Tuesday, April 5, 2011

ஷாயிபா காத்திருக்கிறாள், கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

ஷாயிபா ஷ்வேதகேதுவை வெறுக்கிறாள். முழு மனசோடு வெறுக்கிறாள். அந்தக் குரல்….. ஒரு காலத்தில் அவளுக்கு ஒரு இனிமையான சங்கீதம் போலக் கேட்ட அந்தக் குரல், இந்தக் கண்ணன் வந்ததும், எப்படி மாறி விட்டது?? ஆஹா, என்னென்ன கனவுகள் கண்டாள்? இந்த ஷ்வேதகேது தன் பெரியப்பாவை முழுமையாகக் கடவுளாக அனைவரும் வணங்கும் ஒரே ஈசனாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்பது உறுதியானதும், எவ்வாறேனும் பெரியப்பாவின் சம்மதத்தை வாங்கி அவனைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுக்கொண்டிருந்தாளே! திருமணக் கனவுகளில் மூழ்கி இருந்தாளே! எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! அதுவும் இந்தக் கண்ணனால் தானே! நன்றி கெட்டவன், நன்றி கெட்டவன். என்னென்ன செய்திருக்கிறோம் அவனுக்காக. எல்லாவற்றையும் மறந்து இந்தக் கண்ணனைக் கண்டதும், அவனுடைய இசைக்கு நடனமிடும் பாவையாக மாறிவிட்டானே.

ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட்டது அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது. நடுவே வழக்கமான இடத்தில் வசுதேவர் அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அடுத்து அவருடைய சகோதரர்கள் வரிசைக்கிரமமாக அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் இளைய தலைமுறையினர் அனைவரும் அவரவர் வரிசைப்படி அமர்ந்தனர். கிருஷ்ணனும், உத்தவனும் அருகருகே அமர்ந்தனர். இந்தக் கண்ணன் மிகத் தந்திரக்காரன். அவனுடைய நடவடிக்கைகளில் குற்றம், குறை காணமுடியாதபடிக்கு தந்திரமாய் நடந்து கொள்கிறான். இந்த ஷ்வேதகேது, ம்ம்ம்ம்……. இப்போது அவனும் ஒரு குருவாம், ஆசாரியனாம், கர்காசாரியாருடனும், மற்ற ஆசாரியர்களோடும் ஆசாரியர்களுக்குரிய உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறான். பல மாதங்களாய் ஷ்வேதகேதுவை ஷாயிபா பார்க்கவே இல்லை. இப்போது வாய்ப்புக் கிடைக்கவும் நன்றாகப் பார்த்தாள். உடல் வலிமை முன்னைக்கிப்போது அதிகமாகி இருந்தாற்போல் தெரிகிறது. தலைமுடியை நன்கு ஒன்று சேர்த்துப் பின்னால் குடுமியாகக் கட்டி இருக்கிறான். இப்போது புதியதாய் தாடி ஒன்றும் வந்துள்ளது. நெற்றியில் எப்போதும் போல் புனித விபூதிச் சாம்பலின் அடையாளக் கீற்றுகள். ஆசாரியர்களுக்குரிய உடையை அணிந்து கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான். முகத்தின் ஒளியும், முகத்தில் காணப்படும் மகிழ்வும் இதுவரை காணாத ஒன்று. ஆஹா, இவ்வளவு மகிழ்வை கரவீரபுரத்தில் கண்டதே இல்லையே!

ஷ்வேதகேதுவுக்கும் ஷாயிபா தன்னைப் பார்ப்பது தெரிந்திருக்கவேண்டும். உள்ளத்தில் ஏதோ ஒன்று குறுகுறுக்க அவனும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். கடைசியில் ஷாயிபாவைக் கண்டு விட்டான். கண்ட கண்கள் அங்கேயே நின்றன. அதே நேரம் ஷாயிபாவும் அவனைக் கண்டாள். இருவர் கண்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மின்னலை மின்னல் வெட்டியதா? ஷாயிபா தன் கோபத்தையும், ஆத்திரத்தையும், ஆங்காரத்தையும் காட்டவேண்டி கோபமாய்த் தான் பார்த்தாள். அவ்வாறுதான் பார்க்க எண்ணினாள். ஆனால்,,,,,,,,ஆனால்……… அவளையும் அறியாமல் அவள் பார்வை கனிந்து தன் நட்பையும் அன்பையும் தெரியப் படுத்தியது. ஷ்வேதகேதுவுக்கு எதிர்பாரா அதிர்ச்சி. அவன் நட்பாகப் புன்னகைத்தான். ஷாயிபாவுக்கு அப்போது தான் ஏதோ புரிந்தாற்போல் தோன்ற அவள் திரும்பிப் புன்னகை செய்வதைத் தவிர்த்தாள். அவன் மேல் கோபத்தை வரவழைத்துக்கொண்டாள். மோசக்காரன்…..ஏமாற்றுக்காரன், ,,,துரோகி.


ஆனால்…..ஆனால்…….. கொல்லப்பட்ட என் பெரியப்பாவுக்குப் பின்னர் நான் விரும்பிய அன்பு செலுத்திய ஒரே மனிதன் இவன் தான். அவளால் தன் எண்ணங்களைத் தவிர்க்க முடியவில்லை, “ கடவுளே, ஓ கடவுளே, வாசுதேவா, ஸ்ரீகாலவ வாசுதேவரே, இந்த ஷ்வேதகேது கண்ணனுக்கு அடிமையாக மட்டும் இல்லை எனில், கண்ணனால் அவன் மனது மாறாமல் இருந்திருந்தால், நீரும் உயிரோடு இருந்திருந்தீர் எனில்….. ஆஹா, ஆஹா, எத்தகையதொரு அற்புதம் நடந்திருக்கும்? இந்த ஷ்வேதகேதுவை நான் திருமணம் செய்து கொண்டு கரவீரபுரத்தில் ஆனந்த வாழ்க்கைநடத்தி இருப்பேனே.


மற்றப் பெண்களைப் போல் ஷாயிபாவும் பரிமாற ஆரம்பித்தாள். ஒவ்வொருவராய்ப் பரிமாறிக்கொண்டு வர, கண்ணன் அருகேயும், ஷ்வேதகேது அருகேயும் பரிமாற வருகையில் அவள் இதயம் எழும்பிக் குதித்த்து. அவள் நெஞ்சம் போட்ட சப்தத்தில் அந்தச் சாப்பாட்டுக்கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைவார்களோ என்ற எண்ணமும் ஏற்பட்டது அவளுக்கு. மேலும் அந்த சப்தம் அனைவருக்கும் கேட்டு விடுமோ என்றும் எண்ணினாள். அவள் கண்ணனுக்குப் பரிமாறுகையில் இன்றிரவு கண்ணனா, ஷ்வேதகேதுவா? இருவரில் ஒருவர் என் கைகளால் கொல்லப் படுவர்கள். இருவரில் யார் கொல்லப் பட்டு மற்றவர் உயிருடன் இருந்தாலும் எனக்கு அதனால் லாபம் ஒன்றுமில்லை. அவள் இதயம் மேலும் படபடவெனத் துடிக்கக் கைகள் நடுங்கப்பரிமாறினாள் ஷாயிபா.
கண்ணன் முகத்தில் குறும்புச் சிரிப்பு. மெதுவாகக் கிசுகிசுவென்ற தொனியில், “இதோ பார் ஷாயிபா, இந்தப் பொல்லாத ஆசாரியனை சாப்பாட்டுக்குப் பின்னர் உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன். உன்பாடு, அவன் பாடு.” ஷ்வேதகேதுவைச் சுட்டிக்காட்டிக் கூறிய கண்ணன் கண்கள் குறும்பிலும் சந்தோஷத்திலும் கூத்தாடின.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 58 படித்து விட்டேன்
எப்படியோ கண்ணன் அருளால் ஷாயிபா திருந்தினால் சரி