங்கே எனச் சுற்றுமுற்றும் பார்த்தான் காலயவனன். சற்றுத் தொலைவில் குதிரையின் முதுகில் அமர்ந்த வண்ணம் கண்ணன் காட்சி அளிக்கவே, தன் வீரர்களிடம், "அந்தச் சிறைக்கைதியை இங்கே கொண்டு வாருங்கள்!" என்று கூவினான். அவர்களும் கண்ணனை அழைத்து வந்தனர்.

"நன்றாகப் பாருங்கள்! இவன் தானா அந்த வாசுதேவ கிருஷ்ணன்? இவனைச் சுற்றியா கோஷம் போட்டனர்? இவனும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தானா?" காலயவனன் கேட்டான். அவர்கள் இருவருக்கும் கிருஷ்ணனை மறக்கவே முடியவில்லை. ஒருமுறை பார்த்தால் மறக்கும் முகமா அது?

திகைத்து நின்றனர்.

Saturday, November 5, 2011

இதனுள்ளே பகை மாய்த்திட வல்லன் காண்!

அவ்வளவில் கண்ணன் சாத்யகியிடம் விடைபெற்றுக்கொண்டு தனக்காகக் காத்திருந்த குதிரையில் தாவி ஏறிக்கொண்டு வழிகாட்டியும் உடன்வர கிளம்பிப்போனான். சாத்யகியின் மனம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. நதிக்கரையோடு சென்ற கண்ணன் காலயவனன் தங்கி இருக்கும் பகுதிக்குக் காலை நேரம் வந்தடைந்தான். உடனே காலயவனனுக்கு கர்காசாரியாரின் சீடனும் கிருஷ்ணவாசுதேவனும் ஆகிய தான் மதுராவை ஒப்படைக்க வந்திருப்பதாய்ச் செய்தியும் அனுப்பினான். காலயவனனுக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்ததும் அதிர்ச்சியும் ஆசரியமும் அடைந்தான். என்றாலும் கிருஷ்ணனை அழைத்துவர ஏற்பாடுகள் செய்தான். மிக மிக மோசமான ஒரு மனிதனின் முன்னிலையில் கண்ணன் நின்றான். அவனுடைய பயங்கரமான முகம், பிசாசுகளின் வாயைப் போல் தெரிந்த வாய், உதடுகள், கன்னாபின்னாவென ஒழுங்கு இல்லாமல் வளர்ந்திருந்த தாடி, மீசைகள், அவனுடைய ஆகிருதியான தேகம், முகத்தில் தெரிந்த கொடூரமான புன்னகை எல்லாமே அவன் எவ்வளவு கொடுமைக்காரன் என்பதைச் சொல்லாமல் சொல்லின.

அவனைச்சுற்றிலும் இருந்த காவலர்களுமே பயங்கரத்தோற்றத்தோடேயே காணப்பட்டார்கள். ஒரு சிலர் ஒழுங்காக ஆடை அணியாமலும், ஒரு சிலர் ஆடையே அணியாமலும் காணப்பட்டனர். நீண்ட செப்பு வாளும், தோலினால் ஆன உறைகளில் மூடப்பட்ட் குறுவாள்களும், சிலர் கைகளில் காணப்பட்ட சிறிய அளவிலான கோடரிகளும் அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதை நிரூபித்தது. கண்ணன் அவர்களைப் பார்த்துக் கொண்டே, காலயவனனிடம், "யவனர்கள் தலைவனே, நான் மதுராவிலிருந்து வந்துள்ளேன். நான் கிருஷ்ண வாசுதேவன். வசுதேவர் என்னும் யாதவகுல ஷூரர்களின் தலைவரின் மகன். கர்காசாரியாரின் சீடன். உமக்குக் கூட கர்கர் வித்தைகள் கற்பித்தார் என்பதையும் அறிவேன்." என்றான். கண்ணன் குரலில் மிகுந்த பணிவும் விநயமும் இருந்தது.

ஆனால் காலயவனனோ சீறினான்: "ஓஹோ, நீ தான் அந்த மாட்டிடையனா? கம்சனைக் கொன்றவன் நீதானே? ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனைக் கொல்ல உனக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்க வேண்டும்!"

"ஆம். ஐயா." கண்ணன் நிதானத்தை இழக்காமலேயே பேசினான். "நான் இப்போது யாதவர்கள் அனைவரின் சார்பாகவும் வந்துள்ளேன். மதுராவை நீங்கள் ஆக்கிரமித்துக்கொள்ளலாம் என்பதைட் தெரிவிக்கவே வந்துள்ளேன்." என்றான். கொடூரமான பார்வையைக் கொண்ட காலயவனனின் கண்கள் ஒரு கணம் வெற்றித் திமிரில் பளிச்சிட்டன. "அது இருக்கட்டும். நீ தான் கிருஷ்ணன் இல்லையா? வசுதேவரின் மகன்! மாட்டிடையன்? நான் என் அருமை நண்பன் ஜராசந்தனுக்கு உன்னை என் வெறும் கைகளாலேயே கிழித்துப் போடுவதாக வாக்களித்திருக்கிறேன். அது சரி, நீ ஏன் இப்ப்போது இங்கே வந்தாய்? நீ சொல்லாவிட்டாலும் என் பயணம் என்னவோ மதுராவை நோக்கித்தான்."

"ஐயா, நான் இங்கே இப்போது வந்ததன் காரணமே மதுராவின் மேல் போர் தொடுத்து நீங்கள் அதை அடையவேண்டிய தேவை இல்லை. யாதவர்களே உங்களுக்கு அதைத் தரத் தயாராக இருக்கின்றனர். ஜராசந்தன் இன்னும் மதுராவை வந்து அடையவில்லை. ஆகவே தாங்கள் அவனுக்கு முன்னரே வந்து மதுராவை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். செல்லும் சரியான வழியை நான் கூடவே வந்து உங்களுக்குக் காட்டுகிறேன்."

காலயவனன் தன் வாளை உருவிக்கொண்டே, "அடே, இடையா! உன்னுடைய தந்திரவேலைகளை என்னிடம் காட்ட நினைக்கிறாயா?" என உறுமினான்.

"ஐயா, இது என்ன தாங்கள் கூறுவது? நான் தன்னந்தனியாக அல்லவோ வந்துள்ளேன். நீங்களோ உங்கள் பரிவாரங்களுடன் இருக்கிறீர்கள். நிலவைச் சுற்றிலும் எண்ணிக்கையில்லா நக்ஷத்திரங்கள் காணப்படுவது போல் உங்களைச் சுற்றியும் எண்ணிக்கையில்லா படைவீரர்கள் இருக்கின்றனரே.." என்றான் கண்ணன்.

"உன்னை என்ன செய்யவேண்டும் என்பதை நான் நன்கறிவேன்." காலயவனன் கூறிவிட்டுத் தன் தளபதிகளுடன் கலந்து ஆலோசித்துச் சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவர்களோடு அவன் பேசிய மொழி கிருஷ்ணனுக்குப் புரியவில்லை. ஒரு துணைத்தளபதியின் பொறுப்பில் கண்ணன் ஒப்படைக்கப்பட்டான். மற்றவர்களோடு கலந்து ஆலோசித்த காலயவனன் அன்றைய தினத்தையும் அங்கேயே கழிக்க முடிவெடுத்தான். மறுநாள் கண்ணனை அழைத்து, ஜராசந்தனுக்கு முன்னால் மதுராவைத் தான் அடையவேண்டிய வழிகளைப் பற்றிக் கேட்டான். இன்றைக்கு அவன் குரலில் அவநம்பிக்கை குறைந்து காணப்பட்டது.

"மதுராவைச் சீக்கிரமாக அடையக்கூடிய குறுக்குவழியை நான் காட்டுகிறேன் இந்த லவனிகா நதியின் வடகரையோடு சென்றால் மதுராவை அடைய இருபது நாட்கள் பிடிக்கும். நான் உனக்கு அதைவிடக் குறுக்கு வழியைக் காட்டுகிறேன். அகரவனம் வழியாகச் சென்றால் விரைவில் மதுராவை அடையலாம். ஜராசந்தன் அதன் பின்னர் ஒரு மாதம் கழித்தே மதுராவை அடைய முடியும்." கண்ணன் கூறினான்.

"நீ உண்மைதான் பேசுகிறாய் என்பதை நான் எவ்வாறு நம்புவது?" என்றான் காலயவனன். "என்னுடன் வா. புரிந்து கொள்வாய். என் வழிகாட்டியும், நானும் உங்கள் அனைவருக்கும் வழிகாட்டி அழைத்துச் செல்கிறோம்." என்றான் கண்ணன். "ம்ம்ம்ம்ம்,, நீ மட்டும் தவறான பாதையில் என்னை அழைத்துச் சென்றாயானால் உன்னை உயிரோடு கொளுத்திவிடுவேன்." காலயவனன் குரலின் உறுதி அவன் சொன்னதைச் செய்வான் என்பதைக் காட்டியது.

"ஓ, அது எனக்குத் தெரியாதா? அதோடு எப்படி இருந்தாலும் உன் குறிக்கோள் என்னைக் கொல்வதுதான். நீ அப்படித்தானே சபதம் செய்திருக்கிறாய்? எந்த வழியில் சென்றாலும் என் உயிர் உன் கையில் அல்லவா? அதனால் எனக்கு இது ஒரு பொருட்டல்ல. "

காலயவனன் சத்தம் போட்டு பயங்கரமாகச் சிரித்தான். ஆனாலும் அவனுக்கு உள்ளூர ஆச்சரியம் தான். அவன் முன்னிலையில் நடுங்காதவர்களே கிடையாது. இந்தச் சிறுவனோ இவ்வளவு தைரியமாகப் பேசுகிறானே!