Thursday, November 24, 2011

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

கண்ணனுக்கு இந்த விசித்திரமான சூழ்நிலை ஆச்சரியத்தைக் கொடுத்தது. தான் உயிரோடு இருக்கையிலேயே தன்னெதிரிலேயே தான் இறந்துவிட்டதற்கு துக்கம் அநுஷ்டிக்கும் தன் சொந்த மக்கள். இவர்கள் மனம் தான் எவ்வளவு துயரத்தில் ஆழ்ந்துள்ளது? தன்னிடம் எவ்வளவு அன்பும், பாசமும் இருந்தால் இந்த அளவுக்கு துயரம் அவர்களைத் தாக்கி இருக்கும்! ஆனால் ஒரு விஷயம். கடைசியாய் தான் அனுப்பி வைத்த செய்தி இளம் யாதவர்களைச் சென்றடைந்துவிட்டது. பலராமனும், உத்தவனும் இளைஞரக்ளின் துணையுடனும், விசுவாசத்துடனும் சரியாகவே அந்த வேலையைச் செய்து முடித்திருப்பார்கள். ஆனால்....... அவர்கள் ருக்மிணியைக் காப்பாற்றச் சென்றிருந்தால்?? தான் இருக்க வேண்டிய இடமும் அதுவன்றோ? கண்ணன் சிந்தனை வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவன் நடையின் வேகமும் அதிகரித்தது. வேக வேகமாய் அடிகளை எடுத்து வைத்துத் தன் தாய், தந்தையர் இருப்பதாய்ச் சொன்ன மாளிகையின் எதிரே வந்து நின்றான்.

வீட்டினுள் பலரும்போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அவர்களில் அனைவரையுமே கண்ணன் நன்கறிவான். அவன் தகப்பனிடம் ஆலோசனை கேட்கவும், உதவிகள் கேட்கவும் வருவார்கள். அனைவருக்கும் வசுதேவரிடம் மாளாத மதிப்பும், விசுவாசமும் உண்டு. எல்லாம் சரி! ஆனால் அம்மா! தேவகி அம்மா! அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? வீட்டினுள்ளே கும்பல் கும்பலாகச் சென்று கொண்டிருந்த மனிதர்கள் பக்கத்திலுள்ள ஒரு கதவின் வழி சென்றதையும் ஒவ்வொரு முறை கதவு திறந்து மூடுகையிலும் வீட்டின் ஒரு பாகமே அங்கு கோயிலாக மாற்றப்பட்டிருப்பதையும், ஏதோ ஓர் சந்நிதி தெரிந்ததையும் கவனித்தான். அதோ! யாரோ ஒரு குண்டான அம்மாள்......ஓ, அது வேறு யாருமில்லை. கம்சாச் சித்திதான். உக்ரசேனத் தாத்தாவின் சொந்த மகளும் சித்தப்பா தேவபாகனை மணந்திருப்பவளும், உத்தவனின் தாயும் ஆவாள். ம்ம்ம்ம்...இவள் தானே ஒரு சமயம் என்னைக் கொல்ல நினைத்தாள்! பாவம்,பாவம் சித்தி கம்சா! மிக மிகப் பாவம். தன் மூன்று பிள்ளைகளில் ப்ருஹத்பாலன் ஒருவனுக்கே அவள் தன் அன்பையும் பாசத்தையும் காட்டி வளர்த்தாள். அவனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராயும் இருந்தாள்.

ம்ம்ம்ம்ம்... ப்ருஹத்பாலன் இப்போது எங்கே போயிருப்பான்?? பலராமனோடு விதர்ப்பா சென்றிருப்பானோ? அல்லது அவன் வழக்கம்போல் பயந்து ஒதுங்கி இருப்பானா? கண்ணன் மெல்லக் கொஞ்சம் நகர்ந்து முன் சென்று உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம், தானும் உள்ளே சென்று அந்தக் கோயிலைக்காண விரும்புவதைத் தெரிவித்தான். தான் அப்போது உள்ளே செல்ல முடியுமா என்றும் கேட்டான். அந்தப் பெண்மணி அவன் செல்லலாம் என்று சொன்னாலும் அப்போது வழிபாடு முடிந்துவிட்டதாயும் தெரிவித்தாள். கண்ணன் தன் கரத்தை உயரே தூக்கி அவளை நமஸ்கரித்துவிட்டு மேலே சென்றான். அவளுக்கோ இந்தத் துறவியை எங்கோ பார்த்திருக்கிறோமே! எங்கே பார்த்திருக்கிறோம் என்ற சந்தேகம். அக்கம்பக்கம் கூட இருந்தவர்களிடம் இது குறித்துக் கேட்டாள். தெரிந்த முகமாய் இருக்கிறதே என யோசித்தாள். இன்னொருவனோ, இம்மாதிரியான துறவிகள் அடிக்கடி துவாரகைக்கு வருவதாய்க் கூறினார்கள். அவர்களில் எவரேனும் இருக்கலாம் என்றும் பேசிக்கொண்டனர்.

உள்ளே சென்ற கண்ணன் அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் தன் தாயை மட்டும் தனியாகச் சந்திக்க விரும்பிக் கதவருகே தயங்கி நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். அடுத்த அறையின் ஒரு கோடியில் ஒரு அழகானமேடையின் மேலே அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனம்காணப்பட்டது. கண்ணனின் இதயமே தொண்டை வழியாக வெளியே வந்துவிடும்போல் அடித்துக்கொண்டது. தன் நெஞ்சத்தை அமுக்கியவண்ணம் கண்ணன் மேலும் கவனித்தான். அந்த சிம்மாசனத்தின் மேலே கண்ணனின் தலைக்கிரீடம், மயில்பீலிகள், அவன் அணியும் மாலைகள் புதிதாய்த் தொடுக்கப்பட்டவை, அவனுடைய ஆபரணங்கள், எல்லாவற்றுக்கும் மேல் அவனுடைய அருமையான சக்கரம், சுதர்சனம் என கோமந்தக மலையில் அவனால் தயாரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட சக்கரம், புண்யாஜனா ராக்ஷஸர்களிடமிருந்து கண்ணன் வெற்றி கொண்டு பெற்ற பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, எல்லாம் வைக்கப்பட்டு, அந்த சிம்மாசனத்தின் எதிரே அவனுடைய சொந்த வில்லான சார்ங்கம், அவனுடைய அருமை தண்டாயுதம், அவன் அதற்கு கெளமோதகி எனப் பெயரிட்டிருந்தான். அனைத்தும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த சிம்மாசனமும் இதில் அலங்கரிக்கப்பட்ட கண்ணனின் சொந்தப் பொருட்களும் அவன் நினைவாக இங்கே போற்றி வணங்கப் படுகின்றன என்பதையும், இந்த சிம்மாசனத்தை அவனுக்கே அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான். அங்கே இருந்த பல பக்தர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது அந்த சிம்மாசனத்தின் அருகே மூன்று அல்லது நான்கு நபர்கள் காணப்பட்டனர். அவன் தாய் தேவகி, உத்தமரான அக்ரூரர், அவனுக்கு தாசியாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரிவக்கரை, ஆகியோரின் குரலை அவனால் அடையாளம் காண முடிந்தது.

"ஹே கிருஷ்ண, கோவிந்த, ஹரே, முராரே
ஹே நாதா, நாராயணா, வாசுதேவா"
மேற்கண்ட பாடலை மூவரும் திரும்பத்திரும்பப் பாடினார்கள். எவ்வளவு நேரம் பாடி இருப்பார்களோ, தெரியாது. தேவகி அம்மாவிற்கு உணர்ச்சிகள் அதிகமாகி கண்ணன் நினைவில் தன் மனபாரம் அதிகமாகி மனம் உடைந்து சுக்குநூறாக ஆகிவிட்டாற்போல் தோன்ற ஓவென அழத்தொடங்கினாள். கிருஷ்ணனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.

"தாயே, நான் வந்துவிட்டேன்!"

No comments: