Thursday, March 31, 2011

ஷாயிபாவின் வேதனை! கண்ணன் வருவான் 2ம், பாகம்

கண்ணன் குழந்தையாக இருந்தபோது பிருந்தாவனத்தின் கோபிகைகள் எல்லாரும் அவனுடைய சாகசங்களைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்களாமே! உண்மையாய் இருக்குமா?? இருக்கலாம்; இங்கே தான் பார்க்கிறேனே, எல்லாரிடமும் நட்புப் பாராட்டுகிறான். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடோ, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடோ, உயர்ந்த பதவியில் இருப்பவர், தொண்டூழியர் என்ற பாகுபாடோ பார்க்காமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டிப் பழகுகிறான். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்வதில்லை. சுயநலமாய்த் தன்னலம் மட்டுமே கருதியும் பேச்சோ, செய்கையோ இல்லை. அவனை அண்டி இருப்பவர்கள் கூட அவனுக்குக் கீழே தாங்கள் இருப்பதாய் நினைக்காமல் அவனும் தங்களில் ஒருவன் என்றே எண்ணுகின்றனர். இது எவ்வாறு முடிகிறது?? ஆச்சரியம் மேலிட்டது ஷாயிபாவுக்கு. ஷாயிபாவிடமும் அவன் ஒரு சகோதர பாசத்தையே காட்டி வருகிறான். அவன் சொன்னதும் அவ்வாறே. அதே போல் பாசத்துடன் இருக்கிறான். மாறுபட்ட நோக்கோடு ஒரு விநாடியும் பார்க்கவில்லை. இல்லை, இல்லை; இது ஒருக்காலும் இயலாத ஒன்று.. போலி வேஷம் போடுகிறானோ? ம்ம்ம்ம்?? அப்படித் தான் இருக்கவேண்டும். ஆனால்………..ஆனால்…………… நான் எவ்வளவு திட்டினாலும், என்ன கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்தாலும், அவன் கண்கள் ஒரு விநாடி இமைத்தலில் கூடத் தன் மேல் அவனுக்கு இருக்கும் வெறுப்பைக் காட்டியதில்லை. எப்போதும் போல் சிரிக்கும் கண்கள்.

அவன் என்னை எவ்விதத்திலேனும் சந்தோஷப்படுத்தவே முயல்கிறான். நான் என்ன வேண்டுமென்று கேட்கிறேனோ எவ்வாறேனும், அதை வரவழைக்கிறான். என் திருப்தியையே அவன் முக்கியக் கடமையாகக் கொண்டிருப்பது போல் நடந்து கொள்கிறான். ம்ம்ம்ம்ம்???? இந்த வசுதேவரின் குடும்பமே விசித்திரமான நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது. கரவீரபுரத்தில் நம் குடும்பத்தில் பெரியப்பா இட்டது தான் சட்டம். வேறு எவரும் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது. அப்படிப் பேசினாலோ அரச குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வதிலும், ஒருவரை ஒருவர் ஏசுவதிலும் போய் முடியும். ஒருவர் இன்னொருவரிடம் கடுமையாக நடந்து கொள்வார். ஏன், பெரியப்பா எனக்கு அளித்த அதிகாரத்தின் மூலம் நான் ராணி பத்மாவதியையும், அவள் ஒரே குமாரனையும் எப்படி அடக்கி ஒடுக்கி வைத்திருந்தேன். என்னைக் கண்டாலே ராணி பத்மாவதி நடுங்குவாளே! இங்கேயோ! ஹும், இந்தக் கம்சாவும், அவள் மகன் ப்ருஹத்பாலனும் மட்டுமே என்னோடு ஒத்துப் போவார்கள், போகிறார்கள். கண்ணன் ஒரு பொல்லாத போக்கிரி என்பதையும், அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் இருவர் மட்டுமே ஒத்துக்கொள்வார்கள். வேறு எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

கண்ணன் மேல் ஷாயிபாவுக்கு வெறுப்பும், கோபமும் அதிகம் ஆனது. கம்சாவின் அறைக்குப் போனபொழுது எவ்வாறோ ஒரு கத்தியைக் கண்டெடுத்துக் கொண்டு வந்திருந்தாள் ஷாயிபா. கம்சா கவனித்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. கவனித்திருந்தாலும் தன் முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு விட்டிருந்தாள். ஆகவே ஷாயிபா அந்தக் கத்தியை எடுத்து வந்துவிட்டாள். ஆம், ஆம், இந்தக் கண்ணன் என்பவனை நான் வெறுக்கிறேன். அவனைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்று மாலையோ அல்லது நாளைக்காலையோ அவன் வழக்கப்படி இங்கே வருவான். என்னையும் காண வருவான். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அட., தேவகி அம்மா தன் வழிபாட்டை முடித்துக்கொண்டுவிட்டார் போல் தெரிகிறதே. ஆம், ஆம்,. அவர் மற்றப் பெண்களுக்கு மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிக் கட்டளை இடுகிறார். நாமும் போகலாம். வழக்கம் போல் உதவிகளைச் செய்துவிடுவோம். அப்போது தான் நம் மேல் சந்தேகம் எதுவும் வராது, ஷாயிபா தேவகியைத் தேடிச் சென்றாள்.

வெளி முற்றத்தில் ரதங்கள் நிறுத்தப்படும் ஓசையும், குதிரைகளின் கனைப்பும், அதிலிருந்து இறங்கும் மனிதர்களின் பேச்சும், சிரிப்பும் கலந்து கேட்டது. ரதச் சக்கரங்கள் கிறீச்சென்ற சப்தத்தோடு நிறுத்தப் படுவதையும் இளைஞர்கள் ஆரவாரம் செய்து கொண்டு ரதத்திலிருந்து குதிப்பதும் கேட்ட்து. எல்லாருடைய குரல்களும் கலந்து கேட்டாலும் ஷாயிபாவால் இரண்டு குரல்களை மட்டும் இனம் பிரிக்க முடிந்தது. ஒன்று கண்ணனின் மிருதுவான, மென்மையான குரல். வழக்கம் போல் உற்சாகம் காணப்பட்டது. இன்னொன்று,………….. இன்னொன்று……………. ஆம், ஆம், அது ஷ்வேதகேதுவின் குரல். அவன் நேற்று முன் தினமே திரும்பிவிட்டான் என்பதை ஷாயிபா அனைவரும் பேசிக்கொண்டதில் இருந்து அறிந்திருந்தாள். கடைசியில் அவன் வந்துவிட்டான். ஷ்வேதகேது, ஷ்வேதகேது/…….. யாரை அவள் ஒருகாலத்தில் மிகவும் விரும்பினாளோ, இப்போது யாரை அவள் கண்களால் காணவும் விரும்பவில்லையோ, அந்த ஷ்வேதகேது, அவளையும், அவள் வழிபட்டுக்கொண்டிருந்த கடவுளான ஸ்ரீகாலவ வாசுதேவனையும் மோசமான முறையில் ஏமாற்றின ஷ்வேதகேது/…………………. வந்துவிட்டான், ஆம் வந்தே விட்டான். ஷாயிபாவின் உள்ளம் குமுறியது.

Sunday, March 27, 2011

கம்சாவின் சாகசம்! கண்ணன் வருவான்! 2-ம் பாகம்!

மிகவும் சாமர்த்தியமாகக் கம்சா, “ஓ, கடவுளே, என் கடவுளே, மஹாதேவா! நீ எங்கே போய்விட்டாய்! இந்த அக்கிரமம் உன் கண்களில் படவில்லையா?? இந்த இடையன் கோபாலன் எப்போது இறப்பான்? அவன் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு எப்போது வரும்?? பாவம் , இந்த அபலைப்பெண் ஷாயிபா, தெய்வத்துக்கு நிகரான, ஏன் அவரே ஒரு தெய்வமான அவள் பெரியப்பன் ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொல்லும்போது நீ ஏன் அந்த கோகுலக் கண்ணனைக் கொல்லவில்லை? அல்லது அவனைத் தடுத்தாவது இருக்கலாமே? இது என்ன அநீதி?” கண்கள் மழையென வர்ஷிக்க கம்சா அழுததைக் கண்ட ஷாயிபா உண்மையிலேயே தன்னுடைய துக்கத்தை மறந்தே போனாள். கம்சாவைத் தேற்ற ஆரம்பித்தாள். “ அம்மா, கவலைப்படாதீர்கள். அந்தக் கண்ணனுக்கு, என் பெரியப்பாவைக் கொன்றவனுக்கு ஒரு முடிவு வந்தே தீரும். விதி வலியது. அந்த விதியின் கரங்களில் அவன் மாட்டிக்கொண்டே தீருவான். எனக்கு அது நிச்சயம் தெரிகிறது. அவனைச் சும்மா விடமாட்டேன்!” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.

தான் வந்த வேலை முடிந்ததைப் புரிந்து கொண்ட கம்சா அங்கிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றாள். ஷாயிபாவோ உண்ணாமல், உறங்காமல் கண்ணனை எவ்விதம் பழி தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தாள். தன் பெரியப்பாவான ஸ்ரீகாலவனின் ஆன்மா அப்போது தான் அமைதி அடையும் எனவும் நம்பினாள். மறுநாள் பொழுது புலர்வதற்கு ஒரு யுகம் ஆனாற்போலிருந்தது அவளுக்கு. காலையில் அனைத்துப் பெண்டிருடனும், நதிக்கரையில் அரண்மனைப் பெண்கள் குளிக்கவென ஏற்படுத்தப் பட்டிருந்த படித்துறையில் குளித்துவிட்டு அரண்மனைக்கு வந்து தன் பெரியப்பாவின் சிலைக்கு வழிபாடுகள் செய்து அதன் காலடியில் தன் தலையை வைத்து வணங்கினாள் ஷாயிபா. கண்ணீர் பெருக்கெடுத்த்து அவளுக்கு. எப்படிச் செல்வாக்கோடும், பல வீரர்களின் காவலுடனும் எவரும் தனக்கு நிகரில்லை என்றிருந்த நான் இன்று இன்னொருவர் பாதுகாப்பில் இன்னொருவரின் அரண்மனையில் அவர்கள் பரிதாபத்தின் பேரில் போடும் சாப்பாடைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேனே. இதற்கொரு முடிவு கட்டவேண்டும். பெரியப்பாவின் சிலையைப் பாரத்தாள். இரு கைகளையும் கூப்பியவண்ணம், " ஸ்ரீகாலவ வாசுதேவரே, என் கடவுளே, உங்களுக்கும் மேல் ஒருவரைக் கடவுளாக நான் என்றும் எண்ணியதில்லை. இந்தக் கண்ணனைப் பழிவாங்குவதற்குரிய தைரியத்தை எனக்குக் கொடுங்கள். அவன் இறந்தே ஆகவேண்டும். அது தவிர்க்க முடியாது என் பிரபுவே!” என்று மனமுருகப் பிரார்த்தனை செய்தாள்.

அப்போது அடுத்திருந்த தேவகி அம்மாவின் அறையிலிருந்து மணி அடிக்கும் ஓசையும், கற்பூர ஆரத்தியின் மணமும் எழுந்து இந்த அறையையும் நிறைத்தது. கூடவே திரிவக்கரையின் குரலில் கண்ணன் பேரில் பாடப்படும் ஆரத்திப்பாடலின் ஓசையும் கேட்டது. பல்லைக் கடித்தாள் ஷாயிபா. கண்ணன், கண்ணன், கண்ணன், கிருஷ்ண வாசுதேவன்! ஹும், பைத்தியம் பிடித்தாற்போல் அவனை நினைந்து நினைந்து உருகுகின்றனர் இந்தப்பெண்களெல்லாம். கொலைகாரன், கொலைகாரன், கொடூரமான விதத்தில் என் பெரியப்பாவைக் கொன்ற இந்தக் கொலைகாரனை நினைத்துக்கொண்டே வாழ்கின்றனரே இந்தப் பெண்கள். வெட்கமாயில்லை இவர்களுக்கு?”

சற்று தூரத்தில் வசுதேவர் ரதத்தைத் தயார் செய்யும்படி ஆட்களுக்குக் கட்டளை இடும் குரல் கேட்டது. ஓ, சாந்தீபனியின் ஆசிரமத்திலிருந்து கண்ணனை அழைத்து வர ரதம் போகப் போகிறதா? அங்கே தான் யாதவ குல இளைஞர்களுக்கு அவன் ரதப் பயிற்சியோடு மற்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறான். அங்கிருந்து பிள்ளையை இவர் அழைத்துவரப்போகிறாரோ? ஹும், ரொம்பத் தான் செல்லம் கொடுத்தாகிறது இந்தக் கொலைகாரக் கண்ணனுக்கு. கண்ணனும், அவன் சகோதரனும் வசுதேவருடன் வந்ததும், அனைவருமாய் அமர்ந்து மதிய உணவு உட்கொள்வார்கள். தேவகி அம்மா தன் கைகளாலேயே அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளைப் பரிமாறுவாள். குடும்பத் தலைவி என்ற முறையில் இது அவள் சேவையாம்! ஹும், ஹும், விசித்திரமான மனிதர்கள். இவர்கள் பழகும் விதமே விசித்திரமாய் உள்ளது. ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதே இல்லை. அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் மென்மையாகவே சொல்கின்றனர். காலை எழுந்தால் இரவு படுக்கும் வரையில் எல்லாம் அந்த அந்த நேரத்துக்கு நடக்கின்றன. இதை எல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதும் இல்லை. எல்லாருமே ஒத்திசைந்து செய்கின்றனரே! அதோடு குடும்பம் முழுதும் ஒரே நூலில் கட்டப் பட்ட மாலை போல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கின்றனர். அனைவருக்குமே அவரவர்களின் தாய், தந்தை என்றால் பாசத்தோடு மிக மரியாதையும் காட்டுகின்றனர்.

ஆனால் ஆனால் கரவீரபுரத்தில் இப்படி இல்லை. இப்படிப் பார்த்ததே கிடையாது. அங்கே சத்தமாயும், கோபமாயும் பேசிக்கொள்ளலாம். இங்கே பெரியவர்கள் இருந்தால் அவர்களின் எதிரே வயதில் சிறியவர்கள் மிக மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அல்லவோ பேச வேண்டி இருக்கிறது. அவ்வளவு ஏன்? நேற்று வந்து அவ்வளவு குற்றமும், குறையும் கண்டு அழுது தீர்த்தாளே கண்ணனின் சித்தி கம்சா. அவளும் சரி, அவள் மகன் ப்ருஹத்பாலன் என்பவனும் சரி, அவர்களும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் பின்பற்றித் தான் வாழ்கின்றனர். விட்டுக் கொடுக்கவே இல்லை.


ஒரு கணம் கண்ணனின் சிரித்த முகம் ஷாயிபாவின் கண்களெதிரே தோன்றியது. மனதின் உணர்வுகள் தெரியும்படியான சிரிக்கும் கண்கள், மந்தகாசமான சிரிப்பு, அழகும், வலிமையும், எழிலும் நிறைந்திருக்கும் அவன் முகம், உடல், அவனுடைய அமைதி, சாந்தம், நிதானம், இவ்வுலகத்து மக்களுக்கெல்லாம் காட்டுவது போன்ற அளவற்ற அவன் கருணை, எல்லாம் அவள் நினைவில் வந்து மோதின. மற்றவர்களில் இருந்து அவன் தனித்துத் தெரிவதை உணர்ந்தாள் ஷாயிபா. இவ்வளவு பெருமைக்குரியவன் என்றாலும் அவன் காட்டும் பணிவும், மரியாதையும், பெரியவர்களிடம் காட்டும் விநயமும் அவள் கவனத்திற்கு வந்தது. கேட்டால் தவிர தன் கருத்தைப் பெரியவர்கள் எதிரே சொல்வதே இல்லை. அப்படிச் சொன்னாலும் அதை அநேகமாய் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தேவகி அம்மாவோ தன் மகன் கண்ணனை ஒரு கடவுள் என்றே சொல்கிறாள், நினைக்கிறாள், அப்படியே வணங்கி வாழ்கிறாள். ஆனால் கண்ணனின் சொற்களோ, செயல்களோ அவன் நடந்து கொள்ளும் விதமோ அப்படித் தெரியவில்லை. நம் பெரியப்பாவான ஸ்ரீகாலவர் வார்த்தைக்கு வார்த்தை தான் தான் பரவாசுதேவன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அனைவரையும் அதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் நிர்பந்திப்பார். ஆனால் கண்ணன் ஒருமுறை கூடத் தன்னைக் கடவுள் எனச் சொல்லிக்கொள்ளவே இல்லை. அவன் கடவுள் தான் என்பது தனக்குத் தெரியும் என்பதையும் காட்டிக்கொள்ளவே இல்லை. எல்லாரையும் போல் மிகச் சாதாரணமாக நடந்து கொள்கிறான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் அவன் மற்றவர்களிலிருந்து மாறுபட்டே இருக்கிறான்.

Saturday, March 26, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

மகன் சென்றதும், பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் கம்சா. இரவு முழுதும் தூங்காமல் யோசித்தவளுக்கு விடிகாலையில் ஒரு யோசனை உதித்தது. விரைவில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வசுதேவரின் மாளிகைக்குச் சென்றாள். அங்கே தேவகியை சம்பிரதாயமாக மரியாதை நிமித்தம் பார்த்து விசாரித்தவள் நேரே சென்றது ஷாயிபாவிடம். ஷாயிபாவை அனைவரும் நெருங்க முடியாமல் இருந்த போதிலும் கம்சாவால் வெகு சுலபமாக அவள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது. அவள் சார்பாகவே பேசி அவள் மனதில் இடம் பிடித்த கம்சாவிடம் ஷாயிபா தன் அந்தரங்கங்களை எல்லாம் மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டாள். கரவீரபுரத்தில் அவளுடைய பெரியப்பாவின் ஆட்சியின் மகிமை பற்றியும், அங்கே அவளுக்கு இருந்த மரியாதையையும், அதிகாரத்தையும் குறித்து ஆதங்கத்துடன் கூறினாள். தன் பெரியப்பா உண்மையிலேயே கடவுளே என்றும், அவரை எதிர்த்து எவரும் பேசாமல் இருந்தனர் என்றும் ஷ்வேதகேதுவும் முதலில் அவருக்கு ஆதரவாகவே இருந்தான் எனவும், இந்தக் கிருஷ்ணன் வந்தே அனைத்தையும் மாற்றினான் என்றும் ஆத்திரத்துடன் கூறினாள்.

உயர்ந்த அரசபோகத்தில் தான் அநுபவித்துக்கொண்டிருந்த ஆட்சியின் அதிகாரத்தைக் கிருஷ்ணன் வந்து தன் பெரியப்பாவை வெட்டிச் சாய்த்ததின் மூலம் நிர்மூலமாக்கியதையும், அதற்கு உதவியது ஷ்வேதகேது எனவும் கூறினாள். இத்தனைக்கும் அவள், ஷாயிபா, கரவீரபுரத்தின் இளவரசியும் ஸ்ரீகாலவனின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவளும் ஆன ஷாயிபா ஷ்வேதகேதுவை மகிழ்விக்க வேண்டி அவனிடம் தன் காதலைக் கூடத் தெரிவிக்க எண்ணி இருந்தாள். அப்படிப் பட்ட மாட்சிமை பொருந்திய ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்றதோடு அல்லாமல் ஷாயிபாவின் மாட்சிமையும் அடியோடு நிர்மூலமாக்கப் பட்டது. எல்லாம் இந்தக் கண்ணனால். கம்சா அநுதாபத்தோடு கேட்பது ஷாயிபாவுக்குப் பிடித்திருந்தது. இந்த மாளிகையில் அனைவரும் கிருஷ்ணன் சொல்வதே சரியென்று கூறும்போது இந்தக் கம்சாவாவது தான் கூறுவதை அநுதாபத்துடன் கேட்டுக்கொண்டு தன்னுடைய கோபமும், துக்கமும் நியாயம் என்கிறாளே.

ஆனால் ஷாயிபா கம்சாவை அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். சும்மா அநுதாபத்துடன் கேட்டுக்கொள்ள மட்டும் கம்சா அங்கே வரவில்லை. அவள் ஷாயிபாவின் பேச்சைக் கேட்டு விட்ட கண்ணீரெல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள் அவள் ஷாயிபாவைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு கண்ணனுக்கெதிராக ஒரு வலுவான கூட்டணி அமைக்க முயன்று கொண்டிருந்தாள். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையே ஷாயிபாவின் துக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. ஆகவே ஷாயிபா கூறுகையில் அவளை ஆமோதிப்பதோடு, கண்ணன் எவ்வாறு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வரிசையாக ஈவு இரக்கமின்றிக் கொன்று வருகிறான் என்பதையும் கூறி வந்தாள். அவள் சொந்த சகோதரன் ஆன கம்சனை எவ்வாறு சற்றும் கலக்கமோ, தயக்கமோ இன்றி மாமன் என்று கூடப் பார்க்காமல் கண்ணன் கொன்றான் என்பதை விவரித்தாள். கம்சா இன்று அநுபவிக்கும் அத்தனை துன்பத்திற்கும் மூல காரணமே இந்தக் கண்ணன் தான். வேறு எவரும் இல்லை. இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில் ஷாயிபாவின் கோபம் கொஞ்சம் அடங்கினாலும் கண்ணன் மேல் அளவுக்கதிகமான வெறுப்பு கொழுந்து விட்டெரிந்தது.

இப்போதோ கம்சா வந்து ஏதோ புதிய செய்தியைக் கூறுகிறாளே? தேவகியைப் பார்த்துவிட்டு ஷாயிபாவிடம் வந்த கம்சா அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் மதுராவின் வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு ஆபத்தைப் பற்றி அவளிடம் கூற ஆரம்பித்தாள். இதைக் குறித்து ஷாயிபாவிடம் கூற ஆரம்பித்த கம்சா ஓவென்று அழ ஆரம்பித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பொல்லாத போக்கிரியும் துஷ்டனும் ஆன கிருஷ்ணன் எப்படித் தன் அன்புக்குகந்த யுவராஜா பதவி வகிக்க வேண்டிய ப்ருஹத்பாலன் மேல் வஞ்சம் தீர்த்துக்கொண்டான் என்பதை விவரிக்க ஆரம்பித்தாள். தன் தகப்பன் உக்ரசேனர் உண்மையில் ப்ருஹத்பாலனுக்கே யுவராஜா பதவி அளிக்க விரும்பியதாகவும், இந்தக் கண்ணன் வந்ததும் அனைத்தும் மாறியதோடு அன்றி இப்போது புதியதொரு சூழ்ச்சி வலையை கண்ணன் பின்னி இருப்பதாயும் கூறினாள். தான் மகனை மரணத்தை நோக்கி அனுப்ப வேண்டியே அவனுக்கு யுவராஜா பதவியும் பட்டமும் கொடுக்கக் கண்ணன் சம்மதித்திருப்பதாயும், குண்டினாபுரம் சென்றால் தன் மகனுக்குக் காத்திருப்பது மரணமே என்றும் தீர்மானமாய்க் கூறினாள் கம்சா.

கம்சாவின் புலம்பல் தொடர்ந்தது. அவள் கணவன் தேவபாகனோ அல்லது மூத்த மகன் ஆன சித்ரகேதுவோ இந்த வழிக்கெல்லாம் வரமாட்டார்கள் இருவரும் தேவைக்கு மீறிய நல்லவர்கள். அவர்கள் வசுதேவன் சொல்லை ஒருக்காலும் மீறி நடக்க மாட்டார்கள். ஆகவே அவர்களிடம் போய் இதைச் சொல்ல முடியாது. அவளுடைய இன்னொரு இளைய மகனான உத்தவனோ கேட்கவே வேண்டாம். அந்தக் கிருஷ்ணனுக்கு அடிமை உத்தியோகம் செய்கிறான். அவனுக்குத் தாசானு தாசனாக இருக்கிறான். அவனைக் கண்ணன் தன் வேலைகளுக்கெல்லாம் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறான். ஷாயிபாவுக்கும் இதே எண்ணமே தோன்றியது. உத்தவனைக் கண்ணன் தன் இஷ்டத்துக்கு வளைக்கிறான் என்று அவளும் எண்ணினாள். அவள் முகபாவத்தையே கவனித்த கம்சா இதுதான் சமயம் என நினைத்து ஷாயிபாவைக் கட்டிக்கொண்டு இன்னும் புலம்பி அழ ஆரம்பித்தாள்.

Tuesday, March 22, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ப்ருஹத்பாலன் தப்பிக்கிறான்.


ஜராசந்தன் குறித்தும் அவன் பலம் குறித்தும் இங்கு எவருக்கும் தெரியவில்லை, புரியவில்லை. முட்டாள்தனமான வீர, தீரப்பராக்கிரமங்களைச் செய்து அவனை ஏமாற்றலாம் என நினைக்கும் வளர்ந்த குழந்தைகள். முறையான போர்ப் பயிற்சி எவருக்கும் இல்லை. அதிலும் இந்த பத்ரகன் கொழுகொழுவென இருக்கிறான். என்ன பயிற்சி எடுத்துக்கொண்டான்?? எப்போதும் குடிப்பதும், உண்பதும், சதுரங்கம் ஆடுவதும் தானே வேலை! ம்ம்ம்ம் இந்தக் காரணத்தினால்தானே இந்த ரதப் போட்டியில் கலந்து கொள்வதெனில் யோசனையாய் உள்ளது. அதற்கென முறையான பயிற்சியோடு கூட ஒழுங்கும், கட்டுப்பாடும் தேவையே. அது கொஞ்சம் கூட எவருக்கும் இல்லையே! சும்மா வாய்ப் பேச்சுப் பேசாமல் இவர்கள் இருக்கவேண்டும். உண்மையான யுத்தம் என வந்துவிட்டால் ஈக்களைக் கொல்வதைப்போல் இவர்களைக் கொன்றுவிடுவார்கள். அதை அறியாத முட்டாள்கள்.

ஆனால்……..ஆனால்…….. என்ன இருந்தாலும் இந்தக் கிருஷ்ணன் இதிலே கெட்டிக்காரனாய்த் தான் நடந்து கொண்டிருக்கிறான். இதை எல்லாம் அவனும் யோசித்து விட்டே அனைவருக்கும் கட்டாயப் பயிற்சி கொடுக்கவேண்டும் என வற்புறுத்தி வருகிறான். மதுராவையும், அதன் மக்களையும் எந்தச் சூழ்நிலைக்கும் தயார் செய்கிறானோ? ம்ம்ம்ம்ம்????இதைக் குறித்து யோசிக்கவே இல்லையே.. ஆனால் உத்தவனோ எல்லாவற்றுக்கும் தயாராய் இருக்கிறான்.

ஆனாலும்…….. ஆனாலும்……. இத்தனை செய்தாலும் இந்தக் கண்ணனுக்கு தந்திரமான புத்தியே இருக்கிறது. எனக்காக ஒரு வலையை அன்றோ விரித்திருக்கிறான். இத்தனைக்கும் நான் அவனுடைய தந்தை வழியிலும் சரி, தாய் வழியிலும் சரி மூத்த சகோதரன். நானும் ஒரு வ்ருஷ்ணி தானே. என் தகப்பன் அவன் தகப்பனின் தம்பிதானே. என் தாய் அவன் தாயின் சகோதரி தானே. ஒரு வ்ருஷ்ணி இன்னொரு வ்ருஷ்ணியை எப்படித் தந்திரத்தால் வெல்ல முடியும்! இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்கிறேன். தந்திரத்தைத் தந்திரத்தாலேயே வெல்லவேண்டும். ப்ருஹத்பாலனின் யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்தன. எவ்வாறேனும் கிருஷ்ணன் எனக்கு விரித்த வலையிலே அவனையே மாட்டிக்கொள்ள வைக்கவேண்டும். நிச்சயமாய் கிருஷ்ணன் உயிரோடு இருக்க மாட்டான். அவன் இறந்தே போவான். என்னையா மாட்டிவிட்டு மரணத்தைச் சந்திக்க வைக்கிறாய்??

அடே, கிருஷ்ணா, இடையா,. நான் சாவதென்றால் என் மரணம் எப்படி, எங்கே, எவ்வாறு வரவேண்டும் என்பதை நானல்லவோ தீர்மானிக்கவேண்டும்! நீ யாரடா என் மரணத்தைத் தீர்மானிக்க! அவனை விடக்கெட்டிக்காரத்தனமாய் எனக்கும் யோசிக்கத் தெரியும். அதை அவனிடம் மட்டுமல்லாமல் என் முட்டாள் நண்பர்களுக்கும் காட்டியாகவேண்டும். இந்த சாத்யகி ஒரு கதாநாயகனாக ஆகவேண்டும் என நினைக்கிறான் அல்லவா? அவன் புரிந்து கொள்வான், என்னைப் பற்றி. ஆஹா, நாம் முட்டாளாய் இருந்துவிட்டோம்,ப்ருஹத்பாலன் எவ்வளவு தந்திரமாய்க் காரியத்தை முடித்துவிட்டான் என எண்ணிக்கொள்வான். ப்ருஹத்பாலனுக்குக்கொஞ்சம் கொஞ்சமாய் தைரியம் வந்தது. அன்று இரவு அவன் தன் பாட்டன் உக்ரசேனன்இருக்குமிடம் சென்று அவரைப் பணிவுடன் வணங்கினான்.

“ப்ரபுவே, என்னை மன்னியும். இந்த நேரத்தில் உங்களைத் தொந்திரவு செய்யும்படி ஆயிற்று. ஆனால் இது மிகவும் முக்கியமான விஷயம், என் அரசே. ஆகவே நான் இப்போது வந்திருக்கிறேன்.” என்றான்.

“என்ன குழந்தாய்? என்ன சொல்!” உக்ரசேனர் கேட்டார்.

“ப்ரபுவே, கிருஷ்ணனுக்கு ரொம்பவே பெருந்தன்மையான மனம். அதனால் என்னை யுவராஜாவாக ஆக்கவேண்டும் என்று கூறுகிறான். ஆனால் நான் நன்கு யோசித்தேன் ப்ரபுவே. இந்த கிருஷ்ணன் இருக்கிறானே, சிறு வயதில் இருந்தே அதிசயமான வீரதீர சாகசங்களைச் செய்து வருகிறான். ; நாம் நன்கறிவோம்’ அதோடு அவனே நம் குலத்தின் ரக்ஷகன். தீனபந்து. அவன் கடவுள் என்கின்றனர் அனைவரும். ஆனாலும் அவன் கடவுளாக இல்லாவிட்டாலும் தான் என்ன? என் அருமைப் பாட்டனாரே! அவனுடைய ஒவ்வொரு அசைவுகளும் இறைத் தன்மையை நிரூபிக்கிறது.”

"எவ்வித உதவியும் இல்லாமல் அவனும் பலராமனும் ஜராசந்தனை ஓட ஓட விரட்டி அடித்ததாய்க் கேள்விப் பட்டோம். நம் எல்லாரையும் விட அவனே மிகவும் பலசாலியும், வலிமை வாய்ந்தவனும், உயர்ந்தவனும் ஆவான். அதோடு அவன் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு தர்மத்தின் பாதையிலேயே எப்போதும் செல்கிறான். அவனை விட்டு விட்டு, என்னை யுவராஜா ஆக்குவதெனில்!! பாட்டனாரே! அவனுக்கு உள்ள உரிமைகளை நான் பறித்துக்கொண்டு விட்டேனோ என எண்ணுகிறேன். இவ்வளவு நல்லவன் ஆன கிருஷ்ணனின் பரோபகாரமான மனதைத் தவறாய்ப் பயன்படுத்திக்கொண்டு அவன் உதவியையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு விடுவேனோ என அஞ்சுகிறேன். “ என்று மிகப் பணிவோடு கூறினான்.

“ஓஓஓஓஓஓ” உக்ரசேனருக்கு வியப்பு! அதே சமயம் பேரப்பிள்ளை சுய நினைவோடு தான் பேசுகிறானா என்ற சந்தேகமும் ஏற்பட்டது! “குழந்தாய்! உண்மையாகவா சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“பாட்டனாரே, உண்மைதான். கிருஷ்ணன் ஒருவனாலேயே நம்முடைய புராதனமான இழந்த கெளரவத்தை மீட்க முடியும். நானும் அவனுக்கு உண்மையாகவே நடந்து கொள்வேன். விசுவாசமாக இருப்பேன். அவனுக்கு துரோகம் நினைக்கமாட்டேன்.” என்றான்.

“நீ யுவராஜா ஆகவே நினைக்கவில்லையா? நீ விரும்பவில்லையா?” உக்ரசேனர் மீண்டும் மீண்டும் கேட்டார். அவரின் மனதுக்குள்ளே கொஞ்சம் இஷ்டமில்லாமலேயே கண்ணன் சொன்னான் என்பதற்காக ஒப்புக்கொண்டிருந்தார். இப்போது அவருக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

மேலும் ப்ருஹத்பாலன் சொன்னான்:” கிருஷ்ணன் குண்டினாபுரம் போய் நம் இழந்த கெளரவத்தை மீட்டெடுக்கவேண்டும் பாட்டனாரே! நான் அதைத் தான் விரும்புகிறேன். அவனால் தான் அது இயலும்.” என்றான்.

“ஆஹா, மகிழ்ச்சி, குழந்தாய், மகிழ்ச்சி! இப்போதாவது நீ உன்னுடைய தகுதியைப் புரிந்துகொண்டு எது சரியானது என்று எண்ண ஆரம்பித்தாயே, அது வரைக்கும் எனக்கு மகிழ்ச்சியே. நான் என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாய் அனைவருக்கும் அறிவிக்கிறேன்.” என்றார் உக்ரசேனர் மனம் நிறைய மகிழ்ச்சி என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

“கண்ணன் குண்டினாபுரம் போய் வெற்றி மாலை சூடி வருவான். இது நிச்சயம்!” என்று உள்ளார்ந்த பொறாமையுடன் கூறினான் ப்ருஹத்பாலன்.

ஓ, எனக்குத் தெரியும், கிருஷ்ணனுக்கே ஜெயம்!” என்றார் உக்ரசேனர்.

Saturday, March 19, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

. ஆஹா, எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நம்மை மாட்டிவிட்டான் அந்த இடையன்! பலி கொடுக்கப்போகும் ஆட்டை அலங்கரிப்பது போலவே நமக்கும் யுவராஜ பட்டாபிஷேஹம் நடக்கப் போகிறது. சந்தன, குங்குமங்களால் அலங்கரிக்கப்பட்டு மலர்மாலை சூட்டப் பட்டுச் செல்லும் ஆடு, பலிபீடத்திற்குச் செல்கிறோம் என நினைத்தாவது பார்க்குமா! அதேதான் எனக்கும் நடக்கப் போகிறது. அந்த பலியாடு கனைத்துக்கொண்டே செல்வதைப் போல நானும்……… இல்லை, இல்லை, எனக்குக் கனைக்கக் கூடத் தெம்பில்லை. அதற்கும் தைரியம் இல்லை. நான் சிரித்த வண்ணம் செல்லவேண்டும், ஒரு வீரதீர சாகசங்கள் செய்யும் கதாநாயகனைப் போல, ஜராசந்தன் என் தொண்டையைத் தன் கத்தியால் அறுக்க வருவதைப் போலவும், அதையும் எதிர்க்கும் வீரனைப் போலவும் நடக்கவேண்டும்.

அந்த பீஷ்மகன் தன் மகள் ருக்மிணியின் சுயம்வரத்திற்கு யாதவர்களை அழைத்தால் என்ன, அழைக்காவிட்டால் என்ன! இதிலே யாதவர்களுக்குப் பெருத்த அவமானம் எங்கிருந்து வந்தது? அவர்கள் கெளரவம் இதில் என்ன பாழ்பட்டுப் போனது! பீஷ்மகனுக்கு யாரை அழைக்க இஷ்டமோ அவர்களை அழைக்கட்டுமே. யாதவர்களில் உக்ரசேனன் வயதானவர், ஆகையால் அவரை அழைக்கமுடியாது. அதோடு அடுத்த இளவரசனும் இல்லை. மேலும் பெயருக்குத் தானே யாதவர்கள் அரசன் என்று அழைக்கப் படுகிறார்கள். உண்மையாகவே ராஜவம்சத்து சிம்மாதனத்தை அலங்கரிக்க எந்த யாதவனாலும் இயலாதே! வம்ச பரம்பரையாகத் தொடரும் சாபம் தடுக்கிறதே! பீஷ்மகன் ஒரு அரசனுக்கோ, அல்லது இளவரசனுக்கோ தான் தன் பெண்ணைக் கொடுக்க ஆசைப்படுவான். அது தான் இயற்கை.

ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் இந்த இடத்தில் ஒரு முறை, யாதவர்கள் ஏன் அரசனாக முடியாது என்பதற்கான காரணத்தை நினைவூட்டுகிறேன்.

{ நஹுஷன் என்பவனின் மகனான யயாதிக்கு தேவயானி, ஷர்மிஷ்டை என்னும் இரு மனைவியர். இவர்களில் யயாதிக்கு தேவயானி மூலம் இரு மகன்களும், ஷர்மிஷ்டை மூலம் மூன்று மகன்களும் உண்டு. தேவயானி தான் பட்டத்தரசி. தேவயானி அசுரர்களின் குருவான சுக்ராசாரியாரின் மகள். அவளுக்கு ஷர்மிஷ்டையை யயாதி மணந்ததும், அவள் மூலம் மூன்று மகன்கள் இருப்பதும் தெரியாது. ஒரு நாள் திடீரெனத் தெரிய வந்ததும், தன் கணவன் தனக்கும் தன் இரு மகன்களுக்கும் செய்த துரோகத்தால் மனம் வருந்தித் தன் தகப்பனான சுக்ராசாரியாரிடம் சென்றுவிடுகிறாள். சுக்ராசாரியாருக்கு மகளின் துன்பம் தாங்க முடியாமல் யயாதியைக் கிழப்பருவம் எய்தும்படி சபிக்கிறார்.

இளமையும் அழகும், வீரமும் வாய்ந்த யயாதி திடீரெனத் தனக்கு நேரிட்ட முதுமையால் மனமும் உடலும் குன்றிப் போனான். தன் மாமனாரிடம் சாபத்தைத் திரும்ப வாங்கச் சொல்லிக் கெஞ்சிக் கேட்க இதில் தன் மகளின் சுகமும், துக்கமும் அடங்கியுள்ளதைப் புரிந்துகொண்ட சுக்ராசாரியார், சாபம் கொடுத்தது கொடுத்ததே, அதைத் திரும்பப் பெற இயலாது. ஆனால் ஒரே ஒரு வழி நிவர்த்திக்கு எனச் சொல்லி, வேறு எவரேனும் தங்கள் இளமையை யயாதிக்கு அளித்தால் அவர்களுக்குத் தன் முதுமையைக் கொடுத்துவிட்டுப் பின்னர் யயாதி அவன் விரும்பும் காலம் வரை அந்த இளமையை அநுபவிக்கலாம் என்று கூறுகிறார். ஐந்து மகன்களைப்பெற்றிருக்கிறோமே எவரேனும் முன் வராமலா போவார்கள் என்ற மகிழ்வோடு அரண்மனைக்கு வந்த யயாதி தன் முதல்மகனும் பட்டத்து இளவரசனுமான யதுவிடம் கேட்கிறார்.


யது தேவயானி மூலம் பிறந்த பிள்ளை. யது கண்டிப்பாகத் தன் தகப்பனின் முதுமையைத் தான் வாங்க இயலாது என மறுத்துவிடுகிறான். ஒவ்வொரு பிள்ளையாகக் கேட்ட யயாதிக்கு ஷர்மிஷ்டையின் மகன் ஆன புரு ஒருத்தன் மூலமே அவன் இளமை கிடைக்கிறது. அனைவரையும் விட வயதில் குறைந்த மகனின் இந்தத் தியாகத்தைக் கண்ட யயாதி தன் ராஜ்யம் இனி புருவின் வம்சத்துக்கே செல்லும் என அறிவித்துவிட்டுப் புதல்வனின் இளமையைத் தான் வாங்கிக்கொண்டு அநுபவித்துவிட்டுப் பின்னர் அவனுக்கே பட்டம் கட்டுகிறான். தேவயானியின் மகனும் உண்மையில் பட்டத்து இளவரசனும் ஆன யதுவிற்குப் பட்டம் கட்டாததோடு அவன் வம்சத்தினரும் இனி அரியணையிலேயே ஏறக் கூடாது எனவும், ஏற முடியாது எனவும் சபிக்கிறான்.

இந்த யாதவர்கள் அனைவருமே யதுவின் வழித்தோன்றல்கள். யதுவின் குலத்தவர் அனைவருமே யாதவர்கள் எனப்பட்டனர். இப்போது எல்லாரும் நினைக்கிறாப் போல் இடையர்கள் அல்ல. யாதவர்கள் க்ஷத்திரியர்களே. அரச வம்சத்தினரும் ஆவார்கள். }

மேற்கண்ட சாபத்தின் மூலம் உக்ரசேனருக்கு முறையாகப் பட்டாபிஷேஹமோ அப்போது செய்யப் படும் ஐந்திரிய அபிஷேஹங்கள் செய்து பட்டாபிஷேஹம் செய்து வைக்கப் படவில்லை. பெயருக்கே அவர் அரசர். அவர் பெயரில் எந்த ராஜமுத்திரையோ, ராஜாங்கத்துக்கான நாணயங்களோ கிடையாது. ஆகவே மதுராவிற்கு அரசன் என்பவனே கிடையாது. அப்படி இருக்கையில் பட்டத்து இளவரசனுக்கு எங்கே போவது? ஆஹா, இப்போது புரிகிறது. அந்தக் கிருஷ்ணன் ஏன் தனக்கு மதுராவின் ஆட்சி வேண்டாம் என்று சொன்னான் என்பது! சாபம் உள்ள ஒரு நாட்டின் அரசனாக அவன் விரும்பவில்லை. அதோடு அரியணை ஏறும் பாக்கியமும் கிட்டாதே. இங்கே அரசுப்பட்டம் கிடையாதே, சிங்காதனத்தில் ஏற முடியாதே! அதான் சாமரத்தியமாகத் தவிர்த்திருக்கிறான் அந்த இடையன். ஆனால் காலம் காலமாய், தொடர்ந்து கொண்டே வந்திருக்கும் சாபத்தின் தாக்கத்தையும் மீறி நான் அரசனாக முடியுமா? என்ன செய்யலாம்?


. ம்ம்ம்ம் ஆனால் இதை எல்லாம் மீறிக்கொண்டல்லவோ மாமன் கம்சன் தன்னை ஒரு அரசனாக்கிக்கொள்ளத் தீவிர முயற்சிகள் செய்தான். ஆனால் ஜராசந்தனின் வலுவான துணையும், உதவியும் கிடைத்தும் அவனுக்கு மரணமே பரிசாகக் கிடைத்தது. நம் அம்மாவான கம்சாவும் நம்மை எப்படியாவது அரசனாக்கிவிடவேண்டும் என்றே பார்க்கிறாள். சாப விமோசனம் கிடைக்குமா?

ஹும், ஹூம், நண்பர்களாம், நண்பர்கள். சுயநலக்காரர்கள். எல்லாருக்கும் பதவி ஆசை பிடித்து ஆட்டுகிறது. என் மூலமாய் மதுராவை ஆள நினைக்கின்றனர். அதிலும் இந்த சாத்யகி இருக்கிறானே, எப்போவுமே தான் ஏதோ அதி வீரன் போலவும், வீரதீர சாகசங்களைச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் நினைப்பு. சரி, அவன் அப்படி என்றால் என் சொந்த மனைவி விஷாகா! அவளுக்கென்ன வந்தது! அவளும் அன்றோ என்னை இந்த விஷப் பரிக்ஷைக்குத் தூண்டுகிறாள். வீர சாகசங்கள் செய்து இறந்தாலும் பரவாயில்லை என்கிறாளே. அவளுக்குத் தேவை கதாநாயகன் போல் வீரம் நிறைந்த ஒருவனைக் கணவனாய்ப் பெற்றேன், அவன் இந்த யுத்தத்தின் மூலம் இறந்துவிட்டான் என்று சொல்வதில் பெருமை அடைவேன் என்பதே. அவள் கணவன் உயிரோடு இருப்பதில் அவளுக்கு எந்தப் பெருமையும் இருப்பதாய்த் தெரியவில்லை. இவர்கள் அனைவருக்குமே குறுகிய பார்வையே உள்ளது. ஜராசந்தனின் பலம் அறியவில்லை.

Monday, March 14, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

அவர்கள் வழக்கமாய்க் கூடும் இடத்தில் சாத்யகி, விராடன்,பத்ரகன் அனைவரும் இருக்க, அங்கே சென்ற ப்ருஹத்பாலன் கூறினான்:” இந்தக் கிருஷ்ணன் பெரிய தந்திரக்காரக் குள்ளநரியாக இருப்பான் போல் தெரிகிறது. எவ்வளவு அழகாய் ஒரு வலையைப் பின்னி என்னை அதில் மாட்டிவிட்டான்?” என்றான். சபையில் பேசிக்கொண்ட செய்திகளைப் பற்றியும் அதில் கூறப்பட்ட ஆலோசனைகள் பற்றிய தன் கருத்தையும் கூறினான் ப்ருஹத்பாலன்.

“இதில் என்ன வலை பின்னி இருக்கிறது?” சாத்யகி கேட்டான்.” நம்மிடம் அவன் செய்த சத்தியத்தைக் காப்பாற்றிவிட்டான். அடுத்து என்ன?? நீ யுவராஜாவாக ஆனதும் பீஷ்மகனின் மகள் ருக்மிணியின் சுயம்வரத்திற்குச் சென்று ஜராசந்தனின் கண்ணெதிரேயே அந்தப் பெண்ணைத் தூக்கிவந்துவிடலாமே?? ஆஹா, நினைக்கவே எனக்கு உடலெல்லாம் புல்லரிக்கிறது. எப்போது செல்லப் போகிறோம் எனக் காத்திருக்கிறேன்.” என்றான்.

“நான் ஒன்றும் கோழை அல்ல!” ப்ருஹத்பாலன் கொஞ்சம் கோபமாகவே கூறினான். “ஒரு யுத்தம் என நடந்தால் போர்க்களத்தில் எதிரிகளால் கொல்லப் படுவதை நான் விரும்புகிறேன். மேலும் யுத்தம் என் பக்கம் சாதகமாய் இருந்தால் நான் வெற்றியும் பெறுவேன் அல்லவோ? ஆனால் இங்கே அப்படி எந்தவிதமான வீரத்தையும் காட்ட வாய்ப்பே இல்லை. இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்!” என்றான்.

“அதான் கிருஷ்ணனும் நம்மோடு வருவதாய்ச் சொல்லி இருக்கிறானே?” கொஞ்சம் அலுப்போடே பேசினான் சாத்யகி. அவனுக்கு இந்தப் புதிய சாகச சம்பவங்களில் இப்போதே ஈடுபடவேண்டும் என்ற துடிப்பு. அதைக் குறித்தும், அதில் அவன் செய்யப் போகும் சாகசங்களைக் குறித்தும் பலவிதக் கனவுகளை வைத்திருந்தான். “ஓ, அவன் வருவான் அப்பா, வருவான். அதெல்லாம் சரி, வந்துவிட்டு அவன் நமக்கு உதவுவான் என்பது என்ன நிச்சயம்?” என்றான் ப்ருஹத்பாலன். “சேச்சே, கண்ணன் வந்து ஜராசந்தனிடம் தோற்றுப்போவது என்பதை விரும்பமாட்டான். ஆகவே அதற்காகவே அவன் நம்மோடு சேர்ந்து கொண்டு நமக்கு உதவுவான்.” என்றான் சாத்யகி.

“சாத்யகி, சாத்யகி, உனக்கு இன்னும் புரியவில்லையா?? ஜராசந்தன் கண்ணனைக் கொல்லவே விரும்புகிறான். என்னை இல்லை. ஆனால் இந்தக் கண்ணன் எனக்குப் பின்னால் என்னுடைய பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு ஜராசந்தனிடமிருந்து தப்ப எண்ணுகிறான்.” என்றான் ப்ருஹத்பாலன்.

“கண்ணன் உதவியோடு நாம் வென்றாலும் புகழ் என்னமோ நமக்குத்தானே?? நாம் தானே வெற்றி பெற்றவர்களாய் அறிவிக்கப் படுவோம்?” விராடன் கூறினான்.

“ஒருவேளை முதல் தாக்குதலிலேயே அவன் இறந்துவிட்டால்?” ப்ருஹத்பாலன் கேட்க, “ஓ, உனக்கு அதுதான் சந்தேகமா? எனில் நீ இங்கேயே அரண்மனையில் ஒளிந்து கொள்!” என்று அலக்ஷியமாய்க் கூறினான் சாத்யகி. விராடனுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது போலும். “இது ஒன்றும் வீரம் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமானம். நமக்கு மரணம் நிச்சயம்” என்றான். “ப்ருஹத்பாலனோடு நான் இதில் ஒத்துப் போகிறேன்.” என்றான் விராடன்.

சாத்யகியின் கோபம் எல்லை மீறியது. “என்ன ஆயிற்று உங்களுக்கெல்லாம்?? ப்ருஹத்பாலனையே யுவராஜாவாக ஆக்கக் கண்ணனிடம் வாக்குறுதி வாங்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அவனும் நமக்கு வாக்குக் கொடுத்தான். அதன்படியே நடந்தும் கொண்டான். அவன் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான்: “யுவராஜாவாக ஆனதும் தர்மத்திலிருந்து ப்ருஹத்பாலன் சற்றும் பிறழாமல் இருக்கவேண்டும் என்பதே!” இப்போது நம் தர்மம், நம் கடமை எல்லாமே யாதவர்களின் கெளரவத்தைக் காப்பதில் அடங்கி உள்ளது. அதிலும் ஒரு பெண்ணிற்கு அவள் இளவரசி என்பதால் நடக்கப் போகும் முறையற்ற சுயம்வரம் என்னும் நாடகத்தைத் தடுக்கவேண்டும் என்பதும் நம் தர்மத்தில் , கடமையில் சேர்ந்ததே. ப்ருஹத்பாலா, யுவராஜாவா ஆனால் மட்டுமே போதுமென நினைக்கிறாய் நீ. ஒரு யுவராஜாவிற்கு இருக்கவேண்டிய பொறுப்புக்களையும் ஆற்றவேண்டிய கடமைகளையும் செய்யவேண்டும் , ஒப்புக்கொள்ளவேண்டும் என நினைக்கவில்லை நீ.” சாத்யகி நேரடியாகக் குற்றம் சாட்டினான்.

“ஆனால்….. நான்…..நான்.,” ப்ருஹத்பாலன் ஆரம்பித்தான். இடைமறித்தான் சாத்யகி.
“உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை ப்ருஹத்பாலா! விராடா, நீயும் சேர்ந்துகொண்டு ப்ருஹத்பாலனுக்கு ஒத்துப் பேசுகிறாயே? நீயும் என்ன நினைக்கிறாய் என்றே தெரியவில்லை. மதுரா நகரத்தின் ஆட்சி உரிமை உங்களுக்கெல்லாம் வேண்டும். ஆனால் அந்நகரத்துக்கு ஆபத்து நேர்ந்தாலோ அல்லது , அம்மக்களுக்கோ கெளரவம் குறைந்தாலோ, ஆபத்து நேரிட்டாலோ காக்கவேண்டிய பொறுப்பும் நம்மைச் சேர்ந்தது என்பதை நீங்கள் ஒப்பவில்லை. எந்தவிதமான சுமைகளோ, அல்லது பொறுப்புக்களையோ சுமக்க நீங்கள் எவரும் விரும்பவில்லை. ஆனால் கண்ணன் தன் உயிரைப் பணயம் வைத்து உங்களுக்கெல்லாம் உதவ முன் வந்திருக்கிறான். ஜராசந்தன் அவனைக் கொல்ல எண்ணி இருப்பது நம் எல்லோரையும் விட கண்ணனுக்கு நன்கு தெரியுமே? அப்படியும் அவன் நமக்கெல்லாம் உதவ முன் வருகிறான். ஹூம், நாமெல்லாம், என்னையும் சேர்த்துத் தான் கூறுகிறேன். கோழைகளின் கூட்டம்! சுயநலக்காரர்கள். அப்படித்தானே?? இதோ பார் ப்ருஹத்பாலா! நீதான் யுவராஜா! அதில் சந்தேகமே இல்லை. நீ யுவராஜாவாக ஆனதுமே யாதவர்களின் பெருமையை மீட்கக் குண்டினாபுரம் நோக்கி நாம் அனைவரும் செல்கிறோம்.”

“இதைவிட வேறு எதுவும் வேண்டாம். நாம் அனைவரும் தீர்ந்தோம். இந்த வலையிலிருந்து நமக்குத் தப்பிக்க வழியே இல்லை. ம்ம்ம்ம்?? இது வலையோ வலையில்லையோ? உயிரோடு இருப்போமா சந்தேகமே!” விராடன் கூறினான்.
பத்ரகனோ, “என்னை விட்டால் அந்தக் கிருஷ்ணனை ஒழித்துக்கட்டி இருப்பேன். இப்போதும் ஒன்றும் மோசமில்லை. நீ மட்டும் உத்தரவு கொடு, முதலில் அவனை ஒழித்துவிட்டு வருகிறேன். நான் அதற்குத் தயார்!” என்றான்.
ப்ருஹத்பாலனோ,”சாத்யகி, கண்ணனின் தந்திரங்களில் மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை!” என்றான்.

சாத்யகி, “உங்கள் அனைவரின் மோசமான தீய எண்ணங்களுக்கும் நாம் அடிமையாகக் கூடாது. கண்ணன் நமக்கு நன்மையே செய்கிறான். உங்கள் பார்வையில் தீய எண்ணம் தான் தெரிகிறது. ப்ருஹத்பாலா, நீ யுவராஜாவாக ஆக நினைத்தாயெனில் எங்கள் அனைவருக்கும் தலைமை ஏற்கத் தயாராகு. நம்முடைய இழந்த கெளரவத்தை மீட்டெடு. இல்லை எனில் நீயாக எந்த முடிவுக்கும் வராதே!” இதைச் சொன்ன வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் புயலெனக் கிளம்பிச் சென்றான் சாத்யகி.

Thursday, March 10, 2011

கண்ணன்வருவான் கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ப்ருஹத்பாலன் சபை கலைந்ததும் தன்னுடைய தாயாரைத் தேடிக்கொண்டு சென்றான். அவளும் சபையில் நடந்தவைகளை நடந்தபடியே தெரிந்துகொள்ள ஆவலாய்க் காத்திருந்தாள். ப்ருஹத்பாலன் அந்தப்புரத்துக்குள் நுழையும்போதே மிகவும் கோபத்துடன் நுழைந்தான். “அம்மா, நமஸ்காரங்கள். அந்த இடையன் ஒரு சூழ்ச்சி வலையை அழகாய்ப் பின்னிவிட்டான். ஒரு சிக்கலில் நம்மை மாட்டிவிட்டான்.” என்றான். “என்ன நடந்தது?” என்றாள் கம்சா. “ம்ம்ம், அவன் என்னை எப்படி ஒழித்துக்கட்டுவது என்று ஒரு வழியை யோசித்துச் சொல்லி இருக்கிறான்.” என்று துக்கம் பொங்கக் கூறிய ப்ருஹத்பாலன், சபையில் நடந்தவைகளைக் கம்சாவிடம் விவரித்தான்.


“அம்மா, அந்தக் கிருஷ்ணன் ரொம்பச் சாமர்த்தியசாலி! என்னை யுவராஜா பதவிக்குப் பரிந்துரைத்தான். அதனால் அவன் பெருந்தன்மையானவன் என நினையாதே! அதன் பின்னர் நான் ஜராசந்தனோடும், அவன் படைவீரர்களோடும் போரிட்டு என் நிலையை ஸ்தாபிதம் செய்து கொள்ளவேண்டும். என்ன ஒரு நீதிவான், நேர்மையானவன் பார்த்தாயா? தேவைப்பட்டால் அவன் என் உதவிக்கு வருவானாம். வந்து அத்தனை புகழையும், பெருமையையும் அவன் தூக்கிக்கொண்டு போவான்! சுயநலக்காரன்!” கோபம் பொங்கியது ப்ருஹத்பாலனுக்கு.

கம்சா ஒரு இளநகையோடு தன் அருமை மகன் பேசுவதைக் கேட்டுக்கொண்டாள். “என் மதிப்பிற்குரிய தந்தையார் உன்னை யுவராஜாவாக ஆக்கவேண்டும் என்ற வேண்டுகோளுக்கு என்ன பதில்கொடுத்தார்?” என்று கேட்டாள். “ஓ. கண்ணன் சொன்னதை அவர் ஒத்துக்கொண்டார். ஏனெனில் நான் விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணியின் சுயம்வரத்திற்கு நமக்கு அழைப்பு இல்லை. ஏனெனில் இங்கே அரசனோ வயதானவர். வேறு இளவரசர்கள் எவரும் இல்லை. ஆகையால் என்னை யுவராஜாவாகப் பட்டம் சூட்டிவிட்டுப் பின்னர் சுயம்வரத்திற்கு அழைப்பு இல்லை என்றாலும் நான் போய் மணப்பெண்ணைத் தூக்கிவரவேண்டும். அல்லது அங்கே சண்டையிட்டுப் பெண்ணை அடையவேண்டும் என்பதில் அவருக்கு முழு சம்மதமே!” என்றான் சோகத்தோடு.

சற்று நேரம் அமைதியாக யோசித்த கம்சா, “இதிலிருந்து தப்புவதற்கு வழி கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கும் போல் தெரிகிறது.” என்றாள். தனக்கும், தன் மக்களுக்கும் இழைக்கப்பட்டு வரும் அநீதி மேன்மேலும் வளர்ந்து தான் வருகின்றது. குறையவே இல்லை என்ற எண்ணமும் ஏற்பட்டது அவளுக்கு. “நீ யுவராஜாவாக ஆவதற்கு ஒத்துக்கொண்டாயானால் உன் இறுதி முடிவை நீயே தேடிக்கொண்டவனாவாய். ஒத்துக்கொள்ளாவிட்டாலோ, இத்தனை நாட்கள் எதற்காக நாம் பாடுபட்டுக் கொண்டிருந்தோமோ அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.” கம்சா தன் மகனுக்குச் சொல்வதை விடத் தனக்குத் தானே பேசிக்கொண்டாளோ என்னும்படிக்கு மெதுவான குரலில் பேசினாள்.


“அனைவர் கண்களுக்கும் நான் ஒரு கோழையாகத் தெரிவேன். அந்த சாத்யகி, முட்டாள் அம்மா அவன், ஏதோ வீரமாகச் செய்கிறோம் என்ற நினைப்பு அவனுக்கு. கண்ணனின் இந்த யோசனையைக் கேட்டதும் கிடந்து குதிக்கிறான். தானே இதற்கெல்லாம் ஒரு கதாநாயகனாக இருக்கமாட்டோமா என்ற நினைப்பும் கூட அவனுக்கு. அவனுக்கென்ன?? வீரம் என்ற பெயரில் எதையோ செய்யவேண்டும்! அதனால் பின் விளைவுகள் நம் உயிராய் இருந்தாலும் கவலைப்பட மாட்டான் போல் தெரிகிறது. “


“ஓ, நீ கவலைப்படாதே, குழந்தாய்! நான் யோசிக்கிறேன். இதற்கு ஒரு வழி கண்டே ஆகவேண்டும். என்னை யோசிக்க விடு.” என்றாள் கம்சா. ப்ருஹத்பாலன் அடுத்துத் தன் மனைவியும் ப்ரத்யோதாவின் மகளுமான விஷாகாவிடம் சென்று தன் துரதிர்ஷ்டமான நிலையைக் குறித்துக் கூறினான். உடனடியாக விஷாகா கண்ணீர் பெருக்கெடுக்கத் துன்பம் அடைவாள் என்றும் எதிர்பார்த்தான். கண்ணன் எவ்வளவு தந்திரமாய்த் தன்னை ஒரு மாபெரும் சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டான் என்பதை நயம்பட அவளுக்கு எடுத்து உரைத்தான். ஆனால் அவளோ, ப்ருஹத்பாலன் தன் வீரத்தைக் காட்ட நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்த்தாகவே எண்ணினாள். யாதவத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும், இதன் மூலம் அரசகுமாரிகள் அவர்கள் விருப்பமில்லாமல் சுயம்வரம் என்ற பெயரில் பிடிக்காத மணமகனுக்கு மாலையிடுவதை நிரந்தரமாய் ஒடுக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தாள். மேலும் முன்னைப் பரம்பொருளுக்கும் மூத்த பரம்பொருளான அந்த ஸ்ரீமஹாதேவரே இத்தகையதொரு அருமையான சந்தர்ப்பத்தை ப்ருஹத்பாலனுக்கு அளித்திருப்பதாயும், இதன் மூலம் தான் எத்தகையதொரு அஞ்சாநெஞ்சன், வீரன் என்றெல்லாம் ப்ருஹத்பாலன் அனைவருக்கும் தெரிவிக்க முடியும் எனத் தான் நம்புவதாயும் கூறினாள். நூற்றிலொருவருக்கே இத்தகைய சந்தர்ப்பம் அளிக்கப் படும் என்றும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் ப்ருஹத்பாலனுக்குச் சொன்னாள். மேலும், “கண்ணன், பலராமன், உத்தவன் மூவரும் உதவிக்கு வருகின்றார் என்றீர்களே! அப்போது நிச்சயம் வெற்றி உமக்குத் தான் இளவரசே!” என்று மகிழ்வோடு கூறினாள்.


“ம்ம்ம், கணவன் இறந்து போகட்டும் என்று சொல்கிறாய் நீ!” என்றான் ப்ருஹத்பாலன். “என் உயிரைப் பற்றிய கவலை இல்லையா உனக்கு?” கோபமாய்க் கேட்டான்.


“ஓஹோ, இளவரசே, அவர்கள் மூவரும் உமதருகே இருக்கின்றனர் அல்லவா? பின் உம் உயிரைப் பற்றிய வீணான கவலை எதற்கு? அவர்கள் இருக்கும்வரையில் உமக்கு ஒன்றும் நேராது. மேலும் என் தந்தையார் சொல்வார்: “ஒரு கோழையின் மனைவியாக இருப்பதை விட ஒரு வீரனின் விதவையாக இருக்கலாம்.” என்று” இதைக் கூறியவண்ணமே ப்ருஹத்பாலனிடமிருந்து அகன்று சென்ற விஷாகாவின் கண்களில் கங்கை பெருக்கெடுத்த்து. மீண்டும் தன் தாயிடம் உதவி நாடிச் சென்ற ப்ருஹத்பாலன் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்திருக்கும் தாயைக் கண்டான். மனச்சோர்வோடு இருந்த அவள் தன் பிறந்த நேரத்தின் கிரஹங்களின் சூழ்ச்சியால் தான் எப்போதுமே சந்தோஷமாய் இருக்க முடியவில்லை என்றும் மேன்மேலும் துன்பங்கள் தொடர்கதை ஆகின்றன என்றும் வருந்தினாள். வேறு வழியில்லாமல் தன் நண்பர்களையே சந்திக்கச் சென்றான் ப்ருஹத்பாலன்.

Sunday, March 6, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ப்ருஹத்பாலனும் அவன் நண்பர்களும் இந்த எதிர்பாராத வேண்டுகோளினால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்தனர். பெரியவர்களுக்கோ ஒரு மாபெரும் பிரச்னையை சர்வசாதாரணமாகக் கண்ணன் தீர்த்து வைத்ததை நினைத்து ஆச்சரியமும், வியப்பும் ஏற்பட்டது. ஆனால் அக்ரூரருக்கோ, ப்ருஹத்பாலனை யுவராஜாவாக ஆக்குவதில் மதுராவிற்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்பது நன்கு புரிந்திருந்ததால் கண்ணனின் இந்தக் கோரிக்கை ஆச்சரியத்தை விட உள்ளூரக் கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனாலும் கண்ணனும் இதைக் குறித்து யோசித்திருப்பான் என்று தன் சந்தேகத்தை அடக்கிக்கொண்டார். கண்ணன் மேலே பேச ஆரம்பிக்க அனைவரும் கேட்டனர்.

“ஆகவே மன்னா, ப்ருஹத்பாலன் யுவராஜா ஆனதும், பீஷ்மகனுக்குச் செய்தி அனுப்புங்கள். ப்ருஹத்பாலனையும் சுயம்வரத்திற்கு அழைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். அப்படியும் அவர்கள் அனுப்பவில்லை எனில் நம்மால் இந்த அவமானத்தைச் சகிக்க முடியாது என்பதைத் தெரிவிப்போம். அவமானத்திற்குப் பழி வாங்கி அதைத் துடைப்போம்.”

“ஆனால் குண்டினாபுரத்தின் மேல் படை எடுப்பதில் என்ன லாபம் நமக்கு?” வசுதேவருக்குச் சந்தேகம்.

“அவமானங்களைச் சகிக்க முடியவில்லை எனில் படை எடுப்பு ஒன்றே ஒரே வழி!”தளபதி ஷங்கு கூறினான்.

சுயம்வரத்தில் படை எடுத்துப் பெண்ணைத் தூக்கி வருவது அரச குலத்தினருக்குப் புதிய விஷயமில்லையே? குரு வம்சத்து பீஷ்ம பிதாமகர், தர்மத்தின் உருவம் என்று போற்றப் படுபவர், தன் சகோதரனுக்காக, காசி தேசத்து அரசனின் மூன்று மகள்களையும் தூக்கி வரவில்லையா?” இது சாத்யகி கூறினான்.

“அதெல்லாம் சரி, ஜராசந்தனின் படைகள் அதற்குள் நம்மைச் சூழ்ந்து கொள்ளாமல் இருக்கவேண்டுமே! மேலும் சுயம்வரத்தில் பெண்ணைத் தூக்கி வந்தாலும் ஜராசந்தனுக்குக் கோபம் ஏற்படுமே!” உக்ரசேனர் கவலை கொண்டார். ப்ருஹத்பாலனுக்கு முகம் தொங்கிப் போனது. அதைக் கவனித்த கண்ணன், நிதானமாக, “ சகோதரர் ப்ருஹத்பாலர் சுயம்வரத்தில் மணப்பெண்ணைத் தூக்கி வந்தாரெனில் ஜராசந்தனின் கெளரவமும், பீஷ்மகனின் கெளரவமும் பங்கமடையும். அதில் சந்தேகமே இல்லை!” என்றான்.
விகத்ருவுக்கோ, “ப்ருஹத்பாலனால் பெண்ணைத் தூக்க முடியவில்லை எனில்?” கவலை பிறந்தது.

“நாம் அனைவரும் ஒற்றுமையாக நம் உயிரைப்பொருட்டாக மதிக்காமல் முயன்றால் நம்மால் இது இயலக் கூடியதே!” கண்ணன் திட்டவட்டமாய்க் கூறினான். “ஆனால் அதற்கு முன்னர் நம் சகோதரர் ப்ருஹத்பாலனும் , அவர் நண்பர்களும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் நடத்தப்படும் வேகமாய் ரதம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். வரப் போகும் ரதப் போட்டியும் இப்படி நடக்கப் போகும் ஒரு யுத்தத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வகையில் அமையும்.” என்றான் கண்ணன்.

“நீ என்ன செய்யப் போகிறாய்?” ப்ருஹத்பாலன் கண்ணனைக் கேட்டான்.

“உத்தவன் உன்னோடு கட்டாயம் வருவான். பெரிய அண்ணன் பலராமனும் வருவான். ஆனால் நான் இப்படி ஒரு பெண்ணை அவள் விருப்பத்திற்கு விரோதமாய் அவள் விருப்பம் தெரியாமல் தூக்கி வருவதில் தர்மத்திற்கு விரோதமாய்ச் செயல்படவேண்டுமே என யோசிக்கிறேன். ஆனால் யுத்தம் என்று வந்துவிட்டால், ப்ருஹத்பாலன் விரும்பினான் எனில் அவன் பக்கம் நின்று என் உயிரைக் கொடுத்துப் போராடுவேன்.” கண்ணன் கூறினான்.

அதோடு ஆலோசனைகள் முடிவடைந்து அனைவரும் கிளம்ப, ப்ருஹத்பாலனுக்கோ திடீரெனத் தன் முன்னர் நின்ற மாபெரும் பொறுப்பும், அதன் விளைவாய் ஏற்படப் போகும் யுத்தமும் நினைவில் வர, அவன் திடுக்கிட்டான். ஆஹா, இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் நாம் வெற்றி பெறுவோமா? வெற்றி பெறாவிட்டாலும் மணப்பெண்ணைத் தூக்கித் தான் வரமுடியுமா என்னால்? ஒருவேளை விகத்ரு சொன்னது போல் நான் தோற்றால்?” ஜராசந்தன் நம்மைச் சும்மா விடமாட்டானே! பாவி, மஹாபாவி, இந்தக் கிருஷ்ணன் ஒரு மாபெரும் இக்கட்டில் அல்லவோ நம்மை மாட்டிவிட்டு விட்டான்.வேகமாய்த் தன் தாய் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் ப்ருஹத்பாலன்.

அவர்களின் இருப்பிடம் சென்று கொண்டிருக்கையில் ஷ்வேதகேது கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவ கிருஷ்ணா! இளவரசி ருக்மிணியை ப்ருஹத்பாலன் தூக்கி வந்தாலும் அவள் அவனை மணக்க மாட்டாள்.” என்றான்.

“ஓ, அது ஒன்றுமில்லை குருதேவா! ப்ருஹத்பாலன் ருக்மிணியைத் தூக்கி வந்ததுமே அவள் சமாதானம் அடைந்துவிடுவாள். அவனை மணந்து கொள்ளவும் செய்வாள். இவ்வுலகில் சுயம்வரத்தில் அநேகமான இளவரசிகள் இப்படித் தான் தூக்கி எடுத்து வரப்பட்டு அரசனையோ, அரசகுமாரனையோ மணந்து பின்னர் செளக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ்க்கை நடத்துகின்றனர்.” கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே கூறினான்.

ஷ்வேதகேது விடாமல், “ஆனால், நீ? உனக்கு இஷ்டமில்லையா?”

“பலவந்தமாய் ஒரு பெண்ணை அவள் விருப்பம் தெரியாமல் தூக்கி வந்து மணந்து கொண்டு மனைவியாக்கிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.” என்று முடித்துவிட்டான் கிருஷ்ணன்.

Friday, March 4, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

அன்றிரவு யாதவர்களின் மஹாசபை கூடியது. ஷ்வேதகேது ஜராசந்தனின் யுத்த தந்திரத்தை எடுத்துக் காட்டினான். சுயம்வரம் என்பது பெயரளவுக்கு மட்டுமே என்பதையும், அதற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப் படுகிறது என்பதையும், ஒட்டுமொத்தமாய் மதுராவின் யாதவ குலத்தினர் எவருக்கும் அழைப்பு அனுப்பவில்லை எனவும் கூறினான். இதன் மூலம் மதுராவின் உயர்ந்த யாதவகுலத்தினருக்கு இழைக்கப்பட்ட அவமானத்தையும், அநீதியையும் சுட்டிக் காட்டினான். அனைவரும் ஷ்வேதகேது சொல்வதை ஒத்துக்கொண்டனர். யாதவர்களுக்கு சுயம்வரத்திற்கு அழைப்பு அனுப்பாமல் ஜராசந்தனின் கட்டளையின் பேரில் ருக்மி அவமானம் செய்துவிட்டான் என்பதையும் ஒருவருக்கொருவர் வருத்தத்துடன் பேசிக்கொண்டனர். மாபெரும் சாம்ராஜ்யங்களுக்குள்ளே அரியணை ஏறாமலேயே நல்லாட்சி புரிந்து வரும் தங்களுக்கு மற்ற அரச குடும்பங்களின் நடுவே இழைக்கப்பட்ட அவமரியாதை இது என்பதைப் புரிந்து கொண்டனர். யாதவ குலத்துக்கே செய்யப் பட்ட துரோகம் இது என்பதையும் புரிந்து கொண்டார்கள். ஆனால் அந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள இங்கிருந்து யாதவன் எவனாவது சென்றால் அது மாபெரும் கலகத்தில் முடியும் சாத்தியங்களும் உள்ளன.

விகத்ரு என்னும் பழைய மந்திரியும், ஷங்கு என்னும் தளபதியும் மதுராவைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்கள். தங்கள் வலிமையால் எவ்விதமான ஆபத்து, இடையூறு வந்தாலும் தாக்குதல் வந்தாலும் முறியடிக்கத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராய் இருப்பதாயும் தெரிவித்தனர். யாதவர்களுக்கு நேரிடும் ஒரு சிறிய அவமானத்தையும் சகிக்க இயலாது என்று சூளுரைத்தனர். இளம் வீரர்களான சாத்யகி, ப்ருஹத்பாலன் போன்றோர் குண்டினாபுரத்திற்கு அழைப்பு இல்லாமலேயே சென்று சுயம்வரத்தில் கலந்து கொள்வதை வற்புறுத்தியும் ஆதரித்தும் பேசினார்கள். தேவை எனில் இளவரசி ருக்மிணியைத் தூக்கிக்கொண்டே வந்துவிடுவோம் என்றும் மூன்று மாதம் கொடுத்தால் போதும் அனைத்தும் சரிவர நடத்திக்காட்டுவோம் என்றும் ஆவேசமாய்ப் பேசினார்கள். அக்ரூரர், வசுதேவன், போன்றோருக்கு விகத்ருவின் ஆலோசனை பிடித்திருந்தாலும், கொஞ்சம் யோசித்தே அனைத்தும் செய்யவேண்டும் என்று கருத்துக் கூறினார்கள். அனைவருக்கும் யாதவர்களை சுயம்வரத்திற்கு அழைக்காதது மாபெரும் அநீதியாகத் தோன்றியது.

அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த கிருஷ்ணனை நோக்கி உக்ரசேனர், “வாசுதேவா, நீ ஒன்றுமே கூறவில்லையே?” என்று கேட்டார். கிருஷ்ணன் அவரிடம்,”பிரபு, எனக்கு என்னமோ பீஷ்மகன் நமக்கு சுயம்வர அழைப்பு அனுப்பாதது சரி என்றே தோன்றுகிறது.” என்றான். அங்கிருந்த அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்ட்து. அனைவரும் கிருஷ்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ப்ருஹத்பாலனும், அவன் நண்பர்களும் இகழ்ச்சியுடன் நகைத்தார்கள். ப்ருஹத்பாலன், “ஆஹா, நீ சொல்வது ரொம்பவும் சரியே. நாம் அனைவரும் பீஷ்மகன் முன்னால் மண்ணைக் கவ்வுவோம்.” என்று ஏளனமாய்க் கூறினான். கண்ணனோ நிதானத்தைக் கைவிடாமல், “ இதிலே நமக்கெல்லாம் எந்தவிதமான அவமானமும் நேரிடவில்லை. ஒரு சுயம்வரத்தில் அரசர்கள், இளவரசர்கள், சக்கரவர்த்திகள், மன்னாதி மன்னர்கள் தான் கலந்து கொள்ள முடியும். நாமோ அரியணை ஏறும் அரசகுலம் அல்ல. அதோடு நம் தலைவரும் மன்னன் என்னும் பட்டத்தைப் பெயரளவுக்குப் பூண்டவருமான உக்ரசேன ராஜாவோ, யுவராஜா எவரையும் இன்னமும் தேர்ந்தெடுக்கவும் இல்லை. தனக்குப் பின் தலைவனாக வேறொருவரை அவர் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் அல்லவா?” என்றான் கண்ணன்.

“அதனால் என்ன? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குலக் கொள்கைகள், விதிகள், சம்பிரதாயங்கள், அதை ஒட்டிய முடிவுகள்.: என்றான் ஷங்கு.

“அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள் தளபதி, மஹாராஜாவான பீஷ்மகன் தன் ஒரே மகளும் ஒரு இளவரசியுமான ருக்மிணி மற்றொரு மன்னனையோ அல்லது பட்டத்து இளவரசனையோதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புவார். அதுதான் நியாயமும் கூட. நம்மைப் போன்ற அரசுக்கட்டில் ஏறமுடியாத தலைவர்களை அல்ல. “ என்றான் கண்ணன். அனைவரும் மெளனமானார்கள். உண்மைதான். மதுராவின் சார்பில் எந்தப் பட்டத்து இளவரசனும் இல்லை. அதனால் அழைப்பு வரவில்லை என்பதில் நியாயம் உண்டு. அப்போது உக்ரசேனர் கண்ணனைப் பார்த்து, “கண்ணா, உன்னை விடவா பட்டத்து இளவரசர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள்? நீயன்றோ அனைவரையும் விட உயர்ந்தவன்? எனக்குப் பின்னர் நீ இந்த மதுராவின் தலைவனாகச் சம்மதித்தாயெனில் நான் உடனடியாக என் பாரத்தை இறக்கி விட்டுவிடுவேன்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த ப்ருஹத்பாலன் இந்தக் கண்ணன் சாதுர்யமாகத் தனக்கே முடிசூட்டிக்கொள்ள விரும்புகிறான் என்று தோன்றியது. கண்ணனைக் கோபமாகப் பார்த்தான்.

கண்ணன் சிரித்துக்கொண்டே பேசினான்:” நான் இன்னமும் என்னுடைய பழைய கருத்திலிருந்து சற்றும் மாறவில்லை, மஹா பிரபு. தாங்கள் என் மீது காட்டும் அன்பும், பாசமும் அளவிடற்கரியது. ஆனால் இந்த மதுராவின் தலைவனாக நான் ஒரு போதும் எண்ணவில்லை. நான் மாடுகளை மேய்க்கும் ஒரு மாட்டிடையன் என்பதிலேயே திருப்தி அடைகிறேன். நான் என்றென்றும் ஒரு “கோ”பாலன் தான். ஆனால் என்னுடைய யோசனை உங்களுக்குத் தேவை எனில், உங்கள் மனதுக்குகந்த ஒருவனை யுவராஜாவாக அடையாளம் காட்ட என்னால் முடியும்.” என்றான் கண்ணன். அனைவரும் கண்ணன் மேற்கொண்டு சொல்லக் காத்திருக்கையில், “பிரபு, நாங்கள் கோமந்தக மலையிலிருந்து திரும்பவே மாட்டோம் என அனைவரும் நினைத்திருந்த ஒரு காலத்தில் தாங்கள் ப்ருஹத்பாலனை யுவராஜாவாக ஆக்குவது தான் ஒரே வழி என நினைத்துக்கொண்டிருந்தீர்கள் அல்லவோ? இப்போதும் அவரையே உத்தராயனம் ஆரம்பித்த உடனே யுவராஜாவாக அறிவியுங்கள்.” என்றான்.

Wednesday, March 2, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!


“நாம் அனைவருமே மூவுலகங்களிலும் பாதுகாத்துக் கடைப்பிடிக்கப் படும் தர்மத்தைப் பின்பற்றி வாழ்கிறோம் அல்லவா?நம் ஆர்ய வர்த்தத்தினருக்கு சநாதன தர்மமே முக்கியம் அலல்வா? ” என்றான் கண்ணன்.

“ நீ நினைப்பதை, நீ செய்ய விரும்புவதை அரசன் உக்ரசேனன் செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய் கண்ணா!” குற்றம் சாட்டும் குரலில் கூறினான் சாத்யகி. மற்றவர்களுக்குக் கண்ணனின் தெளிவான பேச்சைக் கேட்டதும் அவனை வேறு எவ்வகையில் எதிர்ப்பது என்று புரியவில்லை.
“ஆஹா, நானா? நான் அப்படி எதுவும் செய்வதில்லை, சத்ராஜித், என்னிடம் கேட்டாலொழிய நான் வாயே திறப்பதில்லை. என் ஆலோசனைகளைக் கேட்பதும், கேட்காததும், மன்னனின் விருப்பம், யாதவ குலத்தின் மற்றப் பெரியவர்களின் விருப்பம். என்னைக் கேட்கும்போது நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை மட்டுமே கூறுகிறேன்.”

“ஆனால் நீ ஒரு யுத்தத்திற்கு அனைவரையும் தயார் செய்து கொண்டிருக்கிறாய். பார்க்கையிலேயே தெரிகிறதே!” என்றான் சாத்யகி. அதற்குள்ளாக பத்ரகன் ஏளனமாய், “உன் நோக்கம் என்னவோ அதை எங்களுக்குத்தெரியாமல் ரகசியமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? எங்களை என்ன சின்னக் குழந்தைகள் என எண்ணிவிட்டாயோ?” என்று சீறினான். பத்ரகனின் குற்றம் சாட்டும் தொனியை அலக்ஷியம் செய்த கண்ணன், “என்னிடம் எந்த ரகசியமும் இல்லை/” என்றான். மேலும், “ஜராசந்தனின் அதர்மத்தின் மொத்த வடிவம். அவன் தன்னுடைய வலிமையால் இந்த ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் தன் சொற்படி கேட்டு நடந்து கொள்ள வற்புறுத்தினான். மீறினவர்கள் ராஜ்யம் பறிக்கப்பட்டது. மேலும் அவன் மதுராவை அழித்துவிடுவதாய் சபதம் எடுத்திருக்கிறான். நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்தால் அவனை முறியடிக்கலாம். அவனை எதிர்கொள்ள எப்போது வேண்டுமானாலும் நாம் தயாராய் இருந்தாகவேண்டும்.” என்று எதிர்பார்ப்புடன் கூறினான் கண்ணன்.

“ஆஹா, உன் அண்ணன் பலராமன் அவனைக் கொல்ல இருந்தானாமே? அதான் சொல்கின்றனரே கதை கதையாய்! நீ தான் ஜராசந்தனைத் தப்பிச் செல்லவிட்டாயாமே? ஏன் அப்படிச் செய்தாய்? அன்றே அவனை அழித்திருக்கலாமே?” உத்யோதன் என்பவன் கேட்ட குரலில் அவநம்பிக்கையும் கேலியும் தொனித்தது.

“ஓ, அது ஒன்றுமில்லை, தாய்மண்ணின் மீதிருந்த பாசமே காரணம். வேறு எதுவுமில்லை. நானோ, பலராமனோ அந்தச் சமயம் கோமந்தக மலையின் யுத்தத்தின் போது ஜராசந்தனைக் கொன்றிருந்தால் அவனுடைய ஆட்கள் அனைவரும் பாதுகாப்பும், சரியான தலைமையும், எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்த மதுராவுக்குள் புகுந்து தாக்கி, மக்களை அடிமைப்படுத்தி மதுராவையும் தங்கள் வசம் கொண்டு வந்திருப்பார்கள். மதுராவைப் பலப்படுத்தாமல் ஜராசந்தனைத் தாக்குவதில் அர்த்தமில்லை.” என்றான் கண்ணன்.

அதைக் கேட்ட மற்றொருவன், “ கண்ணா, நீதான் கடவுளாயிற்றே? ஏனப்பா நீ இந்திரனின் வஜ்ராயுத்த்தைப் பெற்று அதன் மூலம் ஜராசந்தனை நிர்மூலம் செய்திருக்கலாமே? அப்படி ஏன் செய்யவில்லை?” கேட்டதோடு அல்லாமல் பெருங்குரலில் சிரிக்க மற்றவர்களும் உடன் சிரித்தனர். “ நிறுத்துங்கள் உங்கள் பரிகாசப் பேச்சுக்களை.” சாத்யகி கூறினான். அவனுக்குப் பேச்சு திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது சிறிதும் பிடிக்கவில்லை. கண்ணனின் உள் நோக்கம் குறித்த புதியதொரு பரிமாணம் அவனுக்குள் பிடிபட்டது போலும். “கண்ணா, வாசுதேவா, நீ உண்மையாகவே எங்களை ஒரு மாபெரும் யுத்தத்திற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறாயா?”

“ஆம், சத்ராஜித், ஒரு போர், ஆனால் நம் மேல் வலியத் திணிக்கப்பட்டால் மட்டுமே போர் செய்வோம்.” என்றான் கண்ணன். “அது தேவையென நீ நினைக்கிறாயா வாசுதேவ கிருஷ்ணா?” சாத்யகி கேட்க, கிருஷ்ணன், “ஜராசந்தனைப் பற்றி நீ நன்கு அறிந்திருந்தாயெனில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டாய் சாத்யகி. அவனுக்கு நாம் அடிமைகளாக மாறினால் ஒழிய இது தவிர்க்க முடியாததொரு யுத்தம். வேறு வழியே இல்லை!” என்றான் கண்ணன்.

“சரி, கிருஷ்ணா, நாங்கள் உன்னுடனேயே இருப்போம். ஜராசந்தன் யுத்தம் செய்ய விரும்பினானெனில் அவ்வாறே அவனுடன் யுத்தம் செய்யலாம். ஆனால் நீ மட்டும் உண்மையாக நடக்கவேண்டும். வெளிப்படையாகப் பேசவேண்டும். “ கண்ணனின் மனம் திறந்த பேச்சுக்களால் கவரப்பட்டான் சாத்யகி.

“ மேன்மை பொருந்திய சாத்யகனின் மகனே, நான் வேறு எவ்விதம் உன்னிடம் இருப்பேன்? வெளிப்படையாகத் தான் இருப்பேன்.” என்றான் கண்ணன்.

“எனில் நீ ஏன் உக்ரசேன மஹாராஜாவை ப்ருஹத்பாலன் யுவராஜாவாக ஆக்குவதில் இருந்து தடுத்துக்கொண்டிருக்கிறாய்?” கடைசியில் தான் எண்ணியதைக் கேட்டே விட்டான் சாத்யகி.

“நான் எப்போதும், எவ்வகையிலும், இது குறித்து உக்ரசேனமஹாராஜாவிடம் விவாதித்ததே இல்லை சாத்யகி. என்னை நீ நம்பவேண்டும். இது உக்ரசேனரின் சொந்த முடிவு. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் மனதுக்கு எது உகந்ததோ, இந்த மதுராவிற்கு எது நன்மையோ அதை அவர் செய்ய முழு சுதந்திரம் உடையவர். என் மூத்த சகோதரர் ஆன ப்ருஹத்பாலன் யுவராஜா ஆவதில் எனக்கும் முழு சம்மதமே! நான் அதில் சந்தோஷமும் அடைவேன். ஆனால்………”

“ஆனால்?? ஆனால் என்ன?” இடை மறித்தான் ப்ருஹத்பாலன். இந்தக் கண்ணன் உள்ளூர ஏதோ சூது செய்தே வருகிறான். ஆனால் கண்ணனோ, அவனைப் பார்த்துத் தெள்ளத் தெளிவாய், “ஆனால் …… நீ தர்மத்திலிருந்து பிறழக் கூடாது. நீ தர்மத்தின் பாதையிலே மட்டுமே செல்லவேண்டும்.” என்று முடித்தான்.

“எனில் அவன் பொறுப்புக்களை எடுத்துக்கொள்ளாமல் பெயருக்கு மட்டுமா யுவராஜாவாய் இருக்கவேண்டும்?” விராடன் சீறினான்.

“அப்படி அல்ல விராடனே! அவன் தர்மத்தின் பாதையிலிருந்து சற்றும் பிறழாமல் தன் பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றுவதை நாம் கவனிக்கவேண்டும். அவனுக்கு உறுதுணையாக இருந்து அவனுக்குத் தேவைப்படும் சமயம் அவன் கடமைகளை நிறைவேற்ற நம் உயிரைக்கொடுக்கவேண்டும் என்றாலும் அதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.” கண்ணன் குரலே மணி ஓசை போல் லயத்தோடு கேட்டது. அதற்குள் சாத்யகி, கர்வம் பொங்க, “நீ ப்ருஹத்பாலன் யுவராஜா ஆனால் அவனுக்கு உறுதுணையாக இருப்பாயா என்பதை மட்டும் சொல்!” என அதிகாரமாய்க் கேட்டான்.

சற்று நேரம் அமைதியோடும், இளநகை பொங்க சாத்யகியையே பார்த்தான் கண்ணன். அனைவரும் மூச்சுவிடக் கூட மறந்து, கண்ணனைச் சொற்களால் தாங்கள் தாக்க நினைத்திருந்ததையும், தேவைப்பட்டால் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும் என்று இருந்ததையும் மறந்து அவன் சொல்லப் போகும் வார்த்தைகளுக்குக் காத்திருந்தனர்.

கண்ணன் ப்ருஹத்பாலனை நேருக்கு நேர் பார்த்து , “சகோதரரே, நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். நீர் தர்மத்தின் பக்கமே நின்றீரானால், நானும் உமக்கு உறுதுணையாக எப்போதும் உடன் இருப்பேன். அதுபோல் இங்கிருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். ப்ருஹத்பாலன் தர்மத்திலிருந்து பிறழாமல் இருந்தானெனில் அவனுக்கு உறுதுணையாகத் தோளோடு தோள் கொடுப்போம் நாம் அனைவருமே. இது சத்தியம்!” அனைவருமே தன் மேல் பாயத் தயாராக வைத்திருந்த ஆயுதங்களைக் கண்டு கண்ணன் சிரித்துக்கொண்டு, “உங்கள் கத்திகளையும், வாட்களையும், வில், அம்புகளையும் கூர்தீட்டித் தயாராக வைத்திருங்கள். நாம் அனைவருமே ஒன்றாக ஜராசந்தனை எதிர்க்கப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!” என்றான்.

நிராயுதபாணியான கண்ணன் தன் கைகளை உயர்த்திய வண்ணம், “வெற்றி நமதே!” என்று கோஷமிட்டான். அனைவருக்கும் கண்ணனின் உணர்வுப் பிரவாகம் உடலில் பாய, அனைவரும் கண்ணன் மேல் பாய இருந்த தங்கள் ஆயுதங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “வெற்றி நமதே!” என்று ஒரே குரலில் கோஷமிட்டனர்.
சாத்யகி கண்ணனைத் தன் நெஞ்சார அணைத்துக்கொண்டு, “சாது, சாது” என்று கோஷமிடச் சுற்றி இருந்த அனைவரும் அதை ஆமோதித்தனர். ப்ருஹத்பாலனைத் தவிர அனைவருக்கும் கண்ணன் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. ப்ருஹத்பாலன் இப்படியான ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை. என்ன செய்வதென்று அவன் தீர்மானிப்பதற்குள்ளாக, கண்ணன் குனிந்து அவனை நமஸ்கரித்து அவன் பாத்தூளியைத் தன் நெற்றியிலே வைத்துக்கொண்டு, அங்கிருந்த மற்றவர்கள் அனைவரையும் பார்த்துத் தன் கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு மின்னலைப் போல் மறைந்தான்.


டிஸ்கி: மீண்டும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். திரு கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய கிருஷ்ணாவதாரைப் படித்துவிட்டு அதில் இருந்தே இவை எல்லாம் எனக்குத் தெரிந்தவரையிலும் எழுதி வருகிறேன்.