Tuesday, March 26, 2013

கண்ணனின் யோசனையும் துருபதனின் கவலையும்!


மறுநாள் துருபதன் தன் குடும்பத்து சோகத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்.  கிருஷ்ணனை அழைத்துத் தன் மகளுடன் சந்தித்துப் பேசிய பின்னர் அவன் என்ன முடிவுக்கு வந்தான் எனக் கேட்டான்.  கண்ணன், மன்னனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா, தங்கள் அழகிய மகளைச் சந்தித்துப் பேசினேன்.  நீங்கள் சம்மதித்தால், உங்களுக்கு உதவத் தயாராக இருப்பதாய் அவளிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன்.” என்றான்.

துருபதனின் முகம் மலர்ந்தது.  “வாசுதேவா, நான் நினைத்தேன்.  திரெளபதியைச் சந்தித்த பின்னர் நீ அவள் பேச்சைத் தட்ட முடியாமல் எங்கள் உதவிக்கு வருவாய் என எதிர்பார்த்தேன். அற்புதமான பெண் அவள். என் மகளாய்க் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்!”

“மன்னா, நான் ஒளிவு, மறைவின்றிப் பேசி விடுகிறேன்.  சற்றுப் பொறுமையாய்க் கேளுங்கள்.  உங்கள் சபதம் நிறைவேற எவ்விதத்தில் உதவ வேண்டுமோ அதற்கெல்லாம் நான் தயாராகவே இருக்கிறேன்.  என்னை உங்கள் நண்பனாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் பக்கமே எப்போதும், என்றும் துணை நிற்பேன் என வாக்கும் கொடுக்கிறேன்.  ஆனால், மன்னரே, தயவு செய்து இந்தத் திருமணப் பேச்சை மட்டும் விட்டுவிடுங்கள்.  எனக்கு திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை.”

“ஏன் வாசுதேவா ஏன்?  என் மகள் அதற்குத் தகுதியுடையவள் இல்லையா?  அவளும் சம்மதிக்கிறாள் அல்லவா?  நீ எங்கள் பக்கம் நின்று எங்களுக்கு உதவச் சம்மதித்தால் அவளை மணக்கத் தடை என்னவோ?” துருபதன் முகம் வாடியது.

“ஓஹோ, மன்னரே, உங்கள் மகளை நான் குறை கூறவில்லை.  அவளுக்குத் தகுதி இல்லை என்றும் சொல்லவில்லை.  இந்த ஆர்யவர்த்தத்தின் இளவரசிகளில் அவள் ஒரு ரத்தினம்.  இவளைப் போன்ற இளவரசிகள் இந்த ஆர்ய வர்த்தம் மட்டுமின்றி இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதும் கிடைப்பது அரிது.  அவள் விரும்பினால் எந்த நாட்டு இளவரசனையும் மணக்கலாம்.  ஆனால் மன்னரே, அந்த இளவரசனும் அவளை மணக்கச் சம்மதிக்க வேண்டும் அல்லவா?”  கண்ணனின் புன்னகை புதிராக இருந்தது.

“ம்ம்ம்ம், அப்போது நீ அவளை உன் மனைவியாக ஏற்கத் தயாராக இல்லை? அல்லவா?”துருபதனின் கேள்வியில் அவன் வருத்தம் தெரிந்தது.  தன் மகளைக் குறித்து அவன் கொண்டிருந்த கர்வம் பங்கமடைந்து போனது போல் மனம் வருந்திக் காணப்பட்டான்.  “என்னைத் தவறாய் நினைக்க வேண்டாம், பிரபுவே..  எந்த வீரனையும் கல்யாணம் செய்து கொண்டு போவதற்கு அவள் ஒரு சாதாரணப் பெண்ணல்ல!  அதை நானும் அநுமதிக்க மாட்டேன்.  அவளே தன் மனப்போக்குப் படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாள்.ன்  இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு வீரனை மணக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாள். அதற்குத் தான் நாம் உதவ வேண்டும்.  நான் என்னாலான உதவி செய்து அவள் விரும்பிய வண்ணமே தக்கதொரு சுத்த வீரனை மணக்க உதவப் போகிறேன்.”

கண்ணன் ஏதேதோ பேசித் தன்னை ஏமாற்ற முயல்கிறானோ என்ற சந்தேகம் துருபதனுக்கு வந்துவிட்டது.  புருவங்களை நெரித்துக் கொண்டு, “பின் நீ அவளை மணக்க மறுக்கிறாய்?  அப்போது உன் உதவியும் எங்களுக்குக் கிட்டாதல்லவா?”  என்றான்.   “இல்லை, மன்னா, நான் எப்போதுமே உங்கள் பக்கம் தான் இருப்பேன்.  உங்களுக்கு என் பூரண ஒத்துழைப்புக் கிட்டும்.  உங்கள் மகள் எவரை மணந்தாலும் அதற்காக நான் மாற மாட்டேன்.”

“அப்படியா, வாசுதேவா, ஜராசந்தனின் பேரனை அவள் மணந்தாலுமா?” துருபதன் இகழ்ச்சியுடன் கேட்டான்.

“மன்னரே, நீங்கள் தான் அதைக் குறித்து முடிவு செய்ய வேண்டியவர்.  ஆனால் உங்கள் இடத்தில் நான் இருந்தால், “  சற்றே தயங்கிய கண்ணன், மேலே தொடர்ந்தான்;  “உங்கள் இடத்தில் நான் இருந்தால், என்னுடைய பழிவாங்கும் எண்ணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, அவளுடைய முழுத் தகுதிக்கு ஏற்றதொரு நல்ல இளவரசனைத் தேர்ந்தெடுப்பேன். “

துருபதன் மனம் கண்ணன் கூறியவற்றில் லயிக்கவில்லை.  இந்த வேறுபாடுகளைக் குறித்து யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.  “அவள் உன்னை மணக்க ஆசைப்பட்டால் என்ன செய்வது வாசுதேவா?” என மீண்டும் வினவினான்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே, அவள் தன் மனதை எப்படிப் பக்குவம் செய்து உறுதி கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?  துரோணரையும் அவருடைய சீடர்களையும் யுத்தத்தில் தோற்கடித்துச் சரணடைய வைக்கும் வல்லமை கொண்டதொரு வீரனைத் தான் மணக்கவேண்டும் என்ற உறுதி கொண்டிருக்கிறாள்.  அவளுக்கு அப்படி ஒரு மணமகன் தான் தேவை.  வேறு எவருடனும் அவள் சந்தோஷமாக இருக்க மாட்டாள்.”

“அது உண்மைதான்!” என ஒத்துக் கொண்டான் துருபதன்.  கண்ணன் தன் ஆலோசனையைச் சொல்ல ஆரம்பித்தான்.  “பின்னர் அவளுக்குத் தன் மணமகனைத் தேர்ந்தெடுக்க நீங்கள் ஏன் ஒரு சுயம்வரம் நடத்தக்கூடாது?”

Sunday, March 24, 2013

கண்ணனின் தீவிர சிந்தனை!


கண்ணன் கண் முன்னே பாஞ்சால நாட்டு அரசன் துருபதனின் குடும்பம் விரிந்தது.  எத்தனை அழகான காட்சி!  இந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பினாலும், பாசத்தினாலும் பிணைந்து இருக்கின்றனர்.  ஆனால் இந்த ஷிகன்டின் மட்டுமே தனித்துத் தெரிகிறானே?  அதோ பாஞ்சால மன்னன் சிம்மாசனத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கையில் அவன் காலடியில் அவன் முழங்காலில் கைகளைப் பதித்த வண்ணம் திரெளபதி.  தகப்பன் அருகே அவனுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல் த்ருஷ்டத்யும்னன் காணப்பட, சத்யஜித்தோ இனம் தெரியா வருத்தம் முகத்தில் துலங்கச் செய்வதறியாது தவிக்கும் தகப்பனை ஆதுரத்துடன் பார்த்தபடியே நிற்கிறான்.  இவர்கள் அனைவரும் பாசம் என்னும் மெல்லிய கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆச்சரியமான குடும்பம்!

ஷிகன்டின் இந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவன்.  எவராலும் அவனை அடக்க இயலவில்லை.  மிகவும் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குலத்தில் பிறந்தாலும் அதோடு ஒட்டவில்லை.  கிருஷ்ணன் இதை நினைத்து ஆச்சரியம் கொண்டாலும் இன்னொரு பக்கம் அவனுக்கு வருத்தமாகவும் இருந்தது.  அவனுடைய இந்த திடீர் மறைவு குடும்பத்தினருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் அதே சமயம் பல பிரச்னைகளுக்கும் பதில் சொல்ல இயலாத நிலையில் இருந்த துருபதனுக்கு ஒரு வகையில் நிம்மதியையும் கொடுத்திருக்குமோ?   கிருஷ்ணன் மனதில் இந்தக் குடும்பத்தின் மீது இரக்கம் சுரந்தது.  அவர்கள் அனைவரின் மனதிலும் வெறுப்பின் விளைவாக விளைந்த கோபமும், பழிவாங்கும் எண்ணமும் நிரம்பி இருந்தது தான்.  ஆனாலும் இத்தகைய பெரிய பாரம்பரியம் கொண்ட அரச குடும்பத்தினரிடம் அரிதாகவே காணப்படும் பெருந்தன்மையும்,  உயர் பண்புகளும் இவர்களிடம் அபரிமிதமாகவே காணக் கிடைக்கிறது.  இதை நினைத்துக் கண்ணனுக்கு  உவகையும், ஆச்சரியமும் ஏக காலத்தில் தோன்றியது.  திரெளபதியுடன் தனக்கு நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தான் கண்ணன்.  அதன் காரணமாகவே இப்போது அவன் முக்கியமான முடிவுகள் எடுத்தாக வேண்டும்.

இங்கே இப்போது இருக்கும் நிலைமை மிக மோசமாகக் காண்கிறது.  எந்த நேரத்திலும் நிலைமை முற்றி அதன் மூலம் கலகம் என்னும் பெருந்தீ உருவாகலாம்.  மனக்கசப்பு என்னும் உணர்வால் துருபதன் மனமும், அவன் பெண், பிள்ளைகள் மனங்களும் நிரம்பி வழிகின்றன.  பெருமையும், அகங்காரமும், கர்வமும், பேராசையும்  கொண்ட துரோணரை இவர்கள் ஒருக்காலும் தங்கள் நண்பராக ஏற்கப் போவதில்லை.

இதே வெறுப்பும், பேராசையும் தான் துரியோதனனையும், அவன் சகோதரர்களையும், நண்பர்களையும் பீடித்திருக்கிறது.  பாண்டவர்கள் மேல் வெறுப்பு, கோபம், பொறாமை. இந்த வெறுப்பும், கோபமும் பாண்டவர்கள் மேல் மட்டுமில்லாமல் பாண்டவர்களுக்கு ஆதரவாக யார் நின்றாலும், கெளரவர்களின் வழியில் குறுக்கே வருவதாகவே நினைத்து இன்னும் கோபம் கொள்கின்றனர்.  துரியோதனன் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்குகிறான்.  அவனே ஒரு பிரச்னை தான்.  தற்சமயம் குருக்ஷேத்திரத்தில் இருந்தாலும் விரைவில் ஹஸ்தினாபுரம் திரும்பிவிடுவான்.  அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவனே யுவராஜா.  ஹூம், இதன் மூலம் சர்வ வல்லமை கொண்ட பதவியில் அமர்ந்துவிடுவான்.  சகுனியின் ஆலோசனையின் பேரில் துரோணரும் ஆதரவு தெரிவிக்கத் தன் யுவராஜப் பதவியை நிச்சயம் செய்ய வேண்டிப் பாஞ்சாலத்தின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான்.

இவர்களுடைய இந்தப்  பிரச்னைகளால் ஆர்யவர்த்தம் முழுதும் நாசமாவதோடு அல்லாமல் ஜராசந்தனுக்கு இன்னமும் வசதியாகப் போய்விடும்.  மகதத்திலிருந்து கிளம்பிக் காசியை ஒரு நொடியில் வீழ்த்திவிட்டுப் பாஞ்சாலத்திற்குள் புகுந்து கொள்ள அவனுக்கு நேரமாகாது.  ம்ஹூம், மஹா பெரிய பிரச்னை.  நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  இதிலிருந்து நான் தப்ப முடியாது;  தப்பவும் கூடாது.  என்ன ஆனாலும், என்ன விலை கொடுத்தாவது இதைத் தடுக்கவேண்டும்.  என் கடமையை நான் ஆற்றியாகவேண்டும்.  இந்தப் பயங்கர நெருக்கடி நிலைமையைக் கொஞ்சம் தள்ளிப் போடப் பார்க்கலாம்.  முழுவதாய்த் தடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.  தள்ளிப் போடவேண்டுமெனில் புதியதொரு சூழ்நிலை உருவாக வேண்டும்.  துருபதனை முன்னிட்டுக் கொண்டே அது நடைபெறவும் வேண்டும்.  எப்படியாவது துருபதன் ஜராசந்தனுடனோ அல்லது மற்றப் பேராசை பிடித்த இளவரசர்கள், அல்லது அரசர்களுடனோ உடன்படிக்கை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டும்.  இதன் மூலம் துருபதனின் வெறுப்பைக் குறைக்க முயல வேண்டும்.  வெல்ல வேண்டும்.  அதற்கேற்ற சக்தி எனக்கு வேண்டும்.   துருபதனின் வாழ்க்கையின் குறிக்கோள் துரோணரை வெல்வது அல்ல எனக் காட்டி அவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தூண்ட வேண்டும்.  கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

Sunday, March 17, 2013

ஷிகன்டினைக் காணவில்லை!


“நேர்மையின் வடிவம் எனப்படும் பீஷ்மர் அப்போது எங்கே போனார்?  தூய்மைக்கும், நேர்மைக்கும் தன்னை ஒரு அவதாரம் எனக் கூறிக்கொள்வாரே?  அப்போது எங்கே போனார்? பரதனின் குலத்தில் பிறந்த மாபெரும் சக்கரவர்த்தி, அதுவும் குரு வம்சத்தினரின் சக்கரவர்த்தி என்ற பெருமையில் மூழ்கி இருக்கும் திருதராஷ்டிரர் என்ன செய்து கொண்டிருந்தார்?  அவர்கள் அனைவரும் துரோணர் ஏதோ ஒரு பெரிய அரசனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றி விட்டார் என எண்ணினார்களோ என்னவோ! ஹஸ்தினாபுரத்தில் துரோணருக்கு அப்படி ஒரு மாபெரும் வரவேற்புக் கொடுத்தனர்.  “  திரெளபதி தொடர்ந்தாள்.  கிருஷ்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.  இவ்வளவு மேன்மையான இதயமும், எண்ணங்களும் கொண்ட ஒரு இளவரசியின் வேண்டுகோளைத் தட்டுவது என்றால்……. கிருஷ்ணன் மனம் அவனையும் அறியாமல் திரெளபதியின் பால் கவரப்பட்டது.  ஆனால் அதே சமயம் அவளை மணந்து கொண்டு துருபதனின் நோக்கத்தை ஈடேற்றவும் கிருஷ்ணனுக்கு இஷ்டமில்லை.

திரெளபதியை நோக்கிய கண்ணன், “ஒருவேளை நான் ஒத்துக் கொண்டதன் பின்னரும்……. தோற்றுப் போனேன் எனில்?” என வினவினான்.  திரெளபதியின் முகம் புன்னகையால் மலர்ந்து விகசித்தது.  “உங்களைக் குறித்து நாங்கள் அனைத்தும் அறிவோம் வாசுதேவரே!  நீங்கள் ஒரு நாளும் தோற்க மாட்டீர்கள்.” என்றாள்.
“ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள் இளவரசி?”  கண்ணனும் புன்னகையோடு கேட்டான்.

“துரோணரின் சீடர்களில் இரண்டே பேர் தான் வில்வித்தையில் சிறந்து விளங்குபவர்கள்.  ஒன்று அர்ஜுனன், இன்னொருவன் கர்ணன்.  குரு சாந்தீபனியின் சீடர் ஆன கிருஷ்ணனின் சக்கரமோ எல்லாவற்றையும் அடியோடு அழிக்க வல்லது.  அந்த மஹாதேவனின் திரிசூலம் கூட அதன் முன் தோற்கும்.”

“ஓ, ஓ, மிகவும் மிகைப்படுத்திச் சொல்லி இருக்கின்றனர் இளவரசி.  அதுவும் குரு சாந்தீபனி அவர்கள் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டுபவர்.”  “அப்படி நீர் தோற்றால் நாங்கள் அதை ஏற்கத்தான் வேண்டும்.” கபடற்ற திரெளபதியின் பேச்சு கண்ணன் மனதைக் கவர்ந்தது. 

“இளவரசி, நான் உங்களுக்கு உதவ வேண்டுமெனில் உங்கள் கையைப் பிடித்து உங்களை மணந்தே ஆகவேண்டுமா?  வேறு விதத்தில் உங்களுக்கு உதவ முடியாதா?”

“ஏன் , என்னை உங்களுக்குப்பிடிக்கவில்லையா?  உங்கள் மனைவியாக ஆக நான் தகுதியற்றவளா?” திரெளபதியின் குறும்பான பேச்சைக் கேட்டுக் கண்ணன் சிரித்தான்.

“இளவரசி, நான் ஒரு மாட்டிடையன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என எண்ணுகிறேன்.  ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசியை நான் எவ்வாறு மணக்கமுடியும்?  அதற்கான தகுதியே எனக்கில்லை.  அதோடு இந்த ராஜாங்க விஷயங்களுக்காக இளவரசிகளின் வாழ்க்கையை பேரம் பேசுவதையும் நான் கட்டோடு வெறுக்கிறேன்.  திருமணம் என்பது ஒரு வியாபாரம் அல்ல.  நாம் திருமணம் குறித்துப் பேச வேண்டாம்.   உங்கள் தந்தையின் சபதம் குறித்துக் கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்த மணமகனை நீங்களே தேர்ந்தெடுங்கள் இளவரசி.  திருமணம் என்னும் பந்தம் இல்லாமலேயே நான் துருபதன் பக்கமே நின்று அவருக்கே உதவிகள் செய்வேன் என்னும் உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கிறேன்.  உங்களுக்கும் என்னுடைய உதவிகள் உண்டு இளவரசி, நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வேண்டும்.”

அவர்கள் பேச்சு திடீரென நின்றது.  கண்ணன் திரும்பிப் பார்த்தபோது துருபதன் வந்து கொண்டிருந்தான்.  அவன் ஏதோ முக்கியமான அதிர்ச்சியான விஷயத்தைக் குறித்துக் கேள்விப் பட்டு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இங்கே வந்து கொண்டிருக்கிறான் எனக் கண்ணனுக்குத் தோன்றியது.  எப்போதையும் விட இப்போது மிகவும் கடுமையாகவும், பயங்கரமாகவும் அவன் முகம் காட்சி அளித்தது.  தன் மகனைப் பார்த்து, “த்ருஷ்டத்யும்னா, ஷிகன்டின் மறைந்துவிட்டான்!” என்று அறிவித்தான்.  அவன் குரலில் தாள முடியாத கோபம் இருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.  த்ருஷ்டத்யும்னன், சத்யஜித், திரெளபதி மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  தங்கள் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டனர்.  


“என்ன, உண்மையாகவா?” எனக் கேட்க, துருபதனும், “ஆம், உண்மைதான்.  ஷிகன்டின் மறைந்து விட்டான்.  அவன் எங்கெல்லாம் ஒளிந்திருக்கக் கூடும் என்பதை அறிந்த அங்கெல்லாம் அவனைத் தேடினேன்.  ஆனால் அவன் எங்கும் காணப்படவில்லை.  எப்படி மறைந்தான் என்பதற்கான அடையாளங்களும் கிடைக்கவில்லை.”  சோர்வுடனும், மனக் கலக்கத்துடனும், அங்கிருந்த மரம் ஒன்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மேடையில் துருபதன் அமர்ந்து கொண்டான்.  “அவன் பிறந்திருக்கவே வேண்டாம்!” என்று வேதனை மிகுந்த குரலில் கூறிவிட்டுத் தன் தலையைத் தன்னிரு கரங்களாலும் பிடித்துக் கொண்டான்.  அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.  கிருஷ்ணன் நிலைமையை உணர்ந்தவனாய் எதுவுமே பேசாமல், எதுவுமே கேட்காமல் அங்கிருந்து மெல்ல வெளியேறினான்.

Wednesday, March 6, 2013

திரெளபதியின் வருத்தமும், ஆக்ரோஷமும்!


“இப்போது என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள், வாசுதேவரே!  என் தந்தையின் வேண்டுகோளை நீர் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” திரெளபதி வாசுதேவ கிருஷ்ணனைக் கொஞ்சம் ஆவல் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டே கேட்டாள்.  எவ்விதமேனும் தன் தந்தையை இந்தப் பிரச்னையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அவள் ஆவல் கிருஷ்ணனுக்குத் தெள்ளத் தெளிவாய்ப்புரிந்தது.  அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.  சிறிது நேரம் இடைவெளி விட்ட திரெளபதி மீண்டும் தொடர்ந்தாள்.  “ வாசுதேவா, என் தந்தையைக் குறித்து நீர் அறிய மாட்டீர்.  அவர் முழுதும் நற்குணங்களும், நற்சிந்தனைகளுமே கொண்டவர்.  எப்போதுமே நேர்மையானதொரு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.  இந்தப் பாஞ்சால நாட்டு மக்களுக்கு அவர் தந்தையைப் போன்றவர்.  குடிமக்களைத் தன் சொந்த மக்களாகவே என் தந்தையும் கருதுகிறார்.   அவர் எப்போதும்  எவருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. “

தன் தந்தையின் மேல் திரெளபதி கொண்டிருக்கும் பாசம் அவள் பேச்சில் நன்கு புரிய வந்தது.  மேலும் அவள் தொடர்ந்தாள்.  “ ஆனால் அவரால் பீமனும் அர்ஜுனனும், அவரைக் கட்டி இழுத்து வந்த அவமானத்தை மறக்க இயலவில்லை.  அப்போதில் இருந்து அவர் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கிறார்;  நாங்களும் மாறிவிட்டோம் வாசுதேவா!   அந்த அவமானம் ஏற்பட்ட நிமிடங்களில் இருந்து அவரால் அந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் கங்கையில் விழுந்து உயிரை விட்டுவிடலாமா எனப் பல நேரங்கள் நினைத்தார்.   ஆனால் தாயற்ற குழந்தைகளான எங்களை, அவரே பாசத்துடனும், அன்புடனும் வளர்த்து வந்திருக்கிறார்.  அவர் பாசத்தைப் பெற்ற நாங்கள் அவருக்குத் திரும்பச் செய்யக் கூடிய கடமை அவர் அடைந்த அவமானத்தை அகற்றுவது தான் இல்லையா?  நாங்கள் அவரைத் தேற்றினோம்.  அவரது அவமானத்தைத் துடைப்பதாக சபதம் இட்டோம்.  அவர் அடைந்த அவமானத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதாய் வாக்குக் கொடுத்தோம்.” திரெளபதி மீண்டும் நிறுத்திவிட்டுச் சற்று மூச்சு வாங்கினாள்.  பின்னர் தொடர்ந்து, “ஆம், நாங்கள் பழிவாங்காமல் விடமாட்டோம்.”  என முடித்தாள்.

திரெளபதியையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.  கோபத்திலும், தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தால் எழுந்த வருத்தத்திலும் பளபளத்த  அவள் கன்னங்களில் சிவப்பும், கண்களில் தோன்றி மறைந்த மின்வெட்டைப் போன்ற ஒளியும்,  பேசும்போதே அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்ட இனிய குரலின் ஓசையும்,  அந்தக் குரலோசை  அந்த அறையின் சுவர்களைக் கூட அவள் பக்கமே நிற்கச் செய்கிறதோ என்னும்படி எதிரொலித்த விந்தையும், திரெளபதி தன் தந்தையிடம் கொண்டிருக்கும் எங்கும் காணமுடியாப் பாசத்தையும் கண்ட கண்ணன் வியந்தான்.  அவள் மன உறுதியைக் கண்டு மனதுக்குள் பாராட்டினான்.  கிடைத்தற்கரிய பெண் இவள் என்பதைப் புரிந்து கொண்டான்.  ஏதேனும் தெய்வ சந்நிதானத்தில் நிற்கிறோமோ என்னும்படியாக அவள் குரலின் ஓசை அவனை ஓர் உன்னதமான மனநிலைக்கு இட்டுச் சென்றது. “மாட்சிமை பொருந்திய இளவரசியாரே, தங்கள் தந்தையின் மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பும், பாசமும் அளப்பரியது.  எங்கும் காண இயலா ஒன்று.” என்று மெல்லக் கூறினான்.

முதலில் திரெளபதிக்குக் கண்ணன் இதை ஏளனம் செய்யும் விதத்தில் கூறுகிறானோ என்ற சந்தேகம் ஏற்படவே அவனைக் கூர்ந்து பார்த்தாள்.  அவன் முகத்தின் மூலம் அப்படி ஒரு எண்ணம் அவனிடம் இல்லை என்பதையும், அவன் உளமாரவே இதைக் கூறுகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள்.  தன்னுடைய ஆழமான தந்தை அன்பைக் கண்டு அவன் வியந்து பாராட்டுகிறான் என்பதும் அவளுக்குப் புரிந்தது.  “எங்கள் தந்தையாரே எங்களுக்கு உயிர் கொடுத்தவர்.  ஆகவே அவருடைய நன்மைக்கு நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ளோம். “ என்றாள் திரெளபதி. 

மெல்ல யோசனையுடன் கேட்டான் கண்ணன். “இளவரசி, நான் உங்களுக்கு உதவ முடியவில்லை எனில், நீங்கள் ஜராசந்தனின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்களா?”

இதற்கு திருஷ்டத்யும்னன் பதில் கூறினான்: “இந்த விஷயம் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம்.  நீ சம்மதிக்கவில்லை எனில் நாங்கள் ஜராசந்தனின் பேரன் ஆன மேஹசந்தியை எங்கள் மாப்பிள்ளையாக்கிக் கொள்வோம்.  பின்னர் ஜராசந்தனின் படைகளோடு எங்கள் படைகளும் சேர்ந்து குரு வம்சத்தினரை எதிர்க்க ஆயத்தமாகும்.  இரு ராஜ்யங்களின் படைகளுக்கு முன்னர் அவர்களால் நிற்க இயலாது!” என்றான்.
“பின்னர் ஆர்யவத்தமே தீப்பிடித்து எரியும்!”  கிருஷ்ணன் மெல்ல ஒரு இளநகையுடன் கூறினான்.

“ஹூம், இப்போது, இனி என்ன தீப்பிடிப்பது வாசுதேவரே!  ஆர்யவர்த்தம் எப்போதோ சாம்பலாகிவிட்டதே.  எப்போது என் தந்தையைப் போன்ற நேர்மையும், குடிமக்களுக்கு நன்மையும் செய்யும் ஓர் அரசன், அதர்மமான வழியில் சிறைப்பிடிக்கப் பட்டு ஒரு பிராமணன் காலில் விழுந்து தன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புக் கேட்கும்படி வற்புறுத்தப் பட்டானோ, அன்றே ஆர்யவர்த்தம் சாம்பலாகிவிட்டது வாசுதேவரே!” திரெளபதி பல்லைக் கடித்துக் கொண்டு ஆக்ரோஷமாய்க் கூறினாள்.