Tuesday, November 8, 2011

இதனிடை நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன!

"சிறுவனே! என்னிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றாயானால் உன்னைத் துண்டுகளாக்கிவிடுவேன்." என்று கடூரமான குரலில் கூறிய காலயவனன் கிருஷ்ணனோடு செல்லத் தயாரானான். இரண்டு நாட்களுக்குக் கண்ணனும் அவன் வழிகாட்டியும் காலயவனனை பாலைவனத்தின் வடக்குப் பக்கமாய் அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து வடகிழக்கே தொடர்ந்து செல்லும் ராஜபாட்டைதான் மதுராவுக்குச் செல்லும் பாதையைச் சென்றடையும் என்றும் கண்ணன் தெரிவித்தான். மூன்றாம் நாள் கண்ணனுக்கு நிம்மதி பிறந்தது; மகிழ்ச்சியும் உண்டாயிற்று. சாத்யகி இதற்குள்ளாக லவனிகா நதியைக் கடந்திருப்பான். ஐந்தாம் நாள் காலயவனனோடு திரும்பவும் அவனுடைய முகாமிற்குத் திரும்பினார்கள். முகாமைக் கலைத்துக்கொண்டு கண்ணன் காட்டிய புதுவழியில் செல்ல ஆயத்தமானார்கள். காலயவனன் பரிவாரங்களின் கடைசியில் நான்கு பக்கமும் ஆயுதம் தாங்கிய வீரர்களால் சூழப்பட்ட கண்ணன் தன் பார்வையிலிருந்து விலகாவண்ணம் தொடர்ந்தான். காலயவனனின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கிருஷ்ணன் எப்படியாவது தப்பிச் செல்ல முயல்வான் என எதிர்பார்த்தான். ஆனால் கண்ணனோ அதற்கான எண்ணமே தன்னிடம் இல்லை என்பது போலவே நடந்து கொண்டான்.

கண்ணனைப் பார்த்தால் காலயவனனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பவன் போல் தெரியவில்லை. வெகு சாதாரணமாக இந்த நிகழ்வும் தன் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதிபோலவே நிதானமாக அத்தனை வேலைகளையும் செய்தான். தன் அநுஷ்டானங்களைக் கைவிடவில்லை; குதிரைக்குத் தீனி போட மறக்கவில்லை. மறக்காமல் உணவு வேளையில் விரும்பியதைக் கேட்டு வாங்கி உண்டான். மிகவும் இயல்பாகவே காணப்பட்டான். சில நாட்களில் பரிவாரங்களோடு காலயவனன் மதுராவுக்குச் செல்லும் முக்கியப் பாதையை வந்தடைந்தது. அந்தப் பாதையைக் கண்ட காலயவனன் அங்கே பெரிய பெரிய அடுப்புக்களை மூட்டிச் சமையல் செய்திருப்பதற்கான அடையாளங்களையும், அப்போது மூட்டின தீ இன்னமும் அணையாமல் இருப்பதையும், சில கால்நடைகள் இறந்திருப்பதையும், வயதான முதியோர்கள் இறந்திருப்பதையும் கண்டான். பிணம் தின்னிக் கழுகுகள் அந்தப் பிணங்களைச் சுற்றி அமர்ந்து தின்று கொண்டிருப்பதையும் கண்டான். ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் அந்தப் பாதையைச் சில நாட்கள் முன்னே கடந்திருக்கிறது. எவரோ? சில இடங்களில் இறந்த உடல்களை எரித்த அடையாளங்கள் கூடக் காணப்படுகிறதே!


காலயவனன் தன் ஆட்களை அனுப்பிப்பக்கத்து ஊர்களில் இருந்து எவரையாவது அழைத்துவரச் செய்தான். அவன் ஆட்கள் சென்று மிகவும் சிரமத்துடன் இரு நபரை அழைத்து வந்தனர். இருவரும் நடுங்கிக் கொண்டிருந்தனர். காலயவனனை நேரில் கண்டதும் இருவருக்கும் உயிரே போய்விட்டது. அவன் கேட்ட கேள்விகளுக்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் சென்றதைத்தான் தாங்கள் கண்டதாகச் சொல்ல முடிந்தது அவர்களால். பல ரதங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், கால்நடைகள் எனக் கடந்து சென்றதாகவும், ஒரு நகரமே பெயர்ந்து சென்றதாய்த் தோன்றியதாகவும் கூறினார்கள். எத்தனை பேர் எனத்தெரியாது எனவும் எவர் என்றும் அவர்களுக்குத் தெரியாது என்றும் கூறினார்கள்.

ஆனாலும் காலயவனனுக்கு சந்தேகம் தீரவே இல்லை. மீண்டும் மீண்டும் உண்மையைக் கூறும்படி அவர்களை வற்புறுத்த அவர்களோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். காலயவனன் தன் தளபதியைப் பார்த்து, "இவர்களை எவ்வாறேனும் உண்மையைச் சொல்ல வை. இல்லை எனில் நாக்குகளைத் துண்டாக்கி அனுப்பு." என்றான். நடுங்கிப் போனார்கள் இருவரும். காலயவனனின் கால்களில் விழுந்தார்கள். "ஐயா, எங்கள் தெய்வமே! அவர்கள் அனைவரும் பெரிய பெரிய பிரபுக்களாகவும், அரசர்களாகவும், மிகுந்த வீரமுள்ளவர்களாகவும், அதே சமயத்தில் பெருஞ்செல்வம் படைத்தவர்களாகவும் இருந்தனர். எனக்கு அவர்களில் எவரையும் தெரியாது. ஆனால் அவர்கள் அடிக்கடி கோஷமிட்ட போது சொன்ன ஒரு பெயரை மட்டும் நன்றாய் நினைவில் இருக்கிறது. அந்தப்பெயரைச் சொல்லி ஜெயகோஷமிட்டனர்." என்று அவர்களில் ஒருவன் சொன்னான்.

"அப்படியா? யார் பெயரைச் சொல்லி கோஷமிட்டனர்?"

"கிருஷ்ண வாசுதேவனுக்கு மங்களம், ஜெய மங்களம்!" என்று கோஷமிட்டனர் ஐயா!" அவர்கள் இருவரும் ஒருமித்த குரலில் கூறினர். கண்ணன் எங்கே எனச் சுற்றுமுற்றும் பார்த்தான் காலயவனன். சற்றுத் தொலைவில் குதிரையின் முதுகில் அமர்ந்த வண்ணம் கண்ணன் காட்சி அளிக்கவே, தன் வீரர்களிடம், "அந்தச் சிறைக்கைதியை இங்கே கொண்டு வாருங்கள்!" என்று கூவினான். அவர்களும் கண்ணனை அழைத்து வந்தனர்.

"நன்றாகப் பாருங்கள்! இவன் தானா அந்த வாசுதேவ கிருஷ்ணன்? இவனைச் சுற்றியா கோஷம் போட்டனர்? இவனும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தானா?" காலயவனன் கேட்டான். அவர்கள் இருவருக்கும் கிருஷ்ணனை மறக்கவே முடியவில்லை. ஒருமுறை பார்த்தால் மறக்கும் முகமா அது?

திகைத்து நின்றனர்.

1 comment:

priya.r said...

கதை ரொம்ப சுவாரஸ்யமாக செல்கிறதே!!


கண்ணனின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் ?!