மகன் சென்றதும், பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் கம்சா. இரவு முழுதும் தூங்காமல் யோசித்தவளுக்கு விடிகாலையில் ஒரு யோசனை உதித்தது. விரைவில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வசுதேவரின் மாளிகைக்குச் சென்றாள். அங்கே தேவகியை சம்பிரதாயமாக மரியாதை நிமித்தம் பார்த்து விசாரித்தவள் நேரே சென்றது ஷாயிபாவிடம். ஷாயிபாவை அனைவரும் நெருங்க முடியாமல் இருந்த போதிலும் கம்சாவால் வெகு சுலபமாக அவள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது. அவள் சார்பாகவே பேசி அவள் மனதில் இடம் பிடித்த கம்சாவிடம் ஷாயிபா தன் அந்தரங்கங்களை எல்லாம் மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டாள். கரவீரபுரத்தில் அவளுடைய பெரியப்பாவின் ஆட்சியின் மகிமை பற்றியும், அங்கே அவளுக்கு இருந்த மரியாதையையும், அதிகாரத்தையும் குறித்து ஆதங்கத்துடன் கூறினாள். தன் பெரியப்பா உண்மையிலேயே கடவுளே என்றும், அவரை எதிர்த்து எவரும் பேசாமல் இருந்தனர் என்றும் ஷ்வேதகேதுவும் முதலில் அவருக்கு ஆதரவாகவே இருந்தான் எனவும், இந்தக் கிருஷ்ணன் வந்தே அனைத்தையும் மாற்றினான் என்றும் ஆத்திரத்துடன் கூறினாள்.
உயர்ந்த அரசபோகத்தில் தான் அநுபவித்துக்கொண்டிருந்த ஆட்சியின் அதிகாரத்தைக் கிருஷ்ணன் வந்து தன் பெரியப்பாவை வெட்டிச் சாய்த்ததின் மூலம் நிர்மூலமாக்கியதையும், அதற்கு உதவியது ஷ்வேதகேது எனவும் கூறினாள். இத்தனைக்கும் அவள், ஷாயிபா, கரவீரபுரத்தின் இளவரசியும் ஸ்ரீகாலவனின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவளும் ஆன ஷாயிபா ஷ்வேதகேதுவை மகிழ்விக்க வேண்டி அவனிடம் தன் காதலைக் கூடத் தெரிவிக்க எண்ணி இருந்தாள். அப்படிப் பட்ட மாட்சிமை பொருந்திய ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்றதோடு அல்லாமல் ஷாயிபாவின் மாட்சிமையும் அடியோடு நிர்மூலமாக்கப் பட்டது. எல்லாம் இந்தக் கண்ணனால். கம்சா அநுதாபத்தோடு கேட்பது ஷாயிபாவுக்குப் பிடித்திருந்தது. இந்த மாளிகையில் அனைவரும் கிருஷ்ணன் சொல்வதே சரியென்று கூறும்போது இந்தக் கம்சாவாவது தான் கூறுவதை அநுதாபத்துடன் கேட்டுக்கொண்டு தன்னுடைய கோபமும், துக்கமும் நியாயம் என்கிறாளே.
ஆனால் ஷாயிபா கம்சாவை அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். சும்மா அநுதாபத்துடன் கேட்டுக்கொள்ள மட்டும் கம்சா அங்கே வரவில்லை. அவள் ஷாயிபாவின் பேச்சைக் கேட்டு விட்ட கண்ணீரெல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள் அவள் ஷாயிபாவைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு கண்ணனுக்கெதிராக ஒரு வலுவான கூட்டணி அமைக்க முயன்று கொண்டிருந்தாள். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையே ஷாயிபாவின் துக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. ஆகவே ஷாயிபா கூறுகையில் அவளை ஆமோதிப்பதோடு, கண்ணன் எவ்வாறு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வரிசையாக ஈவு இரக்கமின்றிக் கொன்று வருகிறான் என்பதையும் கூறி வந்தாள். அவள் சொந்த சகோதரன் ஆன கம்சனை எவ்வாறு சற்றும் கலக்கமோ, தயக்கமோ இன்றி மாமன் என்று கூடப் பார்க்காமல் கண்ணன் கொன்றான் என்பதை விவரித்தாள். கம்சா இன்று அநுபவிக்கும் அத்தனை துன்பத்திற்கும் மூல காரணமே இந்தக் கண்ணன் தான். வேறு எவரும் இல்லை. இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில் ஷாயிபாவின் கோபம் கொஞ்சம் அடங்கினாலும் கண்ணன் மேல் அளவுக்கதிகமான வெறுப்பு கொழுந்து விட்டெரிந்தது.
இப்போதோ கம்சா வந்து ஏதோ புதிய செய்தியைக் கூறுகிறாளே? தேவகியைப் பார்த்துவிட்டு ஷாயிபாவிடம் வந்த கம்சா அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் மதுராவின் வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு ஆபத்தைப் பற்றி அவளிடம் கூற ஆரம்பித்தாள். இதைக் குறித்து ஷாயிபாவிடம் கூற ஆரம்பித்த கம்சா ஓவென்று அழ ஆரம்பித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பொல்லாத போக்கிரியும் துஷ்டனும் ஆன கிருஷ்ணன் எப்படித் தன் அன்புக்குகந்த யுவராஜா பதவி வகிக்க வேண்டிய ப்ருஹத்பாலன் மேல் வஞ்சம் தீர்த்துக்கொண்டான் என்பதை விவரிக்க ஆரம்பித்தாள். தன் தகப்பன் உக்ரசேனர் உண்மையில் ப்ருஹத்பாலனுக்கே யுவராஜா பதவி அளிக்க விரும்பியதாகவும், இந்தக் கண்ணன் வந்ததும் அனைத்தும் மாறியதோடு அன்றி இப்போது புதியதொரு சூழ்ச்சி வலையை கண்ணன் பின்னி இருப்பதாயும் கூறினாள். தான் மகனை மரணத்தை நோக்கி அனுப்ப வேண்டியே அவனுக்கு யுவராஜா பதவியும் பட்டமும் கொடுக்கக் கண்ணன் சம்மதித்திருப்பதாயும், குண்டினாபுரம் சென்றால் தன் மகனுக்குக் காத்திருப்பது மரணமே என்றும் தீர்மானமாய்க் கூறினாள் கம்சா.
கம்சாவின் புலம்பல் தொடர்ந்தது. அவள் கணவன் தேவபாகனோ அல்லது மூத்த மகன் ஆன சித்ரகேதுவோ இந்த வழிக்கெல்லாம் வரமாட்டார்கள் இருவரும் தேவைக்கு மீறிய நல்லவர்கள். அவர்கள் வசுதேவன் சொல்லை ஒருக்காலும் மீறி நடக்க மாட்டார்கள். ஆகவே அவர்களிடம் போய் இதைச் சொல்ல முடியாது. அவளுடைய இன்னொரு இளைய மகனான உத்தவனோ கேட்கவே வேண்டாம். அந்தக் கிருஷ்ணனுக்கு அடிமை உத்தியோகம் செய்கிறான். அவனுக்குத் தாசானு தாசனாக இருக்கிறான். அவனைக் கண்ணன் தன் வேலைகளுக்கெல்லாம் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறான். ஷாயிபாவுக்கும் இதே எண்ணமே தோன்றியது. உத்தவனைக் கண்ணன் தன் இஷ்டத்துக்கு வளைக்கிறான் என்று அவளும் எண்ணினாள். அவள் முகபாவத்தையே கவனித்த கம்சா இதுதான் சமயம் என நினைத்து ஷாயிபாவைக் கட்டிக்கொண்டு இன்னும் புலம்பி அழ ஆரம்பித்தாள்.
1 comment:
55 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்
கம்சா இப்படி கண்ணனின் மேல் அவதுறு சொல்வதை எப்போ நிறுத்த போறாளோ
பதிவுக்கு நன்றி கீதாம்மா
Post a Comment