Thursday, March 31, 2011

ஷாயிபாவின் வேதனை! கண்ணன் வருவான் 2ம், பாகம்

கண்ணன் குழந்தையாக இருந்தபோது பிருந்தாவனத்தின் கோபிகைகள் எல்லாரும் அவனுடைய சாகசங்களைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்களாமே! உண்மையாய் இருக்குமா?? இருக்கலாம்; இங்கே தான் பார்க்கிறேனே, எல்லாரிடமும் நட்புப் பாராட்டுகிறான். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடோ, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடோ, உயர்ந்த பதவியில் இருப்பவர், தொண்டூழியர் என்ற பாகுபாடோ பார்க்காமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டிப் பழகுகிறான். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்வதில்லை. சுயநலமாய்த் தன்னலம் மட்டுமே கருதியும் பேச்சோ, செய்கையோ இல்லை. அவனை அண்டி இருப்பவர்கள் கூட அவனுக்குக் கீழே தாங்கள் இருப்பதாய் நினைக்காமல் அவனும் தங்களில் ஒருவன் என்றே எண்ணுகின்றனர். இது எவ்வாறு முடிகிறது?? ஆச்சரியம் மேலிட்டது ஷாயிபாவுக்கு. ஷாயிபாவிடமும் அவன் ஒரு சகோதர பாசத்தையே காட்டி வருகிறான். அவன் சொன்னதும் அவ்வாறே. அதே போல் பாசத்துடன் இருக்கிறான். மாறுபட்ட நோக்கோடு ஒரு விநாடியும் பார்க்கவில்லை. இல்லை, இல்லை; இது ஒருக்காலும் இயலாத ஒன்று.. போலி வேஷம் போடுகிறானோ? ம்ம்ம்ம்?? அப்படித் தான் இருக்கவேண்டும். ஆனால்………..ஆனால்…………… நான் எவ்வளவு திட்டினாலும், என்ன கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்தாலும், அவன் கண்கள் ஒரு விநாடி இமைத்தலில் கூடத் தன் மேல் அவனுக்கு இருக்கும் வெறுப்பைக் காட்டியதில்லை. எப்போதும் போல் சிரிக்கும் கண்கள்.

அவன் என்னை எவ்விதத்திலேனும் சந்தோஷப்படுத்தவே முயல்கிறான். நான் என்ன வேண்டுமென்று கேட்கிறேனோ எவ்வாறேனும், அதை வரவழைக்கிறான். என் திருப்தியையே அவன் முக்கியக் கடமையாகக் கொண்டிருப்பது போல் நடந்து கொள்கிறான். ம்ம்ம்ம்ம்???? இந்த வசுதேவரின் குடும்பமே விசித்திரமான நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது. கரவீரபுரத்தில் நம் குடும்பத்தில் பெரியப்பா இட்டது தான் சட்டம். வேறு எவரும் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது. அப்படிப் பேசினாலோ அரச குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வதிலும், ஒருவரை ஒருவர் ஏசுவதிலும் போய் முடியும். ஒருவர் இன்னொருவரிடம் கடுமையாக நடந்து கொள்வார். ஏன், பெரியப்பா எனக்கு அளித்த அதிகாரத்தின் மூலம் நான் ராணி பத்மாவதியையும், அவள் ஒரே குமாரனையும் எப்படி அடக்கி ஒடுக்கி வைத்திருந்தேன். என்னைக் கண்டாலே ராணி பத்மாவதி நடுங்குவாளே! இங்கேயோ! ஹும், இந்தக் கம்சாவும், அவள் மகன் ப்ருஹத்பாலனும் மட்டுமே என்னோடு ஒத்துப் போவார்கள், போகிறார்கள். கண்ணன் ஒரு பொல்லாத போக்கிரி என்பதையும், அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் இருவர் மட்டுமே ஒத்துக்கொள்வார்கள். வேறு எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

கண்ணன் மேல் ஷாயிபாவுக்கு வெறுப்பும், கோபமும் அதிகம் ஆனது. கம்சாவின் அறைக்குப் போனபொழுது எவ்வாறோ ஒரு கத்தியைக் கண்டெடுத்துக் கொண்டு வந்திருந்தாள் ஷாயிபா. கம்சா கவனித்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. கவனித்திருந்தாலும் தன் முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு விட்டிருந்தாள். ஆகவே ஷாயிபா அந்தக் கத்தியை எடுத்து வந்துவிட்டாள். ஆம், ஆம், இந்தக் கண்ணன் என்பவனை நான் வெறுக்கிறேன். அவனைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்று மாலையோ அல்லது நாளைக்காலையோ அவன் வழக்கப்படி இங்கே வருவான். என்னையும் காண வருவான். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அட., தேவகி அம்மா தன் வழிபாட்டை முடித்துக்கொண்டுவிட்டார் போல் தெரிகிறதே. ஆம், ஆம்,. அவர் மற்றப் பெண்களுக்கு மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிக் கட்டளை இடுகிறார். நாமும் போகலாம். வழக்கம் போல் உதவிகளைச் செய்துவிடுவோம். அப்போது தான் நம் மேல் சந்தேகம் எதுவும் வராது, ஷாயிபா தேவகியைத் தேடிச் சென்றாள்.

வெளி முற்றத்தில் ரதங்கள் நிறுத்தப்படும் ஓசையும், குதிரைகளின் கனைப்பும், அதிலிருந்து இறங்கும் மனிதர்களின் பேச்சும், சிரிப்பும் கலந்து கேட்டது. ரதச் சக்கரங்கள் கிறீச்சென்ற சப்தத்தோடு நிறுத்தப் படுவதையும் இளைஞர்கள் ஆரவாரம் செய்து கொண்டு ரதத்திலிருந்து குதிப்பதும் கேட்ட்து. எல்லாருடைய குரல்களும் கலந்து கேட்டாலும் ஷாயிபாவால் இரண்டு குரல்களை மட்டும் இனம் பிரிக்க முடிந்தது. ஒன்று கண்ணனின் மிருதுவான, மென்மையான குரல். வழக்கம் போல் உற்சாகம் காணப்பட்டது. இன்னொன்று,………….. இன்னொன்று……………. ஆம், ஆம், அது ஷ்வேதகேதுவின் குரல். அவன் நேற்று முன் தினமே திரும்பிவிட்டான் என்பதை ஷாயிபா அனைவரும் பேசிக்கொண்டதில் இருந்து அறிந்திருந்தாள். கடைசியில் அவன் வந்துவிட்டான். ஷ்வேதகேது, ஷ்வேதகேது/…….. யாரை அவள் ஒருகாலத்தில் மிகவும் விரும்பினாளோ, இப்போது யாரை அவள் கண்களால் காணவும் விரும்பவில்லையோ, அந்த ஷ்வேதகேது, அவளையும், அவள் வழிபட்டுக்கொண்டிருந்த கடவுளான ஸ்ரீகாலவ வாசுதேவனையும் மோசமான முறையில் ஏமாற்றின ஷ்வேதகேது/…………………. வந்துவிட்டான், ஆம் வந்தே விட்டான். ஷாயிபாவின் உள்ளம் குமுறியது.

1 comment:

priya.r said...

அத்தியாயம் எண் 57 படித்து விட்டேன்
//கண்ணன் குழந்தையாக இருந்தபோது பிருந்தாவனத்தின் கோபிகைகள் எல்லாரும் அவனுடைய சாகசங்களைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்களாமே! உண்மையாய் இருக்குமா?? இருக்கலாம்; இங்கே தான் பார்க்கிறேனே, எல்லாரிடமும் நட்புப் பாராட்டுகிறான். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடோ, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடோ, உயர்ந்த பதவியில் இருப்பவர், தொண்டூழியர் என்ற பாகுபாடோ பார்க்காமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டிப் பழகுகிறான். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்வதில்லை. சுயநலமாய்த் தன்னலம் மட்டுமே கருதியும் பேச்சோ, செய்கையோ இல்லை. அவனை அண்டி இருப்பவர்கள் கூட அவனுக்குக் கீழே தாங்கள் இருப்பதாய் நினைக்காமல் அவனும் தங்களில் ஒருவன் என்றே எண்ணுகின்றனர். இது எவ்வாறு முடிகிறது??//
அங்கே தான் கண்ணன் மாறுபட்டு எல்லோரின் உள்ளம் கவர் கள்வனாக இல்லை இல்லை உள்ளம் கவர் கடவுளாக காட்சி அளிக்கிறான்
ஆமாம்! அதனால் தான் நாம் கண்ணனை உள்ளத்தில் வைத்து கொண்டாடுகிறோம்.,பூஜிக்கிறோம் ......