Tuesday, November 29, 2011

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ! காற்றில் கரைவேனோ!

ஆனாலும் ருக்மிணியின் மனம் அலை பாய்ந்தது. யாதவர்கள் அனைவரும் காடுகளையும், மலைகளையும், பாலைவனத்தையும், நதிகளையும் கடந்து செளராஷ்டிரக் கடற்கரைக்குச் சென்றிருப்பார்களா? கிருஷ்ணன்? அவனுக்கு என்னவாகி இருக்கும்? பத்திரமாகத் தானிருப்பான். ம்ம்ம்ம்?? அல்லது வழியில் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ? கார்த்திகை மாதம் போய் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாசமும் வந்துவிட்டது. ஆனால் கண்ணனைக் குறித்தோ யாதவர்களைக்குறித்தோ தகவல்கள் எதுவும் வரவில்லை. பெளஷ மாசம் என்றழைக்கப்படும் தை மாசமும் பிறந்துவிட்டது. ஒன்றுமே தெரியாமல் இருந்தது. தை மாத நடுவில் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அதைக் கேட்டதும் ஏன் செய்தி வந்தது என ஆகிவிட்டது ருக்மிணிக்கு. மனமும் உடலும் பதறித் துடித்தது. ஆனால் அப்போதும் கொஞ்சம் ஆறுதலான செய்தியாகவும் இருந்தது. ஜராசந்தன் காலியாக இருந்த மதுரா நகரைக் கண்டதும் ஆத்திரம் தாங்க முடியாமல் நகரைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டானாம். நகரமே எரிந்து சாம்பலாகி விட்டதாம். போகட்டும்; நல்லவேளையாக யாதவர்கள் எவரும் இல்லை. அவர்களைப் பற்றிய எந்தச் செய்தியும் கிட்டவும் இல்லை. செய்தி இல்லாததும் நன்மைதான். ஒன்றும் வரவில்லை எனில் எல்லாரும் க்ஷேமம் எனத் தானே அர்த்தம். ருக்மிணி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

எதிர்பார்ப்பு, அதனால் விளந்த ஏமாற்றம், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஊசலாடும் மனம் என ருக்மிணி படாத பாடு பட்டாள். சுவ்ரதா முன்போல் இப்போது நட்போடு பழகுவதில்லை. ருக்மிணிக்குச் சுயம்வரம் நடக்கப் போகிறது என்ற போது அவள் ருக்மிணிக்கு உறுதுணையாக இருந்தாள். ஏனெனில் அந்தச் சுயம்வரம் நடந்திருந்தால் ஜராசந்தனின் பேத்தியை ருக்மி திருமணம் செய்து கொண்டு அவளுக்குப் பிறக்கும் மகனைத் தன் அடுத்த பட்டத்துக்கு வாரிசாக நியமித்திருப்பான் இப்போதோ சுயம்வரமே நடக்கவில்லை; அதோடு ஜராசந்தனும் முன்னைப் போல் இப்போது ருக்மிக்குத் தன் பேத்தியைக் கல்யாணம் செய்து கொடுக்கும் ஆர்வத்தோடு இல்லை. ஆகவே ருக்மிணியின் துணை அவளுக்கு இப்போது தேவையில்லை. இப்போது அவள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். எப்பாடுபட்டாவது ருக்மியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி ருக்மிணியோடு பேச்சு, வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருப்பதே! சற்றும் தயக்கமின்றி ருக்மிணியோடான தன் உறவை முறித்துக்கொண்டுவிட்டாள் சுவ்ரதா.

பாட்டனார் கைசிகனைப் பற்றிக்கேட்கவே வேண்டாம். அவருக்குக் கிருஷ்ணன் மேல் இருந்த நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அவரே தன்னிரக்கத்திலும், சுய பச்சாத்தாபத்திலும் வெந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்மிணிக்கு ஆறுதல் சொல்வது எவ்வாறு! கிருஷ்ணன் வரவும் மாட்டான்; ருக்மிணியைக் காப்பாற்றவும் மாட்டான். அதெல்லாம் நடவாத காரியம். தன்னந்தனியாக வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ருக்மிணியின் வேதனையை அதிகரிக்கும் வண்ணம் சக்கரவர்த்தி ஜராசந்தன் ஒரு செய்தியை அனுப்பி இருந்தான். எப்பாடு பட்டேனும் ருக்மிணியின் சுயம்வரம் நடந்தே தீர வேண்டும். சிசுபாலன் தான் மாப்பிள்ளை; வேறு எவரும் இல்லை. வைசாக மாதத்தின் (நமக்கெல்லாம் சித்திரை) பெளர்ணமியும் அக்ஷய த்ரிதியையும் ஆன சுபநாள் அன்று இந்தச் சுயம்வரம் நடந்தே தீர வேண்டும். அதோடு இல்லாமல் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட வேண்டிய நபர்களை ஜராசந்தன் பட்டியலிட்டு அனுப்பி இருந்தான். அவர்களுக்கு மட்டுமே உடனடியாக அழைப்பு அனுப்பப்படவேண்டும். மதுராவின் சர்வநாசத்தை நிச்சயமாகக் கண் குளிரப் பார்த்துவிட்டு மகதம் திரும்பும் முன்னர் ஜராசந்தன் ருக்மிணிக்கும், சிசுபாலனுக்கும் நடைபெறப் போகும் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக இரு தரப்புப் பெற்றோரின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொள்வான்.

இதே போன்ற செய்தி; சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும் என்ற குறிப்போடு சேதி நாட்டரசன் ஆன தாம கோஷனுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. பீஷ்மகனைச் சந்தித்து செய்தியைக் கொடுக்க வந்திருந்த தூதுவன் அதை நிச்சயம் செய்தான். ஜராசந்தன் தன்னுடைய கட்டளைகள் இறுதியானவை என்று தெரிவித்துவிட்டான். வேறு தப்பிக்கும் வழியோ, வேறு ஆலோசனைகளோ பீஷ்மகனுக்கோ, தாமகோஷனுக்கோ இருக்கக்கூடாது என்பதையும் மறைமுகமாய்ச் சுட்டி இருந்தான். இந்தச் செய்தியை அரசவையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு சேடிப் பெண் ருக்மிணிக்கு வந்து சொன்னாள். தன் தலையில் அடித்துக்கொண்டாள் ருக்மிணி. தன் உதடுகளை ரத்தம் வரும்வரை அழுந்தக் கடித்துக்கொண்டாள். எதிர்காலமே சூன்யமாய்த் தெரிந்தது அவளுக்கு. நம்பிக்கையின் ஒரு சிறு கீற்றுக் கூடக் காணமுடியவில்லை. யாதவர்களைக்குறித்தோ, கண்ணனைக் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. கண்ணன் வந்து என்னைக் காப்பானா? ருக்மிணியின் மனதில் நம்பிக்கை என்பதே இல்லை. மரணம்! ஆம் , எனக்கு மரணம் ஒன்றே நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..ஆனால்… அந்த கோவிந்தன் அதிசயங்களை நிகழ்த்துபவனே! அனைவரும் கூறுகின்றனர். அவன் ஒரு கடவுள் எனவும் சொல்கின்றனர். இதைக் கேட்டுக் கேட்டு ருக்மிணியும் கண்ணனைக் கடவுள் என்றே நம்பத் தொடங்கி விட்டாள். யாருக்குத் தெரியும்! கடைசி நிமிடத்தில் கூடக் கண்ணன் திடீரெனத் தோன்றி அவளைக் காக்க முடியும். ருக்மிணிக்கு ஒரு கணம் மனதில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த கணம் உள்ள நிலையை உள்ளபடி உணர்ந்து கொண்டிருக்கும் புத்திசாலிப் பெண்ணான அவளுக்குத் தான் காண்பது கனவு என்றும் முட்டாள் தனமாகச் சிந்திக்கிறோம் என்பதும் புரிந்தது. செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கிப் பயணித்த யாதவர்களுக்கு என்ன ஆனது என்பது யாருமே அறியாத ஒன்றாக இருந்தது. அதுவும் என்னவோ தொலைதூரத்தில் உலகத்தின் இன்னொரு கோடியில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது! யோசித்த ருக்மிணி ஜாஹ்னு மூலம் கண்ணனுக்குச் செய்தியை அனுப்ப நினைத்தாள். அவன் ஆசாரிய ஷ்வேதகேதுவிடம் அதைச் சமர்ப்பிக்கட்டும். அவர் எப்படியேனும் கண்ணன் பார்வைக்குக் கொண்டு சென்றுவிடுவார். தன் மனதைக் கொட்டி எழுத ஆரம்பித்தாள் ருக்மிணி.

“யாதவர்களுக்குக் கடவுளானவனும், மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணனுக்கு,

குண்டினாபுரத்தின் இளவரசி ருக்மிணி, தலை வணங்கி நமஸ்கரித்து எழுதும் மடல்.”

1 comment:

priya.r said...

ஆனாலும் ருக்மிணியின் மனம் அலை பாய்ந்தது.//

சென்ற பதிவின் தலைப்பு "என் மனம் மிக அலை பாயுதே, கண்ணா!" இங்கே முதல் வரியாக வருகிறதே !

மற்றபடி ருக்மணியின் மனம் படும் பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது !