Monday, November 28, 2011

என் மனம் மிக அலை பாயுதே, கண்ணா!

தங்களை மறந்து பஜனையின் ஒன்றிப் போயிருந்த மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. மூவரும் திரும்பிப் பார்க்கத் திரிவக்கரையின் கைகளில் வைத்திருந்த பூஜைப்பொருட்கள் அடங்கிய தாம்பாளம் “கணீர்” என்ற ஓசையோடு கீழே விழுந்து, “டங்ங்ங்ங்ங்” என்ற நாதத்தை எழுப்பிய வண்ணம் சுற்றிச் சுழன்றது. தன் கண்களைத்துடைத்த வண்ணம் ஓடோடி வந்த திரிவக்கரை கண்ணனின் எதிரில் நின்று கொண்டு அவனை உற்றுப்பார்த்துவிட்டு மீண்டும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அப்படியே அவன் கால்களில் விழுந்தாள். “கண்ணா, கண்ணா!” அவளால்ல் மேலே பேச முடியவில்லை. அவளைத்தூக்கக் கண்ணன் முயன்றான்; அதற்குள்ளாக அவன் தாயும், அக்ரூரரும் கண்ணனின் அருகில் வந்தனர். இத்தனை நாட்களில் தேவகி அம்மா இளைத்து உருமாறிப் போயிருந்ததோடு அல்லாமல், மூப்படைந்த மாதிரியும் காணப்பட்டாள். அழுது அழுது கண்கள் சிவந்து வீங்கிக் காணப்பட்டன. தன் கண்களையே நம்பாதவள் போல் கண்களை அகல விரித்துக் கண்ணனையே பார்த்தாள். அன்னையின் அருகே சென்ற கண்ணன், “அம்மா,அம்மா,” என மீண்டும் அழைத்தான். “என் கண்ணா, என் கோவிந்தா, என் கிருஷ்ணா!” தேவகியால் மேலே பேசமுடியாமல் ஆனந்த அதிர்ச்சியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே மயங்கி ஒரு குவியலாகக்கண்ணனின் காலடியில் வீழ்ந்தாள். தன் அன்னையைத் தன் இரு கைகளால் தூக்கிய கிருஷ்ணன், ஒரு குழந்தையைத் தூக்குவது போன்ற அதி தீவிர கவனத்தோடு அவளை எடுத்துக்கொண்டு மாளிகையின் உட்புறம் நுழைந்தான்.
***********************************************************************************************


பல மாதங்கள் பிரிந்த பெற்றோருடன் கண்ணன் பேசிக் களித்து ஆசுவாசம் செய்து கொள்ள விட்டுவிட்டு நாம் இப்போது ருக்மிணியைக் கவனிப்போம். ஆம்; ருக்மிணி என்னவானாள்? அவள் நிலை இப்போது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆகவே வெகு கவனத்தோடு வாருங்கள். இதோ விதர்ப்பா! ருக்மிணியின் கன்னிமாடம். யாரோ சேடிப் பெண் வந்து ருக்மிணியின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்கிறாளே! என்னவாயிருக்கும்?? கொஞ்சம் கிட்டே போய்க் கேட்கலாமா? செய்தி அப்படி ஒன்றும் நல்லதில்லை போலிருக்கிறதே! ஆம்.

ருக்மிணியின் மனம் நொறுங்கும்படியான செய்தி தான் வந்துள்ளது. சக்கரவர்த்தி ஜராசந்தன் மதுராவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறான். மதுராவை நெருங்கிவிடுவான். மதுராவையும் அதன் குடிகளையும் சாம்பலாக்கும்வரை விடப்போவதில்லை என்று சபதம் செய்திருக்கிறானாம். செய்தி கேட்ட ருக்மிணியால் அதன் பாரம் தாங்கவே முடியவில்லை. மயங்கிக் கீழே விழுந்தாள். அதோடு ஜராசந்தன் தன்னுடைய அணியில் இருக்கும் அரசர்களையும், இளவரசர்களையும் இந்த மாபெரும் சாதனையைத் தான் தனியாகவே செய்ய விரும்புவதாயும் யாரும் உதவிக்கு வரவேண்டாம் எனவும் திட்டவட்டமாய்க் கூறிவிட்டான். ருக்மியும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான் . தானும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளலாம் எனக் காத்திருந்தான். ஆனால் ஜராசந்தன் அவனை வரக் கூடாது எனத் திட்டவட்டமாக மறுத்து நிறுத்திவிட்டான். “இம்முறை எந்தக் குழப்பமும், நாடகமும் இருக்காது; இருக்க விட மாட்டேன். நானே தன்னந்தனியாக என்னுடைய பழைய தாக்குதல் முறையைக் கடைப்பிடித்து, கொஞ்சம் கூடக் கருணை காட்டாமல் அந்த யாதவக் கூட்டத்தை ஒரு புழுவை நசுக்குவது போல் நசுக்கிக் காட்டுகிறேன். நான் எவ்வளவு கொடூரமானவன் என்பதை அவர்கள் அப்போது புரிந்து கொள்வார்கள்.” ஜராசந்தனின் எண்ணம் இதுவே.


இதைக் கேட்டதிலிருந்து தடுமாறிய வண்ணம் நாட்களைக் கடத்திய ருக்மிணிக்கு இன்னமும் மோசமான செய்தியும் வந்து சேர்ந்தது. காலயவனனும் ஜராசந்தனோடு கூட்டுச் சேர்ந்துவிட்டானாம். இன்னொரு திசையிலிருந்து கண்ணனைத் தாக்கப் புறப்பட்டுச் செல்கிறானாம். ஆஹா, இந்தக் காலயவனனின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் பற்றியும், கொலைகள் பற்றியும் பலரும் பலவாறு கூறுவரே. இம்முறை கண்ணன் அடியோடு ஒழிந்தான். கண்ணன் என்ன! யாதவர்களே ஒழிந்தார்கள். ருக்மிணியால் தன் மனத்தின், யோசனையின் பாரம் தாங்க முடியவில்லை. நேரே தன் பாட்டனிடம் சென்று தன் மனதில் உள்ளவை அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். கைசிகன் ஏற்கெனவே வயதானவர். தற்சமயம் அவரால் செய்ய முடிவது எதுவுமில்லை. அவருக்கே கண்ணன் தப்ப முடியும் என்ற நம்பிக்கை வரவில்லை. ருக்மிணிக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. இரவு, பகல் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை. கோவிந்தனின் சிரித்த முகம், மயில் பீலி அசைந்தாட சிரிக்கும் கண்களோடு அவன் பேசுவதும் தான் கண் முன்னே தோன்றுகிறது. அப்புறம் உறங்குவது எங்கனம்? அழுதாள் ருக்மிணி. சில சமயம் சிரித்தாள். தன் முன்னே தோற்றமளித்த கோவிந்தனோடு பேசினாள். அவனைக் கவனமாக எச்சரிக்கையோடு இருக்கச் சொன்னாள். கண்ணீர் விட்டாள். கிட்டத்தட்ட பைத்தியம் போல் நடந்து கொண்டாள் ருக்மிணி.


கார்த்திகை மாத ஆரம்பம். ஆசாரிய ஷ்வேதகேதுவின் முக்கிய சீடர்களான அப்லவனும், ஜாஹ்னுவும் ஷ்வேதகேதுவின் செய்தியை எடுத்துக்கொண்டு குன்டினாபுரம் வந்து சேர்ந்தனர். ஆசாரிய ஷ்வேதகேது இப்போது அவந்தியில் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் இருப்பதாகவும் கைசிக அரசருக்கும், ருக்மிணிக்கும் செய்திகளை அனுப்பி இருப்பதாகவும் கூறினார்கள். ஆவலுடன் கேட்டாள் ருக்மிணி. கண்ணன் யாதவர்களைக் குடும்பங்களோடு அழைத்துக்கொண்டு மேற்கே கடற்கரையோரம் தொலைதூரத்தில் இருக்கும் செளராஷ்டிராவை நோக்கிப் பயணிக்கிறானாம். மதுரா நகரை ஜராசந்தன் கைகளுக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஒப்படைத்துவிட்டு அவன் அனைத்துக்குடிமக்களையும் அழைத்துக்கொண்டு இடம் பெயர்ந்து செல்கிறானாம். மதுராவில் யாதவர்களின் ஒரு சின்னஞ்சிறு குழந்தை கூட இல்லையாம். மதுரா நகரை அதன் விதியின் கரங்களில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறானாம். பல மாதங்களுக்குப் பின்னர் ருக்மிணியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

1 comment:

priya.r said...

கண்ணன் திரும்ப வந்ததால் தேவகிக்கு ஆனந்த அதிர்ச்சி

மற்றும் நல்ல செய்தகள் வந்ததால் ருக்மணி புன்னகை

இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது .